இலக்கிய விமர்சனம்

பாரதிதாசனைக் கவியாக நிலைநாட்டும் முயற்சி:பாரதிதாசனும் வால்ட்விட்மனும்

பாரதிதாசன் 1891 – இல் பிறந்து 1920 – இல் அதாவது அவருடைய 29 – ஆம் வயது வாக்கில் சமயக் கவிதைகளையும், காங்கிரஸ், இந்தியத் தேசியம் போன்றவற்றையும் பாடியபோது, நவீன தமிழிலக்கிய வரலாற்றுக்குத் தேவையான இலக்கிய முழுமை ஏற்படவில்லை. இது ஒரு பத்தாண்டுகள் தொடர்ந்திருக்கிறது. 1930 – இல் அவரது 39 – ஆம் வயதில்தான்  இருபதாம் நூற்றாண்டுத் தமிழிலக்கியத்துக்கு வேண்டிய கவித்துவ விழிப்புணர்வு அவருக்குள் முகிழ்க்க ஆரம்பித்துள்ளது. சொந்த சிந்தனை ஓர் ஆளுமையாக பாரதி தாசனிடத்தில் தோன்றியபோது அவர் எழுதிய முதல் கவிதை, தாழ்த்தப்பட்டோர் சமத்துவப்பாட்டு (1930 – ஆம் ஆண்டு). தொடர்ந்து சஞ்சீவி பர்வதத்தின் சாரல் (1930) வெளிவருகிறபோதும் அதாவது பாரதிதாசனின் 40-ஆவது வயதில்தான் அவருக்கான தனி சிநதனையும் ஆளுமையும் மொழித் தைரியமும் ஏற்படுகின்றன. சமய நம்பிக்கையாளராக (தனது 30 -ஆம் வயதில்) இருந்தவர் அன்றைய அரசியல், சமூக, வரலாற்றுச் சூழலால் இறைமறுப்பாளராக உருவாகிறார். பெரியாரின்  இயக்கத்தில் சேர்ந்து சிந்தனையில் வளர்கிறார். அவருக்குள் இருந்த பிரஞ்சு, தமிழ், இலக்கியங்கள் அவரைத் தமிழக இலக்கிய வரலாறு காணாத விதமான ஒரு பேருரு கொண்ட கவிஞராக உருமாற்றுகிறது. இந்த உருமாற்றமும் அக உலக பெருமாற்றமும் விகாசிப்பும்தான் இலக்கிய நோக்கு முதன்மைப்பார்வை கொண்டவர்கள்  ஆய்ந்து, அறிந்து உருவப்படுத்திப் புரிந்துகொள்ள வேண்டும். இன்று பிற பார்வைகள் உள்ளன. இலக்கியப் பார்வைதான் இல்லை. இலக்கிய முதன்மைப்பார்வைக்குள் வரலாறும், உளவியலும், சமூகவியலும் உள்ளன. எனவே இலக்கியம் வடிவம் பெறும் முறையில் பாரதிதாசனை அணுகுவதே சரியான பார்வை. பிற பார்வைகள் போலிப் பார்வைகள் என்பதே என் துணிபு.

2

பாரதிதாசனைப் பற்றிய என் கட்டுரை ஒன்றின் மையமான சில கருத்துக்களைத் தேவை கருதி இங்கே முன்வைக்க வேண்டும்1.

பாரதிதாசன் தமிழ் என்று கூறிய இடங்களில் மேல்தளப் பொருளாய் ஒரு கருத்தையும் உள்தளப் பொருளாய் வேறு கருத்தையும் சொல்கிறார் என்பதே அக்கட்டுரையின் சுட்டுப்பொருள். மேல்தளப்பொருள்களை வரிசைப்படுத்திக் கூறிய அக்கட்டுரை உள்தளத்தில் தொனியாய் வெளிப்படும் பொருண்மைகளைக் கீழ்வருமாறு பட்டியலிடுகிறது.

  1. பாரதிதாசன் கருத்துலகு காலம் என்பது வரலாற்றுக்குட்படாதது என்ற கருத்தைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ளது.

  1. இயற்கையில் காணப்படும் தாவர உலக நினைவு உள்தளமாய் பாரதிதாசன் பாடல்களில் காணப்படுகிறது (உதாரணம்: பயிரழிக்கும்விட்டில்போல்தமிழழிகிறது. தமிழியக்கம், பக். 27).

  1. ‘இல்லைஎன்பதால்உண்டு’என்றதமிழர்களின் கடவுள் தத்துவம் சார்ந்த சொல்முறை உத்திகள் (Language Strategies) இவர் பாடல்களின் உள்பொருள் உலகில் காணப்படுகின்றன. (உதாரணம். கடல், உடு, பரிதியோடு தமிழ்பிறந்தது என்கிறபோது சொல்லாமல் சொல்லும் உத்திமூலம் அண்டகோளங்களும் தமிழும் சேர்ந்து பிறந்தன என்கிறார்).

  1. சக்தி, தாய் என்னும் உயிர்தோற்றக் காரணத்தைத் (Life instinct) தமிழுடன் இணைத்துப் பார்க்கிறார். (தாய்ப்பாலில் நஞ்சு – தமிழியக்கம். பக். 39).

  1. வெளிப்படுதல் / மறைதல் போன்ற சொல் எதிர்நிலை உத்திகள் சிந்தனை உத்திகளாக்கப்படுதலையும் பாரதிதாசனில் காண்கிறோம்.

  1. தற்காலப் பிரக்ஞையே, பாரதிதாசனின் கவிதைகளில் இடம் (Place) பற்றிய பிரக்ஞையாய் செயல்படுவதைக் காண்கிறோம். (உதாரணம்: ‘தேவர் துய்யநல் தமிழ்ச் சாராயம் துய்த்திட’ என்ற படிமத்தில் தூரத்துக் கற்பனையான தேவர் தற்கால நடைமுறையான சாராயம் குடிப்பதுடன் இணைக்கப்படுதல்).

  1. பாரதிதாசனில் ஏதாவது ஒன்று தோன்ற வேண்டுமென்றால் அதற்கொரு காரணம் வேண்டும் என்ற காரிய காரண தர்க்கம் காணப்படுகிறது. (உதாரணம்: தமிழன் கனவிலிருந்து வையக வாழ்வு தோன்றியது என்ற பாரதிதாசன் பாடலடி).

  1. பாரதிதாசன் பாடல்களில் மாற்றம் பற்றிய சிந்தனைகள் தோன்றும்போது அவர் சிந்தனை, பழமையின் பால் சாய்கிறதென்று காட்ட பல உதாரணங்கள் உள்ளன. (அச்சகம் நடத்துகிறவர்கள் மலைச்சறுக்கில் இருக்கிறார்கள் என்ற படிமம் மலைச்சறுக்கல் என்ற பழம் மனச்சாய்வு கொண்டிருக்கிறது).

பாரதிதாசனை 20 –ஆம் நூற்றாண்டின் தமிழ் அரசியல் மற்றும் இலக்கியப் போக்குகளைப் பாதித்த மிகப் பெரும் கவிஞராய் விளக்கும் போதிய அளவு பார்வைச் சிறப்புக் கொண்ட ஆழமான கட்டுரைகளோ, நூல்களோ, வரவில்லை. தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆர்வலர்களாலும் கட்சி அனுதாபிகளாலும் எழுதப்பட்டவை. ஆழமான இலக்கியத் தர்க்கத்தின் முன்பு தாக்குப்பிடிக்க முடியாதவை. தற்காலத்தின் சீரிய இலக்கியப் பார்வையாளர்களாகவும் விமரிசகர்களாகவும் விளங்கிய சிறுபத்திரிக்கை ஆளுமைகள் பாரதிதாசனை சிலவேளை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏற்றுக்கொண்டவர்களால் சரியான இலக்கிய நோக்கில் பாரதிதாசன் விளக்கப்படவோ, வியாக்கியயானம் செய்யப்படவோ இல்லை. தற்கால இலக்கியப் பார்வையில் மேற்கின் பாதிப்பாலும், தமிழிலக்கிய இலக்கண மறுவாசிப்பாலும் புதிய இலக்கியஅளவைகள் கடந்த கால் நூற்றாண்டாய் வந்து கொண்டிருக்கின்றன. அமைப்பியல் போன்ற ஆய்வு முறையியல் ஒழுங்கும் பாதிப்பைச் செலுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் பாரதிதாசன் சரியான அணுகுமுறையால் ஆய்வுச் செய்யப்பட பல வாய்ப்புகள் உள்ளன.

3

வால்ட் விட்மன் (1819 -1892) ஓர் அமெரிக்க நாட்டுக் கவிஞர்.1855-இல் தோன்றிய அவருடைய புல்லின் இதழ்கள் (Leaves of Grass) என்ற கவிதை நூல் உலக இலக்கியத்தில் தனியிடம் பெற்றது. தமிழில் புதுக்கவிதை தோன்றிய போது ந. பிச்சமூர்த்தி என்ற புதுமரபுக் கவிஞருடன் இணைத்துப் பேசப்பட்டது. ஆனால் இங்குப் பாரதிதாசனுடைய கவிதைகள் தொடும் ஆழத்துக்கும் வால்ட் விட்மனைக் கவிஞராக்கும் அவரது கவித்துவஉண்மைகளுக்கும் தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது.

வால்ட் விட்மன் கவிதைகள் சொர்க்கத்தை நோக்கிய ஒரு அழுகை என்றும் சக்திமிக்க கருத்துக்களின் வெளிப்படுத்தல் என்றும் நூறு ஆண்டுகள் வயது முடிவடையாத ஒரு நாட்டைக் கொண்டாடுதல் என்றும் புல்லின் இலைகள் என்ற கவிதை புகழப்பட்டது. அமெரிக்கத் தனித்தன்மை கொண்ட ஒரு புதிய இலக்கிய மரபை இக்கவிதைகள் தோற்றுவித்தன என்றும் அவை சாமானிய மனிதனின் குரல் என்றும் ஒரு தைரியமான புதுப்பாதை என்றும் கூறப்பட்டன. அமெரிக்கா என்பது அதன் ஜனாதிபதிகளால் அடையாளப்படுத்தப்படுவதைவிட அதன் கவிஞர்களால்தான் அதிகம் அடையாளப்படுத்தப்படுகிறது என்பது வால்ட் விட்மனின் கருத்து. அவர் மனித உயிர்களை மாற்றுவதற்குக் கவிதைக்குத்தான் முடியும் என்று கருதினார். ஒவ்வொரு கவிதையிலும் அந்த நம்பிக்கை காணப்படுகிறது. அதனால் தான் புல்லின் இலைகள் என்ற கவிதைத் தொகுப்பு (ஒரே தொகுப்பைத்தான் தொடர்ந்து விட்மன் எழுதினார் என்பது வாசகர்கள் அறிய வேண்டும். அதனால் 12 கவிதைகளுடன் தொடங்கப்பட்ட தொகுப்பு 383 கவிதைகளைக் கொண்ட பெரிய தொகுப்பாக மாறியது). பலர் புல்லின் இலைகள் தான் அமெரிக்காவில் எழுதப்பட்ட ஒரே மகத்தான கவிதைநூல் என்பார்கள். உலகில் உள்ள எழுத்தாளர்கள் எல்லோரும் தாங்கள் படைப்பு ஆற்றலைப் பெற இந்தக் கவிதைத் தொகுதியே காரணம் என்றும் கூறுவார்கள். எழுத்தாளர்கள் மட்டுமல்ல மற்றவர்களும் தங்கள் படைப்புச் சக்தியுள்ள வாழ்க்கையை இக்கவிதைகளைப் படிப்பதன் மூலம் அடைவார்கள் என்றும் விட்மன் கவிதைகளை விளக்குபவர்கள் கூறுவார்கள்.

