தமிழ்ச்சிந்தனையில் இந்த நூல் ஒரு வியப்பு . (‘மொழியின் மறுபுனைவு’ நூல் பற்றி)

தமிழ்ச்சிந்தனையில் இந்த நூல் ஒரு வியப்பு .

(‘மொழியின் மறுபுனைவுநூல் பற்றி)

தமிழவன்

 

        இலக்கியம் பற்றிய நவீன கால எழுத்துக்களில் ஒன்றான இலக்கிய விமரிசனம், மிக உயர்ந்த வடிவமாகும். காரணம் அதில் தத்துவம், கற்பனை பற்றிய உயர்சிந்தனை, மொழிச்சிந்தனை, மற்றும் பல உலக வியாபகம் கொண்ட துறைகள் பங்கெடுக்கின்றன.

அத்துறையில் சமீபத்தில் வந்துள்ள ‘மொழியின் மறுபுனைவு’ என்ற எஸ்.சண்முகத் தின் 557-பக்க நூல் பற்றிப் பேசவேண்டும். இந்நூல் தமிழில் வரும் சாதாரண நூல்கள் போன்றதல்ல. கடந்த 40 ஆண்டுகால இலக்கியச் சிந்தனையின் பாதை மாற்றத்தை விவரித்து 8 கோடி தமிழர்களின் ‘வாழ்வாழத்தைப்’ படம்பிடிக்கும் நூல்.

வாழ்வாழம் என்ற புதுச்சொல் தமிழ் மொழிசார்ந்த ஓர் மொத்தமான உலக உண்மையோடு தொடர்புடையது. அந்த மொழியுண்மையில் மார்க்சியமும் இணைந்துள்ளது, தமிழ்மொழி பேசும் மக்களும் இணைந்துள்ளனர். மொழி என்பது இன்று உலக தத்துவத்தில் முதன்மையாகியுள்ளது. இவைகள் எழுபதுகளில் தமிழகத்தில் அண்ணாதுரை என்பவர் புதிய அரசியலான தமிழரசியலைக் கொண்டுவந்த பின்பு முக்கியமான சமுக உண்மைகளாயின. இவ்வுண்மையை முதன்முதலில் இலக்கியச் சிந்தனையின் புதிய எல்லைகளாக்குகிறார் எஸ்.சண்முகம். அதற்கு அவர் காலத்துக்கு ஓர் இருபது வருடங்களுக்கு முந்தைய காலத்திலிருந்தே, தமிழக இலக்கியச் சிந்தனையைப் புதிய பொருள்முதல்வாதக் கோணத்தில் தயாராக்கியவர்களைத் தீவிரமாக வாசித்து, இவரது  இருபதாம் வயதுகளிலிருந்தே  உள்வாங்கினார். இப்படி இவரது வாழ்நாள் முழுதும் எழுதிய எல்லாக்கட்டுரைகளையும் அழகிய நூலாகத் தொகுத்துப் பிரசுரித்துள்ளது யாவரும் பதிப்பகம். அதனால் தான் இது வியப்பு என்கிறேன். சமீபத்தில் நீதிபதி சந்ரு போன்றோரின் எண்பதுகள் காலப் பின்னணியைத் தமிழகம் கண்டுபிடித்துள்ளது. சந்ரு போன்றோரை உருவாக்கிய  எண்பதுகளின் தமிழகம் தான் சண்முகம் போன்றோரையும் உருவாக்கியது. அதனை விளக்குவதுதான் இப்போது நம்மால் பேசப்படும் புத்தகம்.  அதற்கு ஒரு தொகுப்பாளரை நியமித்துள்ளது பதிப்பகம். அவர் பெயர் வேதநாயக். இவர்கள் எல்லோரையும் பாராட்டுகிறேன்.

 

40 ஆண்டுகால தமிழர்களின் சிந்தனைப் போக்கு, 8 கோடி தமிழர்களின் வாழ்வாழம் போன்ற சொற்களை மிகக் கவனமாகப் பயன்படுத்துகிறேன். அதாவது 40 ஆண்டு காலகட்டத்தில் வெளிவந்துள்ள இத்துறை சார்ந்த இரண்டு மூன்று நூல்களில், இது மிகமுக்கிய மானதற்குக் காரணங்கள் உள்ளன.

 

ஓர் ஆங்கில நூலையோ, தமிழ் நூலையோ, சுமார் 60 ஆண்டுகளாக ஒரு வாசகனாய் இருந்து அணுகுவதில் எனக்கு அனுபவம் உண்டு. முதல் பக்கத்திலிருந்தும் வாசிக்கலாம். ஆங்காங்கு படித்துப் பார்த்தும் கருத்துத் தொகுப்புச் செய்யலாம். இந்நூலை முதலில் ஆங்காங்கு வாசித்துப் பார்த்துக் கட்டுரை அமைப்புச் சிதையாதபடி கருத்துத் தொகுப்பைச் செய்தேன். பின்பு இந்த வகை நூலை எப்படிப் படித்து ஒரு முடிவை மேற்கொள்வது என்ற கேள்வியை உருவாக்கி ஒரு தீர்மானத்துக்கு வந்தேன். பல விதமான,சிறு பல்கோணக் கட்டுரைகளுக்குள் கூட, சில பொதுமைகள் இருந்தது தெரிய  வந்தது.

சில கட்டுரைகளில் – தேன்மொழி தாஸ், ஜீவித்தா, முபின்சாதிகா, பழனிபாரதி, தமிழச்சி போன்றோரின் கவிதை பற்றிய கட்டுரைகளில், சண்முகம் பயன்படுத்திய சில சொற்கள் என் கவனத்தில் பட்டன. கவிதைசொல்லி, சொல்லாடல். குறி, குறிப்பான், குறிப்பீடு போன்றவை அவை. அடுத்த கட்ட சிந்தனை வளர்ச்சியாக  வரைதோல் எழுத்து, அழிப்பாக்கம் (ஜீவித்தா) மொழியும் மௌனமும் போன்றவற்றைக் குறிப்பிடுகிறார். புதிய கருத்துக்களான தன்னிலை, எதிர்நிலை, கதையாடல் பற்றி பழனிபாரதி கவிதைகளை விளக்குகையில் சொல்கிறார். முஸல்பனி நாவல் பற்றிக் கூறும்போது ‘எழுதி அழிப்பதன் தோற்றம்’ பற்றிக் குறிப்பிடுகிறார். எழுத்தின் தோற்றம் என்றோ அழிப்பின் தோற்றம் என்றோ சொல்லாமல் ‘எழுதி – அழிப்பதன் – தோற்றம்’ என்ற, நமக்குத் தெரிந்த சொற்களை வேறு ஓர் அர்த்தத்தில் புரிந்து கொள்ளுங்கள் என்று வலியுறுத்துகிறார் சண்முகம்.

 

இக்கட்டுரை வழி இன்றுள்ள இலக்கியம் பற்றிய எழுத்தில் பயன்படுத்தப்படும் பிரத்தியேகச் சொற்பயன்பாடு பற்றிக் கொஞ்சம் சொல்ல எனக்கு விருப்பம். சண்முகம் பயன்படுத்தும் திறனாய்வு விளக்கச் சொற்கள், எண்பதுகளுக்குப் பின்பு சிலர் பயன்படுத்தும் சொற்கள். அதற்கு முன்பு விமரிசனத்தில் பயன்படுத்திய சொற்கள் முற்றாய் ஒதுக்கப்பட்டுள்ளன.

கவிதைசொல்லி:

உதாரணத்துக்குக் கவிதைசொல்லி என்ற சொல்; கவிதையைச் சொல்லும் கவிஞன் என்று பொருளல்ல. சண்முகத்தின் உரைநடை விமரிசனமும் கவிதை விமரிசனமும் இப்புதுச் சொற்களால் நிறைந்துள்ளன. இதில் சில சொற்கள் ஜமாலனைத் தவிர வேறு யாரும் பயன்படுத்தியதை நான் வாசித்ததில்லை (நான் ஒரு தீவிர விமரிசனக் கட்டுரை வாசகன் என்பதையும் ஓரிரு பக்க விமரிசனமும் கூட என் கவனத்திலிருந்து தப்பமுடியாது என்பதையும் என் எழுத்தில் பழக்கமில்லாத வாசகர்கள் நம்ப வேண்டும்.) கவிதைச் சொல்லி என்ற சொல்,  ஒரு நபராகவும் அவரின் குரலாகவும் கருதப்பட்டலாம். அது கவிதையின் மொழி, வாய் திறந்து வெளிப்படுத்தும் மொழிக்குரலாகவும் வரலாம். இதை சண்முகத்தின் விமரிசனம் சுட்டிக் கொண்டே போகிறது. 2008-இல் இவர் எழுதிய ஆத்மாநாம் பற்றிய கட்டுரையிலும் அதுபோல், 2019-இல் எழுதிய ஜீவித்தாவின் கவித்வ மொழி பற்றிய கட்டுரையிலும் ஒரே சொல்லை, ‘கவிதைசொல்லி’யைப் பயன்படுத்துகிறார்.   அதனைப் பத்து ஆண்டுகளாக மனதில் ஊறப்போட்ட கருத்தாக்கமாய் அறிகிறார். அதாவது நேரத்துக்கேற்ற பாஷனாக இவர் கலைச்சொற்களைப் பாவிக்கவில்லை. அழுத்தமான அறிவுத்தூண்டலால் உந்தப்பெற்று நிச்சயமான பார்வையுடன் வெளிப்படுத்துகிறார். ஜீவித்தாவின் கவிதைகள் பற்றிச் சொல்லும்போது இப்படிக் கூறுகிறார்: “கவிதைசொல்லி யின் எண்ணற்ற குரலிழைகளின் வழியே பிரதியினை இனம் காணுவது என்பது துவங்கு கிறது. ஒரு பிரதியின் முழுமைபெற்ற வடிவம் என்று ஒன்றுமில்லை..” அதாவது ‘எண்ணற்ற குரலிழைகளை உற்பத்தி செய்வது ஒரு செயல். அதைச் செய்வது ஒரு ஆணோ, பெண்ணோ அல்ல; ஒரு பிரதி அதைச் செய்கிறது. கவிதையில் பிரதி என்பது முழுமை பெற்றதல்ல. அதாவது கவிதை செய்யும் நிரந்தரமான ஒலி எழுப்பல் இது. தொடங்குவதும் இல்லை; முடிவதும் இல்லை. இவர் தன்  நூலில், கவிதைசொல்லி என்ற ஒரே சொல்லையே பல்வேறு அர்த்தங்களைக் கூற வர்ணம் மாறும் காட்சி போல மாற்றிமாற்றி கவிதையின் வீரியத்துக்கேற்ப பயன்படுத்திக் கொண்டே செல்கிறார். ஒரே கலைச்சொல்தான், தன் வலிமையைத் கவிதையின் பல்வேறு வாசித்தல்களுக்குத் தகப் பெருக்கிக்கொண்டே போகிறது.

கவிதைசொல்லி என்ற கருத்தாக்கம், ஓர் இலக்கியக் கலைச்சொல். இலக்கியச் சொல்அகராதியில் வழக்கமாய் வரும் மூன்று அர்த்தங்களோ, நான்கு அர்த்தங்களோ மட்டும் பட்டியலிடப்படும் பொருள் புரியாச் சொல் அல்ல. இச்சொல் முதன்முதலாக எனக்குத் தெரிய, இன்று பலரும் மறந்துபோன, முக்கியமான இடதுசாரி சனநாயகவாதியாக இருந்த, கோமல் சுவாமிநாதனின் வெகுசனங்களையும் ஈர்த்த, சுபமங்களா என்ற இதழில் வந்த சொல். சுந்தரராமசாமியின் மேலோட்டமான கருத்தை மறுக்குமுகமாகப் பயன்படுத்திய சொல். ‘கவிதையை – உள்ளொளி கொண்ட, தெய்வத் தன்மை கொண்ட, படைப்பாளியும் காரணனும் மூலனுமான  திருவாளர் கவிஞர் பிரான் படைக்கிறார் ‘ என்ற கருத்தை மறுக்குமுகமாக வந்த சொல்.  அன்று ஒரு சர்ச்சையில் அறிமுகமான சொல். அமைப்பியல் அப்போது தான் கவிதையில் மெதுமெதுவாக விமர்சன மாற்றுக்கலைச் சொல்லாக்கத்துக்கு உதவிய காலகட்டம் அது. இப்படி ஒரு சொல்லின் சரித்திரம்கூட இன்று முக்கிய மாகும் படி உள்ளது. காரணம் பல இளைஞர்களுக்கு இச்சொற்கள் வந்த கதை தெரியாது. இதில் சண்முகம் வேறுபட்டவர். அவர் அச்சொற்களைக் கவனமாய் தொகுத்துக்கொண்டதோடு அச்சொற்களைப் புதுப்புது அர்த்த மலர்களைச் சேர்ப்பதுபோல சேர்த்துப் புதிய மாலையைக் கட்டுகிறார். அப்படிக் கவிதைசொல்லி அல்லது கவிதையாடலைப் பற்பல அர்த்தங்கள் வரும்படி விகசிக்க வைக்கிறார். நீச்சல் குளத்தில் நீரில் குதிப்பதற்கு அமைக்கப்பட்டிருக்கும்  அசைகிற படியிலிருந்து உந்துதலை வாங்கி எவ்வளவு தூரத்தில் எம்பிப்போய் பாயவேண்டும் என முடிவு செய்யும் சாகசத்தை நிகழ்த்துகிறார். இதை எப்படி என விளக்குகிறேன். ஈழப்பெண் கவிஞர் அனாரின் கவிதைகளில் மொழிக்குள் ஒரு மொழி வெளியைக் காண்கிறார். பின்பு அந்த மொழிவெளி எப்படி உருவம் பெறுகிறது என்று விளக்கத் தொடங்குகிறார். கவிதை வருவதற்கு முன்பு மொழியின் உள்ளே உறைந்திருக்கும் ஒன்று (உள்ளுறை) கருக்கொள்கிறதா எனக் கேட்கிறார். அங்கு ஒரு நிச்சயமின்மை துவங்குகிறது என்கிறார். உள்ளுறைதான் அந்த நிச்சயமின்மையைத் தொடங்குகிறது என்பது இவர் எண்ணம். உள்ளுறை, வடிவம், கரு, நிச்சயமின்மையின் துவக்கம் போன்றவற்றை மொழிச் சுழற்சி எனப் பெயர் சூட்டுகிறார். மொழிதொடரும் போது – தொடர்ந்து இயங்கும்போது – மொழி தனக்குள் நடத்தும் செயல்வலைப்பின்னலாயும் பின்னப்படுவதாகவும் கட்டவிழ் வதாகவும் ஒரு முரண் பண்பு உருக்கொள்கிறது என்கிறார். அதாவது அமைப்பும் அமைப்பை உடைத்தலையும் கவிதையின் செயல் களத்தில் பார்க்கிறார். அமைப்பை உடைத்தல் ‘டிகன்ஸ்ட்ரக்ஷன்’. இது எதிரும் புதிருமான பண்புகள். இதுதான் கவிதையின் சொல்லுதல் அல்லது கவிதையாடல். இப்படிக்கூறி  இதுவரை பயணித்த / போராடிய விளையாட்டு அரங்கிலிருந்து வெற்றியீட்டிய வீரனைப் போல் மேடைக்கு மேல் வந்து தோற்றம் தருகிறார். என்னுடைய பழங்கால உவமைகளை (வீரன் அரங்கம் etc.) புறந்தள்ளிவிட்டு வாசகர்கள் வாசித்தால் கவித்துவம் என்ற சொல்லுக்குப் பதிலாய் கவிதையாடலை ஒரு மாற்றுச் சொல்லாய் விளக்கங்களுடன் அறிமுகப்படுத்துகிறார் என்பது புரியும்.

 

கவிதைசொல்லியின் கவிதையாடல்  ஒரு பெரிய கவிதை விமரிசன தளப்பெயர்ச்சியை (shift) தமிழ்த்திறனாய்வில் கொண்டு வந்துள்ளது. சிந்தனைச் சரித்திரம் மாறிவிட்டது. அதாவது இந்த இடத்தில் எனக்குப் பிடித்த ஒரு சொல்லைப் பயன்படுத்துகிறேன். பொருள்முதல்வாத மொழி விளக்கம். அவ்வப்போது மதநூல்களை மேற்கோள் காட்டும் நூலாசிரியரின் சிந்தனை உலகு, மேலோட்டமாய் அடையாளமாகையில் பொதுவான மத அடையாளம் போல் தெரிந்தாலும் அதனுள் மொழியின் குறிப்பான், குறிப்பீடு, அவைகளுக்கிடையில் உள்ள பல்தளக் கட்டமைப்புக்கள், முரண்கள், மேலேறுதல்கள், அடங்குதல்கள் என்று ஒரு பெரும்தளம் இயங்குகிறது. அது பொருள்முதல் வாதம். சசூரைச் சரியான இடங்களில் அழைத்துக் கொண்டு வரத் தெரிந்தவர் என்று பல இடங்களில் நிரூபிக்கிறார். சசூரின் மொழி விளக்கம்தான் பொருள்முதல்வாதம்.

கதையாடல்:

இனி அடுத்த விசயம். இந்த நூலாசிரியர் இலக்கியத்தைப் பத்திரிகைத் தமிழில் பார்ப்பவர் அல்ல. அதனை செய்தித் தொகுப்பாகப் பார்ப்பவரும் அல்ல. இலக்கியம் என்பது,  சமூக ஆவணம் மட்டுமே என கட்சி சார்ந்த பயிற்சி பெற்றவர்கள் போல பார்ப்பவரும் அல்ல. இவை எனக்கு உடன்பாடான விசயங்கள். இலக்கிய ‘ஜானர்களான’ கவிதையும் புனைகதையும் இவருடைய முக்கியமான இரண்டு ஈடுபாடுகள். இந்த இரண்டையும் உலகம் முழுவதும் விசேடித்துக் குறிப்பவை அவ்வம்மொழியின் வாக்கியங்கள். இதே வாக்கியம் திடீரென கதைசொல்லல்கள் ஆகிவிடும். அதனை வசதிக்கேற்ப கவிதை விமரிசனத்தில் சண்முகம் கவிதைசொல்லி எனவும் கதைவிமரிசனத்தில் கதையாடல் எனவும் குறிப்பிடுகிறார். கவிதையும் கதையும் ஒரு தனித்துறையாக மொழியின் வாக்கிய வெளிப்பாட்டுக்குள் சேர்த்துப் பார்க்கும்முறை  அமைப்பியல் வந்த பின்பு ஏற்பட்டது.  ஒவ்வொரு சொல்லுக்கும் குறிப்பிட்ட அர்த்த வரையறை, தனித் தன்மை யுடன் உண்டு. அப்படித்தான் பயன்படுத்த வேண்டும். சண்முகம் கதையாடல் என்ற சொல்லைப் புனைகதை விமரிசனம் எழுத ஆரம்பித்த காலத்திலிருந்தே பயன்படுத்துகிறார். 60கள், 70களில் இச்சொல் தமிழ் விமரிசனத்தில் இல்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

 

கதையாடல் என்ற சொல்லையும் ஆங்கிலத்தில் ‘நெரேஷன்’ என்ற சொல்லின் மொழிபெயர்ப்பாகப் பயன்படுத்தலாம். ஆனால் இவர் ஆங்கிலச்சொல்லை மொழிபெயர்த்துப் பயன்படுத்தும் சிந்தனைக் காப்பியிஸ்ட் அல்ல. சிந்தனையைக் கிளர்ந்தெழ வைப்பவராகையில் தமிழ்ப்படுத்தவும் சிந்தனைப்படுத்த வும் செய்கிறார். கதையாடல் என்ற சொல்லுக்கு ஒரு, தனி பொருள்தள விரிவைத் தருகிறார். இவருடைய 500 சொச்சம் பக்க புத்தகத்தில் கதையாடல் என்ற சொல் வரும் 50க்கும் அதிகமான இடங்களில் சுமார் 25-க்கும் அதிகமான வகைமாதிரி பொருள்தளங் களை உருவாக்குகிறார். நான் குறிப்பெடுத்து வைத்துவிட்டு பேசுகிறேன். எல்லாப் பொருள்தளமும் ‘மொழிமையில்’ –மொழித்தன்மையில் – வேரடித்து நிற்கின்றன. கோட்பாட்டு ரீதியில் தொல்காப்பியரின் பிரிவுகளான எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று பிரிவுகள் ஒருமை கொள்வதும் “மொழிமையில்” தான் என்று கருதுகிறேன். (எந்தத் தொல்காப்பியப் பண்டிட்டுடனும் நாம்  இது பற்றி பேசமுடியும். ஆனால் அவர்கள் அமைப்பியல் படிக்கவேண்டுமே!) பொதுவாய் தொல்காப்பியம் படித்தவர்கள் ‘கப்’பென்று பிடித்துக்கொள்வார்கள் என்றுதான் கருதுகிறேன்.  இந்த இடம் கூர்த்த மதியுடையோர்க்குப் பழம்தமிழ்ப்பார்வையில் விளக்கப்படுகின்றது. அதாவது  ‘’மொழியின் மறுபுனைவு”  நூலுக்கும் தொல்காப்பிய நூல் அமைப்புக்கும் தொடர்புள்ளது.

 

பக்கம் 140-இல் சல்மான் ருஷ்டியின் ‘ஹரூன் மற்றும் கதாசாகரம்’ என்ற ஆங்கில நூலின் கதையியலை விளக்கும்போது ஓர் அபூர்வமான வாக்கியத்தை எழுதுகிறார். இதோ அந்த வாக்கியம்:

 

‘….. வாசித்து முடித்துவிட்டு, வாசிப்பில் நாம் தாண்டிச்சென்ற வாக்கியங்களை நினைவுப்படுத்திப் பார்த்தால் அந்த வாக்கியங்கள் நிச்சயமற்றதாக நாம் குறிப்பிடுகிற குறியீட்டை நகர்த்திக் கொண்டே போவதைத் தெரிந்து கொள்ளலாம்…’

 

என்ன சொல்கிறார் இந்த மேற்கோளில்? அதே பக்கத்தில் சற்றுமேலே ‘கதை யானது சொல்லப்படும்போது, கேட்பவர்கள் (வாசிப்பவர்கள்), கதையில் சொல்லுதலைக் கதைசொல்லியின் மனஒழுங்கிலேயே உள்வாங்குதல் என்ற நிச்சயம் தகர்ந்துவிடுகிறது’ என்பார். (இலக்கணப் பிழையுடன் எழுதப்பட்டது போலக் காணப்படுகிறது இவ்வாக்கியம்.  சரியாய் புரிந்துகொள்ள, வாசிக்கும் நண்பர்களை இந்த முழுக்கட்டுரையையும் படித்துப் பாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.)

 

அதாவது ‘கதைசொல்லி’ என்ற சொல் ஒரு குறியீடுபோல் ஒன்றைச் சொல்லி இன்னொன்றையோ, பலதையோ மனதில் வரவைக்கும் சொல். என்ன வரவைக்கப்படு கிறதென்றால் ஒரு ‘நிச்சயமின்மை’. நான் இங்கே காட்டும் இரண்டு வாக்கியங்களிலும் ஒளிந்தபடி நிச்சயமின்மை, நிச்சயம் தகர்தல் போன்றன வருகின்றன. கதைசொல்லி என்ற சொல்லைச் சிலர் தவறாய்  ‘நான் கதைசொல்லி’ என்று சுயதம்பட்டமாய் நெற்றியில் ஒட்டியபடி அலைகின்றனர். இவர்களின் அறிவுமட்டம் பற்றி நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் கதைசொல்லி என்பது வேறு ஓர் அர்த்த பரிமாணமாகும் என இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

 

மேலே இதுவரை நாம் பார்த்ததில் இரண்டுவிதக் கதையாடல்கள் பற்றிச் சொன்னார். கதையாடல் என்பது நிச்சயமின்மை. அடுத்தது, அது ஓர் அகப்பரப்பு. இந்த இரண்டு விசயங்களை மட்டும், தற்சமயம் பார்க்கலாம். முதல் மேற்கோளில், வாக்கியங்கள் மனதில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவதால் அப்படியா அல்லது இப்படியா என்ற அல்லாட்டம் (நிச்சயமின்மை) ஏற்படுகிறது. வாக்கியத்தை அப்படிக் கொண்டுபோனால் (ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு ராஜா) அது ஒரு கதையாகவும் (ஒரு காட்டில் ஒரு ராட்சசன் இருந்தான்) என்று இப்படிக் கொண்டு போனால் அது வேறு ஒரு கதையாகவும் மாறும். சொல்கதையில் மட்டுமின்றி எழுத்திலும் இப்படித்தான்.

அதுபோலத்தான் ருஷ்டி கதையிலும்.  ரஷீத் என்பவனின் மனைவி, ரஷீதின் கதைசொல்லலை நிறுத்துவதற்காக வேறு ஒருவனுடன் ஓடிப்போகிறாள்; அதனால் ரஷீத் கதை சொல்லமுடியாமல் ஆகிறான் என்று ருஷ்டி ஒரு கதை எழுதுகிறார். அப்படித்தான் கதையாடல் (கதைசொல்லல்) அகப்பரப்பாகிறது. கதை அப்படி போகிறதா அல்லது இப்படிப் போகிறதா என்று முடிவு செய்யாமல் தடுமாறும் இடபரிமாணம் தோன்றுகிறது.  இங்கு அகப்பரப்பு, என்று சண்முகம் விளக்கும் கதைப்பரிமாணம் அந்த இடப்பரிமாணம்   தான்.

 

கதையாடல் என்பது மொழியில் நடக்கிறது. ஊமைகூட செய்கைமூலம் கதை சொன்னால் அது மொழிக்குறிதான். இப்படிக் கதை ஒரு மொழிச் செயலாகிறது. அதாவது மொழிமூலம் நடக்கும் செயலாகிறது. இன்னும் சற்று நுட்பமாகப் பார்த்தோமென்றால் கவிதையாடலும் கதையாடலும் ஆகிய இரண்டும், புதுக்கவிதையும் நாவல் எழுதுவதும் வந்தபின்பு, மொழி என்னும் நிலத்தில் வளர்ந்த இரு மரங்கள். மொழியே இவற்றின் அடிப்படை. நான் வாசிப்பவர் களுக்குப் புரியவேண்டுமென்று சுருக்கி விளக்குகிறேன். எனவே கதையாடலின் பரிமாணங்களைச் சண்முகம் விவரிப்பதை குற்றவுணர்வோடு   நான் விட்டுவிட்டு அடுத்த விசயத்துக்குச் செல்கிறேன்.

 

பிரதி:

இந்தக் கனமான நூலின் ஆரம்பத்திலிருந்து கடைசிக் கட்டுரை வரை – சிறிதும் பெரிதுமான கட்டுரைகளில் ஓடும் தீவிரமான இலக்கிய மனம் – சில சொற்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டே, இந்த நூற்றாண்டின் ஆரம்பகட்டத்தில், ஒரு சாகசப் பயணம் செய்கிறது. அதில் இரண்டு சொற்களைப் பற்றி விளக்கிய பின்பு மூன்றாவது அடுத்த சொல்லுக்குப் போகிறேன் நான். அது பிரதி என்ற மூன்றாவது சொல். முதல் இரண்டு சொற்களை விட அதீத விசாலமும் தீவிரமும் ஆழமும் கொண்ட சொல் இது. 1982-ல் வெளிவந்த அமைப்பியலை  தமிழ் அறிமுகம் செய்வது எதற்காக? தமிழுக்கு என்ன அன்று வேண்டியிருந்தது?அதுவரை இருந்த மௌடீக இலக்கியச் சூழலைச் சகதியும் அழுக்கும் சேர்ந்த  அசுத்தம் எனக் கருதினர் அமைப்பியல் கற்றவர்கள். நீர் ஊற்றிக் கழுவி அச்சூழலை  அமைப்பியலின் தர்க்கங்கள் சுத்தம் செய்ததைச் சண்முகம் அடிக்கடிக் கூறுகிறார்.  அப்படிச் சிந்தனைக் கட்டமைப்பைப் புதிதாய் அறிமுகப்படுத்திய சூழலை இந்நூலாசிரியர்  பல இடங்களில்  கவனித்தீகளா, கவனித்தீர்களா, என கேட்டு விளக்கிச் செல்கிறார்.  அதனால்தான் முக்கியமான இவ்விஷயம் பற்றி விதந்தோத வேண்டியுள்ளது. பிரதி என்ற சொல், நூல் என்ற சொல்லுக்குப் பதிலி அல்ல என்று அமைப்பியல்வாதி ரோலான்பார்த், மிகத் தெளிவாகச் சொல்கிறார். கம்பராமாயண நூல் என்பது வேறு பொருள். கம்பராமாயணம் என்னும் பிரதி என்று சொல்வது வேறுபொருள். என்றாலும்,  இதனைச் சிலர் தவறாகச் சொல்கிறார்கள். அப்படிச் சொல்பவர்களைக் கிஞ்சித்தும் பொருட்படுத்தாது தன் பாதையில் பிரதி என்னும் சொல்லை சுமார் 30, 40 பொருள்தள விரிவுகளுடன் கையாள்கிறார். இது அபாரமான வேலை. இனி பிரதி என்னும் சொல்லைக் கையாள விரும்புகிறவர்கள் இந்த நூலைப் படித்துப் பிரதி என்னும் சொல் எப்படி எப்படி எல்லாம் கையாளத்தக்கச் சொல் என்று கண்டுபிடித்து மகிழலாம். இதை நான் எதற்காகச் சொல்கிறேன் என்றால், நவீனத் தமிழ், தான் நவீனமாகும்போது – புதுச்சொற்களைப் பயன்படுத்தும்போது (மச்சி என்பது, கலாய்க்கிறான் என்பது போன்ற தமாஷான சொற்கள்) – ஒரு பெருவாரிமுகத்தை வேடிக்கையாக எடுக்கிறது. திருக்குறள், தொல்காப்பியம் போன்ற சிறுவாரி அறிவு மரபைப் புதுச்சொல்லாக்கத் தத்துவம் பின்பற்ற வில்லை.மச்சி என்பது தொல்காப்பிய மரபா? இது மொழியியல் பேசும் விஷயம் . விளக்கம், இப்போது வேண்டாம்.  அதுபோல் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டால், சென்னைத் தமிழைப் பேசி அசத்தக்கூடிய நூலாசிரியர், ‘பிரதி’ என்ற சொல்லைப் பயன்படுத்துவது, தமிழின் 2000 ஆண்டுகால அறிவுமரபுப் பாரம்பரியப்படி என்பேன். அதாவது விமரிசனம் (திறனாய்வு) என்ற சிந்தனையின் எல்லையைப் பிரக்ஞாபூர்வமாக விரிவாக்கி அதன் அடுத்தகட்டமான கோட்பாடு என்ற செயலுக்குப் போகிறார். சர்வதேச அறிஞர்களான டெர்ரி ஈகிள்டன், பிரடெரிக் ஜேம்சன், பால்டிமான், போன்றோரின் செயலைத் தமிழ்த்தெளிவுடன் செய்கிறார்; அனாயசமாகச் செய்கிறார். அதாவது திறனாய்வு வேறு கோட்பாடு வேறு என்பதை கடந்த 30 ஆண்டுகளாக, தமிழிலும் ஆங்கிலத்திலுமாக மிகுந்த ஆய்வறிஞனின் சிரத்தையுடன் கற்றுப் புரிந்துவிட்டார் என்பதை அவர் நூலில் பல இடங்களில் நான் காண்கிறேன். அது உண்மையான ஒரு நிரூபணம் என்பதை பிரதி என்ற சொல்லை இவர் பயன்படுத்தும் எல்லா இடத்திலும் கவனித்துப் புரிந்துகொள்ளலாம்.

 

சரி, சில உதாரணங்களைப் பார்ப்போம். ‘லாடம்’ என்ற பாலைவன லாந்தரின் கவிதைத்தொகுப்புப் பற்றி பேசும்போது இப்படி எழுதுகிறார்: ‘பிரதிகளை எழுதுபவர்களின் அறிதல் முறை… intersubjective ஆக அமைந்துள்ளது’ (பக். 227) என்கிறார். அடுத்து (பிரதி) ‘பல்வேறு பிம்பக்கூறுகளாலும் அதனைச் சார்ந்தவைகளாலும் கட்டப்பட்டுள்ளது’ (பக். 227) என்கிறார். இருவர் தத்தமக்குள் கடத்தும் (intersubjective) செய்திகள் என்னும் அறிதல்முறை தான் பிரதி. ஞாபகம் இருக்கட்டும் text என்ற சொல், புத்தகம் அல்ல என்று மொட்டையாக விளக்கமின்றி ரோலான் பார்த் சொல்லிவிட்ட இடத்திலிருந்து வேறு ஒரு திசையில் பயணிக்கிறார் நூலாசிரியர் சண்முகம். தமிழில் ஒரு கவிஞர் எழுதும் கவிதையில் பிரதி எப்படி வடிவம் கொள்கிறது என விளக்குகிறார். அதாவது பிரதி, பரஸ்பர மனித மொழியாடல் என்பது ஒரு விளக்கம். அடுத்து மொழியின் பிம்பங்கள் (பிம்பக்கூறு) என்று இன்னொரு விளக்கம் தருகிறார். மூன்றாவதாக, பிம்பம் மட்டுமல்ல, பிம்பத்தைச் சார்ந்தவைகளும் பிரதி தான் என்பது இவர் பார்வை. அதன்பின்பு பிரதி பற்றி முழுசாய் தான் சொல்லி முடிக்கவில்லை என்ற ஓர்மை வந்தவுடன் நான்காவது விசயத்துக்குப் போகிறார். அது முபின் கவிதை பற்றிக் கூறும் இடம். ‘வேட்கை…… பிரதியாக்கம்…….. ’ ஆகிறது என பிரதி என்ற சொல்லை ஓர் உணர்வு என்று நாம் எதிர்பாராத ஓர் சுட்டுதலைத் தருகிறார் (பக்.277). அதே கட்டுரையில் பிரதி என்பது மொழி மட்டுமல்ல என்றுகூறிவிட்டு, மொழி முடிந்துவிடும்  இடத்தையும் பிரதி என்று அழைக்கலாம் என்கிறார். அதாவது இதுவரை பிரதிக்கு ஏழு அர்த்தங்களைத் தந்துள்ளார் சண்முகம். எனவே, பிரதியை அறிவாகவும், பிம்பமாகவும், மனித வேட்கையாகவும் கூறுகிறார். பின்பு மொழியின் சரீரம் மட்டுமல்ல, சரீரம் இழந்த மௌனம் கூட ‘பிரதி’ என்றே தான் கருதுவதையும் சொல்கிறார். எம்.ஏ.ஷகியின் கவிதைகள் பற்றிப் பேசும்போது மொழிச்செயலின் விளிம்புக்கு வெளியே பல வடிவங்கள் காணப்படுகின்றன என்கிற திறனாய்வாளர், ‘இதன் விளிம்பிற்கு வெளியே உள்ள வடிவங்களோடு பிரதி பரிவர்த்தனம் கொள்கிறது’ (பக். 291) என்கிறார். பிரதி கருத்துப்பரிமாணம் மட்டுமின்றி, பார்வைப் பரிமாணமும் கொள்ளும் எனச்சுட்டி,   பொருள்தளமான வடிவ விளிம்புகள் கூட பிரதி ஆகலாம் (பிரதியின் பரிவர்த்தனை – exchange –) என்கிறார். இதுதான், ”தன் வசமிருந்த ஏதோவொன்றை இழந்துவிட்டு அதைத் தேடியலையும் திக்கற்ற அலைதலின் மொழியாய் ஷகியின் கவிதைகள் தன்னைக் கட்டமைத்துக் கொண்டுள்ளன” என்று அக்கட்டுரையைத் தொடங்குமிடத்தில் எழுதுவதற்கான காரணம்.

 

இங்கெல்லாம் கவிதை எழுதுவதுபோல சண்முகம் கோட்பாடு எழுதுகிறார். என்னிடம்பல இளைஞர்கள்,  ‘ஸார், இவர் விமரிசனத்தில் கவிதை எழுதுகிறார் ஸார்’ என்கிறார்கள். இரண்டையும் முழுமுற்றாகக் கைவரப் பெற்றவர். கோட்பாடு ஒழிக என்று கோஷம் போடுபவர்களுக்கு இதெல்லாம் பிடிபடாது. கவிதை, திறனாய்வு, கோட்பாடு இப்படி மூன்று  அந்தரத்தில் தொங்கும்  கம்பிகளின் மீது லாவகமாய் நடமிடுகிறார் நூலாசிரியர்.

 

மூன்றுகட்டுரைகள்:

 

இந்த இடத்தில் இந்நூலின் மூன்று கட்டுரைகளைக் குறிப்பிட்டுப் பேசவேண்டும். 1.) புதுக்கவிதை: நவீனத்துவமும் பின் – நவீனத்துவமும். 2.) அமைப்பியல் – பின்அமைப்பியல் – பின்நவீனத்துவம். 3.) லெவிஸ்ட்ராஸ் பற்றிய கட்டுரை.

 

இந்தக் கட்டுரைகள் ஆங்காங்கு நூல் தொகுப்பில் அச்சிடப்பட்டுள்ளன. எனினும் இந்த மூன்று கட்டுரைகளும் சண்முகம் கட்டுரைகள் எல்லாவற்றிற்கும் அஸ்திவாரமாகும். அதாவது முதலில் சொன்ன, ‘புதுக்கவிதை, நவீனத்துவம் பின்நவீனத்துவம்’ கட்டுரை 1980களின் இறுதியில் லண்டனில் இருந்து வந்த New Left Review-வில் அச்சான அமெரிக்க மார்க்சிஸ்ட், பிரடெரிக் ஜேம்சனின் ஒரு கட்டுரையின் தர்க்கத்தைப் பின்பற்றி தமிழில் புதுக்கவிதை பற்றி எழுதப்பட்ட கட்டுரையை சன்முகம் படித்த்தால் உருவான்  அவர் பாணிக்கட்டுரை என நினைக்கிறேன். தமிழ்ப்புதுக் கவிதை போகும் போக்கைப் பற்றி ஒரு கோட்பாட்டை,  படிகள் இதழில் 1985-இல் வந்த கட்டுரை ஒன்று முன்மொழிந்திருந்தது. (தமிழவன், படிகள், 1985) அக்கட்டுரை மொத்தத் தமிழ்க் கலாச்சாரமும் ‘நானின்’ அழிவைப் பற்றிப் பேசத் தொடங்கியுள்ளது எனக் கூறியது. அதற்கு ஆதாரமாக ஞானக்கூத்தன், ஆத்மாநாம், பிரம்மராஜன் ஆகியோர் கவிதைகள் எடுத்து விளக்கப்பட்டன. அப்போது சண்முகத்துக்கு இருபது வயது இருக்கலாம் அக்கட்டுரையில்  உதாரணக் கவிதையாகக் கொடுக்கப்பட்ட  ‘என்னை நான் பிரித்துப் பார்த்தேன்……’ (ஞானக்கூத்தன்) என்ற வரிகளில் இருந்த புதுமையான ‘நான் இழப்பு’ ஒரு பொதுப் பண்பாக தமிழில்   இருந்தது கண்டுபிடித்து படிகள் இதழில் எழுதப்பட்டிருந்தது. ‘நானின் அழிவும்’ ‘நாடகீயமும்’ தமிழ் உளவியலில் இருந்ததை அக்கட்டுரை சுட்டி, ஈழப்போராட்டத்தை ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அப்போது ஆட்சியிலிருந்த எம்.ஐி.ஆர். கறுப்பு பாட்ஜுடன் துக்கம் கொண்டாடி வயிறுமுட்ட உணவு உண்ட ‘நாடகீயத்தை’ கட்டுரை பேசியது.

 

நானின் இழப்பும் கறுப்பு பாட்ஜ் அணிந்து ஐந்து நட்சத்திர ஹோட்டல் விருந்தும் இணையும் விசித்திரப் புள்ளியில் பின்நவீனத்துவம் தமிழில் பிறப்பெடுக்கிறது என்ற உண்மையை உணர்ந்த சண்முகம் தன் கோட்பாட்டு மாளிகையைக் கட்டத் தொடங்கினார். அவர் அறிதல்முறையின் கோட்பாட்டு அடிப்படை இந்த இடம். கடந்த 35 ஆண்டுகளாய் இந்த மரபை வளர்த் தெடுத்து வந்தார். சும்மாவுக்கும் ஓடிச்சென்று இவர் கட்டுரையைப் படித்துவிட முடியாது. பலமான அனைத்துலக பின்புலம் வேண்டும். பிரடிரிக் ஜேம்சன் பின்னர் மேலே நான் சுட்டிய அவரது சிறுகட்டுரையைப் பெரிய நூலாய் விரித்து எழுதி “போஸ்ட் மாடர்னிசம். பிந்திய முதலாளியத்தின் பண்பாட்டுத் தர்க்கம்”என அமெரிக்காவில் பிரசுரித்தார். அந்த நூல்,  அமெரிக்க மாணவர்களுக்கு எழுதப்பட்ட பாடநூல்; உலகப்புகழ்பெற்றது.  இப்படி உலக வியாபகம் கொண்ட கட்டுரை, நூல், போன்றவற்றில் ஸ்தாபிதம் பெற்ற அடிப்படை சண்முகம் சிந்தனைக்கு உள்ளது. அதை இந்தக் கட்டுரை (2008 –இல் வந்த கதைமொழி என்ற நூலில் இருந்த கட்டுரை)சுட்டும். இதனை மொழியின் மறு புனைவு என்ற இந்த நூலில் முதல் கட்டுரையாகத் தொகுப்பாளர் சேர்த்திருக்கிறார். தமிழ்ச் சமூகம் பற்றிய சித்தரிப்பு ஒன்றைப் புரிந்து கொள்ளாமல் புதுக்கவிதை இந்தச் சமூகத்தில் ஏன் தோன்றியது என விளக்க முடியாது. தொடர்ந்து தமிழில் ஏன் புதுக்கவிதை, எழுதப்பட்டுக் கொண்டேயிருக்கிறது என விளங்கிக் கொள்ளமுடியாது.

 

நூலில் கடைசிக்கு முந்தின கட்டுரை இன்னொரு முக்கியமான கட்டுரை. தலைப்பு: அமைப்பியல், பின்அமைப்பியல், பின்நவீனத்துவம். அதில் (பக். 528) தன் சிந்தனை மண்டபத்தின் நூறு கால்களில் ஒரு மையமான காலை நிறுவுகிறார். தமிழ் விமரிசன வரலாற்றை ரசனைவாதம், தமிழ்க் கல்வியியல், மற்றும் மார்க்சியம் என்று மூன்றாய் இனம்கண்டு பிரதியியல் விமரிசனம் இந்த மூன்றின் உள்ள ஊடாட்டமே என்று நிறுவும் இடம் இவருடைய சிந்தனையின் தனித்தன்மையாகும். க.நா.சு. விலிருந்து இன்றுவரை எழுதும் க. நா.சு.வின் நிழல்கள்  யாரிடமும் கூட இல்லாத  இடம் இது.  மூன்று போக்குகளில் உள்ள சத்துவம் வழி தன்னுடைய (நான் மேலே விளக்கிய) பிரதியியல் விமரிசனத்தைப் பெயர்ச்சூட்டி அறிவிக்கிறார். இதில் ஜமாலுனுக்கு (பார்க்க: அவருடைய ‘பிரதியில் கிளைக்கும் பிம்பங்கள்’  என்ற நூலுக்கு நான் எழுதிய முன்னுரை) ஒரு தொடர்ச்சியிருக்கிறது. ஜமாலனின் பிரதி என்ற விளக்கம் கொஞ்சம் வேறுபட்டதும், கொஞ்சம் ஒற்றுமை உள்ளதுமாகும். இருவரும் நண்பர்களாதலால் இவர்களுக்குள் நடக்கும் நீண்ட நேர விவாதம் குறிப்பிடத் தக்கது.

நான் மேலே சுட்டிய கட்டுரையில் இரண்டு மூன்று விசயங்களைச் சொல்கிறார். ஏற்கனவே பார்த்ததுபோல, தமிழ்த் திறனாய்வு வரலாற்றில் எண்பதுகளில் வந்த அமைப்பியல் ஒர்,  Cut off Period என நம்புகிறார். அதனால் தனது பிரதியியல் கோட்பாட்டை அமைப்பியலிலிருந்து வார்த்தைகளைப்பெற்று, மொழிக்கிடங்கு, பேச்சு (பரோல்) என மொழித்தத்துவம் காண்கிறார். பின்பு இன்னும் அதிபுரட்சிகரமான ஒரு செயலைச் செய்கிறார். தமிழ்த்தொல்காப்பியத்தோடு ஒட்டி உரைசொல்லல் சார்ந்து நடந்த சர்ச்சைக்குப்  போகிறார். எது விமரிசனம் என சி.சு.செல்லப்பா, க.கைலாசபதி ஆகியோர் மூலம் ஒரு விவாதம் நடந்தது உண்டு. பழைய உரைமரபில் இருந்ததா, நவீன விமரிசனம் என்பது போல.  சண்முகமும், இளம்பூரண வழிவந்த உரைசொல்லல் எனும் மொழித் தத்துவச்செயல்பாடு, விமரிசனத்தின் எந்த  எல்லைக்கோட்டைத் தொடுகிறது என யோசிக்கிறார். பாருங்கள், இப்படி எழுதுகிறார்: வாசிப்பதற்கு, ஒரு பிரதி உள்ளது;  ஆசிரியன் வாசகன்- உரையாளன் (உரையாசிரியன்) என்ற பங்கேற்பாளர்களும் (பக். 529) உள்ளனர் எனச் சொல்கிறார். பிரதி என்பதை ஒரு பருண்மையான வடிவமாக அமைப்பியல் முன்வைத்தது என்கிறார். இதன் அடிப்படையில் பருண்மைப் பகுப்பாய்வு (objective analysis) அடிப்படையில்  விமரிசன முறை வந்தது என்கிறார். ந.பிச்சமூர்த்தி போன்றோர் பாரதியின் மேல்தட்டு சனாதனத்தின் தொடர்ச்சியாய், தற்காலத் தமிழிலக்கியத்தைச் சித்தரித்து வந்த எழுபதுகளில் பருண்மைவாதம் என்ற புறவய பொருள்முதல்வாதம் சனாதனத்தின் முதுகெலும்பை உடைத்த கதை இது. இதிலிருந்து சொல்லாடல் போன்ற அமைப்பியல் சொற்கள் வந்த விதத்தை விளக்கலாம். என்னிடம்(புத்தகம்பேசுது,2021ஆம் ஆண்டில் ஓர் இதழ்) பிரதிபா ஜெயச்சந்திரன் என்கிற தோழர் ஒரு நேர்காணல் கண்டபோது ஐம்பதாண்டு கால தமிழிலக்கிய  வரலாற்றில் மேலே தெரியாத ஒரு வர்க்கப்போர் நடக்கிறது என்றேன். சண்முகம் கூறும் புறவயம் தான் வர்க்கப்போர் நடப்பதைவெளிப்படுத்தும் சொல். இப்படி இவருடைய கட்டுரைகளைத் தொடர்ந்து வாசித்து விளக்க நண்பர்கள் தயாராகி வருகிறார்கள். இக்கருத்திலிருந்து லையோத்தார் போன்ற பின் நவீனத்துவ வாதிகளின் சிந்தனையுடன் வெகுநுட்பமான தொடர்பிருக்கிறது என்று சொல்லும்  சிந்தனைக் கண்ணிக்கு வருகிறார். அமைப்பியலை மொழியியலுடன் தொடர்பு படுத்திய தர்க்கம் பொருள்முதல்வாதமாய் இருப்பதை இவர் எழுதியுள்ள லெவிஸ்ட்ராஸின் கட்டுரையிலும் பார்க்கலாம். அது தனியாகக் கவனம் பெறவேண்டும். அதைத்தான் மூன்றாவது கட்டுரையாக மேலே குறித்தேன். மொத்தத்தில் இது இவர் நூல் மீதான ஒரு தொடக்கக் கட்டுரை.

 

திறனாய்வும்  கோட்பாடும் இணைதல்:

 

என் இந்தக் கட்டுரையில் நான் விமரிசனமும் கோட்பாடும் இந்த நூலின் அடிப்படை தர்க்கத்தில் உள்ளது என்று பல இடங்களில் குறிப்பிட்டுள்ளேன். சிலருக்கு ஒரு குழப்பம் வரலாம். விமரிசனம் எழுதும்பாணி வேறு;  கோட்பாடும் எழுதும் பாணி வேறு. எண்பதுகளிலிருந்து அமைப்பியலானது தமிழ் இலக்கியச் சிந்தனையில் தோன்றிய பிறகு இரண்டையும் வேறுபடுத்திப்  பலர் எழுதுகிறார்கள். பலருக்கு இவ்விரண்டும் தனிக்கிளைகளாவது  சீரிய முறையில் தமிழ்ச்சிந்தனை வளருவதன் அறிகுறி எனத்தெரிய ஆரம்பித்துள்ளது.  விமரிசனமும் கோட்பாடும்  இலக்கியத்தைச் சீரிய துறையாகக் கருதாமல் முகநூலில் அரைப்பக்க அபிப்பிராயம் எழுதுபவர்கள் லேசாகவாவது விமரிசனத்தைத் தொடமுடியும் தான். ஆனால் நல்ல விமரிசனத்தில், ஒரு முழுமையான தர்க்கம் இருக்கும். அது வளர்ந்து கோட்பாடு உருவாகும். வெறும் நூல் மதிப்புரைகள் கோட்பாடு ஆகாது. எனினும் அப்படி எழுதுபவர்களையும் விட்டுவிடமுடியாது.

