தமிழவனின் சமீபத்திய நூலிலிருந்து

அடையாளம் வெளியிட்ட ‘திராவிடம், தமிழ்த்தேசம், கதையாடல்’ நூலின் பகுதி.

…………… …… அயோத்திதாசரின் முன் அன்று இருந்த ஒரே இலட்சியம் தலித் மக்கள் பிரிவினர் பற்றிய அக்கறை. அதனால் ஆங்கிலேயர்களை முற்றாக ஆதரிப்பதுதான் அவர் கொள்கை. அயோத்திதாசர் ஆய்வாளர்கள், அயோத்திதாசரிடம் இருந்த காலனி பற்றிய ஆமோதிப்புக் கண்ணோட்டத்தால் அவர் சமூக இயக்கம் சமூக வரலாறு போன்றன பற்றிய முழுப்பார்வை இல்லாதவராய் இருந்ததை அறிய வேண்டும். ஆய்வு நோக்குத்தான் இங்கெல்லாம் பயன்படுமே தவிர செயல்வீரர்நோக்கு பயன்படாது. இந்த விசயம் முக்கியமானதாகும்.

அதாவது இருபதாம் நூற்றாண்டு, தமிழகத்தின் முக்கியமான அத்தனை பேரையும் ஏதோ ஒரு வகையில் குறையுள்ளவர்களாகவே உருவாக்கியுள்ளது. அதற்கு அன்றைய சூழலும் வரலாறும் காரணம்.

ஆஷ் கொலை பற்றி மிக மிக உணர்ச்சி கலந்த வாக்கியங்களைப் பயன்படுத்துகிறார் அயோத்திதாசர். இன்றையச் சூழலிலிருந்து பார்க்கும்போது நமக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது.

“ஆஷ் அவர்களை இம்மாதம் 18தேதி காலை 10 மணி 40 நிமிஷத்திற்கு ரிவால்வரால் சுட்டுக் கொன்ற துஷ்டனை பிராமணன் என்போமா, இல்லை. இந்தப் படுபாவியின் கேடுண்ட செயலால் மற்றும் இராஜ விசுவாசமுள்ள பிராமணர்கள் என்போர்களையும் மனக் கலக்கமுறச் செய்து விட்டானே….”

என்று வருத்தப்படுகிற அயோத்திதாசர் ஆஷை மிக நல்லவர் என்று கூறுகிறார். முக்கியமாக “சகல சாதி மனுக்களையும் சமமாகப் பாவிப்பவர்” என்று மக்கள் கூறுவதாக எழுதுகிறார். மேலும் ஆஷ் கொலைக்கு, மிகச் சிறந்த வரலாற்று ஆய்வாளர் வெங்கடாசலபதி கூறுவதுபோல் மார்ச் 12-ஆம் தேதி 1908-இல் நடந்த வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகியோரின் கைதை எதிர்த்துத் திருநெல்வேலிப் பகுதிகளில் கலகம் செய்த சுதேசி இயக்கத்தின் தொடர்ச்சி காரணமாக இருக்கலாம் என்கிறார் அயோத்திதாசர். எனினும் பிரிட்டிஷ் அரசாங்கம் கலகத்துக்கு எல்லா சாதியாரையும் தண்டித்தாலும் ஒரு பிராமணன் ஏன் முன் வந்து ஆஷ் என்ற நல்ல கலெக்டரைக் கொல்ல வேண்டும் என்று கேட்கிறார் அயோத்திதாசர்.

அயோத்திதாசர் “இராஜ துரோகிகளை அடக்கும் வழி” என்ற கட்டுரையில் கருணை தங்கிய ராஜாங்கத்தார் துஷ்டர்களாம் இராஜதுரோகிகளையும் கொலை பாதகர்களையும் குடிகேடர்களையும் களவாடிகளையும் சிறையில் அடைக்கும் போது என்ன செய்ய வேண்டும் என ஒரு ஆலோசனை வழங்குகிறார். அதாவது மேல்சாதியார்கள் ஆஷ் போன்றவர்களைக் கொலை செயது சிறைக்கு வரும்போது “அவர்கள் செய்து வந்த செயல்கள் யாவும் கீழ்ச்சாதி செயல்கள் எனக் கணித்துச் சிறைப்பட்டவர்களில் மேல்சாதி கிடையாதெனும் ஓர் பொதுச்சட்டத்தை விதித்து விடுவார்களாயின்” சாதி மமதை சமூகத்திலிருந்து நீங்கும் என்கிறார்.

அயோத்திதாசர் ஒற்றை நோக்கு உடையவராய் காலனியம் என்ற பன்முக உண்மையை அணுகுகிறார். அந்த ஒற்றை நோக்கு, தன் மக்களுக்கு விடுதலை. எனவே வாஞ்சிநாதனைப் பிராமண குலத்திற்கு அடாது செய்த படுபாவியாய் பார்க்கிறார். ஒரு தனிமனித குணம் சார்ந்ததாய் ஆஷைக் கொலை செய்தவனின் கொலைக்குணத்தைக் கணிக்கிறார் அயோத்திதாசர்…… ……. ……

தமிழவன் – சிறுகதை

                                            புத்திஜீவி கே.யின் வாழ்வும் பணியும்

 

கே. பற்றிய இந்தச் சுருங்கிய வாழ்க்கை வரலாற்றை அவனுடைய மரணத்திலிருந்து தொடங்குவது தவிர வேறு வழியில்லை.அவன் மரணம் சம்பவித்தோ இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு.

அமெரிக்காவில் ஒரு பல்கலைக்கழகத்தில் கோடை விடுமுறையில், இந்தோ-ஆரியமொழிக் குடும்பத்தைச்சார்ந்த அவன் தாய் மொழியைப் பயிற்றுவிக்க, அமெரிக்க சமஸ்கிருத பேராசிரியர் வால்டர் வில்ஃபோர்ட் கே.யை அழைத்தபோது கே.யின் கால்கள் தரையில் பாவவில்லை. நானும் கே.யும் அதுபோல், கே.யின் நிரந்தர விரோதியான என் நண்பன் ஆனந்ததீர்த்தனும் (எனக்கு அந்நியமான) அந்த ஊரில் ஒரு மொழி நிறுவனத்தில் வேலை பார்த்தோம்.

ஆனந்ததீர்த்தனை நான் என்னுடைய மொழியைச் சேர்ந்த நண்பர்களுக்கு ஒரு தோற்றுப்போன எழுத்தாளன் (எ ஃபெயில்ட் ரைட்டர்) என்று அறிமுகப்படுத்துவதும் போது, ஆனந்ததீர்த்தன் ஏனோ உள்ளூர மகிழ்வான்.

ஆனந்ததீர்த்தன்தான் கே.யின் மரணத்தை, கைப்பேசி அறிமுகமாகியிராத, 70களில் அவ்வப்போது மக்கர் செய்யும் என்வீட்டு லேண்ட் லைனுக்கு அழைத்துச் சொன்னான்.

“புஸ்வாணம் மேலே போய், போனவேகத்தில்

எரிந்து புஸ்ஸென்று கீழே விழுந்து விட்டது” என்றான்.

“ஐ டோண்ட் அன்ட்ரஸ்டான்ட் யு.”

என்றேன் ஆங்கிலத்தில். ஆனால் எனக்கு உறுதியாகத் தெரியும் கே. பற்றித்தான் ஏதோ சொல்ல வருகிறான் என்று.

“கே.டைய்ட் டுடே அட் ஸெவன் இன் த மார்னிங். புஸ்வாணம் மேலே போய் அப்படியே விழுந்துவிட்டது”.

தொண்டையிலிருந்து பேசிய ஆனந்ததீர்த்தன் சொன்னமுறை எனக்கு அவன் வருத்தத்தோடு உண்மையைச் சொல்கிறான் என்று புலப்படுத்தியது. கே. திடீரென இறந்த செய்தி இப்படித்தான் அந்த நகரத்தில் பரவியது.

கே. அப்போது மொழிநிறுவனம் எங்களுக்கு ஒதுக்கியிருந்த குவார்ட்டர்ஸில் தங்கியிருந்ததால் அவன் வீடு என் வீட்டுக்கு அருகில் இருந்தது. நான் என் இரு சக்கர வாகனத்தில் அவன் வீட்டுக்குப் போன போது அவன் வீட்டின் முன் ஒரு மழை மேகம் கவிந்திருந்த அந்த ஜுலை மாதத்தில் பார்த்தவை எல்லாம் நன்றாக நினைவிருக்கின்றன. சிறு கூட்டம் ஒன்று கூடியிருந்தது. அவனிடம் பி.எச்.டி செய்யப்போய் அவனால் பாலியல் தொல்லைக்கு ஆளாகி மொழிநிறுவனத்தின் இயக்குநருக்கு முன்பொருமுறை கம்ப்ளயண்ட் எழுதிய பெண் அழுதுகொண்டு ஒரு மரத்தின் அருகில் தரையில் அவளுடைய சுடிதாரில் மண் ஒட்டுவதையும் பொருட்படுத்தாது அமர்ந்திருந்தாள்.

நான் அந்தப் பெண்ணை அறிவேன். எனவே அவளருகில் சென்றபோது அவள் கே.யின் சாவைப் பற்றிப் பேசாமல் அவளுக்கு முன்பு நடந்தது பற்றி ஏனோ பேசினாள். “கம்ப்ளய்ண்டைத் திரும்பப் பெறாவிட்டால் தற்கொலை செய்து விடுவதாக எங்க வீட்டுக்கு வந்து கே. மிரட்டியதைப் பார்த்து அப்பா உண்மையில் பயந்துபோனார். அதனால் கம்ப்ளயண்டை வாபஸ் வாங்கியதோடு பிஎச்டியும் கே.யிடம் செய்துகொண்டேன். இப்போது இப்படி ஆகிவிட்டது” என்றாள் மூக்கைச் சிந்தியபடி.

கே. போன்ற அறிவாளியிடம் ஆய்வு செய்தால் அவர்கள் மொழி பேசுபவர்கள் உடனே வேலை வழங்குவார்கள் என்ற தகவலையும் அந்தப் பெண் சொன்னாள். இவளைப் போல் பல பெண்களுக்குப் பாலியல் தொல்லை தந்து பிஎச்டியும் தருவான் கே. என்று ஆனந்த்தீர்த்தன் ஜோக் அடிப்பான். இறந்தவன் உடலையாவது பார்ப்பதற்கு ஆனந்ததீர்த்தன் வருவான் என்று நான் நினைத்தேன். அப்போது அந்தப் பெண், வேறு ஒரு பெண் வருவதைச் சுட்டிக்காட்டி

“அவளிடமும் முதலில் தவறாக நடக்க முயன்று பின்பு அவளது பிஎச்.டி நெறியாளராய் ஒழுங்காய் இருந்தான் கே.” என்ற தகவலைத் தரவும் புதிய இளம்பெண் அழுதபடி எங்களருகில் வந்து சேரவும் சரியாய் இருந்தது.

இப்போது 1998 நடந்துகொண்டிருக்கிறது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு நான் கே.யை நினைப்பதற்கான ஒரே காரணம் கே.யின் இந்த வாசகம்: “ஒரு நிகழ்வை நிரூபிக்க வேண்டுமென்றால் அந்த நிகழ்வை இன்னொரு நிகழ்வோடு தொடர்பு படுத்துவதைவிட வேறு வழியில்லை”.

கடந்த 40 ஆண்டுகளில் இந்த வாசகம் அவர்கள் மொழியில் மிகவும் புகழ்பெற்றுவிட்டது. கே. இறந்தபின் முதல் பதினைந்து ஆண்டுகள் அவனுக்கு நினைவுக் கூட்டங்களை ஒழுங்காய் நடத்தினாள் அவனுடைய மனைவி சரஸ்வதி. (கே. வாழும்போது அப்படி நடத்தும் எண்ணம் அவள் கொண்டிருக்கவில்லை) அதன்பிறகு இப்போது நடத்துகிறாளோ என்னவோ தெரியாது.ஏனெனில் அந்த ஊரைவிட்டு நானும் எப்போதோ வந்துவிட்டேன். இந்த வாசகத்தை நான் பழைய புத்தகங்களை அடுக்கும்போது ஒரு பத்திரிகையின் பழைய மஞ்சள் படிந்த பக்கத்தில் யாரோ அடிக்கோடிட்ட பகுதியில் பார்த்தேன். அப்போதிருந்த புகழ் ‘கே’க்கு இப்போது இல்லை என்பேன் என்றாலும் சிலர் இப்போதும் ‘கே’யை புகழ்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் ‘கே’ யின் வயதொத்தவர்கள். இழந்துபோன அவரவர் வயதை அப்படிக் கௌரவிக்கிறார்கள் என்பான் ஆனந்த தீர்த்தன்.

கே. ஒருமுறை ஓவியரான தேசத்தின் புகழ்பெற்ற கவிஞரைப் பற்றி எழுதியிருந்தான். தாடி வைத்துக் கொண்டிருக்கும் அந்த உலகப் புகழ்பெற்ற கவிஞரைப் பின்பற்றி தானும் தாடி வைத்திருப்பதாகக் கூறிய ‘கே’ அந்தக் கவிஞரைப் பற்றி ஒரு கட்டுரை 2 பக்கத்தில் எழுதியிருந்தான். அது என் கவனத்தையும் ஈர்த்தது. அதாவது அக்கவிஞர் முதுமையில் எத்தகைய கற்பனை சக்தியைக் கொண்டிருப்பார் என்ற அபூர்வமான கேள்வி அவனுக்குத் தோன்றியிருந்தது. ஆனந்த தீர்த்தனிடம் அது அபூர்வமான கேள்வி என்ற என் எண்ணத்தைக் கூறிய போது ஆனந்த தீர்த்தன் இப்படிச் சொன்னான்.

“நீ வயதானவர்கள் யாரும் எழுதாத மொழியிலிருந்து வந்துள்ளாய். கே. வயதானவர்கள் மட்டுமே எழுதும் மொழியில் எழுதுகிறான். எனவே வயதானவர்களின் கற்பனைபற்றி யோசிப்பது கே. போன்றவர்களுக்கு எளிது.”

நான் குழப்பமடைந்தேன்.

எனினும் ‘கே’ என்ன சொல்லவருகிறான் என்று சிந்தித்தேன். எனக்கும் ஆனந்த தீர்த்தனுக்கும் கே. தேசியப் புகழ்பெற்ற கவிஞரின் எல்லாப் படைப்பையும் படித்தவனல்ல என்பது தெரியும்.

‘கே’ தேசியப் புகழ்பெற்ற அந்தக் கவிஞரின் ஓவியக் கண்காட்சியைப் பார்த்திருக்கிறான். அழகற்ற தோற்றமுள்ள அவ்வோவியங்களைக் கூர்ந்து பார்த்து ஒரு கருத்தைச் சொல்கிறான். பல ஓவியங்களில் மறைந்திருக்கும் பெண் சாயை ஒன்றைக் கண்டு பிடித்திருக்கிறான். அக்கருத்தை இவ்வாறு வெளிப்படுத்துகிறான்.

“மறைவாக, பல ஓவியங்களில் ரகசியமாய் வெளிப்படும் பெண்சாயல் உண்மையில் ஓவியங்களில் காணப்படுவதில்லை”.

இந்த வாசகம் எனக்குப் பெரிய தலை வேதனையைக் கொடுத்தது. பெண்சாயல்  இருக்கிறதென்கிறான். ஆனால் அது இல்லாததென்கிறான். எனக்கு இவ்வாக்கியத்தின் முரண் புரிய இன்னொரு வாக்கியம் உதவியது.

“இருப்பது இல்லாததுபோல் தென்படுவது உணர்வின் அதீதத்தால்  ஆகும்”.

இந்தமாதிரி விசயங்களை நினைவில் கொண்டு வந்த நான் கே.யின் வறுமைகொண்ட இளமைக்காலம் பற்றி நினைத்தேன் ஊரில் கிராமத்தில் திருவிழாவுக்கு நூற்றுக்கணக்கான மக்களுக்கு உணவு தயாராக்கும்போது வயிற்றுப் போக்கு ஏற்படுத்தும் மாத்திரைகளை வாங்கிக்கொண்டு யாருக்கும் தெரியாமல் உணவில் கலந்திருக்கிறான். இது அவன் மிக அதிகமான இறை மறுப்பாளனாக இருந்தபோது நடந்தது. இதனை அவனது பாலிய காலத்தில் அவனோடு இறைமறுப்பாளர்களாக அலைந்து இப்போது பெரிய பக்தர்களாக மாறி அரசியலில் புகுந்துள்ளவர்கள் கூறுகிறார்கள்; இவர்கள் சிலரே.

‘கே’யின், ஒரு கதை பற்றிய விமர்சனம் என்னைக் கவர்ந்தது. அதுபற்றிக் கூறாவிட்டால் ‘கே’ பற்றிய என் மனப்பதிவு முழுமையடையாது. அக்கதைச் சம்பவம் வெயிலில் நடக்கிறது. அக்கதை, வெள்ளைக்காரர்கள் கொடூரமாய் ஆண்ட சமயத்தில், அச்சிட்ட பத்திரிகையின் தாள் போலீஸால் கறுப்புமைப் பூசி அழிக்கப்பட்டது. அப்போதெல்லாம் போலீஸ் பற்றி ஏதும் பத்திரிக்கைகளில் எழுதமுடியாது. அச்சுறுத்தலுக்கு ஆளான அந்தக் கதையில் முழுவதும் வெயில் கொடூரமாய் அடித்தது. அக்கதையானது கர்ப்பமான ஒரு பெண்ணை அவளுடைய தாய் பேற்றுக்குத்  தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு  போவது பற்றியது. பஸ் நிலையத்துக்கு அப்பெண்ணும் அவளது கிராமப்புறத் தாயும் வந்து நிற்கும்போது, போலீஸ் எல்லோரையும் விரட்டுகிறது. அப்பெண்ணுக்கோ தாகம். அப்போது பார்த்து வெயில் சுள்ளென்று அடிக்கிறது. தாயால் பெண்ணை விட்டுவிட்டு ஒரு டம்ளர் தண்ணீர் எடுக்கப் போக முடியாது. எல்லா இடத்திலும் போலீஸ் பரவுகிறது. யாரோ பஸ்ஸில் கல்லடிக்கிறார்கள். கர்ப்பிணிப் பெண் என்னாகுமோ தன் குழந்தைக்கு என்று புலம்புகிறாள். அவளுக்கு வேறு ஏதும் தோன்றுவதில்லை.