விட்மன் கவிதைகள் பற்றிக் கூறுபவர்கள் அவர் கவிதைகள் மூலம் அவர் ஒரு உணர்ச்சியாளர் (sensualist) என்றும் பௌதீக உலகை- இருப்பதை இருப்பது போல் நேசிப்பவர் என்றும் உடலை விரும்புபவர் என்றும் இயற்கையையும் தன்னிறைவையும் ஆங்கில மொழியின் மகத்துவத்தையும் ஆராதிப்பவர் என்றும் சொல்வார்கள். அவருடைய கவிதைகள் இயற்கையையும் உழைப்பையும் ஆன்மீகத்தையும் போரையும் நூல் வாசிப்பையும் எழுதுவதையும் பேசுகின்றன. அவர் கவிதைநடையை இதுவரை இல்லாத சுதந்திரமான, யாப்பை மீறிய, கவிதைமுறை என்பர். வால்ட் விட்மன் எந்த எழுத்தாளரும் பயன்படுத்தாத முறையில் மொழியைப் பயன்படுத்துகிறார் என்றும் அப்படி எழுதுவது பற்றி அறிவில்லாமல் தன்னெழுச்சியுடன் எழுதுகிறார் என்றும் கூறுகிறார்கள்.

பொதுவான கூற்றுப் போல தொனிக்கும் மேற்கண்ட கவிதை விளக்கம் பிரத்தியேக பொருத்தப்பாட்டுடன் விட்மன் கவிதைகளுக்கு மட்டும் முதலில் பொருந்தி, பிற்காலங்களில் பொதுவான கவிதை விளக்க மொழிமுறையாய் மாறியது என்பதை நாம் அறிய வேண்டும்.

இந்த மேலோட்டமான, மிகவும் பொதுமைப்படுத்தப்பட்ட விளக்கத்தில் சில கூறுகள் முக்கியமாக முன்வைக்கப்படுகின்றன. அவற்றைப் பாரதிதாசனுடன் ஒப்பிட்டு இவ்விரு கவிஞர்களின் ஆளுமைகளில் இருந்த ஒற்றுமைகளைக் காண முடியும்.

முக்கியமாக, பாரதிதாசன் 20-ஆம் நூற்றாண்டில் ஒரு தனித் தமிழ்நாட்டு (இதற்கு அன்றைய கட்சி அரசியல் சார்ந்து திராவிடநாடு என்ற கற்பனை நாட்டுப் பெயரைக் கொடுத்தாலும்) அடையாளத்தைச் சார்ந்து சில கவிதைகளைப் படைத்தார் என்பது மட்டுமல்லாமல் மொத்த கவித்துவ ஆளுமையையும் நிர்மாணித்தார். பாரதி எப்படிப் பாரதமும் தமிழ்நாடும் என்ற இரட்டைத் தேசியத்தை முன்வைத்து மத்தியகால சமஸ்கிருத – தமிழ்மொழிநடையிலிருந்து தன் கவித்துவத்தை உருவாக்கினாரோ, அதுபோல் பாரதிதாசன் தனித்தமிழ் கவித்துவ மொழிநடையை உருவாக்கியதும் தமிழக அரசியலை அந்தப் போக்கில் உருச்சமைக்க அண்ணாதுரை அவர்களைத் தமிழரசியலுக்குப் பாதை போட வைத்ததும் முக்கியத்துவம் பெறுகின்றன. வால்ட் விட்மன் நூறு வயதான அமெரிக்காவுக்கு ஏற்ற கவிதையை உருவாக்கினாரென்றால் பாரதிதாசன், ஈழத்திலும் கூட உருவாகாமல் போன, தனித்தமிழ்நாட்டைக் கருத்துருவில் கட்டும் பின்னணியில் ஒரு புதுக்கவித்துவத்தை உலகத் தமிழர்களுக்குக் கொண்டு வந்தார். விட்மனிடம் புதுநாடும் புதுக்கவித்துவமும் இணைந்தது போல் வேறு பிரத்தியேகச் சாயல்களுடன் புதுத் தமிழ்நாடு என்ற கற்பனையும் அதற்காக இதுவரையில்லாத புதுத்தமிழ்க் கவித்துவம் கட்டமைக்கப்பட்டன பாரதிதாசனால்.  பாரதிதாசன் பெயரை அழிக்க முடியாதபடி அவர் தமிழ்க் கவிதை வரலாற்றில் ஒரு புதுக்கண்டுபிடிப்பைச் செய்தது இப்படித்தான். வால்ட் விட்மனைப் போலவே சாதாரண மனிதர்களும் அடையாளம் கண்டுபிடிக்கவும் அறிந்து கொள்ளவும் முடிந்த முறையில்  இதுவரையில்லாத கவித்துவத்தை உருவாக்கியதே பாரதிதாசனின் தற்காலத் தமிழிலக்கியக்கொடை. பாரதி ஏற்கனவே இருந்த தமிழ்மொழிநடையைத் தன் கவிதைக்குப் பயன்படுத்திப் புதிதாக்கிக் கவிதையில் ஒரு தற்காலத் தோரணையும், தற்கால அரசியலும், அர்த்தமும் உருவாக்கினாலும் அவருடைய சில கவிதைகளே சாமானிய மக்களை ஈர்த்தன. பாரதிதாசன் அப்படி அல்ல; அதுவரை இல்லாத தமிழ்த்தோரணையைக் கொண்ட அதிரடிமுறைக் கவிதையைச் சங்ககாலத் தமிழ்க் கவிதையின் மாதிரியில் உருவாக்கினார். ஒரு பிராந்திய அடையாளத்தைத் தமிழர்களுக்குப் படைத்தார் பாரதிதாசன். பிராந்திய அடையாளம் இருந்தாலும் அதுவரை தமிழர்கள் அறியாத – அறியத் தேவையில்லாத – பாரத அடையாளம் சார்ந்து நின்றார் பாரதி. மொத்த அனைத்திந்திய தேசியத்தோடு பாரதியின் புதுத்தமிழ்க் கவிதை அமைந்தது. அது பல இந்திய மொழிகளிலும் நடந்த நிகழ்வுதான்.

பாரதிதாசன் இந்தத் தமிழகத்து அரசியல் கட்சி சார்ந்த வரலாற்றோடு இணைந்ததுதான் அவரது உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணமானது. கட்சி அரசியல்வாதிகள் பாரதிதாசனின் புகழுக்குக் காரணமானார்கள். ஏனெனில் பாரதி உருவாக்கிய மொழி சார்ந்த விழுமியத்தைச் சார்ந்தே திராவிட கட்சி அரசியல் தோன்றியது. அதனால் வெகுவிரைவில் பாரதிதாசனைப் போலி செய்து நூற்றுக்கணக்கானவர்கள் எழுதினார்கள். அதனால் வெகுவிரைவில் பாரதிதாசன் உருவாக்கிய கிளர்ச்சிமிக்க மொழி மேடை முழக்கமாகச் சீரழிந்தது. அதனால் பாரதிதாசன் பெரும் விபத்தில் மாட்டிக்கொண்டார். அவர் கவிஞர் அல்ல என்ற குரல் கேட்டது. முக்கியமாய் புதுக்கவிதை பழக்கப்படுத்திய இறுகிய கவிதைகள் தமிழகத்தில் பரவிய பின்பு பாரதிதாசனின் பாணி மதிப்பிழந்தது.

இக்கட்டத்தை அவதானித்துப் பாரதிதாசனுடைய உண்மையான பெறுபேறு என்ன என்று கவித்துவ வரலாற்று அறிவோடு அவரை மதிப்பீடு செய்ய வேண்டும். அந்த மதிப்பீட்டுக்கு உலக அளவில் பிரபலமான தேசியக் கவிஞரான வால்ட் விட்மன் உதவுவார்.

பாரதிதாசனையும் வால்ட் விட்மனையும் அவர்களின் தேசியம் போன்ற உள்ளடக்கத்தை வைத்து அளப்பது போல் கவிதை உருவாக்கமுறையையும் வைத்து அளக்கவும் நாம் முயலவேண்டும். அதுதான் இரண்டு கவிஞர்களை ஒப்பிட்டு அவர்களின் கவித்துவத்தை ஒப்பிடும் முறை. இருவரின் கருத்தை ஒப்பிடுவதைவிட கருத்திலிருந்து மாறுபட்ட கவித்துவத்தை ஒப்பிடும்போது இன்னொரு பெரிய வட்டத்திற்குள் இரு கவிஞர்களையும் கொண்டு வருகிறோம். இருவரின் நினைப்புச் சார்ந்த உலகங்களும் நினைவிலி சார்ந்த உலகங்களும் அருகருகே கொண்டு வரப்பட்டுச் சிந்திக்கப்படுகின்றன.

வால்ட் விட்மன் கவிதைகளைப் படிக்கும்போதும் பாரதிதாசனின் கவிதைகளைப் படிக்கும்போதும் தேர்ந்த ஒரு கவிதை வாசகனுக்கு முதலில் இருவரும் கவிஞர்களா என்ற கேள்வி வரலாம். சிலருக்கு இருவரையும் கவிஞர்களாகப் பார்ப்பதில் பிரச்சனை வரலாம். அந்தப் பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டும். இருவரும் கவிஞர்கள் என்ற நம்பிக்கையிலிருந்து இலக்கிய விமரிசனம் தொடங்காது. எந்தக் கட்டத்திலும் ஏன் இவர்களைக் கவிஞர்களாகக் கருத வேண்டும் என்ற கேள்வியிலிருந்தே விமரிசனம் எழுகிறது. அதை நாம் நாம் அங்கீகரிக்க வேண்டும்.

பாரதிதாசனைக் கவிஞர் அல்ல என்று கருதிய இலக்கிய விமரிசகர்கள் தமிழில் இருந்தனர். புதுக்கவிதை தோன்றியபோது புதுக்கவிதைபோல் இல்லாத பாரதிதாசன் கவிதைகள் மீது பலருக்குச் சந்தேகம் ஏற்பட்டது எதிர்பார்க்கக் கூடியதுதான்.சி.சு.செல்லப்பாவுக்குப் பாரதிதாசன் கவிஞரல்ல. ஆனால் பலர் நூல்களும் கட்டுரைகளும் எழுதினாலும் பாரதிதாசனைக் கவிஞராக எல்லோரும் ஏற்கும் விதமாக அவை எழுதப்படவில்லை. அதுபோல் வால்ட் விட்மனைப் பற்றியும் சந்தேகம் இருந்திருக்கிறது. மிகச் சமீபத்திய சந்தேகம் அர்ஜென்டினிய எழுத்தாளர் ஜார்ஜ் லூயிஸ் போர்ஹேஸ் எழுப்பியது. முதலில் மிகப்பெரிதாய் வால்ட் விட்மன் ஏற்கப்படாததை போர்ஹேஸ் “அன்று புறக்கணிக்கப்பட்டது பின்னர் சாகாவரம் பெற்ற நூலாய் கருதப்பட்டது” என்கிறார்2. போர்ஹேசும் அவருடைய நண்பர்களும் முதலில் ‘புல்லின் இலைகளை’யும் விட்மனின் வாழ்க்கை வரலாற்றையும் படித்தபோது ஏமாற்றப்பட்டதுபோல் உணர்ந்ததாய் கூறுகிறார் போர்ஹேஸ்3. அதுபோல் பாரதிதாசனையும் புதுக்கவிதை அணியினர் ஏற்கவில்லை. ஏனெனில் வால்ட் விட்மனும் பாரதிதாசனும் அதுவரை இல்லாத, புதுவித கவித்துவத்தை வாசகர்களின் உலகத்துக்குக் கொண்டு வந்தனர்.