 

இவர் இந்த   நூளில் மதிப்புரைப் பார்வையை எழுதினாலும் பெரும்பான்மை இடங்களில், அவற்றின் அடிப்படையில், இவருக்கான ஒரு முழுமைப்பார்வை உள்ளதை நான் கவனித்தேன்.  அதனால் கோட்பாட்டை விட்டுவிடாமல் அதைப்பின்புலமாக வைத்து சண்முகம் இந்தச்சிறு கட்டுரைகளைத் தன் தீவிரத்தைக் கைவிடாமலே,  எழுதியுள்ளார் என்று கூறுவேன். ரயாஸ் குரானா, ஸ்ரீநேசன், தவசி, பைசால், தூரன் குணா போன்றோர் பற்றிச் சிறுகுறிப்புகள்  எழுதினாலும் அந்தக் குறிப்புக்கள், வலிமையான ஒரு கோட்பாட்டு தொடக்கத்திலிருந்தே முகிழ்த்துள்ளன என்பதே என் திடமான கருத்து.

 

மொத்தத்தில்,  நூலை வாசிப்பவர்களுக்கு உதவ  வேண்டி ஓர் ஆரம்பமாக இக்கட்டுரையை எழுதியுள்ளேன்.  தொடர்ந்து விவாதங்கள் வரவேண்டும்.

TAMILAVAN INTERVIEW IN PUTHAKAM PESUTHU AUGUST ISSUE

புத்தகம் பேசுது வாசகர்கள் சார்பாக வணக்கங்கள், தமிழ் இலக்கிய விமர்சன உலகம் உங்களைப்போன்ற திறனாய்வாளர்களை, நாவலாசிரியர்களை, புறந்தள்ளிவிட்டுப் போகமுடியாத ஒரு இலக்கிய விமர்சன மேடையில் இருக்கிறீர்கள், உங்களுடைய இளமைக்காலங்கள் குறித்து எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

நான் இப்போதைய குமரிமாவட்டத்தில் பிறந்தேன். மலையாளமும் தமிழும் கலந்து பேசும் கல்குளம் பகுதியில் மலையடிவாரக் கிராமம். அப்போது வளர்ச்சியடையாத ஊர்.  இன்று வளர்ச்சியடைந்த ஊர். அப்போது அது  திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் இருந்தது.  பிறந்தது மிகச்சாதாரண குடும்பம். ஊரில் கல்லூரிக்குச்சென்ற மூன்று நான்கு பேரில் ஒருவன். ஏழாவது வயதில் அப்பகுதியைத் தமிழகத்தோடு சேர்க்க நடந்த, நேசமணி தலைமையிலான போராட்டத்தில், துப்பாக்கிச் சூடுகள், சிறைத்தண்டனைகள், சித்திரவதைகள் அனுபவித்தவர்களைக் கண்டு தமிழ் உணர்வு ஏற்பட்டது. அது நிலவுடைமையாளர்களான மலையாளம் பேசும் நாயர்களுக்கு எதிரான போராட்டமும் கூட.  பனை ஏறும் தொழிலாளர்களும், கூலி விவசாயிகளும் அதிகம் நடமாடும் ஊர். ஏழை கிறிஸ்தவ மீனவர்களும் இருந்தனர். கிறிஸ்தவர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள் என எல்லா மதத்தவர்களும் ஒற்றுமையாக வாழ்ந்தனர். பொருளாதாரத்தில் முஸ்லிம்களும் மலையாள நாயர்களும் உயர்ந்தநிலை. நான் பள்ளி யிறுதிவகுப்பிலேயே யாப்புக்கற்று வெண்பா, ஆசிரியப்பா எல்லாம் எழுதுவேன். 1962 -இல் பாளையங்கோட்டைக்குப் படிக்க வந்தேன். கிராமத்தில் மலையாளம் கலந்த தமிழைப்பேசிய நான், என் தமிழை மாற்றுகிறேன். அது ஒரு புது உணர்வு. அதுபோல முதன் முதலாக மையத்தமிழத்துக்கு வந்த உணர்வு. முற்றிலும் வேறு உலகம். கல்லூரி மாகசினில் கவிதைகள் எழுதுவேன்.விலங்கியலில் இளங்கலை மாணவன் நான். முதலாண்டு படிக்கும்போது என்கதை தினமலரில் வந்தது. என்விடுதி நண்பர் வலம்புரி ஜான், அக்கதையை நோட்டிஸ் போர்டில் கொண்டு செருகி வைத்து அக்கதை எழுதிய மாணவன் விடுதியில் எந்த அறை எண்ணில் இருக்கிறான் என தகவல் கொடுக்கிறார். திடீர் புகழ்.  அந்த விடுதிக்கு, பின்னர் இன்றைய காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வருகிறார். வைக்கோ அவர்கள் பக்கத்து விடுதி.நான் புதுமையாக ‘காதலும் கத்தரிக்காயும்’ என சிலேடை வைத்து எழுதிய வெண்பா அடுத்து தினமலரில் வருகிறது. தளை தட்டாத யாப்பில் கவிதைகள் பிரசுரித்துக்கொண்டேயிருக்கிறேன். விலங்கியல் படித்துவிட்டுக் கேரளப்பல்லையில் தமிழ் முதுகலை முடித்தேன். பாளையங்கோட்டையில் படித்த கல்லூரியில் வேலை. ஆசிரியன் ஆன பின்பு கண்ணதாசன், தீபம், தாமரை, அப்போது வந்துகொண்டிருந்த தமிழ்நாடு என்ற நாளேடு என என் எழுத்துப் பயணம் தொடர்கிறது. ஆராய்ச்சி, ஆசிரியர் நா.வா. –வைச் சந்தித்தல். அவர் என் திசையை மாற்றுகிறார். 1971-இல் இருந்து தொடங்கி, அவர் மரணம் வரை வந்த எல்லா ஆராய்ச்சி இதழ்களையும் வரிவரியாகப் படித்து விட்டுப் பெரிய உணர்வுக் கொந்தளிப்புக்கு ஆட்படுதல். மனம் மார்க்க்சியத்தை அறிவதிலும் மேலும்மேலும் அறிவுப்பிரச்சனைகளையும் சமூகத்தின் வாழ்க்கைப்பிரச்சனைகளையும் இணைத்துப்பார்ப்பதிலும் தீவிரம் கொள்கிறது. இளமையில் கோவை ஞானியைச்சந்தித்தபோது மார்க்சியத்தில் வேறு சில வற்றைப்புரிந்துகொள்கிறேன். எழுத்து இதழ்களைச்சந்தா (இரண்டு ரூபாய்) கட்டிப் படித்ததில் வேறு கோணங்கள் அறிமுகமாதல். இப்படிப் புதிய புதிய கேள்விகள் தோன்றுகின்றன.  சுருக்கமாய்ச் சொல்வதென்றால் அதுவரை ஆங்கிலமே தெரியாத ஒரு இளைஞனைத் தமிழ்ச்சமூகம் இப்படி உருவாக்கியது.  இங்கே 1965 –இல் நான் இளங்கலை படிக்கும்போது தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பின் தாக்கமும் மனதின் உருவாக்கத்தில் பங்கு வகிக்கின்றது என்ற உண்மையைச்சொல்ல நான் மறக்கக்கூடாது..

உங்கள் பாளையங்கோட்டை ஆசிரியர் வாழ்க்கையின் போது என நினைக்கிறேன், என் ஞாபகம் சரியாக இருக்குமானால், ‘ஆக்டோபஸ்என்ற ஒரு கவிதைத் தொகுப்பில் கூட உங்களது பங்களிப்பு இருந்ததாக பின்னாட்களில் படித்த ஞாபகம்… 

அந்தக் கவிதைத் தொகுப்பின் பெயர் ஆக்டோபஸும் நீர்ப்பூவும் அது 1972 –ல் வெளிவந்தது. அதில் வேறுவேறுபெயரில் ஆறுபேர் புதுக்கவிதையாக யாப்பின் எல்லா மரபையும் உடைத்து எழுதியிருப்போம்.சென்னைப்பல்கலையில் மொழியியல் பேராசிரியராய் பின்னாளில் புகழ்பெற்ற தெய்வசுந்தரம், ‘மேலும்’சிவசு, இப்போது நாடகம், சினிமாவில் புகழ்பெற்றுள்ள மு.ராமசாமி, டெல்லி பல்கலையில் தமிழ்ப்பேராசிரியராய் பின்னாளில் புகழ்பெற்ற மாரியப்பன்,மற்றும் நான் ஆகியோர் அதில் முற்றிலும் மாறுபட்ட புதுக்கவிதைகளை எழுதினோம். அதன் புதுமை என்ன வென்றால்; அப்போது தமிழில் வந்த புதுக்கவிதை சமூக விமரிசனமாக இருக்காது.  அது வெறும் அழுகுணிச்சித்தரின் வெளிப்பாடுதான் என்று எல்லோரும் கருதிய நேரத்தில் சமூக விமரிசனத்தை உணர்வு கலக்காமல் எல்லாக்கவிதைகளும் வெளிப்படுத்தியதுதான். தேன்குரல், பன்னீர்புஷ்பம், இளநிலவு, வசந்தம், புல்லாங்குழல் என்று பலர் எழுதியபோது இப்படி எழுதியது ஒரு மாற்று. மேலும் அப்போது பரவலாகத்தெரிந்திருந்த எழுத்து, மற்றும் கசடத பற, என்ற இதழ்கள் கவிதைகளுக்கு மாறாகவும் இன்னொரு பாதையை முதன்முதலில் இக்கவிதைகள் வெளிப்படுத்தின. எழுதியவர்கள் எல்லோரும், அன்று மாணவராய் இருந்தவர்கள் அல்லது இளம் ஆசிரியர்கள். இந்நூலுக்கு வேறு பெயரில் முன்னுரை எழுதிய நாச்சிமுத்துவையும் சேர்த்து, எல்லோரும் முப்பது வயதுக்கு உட்பட்டவர்கள். இப்படி ஒருபோக்கு மாற்றத்துக்குக்காரணமான இந்த நூல்பற்றி இன்று யாருக்கும் தெரியாவிட்டாலும், இது இலக்கிய வரலாற்றில் குறிப்பிடப்படும். எதிர்கால ஆய்வாளர்களுக்காக இத்தகைய ஆவணங்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்பது என்கருத்து.

தமிழ் திறனாய்வு மற்றும் விமர்சன மரபு வரலாற்றில் நீங்கள் அறிமுகப்படுத்திய விமர்சன நோக்கு மிக முக்கியமானது. மரபான மார்க்சிய அடிக்கட்டுமானம் மேற்கட்டுமானம் என்கிற பொருளியல் வாதப்பார்வை போதாது என்று அமைப்பியல்வாதத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு அழகியல் சார்ந்த சமூகநலன் விளைவுகளை வாசித்து வெளிப்படுத்தும் பார்வை அது. உங்களுடைய இந்தப் பார்வைக்கு அடிப்படையாக அமைந்த சூழல்கள் மற்றும் தூண்டிய நூல்கள் என்னென்ன?

 

அது ஐம்பதாண்டுகளுக்கு முன்பு இருந்த சூழ்நிலை.பொருளாதாரம், அதாவது, நீங்கள் சொல்லும் அடித்தளம், மேற்தளத்தின் அதாவது பண்பாட்டின் கூறுகளான, குடும்பம், கல்வி, அரசியல் போன்றவற்றைத் தீமானிக்கும் என்ற பார்வையை அன்று எல்லோரும் நம்பினார்கள். புதுக்கவிதையும் புதுவிதமான நாடகங்களும் கதைகளும்  தமிழில் வந்தபோது தான் பிரச்சனை பெரிதானது.அறிவுப்பெருக்கமும் தமிழ்ச்சமூகத்தில் ஏற்பட்டது.பழமை மெதுமெதுவாக மாறியது. அதுவரை அறிவு மறுக்கப்பட்ட பிரிவினர் அறிவைப்பெருக்கினர். பொருளைப் பெருக்கும் முறையை அறிந்தனர். அதுபோல, சிந்திக்கும் துறைகளுக்கு வந்தார்கள். மத்தியதர வர்க்கமானார்கள். படைப்புக்கும் வந்தார்கள்.புதிய தமிழ்ச்சமூக விரிவாக்கப்பரிமாணத்தை அறிந்துகொள்ள புதிய சிந்தனைகள் வேண்டும். புதிய இதழ்கள், க ச ட த ப ற, நடை, பரிமாணம், மீட்சி, பிரக்னை, நீலக்குயில், சதங்கை போன்றன தமிழில் தோன்றுகின் றன. இந்தச் சூழலில் பொருளாதாரம், பிற எல்லாத்துறைகளையும் எந்திர கதியில் தீர்மானிக்கும் என்பது கேள்விக்குள்ளானது. அல்தூசர் பற்றி நான் அக்காலத்தில் மலையாளத்தில் முதன்முதலாக ஒரு கட்டுரை படித்தேன். பின்பு அவரை விரிவாய் அறிந்துகொள்ள பல நூல்கள் படித்தேன். அவர் அப்போது பாரிஸ் பல்கலையில் தத்துவத்துறைப்பேராசிரியர். பொதுவுடைமைக் கட்சி உறுப்பினர். அவர் பொருளதார அடித்தளம் கடைசியாய் (last instance)தான்  மேற்கட்டுமானத்தைத் தீர்மானிக்கும் என மார்க்ஸ் கூறுகிறார் என்றார். அதன் பின்பு அவருடைய விளக்கத்தைச் சொன்னார். பொருளாதாரத்தால் மேற்கட்டுமானம் அப்படித் தீர்மானிக்கப்படாமலும் போகும்  வாய்ப்புண்டு என்று அவர் சொன்னது முக்கியமான கருத்து. உதாரணத்துக்குக் கல்வி இருந்தால் பொருளாதாரம் பெருகுமே . தொழில்நுட்பத்தால் பெருகுமே. அப்படியென்றால் மேற்கட்டுமானமல்லவா அடித்தளத்தைத் தீர்மானிக்கிறது. இப்படி விவாதித் தார். நான் குமரிமாவட்ட மலைக்கிராமத்தில் அப்போது நிலத்தை வைத்திருந்த நாயர்களை மற்றவர்கள் ‘எசமான் எசமான் ‘என்று குனிந்து நின்றபடி பேசியதைக் கேட்டவன். எனக்கு முதலில் அல்தூசர் சொன்னது ஏற்றுக்கொள்ளும்படி இருக்கவில்லை என்பது தான் உண்மை. தொடர்ந்து சர்ச்சை செய்தபடியும் வாசித்தபடியும் இருந்தேன்.

இப்படி ஓரளவு ஆங்கிலமும் விருத்தி செய்து பலவற்றைப் படித்தேன். அமைப்பியல் பற்றி முதலில் “ஸ்ட்ரக்சுரலிசம் “என என் நூல் வந்தது. அதில் இக்கருத்துக்களை எழுதினேன். முதல் பதிப்பு 1982 –இல் பளையங்கோட்டையில் அப்போது இருந்த லூர்து என்னும் பேராசிரியர் தன் ஆர்வத்தால் அச்சிட்டார். அதில் அமைப்பியலை மானுடவியல், மொழியியல், இலக்கியம் போன்றன எந்த முறையில் பயன் படுத்துகின்றன என ஓரளவு விரிவாகப் படித்து விளக்கினேன். மூலநூல்களைப் படித்தேன்.மார்க்சியம் கற்றுவிட்டால் மற்ற துறைகளைப் புரிந்துவிடலாம். பல துறைகளில் அமைப்பியல் முறை விளக்கப்படுகிறது என அதன் சிந்தனையைப் புரிந்து எழுதினேன். அது விரிவான நூலாக வந்து இப்போதும் பல பதிப்புகளாய் தமிழில் விற்கப்படுகிறது. அப்போது பத்மநாப ஐயர் இலங்கையிலிருந்து வந்திருந்தபோது பாளயங்கோட்டை க்குச் சென்று 25 படிகள் விலைகொடுத்து வாங்கிச் சென்றார். அது ஈழப்போராட்டம் நடந்த காலகட்டம். பல குழுக்கள் அதனைப்பயன்படுத் தின என ஒரு முறை நான் லண்டன் போனபோது கூறினார்கள். இனவிடுதலை எப்படி வர்க்க விடுதலையோடு தொடர்புடையது என அங்குப் பல குழுக்கள் விவாதித்த நேரம். அந்நூலில் உள்ள கருத்துக்கள் வழி  இது  பற்றிச் சிந்திக்க முடியும். தமிழகத்தில் அப்போது உள்ளொளியும் மூடநம்பிக்கைகளும் படைப்புக்குக் காரணம் என பரவலான கருத்து இருந்தது. தாங்கள் பாரதியின் தொடர்ச்சி என உரிமை கொண்டாடிய மேல்தட்டினர் இந்த நூலின் இலக்கியக் கருத்துக்களால் எரிச்சலுற்றனர் அவர்களுக்குக் காலம் மாறுகிறது என்பதும் வேறு பிரிவினர் கல்வி கற்று வருகிறார்கள் தமிழகத்தில் என்பதும் புரியவில்லை. மீண்டும் லட்சுமி காடாட்சத்தால் தான் கவிதை எழுதுகிறேன் என்றார்கள். அப்படிக் கூறியவர்கள், முதலாளியம் என்பது முதலாளிகள் மனம் மாறி எல்லோருக்கும் சமமாய் பகிர்ந்துகொடுக்கும் போதுதான் ஒழியும் என்றார்கள். அவர்கள் இது போன்ற நூல்களின் விவாதத்தைச் சரியாய் எதிர்கொள்ள வில்லை. படித்தால் புரியாது என்று ஒரு கருத்தைப்பரப்பினார்கள். புரியாதபடி எழுதுகிறவர்கள் என்று பகடி செய்தனர். படித்தவர்களால் இலக்கியம் படைக்கமுடியாது என இன்னொரு புதுக்கரடியைக் கொண்டுவந்தார்கள். உள்ளொளி இருந்தால் தான் படைக்கமுடியும் என்றும் உள்ளொளி இருப்பவர்கள் படைப்பு ரகசியம் அறிந்தவர்கள் என்றும் கூறினார்கள். நடக்கும் போது இரண்டு அடிக்கு ஒரு முறை நின்று வானத்தைப் பார்ப்பவர்கள் அந்த படைப்பு ரகசியத்தை அறிந்தவர்கள் என்றனர். சிலவேளை பிறப்பிலேயே அது தீர்மானிக்கப்படுகிறது என்றும் கூறி முத்தாய்ப்பு வைத்தனர். இங்குத்தான் பிரச்சனை வருகிறது. படைப்பு ஓர் ரகசியம். என்னதான், மேற்கத்திய அறிவோ, விஞ்ஞானமோ, பெற்றாலும் பயன் இல்லை. படைப்பு ரகசியத்தைக் கற்க முடியாது. சிலவேளை கலை என்ற சொல்லையும் பாவித்தனர். அதாவது இவ்விவாதங்களுக்குள் இரு சமூகத்தட்டினரின் முரண்பாடுதான் வெளியாயிற்று என்று தோன்றுகிறது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து தற்கால இலக்கியத்தை ஆக்கிரமித்து வந்தவர்களுக்கும் எழுபதுகளில் திராவிட மற்றும் முற்போக்குக் கட்சிகள் உதவியால் விழிப்புப்பெற்று கல்விக்கூடங்களில் சேர்ந்து புதிதாய்ப்படிப்பு பெற்றவர்களுக்கும் நடந்த போராட்டம். அமைப்பியலைச் சுற்றியும் பொதுவான இலக்கியத்தைச்சுற்றியும் தமிழில் நடந்த சர்ச்சைகளை இப்படித்தான் பார்க்கிறேன். அதுவரை படிப்பு மறுக்கப்பட்டவர்கள்   விழிப்புற்று, புதிதாய் எழுச்சி பெற்றபோது நடந்த இலக்கிய உலகப் போராட்டம். அயோத்திதாசர் சிந்தனைகள், சிங்காரவேலர் சிந்தனைகள், சுய மரியாதைச்சிந்தனைகள் போன்றன தமிழ்ச்சமூகத்தில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அதாவது முதல் இருபதுகளில், பரவுகின்றன. அதற்கிடையில் மேற்தட்டினர் பிரதான பங்கு வகித்த அனைத்திந்தியச் சுதந்திரப் போராட்ட ச் சிந்தனைகள் பரவ ஆரம்பிக்கின்றன. அக்காலத்தில் ஈனப்பறையர்கள் என்ற சொல்பிரயோகம் பற்றிய அயோத்திதாசரின் பாரதிக்கு விரோதமான கருத்து வெளிப்படுகிறது. இது பற்றிய ஸ்டாலின் ராஜாங்கத்தின் சில மாதங்களுக்கு முன்பு வந்த கட்டுரை  முக்கியம். நல்ல மனிதரான ஆஷ் துரையைக்கொன்ற வாஞ்சிநாதன் துஷ்டன் என அயோத்திதாசர் எழுதுகிறார். அயோத்திதாசர் படைப்பு எழுத்தாளர் அல்ல. ஆனால் பரதியாரைவிட அயோத்திதாசருக்கு விரிவான புரிதலும் அறிவும் இருந்திருக்கிறது. இதனை, ப. மருதநாயகம் தன் அயோத்திதாசர் பற்றிய நூலில் கூறுகிறார்.பாரதியாருக்கு அன்றைய அனைத்திந்திய சுதந்திரபோராட்டத்தில் வேதத்தைக் கலந்த திலகர் வழி அரசியல் அவருக்குக் கவிஞராகவும் சித்தராகவும்/பித்தராகவும் பயன் பட்டது. அரவிந்தரால் பாரதி தன்னையொத்த அவதார புருஷர் என பிரகடனப்படுத்தப்பட்ட செய்தியை போன புத்தகம் பேசுது இதழில் இரா.மீனாட்சி கூறுகிறார். பாரதி திருவனந்தபுரத்தில் உள்ள மிருக காட்சிச்சாலையில் போய் புலியிடம் ஆபத்தை உணராமல் பேசப்போவதை அவருடைய கவிஞர் ஸ்தானத்துக்கு சான்றிதழாய்ப் பயன் படுத்துபவர்கள் அவரை பித்தர் எண்றுகூறி, பித்துநிலை படைப்பாளிகளின் தகுதி என்பார்கள். இப்படித்தமிழ் நவீன இலக்கியம் சித்தர்/பித்தர் வழியில் போகத் தடம் போடும் பாதையில் பலவும் பின் தள்ளப்படுகின்றன. அறிவு வழியை நாடும் அயோத்தி தாசரும் அடுத்த அறுபது, எழுபது ஆண்டுகள் மறக்கப்பட பல காரணங்கள் இருந்தன. இந்த சித்தர் வழிபாடும் ஒரு காரணம். அயோத்திதாசர் மிகவும் கராரான அறிவைப்போற்றுபவர். பாரதியின் அறிவுத்தோற்றவியலுக்கு (Epistemology) எதிர்மாறான பௌத்தச் சிந்தனையாளர். ஆனால் தமிழில் வெற்றி பெற்றது பாரதியின்/திலகரின் ஆரியர் போற்றும் மரபு . சங்க இலக்கியத்தில் ஆரியர் அந்நியர். ந.பிச்சமூர்த்தியிலிருந்து எழுபதுகள் வரை, மணிக்கொடியாகட்டும் எழுத்து இதழ் ஆகட்டும் மதத்தையும் நவீன இலக்கியத்தையும் எல்லைக்கோடிட்டுப் பிரிக்கவில்லை. இது பெரிய பிழை. இன்று இந்திய அரசியல் போகும் பாதையின் ஆபத்திலிருந்து இது சாதரணப்பிழை மட்டும் அல்ல, என்பது புரியும். எனவே தான் சொல்கிறேன் தற்கால இலக்கிய வரலாற்றில் எழுபது வரை ஆதிக்கம் செலுத்திய சக்திகள் எழுபதுகளுக்குப்பிறகு தோன்றிய முற்போக்குசக்திகளின், திராவிடச்சக்திகளின், கூட்டால் உருவான மன நிலை கொண்ட புதிய இளைஞர்களின் உலகப் பார்வையோடு முரண்பட்டன. இன்றின் சூழலிலிருந்து பழையதை மீள்பார்வை மூலம் பார்க்கும்போது இப்படித் தான் தோன்றுகிறது. இவற்றை நேரடியாக வறட்டுத்தனமாய் வரையறுக்கக்கூடாது . சில கூறுகள் இரண்டு தரப்பாரிடமும் பொதுவாயும் காணப்படும். இலக்கியமும் பாண்பாட்டு உருவாக்கமும் மிகவும் சிக்கலானது. எனினும் சமயச்சார்பும் அதற்கு மாறான செக்குலர் மரபும் தயவு தாட்சண்யமில்லாமல் வேறுபடுத்திப் பார்க்கப்படவேண்டும். மரபு மார்க்சியத்துடன் சில புதிய கூறுகளைக் கொண்டுவர அமைப்பியல் பயன் பட்டது. நீங்கள் அமைப்பியல் பற்றிக் கேட்டதால் இவ்வளவும் சொன்னேன். இன்று தமிழகத்தில், எதிர்காலத்தில் வரப்போகிற பாசிச சக்திகள் பற்றிய ஆழ்ந்த கவனம், இல்லை. அவை மதத்தைப் பயன்படுத்திக் கொண்டுள்ளன. அவை மறைமுகமாய் இலக்கியத்தையும் பயன்படுத்துகின்றன. சில விஷயங்கள் நான் இப்போது சொல்லமுடியாது.  பாரதி மரபைத்தான் அவர்கள் எடுக்கப் போகிறார்கள். ஆகையால் முன் யோசனையாகச் சிலவற்றைச்சொன்னேன். ஏனெனில் மார்க்சிய அமைப்பியலாளரான அல்தூசர் அன்றைய பிரான்சின் பொதுவுடைமைச் சிந்தனையாளர் மட்டுமல்லாது இரண்டாம் உலகப்போர் சமயத்தில் பாசிச எதிப்பு அணிகளோடு இருந்தவர். பாசிசம் வேறு வேறு உருவத்தில் வரும். இன்னொரு உண்மையையும் கூறவேண்டும். இதுவரை பார்த்த தமிழ் இலக்கிய உலகப் போராட்டம் இப்போதும் தமிழில் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அன்று தோற்றவர்கள் இன்று வேறு நிறுவனங்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். வேறுவித உத்திகளைப்பயன் படுத்துகின்றனர். அவர்களின் இன்றைய விவாதங்கள் வேறு.

1972-இல் கசடதபற இதழில் வெளியான ஞானக்கூத்தன் கவிதைகளுக்கு நீங்கள் எழுதிய விமர்சனத்திற்கு எவ்வாறு எதிர்வினைகள் வந்தன? அவற்றை எவ்வாறு எதிர்கொண்டீர்கள்?

 

நீங்கள் நன்றாக நினைவில் வைத்திருக்கிறீர்கள். நான் பெங்களூருக்கு வேலையின் பொருட்டு வந்த புதிது. நான் அப்போது வந்துகொண்டிருந்த கசடதபற இதழைப்படித்த போது எட்டுக்கவிதைகள் என்ற தலைப்பில் ஞானக்கூத்தன் என்ற பெயரில் அப்போது எனக்குத்தெரியாத யாரோ ஒருவர் புதுக்கவிதை எழுதியிருந்தார். ‘விழிக்கிறான் முழங்காலொன்று காணலை’, என்றும் ‘ஒளித்துவைத்த மூக்கு’ என்றும் வரும் வரிகளைத் தமிழ் எம்.ஏ. படித்திருக்கிற எனக்கு அந்த வயதில் புரிந்துகொள்ள முடியவில்லை. பெரிய குழப்பம். ஆனாலும் அவை என்னை விட்டுவிடவில்லை. நான் ஒரு கட்டுரை இரண்டு பக்க அளவில் எழுதி தாமரைக்கு அனுப்பினேன். உடனே அழகான கையெழுத்தில் தி.க.சி.யிடமிருந்து ஒரு அஞ்சல் அட்டை. அதனை விரிவாக எழுதுங்கள் என்று.நான் விரிவாய் எழுதி அனுப்ப அக்கட்டுரை வெளிவந்து முற்போக்கு அணியினர் பேசுபொருளாய் அக்கட்டுரை ஆனது. நான் அக்கவிதைகள் ஏற்கத்தக்கன அல்ல எனவும் , மனித உடலை அவை கூறுபோடும் பார்வை என்றும் எழுதினேன். ஆனால் பின்னர் சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து அக்கவிதைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நீலக்குயில் என்ற இதழில் எழுதினேன். எனக்கு இந்தமாதிரி கவிதைகளைப் புரிந்து மதிப்பிடுவதில் தேர்ச்சியில்லை, தடுமாறுகிறேன் என்பதை உணர்ந்தேன். அதற்கான காரணம், இந்தவித உத்தி அல்ல. உத்திக்குப்பின்னால் இருக்கும் தத்துவப்புரிதல். இலக்கியம் மனிதக் கூறுபோடலைச் சொல்லலாம், அது தவறு அல்ல என்று என் பார்வையைத் திருத்திக்கொண்டேன். அதன் பின்பு காஃப்காவின் கரப்பான்பூச்சியாக மனிதன் மாறும் கதையையும் ஏற்றுக்கொள்ளலாம் என்ற நிலபாட்டை எடுத்தேன். இது ஒரு நிலைபாட்டில் உள்ள தத்துவ மாற்றம். இதற்கு மார்க்சியத்தில் இடமுண்டு என்றும் விவாதிக்கலாம். அதை ஐரோப்பிய மார்க்சியத்தினர் மேற்கொண்டனர். உதாரணமாய் ஜெர்மன் மார்க்சிய விமரிசகர், லூசியன் கோல்ட்மன் என்பவர் அக்கருத்துக் கொண்டவர். வாசகர்கள் தேடிப்பிடித்தால் தான் இவர் அறிமுகம் கிடைக்கும். பரவலாகத்தெரிந்தவர் அல்ல. மார்க்சிய விமரிசகர், வால்டர் பெஞ்சமின் கூட காஃப்காவை ஏற்பார். ‘மூக்கை ஒளித்துவைத்தேன்’ என மனித உடல்கூறு போடுதலுக்கு, மார்க்சியத்தில் இடமில்லை என்றும் விவாதிக்கலாம். அதை சோவியத் யூனியன் அன்று மேற்கொண்டது. அந்த ஞானக்கூத்தன் கவிதைகளை, சோவியத் விமரிசகர்களிடம் கொடுத்தால் இது நல்ல இலக்கியம் இல்லை என்று கூறிவிடுவார்கள்.  நான் இப்படி முரண்பட்ட இரண்டு நிலைபாடுகளுக்கு இடையில் தெளிவில்லாமல் தடுமாறி, பின்பு ஒருநிலைபாடு எடுத்து என்னைத் திருத்திக்கொண்டதை, அன்று வேகமாகவும் வசைச்சொற்களையும் தயங்காமல் பயன்படுத்தும் ஒரு விமரிசகர் பல்டி என்று வருணித்தார். அவருக்கு அவர் பயன்படுத்தும் இம்மாதிரிச்சொற்கள் தத்துவம், இலக்கியம் போன்ற துறைகளில் பயன் படுத்தக்கூடாது என்று தெரியவில்லை. நான் எண்பதுகளில் இருந்த சூழலைச்சொல்கிறேன். மார்க்சியத்தில் பலவிளக்கங்கள் எப்படி ஏற்பட்டன? மார்க்சியம் சமூக அறிவியல். இயற்பியல் அல்ல. விலங்கியல் அல்ல. சமூக அறிவியலுக்கு ஒரு தனித்தன்மை உண்டு. சூழலுக்குத்தக்க  வேறுவேறு விளக்கங்களை மேற்கொள்ளும். ரஷ்யாவில் ஒரு வகையும் லத்தீன் அமெரிக்காவில் இன்னொரு வகையும், சீனாவில் இன்னொரு வகையும் அவரவர் கலாச்சாரத்துக்கு ஏற்ப இருக்கும். நம் புராதன தமிழ்க்கலாச்சாரத்துக்கு ஏற்ப நாம் ஒருவித தமிழ்க்குணம் உள்ள மார்க்சிய இலக்கிய விமரிசனத்தை ஏற்கவேண்டும். இப்போது யோசித்துப் பார்க்கும்போது வேடிக்கையாகத் தெரிகிறது. நாங்கள் எல்லாம் எப்படி இளமையில் இலக்கியம் படித்தோம் என்று எண்ணுகையில்.

சங்க இலக்கியங்கள் குறித்து உங்களுடைய நவீன விமர்சனங்களை எவ்வாறு வைக்கலாம்? சங்க இலக்கியங்களின் மீட்டுருவாக்கம் தொடர்பான உங்களின் பங்களிப்பு அல்லது திட்டங்கள் என்னென்ன?

 

சங்க இலக்கியம், தொல்காப்பியம், இவை அமைப்பியலின் வெளிச்சத்தில் பார்க்கப்படவேண்டும் என தொடர்ந்து நான் கூறுகிறேன். காரணம் மேற்கத்தியக்கருத்துக்களைத் தமிழால் உரசிப்பார்த்து எவை தமிழுக்குப் பொருந்தும், எவை பொருந்தாது என அறியவேண்டும்.ஏதோ ஒரு அனைத்துலகத் தத்துவம் வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். பின் நவீனத்துவம் ஆகட்டும், அல்லது வேறொன்று ஆகட்டும். அதன் தத்துவத்தளமோ அல்லது இன்னொரு கூறோ தமிழோடு ஏதோ ஒரு அம்சத்தில்  ஒப்பிடக்கூடியதாக இருக்கும். அந்த அம்சத்தை விரிவாக்கி நாம் தமிழில் பேசவேண்டும். நான் பழந்தமிழில் ‘அமைப்பியல் மற்றும் குறியியல்’ என ஒரு நூலில் இதைத்தான் செய்தேன்.தொல்காப்பியத்தின் மொழிபற்றிய சிந்தனைக்கும் அமைப்பியலை அறிமுகப்படுத்திய சசூரின் சிந்தனைக்கும் தொடர்பிருப்பது தெரிந்தது.  சசூரின் சிந்தனையிலிருந்து மானுடவியல், மார்க்சியம், இலக்கியம் என  ஒவ்வொரு பிரிவிலும் புதுச்சிந்தனைகள் தோன்றி உலகை வியப்பிலாழ்த்தின.  தொல்காப்பியம் சசூரைப்போன்று மொழிபற்றிய சிந்தனை. சசூரை எப்படி மறுவிசாரணை செய்து ஐரோப்பியர் வளர்த்தெடுத்துள்ளனரோ அது போல உரையாசிரியர்கள் தொல்காப்பியத்தை மறுவிசாரணை மட்டும் செய்துள்ளனர். சிந்தனையையை வளர்த்தெடுக்க முடியவில்லை. அதனால்  தமிழிலிருந்து புதுவித சிந்தனைகள் வரவில்லை . சசூரை மறு சிந்தனைக்கு உட்படுத்திய ‘மாதிரி’யில் உரையாசிரியர்கள் தொல்காப்பியத்தை மறுவிசாரணைக்கு உட்படுத்தவில்லை.  உரையாசிரியர்கள் ஒன்றில் சேனாவரையரின் சமஸ்கிருத  ‘மாதிரி’யில் அல்லது இளம்பூரணர் போல தமிழ் ‘மாதிரியில்’ மறுவிசாரணை , அல்லது மறுவாசிப்புச் செய்தனர். ஒரு விசயத்தை ஒத்துக்கொள்ளவேண்டும்.  நம்மிடம் கேள்விகேட்கும் சிந்தனைப் பின்னணி இல்லை. எனவே நம் கேள்வி இலக்கணத்துக்குள்ளேயே சுற்றிச்சுற்றி வந்தது. உதாரணத்துக்கு இன்றைய மேற்கத்திய மரபில் வந்த அமெரிக்கத் தமிழ் ஆய்வாளர் ஜார்ஜ் ஹார்ட் போன்றோரின் கேள்வி சார்ந்த சிந்தனைக்கு வருவோம்.  அவர் இந்தியாவுக்கு இரண்டு பாரம்பரிய மாதிரிகள் உள்ளன என்கிறார். ஒன்று சமஸ்கிருத மாதிரி, இன்னொன்று தமிழ் மாதிரி என்கிறார். தமிழ், சமஸ்கிருதத்துக்கு மாற்று. இதை விளக்குகிறார் ஜார்ஜ் ஹார்ட்.. அவரைத்தொடர்ந்து நாம் இன்னும் சிலவற்றைக்கூற முடியும். சமஸ்கிருதம் வேரில்லாமல் தன் நிறத்தை மாற்றி மாற்றிப் பரவும்குணம் கொண்டது. ஷெல்டன் போலக் என்பவர் இது பற்றி விளக்கிக்கூறுகிறார்.  இக்கருத்தை எடுத்துவந்து தமிழ் பற்றி வேறு கோணத்தில் பேசலாம். தமிழ் பிராந்திய மண்மணத்தை விடாமல் வேரை வலிமைப்படுத்தும் மொழி. தெற்காசியா முழுதும் தமிழ் அரசர்கள் போனாலும்  அவர்களும் சமஸ்கிருதத்தையே அங்கு நிலை நாட்டினார் கள். சோழர்கள் சமஸ்கிருதப் பெயரையே தாங்கள் வைத்திருந்தனர்.வடமொழி வேதம் பரவ, பிரம்மதேயக் கிராமங்களை, எல்லாச் சோழ மன்னர்களும் ஆதரித்துக் காவேரி தீரங்களில் உருவாக்கினர்.  இப்போது தமிழ், சோழர்களுக்கு நாடு பிடிக்கப்பயன் படவில்லை எனத்தெரிகிறது. நாடுகளைப்பிடிக்க காற்றுப்போல எல்லா இடங்களிலும் வேரில்லாமல் பரவும் சமஸ்கிருதம் வேண்டும். சஸ்கிருதம் தெற்காசியா முழுதும் பரவியதை, ஷெல்டன் போலக் மிகவிரிவாக எடுத்துரைக்கிறார். தமிழ் அப்படிப்பட்ட மொழி அல்ல. தமிழின் வேர் ஆழமானது. பிடுங்கமுடியாது. அதன் மீது சமஸ்கிருதக் காற்று வீசும். காற்று போனதும் மரம் பழையது போல நிமிர்ந்துவிடும். விஜயநகர மன்னர்கள், நாயக்கர்கள், யார்யாரோ சுமார் ஆயிரமாண்டுகளாய் தமிழரல்லாதவர்கள் தமிழகத்தை முழுதும் ஆண்டனர்.  தமிழ் அழிந்து போகவில்லை. தமிழ் எப்படிப்பட்ட மொழி யென்றால் அது சமஸ்கிருதத்தை மாற்றித் தமிழின் ஒரு பகுதியாக்கும். அது ஒரு வலிமை. நிறைய உதாரணங்கள் நான் சொல்லமுடியும். சமஸ்கிருத ‘லோகதர்மி’ என்பதை உலகவழக்கு என மாற்றுவதோடு அர்த்தத்தையும் மாற்றும். ரசக்கோட்பாட்டை, புதிதாக்கி தமிழண்ணல் கூறுவது போல வேறு ஒரு கருத்தாக்கமான மெய்ப்பாடு ஆக்கும். தொல்காப்பியம் அப்படி செரித்துக்கொண்ட பல சமஸ்கிருத கருத்தாக்கங்கள் உண்டு. இதுபற்றிய தெளிவில்லாத சிலர் சமீபத்தில், சமஸ்கிருதம் தொல்காப்பியத்திற்குள்ளே ஏறி அதை அரித்துவிட்டது என கெக்கெலி கொட்டிச்சிரித்ததை ஓரிதழ் சிறப்பு மலராய் வெளியிட்டு மகிழ்ந்திருந்தது.  இப்படித் தமிழ் மாதிரியானது, திராவிடக் கலாசாரங்களின் பிரதிநிதி மட்டுமல்லாது ஆதிவாசிகள் பண்பாடு, நாட்டுப்புறவியல் போன்றவைகளுக்கும் பிரதிநிதி. அது மட்டு மின்றி, உலகமெங்கும் தன்மண்ணுக்காகப் போராடுகிறவர்களின் பிரதிநிதி. எனவே புதிய உலகச் சிந்தனைகளைத் தமிழ்த்துறைகள், புதிய தமிழ் விளக்கம் மூலம் கொண்டுவரவேண்டும் என்கிறேன். பாடத்திட்டங்கள், சமூகவியல், வரலாறு, தத்துவம்,  இலக்கியவியல் மொழியியல், போன்றவற்றின்   மிகப்பிந்திய சிந்தனைகளோடு மறுகட்டமைப்புச் செய்யாவிடில் இன்றைய தமிழ்க்கல்வி பிரயோஜனமற்றது. இப்படிப்பட்ட சிந்தனைகளை உரையாசிரியர்களின் வழியில் அவர்களை புதிதாக்கி மேற்செல்லவேண்டும். பாடதிட்டங்கள், மாற்றப்படவேண்டும்.சங்க இலக்கியம், தொல்காப்பியம் போன்றன அப்போது சிந்தனையின் ஊற்றாக மாறும். இப்போது இருப்பதுபோல, சங்க இலக்கியமும் தொல்காப்பியமும் மாணவர்களால் மேற்கோள் காட்டும்,மனனம்செய்யும் வெறும் துண்டு துணுக்குகளாய் இருக்காது. அரசியல் அடிமைகளாக இருப்பதுபோல் சிந்தனைத்துறை அடிமைகளாகவும் இருக்கிறோம்.

தமிழ்க்கல்வி வெறும் பழமைநிலைபெற்ற கல்வியாக இல்லாமல் எதிர்காலம் நோக்கிய கல்வியாக வேண்டும். அதற்கு உலகமெல்லாம் உள்ள சிந்தனைகளைத் தொல்காப்பியர் அன்று அவரது உலக அறிவை வைத்துக்கொண்டுவந்ததுபோல செய்யவேண்டும். இதை விரிவாக இங்கே பேச இடம் இல்லை.

முந்தைய கேள்வியை ஒட்டி இன்னொரு கேள்வி: உங்கள் மொழிதல் கோட்பாடும் தமிழிலக்கியமும்என்ற நூல் பற்றியும் அதுபோல், ‘திராவிடம், தமிழ்த்தேசம், கதையாடல்என்ற நூல் பற்றியும், சொல்லுங்கள்.

என்னுடைய மொழிதல் கோட்பாடு நூல்பற்றிச் சமீபத்தில் சில இளம் ஆய்வாளர்கள் ஒரு கல்லூரியில் ஒருவாரம் கணினி வகுப்பு நடத்தினார்கள். அது தமிழ்த்துறைகள் மாறிவருவதைச்சுட்டின. மொழிதல் என்பது கூற்று என்று சங்க இலக்கியம் சொல்லுமே அதுதான். தலைவி, தோழி, தலைவன்  போன்றவர்கள் பேசுவதுபோல் தான் அகப்பாடல்களை எழுதமுடியும் என்று ஒரு மரபு. இதனை மறுவிளக்கம் மூலம் அனைத்துலகச் சிந்தனையாக, மார்க்சியம், மொழியியல், வடிவவியல் போன்ற சிந்தனைகளில் பொதுச்சிந்தனையாக மாற்றலாம். இதற்கு ரஷ்யாவின் மைக்கேல் பக்தின் என்பவரின் சிந்தனைகள் தமிழில், தமிழுக்காகப் பயன் படுத்தப்பட்டன. பக்தின், ரஷ்யாவில் புரட்சி வந்த காலத்தில் உருவானவர். அவர் சிந்தனைகளை ஓரளவு விரிவாகப்படித்திருக்கிறேன். எனக்கு இன்றைய சூழலிருந்து பார்க்கும்போது அவரை வளர்மார்க்சிய முன்னோடி என்றே கூறத்தோன்றுகிறது. டெரி ஈகிள்டன் கூட அப்படித்தான் கூறுகிறார். இந்த மேலே குறிப்பிட்ட என் நூல் 27 ஆண்டுகளுக்கு முன்பு வந்தது. மீண்டும் புதிய பதிப்பு கொண்டுவந்து இப்போது விவாதிக்கிறார்கள். மொழிதல் (கூற்று) என்பது பரஸ்பரம் உரையாடுதல். இதை ‘டைலாஜிக்’ என அழைப்பார் பக்தின். தமிழில் வடிவமைத்த மொழிதல் கோட்பாடு பக்தின் கோட்பாடு மட்டும் அல்ல. பக்தினைச் சற்று மாற்றி வேறு சிலரைச்சேர்த்து, சங்க இலக்கியத்துக்கு ஏற்ப மறுவடிவமைப்புச் செய்யப்பட்டது. ஏனென்றால் நம் மரபு வேறு. இதன் மூலம் தமிழில் அப்போது வந்த புதுக்கவிதைகளை விமரிசனம் செய்யலாம் என உதாரணம் கொடுப்பதன் மூலம் நீட்சிப்படுத்தப்பட்டது. கூற்றுக் கோட்பாடு, இப்படித்  தமிழ்ப்புதுக்கவிதைக்கேற்ற மார்க்சிய அடிப்படை கொண்ட விமரிசனமாக மாற்றமுற்று உருவானது. அதற்கு வோலஷினொவின், “மார்க்சியமும் மொழித் தத்துவமும்” என்ற நூலின், சில தர்க்கங்கள் பயன் படுத்தப்பட்டன. மனித குல மொழிகளின் உள்ளே இருக்கும் உரையாடல் என்ற பண்பின் தத்துவமாய் மார்க்சியத்தை மறு வடிவமைப்பு செய்திருப்பார் வொலஷினொவ். மொழி என்றாலே உரையாடல் தானே. நம் தமிழன் கண்டுபிடித்த கூற்று, வெறும் காதல் சம்பத்தப்பட்ட சிந்தனை என்பதை மாற்றி, இப்படி உலகச்சிந்தனையான மார்க்சியமாக்க முடிந்தது.ஆனால் எனக்கு என்ன வியப்புத் தெரியுமா ? 27ஆண்டுகள் வரை ஏன் இந்த முயற்சியைத் தமிழில் மார்க்சியவாதிகள் கண்டுகொள்ள்ளவில்லை? அவர்கள் அளவு படித்தவர்கள் வேறு யாரும் இல்லையே. இப்போதும் கூட  தமிழ்த்துறையினர்தான் இதுபற்றி ஒரு ‘வெபினார்’ வகுப்பு நடத்தினார்களே ஒழிய மார்க்சியர் கள் அல்ல. இன்னும் தமிழ்ச்சூழலில் நாம் தீர்க்காத தத்துவப்பிரச்சனைகள் இருக்கின்றன என்பதைத் தான் இது காட்டுகிறது. தமிழர்கள் அளவு மொழிபற்றி அக்கரை காட்டுபவர்கள் உலகத்தில் யாருண்டு? தமிழர்கள் ஒவ்வொரு காலத்திலும் தமிழ் மூலமாகவே உலகைப் புரிந்திருக்கிறார்கள். ”இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்” என்ற கூப்பாடு எதைக்காட்டுகிறது? அந்நியர் ஆட்சி காலத்தில் ஒரு இலக்கிய வடிவத்தை உருவாக்கி தமிழ்த்தூது என்கிறார்கள்.அதுபோல், “வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறும் நல்லுலகம் “என்று தமிழகத்துக்கு எல்லை வகுக்கிறார்கள். பிள்ளைத்தமிழ் என்று இன்னொரு இலக்கிய வகைக்கு பெயர்சூட்டுகிறார்கள். ஒன்றும் வேண்டாம், மொழிப்போராட்டத்தின் மூலம்தானே தமிழர்கள் ஒன்றிணைந்து அனைத்திந்தியக் கட்சிகள் இனி வேண்டாம் என்று முடிவெடுத்தார்கள். ஆனால் வொலஷினொவின் (இவரும் பக்தினும் ஒருவரே என்றும் பக்தின் ஓரிடத்தில் கூறுவார்.) மொழியியல் மார்க்சியம் நமக்கு ஏன் இன்னும் மொழிபெயர்ப்பாக வரவில்லை? இடதுசாரிகளின் அக்கரைக்கு உள்ளாகவில்லை? எவ்வளவு ரஷ்ய நூல்கள் மொழிபெயர்த்துள்ளோம்.  வொலஷினொவ் கூறும் மொழியல் மிகவும் வித்தியாசமான மொழியியல்.  தொல்காப்பியம் படித்த எனக்குத் தொல்காப்பியத்தின் தத்துவச்சாரம் உள்ள நூல் அது என்று கூறத்தயக்கமே இல்லை. படிக்கவேண்டிய முறையில் படித்தால் நான் சொல்வது விளங்கும். நம் மொழியியல் துறைகள் அக்கரை காட்டாது. அதற்கு வேறுகாரணம்.

அடுத்து, “திராவிடம், தமிழ்த்தேசம், கதையாடல்” என்ற நூல் பற்றிக்கொஞ்சம் பேசுகிறேன். இக்கட்டுரைகளை 2009- இல் ஈழத்தில் போர்நடக்கும்போது ஒரு இதழில் தொடராக எழுதினேன். தமிழ் பற்றி காலமெல்லாம் ஏன் தமிழர்கள் பேசிக்கொண்டே இருந்தார்கள் என அப்போது எனக்கு ஒரு கேள்வி உருவானது. அப்போதுதான் சங்க இலக்கியம் கூறிய, சிலப்பதிகாரம் வலியுறுத்திய, தமிழ் பேசும் அத்தனை பேருக்குமான ஒற்றைத் தமிழ் அரசியல் அடையாளம் தமிழர் வரலாற்றில் ஆயிரமாண்டுகளுக்கு மேல் இல்லாமல் இருந்தது தெரிந்தது. அதனைத் ‘தமிழ் அரசியல்’ என அண்ணா அழைத்து ஊரெல்லாம் போய் சொற்பொழிவாற்றி மீண்டும் ஆயிரமாண்டுகளுக்குப் பிறகு உருவாக்கினார். இத்தாலியின் விடுதலைக்குப் போராடிய மாஜினி, கரிபால்டி என்றெல்லாம் அவர் அன்று சொன்னதன் அர்த்தம் இதுதான். அதற்கு, பெரியாரின் பகுத்தறிவு அண்ணாவுக்குப்பயன்பட்டது தெரிந்தது. பெரியாரும் அண்ணாவும் மேற்கத்திய ரெனைசான்ஸ் சிந்தனையால் தாக்கம் பெற்றவர்கள். பகுத்தறிவை அளவுகோலாக வைத்துச் சிந்திப்பவர்கள். நிகரற்ற சிந்தனையாளர்கள். அத்துடன் பாரதிதாசன் 1930 இலிருந்து செய்த தமிழ் உணர்வு வலியுறுத்தல் அண்ணாவுக்குப்பயன் பட்டது.  அடிக்கட்டுமானம் மேற்கட்டுமானம் என்று நாம் பார்த்த விஷயத்துக்கு வருவோம். அடிக்கட்டுமானம் இறுதியாகத்தான் தீர்மானிக்கும் என்ற மார்க்சின் வாசகத்தில் உள்ள பொருளாதாரம்  ‘இறுதியில் தான் தீர்மானிக்கும்’  என்ற சொற்களை விளக்க வேண்டும். தமிழ் உணர்வு என்பது கருத்துக் கலப்பு உள்ளது. கருத்தை, பொருள்தன்மை உள்ள கருத்தென்றும் பொருள்தன்மை இல்லாத கருத்து என்று பிரிக்கலாம். பொருள்தன்மை உள்ள தமிழ்உணர்வை மார்க்சிய தத்துவம் ஏற்கவேண்டும். அப்படி அது அடித்தட்டுச்சிந்தனையாகிவிடுகிறது.இது போலச்சிந்தனை அல்தூசரிடமும் கிராம்ஷ்சியிடமும் காணப்படுகிறது. இப்படிப்பட்ட சிந்தனைகள் அந்த எனது நூலில் உண்டு.