நான் சொல்ல வந்தது ‘கே’ எழுதிய விமரிசனம் பற்றி. ஒரு டேப்ளாய்ட் பத்திரிகையின் தரங் குறைந்த தாளில் அச்சிட்ட தன் ஒரு பக்கக் கட்டுரையில் அக்கதை வெயில் பற்றியது என அடம்பிடிக்கிறான் கே. அக்கட்டுரை வெளியான அடுத்த நாள் ‘கே’யின் பாதத்தில் பெருவிரலில் ஒரு கோபக்கார இளைஞன் தன் பூட்ஸ் கால்களால் மிதித்தபடி ‘கே’யின் சட்டைக்காலரைப் பிடித்தான். வெயிலாம் வெயில் என்றான் இளைஞன். ‘கே’ அசராமல் தன் எழுத்தின் புரட்சிகரத் தன்மையால் உருவான எதிரிகளின் வேலை இது என்று கூறிக்கொண்டு தலையைக் கீழே போட்டபடி நடந்து போனான்.

இந்த நிகழ்ச்சி நானும் ஆனந்ததீர்த்தனும் ‘கே’ யும் நாங்கள் வேலை பார்த்த மொழிநிறுவனத்தின் கான்டீனில் காபி குடிக்கப்போனபோது நடந்தது. சிலவேளை இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கவேண்டுமென்பதற்காக, வேண்டுமென்றே இப்படி எழுதுகிறானோ இவன் என்றும் தோன்றியது.

கே. பார்ப்பதற்கு அழகற்றவனாக இருப்பான். கரிய நிறமுகம்;  சுருட்டைமுடி. கண்கள் பெரியவை. அவன் சிரிக்கும்போது நாசித்துவாரம் தேவைக்கதிகமாக விரிந்து சுருங்கும். அப்படி விரிந்து சுருங்கும் நாசித்துவாரத்தைக் காட்டி ஒருமுறை ஆனந்ததீர்த்தன்தான் எனக்கு, “சின்ன பறவைகள் உள்ளே போய்விட வாய்ப்பிருக்கிறது, சொல்லிவை ” – என்றான். கறுப்பு நிறமான முகத்தில் வெள்ளையான பெரிய பற்கள். அதில் ஒரு தாடி வேறு. எதிர்மறையான பிற அங்கங்களின் தன்மையை அவனது உயரம் ஓரளவு சரி செய்து நேர்மறையாக மாற்றியது எனலாம். ஒருமுறை என்மொழியில் ஒரு குறிப்பிட்ட கவிஞர் எப்படி எழுதுவார் என்று கேட்டான். நான் மொழிநிறுவனத்தில் எனக்கு வகுப்பு இருக்கிறது என்று வேகமாய்ப் போய்விட்டேன். ஒரு மணிநேரம் வரை அதே இடத்தில் நின்றபடி சிகரெட் இழுத்துக்கொண்டும் வானத்தைப் பார்த்துக்கொண்டும் நின்றிருக்கிறான். வகுப்பை முடித்துக்கொண்டு நான் அவன் கேட்ட வேள்வியை அனாயசமாய் மறந்து வந்து கொண்டிருந்தேன். “நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லவில்லை” என்று என் தோளைத் தொட்டான். நான் நின்றேன்.

“ஆனந்த தீர்த்தன் ஒரு ………….. ………… ………….  பாஸ்டர்ட்

அவனுடன் சேர்ந்து ஏன் கெட்டுப் போகிறாய்? நீ நான் நேசிக்கும் புராதன மொழியியலிருந்து வந்திருப்பவன் பதில் சொல்” என்றான். அவன் கை என் தோளை இறுக்கியது. அப்போதுதான் அவன் என் மொழியில் எழுதும் கவிஞன் பற்றி என்னிடம் கேட்ட கேள்வி ஞாபகம் வந்தது.

“வா, கே. என் அறையில் அமர்ந்து பேசுவோம்” என்றேன்.

“இல்லை. உன்மீது கோபம், என் கேள்வியை உதாசீனம் செய்தாயோ என்று. எனவே என் கேள்வியை வானத்திடம் கேட்டபடி ஒரு மணிநேரம் அதே இடத்தில் நின்றிருந்தேன்”.

“அய்யய்யோ, எதற்கு உன்னையே தண்டித்தாய்?” என்று கேட்டபடி கே.யின் கையைப் பிடித்தேன்.

வருகிறேன் என்று சிகரெட் பிடித்து அப்போதைக்கு மறைந்தவன் ஓரிரு நாளில் என் மொழிக்கவிஞன் பற்றி என்னிடம் தவல்களைப் பெற்று அவனுக்கே உரிய முறையில் அவற்றை வெட்டி ஒட்டி கட்டுரையை டெல்லியில் சிலருடைய தொடர்பின் மூலம் மதிப்புக்குரிய ஒரு கருத்தரங்கில் வாசித்துவிட்டு மகிழ்ச்சியோடு திரும்பிவந்தான். ஆனந்ததீர்த்தன் “உன் கருத்துக்களைத் திருடி வாசித்துவிட்டு வந்திருக்கிறான்” என்றான்.  ஒரு மாதம் கழித்து நான் அவசரமாக எங்கோ போய்க்கொண்டிருந்தபோது கே. தோன்றி  அந்த என்மொழிக் கவிஞன் பெயரைச் சொல்லி அந்தக் கவிஞனைப் பற்றி உனக்கு ஏதேனும் தெரியுமா என்று கேட்டான். எனக்கு எரிச்சல் வந்தது. அது யார் என்று வேண்டுமென்றே கேட்டேன்.

“அப்புறம் விளக்குகிறேன். ஏ, ஃபைன் பொய்ட் என்றான்”.

உண்மையிலேயே என்னிடமிருந்து அக்கவிஞனைப் பற்றி முதன்முதலாக அவன் அறிந்து கொண்டதை முழுதும் மறந்திருந்தான்.

அவன் டெல்லியில் ஆங்கிலத்தில் படித்த கட்டுரையை என்னிடம் கொடுத்துவிட்டுப் புறப்பட்டதும் நான் அக்கட்டுரையை எடுத்துப்புரட்டினேன். முதல் பக்கத்தில் கட்டுரை இப்படித் தொடங்கியது.

“இலக்கியம் உயிர் வாழ்கிறது; புழுப்பூச்சிகள் உயிர் வாழ்வது போல”.

நான் அவ்வரிகளைப் படித்துக் கொண்டிருந்தபோது அவனுடைய மாணவி ஒருத்தி ஓடி வந்தாள்.

ஸார், கே. யின் கட்டுரையை அவர் உங்களிடம் கொடுத்து ஒரு  வாரம் ஆகிறதாம். உடனே வாங்கி வரும்படி சொன்னார் என்றாள்.

நான் முதல் இரண்டு வரிகளைப் படித்த கட்டுரையை அப்படியே தூக்கி அவளிடம் கொடுக்க, பேண்ட் அணிந்த உயரமான அப்பெண் வேகமாகப் பின்புறத்தைக் காட்டியபடி நடந்தாள்.

ஆனந்த தீர்த்தனிடம் சொன்னால் வேண்டுமென்றே அவன்  இப்படிச் செய்கிறான், அவனை மேதை என்று நீ நினைக்க வேண்டுமென்பதற்காக  என்பான்.

கே. எங்கள் மொழித்துறையில் தயாரித்து எழுதப்பட்ட  அவனுடைய மொழியின் இலக்கிய வரலாற்றில் ஒரு பகுதியை எழுதினான். அதனைப் பற்றி ஆனந்த தீர்த்தன் சொன்ன செய்திகள் எனக்கு கே. பற்றிய குழப்பத்தை மேலும் அதிகரித்தன. ஆனந்ததீர்த்தன் என்னைவிட இரண்டு வயது மூத்தவன். கே. என்னைவிட  ஐந்து வயது இளையவன். ஆனந்ததீர்த்தன் ஆங்கில இலக்கியம் படித்துவிட்டுச் சிலகாலம் அமெரிக்காவில் வசித்து விட்டு வந்தவன். கே. எப்படியாவது அமெரிக்காவிற்குப் போய் அவனுடைய தாய்மொழியைக் கற்பிக்க வேண்டுமென்று விரும்பினான். ஆங்கிலத்தாலும், அறிவாலும் வித்தியாசமான இலக்கியச் சர்ச்சைகளாலும்  அந்தந்த இடங்களில் காணப்படும் உயர் சமூகத்துப் பெண்களாலும்  கவரப்பட்டு வாழ்வின் கவர்ச்சியை அடையும் வழியாக இலக்கியக் கோட்பாடுகளும் விமரிசனங்களும் எழுதத் தொடங்கியவன். அவனது அறையைப் பற்றி இங்குச் சொல்ல வேண்டும்.  எங்கள்  மொழித் துறையில் எல்லோருக்கும் காற்றோட்டமான அறைகளும் தலைக்கு மேலே ஒட்டறை அடிக்கப்படாத மின்சார விசிறிகளும் உண்டு. ஆனால் கே. தேர்ந்து கொண்ட அறை ஒரு பழைய ஏடுகளை அடுக்கி வைக்கும் அறையினுள் நான்கடிக்கு நான்கடி பரப்பளவுள்ள ஒரு உள்அறை. ஒரு சிறு மேசையும் இரண்டு  இரும்பு நாற்காலிகளும் மட்டும் வைக்கமுடிந்த அறை. ஒருமுறை கே.யின் அறைக்கு வந்த அவனுடைய இப்போதைய மனைவியும் எங்கள் மொழித்துறையின் முன்னாள் மாணவியுமான சரஸ்வதி கே.யிடம் கத்திவிட்டுப் போனாள் என்று மாணவர்கள் சொன்னார்கள்.

“ஏன்யா உன் புத்தி இப்பிடி, நீ ஏன் இந்த மாதிரி அறையில் இருக்கிறாய் என்பது எனக்குத் தெரியாதா?” என்று கத்தினாள் என்று கேள்வி. அவள் கத்தும்போது வாழ்க்கையில் ஏதும் பிடிப்பில்லாதவன்போல் சிகரெட் பிடித்தவாறு கே. சுவரைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தானாம்.

ஆனந்ததீர்த்தனிடம் ஏன் இருட்டறையில் வசதியில்லாமல் கே. அமர்ந்திருக்கிறான் என்று கேட்க நினைத்த எனக்கு ஆனந்ததீர்த்தன் கிடைக்கவில்லை. ஆனந்ததீர்த்தன் ஏற்கனவே எனக்குப் பழக்கப்படுத்திய கேயின் ஆய்வு ஆஸோசியேட் ஒருவன் ஒரு நாள் என்னுடன் பேசிக்கொண்டு வந்தான். கே. அந்த இளைஞன் முதுகலை படித்தபின்பு மிகவும் கஷ்டபட்டதை அறிந்து தன்னிடம் துணை ஆய்வாளனாகச்  சேர்ந்துகொள்ளும்படி கூறியதைச் சொன்னான். கே.யின் வீட்டில்தான் அந்த இளைஞன் கொஞ்சநாள் தங்கியிருந்தான். கே.யைப் பற்றி ஒரு நாள் பேச்சு எடுத்தேன். கே. எப்போது அமெரிக்கா போகிறான் என்று. உடன் அந்த துணை ஆய்வாளன் தன் மனதில்  இருந்ததைக் கொட்டினான்.

“ஸார், கே. போனவாரம் வீட்டுக்குப் பக்கத்து நிலத்தில் நின்றிருந்த பலாமரத்திலிருந்து இரண்டு பலாப்பழங்களை இரவில் பறித்ததற்காக அந்த நிலத்தின் சொந்தக்காரன் வந்து கே.யிடம் முன்பு தேங்காய் திருடினாய், இப்போது பலாப்பழம் திருடினாய் என்று சட்டையைப் பிடித்து இழுத்ததும் கே. தரையில் த்டால் என்று விழுந்தான் ஸார். நான் இடையில் புகுந்து கே.யைக் காப்பாற்றினேன். திடீரென்று கே. என்ன செய்தான் தெரியுமா? அயோக்கினை என் ஆசிரியன் என்று கூட இனி பார்க்கமாட்டேன். மரியாதையில்லாமல் தான் பேசுவேன். தேங்காயும் பலாப்பழமும் திருடியவன் இதோ நிற்கிறான் என்று என்னைப் பிடித்துக் கொடுத்தான், ஸார். அன்று கே.யின் வீட்டிலிருந்து வந்துவிட்டேன்” என்றான்.

ஆனந்ததீர்த்தனிடம் இதைச் சொன்னால் அவன் என்ன சொல்வானோ என்று எண்ணிக்கொண்டேன். இன்னொரு நாள் மொழித்துறையில் மாணவ மாணவியர்களுக்குத் தேர்வு நடந்து கொண்டிருந்தபோது விரைவாய், கண்ணாடியைக் கையில் சுழற்றியபடி என் அறைக்கு வந்த கே. ஒரு டைப் செய்யப்பட்ட வெள்ளைத்தாள்  கத்தையைப் படி என்று கொடுத்தான். இந்திய இலக்கியத்தின் பொதுவான போக்குகள் என்பது கட்டுரையின் தலைப்பு. நானும் அவனும் முன்பு எனது மொழிக் கவிஞர்களின் கவிதைப்போக்கு  என்று விவாதித்த கருத்துக்கள்  பலமொழிக் கவிஞர்களின் கருத்துக்களாய் அவர்களின் பெயரின்றி டைப் செய்யப்பட்டிருந்தன. அக்காலத்தில் டைப் செய்வதுதான் வழக்கம். எனவே கரிகரியாய்  ஓரளவு நிறம் மங்கிய  ரிப்பனில் அடிக்கப்பட்டிருந்தது அந்தக் கட்டுரை. அடுத்த நாள் வந்து உன் கருத்துக்கள்தான் என்று கூறி  சிகரெட்டை ஊதியபடி மோட்டு வளையைப் பார்த்து என்ன புழுக்கம் என்று சட்டைக் காலரைத் தூக்கிவிட்டான். அக்கட்டுரையில் இந்த மேற்கோள் என் மனதைக் கவர்ந்தது.

“நான் தேடக்கூடாது. கண்டுபிடிக்கவேண்டும்”.

எனக்குத் தெரியும். அந்த மொழியில் அந்த ஆண்டு முழுதும் பலர் அவனுடைய இந்த மேற்கோளை விவஸ்தை இல்லாமல் எடுத்தாளப் போகிறார்கள் என்று.

மொழித்துறை தொகுத்துப் பிரசுரித்த அவர்களின் இலக்கிய வரலாற்றைப் பலர் பகுதி பகுதியாகப் பிரித்து எழுதினார்கள். ஒருவர் இலக்கணம் பற்றியும் இன்னொருவர் 1100 ஆம் ஆண்டில் அவர்கள் மொழியில் இருந்த சமண இலக்கியத்தில் செடிகொடிகளின்   ஆன்மா மேற்கொள்ளும் வாழ்க்கை பற்றியும் எழுதினார்கள்(ஒரு  முள் செடி முந்திய பிறப்பில் இறந்துபோன தன் தந்தைக்காக இரண்டுநாள் அழுது அரற்றிய மூன்றடி பாடலான முள்செடியின் அழுகை அவர்கள் மொழியில்   பிரசித்தம்.)இப்படி இப்படிப் பலர் எழுதினார்கள். கே. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அவர்களின் இலக்கிய வடிவங்கள் என்று கட்டுரை எழுதியிருந்தான். அக்கட்டுரையை வேறு யார் படித்தார்களோ இல்லையோ ஆனந்ததீர்த்தன் மட்டும் குறிப்பெடுத்துப் படித்தான். தேர்வுக்குப் போகிற மாணவனைப் போல் மிகச் சிரத்தையாகப் படித்தான். எனக்குத் தெரியும் விரைவில் சுவாரஸ்யமான செய்தி ஒன்றுடன் வருவான் என்று. ஆங்கில இலக்கியம் பல ஆண்டுகள் படித்து அமெரிக்காவில் சில ஆண்டுகள் பணியாற்றிவிட்டு ஒரு வெள்ளைக்காரியுடன் குடும்பம் நடத்துகிறான் என்ற சந்தேகம் வந்தவுடன் ஆனந்த தீர்த்தனுடைய மனைவி நாட்டுக்கு அழைத்தாள். அவனே இவற்றை எல்லாம் நகைச்சுவையுடன் என்னிடம் சொல்லியிருக்கிறான். ஆனால் கே. ஆங்கிலமும் படிக்கவில்லை; ஆங்கில இலக்கியத்தைப் படித்து அப்பாடத்தில் பட்டமும் பெற்றதில்லை. இளம் வயதில் கான்வெண்டில் படித்துவிட்டுப் பல்கலைக் கழகத்துக்கு வரும் பெண்களில் ஒருத்தியைக் காதலித்துத் திருமணம் செய்து வாழ்க்கையில் முன்னேறுவதுதான் ஏழைக் கிராமக் குடும்பம் ஒன்றில் படித்து வந்த அந்தக்கால இளைஞன் கே. யின் இறுதி இலட்சியம். அதனால் அப்பெண்களிடம் பழகுவதற்காக ஆங்கில சினிமாக்களைப் பார்த்தும் பத்திரிகைகளைப் படித்தும் ஆங்கிலம் கற்றவன் கே.  இருபதாம் நூற்றாண்டில் எந்தெந்த ஆங்கிலக் கவிஞரிடமிருந்து உத்வேகம் பெற்று கே.யின் மொழி இலக்கியம் 20-ஆம் நூற்றாண்டின் முதல் பகுதியில் உருவானது என்று கே. அந்த இலக்கிய வரலாற்றுத் தொகுப்புக்குக் கட்டுரை  அளித்திருந்தான். இங்கிலாந்தில் யாருக்கும் தெரியாத நபர்களின் பெயர்களை எல்லாம் இங்கிலாந்து கவிஞர்கள் என்று கே. எழுதியிருக்கிறான்  என்று ஆனந்த தீர்த்தன் பொருமினான். பின்பு நகரத்திலிருந்து பாக்கு வியாபாரம் செய்யும் ஊர் இலக்கியச் சங்கத் தலைவரால் நடத்தப்படும் பத்திரிகையில் பல்கலைக்கழகம் வெளியிடும் இலக்கிய வரலாறு பற்றி “பாரெல்லாம் புகழும்  நம் மொழியில் இறக்கப்பட்ட புளுகுமூட்டைகள்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி ஆனந்த தீர்த்தன் தனது ஆத்திரத்தைத் தீர்த்துக்கொண்டான். ஆனந்ததீர்த்தன், டென்னிசனையும் வர்ட்ஸ்வர்த்தையும் கே. தனித்தனிக் கவிஞர்கள் என்ற அறிவில்லாமல் “டென்வர்த்” என்று ஒரு புதுப்பெயரை அறிமுகப்படுத்தியுள்ளான் என்று குற்றம் சாட்டினான். ஆங்கிலேயர்கள் தங்கள் மொழியில் ஒரு புதுக்கவிஞனை கே. அறிமுகப்படுத்தியதற்கு கே.யை இங்கிலாந்துக்கு அழைத்து கௌரவப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கட்டுரையை முடித்திருந்தான்.