விட்மன் இப்படி எழுதுகிறார்.

“இளைஞர்களுக்கும் வயதானவர்களுக்கும்

என்னஆனதென நினைக்கிறீர்கள்?

பெண்களுக்கும் குழந்தைகளுக்கும்

என்னஆனதென நினைக்கிறீர்கள்?

அவர்கள் உயிருடனுண்டு, எங்கேயாயினும்;

சிறு முளைகாட்டுகிறது உண்மையில் சாவு இல்லை என”

(Leaves of Grass. P. 62)

இந்த வரிகளைப் படிக்கும்போது கவிதையை உரைநடையில் எழுதுவதுடன் விட்மன் மேல்தளத்திலும் உள்தளத்திலும் செயல்படுகிறார் என்பதறிகிறோம்.

மேல்தளத்தில் குழந்தைகள், பெண்கள், வயதானவர்களின் சாவைப் பற்றிக் கூறுகிறார். அப்போதே சாவு முடிவல்ல என்ற எதிர்கருத்தையும் உள்தளத்தில் கூறுகிறார். அத்துடன் உள்தளத்தில் மனிதர்களையும் (குழந்தை, பெண்கள், வயதானவர்கள்) இயற்கையையும் இணைக்கும் உள்உணர்வு தெரிகிறது. அதனால் முளையுடன் சாவை இணைக்கும் எண்ணம் ஏற்படுகிறது.

இந்தத் தன்மையுடன் பாரதிதாசன் கவித்துவமுறை ஒத்துப்போவதைக் கண்டுபிடிக்கும்போது நமக்கு வியப்பு ஏற்படுகிறது. பாரதிதாசன்

‘பயிரழிக்கும் விட்டில்போல் தமிழழிக்கிறது

வடமொழி’        (தமிழியக்கம், ப. 27)

‘பார்ப்பான் காலில் வேரற்ற மரம்போல்

தமிழ்ச்செல்வர் விழுவர்’  (தமிழியக்கம், ப. 50)

அதுபோல அவருடைய இரண்டாம் தொகுப்பில்,

‘காற்று, கனல், புனல் வானும்

தமிழன் கனவும்…’         (பக். 105 இரண்டாம் தொகுப்பு

பாரதிதாசன் கவிதைகள்)

என வருகிறது.இதுபோல் முதல் தொகுப்பில் பாரதிதாசன் கீழ்வருமாறு பாடுகிறார்.

‘சோலை அணங்கொரு திண்ணையிலே – நான்

தோளினை ஊன்றி இருக்கையிலே விழியுடையாள் –

என்றன்

சோலை நிகர்த்த

செந்தமிழ்ப் பத்தினி வந்துவிட்டாள்’         (பக். 90)

சோலை என்னும் பெண்ணுடன் அமர்ந்திருக்கையில் தமிழ் என்னும் பத்தினி வந்து விட்டாள் என்று இயற்கை, தமிழ்மொழி இவற்றை இணைத்துப் பெண்ணாய் காண்கிறார். வால்ட் விட்மன் சாவை முளை என்று உருவப்படுத்திப் புதுப்பொருள் காண்பதுபோல் பாரதிதாசன் சோலையையும் தமிழையும் பெண்ணாய் சிந்தனையில் இணைத்து உருவகம் (Metaphor) ஆக்குகையில் வேறொரு உள்ளர்த்தத்துக்குப் போகிறார். விட்மனிடம் சாவு, சாவாய் (முடிவு) காணப்படாமல் அதற்கு எதிரான தோற்றமாய், பிறப்பாய், வடிவம் கொள்வதுபோல் பாரதிதாசனிடம் இயற்கையான சோலை, பெண் வடிவில், பெண்ணின் உடலுடன் காணப்படுகிறது. பெண் – தாயாய், காதலியாய் பல பரிமாணங்களை எடுக்க முடியும். பல்முகமாய் விரிவடைய முடியும். மேலே ஒரு பொருளும் உள்ளே தொனியாய் இன்னொரு பொருளும் உருப்பெறுகின்றன. ஒரு சொல் பல சொற்களின் அர்த்த தளத்தில் நகர்த்தி வைக்கப்படுகிறது. அதன்பின்பு சொல்லின் எல்லை அழிகிறது. அவ்வாறு தொடர் அழிப்பு நடக்கும்போது அர்த்தங்கள் ஒன்றுடன் ஒன்று எல்லை அழிந்து இணைகின்றன. சொல் உலகு பொருள் உலகில் சேரும் இந்த ரசவாதம் எளிதாய் நடைபெற வைப்பது கவிஞர்களின் பொதுச்செயல். வால்ட் விட்மனிடமும் நடக்கிறது; பாரதிதாசனிடமும் நடக்கிறது.

இன்றுள்ள அகில உலக இலக்கியவாதிகளின் ஆசான் என்று நான் கருதும் போர்ஹேஸ், விட்மன் பற்றிக் கூறும்போது சொல்லும் வேறொரு கருத்து இலக்கிய அறிவில் உச்சமான சிந்தனை என்று எனக்குத் தோன்றுகிறது. விட்மன், அமெரிக்கா புதிதாய் கண்டுபிடித்த சனநாயகம் (Democracy) தனக்கு நிகரில்லாத ஒரு மனிதகுல கண்டுபிடிப்பு என்பதை அறிந்ததால் அதனைப் பற்றிப் பாடும் ஒரு காவியத்தை எழுதக் கருதியிருக்க வேண்டும் என்பது அவரது புல்லின் இலைகளில் தெரிகிறது என்கிறார் போர்ஹேஸ். ஆனால் அந்தக் காவியம் வழக்கமான ஒன்றல்ல. வழக்கமான காவியங்களில் ஒரு  தனக்கு நிகரில்லா நாயகனும் அத்தகைய நாகயர்களுக்கு அடிபணிந்த பிற பாத்திரங்களும் வரும்; இந்த முறையைப் புதிய சனநாயகம் பற்றிப் பாடும் விட்மன் நிராகரிக்கிறார். இந்த முறையை உலகம் நிராகரித்துவிட்டது. இந்த முறை அரிஸ்ரோகிரஸி என்ற பிரபுக்களின் முறை. விட்மன் தனக்குள், இம்முறைக்கு மாற்றான பன்மைத்துவமான, எல்லா மனிதர்களுக்குமான, கவிதைமுறையை உருவாக்குவேன் என்று கூறியிருக்க வேண்டும். அதனையே எழுதிக் காட்டினார். அதாவது விட்மன் திட்டமிட்டு உருவாக்கிய பரிசோதனையான கவித்துவமே அவரது ‘புல்லின் இலைகள்’ கவிதைத் தொகுதி. இப்படியான கவிதை எழுதும் திட்டம், பயங்கரமான ஆபத்துக்கள் நிறைந்த கவிதைப் பாதை; அதனைச் சாதித்துக் காட்டிய மேதை விட்மன் என்பது போர்ஹேஸின் கருத்து. போர்ஹேஸும் ஒரு கவிஞர் என்பதையும் உலக இலக்கியத்தில் தனதே ஆன ஒரு கவிதை வெளியீட்டு முறையை முன்வைத்தவர் என்பதையும் நாம் மறக்கக்கூடாது.

‘தெளிவானதும் இனிதானதும் என் ஆன்மா;

தெளிவற்றதும் இனிதற்றதும் என் ஆன்மா’

என்ற விட்மன் வரிகளில் முரண்களுக்கிடையில் வியாபிக்கும் முழுமையும் பன்மையும் தெரிகின்றன.

‘எனக்குத் திருப்தி… நான் நோக்குகிறேன்

நடனமிடுகிறேன், சிரிக்கிறேன், பாடுகிறேன்,

கடவுள் நண்பனாய் வருவதால், இரவெல்லாம்

என்னருகில் படுப்பதால் ……………

எனக்காய் வீட்டில் நிறையும் வெள்ளைத்

துண்டுகள் துருத்திய கூடைகள்

அவரால் விட்டுச் செல்லப்படுகின்றன.

நான் தள்ளிப்போடட்டுமா என் ஏற்பை, உணர்தலை,

கண்ணின் கிரீச்சிடலை ……………..’

(பக். 57)

இங்கே நாம் மேற்கோள் காட்டிய வசனகவிதை வரிகளில் விட்மன் முரண்தன்மைகளின் வழி தெளிவானதே தெளிவற்றது  என்றும் இனிதானதே இனிதற்றது என்றும் கூறுகிறார். இந்த, வார்த்தைவழி வார்த்தைக்கு வெளியில் சஞ்சரிக்கும் அர்த்தப் பரப்பைப் பிடிக்கும் முறைக்குப் போகிறார். குறிப்பிட்ட ஒன்று என்ற தத்துவம் தகர்ந்து குறிப்பிட்டது உடைந்து குறிப்பிட்ட ஒன்றுக்கு அப்பால் பொதுவான ஒன்று என்ற பன்மை ஏற்படுகிறது. இதுபோல் அடுத்த மேற்கோளில், ‘நோக்குதல்’, ‘நடனமிடுதல்’, ‘சிரித்தல்’, ‘பாடுதல்’ என்ற ஒன்றோடு ஒன்று தொடர்பறுந்த கற்பனை ஒரு வியாபகமாய் பரந்து விரிவதைக் காண்கிறோம். அதுபோலவே கடவுளை, அருகில் படுக்கிற அருகாமையின் ரூபமாய் விட்மன் கற்பனை செய்கிறார்; சாதாரண செயலாகிய வெள்ளைத்துண்டுகளை நிறைத்த கூடையைத் தருகிற உதவியாளராய் பார்க்கிறார் விட்மன்; நான் மனிதச் செயல்களாகிய ‘ஏற்பை’, ‘உணர்தலை’, ‘கண்ணின் (குரல் அல்ல) கிரீச்சிடலை’ தள்ளிப்போடட்டுமா என தொடர்பற்ற உணர்வுகள் குவிக்கப்பட்டு ஒரு உரையாடல் பாணியில் (தள்ளிப் போடட்டுமா) கவிதை பல்தன்மையாய், பன்முகமாய், சிறிதும் முழுமையும் ஒன்றேயாய் காணப்படுகிறது. தொடர்பற்ற உணர்ச்சிகள் ஒரே இடத்தில் குவிவதாய் – மொத்தத்தில் வித்தியாசமளிக்கப்பட்ட பிரபஞ்சமொழியாய், அல்லது மொழியைத் தாண்டிச் செல்லுதலாய் புதிய கவிதை – அல்லது காவியம் – தளம் விரிக்கிறது. அதாவது பன்மைத்துவம் என்பது எல்லாம் சேர்ந்த (inclusive) முழுமையைக் கொண்டது என்று இங்கு காட்டிய வரிகளில் தெரிவிக்கிறார்.

இந்தப் பன்முகத்தன்மையில் இயற்கை, பல இடங்களில் விட்மன் கவிதைகளில் தலைநீட்டி மனிதர்களுடனும் பல்வேறு அர்த்தங்களுடனும் இடையீடு செய்கிறது.

‘நான் யூகிக்கிறேன் புல் தானொரு

குழந்தை ………. இலை தழையில் உற்பத்தியான மழலை.

நான் யூகிக்கிறேன் புல் ஒருமைபெற்ற ஹைரோகிளப் புதிர்,

மேலும் புல் பெரிய வெளியிலும் குறுகிய

வெளியிலும் முளைக்கிறது.

முளைக்கிறது கருப்பர்கள் மற்றும்

வெள்ளையர் நடுவில்’.