 

உங்களின் முதல் நாவல் ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள், தமிழ் இலக்கிய உலகில் ஏற்படுத்திய சலசலப்புகள், அந்த நாவலைப்புறக்கணிப்பதற்காக நிகழ்ந்த அறிவு ஜீவிகளின் முன்னெடுப்புகள் ஒரு பெருங்கதையாடலாக உலவிய காலங்கள் பற்றி

 

‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் ‘என்ற நாவல் 1985 இல் வந்தது. அதன் வாக்கியங்கள் புதுமையானவை. அதுவரை அப்படிப்பட்ட வாக்கியங்களை ஒரு நாவலில் பயன்படுத்தமுடியமா என யாரும் முயற்சி செய்யவில்லை. எனவே நிறைய சலசலப்பு ஏற்பட்டது. தமிழின் முதல் மாய எதார்த்த நாவல் என அழைக்கப்பட்டது. ஒரு பாத்திரம் தன் நிழலோடு சீட்டு விளையாடுகிறது. பீரங்கியை மந்திரவாதம் செய்து செயலிழக்க வைக்கமுடியும் எனப் பேசப்படுகிறது. ஒருவரின் உடலில் சிலந்தி வலை பின்னுகிறது. படுத்துக்கிடக்கிற முதியவரின் உடலில் இலைகள் முளைக்கின்றன. இப்படி படிமங்கள் மூலம் உருவான நாவல். சாகித்திய அக்காடமியின் தமிழ்ப்பிரிவின் மேநாள் ஒருங்கிணைப்பாளர் நாச்சிமுத்து, இந்நாவல் குமரி மாவட்ட நாட்டுப்புறவியலில் இருந்து வந்தது என்றார்.

க.நா.சு.இந்த நாவல் மீது ஒரு கருத்தரங்கு வைத்துப்பார்க்கவிரும்பினார் என ஒரு முறை அவரோடு டெல்லியில் இருந்த பெண்ணேஸ்வரன் கூட்டத்தில் பேசினார்.கோணங்கி அதனைப்படித்துவிட்டு என்னைப் பார்க்க பெங்களுருக்கு வந்தார். அவர் எழுத்துக்கள் வேறுமுறையில் மாற அது காரணமாக இருந்தது. இன்னும் பலரும் நீளவாக்கியங்கள் வைத்து எழுதுவது, மாயங்களைவைத்து எழுதுவது போன்றவற்றைப் பயன்படுத்தி எழுத இந்த நாவல் பாதை  உருவாக்கியது. நிறைய வாதவிவாதங்கள் வந்தன. அதிகமான விமரிசனங்கள் வந்தன. முப்பது நாற்பதுபேர் எழுதியிருப்பார்கள். இலக்கிய உலக சூது வாதுகள் பற்றி, அவைகளை இன்று பேசுவதால் என்ன பயன் ? இதுபோன்ற நாவல்கள் சங்கத்தமிழின் உள்ளுறை போன்றவற்றின் ஒரு புதுவகைத் தொடர்ச்சி. இப்படி, மேலோட்டமான ஆங்கிலக் கதைசொல்லல் பாணியின் பலகீனம் தமிழ் வரலாற்றில் வெளிப்பட்டது. தமிழ் மரபிற்குள் இருக்கும் கதைமரபு  இக்கட்டத்தில் வெளிப்பட்டது.

சரித்திரத்தில் படிந்த நிழல்கள் நாவலும் அரசியல் பின்புலத்தைக் கொண்டதுதான். இது பரவலாக தமிழ் வாசகர்களால் வரவேற்கப்பட்டதா?

 

நீங்கள் குறிப்பிடும் அந்த நாவலிலும் படிமமுறைக் கதை சொல்லலைப் பயன்படுத்தினேன். அது என் இரண்டாவது நாவல். ஒரு ராணி. அவள் தெகிமொலா என்றழைக்கப்படும் மக்களின் ராணி. கண்மூடியபடியே அவளால் பார்க்கமுடியும். அவளுக்கு இரண்டு குழந்தைகள், ஒருவன் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் நிற்பான். இப்படிக்கதை போகும். இவை வித்தியாசமான நாவல்கள். ஏன் இப்படி எழுதப்பட்டன? என்று ஒரு கேள்வி வரும். அதற்குப்போகவேண் டும். புதுக்கவிதை இன்று ஒரு ஐம்பதாயிரம்  தமிழர்கள் எழுதமாட்டார் களா? ஐந்து இலட்சம் பேர் படிக்கமாட்டார்களா? புதுக்கவிதை வந்ததும் தமிழ் வாக்கியம், கருத்தைச் சொல்லும் முறை, தலைகீழாகிவிட்டது. பக்தி காலத்தில் சொல் தான் கடவுள். சொல்லையும், அது குறிப்பிடும் பொருளையும் பிரிக்கமுடியாது. புதுக்கவிதைக் காலத்தில் சொல் அது சுட்டும் பொருள் அல்ல. அதனால் ஒரு கவிஞர் மூக்கை ஒளித்து வைத்தேன் என்கிறார். இங்கு மூக்கு என்பது மூக்கு அல்ல. இன்னொருவர் கையைத் தோள்முனைத் தொங்கல் என்பார். கை என்ன என்பது, அன்று அவருக்குத்தெரியவில்லை. இந்தக் கட்டத்தில் மரபான வாக்கியத்தில் நாவல் எழுதினால் ,வாக்கியத்தில் பொருள் தங்காது. அதனால் புதுவித புனைவுமொழி வருகிறது.எத்தனை பெட்டிசன் எழுதினாலும் அதிகாரிக்கு அதன் மொழி புரிவதில்லை.  வேறு ஏதோ செய்யவேண்டியுள்ளது. கையூட்டு கோடுக்கவேண்டியுள்ளது. நூறு வருடங்களுக்கு முன்பு அப்படி இல்லை. புதுக்கவிதை வந்த போதே சமூகத்திற்குள் ஒருவித மொழிப்பிரச்சனை வந்து விட்டது என்றே பொருள். காட்சியைப்படம் பிடிக்கும் படிமம் கவிதைக்குள் வரும் போதே எழுத்து, பயன் இல்லை மனதில் படம் போடுதலே முக்கியம் என்று ஆகிவிட்டது.

ஜி.கே எழுதிய மர்ம நாவல் என்னும் உங்களின் புதினம் பௌத்த சமண முரண்பாடுகள் போன்ற கனமான விஷயங்கள் குறித்துப் பேசிய ஒரு நாவல் என்றாலும், அதன் தலைப்பு, நாவலின் கனத்தைக் குறைத்துவிட்டதாக நினைக்கிறீர்களா?

 

‘ஜி.கே.எழுதிய மர்ம நாவல்’ என்பது எனது மூன்றாவது நாவல்.இந்த நாவல் பற்றிச் சொல்லுமுன்பு சில விசயங்களைச் சொல்லவேண்டும்.சங்க இலக்கியம் அறிவு மரபிலிருந்து வருகிறது.  மணிமேகலை, சீவகசிந்தாமணி, திருக்குறள், சிற்றிலக்கியம் எல்லாம் அதே மரபு. அதற்குக்காரணம் சமணம், பௌத்தம் வலியுறுத்திய அறிவு மரபு. புறவயமாகச் சித்தரிக்கும் மரபு. கதையை இணைப்புக்கள் மூலம் உருவாக்கலாம். மாறாக, பக்தி மரபு பல்லவர் அறிமுகப்படுத்திய சஸ்கிருத உணர்வு மரபிலிருந்து வருகிறது. அங்கு, தன்னை மறத்தல் முக்கியம். அறிவு மரபு தர்க்கத்தின் மரபு. அறிவு மரபை வலியுறுத்தும் என் நாவல்கள்  சங்க இலக்கிய அறிவு மரபின் தொடர்ச்சி எனலாம். குறிப்பாய் நீங்கள் கேட்கும் ‘ஜி.கே.எழுதிய மர்மநாவல்’, பல விசயங்களின் குவி மையம். இந்த நாவல் வந்த நேரம் பாப்ரி மசூதி, வலதுசாரியினரால் உடைக்கப்பட்டது. என் நாவலில் மதக்கொலைகள் நடக்கும். ஒரு மிகப்பழங்கால கற்பனையான நாடு வரும். சுருங்கை எனப்பெயர். சிலப்பதிகாரத்தில் வரும் இச்சொல் கிரேக்கச்சொல் என்பார் வையாபுரிப்பிள்ளை. அதை இந்த நாவல் எடுத்துப் பல விதமான தத்துவம், நூலாய்ச்சி, மத ஆராய்ச்சி, போன்றவற்றை அடிப்படையாய் வைத்து எழுதப்பட்டது. ஒரு பௌத்த துறவி கொலைகளைக் கண்டுபிடித் துக் கொண்டே வருவார். இத்தோடு இந்த நாவலை எழுதியது யார் என்ற கேள்வியும் வரும். இடையிடயே அக்கேள்வி குறிப்புகளாய் வந்துகோண்டே இருக்கும். கடைசியில் ஓர் இலங்கைத் தமிழர் தான் எழுதினார் என இக்கேள்விகளைக் குறிப்புகள் வழியே கேட்கும் கதைசொல்லி முடிவுக்கு வருவார். இது நாவலுக்கு வெளியே.  மர்மநாவல் வடிவில் பல ஆயிரம் தகவல்களுடன் எழுதப்பட்ட அரசியல் நாவல். கட்டடக்கலை பற்றி பல தகவல்கள் உண்டு. கட்டடக்கலை தொடர்பான பல்வேறு கலைச்சொற்கள் வரும். கொலைகள், துப்பு துலக்கும் உத்திகள், கொல்லும் முறைகள் எல்லாம் உண்டு.இப்படி எழுதுவது இன்று ஓர் உலக மரபு. இந்த ஒரு நாவல் தான் இப்படித் தமிழில் உள்ளது என்று கருதுகிறேன். படைப்பு எழுத் து ஒரு ரயில் பயண நேரப்போக்குக்காய் எழுதப்படுவது அல்ல. உடனடி வாசகர்களைக் கவராவிட்டாலும் அவை அந்த மொழியில் வரவேண்டும். உலகில் பல நாவல்கள் முக்கியமாய், ஜேம்ஸ் ஜாய்ஸ் போன்றோர் எழுதுவது உடனடியாக நுகர்வதற்காக அல்ல. மார்க்ஸ் சொன்னது போல நுகர்வது என்பது, சரக்கு உற்பத்தியோடு தொடர்பு கொண்டது. இலக்கிய உற்பத்தி, சரக்கு உற்பத்தி அல்ல. இலக்கியம் ஒரு வித புதிய அறிவு.மனிதகுலம் கண்டுபிடித்த எல்லா சாஸ்திரங்களையும் விட வித்தியாசமான கண்டுபிடிப்பு. ஏனெனில் ஒவ்வொரு புனைவும் முந்தியதிலிருந்து மாறுபடும். இந்த நாவலில் பல புத்தகங்களின் கதைகள் வரும். எழுத்தாளர் போர்ஹஸ் அவர் கதையில் கூறும் லாட்டரி சீட்டு வரும்.போர்ஹஸும் ஒரு சிறந்த மர்மக்கதை எழுத்தாளர் தெரியுமா? ஊடும் பாவுமாய் பல நூல்களின் பகுதிகளில் இருந்து கொண்டுவந்தது  போல சில இடங்களில் இந்த நாவலில் எழுதப்பட்டிருக்கும். பொய்நூல்கள் பற்றி வரும். எண் முந்நூற்றிஅறுபத்தைந்தின் ரகசியம் வரும். இந்த நாவலில் மிகப்பல குடும்பவரலாறுகள் வரும். பல அரச குடும்பங்களின் கதைகள் வரும்.இவை எல்லாம் மதங்களின் போராட்டப் பின்னணியில், மதத்துக்குள் விழுந்துள்ள இந்தியாவின் இன்றைய வரலாறுபோல் இருக்கும். ஆனால் புற வடிவத்தில் ஒரு மர்மக் கதை.இதன் தலைப்பு இதன் முக்கியத்துவத்தைக் குறைத்ததாக நான் நினைக்கவில்லை.   இதை, அந்தக்காலத்தில் படித்த நண்பர் ஆதவன் தீட்சண்யா மிகக்குறுகிய காலத்தில் ஒரே அமர்வில் படித்ததாய் சொன்னார்.

வார்சாவிலிருந்து ஒரு கடவுள் என்னும் உங்களது நாவல் ஒரு புலம்பெயர் இலக்கியம் எனக்கொள்ளலாமா? அந்த நாவலுக்கு எந்த வகையான வரவேற்பு கிடைத்தது? அநேகமாக, இந்த நாவல் தமிழ் வாசகர்களைவிட கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டதால் கன்னட வாசகர்களை அதிகம் சென்றடைந்தது என்று சொல்லலாமா?

 

‘வார்சாவில் ஒரு கடவுள் ‘எனக்கு வேறுபட்ட அனுபவத்தை எழுதும்போதும் எழுதிய பின்னும் கொடுத்தது. பெரிய நாவல் சுமார் 450 பக்கங்கள். இது நீங்கள் சொல்வதுபோல புலம் பெயர்தல் பற்றிய நாவல். தமிழர்கள் எவ்வளவு சிக்கலான பாதையில் புலம் பெயர்கிறார்கள் எனக் கூறியது. வார்ஸாவில் நான் பேராசிரியனாக இருந்த போது ஆறுமாதங்கள் அதிகம் இருக்கவேண்டும் என்றனர். நிறைய ஓய்வு இருந்தது. அங்கு இருந்த பிரிட்டீஷ் நூலகத்தில் ஏற்கனவே பல ஆங்கில நாவல்களைப் படித்திருந்த சூழலில் நாவல் எழுதும் ஆசை வந்தது. இரண்டு நாவல்களை எழுதினேன்.  அதில் ஒன்று இது. இதில் கிழக்கும் மேற்கும் சந்திக்கிற கதை அமைப்பு வருகிறது. பர்மாவிலிருந்து இரண்டாம் உலகப்போரின் போது திரும்பிவரும் ஒரு கோயம்புத்தூர் தமிழர், தனியாய் விடப்பட்டு உயிருக்குப்போராடும்  மூன்று வயது மங்கோலியப்பெண் குழந்தையைக் காப்பாற்றி எடுத்துக்கொண்டு வருகிறார். அக்குழந்தை, கோவையில் ஒரு தமிழ்க்குழந்தையாக வளர்கிறாள். அந்த நல்ல மனிதர் தன்னுடைய மற்ற பெண்களைப்போல எந்த வித்தியாசமுமற்ற விதமாக வளர்க்கிறார். தமிழ்பேசி வளர்ந்து ஒரு தமிழருக்குத் திருமணமாகிறாள் அப்பெண்.  அவள் பெற்றெடுத்த  மகன் சந்திரன். சந்திரன் வளர்ந்து 2005 வாக்கில் வார்சாவுக்குப் போகிறான். இரண்டாம் உலக யுத்தத்தின் எச்சங்களுக்கு இடையில் வாழும் பலரைச் சந்திக்கிறான். இப்படிக் கிழக்கில்  யுத்தத்தின் போது கண்டெடுக்கப்பட்ட தாயின் வயிற்றில் பிறந்த ஒருவன், மேற்கில் யுத்தத்தால் உடைக்கப்பட்ட நகரில் சுற்றித்திரிகிறான். அப்போது தன்னை யாரென வினவாமல் தன்னுடன் வா என அழைக்கும் போலந்து நாட்டுப் பெண்ணான  அன்னாவுடன் செல்கிறான். தன் வரலாற்றைச் சொல்கிறான். சமஸ்கிருதம் படித்து இந்தியவியல் அறிஞனாகி, வார்சா பல்கலைகழகத்தில் கற்பித்துக்கொண்டிருக்கும்போது கொல்லபடுகிற ஒருவனின் தங்கையையும் சந்திக்கிறான். அவளை அடிக்கடி சந்திக்கும் போது போலந்தின் சரித்திரம் அப்பெண்ணின் உளவியல் மூலம் புரிகிறது. தமிழ்நாட்டிலிருந்து மாஸ்கோ வழியாக போலந்துக்குச் சட்டவிரோதமாக வரும் போது ஜெர்மனியில் மாட்டிக்கொண்டு சிறையில் இருந்தவர் சிவநேசம். அவர் இன்னொரு பாத்திரம். சந்திரன், அவருடன் நெருக்கமாகப் பழகுகிறான். சிவநேசம், சிறை மருத்துவமனையில் சயரோகத்துக்கு சிகிச்சை பெறும் போது ஹிட்லரின் நாசிவதை முகாமில் நர்சாக இருந்த பார்வையிழந்த மூதாட்டியின், இரவில் மட்டும் பணிசெய்பவர், அன்புக்கு ஆளாகிறார். அம்மூதாட்டி, நாசி வதை முகாமில் பல ஜெர்மனியர் போல ஒரு காலத்தில் பணியில் இருந்தாலும் சயரோகத்தால் பீடிக்கப்பட்ட சிவநேசத்தின் தலையை வருடி  சிவநேசத்துக்கு  உயிர் வாழும் ஆசையை  ஏற்படுத்துகிறார். சந்திரன் தன் இறந்த மனைவியின் கதையைப் போலந்தில் பத்திரிகை ஒன்றில், தான் அங்கு முதலில் சந்தித்த அன்னா உதவியோடு பிரசுரிக்கிறான். ஆதிவாசிகளுக்கு உதவிய தீவிர வாதி என  போலீஸ் என்கௌன்டரில் கொல்லப்பட்ட மருத்துவ மாணவனான,  மனைவியின் தம்பி பற்றியும் அப்பத்திரிகையில் கதைபோல் எழுதப்படுகிறது. இப்படி கிழக்கும் மேற்கும்  தொடர்ந்து நாவலில் கொண்டுவரப்படுகின்றன.  இது ஒரு அனைத்துலக மதிப்பீடுகளைக் கொண்ட நாவல். யுத்தம், நாசிசம், நாசிசக் கொடுமைகள், இந்தியாவிலிருந்து மேற்கு, எதைத்தேடுகிறது போன்ற கேள்விகள் புனைவாக்கப்பட்டன. இழந்துபோன எதையோ கண்டடைய ஐரோப்பா ஏன் தனக்கான இந்தியாவைக் கட்டமைக்க விரும்புகிறது? அதுபோல இங்கிருந்து ஐரோப்பா போன சந்திரன், சிவநேசம் அதீத ஆற்றல் உள்ளவரா இல்லையா என யோசித்து முடிவுக்கு வர முடியாமல் இறுதிவரை, தடுமாறுகிறான்.

இந்த நாவல் கனடா நாட்டு இலக்கியத்தோட்டம் அமைப்பால் 2008-இல் வெளி வந்த சிறந்த தமிழ் நாவல் விருதுபெற்றது.  நான் நாவல் பிரதி அனுப்பாவிட்டாலும் அவர்களே வாசித்துப் பார்த்து விருது அளித்தனர். கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டபோது மிகச்சிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான விருதை கர்நாடக அரசிடமிருந்து 2016 இல் பெற்றது. அதுபோல் ஒரே ஆண்டில் கர்நாடகத்தில் ஆயிரம் பிரதிகள் விற்றன. அப்போது தான் தமிழ் வாசகர்கள் பற்றி யோசித்தேன். நம் நாவல் வாசகர்கள் கல்கி, ஆனந்தவிகடன் பத்திரிகை நாவல்களால் தீர்மானிக்கப்பட்ட  பெண்களின் வாசிப்புப்பழக்கத்தால் தாக்கம் பெற்றவர்கள். அவர்களை ஜெயகாந்தன் அதே பத்திரிகைகளில் எழுதி மாற்றப்பார்த்தார். அதற்குள் சுஜாதா வந்துவிட்டார். இலக்கிய நாவல் வேறுவகை வாசகர்களைக்கொண்டது. சிறு பத்திரிகைகள் இத்தகைய வாசகர்களை உருவாக்கத் தொடர்ந்து முயற்சித்தது. சமூகச்சூழல் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. தமிழிலும் சிறுவட்ட வாசகர்கள் வாசிக்கும் படைப்புகள், பெருவாரி வாசகர்கள் படிக்கும் நூல்கள் என்ற பாகுபாடு வந்துவிட்டது.இத்தாலியின் எழுத்தாளரான இட்டாலோ கால்வினோ இத்தாலிய பத்திப்பகம் ஒன்றில் வேலைபார்த்தார். அவருடைய பார்க்க ‘முடியா நகரங்கள்’ என்ற சிறுநாவல் உலக அளவில் விற்பனையில் சாதனை படைக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அவர் பதிப்பக அளவு கோல் தெரிந்தவர். அதனால் அது சாதனை படைத்தது. நாம் படித்தாலும் அந்த நாவலில் அனைத்துல விற்பனை சாதனை புரியும் எனச்சொல்ல எந்த அம்சமும் அதில் இல்லை என்பதறிவோம். மார்க்கோபோலோவும் குப்ளாய்கானும் பல நகரங்களைப்பற்றி பேசிக்கொண்டே யிருக்கிறார்கள். ஆனால் அது சிறந்த நாவல். ஒரு வாசகன் நிறைய இலக்கியம் படிக்கும்போது இலக்கிய அளவுபோல் மனதில் உருவாகும். இலக்கியச்சிறப்பை அளந்து கூறும் அளவு கோல் சிக்கலானது. இதற்கு, கலைஞராக இருந்தால் போதும், நமக்கு அந்த அளவுகோல் பிடிபடும் என்று சிலர் கூறுகின்றனர்.  கலைஞராக இருப்பது என்றால் என்ன? வேறு என்ன? கலைஞன் பிறக்கிறான் என்றுதானே பொருள். யார் நேரடியாகவோ மறைமுகமாகவோ பிறவி பற்றிக்கூறுகிறானோ அவன் யார் என்பது நமக்குத் தெரியாதா? சரி, விடுவோம். இத்தாலியில் இட்டாலோ கால்வினோ எழுதிய முதல் நாவல் ஒன்று உண்டு. அது வேறு வகையானது. நான் அதைப்படித்தேன். அகிலன் பாணியில் அதை எழுதலாம். இத்தாலியில் இன்னொரு நாவலாசிரியர் இருந்தார். உம்பெர்த்தோ இக்கோ என்று பெயர். அவரும் உலகப்புகழ் பெற்ற நாவல்களை எழுதினார். அவர் அங்குப் பேராசிரியர். அவரும் கால்வினோ போல அறிவை வைத்து நாவல் எழுதலாம் எனக்காட்டுபவர். ஆனால் இருவரின் நாவல்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இப்போது சொல்லுங்கள் வாசகர்களைக் கணிக்கமுடியுமா? கன்னடத்தில் கூட ஏற்கனவே ஆங்கிலப் பேராசிரியர்கள் கூட்டாக கன்னடத்தில் எழுதி, ஒரு ஐம்பது ஆண்டுகளாக தரமான வாசகர்களை உருவாக்கினார்கள்.    அடிப்படையில் ஒரு மொழியின் சூழல் முக்கியம். எனக்கு மொழியின் ஆழத்தில் சரடு போல ஓடும் மரபு, தமிழ் போன்ற மொழியில் முக்கியம் என்று படுகிறது. அது சங்க இலக்கிய அறிவு மரபா மத்தியகால பக்தி மரபா? எதன் அடிப்படையில் தரமான வாசகர்களை உருவாக்குவது? இது வரை தமிழில் இருந்த, இலக்கியத்தை மட்டும் வலியுறுத்தும்  ஒரே அளவு கோல் க.நா.சு. உருவாக்கியது. அது எண்பதுகளிலேயே காலாவதி ஆகிவிட்டது. அப்போது எட்டுமணிநேரப்பேட்டி ஒன்று அவருடன் எடுத்தோம் . அதில் அவர் சமூகவியல் என்பது என்ன என்று தனக்குத்தெரியாது என்றார். அவருடைய தந்தை அந்த வார்த்தையைக் கேட்டிருந்தால் வெறுத்திருப்பார் என்றார். மார்க்சியமும் தெரியாது என்றார். அவர் ஐம்பது களின் உலக இலக்கியத்தை வைத்துத் தமிழில் சில வரையறைகளை உருவாக்கினார். இலக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் எனவும் இலக்கியமே அளவு கோல், என்றும் கூறியவர்களும் இப்படி அத்தனைபேரும் அவரது கருத்துக்களைத்தான் கொஞ்சம் மாற்றி, மாற்றிப் பயன் படுத்தினார்கள். அந்த வரையறை, உலக சிந்தனை மரபுகளை உள்வாங்கி உதித்த அமைப்பியலும் அதுபோல பல்வகை மார்க்சிய மற்றும் அழகியல் தத்துவப்போக்குகளும் தமிழில் வந் தவுடன் காலாவதியாகிவிட்டன. அவற்றுடன் ஒட்டிக்கொண்டிருந்த மேல்தட்டுக்குரிய குணமும் காலாவதியாகி விட்டது. இறுதியாக ஒன்று கூறுகிறேன். இலக்கியம் என்பது ஏற்கனவே இருக்கும் சாரம்சம் அல்ல. அந்தந்த காலமும் சூழலும் உருவாக்குவது. அவற்றிற்கேற்ப, பல்வேறு காரணிகள் மூலம், கட்டமைப்பது தான். ரசனை கொண்ட வாசகர்கள் இயல்பிலேயே இருக்கமாட்டார்கள். வாசகர்களும் இலக்கிய கட்டமைப்புக்குத்தக உருவாகிறார்கள்.

முதல் இந்தி எதிர்ப்பு நாவல் என்று சொல்லக்கூடிய உங்களது ஆடிப்பாவை போலநாவலுக்கு தமிழ் நாட்டில் எந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்தது? அது வெளிவந்திருக்கவேண்டிய கால கட்டம் அதுதானா?

 

எனது  ‘ஆடிப்பாவை போல’ என்ற நாவல் இந்தி எதிர்ப்பைப் பற்றிப் பேசுகிறது.அந்த நாவலை தொடர்ந்தும் வாசிக்கலாம். ஒவ்வொரு அதிகாரத்தையும் தாண்டித்தாண்டியும் வாசிக்கலாம். வாசகர்களுக்குக் குறிப்புகள் கொடுக்கப் பட்டிருக்கும். கிண்டிலில் வாசிக்க ஏற்ற விதமான உத்தியில் எழுதப்பட்டிருக்கும். காலம் மாற மாற இலக்கிய மாதிரியும் மாறும். இதன் உள்ளடக்கம் 1965- இல் நடந்த இந்தி எதிர்ப்பின் போது தமிழகத்தின் தென் பகுதியைச்சார்ந்த இரு கல்லூரி மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட காதல் பற்றியது. அக்காலகட்டத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வரவில்லை. காங்கிரஸின் மதிப்பீடுகள் தமிழ்ச்சமூக மதிப்பீடுகளாய் இருந்த காலம். இப்போது பெரிய பேருந்து நிலையமாய் இருக்கும் இடம் அப்போது சிறிய பேருந்து நிலையம். மாணவ மாணவியர் பழக்க வழக்கங்கள் அன்று வேறுபட்டவை. காதல் புரிவார்கள். ஆனால் சாதி அன்றும் பெரியதடை . சதித்திட்டங்கள் அதுவரை ஆட்சிக்கு வராத புதிய கட்சியிலும் உண்டு. விடுதி மாணவர்கள் வேறுவிதமானவர்கள். பணப்புழக்கம் இல்லை. ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் மிகப்பெரிய தொகை.  சாதி வேறுபாடு இன்று போல் அன்றும் உக்கிரமாக இருந்து. மேடைப்பேச்சுத் திறமை ஒருவரை பாராளுமன்ற உறுப்பினராக்கிவிடும். ஆனால் அரசியல் தந்திரங்கள் மிகவும் முக்கியம். உறவுமுறைகளும் அரசியலில் முக்கியம்.ஒரு ஊர்வலம் நடக்கிறது அது துப்பாக்கிச்சூட்டில் முடிந்த போது அடுத்து ஆட்சி மாறும் என்று  சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் பல துப்பாகிச்சூடுகள் நடக்கின்றன. ஆனால் உறவு முறைகள் தான் தத்துவத்தை விட பலமானவை. அதாவது குடும்பம் தமிழ்ச்சமூகத்தில் முக்கியமானது. தமிழும் குடும்பமும் பின்னிப்பிணைந்திருக்கும் சமூகம் தமிழ்ச்சமூகம் என பல நிகழ்ச்சிகள் விளக்குகின்றன. அப்போதே திரைப்படமும் அரசியலும் கலக்க ஆரம்பித்துவிட்டன. இடது சாரிகள், நக்சல்பாரி அனுதாபிகள் கொல்லப்படுகின்றனர். ஆனால் இடதுசாரிகளுக்கு ஆட்சியைப் பிடிக்கமுடியாது. எப்போதும் தியாகம் செய்பவர்கள் அவர்கள். அமரன் என்ற மாணவன் வருகிறான்.   இடது சாரி ஒருவரே அமரனின் பேச்சுத்திறமையைப் புகழ்கிறார்.வேறு ஒரு பேராசிரியர் வருகிறார்.  தனித்தமிழ் நாடு பற்றிப்பேசுபவர். அமரனை ஓரிடத்தில் ப்ளாட்பாரம் ஸ்பீக்கர் என கேவலப்படுத்துகிறார்.   பிளாட்பாரம் ஸ்பீக்கர் பெரிய குடும்பத்தாரிடம் தோற்கிறான். அக்குடும்பத்தார் எந்த கட்சி வந்தாலும் முக்கியமானவர்கள் ஆகிறார்கள்.  அது போலவே அவனைக் கேவலப்படுத்திய பேராசிரியரும் இழுத்து இழுத்துப் பேசும் அடுக்கு மொழிகள் நிறைந்த சொற்பொழிவு ஒன்றைக்கேட்டுவிட்டு இனி தாக்குப்பிடிக்க முடியாது என்று ஊரைக்காலி செய்கிறார். தலித்துகள் அன்றும் எரிக்கப்பட்டனர். கட்டுரைகள் எழுதும், இலக்கிய ஆசையுள்ள கதைத்தலைவனுக்கு  சொற்பொழிவுக்குப்பரிசு வாங்குபவளாய் அறிமுகமாகும் அவன் காதலி திடீரென இந்தி எதிர்ப்புக்குப் பிறகு ஏன் கல்லூரியைத்தொடரவில்லை என்பது புரியவில்லை. அவன் படிப்பை முடித்து, டெல்லியில் பத்திரிகையாளனாய் மாறி, போராட்டம் நடந்து கொண்டிருக்கும் இலங்கைக்குச்செல்கிறான். இடையில் பிரிகிற கதைத் தலைவனும் லண்டனிலிருந்து வரும் அவன் காதலியும் வயதான பிறகு திடீரென ஐரோப்பாவில் சந்திக்கிறார்கள். இந்தி எதிர்ப்பின் மூலம் அப்போது தமிழகத்தில் மேலெழுந்த மக்கள் பிரிவுகளில் நடைபெற்ற சமுக மாற்றம் எத்தகையது என அலசும் நாவல்.

இந்த நாவல் வெளிவரவேண்டிய காலம் இது தானா என்ற உங்கள் கேள்விக்கு வருகிறேன்.1965 இந்தி எதிர்ப்பு நேரத்தில் சாதாரண மக்களும் அரசியல் வாதிகளும் மாணவர்களும் எப்படி இருந்தனர் என்று இந்த நாவல் பார்க்கிறது. இன்று இந்தி எதிர்ப்புப்பற்றி பேசினால் சிலர் எரிச்சல் அடைகின்றனர். அதுபோல எண்பதுகளின் மேல் தட்டு அழகியல், அதன் அடுத்தகட்டமாக லத்தீன் அமெரிக்க மாதிரியில் எழுதுவதற்கு அனுமதிக்கும். ஆனால் இந்தி எதிர்ப்பு பற்றி எழுதுவதற்கும்  வலதுசாரிகளை எதிர்த்து அரசியலை எழுதுவதற்கும் யாரையும் அது உந்தவில்லை பார்த்தீர்களா? இலக்கியத்தூய்மை வாதம் பல மாதிரிகளில் கடந்த முப்பது ஆண்டுகளாக முகமூடி இட்டு இங்கே உலவுகிறது. புதுக்கவிதைகளில் இருந்தும் அரசியலை கடந்த முப்பது ஆண்டுகளாய் ஒதுக்கிவிட்டிருக்கிறது. ஆத்மாநாமைச்சிலர் பேசுகின்றனர். அவருடைய எமர்ஜென்சிக்கான எதிர்ப்பு நிலைபாடு அவர்களுக்கு மறந்துபோயிற்று. இந்தி எதிர்ப்புப் பற்றிப்பேசும் போது, அது நாவல் வடிவம் எடுக்கும் போது, ஏதாவது ஒரு அரசியல் கட்சியை ஆதரிப்பதோ எதிர்ப்பதோ முக்கியம் அல்ல. அன்று இந்தி எதிர்ப்பை நடத்திய சமூகம் எப்படிப்பட்டது  என்று பார்ப்பது முக்கியம். இந்த நாவலில் ஒரு வரலாற்றுப்பார்வை உள்ளது. இன்றைய கோணத்தில் இந்தி எதிர்ப்பு நோக்கபடுகிறது. இன்றைய சமூகத்துக்கும் அந்த சமூகத்துக்கும் என்ன ஒற்றுமை, வேற்றுமைகள் உள்ளன என்ற பார்வையும் முக்கியம். அதுபோல் இந்தி எதிர்ப்பு என்பது மொழி எதிர்ப்பு மாத்திரமல்ல. தமிழ் மொழி இருக்கும் வரை அது ஆதிக்கம் செலுத்தும் எல்லா  மொழிகளையும் மனோபாவங்களையும் எதிர்க்கத்தான் செய்யும். தமிழ், முன்பு நான் சொன்னதுபோல பிராந்தியத்தின் வலிமையின் பெயர். அசாம், கர்நாடகா, கேரளா கூட தம் உரிமையைப் பெற தமிழ் உதவ வேண்டும். மாநில சுயாட்சி அரசியல் அதுதான். கர்நாடகத்தில் இந்தியை எதிர்க்க தொடங்கிவிட்டார்கள் பார்த்தீர்களா?  பிரதமர் திருக்குறள் சொல்லிவிட்டால் தமிழர்கள் அவர்களை வர விட்டு விடுவார்களா? அவர்கள் தமிழை ஆதரிப்பவர்கள் ஆகி விடுவார்களா? அதுபோல், மார்க்யெஸ் என்றும் சரமாகோ என்றும் சில பெயர்களைச் சொல்வதால் எழுத்துக்குள்ளே இருக்கும் சனாதனம் மூடி மறைக்கப்பட்டுவிடுமா? இப்படிப்பட்ட கேள்விகளையெல்லாம் ‘ஆடிப்பாவை போல’ என்ற நாவலின் அரசியலை அறிகையில் கேட்க மூடியும்.  அது கேட்கிறது.

 

உங்களின் நாவல் முயற்சிகள் எல்லாம் உங்கள் இலக்கியப் பயணத்தில் போதிய அங்கீகாரத்தைப் பெற்றதாக நினைக்கிறீர்களா? இவைகள் பல்கலைக்கழக வளாகங்களுக்குள் விவாதிக்கப் பட்டனவா?

 

என் நாவல்கள் நகுலன் நாவல்களுக்கு எதிரிடையானவை. நகுலனைப் பலர் ஏற்றுக்கொள்ளவில்லை. நகுலன் தீவிரமான உளவியலுக்குள் போவார். குறிப்பிட்ட நான்கைந்துபேர் அவரிடம் நேரம் போக்குவதற்காகப் போவார்கள். அவரை நான் பல முறை சந்தித்திருக்கிறேன். ஆங்கில மாடர்னிச நாவல்கள் படித்து அந்த தாக்கத்தில் எழுதியவர். கதையம்சம் அதிகம் அவர் நாவல்களைத் தீர்மானிக்காது. உணர்வோட்ட மே கதைப்பாத்திரங்கள். ஆனால் என் நாவல்கள் புற வய நாவல்கள் என்று கூறலாம். புறநானூறு இப்படிப்பட்டது. மணிமேகலையின் அழகியல் இப்படிப்பட்டது. பதிற்றுப்பத்து வெளியீட்டு முறை இப்படிப்பட்டது. ‘பிரதாபமுதலியார் சரித்திரத்தின்’ நாட்டுப்புறவியல் இப்படிப்பட்டது. சிலப்பதிகாரம் இப்படிப்பட்டது. அம்சன் குமார் என் ‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்களை’ சிலம்பிடம் சேர்த்து எழுதியிருப்பார். தெ.பொ.மீ. சிலப்பதிகாரம் பற்றி எழுதியதைப் படித்தபோது என் நாவல்களில் வரும் பாத்திரங்களின் அறிமுகம் போல இருந்தது. ஏன் தமிழில் காவிய மரபுக்கதைகள் எல்லாம் புறவயக்கதைகளைக் கொண்டிருக்கின்றன? இக்குணத்தைக்கவனித்து, நாகார்ச்சுனனும், எஸ்.சண்முகமும் என்நாவல்கள் பற்றி விரிவாய் எழுதியுள்ளார்கள்.  இந்த எல்லா நாவல்களும் மாத நாவல்கள் போல வாசிக்கப்படாது. என் சில நாவல்கள் வாசகர்களே என்று அழைத்துக்கதை சொல்லும். சரித்திரத்தில் படிந்த நிழல்கள் நாவல், விநாயகர் வணக்க வெண்பாவுடன் தொடங்கும். என்னுடைய  ‘ஜி.கே.எழுதிய மர்ம நாவலில்’ இயல்களுக்கு இடையிடையே குறிப்புக்கள் வரும். ஜெர்மன் நாடக ஆசிரியர் பிரக்ட் தன் நாடகங்களில் குறிப்புகள் எழுதி இது நாடகம் தான் என உணரவைப்பார். வாசகன் படைப்போடு ஐக்கியப்படக்கூடாது என்பார். அதை அந்நியமாக்கும் உத்தி என்பார். என்நாவல்கள் இந்த உத்தியைபிபிரதானமாகக்கொண்டது.   மேலும் நாவல் இலக்கியம் என்பது அந்த மக்கள் கூட்டதின் ஆதி மொழியுடன் ஒன்றிணைந்தது என்று கூறுவது என் நாவலின் கலைக்கோட்பாடு எனலாம். சங்க இலக்கியமும் சிலம்பும் அந்த ஆதி மொழியின் குரல்கள். இன்றைய  நாவல் அதன் தொடர்ச்சி என்பது என்கருத்து. இப்படிப்பட்ட ஒரு கருத்து சிறுபத்திரிகையில் எப்போதும் ஒலித்ததே  இல்லை. சங்க இலக்கியமும் சிலம்பும் தற்கால இலக்கியத்தை எழுதும் புனிதக் கைகளில் படுவதே பாவம் என்றுதான் அன்றுமுதல் எல்லோரும் நினைத்தார்கள். இன்றும் அப்படியே நினைக்கிறார்கள். மரபு வேண்டாம் என்பதே எல்லோரின் ஏகோபித்த குரல். முக்கியமான காரணம், தற்கால இலக்கியம் வேறு கைகளில் மாட்டிக்கொண்டிருந்தது என்று ஏற்கனவே சுட்டிக் காட்டியுள்ளேன். இதுபோல ஒரு சுட்டிக்காட்டல் தொ.மு.சி. ரகுநாதனின் ஒரு நூலில் வந்தபோது பெரிய பரபரப்பு  ஏற்பட்டது.  சிலருக்கு ஞாபகமிருக்கலாம். தமிழ் நாவல் இலக்கியத்துக்குச் சங்க கால மரபு வேண்டும் என்பது பெரிய பாவம் ஏதும் இல்லை. ஜேம்ஸ் ஜாய்ஸ் அவரது நாவலான,யுலிசஸில், ஹோமர் காவியத்தைப் பயன்படுத்துகிறார். இந்தச் சங்கதி  இவர்களில் ஓரிருவருக்குத்தெரிந்தாலும் இவர்கள் சங்க இலக்கியம் படிக்க அது தூண்டுதலாகாது. தமிழன் மரபில் இவர்களுக்கு மதிப்புமில்லை, அறிவுமில்லை. இன்னொரு விஷயம். எண்பதுகளில் வாசகர்கள் ஒரு குறுகிய வட்டத்தினர் தான். பொது வாசகர்கள் இல்லை. பொது வாசகர்களைப் பெரும் பத்திரிகைகள் வியாபாரத்துக்காகப் பயன்படுத்தின. இலக்கிய தரத்தில் எழுதப்பட்ட நாவல்கள் சிறு பதிப்பகங்களால் வெளியிடப்பட்டன. நகுலன் கைச்செலவு செய்து வெளியிடுவதாய் தன்னை நையாண்டி செய்வார். சுந்தர ராமசாமி படைப்புக்கள் க்ரியா மூலம் வந்தன. இவர்கள் யாருடைய நாவலும் கல்கி, குமுதம், வாசகர்களால் வாசிக்கப்படவில்லை .அகிலனுக்கு ஞானபீடம் வந்தபோது சு.ரா. ஒரு கட்டுரை எழுதி அகிலனைக் காலி செய்தார். இந்திராபார்த்தசாரதியின் குருதிப்புனல் வந்தபோது அம்பை ஒரு கட்டுரை எழுதி அவரை ‘ஆண்மை நாவலாசிரியர்’ என விளக்கினார். நகுலன்  பொதுசன படைப்பாளி அல்ல. இப்படி அன்று யாரும் பொதுவாசகர்களால் வாசிக்கப்படவில்லை. இது பற்றிக்கொஞ்சம் பார்ப்போம். நம்மிடம் வாசகர் சர்வே எதுவும் கிடையாது. அது சமூகவியலாளர்களின் வேலை. நம் பல்கலைகளில் அப்படிப்பட்ட சமூகவியல் என ஒரு துறை இருக்கிறதா என்றே யாருக்கும் தெரியாது. கர்நாடகத்தில் பெரும்பாலான எல்லா கல்லூரியிலும் அது ஒரு முக்கியமான பாடம்.  வாசகர் சர்வே அவர்கள் எடுப்பது உண்டு. சரி, வாசகர்கள் நம்மிடமும் அதிகம் உண்டுதான். அது நேரப்போக்காய், நாவல் வாசிப்பைக் கருதுபவர்கள். ஒரு காலத்தில் நா. பார்த்தசாரதிக்கும் மு.வ.வுக்கும் இருந்த வாசகர்கள் எழுபது எண்பதுகளில்  இரண்டாய் பிரிந்து, ஒரு பிரிவு, சிறு பத்திரிகைக்குப் போயிற்று. க.நா.சு.போன்றவர்களின் தீவிர இலக்கியம் வேண்டும் என்ற பிரச்சாரமும் அதுபோல, திராவிட பரம்பரை ஆட்சிக்கு வந்த பின்பு  திராவிட வாசகர் கூட்டம்  இலக்கியத்திலிருந்து வெளியேறியதும் ஒரு புதிய சூழலைத் தமிழில் உருவாக்கியது. குறுங்குழுவினர் சிலர் மேல்சாதி சார்ந்து மாடர்னிசத்தைத் தமிழுக்குக்கொண்டுவர முயன்றனர். அபத்தநாடகம் (அப்ஸர்ட் தியேட்டர்) போன்றன வந்தன. அதற்கு எதிராக அப்போது தி.க.சி.ஆசிரியத்துவத்தில் செயல்பட்ட தாமரை பத்திரிகை முக்கியமாயிற்று. இப்படி ஒருவித சிறுவாரி (ஜமாலனின் தத்துவச் சொல்லாட்சி இது) எழுத்தும் வாசிப்பும் தமிழைத் தீர்மானிக்கும் சரித்திரம் உருவாயிற்று. அதே இலக்கியச்சூழலாயும் ஆயிற்று. இது 21 ஆம் நூற்றாண்டின் முதல் ஐந்தாண்டுகள் வரை ஒரு குறிப்பிட்ட குணத்தைத் தமிழுக்கு அளித்தது. இக்கட்டத்தில் நாவல்களுக்கு வாசகர்கள் கிடையாது. பத்திரிகை தொடர்கதையின் வாசகர்களைப் பற்றி நாம் பேசவேண்டாம்.அவர்கள் எப்போதும் இருப்பார்கள். ஆனால் எதையும் தீர்மானிக்கமாட்டார்கள். ஆனந்தவிகடன் வாசகர்களாய் ஐம்பதுகளில் இருந்தனர். இவர்கள் வருவார்கள் போவார்கள். எனவே என்போன்றவர் எழுத்துக்களுக்கோ, வேறு சீரிய எழுத்துக்களுக்கோ, கன்னடம் போல, தமிழில் இலக்கிய நாவல் வாசிப்பவர்கள் பேரளவில் இருக்கமாட்டார்கள்.

தமிழ்த்துறையினர் தற்கால இலக்கியத்திற்கு ஏனோ வரவில்லை. மு.வ.நாவல்கள் வந்தபோதும் பாடமாக இருக்குமே தவிர அவற்றின் மீது அந்த காலத்தில் இங்கிலாந்தில் ஆங்கிலப்பேரா. எஃப்.ஆர்.லீவிஸ் நாவல் இலக்கியம் மீது எழுதியதுபோல ‘பெருமரபு’ (Great Tradition) இது என விளக்கிச்சொல்லும்  ஒரு நூல் வராது. பெரும்பாலும் கற்பிக்கமாட்டார்கள். மாணவர்களே படிக்கவேண்டும்.

தமிழ் இலக்கிய உலகில், வாசக எண்ணிக்கை ஒரு புறம் குறைந்துகொண்டே இருக்கையில், தினமும் மலம் கழிப்பதுபோல் இன்றைய எழுத்தாளர்கள் நிறைய எழுதிக் குவிக்கிறார்கள்; பெரிய பெரிய புத்தகங்களாக எழுதுகிறார்கள்; இது ஒருவகையான பைத்தியக் காரத்தனமாக காணப்படுகிறது. இப்படிப்பட்ட இலக்கிய வகைமைகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? ஏனென்றால், பொதுவாக உங்களுக்கான இலக்கியக் களமாடல் நாவல் வடிவத்தில் இருக்கிறது. அதனால்தான் இந்தக் கேள்வி.