இவ்விஷயம் பல்கலைக்கழகத்தில் உடனே பரவியதால் கே. ஒருவாரம் தலைமறைவானான். நெஞ்சை நிமர்த்தியபடி அந்த ஒரு வாரம் நடமாடிக் கொண்டிருந்த ஆனந்ததீர்த்தன் அடுத்த வாரம் பத்திரிகையில் வந்த சிறு விளக்கத்தைப் படித்துப் பல்லை நறநறவென்று கடித்தான். அந்த விளக்கத்தில் டென்னிசன் மற்றும் வர்ட்ஸ்வர்த் என்று கே. எழுதிக் கொடுத்ததைப் பத்திரிகையில் அச்சுக் கோர்ப்பவர்கள் தவறுதலாக “டென்வர்த்” என்று அச்சுக் கோர்த்துப் பிழை செய்துள்ளார்கள். அதற்காகப் பத்திராதிபர் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறார் என்றிருந்தது. ஒருவாரம் காணாமல் போன கே. உடல் நலமில்லாமல் இருந்ததாய் கூறியபடி நானும் ஆனந்ததீர்த்தனும் கான்டீனுக்குப் போகும்போது எதிர்பட்டு  “எப்படி இருக்கிறீர் ஆனந்த தீர்த்தன்” என்று எதையும் அறியாதவன் போல் பேசிவிட்டுப் போனான். கொஞ்சம் மரியாதை கூடியிருந்ததைக் கவனித்தாயா என்று வினவினான் ஆனந்ததீர்த்தன்.

ஆனந்ததீர்த்தன் அன்று மாலையிலிருந்து இலக்கிய வரலாற்று தொகுப்புக்குக் கே. கொடுத்த கே. யின் கையெழுத்திலிருக்கும் மூல கையெழுத்துப் படியைத் தேடிக் கண்டுபிடிப்பதில் மும்முரமாய் ஈடுபட்டான்.

கே. மறைந்த மறுவருடம் பல்கலைக்கழகக் குவர்டர்ஸின் அவனுடைய வீட்டை அவன் குழந்தைகள் படித்து முடிப்பது வரை காலி செய்ய வேண்டாம் என்று முதலமைச்சர் ஆணை பிறப்பித்திருந்தார். (அவர்கள் மொழியில் சிறுசிறு இலக்கிய சண்டைகளில் எல்லாம் முதலமைச்சர் ஈடுபடுவார்.)அதற்கும் அவன் வாழ்ந்த வீடு இருந்த வீதிக்கு அவனுடைய புகழ்பெற்ற ஒரு நூலின் பெயரை வைக்கவும் ஒரு விழா நடந்தது. அந்த நூலின் பெயர், சமஸ்கிருதச்  சொல்லால்  ஆன பெயர். “விஸ்மிருதி”.  அதற்கு அர்த்தம் ‘மறதி’ என்பதாகும். அந்தப் புத்தகத்தை ஆனந்ததீர்த்தன் ஆங்கிலத்தில் எனக்கு மொழிபெயர்த்து விளக்கினான். எல்லோரும் ‘நினைவால்’ கவிஞர்களும் நாவலாசிரியர்களும் எழுதுகிறார்கள் என்று விளக்குவார்கள். கே. என்ன செய்தானென்றால் கவிஞர்கள் மறதியிலிருந்து எழுதுகிறார்கள் என்று விவாதித்ததான்.   அதனால் அவனுடைய நூல் மிகவும் புகழ்பெற்றது. இதை வழக்கம்போல் ஆனந்ததீர்த்தன், வேறு ஒரு மொழியிலிருந்து அடித்த காப்பி என்றான். கே. அந்தச் சொல்லை இன்னொரு மொழியிலிருந்து எடுத்திருக்கலாம். அவனுடைய மொழியின் முக்கியமான கவிஞரின் கவிதைகளை அவர் குடிபோதையில்  எழுதியதை – எல்லாவற்றையும் அவர் மறந்தபோது – எழுதியதை அவர் இறந்த பிறகு அவர் எழுதிய டைரியைத் தேடி எடுத்து  எந்தெந்த தேதியில் குடித்தார் எந்தெந்த தேதியில் குடித்துவிட்டுக் கவிதை  எழுதினார் என்ற தகவலைத் திறமையாய் 10 பக்க அளவு தொகுத்து முக்கியமான கவிதைகள் என்று அந்த மொழிப் பள்ளிப்பிள்ளைகளுக்கு வைக்கப்பட்ட கவிதைகளை ஆதாரத்துடன் ‘குடிபோதைக் கவிதைகள்’ என்று எழுதி இறுதியில் “நாம் எல்லோரும் நினைவுடன் கவிதை எழுதுவதாய் நினைக்கிறோம், நம் மொழியின் தேசியக் கவிஞர் மறதியில் தான் முக்கியமான கவிதைகளை எழுதி நம்மொழிக்கு உலகப் புகழைத் தந்தார் என்று விவாதித்தான். எட்டுப் பதிப்புகள் மூன்று ஆண்டுகளில் கண்ட அந்த நூலுக்கு சாகித்திய அகாதெமி பரிசு கிடைத்தபோது குடிபோதைக் கவிதைகள் என்பதை “விஸ்மிருதிக் கவிதைகள்” என்று தலைப்பைத் திறமையாக மாற்றியிருந்தான். இப்படி இலக்கிய வரலாற்றையே மாற்றினான்.கடந்த 20, 25 ஆண்டுகளாய் விஸ்மிருந்தி பற்றியும் கே.யின் பெயரையும் குறிப்பிடாமல் இலக்கியக் கூட்டங்களும் டி.வி. விவாதங்களும் நடைபெறாது என்ற அளவு விஸ்மிருதி என்ற சொல் புகழ்பெற்றுவிட்டது.

பல வருடங்களாய் அவன் பெயர் அந்த மொழியில் ஒரு முக்கிய முத்திரைபோல் ஆகியிருந்தது. அவனை விமரிசிப்பவர்கள் இருந்தார்கள். அவர்களின் பேச்சு எடுபடவில்லை. அவனுடைய மாணவர்களும் மாணவிகளும் நாங்கள் கே.யின் மாணவர்கள் என்று சொல்வதில் பெருமைப்பட்டார்கள். தலைநகரில் அவனுடைய பெயர் பரவியிருந்ததுபோலவே சிறுகிராமங்களிலும் அவனுடைய பெயர் பரவியிருந்தது. அதை நானே கண்கூடாகப் பார்த்தேன். ஏதோ வேலையாய் நான் மலைப்பக்கத்துக் கிராமத்தில் இருந்த  ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது ஹோட்டலில் என் முகவரியை எழுதிய லெட்ஜரின் மூலம் தலைநகரின் மொழித்துறையில் நான் கே.யுடன் வேலைபார்த்தவன் என்பதை அறிந்த ஹோட்டல் மானேஜர் “உண்மையிலேயே நீங்கள் கே.யுடன் வேலை பார்த்தவரா” என்று கண்கள் அகலவிரிய என்னை ஒரு அதிசயப் பொருளாய் பார்த்தான். கே.யைப் பற்றி 5-ஆம் வகுப்பில் சில ஆண்டுகளாய்  கே.யின் உருவப்படத்துடன் பாடம் ஒன்று இருந்தது. ஏழைக்குடும்பத்தில் அவன் பிறந்ததும் அவர்களின் 1 ½  கோடி மக்கள் – அம்மக்கள் கழுதைப்புலி வம்சராஜர்களின் வழித் தோன்றல்கள்  என்பது பெருமைக்குரியது என்ற பிரஸ்தாபத்துடன் – பேசும் சிறிய மொழியை அமெரிக்காவில் கற்பித்தவன் என்பதும் முக்கியக் கருத்துக்களாக இருந்தன. அதுபோல் அம்மக்களின் மலைப்பிரதேச பாரம்பரிய கதைகளைப் பல்வேறு சிரமங்களுக்கிடையில் தொகுத்தவன் என்பதும் அதனால் அவன் பெரிய இலக்கியவாதி (ஸாகிதி) என்றும் அவனுக்குரிய புகழுக்குக் காரணங்களாகக் குறிப்பிடப்பட்டன. ‘ஸாகிதி’  என்பவர்கள் எப்போதும் புகழுக்குரியவர்கள் என்று அம்மக்களிடம் ஒரு கருத்து இருந்தது.

அவன் இறந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகு (அவன் இறந்தபோது அவனுக்கு 46 வயது) விழாக்குழு அவனுடைய நினைவைப் போற்ற ஒரு பெரிய இலக்கிய விழாவை நடத்தியது. மேடையில் கே.மீது ஒருமுறை அவதூறு பேசிய அவனுடைய துணை ஆய்வாளன் அமர்ந்திருந்தான். 25 ஆண்டுகளுக்குப் பிறகு பார்க்கிறேன். மூன்று நாள் விழாவில் மூன்றாம் நாள் அந்த மாநில முதலமைச்சர் கே. பெற்ற புகழும் அவனுடைய இலக்கிய விளக்கங்களும் எவ்வளவு புதுமையானவை என்று ஒரு சொற்பொழிவு செய்தார்.

மேடையில் கே.யின் மனைவி சரஸ்வதி அமர்ந்திருந்தாள். மிகப்பெரிய, குருவிக் கால்கள் போன்று தோற்றம் தரும் அவர்களின் மொழியில் நான் இதுவரை கேள்விப்படாத கே.யின் பொன்மொழி எழுதப்பட்டிருந்தது.

“வெற்றி என்பது ஒழுங்கு;  ஒழுங்கில்லாதது Evil” என்று கடைசி சொல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.

இந்தமாதிரி ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துவதை ஒரு மரபுபோல அவர்கள் மொழியில் செய்தவன் கே. என்று ஒரு கருத்தைச் சிலர் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். அது உண்மையோ பொய்யோ கே.யின் பெயரைச் சொன்னால் எல்லோரும் தங்களுக்கும் தாங்கள் சொல்வதற்கும் அங்கீகாரம் அந்த மக்கள் அளிப்பார்கள் என்று எண்ணியது என்னவோ உண்மை.

வெகுநேரம் ஆடல்பாடல்கள், கவிதை வாசிப்பு என்று தொடர்ந்த விழாவில் கே. தொகுத்த மலைப்பிரதேச கதைகள் நடித்துக் காட்டப்பட்டன. எல்லா கதைகளையும் கே.யின் ஆவி சொல்வதுபோல் கற்பனை செய்து நடித்துக் காட்டினார்கள். எனக்கு எப்போதோ இறந்துபோன ஆனந்ததீர்த்தனும் ஞாபகத்துக்கு வந்தான். யாருக்கும் தெரியாதவனாய் ஆனந்ததீர்த்தன் மாறிப்போனதை நினைத்த எனக்கு ஆனந்ததீர்த்தனின் ஆவி இப்போது இந்த விழாவைப் பார்த்தால் எத்தகைய விமரிசனத்தை முன்வைக்குமென்று விநோதமாய் ஒரு கேள்வி தோன்றியது.  அத்துடன் அந்த ஆவி மேடையில் அமர்ந்து அன்றைய துணை ஆய்வளான் கே.யைப் பற்றி இன்று “தன்னை ஆளாக்கியவன் கே.” என்று கண்ணீர் விட்டதைப் பற்றி என்ன நினைக்கும் என்றும் கேட்கத் தோன்றியது. அந்த கே.யின் துணைவனாக அந்தக் காலத்தில் இருந்த ஆய்வாளன் கே. தன் விரோதிகளும் அவனைத் தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்கும்படி கருத்துக்களைத் தன் நூல்களில் வைத்துள்ளதால் இன்னும் ஒரு நூறு ஆண்டுகளுக்கு அவன் புகழ் மறையாது என்றான். “சரித்திரத்தில் பல விஷயங்கள் புரியாதவை” என்ற கே.யின் மேற்கோள் இப்போது எனக்கு ஞாபகம் வந்தது.

 

(உயிரெழுத்து இதழில் வந்தது.)

 

 

 

சமீபத்தில் வெளியான தமிழவனின் கட்டுரைத் தொகுப்பிலிருந்து

25.     இருபதாம் நூற்றாண்டின் கலாச்சார சிந்தனை

          இலங்கையில் போர்க்குற்றம் புரிந்த இராசபட்சவின் சகோதரர் இந்தியப் பாராளுமன்றத்தில் விருந்தினராக வருகிறார். இந்திய நாட்டின் குடியரசுத் தலைவரைச் சந்திக்கிறார்.

வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா “இனி நடக்க வேண்டியதென்ன என்றுதான் பார்க்கவேண்டும்” என்று மறைமுகமாகப் போர்க்குற்றம் பற்றி சத்தம் போடாதீர்கள் என்கிறார். சோனியாகாந்தியின் உடல்நலனுக்காக ராசபட்சவும் மனைவியும் பிரார்த்தனைப் புரிகிறார்கள். தென்பகுதியில் வாழும் 6 கோடி தமிழர்களின் சகோதரச் சகோதரிகளும், தங்கைத் தம்பிகளும் ஆக சுமார் ஒரு இலட்சம் பேரைக் கொன்ற கொலைக்காரர்கள் இந்திய மைய அரசின் சீராட்டலுக்கும் பாராட்டுதலுக்கும் பாத்திரமாகிறார்கள்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் அனைத்திந்திய அளவில் இலங்கையைப் போர்க்குற்றவாளி என்று தீர்மானம் போட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அப்படி ஒரு தீர்மானத்தைப் போடவில்லை என்பது கவனிப்பதற்குரியது.  பிரகாஷ் காரத்தோ, சீதாராம் யெச்சூரியோ இலங்கை மீது போர்க்குற்றம் சுமத்தித் தீர்மானம் போடவில்லை. இன்றைக்கு உருவாகியுள்ள பரிதாபகரமான சூழலைத் தமிழர்கள் இந்தியாவில் இதுவரை கண்டதில்லை.பக்கத்துத் தீவில் தன் இனம் அழிக்கபட்டுவருவதையும் அந்த அழிவுக்குத் தமிழர்கள் மத்திய அரசுக்கு செலுத்தும் வரிப்பணம் செலவு செய்யப்படுவதையும் தமிழர்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க வேண்டிய நிலை. நிருபமா மேனன் ராவ் என்ற வெளியுறவுச்செயலர்-உலகமெல்லாம் ராசபட்சவைப் போர்குற்றவாளி என்று கூறும் போது-தனது பணிஓய்வு பெறும் போது, ராசபட்ச முன்பு போய்நின்று பரிசுகள் பெற்றுவிட்டு டெல்லிக்குப் பறக்கிறார்.தமிழ் இனம் இவ்வாறு அவமானப்படுத்தப்படும் போது பொறுக்க முடியாமல் ஆளும் காங்கிரஸ் கட்சியிலிருந்து எனக்குத் தெரிய ஒரேயொரு தமிழர்தான் வெளியேறியிருக்கிறார். அவர் தமிழருவி மணியன்.

இந்தச் சூழலில், இந்தியச் சுதந்திரத்திற்காகப் போராடித் தன் சொத்து, சுகம் எல்லாம் இழந்த வ.உ.சிதம்பரம் என்ற மனிதனைப் பற்றிய நினைவு, பல விசயங்களை யோசிப்பதற்குப் பாதை அமைத்துக் கொடுக்கிறது.

இன்றைய கட்சிகளால் எதைச் சாதிக்கமுடிகிறதோ இல்லையோ தமிழனை யோசிக்காமல் வைக்க முடிகிறது. இருபதாம் நூற்றாண்டின் பல்வேறு பகுதிகளின் தமிழர்கள் மத்தியில் சிந்தனையாளர்கள் இருந்தார்கள். அந்த அத்தனைபேரும் பல்வேறு கருத்துக்களைக் கொண்டிருந்தார்கள். அவர்களின் தலைவராகக் குறியீட்டு முறையில் பெரியார் அமைந்தார். அந்தப் பெரியார் 1937-இல் (19-09-1937) ஈரோடு அருகில் கொல்லம்பாளையத்தில்   பேசும்போது ஒரு சிந்தனையை முன்வைத்திருக்கிறார்.

“அய்ரோப்பாவில் நார்வே, ஸ்வீடன், டென்மார்க், ஹாலண்டு, பெல்ஜியம், போர்ச்சுகல், கீரிஸ் ஆகிய நாடுகளும் நமது நான்கு ஜில்லா, மூன்று ஜில்லா, இரண்டு ஜில்லா போன்ற விஸ்தீரணமுள்ளவை. இவர்கள் எல்லோரும் தங்கள் தங்கள் நாட்டைத் தாய்நாடு என்பார்களே ஒழிய அய்ரோப்பாவைத் தாய் நாடென்பார்களா?.

ஆகவே தமிழ் நாட்டவர்கள் – திராவிட மக்கள் எந்தக் காரணம் கொண்டு இந்தியாவைத் தாய்நாடென்று கூறவேண்டுமென்பதும் எதற்காக இந்தியா பூராவும் எப்போதும் ஒரு குடையின்கீழ் இருக்க வேண்டும் என்று ஆசைப்படவேண்டும் என்பதும் எனக்கு விளங்கவில்லை. முதலாவது ‘பாரதநாடு’ என்பதையும், நாம் எல்லாம் பரதர்கள் என்பதையும்கூட நான் ஒப்புக்கொள்ள முடியாது”

இந்த நீண்ட மேற்கோளை எதற்காக இங்கே எடுத்துக் காட்டுகிறேன் என்றால் தேசம் பற்றிய கருத்தாக்கம் இன்று உலகமெங்கும் சிந்தனைகளின் தாய்ச் சிந்தனையாகப் பரவியுள்ளது; அச்சிந்தனையின் உள்ளே இருக்கும் பல்வேறு இழைகளோடு இன்றைய பல பின் நவீனத்துவ பொருளாதார,அரசியல் சிந்தனைகள் பின்னிப் பிணைந்துள்ளன என்பதற்காக.

சரி, பாரதியார் தேசம் என்ற சிந்தனையைப் பொறுத்தவரையில் தமிழ்த்தேசமும் வேண்டும் பாரததேசமும் வேண்டுமென்கிறார். பாரதிதாசன் இந்த விசயத்தில் பாரதியை ஏற்கவில்லை. பாரத தேசத்தையும் தமிழ்த் தேசத்தையும் எதிரும் புதிருமாகக் கொண்ட சிந்தனையைத் தனது கவிதை வாழ்வின் அடிப்படையாய் வைத்தார்.

இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் 1908 வாக்கிலேயே மிகப்பெரிய தியாகம் செய்து ஆங்கிலேயர்களின் பொருளாதாரத்தில் கைவைக்கவேண்டுமென்று கப்பல் ஓட்டிய தமிழர் ஒருவர் வாழ்ந்தார். அவர் வாழ்நாளின் இறுதியில் பிறர் தரும் பணத்தில் வாழ்வை நடத்தியவர். அதற்காக வெட்கப்பட்டவர். காங்கிரஸ் இயக்கம் சரியான பாதையில் போகவில்லை என்பதால் அதிலிருந்த கொஞ்ச காலம் ஒதுங்கியும் இருந்தவர். ராசகோபாலாச்சாரி போல நேரு போல நூற்றுக்கணக்கான சுதந்திர போராட்டக்காரர்கள் போல சுதந்திரத்தால் ஒரு காசு லாபமும் பர்க்காதவர் வ.உ.சி.