இங்குப் பன்மை என்பது இயற்கையாய், உலகின் புதிர்களாய், பெரிய வெளியாய் சிறிய வெளியாய் கருப்பர்கள் வெள்ளையர்கள் என்று ஒரு ஒருங்கு சேர்ந்த நினைவலையாய் பரந்து விரிந்து செல்கிறது. இதைத்தான் போர்ஹேஸ் பன்மைத்துவம் என்றழைக்கிறார். எல்லா உலக நிகழ்வுகளையும்,     வகைமைகளையும், முறைமைகளையும் வேறுபாடுகளையும், தனிநபர்களையும் இணைக்கும் கவித்துவக் கண்ணிகளை உருவாக்கிக் கொண்டே போகும்முறை. இது விட்மன் கவிதைகளில் காணப்படுகிறது.

அதுபோல் குரல்களின் பன்முகக் குணத்தை விட்மன் தருகிறார்.

‘என்மூலம் பல ஊமைக்குரல்கள்

குரல்கள் முடிவுறாத தலைமுறை அடிமைகளுடையவை,

குரல்கள் கணிகையர் மற்றும் உடல் ஊறுகொண்டவர்களுடைவை.

குரல்கள் நோயாளிகளின், துன்புறுபவர்களின் திருடர்களின்

குள்ளர்களினுடையவை.

(பக். 92)

பன்மைத்துவம் என்று போர்ஹேஸ் என்ற எழுத்தாளர் கூறி  விளக்கம் தரும் விஷயம் எத்தனை ஆழமும் அகலமும் கொண்டதென விளக்க விட்மன் கவிதைகளிலிருந்து தொடர்ந்து நூற்றுக்கணக்கான உதாரணங்களைத் தரமுடியும்.

‘நான் சதையை நம்புகிறேன், பசித் தேவையையும்.

பார்க்கிறதும் உணர்கிறதும் ஆச்சரியங்கள்;

என் ஒவ்வொரு பகுதியும் துண்டும் ஆச்சரியம்.

தெய்வீகம் என் உள்ளிலும் புறத்திலும், நான்

புனிதமாக்குகிறேன் எதைத்தொட்டாலும் எதால் தொட்டாலும்

என் அக்குளின் மணம் பிரார்த்தனையைவிட நல்லது.

இந்த என்தலை கோயில்கள் விவிலியங்கள் தெய்வ

சபைகளைவிட மேலானது’

(பக். 93)

இந்தக் கவிதைக்கும் சனநாயகம் என்ற ஒன்றைக் கண்டுபிடித்த அமெரிக்க நாட்டுக்கும் தொடர்பிருப்பதையும் போர்ஹேஸ் முடிச்சு போடுகிறார். கவித்துவம் வரலாற்றிலிருந்தும் சமூகத்திலிருந்தும் உருவாவதென மறைமுகமாய் அங்கீகரிக்கிறார். சனநாயகத்தை அமெரிக்கா, பிரான்ஸ்- புரட்சியைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே கண்டுபிடித்ததைக் கூறுகிறார் போர்ஹேஸ். இன்றைய அமெரிக்காவின் உலகை ஆளும் ஆசைக்கும் சனநாயகத்தைத் தோற்றுவித்த அதன் மேதமைக்கும் தொடர்புண்டா என்பது வேறுகேள்வி. இந்த எல்லாக் கருத்துக்களின் பின்னணியில் நாம் பாரதிதாசனையும் அவருடைய கவிதைகளையும் வைத்து ஆய வேண்டும்.

இனி பாரதிதாசனின் கவிதைகளை மேலே வால்ட் விட்மனை அறிந்து கொண்ட பின்னணியில் அணுகவேண்டும்.

பாரதிதாசன் கவிதைகளின் உள்தளத்தில் விட்மன் கவிதைத் தளத்தில் செயல்படும் பன்மைத்தன்மை செயல்படுகிறது. அமெரிக்கச் சனநாயகம் கொடுத்த கவிதைக்கொடை தான் அந்தக் கவித்துவம் என்ற போர்ஹேஸ் கருத்துக்கு மாறாகத் தமிழர்களின் ஒருங்கிணைவுச் சிந்தனையையும் அவர்கள் இன்றுவரை தோற்றுவிக்காத தமிழ்த் தேசியத்தையும் (Nationalism) பாரதிதாசன் அரங்குக்குக் கொண்டுவருகிறார். விட்மனின் அரசியலும் பாரதிதாசனின் அரசியலும் வேறானாலும்  இருவரது கவிதைத் தளத்தின் வேர்கள் பன்மைத்துவத்தில் நிலை கொண்டிருக்கின்றன என்ற கண்டுபிடிப்பைத்தான் இக்கட்டுரை முடிவான கருத்தாக முன்வைக்கிறது.

பாரதிதாசனின் இரண்டாம் தொகுப்பில் ‘தொழுதெழுவாள்’ என்ற கவிதையைப் படித்து முடிக்கும்போது அதில் நான்கைந்து குரல்கள் வெளிப்படுவதைக் காணலாம். இன்றைய  இட உணர்வின் அடிப்படையில் அரசனுக்கும் அரசிக்கும் உள்ள காதல் வெளிப்படுகிறது.

‘உண்டனன் உலவினன் பின்

உள்ளறை இட்ட கட்டில்

அண்டையில் நின்ற வண்ணம் ……’

இது தற்காலக் கவிதையோ என்று சந்தேகம் வருமாறு கவிதைத் தொடங்குகிறது.

‘நறுமலர்ப் பஞ்சணை மேல்

நலியாதுட்கார வைத்தான்

கமழ்தேய்வு பூசி வேண்டிக்

கனியொரு பாலும் ஊட்டி

அமைவுற என்கால் தொட்டே

அவனுடையால் துடைத்தே……..’

என்று கவிதை தொடர்கையில் இது அரசன் அரசி மத்தியில் நடக்கும் செயல்பாடுகள் என்றுணர்கிறோம். அதாவது தற்காலமும் அரசர்களின் காலமும் கலக்கின்றன. பாலியல் மூலம் அரசன் அரசிக்கான சமூகப் பங்கு (Roles) மாறுகிறது. அரசியின் காலை அரசன் துடைக்கின்றான். மூன்றாவது குரலாக இக்கவிதையில் தமிழும் பாலியலும் இணைகின்றன. இவ்வாறு பல குரல்கள் கலக்கும்படி கவிதை அமைகின்றது. இந்தப் பாலியல் கூட வெளிப்படையாயும் மறைந்தும் வரும்படி அமைக்கப்பட்டுள்ளன இக்கவிதையில். இசையமுது தொகுப்புப் பாடல்களின் அர்த்தத் தளத்தைக் கட்டுடைப்புச் செய்தால் அங்கும் பாலியல் வெளிப்பட்டும் உள்ளுறைந்தும் நிற்பது பாரதிதாசனின் பொதுப்பண்பு என அறிகிறோம். அதுபோல் பருப்பொருளாகவும் (Concrete) நுண்பொருளாகவும் (abstract) தமிழுணர்வு அமைந்து அத்தகைய கவிதைகளின் பொருள்தள வளமைக்குப் பங்களிப்பதும் உணர்கிறோம். இந்த வகையில் ஓரளவு விட்மன் கவித்துவ பொருள்தளமும் பாரதிதாசனின் பொருள்தளமும் வேறுபட்டாலும் பன்மைத்துவத்தின் பண்பே வேறுமுறையில் பாரதிதாசனிடம் காணப்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. உளவியலில் பாலியலை முக்கியமாக்கி மனிதவாழ்க்கைக்கு விளக்கம் தந்து மனிதகுல சிந்தனை சரித்திரத்தில் முக்கியமானவரான ஃபிராய்ட் (Freud) என்னும் உளவியல் அறிஞர் பாலுணர்வுகள் மனிதனிடம் பதிலிகள் (Substitutes) மூலம் வெளிப்படுவதை விளக்கியுள்ளார். இந்தப் பதிலிகள் மொழி மூலமும் மொழியாகவும் அமைந்திருப்பதைப் புதிய உளவியலாளரான லக்கான் (Lacan) விளக்கியுள்ளது இன்று உலக இலக்கிய விமரிசன வளர்ச்சிக்கு முக்கியமான சிந்தனை ஆகியுள்ளது. பாரதிதாசனில் பாலியலானது சப்தங்களாய்  (தமிழ் என்னும் ஒளி) அவர் கவிதைகளில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதால் அவை இன்னொரு கோணத்தில் பதிலிகளாய் அமைகின்றன என்று கூறுவது தவறாகாது.

பாரதிதாசனின் எதிர்பாராத முத்தம் என்ற நூலில் திருமலை நாயக்க மன்னன் குமரகுருபரர் காலில் வீழ்ந்து, தன் கனவில் அங்கயற்கண்ணி அம்மை வந்து குமரகுருபரரின் பிள்ளைத்தமிழ் பற்றிச் சொன்ன செய்தி வருகிறது. குமரகுருபரரை, அரசன்

‘……………… யானை

தன்னில் நீர் எழுந்தருள்க

தமிழுடன் ’                                (பக். 67)

என்கிறார். இங்கெல்லாம் தெய்வநிலை, பிற எல்லா இடத்திலும் காலத்திலும் நீக்கமற நிறைந்து இன்னொரு குரலை, தொனியைத் தருகின்றன. அதுபோல் அழகின் சிரிப்பு என்ற நூலில்

‘சும்மாதான் சொன்னார் உன்னை

ஒருவன்பால் துளிர்த்தாய் என்றே’            (பக். 62)

என பிறப்பற்றது (ஒருவன்பால் பிறக்காதது) பற்றி விளக்கி ஒருவித மாயமும் இயற்கைத்துவமும் (துளிர்த்தாய்) இணயும் ஒருவித கலத்தல்நிலையைச் சுட்டுகிறார். இவ்வாறு தொடர்ந்து கவித்துவ நிதர்சனங்கள் அடையாளமற்றவைகளாகவும் எல்லைகள் மங்கலாக்கப்படுவதாகவும் இயற்கையிலிருந்து தோற்றத்தன்மை வடிவம் பெறுவதாகவும் (துளிர்தலில் தோற்றுவிப்புத் தத்துவம் உள்ளது) அமைகின்றன. இங்குத் தமிழ் ஒரு காலம் கடந்த தன்மையைப் (ahistorical) பெறுகின்றது.

‘இசையாம் தமிழைத் தந்தாய் – பறவை,

ஏந்திழை இனிமைக் குரலாய்’

(பாரதிதாசன் கவிதைகள் 2-ஆம் தொகுதி – பக். 33).

என இயற்கை,இசை,பெண்மை எல்லாம் இணைகின்றன.

வானம்பாடி பறவையைப் பாரதிதாசன்,

‘வானூர்தி மேலிருந்து வல்ல தமிழிசைஞன்

தானூதும் வேய்க்குழலா? யாழா?

என்ற கேள்விமூலம் புதுமுறையில் பார்க்கிறார். இங்கு இசை என்ற நுட்பமான ஒலியும் உயரம் உயரமின்மை என்னும் நினைவும் இணைக்கப்படுகின்றன.

மொத்தத்தில் பாரதிதாசனின் கவிதைக்கொள்கை (இது அவர் கவிதைகளில் வெளிப்படுவதிலிருந்து ஒரு கொள்கையாக நமக்குக் கிடைப்பது). பிரத்தியேகத்தைச் சார்ந்தது அல்ல; பிரத்தியேகமானது இன்னொன்றோடும், அப்படிப்பட்ட பலவற்றோடும் தொடர்பின்னலில் உறவு வைத்திருக்கிறது. இது விட்மனுடன் பாரதிதாசனை ஒப்பிட வழி வைக்கிறது. பாரதிதாசன் இயற்கையைப் பாடும்போது தெய்வீகமும் மானுட இயல்பும், இடப்பரிணாமம், காலப் பரிமாணம் போன்றவைகளும் உடன்வந்து சேரும் முறையில் அவர் ஆழத்தில் செல்கிறார். அந்த ஆழம் பன்மைத்துவத்தின் பண்பாகும்.