 

ஆமாம், இப்போது வந்துகொண்டிருக்கும் எழுத்துக்கள் எழுபதுகளில் ஆரம்பித்து, தொன்னூறுகள் முடிய வந்த இலக்கியச்சூழலுக்கு மிகவும் மாறாக உள்ளன. உங்களைப்போல நானும் கவனித்துள்ளேன். அதாவது இவை பெரும் பாலும் முகநூல் வந்தபின்பு தீர்மானிக்கப்பட்டது. இது ஏற்கனவே நான் சொன்னதுபோல கடந்த சுமார் இருபது ஆண்டு கால நிகழ்வு. 2005 –க்கு பிந்திய நிகழ்வு.  முகநூலில் ‘லைக்’ வாங்குவதற்காக ஒரு புத்தகம் வரும். அடுத்து ஏதும் வராது. அவர் காணாமல் போவார். அதுபோல விருதுகள். விருது பெற்றவர் இனி நிறைய எழுதுவார், தமிழுக்கு அடித்தது யோகம் என்று நாம் நினைத்தால் அவரும் முகநூலில் சில போட்டோக்கள் போட்ட பின்பு காணாமல் போவார். முகநூல் புறரீதியான அடையாளம். சிறுபத்திரிகைபோல, அகரீதியான அடையாளம் அல்ல. ஆனால், மொத்தத்தில் பெரிய மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. நாம் இவைகளைக் கவனிக்கவும் அவற்றின் மூலம் வெளிப்படும் பாடங்களையும் கற்கவும் தவறக்கூடாது. அந்தக்காலத்தில் கையெழுத்துப் பத்திரிகை நடத்துவது போல இப்போது முகநூல் பயன்படுகிறது. உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் அதிகம் முகநூலில் பங்கெடுக்கிறார்கள். அவர்களைக் கவர சீப்பான செக்ஸ் உத்திகளைச் சிலர் பயன் படுத்தினார்கள். டிஜிட்டல் குற்றம் பற்றிய சட்டங்கள் வந்தபின்பு அவை குறைந்திருக்கின்றன. அறுபது வயது எழுத்தாளர் நாற்பது வருடங்களாக எழுதிய அனுபவம் சார்ந்து இறுதியாக அவர் வந்தடைந்த ஒரு கருத்தை எழுதுகிறார் என்று வைத்து கொள்வோம். பத்து ‘லைக்’இருக்கும். அடுத்து அவர் நன்றாக முகச்சவரம் செய்து ஒரு போட்டோ பதிவேற்றுகிறார் என்று வைத்துக்கொள்வோம். சுமார் ஐந்நூறு லைக் இருக்கும். இதிலிருந்து என்ன முடிவுக்கு வர? அவர் கருத்தை விட அவர் முகம் நன்றாக இருக்கிறது என்றுதானே. இது அவரைக்கேலி செய்வது ஆகாதா? சிலர் தமக்கிருக்கும் மனநோயை இறக்கிவைக்கவும் வெளிநாட்டில் இருப்பவர்கள் குடித்தபின்பு தோன்றுவதையெல்லாம் கிறுக்கவும் பயன் படுத்துகின்றனர்.ஒரு முறை ஒரு ஆங்கிலப்பேராசிரியர் கவித்துவம் என்பது ஒரு நிகழ்த்துதல், (ஃபெர்பார்மென்ஸ்) என்று எழுதினார். அது ஒரு ஆழமான சிந்தனை. அதை முக நூலில் படித்த பலர் நாடக நிகழ்த்துதல் எனப்பொருள்கொண்டு நாடகம் பற்றி எதிர்வினை ஆற்றினார்கள். ஆங்கிலப் பேராசிரியரும் தான் எழுதியது நாடகம் பற்றித்தானோ என்று ஐயம் கொண்டு கடைசியில் தன்னையே மாற்ற ஆரம்பித்துவிட்டார். இது ஒரு பெரிய தமாஷ். அதாவது புதியது தோன்றுவதற்குப் பதில் பெருவாரியானது  தீர்மானச்சக்தியாகிறது. இது இப்படியே போனால் கடைசியில் பாசிசத் துக்கு வழி வைக்கும். கூட்டம் தான் பாசிசத்தை உருவாக்குவது. ஹிட்லர் பாசிசத்தை உருவாக்கியதை விட கூட்டத்தினர் தான் அவரைக் கொலைகாரராக்கியது. இது இப்போது இந்தியாவிலும் பாசிசமாக வந்து கொண்டிருக்கிறது.வங்கிகள் முன்பு கால்கடுக்க நின்று செத்துப்போன மக்களைப் பார்த்தபின்பும் அதற்குக் காரணமான அதே கூட்டம் இன்னும் அதிக பலத்துடன் வெற்றிபெறுவது எப்படி?  கணினி வந்தபின்பு இதெல்லாம் மிக எளிது. ஒருவர் ஆஹா, மக்கள் அதிகாரம் பெற ஆரம்பித்துவிட்டார்கள் என மகிழ்ந்தார். ‘கூட்டத்துக்கும்’ மக்களுக்கும் வித்தியாசம் அவருக்குத் தெரியவில்லை. இலக்கியத்தை இந்தச் சூழல் எப்படிப்பாதிக்கிறது என்பது இன்னும் ஆழமாகப்பேச வேண்டியது. நூல்விமரிசனமும் கேள்விமரபும் மழுங்கியுள்ளன. பாராட்டுரைகள் மட்டும் பரவுகின்றன. சமீபத்தில் ஒரு நாவலுக்கு பெரிய விருது வந்தது. விருது பெற்றவரை எல்லோரும் பாராட்டினர். ஏழாயிரம் பிரதிகள் விற்றன. ஏழாயிரம் பேர் படித்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? சுமார் இருநூறுபேர் முழுதும் படித்திருந்தால் மிகப்பெரிய விசயம். வீடுகளில் அடையாளப்பொருளாய் வைக்க வாங்கினார்கள்.  அடையாளங்கள் ஊடகங்கள் மூலம் உருவாகின்றன. அடையாள உருவாக்கம் வேறு ஒரு சமுக வெளிப்பாடு. அதனை உடைத்து அதன் உள்ளே இருக்கும் பொருள் என்ன எனப்பார்ப்பது இன்னொரு விதமாய் சமூக அர்த்தத்தைத் தேடும் காரியம். விரிவாய் இவற்றை இங்கே பேசமுடியாது.

தமிழில், கணினி, முகநூல்,  இவை மூலம்  கொஞ்சம்  நல்லதும் நடக்கிறது, மறுப்பதற்கில்லை.  பரவலாய்ச் செய்திகளைக் கொண்டுபோக முடிகிறது. பெரும்பான்மையாதல், பரவுதல், வேகமாக தொடர்புறுத்துதல் நடக்கின்றன. இத்தன்மைகள் நல்லதும் கெட்டதும் கொண்டது. முக நூலில் எழுதியதைப்பலர் நூலாக்குகின்றனர். சில நல்ல நூல்கள் அப்படி வந்துள்ளன. மறுப்பதற்கில்லை. முகநூல் பற்றி முழுஆய்வுகள் வந்த பின்புதான் இறுதியான முடிவு எடுக்கவேண்டும். நான் எதிர்மறைகளை அதிகம் பேசிவிட்டேன். முற்றிலும் எதிர்மறையான தீர்ப்பும் வழங்கக்கூடாது. புதிய ஊடகம் இது.

உங்களின் சமீபத்திய நாவல் ஷம்பாலா, இன்றைய மோடி அரசின் நடவடிக்கைகளை நையாண்டி பண்ணும் ஒரு அரசியல் நாவல். இப்படி நேரடியாக விமர்சித்து எழுதும் மன நிலைக்கு நீங்கள் தள்ளப்பட்டீர்களா? அல்லது இயல்பாக இன்றைய அரசியல் நடவடிக்கைகளால் ஏற்பட்ட அழுத்தத்தால் எழுதினீர்களா?

 

இனி நான் இறுதியாக எழுதிய ஷம்பாலா என்ற நாவல் பற்றிச்சொல்கிறேன். என் நாவல் எழுத்து முறையின் தொடர்ச்சியும் விலகலும் இந்த நாவலில் உண்டு. 2014 க்கு பின் வந்துள்ள வலதுசாரி அரசியலில் பாசிசத்தின் இந்திய முகம் தெரிந்தது. 14-7-20 அன்று வரலாற்றாய்வாளர் ராமச்சந்திரா குஹாவின் மோடி-ஷா ஆட்சிபற்றிய மதிப்பீடு வந்துள்ளது . அவர் சொல்லும் விஷயங்கள் மிகுந்த கவனத்துக்குரியவை. அதில் இந்திராவின் நெருக்கடி பிரகடனத்துடன் இணைத்து இன்றைய வலது சாரிகளின் பாசிசப்போக்கை உணர்த்துகிறார். அவர் இன்று ஊடகங்களும் நீதிமன்றமும், அதிகாரிகளும் தோற்றுப்போனதோடு, வேறுபல நிறுவனங்களான மிலிட்டரி, சிவில் ஆட்சித்துறை, இன்கம்  டாக்ஸ், வங்கித்துறை போன்ற பலவும் அதனதன் தன்னுரிமையை இழந்து சனநாயகம் இனி பெரிய ஆபத்தைச்சந்திக்கும் என்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைக் கோடிக் கணக்கில் பணம் கொடுத்து கவிழ்க்கிறார்கள் என்கிறார். அவர்கள் எல்லாவற்றையும் தங்கள் பிடிக்குள் கொண்டுவருகிறார்கள் என்கிறார்.இந்த ஆபத்து எல்லோரும் அறிந்ததுபோல படைப்பு மனத்திலும் படும். அது வேறு வடிவத்தில் இருக்கும்.  எல்லாவற்றையும் இந்து முஸ்லிம் பிரச்சனை ஆக்குவது என்பது பெரிய பாசிச உத்தி. அது மிகுந்த மன உளைச்சலைத் தந்தது. அவர்கள் உருவாக்கிய சொல்லாட்சி, அர்பன் நக்சல். அதுபோன்ற சூழலுக்கு முகம் கொடுக்கும் ஒரு கதைப்பாத்திரம் இந்த நாவலில் வருகிறது. பாசிசத்தின் அடையாளச் சொல் ஹிட்லர். அது இன்னொரு பாத்திரம். இப்படி ஒரு தற்கால அரசியல் நாவல் எழுத எண்ணிய போது என்ன வடிவம் கொடுப்பது என்று யோசித்தேன். என் பல நாவல்களில் வரும் இரண்டு அடுக்கு கதைமுறை எனக்குத்தெரியாமலே உருவானது. ஒரு சுவாமிஜி வருகிறார். ஷம்பாலா என்ற இடத்தில் உலகின் அதிகாரம் எல்லாம் கிடைக்கும் என்ற புராணக்கதை உள்ளது. சுவாமிஜி, நவீன ஹிட்லருக்கு அந்த இடம் பற்றிக்கூறுகிறார். அரசியலும் மதவழிபாடும் எப்படிப் பின்னிப் பிணைந்துள்ளன எனக்காட்டுவதற்காக அப்பாத்திரம். அழகியலைப் பொறுத்தவரையில் இந்த நாவல் என் முந்தைய நாவல்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. நேரடியாக வாசகரைத் தொடுவதற்காக நேரடி அரசியல் வரும். 2014 லிருந்து 2018 வரை இங்கு நடந்த பல சம்பவங்களை நேரடியாகத் தந்து அவற்றைச்சுற்றி உலக அளவில் அரசியல் எதிர்ப்பு நாவல்கள் பலதில் வருவதுபோல ஒரு உருவகத்தன்மையை உருவாக்கினேன். உருவகம் என்றால் கதை அமைப்பில் இந்த எல்லா உண்மைகளையும் அடக்கிய ஒரு உருவம் வரும் படி  கற்பனை செய்து பாத்திரம், பேச்சு, சம்பவம் என எழுதுதல். அதனால் தான் நாவலில் அறிவை உளவு பார்க்கும் நிகழ்ச்சிகள் வந்தன. அறிவை உளவு பார்த்தல் பாசிசம் செய்வது. உருவகமும் யதார்த்தமும் அப்படி இணைத்தேன். பாசிசமும் இன்று உடலைப்பேணுங்கள் யோகா செய்யுங்கள் என்று கூறும். அது பற்றி நேரடியாகக் கூறாமல் குஸ்தி பயிற்சிபெற்ற பள்ளிக்கூட சிறுவனை ஹிட்லர் பெயர் கொண்டவனாய் அறிமுகப்படுத்தினேன். இதன் மதிப்புரை இந்து தமிழில் வந்தபோது மிக அதிகமான அழைப்புக்கள் எனக்கு வந்ததைப்பார்த்து வியந்தேன். லண்டனின் இருக்கும் ஒரு மருத்துவர் ஊருக்கு வந்தபோது கிடைத்த மதிப்புரையை படித்துவிட்டு தன்னை அறிமுகப்படுத்திவிட்டுக் கொஞ்சநேரம் பேசினார். அவர் மதிப்பீட்டில் தமிழகத்தில் வலதுசாதி அமைப்புக்கள் பலப்பல பெயரில் கோயில் சார்ந்து செய்யும் காரியங்கள் இன்னும் பயங்கரமானவை. அதுபோல் தமிழ்ப்பண்பாட்டு வெளியில் பாசிசத்தை அகவயப்படுத்தும் காரியங்களைப் பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் காட்சி ஊடகங்கள் மிகத்திறமையாகச்செய்வது புரிந்தது. சினிமாவும் ‘மாயைப்படுத்தலைச்’ சிறப்பாகச் செய்து இளைஞர்களை அரசியலற்றவர்களாக்குகிறது. என் ஷம்பாலா நாவல்போல பல நேரடியான அரசியல் நாவல்கள் தமிழில் வரவேண்டும். சமீப காலங்களில் தமிழ்ப்பண்பாடும் இலக்கியமும் அரசியல் மயப்படுத்தாத போக்கைக் கையாள்கின்றன. அரசியல் மயப்படுத்தப்படாமல், உள்ளதால் பண்பாடு என்றால் சினிமா பற்றிப்பேசுவதுதான் என்றாகிவிட்டிருக்கிறது. இது எப்படிப்பட்ட ஆபத்து என பலருக்கும் தெரியவில்லை. உலக இலக்கியத்தில் அரசியல் நாவல்கள் பல உள்ளன. அதற்கு ஒரு மரபு உள்ளது. பிரிட்டிஷ் எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘விலங்குப்பண்ணை’ முக்கியமானது. அது முற்றிலும் உருவகம். ஷம்பாலா சற்று மாறுபட்டது. இந்த நாவலுக்கு நிறைய எதிர்வினைகள் வந்தன. மாலன் ஒரு கட்டுரை எழுதி எனக்கு அனுப்பினார். ஹிட்லருக்குப் பதிலாக ஸ்டாலின் வரக்கூடாதா என்பது போல எழுதினார்.அவரிடம் என்குறி தப்பவில்லை என்றேன்.

 

 

 

படிகள் மற்றும் சிற்றேடு இதழ்கள் குறித்து ஓரிரு வார்த்தைகள்

படிகள், இதழ் பற்றிப் பலர் கேட்கிறார்கள்.  ஜி.கே. இராமசாமி, மற்றும் சிவராமன் என்ற இரண்டு சமூகவியல் பேராசிரியர்களுடன் செயல்பட்டேன்.அவர்களின் சமூகவியல் அறிவு அவ்விதழில் பிரதிபலித்தது. சிற்றேடு என்ற இதழ் தமிழ்த்துறையையும் சிறுபத்திரிகையும் இணைக்கும் இலட்சியத்தில் பல இளம் பேராசிரிய நண்பர்கள் துணையுடன் தொடங்கப்பட்டது என்பதைத்தெரிவிக்கிறேன். .

இலக்கு இலக்கியப் போக்குகள் வீரியத்துடன் எழும்பி கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப் போனதாக உணர்கிறீர்களா?

 

ஓ, நீங்கள் இலக்குக் கூட்டங்களில் கலந்திருப்பீர்கள் அல்லவா? இலக்கு அமைப்பு, பத்தாண்டு தமிழிலக்கியப் போக்குகளை மதிப்பிடுவதை ஒரு திட்டமாக வைத்திருந்தது. அப்படி மூன்று நாள் கருத்தரங்கு சென்னை வில்லிவாக்கத்தில் நடந்தது. அது ஒரு முக்கியமான இலட்சியத்தை வைத்திருந்தது. ‘மாஸ் கல்சர்’ என்று சொல்லப்படும் பெரும் பத்திரிகை மற்றும் பொது சன மாயையை மக்களிடம் உருவாக்கும் சக்திகளை அடையாளம் காண்பது. அப்போது மாதநாவல் தமிழில் உச்சத்தில் விற்ற சமயம். சுஜாதா பெரிய பத்திரிகை வியாபாரத்திற்குப் புது வேகம் கொடுத்தார். இலக்கியம் வணிகப்பொருள் அல்ல என்ற முழக்கத்துடன் பல மாறுபட்ட கருத்துள்ளவர்களை, கோவை ஞானி, திருச்சி ஆல்பர்ட், அக்னிபுத்திரன், பெங்களூர் படிகள், திருச்சி மானுடம் இதழ், பு.வ.மணிக்கண்ணனின் நீலமலை பனிமலர் போன்ற அமைப்புகளும் தனிநபர்களும் இணைந்து சிலகாலம் கருத்தரங்குகள் நடந்தன.சென்னையில் நடந்தது. மதுரைப் பல்கலைக்கழகத்தில் மூன்றுநாள் கருத்தரங்கம் நடந்தது. அப்போது இளைஞராக இருந்த, இன்றைய நீதியரசர் மகாதேவன் சென்னையிலிருந்து அதற்காகவே மதுரைக்கு வந்து கலந்து கருத்தரங்கைக்கேட்டார். கோவை, பெங்களூர், திருச்சி, ஹோசூர் என்றெல்லாம் இடங்களில் கருத்தரங்குகள் ஏற்பாடாயின. ஒவ்வொரு கருத்தரங்கும் நூல்களாக வந்தன. பல தகவல்கள் மறந்துவிட்டன.  இந்தச் செயல்களைத் தொடர்வீர்களா எனக்கேட்கிறீகள். இளைஞர்கள் முன்னெடுக்க வேண்டும்.

பிறமொழிகளைப்போலல்லாது, தமிழில் தலித் இலக்கியப் படைப்புக்கள் பெரிய அளவில் வரவில்லை என்றே தோன்றுகிறது; உங்களுடைய பார்வையில் எவ்வாறு கணிக்கிறீர்கள்?

பிற மொழிகளான கன்னடம், மராத்தி போன்றவற்றில் தலித் இலக்கியம் முக்கியம். நான் கூட சாகித்திய அக்காடமி மூலம் ‘கன்னடத்தில் தலித் இலக்கியம்’ என்று ஒரு கன்னட தலித் இலக்கியத் தொகுப்பு நூலை அறிமுகம் செய்துள்ளேன். பலர் மூலம் மொழிபெயர்த்த கன்னட இலக்கிய மாதிரிகளைஅந்த  நூல் அறிமுகம் செய்யும். பிரதிபா, நீங்கள் எல்லாம் கவிதை எழுதிய அக்கால கட்டத்தில் தலித் இலக்கியம் தமிழில் பிற மொழிகள் போல முக்கியமாகும் என நினைத்தோம். 1980 வாக்கில் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒரு கருத்தரங்கு நடத்தியபோது எதிர்காலக் கவிதை எனத் தலைப்புத் தந்தார்கள். நான், தமிழில் எதிர்காலத்தில் தலித் கவிதை வரப்போகிறது என கட்டுரை வாசித்தேன். தமிழில் முற்போக்கு இயக்கம் சார்ந்து இலக்கியம் உள்ளது. பெண்ணிய இயக்கம் சார்ந்து கவிதை உள்ளது.   இன்னும் சிலகாலம் போனபிறகு தான் தலித் இயக்கம் ஒரு இயக்கமாக வரையறுக்கப்படுமா தமிழில் எனக்கூறமுடியும் என்று நினைக்கிறேன். ஆனால் வரையறை பெறவேண்டும். பரியேறும் பெருமாள் போன்ற திரைப்படம் இப்போது எல்லோர் கவனத்தையும் கவர்கிறது. தலித் பிரச்சனையை வேறு கோணத்தில் அது அணுகுகிறது.

 

இந்திய கம்யூனிச வரலாற்றை எவ்வாறு பார்க்கிறீர்கள்? அதன் இயல்பூக்கங்கள் உயிரோட்டத்துடன் இன்னும் இருப்பதாகக் கருதுகிறீர்களா? கம்யூனிசச் சித்தாந்தம் சார்ந்த புனைவுகள் தமிழில் போதுமான அளவில் வெளிவந்துள்ளனவா?

உலக கம்யூனிசம் இன்று மாறிவிட்டது. புதுக்கம்யூனிசம்  என்று பெயருடன் ஒரு போக்கைச் சிலர் உருவாக்க முன்று வருகின்றனர்.அலென் பதயூ ( Alain Badiou.), ஸ்லவாய் ஷிஷெக்(Slavoj Zizek)  போன்றோர். முதலாமவர் பிரான்ஸ்நாட்டுத் தத்துவப்பேராசிரியர். அல்தூசரின் மாணவர். இரண்டாமவர் ஸ்லோவொக்கியா என்று இன்றைக்கு அழைக்கப்படும் சிறிய ஐரோப்பிய நாட்டவர். பழைய   யுகோஸ்லாவாகிய பல துண்டுகளாக உடைந்த போது உருவான நாடு. இரண்டாமவர், லக்கான் என்ற தத்துவ வாதியைப்பயன்படுத்துகிறார். தத்துவவாதி    ஹெஹலையும். இவர்கள் எல்லோரும் ஸ்டாலினை ஏற்பதில்லை. நான் புதுக்கம்யூனிசம் என்ற தலைப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஓர் கட்டுரையைச் சிற்றேடு இதழில் வெளியிட்டேன். பழைய தவறுகளை, அடையாளம் கண்டு ஒதுக்கிப் புதுக்கம்யூனிசம் இன்று மனித குலத்தைக் காப்பாற்றும் போக்கில் சிந்தனைத் துறையில் ஒரு போக்காய் வருகிறது. சமீபத்தில் அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சார்ந்த ஜார்ஜ் ப்ளாய்ட் கொல்லப்பட்டபோது எதிர்ப்புத்தெரிவிக்க உருவான எதிர் பாசிச (ஆன்டிஃபா) அமைப்புக்கள் இத்தகைய சிந்தனைகளால் ஊக்கம் பெற்றவை. இப்படி மார்க்சியச் சிந்தனைகளின் மாற்றுவழி பற்றி  சோவியத் யூனியன் உடையாமல் இருந்தபோதே பலர் சித்தித்தனர். அவர்கள் ஆரம்பத்தில் பிராங்பர்ட் மார்க்சியர் எனப்பெயரிட்டுக்கொண்டு உருவானார்கள். அவர்களில் ஒருவர் மாக்ஸ் ஹொர்ஹேமர், இன்னொருவர் ஊடகங்கள் பற்றி ஆய்ந்த தியோடர் அடார்னோ, வேறொருவர் ஹெர்பர்ட் மார்க்யூஸ். மார்க்சியத்தில் உளவியலாளரான இவர் பிராய்ட் சிந்தனைகளை இணைத்தவர். இன்னும் பலர். இவர்கள் எல்லோரும் மார்க்சியத்தில் வந்து சேர்ந்த அதிகமான பகுத்தறிவுப் போக்குத்தான், ஸ்டாலினிசமும் இறுக்கமான எதேச்சாதிகாரப்போக்கும் கம்யூனிச இயக்கத்தில் உருவாகக் காரணங்கள் என்றனர். அப்போக்கை எந்திர மயவாத பகுத்தறிவு என்று பெயரிட்டு அழைத்தனர்.  அது மிகையான விஞ்ஞானத்தை வலியுறுத்திப் பேசியதால் வந்த ஆபத்து என்றனர். அதற்கு எதிராக இவர்கள் சிந்தித்தனர். பகுத்தறிவுத் தத்துவத்துக்குக்கு எதிரான தத்துவங்களையும் சமூகச்சிந்தனைகளையும் மார்க்சியத்தில் கொண்டுவந்து அந்தந்த நாடுகளுக்கும் சூழலுக்கும் தக இணைத்தனர். ஆனால் இரண்டாம் அலை பிரங்ஃபர்ட் சிந்தனையாளரான, யுர்கன் ஹேபெர்மாஸ் என்பவர், இவர்கள் பலருக்கு இளையவர். அவர் பகுத்தறிவும் அதனால் சமூகத்தில் உருவான வளர்ச்சியும்  தன் பயன்பாட்டை முடித்துக்கொள்ளவில்லை என ஒரு கருத்தை முன்வைத்தார். இவர்களுக்கு மாற்று. ஒருவகையில் பெரியார் கருத்துக்கள் இன்னும்வேண்டும் என்று கூறுவதுபோன்ற விவாதம் இது. பெரியாரில் மேற்கத்திய அறிவுவாதம் அதிகம் உண்டு. இவர்கள் எல்லோரும் தங்களை ‘விமர்சனச் சிந்தனையாளர்கள்’ என்று அழைத்துக்கொண்டனர். எதிர்த்து, கேள்விகேட்டு, விவாதித்துச் சிந்தனையை உருவாக்கவேண்டும் என்பது இவர்களது கருத்து. இவர்களிடமிருந்து நாம் பெறவேண்டிய பாடம், எது என்றால் இவர்கள் பலரும் இலக்கியத்தை மிகமுக்கியமான சிந்தனை என எடுத்துக்கொண்டனர் என்பதுதான்.  இவர்களில் ஹேபர்மாஸை அதிகம் நாம் கற்க வேண்டும் என்பேன். அவர் நவீன பெருமுதலாளியம் இன்றைய அரசுகளிடம் ஏற்படுத்தும் , பண்பு மாற்றம் பற்றி ஆய்கிறார். ஊடகங்கள் பற்றி ஆய்கிறார்.   நவீன முதலாளியம் உருவாக்கும் புதுத் தன்மைகள் பற்றிச்சிந்திப்பவர். சமயம், சட்டத்துறைச் சிந்தனைகள், மொழியியலின் பொருண்மையியல் (Semantics) போன்ற மிக நவீனமானவற்றைச் சிந்திக்கிறார். இந்தியாவில் வலதுசாரி மௌடீக வாதம் வளரும்போது பெரியார் வேண்டும் என்று எல்லா இடங்களிலும் பேசுகிறார்கள். பகுத்தறிவை அடிப்படையாக்கியுள்ள ஹேபர்மாஸையும் நாம் இங்குக் கொண்டு வரவேண்டும். அதேநேரத்தில் நம்முடையது மரபுரீதியான சமூகம்.  எனவே நமக்கு வேண்டியது, முழு அறிவு வாதமா, அதற்கு எதிர்ப்பான எதிர்-அறிவுவாதமா, என்றால் நம் சூழலுக்குப் பொருத்த மானதைக் கொண்டுவந்து வடிவமைக்கவேண்டும் என்பதே என் பதிலாகும். அது போல இன்று நம் முன்புள்ள ஆபத்து வலதுசாரிகள், அடையாளத்தோடும் அடையாளமில்லாமலும் தமிழுக்குள் ஊடுருவுவதைத்  தடுப்பது. அவர்கள் அறிவைப் பயன்படுத்தாமல் கூட்டத்தையும் தேசப்பற்றையும் உபயோகப் படுத்தும் அரசியலைச் செய்கிறார்கள்.  ‘நாமா, அந்நியரா’ என்ற இருமையில் ஒன்றைத்தேர்ந்தெடு எனக்கேட்கும் சிந்தனையைப் பயன்படுத்துகின்றனர். பெரியாரை மட்டும் அவர்களால் சாயம் மாற்றிப் பயன்படுத்த முடியவில்லை.  அம்பேத்கரை கூட உள்ளே இழுத்துக் கொண்டனர். ஏன் பெரியாரை மறுக்கின்றனர்? சிலை மீது காவிச்சாயம் பூசுகின்றனர்? கோயில் கட்டினால் எல்லாம் சரியாகிவிடும் என்ற மாயையும் உருவாக்குகின்றனர்.  பெரிய ஆபத்துக்கள் காத்திருக்கின்றன. இதற்கு மார்க்சிய மரபின் குறிப்பிட்ட விளக்கங்களை மட்டும் ஏற்பது என்ற எண்ணத்தை விட்டு நம் பார்வையை அகன்றதாக்கவேண்டும்.  அமெரிக்காவில் உள்ள   ஃப்ரடரிக் ஜேம்சன், இங்கிலாந்தின் டெரிஈகிள்டன், போன்றோர் விரிவாக்கப்பட்ட மார்க்சிய மரபில் வருவர். இடதுசாரி அறிவை விசாலமாக்குகின்றனர். பாரதி புத்தகாலயம், டெரிஈகிள்டனின் நூலையும், ஜார்ஜ் லூக்காக்சின் ‘வரலாறும் வர்க்க பிரக்ஞையும்’ என்ற நூலையும் எர்னஸ்ட் பிஷரின், ‘கலையின் அவசியம்’ என்ற நூலையும் வெளியிட்டுள்ளது. இந்நூல்கள்  பாராட்டுக்குரியன.

தற்போது சாகித்ய அகாதெமியில் என்ன பொறுப்பு வகிக்கிறீர்கள்? இப்பொறுப்பின் மூலம் தமிழ்   இலக்கிய உலகில் நீங்கள் செய்ய நினைத்திருக்கும் செயற்பாடுகள் என்னென்ன?

சாகித்திய அகாடமியின் இப்போதுள்ள ஐந்து பொதுக்குழு உறுப்பினரில் நானொருவன். ஒருங்கிணைப்பாளர் கவிஞர் சிற்பி. ஆரம்பத்தில் இந்தியாவின் இருபத்திரண்டு மொழிகளிலிருந்து வருபவர்களைப் பார்த்து மகிழ்ச்சி ஏற்பட்டது. இந்தியாவின் பல மொழிகளின் பிரதிநிதிகள் ஒரே இடத்தில் கூடுவது எவ்வளவு முக்கியம். அப்படிப்பட்ட  அமைப்பு  இது ஒன்றே. ஆனால் ஒரு விஷயம் தெளிவானது ஒவ்வொரு மொழியும் வேறு வேறானது என்பது. இந்திய மொழி என்று ஒன்றும் இல்லை. இலக்கியத்தைப்பொறுத்த அளவில் இந்தி கூட பிராந்திய மொழியே. இந்திய இலக்கியம் என்று ஒன்று இல்லை.  ஒவ்வொரு மொழியிலும் வேறு வேறு இலக்கியங்கள் அந்தந்த பிராந்தியத்துக்கு ஏற்றவிதமாய் இருக்கின்றன. இரண்டு விசயங்களில் அம்மொழிகளுக்குள் ஒற்றுமை உள்ளன. ஒன்று, அவை பெரும்பாலும் ஒன்றுபோல, தற்கால இலக்கியத்தைப் பொறுத்தமட்டில், ஆங்கில இலக்கியத்தின் நிழல்கள். நாவலும் சிறுகதையும் கவிதையும் கூட அப்படித்தான். இரண்டு, அவை பெரும்பா லும் இராமாயண, மகாபாரதத்தின்  நிழல்கள். சங்க மரபும், சிலப்பதிகார, மணிமேகலை கதை மரபும் அவர்கள் அறியாதவை. நம் தூய தமிழ் மரபை நம் தொடக்க கால நாவலாசிரியர்களும் படைப்பாளிகளும் உதாசீனப்படுத்தி ஆங்கிலம் வழி வரும் நாவல், படைப்பு, மரபுக்குப் போயினர். நாம், மணிமேகலை மரபில் கதை எழுதினால் நம் படைப்புப் புதிய இந்திய மரபை, படைப்பு இலக்கியத்தில் கொண்டுவரும். அசோகமித்திரனின் ஆகாசத்தாமரை  என்ற நாவல் மற்றும் கதைகள், காஃப்கா போல இருக்கும். நகுலனின் நாவல் வர்ஜினியா வுல்ஃப், போல இருக்கும். இது போல அனைத்திந்தியாவிலும் பார்க்கலாம். இது மாறி நம் தமிழ் மரபின்வழி  நவீன இலக்கியம் வர வேண்டும்.  அப்போது இந்திய மரபாய்த் தமிழ் மரபு எல்லா இடத்திலும் பரவும். இரண்டாயிரம் ஆண்டுகளாய் வற்றாத ஆறுபோல பாயும் இலக்கிய மரபு சமஸ்கிருதம் தவிர எந்த இந்திய மொழிக்கும் கிடையாது. சமஸ்கிருதத்தில் தற்கால இலக்கியம் தமிழ் போல இல்லை. செயற்கையாக எழுதுகின்றனர். தமிழ் பழமையும் தற்கால இயல்புத்தன்மையும் கொண்ட மொழி.  பிற மொழியினர், அவர்கள் பின்பற்றும் போலி ஆங்கில மாதிரியும் மீண்டும் மீண்டும் பின்பற்றப்படும் போலி இராமாயண, மகாபாரத மாதிரியும் இனி மேல் ஒதுங்கும். இதற்கு மிகப் பல காலம் எடுக்கும்.  நம் மாநில அரசுகளும் பிற மொழிகளில் இருந்து பிரதிநிதிகளை அழைத்துத் தமிழின் பல்வேறு போக்குக்களை அவர்களின் மொழிகளுடன் ஒப்பிட வேண்டும். அப்போது தமிழின் தனித்தன்மை விளங்கும்.  சமீபத்தில் கன்னடத்தில் தொல்காப்பியம் மொழிபெயர்ப்பு வந்துள்ளது. அவர்கள் அதற்கு ஏங்கிக்கொண்டிருந்தனர். அவர்கள் சமஸ்கிருதம் அல்லாத கூறுகளைத் தேட ஆரம்பித்துள்ளார்கள்.  தமிழுக்கும் கன்னடத்துக்கும் ஒரு ஆழமான தொடர்பு உண்டு. வலதுசாரிகளால் கொல்லப்பட்ட முன்னாள் துணை வேந்தரான கல்புர்ஹி, சங்க இலக்கியம் மீதும் தமிழ் மீதும் மிகவும் அன்பு கொண்டவர் என்பதை நாம் அறியவேண்டும். பெரியார் சிந்தனைகளின் தேர்ந்தெடுத்த தொகுப்பையும் கன்னடத்தில் கொண்டுவந்துள்ளனர். இதுபோல பிற மொழிகளோடு நம் மொழியை ஒப்பிட சாகித்திய அக்காடமியைப் பயன் படுத்திக்கொள்ளலாம்.

அண்ணா உருவாக்கிய அறிவுக்கொள்கை

அண்ணா உருவாக்கிய அறிவுக்கொள்கை

தமிழவன்

 

அண்ணா, இந்தியா என்ற கருத்துக்கு, பிராந்தியங்களின் சிந்தனை மூலம் வந்தவர். இந்தியா  என்ற 20 ஆம் நூற்றாண்டின் உருவாக்கம், தமிழ், கன்னடம், அஸ்ஸாமி, வங்காளி, மராட்டி போன்ற பரஸ்பரம் மாறுபட்ட மொழிகளின் பண்பாக்கங்களால் அமைவு பெற்றது. அதுவரை இல்லாத புதிய முறைச்சிந்தனையாகும் இது. அதாவது இந்தியா ஒரு சிந்தனையுமாகும். இது ஜவகர் லால் நேருவின் இந்தியாவைக் கண்டுபிடித்தல் (Discovery of India) என்ற நூலின் சிந்தனை யில் உள்ள ஒரு விஷயம் தான்.

 

அண்ணா, தமிழ்மொழி 2000 ஆண்டுகளாய் சேமித்து உருவாக்கிய அறிவைப்பயன்படுத்திய புத்திஜீவி, செயல்பாட்டாளர். இவரது அறிவமைப்பு, இரு கூறுகள் கொண்டது. ஒன்று, ஓரளவு, பெரியார் மூலம் வந்த மேற்கத்திய புத்தொளிக் காலத்தது. இரண்டு, தமிழ் பாரம்பரியம் தன் நீண்ட வரலாற்றிலிருந்து சேமித்தது. மேற்கும் கிழக்கும் இப்படி பரஸ்பரம் படைப்பு ரீதியாய் (Creatively) வினைபுரிந்து, நவீன காலத்துக்கும் அரசி யலுக்கும், தக்க விதமாய் ஏற்பன ஏற்றும், இழப்பன இழந்தும் உருவான ஒரு சிந்தனையாளன், செயல்பாட்டாளர் அண்ணா.

 

மில்டன்சிங்கர் என்று ஓர் அமெரிக்க மானுடவியல்வாதி இருந்தார். சென்னைக்கு வந்து அந்நகர சமூகச் செயல்முறை பற்றி ஆய்ந்து சில கருத்தாக்கங் களை அவர் கூறினார்.அவர் சிந்தைகள்,அனைத்துலக அளவு பிரபலமானதாகும். அவர், மாற்றத்தைத் தரும் நவீனம், மூன்றாமுலக நாடுகளில் “மரபை மரபானதாக்குகிறது” என விசித்திரமான ஒரு கருத்தாக்கத்தை முன்வைத்தார். மரபு, நவீன மாற்றத்தை மேற்கொள்கையில் அது அதே மரபுக்குள் புகுந்து மரபை மாற்றுகிறது. இந்தவிமான மாற்றத்தை அண்ணா அறிந்ததால் இந்திய சுதந்திரம் பற்றி பெரியாரோடு முரண்பட்டார். திராவிட நாடு கோரிக்கையை, 1962-இல் அதற்காக பராளுமன்றம் போய் வாதிட்ட பின்பும் கைவிட்டார். 1967 தேர்தல் அரசியல் நேரத்தில் ஒருவனே தேவன் என்று திராவிட இயக்கத்தின் கடவுள் கொள்கையில் மாற்றத்தைக் கொண்டு வந்ததையும், பார்ப்பனீயம் எல்லா சாதியிலும் உண்டு என்று கூறியதிலும் அண்ணாவின் இயங்கியல் தன்மைசார் சிந்தனை செயல்படுகிறது. இயங்கியல் என்பது ஹெஹலின் சிந்தனை மட்டுமல்ல என சுயமரபோடு இணைந்ததாக்குகிகிறார்.

 

ஆஷிஷ் நந்தி, காந்தி புதுவித சிந்தனையாளர் என்பார்; இலியோனார் சிலாட் என்பவர், அம்பேத்கர் புதுவித சிந்தனையாளர் என்பார். தென்பகுதியைச் சேர்ந்த அண்ணா, மூன்றாவது சிந்தனை மாதிரி ஒன்றை இன்றைய இந்தியாவின் உருவாக்கத்துக்கு அளிப்பார். இப்படி அண்ணாவைப் புதுமுறையில் குணவிளக்கம் செய்ய, போதிய, விரிவான,  சிந்தனைப் பக்குவம் உள்ள தத்துவத் துறையோ, வரலாற்று, அரசியல் துறையோ தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் இல்லாதது துரதிருஷ்டம்.

 

நாம் அண்ணாவை விளக்க, அணுக, ஒருவகைச் சிந்தனைக் கட்டுமானத்தை உருவாக்க வேண்டும். அது வெறும் மேற்கின், காப்பியாகவோ, அரசியல் கட்சிக்கூட்டம் தரும் கோஷம் போன்றதாகவோ இருக்கக்கூடாது.

 

உலகம் முழுசும் வாழும் 10 கோடி தமிழர்கள் தமிழகத்தின் நவீன தமிழ் அரசியலால் ஈழம், மலேசியா, சிங்கப்பூரிலும் தாக்கம் பெற்றனர். அதனால் ஸ்ரீலங்கா அரசியலும், மலேசியா, சிங்கப்பூர் அரசியலும்  சில பொதுமைப் பண்புகளை 20, 21-ஆம் நூற்றாண்டுகளில் மேற்கொண்டன. எனவே, அண்ணா கண்டுபிடித்த தமிழரசியல் (இதனை விரிவாய் அறிய, பார்க்க: தமிழவன் நூலான திராவிடம், தமிழ்த்தேசம், கதையாடல் நூல்) ஓர் அகில உலகத் தொடர்புள்ள தென்கிழக்காசிய நிகழ்வு. அண்ணாவை ஒரு தென்கிழக்காசிய நிகழ்வு (Phenomenon) என வடிவமைப்பதே சரியான பார்வை என்பது என் நிலைபாடு. இதன்மூலம் இந்தியாவை, இல்லாத ஒரு பண்பான சமஸ்கிருத ஏகத்துவத்துக்கு மாறாக, இருக்கிற தமிழ், கன்னடம், மராட்டி, பஞ்சாபி, காஷ்மீரி, அஸ்ஸாமி பண்பாடு களின் தொகுப்பாய் (கூட்டாக) பார்க்க அண்ணாவின் எழுத்துக்களை இப்பிராந்தியங்கள் கற்கவேண்டும். இந்திய அரசியல் என்பது அதன் பிராந்தியங்களின் பண்பாட்டு அரசியலே என்ற புதுப்பார்வையை உலகச் சிந்தனையில் முதன்முதலில் அறிமுகப் படுத்தியவர் அண்ணா.அரசியலில் பாரம்பரியப்பண்பாடு, சமயவழியன்றி பிராந்திய  பகுத்தறிவு வழிச் செயல்படுவதைக்காட்டியவர்.

 

அண்ணா உண்மையில் யார்?

 

காஞ்சிபுரத்தில் பலநூற்றாண்டு காலமாக தமிழ்ப்பண்பாட்டினுள் வாழ்வின் மதிப்பீடு களைக் கண்ட ஒரு குடும்பத்தில் பிறந்தார். அதற்கு முன்பு இருந்த தமிழகத்தில், எட்டுத்தொகை பத்துப்பாட்டில் வெளிப்பட்ட தமிழ்ப்பண்பாடு, அகம் (காதல்) புறம் என்று இரண்டாய் உலகைப் பிரித்து அறியும் சிந்தனை இருந்தது. அந்த அறிவைத் தமிழ் ஆதிப்பழங்குடி சமுதாயம் அளித்தது. பின்னர் சமஸ்கிருதம் புகுந்த பின்பு இந்த அகம்/புறம் பார்வை மாறு கிறது. அகத்தில் புறமும் புறத்தில் அகமும் இணைகிறது. (சங்க இலக்கியம் இதைக் காட்டினாலும் வீரசோழியம் என்ற நூலும் இதனைக் கூறுகிறது) மாற்றத்துக்குச் சதா உட்பட்ட தமிழ்மரபு, சங்க இலக் கியத்தை அடித்து வீழ்த்தி, கோயில் கலாச்சாரத்தை மையமாக்கிய பக்தி இலக் கியத்தைக் கொண்டு வருகிறது. பின்பு இன்னும் பல மாற்றங்கள் வந்தன. கடைசியாய் இராமலிங்க சுவாமிகள் என்ற வள்ளலார், மிஸ்டிசிசம், பக்தி, அரசியல், சீர்திருத்தம், வறுமை ஒழிப்பு, என கிழக்கு மேற்கின் ஒருங்கிணைந்த சுயசிந்தனையாளராய் தோன்றுகிறார். 20ஆம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் பிறந்த அண்ணா, இந்தத் தமிழ்ப் பண்பாட்டு நிலத்தில் வேர்விட்டு வளர்ந்த மரம். 20 நூற்றாண்டுகளாய் தமிழ் நாகரிகத்திற்கு ஏதேனும் உயிர்த்துவமும் உள்வளர்ச்சியும் இருந்ததென்றால் தான், அதில் பிறந்த ஒரு மனிதரான, அண்ணா இப்படி சுயமண்ணின் வளத்தைச் செரித்த விதமாய் வரமுடியும்.

 

ஒருவித விருப்புவெறுப்புக்கு உட்பட்ட வரைபடத்தை உருவாக்கி அண்ணாவை இழுத்துவந்து அப்படத்துக்குத் தக்கவிதமாய் வெட்டிக் குறுக்கி பொருத்தி விளக்கும் தவறை நாம் செய்யக்கூடாது – பெரியார், அண்ணாவுக்கு மாறான பக்தி மரபின் தொடர்ச்சியாய் சைவமும் வைஷ்ணவமும் மத்திய காலத் தமிழகத்தில் ஒருவித வித்தியாசமான உலகப் பார்வையைக் கொண்டு வந்தன. சங்க கால வாழ்க்கை மதிப்பீடுகளின் வேர்முற்றாய் அறுபடாமல் சைவ, வைணவம், வந்த அதேநேரத்தில் புது மனவடிவமைப்புகளைத் தமிழ் பெறுகிறது. இதன் தொடர்ச்சி யாய் 16, 17 நூற்றாண்டுகளில் சைவசித்தாந்தம் என்று மெய்கண்டார் போன்றோர் புதுவிஷயங்களைச் சிந்திக்கிறார்கள்.

 

இது இஸ்லாம், கிறிஸ்தவச் சொல்லாடல்களைத் தமிழில் மீண்டும் இலக்கியத்தை அடிப்படையாய் வைத்து 16, 17 நூற்றாண்டுகளால் கொண்டு வருகிறது. இந்தத் தொடர்ச்சிந்தனை என்ற நதியின் பாய்ச்சலில் 19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியில் சென்னையில் நாத்திகம் பரவுகிறது. லண்டனில் இருந்த பாராளுமன்ற உறுப்பினரும் நாத்திகவாதியுமான சார்லஸ் பிராட்லேக்காக சென்னையில் ஊர் வலம் போகிறது. இது நடந்தது 1870களில். ஆக மொத்தமாய் இடையில் வெட்டப்படாத ஒரு தொடர்பாய்ச்சலில் பழங்குடிச் சிந்தனை, பக்தி, முஸ்லிம், கிறிஸ்தவச் சிந்தனை; அதன்  பின்பு, நாத்திகம். 1856-இல் கால்ட்வெல் என்ற இடையன்குடியில் இருந்த புராஸ்டான்ட் பாதிரி, முதன்முதலாய் தென்னிந்தியாவின் பல மொழிகள் ஒரு இனமூலத்திலிருந்து (Race) பிறந்தன என தனக்கு மேற்கில் கிடைத்த அறிவுப்பயிற்சியின் மூலம் ஒரு பிரம்மாண்டமான மொழி, இனக்கோட்பாட்டை முன்வைக்கிறார். எல்லிஸ்  தொடங்குகிறார். அறிவுக்கு ஏங்கி, பழமையையும் புதுமை யையும், அவற்றின் பல்வேறு கூறுகளைப் பிரித்தும் இணைத்தும், தள்ளி யும் கொண்டும், வாழ்வு என்னும் சம்மட்டியால் அடித்துப் பரிசோதித்து 2000 ஆண்டுகளாய் வாழ்ந்த ஒரு பழங்குடி மீண்டும் ஓர் அசுர பிரயத்தனத்தின்  மூலம் வானம் அளவு உயர்ந்து பூதாகரமாய் எழுந்தபோது, அதற்கு ஒரு தலைமகன் கிடைத்தான். அந்தத் தலைமகனின் பெயர் சி.என்.அண்ணாதுரை என்ற அண்ணா. அவருக் குள் இருந்த தமிழ்மொழி என்ற ஒரு பழங்குடி இனத்தின் உயிர்சேர்ந்த இதயத்துடிப்பு இலட்சக்கணக்கான மக்களோடு முன் இரவுகளில் மைக் மூலம் உரையாடியது. அண்ணா அந்த உரையாடலுக்கு நவீன தொழில்நுட்பங்களான திரைப்படத்தையும் ஒலிபெருக்கி மூலம் நிகழ்த்தப்படும் சொற்பொழிவையும் அதுவரை தமிழில் யாரும் பயன்படுத்தாத வகையில் உருச்சமைத்தார்.

பார்னிபேட் என்ற அமெரிக்கரான மானுடவியல் அறிஞர், அண்ணாவின் சொற்பொழிவை ஆய்ந்தபோது அது, ஒலிபெருக்கியின் மூலம் பிற்காலத்தில் நூற்றுக் கணக்கானவர்கள் கத்திக்கூச்சலிட்ட தவளையின் கூச்சல் அல்ல எனக்கண்டார்; அது ஒரு ஆதிக் குடியின் மந்திரச்சொல் என்பதை மானுடவியல் சொல்லாட்சியில் பொதிந்து விளக்கினார். தமிழில் மிக அதிகமான இலக்கண நூல்கள் காணக்கிடக்கின்றன. தொல்காப்பியம் தொடங்கி வெள்ளைக்காரரான பெஸ்கி என்ற வீரமாமுனிவர் வரை, தமிழ்மொழியின் சப்தத்துக்கும், சப்தத்தால் உருவான சொல்லுக்கும் வாக்கியத்துக்கும் வாக்கிய அமைப்பை உடைத்தும் உடைக்காமலும் செய்யும் செய்யுளுக்கும் இலக்கணம் எழுதிக்கொண்டே வாழ்ந்திருக்கிறார்கள். சோறு, துணி, வீடு, வேலை என்று மட்டும் யோசிக்காமல் தங்கள் மொழியையும் பற்றி யோசித்து வாழ்ந்த காலத்தில் முழுசும் இலக்கணம் எழுதிக்கொண்டேயிருந்திருக்கிறது இந்த இனம். இலக்கணம் என்பது விதிமுறைகளை கணிதம்போல யோசிக்கும் இன்றைய கணினியின் Software எழுதுதல் போன்ற ஒரு காரியம். அண்ணாவின் அடுக்குமொழி தமிழர்களுக்குத் தனிநாடு கேட்ட அடுக்குமொழி. தனி அடையாளத்தை எழுதிய ஒரு வகை இலக்கணத்தைத் தொல்காப்பியம் எழுதி யது. இன்னொரு வகை மொழிஇலக்கணத்தை அண்ணாவின், கதைகள், பழமொழிகள், உதாரணங்கள், எதுகை, மோனை கட்டமைப்பு கொண்ட சொற்பொழிவு,  பட்டித்தொட்டி எங்கும் அவர் வாழ்நாள் முழுவதும் பரப்பிக்கொண்டே இருந்தது. அண்ணாவின் சொற்பொழிவு முதன்முதலாக தமிழ்மொழியின் மாத்திரை என்ற ஒலியமைப்பால் ‘கட்டப்பட்ட ஒரு மந்திரம்’. (க் – அரை மாத்திரை; க – ஒரு மாத்திரை; கா – இரண்டு மாத்திரை; ஃ – அரைமாத்திரை). இப்போது புரியும் ஒலியின் பல்வேறு அழுத்தம், குறுக்கல், நீட்டல் போன்றன மூலம் அண்ணா, ஒரு தமிழ் மந்திரத்தைச் செய்துகொண்டு அலைந்ததால் தான் மகுடிநாதத்தைக் கேட்ட பாம்புபோல் தமிழர்கள் அடங்கிஒடுங்கி இலட்சக்கணக்கானவர்கள் அவர் பின்னால் சென்றார்கள்.

