” திராவிடம், தமிழ்த்தேசம்,கதையாடல் ” நூல்பற்றி தமிழவனோடு ஓர் உரையாடல்

திராவிடம், தமிழ்த்தேசம், கதையாடல் நூல் பற்றி

தமிழவனோடு ஓர் உரையாடல்

கே. சேகர்

கேள்வி:       உங்கள் நூல் திராவிடம் தமிழ்த்தேசம் கதையாடல் ஒரு மார்க்சீயப்                   பார்வையில் எழுதப்பட்ட நூலா?

பதில்:          ஆமா. மார்க்சீயக் கட்சிகள் என்று லேபலில் தமிழகத்தில் உள்ள கட்சிகள் இந்த நூலை எப்படிப் பார்க்கும் என்று எனக்குத் தெரியாது. அகில உலக அளவில் மார்க்சீயத்தின் பல்வேறு போக்குகள் வளர்ந்துள்ளதை அறிந்தவர்களுக்கு இந்த நூல் மார்க்சீய விளக்கத்தைக் கொண்டிருக்கிற நூல் என்று தெரியும்.

கேள்வி:       அண்ணா, பாரதிதாசன், திரு.வி.க., ம.பொ.சி. போன்றோர் தமிழ்ச் சிந்தனையை எப்படிப் பார்த்தனர் என்று கூறுகிற நூல் மட்டும் தானே. அதில் மார்க்சீயம் எங்கே இருக்கிறது?

பதில்:          தமிழ்க் கருத்தினுள் சமூகவிமரிசனம், தேசம் வேண்டுமென்ற தாகம், மக்களின் உணர்வுகள் புதிய கவிதைகளாக வரும்விதம் பாரதிதாசன் மூலம் பாண்டியன்பரிசு என்ற நூலின் கவித்துவ ஆதி உணர்வு சங்க இலக்கியத்திலிருந்து வேரைத் தேடுவது அதிலிருந்து அண்ணா திராவிட நாடு கேட்டது. அப்படியே பெரியார் தனிநாடு கேட்டது போன்ற தமிழ்மக்களின் உயிர் நடமாடிய தரவுகளை எடுத்து அதிலிருக்கும் narrative என்ன என நூல் ஆய்ந்து பார்க்கிறது.

கேள்வி:       இதில் எங்கே மார்க்சீயம் வந்தது? உங்கள் நூல் மார்க்சீய நூல் என்பது பொய்மையான False claim அல்லவா?

பதில்:          மார்க்சீய விளக்கம் என்பது வர்க்கம், புரட்சி, வர்க்கப்போர், சுரண்டல் என்று மீண்டும் மீண்டும் வார்த்தைகளைப் பயன் படுத்துவது என்று அர்த்தம் இல்லை. இந்த வார்த்தைகள் என் நூலில் இல்லை உண்மைதான். தமிழ் மக்கள் உயிர்கொடுத்து இந்தியை எதிர்த்தனர். தமிழ்க்கவிதைகளில் ஆயிரக்கணக்கான வரிகளில் தமிழை உயிர் என்றும் உடுக்கள் என்றும் இறுதி மூச்சு என்றும் எழுதினர். அதற்குள் ஒரு வரலாறு ஓடுகிறது. வரலாறு மயப்படுத்த ஒரு இனக்கூட்டம் ஒட்டுமொத்தமாய் தன்னைக் கட்டமைக்கிறது. தமிழ் அடையாள அரசியலில்லாமல் தமிழ. இனத்தைப் பார்க்கமுடியுமா? தி.மு.க., தி.க., அ.தி.மு.க. போன்றவை இன்று பயன்படத்தக்க கட்சிகள் அல்ல. ஆனால் இந்த வடிவங்களுக்குள்ளும் தமிழ் இனத்தின் குணங்கள் இருந்தன. இவை இனி அழிந்து போகலாம்; அழிந்துபோகவேண்டும். அதுதான் வரலாறு. அடுத்த கட்சிகள் வடிவமைப்புகள் வர வேண்டும். இந்த வரலாற்றுக்குள் வர்க்கம், வர்க்கப்போராட்டம், பண்பாட்டுப் போராட்டம் எல்லாம் இருக்கின்றன. வேறு வடிவத்தில், நடந்துள்ளன. அதனை என் நூல் ஆய்கிறது. எந்தெந்த வடிவத்தில் யார்யார் கவிதைகளில் உள்ளடக்கமாய், உருவமாய் தமிழ்ச்ச5கம் தன் அடையாளச் சமிக்ஞைகளை (codes) பதித்தன என பார்ப்பது என் நூல்.