இந்த மனிதரிடம் தமிழர்கள் எப்போதும் மறக்கமுடியாத சில அம்சங்கள் உள்ளன. பாரதியாரிடமும், வ.ரா., ராசகோபாலாச்சாரி என்றெல்லாம் 20-ஆம் நூற்றாண்டில் மத்திய காலம் வரை வாழ்ந்த செயலாக்கமும் சிந்தனைச் சிறப்பும் கொண்டவர்களில் தனித்தன்மை கொண்டவர் இவர். இருபதாம் நூற்றாண்டின் பெரிய தமிழ் ஆளுமைகள் என்று ஒரு பெயர்ப் பட்டியல் தயாரித்தால் கண்டிப்பாக விடுபடாமல் சேர்க்கப்பட வேண்டிய பெயராய் வ.உ.சி. எனக்குத் தெரிகிறார். ஏனென்றால், சிவஞான போதத்திற்கும் திருக்குறளுக்கும் தொல்காப்பியத்திற்கும் என்று தமிழின் மூன்று பரிமாணங்களைத் தொடர்பு கொண்ட இம்மனிதரின் மூளையும் உடலும் நான்கு ஆண்டுகள் சிறைவாசம் பூண்கிறது. அதுபோல் தொழிலாளர் போராட்டத்திலும் தலைமை தாங்குகிறது. தத்துவம், தொல்காப்பியம், பண்டையத் தமிழ் இலக்கியம், தற்காலப் பழங்கவிதை இலக்கியம், சுதந்திரப்போர், தொழிலாளர் போராட்டம் இவை ஒன்றோடொன்று தொடர்புடையவைகள் அல்ல. ஒவ்வொன்றும் வேறுவேறு திறமைகள். இவைகள் அத்தனையும் பெற்றிருந்த வ.உ.சி. அவர்கள் ஓர் அபூர்வமான மனிதர்.

வ.உ.சி.யின் தேசக்கற்பனை வேறுபட்டது. அதனைப் பார்க்கும் முன்பு வ.உ.சி. மறைந்த ஆண்டு நமக்கு முக்கியமாகிறது. ப.ஜீவானந்தம் கூற்றுப்படி வ.உ.சி. 1936ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் நாள் மரணமடைந்தார்.

இங்குத்தான் முக்கியமான ஓர் உண்மை நம் கவனத்தில் படவேண்டும். 1937-இல் அதாவது ஓர் ஆண்டுக்குப் பிறகு பெரியார் மிகத் தெளிவாகத் தமிழ்த்தேசம் வேறு என்று கூறியுள்ளார். வ.உ.சி. போன்றோருக்கு ஏன் தமிழ்த்தேசம் வேறு என்ற சிந்தனை அன்று உதிக்கவில்லை? இதுதான் நாம் கேட்க வேண்டிய கேள்வி. யார் சொல்வது சரியானது என்பதல்ல என் அக்கறை. எப்படிச் சிந்தனைகள் தோன்றுகின்றன? தமிழ்மண் எத்தகைய சிந்தனையாளர்களைப் பிறப்பிக்கிறது? பெரியார் கடவுள் நம்பிக்கையற்றவர். ஆனால் வ.உ.சி. கடவுள் நம்பிக்கையில் தனக்கான ஒரு பாணியைக் கடைபிடித்தவர். நெல்லையைச் சார்ந்த பெ.திவான் என்ற வரலாற்றாசிரியர் வெளியிட்ட ஒரு சிறுநூல் வ.உ.சி.யின் 1927ஆம் ஆண்டு சொற்பொழிவாகும். மிக முக்கியமானது. அந்தச் சொற்பொழிவை

“எல்லாம் வல்ல இறைவனும் எனக்குத் துணைபுரியும்படியாக யான் வணங்கி பிரார்த்திக்கிறேன்” என்றே முடிக்கிறார். வ.உ.சி. மொத்தத்தில் தமிழகத்தில் இருபதாம் நூற்றாண்டில் பெரிய புயலாய் வீசிய நாத்திகச் சிந்தனையை ஏற்கவில்லை.

இதுபோல் இன்னும் இரண்டு அனைத்திந்திய சிந்தனையாளர்கள் இவருடன் ஒப்பிடக் கூடியவகையில் இருபதாம் நூற்றாண்டில்  வாழ்ந்தனர். ஒருவர் திரு.வி.க. இன்னொருவர் ம.பொ.சிவஞானம்.

முதலில் திரு.வி.க.வின் அனைத்திந்திய கற்பனை பற்றிப் பார்ப்போம். திரு.வி.க.தான் ‘தேசபக்தன்’ என்ற பத்திரிகையை நடத்தும்போது ஒரு கருத்தாக்கத்தை நீருற்றி வளர்த்துகிறார். அச்சொல் தேசபக்தி. இந்தச் சொற்சேர்க்கையின் அகராதிப் பொருள்களான ‘நாடு’ என்பதும் ‘தெய்வநம்பிக்கை’ என்பதும் இங்குப் பொருத்தப்படுகின்றன. தேசபக்தி என்பது பற்றி விரிவாக திரு.வி.க. விளக்கங்கள் எழுதியுள்ளார். “சுய ஆட்சி பெற வேண்டும் என்று கூறிக்கொண்டே காங்கிரஸ்  மகாசபை வேலை செய்து தருகிறது; அரசியல் உணர்ச்சியை வளர்த்து வருகிறது. அதற்குத் துணையாகத் தேசபக்தியை வளர்க்க மற்றும் ஒரு  சங்கம் தேவை. அச்சங்கம் பொதுமக்களுக்குப் பெரிதும் பயன்படுவதாயிருத்தல் வேண்டும். நம் முன்னோர் ஈசுர பக்தியை வளர்க்க எவ்வெவ் முறைகளைக் கொண்டனரோ அவ்வம் முறைகளைத் தேசபக்தியை வளர்க்க நாமும் கொள்ளல் வேண்டும்…. மேல்நாட்டு நூலாராய்ச்சியில் தோன்றும் அரசியல் ஞானம் நம்நாட்டு மக்களுக்கு முதிர்ந்த தேசபக்தியை உண்டாக்காது” என்கிறார் திரு.வி.க. பின்பு தன் பத்திரிகையான ‘தேச பக்தனில்’ ஒரு தேசபக்த சமாஜம் உருவாக வேண்டும் என்று எழுதி ஓர் அமைப்பை உருவாக்குகிறார். அந்தச் சமாஜத்தின் இயல்பு ஆலயங்களிலும் திருவிழாக்களிலும்  தேசப்பக்திப் பிரச்சாரம் செய்வது.  அதுபோல் பாரததேவி ஆலயம், தேசபக்தர் கோயில் முதலியவற்றால் தேசபக்தி வளர்ப்பது திரு.வி.க.வின் நோக்கம். இந்த நிகழ்ச்சிகளில் பாரததேவியை நினைத்து பஜனைபாடி “என்னருமை நாடே உன்னிலை இவ்வாறாகி விட்டதா” என்று உள்ளம் கசிந்துருக வேண்டும் என்று வேண்டுகோள் விடுகிறார் திரு.வி.க. தேசபக்த சமாஜத்தின் தொண்டர்கள் இப்படிக் கசிந்துருகிக் கொண்டிருக்க வேண்டுமென்பது முன்னாள் வெஸ்லி  கல்லூரித் தமிழ்ப்பேராசிரியரின் கருத்து. அந்த அளவு போகிறார். அதுமட்டுமல்ல “தேசபக்தி முறுகி எழுமாயின் பலர் தியாகத்துக்கு முற்படுவர்” என்கிறார். தேசபக்தி என்பது சுயசித்திரவதை (Self Torture) என்கிற மாதிரி விளக்கம் வரும்படி திரு.வி.க. எழுதுகிறார்.

“முன்னை நாளில் கடவுளிடத்துக் கொண்ட அன்பு மேலீட்டால் நம் முன்னோர் தமது கண்ணைப் பிடுங்கியும் கழுத்தை அறுத்தும் வயிற்றைக் கீறியும் இன்பமடைந்த கதைகள் உங்கட்குத் தெரியும்” என எழுதுகிறார். பாரததேவியின் வெறிபிடித்தாட்டுகிறது திரு.வி.க.வை.  இதற்கு வேப்பிலை அடித்து இறக்குவதற்கு தமிழகத்தில் பெரியார் பிறந்திருந்தார்.

ம.பொ.சி. அவர்களிடமும் தமிழ்த்தேசச் சிந்தனை இருந்தாலும் பாரததேவி வழிபாடும் இருக்கிறது. “எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே” என்ற வரியை மேற்கோள்காட்டும் ம.பொ.சி., இந்தப் பாடலைப் பற்றி எழுதும் விளக்கம் ஓர் உள் முரணை மறைக்கிறது. இந்தப் பாடலில் “எவ்வளவு தேசபக்தி! எத்தகைய தமிழ்ச்சுவை! எப்படிப்பட்ட பழம்பெருமை! தேசபக்தி வேறு; தமிழ்ப்பக்தி வேறு;  தெய்வ பக்தி வேறு என்று வேறுபடுத்திப் பார்க்காதவன் பாரதி. அவன் தேசபக்தியைப் பாடும்போதும் தெய்வ பக்தியைக் கலந்துவிடுவான், தன்னை அறியாமலே. தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை என்ற தேசபக்தி பாடலிலே தெய்வ பக்தியும் மணக்கின்றதல்லவா? தெய்வ பக்தியோடு அவன் பராசக்தியைப் பாடியுள்ள பாடல்களிலே தேசபக்தியும் மணப்பதைப் பார்க்கிறோம் என்கிறார் ம.பொ.சி.

இங்குச் சில விசயங்களை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். திரு.வி.க. ஒரு அசல் சிந்தனையாளர்.அசல் சிந்தனையாளரென்றால் சொந்த சிந்தனை இருக்கவேண்டும். அப்படி இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் இருந்த முக்கியமான சிந்தனையாளர். தமிழ் மண்ணிலிருந்து முளைத்த வித்து. முஸ்லிம்களையும் கிறிஸ்துவர்களையும் தன் சிந்தனைச் சட்டகத்தால் அரவணைத்தவர். காந்தியையும் மார்க்ஸையும் இணைத்தவர். அதாவது உலகின் இரண்டு பிளவுகள் என்று மொத்த உலகமும் கருதிய வன்முறையையும் ஒரு வழிமுறையாக ஏற்றுக்கொண்ட மார்க்ஸையும் சாத்வீகத்தையும் தவிர வேறுவழியில்லை என்ற காந்தியையும் தன் சிந்தனை பலத்தால் இணைத்த தமிழ் மரபின் வளம் திரு.வி.க.விடமிருந்தது. எனினும் தமிழ்த்தேசம் என்ற தனிநாட்டை, பெரியார் போல் ஏற்க இவரால் முடியவில்லை. இன்றைய இந்து அரசியலில் சித்தாந்தத்தை முன்வைக்கும் கட்சிகள், அமைப்புகள்போல் தான் கொண்டிருந்த மத உணர்வு திரு.வி.க.வைப் பெரியாரிலிருந்து வேறுபடுத்துகிறது. பெரியார் இத்தகைய உள்ளமைவு பெற்ற எந்தத் தெய்வீகச் சிந்தனையையும் ஏற்கவில்லை. புற செயல்பாட்டு எதார்த்தங்களால் உருவான சிந்தனையாளர் அவர். திரு.வி.க.மாறாக, அகச் செயல்பாடுச் சிந்தனையாளர்.

ம.பொ.சி. புதிதாகத் தமிழ்ப் பக்தியைத் தேசபக்தியின் ஒரு பாகமாக்கினார். இது காலத்தின் தேவை. தனித்தமிழ்நாடு என்ற முழக்கம் தோன்றியபோது ம.பொ.சி. தன் சிந்தனையிலிருக்கும் முரண்பாடு பற்றிக்கூட கவலைப்படாமல் எந்தையும் தாயும் என்று தமிழகத்துக்கு வெளியில் வாழ்ந்த தமிழர்களின் முன்னோரைத் தமிழோடு அடையாளங் காண்கிறார். பாரதியிடமும் இந்தப் பார்வைதான் இருந்தது என்கிறார் ம.பொ.சி. “தேசபக்தி (பாரத) வேறு; தமிழ்ப் பக்தி வேறு; தெய்வப்பக்தி வேறு என்று வேறுபடுத்திப் பார்க்காதவன் பாரதி” என்பது ம.பொ.சி. எழுதும் வாக்கியம் (பார்க்க: “தொல்காப்பியரிலிருந்து பாரதி வரை”).  அதாவது பெரியார்  போன்றோர் ஜின்னா தனிநாடு கேட்கும் முன்பே, இந்தியாவை எப்படிக் கட்டமைப்பது (Contructing India) என்று கருத்துகளை முன்வைத்தபோது “தனித்தமிழ்நாடு” என்ற தம் கருத்தை முன்வைத்தனர். ம.பொ.சி. போன்றோர் தமிழரசு என்றொரு கருத்தாக்கத்தையும் இன்னும் சிலர் “தக்சஷண்” (தென்னாடு) என்ற கருத்தாக்கத்தையும் முன்வைத்தனர். அதாவது இன்றுள்ள இந்தியா தொடர்ந்து  உருவாகக்கூடிய ஒரு தேசமாகும். காங்கிரஸ், பி.ஜே.பி. போன்ற சிந்தனை வறட்சிமிக்க கட்சிகள் போலன்றி பிராந்திய கட்சிகள் இன்று பல்கிப் பெருகியிருப்பது தொடர்ந்து கற்பனை செய்யப்படும் ஒரு இந்தியாவைக் காட்டுகிறது.  ம.பொ.சி., பாரதி பாடலான “எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய நாடு” என்ற வரிக்கு பாரத நாடு என்று பொருள் தராமல் தமிழ்நாடு என்று பொருள் தந்திருந்தால் அது அவர் நம்பிய தொல்காப்பியலிருந்து பாரதி வரை வரும் மரபாகும்.  பாரதநாடு என்ற பொருள் காலனியப பொருளாகும் (Colonial meaning). வட்டார கலாச்சாரங்களால், மொழிகளால், சமயங்களால், பழக்கவழக்கங்களால் உருவான செயற்கையான அமைப்புதான் இந்தியா என்பதை ஒத்துக்கொள்வதே இன்றைக்கு சிங்கள கொலைகாரர்களை இந்தியப் பாராளுமன்றம் வரவேற்பதில் உள்ள பெரும்பிழையைப் புரிந்துக்கொள்ள வழிவைக்கும்.

இந்தப் பிரச்னையை எல்லாம் சரியாகப் புரிந்துகொண்ட பெரியார் கேட்கம் கேள்விகளைப் பாருங்கள்.

“இந்தியா ஒரு நேஷனா? அதற்கு மொழி எது? மதம் எது? இந்தியாவில் எத்தனை மதம்? எத்தனை ஆசார அனுஷ்டானம்?  முதலாவது இந்து மதம் என்பதைத் தமிழர்கள் ஒப்புக்கொள்கிறார்களா? தோழர் கே.பி.பிள்ளை தன்னை இந்து என்று சொல்வாரானால் இந்து மத ஆதாரமாகிய வேதத்தையும் மனுதர்ம சாஸ்திரத்தையும் கீதையையும் ஒப்புக் கொள்கிறாரா? அதன் படி நடக்க இன்று சம்மதிக்கிறாரா? மற்றவன் நடக்காவாவது இவர் அனுமதிக்கிறாரா? இந்து மதத்தால் இந்தியா நேஷனாயிற்று என்றால், அதாவது நேஷனுக்கு மதமே பிரதானம் என்றால் இஸ்லாமியருக்கும் கிறிஸ்தவர்க்கும் பௌத்தர்க்கும் பார்சிக்களுக்கும் இந்தியா நேஷனாகுமா?  எதைக்கொண்டு அவர்கள் இந்தியாவை நேஷன் என்பது? ” இந்தக் கேள்விதான் அன்று பெரியார் கேட்டது.

அதாவது இந்தியா தமிழர்களுக்கான இந்தியாவாக இருக்கவில்லை என்பதால்தான் ஐ.நா.சபையால் கொலைப்பாதகர்கள் என்று கூறப்பட்ட ராஜபட்சவை வடநாட்டார் காமன்வெல்த் விளையாட்டுக்கு அழைக்கிறார்கள். ராஜபட்சவின் சகோதரனை இந்தியப் பாராளுமன்றத்தில் வரவேற்கும்போது உலகின் ஏழுகோடி தமிழர்களும் வாயடைத்துப் போய் நிற்கின்றனர். அதாவது இந்தியா இன்னும் தமிழர்களான அதன் உறுப்பினர்களின் ஆசையை, அபிலாசைகளைப் பிரதிநிதித்துவம் செய்யும்விதமாக தன்னை வளர்த்துக்கொள்ளவில்லை. இந்தியாவின் வெளியுறவு விதிகள் தமிழிந்தியாவின்(தமிழர்களைக் கொண்டிருக்கிற இந்தியா அல்ல) வெளியுறுவு விதிகளாய் வளர்த்துக்கொள்ளத் தெரியவில்லை.இதை வலியுறுத்த தமிழகத்தில் போதிய தலைவர்கள் இல்லை. சிந்தனையாளர்கள் இல்லை. மீண்டும் மீண்டும் ஓரிரு வாதங்களையே முன்வைத்து மட்டும் பேசத் தெரிந்த இரண்டாம்தர கற்றுச் சொல்லிகளே சிந்தனையாளர்கள். அண்ணா போல் ஒரு வரலாற்று ஆசையை அரசியல் அமைப்பாக ஆக்கத் தெரிந்தவர்களோ பெரியார் போன்ற பயமற்ற சிந்தனையாளர்களோ இன்று இல்லை. எனினும் அண்ணா ஆட்சிக்கு வந்த போதே தமிழடையாள இந்தியாவைப் பற்றிய கருத்தைப் பற்றி ஆய்வு செய்ய ஒரு கமிசனை(Commision) உருவாக்கியிருக்கவேண்டும்.ஒரு சமுதாயம் பெரும்சிக்கலில் மாட்டிக்கொள்ளும்போது அதன் புதல்வர்கள் தலைவர்களாய் பேரெழுச்சிக் கொள்வார்கள். ஆனால், சங்க இலக்கியத்திலிருந்து தொடர்ச்சியறா சிந்தனைப் பாரம்பரியம் கொண்ட தமிழ்ச்சமுதாயம் இன்று தன் புதல்வர்களைக் கொலைபாதகர்களிடம் காவுகொடுத்துவிட்டு என்ன செய்வது என்று கை பிசைந்த படி நிற்கிறது.