 

அண்ணாவின் அறிதல்கொள்கை எது என்ற கேள்வி அடுத்து வருகிறது. தமிழ்மொழிக்குள் ஒருவிதமான இலக்கணத்தாக்கம் இருக்கிறது. அதுபோல 18, 19 நூற்றாண்டுகளில்  ஆங்கிலேயர் இந்தியாவின் மீது ஆதிக்கம் செலுத்தியபோது இந்தியாவில் ஆங்கிலப் பண்பாட்டுக்கு எதிரான பண்பாட்டுப் பதில்வினை ஏற்பட்டது. வேதமும் சமஸ்கிருதமும் அந்த எதிர்வினையில் முன்நின்றன. வங்காளத்திலிருந்து ஆரிய சமாஜம் போன்ற இயக்கங்கள் பரவின. திரு.வி.க. போன்றவர்கள் தமிழிலக்கியம் வழியாக அத்தகைய பார்வையைத் தமிழில் பரப்ப, அண்ணா, மாறான திராவிட அறிதல் கொள்கையை ஏற்றதாகத் தெரிகிறது. அது என்ன திராவிட அறிதல் கொள்கை? இது மேற்கத்திய விஞ்ஞானத்தையும் அதன் தத்துவத் தையும் அப்படியே ஏற்றதுபோல் தெரிந்தாலும் ஆழமாகப் பார்த்தால் மேற்கத்திய விஞ்ஞானத்தின் அழிவுகளுக்குக் காரணமான அதன் கருவிமயப் பார்வையை (Instrumental) அண்ணா ஏற்றதாகக் கூறமுடியாதென்பதே என் வியாக்கியானம். மேற்கில் பிரங்பர்ட் மார்க்சியர்கள், இதனை வேறு வகையில் செய்தனர்.விஞ்ஞானிகள் கடவுள் பூசனை செய்வதை, அவர் பல இடங்களில் கேலி செய்தா லும், இயற்கையோடு சார்ந்த தமிழ்ப்பார்வை அவருடைய சிறையில் இருந்தபோது எழுதிய டைரிக்குறிப்புகளாலும், அதிமுக்கியமாய் பாரதிதாசனுக்கு 1945-லேயே (பெரியார் விரும்பாவிட்டாலும்) பணமுடிப்பு கொடுத்த செயலாலும் தெரிகிறது. அண்ணா தமிழ்ச் சார்ந்த இயற்கை கவித்துவத்தை நவீன தமிழ் வரலாற்றுக்குக் கொண்டு வந்த பாரதிதாசனின் அறிதல் கொள்கையையே ஏற்றார் என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன என்பேன். மேற்கத்தியப் பார்வைக்குள் அப்படியே அண்ணாவைத் திணித்தால் அவரைத் தமிழ் வேரிலிருந்து முளைத்த ஒரு தலைவர் என்று வாதிட வழியில்லாமல் போகும். ஆனால், காந்தி போலவே இயற்கை சார்ந்த கோட்பாடு கொண்டாலும் அவர் போல, இராம வழிபாடும், வர்ணாசிரம மும், எதிர் விஞ்ஞானப் பார்வையும் கொண்டவர் அல்ல அண்ணா.அண்ணா காந்திக்கும் புத்த மதத் தத்துவத்தையும் நவீன அரசியல் சட்டச் சிந்தனையையும் (Constitution) தந்த அம்பேத்கருக்கும் நடுவில் இயற்கைவழிச் சிந்தனை சார்ந்த நவீன மக்கள் அரசியலை ஏற்றவர் அண்ணா. இது ஒரு புது முறை.அவரது, இயற்கை இலக்கியமான சங்க  இலக்கிய ஈடுபாடும் பாரதிதாசன் அறிமுகப்படுத்திய அழகின் சிரிப்புக்கவிதைத் தத்துவமும் அண்ணாவின் இதுவரை ஆராயப்படாத ஒரு பெரிய மனப்பரிமாணத்தைக் கொண்டிருக்கிறது. (இதன் விரிவு வேறு இடத்தில். நிற்க.) நம்செவ்வியல் மரபுக்குள் சனாதனத்தை எதிர்க்கும் பௌத்த காப்பியமான மணிமேகலை காப்பியம் சூளாமணி போன்ற இலக்கியப் பிரதிகள் உள்ளன. தமிழ் மொழிக்குள் மணிமேகலையின் “உண்டிக் கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்ற சனாதன, கடவுள் / ஆன்மீகம் என்ற அப்பாலைத் தத்துவத்துக்கு எதிரான ஓர் போக்கு வரலாறுகள் தாண்டி, தமிழ்ப்பார்வையாய் பாய்ந்து கொண்டிருப்பது தெரியும். அண்ணா அந்த புறவயமான, பௌத்த பார்வையையும் உள் ளேற்றவர்; இப்படி அம்பேத்கரின் சிந்தனை உள்ளமைவையும் பெரியாரின் பௌத்தசமயக் கருத்துக்களையும் அண்ணாவையும் பாரதிதாசனின் கடவுள் சாய லற்ற அழகின் சிரிப்பு பாடல் தொகுப்பின் தத்துவ உள்தளத்தையும் நாம் பேசவைக்க வேண்டும். வெறும் மேற்கத்திய புத்தொளி மரபோ, நாத்திகவாதமோ என்று போகும் பார்வை வளமான பார்வை அல்ல. ஐந்திணைக் கோட்பாடு, நாட்டுப்புற வியல் தமிழ் வெளிப்பாடுகள் என்றெல்லாம் பெரிய அறிவு சுரங்கம் வழி அண்ணா வின் அறிதல்கொள்கையை கட்டமைக்க வேண்டும். நவீன தமிழ்ச் சிந்தனையாளர் களின் தத்துவமாய் பல்கலைக்கழகங்களில் அண்ணாவின் நவ தத்துவவியல் புதிய ஆய்வுக்கு உட்படுத்தப்படவும் கட்டமைப்புச் செய்யப்படவும் வேண்டும். அதாவது காந்தி, அம்பேத்கர் போல அண்ணாவின் சொற்பொழிவுகள், சட்டமன்ற உரைகள், கடிதங்கள், நாவல், சிறுகதைகள், முக்கிய அவரது சிறைஅனுபவமான டைரி போன்றவை,  சரியான ஆய்வுக்கு இந்தப் புதிய நோக்கான அறிவுக் கொள்கை யின் கோணத்தில் பெரிய படிப்புக்கும் ஆய்வுக்கும், தத்துவம், வரலாறு, கோட்பாடு என்ற சர்வதேச சிந்தனை வகைகளின் கோணத்தில் உட்படுத்தப்பட வேண்டும்.

 

உலகச் சிந்தனையாளரான கார்ல்மார்க்ஸின் இளமைக்காலத்தில் யாருடைய சிந்தனைகள் அவரைப் பாதித்தன என்று கேட்பதுண்டு. கார்ல்மார்க்ஸ் பிற்காலத்தில் ‘மூலதனம்’ என்ற நூலை எழுதி உலகப் பொருளாதாரச் சிந்தனை யின் போக்கை மாற்றியவர். மூலதனம் அறிவு மரபின் ஒரு கொடை. தர்க்கம், கணித முறை, விதிகள் உருவாக்கக் கோட்பாடுகள் கட்டுவது என்ற முறை. ஆனால் மார்க்ஸ் ஆரம்பத்தில் கல்லூரி மாணவராய் கவிதை எழுதி வைத்துக் கொள்பவர். அதுமட்டுமல்ல ஜெர்மன் இலக்கியத்தில் கவிதைகள் எழுதியவர் என அறியப்பட்ட ஹென்ரிச் ஹெய்ன் (Heinrich Heine) என்ற கவிஞரின் சிந்தனைகள் தான் மார்க்ஸை உந்தித்தள்ளி உருவாக்கின. மார்க்ஸ் பிற்காலத்தில் கண்டுபிடித்த சமூகப் புரட்சி, தத்துவத்தில் புரட்சி, பொருளாதாரத்தில் புரட்சி போன்றன ஆரம்ப கால கவிதை ஈடுபாட்டுக்குள் இருந்தன என்று பல அறிஞர்கள் விரிவாய் விளக்கு கிறார்கள். அதுபோல் அண்ணாவுக்குப் பாரதிதாசன் பற்றி ஒரு விசேசமான ஆழ்நிலை அறிவு இருந்திருக்கிறது. பாரதிதாசன் கவிதை திட்டமிட்ட கணிதம் போன்ற செயல்பாடு அல்ல. அது ஆழமான தமிழ்மொழியின் உள்தளத்திலிருந்து மொழிவடிவங்களாய், அதன் துணுக்குகளின் ஒளிப்பிரவாகமாய், வெளிப்பட்ட உணா்வுப்பிழம்பு. தமிழ் உரிமை, மூடநம்பிக்கை எதிர்ப்பு, இயற்கையோடான மந்திரத்தன்மை கொண்ட ஈடுபாடு என அமைந்தது. நான் இன்னொரு சந்தர்ப்பத் தில் பாரதிதாசனை,அமெரிக்க கவிஞர் வால்ட் விட்மனுடன் ஒப்பிட்டுள்ளேன். வால்ட் விட்மன் அமெரிக்கப் பூர்வகுடிகளான செவ்விந்தியரின் உணர்வியக்கத்தைத் தன் கவிதைக் குள் கொண்டு வந்து ஜனநாயக அரசியலுடன் இணைத்தார். அதுபோல் பாரதி தாசன் பழங்குடித் தமிழ்வாழ்வின் உள்வீச்சுகளை மொழித்தன்மையாய் தமிழ் மாத்திரை, அசை, நேர், நிரை, சொல், ஓசை, தாளம், வாக்கியம், என உள்தூண்டு தலாக்கியுள்ளார். அண்ணா 1945-ல் பாரதிதாசனுக்குப் பணமுடிப்பு கொடுத்த போது தன் தமிழரசியலை, மார்க்ஸ் எப்படி தன் பொருளாதாரச் சிந்தனையை ஒரு கவிஞரிடமிருந்து கண்டுகொண்டாரோ, அதுபோல் தானும் ஒரு கவிஞரின் மொழிச் செயல் கவித்துவத்தின் மூலம் உள்ளேற்றுள்ளார்.

 

அண்ணா தமிழ்மக்களின் உள்தன்மைகளைப் புரிந்திருந்தார். இப்படி ஒரு குணரூப விளக்கத்தின் மூலம் எதைச் சொல்ல வருகிறேன் என்பதை பிறகு சொல் கிறேன். மானுடவியல் துறை, சர்வதேச அளவில் மனிதக்குழுக்கள் இயங்குவதற் கான அடிப்படைகளைக் கண்டுபிடிக்கும் ஓர் அறிவுத்துறை. அப்படிப்பட்ட மானுட வியல்வாதிகள் பெருமரபு என்றும் சிறுமரபு என்று  மனிதக் குழுக்களைப் பிரிப் பதன் மூலம் அவற்றின் உள்உந்துதல்களை வரையறை செய்து கண்டுபிடிப்பார்கள். தமிழ்ச்சமூகத்தின் பெருமரபு எது சிறுமரபு எது என்பதை அண்ணா துல்லியமாய் கண்டுபிடித்தார் என்பது என் துணிபு. ஒரு உதாரணத்தை அண்ணா பற்றி ஒரு விரிவான நூலை ஆங்கிலத்தில் எழுதிய கண்ணன் கூறுகிறார். முதல் இந்தி எதிர்ப்பில் அண்ணாவைச் சிறையிலிடுகிறார்கள். சிறை அதிகாரிக்கு அப்போது பிரபலமாகாத அண்ணாவைத் தெரியாது. என்ன தப்பு செய்து சிறைக்கு வந்தாய்  அய்யா எனக் கேட்கிறார் அதிகாரி. அண்ணா இந்தியை எதிர்த்ததால் சிறைக்கு வந்துள்ளேன் என்று சொல்கிறார். அதிகாரிக்குப் புரியவில்லை. பிறகு அண்ணா அரசாங்கத்தை எதிர்த்ததால் சிறைக்குக் கொண்டுவந்துள்ளனர் என்கிறார். அது அதிகாரிக்குப் புரிகிறது. ஓ அப்படியா என்று கேட்டு சிறை விதிகளை விளக்கு கிறார். அண்ணா நினைக்கிறார், இந்தச் சிறையிருக்கும் இடத்துக்கு வெளியே அருகில் உள்ள மைதானத்தில் எத்தனைக் கூட்டங்களில் பேசியிருக்கிறேன். இந்த அதிகாரிக்கு அந்தச் சொற்பொழிவுகளின் கருத்து வந்து சேரவில்லையே என்று யோசிக்கிறார். இந்தச் சிந்தனைதான் பிற்காலத்தில் அண்ணாவின் மனதில் எம்.ஜி.ஆர், திமுகவுக்கு முக்கியமான ஒரு பகுதி தமிழர்களைக் கொண்டு வருவார் என யோசிக்க வைத்திருக்க வேண்டும். அதாவது மானுடவியல் மொழியில் கூறுவதானால் அண்ணா, படித்த ஒரு வகுப்பாரை  அதாவது, பெருமரபுத் தமிழர்களைச் சென்றடைந்தார். எம்.ஜி.ஆர். தன் சினிமா மூலம் எழுத வாசிக்கத் தெரியாத, சிறுமரபு வாழ்க்கையை வாழும் வாக்காளர்களான இன்னொரு,உடனடி அண்ணா யாரென்று புரிந்துகொள்ளும் சக்தியற்ற, தமிழர் பகுதியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அவர்களை தி.மு.க.வுக்கு எம்.ஜி.ஆர் அன்று கொண்டுவந்ததன் மூலம் அண்ணா பெருமரபுத் தமிழர்களையும் சிறுமரபுத் தமிழர்களையும் சென்றடைந்தார்.

 

இன்னொரு கோணம் இவ்விஷயத்துக்கு இருக்கிறது. அதாவது செயல்பாடு. அண்ணா அவர்கள் ஒரு அறையில் அமர்ந்து கட்டுரைகளையும் நூல்களையும் எழுதுபவர் மட்டுமல்ல. மக்களின் பிரச்சனைகளை கூர்த்த மதியால் அறிந்து அவர் களின் மனதைப் புரிந்து அவர்களின் பண்பாட்டுப் பின்னணி, அவர்களின் விருப்பு வெறுப்பு புரிந்து கனவு, ஆசை, எதிர்காலம் இவற்றை எல்லாம் உணர்ந்து அவர்களின் செயல்பாட்டையும் அவர்களின் தீர்மானிக்கும் எடுக்கும் உள்மனதை யும் அறிகிறார். அத்துடன் அவர்களுக்கான தமிழ் அடையாளத்தை மையமாக்கிய அரசியல் பாதையை – அன்றிருந்த, காலனிய  ஏக இந்தியா என்ற கோட்பாட்டை மறுத்து, பல் வித இனங்களின் கூட்டான ஏக இந்தியா என்ற தத்துவத்தை (திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்ட பின்பு) நிலை நிறுத்தும் விதமாக கட்சி திட்டங்களையும் போராட்டங்களையும் வடிவமைப்பதில் நிபுணராக இருந்தார். அதன்மூலம் 1957-இல் 15ஆக இருந்த உறுப்பினர்கள் 1962-இல் 50பேராகி 1967-இல் ஆட்சியைப் பிடிக்க வெறும் 15ஆண்டுகளில் ஒரு புதுவித பிராந்திய அரசியலைக் கட்டியமைக்கிறார். இக்காலகட்டத்தில் சட்டமன்றத்தில் ஒவ்வொரு கோரிக்கையை யும் எப்படிக் கையாளவேண்டும், எதை பெருவாரி மக்கள் (பெருமரபு மக்களும் சிறுமரபு மக்களும்) ஏற்பார்கள் என்று ஓர் அரசியல் நிபுணரின் கூர்த்த மதியுடன் திட்டமிட்டு, தந்திரோபாயங்கள் வகுத்து, வெற்றிமேல் வெற்றியாக ஈட்டி ஒரு புதிய, ஒரு பிராந்திய அரசியல்பாதையை இந்தியாவுக்குக் கொண்டு வந்தார். தேர்தல் அரசியலைப் பெரியார் தன் இயக்கத்திலிருந்து ஒதுக்கியதால் அண்ணா, தனியாய் தலைமைதாங்கி, இந்தத் தேர்தல் சார்ந்த தமிழரசியலை வகுத்து இந்திய அரசியலில் பிராந்தியக் கட்சிகள் பங்கு வகுப்பது, பிற இந்தியக் கட்சிகளுக்குத் தெரியாத, பண்பாட்டு, பழைமைநெறி பிறழாத, இலக்கியத்தைப் புறக்கணிக்காத, பாதையைத் தேர்ந்தெடுத்து எதிர்காலத்தில் இந்த முறைமையை எல்லோரும் அண்ணா மூலம் கற்குமாறு செய்தார்.

 

அண்ணா, உலகில் வெகுசில மக்கள் தலைவர்கள் செய்ததுபோல, நாவல் எழுதினார். சிறுகதை, நாடகம், திரைக்கதை, கட்டுரைகள் எழுதினார். இந்த இலக்கியத்தை அவருடைய ஆளுமை வெளிப்பட எழுதினார். 1933-வாக்கில் அண்ணாவும் பக்குவமான, உலகைக் கிரகிக்கும் ஆங்கிலமும் பொருளாதாரமும் உலக வரலாறும் அறிந்தவராய் நடமாடும்போது தமிழின் நவீன காலத்தைத் தீா்மானித்த புதிய விதமான இலக்கியத்தின் அடிப்படையை மணிக்கொடி அதன் ராமையா என்ற எழுத்தாளரின் மூலம் நிலைநாட்டுகிறது. அண்ணாவின் சிறுகதை களில் மணிக்கொடி தாக்கம் இல்லை. அண்ணா வந்த பாதை பழந்தமிழை, பாரதி தாசன் வழிகொண்டு வந்த பாதை. மணிக்கொடி காங்கிரஸ் வரலாற்றோடு இணைந்த சுப்பிரமணிய பாரதியின் பாதை. அது ஓரளவு அக்காலத்தில் காந்தியின் பாதை. இது திராவிட இயக்கத்தில் பெரிய பிளவாக மாறி மணிக்கொடி பாதை பிற்காலத்தில் வளர்ந்து, 1959-ல் தொடங்கப்பட்ட எழுத்து இதழ்வழி இருபெரும் சிந்தனைகள் 20-ஆம் நூற்றாண்டுக்குக் கிடைத்தன. கனிமொழியின் கவிதை திராவிட மரபின் பிளவைக்காட்டுகிறது. 70களிலிருந்து திராவிட இலக்கிய மரபு பலமிழக்கிறது,  அண்ணாவின் மரணம் 1969-ல் நிகழ்கிறது.

 

அண்ணா மறைந்து இன்று சுமார் அரைநூற்றாண்டு கடந்துவிட்டது. அண்ணாவின் அரசியலைப் பரிசீலனை செய்யும்போது அவரது மொழி, பண்பாட்டு, இலக்கிய, வெகுசன திரள் போன்றனவும் சேர்த்துத்தான் அணுகப்பட வேண்டும். மாடர்னிட்டி(நவீனம்) என்ற சிந்தனை இங்கு வருகிறது. அண்ணா, தொழில்நுட்ப ரீதியான மாடர்னிட்டியை ஏற்றார், நேரு போல் அறிவில், வளர்ச்சித் தொழில் நுட்பத்தை ஏற்றார். மூடநம்பிக்கையை எதிர்த்தார். அதன் மேற்கத்திய பெறு பேறான மாடர்னிசம் என்ற (நவீனத்துவம்) பாதையில் இங்கிலாந்தில் டி.எஸ்.எலியட் என்ற கவிஞர் உலகை உலுக்கும்படி எழுதிய மாடர்னிசம், உலகைச் “சிக்கும் சிடுக்குமாகப்” பார்க்கும் இலக்கியப்பார்வை. (இது சி.சு.செல்லப்பா சொற்கள்).இது எழுத்து இதழ் மூலம் தமிழில் பிரபலமான போது அண்ணா பாதை, தனிமைப்பட்டு ஒதுங்கி மறைந்தது இலக்கியத்தில். ஆனால் அது முற்றிலும் ஒதுங்க வில்லை என்பது என் கணிப்பு. 1982-ல் திராவிட இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட தலைமுறையினர்  மூலம் அமைப்பியல் என்ற சிந்தனைக்கோட்பாடு போன்றன வந்ததுள்ளன. அமைப்பியல் பார்வை மாடர்னிட்டியின் கூறுகளைக்கொண்டிருப்பதால், அண்ணாவின் பாதையின் நுட்பங்களின் வழியே தான் நடையிடுகிறது என்பது என் போன்றோர் விளக்கம்.

 

மாடர்னிட்டியைத் தமிழில் நவீனம் எனலாம். மாடர்னிசம் மாடர்னிட்டியி லிருந்து மாறி, எதிர்நிலை எடுத்து கலை இலக்கியம், ஓவியம், திரைப்படம், தத்துவம் என உலகைப் பாதித்தது. மாடர்னிசம், இருள்மயமான நம்பிக்கையின்மையின், அடிப்படையில் 2ஆம் உலகப்போரின் பாதிப்பால் வந்தது. எழுத்து இதழின் புதுக் கவிதை இந்தத் தன்மையைக் கொண்டிருந்தது. பின்பு எண்பதுகளில், புதுக்கவிதை சங்க இலக்கிய ஆழ்தன்மைக்கு மாறியது. தமிழில் சிலர் இதனைச் சரியாய் புரிந்து கொள்ளாததால் இந்த விளக்கம். அண்ணாவிடம் டி.எஸ் வழிவந்த இலக்கிய மாடர்னிசம் இல்லை. அவர் பாதையில் சென்ற திராவிட எழுத்தாளர்களிடமும் இல்லை. இலக்கியத்தில் சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்தது போல் காந்தி தாக்கமும் கூட கடந்த 50 ஆண்டுகால நவீனத் தமிழிலக்கியத்தில் இல்லை. அதற்குப் பதிலாய் மொழி ஒரு அறிதல் முறையாக, நவீன இலக்கியத்தில் மாறியது. பழங்குடிப் பண்புகள் கொண்ட தொல்காப்பியம் கடந்த 20 ஆண்டுகளாய் தமிழ்த் திறனாய்வைப் பாதித்து வருகிறது. தமிழ்த்துவம் என்பது நவீன தமிழ் எழுத்தின் அஸ்திவாரமாய் மாறியதற்குப் பாரதிதாசன் வழியாய் தமிழை அறிவுகொள்கையின் மையமாக்கிய அண்ணா அன்றி வேறு யார் காரணம்?

 

அண்ணாவைப் புதுநோக்கில் உலக நோக்கில், வரையறை செய்வதற்கும், அவரை வைத்து இன்றைய தமிழக அரசியல், இலக்கியம், பண்பாட்டுச் சிக்கல்களுக்கு விடை காண்பதற்கும் தொடர்பு இருக்கிறது. அதற்கு கட்சி, மதமாச்சரியங்களிலிருந்து அகன்று நின்று, பொதுமைப்படுத்தி, பார்க்க வேண்டும். இது ஒரு நீண்ட பயணம்.

ஷம்பாலா : ஓர் அரசியல் நாவல்.ச.வின்சென்.

ஷம்பாலா : ஓர் அரசியல் நாவல்.

ச.வின்சென்ட்

அரசியல் நாவல் என்ற கருத்தியல் தெளிவற்று பல பொருள்தருவதாக இருக்கிறது. என்னென்றேல் அரசியல் என்ற கருத்தியலே அப்படிப்பட்டது. அரசியல் என்பது ஒரு அரசினை மேலாண்மை செய்வதில் பயன்படும் வழிமுறைகளும், யுத்திகளும் என்பார்கள். மேலும் அரசியல் அறிவியல் என்பது அதிகாரத்தின் அறிவியல். அதிகாரத்தையும் அதிகாரத்தை அடைதல் பற்றிய அறிவியல். இந்தச் செயல்பாட்டில் மக்களும் அங்கம் வகிக்கிறார்கள். இன்று அரசியல் எனற சொல் ஆங்கிலத்தில் போலவே தமிழிலும் வேறு சொற்களோடு ஒட்டி வேறு கருத்தியலைத் தருகிறது: வாக்கு அரசியல், சுற்றுச்சூழல் அரசியல், பெண்ணிய அரசியல். எனவே அரசியல் நாவல் என்ற சொற்றொடரிலுள்ள அரசியல் எதைக் குறிக்கிறது?

இன்னொரு பார்வையும் இருக்கிறது.: சிலர் அரசியல் என்ற கருத்தியலையே அனைத்தையும் உள்ளடக்கத்தவாறு விரிவாக்கி இலக்கயமும், ஏன் வாழ்க்கை அனைத்துமே அரசியல்தான் என்பார்கள். கலைக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை என்ற வாதத்தை ஜார்ஜ் ஆர்வெல் ஏற்றுக்கொள்ள மாட்டார்.

ஆகவே, அரசியல் நாவல் என்றால் என்ன என்று வரையறை தருவதும் அதன் கூறுகள் எவை என்று பட்டியல் இடுவதும் எளிதில்லை. இன்றைய நவீன உலகின் சிக்கலான எந்திரத்தனத்தில் மனிதன் என்ன செய்கிறான், எப்படி அவற்றை எதிர்கொள்கிறான் என்று காட்டுவதுதான் ஒரு நாவலின் நோக்கம் என்றால், அரசியல் எனும் இலக்கியவகையும், மனிதன் ஒரு அரசியல் சூழலை எப்படி எதிர்கொள்கிறான் என்று காட்டவேண்டும். அப்படியானால் அதன் உள்ளடக்கமாக இருக்க எவற்றிற்குத் தகுதி? அதன் பின்புலம் எப்படி இருக்கவேண்டும்? சமகாலத்து அரசியல் நிகழ்வுகள், கோட்பாட்டு மோதல்கள், அரசியல்வாதிகள், மக்களின் எதிர்வினை ஆகியவை உள்ளடக்கமாக இருக்க்கும்; அவற்றிற்கு ஏற்ற கதை மாந்தரும் இருப்பர். அதேபோல பின்புலம் சமகாலத்து அரசியல் சூழலைக் கொண்டிருக்கும். நாவலாசிரியர்  ஒரு நடுவு நிலையை எடுத்துக் கொள்ளமுடியாது.. ஜார்ஜ் ஆர்வெல்லும், ஆல்டாஸ் ஹக்சிலியும் தங்கள் அரசியல் நிலைப்பாட்டை, தங்கள் கொள்கையை, விளக்கவே தங்கள் நாவல்களைப் படைத்தார்கள். ஷாம்பாலாவைப் படைத்த தமிழவனுக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கிறது. அவர் படைத்த கதைமாந்தரும் அரசியச் சூழலை வெவ்வேறு வழிகளில் எதிர் கொள்கிறார்கள்

தனது ரிப்பப்ளிக்கில் லட்சிய அரசியல்பேசுகின்ற பிளேட்டோவும், அரசனும் அரசும் எப்படி இருக்கவேண்டும் என்று கற்பிக்கும் வள்ளுவரும், அரசு என்ன என்ன யுத்திகளைத் தான் பிழைக்கக் கையாளவேண்டும் என்று சொல்லும் அர்த்தசாஸ்திரமும் முதல் அரசியல் நூல்கள் என்றால், அரசியல் நாவல் என்பது விக்டோரியாவின் பிரதமர் டிஸ்ரேலியின் படைப்பில் தொடங்குகிறது. ஜோசப் கான்ரட், ஸ்டெண்டால், ஆர்தர் கோஸ்லர், ஏற்கனவே குறிப்பிட்ட ஆர்வேல், ஹக்சிலி  ஆகியோர் அரசியல் நாவலாசிரியர்கள் என்று அறியப்படுகிறார்கள். ஆங்கிலத்தில் எழுதுகிற இந்திய அரசியல் நாவலாசிரியர்களில் முல்க்ராஜ் ஆனந்த், சல்மான் ருஷ்டி, நயன்தாரா சைகல் ஆகியோர் முக்கியமானவர்கள். அரசியல் நாவலை ஒரு இலக்கியவகையாகக் கருதி அதற்குக் கோட்பாட்டை வகுத்தவர்கள் ஸ்பியர் (1923) முதல் இர்விங் ஹவ் (ஃ957) வரை பல திறனாய்வாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அரசியல் நாவலுக்குத் தருகின்ற வரையாறைகள், கூறுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தமிழவனின் ஷம்பாலாவை வாசிக்கலாம்.

அரசியல் நிகழ்வுகள், அமைப்புகள், கோட்பாடுகள் ஆகியவற்றை ஒரு கதையாடல் தொனியில் விமர்சிக்கும் நாவல்கள் அரசியல் நாவல்கள் என்பார் ஒரு கோட்பாட்டாளர். அரசியல் கோட்பாடு அல்லது சிந்தாந்தம் ஒரு முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கும். கோட்பாடுகளுக்கு இடையேயான மோதல்கள் கதைப்பின்னலின் ஓர் அங்கமாக இருக்கலாம். சட்டமியற்றல், ஆட்சி, அதுதரும் அதிகாரம், அதனைக் கையாளும் அல்லது அதற்காகப் போட்டியிடும் அரசியல்வாதிகள், அதிகார மையங்கள், அமைப்புகள் ஆகியனவும் இடம் பெறும், அரசியல் (கொள்கை) பிரச்சாரம், சீர்திருத்தம் ஆகியன நோக்கங்களாக இருக்கும். ஆசிரியரின் அரசியல் நம்பிக்கை அல்லது கோட்பாடு அவரது சார்பு அல்லது எதிர்ப்புநிலை அவர் அரசியல் நிகழ்வுகளையும் அரசியல்வாதிகளையும் விவரித்து பகுப்பாய்வு செய்வதில் வெளிப்படும், நாவலாசிரியர் சில வேளை ஜார்ஜ் ஆர்வெல் 1984 இலும் ஹக்சிலி பிரேவ் நியூ வொர்ல்டிலும் பயன்படுத்தியிருபதைப் போல அதீதக் கற்பனை உலகு எனும் யுத்தியைத் தனது கொள்கையை வெளிப்படுத்தப் பயன்படுத்தலாம்,.

தமிழவனுடைய ஆடிப்பாவை போலே என்ற நாவலைப்போலவே ஷம்பலா வும் இரட்டைக் கதையோட்டங்களக் கொண்டது. .அந்த நாவலில் இரண்டு கதையோட்டங்களும் அவ்வப்போது குறுக்கிட்டுக் கொள்கின்றன. ஆனால் ஷாம்பாலாவில் இறுதியில் சந்திப்பின் தொனிமட்டும் கேட்கிறது. இரண்டும் வேவ்வேறு அரசியல் களங்களைக் காட்டுவதால் இவ்வமைப்பு இருக்கிறதோ? ஆடிப்பாவையை அரசியல் நாவலாக எடுத்துக் கொள்ளமுடியாது, ஏனென்றால் சமகாலக் கதையை அதுசொல்லவில்லை. எனவே அது வரலாறாக ஆகிவிடுகிறது. ஷம்பாலாவின் இரு கதையோட்டங்களுமே அரசியலை, இன்றைய- இருபத்தோராம் நூற்றாண்டு இந்திய அரசியலின் திருவிளையாடல்களை மையமாகக் கொண்டுள்ளன. ஒருபக்கம் கோட்பாடுகளின் மோதல்; இன்னொருபக்கம் தனியாளிடம்- அதுவும் அடாவடித்தனமும் மூர்க்கமும் நிறைந்த தனியாளிடம் அதிகார ஆசையும், அதிகாரக்குவிப்பும் இலக்காக இருக்கும் ஹிட்லரின் எழுச்சி.

இரண்டுமே இன்றைய அரசியல் களத்தில் மக்களாட்சித் தத்துவத்துக்குக் குழிபறிக்கும் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள். சொல்லப்போனால் கேள்வி கேட்பாரற்றுக் கோலோச்சும் சுதந்திரப் பறிப்பு. நாவலுக்கு அறிமுகமாகத் தரப்பட்டிருக்கும் மேற்கோளான சிறுகுறிப்புகளும் (epigraphs) செய்தித்தாள் பகுதியும் இதனை வெளிப்படுத்துகின்றன.

கோட்பாட்டு மோதலில் அமர்நாத்தின் தனியுரிமை மீறப்படுவது இன்றைக்குத் தனிமனிதனின் ஒவ்வொரு அசைவும் நாஜி ஜெர்மெனியைவிடக் கடுமையாகக் கண்காணிக்கப்படுகிறது (snooping, surveillance) என்பது மறைமுகமாக வெளிப்படுகிறது, பெரும்பான்மைச் சர்வாதிகாரத்தில் மக்களாட்சித் தத்துவமே காவுகொடுக்கப்படுகிறது. கருத்து சுதந்திரமும் எழுத்து சுதந்திரமும் இல்லாதபோது மக்களாட்சி எங்கு பிழைக்கமுடியும் என்று அஞ்சுகிறார் அமர்நாத். இன்றைய செய்தித் தொடர்பின் முதுகெலும்பு செல்பேசி. அதன்பயன்பாடும் அதில் பயன்படும் முகநூலும் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது அமர்நாத்தின் சித்தாந்தத்திற்கு ஏற்படையதில்லை. இவையும், பணமதிப்பிழப்பு அன்றாடமக்களைப் பாதிப்பது முதலானவையும் இந்தக் கதையோட்டத்தில் சுட்டிக் காட்டப்படும் இன்றைய நிகழ்வுகள். பெரியம்மாவின் மரணம் பணமதிப்பிழப்பு தந்த பரிசுதான். இன்னொரு கோட்பாட்டு மோதல் மதங்கள்ளையும் சடங்குகளையும் அரசியலாக்கி நாட்டைப்பிளவு படுத்துகிற இன்றைய வலதுசாரிகளால் ஏற்படுகிறது

இன்னொரு கதையோட்டம் ஹிட்லர் என்பவனின் அரசியல் எழுச்சியின் வரலாறு. அவன் குழந்தைப்பருவ அனுபவங்களும் அவனுடைய இயற்கை உந்துதல்களும் எப்படி அவனை ‘ஹிட்லராக’ உருவாக்கின என்பதை இங்கே விளக்கமுடியாது. மூர்க்கத்தனமான பேராசைக்காரனிடம் நுண்ணறிவும் உடல் வலுவும், சிலவேளைகளில் வெளிப்படும் மென்மையான உணர்வுகளும் ஒருவனில் சேரும்போது அரசியல்செய்வது அவன் கைகளில் இயற்கையான விளைவாக ஆகிவிடுகிறது. இறுதியில் சொல்லப்படுவதுபோலவே வரளாற்று ஹிட்லராகவே அவன் மாறிவிடுகிறான். இன்றைக்கு நம்து நாட்டில் அடாவடித்தனம் செய்தே பதவிக்கு வந்தவர்களின் ஒட்டுமொத்த உருவம் அவன்.. அவ்வளவுதான்.. நாவலின் பின்னட்டையில் அமர்நாத் நாவலின் ‘மையக் கதாபாத்திரம்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் மில்டனின் சாத்தானைப் போல ஹிட்லர்தான் கதை முழுவதையும் ஆக்கிரமித்துக்  கொண்டிருக்கும் எதிர் நாயகன்போலத் தோன்றுகிறான். அமர்நாத் கதையில் அரசியல் சார்ந்த நிகழ்வுகள் காணப்பட்டாலும் கோட்பாட்டு மோதல்கள் மறைமுகமகமாகவே வெளிப்பாடுகின்றன. ஹிட்லர் கதையே அரசியல்தான். இப்படித்தான் அரசியல் நடக்கிறது என்று நம்மைப்போன்ற சாமான்யர்களூக்கும், ஆசிரியருக்கும்கூட தெரிந்திருக்க நியாயமில்லை. எல்லாம் திரைக் கதைகளின் மூலம் பெற்ற அறிவுதான். அதனால்தானோ என்னவோ ஹிட்லரின் கதைப்பகுதியில் சினிமாத்தனம் தெரிகிறது.

சரி, கடைசியில் ஷம்பாலா எங்கிருந்து வருகிறது? தண்டிபத்லா சாஸ்திரி ஏன் வருகிறார்? இன்றைய அறிவியில் அனைத்தும் வடமொழிநூல்களில் என்று பெருமை பேசும் அரசியலை சாஸ்திரி மூலம் பகடி செய்கிறாரா, ஆசிரியர்? பல அரசியல் நாவல்களில் கதைக் களமாக இருக்கிற ஆர்வெல்லிலும் ஹக்சிலியிலும் வருகிற அதீதப் புனைவுலகினைக் கொண்டுவருகிறார். ஜேம்ஸ் ஹில்டன் தனது நாவலில் முழுமையடைந்த அழகிய அதீதக் கற்பனை உலகிற்கு ஷங்க்ரி லா என்று பெயர் வைத்தார். அவர் திபெத்திய புத்த புனித அரசாகக் கருதப்பட்ட ஷாம்பாலா என்ற தொன்மத்திலிருந்து எடுத்தாண்டார் என்று சொல்வார்கள். இது மிக உயர்ந்த முழுமை நிலையிலுள்ள லட்சிய உலகு, உடோப்பியா. ஆனால் தமிழவனின் ஷிம்பாலா இதற்கு நேர் எதிர் ஆனது. அங்கே அதிகாரம் குவிந்திருக்கும். பெருந்துன்பமும் அநீதியும் ஆட்சி செய்யும். இது டிஸ்டோப்பியா. அதைத்தான் நமது ஹிட்லர் தேடுகிறான். வரலாற்று ஹிட்லரும் அதைத்தான் தேடினார். இங்கு ஆர்வல், ஹக்சிலி நாவல்களின் கற்பனை உலகில் இருப்பதுபோன்ற அதிகார வன்முறை ஆட்சியமைப்பு இருக்கும் ஃபூக்கோ ஒரு சமுதாயத்தினுள் அதிகாரத்தைப் பயன்படுத்தும் ஆட்சிஅமைப்பையும் அதன் மூலமான அறிவையும் பற்றிக் கூறுகிறார்.    .. அறிவும் அதிகாரமும் இணையும்போது என்ன நடக்கும்? தமிழவனின் ஷிம்பாலாவில் வடமொழி நூல் காட்டும் அறிவு அதிகார மையத்தை ஏற்படுத்தும்ப்போது உரிமை, சுதந்திரம் என்ற கோட்பாடே இல்லாது போகும்.

இவ்வாறு தமிழவனின் ஷிம்பாலா நாவலில் ஓர் அரசியல் நாவலின் கூறுகள் அனைத்தும் இடம்பெறுகின்றன. தமிழ் அரசியல் நாவல்கள் என்ற ஒரு இலக்கிய வகையில் இது சிறப்பாகக் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று.

 

ஷம்பாலா, தமிழவன். பாரதி புத்தகாலயம் வெளியீடு 2019. பக் 220. விலை ரூபாய் 215.

ச. வின்சென்ட்

தமிழவன் புதிய புதினம்;எதேச்சாதிகாரத்தின் பின் இயங்கும் உளவியலைப் பேசும் நாவல்

எதேச்சாதிகாரத்தின் பின் இயங்கும் உளவியலைப் பேசும் நாவல்

ஜி.குப்புசாமி

தமிழில் அரசியல் நாவல்களுக்கு நீண்ட வரலாறு உண்டு. சுதந்திரப் போராட்ட காலத்தின் தேசபக்தி நாவல்கள் தொடங்கி , திராவிட , இடதுசாரி, பெண்ணிய, தலித்திய அரசியல் நாவல்கள் தத்தமது  சமூக , அரசியல் , பண்பாட்டுப் பார்வைகளோடு இன்றும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. தற்போது நாவலின் அட்டையிலேயே  ‘ ஓர் அரசியல் நாவல் ‘ என்ற உபதலைப்புடன் வந்திருக்கும் தமிழவனின் ‘ ஷம்பாலா ‘ மிகவும் வெளிப்படையாக இன்றைய வலதுசாரி, மதச்சார்பரசியலையும் , ஆட்சியாளர் , குடிமக்களின் மாறிவரும் உளவியலையும் சித்தரிக்கும் காத்திரமான நாவல்.

தமிழவனின் முந்தைய நாவல்களில் பூடகமாக வெளிப்பட்ட அரசியல் பார்வை இந்நாவலில்  நேரடியாக வெளிப்படுகிறது. ‘ சரித்திரத்தில் படிந்த நிழல்கள் ‘ என்ற இவரது ‘ உருவக நாவ ‘ லில் திரைப்பட மோகம் , மொழி அதிகார அரசியல் , அயோத்தி, யாழ்ப்பாண நூலக எரிப்பு போன்றவற்றை உள்ளடக்கிப் பேசியிருந்தாலும் , ‘ ஷம்பாலா ‘ வில் இன்றைய அரசியல் நிகழ்வுகளின் பின்னால் இயங்கும் உளவியல்கூறுகள் கதாபாத்திரங்களின் வழியாக விவாதிக்கப்படுகின்றன.

‘ ஷம்பாலா ‘ நாவலை வாசிக்கத் தொடங்கும்போதே சென்ற நூற்றாண்டில் வெளிவந்த சில எதிர்கால துர்க்கற்பனை (dystopian ) நாவல்கள் நினைவுக்கு வருகின்றன. குறிப்பாக ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984 என்ற புகழ்பெற்ற நாவலில் நாட்டுமக்களின் சிந்தனைகளை வேவு பார்க்கும் ‘சிந்தனை காவல்துறை‘ இந்நாவலிலும் முக்கியப் பங்கெடுக்கிறது. அல்டஸ் ஹக்ஸ்லியின்  ‘துணிச்சலான புதிய உலகம்‘ நாவலில் இடம்பெற்ற மரபணு ஆய்வு மூலம் ஒரே கருமுட்டையிலிருந்து பலநூறு கருக்களை வளர்த்து , ஒரே மாதிரியான சிந்தனையமைப்பு கொண்டவர்களை உருவாக்கும் முறை இந்நாவலில் ஊடக பிரச்சாரம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

நடப்பு காலச்சூழலுக்கு மாற்றாக எதிர்கால சமூகம் ஒன்றை கற்பனையில் சித்தரித்துப் பார்ப்பது ஷேக்ஸ்பியரின் ‘The Tempest’ முதல் இலக்கிய உலகில் நடந்து வருகிறது. எதிர்கால உலகம் நன்நெறிகளோடு உன்னதமாக இருக்குமென கற்பனை செய்வதை ‘Utopia’ என்றும், எதிர்காலம் தீநெறிகளோடு மிகமோசமாக இருக்குமென கற்பனை செய்வதை ‘Dystopia’ என்றும் வகைப்படுத்தப்படுகிறது. மேற்சொன்ன ஆர்வெல் , ஹக்ஸ்லி ஆகியோரின்  நாவல்களும் சமீபத்தில் வெளிவந்த மார்க்ரெt அட்வுட்டின் ‘The Handmaid’s Tale‘ ‘The Testements‘ ஆகியவையும் துர்கற்பனைகள்தாம். ஆனால் இந்நாவல்கள் அனுமானித்த துர்க்கனவு நிகழ்காலத்தில் நனவாகிவிட்டிருப்பதையும், இன்றைய சூழல் எந்தளவுக்கு சுதந்திரச்சிந்தனைக்கும் , அறிவுச்செயற்பாடுகளுக்கு எதிராக இருக்கிறது என்பதையும் எந்தத் தரப்பின் சார்பாகவும் நிற்காமல் சுயமான குரலில் பேசுகிறது ‘ஷம்பாலா’.

நாவலின் மையப்பாத்திரமான பேராசிரியர் அமர்நாத் ஓர் அறிவுஜீவி , சுதந்திரச் சிந்தனையாளர் . அவர் வீட்டுக்கு சிந்தனை போலிஸ் நுழைந்து அவரது கட்டுரைகளை கையகப்படுத்துகின்றனர். அவர் பயன்படுத்தும் சொற்கள் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டவை என்கின்றனர். “ நீங்கள் நிறைய வார்த்தைகள் தெரிந்தவர் என்றும் , நாட்டுப்பற்று என்ற சொல் உங்களிடம் இல்லை என்றும் காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது” என்கிறார்கள். அவர்கள் அவரைக் கைது செய்வதில்லை, ஆனால் மிக நுட்பமாக அவர் மீது உளவியல் தாக்குதல் நடத்துகின்றனர்.  அவர் வீட்டு கழிவறையை , உள்ளாடைகளை சோதனை செய்கின்றனர்.  அவர்கள் சென்ற பிறகு , வீட்டில் பத்திரமாக இருக்கும் அவருடைய மகள் கடத்தப்பட்டதாக போலீசுக்கு புகார் வந்திருப்பதாகவும் , காவல்துறை தேடலுக்கு அமர்நாத் ஒத்துழைக்க வேண்டுமென்றும் குறுஞ்செய்திகளும், தொலைபேசித் தகவல்களும் தொடர்ந்து வந்தபடி இருக்கின்றன. அமர்நாத் போன்ற அறிவுலக செயற்பாட்டாளர்களே எதேச்சாதிகார அரசுகளுக்கு பெரும் அச்சமளிப்பவர்களாகக் கருதப்படுகிறார்கள். அவர்களை உளவியல்ரீதியாக ஒடுக்குவதுதான் இன்றைய புதிய அடக்குமுறை உத்தி.  “புத்தகங்களை அழிப்பது பழைய முறை;  புத்தகங்களை உருவாக்கும் மனங்களை ஆட்சியாளர்கள் அழிப்பதுதான் புதியமுறை. “ (பக். 189 )

மனிதாபிமானச் சிந்தனையும் , அறநெறி ஓழுக்கங்களும் கொண்டவர்களுக்குப் பெரும் துயரளிப்பவை சக மனிதர்கள் – குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர் – அதிகாரத்துக்குப் பணிந்து போவதும் அடக்குமுறைகளைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல் இருப்பதும், அரசு வன்முறைகளை நியாயப்படுத்தும்படியான காரணங்களைத் தாமே கண்டுபிடித்து தங்களுக்குள் சமாதானம் செய்து கொள்வதுமே. இந்த மத்தியமர் நிலைப்பாட்டுக்குப் பின்னால் உள்ள உளவியலையும் அறிவுச்சமூகம் தமது முன்னெடுப்பில் தவறவிடுகின்ற இடங்களையும் தமிழவன் நாவலின் பாத்திரங்களின் வழியே பேசுகிறார். பற்பல கட்டுரைகளின் வழியாகச் சொல்லவேண்டிய விமர்சனங்கள் நாவலின் இயல்பான போக்கில் உரையாடல்களாக, விவாதங்களாக இடம்பெற்றுவிடுகின்றன.

”மக்களுக்கு எப்போதும் எதிலும் திருப்தி இருப்பதில்லை. ஒன்றைப்  பூர்த்தி செய்தால் அடுத்ததை ஏன் பூர்த்தி செய்யவில்லை என்று கேட்பார்கள். இன்றைய ஆட்சியாளர்கள் மக்களின் இந்த இயல்பைப் புரிந்து அவர்களை ஒரு பயத்தில் எப்போதும் வைத்து, இருப்பது போதும் என்று ஆட்சியாளர்களைக் கேள்வி கேட்காத மனநிலையை உருவாக்கிவிடுகிறார்கள்”. (பக்.58)

“ உலகம் முழுவதும் எதேச்சாதிகாரப் போக்குள்ளவர்களும், ஜனநாயகப்பண்புகளைத் தோண்டிப்புதைக்கும் நபர்களும் இயக்கங்களும் தேர்தலில் வெற்றி பெற்று வருகிறார்கள். தங்களுக்குக் கஷ்டம் கொடுத்தாலும் இந்த எதேச்சாதிகாரிகளை மக்கள் எதற்காகத் தொடர்ந்து தேர்ந்தெடுத்து வருகிறார்கள் என்பதை விளக்கிக் கூறுவதற்கு நமது அறிவுத்துறை வளரவில்லை. “

இத்தகைய நேரடியான விமர்சனங்களைத் தவிர, நாவலில் எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத, வழக்கத்துக்கு மாறான சில சம்பவங்கள் நடக்கும்போது அவை உளவியல் ரீதியாக விளக்கப்படுகின்றன. ஒரு தலித் மாணவன் தன்னை தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் என்று அழைக்கும்போது அவமானமாக உணர்வதாகவும் , ஆனால் ‘நாங்கள் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள்‘ என்ற முழக்கத்தில் சேர்ந்து கொள்ளும்போது அவனுக்கு ஆன்ம திருப்தி கிடைப்பதாகவும் சொல்கிறான்.

அமர்நாத்தின் முஸ்லிம் நண்பர் ஒருவர் அவரது  தெருவில் உள்ள மைனாரிட்டி முஸ்லிம்கள் எல்லோரும் வலதுசாரிகளுக்கு ஆதரவாக வாக்களித்ததாகச் சொல்கிறார். வலதுசாரிகள் யாரும் அவர்களை வற்புறுத்தவோ தொந்தரவு செய்யவோ இல்லை. ஆனாலும் ஒரு காவியுடை சாமியாருக்கு வாக்களித்துவிட்டு வந்ததன் பின்னால் இருக்கும் மனநிலையை அமர்நாத் விளக்குகிறார்.

“ரகசியமாக வலதுசாரிக்கு வாக்களிக்கிற முஸ்லிம்தான் பிரிவினையின் போது இந்த நாட்டில் வாழ்வதற்காக ஒரு முடிவு மேற்கொண்டவனின் தேர்வு. அது நாளடைவில் ஒரு தவறான உளவியலை அவர்களுக்குத் தருகிறது ……. இந்த முஸ்லிம் வாக்காளன்தான்., ஒருவகையில் இந்த நாட்டின் வலதுசாரி பாசிஸத்தை உருவாக்குகிறான். ‘அடங்கிப் போய்விடுவோம்‘ என்ற மனநிலை எப்போதுமே மறுபக்கத்தில் பிய்த்துக் கொண்டு வெளியில் வந்துவிடும். அடிமைத்தனத்தின் உளவியல் மிகவும் ஆபத்தானது …………‘சுதந்திர உணர்வுதான் மனிதனை தீர்மானிக்கும் அடிப்படை உயிராற்றல்‘ என்கிறார்  சார்த்தர்“. (பக் .101 )

இந்துத்துவ வலதுசாரிகள் மக்களிடையே செல்வாக்கு பெறுவதற்கும், இடதுசாரிகள் ஆதரவு இழந்து வருவதற்கும் விவாதத்துக்குரிய ஒரு புதிய காரணம் நாவலில் சொல்லப்படுகிறது.ல் “இடதுசாரிகள் இல்லாத ஒரு லட்சிய உலகை  மனதில் கொண்டு அதற்காக வக்காலத்து வாங்குகிறார்கள். ஆனால் இந்துத்துவ வலதுசாரிகள் இருப்பதை மட்டும் லட்சியமாக காட்டுகிறார்கள்’ (பக்.182).

இதைப்போலவே சர்ச்சைக்குரிய பல சிந்தனைகளும் நாவலின் பாத்திரங்கள் வழியே எழுப்பப்படுகின்றன. “ புத்தகங்கள் , அறிவு போன்றவற்றை உள்வாங்கிக் கொள்ள முடியாதவர்களுக்கு உடல்உழைப்பு வாழ்க்கையில் வெற்றி ஈட்டித்தரும் வழியாகத் தெரிகிறது. …  அப்படியானவர்களின் மனதில் வெகு எளிதாக மதவெறி எண்ணங்களையும் , மற்றவர் மீதான வெறுப்பு, எதிர்ப்பு கோப எண்ணங்களையும் வலதுசாரிகளால் புகுத்திவிட முடிகிறது. (பக்.184,188)

அநேகமாக எல்லா சமகாலப் பிரச்சனைகள் குறித்தும் நாவலில் பேசப்படுகிறது எனலாம். கோடீஸ்வர தொழிலதிபர்கள் வங்கிகளிடமிருந்து பெருந்தொகைகளைக் கடனாகப் பெற்று தலைமறைவாவது , சபரிமலையில் பெண்கள் நுழைவு, பணமதிப்பிழப்பு மலைப்பகுதி பழங்குடியினரிடம் செல்லும்படி ஆகாதது , மத அரசியல் செய்பவர்களின் பொதுநலப்பணிகள் , என்கவுன்டர் கொலை செய்ய ஆட்சியாளர்களிடமிருந்து காவல்துறைக்கு வரும் மறைமுக அழுத்தங்கள் , ராமர் கோயில் கட்டியபின்பு அடுத்த 150 வருடங்களுக்கான பொருளாதார மூலதனம் கிடைக்கும் என்ற ரகசியத்திட்டம் என விரிவான தளத்தில் தமிழவனின் கூர்மையான அலசல்கள் நாவலில் உறுத்தாமல் கலந்திருக்கின்றன.