பாரதிதாசனின் முக்கியமான கவிதைகளில் ஒன்றாகக் கருதப்படும் சஞ்சீவி பர்வதத்தின் சாரல் என்ற கவிதையின் கற்பனை அமைப்புப் பன்மைத்துவ ஆராய்ச்சிக்கு வாகாக அமைகிறது. இக்கவிதையின் தொடக்கம் 20 – ஆம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதையில் – பாரதியையும் சேர்த்து – அதுவரை இல்லாத ஒரு புதுப்பண்பை அறிமுகப்படுத்துகிறது. சங்க இலக்கியம் அச்சுமூலம் பரவிய ஒரு நூற்றாண்டில் யாரும் செய்யாத முறையில் வளர்தமிழ் இலக்கியத்துக்குள் பாரதிதாசன் மூலம் கொண்டுவரப்படுகிறது. பக்திகாலம் தான் தமிழின் வேர் என்ற மதவாதிகளின் கட்சியை முறியடித்து அதற்கும் முந்திய சங்ககாலம் தமிழினத்தின் பண்பாட்டு வேராக வரலாற்றில் மறுஉருவமைப்புச்  செய்யப்படுகிறது. சஞ்சீவி பர்வதத்தின் சாரலின் தொடக்கம் ‘குயில் கூவிக் கொண்டிருக்கும்’ என அமைந்து குறிஞ்சி நிலக்காட்சி நவீன கவிதைக் காட்சியாய் விரிய, குப்பன் என்னும் வேடன் காட்சி தருகிறான். அவனுடன் வஞ்சி ஒருத்தியும் வருகிறாள்.

மொத்த கவிதையும் படிக்கும்போது விரைவில் உடல் சார்ந்த படிமங்களிலிருந்து  கவிதை விடுபட்டு ஒருவித அகில உலகக் காட்சிகளை மூலிகை மூலம் கொடுக்கிறது. கவிதை இறுதியில் புராணச் சொற்பொழிவு (இராமன் கதை) ஒரு வாய்மொழி மூலம் வெளிப்படும் கதைப்படிமமாய் எதிர்வுப் (Binary) பண்பு தருகிறது. ஆக குறிஞ்சிநிலம் – மூலிகை மூலம் தொலைக்காட்சி – வாய்மொழிப் புராணச் சொற்பொழிவுப் படிமம் என்ற மூன்று அச்சுகளைச் சுற்றிய கவிதைக் கட்டமைப்பில் சுதந்திர போராட்டம், மூடநம்பிக்கை போன்றன பாரதத்தில் இருக்கும்வரை வெற்றி பெறாது என்னும் உள்ளடகத்தைத் தருகிறது.

கற்பனை என்பது எதார்த்தத்தைத் தாண்டிப் போகச் சாத்தியப்படுத்தும் மனோவேகமாகும். இந்த மனோவேகம் புதிய கவித்துவமாய் தமிழில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

பின்பு கதாநாயகனும் நாயகியும் இருவரின் தேகஇன்பத்தின் வழியும் (நேற்றுத்தான் இன்பக்கரை காட்டினாய் இன்று சேற்றிலே தள்ளிவிட்டாய்) அதுபோல் தேகஇன்பத்தின் தடைவழியும் (இதுவும் குறிஞ்சியின் motif ஆகும்) இயங்கிக்கவிதை முன்னோக்கி பாலியல்சார் வாசிப்பு நகர்வு வழி செல்கிறது. ஒரு மூலிகையைத் தின்றால் உலகினர் பேசுவது கேட்கலாம்;  இன்னொன்றைத் தின்றால் உலகினர் பேசுவதைக் காணலாம் (தூரக்காட்சி). இப்படித் தேகப்புலன்களான செவி மற்றும் கண்கள் அறிதல் தளத்தின் ஆதிநிலை சார்ந்த இயல்புகளுடன் வேரடித்துக் கட்டப்படுகின்றன. அதுபோல் ஓரிடத்தில் மூலிகைக் கொண்டுவராவிட்டால் சாவேன் (மூலிகை தேடமுடியாவிட்டால் மலையின் மேலிருந்து கீழே விழுந்திறக்க நானறிவேன்) என உயிர் /  சாவு (Life and death) என்னும் எதிர்வுப் படிமங்கள் பாத்திரங்களின் மைய இயங்குபோக்காக வியாக்கியானம் பெறுகின்றன. பின்பு இத்தாலி, பிரான்ஸ், அமெரிக்க தேசத்தவர் பேசுவதைக் குப்பனும் வஞ்சியும் கேட்கும் அனைத்துலகத் தளத்தில் இயங்கும் கவிதை ஒருவித Folklore – தன்மையான நகைச்சுவை தரும் ராமன் பற்றிய புராணச்சொற்பொழிவுடன் முடிப்பு பெற்று, பழமை / புதுமை, அன்று / இன்று, உடல் / வாய்மொழி என்னும் எதிர்வுகளை மனஅரங்கில் நிகழ்த்திக் காட்டி முடிவுக்கு வருகின்றன.

பாரதிதாசனிடம் நிகழும் இந்த எதிர்வுகளை பிரபஞ்ச முழுமை தழுவிய கவித்துவ வரைபடமாய் விளக்கும்போது நாம் விட்மனுடன் இணைக்கவும் ஒப்பிடவும் முடியும். விட்மன் நூற்றுக்கணக்கான உதாரணங்களை முடிவற்ற விதமாய் தந்துகொண்டே போகிறார். ஆனால் பாரதிதாசன் ஓசைச் சந்தத்தை, விட்மனைப் போல் தான் கைவிடாதவராய் கவிதை எழுதுவத

இலக்கிய விமர்சனம்

பாரதிதாசனும் வால்ட்விட்மனும்

பாரதிதாசன் 1891 – இல் பிறந்து 1920 – இல் அதாவது அவருடைய 29 – ஆம் வயது வாக்கில் சமயக் கவிதைகளையும், காங்கிரஸ், இந்தியத் தேசியம் போன்றவற்றையும் பாடியபோது, நவீன தமிழிலக்கிய வரலாற்றுக்குத் தேவையான இலக்கிய முழுமை ஏற்படவில்லை. இது ஒரு பத்தாண்டுகள் தொடர்ந்திருக்கிறது. 1930 – இல் அவரது 39 – ஆம் வயதில்தான்  இருபதாம் நூற்றாண்டுத் தமிழிலக்கியத்துக்கு வேண்டிய கவித்துவ விழிப்புணர்வு அவருக்குள் முகிழ்க்க ஆரம்பித்துள்ளது. சொந்த சிந்தனை ஓர் ஆளுமையாக பாரதி தாசனிடத்தில் தோன்றியபோது அவர் எழுதிய முதல் கவிதை, தாழ்த்தப்பட்டோர் சமத்துவப்பாட்டு (1930 – ஆம் ஆண்டு). தொடர்ந்து சஞ்சீவி பர்வதத்தின் சாரல் (1930) வெளிவருகிறபோதும் அதாவது பாரதிதாசனின் 40-ஆவது வயதில்தான் அவருக்கான தனி சிநதனையும் ஆளுமையும் மொழித் தைரியமும் ஏற்படுகின்றன. சமய நம்பிக்கையாளராக (தனது 30 -ஆம் வயதில்) இருந்தவர் அன்றைய அரசியல், சமூக, வரலாற்றுச் சூழலால் இறைமறுப்பாளராக உருவாகிறார். பெரியாரின்  இயக்கத்தில் சேர்ந்து சிந்தனையில் வளர்கிறார். அவருக்குள் இருந்த பிரஞ்சு, தமிழ், இலக்கியங்கள் அவரைத் தமிழக இலக்கிய வரலாறு காணாத விதமான ஒரு பேருரு கொண்ட கவிஞராக உருமாற்றுகிறது. இந்த உருமாற்றமும் அக உலக பெருமாற்றமும் விகாசிப்பும்தான் இலக்கிய நோக்கு முதன்மைப்பார்வை கொண்டவர்கள்  ஆய்ந்து, அறிந்து உருவப்படுத்திப் புரிந்துகொள்ள வேண்டும். இன்று பிற பார்வைகள் உள்ளன. இலக்கியப் பார்வைதான் இல்லை. இலக்கிய முதன்மைப்பார்வைக்குள் வரலாறும், உளவியலும், சமூகவியலும் உள்ளன. எனவே இலக்கியம் வடிவம் பெறும் முறையில் பாரதிதாசனை அணுகுவதே சரியான பார்வை. பிற பார்வைகள் போலிப் பார்வைகள் என்பதே என் துணிபு.

2

பாரதிதாசனைப் பற்றிய என் கட்டுரை ஒன்றின் மையமான சில கருத்துக்களைத் தேவை கருதி இங்கே முன்வைக்க வேண்டும்1.

பாரதிதாசன் தமிழ் என்று கூறிய இடங்களில் மேல்தளப் பொருளாய் ஒரு கருத்தையும் உள்தளப் பொருளாய் வேறு கருத்தையும் சொல்கிறார் என்பதே அக்கட்டுரையின் சுட்டுப்பொருள். மேல்தளப்பொருள்களை வரிசைப்படுத்திக் கூறிய அக்கட்டுரை உள்தளத்தில் தொனியாய் வெளிப்படும் பொருண்மைகளைக் கீழ்வருமாறு பட்டியலிடுகிறது.

  1. பாரதிதாசன் கருத்துலகு காலம் என்பது வரலாற்றுக்குட்படாதது என்ற கருத்தைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ளது.

  1. இயற்கையில் காணப்படும் தாவர உலக நினைவு உள்தளமாய் பாரதிதாசன் பாடல்களில் காணப்படுகிறது (உதாரணம்: பயிரழிக்கும்விட்டில்போல்தமிழழிகிறது. தமிழியக்கம், பக். 27).

  1. ‘இல்லைஎன்பதால்உண்டு’என்றதமிழர்களின் கடவுள் தத்துவம் சார்ந்த சொல்முறை உத்திகள் (Language Strategies) இவர் பாடல்களின் உள்பொருள் உலகில் காணப்படுகின்றன. (உதாரணம். கடல், உடு, பரிதியோடு தமிழ்பிறந்தது என்கிறபோது சொல்லாமல் சொல்லும் உத்திமூலம் அண்டகோளங்களும் தமிழும் சேர்ந்து பிறந்தன என்கிறார்).

  1. சக்தி, தாய் என்னும் உயிர்தோற்றக் காரணத்தைத் (Life instinct) தமிழுடன் இணைத்துப் பார்க்கிறார். (தாய்ப்பாலில் நஞ்சு – தமிழியக்கம். பக். 39).

  1. வெளிப்படுதல் / மறைதல் போன்ற சொல் எதிர்நிலை உத்திகள் சிந்தனை உத்திகளாக்கப்படுதலையும் பாரதிதாசனில் காண்கிறோம்.

  1. தற்காலப் பிரக்ஞையே, பாரதிதாசனின் கவிதைகளில் இடம் (Place) பற்றிய பிரக்ஞையாய் செயல்படுவதைக் காண்கிறோம். (உதாரணம்: ‘தேவர் துய்யநல் தமிழ்ச் சாராயம் துய்த்திட’ என்ற படிமத்தில் தூரத்துக் கற்பனையான தேவர் தற்கால நடைமுறையான சாராயம் குடிப்பதுடன் இணைக்கப்படுதல்).

  1. பாரதிதாசனில் ஏதாவது ஒன்று தோன்ற வேண்டுமென்றால் அதற்கொரு காரணம் வேண்டும் என்ற காரிய காரண தர்க்கம் காணப்படுகிறது. (உதாரணம்: தமிழன் கனவிலிருந்து வையக வாழ்வு தோன்றியது என்ற பாரதிதாசன் பாடலடி).