இத்தகைய சிந்தனைகளின் பின்னணியில் வ.உ.சி. தேசம் பற்றிச் சிந்தித்துள்ளாரா என்று பார்க்க வேண்டும். வ.உ.சி. இன்றைக்கு காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்களைப் போன்றே மனநிலை கொண்டிருக்கவில்லை. எப்படித் தலைவர் ஆகலாம். அல்லது மத்திய அமைச்சர் ஆக வழியுண்டா,  அதற்குத் தமிழக மக்களை ஏமாற்றித் தன்னை வளர்த்துக் கொள்ள என்ன வழி என்று யோசிக்கவில்லை. வ.உ.சி.யின் சுயசரிதையைப் படிப்பவர்கள் வெள்ளைக்காரன் சிறையில் கொடுக்கும் சலுகைகளைக் கூட ஏற்றுக் கொள்ளாத நிரந்தர புரட்சிக்காரராய் அவர் தென்படுகிறார். இன்றைக்கு சேகுவேரா பற்றிக் கேட்பது போல் இருக்கிறது. வ.உ.சி.யின் வாழ்க்கையை அவரது சுயசரிதையைப் படிப்பது. கவிதையில் அந்தச் சுயசரிதையை எழுதினாலும் அதே காலகட்டத்தில் வாழ்ந்து உலகப் புகழ்பெற்ற பாரதியாரின் கவிதைபோல் அதில் கருத்து விழிப்பும் மொழி நெகிழ்வும் உள்ளது. புரட்சிப்பிழம்பாய் சிறையில் வாழ்ந்து வெளியே வந்த மனிதர் சிவஞானப்போதமும் தொல்காப்பியமும் திருக்குறளும்  தொழிலாளர் போராட்டமும்  என்று வேறுவேறு பரிமாணங்களை அடைகிறார். 1872-இல் பிறந்த மனிதன் ஒட்டப்பிடாரம் என்ற சாதாரணமான ஊரில் வளர்ந்து தனது 33ஆம் வயதில் பிரிட்டிஷாரின் இதயம் செயல்படும் கப்பல் தொழிலைக் கைப்பற்ற விரும்புகிறார். பல தடவைக் காந்தியைச் சந்தித்த வ.உ.சி. காந்தியால் ஈர்க்கப்படவில்லை. ராசகோபாலாச்சாரி மற்றும் பலரைப் போலன்றி இவர் திலகரால் ஈர்க்கப்பட்டனர். 1908-இல் அதாவது தனது 36-ஆம் வயதில் தூத்துக்குடி கோரல் ஆலைத் தொழிலாளர் போராட்டத்திற்குத் தலைமை தாங்கி இந்தியாவின் முதல் தொழிலாளர் போரட்டத்தை நடத்துகிறார்.இந்தப் போராட்டம் பற்றிப் பிற்காலத்தில் மாற்று ஆன்மிகம் ஒன்றைப் பாண்டிச்சேரியை தலைமையிடமாக வைத்து நடத்திய அரவிந்தர் கேள்விப்பட்டுப் பாராட்டுகிறார். இன்று தமிழ் மக்களைக் கொன்று குவித்த படுபாவிகளை வரவேற்று போர்க்குற்றவாளி என்று உலகம் தண்டிக்காதபடி பாதுகாக்கும் காங்கிரஸ் நிறுவனம், வ.உ.சி. தமிழ்மண்ணின் அசல் பயிர் என்று அறியுமா? தமிழ்மண்ணின் – சிவஞானபோதத்தையும் தொல்காப்பியத்தையும் திருக்குறளையும் தோற்றுவித்த மண்ணின்- பண்பைத் தன் கருவறை வாசனையாய் பெற்ற வ.உ.சி. அவர்கள் 1908இல் கைது செய்யப்பட்டு  20 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பாகிறது. மேற்கத்திய நாகரிகம் – இன்று ராசபட்ச ஒரு போர்க்குற்றவாளி என்று கூறுகிற நாகரிகம் – சானல் 4 – மூலமாக உலகத்துக்கு ஈழமக்களை இரத்தவெள்ளத்தில் கொன்றுகுவித்த கொடுமையைக் கொண்டு செல்லும் மனிதாபிமான நாகரிகம் – ஆம் அதுதான் வ.உ.சி.யை மன்னித்து நான்காண்டு தண்டனையாய் குறைக்கிறது. அந்த மனிதனை “செக்கிழுத்தச் செம்மல்” என்று தன் வழக்கப்படி பட்டம் சூட்டி மகிழ்கிறது இன்று அவரது தமிழ் மக்கள் கூட்டம். இந்த மனிதனின் இரத்த உறவுகள்தான் காங்கிரஸ் கட்சியால் ஆளப்படும் இந்தியாவின் துணையுடன் 2009 – மே மாதம் பக்கத்து தீவில் சாட்சிகள் இல்லாமல் கொன்றுகுவிக்கப்பட்டார்கள்.

இந்த இந்தியா இன்று கொண்டிருக்கிற மனசாட்சியற்ற தன்மை எங்கிருந்து வந்தது? அதன் அமைப்பிலிருந்தே வருகிறது. இதனை அண்ணா, பெரியார், ம.பொ.சி., வ.உ.சி.  போன்ற எல்லோரும் யோசித்து இருப்பதாகவே தெரிகிறது. ஜின்னா தனிநாடு கேட்பதற்கு முன்பே பெரியார் தனிநாடு பற்றி யோசித்தது இதனால்தான்.  இந்திய அமைப்பு (இதில் பூமி பரப்பு, மொழிகள், சட்டத்திட்டங்கள் அமையும்) அதன் எல்லா உறுப்பினர்களுக்கும் நியாயம் செய்ய முடியாது. அதன் ஒரு பகுதி என்று அரசியல் சாசனம் கூறும் தமிழ்மக்களுக்கு நியாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும் என்று பெரியார் புரிந்திருந்தார். அதனால்தான் அண்ணா தமிழரசியலை உருவாக்கினார். அண்ணா மாநில சுய ஆட்சி என்று கொண்டு வந்த சிந்தனைமுறை ஒரு குறிப்பிட்ட இடத்தில் தேங்கிவிட்டது. இதற்காக உருவாக்கப் பட்ட கமிசன்கள் வெறும் நிர்வாக மாநில சுயாட்சி என்று அண்ணாவின் தமிழரசியல் தத்துவத்தின் எதிர்காலவிரிவை அறியாமல்  குறுக்கிவிட்டன.உலக அரசியல் அறிவற்ற நீதிபதிகளிடம்  அந்த மாநில சுயாட்சி பற்றிய கமிஷன்களை கொடுத்தபோதே அண்ணாவின் மாநில சுயாட்சி பற்றிய கற்பனைச் சிதைந்துவிட்டது என்று அர்த்தம். திராவிட நாடு பிரிவினையைக் கைவிட்டபோதே இன்னொரு இந்தியாவை அண்ணா கற்பனை செய்தார். அன்றைய திராவிடக் கட்சிக் கட்சியல்ல இன்றிருப்பது.இது அதன்   எலும்புக் கூடு.

அண்ணா மட்டுமல்ல நேருவும் மற்றவர்களும் கூட இந்திய அமைப்புப் பற்றி உறுதியான கருத்துக் கொண்டிருக்கவில்லை. சுயராஜ்ஜியம் பற்றிய சர்ச்சைகள் காங்கிரஸ் இயக்கத்தில் பல மட்டங்களில் நடந்தன. அப்போது வ.உ.சி. எழுதியதைப் பாருங்கள்.  செ.திவான் அவர்கள் மூலம் வெளிப்பட்ட வ.உ.சி.யால் 1927-இல் சேலத்தில் கொடுக்கப்பட்ட சொற்பொழிவில் பிரிட்டிஷாரிடமிருந்து பெறும் சுய அரசாட்சி எப்படி இருக்கவேண்டும் என்று சொல்கிறார். நான்குவிதமான சுய அரசாட்சிகள் பற்றி விளக்குகிறார்.  இது இன்று பிரான்ஸ் தேசத்திலும், அமெரிக்காவிலும் உள்ளதுபோன்ற “குடியாட்சி” (Republic) ஆகலாம். அல்லது இங்கிலாந்து அல்லது ஜப்பான் ‘கோனாட்சி’ ஆகலாம். அல்லது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சார்ந்த குடியாட்சி (Dependent Republic) ஆகலாம். அல்லது அன்று ஆஸ்திரேலியா, கனடாவில் இருந்ததுபோன்ற “சார்ந்த கோனாட்சி” (Dependent Monarch) ஆகலாம். இந்த நான்கு வகை சுய அரசாட்சி பற்றி யோசித்த வ.உ.சி. அன்றே பிரிட்டிஷாரிடமிருந்து பெறும் இந்தியா பற்றிய சர்ச்சையில் ஈடுபட்டார் என்பதுதான் முக்கியம்; பெரியார் இன்னொரு வித சர்ச்சையில் ஈடுபட்டார். அண்ணா தமிழ் அரசியல் மூலம் இன்னொரு சர்ச்சையில் ஈடுபட்டார். அண்ணாவின் காலத்திற்குப் பிறகு தமிழகம் இந்திய அமைப்பில் எத்தகைய உறவில் அமையவேண்டும் என்ற சர்ச்சை திசைதிரும்பியது. இந்த சர்ச்சை தொடர்ந்திருந்தால் பலவேறு காரியங்கள் நடந்திருக்கும். தமிழ்ச் செம்மொழி உரிமை கேட்டவுடன் கர்நாடகாவும் ஆந்திராவும் கேட்டன. தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கியவுடன் கன்னட, தெலுங்கு பல்கலைக்கழகங்கள் உருவாகின. தமிழர்களைப் பார்த்துக் காப்பியடிக்கவும் அவர்களோடு போட்டியிடவும் இந்தியாவில் பல மாநிலங்கள் தயாராக உள்ளன. அதாவது தி.மு.க.ஆட்சிக்கு வந்தவுடன் ஆட்சியால் வரக்கூடிய லாபநோக்குக் கட்சிக்காரர்களிடம் உருவாகித் தமிழகத்தைச் சுருக்கிப் பல மாநிலங்களைப்போல் ஓர் மாநிலம் ஆக்கியதே ஒழிய அண்ணா கண்ட கனவான தனிச் சிறப்பான-குறைந்தது ஜம்மு-காசுமீர் போல்-ஒரு தமிழ் இந்தியாவுக்கு அட்டித்தளமிடப்படவில்லை.அதுபோல இந்தியாவின் மாநிலங்கள் சுயாட்சி உரிமையுடன் உண்மையான சுதந்திரப் பிரதேசங்களாக உருவாக அனைத்துலக சட்டத்தில் வழியுண்டு. அதாவது ஐ.நா.சபையில் இந்தியாவின் மாநிலங்கள் சுதந்திரமாக தத்தம் பிரத்தியேகக் கொடியுடன் இருக்கலாம் என்கிறார்கள் அனைத்துலக சட்டம் தெரிந்தவர்கள். அதாவது இந்தியா தேங்கிப் போகாமல் வளரும்போது அதன் அமைப்புப் பற்றிய சுதந்திரமான சர்ச்சைகள் தோன்றும். அப்படியான அறிவுச் சுதந்திரம் இன்றைய இந்தியாவின் சட்டத்திட்டங்களிலும் ஆட்சியிலும் உள்ளது.  இல்லையென்று கூறுவதற்கு இயலாது. தொடர்ந்து இந்தியாவின் அரசியல் சட்டம் மாற்றப்பட்டுக் கொண்டிருப்பது சுதந்திரத்திற்கான நல்ல அறிகுறி.  வ.உ.சி. அவர்களின் உள் இயக்கம் தமிழ் நூல்களால் கட்டுப்பட்டு ஆளப்படுகிற தமிழ்மனங்களை ஈர்க்கவும் தொடர்ந்து படைப்புச் சிந்தனையை மேற்கொள்ளவும் தூண்டும். ராசகோபாலாச்சாரி கூட “தக்சஷன்” என்ற தென்னாட்டுக்கு ஒரு மைய அரசை உருவாக்கும் நேரு அவர்களின் ஆலோசனையை ஏற்றார் என்பது வரலாறு.  இந்திய அமைப்பைப் புதிதாக்குவதில்தான் புரட்சிக்கர சிந்தனையாளரான பெரியார் மிக முக்கியமான தலைவராக விளங்கினார். ஏன் அவர் பெயர் மறையவில்லை என்றால் அவர் கருத்துக்கள் இன்றும் புதிய சர்ச்சைகளை  உருவாக்கும் வலிமைப்பெற்றவை.

அனைத்துலக சட்டத்தில்  பலமுறைகள் உள்ளன. எதிர்காலத்தில் இந்தியாவின் தமிழர்கள் தங்களின் இனம், உலகின் எந்தப் பகுதியில் பிரச்னைக்குள்ளானாலும் அப்பிரச்னையை நேரிடையாக ஐ.நா. சபையில் தெரிவிக்கும் உரிமையைப் பெறும் வாய்ப்பு ஏற்படலாம். அதுபோல் தமிழர்களின் இந்தியா என்று ஒன்று உருவாகும்போது ஈழப்போரில் நேரடியாக இந்தியா யாரை ஆதரிக்க வேண்டும் என்று இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் தமிழகம் இருக்கலாம். அதுபோல் குஜராத்திகள், கன்னடர்கள், அசாமிகளும் செய்யமுடியும். இது இந்தியா வளர முடியும் என்ற கோணத்தில் ஏற்படும் சாத்தியங்கள்.

மொத்தத்தில் தமிழ்க்கலாச்சாரத் தலைவர்களும் தமிழ் அரசியல் தலைவர்களும் இன்றைக்கு எழுந்துள்ள அகில உலகத் தமிழ்ப்பிரச்சனைக்கு ஏதோ ஒருவகையில் முகம்காட்டியுள்ளனர்.  தமிழர்கள் ஓர் இனமாய் எதிர்கொள்ளும் பிரச்னைக்கு அவர்களின் கலாச்சாரத் தலைவர்களின் வழியே அவர்களின் சிந்தனைப் போக்கின், நூல்களின் வழியே தீர்வையும் காணமுடியும். இது இருபதாம் நூற்றாண்டின் நூல்களை வாசித்தலின் இன்னொரு பரிமாணம். .

 

தமிழவனின் ‘திராவிடம், தமிழ்த்தேசம், கதையாடல்’ என்ற நூலில் இருபத்தைந்து கட்டுரைகள் உள்ளன. அடையாளம் வெளியீடு.