கேள்வி:       இன்றைய அனைத்துலக மார்க்சீயத்தில் உங்கள் நூல் “திராவிடம், தமிழ்த்தேசம்….” என்பதன் தர்க்கம் இருக்கிறதா?

பதில்:          ஆமா இருக்கிறது.

கேள்வி:       கொஞ்சம் விரிவாக அதனைச் சொல்லமுடியுமா? ஏன் இதனைக் கேட்கிறேன் என்றால் என் நண்பர்கள், பலர் மார்க்சியர்கள் – இந்த நூல் மார்க்சீய பின்னணி கொண்டது அல்ல என்கின்றனர்.

பதில்:          மார்க்சீயச் சிந்தனை இன்று பல்கிப் பெருகியுள்ளது. ஆனால் இந்தியாவிலும் தமிழகத்திலும் மார்க்சீயம் வளரவில்லை. சமூகம் வளரும்போது எல்லாச் சிந்தனையும் வளரும். மார்க்சீயத்தை உலக அறிஞர்கள் பல்வேறு முறைகளில் வளர்த்தெடுக்கின்றனர். அவர்களில் என் நூலுக்கு ஏற்றமுறையில் சிந்தனைகளை வளர்த்தெடுத்து வருபவர் என்று அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த பேராசிரியர் பிரட்ரிக் ஜேம்சனைக் கூற வேண்டும். ஓரே ஒரு நூலை இங்குக் குறிப்பிடுகிறேன். The Political Unconscious: Narrative as a socially symbolic act என்ற நூல் 1981-இல் வந்தது. இவர் இந்த நூலில் இலக்கியப்பிரதியை மையப்பொருளாகப் பார்க்காமல் இலக்கியத்துக்கான வியாக்கியான சட்டகத்தைப் பார்த்து அதன்மூலம் இலக்கியப் படைப்பில் முக்கியமாய் கவனிக்கத்தக்கது அதன் நினைவிலி ஆகும் என்கிறார். மேலே தெரிவதைவிட உள்ளே தெரியாமல் இருப்பது முக்கியம் என்கிறார். உள்ளே தெரியாமல் இருப்பது வரலாறு. எனவே வரலாறு முக்கியம். அதாவது ஹெகல் வழிப்பட்ட மார்க்சீய மரபில் வருகிறவர் ஜேம்சன்.

கேள்வி:       மன்னிக்க வேண்டும் இடையில் புகுந்து உங்களை கேள்வி கேள்வி கேட்பதற்கு. நீங்கள் அமைப்பியல் எழுதியபோது அல்தூஸரை ஆதரித்தீர்கள். ஹெகல் வழியில் மார்க்சைப் பார்க்கக்கூடாது என்று கூறினீர்கள். அப்போது 30 ஆண்டுகளுக்கு முன்பு அந்த உங்கள் கருத்தைப் பலர் விவாதித்தனர். அதற்கு உங்கள் பதில்?

பதில்:          ஆமா உண்மைதான். இப்போது மார்க்சீயத்தை நம் தமிழ்ச் சூழலுக்கு ஏற்ப பன்முக மார்க்சீய வழியில் பார்க்க வேண்டும் என நினைக்கிறேன். அப்போதுதான் தமிழ்ச்சூழலுக்குத்தக்க மார்க்சீய விளக்கம் கிடைக்கும் என்று நினைக்கிறேன். நான் பேசிக்கொண்டு வந்த விஷயத்துக்கு வருவோம். அது முக்கியம். ஹெகல் வழியில் மார்க்சை புரிந்துகொள்ளும் கோட்பாட்டாளரான ஜேம்சன் வரலாற்று வாதத்தை ஏற்கிறார்.