  1. பாரதிதாசன் பாடல்களில் மாற்றம் பற்றிய சிந்தனைகள் தோன்றும்போது அவர் சிந்தனை, பழமையின் பால் சாய்கிறதென்று காட்ட பல உதாரணங்கள் உள்ளன. (அச்சகம் நடத்துகிறவர்கள் மலைச்சறுக்கில் இருக்கிறார்கள் என்ற படிமம் மலைச்சறுக்கல் என்ற பழம் மனச்சாய்வு கொண்டிருக்கிறது).

பாரதிதாசனை 20 –ஆம் நூற்றாண்டின் தமிழ் அரசியல் மற்றும் இலக்கியப் போக்குகளைப் பாதித்த மிகப் பெரும் கவிஞராய் விளக்கும் போதிய அளவு பார்வைச் சிறப்புக் கொண்ட ஆழமான கட்டுரைகளோ, நூல்களோ, வரவில்லை. தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆர்வலர்களாலும் கட்சி அனுதாபிகளாலும் எழுதப்பட்டவை. ஆழமான இலக்கியத் தர்க்கத்தின் முன்பு தாக்குப்பிடிக்க முடியாதவை. தற்காலத்தின் சீரிய இலக்கியப் பார்வையாளர்களாகவும் விமரிசகர்களாகவும் விளங்கிய சிறுபத்திரிக்கை ஆளுமைகள் பாரதிதாசனை சிலவேளை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏற்றுக்கொண்டவர்களால் சரியான இலக்கிய நோக்கில் பாரதிதாசன் விளக்கப்படவோ, வியாக்கியயானம் செய்யப்படவோ இல்லை. தற்கால இலக்கியப் பார்வையில் மேற்கின் பாதிப்பாலும், தமிழிலக்கிய இலக்கண மறுவாசிப்பாலும் புதிய இலக்கியஅளவைகள் கடந்த கால் நூற்றாண்டாய் வந்து கொண்டிருக்கின்றன. அமைப்பியல் போன்ற ஆய்வு முறையியல் ஒழுங்கும் பாதிப்பைச் செலுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் பாரதிதாசன் சரியான அணுகுமுறையால் ஆய்வுச் செய்யப்பட பல வாய்ப்புகள் உள்ளன.

3

வால்ட் விட்மன் (1819 -1892) ஓர் அமெரிக்க நாட்டுக் கவிஞர்.1855-இல் தோன்றிய அவருடைய புல்லின் இதழ்கள் (Leaves of Grass) என்ற கவிதை நூல் உலக இலக்கியத்தில் தனியிடம் பெற்றது. தமிழில் புதுக்கவிதை தோன்றிய போது ந. பிச்சமூர்த்தி என்ற புதுமரபுக் கவிஞருடன் இணைத்துப் பேசப்பட்டது. ஆனால் இங்குப் பாரதிதாசனுடைய கவிதைகள் தொடும் ஆழத்துக்கும் வால்ட் விட்மனைக் கவிஞராக்கும் அவரது கவித்துவஉண்மைகளுக்கும் தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது.

வால்ட் விட்மன் கவிதைகள் சொர்க்கத்தை நோக்கிய ஒரு அழுகை என்றும் சக்திமிக்க கருத்துக்களின் வெளிப்படுத்தல் என்றும் நூறு ஆண்டுகள் வயது முடிவடையாத ஒரு நாட்டைக் கொண்டாடுதல் என்றும் புல்லின் இலைகள் என்ற கவிதை புகழப்பட்டது. அமெரிக்கத் தனித்தன்மை கொண்ட ஒரு புதிய இலக்கிய மரபை இக்கவிதைகள் தோற்றுவித்தன என்றும் அவை சாமானிய மனிதனின் குரல் என்றும் ஒரு தைரியமான புதுப்பாதை என்றும் கூறப்பட்டன. அமெரிக்கா என்பது அதன் ஜனாதிபதிகளால் அடையாளப்படுத்தப்படுவதைவிட அதன் கவிஞர்களால்தான் அதிகம் அடையாளப்படுத்தப்படுகிறது என்பது வால்ட் விட்மனின் கருத்து. அவர் மனித உயிர்களை மாற்றுவதற்குக் கவிதைக்குத்தான் முடியும் என்று கருதினார். ஒவ்வொரு கவிதையிலும் அந்த நம்பிக்கை காணப்படுகிறது. அதனால் தான் புல்லின் இலைகள் என்ற கவிதைத் தொகுப்பு (ஒரே தொகுப்பைத்தான் தொடர்ந்து விட்மன் எழுதினார் என்பது வாசகர்கள் அறிய வேண்டும். அதனால் 12 கவிதைகளுடன் தொடங்கப்பட்ட தொகுப்பு 383 கவிதைகளைக் கொண்ட பெரிய தொகுப்பாக மாறியது). பலர் புல்லின் இலைகள் தான் அமெரிக்காவில் எழுதப்பட்ட ஒரே மகத்தான கவிதைநூல் என்பார்கள். உலகில் உள்ள எழுத்தாளர்கள் எல்லோரும் தாங்கள் படைப்பு ஆற்றலைப் பெற இந்தக் கவிதைத் தொகுதியே காரணம் என்றும் கூறுவார்கள். எழுத்தாளர்கள் மட்டுமல்ல மற்றவர்களும் தங்கள் படைப்புச் சக்தியுள்ள வாழ்க்கையை இக்கவிதைகளைப் படிப்பதன் மூலம் அடைவார்கள் என்றும் விட்மன் கவிதைகளை விளக்குபவர்கள் கூறுவார்கள்.

விட்மன் கவிதைகள் பற்றிக் கூறுபவர்கள் அவர் கவிதைகள் மூலம் அவர் ஒரு உணர்ச்சியாளர் (sensualist) என்றும் பௌதீக உலகை- இருப்பதை இருப்பது போல் நேசிப்பவர் என்றும் உடலை விரும்புபவர் என்றும் இயற்கையையும் தன்னிறைவையும் ஆங்கில மொழியின் மகத்துவத்தையும் ஆராதிப்பவர் என்றும் சொல்வார்கள். அவருடைய கவிதைகள் இயற்கையையும் உழைப்பையும் ஆன்மீகத்தையும் போரையும் நூல் வாசிப்பையும் எழுதுவதையும் பேசுகின்றன. அவர் கவிதைநடையை இதுவரை இல்லாத சுதந்திரமான, யாப்பை மீறிய, கவிதைமுறை என்பர். வால்ட் விட்மன் எந்த எழுத்தாளரும் பயன்படுத்தாத முறையில் மொழியைப் பயன்படுத்துகிறார் என்றும் அப்படி எழுதுவது பற்றி அறிவில்லாமல் தன்னெழுச்சியுடன் எழுதுகிறார் என்றும் கூறுகிறார்கள்.

பொதுவான கூற்றுப் போல தொனிக்கும் மேற்கண்ட கவிதை விளக்கம் பிரத்தியேக பொருத்தப்பாட்டுடன் விட்மன் கவிதைகளுக்கு மட்டும் முதலில் பொருந்தி, பிற்காலங்களில் பொதுவான கவிதை விளக்க மொழிமுறையாய் மாறியது என்பதை நாம் அறிய வேண்டும்.

இந்த மேலோட்டமான, மிகவும் பொதுமைப்படுத்தப்பட்ட விளக்கத்தில் சில கூறுகள் முக்கியமாக முன்வைக்கப்படுகின்றன. அவற்றைப் பாரதிதாசனுடன் ஒப்பிட்டு இவ்விரு கவிஞர்களின் ஆளுமைகளில் இருந்த ஒற்றுமைகளைக் காண முடியும்.

முக்கியமாக, பாரதிதாசன் 20-ஆம் நூற்றாண்டில் ஒரு தனித் தமிழ்நாட்டு (இதற்கு அன்றைய கட்சி அரசியல் சார்ந்து திராவிடநாடு என்ற கற்பனை நாட்டுப் பெயரைக் கொடுத்தாலும்) அடையாளத்தைச் சார்ந்து சில கவிதைகளைப் படைத்தார் என்பது மட்டுமல்லாமல் மொத்த கவித்துவ ஆளுமையையும் நிர்மாணித்தார். பாரதி எப்படிப் பாரதமும் தமிழ்நாடும் என்ற இரட்டைத் தேசியத்தை முன்வைத்து மத்தியகால சமஸ்கிருத – தமிழ்மொழிநடையிலிருந்து தன் கவித்துவத்தை உருவாக்கினாரோ, அதுபோல் பாரதிதாசன் தனித்தமிழ் கவித்துவ மொழிநடையை உருவாக்கியதும் தமிழக அரசியலை அந்தப் போக்கில் உருச்சமைக்க அண்ணாதுரை அவர்களைத் தமிழரசியலுக்குப் பாதை போட வைத்ததும் முக்கியத்துவம் பெறுகின்றன. வால்ட் விட்மன் நூறு வயதான அமெரிக்காவுக்கு ஏற்ற கவிதையை உருவாக்கினாரென்றால் பாரதிதாசன், ஈழத்திலும் கூட உருவாகாமல் போன, தனித்தமிழ்நாட்டைக் கருத்துருவில் கட்டும் பின்னணியில் ஒரு புதுக்கவித்துவத்தை உலகத் தமிழர்களுக்குக் கொண்டு வந்தார். விட்மனிடம் புதுநாடும் புதுக்கவித்துவமும் இணைந்தது போல் வேறு பிரத்தியேகச் சாயல்களுடன் புதுத் தமிழ்நாடு என்ற கற்பனையும் அதற்காக இதுவரையில்லாத புதுத்தமிழ்க் கவித்துவம் கட்டமைக்கப்பட்டன பாரதிதாசனால்.  பாரதிதாசன் பெயரை அழிக்க முடியாதபடி அவர் தமிழ்க் கவிதை வரலாற்றில் ஒரு புதுக்கண்டுபிடிப்பைச் செய்தது இப்படித்தான். வால்ட் விட்மனைப் போலவே சாதாரண மனிதர்களும் அடையாளம் கண்டுபிடிக்கவும் அறிந்து கொள்ளவும் முடிந்த முறையில்  இதுவரையில்லாத கவித்துவத்தை உருவாக்கியதே பாரதிதாசனின் தற்காலத் தமிழிலக்கியக்கொடை. பாரதி ஏற்கனவே இருந்த தமிழ்மொழிநடையைத் தன் கவிதைக்குப் பயன்படுத்திப் புதிதாக்கிக் கவிதையில் ஒரு தற்காலத் தோரணையும், தற்கால அரசியலும், அர்த்தமும் உருவாக்கினாலும் அவருடைய சில கவிதைகளே சாமானிய மக்களை ஈர்த்தன. பாரதிதாசன் அப்படி அல்ல; அதுவரை இல்லாத தமிழ்த்தோரணையைக் கொண்ட அதிரடிமுறைக் கவிதையைச் சங்ககாலத் தமிழ்க் கவிதையின் மாதிரியில் உருவாக்கினார். ஒரு பிராந்திய அடையாளத்தைத் தமிழர்களுக்குப் படைத்தார் பாரதிதாசன். பிராந்திய அடையாளம் இருந்தாலும் அதுவரை தமிழர்கள் அறியாத – அறியத் தேவையில்லாத – பாரத அடையாளம் சார்ந்து நின்றார் பாரதி. மொத்த அனைத்திந்திய தேசியத்தோடு பாரதியின் புதுத்தமிழ்க் கவிதை அமைந்தது. அது பல இந்திய மொழிகளிலும் நடந்த நிகழ்வுதான்.