‘ ஷம்பாலா ‘ என்ற இடம் திபெத்தில் உள்ளதாகவும் உலகிலேயே அதிகமான அதிகாரம் உறைந்திருக்கும் இடம் என்றும் , அந்த இடம் உலகத்தை அழிக்கவும் ஆக்கவும் வல்லது என்றும் தொன்மக்கதைகள் கூறுகின்றன. அந்த இடத்தை அடைந்து பெரும் சக்தியைப் பெற்று பெரும் அதிகாரத்தைப் பெறுவதற்கு மிகச்சாதாரண நிலையிலிருந்து அமைச்சராக உயர்ந்த ‘ஹிட்லர்‘ என்ற பெயர் கொண்ட ஒரு பாத்திரம் தயாராவது இந்நாவலுக்குள்ளே பொதிந்திருக்கும் ஓர் உபகதையாகியிருக்கிறது. மையக்கதைக்கு இணையாகச் செல்லும் இது அமர்நாத் எழுதும் கதை என்று நாவலில் சொல்லப்படுகிறது. அதிகாரப் பிரயோகம் ஒவ்வொரு தளத்திலும் இயங்கும் விதங்களைப் பதிவு செய்வதாக இருந்தாலும் நாவலின் தீவிரத்தன்மையை இப்பகுதி சற்று தளர்வடையச் செய்கிறது.

பிரச்சாரங்கள் , கட்டுரைகள் மூலம் முன்வைக்கப்படும் விமர்சனங்களை விட ஓர் இலக்கியப்படைப்பின் குரல் கூர்மையானது என்பதை தமிழவனின் ‘ ஷம்பாலா ‘ நிரூபிக்கிறது.

தமிழவன் புதினம்; தனித்துவம்

தமிழவன் நாவல்களில் பொது பண்புகள்

மற்றும் அவற்றின் தனித்துவம்:

விஷ்ணுகுமாரன்.

வரலாற்று நூற்களுக்கும், நாவல்களுக்கும் இடையேயான தொடர்பினை இலக்கியக் கல்வி பேசும். எவ்வளவுதான் யதார்த்தத்தை வரலாற்று நூற்கள் கொண்டிருந்தாலும் அதில் பேசப்படும் ஒவ்வொருவரது   யதார்த்த வாழ்க்கையும், அவரைப் பற்றிய கற்பனையான செய்தியோடு அல்லது இல்லாத செய்தியோடு நிச்சயம் தொடர்புப்படுத்தப்பட்டிருக்கும்.     இது நமது வாழ்க்கைக்கும் பொருந்தும். அதாவது ஒவ்வொரு மனிதனும் யதார்த்த வாழ்க்கையுடன் அவனைப் பற்றிய புனைவுடனுமே அறியப்படுகிறான்.

நாவல்களோ புனைவாகச் சித்தரிக்கப்பட்டிருந்தாலும்       அவை யதார்த்தத்தை வேறொரு முறையில்  கொண்டிருக்கும்.   அவை குடும்பநாவலாக, சமூகநாவலாக, துப்பறியும் நாவலாக, சரித்திர நாவலாக, சீர்திருத்த நாவலாக அல்லது எந்தவகையிலான நாவலாக இருந்தாலும் நம்பத்தகுந்த வகையில்   யதார்த்தத்தைச் சித்தரிக்க முயல்கின்றன.  இது உண்மையோ என நினைக்குமளவிற்கு யதார்த்தத்தை நெருங்கி அமையும் பட்சத்தில்  அவை வெற்றி பெற்ற நாவலாகக் கருதப்படுகின்றன. எடுத்துக்காட்டாக தமிழ்வாணனது துப்பறியும் நாவல்கள், இலட்சுமியின் குடும்ப நாவல்கள், பொன்னீலனது கம்யூனிசம் சார்ந்த நாவல்கள் போன்றவற்றைச் சுட்டலாம்.

ஆக வரலாற்று நூற்களும் தனிமனித வாழ்க்கையும்   உண்மையுடன் புனைவுகளின் கலப்பு கொண்டுள்ளனஎன்றால், நாவல்களோ  புனைவுகளில் யதார்த்தத்தின் கலப்புகளாகத் திகழ்கின்றன.

நாவல்களில் யதார்த்தத்தை நெருங்கி அமைக்கும்    நிலைமை இன்று வரை தொடர்ந்தாலும் தமிழில் 1980களில் யதார்த்த எழுத்துக்களைத் தவிர்த்த வேறு வகையான எழுத்துமுறை   தோன்றிற்று. இதற்குக் காரணம்  புதியச் சிந்தனைகள் தமிழகத்தில் பரவியதாலும், தீவிர இலக்கியவாதிகள் யதார்த்த எழுத்துக்களுக்கப்பால் வேறுவகையான இலக்கியங்களைத் தேடியதாலும் ஆகும்.   நாகார்ஜூனன், ஜமாலன், எஸ்.சண்முகம் உள்பட பல விமர்சர்களும் இக்கருத்தைக் குறிப்பிடுகின்றனர்.  இந்த கட்டுரையாளர் கூட யதார்த்த எழுத்துமுறை சார்ந்த நாவல்களை வாசிப்பதையே தவிர்த்துவிட்டார். காரணம், பலவேளைகளிலும் யதார்த்த நாவல்களின் சித்தரிப்பை விட வரலாற்று நூற்கள்தான் யதார்த்த்தைத் துல்லியமாகச் சித்தரித்தன என்பதுடன் சுவாரஸ்யத்தையும் தந்தன என்பதால்.

அத்தகைய சூழலில்தான் 1985 இல் தமிழவனின்  ஏற்கனவேசொல்லப்பட்ட மனிதர்கள் எனும்  நாவலும்,  அது போல சுந்தரராமசாமியின் ஜே.ஜே.சில குறிப்புகள் எனும் நாவலும்  வெளிவந்து  தமிழ் நாவலுலகில்   திருப்புமுனையை ஏற்படுத்தின. இவற்றுள் ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்  முற்றிலும் புதுமையான பரிணாமத்துடன் வந்ததால் அது நாவலுக்குப் பிறந்தது அல்ல என்றும்  புரியவில்லை என்றும் மரபுசார்ந்த வாசகர்கள்  கூற , தீவிர இலக்கிய வாசகர்களோ   அதைப் புதிய வகை நாவலாகக் கொண்டாடினர்.  இந்த நாவலைத் தொடர்ந்து வெவ்வேறு காலகட்டங்களில் வெளிவந்த  தமிழவனது எல்லா நாவல்களுமே வடிவத்திலும் பொருண்மையிலும்    மரபார்ந்த நாவல் வகைகளான, சமூக நாவல், துப்பறியும் நாவல்,யதார்த்த நாவல் என்பன போன்ற எந்த வகை பாட்டிற்குள்ளும் கொண்டு வர முடியாதளவிற்கு வேறொரு தளத்திற்குச் சென்றுவிட்டன.எனவே புதிய வரைவிலக்கணங்களை ஏற்படுத்தினால்தான் அந்நாவல்களை       அவற்றின் கீழ் கொண்டு வரமுடியும்.

அதனடிப்படையில் அவரது நாவல்களான ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள், சரித்திரத்தில் படிந்த நிழல்கள், வார்சாவில் ஓர் கடவுள், முசல்பனி ஆகியனவற்றில்  புதிய இலக்கண முறைகள் கண்டறியப்பட்டு  அவை நிழல் நாவல் எனும் புதியவகைமையைச் சார்ந்தவை என கட்டுரையாளரால் இவண் அடையாளப்படுத்த படுகிறது.  அவரது பிற நாவல்களான ஆடிப்பாவை போல, ஜி.கே எழுதிய மர்மநாவல் ஆகியவை வேறு வடிவம் சார்ந்தவை.

முதலில்  நிழல் என்றால் என்ன?  நிழல் நாவல் என தமிழவனது நாவல்களை ஏன் புதிதாக வகைமைப்படுத்த வேண்டும் என்பதை ஆராயலாம்.                  

நிழல் தன்னளவில் உருவாகாது; எப்போதும் உண்மை உருவத்திலிருந்துதான் எழும்- ஆனால் உண்மையைப் பளிச்சென காட்டுவதில்லை. நிழலை வைத்துக் கொண்டு   அதன் அசல் உருவை விளங்கிக் கொள்ள வேண்டும்.    எனவே நிழல்நாவல் என்ற சொல்லாட்சி, நாவலை அடிப்படையாகக் கொண்ட இன்னொரு வகையான புதிய எழுத்துமுறை என்பது புலனாகிறது.

நிழல்நாவல் என குறிப்பிடுவதற்கான  பின்னணி-  எந்தவொரு எழுத்துமுறைக்கும்    அதற்கான பின்னணி தெளிவாக உள்ளது.  முதன் முதலில் தமிழ் நாவல் 19 ஆம் நூற்றாண்டில் தோன்றியது என்றால் தமிழிலக்கியம் புதுமையை நாடி அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்துள்ளது என்பது அர்த்தம். அது போன்றுதான் புதிய எழுத்து முறையான நிழல் நாவல் எழுந்துள்ளது என்றால் ஏதோ ஒரு சிந்தனைப்போக்கு  அதன் பின்னணியில் உள்ளது என்று புரிந்துகொள்ள முடிகிறது.

இந்த (நிழல்)நாவல்கள் தோன்றியுள்ள காலமாக, இருபதாம் நூற்றாண்டின் இறுதி(1980கள் தொடங்கி)  மற்றும் இருபத்தோராம் நூற்றாண்டினை அடையாளப்படுத்தலாம். இக்காலகட்டத்தில்தான் தொலைக்காட்சி, இணையத்தளம், அலைபேசி என்பன போன்ற பல்வேறு அறிவியல் அதிநுட்ப செயல்பாடுகள் உருவெடுத்து மக்களின் வாழ்க்கை முறையையே மாற்றிவிட்டன.   பனிப்போர் முடிவுக்கு வந்தது. மேலும் உலகமயமாதல், தடையற்ற வர்த்தகம் எனும் கொள்கைகள் உலகநாடுகளை இன்னும் நெருக்கமாக்கின. பின்நவீனத்துவக் கோட்பாடுகள் பரவலாயின. உலகமயமாதல், தடையற்ற வர்த்தகம் போன்றன  நாடுகளை இன்னும் நெருக்கமாகப் பிணைத்தன. எதையும் இன்னொன்றாக மாற்றிப் பார்க்கும் மனிதச் சிந்தனைப் போக்கு தீவிரமானது. இது போன்ற நிகழ்வுகளால் அகிலத்தில் நிகழ்ந்த மாற்றங்கள் போலவே தமிழகம் உள்ளிட்ட இந்தியத் துணைகண்டத்திலும் வெகுவான மாற்றங்கள் ஏற்பட்டன.

தமிழகத்தைப் பொறுத்தவரை பல நூற்றாண்டுகளாகச் சமூகத்தில்  நீடித்து வந்த கூட்டுக்குடும்பமுறை வெகுவாகச் சிதறிப்போனது. இயற்கை வளங்கள் கடுமையாகச் சுரண்டப்பட்டன.  வேளாண்சார் நிலவுடைமை உடைந்து போய் பண்ணையார்கள் குறைந்துப் போனார்கள். கல்விபயின்றோரது வாழ்க்கை முன்னுக்கு வந்தது. மனிதர்களிடையே பணம்,சாதி அடிப்படையிலான இடைவெளி சற்று குறைந்தது. அதிகார பலம் பரவலாகியது. ஒடுக்கப்பட்டோர் சமூகத்தில் உயர்ந்தனர். பருவம் அடைந்ததும் திருமணம் வரை வீட்டுக்குள்ளே அடைக்கப்பட்டிருந்த பெண்கள் ஆண்களைப் போன்று கல்விபெற்று சொந்தக்காலில்  வாழ்க்கை நடத்தும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது. வாழ்க்கையின் எல்லா பாகங்களும் எந்திரங்களினால் இலகுவாகி விட்டன. வாழ்க்கையும் விரைவாக நடைபெறுகிறது. அத்துடன் திராவிடக் கட்சிகளின் ஆட்சி, இலங்கையில் தமிழர்களை அழித்தல் போன்ற நிகழ்வுகளும் தமிழ் இலக்கியங்களிலும் தாக்கம் ஏற்படுத்தின.

இவ்வாறான பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்த காலகட்டத்தில்தான் அல்லது சூழலில்தான் தமிழ்மொழியும் மாறுதலுக்குள்ளானது.   அதன் மூலம் தமிழ் நாவல் எழுத்துமுறைகள் இரண்டு பிரிவுகளாகி விட்டன என்று கூறமுடியும். ஒன்று-வழக்கமான யதார்த்த எழுத்துப் பாணியில் அமைந்த நாவல்கள். இப்பிரிவினுள் பெண்ணியம், தலித்தியம், கம்யூனிசம், போன்ற புதினங்கள்  முதல் துப்பறியும் நாவல்கள் வரை எல்லா நாவல்களையும் அடக்கிவிடலாம்.

இரண்டாவது வகை  காலத்திற்கேற்ற மாறுதலைக் கொண்ட, வழக்கமான   எழுத்துப் பாணிக்கு மாறான மொழிநடை கொண்டவை. இந்நடையில்தான் அறிவுசார் எழுத்துக்கள் சிறுபத்திரிகைகளில் எழுதப்பட்டன. அதுபோல   புதுமையான முறையில்  நாவல்களும் எழுதப்பட்டன. அவை  சர்ரியலிசம், மாந்திரீக யதார்த்த வாதம், பின்நவீனத்துவம் போன்ற தமிழுக்குப் புதுமையான கோட்பாடுகளை உள்ளடக்கமாகக்  கொண்டிருந்தன.  இந்த நாவல்களைத் துலக்கமாக இனங்காட்டும் அம்சம், அவற்றில் வெளிப்படும் fantacy எனப்படும் வினோதம் உள்பட வேறு சில பண்புகளும் ஆகும். இந்த வகையான பண்புகளைக் கொண்ட நாவல்களுக்கு முன்னோடியாக அமைந்தவையே   தமிழவனின் நாவல்கள்!. அவற்றை   முன்னரே குறிப்பிட்டது போல நிழல் நாவல்கள் என வரையறைப்படுத்திக் கொள்ளலாம்.  அவற்றின் இயல்புகள் எவ்வாறு இருக்கும் என்பதையும் அதற்கான கோட்பாடுகளையும் தமிழவனின் நாவல்களிலிருந்தே பெற்றுக் கொள்ளலாம்.

நிழல் நாவலின் இயல்புகள்

1.ஏதாவதொரு கேட்பாட்டை துலக்கமாகக் கொண்டு வெளிப்படுத்துதல்,

2.எதார்த்த நாவலைப் போல ஒரு தொடர்ச்சியான வரிசை அமைவைக் கொண்டிராமை,

3.காலம், இடம், செயல் ஆகியவற்றின் பொருத்தப்பாட்டை இல்லாமலாக்குதல்,

4.பகுத்தறிவிற்கு அப்பாலான நிகழ்வுகளை சர்வ சாதாரணமாக வெளிப்படுத்துதல்,

5.நகைச்சுவை இழையோடும் தன்மையைக் கொண்டிருத்தல்,

6.வினோதமான கதப்பாத்திரங்கள் மற்றும் மீ சக்திகளைக் கொண்டிருத்தல்,

7.வழக்கமான மொழி நடைக்கு மாறானது,

8.ஒரே நேரத்தில் இரட்டைப் பொருளைத் தரக் கூடிய ஒன்றாக வாக்கியங்கள் தென்படும்,

9.முற்றிலும் அறிவுத் தளத்தில் இயங்கக் கூடியதாக இருத்தல்.

 1. பிரதிக்கு அப்பால் வாசகனைச் சிந்திக்கத் தூண்டுதல்.

 

இந்த இயல்புகளையே  தமிழவனது நாவல்கள் துலக்கமாகக் கொண்டுள்ளன. இந்த இயல்புகள் பிறவகை நாவல்களில் ஒரு சேர   வந்து பொருந்துவதில்லை. எடுத்துக்காட்டாக நகைச்சுவை இழையோடும் தன்மையைச் சுட்டலாம். பாக்கியம் ராமசாமியின் கதைகள் அனைத்தும் நகைச்சுவை இழையோடும் தன்மை கொண்டிருக்கும். ஆனால் அறிவுத்தளத்தில் இயங்காது- பிரதிக்கு அப்பால் வாசகனைச் சிந்திக்கத் தூண்டாது. காலம் இடம் ஆகியவற்றின் பொருத்தப்பாட்டைச் சிதைக்காது. ஆனால் மேலே சொல்லப்பட்ட பத்து இயல்புகளும் ஒரு சேர தமிழவனது நாவல்களில் இடம் பெற்றிருக்கும்  . இதே பண்புகளைக் கொண்டு பிற்காலத்திலும் குறிப்பிடத்தக்க சில நாவல்கள் வேறு நாவலாசிரியர்களாலும் சிறப்பான முறையில் எழுதப்பட்டுள்ளன. அவற்றையும் நிழல்நாவலாக வகைப்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, பிரேம் எழுதிய சொல் என்றொரு சொல், எம்.ஜி.சுரேஷின் அலெக்சாண்டரும் ஒரு கோப்பை தேநீரும், முத்துக்கிருஷ்ணனின் அடைக்கோழி  ஆகிய நாவல்களைச் சுட்டலாம். ஆயினும் நிழல்நாவல் எனச் சுட்டத்தக்க வரையறைகள் தமிழவன் நாவல்களில்தான் முதன் முதலில் காணப்படுகின்றன. அவற்றை இனி விளக்கமாகக் காணலாம்.

1.ஏதாவதொரு கேட்பாட்டைத் துலக்கமாகக் கொண்டு வெளிப்படுத்துதல்,

1985 இல் வெளியான ‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்  வழக்கமான நாவல் அமைப்பிலிருந்து மாறுபட்டு விளங்குவதோடு சர்ரியலிசம் மற்றும் மாந்திரீக யதார்த்தக் கோட்பாடுகளைத் துலக்கமாக வெளிப்படுத்துகின்றது.                எழுத்தாளர் ஜெயமோகன்   ‘நாவல்’ என்ற தனது நூலில் ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் -ஐ சர்ரியலிச எழுத்தாலான முதல் தமிழ் நாவல் என குறிப்பிடுகிறார் . இந்நாவலில் நம்பமுடியாத சம்பவங்கள் இயல்பாக நடப்பதாகக் காட்டப்படும். எடுத்துக்காட்டாக-தெய்வமூர்த்தி என்பவர் தனது தம்பியுடன் காட்டுப்பாதையில் போய் கொண்டிருந்த போது அவரது தம்பியைப் பேய் நாயாக உருமாற்றி விடும். உடனே தனது மந்திரசக்தியால்  தம்பியை மறுபடியும் மனிதனாக்கி விடுவார். இது போன்ற மாந்திரீக யதார்த்தங்களை இந்த நாவலில் சர்வசாதாரணமாகக் காணமுடியும்.

“இதெல்லாம் மூடநம்பிக்கை,” “பேய்நாவல்களும் இது போன்றவற்றைத்தானே காட்டுகின்றன”– அப்படியிருக்க, இந்த செய்திகளைக் கூறுவதால் இந்த நாவலுக்கான சிறப்பு என்ன வந்துவிடப் போகிறது என சாதாரண வாசகர் கேள்வி எழுப்பலாம். பேய்நாவல்களைப் பொறுத்தவரை   பேயின் பயங்கரத்தையும் பக்தியின் பெயரால் பேய் முறியடிக்கப் படுவதையும் மட்டுமே காட்டும். ஆனால் இந்த   இந்த நாவலோ நம் வாழ்க்கையின் ஒரு பாகமாக வகிக்கும் மந்திரவாதம் மற்றும் பேய்கள் குறித்து சித்தரிக்கிறது.  பேய்கள் அல்லது மந்திரவாதம் இருக்கிறதோ இல்லையோ- ஆனால் 1980 கள் வரை பேய்கள், சாமிகள்,மந்திரவாதம் பற்றிய நம்பிக்கைகள் இந்தியக் கிராமங்களில் மிகுந்த ஆதிக்கம் செலுத்தியிருந்தது உண்மை. தனது வீட்டுத் திருமணம், பொருளாதாரச் சிக்கல்கள் உட்பட அனைத்திற்கும் தீர்வுகாண தன் குடும்பத்தில   இறந்து போனவரது ஆவியின் ஆசியை எதிர்பார்த்து வீட்டில் பூஜை,படையல் செய்வது சர்வசாதாரணமாகவே நிகழ்ந்துள்ளது. இன்றளவும் குக்கிராமங்களில் காணப்படுகிறது. இந்த சமூக யதார்த்தங்களை நவீனத்துவ நாவல்கள் மூடநம்பிக்கையென புறக்கணித்துவிட்டன. ஆனால் “ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்” நாவலோ  இது போன்ற யதார்த்தங்களை மாந்திரீக யதார்த்தமாக – சமூக யதார்த்தமாகச் சித்தரித்துள்ளது.  மாந்திரீக யதார்த்தம் இப்போது பிற எழுத்தாளர்களாலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

.

சரித்திரத்தில் படிந்த நிழல்கள் நாவல்   சர்ரியலிச கோட்பாட்டை  பிரதிபலிக்கிறது. அதாவது கட்டற்ற சுதந்திர எழுத்தைப் பயன்படுத்துகிறது. மனித வாழ்க்கை சிறு விசயங்கள் முதல் பெரிய விசயம் வரை எல்லாவற்றிலும் விதிகளால் கட்டுப்படுத்தப் பட்டிருக்கின்றது. அந்த விதிகளிலிருந்து விடுபட்டு வாழ மனம்போல சர்ரியலிச இயக்கம் தோன்றியது.  அது எழுத்துக்களிலும் பிரதிபலித்தது. இப்படித்தான் ஓர் ஒழுங்கு முறையில் எழுதவேண்டும் என்ற நிலை மாறி, கனவு எவ்வாறு சுதந்திரமாக நிகழ்கிறதோ அது போன்று தன் விருப்பப்படி கட்டற்ற முறையில் எழுதும் போக்கினை சர்ரியலிஸ்ட்கள் செய்தனர். அந்த எழுத்து முறை      சரித்திரத்தில் படிந்த நிழல்களில்  துலக்கமாகக் காணப்படுகிறது. இந்நாவலில் பாத்திரங்களாகப்  பழங்கால அரசர் இடம்பெற்றிருப்பார். ஆனால் பல்கலைக்கழகம் இடம்பெறும்… அரசி கண்ணை மூடிக்கொண்டுதான் எல்லாவற்றையும் பார்ப்பாள்- இப்படி வழக்கத்திற்கு மாறாகத் தன் விருப்பப்படி வினோதமாக சர்ரியலிஸ்ட் நடையில் எழுதியுள்ள பாங்கினை இந்நாவலில் முழுக்க முழுக்கக் காணப்படுகிறது.

2.எதார்த்த நாவலைப் போல ஒரு தொடர்ச்சியான வரிசைக் கிரமத்தைக கொண்டிராமை.

ஒரு தொடர்ச்சியினை இவரது நாவல்களில் காணமுடியவில்லை. வார்சாவில் ஒரு கடவுள் என்ற நாவலில் கதை சொல்லும் உத்தி வெவ்வேறு முறைகளில் உள்ளது. முசல்பனியில் ஒரு அத்தியாயத்திற்கும் அடுத்த அத்தியாயத்திற்கும்  நேரடி தொடர்பு இருக்காது. ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்களில் தற்காலமும் , கழிந்தகாலமும் கலந்து, கலந்து காட்டப்படுகின்றன. சரித்திரத்தில் படிந்த நிழல்களிலும் இதே முறைதான் காணப்படுகிறது. எனவே நிழல் நாவல் என்பது ஒரு தொடர்ச்சியான வரிசை அமைவைக் கொண்டிருக்காது என்பதை உறுதிபடக் கூறமுடிகிறது.

3.காலம், இடம், செயல் ஆகியவற்றின் பொருத்தப்பாட்டை இல்லாமலாக்குதல்

          இந்த இயல்புகள் துலக்கமாகவே தமிழவனின் நாவல்களில் காணப்படும். சரித்திரத்தில் படிந்த நிழல்கள், முசல்பனி ஆகியவற்றில் மிக அதிகமாகக் காணப்படும். எடுத்துக்காட்டாக முசல்பனி நாவலில் வரும் வாக்கியங்களைச் சுட்டலாம் ’அத்திரிகப்பாவின் மகள் 3300 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகாலை 3 மணிக்கு 3 மணி இருக்கும் போது பிறந்தாள். அவள் பிறந்த நேரத்தைத் திசைக்கொரு கடவுளாக நான்கு கடவுளர்கள் சாட்சி கூறினாலும் நான்கு திசையையும் ஒரே முகமாகக் கொண்ட கடவுள் ஏற்கவில்லை’’.  இந்த வாக்கியத்தில் தர்க்கமுறை எதுவும் இல்லை. இவ்வாறு தர்க்கமுறையை உடைத்துச் செல்லும் தன்மை கொண்டன  நிழல்நாவல்கள். சரித்திரத்தில் படிந்த நிழல்களில்  நாவலிலும் இதே அமைப்பு மிகுதியாகக் காணப்படுகிறது. இந்நாவலில் காட்டப்படுவது பழையகாலத்து இராஜா கதை போல தோன்றும். ஆனால் கதையில் பல்கலைக்கழக மொழியியல் ஆசிரியர்கள் மொழி ஆராய்ச்சி செய்வதாகக் காட்சிகள் அமையும்.

4.பகுத்தறிவிற்கு அப்பாலான நிகழ்வுகளை சர்வ சாதாரணமாக வெளிப்படுத்துதல்.

இந்த இயல்புகள் கண்டிப்பாகத் தமிழவனது நாவல்களில் இடம்பெற்றே தீரும்.

5.நகைச்சுவை இழையோடும் தன்மையைக் கொண்டிருத்தல்,

நகைச்சுவை அல்லது ஒரு வகையான வினோதமான  அல்லது ஒரு வகையான கிண்டல்  வாக்கியங்களில் இழையோடி காணப்படும்.    எடுத்துக்காட்டாக, ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்களில் வரும் வாக்கியத்தைச் சுட்டலாம்.

அவனது வேட்டி அவிழ்ந்தபோது, அவள் தன் கண்களை மூடி தன் கற்பைக் காத்துக் கொண்டவிதம் அந்த பள்ளியில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டது”.

5.வினோதமான கதாப்பாத்திரங்கள் மற்றும் மீ சக்திகளைக் கொண்டிருத்தல்

தமிழவனது நாவல்களில் வரும் பல பாத்திரங்களும் வழக்கமான மனிதர்கள் அல்லர். அதன் உச்சகட்டமாக வார்சாவில் ஒரு கடவுள் நாவலில் வரும் பெரும்பாலான பாத்திரங்கள் வழக்கத்திற்கு மாறாகவே உள்ளனர். எங்கோ தீ பிடிப்பதைக் கண்டுபிடித்து விடும் சந்திரன், கூரையைப் பிய்த்துக் கொண்டு பறப்பவன், இரவில் மட்டுமே கண்ணால் பார்க்கும் நர்ஸ் என வித்தியாசமான பாத்திரங்கள் காணப்படுகின்றனர். ஒரே நேரத்தில்   வெவ்வேறிடங்களில் நடமாடுபவன் பற்றி சரித்திரத்தில் படிந்த நிழல்கள் பேசும்.  தனது நிழலுடன் சீட்டாடும் கிழவன் பற்றி முசல்பனி நாவல் பேசும்.  .

 

ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்களில் வரும் மாந்தர்களோ தனிமனிதர்கள் பற்றியதல்ல. ஒரு காலகட்டத்தில் வாழ்ந்த மனிதர்களின் பிரதிநிதியாக வருகிறவர்கள். எடுத்துக்காட்டாக, சினேகப்பூ என்பவள் தனது மகனது நோய்க்கு இறந்துபோனவனது ஆவிதான் காரணமென நினைத்து அந்த ஆவியைத் திட்டுவதைச் சுட்டலாம். 1980கள் வரை  இறந்தோரைத் திட்டுவது நம் சமூகத்தில் சர்வசாதாரணமாக நிகழ்ந்த வழக்கம். இது போல் அந்நாவலில் வரும் அனைத்து பாத்திரங்களுமே  ஒரு காலகட்டத்தில் வாழ்ந்த மக்களின் பிம்பங்களாகக் காட்சியளிக்கின்றன. ஆடிப்பாவை எனும் நாவலில் மட்டுமே வழக்கமான மனிதர்கள் இடம்பெறுகின்றனர். அதில் கூட எல்லா பாத்திரங்களுமே குடும்ப வாழ்வில் பாதிக்கப்பட்டவர்களாகவே சித்தரிக்கப்பட்டுள்ளனர்

 

7.வழக்கமான மொழி நடைக்கு மாறானது,

வழக்கத்திற்கு மாறான மொழிநடையினை இந்நாவல்கள் கொண்டிருக்கும்.

8.ஒரே நேரத்தில் இரட்டைப் பொருளைத் தரக் கூடிய ஒன்றாக வாக்கியங்கள் தென்படும்.

பல செய்திகளைக் குறியீடுகளாக அமைத்து செல்வதால் வாக்கியங்களுக்கு அப்பால் புதைநிலை உண்மைகளைக் காணவியலும். எடுத்துக்காட்டாக,  ‘’மலையின்மேல் ஒளி’’  என்ற சொல்லாட்சி சரித்திரத்தில் படிந்த நிழல்கள் நாவலில் இடம் பெறுவதைச் சுட்டலாம. இது திமுக-வைக் குறிக்கும். அது போன்று ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் நாவலில்  வரும் மனிதர்கள் பலர் மேலோட்டமாக வேடிக்கையாகக் காட்சியளிப்பவர்கள் உண்மையில் கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸ்காரர்கள், தி.மு.கவினர் ஆகியோர் பற்றி குறிப்பனவாகும். எடுத்துக்காட்டாக கனவுகளை விற்பவன் எனக் குறிப்பிடப்படுபவன் காங்கிரஸ்காரன்!

9.முற்றிலும் அறிவுத் தளத்தில் இயங்கக் கூடியதாக இருத்தல்.

தமிழவனின் நாவல்கள்  அறிவுத்தளத்தில்  இயங்குபவை. அவை பொழுதுப்போக்கை நாடும் சாதாரணமான வாசகனுக்காகனவை அல்ல. தமிழ் தெரிந்திருந்தால்  கலைஞர் கருணாநிதியின் நாவல்களையோ வைரமுத்துவின் நாவல்களையே  வாசித்துப் புரிந்து கொள்ளமுடியும். ஆனால் தமிழவன் நாவல்களோ சாதாரண வாசகனுக்குப் புரியாதவை. ஓரளவு வாசிப்பறிவும் பிறதுறை அறிவும் இருந்தால் மட்டுமே அவற்றைப் புரிந்துக்கொள்ள முடியும். காரணம் அவை அறிவுத்தளத்தில் இயங்குபவை.      எடுத்துக்காட்டாக முசல்பனி நாவலில் இடம்பெறும் பின் வரும் பத்திகளைச் சுட்டலாம்.

பாத்திக்கட்டிப் பிரித்திருக்கும் பயிர் போன்ற மக்கள்

உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இதுவரை இந்தநாட்டு மக்களைப் பற்றி நான்கூறவே இல்லையே  என்று .  இவர்கள் தங்களை வயல்பரப்புப் போல் பாத்தி கட்டிப் பிரித்துவைத்திருப்பார்கள். மொத்தம் 5 பாத்திகள். எனவே இம்மக்கள் பயிர் போல் வளர்பவர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்வார்கள். மேலும் இவர்கள் நித்தியமானவர்கள்.

  முதல் பாத்தியில் நடப்படுபவர்கள் தலையை மேலேவைத்தும் கால்களைச் சேற்றுக்குள் மறைத்துப் புதைத்தும் வைக்கப்படுவார்கள். இவர்கள் உயர்ந்தவர்கள். கடைசியாக வரும் ஐந்தாம் பாத்திக்காரர்கள் கால்களை மேலே வைத்தும் தலையைச் சேற்றுக்குள் புதைத்தும் நடப்படுபவர்கள். இவர்களின் ஒவ்வொரு பிரிவுக்கும் ஐந்து ஐந்து கடவுள்கள் உண்டு. கடவுள்கள் போர்செய்வார்கள். இவர்கள் கடவுள்களுக்குப் பெரியவிழா எடுத்துப் பலிகொடுப்பார்கள். காதல்செய்யும்போது கலவரங்கள் ஏற்படும். ஒரு பிரிவு அடுத்தப் பிரிவைக் காதலிக்கக்கூடாது என்று விதி எழுதப்பட்டிருக்கிறது. விதியை மீறிக் காதல் செய்தால் வீடு, வாசல்,கூரை வாகனம் உணவுப்பொருள்கள் என்று எரிப்பார்கள். காதுகளைப் பூக்களால் அலங்காரம் செய்வது என்பது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். 

     இந்த வாக்கியங்கள் தமிழக நாட்டு நடப்புக்களை நன்றாகப் புரிந்துகொண்டோருக்கும் தமிழின் குறிஞ்சி, முல்லை, மருதம் ,நெய்தல்,பாலை எனும்  நிலப்பாகுபாட்டைப் புரிந்தகொண்டோருக்கும் மட்டுமே விளங்கும்.  இது போன்றே தமிழவனது நாவல்கள் காணப்படுவதால் பரந்த வாசிப்பு உடைய வாசகர் தமிழவனது நாவல்களைச் சிறந்தவை எனப் போற்றுவதையும், சாதாரண வாசகர் அதே நாவல்களைப் புரியாதவை என நிராகரிப்பதையும் காணமுடிகிறது.

 

 1. பிரதிக்கு அப்பால் வாசகனைச் சிந்திக்கத் தூண்டுதல்.

ஒரு படைப்பு  மகிழ்வூட்டலையும் அறிவுதரும் பணியையும் செய்வதுடன் அதற்கப்பாலும் வாசகனைச் சிந்திக்க வைக்கும்போதுதான், அது மகத்தான வெற்றி பெற்றதாகக் கருதமுடியும். அவ்வகையில்  தமிழவனது  நிழல் நாவல்கள் எல்லாமே வெற்றி பெற்றுவிட்டன என்று கூறமுடியும். எடுத்துக்காட்டாக, சரித்திரத்தில் படிந்த நிழல்கள். இந்நாவலைப் படித்தபின் சரித்திரத்திற்கும் கதைக்கும் இடையேயான வேறுபாடு என்ன என்பதைச் சிந்திக்கச் செய்கின்றது. சரித்திரம் என்பது எழுதுபவரின் மனநிலையைச் சார்ந்தது என்றும் உண்மை அப்படியே இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை எனும் எண்ணத்தை வாசகனின் மனதில் ஏற்படுத்துகிறது.

வார்சாவில் ஒரு கடவுள் எனும்  நாவலை வாசிக்கும் போது, கடவுள் அறிவுக்கெட்டாதவர், கண்ணால் காணமுடியாதவர் எனும் நம்பிக்கைகள் மாறி கடவுள் நமது வாழ்வில் தினந்தோறும் காட்சியளிக்கிறார்- ஆனால் நாம்தான் அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை எனும் உணர்வைத் தருகிறது .

ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் நாவலில் கனவை விற்கும் இளைஞன், சாரைப் பாம்பு போல வந்துசெல்லும் மனிதன் போன்றோர் இடம் பெறுகின்றநர். மேலோட்டமாக இவை அர்த்தம் தந்தாலும் உண்மையில் 1960 களில் நடைமுறையிலிருந்து காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்கள் பற்றிய கருத்துக்களையே தருகின்றன. இவ்வாறு மொழியின் வாக்கியங்களுக்கும் அப்பால் சென்று கருத்தைத் தரவல்லன தமிழவனின் நாவல்கள்.

 

ஆக மேலே விளக்கப்பட்ட கூறுகள் கொண்டவையாகத் தமிழவனது  நிழல்நாவல்கள் உள்ளன.  இந்த நிழல்நாவல்கள் மீது  ‘ உண்மைக்கு மாறானவை’   ‘உடனடியாக விளங்கமுடியாதவை’என்பன போன்ற கடும் விமர்சனங்கள்  வைக்கப்படுகின்றன. ஆனால் இவைதான் தற்காலத்திற்கு ஏற்ற நாவல்கள் என்பதுடன் இவைதான் யதார்த்த எழுத்துக்களை விட மிகச் சிறந்த இலக்கிய அனுபவத்தைத் தருகின்றன என்பதை உறுதியாகச் சொல்லமுடியும்   மேலும்  யதார்த்த இலக்கிய எழுத்துக்கள் இன்றைய காலத்தில்     கேள்விக்குறிக்குள்ளாகிறது. காரணம், இன்றைய காலத்தில் யதார்த்த இலக்கியங்களைக் காட்டிலும் நக்கீரன், ஜூனியர் விகடன் போன்ற பத்திரிகைகள் மற்றும் வரலாற்று நூற்கள்தான்  யதார்த்த நிகழ்ச்சிகளை, அனுபவங்களை   மிகுந்த இரசனையோடும், சுவாரஸ்யத்தோடும் தருகின்றன. பல வேளைகளிலும் உண்மைச் சம்பவங்களை இரசனையாக வழங்குவதில் யதார்த்த நாவல்களைப் பின்னுக்குத் தள்ளுகின்றன. இந்த சூழலில் இந்த நிழல்நாவல்களே யதார்த்த நாவல்களை விட    புதிய இலக்கிய இரசனையைத் தருவது வெளிப்படையாக விளங்கும்.

அப்படியானால் யதார்த்த நாவல்களுக்கென தனித்துவம் இல்லையா என்று கேட்டால், அதற்கான பதில் உண்டு என்பதுதான். 1980 கள் வரை  யதார்த்த நாவல்களுக்கு வேலை இருந்தது. அதாவது தற்காலம் போல காட்சிப்படுத்தல், ஆவணப்படம் தயாரித்தல் போன்றவற்றை விரைந்த நிலையில் உடனுக்குடன் பதிவுசெய்ய போதுமானளவு   வசதிகள் 1980 கள் வரை இல்லை. ஆனால் 1980 களுக்குப் பின்னர்  குறும்படங்கள் , நேரடிப்பேட்டிகள், தத்ரூபப் படங்கள், ஆவணப்படங்கள்,பத்திரிகை விவரிப்புகள் யதார்த்த நாவல்களை விடத் தெளிவாகப் பதிவுசெய்து விடத் தொடங்கின. அதற்குரிய சமூகவிளைவையும்  ஏற்படுத்திவருகின்றன. இத்தகைய சூழலில் நாவல்களில்  யதார்த்த எழுத்துக்கள் அல்லது சித்தரிப்புக்கள் தோல்வியடைந்து விட்டன. –மேலும்      பின்நவீனத்துவகாலத்திற்கும் அப்பால் எழும் நாவல்கள் புதுவடிவில் அமையவேண்டும் என்ற எதிர்பார்ப்பு தவிர்க்கவியலாது. அந்த எதிர்பார்ப்பை நடைமுறைப்படுத்துவனவாக நிழல் நாவல்கள்தாம் உள்ளன என்ற முடிவுக்கு வரஇயலுகிறது. அதற்கு முன்னோடியாக அமைபவை தமிழவன் நாவல்கள் என்பதே உண்மை.  நிழல்நாவல்கள் யதார்த்த்தையை இன்னொரு கோணத்தில் காட்டுகின்றன என்பதையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தம்

 

.இதுவரை தமிழவனின் நாவல்களின் பொதுப் பண்புகளாக நிழல் தன்மை அமைந்திருப்பது விளக்கப்பட்டது. இனி அவரது ஒவ்வொரு நாவலின் தனித் தன்மையை விளக்கிக் காட்டலாம்.

முசல்பனி – 2012 – ல் வெளிவந்த முசல்பனி என்ற நாவல் முதன் முறையாக நாவலின் இலக்கண தர்க்கங்களை உடைக்கிறது, அதில் வரும் பாத்திரங்களின் ஊடாகப் பழங்கால தமிழ் உலகமும், இன்றைய நவீன தமிழ் உலகமும் இணைக்கப்படுகின்றன. 100 பக்கங்களுக்குள் தமிழ் சரித்திரம்

நிழலாய் படிந்துக் கிடக்கிறது. ஆனால் தமிழர், தமிழகம் என்ற சொல் எங்குமே நேரடியாகக் கூறப்படவில்லை. தமிழ்நாட்டை தெமிலிகா எனக் குறிப்பிடுவதில் தொடங்கி இலங்கைத் தமிழர் படுகொலையைக் கூறுவதுடன் இந்நாவல் முடிவின்றி முடிவுறுகிறது. இந்நாவலின் நேரடியான சிறப்பினைக் கூறவேண்டுமென்றால் முதல் அத்தியாயத்திற்கும், அடுத்த அத்தியாயத்திற்கும் கதைத் தொடர்பு எதுவுமில்லை என்பதாகும். இருப்பினும் சிறுகதையின் தொகுப்பெனக் கூறவும் முடியாது. நாவலை எந்த இடத்திலிருந்து எப்படி வாசித்தாலும் அதற்கான சுவையுண்டு. நாவலை முழுமையாகப் படிக்காவிட்டாலும் ஒன்றிரண்டு பத்திகளை வாசித்தால் கூட அவற்றிலும் தனித்ததொரு சுவையைக் காணமுடிகிறது. இதுவே ஒரு கற்பனைத் திறனாகக் கொள்ளலாம்.

சரித்திரத்தில் படிந்த நிழல்கள் – “சரித்திரத்தில் படிந்த நிழல்கள்” முற்றிலும் புதுமையைக் கொண்ட நாவலாகக் காணப்படுகிறது. இந்நாவலைக் குறித்து எழுத்தாளரான குமார செல்வா ‘’இந்தியாவில் இதைப் போன்றதொரு நாவல் இதுவரை தோன்றியதேயில்லை என   அடையாளப்படுத்துகிறார். இந்நாவல் இரு விஷயங்களை நமக்குள் உணர்த்தும். அது என்னவெனில் பிரதிக்குஅப்பால் நம்மை ஏதேனுமொரு விஷயத்தைக் கண்டிப்பாகச் சிந்திக்க வைக்கும். மேலும், புராணங்கள் எவ்வாறு உருவாகின்றன, சரித்திரம் எவ்வாறு உருவாகிறது என்பதற்கான விடையாக இந்த நாவலே அமைகிறது.

சூரியப் புராணக் கோட்பாட்டை மார்க்ஸ்முல்லர்  விளக்கும்போது   வார்த்தைகள் எவ்வாறு ஒரு கதையை உருவாக்குகின்றன– என்பது குறித்து  குறிப்பிடுவார். சொல்ல வந்தது ஒன்று, அதைப் புரிந்துக் கொள்ளுதல் வேறொன்று என்ற கருத்தை   விளக்குவார். அவருடைய விளக்கத்தை இந்நூலில் காணமுடியும். எடுத்துக் காட்டாக, “அவன் கூறியவுடன் சொற்கள்

அனைத்தும் அங்குள்ள தூண்களின் பின்னால் சென்று ஒளிந்துக் கொண்டன” எனும் வரிகள் சூரிய புராணக்கோட்பாட்டின் நீட்சியாக அமைகின்றது.

அடுத்ததாக ஒரு சரித்திரம் எவ்வாறு உருவாகிறது? நாம் படிக்கும் சரித்திரம் சரித்திரமா?என்பதெல்லாம் நமக்குள் ஒரு கேள்வியை எழுப்பக் கூடிய ஒரு தன்மை இந்நாவலுக்கு உண்டு. இந்நாவலைப் படித்த பின் கட்டுரையாளருக்கு ஒரு புது வித சிந்தனைத் தோன்றலாயிற்று.

எடுத்துக்காட்டாக, கிருஷ்ணகிரி நகரத்தில்  பல இடங்களிலும் அந்நாளைய முதல்வர் ஜெயலலிதா குற்த்த  ஒரு விளம்பரம் இவ்வாறு ஒட்டப்பட்டிருந்தது. “கிருஷ்ணகிரி மக்களின்  தண்ணீர்தாகம் தீர்த்த தாயே வருக வருக!” எனும் இந்த விளம்பரத்தைக் கல்வெட்டில் பொறித்து வைத்தால் 100 ஆண்டுகளுக்குப் பின்னால் மக்கள் எப்படி நினைப்பார்கள். கிருஷ்ணகிரி மாவட்டமக்கள் ஜெயலலிதா  ஆட்சிக்கு வருவதை வரையிலும் தண்ணீர் குடிப்பதற்காக வெளிமாவட்டங்கள் சென்றுவந்தனர். ஜெயல்லிதா வந்த பின்னர்தான் மக்கள் நிம்மதியாக தண்ணீர் குடித்தனர் -என்ற தவறான புரிதல் ஏற்படும். அது போலத்தான்   நாம் படிக்கும் வரலாறும் வரலாற்றாசிரியர்களின் விருப்பு வெறுப்பிற்கேற்ப அவர்களது புரிதல்களுக்கேற்ப எழுதப்பட்டுள்ளது என்ற சிந்தனையை இந்த கட்டுரையாளர் மனதில் ஏற்படுத்தியது.

இந்நாவலில் சிறந்த வாசகமாக “எலி தன் கூட்டத்திற்கான தலைவனைத்

தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால், அவ்விடத்திற்கு ஒரு பூனையையே தேர்ந்தெடுக்கும்” என்ற வாசகத்தைச் சுட்டலாம். இதன் மூலம் நம் நாட்டு   மக்கள் தங்களது எதிரியையே தம் தலைவர்களாகத் தேர்ந்தெடுத்து வருகின்றனர் என்பது நகைச்சுவையாய் உணர்த்தப்படுகிறது.

இந்நூலில் பலரும் கவனிக்க தவறிய ஒரு நிகழ்ச்சி – “காயமுற்ற அரசி மருத்துவமனையில் சேர்க்கப்பட அவளது உடல் தினந்தோறும் ஊதி பெருத்து வர, மக்கள் கவலையுற்று தம் கடமையை மறந்தவர்களாய் அரசியையே எண்ணிக் கிடந்தனர்” இந்த காட்சியானது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் இறப்பினை நிகழ்காலத்தில் நினைவு கூறும் விதமாக உள்ளது. இந்நாவலில் தமிழகம் பற்றிய நிழல் சித்திரம் காணப்படுகிறது. நடைமுறையிலுள்ள கதாப்பாத்திரங்கள் நிழல் சித்திரங்களாய் காட்சியளிக்கின்றன. நிழல்கள் யார் என்று வாசிப்பறிவுக்

கொண்டவர்கள் மட்டுமே அறிந்துக் கொள்ள முடியும்.

வார்சாவில் கடவுள் – வார்சாவில் கடவுள்

தத்துவத்தை மையமிட்ட தமிழ் நாவல்கள் குறைவாக  இருக்க  இந்நாவல் பல தத்துவ சிந்தனைகளை எடுத்துப் பேசும்.- உலகின் பல நாடுகளை களனாகக் கொண்டிருக்கும்- பல்வேறு முறையில் கதை சொல்லும் உத்தி அமைந்திருக்கும். பெரும்பாலான கதாபாத்திரங்களும் இயல்புக்கு மாறாக அமைந்திருக்கும். இம்மாதிரி பல கருத்துக்களை இந்நாவல் குறித்து விளக்கிக் கொண்டே போகலாம் .

உலகளவில் புகழ் பெற்ற  சில நாவல்களில் கடவுளைப் பற்றியக் சிந்தனைகள் காணப்படும்.  உதாரணமாக,

நீட்சேவின் ஜரதுஷ்டா இவ்வாறு பேசினான் எனும் நாவல்  கடவுள்  இறந்து விட்டான் என்ற செய்தியை அறிவிப்பதுடன் மனிதன் அதீத சக்தியுடையவனாக மாற வேண்டும் எனும் கருத்தை முன்வைக்கும். ஹெர்மன் ஹெஸ்ஸேயின் சித்தார்த்தா எனும் ஜெர்மன் நாவல் கடவுளைக் காண முயற்சிப்பவனது கதை பற்றியதாகும். மதங்கள் ஒதுக்கித் தள்ளுகின்ற தேவரடியாளிடம் இறுதி உண்மையைக் கண்டடைகின்ற சித்தார்த்தனைப் பற்றி பேசும் .

இவை போன்ற ஒரு தத்துவ நிலைபாட்டை வார்சாவில் ஒரு கடவுள் கொண்டிருக்கிறது. இந்நாவலை வாசித்த பிறகு , கடவுளை நாம் தினந்தோறும் பார்த்து வருகிறோம். ஆனால் நம்மால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை என்ற உணர்வு வாசகனுக்கு ஏற்படுகிறது.

இந்நாவலிலுள்ள பல கதாப்பாத்திரங்களும் விசித்திரமானவை என்பது

குறிப்பிடத்தக்கது.  இதில் நர்ஸ் ஒருவருக்கு இரவில் மட்டுமே கண் தெரியும்,

சந்திரன் என்பவன் எங்கு தீ பற்றி எறிந்தாலும் அறியும் திறனுடையவன். மற்றொருவன் வீட்டின் மேற்கூரையை  உடைத்தவாறு பறந்துவிடுவான். தமிழ்நாவல்களில் விசித்திரமான பாத்திரங்களை  அதிகம் கொண்ட ஒரே நாவல் வார்சாவில் ஒரு கடவுளாகத்தான் இருக்க முடியும்.