கேள்வி:       அல்தூஸ்ஸர் வரலாற்றுவாதம் என்ற காலகதி சார்ந்த பாய்ச்சலை மார்க்சீயத்திலிருந்து அப்புறப்படுத்த விரும்பினார் அல்லவா? நீங்கள்…

பதில்:          ஆம் உண்மைதான். நான் வரலாற்றுவாதம் என்பது தவறு என்று அப்போது நினைத்தேன். அதைச் சுட்டிக்காட்ட வருகிறீர்கள் இல்லையா? என் பதில் இப்போது வயதும் கூடிவிட்டது. நிதானம் வந்துவிட்டது. ஏதாவது ஒரு பார்வைதான் சரி என்று அடம் பிடிக்கும் குணம் இல்லை. மேலம் என் அறிதல்தளம் தமிழ்ச்சமூகம் என்பதில் மிகத் தெளிவாக உள்ளேன். 2009-இல் ஈழத்தில் நடந்த ஜீனோசைட் கண்களைத் திறந்துவிட்டன. தமிழனாகப் பிறந்தவனுக்கு ஒரு தனிக்கடமை இருக்கிறது. அவன் மார்க்சீயத்தின் – அதுபோல் பின்னை மார்க்சீயத்தின் (Post marx

ism) போக்குகளைக்கூட பரிசீலித்துத் தமிழ்வழியில் மார்க்சீயத்தை வியாக்கியானப்படுத்த வேண்டும்; அதுதான் சரியான மார்க்சீயம்.

கேள்வி:       தமிழ் மார்க்சீயம் வேண்டுமென்கிறீர்களா?

பதில்:          ஞானி அப்படி ஒரு கருத்தை முன்வைக்கிறார். அது தமிழின் கோணத்தில் என்று அர்த்தம். எந்தத் தமிழ் என்று கேள்வி வரும். இயற்கை பாதுகாப்பு என்றெல்லாம் அவர் கூறுகிறார். அவர் வற்புறுத்தாத “முறையியல்” பற்றிய விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது என் பார்வை. சற்று மாறுபட்டது அதாவது எப்பிஸ்டமாலஜியே மாறவேண்டும் என்பது என் விருப்பம். அப்படியே விவாதித்து இறுதிக்கட்டத்துக்கும் வருகையில் அவருக்கும் நான் கூறுவதற்கும் வேறுபாடுகள் வரும்.

கேள்வி:       மீண்டும் உங்கள் நூலின் தர்க்கத்தின் அடிப்படையில் இருக்கும் மார்க்சீய விளக்கம் என்ற விஷயத்துக்கு வாருங்கள்.

பதில்:          நான் தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருவதுபோல பன்முக மார்க்சீய விளக்கங்களை முகம். கொடுப்பவனாய் பிரச்சனைகளை அணுகுவதால் முழுசாய் ஜேம்சனுடைய கூற்றையும் அப்படியே எடுக்கவும் விரும்பவில்லை. ஆனால் விளக்குவதற்கு ஒரு உதாரணமாய் ஜேம்சனின் அந்த நூலின் தர்க்கத்தை உதாரணம் காட்டுகிறேன். நான் என் நூலில் ஜேம்சனை எங்கும் உதாரணம் காட்டவில்லை என்று எண்ணம். “கற்பனை செய்யப்பட்ட சமூகங்கள்” என்ற நூலை எழுதிய பெனடிக்ட் ஆண்டர்சன் என்ற சிந்தனையாளரை என் “திராவிடம் தமிழ்த்தேசம்….” நூலின் பல கட்டுரைகளில் உதாரணம் காட்டுகிறேன். அதுபோல் பேரா. ஹோமிபாபாவின் Nation and Narration என்ற நூலையும் உதாரணம் காட்டியுள்ளேன். இப்படி Narration (கதையாடல்) சார்ந்த ஒரு உள்ளோட்டத்தை இணைத்து என் தர்க்கங்களையும் பார்வைகளையும் தமிழ்ச் சந்தர்ப்பத்தில் முன்வைத்ததே அந்த நூல். இது ஒரு கோணம். நான் வெகுவாய் மதிப்பவர்களில் ஒருவரான ஞானி என் இந்த நூலை  இந்த முறையில் எழுதமாட்டார். அவர் பாணி வேறு. இப்படியெல்லாம் சொல்ல எனக்கு விருப்பமில்லை. ஏன் இவற்றைச் சொல்கிறேன் என்றால் நம் தமிழ்ச்சூழலில் ஒரு “கோட்பாட்டு சினிசிசம்” வந்துள்ளது. விவாதங்கள் நடைபெறவில்லை. 80களில் தனிப்பட்ட தாக்குதல்களோடு சேர்ந்தாவது விவாதங்கள் நடந்தனவே. மீண்டும் அடுத்த தலைமுறையினர் மார்க்சீயத்தைக் கற்று விவாதிக்க வேண்டும். டி.வி.க்களில் பி.ஜே.பிகாரர்கள் எல்லாவற்றையும் விவாதிக்கத் தக்கவர்கள் என்று போலி பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள். 80களில் தமிழக மார்க்சீயர்கள் எவ்வளவு பெரிய சிந்தனைக் கிளர்ச்சியை ஏற்படுத்தினார்கள். அந்த மரபு மீண்டும் வந்தாலே பி.ஜே.பி.யும் ஆர்.எஸ்.எஸ்ஸும் தமிழகத்தில் ஒன்றுமில்லாமல் போகும். அவர்கள் சர்வதேச அறிவின் பங்குதாரர்களான மார்க்சீயர்கள் முன்பு நிற்கமுடியாது. அதனை 21-ஆம் முதல் பகுதியில் நாம் ஏற்படுத்த வேண்டும். அது ஏற்படுத்தாவிடில் தமிழர்கள் எதற்கும் லாயக்கில்லாதவர்கள் அவர்களை ஈழத்தில் கொல்லலாம் என்றுதான் எல்லோரும் நினைப்பார்கள்.