சிறுகதை – தமிழவன்

மணிக்கூண்டுகளுக்கிடையில் கொலைவழக்கு

நகரம் அல்லோலகல்லோலப்பட்டது.
அப்போது காலனிஆதிக்க எஜமானர்களின் ஆட்சி நடந்துகொண்டிருந்தது. கோதிக் மற்றும் செராசனிக் கட்டடக்கலையும் வளைவுகளும் வளாகங்களும் மரத்தால் செய்யப்பட்ட தரைகளுடைய பங்களாக்களும் தோட்ட வீடுகளுமாகக் காணப்பட்ட நகரத்தில் குறிப்பிட்ட அடையாளங்கள் கொண்ட இரு சமூகத்தாரின் மத்தியில் நடந்த மோதல்களில் ஒன்றுதான் அந்த வழக்கு.
நெற்றியில் இரண்டு கோடுகள் இழுக்கும் பழக்கம் கொண்ட கொண்டைகட்டி சமூகத்தார்தான் கலகத்தைச் செய்தனர். அவர்கள், நெற்றியில் எந்த அடையாளமும் இடாத கட்டையன் சமூகத்தார்களின் 78 வீடுகளை மார்ச் 11-ஆம் தேதி எரித்தும், அடித்தும், உடைத்தும் நாசம் செய்தார்கள். ஆனால் விநோதமாக வழக்கு வேறுவிதமாகப் சோடிக்கப்பட்டது. கொண்டைகட்டி சமூகத்தவரின் உடமைகளைச் சூறையாடியது மட்டுமின்றி அவர்களில் இருவரைக் கொன்று விட்டனர் கட்டையன் சமூகத்தார் என்று கோர்ட்டில் வழக்குபோடப்பட்டது. இப்படிப் பொய்யாய் ஆங்கிலக்கோர்ட்டார் நம்பும்படி சோடிக்கப்பட்டது இந்த வழக்கு. நகரம், அதன் நீண்ட கடற்கரைக்கும் வெயிலுக்கும் பெயர்பெற்றிருந்தது போலவே அவதூறுகளைப் பரப்புவதற்கும், ரகசியங்களைப் பாதுகாவாமல் இருப்பதற்கும் பெயர்பெற்றிருந்தது.
கொண்டைகட்டிப் பிரிவினர், தலையில் இரண்டு கோடுகள் போடுவதோடு, தங்கள் குடுமிகளைக் நான்கு புறமும் முழுதும் முடியில்லாமல் வழித்தெடுத்த தலையில் கட்டிவைத்திருந்தது போலவே மனதில் வஞ்சகமும் சூதுவாதும் கொண்டவர்கள் என்ற கருத்தை லண்டனில் சட்டம் படிக்கும் தன் தம்பி பர்ட்டனுக்கு அடிக்கடி கடிதமாய் எழுதியிருந்த நகரின் அமைதிகாக்கும் நீதிபதி ஆர்பத் நாட் முன்னிலையில் இந்தக் கலவர வழக்கு வந்தது. இந்த வழக்கு பல சட்டச்சிக்கல்கள் கொண்டதும் நீதிமன்றத்தின் வரம்புகள் பற்றிய பிரச்சனைகளுடன் தொடர்புடையதாகவும் பல தரப்புக் கருத்துக்களுக்கும் இடம் வைப்பதாகவும் இருந்ததால் அக்காலத்தில் பெரிய பிரச்சாரம் பெற்றது.
கொண்டைகட்டி மக்களின் தலைவர் என்று கூறிக்கொண்டு வந்த மனிதரைப் புடைசூழ நின்று, அவருடைய சமுதாயத்தவர்கள் இடுப்பில் அரிவாளை வைத்துச் செருகியபடி கோர்ட் வாசல் பக்கம் நின்ற புளியமரத்தின் கீழ், தத்தம் முட்டை மடக்கி பிருஷ்டம் தரையில் படாமல் கால்பாதத்தின் முன் பகுதியைப் புல்தரையில் ஊன்றி அமர்ந்திருந்தது பல வெள்ளைக்காரர்களுக்குக் காட்சிப்பொருளானது. கறுப்பு உடலின்மேல் வெள்ளை வெளேர் என்ற (இது அம்மக்களின் தலைவர்கள் மட்டும் அணிந்திருந்த ஆடைகளின் வண்ணம்) ஆடைகளை அணிந்ததால் முகம் முதலிய உடலின் மேல்பாகம் சூரியவொளியில் மேலும் கறுப்பாகத் தெரிந்தது. கறுப்பு முகத்தின் காதுகளில் கடுக்கண் தொங்கவிட்டிருந்ததுபோல் காதுமடலின் மேல்பாகத்தில் எப்போது வேண்டுமானாலும் மலர்ந்து மணக்கப் போகும் மலரைச் செருகி வைத்திருந்தனர். தலைவருக்குத் தங்கள் சமூக இளைஞர்கள் கெட்டுப்போகாமல் வைக்கும் பொறுப்பு இருப்பதாக எண்ணம். கெட்டுப்போகாமல் இருக்க காதல் செய்யாமல் இருக்க வேண்டும் என்று அவர்களின் சாதிக்குழுவின் சபை அவரவர் ஊர்களில் வேப்பமரங்களின் கீழ் அமர்ந்து பஞ்சாயத்துகூடி முடிவு எடுத்தது. எனவே, காதல் செய்யும் அவர்கள் வீட்டுப்பிள்ளைகளை முதலில் கண்டிப்பது என்றும், அதுவும் சரிபடாத போது கைகால்களை எடுத்துவிடுவது என்றும் பழக்கம் வைத்திருந்தார்கள். அது சரியான முடிவுதானா என்று இளைஞர்கள் சிலருக்குச் சந்தேகம் வந்தபோது (அவர்கள் சபைகளில் பெண்கள் யாரும் வரக்கூடாது என்பது முன்னோர் பின்பற்றிய வழக்கம் – பின்னால் அதாவது 17-ஆம் நூற்றாண்டிலிருந்து அது விதிமுறையானது) அவர்களுக்கிடையில் இருந்த இரண்டுபேர் சமூகக் கவிஞர்கள் சரிதான் என்று இரண்டு காவியங்களை 101 – அடி வீதம் எழுதினார்கள்.காவியம் இறுதிவரை புகழ்பெறாமல் மக்கிப்போனது.
வழக்கில் முதலில் அழைப்பது யாரை என்று நகரத்தைப் பரிபாலனம் செய்யும் நீதிமன்றக்குழு முடிவெடுப்பதில் சில நாட்கள் கழிந்தன.
இது கொண்டைகட்டி சமூகத்தினருக்குத் தினம் தினம் நகரத்துக்கு வரும் தேவையை உருவாக்கியது. நகரத்தில் வர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட படகுகளில் இரவுநேரத்தில் மகிழ்வுப் பயணம் செல்லும் கவர்னரையும் அவரது குடும்பத்தையும் கண்டு மகிழ்வதிலும், ஆளுநர் வாழும் தோட்டத்துக்கு உள்ளேயிருக்கும் மாளிகையைக் கள்ளத்தனமாக எட்டிப்பார்ப்பதிலும் கொண்டைகட்டி சமுதாயத் தலைவர்கள் ஈடுபட்டனர். மேலும், 1776-ஆம் ஆண்டிலிருந்தே மதிக்கப்பட்ட நகரமாக அது இருந்ததினால் பிரஞ்சு துருப்புகள் ஒருமுறை பீரங்கி வைத்து உடைத்த பல சிறுசிறு கோட்டைகள் சீர்செய்யப்படாமல் நூறு ஆண்டுகளுக்கு மேல் கடந்தும் அந்த நகரத்தில் இருந்தன. பிரிட்டீஷார் கைக்கு நகரம் மறுபடியும் வந்தபோது கவர்னருக்குத் தோட்டவீடு கண்டுபிடிப்பது கடினமான காரியமாயிற்று. எனவே, துவிபாஷிகள் கோவணம் கட்டிய உடம்பிற்குமேல் வெள்ளை வேஷ்டிகள் கட்டியபடி சேலம் வெற்றிலையை மென்றபடியும் திருச்சி சிகரெட் பிடித்தபடியும் கவர்னருக்குத் தோட்டவீடு தேடுவதில் ஒரு காலத்தில் மும்முரமாக ஈடுபட்டிருந்த சரித்திரம் கொண்ட ஊர் இது. இறுதியில் அந்த நகரின்முதல் கவர்னருக்குப் பிரஞ்சு மாலுமியான லூயி தெமோண்ந்த் என்ற பிரமுகரின் விதவையான அந்தோனியோ தெமோண்ந்த் என்பவரிடம் இருந்த பெரிய வீடு பல ஆயிரம் வராகன் விலையில் வாங்கப்பட்டது என இந்த நகரத்தின் சரித்திரம் கூறுகிறது.
வழக்கில், ஏழைகளான கட்டையன் சமூகத்தினர் சாமானியமானவர்களாய் நடந்து கொண்டனர். வெள்ளைக்காரர்களைப் பார்த்தபோது ஓரமாக ஒதுங்கிநின்று வழிவிட்டார்கள்.கைகளால் வாயைப் பொத்தியபடி வாய்நீரை பக்கத்துச் சுவர்களில் உமிழ்ந்தார்கள் அடிக்கடி பயந்தார்கள். கட்டையன் சமூகத்தினருக்குத் தாங்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் இருந்ததால் தங்கள் எதிரிகளான கொண்டைகட்டி சமூகத்தவர்களால் தங்கள் சமூகத்தின் இரு இளைஞர்களின் ஆண்குறிகள் வெட்டப்பட்டதை மன்னித்துவிடலாம் என்ற எண்ணமே இருந்தது. ஆனால், வெள்ளைக்கார மருத்துவர் ஜான்போப் என்பவர் கிறிஸ்தவ எண்ணங்களால் உந்தப்பட்டு, கட்டையன் சமூகத்தவர் மத்தியில் ஏசுகிறிஸ்துவையும் பைபிளையும் பரப்பிக்கொண்டே ஓய்வுநேரத்தில் தொழுநோயாளிகளுக்கு ஒரு மருத்துவமனை உருவாக்கிச் சேவையும் செய்கிறவர் – வேறு ஏதோ மனதில் யோசித்ததால் வழக்கு மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. ஜான்போப் பெப்ருவரிமாதம் 16-ஆம் தேதி தன் கண் முன்பு கலவரம் நடந்ததென்று – தன் போலியோ கால்களால் நொண்டியபடியே நடந்து வந்து சாட்சி சொல்ல வந்தார். பட்டணத்தில் இந்த வழக்கு எல்லோர் வாயிலும் அவலாக மெல்லப்பட்டது. ஜான்போப் முன்வந்து சாட்சி சொல்லியதால் வழக்கு மிகவும் பலமான ஒன்றாக மாறிவிட்டது. கட்டையன் சமூகத்து இளைஞர்கள் இருவரும் நாட்டுமருத்துவரான பண்டிட் ஒருவரும் (இவருடைய தந்தை பிரஞ்சு துரை ஒருவரின் சமையலறையில் நல்லபடி மாட்டுக்கறி சமைத்ததால் மிஸஸ்லா போர்தனெ என்ற அம்மாது அவரை அடிக்கடி மெச்சியதோடு பழைய பிரஞ்சு இலக்கியத்தில் வரும் சமஉடமைக் கருத்துக்களையும் போதித்தார்) ஆக மொத்தம் ஜான்போப்பையும் சேர்த்து நான்குபேர் தாழ்த்தப்பட்ட கட்டையன் சமூகத்தவர் கொலையில் ஈடுபடவில்லை என சாட்சி சொன்னார்கள்.
வழக்கு நடந்த இடத்துக்கு இரண்டு பர்லாங் தூரத்தில் கவர்னரின் குதிரை மெய்க்காப்பாளர்கள் வசிக்கும் பெரிய வீடுகள் கர்னாடகத்திலிருந்து வந்த பேரிகெம்பையாவின் இளைய சகோதரரான பெரியநாயுடு காருவுக்குச் சொந்தமாக இருந்தது. (இந்த வழக்கோடு சம்பந்தமில்லாவிட்டாலும்) ஜான்போப் ஏழைகளான கட்டையன் சமூகத்தவர் பயந்த சுபாவம் உள்ளவர்களாகையால், அவர்கள் தன் பாதுகாப்பில் இருப்பதே நல்லது என்று நினைத்ததால் கவர்னரின் குதிரை மெய்க்காப்பாளர்களின் வீட்டுக்கு அருகில் இருந்த லாயத்துக்கு எதிரில் உள்ள வீட்டில் எல்லோரும் தங்குவதற்கு ஏற்பாடு செய்தார்.
உயர்சாதிக்கொண்டைகட்டி சமூகத்தினர் நம்பியதற்கு நேர்மாறாய் விஷயங்கள் நடக்கும்போல் இருந்தன. அச்சமூகத்தவர்கள் கலவரத்துக்குக் காரணமாய் இருந்ததோடு அவர்கள் சமூகத்தவர்கள் இரண்டுபேரை அவர்களே கொலை செய்த குற்றத்திற்காய் அவர்களின் சமூகத்தின் தலைவனைத் தண்டிக்கும் சூழல் உருவாகும்போல் இருந்தது.
வழக்கில் புள்ளிவிவரங்கள் இப்போது மாறின. நடந்த கலவரங்களை, இப்படி விவரித்தார்கள்: ஏழைக்கட்டையன் சமூகத்தவரின் நூற்றபைம்பது குடிசைகளும் – அவை ஓலையால் வேயப்பட்ட 10 அடிக்கு எட்டடி அகலமுள்ளவை- மேலும், நான்கு கூரை ஓடுகள் உள்ள வீடுகளும் எரிக்கப்பட்டன என முடிவு செய்யப்பட்டது. முப்பத்தேழு ஆடுகள் (நான்கு கருவுற்றிருந்தன) எட்டு பசுக்கள் (இரண்டு கருவுற்றிருந்தன என்பதைச் சாட்சிகள் ருசுப்படுத்தவில்லை) நூற்று ஆறு பூனைகள் –( 25 பூனைகள்,அதில் பிறந்து ஓரிரு நாட்கள் ஆனவை எரிக்கப்பட்டிருந்தன.
கலவரத்தினால் பாதிக்கக் கூடாது என மேல்சாதியினரின் வீடுகளில் இருந்த அவர்கள் ஆபரணங்களையும் அரிவாள், கடப்பாரை, வீட்டிலுள்ள நெல்மூட்டைகள் போன்றன கலவரத்துக்கு முன்பே வண்டிகளில் ஏற்றப்பட்டதைப் பார்த்த கீழ்ச்சாதியினரின் நாக்குகள் கூர்மையான சவரக்கத்தியால் அறுத்தெறியப்பட்டதையும், அதற்குத்தானே சிகிச்சை செய்ததையும் மருத்துவர் ஜான்போப் – உறுப்புகளின் ஆங்கிலப் பெயர்களுடன் விளக்கியது மிகச்சிறந்த ஆதாரங்களாக, அவரைப்போலவே உறுப்புக்களின் பெயரை உடல் சாஸ்திரத்தில் படித்திருந்த நீதிபதிகளால் எடுத்துக்கொள்ளப்பட்டன.
நீதிபதியாக இருந்த ஆர்பத்நாட் என்பவர் ‘ஓ மை ஹாட்’ என்று விசனம் அடைந்தது ஒரு சாட்சி இப்படி கூறியபோது தான்:
“அய்யா, எசமானர்களே மிகவும் கொடிய காரியம் என்று நான் கூறுவது – ஒரு குடிசையில் ஒரு தாய் குழந்தை பெற்றுக்கொண்டிருக்கிறாள் என்பதையும் பொருட்படுத்தாது, கலகக்காரர்கள் வயிற்றிலிருந்து வந்துகொண்டிருந்த பச்சைக்குழந்தையும் அதன் தாயையும் அங்கிருந்த மருத்துவச்சியையும் கரிக்கட்டையாய் போகும்படி எரித்த காட்சிதான்”.
“கையில் வெள்ளைத் துணியைக் கட்டிய நான்குபேர் ஒரு வரிசையில் இருந்த தாழ்த்தப்பட்டவர்களின் பத்துக்குடிசைகளை ஈவிரக்கமின்றித் தங்கள் கையில் பிடித்தபடி இருந்த பனைஓலைகளால் ஆன தீப்பந்தத்தால் எரித்தபோது தான், அந்த கொடூரமான சம்பவம் நடைபெற்றது”.
எதிர்தரப்பில் நின்றிருந்த மேல்சாதிக்கொண்டைகட்டி சமூகத்தின் தலைவன் ஏதும் பேசாமல் அப்போது நின்றான். நீதிபதி ‘ ‘அப்படி ஒரு சம்பவம் நடந்ததா?’” என்று கேட்டதை துவிபாஷி மொழிபெயர்த்தார்.
இன்னொரு சாட்சி கட்டையன் சமுகத்தினரின் எரிந்துபோன பயிர்களைப் பட்டியல் இட்டார்: பத்து பலாமரங்களும் முழு பலாக்கனிகளுடன் எரிந்ததையும் வாழைமரங்கள் வாழைக்கன்றுகளுடன் எரிக்கப்பட்டதையும் விளக்கினார். கொடுமையான காட்சியான நெருப்பில் பொட்டிய பானைகள், அரிசி, தானியம் போன்ற உணவுப்பொருட்கள் – படுப்பதற்காக வைத்திருந்த ஓலைப்பாய்கள் ஆண், பெண், குழந்தைகளின் ஆடைகள் எரிந்து கரியாகிப் போனதையும் கூறினார் அந்த சாட்சி.
வழக்கை நடந்துகொண்டிருந்த நகரத்தின் கட்டடங்களின் இந்தோ – சராசனிக் பாணியும் ஆங்காங்கு கடற்கரைப்பட்டணமான அவ்வூரில் கப்பல்களை வழிமாறிப்போகாதபடி பாதுகாக்கும் (நோக்கம் பெரியது) பல்வேறு வகையான கலங்கரை விளக்கங்களும் நீண்ட பூங்காக்களும் அடிக்கடி மகிழ்ச்சி தோன்றும்போதெல்லாம் ஊர்வலம் போகும் கவர்னரும் அந்நகரத்தின் முக்கியக் கவர்ச்சிகளாகும். மேற்கத்திய அறிவையும் சட்ட நுணுக்கத்தையும் நீதி போதனையையும், தொழில்நுட்பம், வியாபார அறிவு போன்றவற்றையும் அடையாளமாகக் கொண்டு விளங்கிய வழக்கு மன்றத்தில் அன்று மிகப் பெரிய கூட்டம் காணப்பட்டது. அதற்கான காரணம் அந்த இரண்டு கொலைகள். மேல்சாதிக்கொண்டைகட்டிகள் மிகுந்த கோபத்தோடு காணப்பட்டார்கள். அவர்கள் வழக்காடுவதற்காக நியமித்திருந்த ஜார்ஜ் சார்ட்ரீஸ் என்ற வக்கீல் பல புகழ்பெற்ற வழக்குகளை வாதித்து வென்றவர். கூம்புகளும் வட்டவடிவமும் கொண்ட அந்த நகரத்தின் கட்டடங்கள், புதிய சாலைகள், நீண்ட கடற்கரை – இவற்றின் அழகில் மயங்கியபடி தன் அழகான குதிரையை ஒருமணிநேரம் ஆசைதீர ஓட்டிவிட்டு மாளிகையில் போய் குளித்த பின்பு தன் நூலகத்தில் போய் அடுத்த நாள் நடக்கப்போகும் கொண்டைகட்டிகளின் வழக்குக்கான சட்டக்கருத்துக்களைத் தேட ஆரம்பித்தார் ஜார்ஜ் சார்ட்ரீஸ். வழக்கு வென்றால் அவருக்கு அளிக்கப்படப் போகும் ரண்டு கருத்த பெண்கள் பற்றிய ஆசையும் அவர் மனதின் ஓரத்தில் சந்தோசம் தரத் தவறவில்லை.
கலவரத்தில் இரண்டு பிணங்கள் விழுந்திருந்ததால் ஏழைக்கட்டையன் சமூகத்துக்கு ஆதரவாய் வந்துள்ள ஜான்போப் கூட தங்களுக்குச் சாதகமாக வழக்குத் திரும்புவது கடினம் என யோசிக்குமளவு வழக்கு சிக்கலானதாகக் காணப்பட்டது.எனினும் கட்டையன் சமூகத்தவர்கள் இரண்டு கொலைக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை, தங்கள் வீடுகளும், ஆடுமாடுகளும் பயிர் பச்சைகளும் மரங்களும் நெருப்புக்கிரையாகின என்ற உண்மையை ஆங்கில நாட்டு ராணியின் தர்மத்தைப் பரிபாலிக்க வந்திருப்பவர்கள் நிலைநாட்டத் தவறமட்டார்கள் என்ற அடிப்படையில் தங்களுக்குள் விவாதித்தார்கள்.
ஏழைபாழைகளான இத்தகைய கட்டையன் சமூகத்தவரின் நம்பிக்கை அவர்களின் விரோதிகளான கொண்டைகட்டி சமூகத்தவர்களிடம் கோபத்தை உண்டு பண்ணியது. அது நிதர்சனமாக நீதிபதிக்கும் மருத்துவர் ஜான்போப்புக்கும் புரிந்தது. நியாயத்தை நிலைநாட்ட வேண்டும் என்று ஆங்கில மருத்துவர் ஜாண்போப் உறக்கமின்றி உழைத்தார். ஓரிரு கட்டையன் சமூகத்து இளைஞர்கள் மட்டும் வெள்ளைக்கார மருத்துவருக்கு உதவினார்கள். மருத்துவ பரிசோதனையில் கொண்டைகட்டி சமூகத்தவர் இருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அப்படியெனில் அது கட்டையன் சமூகத்தவர்களின் செயலேதான் என்ற பொய்யான முடிவே கிடைக்கும். மனிதர்களை இயற்கை நியதியும் காலமாற்றத்துக்குட்படாது சதா இருந்து கொண்டிருக்கக் கூடிய மாறாத நீதியும் தம் கரத்தால் காப்பாற்றும் என்ற நம்பிக்கை பரவி இருந்த காலம் அது. ஆகையால் அநீதி கோலோச்சி விடும் என்ற பயம் பெரும்பாலும் இல்லை.
அதனாலோ என்னவோ ஏழைகளாகவும் சாதுக்களாகவும் வாழ்ந்த கட்டையன் சமூகத்தவர்களுக்கு இறுதியில் நீதி கிடைத்தது. கட்டையன் சமூகத்தவர்கள் மீது அநியாயமாய் பெரிய வன்முறையைக் கட்டவிழ்த்தது கொண்டைகட்டி சமூகத்தவரே என்பது நீருபணம் ஆயிற்று. தாயையும் குழந்தையையும் அத்துடன் பேறுபார்க்க வந்த மூதாட்டியுடன் கரிக்கட்டை ஆக்கியவர்களை வழக்குமன்றம் கண்டுபிடித்தது. வீடுகள் தீக்கிரையாக்கியவர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டன. யார்யாருக்கு என்ன தண்டனை என்று கோர்ட் தீர்ப்புச் சொல்லியபோது கட்டையன் சமூகத்தார் நியாயம் கிடைத்தது என நிம்மதி அடைந்தனர். எனினும் கொலைபற்றிய முழுத் தீர்ப்பு உடனே வெளிவராததால் உண்மையில் கொண்டைகட்டி சமூகத்தினரின் இரண்டு பிணங்கள் விழுந்ததற்குத் தங்கள் சமூகத்தவர்கள் காரணமாயிருந்திருக்கலாமோ என்றே நினைத்தனர் . பெரிய களேபரத்தில் அந்த இரண்டு கொண்டைகட்டி ஆட்கள் தங்கள் சமூகத்தவரால் கொல்லப்பட்டிருக்கலாமோ என்றும் ரகசியமாய் பேசிக்கொண்டனர் கட்டையன் சமூகத்தவர்கள்.
ஆனால் இறுதியில் உண்மை வெளிப்பட்டது. கொண்டைகட்டி சமூகத்தினரே அவர்கள் சமூகத்தில் இருவர் சாகக் காரணமாயிருந்தார்கள் என்று தீர்ப்பு வாசிக்கப்பட்டபோது கோர்ட்டில் அமைதி அதிக நேரம் பரவியது. அந்த தீர்ப்பை யாரும் எதிர்பார்க்கவில்லை. நடந்த விஷயங்களைக் கோர்ட்டு தீர்ப்பு விவரித்தபோது கொண்டைகட்டி சமூகத் தலைவர் தலைகுனிந்து நின்றார். “சொந்த சமூகத்தைச் சார்ந்த இரு மனிதர்களைக் கொன்றவன் இதோ நிற்கிறான்” என்று மிகுந்த கோபத்துடன் வெள்ளைக்கார நீதிபதி முன்பல் ஒன்றில் புழு விழுந்திருக்கும் அந்த சமூகத்துத் தலைவர் என்று பேரும் புகழும் பெற்ற மனிதரைச் சுட்டிக்காட்டினார்.
ஆனால் யாருக்கும் எப்படி நீதிபதி இந்த முடிவுக்கு வந்தார் என்பதை அறிவதில் ஆர்வம் இருக்கவில்லை. ஏனெனில் மேல்நாட்டு மனிதர்களின் நடைமுறை ஏதும் சுயநாட்டு மக்களுக்குப் புரியாமலே காரியங்கள் நியதிபோல் நடந்த காலம் அது.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& * * * *
ஆனால் அந்த மக்களுக்குச் சுதந்திரம் கிடைத்த பின்பும்கூட இதுபோல நடந்த நான்கு கலவரங்களை ஆய்வு செய்த மத்திய வயதைக் கடந்த சமூகவியல் ஆய்வாளர் ஒருவர் பழைய நூலகங்களில்போய் இந்தச் சமூகங்களின் மோதல் வரலாற்றைப் படிக்கப் பழைய வழக்குகளைப் பூரணமாக ஆய்ந்தார். அப்போது ஒருநாள் விநோதமான ஒரு பழைய வழக்கையும் அதன் தீர்ப்பையும் படித்து சமீபத்தில் நடந்தது போலவே சுமார் இரு நூறு ஆண்டுகளுக்கு முன்பும் ஒரு மார்ச் மாதம் பதினொன்றாம் தேதி அதே தந்திரத்தைப் பயன்படுத்தி 2 பேர் கொலை செய்யப்பட்டிருப்பதை அறிந்து மிகவும் திக்பிரமை அடைந்தார். ஆய்வாளருக்கு ஏதும் புரியவில்லை.
ஆண்டுகளையும் கோர்வையற்ற நிகழ்ச்சிகளையும் ஒழுங்கில்லாமல் அடுக்கி, தந்தையும் தாத்தாவும் மகனும் ஒரே (கடவுளின்) பெயரை மீண்டும் மீண்டும் வைக்கும் மரபுள்ள அச்சமூகத்தில் வரலாற்றைக் கண்டுபிடிக்கும் ஒரே நோக்கத்தினால் இறுதியல் வந்தடைந்த முடிவுகள் எல்லோரையும் பயங்கரமும் திக்பிரமையும் அடையவைத்தன.
சமீபத்தில் அதாவது சட்டசபைகளும், நாளிதழ்களும், டி.வி.க்களும் வந்து விட்ட இன்று இரண்டு கொலைகளைத் தாங்களே செய்துவிட்டு எதிரிச் சமூகத்தின் மீது சுமத்தியதுபோல் அன்றும் செய்த தந்திரத்தை ஆய்வாளர் கீழ்வருமாறு பல குறிப்புக்களை இணைத்து எழுதினார்.
கலவரம் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே கொண்டைகட்டிச் சமூகத்தவர்கள் வாழும் பகுதியில் பஞ்சாயத்தினர் கூடும் செல்லிஅம்மன் கோயில் முன்புள்ள சத்திரத்தில் முக்கியமான எல்லோரும் கூடினார்கள். முன்பல்லில் புழுவிழுந்த சமூகத்தலைவர், “வெள்ளைக்கார துரைமார் நியாயத்தைக் கண்டுபிடிப்பதில் நிபுணர்கள், சதா கடிகாரங்களையும் மணிக்கூண்டுகளையும் கலங்கரை விளக்கங்களையும் கொண்டிருக்கக்கூடிய இந்த நகரத்தில் வெள்ளைக்கார துரைமாரின் நியாய உணர்வை வெல்ல வேறு எந்தச் சக்தியும் இல்லாததால் கவனமாக நாம் நடந்துகொள்ள வேண்டும்” என்று கூறிவிட்டு உடுத்திய வெள்ளைத் துணியைத் தூக்கி வெறும்பிருஷ்டம் பட அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து இருளில் மெதுவாய் நடந்து மறைந்தார். இந்த திட்டம் ஏதும் தெரியாது ஜார்ஜ் சார்ட்ரீஸ்வழக்கமாய் வரும் அச்சமூகத்தின் வழக்குகள் வரும் போதுகிடைப்பதுபோல் கருப்புப்பெண் கிடைக்கப் போகும் நினைவுடன் ஆழ்ந்த உறக்கத்தில் கிடந்தார்.
இருவர் தாங்களாகவே முன்வந்து தத்தம் உயிரைப் பலியிடத் தயார் செய்யப்பட்டனர். அவ்விருவருக்கும் ஊரின் பெரிய கிணற்றுக்கு அருகில் நிற்கும் ஆலமரத்துக்குக் கீழ் இரட்டைக்கல் உருவங்களாய் நினைவுச்சின்னம் எழுப்பி வருடம்தோறும் விழா எடுக்கப்படும் என்று ஊர்பிரதானிகள் வெத்திலை பாக்கு உள்ளங்கையில் வைத்து உறுதிமொழி எடுத்தனர். ரகசியமாய் நடக்கப்போகிற விபரங்கள் பலிகொடுக்கப் பட இருக்கும் இருவருக்குச் சொல்லப்பட்ட பின்பு அந்த இருவரும் ஒன்றாய் அலைந்தனர். அவர்கள் வீட்டாருக்கும் ஏதும் தெரியாது. கலவரம் தொடங்கிய அன்று கம்பு, கத்தி, தீப்பந்தத்துடன் கலவரத்தில் ஈடுபடும் கட்டுமஸ்தான உடல் உள்ளவர்களுக்கு நம்சனங்கள் என்று அடையாளம் அறிவதற்காய் எல்லோருக்கும் வண்ணானிடம் நீலம் போட்டுத் துவைக்கப்பட்ட புதிய வேட்டிகள் கொண்டுவந்து அவற்றைச் சிறுசிறு துண்டுகளாய் கிழித்து அடையாளம் கட்டிக் கொள்வது கலவரங்கள் நடக்கும் போது வழக்கம். இப்போது அப்படி எல்லோருக்கும் அடையாளம் கட்டியவர்கள் கொலை செய்யப்படப் போகும் இந்த இருமனிதர்கள்தாம்.
கலவரம் நடந்தது பற்றி பல தாக்கலைகள் வெள்ளைக்கார நீதிபதியான ஆர்பத்நாட்டின் நீதிமன்றத்தில் பாதுகாக்கப்பட்டதால் ஆய்வாளர் இரு கொலைகளை மட்டும் விளக்கியிருந்தார்.
கத்தியோ, இரும்பு வஸ்துகளோ பயன்படுத்தாமல் சொந்த சாதியினரே நெல்லிமரத்தின்கீழ் இருவரையும் கைகாலைக் கட்டி வைத்துப் பலர்சேர்ந்து தத்தம் கைகளால் ஓங்கிஓங்கி மிக அதிகமான பலத்துடன் அடித்தனர். ஒவ்வொரு முறை அடிக்கும்போதும் ஏதேனும் குரல் வருகிறதா என்று கவனித்துப் பார்த்தபோது இருவரும் எந்த ஒலியும் எழுப்பவில்லை. இறுதியாய் குப்புறப்போட்டுப் புளியமரக்கிளைகளால் அடித்தவுடன் இருவரும் இறந்திருக்க வேண்டும். ஒருவனின் கண்மட்டும் வெளியே பிதுங்கி இரத்தம் வடிந்திருந்தது. எந்த ஒலியும் வெளிப்படாத அளவு எதிர்சாதி மேல் குரோதமும் வன்மமும் அவ்விருவரையும் ஆக்கிரமித்திருந்தது. அவர்கள் சம்மதத்துடன் அடித்துக் கொன்ற இடம் எதிரிச் சாதியான கட்டையன் சமூகத்தவர்கள் வாழும் பகுதி என்பதை கட்டையன் சமூகத்தவர்கள் மறுநாள் காலையில் கண்டனர். பிரிட்டிஷ் உயர்போலீஸ் அதிகாரி ஒருவர் குதிரை பூட்டிய ஜட்கா வண்டியில் வந்து வழக்கமாய் சாதுவானவர்களானாலும் ஏதோ கோபத்தால் கட்டையன் சமூகத்தவர் கொண்டைகட்டி சமூகத்திலிருந்து இருவரைக் கொன்றிருக்கிறார்கள் என்ற ஆராய்ந்து பார்க்காத தன் ஐயத்தை முடிவாய் எழுதி வைத்தார்.
இதுபோல் நிறைய இடைவெளிகளும் யூகங்களும் கொடூரமும் நிறைந்த கதையைப் பிற்காலத்தில் யாரும் நினைவில் கொள்ளவில்லை என்பது பொதுவாய் மக்களின் ஞாபக மறதியைச் சுட்டுவதோடு அவர்களின் முட்டாள் தனத்தையும் சுட்டுகிறதென்று மத்திய வயதைக் கடந்த அந்த ஆய்வாளர் தனது முடிவைத் தெரிவித்திருந்தார்.