தமிழவனது நாவல்களில் இயல்புக்கு மாறான விசித்திரமான பாத்திரங்கள் இடம் பெறுகின்றன என்பது ஆய்வுக்குரிய ஒன்று .

 

முக்கியமாக நாவலாசிரியர் தமிழவன்   கதையில் எந்த இடத்திலும் தன்னைப் புலப்படுத்துவதில்லை. இருப்பினும் சில நாவல்களின் இடையில் அவரே வலிய வந்து விளக்கம் தருவார். இது நமக்கு சிரிப்பளிக்கும்.. இதைக் குறிப்பிடக் காரணம் உண்டு. தமிழுலகில் நவீனத்துவ நாவல்கள் எழுதிய நகுலனின் படைப்புகளையும், அவரது வாழ்க்கையையும் ஆராய்ந்து பார்த்த மாரியப்பன் என்கிற   ஆய்வாளர் நகுலனின் வாழ்விற்கும், அவருடைய வாழ்விற்கும் எந்தவொரு இடைவெளியும் இல்லையென்றுக் கூறுகிறார். நகுலன் தான் அவருடைய படைப்புகளில் வருகிறார். ஆனால் தமிழவனுக்கும் அவரது நாவல்களுக்கும் தொடர்பில்லை.

ற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்  இந்நாவல் மூன்று

தலைமுறைகளைக் காட்டுவதுடன் அவற்றில் நிகழ்ந்த மாற்றங்களை மிக சூட்சமமாகச் சித்தரிக்கிறது. அதில் முதல் தலைமுறையினர் 100 வருடங்களுக்கு முந்திய காலத்தவர். அச்சமூகத்தினர் மாந்திரீகம், பில்லி சூன்யம் என்பவற்றிற்கு முக்கியத்துவம்  கொடுத்தவர்களாவர். இரண்டாம் தலைமுறையினர் அறிவியல் கண்டுபிடிப்புகளால் பயன்பெறும் சமூகம். இச்சமூகம் மாந்திரீகம் மற்றும், விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகம். மூன்றாம் சமூகம் அறிவியல் உண்டு- ஆனால், மாந்திரீகம் இல்லையென்றுக் கூறும் இயல்புடையது. இம்மூன்று சமூகத்தையும் ஒன்றாக இணைத்துக் காட்டி ஒவ்வொரு சமூகமும் கொண்டுள்ள சமூகவிழுமியம் எது என்பது குறித்து வாசகனைச் சிந்திக்கச் செய்கிறது நாவல்.

குறிப்பாக அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பழம் சமூகம் முதன்முதலில் எவ்வாறு எதிர்கொண்டது என்பதைப் பற்றிய இந்நாவலின் சித்தரிப்புகள் வரலாற்று நூல்கள் பதிவு செய்யாதவை ஆகும். மின்சாரத்தால் பேய்கள் தம் இருப்பிடம் விட்டு அகன்றமை, மின்சாரத் தாக்குதால் இறப்புக்குக் காரணம் பேய் , டாக்டர் அணிந்திருக்கும் ஸ்டெதெஸ்கோப் நோய்க்குக் காரணமான ஆவிகளைப் பிடித்துச் செல்லப் பயன்படும் கருவி என்றெல்லாம் மக்கள் எண்ணியிருந்ததைப் பதிவுசெய்துள்ளது இந்த நாவல். அதாவது யதார்த்தங்களைப் பதவி செய்துள்ளது.

இருபதாம் நூற்றாண்டில் 1960 கள் வரை மக்கள் பொதுவாக எந்த மாதிரியாக வாழ்ந்தனர் எனும் யதார்த்தத்தை இந்த புனைவுநூல் அழகாகச் சித்தரிக்கிறது.

ஆக தமிழவனது எல்லா நாவல்களுமே தமக்கென பொதுவான குணங்கள் கொண்டிருக்கின்றன-அவற்றை நிழல்நாவல்கள் என்ற தனி வகைப்பாட்டிற்குள்தான் அடக்கமுடியும். இந்த வகைபாட்டை பின்பற்றி தற்பொழுது குறிப்பிடத்தக்க நாவல்கள் தோன்றியுள்ளன. அது போலவே தமிழவனது ஒவ்வொரு நாவலுமே தனிப்பட்ட சிறப்பான கூறுகளைக் கொண்டுள்ளன என்பதும் அவை முற்றிலும் பிற தமிழ் நாவல்களினின்றும் விலகியே காணப்படுகின்றன என்பதும் வெளிப்படை.

தமிழவனுடன்மலையாள எழுத்தாளர்,எம்.கே.ஹரிக்குமார்

தமிழவனுடன்மலையாள எழுத்தாளர்,எம்.கே.ஹரிக்குமார்

 

மலையாள விமரிசகரும் எழுத்தாளருமான எம்.கே.ஹரிக்குமார் நடத்திய நேர்காணல் இது. (ezhuth online –இல், ஆங்கிலத்தில், 2011 – இல், பிரசுரமானது.)

 

 1. உங்கள் எழுத்துத் தத்துவம் எது?

பதில்: தன்னளவில் எனக்கு எழுத்து பற்றிய ஒரு தத்துவம் இல்லை, தத்துவம் என்று நீங்கள் சில விதிமுறைகளைக் கருதுவதாக இருந்தால், காம்யுவுக்கு எக்ஸிஸ்டென்ஷிய லிசம் என்ற ஒழுங்கான தத்துவம் இருந்ததுபோல், எனக்கு ஒரு தத்துவம் இல்லை. நான் கருதுகிறேன், என் போன்ற பல தமிழ் எழுத்தாளர்கள், எங்கள் சூழலால் பாதை காட்டப்படுகிறோம் என்று. என் சூழலில் நான் என்னை இழக்கிறேன். என் பின்னணியானது எழுந்து வந்து என் மூலம் எழுதுகிறது. என் பின்னணி என்று நான் சொல்லுவது எது என்று தெரிகிறதா, என் மொழியும் சமூகமும்.

 

அப்படிப்பார்த்தால் என் தத்துவம் என்பது நான் ஒருவித முனைப்பிலிருந்து என்னை விடுபட வைக்கிறேன் என்பதுதான். ஏனெனில் நாம், இன்று, மனிதர்கள் ஒருவித பின் – நவீன நிலமையில், சூழலில் நம்மை இழந்துள்ளோம். என் சூழல், மார்க்சியத்தையும் சமயத்தையும் மனித குலத்தின் கடைசிப் புகலிடமாகக் காட்டலாம். அவர்களுக்கு  மார்க்சீயக் கனவும் மதம் பற்றிய கனவும் (பிரமைகள்) இருந்தால். இந்த இரண்டு Motif – உம் என் நாவல்களிலும் (சில நாவல்களும் சிறுகதைத் தொகுப்புகளும்) விமரிசனக் கட்டுரைகளிலும் இருக்கும். நாங்கள் இளைஞர்களாக இருந்தபோது எல்லோருக்கும் உறுதியான தத்துவம் இருந்தது.

 

 1. எழுதுவது ஒரு விதியா?

பதில்: தமிழில் நாங்கள் எல்லோரும் பெரியாரால் உருவானவர்கள். எங்களுக்கு அவர் பிரச்சாரம் செய்தது ஒருவித மேற்கத்திய பகுத்தறிவுவாத தத்துவம் என்பது தெரியாதபடி வளர்ந்திருந்தாலும். நான் 40 வருடங்களாய் எழுதுவதை – அதை விதியால் எழுதுகிறேன் என்று சொல்வது சற்று பழைய சிந்தனை; அதுவும் என் எழுத்து, அதிகமும் சிறு இதழ்களில். பொதுவான தமிழ்வாசகர், எங்கள் மாதிரி எழுத்தை அறியமாட்டார். நான் 1982-இல் 365 பக்க நூலான ஸ்ட்ரக்சுரலிசம் எழுதினேன். அப்போது பல கலைச்சொற்களை உருவாக்குவது கடினமான வேலை. இப்போது தமிழ் விமர்சகர்கள் அதில் வந்த பல சொற்களை உபயோகிக் கிறார்கள். மலையாளம் போலன்றி, தமிழ் தன் பல மேல்சட்டை பாக்கெட்டுகளில், தன் எழுத்தாளர்களை ஒளித்து வைக்கிறது. பான்ட் பாக்கெட்டிலும் கூட – குழந்தைகள் இனிப்பை ஒளித்து வைப்பதுபோல. பல முக்கியமான தமிழ் எழுத்தாளர்களை வெகுவான தமிழர்களுக்குத் தெரியாது. இப்படிப்பட்ட நிலைமையில் எழுதுதல் என் விதி என்று எப்படிச் சொல்ல முடியும்? நாங்கள் எழுதுகிறோம். அவ்வளவுதான். ஒருவித ‘மைனாரிட்டி எழுத்தை’ எழுதுகிறோம், டெலுஸ் என்னும் பிரஞ்சு தத்துவவாதி, பயன்படுத்தும் ஒரு சொல்லாட்சியைப் பயன்படுத்திப் பேசமுடியும்  என்றால்…….

 

 1. பண்பாடுகளுக்குள் புகுந்து எழுதுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: வேறு முறையில் ஹைப்ரிட் (கலப்பு) எழுத்து என்கிறார்கள். அல்லது புலம்பெயர் எழுத்து அல்லது காலனி திரும்பி எழுதுகிறது. தமிழ்ப் பொது வாசகர் களுக்குத் தெரியாத ‘அண்டர்கிரவுண்ட் எழுத்தாளர்கள்’( தீவிரவாதிகள் என்று பொருளில்லை) ஒரு வித ஹைப்ரிட் எழுத்தை எழுதுகிறார்கள். ஏனென்றால் எல்லோரும் மேற்கின் பாதிப்பால் எழுதுகிறார்கள். ரஷ்டி, அல்லது அருந்ததி ராய்க்கு மேற்கினர் இலக்கிய விருது கொடுக்கும்போது மேற்கினர், கிழக்கு நோக்கி வருகிறார்கள். நாமும் மேற்கு நோக்கிப் போகிறோம். அதனால் ‘ஹைப்ரிடிடி’ ஒரு கற்பனை மாதிரியான குணமாக நம்மைக் கவராது போலும். ஆனால் எனக்கு ஸல்மான் ரஷ்டியும் அர்விந்த் அடிகாவும் பிடிக்கின்றன. சில காலம் முன்பு ஒரு விவாதம் நடந்தது. நான் அடிகாவைப் பிடிக்கும் என்றேன். ஏனெனில் அவர், நல்ல அழுத்தமான காற்றை எழுத்தில் தருகிறார். தமிழ்ப் பத்திரிக்கை எழுத்துக்கு மாற்றானது தானே அது; தமிழ்ப் பிராமணப் பெண்கள் வாசித்து இலக்கியச்சூழலை உருவாக்கிய Pulp fiction போன்ற எழுத்துக்கு மலையாளிகள் பைங்கிளி சாகித்தியம் என்பார்கள். அவர்கள், அனைத்திந்திய இலக்கிய விமரிசனத்துக்கு அச்சொல்லைத் தந்தனர்.

 

 1. ஸெஸ்ஸிபிலிட்டி மற்றும் ஐடன்டிடி என்னும் சொற்களை மதிப்பிடுங்கள்.

பதில்: எனக்கு இவ்விரண்டு சொற்களும் தத்தமக்குள் உறவுடையவை தாம். ஸெஸ்ஸிபிலிடி கொடூரமான உலகிலிருந்து உணர்விழக்க வைக்கிறது. மார்க்ஸ், கொடூரமான உலகத்தில் சமயம் ஆறுதல் அளிக்கிறதென்றார். அதே பொருளில் ஸென்லிபிலிட்டி என்பது அடையாளத்துக்கு(ஐடன்டிடி) நிர்தாட்சண்யமில்லாமல் தூண்டி விரட்டுகிறது. இனம், மொழி, தேசம், மதம் அப்படித்தான் வருகின்றன. இலக்கியம் ஸென்ஸிபிலிடி பற்றிப் பேசும்; ஸென்ஸிபிலிடி தனிநபர் சார்ந்தது;  அடையாளம் (ஐடன்டிடி) சமூகவயமானது.முன்பத்திய காலத்தில் ஸென்ஸிபிலிடியை எழுத்தாளர்களுடன் இணைத்துப் பேசுவார்கள். இப்போது அப்படிச் சொல்லமுடியாது. ரோலாண்பார்த், சார்த்தருடைய Commit ment (அதாவது எழுத்தாளன் நன்மையைக் கொண்டுவருகிறான் என்று) என்ற எண்ணத்தை மறுத்தார். ஸென்ஸிபிலிட்டி இலக்கியம் படிக்கும் வாசகர்களுடையது. பார்த், இதை மறுத்து வாசிக்கிறவன் உணர்வுவாதி ஆவதில்லை, அந்த உணர்விலிருந்து தப்பி neutral ஆகிறான் என்றார். ஒரு வாசகன் தன் ஸென்ஸிபிலிட்டியிலிருந்து தப்பி Neutral ஆகிறதுதான் ஒரு படைப்பைப் படிக்கையில் அவன் அடையும் மாற்றம். மோசமான எழுத்தாளர்கள் தம் கருத்தைப் பிரச்சாரம் செய்ய ஏன் முயலகிறார்கள் என்றால் neutral – மனநிலை என்னும் தத்துவ ஸ்தம்பித்தலை அவர்கள் அறிவதில்லை. நான் போராட வேண்டுமா, வேண்டாமா, என்று தேர்வு செய்கையில் அது என் சுயமான தேர்வு. படைப்பாளி கொஞ்சம் ஒளியைப் பாய்ச்சலாம். உண்மையில், வாசகர் பிரதியிலிருந்து வெளியே வருகையில், தீர்மானம் எடுக்கிறார். நான்,  நடிகர்கள் பொது வாழ்க்கையில் ஏழைகளை ஏமாற்றும் ஒரு மொழியிலிருந்து வருகிறேன். நாயகன் வில்லனை அடிக்கிறான். மக்கள் ஏமாறுகிறார்கள். வில்லனை அடிப்பவனை முதலமைச்சராக்குகிறார்கள். எனவே ஸெஸ்ஸிலிபிலிட்டி ஆபத்தானது. நான், அதனை மறுஉருவாக்கம் செய்ய வேண்டும் என்கிறேன். அப்படி மறுஉருவாக்கம் பெறும் கருத்து, ஐடன்டிடி (அடையாளம்); தமழில் உள்ள புலம்பெயர் எழுத்தும் அடையாள எழுத்து. தமிழில் இது இன்று முக்கியமானது.

தமிழ்ப்புனைவின் தனிப்பாதையில் தமிழவன்

தமிழ் நாவல்களின் தனிப்பாதையில் தமிழவன்

க. முத்துக்கிருஷ்ணன்

(நாவலாசிரியர் . முத்துக்கிருஷ்ணன் சென்னையிலிருந்து வரும்புதுப்புனல்மாத இதழில் (April –May 2018) எழுதிய கட்டுரை. )

தமிழவன் அவர்கள் இலக்கியம், விமர்சனம், பல்கலைப் பேராசிரியர், நவீனத்துவம் ஆகிய பல் துறைகளில் தனக்கென ஓர் இடம் பதித்திருப்பினும் நாவலாசிரியர் என்னும் வகையில் தமிழில் முற்றிலும் மாறுபட்ட வித்தியாசமான படைப்புகளைத் தந்தவர் என்று சொல்லத்தக்க விதத்தில் அவருடைய பல நாவல்கள் அமைந்துள்ளன.

1970களில் புதுக்கவிதையில் தனது கவனத்தைச் செலுத்தி வந்த தமிழவன் மெல்ல மெல்ல ஒரு விமர்சகராக உருவெடுத்துப் (இருபதில் கவிதை என்னும் நூல்) பின்னர் புத்துத்திகளைக் கையாண்டு நாவல்கள் படைத்தலின் மூலம் ஐரோப்பிய, அமெரிக்கா, துருக்கிய நாவல் இலக்கிய வளர்ச்சிக்கு ஈடாகத் தமிழில் நாவல் இலக்கியத்தை ஒரு முன்னோக்கிய பாதையில் வழி நடத்த முனைந்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். கவிதை, நாடகம், விமர்சனம் என்ற வகைமைகளைத் தாண்டி இவரது நாவல்கள் பரிணமிக்கின்றன. சாதாரண, பாமர மக்களின் வாழ்க்கையிலிருந்தும் இன்றைய அரசியலாளர்களின் போக்கு குறித்தும் இன்னும் பன்னாட்டு கலாச்சாரம், அரசியல், இலக்கியம் ஆகியவற்றிலும் இவரது நாவல்கள் ஊடாடிச் செல்வதை வேறெந்த நாவலாசிரியர்களிடம் தமிழில் காணக் கிடைக்கப் பெறவில்லை. பெரியதொரு அரசியல் விவரணையை ஒரே ஒரு பக்கத்தில் குத்தீட்டியாய் அவரால் விவரிக்க முடிகிறது. இதுவே தமிழவனின் தனிச் சிறப்பு.

தொல்காப்பியம் போன்ற மிகப் பழமையான இலக்கண நூல்களின் பாரம்பரியத்தில் தமிழில் புதுப்புது இலக்கியங்களை உருவாக்குவதில் தன் வாழ்நாட்களின் பெரும்பகுதியைச் செலவிட்டார். அதனைக் காட்டிலும் உருவாக்குதலைவிட பழமையிலிருந்துப் புதுமையை மீட்டெடுத்தார் என்றே சொல்லலாம்.

நாவல்கள் என்றாலே ஒரு ஸ்டீரியோ டைப் என்ற நிலையில் தமிழில் இருந்ததை மாற்றி புதுவிதமான மொழி நடையுடனும் எந்தவொரு கருப்பொருளையும் கையாளலாம் என்ற தைரியத்தையும் உருவாக்கினார்.

“இலக்கியம் வாழ்க்கையின் சகல பரிமாணங்களையும் உள்ளடக்கியது. சாதாரண மனிதனும் அதில் ஈடுபட முடியும். அந்த முறையில் இலக்கியத்துக்குள் இருந்த ஒரு பரிமாணம், தமிழர்கள் பற்றிய அகில உலக கரிசனை”

என்று தமிழவன் ‘தமிழுணர்வின் வரைபடம்’ என்ற தனது கட்டுரைத் தொகுப்பின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். இச்சொற்களிலிருந்து தமிழிலக்கியம் பற்றி தமிழவனின் கரிசனம் புரியும்.

சரித்திரத்தில் படிந்த நிழல்கள், ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள், வார்சாவில் ஒரு கடவுள் ஜி.கே. எழுதிய மர்ம நாவல், முஸல்பனி ஆகிய நாவல்களைத் தொடர்ந்து ‘ஆடிப்பாவை போல’ என்ற நாவலைத் தற்சமயம் வெளியிட்டிருக்கிறது எதிர் வெளியீடு.

நாவல்கள் எல்லாமே, ஏதோ ஒரு முன்னுரையைப் பெற்றிருக்கும், அல்லது விளக்க உரையை விவரித்திருக்கும் அல்லது அவற்றில் சரித்திரப் பின்னணி சான்றுகளுடன் சொல்லப்பட்டிருக்கும். இந்த, ‘ஆடிப்பாவை போல’ என்ற நாவலில் ஆசிரியரின் முன்னுரை ஏதுமின்றி வாசிக்க வழிகாட்டல் என்ற வழிகாட்டுதல் வழங்கப்பட்டிருக்கிறது. அதில் மூன்று வகைகளில் இந்த நாவலைப் படிக்கலாம் என்றும்  வழிகாட்டுதல் வழங்கப்பட்டிருக்கிறது. அதில் மூன்று வகைகளில் இந்த நாவலைப் படிக்கலாம் என்றும் முதல் வாசிப்பு, இரண்டாவது வாசிப்பு, மூன்றாவது வாசிப்பு என்று மூன்று வகை வாசிப்பு முறைகளை வகைப்படுத்தியுள்ளது. இது ஒரு புது முறையாக நாவலை நெருங்கும் ஓர் அணுகலை உணர்த்துகிறது. இது தமிழுக்கு ஒரு புதிய முறையாகத்தான் தோன்றுகிறது.

அடுத்து, தமிழில் இதுவரை வெளிவந்த எல்லா நாவல்களும் 1, 2, 3 என அத்தியாயங்களாகப் பகுக்கப்பட்டிருக்கும். அல்லது பல தலைப்புகளைத் தாங்கிய அத்தியாயங்களாக அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் ஆடிப்பாவை போல என்ற இந்த நாவல் பண்டையத் தமிழ் இலக்கண வகைக் கோட்பாடுகளான அகம் புறம் என பகுக்கப்பட்டுள்ளன. அதனுள் வரும் பிரிவுகளாக களவியல், கற்பியல் என்ற இலக்கிய வகைமைப் பிரிவுகள்போல இயல் 1, 2 என 19 வரை நீளுகிறது. இது திருக்குறளின் களவியல், கற்பியல் போன்ற பாகுபாட்டினை நினைவு கூர்கிறது. பழந்தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்களின் அடிச்சுவட்டில் அமைக்கப்பட்டிருத்தல், பழைமையிலிருந்து புதுமையினை மீட்டெடுத்தல் என்ற புதிய கண்டுபிடிப்பைக் காண முடிகிறது.

பண்டைய தமிழ் இலக்கணக் கோட்பாட்டின்படி அகம் என்றால் காதல், புறம் என்றால் வீரம் என்றும் பல தமிழ் அறிஞர்கள் பல கட்டுரைகளில் தமிழர்களின் வீரம் பற்றியும் காதல் பற்றியும் விவரியோ விவரி என்று விவரித்துத் தள்ளியிருக்கிறார்கள். இந்நாவலில் காந்திமதி, வின்சென்ட் ராஜா ஆகிய இருவரின் காதல் அகம் என்ற உள்ளடக்கத்தில் வருவதாக நாவல் படிப்போரை நினைக்க வைக்க முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல இந்தி எதிர்ப்புப் போர் என்பதைத் தமிழர்களின் வீரத்தை விவரிக்கும் பாணியில் புறம் என்ற பகுப்பில் வைக்கப்பட்டிருக்கிறது. அதையும் தாண்டி அகமும் புறமும் கலந்து ஓர் அகப்புற இலக்கியமாகவும் ஒரு புற, அக இலக்கியமாகவும் விரவிப் பின்னி ஊடாடிக் கிடந்து கதை 1960-70களின் தமிழ் இளைஞர்களின் வாழ்க்கையைத் தத்ரூபமாகப் படம்பிடித்துச் செல்கிறது. இது ஒரு புதுமை உத்தி என்றே படுகிறது. இது ஒரு 1960-70களின் சரித்திர நாவல் என்றுகூட சொல்ல வைக்கிறது. இடையில் கிருபாநிதி, ஹெலன், காதல் கதை எதற்காகச் சொல்லப்பட்டிருக்கிறது என்ற பூடகம் இறுதியில் சில இயல்களால் (அத்தியாயங்களால்)கூறப்படுகிறது. ஊன்றி நாவலைப் படித்தவர்களால் அந்த சூட்சுமத்தைப் புரிந்து கொள்ள இயலும்.

அகப்பொருள் தொடர்பான காதல் கதை என்றாலும் வின்சென்ட் ராஜா, காந்திமதியின் காதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்னும் புறப்பொருள் தொடர்பான போர் என்று வீரத்தன்மை கலந்த நிகழ்வுகளோடு இயைந்து கதையோட்டம் நிகழ்கிறது. அதனைப்போலவே புறப்பொருள் தொடர்பான இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்ற வீரத்தன்மை கலந்த நிகழ்வுகளோடு வின்சென்ட் ராஜா, காந்திமதியின் காதல் கதை ஊடாடிச் செல்கிறது என்பதுதான் இந்நாவலின் சிறப்பம்சம். ஆயினும் ஆசிரியர் அகம்புறம் எனப் பிரிந்து இயல்களாக வெவ்வேறு கதைகள் என்று காட்டினாலும் இரு கதைகளும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து கதையை இலாவகமாக விஸ்தரித்துச் செல்கிறது. புதியதொரு உத்தி என்று அகம்,புறம் இயல்களைக் குறிப்பிட்டாலும் கதை ஒன்றோடொன்று தொடர்புடையதாய் இருப்பதை படிக்கும்போது நன்கு உணர முடிகிறது.

தமிழவனின் பிற நாவல்களிலிருந்து ‘ஆடிப்பாவைபோல’ என்ற நாவல் எவ்வாறு வேறுபட்டுத் திகழ்கிறது என்பதை உற்று நோக்கினால் இது மிக எளிதான காதல் கதை போன்றும் ஒரு போராட்டத்தை (இந்தி எதிர்ப்பு) விவரிப்பதாகவும் தோன்றும். உள்ளுக்குள் புதியதான உத்தி பின்பற்றப்பட்டிருக்கிறது என்பதை இந்த நாவல் எங்கிருந்து பிறப்பெடுக்கிறது என்பதைக் கவனித்தால் நன்கு புலப்படும்.

நாவலின் கடைசி இயலில் கடைசி பத்திக்கு முந்தின பத்தியின் கடைசி வரியில் வின்சென்ட் ராஜா, “ஒரு நாவல் எழுதியிருக்கிறேன்” என்று வெட்கப்பட்டுக் கொண்டு காந்திமதியிடம் சொல்கிறான் என்று நாவலாசிரியர் விளக்குகிறார். இதில் ஒரு நாவல் எழுதியிருக்கிறேன் என்று ஒரு பாத்திரம் அதுவும் கதாநாயகன் சொல்வதன் உள்ளர்த்தம் என்ன என்பதைச் சிந்தித்தால் கதாநாயகன் எழுதிய நாவலைத் தான் நாவலாசிரியர் இதுவரை சொல்லியிருக்கிறார். ஆடிப்பாவைப் போல என்ற குறுந்தொகை வரியை நினைவு கூர்ந்தால் அவன் எழுதிய நாவலை இவர் சொல்லியிருக்கிறார் என்ற புதிதான ஓர் உத்தியை, உத்திபோல் தோன்றாதவாறு புகுத்தியுள்ளார். ஆடி, அதாவது முகம் பார்க்கும் கண்ணாடியில் தெரியும் உருவம் எந்த உருவம் பார்க்கிறதோ அந்த உருவத்தைத்தான் பிரதிபலிக்கும். வின்சென்ட் ராஜா என்ற கதாபாத்திரம் எழுதிய நாவலை நாவலாசிரியர் பிரதிபலிப்பதாக இதனைக் கொள்ளலாம். வின்சென்ட் ராஜா என்ற பாத்திரம், நாவலாசிரியர் படைத்த பாத்திரம் என்றபோதும்   தமிழவன் உள்ளுக்குள் ஒன்று பிரதிபலிப்பது போன்ற ஒரு சுழலும் உத்தியைப் பயன்படுத்தியிருக்கிறார்.

பக்கம் 47இல் ஒருத்தன் அடி முட்டாள், இன்னொருத்தன் வடிகட்டின முட்டாள் என்ற அரசியல்வாதிகளின் விவரிப்பு நாவலாசிரியரின் துணிவை ஒரு தூக்கலான நகைச்சுவை உணர்வுடன் சொல்லப்பட்டிருப்பது நாவல் கலையின் வல்லமையை நாவலாசிரியர் கைவசம் வைத்துள்ளார் என்பதை நிலைநாட்டுகிறது. இதனைப்போல பல நிகழ்வுகளைச் சொல்லலாம்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பேருந்து எரிப்பு, மக்களின் அவதி, மாணவர்கள் மீது காவல்துறையின் தடியடிப் பிரயோகம் எல்லாம் 1964இல் நடந்த நிகழ்வுகளை இந்தத் தலைமுறையினருக்கு லாவகமாகத் தகவல்களை ஒரு மாபெரும் சரித்திரத்தை விளக்குவதுபோல விளக்கியிருக்கிறார் தமிழவன்.

தமிழில் நாவல் இலக்கியம் தோன்றி சற்றொப்ப ஒரு நூற்றைம்பது ஆண்டுகள் பல்வேறு வளர்ச்சியைப் பெற்றுள்ளது. எனினும் முதல் நாவலான ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ புனை கதைகளாலான நகைச்சுவை நிகழ்வுகளால் நகர்த்திச் செல்லப்படுவனவதாகவே அமைக்கப்பட்டுள்ளது. அதன் பின் வந்த ‘கமலாம்பாள் சரித்திரம்’ மற்றும் ‘பத்மாவதி சரித்திரம்’ ஆகிய நாவல்கள் சமூக விழிப்புணர்வையும் சமுதாயச் சிக்கல்களையும் தீவிரமாகப் பேசத் தொடங்கின எனலாம். அதன் பின்னர் துப்பறியும் நாவல்களும் வெற்றுக் கற்பனைப் புனைவு நாவல்களும்  தோன்றின. பின்னர் வரலாற்று நாவல்கள் மக்களின் மனதில் இடம் பெற்று நாவல் படிக்கும் பழக்கத்தைப் பரவலாக விரிவாக்கியது. அதனைத் தொடர்ந்து நீதிக்கதைகள் பாணியில் கட்டுரை வடிவிலான நாவல்கள் பல தமிழ்ப் பேராசிரியர்களால் எழுதப்பட்டன. அவை நாவல் இலக்கியத்தின் நுண்மையை உணர்த்துவதாக அமையவில்லை. இதிலிருந்து ஜெயகாந்தனின் நாவல்கள் மாறுபட்டபோதிலும் தமிழ் நாவல் உலகில் பிற எவராலும் புதியதொரு பாதையை வகுத்திட இயலாமல் போயிற்று. சுந்தர ராமசாமி, நீல. பத்மநாபன், லா.ச. ராமாமிர்தம் ஆகியோர் புதிய முயற்சிகளில் வெற்றி பெற்றார்கள். எனினும் அதனைத் தொடர்ந்து மேலைநாடுகளில் வளர்ச்சி பெற்ற அளவிற்கு நாவல், இலக்கியம் தமிழில் வேரூன்றாத நிலையில் தமிழவனின் நாவல்கள் மேலை நாடுகளின் நாவல்களின் தரத்திற்கு ஈடான படைப்புகளாகத் திகழ்கின்றன. இதுவே தமிழவனின் விடா முயற்சியின் விளைவாக இன்று தமிழவனின் இலக்கிய வகைமையைப் பின்பற்றியவர்களும் படிப்பவர்களும் அதிகமாகிக் கொண்டே செல்கின்றனர் என்பது உணரத் தக்கது.

ஓரான் பாமுக் (Orhan Pamuk)என்ற துருக்கிய நாவலாசிரியர் எழுதிய  ‘ஸ்னோ’ என்ற நாவலில் கவிஞன் கா என்கிற கதாநாயகன், தான் செல்லுமிடங்களில் சந்திக்கக் கூடிய பாத்திரங்கள் வாயிலாக அந்த நாட்டின்,  அந்த நகரத்தில், உள்ள கொடுமைகள், மனித மனங்களின் சீரழிவுகள், மக்களின் ஆசாபாசங்கள், அறிவார்ந்த செயல்பாடுகள், தவிர்க்கவியலாத காம இச்சைகள் போன்ற மிகச் சாதாரணமாக மனித மனங்களில் ஊடாடிக் கிடக்கும் விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு நாவல் படுவேகமாக நகர்ந்து செல்கிறது என்பது டிசம்பர் 2014இல் கணையாழில் வெளிவந்துள்ள ‘பனி படித்ததில் பதிந்தவை’ என்ற எனது கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது. ‘சரித்திரத்தில் படிந்த நிழல்கள்’ என்ற தமிழவனின் நாவலில் சாதாரண தமிழ் மக்களின் வாழ்க்கையோடு இயைந்த மனப் போராட்டங்களையும் மனித மனக்கிலேசங்களையும் மிகவும் அற்புதமாக மிகவும் வித்தியாசமான தமிழ்மொழி நடையில் விவரித்துச் செல்லும் பாங்கு தமிழில் புத்தம் புதிய ஒன்று.

காப்ரியல் கார்ஸியோ மார்க்யுஸ் என்ற நோபல் பரிசு பெற்ற ஸ்பானிஷ் நாவல் ஆசிரியர் எழுதிய ‘One hundred years of solitude’’ என்ற நாவலுக்கு இணையாக மாறுபட்ட வடிவம் நடை கொண்ட நாவலாக தமிழவனின் ‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’(1985) என்ற நாவலைத் தயக்கமேதுமின்றிச்  சொல்லலாம். ஒரு வாரிசுப் பட்டியலுடன் வம்சா வழியினரின் பெயர்கள் அடங்கிய அட்டவணையுடன் One hundred years of solitude  நாவல் துவங்குகிறது. ஐந்து தலைமுறைகளின் பரம்பரையின் கதை தமிழவனின் ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் நாவலில் சொல்லப்படுகிறது. இது கணையாழி ஜூலை 2014 இதழில் வெளி வந்துள்ள ‘காபோ என்கிற மார்க்கேசும் கார்லோஸ் என்கிற தமிழவனும்’ என்ற என் இன்னொரு கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  மார்க்கேசும் தமிழவனும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள நாவல்களில் சமுதாயம், அரசியல், மனிதமன வீழ்ச்சிகளை நேரடியாகக் கூறாமல் வேறொரு புதிய மொழி நடையில் மறைமுகமாகக் கூறுகின்றனர்.

மார்க்கேஸின் கதைகள் உயர்மதிப்புடையதாகவும் அதன்விஷயங்கள் அதிர்வு ஏற்படுத்துவதாகவும் மிக்க நம்பிக்கை அளிப்பதாகவும் சொல்வளம் மிக்கதாகவும் திகழ்கின்றன எனவும் ஒரு வார்த்தையைக்கூட அதனின்றும் நீக்கிவிடமுடியாத மாயஎதார்த்த தன்மைகொண்டதாகத் திகழ்கின்றன என்றும்  ஜான் அப்டைக் (John Updike) என்பவர் கூறுகிறார்.( “The stories are rich and startling in their matter and… confident and elegent in their manner… They … the word cannot be avoided – magical” ). இக்கூற்று, தமிழவன் நாவல்களில் பெரிதும் பொருந்தி வருகிறது. ‘ஆடிப்பாவை  போல’ நாவலும் இதனின்று தவறவில்லை. அதனைப்  போலவே  ‘One hundred years of solitude’ என்ற மார்க்கேஸின் நாவல் பற்றி கரோலினா ஹொரிரா என்ற விமர்சகர் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

“It’s the most magical book I have ever read, Marquez has influenced the world”. இக்கூற்று  தமிழவனுக்கும் பொருந்துவதாக அமைந்துள்ளது. மாக்கேஸின் நாவல்கள் உலகளாவிய அளவில் ஆதிக்கம் ஏற்படுத்துகிறது போலவே தமிழுலகில் தமிழவனின் நாவல்கள் பெரியதொரு செல்வாக்கை அல்லது பாதிப்பை உருவாக்குகின்றன.

ஆப்பிரிக்காவிலுள்ள ஐரோப்பியர்களைப்பற்றி புதுவகையான அணுகல்முறையில் அன்பின் விவரிப்பும் ஒரு புதிய உருவாக்கமுமாகபிரஞ்சுமொழியில் புது அலை ஏற்படுத்தும் நாவலென்றும் லெகிளசியோவின் நீண்ட இலக்கியப்பணியில் மிகவியப்பிற்குரிய உன்னதங்களில் ஒன்று என்றும்(“An uncharacteristically accessible and romatic narative about Europeans in Africa from one of the avatars of the French New wave novel… The most surprising work of Le clezio’s long career, and one of his best”)

மாதமிருமுறை நியூயார்க்கிலிருந்து ,1933லிருந்து, வெளிவரும் Kirkus Review என்ற பத்திரிகையில் நோபல் பரிசு பெற்ற ஜே.எம்.ஜி. லெகிலேஸியோவின் நாவலான ஒனிஸ்ட்டா  (Onitsha)என்பது பற்றிக் குறிப்பிடுகிறார் அதன் மதிப்புரையாளர். இக்கூற்றும் தமிழவனின் எழுத்துக்களுக்கு மிகவும் பொருந்தி வருகிறது என்பது கவனிப்பிற்குரியது. ‘லெ பீரான்ஸ்வெர்பல்’ என்ற தலைப்பில் பிரெஞ்சு மொழியிலும் ‘இன்ட்ரோகேஸன்’ என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும் லெ கிளேஸியோ எழுதிய நாவலில் ‘பல்லாண்டுகால அறிவுசார்ந்த விஷயங்களும், தத்துவ ஊடாடல்களும், மனித மன சஞ்சலங்களும், வாழ்வைத் தேடித் திரிந்து அலைதலையும் படிப்பவர்கள் சிந்தனைத் தாக்கத்திற்குள்ளாக்க வேண்டும் என்ற பேரீடுபாட்டையும் காணலாம்’ என்று மார்ச் 2016இல் கணையாழி இதழில் வெளிவந்துள்ள ‘பிரெஞ்சு படைப்பாளி லெ கிளேஸியோ ஒரு சிறு விவரணை’ என்ற கட்டுரை விளக்குகிறது.

பிற நாடுகளில் பெருமையோடு பேசப்படும் நாவல் இலக்கியங்களோடு ஒப்பிடக்கூடிய அளவில் தமிழவனின் நாவல்கள் அமைந்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. தமிழ் மக்கள் எப்போதுமே தேர்ந்தெடுக்கத் தயங்குகிறவர்களாயும் தவறான தேர்ந்தெடுத்தலில் முனைப்புடையோர்களாகவும் திகழ்வதால்  இந்திய, தமிழகத்தின் பரிசுகள் ஏதும் தமிழவனுக்குக் கிட்டாமல் போய்க் கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி எழுத்து வல்லமை மட்டும் புகழுக்கும் பரிசுகளுக்கும் தமிழகத்தில் போதுமானதன்று என்பதும் ஓர் உண்மை.

 

 

 1. Muthukrishnan
  291, Secretariat Colony
  Duraipakkam, Chennai – 600 097.
  9445329255
  muthu77000@gmail.com

தன் புதினம் -தமிழவன்

சரித்திரத்தில் படிந்த நிழல்கள்

(தஞ்சையில் சமீபத்தில்  நடந்த இலக்கியக்கூட்டத்தில் தன் நாவல் பற்றி தமிழவன் பேசியது)

தற்காலத் தமிழ் இலக்கியம் 19ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் தோன்றியபோதே பிரச்சினை தோன்றிவிட்டது. தமிழ்த்தற்கால இலக்கியம், தமிழின் 2000 ஆண்டு பாரம்பரியத்தைத் தொடரவேண்டுமா? ஏதாவது ஓரிருவர் தொடங்கிய மாதிரியைப் பின்பற்ற வேண்டுமா? என்ற கேள்வி வருகிறது. பிரதாப முதலியார் சரித்திரத்தைப் பின்பற்ற வேண்டுமா அல்லது பத்மாவதி சரித்திரத்தைப் பின்பற்ற வேண்டுமா? சிறுகதையில் வ.வே.சு. ஐயரா, பாரதியா, புதுமைப்பித்தனா? சரி விமரிசனத்தில் யாரைப் பின்பற்றுவது? நாடகத்தில் யாரை, இப்படி இப்படி.

அடிப்படைப் பிரச்சினை, மரபை நவீன இலக்கியமாக மாற்றுவது எப்படி? இந்தக் கேள்வி கேட்கப்படவே இல்லை. இதற்கான காரணம் தமிழ்த்துறையினர் படைப்பு இலக்கியக் களத்தில் இல்லை. காரணம் அவர்களுக்கு நவீன இலக்கியம் பற்றிய அக்கரை இல்லை. அதனால் நாவல்கள் பாடமாய் வைத்தால் மாணவர்களிடம் நீங்களே படித்துக்கொள்ளுங்கள், கதைதானே என்கிறார்கள். இந்தப் பலவீனம் எங்கிருந்து வந்தது? நவீனப் பார்வை மரபு இலக்கியத்தைகூட அறிவதற்கு (வாசிக்க அல்ல) வேண்டும் என்ற உண்மையை அவர்கள் காணாததால்.

இந்தப் பலவீனம் போன்ற இன்னொரு பலவீனம் இருக்கிறது. அது நவீன இலக்கியப் படைப்பாசிரியர்களிடம் முதலில் இருந்தே காணப்பட்டது. வேதநாயகம் நாவலை, நாட்டுப்புற கதைப்பாடல் போல எழுதினார். பத்மாவதி சரித்திரம், எதார்த்த கதைமுறையில் பிராமண வாழ்வைச் சித்திரித்தது. இவை இரண்டு முன்மாதிரிகள். இரண்டுமே சங்க இலக்கியத்தில் இருந்து சிலப்பதிகாரம், கம்பராமாயணம், சிற்றிலக்கியம் வழி கதையை வளர்த்தும் முறை ஒன்று உண்டு என்று அறியவில்லை என்று சொல்லலாமா?

இந்தப்பின்னணியில் என் கதைகளின் மாதிரிக்கு வருகிறேன். முதலில், 1985இல், ‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’ எழுதினேன். அதை வாசித்தவர்கள் சிலர் பாராட்டினார்கள். சிலர் விமரிசித்தார்கள். ஆனால் எல்லோரும் அன்று ஆச்சரியப்பட்டார்கள். அதல்ல விஷயம். மேல்பாராவில் சொன்ன வேதநாயகம் பாணியிலும், முழுமையாய், ‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’ இல்லை. மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் பாணியிலும் இல்லை. ஓரளவு- அதாவது மிக  ஓரளவு, முதலாமவர் பாணியில் வந்து அதைக் குறுக்கே புகுந்து மாற்றிய முறையில் ஏ.சொ.ம. எழுதினேன்.

ஞானக்கூத்தன் ஏ.சொ.ம.  நாவலை வேறு ஒரு மரபில் வைக்க உதவினார். அதையும் கொஞ்சம் பேசவேண்டும். சிறுகதை சரித்திரம் பற்றிச் சொல்லும் போது மணிக்கொடி பற்றிச் சொல்லுவார்கள். அக்காலம் நாற்பதுகள். அக்கால கட்டத்தில் அச்சுமூலம் இலக்கியம் பல்கிப்பெருகியது. பல தட்டு, சாதி மக்களுக்கு இலக்கியம் போக, வாசகர்கள் என்ற இலக்கியத்தைத் தீர்மானிக்கும் இன்னொரு சக்தி உருவாகிறது. இங்குத் தமிழ்மொழி துரதிருஷ்டம் செய்த மொழியாயிற்று. கன்னடம் போலவோ, மலையாளம் போலவோ அல்லாமல் வியாபாரிகள் இலக்கியத்தை விற்பனை செய்ய தமிழ்மொழியைச் சந்தைக்கு இழுத்து வந்தனர். பத்திரிகைத்தமிழ் என்று ஒன்று உருவாயிற்று. இதற்கு விலை இருந்தது. வாசிக்கிறவர்களைப் பெருக்கப் போட்டி நடந்தது. அதனால் விற்கிற இலக்கியமா, விற்காத இலக்கியமா என்று கேட்கக்கூடாத கேள்விக்கூட கேட்கப்பட்டது. பத்திரிகைத் தமிழ் உருவான கதை இது தான். உடனே இதனை எதிர்க்க சிறு பத்திரிக்கைகள் 1970களில் உருவாயிற்று. உள்ளாற்றல் உள்ள கலாச்சாரத்தில் எதிர்சக்தி இருக்கும். இந்தக் கட்டத்தில் தமிழ்மொழியின் உள்சக்தி ஒருவிதமாய் அன்றிப் பலவிதமாய் மாறிற்று. சிலர் பத்திரிகைத்தமிழில் இலக்கியம் படைக்கலாம் என்றனர்; நல்ல விதமாய் எதார்த்த நாவலை எழுதினால் போதும் என்றனர்.

இப்போது ஒரு பெரிய பாய்ச்சல், தமிழ் வாழ்க்கையில் உருவாயிற்று. அது தான் புதுக்கவிதை. இந்தக்கட்டத்தில் தான் ஞா.கூ. கேட்ட கேள்வி பொருந்துகிறது. கவிதை, பத்திரிகைத்தமிழை விட்டுவிட்டது. பத்திரிகைத் தமிழில் அல்லாது வேறு வகையாய் (அது எந்த வகை என்று பல வகைகளைக் கூறலாம்) எழுதப்பட்டது என ஞா.கூ. சுட்டிய நாவல் ஏ.சொ.ம. வருகிறது.

அதாவது தமிழ்ப்பாரம்பரியத்தில் மனிதன் என்ற தனிநபர் இல்லை என்கிறது தொல்காப்பியம். 1. முதற்பொருளும் (காலம், இடம்) 2. உரிப்பொருளும் (பொது உணர்வு) அதுபோல், செடி, விலங்கு, மலை, சூழல், ஆகாசம், தெய்வம், அடையாளங்கள் என்று விளக்கப்படும் 3. கருப்பொருள் அதாவது உலகை – பூமிக்கிரகத்தை முழுசாய் கோட்பாடாக்கியது தொல்காப்பியம். இது தான் ஏ.சொ.ம. நாவலில் மனிதன் மரத்தின் தன்மையுடன் படுத்துக்கிடக்கவும், தனிநபர் பண்புடன் இல்லாமல் கூட்டுப்பண்புடன் சித்திரிக்கவும் காரணமாயிற்று எனலாம். ஏ.சொ.ம. நாவலில் பாத்திரவார்ப்பு முறை வேதநாயகம் மற்றும் மாதவையா நாவல்களிலிருந்து மாறுபட்டது. அதிகம் தமிழானது. அதாவது ஏ.சொ.ம. வில் வரும் காதல் ஐந்திணைக்காதல் போன்றது.

இந்த நாவல் பற்றி இன்று நாம் இப்போது பேசத் தேவையில்லை. அதனால் அடுத்து நான் எழுதிய “சரித்திரத்தில் படிந்த நிழல்களு”க்கு வருவோம். பாரம்பரிய அழகியல் கோட்பாடுகள் கொண்ட தமிழ்மொழியில் நாவல் இலக்கியம் பாரம்பரியப் பின்னணியின் ஆற்றலைப் பரிசோதனை செய்து பார்த்திருக்க வேண்டும். இது மிகுந்த முக்கியத்துவம் கொண்ட விஷயம். நவீன தமிழ்ப்பண்பாடு ஏன் பாரம்பரிய ஆற்றலைப்பற்றி தன்னுடைய நவீன இலக்கியத்தில் அதிகம் கவலைப்படவில்லை என்பது தனிக்கேள்வி. ஏன் தொடர்ச்சி அறாமை இருக்கவில்லை? தொடர்ச்சியில்லாத ஞாபகம் எப்படிப்பட்டது? இதன் உளவியல் வெளிப்பாடு என்ன? சி.என். அண்ணாதுரை 1962இல் டெல்லி பாராளுமன்றத்தில் திராவிடநாடு கேட்ட பின்னணி ஓர் இனம் இழந்து போன உரிமைசார் தன் பிளவுபட்ட உள்ளத்தை – அதன் ஊனத்தை – மருந்திட்டு ஆற்ற மேற்கொண்ட முயற்சியா  என்ற கேள்வியும் வருகிறது. எனவே 18, 19 நூற்றாண்டுகளில் மேற்கத்திய பண்பாட்டுப் பாதிப்பால் தமிழ்ப்பண்பாட்டில் ஏற்பட்ட பெரும் சலனம் அடுத்து உருவாகும் இலக்கியத்தினால் ஏதோ ஒரு வகையில் எதிர்கொள்ளப்படவேண்டும். இந்த எதிர்கொள்ளலுக்குப் போதிய விதமான மரபு அறிவு அந்தச் சமூகத்தில் இருக்கவேண்டும். அல்லது பாரம்பரியம் பற்றிய அக்கரை இருக்கக்கூடிய தமிழ்மக்களின் பிரிவுகளில் இருந்து தமிழ் நாவல் அல்லது புனைவு எழுத்து வந்திருக்கவேண்டும். முதல்நாவலை எப்படி எப்படி எழுதக்கூடிய சாத்தியப்பாடுகள் இருந்திருக்கலாம் என்று இன்றுவரை கேட்டோமா?. மிக முக்கியமுள்ள கேள்வி அல்லவா இது?

இது ஒரு அறிதல் பற்றிய பிரச்சினை. அறிதல் குறையுடைய ஒரு குழுவின் – மொழி – பண்பாட்டுக் குறைப்பார்வை அது படைக்கும் இலக்கியத்திலும் வெளிப்படத் தான் செய்யும். ஏன் தொல்காப்பியத்தின் பாரம்பரியம் முதல் நாவலில் இல்லை? நவீன கதையடிப்படையில் பிறந்த இலக்கியத்தில்  மரபை வேர்விட வைக்கவேண்டும் என்ற குரல் ஏன் எழவில்லை? அய்யப்பணிக்கரையும் தாண்டிப் போயிருக்கத் தேவையான வகையில் தமிழில் பாரம்பரிய பலம் இருந்திருக்கிறது. என் இந்த நாவல்கள் தமிழ்ப்பாரம்பரியத்தையும் முதல் தமிழ் நாவல்கள் பற்றிய பல்வேறு சாத்தியப்பாடுகளையும் சுற்றி வந்த மனப்பயணத்தில் ஏற்பட்ட இரண்டு உதரணங்கள் தாம். ஆங்கில அல்லது மலையாள (நீலபத்மநாபன் – தோப்பில்) மாதிரிகள் இல்லாமல் ஏ.சொ.ம. போல எழுதிப்பார்ப்போம் எப்படி நாவல் போகிறது பார்க்கலாம் என்று தொடர்ந்து செய்து பலர் பார்த்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

‘சரித்திரத்தில் படிந்த நிழல்கள்’ நாவலில் இப்படி ஒரு பகுதி வருகிறது:

“தெகிமொலாக்கள் காலத்தைச் சதுரங்கம் போன்றது என்று கருதினார்கள். சதுரங்கத்தைக் கட்டங்களாகப் பிரிப்பது போல் காலத்தைப் பிரித்தார்கள். அதில் மிகவும் கொடுமையான இரண்டு காலங்களை எதிரும்புதிருமாக வைத்து அவர்களது காலச்சக்கரத்தை வரைந்தார்கள்”.