கேள்வி:       அதாவது உங்கள் இந்த நூல் தமிழ் மார்க்சீயமா? இல்லையா? நேரடியாகப் பதில் சொல்லுங்கள்.

பதில்:          சர்வதேச மார்க்சீய வளர்முகம் ஒன்று உள்ளது. என் நூல் தமிழையும் தமிழ் அறிதலியலையும் அடிப்படையாகக் கொண்ட சர்வதேச மார்க்சீய நவீன வியாக்கியான மரபைச் சார்ந்தது.

கேள்வி:       அது எப்படி என்று விளக்கமுடியுமா?

பதில்:          வரலாறு என்ற நினைவிலி (History as Unconscious) என்று கூறும் பிரட்ரிக் ஜேம்சன் முக்கியமான சிந்தனையாளர். நான் தமிழ் உணர்வு என்பதை தமிழ் பேசும் மக்களின் வரலாற்றின் அடையாளப் பொருளாய் பார்க்கிறேன். சங்ககாலத்தில் தமிழ் என்று வருகிறது. பக்திகாலத்தில் தமிழ் என்று பேசுகிறார்கள். பாரதிதாசன் மூலம் தமிழன், தமிழ் என்று பேச்சு நடைபெறுது. தமிழ் என்னும் ஒலி ஒரு வரலாறன்றி வேறென்ன? இந்த வரலாறு நினைவிலி வரலாறு. ஹெகலையும் அல்தூஸரையும் படித்து. பிராய்டையும் லக்கானையும் படித்து, ஜேம்சன் ஒரு நினைவிலியின் வரலாற்றை அறியும் முறையியலைக் கண்டுபிடித்தால் நான் தமிழ்க் கதையாடல் சக்தியைத் தரும் தமிழ் நினைவிலி மூலம் தமிழன் வரலாற்றைக் காணமுயல்கிறேன். இப்போது என் நூல் ஒரு அகில உலக மார்க்சீய சிந்தனை முறை மூலம்வந்த நூல் என இங்குள்ள கட்சி மார்க்சீயர்கள் ஒத்துக்கொள்வார்களா? 2009-இல் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் செத்த பிறகும் தமிழ் ஓர்மையை மையப்படுத்தும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தமிழகத்தில் தோன்றாததை என் என்று கூறுவது?

கேள்வி:       நீங்கள் பேசும்போது கோட்பாடு அழுகுணித்தனம் தமிழில் உள்ளது என்றீர்கள்.

பதில்:          சோவியத் யூனியன் விழுந்தவுடன் கட்சி மார்க்சீயர்கள் மார்க்சீயம் தவறானது என்று மார்க்சீயர்களின் எதிரிகள் எடுக்கும் நிலைபாட்டை எடுத்தார்கள். முன்னாள் மார்க்சீயர்கள் ‘அக்கடமிக்கு’ப் பார்வையில் சோழர்கள், நாட்டுப்புற வழிபாடுகள், சங்க இலக்கியத்தில் உவமைகள் என்று நூல்கள் வெளியிட்டனர். இவற்றை வெளியிட ஒரு பெரிய பதிப்பகம் உருவானது. இவர்கள் நடத்தும் இதழ்களில் மார்க்சீயத்தினர் உலக அளவில் நடத்தும் எந்த விவாதமும் அறிமுகமாகவில்லை. மார்க்சீயம் இனி பொருத்தமில்லாத சொல் என்று முடிவு எடுத்துவிட்டார்களோ என்னவோ?

கேள்வி:       அதனால் என்னசொல்ல ருகிறீர்கள்?