(தீராநதியில் வெளிவந்த கதை)

மலேசியாவில் நடக்கும் உலகத்தமிழ் மாநாட்டில் அளிப்பதற்காகத் தயாரிக்கப்பட்ட ஓர் உரை

உலகமயமாதல் பின்னணியில் தமிழ்சமஸ்கிருத கவிதையியல் மறுவரையறுப்பு.

தமிழவன்

 

உலகமயமாதல்  இன்று மக்களின் வாழ்க்கையையும் பண்பாட்டையும் இதுவரை மக்களினம் காணாத முறையில் பாதித்து வருகிறது. தமிழர்கள் இன்று சுமார் 10 கோடியினர் தமிழகம், ஈழம், மலேசியா, சிங்கப்பூர்  பிற வெளிநாடுகள்  என்று குடியேறி வாழ்கின்றனர். இச்சூழலில் உலகையும் அதன் பல்தள போக்குகளையும் தமிழ்பேசும் மக்கள் புரிந்துகொள்ளத்தான் வேண்டுமென்ற கட்டாயத்தில் வைக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பாவிலும் கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று பல்வகை நாடுகளிலும் தமிழர்கள் குடியேறுவதற்கு முன்பு அவர்கள் வாழ்ந்த தத்தம் நாடுகளின் அரசியல், பண்பாட்டு, போர், கல்வி முதலிய பல்வகை நிர்பந்தங்களாலும் உந்துதல்களாலும் இன்று குடியேறி வாழும்போது அவர்கள் எல்லோரையும் பொதுவாய் அரவணைக்கும், பாதிக்கும் உலக உண்மை உலகமயமாதல் ஆகும். அதனால் “தமிழியல் ஆய்வு உலகமயமாதற் சூழலில்” என்ற இந்த மாநாட்டுத் தலைப்பைவிட பொருத்தமான வேறொன்று இக்காலகட்டத்தில் இருக்கமுடியாதென்பது என் அவதானமாகும்.

 

இன்னொரு கருத்தும் இங்கு வலியுறுத்தப்படவேண்டும். தமிழாய்வு பல்வேறு நாடடுக் கல்விப்புலங்களில் நடைபெறுகிறத. இந்தியா, ஈழம், மலேசியா, சிங்கப்பூர் போன்றவற்றோடு இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் அந்தந்த நாட்டு மாணவர்கள் தமிழைக் கற்று பழந்தமிழில் அமைவு பெற்றிருக்கும் கிழக்கத்தியப் பண்பாட்டையும் அறிவையும் காணத் தலைப்பட்டு உள்ளனர்.  சமஸ்கிருதக் கல்வி, உலகம் எங்கும் மிகுதியாகப் பரவியுள்ள சூழலில் திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்தமொழியாகவும் இன்றும் பேச்சுவழக்கில் இருப்பதாகவும் மிகுதியாகக் கிடைக்கும் நூல்களைக் கொண்ட மொழியாகவும் தமிழ் இருப்பதால் சமஸ்கிருதமல்லாத சிந்தனையையும் பண்பாட்டையும் புரிந்துகொள்ள தமிழையும் அதன் 2000 ஆண்டுகால சிந்தனைச் சரித்திரத்தையும் உலகினர் அறிந்துகொள்ள விரும்புகின்றனர்.

 

நாம் இன்று அகில உலக முக்கியத்துவமுள்ள தமிழாய்வை நம் ஆய்வு நிறுவனங்களில் செய்கிறோமா என்ற கேள்வியும் இந்த மாநாட்டுத் தலைப்பு சுயபரிசோதனையாய்  முன்வைக்கிறது என்றே எடுத்துக்கொள்கிறேன். ஏனெனில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த உலக உண்மை இன்றில்லை; நாடுகள் என்ற எதார்த்தம் இன்று உலகமயமான சூழலில் மாறிவிட்டன. அவற்றின் அதிகாரத்தை உலகவெளியில் வேறு நிறுவனங்கள் தத்தம் கைகளுக்குள் எடுத்துக் கொண்டுள்ளதால் பொருளாதாரம், அரசியல், அதிகாரப் பகிர்வு, செய்தித்தொடர்பு பரிவர்த்தனை போன்ற எல்லாம் பேரளவில் மாற்றமுற்றுள்ளன. புதிய அதிகாரத் தோற்றத்தால் தேசவரையறை மாறுவதை அறிஞர்கள் தொடர்ந்து மறுவடிவமைப்பு செய்துகொண்டிருக்கிறார்கள். அந்தந்த நாடுகள் முன்புபோல பலமான அமைப்புகளாக இல்லாமல் புது அதிகார கூட்டுக்களையும் உள்நாட்டு அமைப்புகளையும் உருவாக்கிக் கொள்வதில் சிந்தனை செலுத்துகின்றன. இந்தச் சூழலில் தமிழ்மக்கள் தங்களுக்கான தேசம் என்ற வடிவமைப்புக்காகச் சமீபத்தில் நடத்திய தியாகங்களோடு கூடிய முக்கியமான செயல்பாடு ஒன்று பற்றிய நினைவுகூறலும் தவிர்க்கவியலாதது

 

நம் தமிழ் சார்ந்த நூல், வாழ்வுமுறை, திறனாய்தல், சிந்தனைக் கட்டமைப்பாக்கம் போன்றன ஒன்றோடு ஒன்றும் பலவும் பின்னிப்பிணைந்து இருக்கின்றன. இப்பின்னணியில் இலக்கியம் என்ற கருத்தமைப்பு சுமார் 2000 ஆண்டுகளாய் தமிழ்ச்சிந்தனையில் தொடர்ந்து தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வருவதை மறுக்கமுடியாது. அந்நிலையில் தமிழர்களின் இலக்கியச் சிந்தனை சரித்திரத்தில் நடந்துள்ள மாற்றங்களையும் அம்மாற்றங்களுக்கான காரணிகளையும் மாற்றம் நிகழ்ந்த செல்நெறிகளையும் இவைகளுக்குள் பொதிந்தும் வெளிப்பட்டும் அமைந்த கூறுகளையும் விரித்தறியவேண்டியுள்ளது. ஏனெனில் சுமார் நூற்றைம்பது ஆண்டுகளாக உலக இலக்கிய நவீன மரபின் கால்வழி ஒன்று தமிழர்களையும் தன் மரபுக்குள் கொண்டு வந்துள்ளது. ……. …….

காந்தியைக் கொன்றது யார்?

பெரியாரை அனைத்துத் தமிழகச் சிந்தனையாளராய் பார்ப்பதோடு அனைத்திந்தியாவுக்கும் பொருத்தமான சிந்தனையாளராய் பார்க்க வேண்டும். ஏன், அவரை அனைத்துலகச் சிந்தனையாளராகவும் பார்க்கமுடியும். அதற்கு வழிவைக்கும் முறையில் அம்பேத்கர், மற்றும் காந்தியின் சிந்தனைகளோடு பெரியாரின் சிந்தனைகளை ஒப்பிடவேண்டும்.

காந்தியின் சிந்தனைகளை ஒரு காலத்தில் பிற்போக்காளரின் சிந்தனைகளாய் தமிழகத்தில் பலர் குறைத்து மதிப்பிட்டார்கள். உண்மை அப்படி அல்ல. ஆஷிஷ் நந்தி (Ashish Nandi)  போன்ற வங்காள மண்ணிலிருந்து தோன்றிய நவீன சிந்தனையாளர்கள் பின்காலனியச் சிந்தனையில் புதியமுறையில் இந்தியாவைக் கொண்டு வந்து சேர்த்தார்கள். வங்காளத்தில் தோன்றிய விவேகானந்தர் சமயத்துறையில் புதிய கருத்துக்களைக் கொண்டு வந்தார். இவரும் ஆங்கிலப் புத்தொளிச்சிந்தனையின்(Enlightenment) பெறுபேறு. பெரியாரும் அதே வழியில் வந்தவர்.