பாரதிதாசன் இந்தத் தமிழகத்து அரசியல் கட்சி சார்ந்த வரலாற்றோடு இணைந்ததுதான் அவரது உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணமானது. கட்சி அரசியல்வாதிகள் பாரதிதாசனின் புகழுக்குக் காரணமானார்கள். ஏனெனில் பாரதி உருவாக்கிய மொழி சார்ந்த விழுமியத்தைச் சார்ந்தே திராவிட கட்சி அரசியல் தோன்றியது. அதனால் வெகுவிரைவில் பாரதிதாசனைப் போலி செய்து நூற்றுக்கணக்கானவர்கள் எழுதினார்கள். அதனால் வெகுவிரைவில் பாரதிதாசன் உருவாக்கிய கிளர்ச்சிமிக்க மொழி மேடை முழக்கமாகச் சீரழிந்தது. அதனால் பாரதிதாசன் பெரும் விபத்தில் மாட்டிக்கொண்டார். அவர் கவிஞர் அல்ல என்ற குரல் கேட்டது. முக்கியமாய் புதுக்கவிதை பழக்கப்படுத்திய இறுகிய கவிதைகள் தமிழகத்தில் பரவிய பின்பு பாரதிதாசனின் பாணி மதிப்பிழந்தது.

இக்கட்டத்தை அவதானித்துப் பாரதிதாசனுடைய உண்மையான பெறுபேறு என்ன என்று கவித்துவ வரலாற்று அறிவோடு அவரை மதிப்பீடு செய்ய வேண்டும். அந்த மதிப்பீட்டுக்கு உலக அளவில் பிரபலமான தேசியக் கவிஞரான வால்ட் விட்மன் உதவுவார்.

பாரதிதாசனையும் வால்ட் விட்மனையும் அவர்களின் தேசியம் போன்ற உள்ளடக்கத்தை வைத்து அளப்பது போல் கவிதை உருவாக்கமுறையையும் வைத்து அளக்கவும் நாம் முயலவேண்டும். அதுதான் இரண்டு கவிஞர்களை ஒப்பிட்டு அவர்களின் கவித்துவத்தை ஒப்பிடும் முறை. இருவரின் கருத்தை ஒப்பிடுவதைவிட கருத்திலிருந்து மாறுபட்ட கவித்துவத்தை ஒப்பிடும்போது இன்னொரு பெரிய வட்டத்திற்குள் இரு கவிஞர்களையும் கொண்டு வருகிறோம். இருவரின் நினைப்புச் சார்ந்த உலகங்களும் நினைவிலி சார்ந்த உலகங்களும் அருகருகே கொண்டு வரப்பட்டுச் சிந்திக்கப்படுகின்றன.

வால்ட் விட்மன் கவிதைகளைப் படிக்கும்போதும் பாரதிதாசனின் கவிதைகளைப் படிக்கும்போதும் தேர்ந்த ஒரு கவிதை வாசகனுக்கு முதலில் இருவரும் கவிஞர்களா என்ற கேள்வி வரலாம். சிலருக்கு இருவரையும் கவிஞர்களாகப் பார்ப்பதில் பிரச்சனை வரலாம். அந்தப் பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டும். இருவரும் கவிஞர்கள் என்ற நம்பிக்கையிலிருந்து இலக்கிய விமரிசனம் தொடங்காது. எந்தக் கட்டத்திலும் ஏன் இவர்களைக் கவிஞர்களாகக் கருத வேண்டும் என்ற கேள்வியிலிருந்தே விமரிசனம் எழுகிறது. அதை நாம் நாம் அங்கீகரிக்க வேண்டும்.

பாரதிதாசனைக் கவிஞர் அல்ல என்று கருதிய இலக்கிய விமரிசகர்கள் தமிழில் இருந்தனர். புதுக்கவிதை தோன்றியபோது புதுக்கவிதைபோல் இல்லாத பாரதிதாசன் கவிதைகள் மீது பலருக்குச் சந்தேகம் ஏற்பட்டது எதிர்பார்க்கக் கூடியதுதான்.சி.சு.செல்லப்பாவுக்குப் பாரதிதாசன் கவிஞரல்ல. ஆனால் பலர் நூல்களும் கட்டுரைகளும் எழுதினாலும் பாரதிதாசனைக் கவிஞராக எல்லோரும் ஏற்கும் விதமாக அவை எழுதப்படவில்லை. அதுபோல் வால்ட் விட்மனைப் பற்றியும் சந்தேகம் இருந்திருக்கிறது. மிகச் சமீபத்திய சந்தேகம் அர்ஜென்டினிய எழுத்தாளர் ஜார்ஜ் லூயிஸ் போர்ஹேஸ் எழுப்பியது. முதலில் மிகப்பெரிதாய் வால்ட் விட்மன் ஏற்கப்படாததை போர்ஹேஸ் “அன்று புறக்கணிக்கப்பட்டது பின்னர் சாகாவரம் பெற்ற நூலாய் கருதப்பட்டது” என்கிறார்2. போர்ஹேசும் அவருடைய நண்பர்களும் முதலில் ‘புல்லின் இலைகளை’யும் விட்மனின் வாழ்க்கை வரலாற்றையும் படித்தபோது ஏமாற்றப்பட்டதுபோல் உணர்ந்ததாய் கூறுகிறார் போர்ஹேஸ்3. அதுபோல் பாரதிதாசனையும் புதுக்கவிதை அணியினர் ஏற்கவில்லை. ஏனெனில் வால்ட் விட்மனும் பாரதிதாசனும் அதுவரை இல்லாத, புதுவித கவித்துவத்தை வாசகர்களின் உலகத்துக்குக் கொண்டு வந்தனர்.

விட்மன் இப்படி எழுதுகிறார்.

“இளைஞர்களுக்கும் வயதானவர்களுக்கும்

என்னஆனதென நினைக்கிறீர்கள்?

பெண்களுக்கும் குழந்தைகளுக்கும்

என்னஆனதென நினைக்கிறீர்கள்?

அவர்கள் உயிருடனுண்டு, எங்கேயாயினும்;

சிறு முளைகாட்டுகிறது உண்மையில் சாவு இல்லை என”

(Leaves of Grass. P. 62)

இந்த வரிகளைப் படிக்கும்போது கவிதையை உரைநடையில் எழுதுவதுடன் விட்மன் மேல்தளத்திலும் உள்தளத்திலும் செயல்படுகிறார் என்பதறிகிறோம்.

மேல்தளத்தில் குழந்தைகள், பெண்கள், வயதானவர்களின் சாவைப் பற்றிக் கூறுகிறார். அப்போதே சாவு முடிவல்ல என்ற எதிர்கருத்தையும் உள்தளத்தில் கூறுகிறார். அத்துடன் உள்தளத்தில் மனிதர்களையும் (குழந்தை, பெண்கள், வயதானவர்கள்) இயற்கையையும் இணைக்கும் உள்உணர்வு தெரிகிறது. அதனால் முளையுடன் சாவை இணைக்கும் எண்ணம் ஏற்படுகிறது… … ……………   ……………..

My visit to Malayalam University ( continued)

A New Genre of Micro-Novel Appears in Tamil.

When Dr.Sreenathan, an important linguist in Kerala, who worked with me for a few months in Dravidian University, introduced me to the audience of the seminar in Malayalam University that I have published 5 novels in Tamil, the literary intoxicated audience of that seminar (usually Kerala readers regard a novelist more important than a cricketer) looked at me, though I did not read anything literary there. My topic was on religion. When he introduced me as a novelist I wanted to look at me and introspect as a writer. ‘What kind of writer am I’ was perhaps the question that came to my mind? I am not the type who spins stories for hundreds or thousands of pages. My last novel,

MUSALPANI, published recently, was hardly of hundred pages and was called a   ‘micro- novel’ as no other label was palatable to the readers of that small book to identify the genre which was first of its kind in Tamil. It appeared in 2013, and the theme of which was a mixture of magical realist events, images and vignettes. This novel evoked a kind of literary backlash of a sort that two other micro- novels immediately followed suit within the next year: one by Natarajan, a former editor of a literary journal who by profession was a tailor in a village, and another by K.Muthukrishnan, an ex-employee,   joint secretary, of Tamilnadu Govt. Then, it should be stressed, that these two novels dealt with the theme from  a completely different  angle.

LITERARY CRITICISM IN INDIA

Do we have good account of literary criticism for Indian Language literatures ?

When I visited Tirur, near Calicut, to present my paper in a seminar , about which I have posted earlier, I met my former friend and Malayalam critic Rajeevan, who is well versed with western theories, discussed with  me about Deleuze and Guattari and  their book “ A Thousand Plateaus”. He gave me a new information that scholars from all over the world interested in furthering the study of  Deleuze and Guattari  are going to meet in a seminar in Mangalore, India. When I told him my recent interest in Slavoj Zizek he told me he was very skeptical of Slavoj Zizek, though my idea is to wait and study more of Zizek (this man has written too many books) and take a decision later in deciding whether he will be of use in formulating certain arguments necessary to tackle problems of Tamil related literary criticism. He is, to me, sometimes fascinating, none the less, may be because he brings together lots of disciplines and does so with élan. As for my understanding of using foreign philosophers and thinkers are concerned, I, of course, don’t have any leaning towards western philosophers just because they are western, but I always feel they can be of use to develop new vistas of thinking for new kind of creative writing which I have been practicing for so many years in Tamil, as well as new arguments of Indian language literary debates. I am open for every influence from all sides. Do we have any good account of   modern Indian literary criticism in Indian languages which does not quote Sanskrit books in a sterile way? Or do we have articles or books really focusing on modern literary criticism of Indian languages which are inspiring as Zizek or Rancier,(who collaborated with his teacher,Althussar in “Reading capital”-a book I summarized in one of my Tamil books)  another  philosopher I like. ? Even in Tamil the language in which I write we don’t have people who can summarize focusing on what is going on in the field of criticism. The history of Tamil literary criticism of last thirty years is yet to be written.

சமீபத்திய தமிழவன் புத்தகத்திலிருந்து

அண்ணாவின்         பாராளுமன்ற        சொற்பொழிவு

……………1916-இல் தமிழரல்லாதவர்கள் இருவரால் பிராமணரல்லாதார் பற்றிய சிந்தனை தொடங்கப்பட்டது. (அவ்விருவரும் தியாகராயசெட்டி, மற்றும் டி.எம்.நாயர்). எனினும் இக்காலத்திலிருந்து தமிழ் உணர்வு எல்லாத்துறைகளிலும் எழுந்தது. இதனைப்பற்றி, நம்பிஆரூரன் என்ற மிக முக்கியமான ஆய்வாளர், தனது இலண்டன் பல்கலைக்கழகத்துக்குச் சமர்ப்பித்த ஆய்வேட்டினை நூலாக அச்சிடும்போது இப்படி விளக்குகிறார்.

“1916-இற்குப் பிறகு பிராமணர் அல்லாதார் விழிப்புணர்வு கூட்டங்கள் மெட்ராஸ் பிரசிடென்ஸியின் பல பகுதிகளில் நடந்தன. அங்கெல்லாம் திராவிடப் பிரக்ஞை மக்கள் மத்தியில் எழுப்பப்பட்டது. அதுபோல் திராவிட நாகரிகத்தின் பழமை, தொடக்க கால தமிழ் அரசர்களின் புகழ், திராவிட மரபு, தமிழ்ப்பண்பாடு போன்றன சுட்டிக் காட்டப்பட்டன.இந்தத் தமிழ்ப்பழமை பற்றிய உணர்வெழுச்சி, 20-ஆம் நூற்றாண்டில் தமிழ்மொழி, தமிழ்இலக்கியம், தமிழ்ப்புத்தகம் பற்றிய களங்களில் புதுவிவாதங்களையும் புதுப்பொலிவையும் கொண்டுவந்தன.