பதில்:          உலக அளவில் பின்னை முதலாளியம் வளர்ந்ததால் இந்தக் கோட்பாட்டுக்கு எதிரான மனோநிலை வளர்ந்தால் தமிழகத்தில் அனைத்திந்திய மாயைக்குள் கம்யூனிஸ்ட் கட்சிகள் விழுந்தன. பிரபாகரனை இவர்கள் தமிழர் வரலாற்றின் மகோன்னத தலைவன் என்று அறியவில்லை. இந்தியா பல மொழிப்பிராந்தியங்களின் கூட்டமைப்பு என்று கூறிய வைகோ போன்றவர்களின் கருத்தின் முக்கியத்துவத்தை அறியவில்லை. அதனால் இவர்களே பி.ஜே.பி. வளர்வதற்கான சூழலை உருவாக்கினார்கள். தமிழை  இவர்கள் நேசிக்கவில்லை. மார்க்சீயத்தினை தமிழில் வளர்த்துவதற்கு இந்த என் நூல் பற்றிய விவாதத்தினைத் தொடங்கட்டுமே. அதற்குரிய அறிவுவளம் இவர்களிடம் இருக்கிறதா என்று பார்ப்போம்.

கேள்வி:       ஏன் நம் கம்யூனிஸ்டுகளிடம் படிப்பு இல்லையா?

பதில்:          இல்லை என்று தான் கருதுகிறேன். உதாரணமாகத் தமிழ் இலக்கியத்தில் தமிழ்ப்பூர்வ பூமிக்கான ஏக்கம் இருப்பது தெரிகிறது. என்நூலில் பாரதியிடம் தமிழ்த்தேசச் சிந்தனை உள்ளது (கட்டுரை 8 – பக். 62-62) என்ற கட்டுரையைக் காணலாம். அதுபோல் “திராவிட அரசியல் தேசமும் தமிழ்ப்புனைகதைத் தேசமும்”, “தமிழ்த்தொல்மனமும் பாரதிதாசனும்” போன்ற கட்டுரைகள் நாம் பேசும் சிந்தனையைப் பேசுகின்றன.

கேள்வி:       இவற்றை வளர் மார்க்சீயத்துடன் பொருத்தி எப்படிப் படிப்பது?

பதில்:          என் நூலிலேயே பெனடிக்ட் ஆண்டர்சன் பற்றிய ராஜன் குறையின் விவாதத்துக்கு என் பதில் கட்டுரை உள்ளது. பெனடிக்ட் ஆண்டர்சன் தேச உருவாக்கக் கற்பனைக்கும் நாவல் போன்ற இலக்கிய வடிவத்துக்கும் உள்ள தொடர்பைச் சொல்வது நம்தமிழ் இலக்கிய வரலாறு வலியுறுத்தும் தமிழ்த்தேச உணர்வை நன்கு வெளிப்படுத்துகிறது. அதுபோல் பக்தின் என்ற அந்தக் கால சோவியத் மார்க்சீயர் மார்க்சீயத்துடன் மொழிகளின் தத்துவத்தை இணைத்து எழுதிய நூல் பிரபலமானது. தமிழ்மொழிக்குள் பொதிந்துள்ள 2000 ஆண்டுகளாய் வெளிப்படும் மனிதகுல உணர்வு – தமிழ்த்தேச வடிவாக்கம் – எல்லாம் எதைச் சொல்லுகின்றன? மார்க்சீயம் என்பது மனிதகுல வாழ்வு பற்றி ஆசை, கனவு, எதார்த்தம் பற்றியது தானே. தமிழுக்குள் மார்க்சீயம் இருக்கிறது. அதைக் கண்டுபிடிக்கும் வழிமுறை என் நூல் பற்றிய சர்ச்சையில் வெளிப்படும். மேலும, பக்தின் நாவல் சாம்ராஜ்ய வீழ்ச்சியுடன் எழுகிறது என்பார். ஜார்ஜ் லூக்காச்சும் தனது வரலாற்று நாவல் (அதாவது நவீன நாவல்) பற்றிய சிந்தனையின் அரசமைப்புகளின் கதைத் தொடர்ச்சியுடன் நாவல் இலக்கிய உருவமைப்பு ஏற்படுகிறதென்பார். இதுதான் தமிழர்களின் பண்டை சாம்ராஜ்யக் கனவின் அடிப்படை. ஈழத்தில் தனித் தமிழ்நாடு என்ற கருத்தை எதிர்த்த தமிழ் இடதுசாரி மூர்க்கர்கள் “ஆகா பிரபாகரனின் சாம்ராஜ்யக் கனவைப் பார்” எனக் கேலி பேசினர். தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் மார்க்சீயம் படிக்க வேண்டும். தமிழகத்தின் புதிய சக்திகள் எழ வேண்டும். அப்போது இன்றை ‘மார்க்சீயர்களால்லாத மார்க்சீயர்கள்’ செயல்பட ஆரம்பிப்பார்கள்.