இதுபோல் தமிழ் மண்ணில் இன்று இவ்வழியில் வந்தவர்கள் யார்யார் இருக்கிறார்கள் என்று நாம் இன்னும் கணிக்கவில்லை. இந்தியா முழுவதும் இன்று தெரியக்கூடிய தமிழர் பெயர்கள் உள்ளன. அவை சிந்தனையோடு தொடர்புடையவர்களின் பெயர்கள் அல்ல. அவை சினிமா அல்லது ஊழல் நபர்களின் பெயர்கள். எல்லாரும் முகத்தில் புன்னகையுடன் கேலியாய் பேசும் பெயர்கள். தமிழர்களுக்கு வெட்கமாக இருக்கிறது.

ஆனால், பெருமைக்குரிய பெயர்கள் தமிழர்கள் மத்தியில் உண்டு. பெரியார் இந்த லிஸ்டில் முதன்மை இடத்தைப் பிடிக்கிறார் என்பது என் கருத்து. சமீபத்தில் நடந்த மிகச் சிறந்த இந்தியத் தலைவர்கள் யார்  என்ற தேர்ந்தெடுப்பில் சுப. உதயகுமாருக்குக் கிடைத்த வாக்குகள் கூட பெரியாருக்குக் கிடைக்காதது தமிழர்களுக்கு அவர்களின் சிந்தனையாளர்களை இனம் காணத் தெரியாததைக் காட்டுகிறது.  ஆனால் உதயகுமார் முக்கியம். இந்தியா முதலில் கேலிபேசியவரும்   சிறுவர்களை வேலைக்கமர்த்துவதிலிருந்து காப்பாற்றும் பொதுப்பணியைச்செய்த வருமான கைலாஷ் என்பவருக்கு நோபல் பரிசு கிடைத்த பிறகு எல்லோரும் பாராட்டுகிறார்கள். அதுபோல் உதயகுமாருக்கு நோபல் பரிசு கிடைத்தால் எல்லோரும் பாராட்டுவார்கள்.

ஆஷிஷ் நந்தி வங்காளி. கொஞ்சகாலத்துக்கு முன்பு ராஜஸ்தானில் நடந்த இலக்கிய மாநாட்டில் தாழ்த்தப்பட்டவர்களைப் பற்றிப் பேசி பிரச்சனையில் மாட்டிக் கொண்டவர். இந்தியக் குணம் என்று ஒன்று அறிவியலிலும் சிந்தனையிலும் உண்டு  என்று விவாதித்துப் புகழ்பெற்றவர் இவர். இவருடைய காந்தி பற்றிய கட்டுரைகள் புதிய வியாக்கியானத்தைக் காந்திக்கு அளித்தன. சிலர் இதன்மூலம் புதியமுறையில் காந்தியைப் பயில வாய்ப்பிருக்கிறது என்று அறிந்தனர். காந்தியின் கிராமம் பற்றிய சிந்தனையைக் குவலயமயமாக்கலுக்கு எதிராய் கண்டனர்; FDI-க்கு எதிராய் கண்டனர். அனைத்துலக சந்தையாய்  இந்தியாவை மாற்றுவதற்கு எதிராய் கண்டனர். இன்னும் சிலர் பன்னாட்டு நிறுவனங்களை எதிர்த்துப் போராடும் இந்திய மாவோயிசத்துக்குக் காந்தி இன்றிருந்தால் ஆதரவாய்  குரலெழுப்பியபடி ஏதாவது ஒரு ஆசிரமத்தில் சர்க்காவில் நூல் நூற்றபடி வாழ்ந்து கொண்டிருப்பார் என்றுகூட  கூறுகின்றனர். இந்தச் சுயதேசியத்தில் பெரியாரின் தமிழ்த் தேசியமும் கூட சேரும். அதேநேரத்தில் பெரியாரின் அறிவுமயவாதம் (Retionalism) எந்திரங்களுக்கும் உலகமய வாதத்துக்கும் ஆதரவானவையோ என்ற கேள்விகளையும் கேட்கத்தான் வேண்டும்.இது விசயத்தில் காந்தி மாறுபட்டவர். தமிழில் இருந்த பக்தி இயக்கத்திலும் காந்தியிலும் ஒரு உள்முகப் பார்வை இருந்தது. பெரியாரிடம் புறமுகப்பார்வை இருந்தது.

இங்குப் பெரியார், காந்தியின் சிந்தனைகளைத் தன் வாழ்நாளில் எப்படிக் கணித்தார் என்று பார்க்க வேண்டும். அது தமிழ்மையப் பார்வையின் பன்முகங்களை நாம் புரிந்துகொள்ள உதவுவதோடு பெரியார்வழி தமிழ்மையப் பார்வை எத்தகைய பாதையில் கிளைத்தெழுகிறதென்பதையும் நாம் அறிய உதவும்.  காந்தி பற்றிய பெரியார் பார்வை இரு கிளை கொண்டது. காந்தியிடமிருந்து தன் சிந்தனையைத் தோற்றுவித்த பெரியார் 1927-இல் அதாவது தன் 48-ஆம் வயதில்  பெங்களூரில் காந்தியைப் பார்த்தபோது காந்தி வருணாசிரமக் கருத்தில் ஆழமான நம்பிக்கை வைத்திருப்பதை அறிகிறார்.  அதுபோல் இந்து அடையாளத்தில் பல வசதிகள் இருக்கின்றன என்றும் அதனால் அதை உடைக்காமலே நல்ல காரியங்களைச் செய்ய வாய்ப்பிருக்கிறது என்றும் காந்தி  வாதிடுகிறார். பெரியாருக்குக் காந்தியை ஏற்க முடியுமென்று தோன்றவில்லை. பெரியார் வேறு ஒரு சிந்தனையில் ஊறியிருப்பது பெரியாருக்கே தெரிகிறது. காந்தியின் பாதை வேறு. தன் பாதை வேறு என்று புரிகிறது.  ஓரிரு ஆண்டுகளில் பெரியார் காங்கிரஸை விட்டு வெளியேறுகிறார். தன் சீர்திருத்தக் கருத்துக்களைக் காங்கிரஸில் யாரும் ஏற்பார்கள் என்று அவருக்குத் தோன்றவில்லை. எனவே, பிராமணர்களின் சமூகத் தலைமையிடத்தை உடைந்தெறிந்தால் போதும் சாதி வேறுபாடு நீங்கி விடும் என்று கருதி, பெரியார் பிரச்சாரமும் போராட்டமும் மேற்கொள்கிறார். சமீபத்தில் ஒரு கன்னடக் கட்டுரையில் நான் படித்ததுபோல் பெரியாரால் உருவாக்கப்பட்ட அந்த நம்பிக்கை 1973-இல் அவர் இறப்பதற்கு முன்பே ஆட்டம் காணத் தொடங்கியது. 1968-இல் நடந்த கீழவெண்மணி தலித் படுகொலை தமிழ்ச் சமூகத்தின் முரண்பாடுகள் வேறானவை என்று காட்டின. தமிழ்ச்சமூகத்தின் இன்னொரு சமூக முரண்பாட்டை உலகத்துக்குக் காட்டின. அதுபோல் சமீபத்தில் தர்மபுரியில் நடந்த வன்னியர் குடும்பமும் தலித் குடும்பமும்  இளைஞர்களின் காதல் நிகழ்வை எதிர்கொண்ட சூழலும் தொடர்ந்து நடந்த இரண்டு மரணங்களும் கட்சிகள் அக்கொலையைத் தூண்டிய அளவு தீர்க்கமுடியாமல் போனதும் கவனிக்கத் தக்கவை. எனவே, பெரியார் தான் வாழ்நாள் முழுதும் பின்பற்றிய அரசியல் – சமூக சீர்திருத்த வடிவம் ஓரளவு பொய்யாகிறது.

பெரியார் காந்தியை ஏற்கவும் செய்கிறார், மறுக்கவும் செய்கிறார். அம்பேத்கர் பூனா ஒப்பந்தம் மூலம் காந்தியின் பிடிவாதமான உண்ணாவிரதத்தை நிறுத்த உதவினார். பெரியார் இந்து சமூகத்தை உடைப்பதில் தொடர்ந்து உறுதியாக இருந்தார். அம்பேத்கர் விட்டுக்கொடுத்தார்.பெரியார் முன்னிலையில் காந்தி, இந்துமத வடிவத்தை உடைக்காமல் எந்தவிதமான புரட்சிக் கருத்தையும் ஈடேற்றலாம்; எல்லாக் கருத்துக்களுக்கும் இந்துமதத்தில் இடம் உள்ளது என்று முன்வைத்த விவாதம் சுவையானது. இந்து மதத்தின் கவர்ச்சியான அம்சம் அது. இப்படிக் காந்தி சொன்ன உடன் பெரியார் சொன்ன பதில் அசலான சிந்தனையாளர் ஒருவரின் பதிலாகும். காந்தியிடம் பெரியார் அப்படியெனில் “நாளைக்கு வரும் மகான் ஒருவன் இந்து மதத்தின் பெயரால் எதையும் செய்யலாமல்லவா” என்ற கேள்வியைக் கேட்கிறார். பெரியார்கேட்டது சரி.காந்தியம் ஏற்காத காரியமான பாப்ரி மஜித் உடைப்பு 1992-இல் நடந்தது இப்படித்தான். காந்தியை விட தர்க்கப் பூர்வமாய் 1927-லேயே விவாதித்தார் பெரியார். 1927-இல் பெங்களூரில் காந்தி மீண்டும் இரண்டு மூன்று தடவை சந்திப்போம் என்று கூறினாரே ஒழிய இந்து மதத்தை யார் வேண்டுமானாலும் அதனை உடைக்காமல் மாற்றலாம் என்று விவாதிக்கும் போது காவிப்படை எதிர்காலத்தில் செய்யப்போகிற காரியங்கள் பற்றிய புரிதல் இல்லை. அவர்கள் புரியப்போகிற காரியங்களை நினைக்கும் அளவு காந்தியிடம் எதிர்காலத் தரிசனக் கூர்மை இல்லை. பெரியார் தான் வெற்றி பெறுகிறார். அதுபோல் தமிழகச் சாதித் தலைவர்களிடம் பெரியார் பரிதாபமாய் தோற்றுப்போகிறார். இனி இத்தலைவர்கள் பூமாலை தாங்கியபடி பெரியார் சிலைகளைத் தேடியபடி நடப்பது பூசாரிகளின் செயலைச் செய்யத் தானே! பூஜையைத் தொலைக்க விரும்பிய அதே தலைவர் அதே பூஜைக்குப் பலி ஆகிவிடுகிறார் தமிழகத்தில். சரி, காந்திக்கே மீண்டும் வருவோம்.

காந்தியின் கொலையை இந்து மதம் புரிந்த கொலையாய் பெரியார் பார்க்கிறார். “இந்தப் படுகொலைக்கு எந்த ‘இந்துமத சாம்ராஜ்ய வெறியுணர்ச்சி’ காரணமாக இருந்ததோ அந்த உணர்ச்சியை ஆழக்குழி தோண்டிச் சுட்டுப் பொசுக்கி சமாதி வைப்பதல்லவா நீதியான செயலாக இருக்க முடியும்?”  என்று பெரியார் தெளிவாகக் கேட்கிறார். பெரியாரின் கருத்துப்படி இந்து சாம்ராஜ்ய வெறியுணர்ச்சி டெல்லியில் காந்தியைச் சுட்டுக்கொன்ற பின்பு, அவரைப் பெரியார் ஆதரிக்கத் தொடங்குகிறார். பெரியார் எழுதுவதைப் பாருங்கள். “பார்ப்பனிய மதமான இந்து மதம் என்கிற கொடிய பாம்பிற்குக் காந்தியார் பாலூட்டி வளர்த்து வந்தார். அம்பாம்பின் கொடுமை பற்றி நாம் அவருக்கு அதிகமாகவே எடுத்துக் கூறினோம். சுயராஜ்யம் என்ற மகுடியை ஊதி வந்தால் அதுவும் ஆடிப் பாடிக் குதித்தால் அதை அடக்கித் தன் வழி செலுத்தலாம் என்றே காந்தியார் முழுக்க முழுக்க நம்பினார். சுயராஜ்ய மகுடியை ஊதாத நேரத்தில் – ஊதத் தேவையில்லை என்று அவர் கருதிய வேளையில் அப்பாம்பு தன் விஷப் பற்களுக்கு அவரையே இரையாகக் கொண்டு விட்டது”. இப்படித் தெளிவாக எழுதுகிறார்.காந்தியின் மரணத்துக்குப்பின் காந்திதேசம் என்று இந்தியாவுக்குப் பெயர் சூட்ட வேண்டுமென்று கூறுமளவு பெரியார் காந்தியைப் புகழ ஆரம்பித்துவிடுகிறார்.

இங்கு நாம் காந்திக்கும் பெரியாருக்கும் இருந்த முக்கியமான முரண்பாட்டையும் புரிந்துகொள்ள வேண்டும். வருண  பேதத்தைப் பெரியார் எதிர்த்தார். அதனைக் காந்தி எதிர்க்கவில்லை; ஆதரித்தார். ஒரு சமூகம் ஏதோ ஒன்றை உருவாக்கியிருந்தால் ஏதோ ஒரு நியாயம் அதற்கு இருக்க  வேண்டும் என்று யோசித்தார் காந்தி. அதாவது காந்தி மற்றும் பெரியாரின் உலகப் பார்வைகள் முற்றிலும் வேறு. அம்பேத்கர் அப்படி அல்ல; அவர் பெரியாரின் அடிப்படைகளை ஏற்றவர்.  இருவரும் புத்தொளிச் சிந்தனையிலிருந்து மிகச்சில வேறுபாடுகளுடன் தோன்றியவர்கள். இத்தகைய பார்வைகள் அம்பேத்கர் ஆய்வுக்குக்கூட பலம் சேர்க்கும்.

காந்தியின் நூல்களுக்கிடையில் ஒரு சிறுநூல் காணப்படும். “ஸ்வராஜ்யா” என்று தலைப்பு. அந்நூல் அபூர்வமானது.இன்று காந்தியம் முக்கியம் என்று பேசுகிறவர்கள் மேற்கோள் காட்டும்  நூல். அதுபோல் அபூர்வமான ஒரு பேட்டியைத்தான் காந்தி பெரியாருக்குக் கொடுத்தார். அதுதான் வருணபேதமும் இந்து மதமும் பிராமணனும் முக்கியம் என்ற காந்தியின் கருத்துக்கள் அடங்கிய நேர்காணல். இங்கு காந்தி ஏன் வருணபேதத்தை ஆதரிக்கிறார்? ஏன் இந்துமதத்தை ஆதரிக்கிறார்? ஏன் பிராமணர்களை  ஏற்கிறார் என்ற அடிப்படைகள் பற்றிய தர்க்கம் நடுநிலையாய் தமிழில் விவாதிக்கப்படவில்லை. இதைத் தமிழ்ப் பிராமணீயம் செய்திருக்கவேண்டும்.உ.வே.சா.வைப்போல்தமிழ்ப்பற்றுள்ள தமிழ்ப்ப்பிராமணீயம் இன்றில்லை. அணுஉலை விவாதத்தில் காந்தியம் மீண்டும் நம் விவாதத்துக்குள் வருகிறது.பல தடவை உதய குமார் தானொரு பெரியார்- காந்தியவாதி என்று சொன்னார். காந்தியும் அவரை ஆதரித்திருப்பார்.  அணு உலையைப் பெரியார் இருந்திருந்தால் ஆதரித்திருப்பாரா? அது ஒரு தனி விவாதம்.

ஒரு கட்டத்தில் காந்தியை மிகவும் வெறுக்கவும் செய்தார் பெரியார். மிகவும் துணிச்சலாக “காந்தி தான் நமது நாட்டை வடநாட்டானுக்கும் பார்ப்பானுக்கும் ஒப்படைத்து நம்மை அடிமையாக்கியதற்குக் காரணம். சாதி ஒழிப்புக்குச் சாத்திரம், புராணம் ஒழிக்கப் படவேண்டும் என்பதுபோல –  நாட்டுப்பிரிவினைக்குக் காந்தி ஒழியவேண்டும்” எனக் கூறுகிறார். இப்படி காந்தி மீது வெறுப்பைக் கொட்டும் பெரியார் காந்தியின் மரணத்தின் போது தன் கருத்துக்களை மாற்றுகிறார். “என்னைப் போலவே காந்தியாரும் நாம் ஒரு சூத்திரன் என்பதை நன்றாய் உணர்ந்துகொண்டார். இந்துமதம் திருத்த முடியாதது என்பதையும் உணர்ந்து கொண்டார். இந்தியா, இந்தியர், இந்துமதம் என்பதாக ஒன்று இல்லை என்றும்………. ஒரே கடவுள்தான் உண்டு. அதுதான் அல்லா, ‘காட்’ (God), ராம் என்றும் குரான் இந்துக்கள் படிப்பதற்குரியதென்றும் இந்துக்கள் முஸ்லீம்களுக்கு மிக்க தீங்கு இழைத்து விட்டார்கள் என்றும்…………. பார்ப்பனர்களின் உண்மையான தன்மையை நன்றாகப்புரிந்துவிட்டார்…” இந்த மேற்கோளில்  பெரியார் காந்தியையும் தன் கொள்கை உள்ளவராகப் பார்க்கிறார்.

‘இந்துக்கள் யாவரும் குரான் படியுங்கள்’ என்றுகூறியதிலிருந்தும் தானும் குரான் படித்துக் கொண்டு ராம் – ரஹீம் (அல்லாஹ்) என பஜனை செய்ததிலிருந்தும்  அவர் பழைய தன் கொள்கையிலிருந்து பெரிதும் மாறிவிட்டார் என்கிறார் பெரியார். இக்கருத்துக்களை 48-இல் காந்தி கொலையுண்ட நேரத்தில் பெரியார் பேசுகிறார். “எனக்கு கடவுள் ஒரு வஸ்துவாக தனிப்பட்ட பண்டமாக இருக்கிறது என்பதில் நம்பிக்கை இல்லை’ (I have no belief in personal God) என்ற காந்தியாரைப் பெரியார் தன்னைப் போலவேயான சிந்தனையாளராய் பார்க்கிறார். இக்கருத்துப் பரவினால் இந்தியாவெங்கும் பரவியிருக்கும் பார்ப்பனீயம் அழிந்து புரட்சி தோன்றிவிடும். அதனால்தான் அவர் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டார் என்பது பெரியார் கருத்து. பெரியார் அடுக்கடுக்காய் இந்தியச் சமூக கட்டமைப்பின் தன்மையைப் பன்முனை வியாக்கியானம் மூலம் புரிந்துகொள்கிறார். சமூகத்தின் பன்முனைப்பட்ட முரண்பாடுகளுக்குள் நுழைந்து பன்முனை வியாக்கியானம் மூலமே  நாம் அவற்றைப் புரிந்துகொள்ள முடியும். அதனைத் தொடர்ந்து நாம் பெரியாரை வளர்த்தெடுக்கும் முகமாகச்செய்ய வேண்டும்.

– தமிழவன்