இங்கு நாம் கவனிக்க வேண்டியது, திராவிடப் பழமையைச் சுட்டுதலும் திராவிடப்பெருமை பேசுதலும் திராவிட உணர்வெழுச்சி பெறுதலும் எல்லாம் தமிழுணர்ச்சி கொள்ளுதலோடு பின்னிப் பிணைந்தவை என்பதாகும். தமிழைப் தாண்டின திராவிடம் என்ற ஒன்று இல்லாமலாகிறது. இத்துடன் இணைத்துத்தான் தமிழிசை இயக்கம் தோன்றுவதையும் தமிழ்ப்பல்கலைக்கழகம் என்ற பெயரில் அண்ணாமலையில் ஒரு பல்கலைக்கழகம் ஏற்படுவதையும் காண வேண்டும்.

இந்தத் தமிழ்ப் பின்னணியை உள்வாங்கியதுதான் அண்ணா அவர்களின் பாராளுமன்ற கன்னி உரை. அந்த உரையில் திராவிட நாடு பிரிவினையை அண்ணா அவர்கள் வலியுறுத்துகிறார்கள். மே மாதம் 25-ஆம் தேதி அண்ணா அவர்களின் முதல் சொற்பொழிவு ராஜ்யசபையில் நடந்தது. ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்ட சொற்பொழிவு சிறப்பாகவும் ஆற்றலுடனும் இன்றும் வாசகர்களுக்குக் கிடைக்கிறது. அந்தச் சொற்பொழிவுடன் பிரிவினை எதிர்ப்பு மசோதா பற்றிய Carry On But Remember  (நடத்துங்கள், ஆனால் நினைவிருக்கட்டும்…) என்ற சொற்பொழிவையும் இணைத்துப் படித்துப் பார்த்தால்  தான் அண்ணாவின் மூலப்படிவச் சிந்தனை(Promardial) தெளிவாகும்.மூலப்படிவச்சிந்தனை ஒருவருடைய கொப்பூழ் கொடிச் சிந்தனையாகும். பொருளாதாரம், பௌதீகம் பற்றிய சிந்தனையைக் கொப்பூழ் கொடியிலிருந்து வந்தது என்று கூறுவதில்லை. மொழி, பிறப்பு, சகோதரத்துவம் போன்றன இலட்சியத்தோடு இணைகையில் மூலப்படிவ ஞாபகங்கள் தோன்றுகின்றன. இலங்கையில் பிரபாகரன் உருவாக்கிய இயக்கமும் அவ்வியக்கத்தின் நேர்மையான குணமும் அதன் துயர முடிவும்  தமிழர்களின் வரலாற்றில் மூலப்படிவ ஞாபகங்கள் சார்ந்தவையாகும். தனிநாடு கேட்ட அண்ணாவும்– அதுவும் இந்தியப் பாராளுமன்றத்தில் – இங்கு ஞாபகத்துக்கு வருவார்.

ஆச்சரியகரமாக, அண்ணாவின் மே ஒன்றாம் தேதி (1962) நிகழ்த்திய பாராளுமன்ற சொற்பொழிவும் 25-1-1963 நிகழ்த்திய சொற்பொழிவும் கலாச்சாரத்திலிருந்து திராவிட நாடு கோரிக்கை எழுந்தவை என்ற சுட்டிக்காட்டலைத் தரவில்லை. அதற்குப் பதிலாக அனைத்துலக அரசியலின் அடிப்படைக் குரலான மக்களின் அடிப்படை உரிமை (Fundamental Right) மதிக்கப்பட வேண்டுமென்றால் திராவிட நாட்டுக் கோரிக்கையை சட்டம் கொண்டுவந்து தடுக்க முயலாதீர்கள் என்று அண்ணா கோருகிறார். மே மாதம் ஒன்றாம் தேதி பேசிய சொற்பொழிவில் அண்ணா இன்னொரு நுட்பமான விசயத்தை ஆங்கிலத்தில் உணர்த்துகிறார். தேசம் என்பது என்ன என்ற கேள்வியை முன் வைக்கிறார். இது பெனடிக்ட் ஆண்டர்சனை நமக்கு நினைவூட்டுகிறது. பெனடிக்ட் ஆண்டர்சன் (Benedict Anderson) போன்ற சிலரே இன்று வரை சிக்கலான இந்த விசயம் பற்றிச் சிந்தித்தவர்கள். அண்ணா சுட்டும் விஷயம் புதியதான, சமூக விஞ்ஞானம் மேற்கிலும் கூட தடுமாறும் ஒரு விசயம் என்பது இங்கு நாம் மறுக்கக்கூடாது. பெனடிக்ட் ஆண்டர்சனின் நூலை அதன் அட்டையிலுள்ள ஓரிரு வாக்கியமாய் புரிந்து புத்தி ஜீவி வேஷம் போடுபவர்களுக்கு எல்லாம் அண்ணாவின் நுட்பம் தென்படாதது ஆச்சரியமல்ல. அண்ணா கூறுகிறார்.

Sir, may I say, even at the point of being misunderstood, that the very term “national integration” is contradiction in terms. People integrated become a nation, where is the necessity for integration?

அதாவது இந்தியா ஏகமுகம் கொண்டதல்ல; பல்வேறு கலாச்சார, மொழி வேறுபாடுகளைக் கொண்ட சமஷ்டி அமைப்பு என்கிறார் அண்ணா…………………………

அடையாளம்  வெளியீடு:

My visit to Malayalam University, Tirur, Kerala.

My Visit to Malayalam University.

I visited Malayalam University on the 6th feb.20015, for the first time for a  seminar  to commemorate the Sree Narayana Guru’s  poems called “Thaivashathakam’’,  written as a prayer for the school which was started  to teach Sanskrit. This was held for a day. I was asked to read a paper focusing on non-Brahmin features of South Indian religions. Satyanath came from Delhi and he, as a recognized scholar on Indian Bhakti, gave a paper highlighting important pan-Indian elements of religions. Rajeevan, an important critic in Malayalam, gave the key-note lecture about the relevance of Narayana guru’s mysticism interpreting it as socially relevant aspect. The Vice Chancellor Jayakumar, an unassuming former bureaucrat of many years experience presided over  the inaugural session and mentioned the concept of “external god” of Narayana Guru, on which I started pondering

சில குறிப்புகள்

முகநூலில் செயல்படும் நண்பர்களுக்கு.

இன்றைய சூழலில் தமிழ் இலக்கியம் வணிக சக்திகளை எதிர்த்துப் போரிடுவதைத்தான் முதற்கடமையாகக் கொள்ளவேண்டும்.ஏனெனில் இன்றுஉலக இலக்கியத்தையும்

இந்தியாவில் இருக்கும் பிற மொழி இலக்கியங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தற்காலத் தமிழ் இலக்கியம் தன் பகையாகக் கருத வேண்டியது தமிழக வணிகப்  போக்குகளைத்தான்.ஏனெனில் மலேசிய இலக்கியமும்(மகாத் மன், நவீன்,கே.பாலமுருகன்) சிங்கப்பூர் இலக்கியமும் (லதா போன்றோர்)ஈழ இலக்கியமும்(பலர்)தமிழ்ச் சிறுபத்திரிக்கைகளின் இயக்க சரித்திரத்தால் தீர்மானிக்கப் பட்ட போக்குகளால் கவரப்பட்டுக் கடந்த சுமார் பத்து வருடங்களாகப் புதிய பாதைகளில் நடமிடுகின்றன.க.நா.சு, சி.சு.செ. போன்றோர் அறுபதுகளில் இந்தியாவில் தமிழில் உருவாக்கிய இலக்கிய மதிப்பீடுகள் முதன் முதலாக த்தமிழை உலக இலக்கிய ப் பாதையில் கொண்டு வந்தன.   அதன் பின்பும் தமிழில்   வ ணிகப் போக்கு முற்றிலும் மறையவில்லை.இச்சூழலில் -முகநூலன்பர்கள் நல்ல இலக்கியம் எது எனதெரிந்தவர்கள்-தங்கள் விளையாட்டுத்தனமான எழுத்துக் கிடையிலும் சீரிய இலக்கிய மதிப்பீடுகளை வலியுறுத்துவது தேவை என்றுதான் தோன்றுகிறது.

சில குறிப்புகள்

.பெருமாள் முருகன் சம்பந்தப் பட்ட சர்ச்சை

இன்று பலர் பெருமாள் முருகன் பற்றிய சர்ச்சையைக் கவனிக்கிறார்கள்.தமிழிலக்கியத்துக்கு இச்சர்ச்சையால் என்ன பயன் கிடைக்கும் என்று பார்க்கவேண்டும். அதாவது பெருமாள் முருகன்

நல்ல மனிதர்; யாரையும் புண்படுத்திப் பேசாதவர்.தன் படைப்புப் பற்றிப்பேச்சு எழவேண்டும் என்று எந்த  சீப்பான  தந்திரங்களையும் செய்யாதவர்.அவரைப் பற்றிப் பேச்சு எழுந்துள்ளதே தவிர அவர் படைப்பு பற்றிப் பேச்சு எழவில்லை.இதை நாம் கனிக்கவேண்டும்.எனக்கு அவர் படைப்புப் பற்றிப் பேச்சு எழவேண்டும் என்றுஆசை.இன்று இந்து ஆங்கில இதழில் பால்சக்கரியா கேரளத்தில் கைவெட்டப்பட்ட ஒருவரைப்பற்றி எழுதி அவருடன் பெ.முருகனை ஒப்பிட்டுள்ளார்.  ”சிமியாட்டிக்ஸ்”  (Semiotics)என்ற சிந்தனையில் ஒரு நிகழ்வைக் குறி( Sign  ) ஆக்குவது பற்றிச் சிந்திப்பார்கள். உம்பெர்த்தொ எக்கொ என்ற இத்தாலிய நாவலாசிரியர்-பேராசிரியர் பற்றி அறிந்திருப்பீர்கள்.அவர் நவீன குறியியல் சிந்தனையைத் தொடங்கியவர் என்பார்கள். அவர் ஒரு நிகழ்வை அதன் வலயத்திலிருந்து மற்றி அதனை அடையாளத்தொகுப்பாக்கும்  செயலை விளக்குவார்.ஒரு தமிழ்ப் படைப்பாளியை அவர் படைப்பைப் பற்றிப் பேசாமல் பிற எல்லா  விசயங்களையும் பேசி அவரைசுற்றி ஒரு சொற்களாலான அடையாளக் குவியலை உருவாக்குகிறோம்.அவருடைய படைப்பே அவருக்கு மரியாதை தரும்.அதனைப் பற்றி பேசவேண்டும் நாம்.

2.இந்த ஆண்டுக்கான கன்னட இலக்கிய விழா .

இவ்விழாவில் நண்பர் தலித் கவிஞர் சித்தலிங்கையாவை அழைத்துத் தலைமை தாங்கக் கேட்டுள்ளார்கள்.அவரும் ஒத்துக்கொண்டுள்ளார்.ஏற்கனவே  தலித் இலக்கியவாதி யும்  இன்றைய முதல் அமைச்சருடன் அரசியலில் செயல்பட்டவருமான தேவனூர் மகாதேவையா  தலைமைதாங்குவதற்கு மறுத்துள்ளார்.  ஏனெனில் கன்னடத்தைக் கட்டாய மொழியாகப் பள்ளிகளில் அறிவிக்கும் வரை அவர் விழாவில் பங்கெடுப்பதில்லை என எதிர்ப்பு த் தெரிவித்திருந்தார்.அதனால் அரசு சட்டத்திருத்தம் செய்து கன்னடம் கட்டாயம் என்று அறிவிக்க முன்று வருகிறது.