யாருக்கும் இதில் வருவது  பழந்தமிழ் – தொல்காப்பிய முறைப்படியான – காலப்பாகுபாடு என்று தெரியும். அப்படியே இல்லை. கொஞ்சம் மாற்றப்பட்டது.

“இரவுப்புணர்ச்சிகளின் போது புணர்ச்சி இலக்கணமும் காலநிலை நியமங்களும் பின்பற்றப்படாததிலும் தொடர்ந்து பிறந்தவர்கள் விசித்திர நினைவுகளுடனும் காலநிலை அற்ற விதமாகவும் பிறந்தனர்”.

இது நீண்ட சரித்திரம் கொண்ட மக்கள் கூட்டம் ஒன்று சரித்திரத்தின் பிளவுகளை எப்படித் தங்கள் விசித்திரம் மிக்க வாழ்க்கைமுறைகளால் மறுவுருவாக்கம் செய்தார்கள் என விளக்குகிறது.

தமிழ் மனிதன் என்ற உருவாக்கம் மேற்கத்திய மாதிரியில் வடிவமைக்க 19, 20, 21 நூற்றாண்டுகளில் முயற்சி செய்யப்பட்டன. அதற்கு முன்பு பர்ஷிய, மொகல் சரித்திர, மராட்டிய இடையீடுகளும் தமிழ் உள்வாங்கிற்று. அதன் கதைப்புனைவு மாதிரிகள் எப்படிப்பட்டவை? அவற்றின் சில மாதிரிகள் சமீப நாவல் சரித்திரத்தில் தமிழிலும் வருகின்றன.

நாம் தொடர்ந்து கொண்டுவரவேண்டிய விஷயங்களைத் தர்க்கமாக மாற்றப் பார்க்கிறேன். தமிழில் பாரம்பரியம் இருந்தது என்ற ஓர்மையையை முற்றிலும் ஏன் நீக்கினோம்? 2009இல் தமிழ் அடையாளம் பற்றிய கேள்விகள் பழம் ஞாபகத்தின் அழுத்தத்தைத் தந்ததால் சிந்தனை கட்டமைப்புகளாய் வெளிப்போந்தன. கட்சிகளாய், குழுக்களாய், அரசியல் இதுதான் என்ற பெயரில் தமிழகமெங்கும் ‘தமிழன் யார்’ என்ற இளைஞர்களின் கேள்விகளுடன் நிறைய சலனம் ஏற்பட்டுள்ளது. இவற்றை முற்றாய் ஒதுக்க முனையவே மாட்டேன். இவர்களின் மொழியின் – சொல்லின் – அர்த்தம் என்ன? (மீண்டும் தொல்காப்பியம்?) யார் இந்தத் தெகிமொலாக்கள்? இந்த நாவலின் இறைச்சிப்பொருள் எது என்று கேட்கமுடியுமா? உள்ளுறை உவமையாக, நவீன குறியியல் அர்த்தங்களாக எல்லாவற்றையும் பார்ப்பதில் தவறில்லை. தன்னை வரலாற்றில் இழந்த ஒரு மக்கள் கூட்டம் வழிதெரியாது தவிக்கிறது.

நான் ஒரு கட்டுரையில் பெரியார் நம் நாட்டுப்புற மரபுகளை மதிக்கவில்லை என்று எழுதினேன். நாட்டுப்புற கதைப்பாடல்கள் – தேசிங்குராஜன் கதையிலிருந்து முத்துப்பாட்டன் வழி – இன்னும் அண்ணன்மார் சுவாமி என பெரும் பிரவாகம் உண்டு. செவ்வியல் மரபும் சங்கம், சிலப்பதிகாரம் என்று வேறோரு ஞாபகத்தமிழ் மரபாய் இணையாகத் தமிழர்களை நினைவுறுத்தியப்படியே இருக்கிறது.

நாட்டுப்புறக் கதையில் தேவதைக்கதை எப்போதும், உலகம் முழுவதும், திருமணத்தில் தான் முடியும் என்று ஒரு மறுக்கமுடியாத கோட்பாடு உண்டு. அதாவது, திருமணம், மந்திரசக்தி, விடைதெரியாக் கேள்விகள், மோதிரம் இப்படிப்பட்ட ஒவ்வொன்றும் ஓராயிரம் அர்த்தங்கள் கொண்டவை. செவ்வியலும் அப்படித்தான். குறுந்தொகையில் வரும் குறிஞ்சி என்ற புணர்ச்சி பற்றிய ஞாபகம், குறிஞ்சிப்பாட்டில் நீண்ட கதை சொல்லலாகி, சிலப்பதிகாரத்தில் மிகப்பெரும் கதைப்பாரம்பரியமாகிறது. நாவல் பாத்திர வார்ப்பை – மேற்கின் எதார்த்த முறையை மறுக்காமல் உலகப் பொதுகதைகளை நாம் ஏன் உருவாக்க முடியாது?

வேடிக்கை என்னவென்றால் 19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலம் வழி அந்த கிளுகிளுப்பு மரபை முக்கியமாக்கி, நூறு வருடங்களாய் நம் பாரம்பரியக்கதைகளை மீட்டெடுப்பதைக் கேலி பேசும் அளவுக்குப்போன மூடச்செயல் தான். தமிழ் உரைநடையைத் தமிழ்மொழிக்கு ஏற்ப எழுதுவதே பல சிக்கல்களைக் கொண்ட காரியம். பெஸ்கி எழுதியது உரைநடையா? நச்சினார்க்கினியர் எழுதியது தமிழ் உரைநடையா? நாம் கேள்வி கேட்க முடியவே இல்லை. முதலில் தமிழ் உள்ளம் அங்கீகரிக்கும் கருத்தைச் சரியாய் வெளிப்படுத்தும் உரைநடையே வரவில்லை. பின் எப்படி உரைநடைக்கலையான நாவலை எப்படி எழுதுவது என்ற பிரச்சினையைத் தீர்ப்பது?

இன்னும் ஒரு முக்கியமான விஷயம். புரிகிற எழுத்து, புரியாத எழுத்து பற்றிய பிரச்சினை. பாரம்பரியத் தமிழில் எல்லாமே புரியாத எழுத்துத்தான். எந்த உரையாசிரியர் புரியக்கூடிய முறையில் எழுதியிருக்கிறார்? நிகண்டு என்பதும் அகராதியும் புரியாமையை இலக்கணத்தையும் அங்கீகரிக்கும் செயல் தானே. பழக்கமானது பழகாதது என்று தான் உண்டு. எல்லாம் ஏகதேசமானது தான்.

செவ்வியல் கதைகளான நெடுநெல்வாடை போன்றவற்றில் வரும் பாத்திரங்கள் அரசன், அரசி போன்றோரின் இடங்களில் அசைவு இல்லை. அரசி படுக்கையோடு காட்சித் தருவாள். அரசன் பாசறையோடு காட்சித்தருவான். அல்லது முல்லைப்பாட்டில் அரசன் தேரில் வந்து கொண்டிருப்பான். இட அசைவு (Move) கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். சரித்திரத்தில் படிந்த நிழல்களில் பச்சைராஜன், பாக்கியத்தாய், மலைமீது ஒளி (அம்மிக்குழவி, மொழித்துறையினர், சர்க்கஸ் கோமாளி) இவர்களின் இடங்களும் இட அசைவுகளும் (Move) கூட கட்டுப்படுத்தப்பட்ட அசைவுகளுக்கு உட்பட்டவை.

இதுபோல் எதார்த்தபாணி கதைசொல்லலில் அல்லது உளவியல்பாணி கதைசொல்லலின் பாத்திர வார்ப்பைவிட நாட்டுப்புறவியல் கதைசொல்லலில் சமூகக் கதையாடல் நடக்கிறது. ஏனெனில் உளவியல் கதையாடலில் தனிநபர் சமூகம் வருகிறது. நாட்டுப்புறக் கதைகளின் பாத்திரங்களில் நாய்கள் மனிதர்களாவது உண்டு. ஒரு ஊரில் ஒரு நாய்க்கு இரண்டு பெண்கள் பிறந்தனர். இரு அரச குமாரர்கள் மூத்தவளையும் இளையவளையும் திருமணம் செய்தபின்பு தாய் – நாய் மூத்த மகளிடம் வருகிறாள். வெந்நீர் ஊற்றி விரட்டுகிறாள் மூத்தவள். இளையவள் உணவு கொடுத்து பாதுகாக்கிறாள்….. என்பது போன்ற கதை கேட்டிருப்பீர்கள். மனித – விலங்கு இணைவு ஏற்படுவதோடு பாத்திரங்கள் சமூக மாதிரிகளாகின்றன. கதையில் இறந்த நாய் இளையவளுக்குத் தங்கக்கட்டியாகி உதவும். மூத்தவள் வெந்நீர் ஊற்றியதால் வெறும்புழுவாய்த் தன் உடம்பை மாற்றி தண்டனைக் கொடுக்கும். “தண்டனையும் பரிசளிப்பும்” என்ற கருத்தாக்கம் கதையின் அமைப்பாகிறது. இங்குக் கதைமை என்பது  கருத்தமைவு என்று வடிவம் கொள்கிறது. சரித்திரத்தில் படிந்த நிழல்களில், பச்சை ராஜனுக்கும் பாக்கியத்தாய்க்கும் ஏற்படும் பல்வேறு கதை இடஅசைவுகள் கருத்து + அமைவு = புனைவு என்று புதுவித அர்த்த உருவாக்கமாகிறது. தமிழ்ச்சமூகம் சினிமாவைத் தனக்குள்ளே வடிவமைத்த செயல் நம் கதைமுறை வேறுபட்டது என்பதைத் தான் விளக்குகிறது. (இக்கதைபற்றி சண்முக. விமல்குமார் ஒரு நீண்ட கட்டுரை எழுதியுள்ளார்.)

கார்ல்மார்க்ஸ் “British Rule in India” என்று ஒரு கட்டுரை 1853இல் எழுதியது பல வாதவிவாதங்களை உருவாக்கியது. இந்தியா போன்ற சமூகத்தின் தேக்கத்தைப் பிரிட்டிஷ் அரசு உடைத்து ரயில், தனிச்சொத்து, அறிவியல், தொடர்பியல் போன்றவற்றைத் தந்தது என்பார் மார்க்ஸ். உடனே மார்க்ஸும் ஒரு வெள்ளைமனம் கொண்டவர் தான் என்று விமரிசித்தனர். பிரிட்டீசாரை அவர் கண்டிக்கவில்லை என்றனர்.ஆனால் மார்க்ஸ் சொன்னது ஒரு உண்மை. அதாவது நாட்டுப்புறவியல் இட அசைவின் அடிப்படையில் இயங்கும் சமூகம் இந்தியாவில் செயல்படுகிறது என்று அவர் கூறியதாகத்தான் நாம் எடுத்துக் கொள்ளவேண்டும். அதாவது தமிழர்களின் சரித்திரம் ஐரோப்பிய சரித்திரம் போன்றதல்ல என்று தமிழ் அறிதல் வழி மார்க்ஸை அணுகுவதற்கு இங்கு முயலவேண்டும். தமிழ்க்கதையாடல் (Tamil Narration) ஒன்றை மார்க்ஸ் மேற்குறித்த கட்டுரையில் உருவமைக்கும் விதைகளை அறிமுகப்படுத்துகிறார். நம் சரித்திரப் போக்கான பிராந்திய அசைவுக்கும் ஹெகலிய பிரபஞ்ச இயங்கியல் அசைவுக்கும் வேறுபாடு உண்டு. ஹெகலியம் அனைத்துலக ஒற்றைப்பார்வையை முன்வைத்த போது அதன் பெறுபேறாக உருவான நம் இடதுசாரிப்பார்வைகள் மாறவேண்டும் என்பதும் இங்கு உணர்த்தப்படுகிறது. “சரித்திரத்தில் படிந்த நிழல்கள்” இத்தகைய நாட்டுப்புறவியல்/தமிழ் அறிதல் கொள்கை சார் கதையாடல் முறையை விரிவாய் சர்ச்சை செய்யும் சந்தர்ப்பத்தை வழங்குகிறது.

“இன்னொரு விஷயத்திலும் ராணியின் வார்த்தைவழி பிறந்த மைந்தன் தெகிமொலாக்களின் இரண்டுபட்ட மனத்துடன் நடந்துகொண்டான். அவன் பனிக்காலத்தில் ஒரு காலும் கோடைக்காலத்தில் இன்னொரு காலும் வைத்துக் காலத்தின் தடைகளைத் தாண்டினான். அதுபோலவே அவன் அரச சபையில் வளர்வதற்குப் பதிலாக மக்களின் சபைகளிலும் அதுபோல் கவிதைப்பிரியர்களான தெகிமொலாக்களின் மனங்களிலும் ஒரே நேரத்தில் இருந்தான்” (பக்.19)

இவ்விதம் நாவல் கதையாடலில் வரும் இட அசைவு என்பது நாட்டுப்புறக்கதைகளில் இருந்து எடுக்கப்பட்டு இங்கு வேறு முறையில் கற்பனை செய்யப்படுவதை அறியவேண்டும். மையக்கதைப்பாத்திரம் நாட்டுப்புறக்கதையில் தனது குறிக்கோளான யாருக்கும் செய்ய முடியாத செயலைச் (பகைவனைத் தோற்கடிப்பது, மந்திரத்தைக்கற்பது, மாயமோதிரத்தைப் பெறுவது என்பது போல்) செய்யும் வழியில் இன்னொரு உபகதை என்னு வேறு ஒருகதை வழி அவனுடைய எதிர்கால மனைவியைச் சந்திப்பான் அல்லது தன் நண்பனைச் சந்திப்பான். இப்படி உபகதை கிளை பிரியும் இடத்தை “இட அசைவு” என்பார்கள். ச. ப. நி. நாவலில் இது வியாக்கியனம்/மறுவடிவாக்கம் பெற்று ஒரு பாத்திரம் “இரண்டு மனத்துடன்” அல்லது “பனிக்காலத்தில் ஒரு காலும் கோடைகாலத்தில் ஒரு காலும்” அல்லது “மக்களின் சபைகளிலும்” “தெகிமொலாக்களின் மனங்களிலும் ஒரே நேரத்தில்” இருக்கிறான். இதுபோல பல உத்திகள் ச.ப.நி.நாவலில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.இவை என்னுடைய சில கருத்துக்கள்.விவாதிப்போம்.

தமிழவன் கதைக்கலையின் தனித்தன்மை.

தமிழவன் கதைகளின் தனிப்போக்குகள்.

நிதா எழிலரசி

 

சிறுகதை என்பது மிக வீரியமிக்க வித்து ஒன்றின் அடங்கிக்கிடக்கும் அகத்தோற்றம் அல்லது மிகவும் சூட்சமம் மிக்க வடிவமைப்பின் நுட்பமான வெளிப்பாடு எனலாம். இந்தப் புறவடிவமைப்பு, சிறுகதை என்று காண்பதற்கு வடிவம் சார்ந்து எளிமையாகவும் நுணுகி ஆராய்வதற்குக் கடினமானதாகவும் இருப்பது. கதைசொல்லியின் அகமன உணர்வு அவனைத்தாண்டி மிக நுணுக்கமான பின்னல்களைக் கொண்டது போல் அமைகின்றது. கதை கோர்வையாகவும், சிதறலாகவும், ஒழுங்கமைவாகவும், ஒழுங்கற்ற எச்சங்களாகவும் ஒரு நிலையான வடிவம் என்று சொல்ல முடியாத வடிவத்தைக் கொண்டுஅமைகிறது. கதைகள் காலந்தோறும் மாறிமாறித் தனக்கான வடிவம் மற்றும் உள்ளடக்க முறையில் தன்னைத்தானே புற உலகச் சூழலுக்கேற்ப தகவமைத்துக் கொண்டு வெளிவருகின்றன.

சிறுகதைகள் சமூகம், அரசியல், உளவியல், தத்துவம், பொருளாதாரம், உலகமயமாதல் போன்றவைகளின் இறுக்கங்களில் இருந்தும், தளர்வுகளில் இருந்தும் காலத்தின் தேவைக்கேற்ப ஒன்றிலிருந்து இன்னொன்றாகப் புதுப்புது வகைமைகளாக வெடித்து வெடித்துப் பிறக்கின்றன. இவை ஒரே மாதிரியான தொடர் வளர்ச்சியையோ அல்லது வீழ்ச்சியையோ மாறி மாறி கட்டமைக்கின்றன. இத்தகைய கட்டமைப்பு ஆழ்மனோநிலையில் இருந்து சமூக அரசியலையும், மனித அக மன உணர்வுகளையும் தொடர்ந்து கேள்வி கேட்டும், அவலங்களை வெளிச்சமிட்டும் புதுப்புது திருப்பங்களைத் திட்டமிடாமல் எதிர்ப்பதும், ஆதரிப்பதுமாகப் பொதுவற்ற அணுகலை மிக நுண்மையாகச் சிறுகதைகள் வெளிப்படுத்துகின்றன. தெளிவற்ற தன்மையிலும் கலைத்துப் போட்டு, கலைத்துப் போட்டு ஒருவித நுட்பமான அழகியலைத் தனக்குள் தானே கட்டமைத்துக் கொள்கிறது. கதை கழன்று ஒழுகும் அருவி போலவும் அடங்காமல் பீறிட்டெழும் உணர்வுகளாய் வெடித்துச் சிதறும் மௌனத்தையும் கோமாளித்தனத்தையும் வெளிப்படுத்திக் கொண்டு புதுப்புது படைப்புகளாய் தன்னைத் தானே உருவாக்கிக் கொள்கின்றன. இத்தகைய சிக்கல் நிறைந்த வடிவம் இதுதான் சிறுகதை என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாத ஒழுங்கீன வடிவமாய் வளர்ந்து உயர்கின்றது. 70, 80 -களில் வெளிவந்த சிறுகதைகளின் போக்கைப் பின்னோக்கிப் பார்க்கும் பொழுது கதைசொல்லுவதற்குக் கர்த்தா ஒருவன் மிக அவசியமாகத் தேவைப்பட்டுள்ளான். கதையில் ஆரம்பம், உச்சம், முடிவு என்ற ஒரு தொடர் கதைத்தன்மை பின்பற்றப்பட்டு வந்ததுள்ளது. அதே காலகட்டத்தில் மனித மனங்களின் மிருதுவான பாலியலும், அழகியலும் கதைகளில் தவிர்க்க முடியாத சித்திரிப்புகளாக இடம் பெற்றன. இந்தப் ‘பலவீனமான’ ரசனைமுறை ஒரு கட்டத்தில் நவீனத்துவ எழுத்துகளை உள்வாங்கிக்கொண்டு தலைவன், தலைவி, கிளைக்கதைகள் என்ற வகைமைகளில் இருந்து தன்னைத்தானே விடுவித்துக் கொண்டன.

ஒரே ஒரு கதைசொல்லியே முழு கதைக்குள்ளும் காற்றுக்குள் வாசம் பரவுவது போல மெல்ல பயணம் செய்து சொல்ல வேண்டிய கதைகளைச் சொல்லி அழிந்தொழிவதுண்டு. இது போன்ற கதைகளும் தொடர்ந்து தன் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. 80-களில் அறிமுகமான அமைப்பியலின் தாக்கத்தால் வந்த பின்நவீனத்துவ கதைகள் மிக நுண்ணிய அரசியல் சார்ந்த கலகக்குரலை எதார்த்தத்திற்கு அப்பால்போய் நம்ப முடியாத கற்பனாவாதத்தின் சிக்கல்களை உடைத்தன. பின்னர் தொன்மங்களைச் சிதைத்துக் கொண்டும் தன்னைத்தானே விமர்சித்துக் கொண்டும் வடிவமற்ற வடவங்களை உருவாக்கியும், சிதைத்தும் முந்தைய பிரதிகளில் இருந்து புதிய பிரதிகள் பகடிச் செய்து கொண்டே தொடர்ந்து வருகின்றன. இந்தப் பிரதிகளும் இன்றளவும் மிக நுணுக்கமான பின்னல்களையும், கதைக்களத்தையும் நிகழ்த்தித் தனக்கான அடையாள அரசியலை முன் வைக்கின்றன.

மிக நீண்ட இலக்கிய கால வெளியில் கு.ப.ரா., ந. பி., கா.ந.சு., சி.சு.செ., மௌனி, லா.சா.ரா., புதுமைப்பித்தன், நகுலன், சு.ரா., மா.அரங்கநாதன், நீல.பத்மநாபன், பொன்னீலன் என்ற நெடிய நவீனத்துவத்தின் ஆரம்ப காலகட்டத்தின் கூறுகளை வெளிப்படுத்தி கதைத்தளங்களைச் சமூக விழுமியங்களில் இருந்து உருவாக்கினார்கள். அதே காலகட்டத்தில் இவர்களில் இருந்து மாறுபட்ட கதைக்களங்களைத் தமிழகத்தின் எழுச்சிமிக்கச் சிறுபத்திரிக்கைகள் முன் வைத்தன. இந்த மாற்று அரசியலின் ஊடாக சீரியஸ் லிட்ரெச்சரும் ஜனரஞ்சக இலக்கியமும் இணைக்கோடுகளாக வளர ஆரம்பித்தன. சிறு பத்திரிக்கைகள் தொடர்ந்து  நடு பத்திரிக்கை என்ற வடிவம் பெற்று அவை ஜனரஞ்சக அரசியலைச் சீரியஸ் லிட்ரெச்சர் என்று போலி செய்து மிக வேகமாக உருவாகி வருகின்றன. உணமையான இலக்கியம் எது என்பதையும், வணிக இலக்கியம் எது என்பதையும் தெரியாத வண்ணம் மிக நுட்பமாகக் கடை விரிக்கின்றன. இந்த அரசியலின் மத்தியில் சிக்குண்டு தவிக்கும் வாசகன் எதைத் தேர்ந்தெடுப்பது என்று விழிக்கின்றான்.

இவை அனைத்தும் ஒரு புறமாக இருக்கக் கடந்த நூற்றாண்டின் இலக்கியப் போக்குகளில் இருந்து 21-ஆம் நூற்றாண்டின் இலக்கியப் போக்குகள் புதுவிதமான, நுட்பமான போக்குகளை உருவாக்கிக் கொண்டு வெளிவருகின்றன. இத்தகைய அதிநவீன எழுத்துகள் எண்பதுகளில் இருந்து தமிழிலக்கியத்தின் மரபுக்கு எதிரான மாற்று கேள்விகளை எழுப்பிவருவதற்குக் காரணம் இலத்தீன் அமெரிக்கா எழுத்துகளே ஆகும். அதன் தாக்கத்தால் உருவான நவீன இலக்கியத்தின் உச்ச பட்ச வளர்ச்சியில் மார்க்சியம், உலகமயமாதல், தத்துவம், உளவியல் போன்றவற்றைப் அறிமுகப்படுத்திப் புதுவிதமாகப் பிரதிபலித்தன. போர்ஹெஸின் சிறுகதைகளும், இட்டாலோ கால்வினா, மார்கியூஸின் நாவல்களும் தமிழிற்கு வந்து சேரும் போது தமிழில் உருவாகியிருந்த வெற்றிடம் கேள்விக்குள்ளாயின. இதனை ஈடுசெய்யும் பொருட்டுத் தமிழவன் துவங்கி கோணங்கி, எஸ்.இராமகிருஷ்ணன், ஜெயமோகன், பிரேம்-ரமேஷ் போன்றவர்கள் மாற்றுப்பிரதிகளை முன்வைத்தனர். தமிழிற்கு அமைப்பியல்வாத சிந்தனையை 80-களில் தமிழவன் கொண்டு வந்ததின் தத்துவவிளைவாக நவீன அமைப்பியல் சார்ந்த சிந்தனாப்பள்ளி ஒன்று உருவாகி வளர்ந்து வருகின்றது. வடிவமற்ற கதைசொல்லல் முறை இருக்கும் மரபுகளை உடைத்துக் கொண்டு வெளிவந்தது.

தமிழவன் என்ற கதைசொல்லி 1963-இல் துவங்கி இன்று வரையிலான நெடிய காலகட்டத்தில் கதைசொல்லும் மரபில் புதுவித மாற்றங்களைப் அமைத்துள்ளார். அவருடைய மூன்று தொகுப்புகளைப்பார்ப்போம். “தமிழவன் கதைகள்” என்ற தொகுப்பு 1992-இல் 13 கதைகளோடு வெளிவந்துள்ளது. இந்தக் கதைகளில் சமகால எழுத்துகளில் இருந்து சற்றுமாறி நவீனமான எழுத்துகளை உருவாக்கியுள்ளார். அதாவது “பூட்ஸ் கால்களில் சிக்கிய நட்சத்திரங்கள்,” “கைது செய்பவர்களும் காத்திருப்பவர்களும்,” “தகரகொட்டாய் மற்றும் தவளை மனிதர்கள்,” “காரல் மார்க்சும் தாணு ஆச்சாரியும்” என்று அழகியல் அல்லாத தலைப்புகளை முன் வைத்துப் படைத்துள்ளார். மரபாக இருந்த காலகட்டத்தில் பிரமிப்பையூட்டும் தலைப்புகளிலும் நம்ப முடியாத தலைப்புகளிலும் கதைகள் வெளியாகியுள்ளன என்பது இன்று நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. இதனைத் தொடர்ந்து மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2011-இல் “இரட்டைச் சொற்கள்” என்ற சிறுகதைத் தொகுப்பில் 20 கதைகள் வெளியாகியுள்ளன. இந்தக் கதைகளின் கதைத்தளம் பின்நவீனத்துவ பாணியைக் கைக்கொண்டு கதைசொல்லி யாரென்றே சொல்ல முடியாத அளவிற்குக் கதைகள் ஆழ் மன நிலையில் இருந்து கலைத்துப் போடப்படுகின்றன. இந்த நிலை வாசகனை ஒரு இருண்மைக்குள் அழைத்துச் செல்கின்றது. இத்தொகுப்பில் உள்ள 20 கதைகளும் ஒன்றிற்கொன்று எந்தத் தொடர்பும் அற்ற கதைகளாகவே உள்ளன. கதைப்பின்னல் வெவ்வேறான கதைத்தளங்களைக் கொண்டு அதன் அர்த்தம் ஆழத்தைக் கூட்டுவதாக அமைந்துள்ளது. ஆகவே கதைக்குள் ஆழமான, சிக்கலான விவாதங்களைக் கொண்டு வந்து சேர்க்கின்றன. தொடர்ந்து கதைகளை வளர்க்க பலவித கோட்பாடுகளை முன்வைத்தும் கதைகள் நகர்த்தப்படுகின்றன. கதைத்தளம் தமிழ்ச் சிறுகதைகளைத் தாண்டி உலகளாவிய பிரச்சினைகளையும் இலக்கியநுட்பங்களையும் முன்வைத்து 21-ஆம் நூற்றாண்டின் தமிழ் அடையாளங்கள் அழிக்கப்பட்டதை விவாதத்திற்கு உள்ளாக்குகின்றன. சிறு கதைகளுள் தமிழ்த் தேசியத்தின் அடையாளமாக மொழிக்குள் தேசம் உருவாக்கப்படுகின்றது. அதாவது 21-ஆம் நூற்றாண்டில் இலங்கையில் தமிழ் அடையாளங்கள் அழிக்கப்பட்டன. அதற்குப் பிறகு தமிழ்த்தேசியம், தமிழ் அரசியல் என்பதெல்லாம் கதையாடலாக்கப்பட்டன. அதாவது கற்பனைக்குள் தேசம் கொண்டு வந்து சேர்க்கப்படுகின்றது.

முதன்முலில் தேசம் என்ற கருத்தாக்கத்தை உருவாக்கியவர் பெனிடிக்ட் ஆண்டர்சன்(Benedict Anderson). இவர் எழுதிய “Imagined Communities” என்ற நூலில் நாவல் எழுதுவதன் மூலமாகத் தேசம் கட்டமைக்கப்படுகின்றது என்கிறார். இவரின் தேசம் என்னும் கருத்தாக்கத்தை விரிவு செய்து“Nation and Narration” என்ற நூலில் ஹோமிபாபா குறிப்பிடுகிறார்.இந் நூலில் தேசம் கிடைக்கும் போது தான் நாவல் பிறக்கிறது, உருவாகிறது என்று விரிவாய் சர்ச்சிக்கப்பட்டுள்ளது.

இந்திய சுதந்திரத்தின் போது வெளிவந்த இலக்கிய வடிவங்களின் மொத்த வெளிப்பாடும் இந்திய தேசத்தினை உருவாக்கும் வெளிப்பாடாகவே அமைந்தன.
21-ஆம் நூற்றாண்டில் தமிழ் அடையாளங்கள் அழிக்கப்பட்ட போது தோன்றிய இலக்கிய வடிவங்கள் (கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, சினிமா) தமிழ்த்தேசியம், தமிழ்த்தேசம், உருவாக்கத்தினை உரத்த குரலில் வெளிக்கொண்டு வந்தன. இக்கருத்தை மூலகதையாகக் கொண்ட புனைகதைகள் புதிய உந்துதல்களோடு வெளிவந்தன. அதாவது பூடகமாகவும் வெளிப்படையாகவும்- ஆதரித்தும், எதிர்த்தும் பல புனைகதைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த வகையில் இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள் தமிழ்த்தேச அடையாளத்தொனியை முன்வைக்கின்றன.

இந்தச் சிறுகதைகள் இறுக்கமான மொழிநடையைக் கொண்டுள்ளன. அதற்குப் பழைய தொன்மங்கள், மேற்கத்திய நவீனக் கோட்பாடுகள், தத்துவங்கள், வரலாறுகள், அறிவியல் தன்மைகள் போன்றவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கதைக்குள் கதைசொல்லியின் குரல் மட்டுமே ஒலிக்காமல் ஒரு சில இடங்களில் வாசகனின் கேள்விக்குப்பதிலும் அளிக்கப்படுகின்றது. அதாவது வாசகனை ஈர்க்கும் உத்திப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது இச்சிறுகதைகளில். கதைக்குள் நேர்கோட்டுக் கதைசொல்லல் இல்லாமல் ஒரு திருகு அமைப்பும் பின்நவீனத்துவமும் கலந்தே காணப்படுகின்றன. கதைகளின் உள்ளியக்கத்திற்கு வலிமை சேர்ப்பது கதைகளின் வைப்புமுறை ஆகும். எந்தக் கதையும் மற்ற கதைகளின் தொடர்ச்சியாகவோ, சார்ந்தோ அமையவில்லை. ஒவ்வொன்றும் புதிய வடிவமாகவே காணப்படுகின்றது. இது வாசகனின் வாசிப்பிற்கு ஒரு தடையற்ற தன்மையை ஏற்படுத்துகின்றது.

இலக்கிய விமர்சனக் கட்டுரையின் தன்மையைக் கதையாகப் பயன்படுத்துகின்றன இத்தொகுப்புச்சிறுகதைகள். இவற்றில் ஒற்றைக்குரல் முனைப்பு அழிக்கப்பட்டுப் பலகுரல்கள் பேசுகின்றன. அகில உலக்க் கதைப்போக்குகளை இக்கதைகள் கொண்டுள்ளன. இந்தச் சிறுகதைகள் உண்மையிலும், உண்மையற்றதிலும் தொடங்கப்படுகின்றன. மேலும் உயிர் உள்ளதையும், உயிர் அற்றதையும் இணைத்துப் பேசுகின்றன. கனவிலும், எதார்த்தத்திலும் கதைகளை வைத்துப் பேசுகின்றன. பின்நவீனத்துவத்தின் உச்சக்கட்ட கதையாடலைக் கொண்டது இந்தச் சிறுகதைகள்.

“போர்ஹெஸ் கதைகள் உலகப் புனைகதைக்குள் வந்த பிறகு தமிழ்க் கதைக்குள்ளும் அவற்றின் தொனிப்பும் வாக்கிய அமைப்பும் வந்தன. இது ஆங்கில வாக்கியத்திலிருந்து போர்ஹெஸ் கதையைத் தமிழிற்குக் கொண்டு வந்தவர்களுக்குத் தெரியும். தமிழ் வாக்கியம் இயங்கும் தமிழ் மனமும் போர்ஹெஸ் கதைவாக்கியம் இயங்கத் தேவைப்படும் தமிழ் மனமும் வேறுபட்டவை என்று. இதனைத் தமிழில் வேறுபடுத்த முடியாமல் புது அழகியல் தோன்றியுள்ளது.” இந்த இரண்டு வித வாக்கியத்துக்கான மனநிலையை ஒன்றுபோல் மாற்றியுள்ளது இச்சிறுகதைகள்.

70, 80-களில் உருவாக்கப்பட்ட கதைகள் லட்சியம் என்பதை மையமிட்டதாகவே இருந்தன. இந்த லட்சியப் போக்கு மாறி வரும் போது போராட்டங்கள் மூலம் தீர்வு காண முடியும் என்ற கருத்தாங்களாக மாறிற்று. இதற்குக் காரணம் ரஷ்ய புரட்சி, மாஸ்கோவின் வெடிப்பு, லெனின் மாற்று அரசியல் போராட்டம், காரல் மார்க்சின் மூலதனம், ஸ்டாலின் புரட்சிக்குக் கிடைத்த வெற்றி போன்றவைகளாகும்.

இவற்றை உள்வாங்கிய தமிழ் அரசியல் சூழலில் பெரியார் பிராமணர்களையும் வேதங்களையும் எதிர்க்கத் துணிந்தார். மொழி எதிர்ப்பு என பல படிகளில் வெளிப்பட்டன. இத்தகைய உந்துதல்களின் விளைவாக முதலாளித்துவத்தை எதிர்த்த தலித்துகள் கீழ்வெண்மணியில் கொல்லப்படுகிறார்கள். இதனால் ஒரு வகையில் முதலாளித்துவ அரசியலைத் தக்க வைத்துக் கொள்ளுதலும், முதலாளித்துவத்தை அழித்துச் சமநிலைக்குக் கொண்டு வருவதுமான எதிர் இணைவுகள் சமூகத்தில் எழுச்சிப் பெற்றன. இவற்றை முன்வைத்துப் பல இலக்கியப் பிரதிகள் போரட்டத்தின் மூலம் வெற்றி கிடைக்கும் என்ற உச்சக்கருத்தை மையப்படுத்தி எழுதி குப்பைகளாகத் தள்ளின. பிராமணிசமும், முதலாளித்துவமும் வேறு வடிவில் காலூன்றியதைப் புரிந்து கொள்ளாத வறட்டு மார்க்சியமும் எதுவும் செய்ய இயலாமல் நுனி மழுங்கிய அயுதமாயிற்று.

அடுத்து இரண்டாம் கட்டமாக அரசியலுக்கு எதிரான மாய எதார்த்தத் தன்மை இலக்கியப் பிரதிகளில் மிக வேகமாகப் பரவ ஆரம்பித்தது. இது சமூகத்தையும் முந்தைய பிரதிகளையும் பகடிச் செய்துகொண்டு மாயத்தன்மையுடன் வெளிவந்தது.

இது தமிழ் அறிவுலகிற்கு வரும்போது தமிழ் தன்மைக்கொண்ட மாயஎதார்த்தவாதமாக உருப்பெற்றது. இந்தத் தன்மையால் புதுவித மாற்றங்கள் வந்தன.

இன்றைய காலகட்டத்தில் இலட்சியம், புரட்சி, தீர்வு என்பவைகளை நோக்கிய பயணங்கள் மங்கலாயின. அதாவது தற்போது வெளிவரும் பிரதிகள் எந்த நோக்கமும், நம்பிக்கையும் அற்று ஒரு மாய்மாலத் தன்மையில் வெளிவருகின்றன. சமூகம், அரசியல், வரலாறு இவைகளைக் கூர்ந்து கவனித்தவாறு அடுத்தக் கட்ட முன் நகர்த்துதல்களுக்குப் புதுவித சிந்தனாப்போக்கை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்ற காத்திருப்புகளோடு அமுக்கலாக வெளிவருகின்றன. இந்த அமுக்கலான பிரதிகளுக்கு 2015-இல் உயிர் எழுத்து இதழில் வெளிவந்த தமிழவனின் மூன்று சிறுகதைகளைக் காணலாம்.

தமிழவனின் 1970-இல் இருந்த உணர்வெழுச்சி, போராட்ட குணம் (நக்சல் மனோநிலை) 80-களுக்குப் பிறகு நவீனத்துவம், பின்நவீனத்துவம் மாய எதார்த்தவாதத்தின் மூலம் சாதிக்க முடியும் என்று வெகுண்டெழுந்த மனம் 2009ற்குப் பிறகுமாறுகிறது. இலங்கையில் தமிழ் அடையாள அழிவிற்குப் பிறகு வெளிவந்த தமிழவனின் பிரதிகள் மங்கலானதாக மாறுகின்றன. எதிர்ப்பு என்பது பலவகை க்குணம் கொண்டது என விளக்கப்படுகிறது.இந்த மாற்றங்களுக்குச் சமூகத்தில் ஏற்பட்டு வரும் குவலயமய ஏற்றத்தாழ்வுகளும், அரசியல் சூழல்களும் மைய காரணமாகின்றன.

புத்தகக்கடை என்ற சிறுகதை பின்நவீனத்துவத்தின் அடுத்தக்கட்டமாகும். இந்தக் கதையின் தன்மை முற்றிலும் மாறுபட்டது. கதையின் துவக்கத்தில் ஒரு புத்தகக்கடையைத் தேடிக்கொண்டு கதைசொல்லி ஒரு நகரத்தின் தெருக்களில் வழிகேட்டு அலைகின்றான். அவனுக்கு வழி சொல்லும் நபர் ஒரு குழந்தையுடன் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கொண்டே வழி சொல்கிறான். குழப்பமான நகரத் தெருக்களில் புத்தகக்கடை தொலைந்து போக திரும்பவும் வழி சொன்னவனிடமே வருகின்றான். மீண்டும் விட்ட இடத்தில் இருந்தே புத்தகக்கடையைத் தேடுகின்றான். இறுதியில் கடையைக் கண்டுபிடித்துவிடுகிறான்.

இந்தக் கதையில் புத்தகக்கடையைத் தேடுபவன், வழி சொல்பவன், நகரத்தெருக்கள், சமூக ஏற்றத்தாழ்வு, உலகமயமாக்கல் அனைத்தும் ஒரு மங்கலானத் தன்மையில் படைக்கப்பட்டுள்ளன.

 1. இந்தக் கதையில் புத்தகக்கடையைத் தேடுவது என்பது வாழ்க்கையில் தேடிக்கொண்டிருக்கிற உண்மை.
 2. தெருக்கள் என்பது நகரமயமாக்கலுக்கும், உலகமயமாக்கலுக்கும் இடையில் நசுங்கும் தன்மை.
 3. கதைசொல்லி, புத்தகக்கடை, இரண்டும் முக்கியமற்ற கதாபாத்திரங்கள். தேடுவது மட்டும் கதை நகர்த்தலுக்குப் பயன்படும் முதல் கதாப்பாத்திரம்.

கதை நேராகப் போகாமல் பக்கவாட்டில் வளர்ச்சி (lateral growth) அடைந்து செல்கிறது. கதை ஒன்றில் ஆரம்பித்து இன்னொன்றாக வளராமல் ஆரம்பித்த இடத்திலே முடிகின்றது.

 

அடுத்து ‘நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்’ என்ற தமிழவனின் சிறுகதைத்தொகுப்பு அண்மையில் புதுஎழுத்து வெளியீடாக வந்துள்ளது. 22 கதைகளைக் கொண்ட இத்தொகுப்புத் தமிழில் இதுவரை பயன்படுத்தப்படாத சாத்தியப்பாடுகளை முன்வைக்கும் முகமாக அமைந்துள்ளது. முதல் சிறுகதை: உங்களுக்குப் பாரம்பரியம் இல்லையென்பது உண்மையா? இக்கதை, கோவை இரயில் நிலையத்தில் துவங்கி பாலக்காடு இரயில் நிலையம் வரை பொழுதுபோக்குக்காகச் சென்று வரும் இராமநாதனும் ஒரு வெள்ளைகார துரையும் பேசிக்கொள்ளும் தன்மையில் அமைந்துள்ளது. இந்தக்கதையில் கதை என்பது இல்லை. கதை இல்லாமலும் கதை சொல்லமுடியும் என்ற நவீன உத்தி இதில் கையாளப்பட்டுள்ளது. உரையாடலுக்கு நடுவில் ஜன்னலுக்கு வெளியே உள்ள மரம், செடி, கொடி, வேலி, பூக்கள் என பேசாத பொருட்கள் மூலம் பேச வைக்கின்றது குறியீட்டு முறையில் அமைந்த இக்கதை. வாசகனின் ஒரு தொனிப்பில் சிக்காத சிக்கலான கதை எங்குமே இல்லை. உரையாடல், மௌனம், என சில நேரங்களில் தலையசைத்துக் கதை நகர்த்துதலை வாசகன் செய்கிறான். கதைசொல்லிக்கும் வாசகனுக்கும் இடையிலான இடைவெளி அழிக்கப்பட்டு வாசகனும் தனக்கான கதையை வாசிப்பின் ஊடாக விரிக்கின்றான். இத்தன்மை சிறுகதையின் அடுத்த தளத்திற்கு வாசனின் வாசிப்பு அனுபவத்தைப் பொறுத்து அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கை ஏற்படுகின்றது.

ஒவ்வொரு வாசிப்பிற்கும் வெவ்வேறு அர்த்தத் தளங்களை உருவாக்கி இயக்கும் சக்தியுடன் இக்கதையின் அமைப்புமுறை பின்னப்பட்டுள்ளது. இந்தப்பின்னல் ஒரு முரண் தன்மையையும் ஈர்ப்பையும் கொண்டு சேர்க்கின்றது. சிக்கல் இல்லாத சிக்கலை உருவாக்குவதிலும் அழிப்பாக்கம் செய்வதிலும் மூலகதையும் கிளைக்கதையும் கதைகளைத் தமக்குள் தாமே பகிர்வதாகவும் கேள்விகேட்பதாகவும் வெட்டுப்படாமல் தப்பித்தாடும் ஆடுபுலிஆட்டமாக நகர்த்தப்படுகின்றன. இத்தகைய நகர்த்தல் இதுவரை தமிழ்க்கதைகளில் கையாளப்பட்டதா என்பது கேள்வியாகவே உள்ளது.

இரண்டாவது சிறுகதையின் தலைப்பு: நீ புரிந்துகொள்வாய் இறுதியாக. இதன் மையக் கதை இது. பழைய காதலியும் மனைவியுமான வார்ஸாவில் வாழும் அன்னாவைச் சந்திக்கச் செல்கிறான் ராஜா. இருவருக்குமான உரையாடல் மெல்ல நீள்கின்றது. வார்ஸாவின் நகர தெருக்களில் நடந்தவாறு, பழைய கட்டிடம், புதிய கட்டிடம், ஹோட்டல்கள் என இவர்களின் உரையாடலின் நடுவில் வந்துபோகின்றன. இடையிடையே குறுக்கீடாக டூரிஸ்டுகள் வந்து செல்கின்றனர். கதையில் எவ்விதமான ஒழுங்கும் பின்பற்றப்படவில்லை. குறுக்கீடுகளால் கதை உதிரியாக்கப்பட்டுக் கதை நகர்கின்றது. அவனும் அவளும் தத்தம் நினைவுகளில் இருந்து பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்சென்று இளமையை நிரப்புகின்றனர். உனக்கு முடி நரைத்திருக்கின்றது என்கிறாள். அவன் நீ அப்படியே இருக்கிறாய் என்கிறான். சர்ச் ஒன்றின் முன்னால் இவர்கள் கடந்து செல்லும் போது பழமை அவனுக்குப் பிடித்ததாகவும் தெருக்களில் உள்ள புதிய புதிய கட்டிடங்கள் அவளுக்குப் பிடித்ததாகவும் பழமையும் புதுமையும் முரணாய் இணைகின்றன. வாழ்க்கையும் அதே போன்று கிழக்கும் மேற்கும் இணைந்து நவீன கலாச்சார பரிமாற்றம் ஒன்று வாசகன்முன் விரிகின்றது. முரண் பெரிதாகி ஓரிழையில் கதையில் அவன் தன்னுடைய பத்து வயது மகளைப் பார்ப்பதற்காக வந்து இறுதியில் பார்க்காமல் செல்கிறான்.  உரையாடல்களின் மூலம் பலவிதமான நுண்ணிய காட்சிப்படுத்தல்கள் வாசகனின் மனதில் இடைவெளிகளை இட்டு நிரப்பும் தொனிப்பில் கதை நகர்கின்றது.

கதையைத் தேடும் போது கதை தென்படுவதில்லை. உரையாடலும் நகரவருணனையும் கதையை நகர்த்திக் காட்சிப்படுத்தல் மூலம் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இதுவரை பயன்படுத்தப்படாத உத்தி இத்தொகுப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கதைசொல்லி தொடர்ந்து ஒரு கதையைச் சொல்லாமல் காட்சிகள், குறியீடுகள், குறுக்கீடுகள் மூலம் கதை நகர்த்துகின்றது. துண்டு துண்டான செருகல்களை ஆங்காங்கே செருகுவதன் மூலம் கதை முழுமைபெற்றதாகவும் முழுமை பெறாததாகவும் ஒருவித மிதப்புதத்துவத்தின் வெளிப்பாடாகவுள்ளது. இந்தக் கதைகளின் உரையாடல்களில் கேள்விகளுக்கு நேரடி பதிலோ விளக்கமோ இல்லை. தலையசைத்துத் தாவிச்செல்லுதல் நிராகரித்தல் என புதுவித வர்ணஜாலத்தில் வாசகனின் ஊகத்திற்கு எதிரான கதைகளம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தகைய கதைக்களம் கரைந்தும் விரவியும் நீர்த்தும் வெவ்வேறுவிதமான பரிணாமங்களைத் தருகின்றது. கதைகள் சிதைக்கப்பட்டும் அழிப்பாக்கம் செய்யப்பட்டும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இத்தொகுப்பில் உள்ள் கதைகளின் உரையாடல் வித்தியாசமான தொனிப்பில் புனையப்பட்டுள்ளன. இது எதார்த்தமும் ஏக்கமும் தவிப்பும் கலந்த கலவையாகத் தனக்கான முகங்களை இயல்பாகக் காட்சிப்படுத்தாமல் யூகிக்கமுடியாததொரு மூலையில் இருந்து வாசகனைப் புரட்டி எடுக்கின்றது. அதிர்ந்து போகும் வாசகனின் பிரதிக்கும் அவனுக்குமான உறவு மிக நெருக்கமடைகின்றது. இந்த நடைக்கு காமமோ வசீகரமோ பயன்படுத்தாமலே ஒருவித உயிர்ப்புத்தன்மை பிரதிக்குள் இயக்கமுறுகின்றது. இந்த இயக்கமுறும் தன்மை கவனிக்கத்தக்கது. இதுவரை தமிழ்ச் சிறுகதைகளின் வரலாற்றில் இந்த உத்தியைக் கையாண்டுள்ளனரா என்ற கேள்வி வாசகனின் மனதில் பல இடங்களில் மிகத் தீர்க்கமாக எழுகின்றது.  “இது அவன், இது அவள் ………இது” போன்ற உரையாடல்கள் தமிழ்ச் சிறுகதைகளில் இடம்பெற்றுள்ளதா என்பதும் சந்தேகமே. உரையாடல்களுக்கு மத்தியில் வரும் மூன்றாவது கதாபாத்திரம் தன்னைத் தானே குறுக்கிட்டுக்கொண்டும் அறிமுகப்படுத்திக்கொண்டும் அழிந்தொழிகின்றது. தொடர்ச்சியான கதைகள் நேர்கோட்டிலோ குத்துக்கோட்டிலோ தனக்கான பணியினைச் சீராகவும் சிதைவாகவும் தன் பாணிக்கேற்ப இயக்கமுறுத்துகின்றன.

தமிழில் இன்றைய நவீன கதைச்சூழலுக்கு ஆரம்ப கட்ட கதைசொல்லல் மரபுகளில் இருந்து பூடகமான மாற்றங்கள் சமூக காலகட்டங்களுக்கு ஏற்ப தன்னைத்தானே மாற்றியமைத்துக் கொண்டு வந்துள்ளன. இந்த மாற்றங்களைத் தனித்த ஒரு சிந்தனாப்பள்ளியாகவே வளர்த்தெடுத்தவர் தமிழவன் என்று கூறலாம். தமிழவன் தான் வாசித்த மேலைத்தத்துவங்களையும் இலக்கியக்கோட்பாடுகள் மற்றும் இலக்கிய வகைமைகளைத் தமிழிற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நிலையில் தொடர்ந்து கோட்பாடு, நாவல், சிறுகதை, விமரிசனம், திறனாய்வு என்ற பல வெளிகளைப் பயன்படுத்தி இலக்கியத்துள் வளம் சேர்த்தவர். நவீன இலக்கியத்தின் மைல்கல் என்று சொல்லப்படும் அளவிற்கு இவருடைய சிந்தானப்புலம் ஒன்றிலிருந்து இன்னொன்றாகத் தாவிக்கொண்டே இருக்கின்றது.

ஆரம்ப கதைசொல்லலில் இருந்து 2015-இல் வந்த கதைகள் வரை கதைசொல்லல் சமூக, அரசியல் காரணிகளுக்கேற்ப தன்னைத்தானே தகவமைத்துக் கொண்டும் உலகளாவிய இலக்கியதாக்கங்களைத் தமிழிற்குக் கொண்டுசேர்த்தும் தொடர்ந்து பலசோதனை முயற்சிகளைக் கையாண்டும் புதுப்புது களன்களை உருவாக்கியுள்ள தனித்தன்மையையும் காண முடிகின்றன. இந்தப் பின்புலங்களின் வாயிலாகத் தமிழ்ச் சிறுகதையின் வளர்ச்சிநிலையைப் பார்க்கும் போது புதுவிதமான பரிமாணங்களை அது எட்டியுள்ளது என்பதை எவராலும் மறுக்கவியலாது.

 

என்னுடைய எழுத்துக்கள் விமர்சனங்கள் படைப்புக்கள் – Essays, Criticism & Literature