கேள்வி:       இந்த மாதிரி விவாதம் மார்க்சீய வளர்போக்கில் நடக்குமென்று நம்புகிறீர்களா?

பதில்:          நடக்கும். டெர்ரி ஈ கிள்டன் புத்தகம் மொழிபெயர்க்கப்படும் என்று நினைத்தோமா? எர்னஸ்ட் பிஷர் புத்தகம் மொழிபெயர்க்கப்படும் என்று எதிர்பார்த்தோமா? மார்க்சீயத்தின் சக்தி லேசுப்பட்டதல்ல. தமிழ்மண்ணில் அதன் விதைகள் ஆழமாய் விதைக்கப்பட்டது. எனவே வளர் மார்க்சீயத்தையும் கவனிப்பார்கள் என்றுதான் கருதுகிறேன்.

கோட்பாடு:தமிழ் மார்க்சியம்

கோட்பாடு:

தமிழ் மார்க்சியம்

பேரா. தமிழவன், இந்தியா

 

தமிழில் பொதுவுடைமை இயக்கம் மார்க்சியத்தை ஒரு வழிகாட்டுத் தத்துவமாக ஏற்றது. இடையில் மாவோயிசம் என்ற தத்துவம் வழி பிரிந்தது.

 

இதுபோல் மார்க்சியம் எங்கல்ஸின் மூலம் இன்னும் அதிக விரிவுபெற்றது. லெனின் கருத்துக்கள் பின்னர் இந்தத் தத்துவத்தோடு சேர்ந்து கொண்டன. இவ்வாறு தொடர்ந்து மார்க்சியம் புதுப்புது நாடுகளுக்குப் பரவும்போதும் அந்தந்த மண்ணுக்கும் மரபுக்கும் சூழலுக்கும் தக்கவிதமாய் விளக்கங்கள் தோன்றின. சிலர் வன்முறையம் ஒரு பாதைதான் என ஏற்றனர். வேறு சிலர் ஏற்கவில்லை.

 

மார்க்சியக் கருத்துக்கள் தமிழகத்திலும் இலங்கையில் ஈழத்தமிழர்கள் மத்தியிலும் பரவியபோது தமிழின் மரபுக்குள் வைத்துப் பல நூற்றாண்டுகள் வாசிக்கப்பட்ட இலக்கியங்கள் புதுவிளக்கங்கள் கண்டன. மார்க்சியம் என்று பிரிட்டிஷ் கம்யுனிஸ்டுகள் அவர்கள் தத்துவ – இலக்கியப் பாரம்பரியத்தை முன் வைத்துக் கண்ட விளக்கத்தை இந்தியாவிலும் பரப்பினார்கள். அதில் பொருளா தாரம் முக்கியமான அழுத்தம் பெற்றிருந்தது. அதனால் பொருளாதாரத் திட்டத்தைக் கம்யுனிஸ்ட் கட்சிகள் முக்கியமாக்கின. கட்சியில் தொழிலாளர் அமைப்புக்கள் முக்கியம் ஆயின. தொழிலாளர்கள் இருந்த பெருநகரங்களளில் கட்சி பரவியது. அதுபோல் இந்தியா போன்ற நாடுகளில் கிராமங்களும் விவசாயமும் தான் முக்கிய மான பொருளாதார மையங்கள் என்ற பார்வை தோன்றியவுடன் கம்யுனிஸ்டு கட்சி விவசாயத்தையும் விவசாயத் தொழிலாளர்களையும் மையமாகக் கொண்டு செயல்பட்டது.

 

இந்தியா போன்ற நாடுகள் வெறும் பொருளாதார சிந்தனாமுறையால் புரிந்துகொள்ள முடியாத நாடுகளாகும். தென்கிழக்காசியாவின் பூமிப்பரப்பில் மதங்கள், சாதிகள், இலக்கியங்கள், மற்றும் பண்பாட்டுக் கூறுகள், சரித்திரங்கள், பழக்கவழக்கங்கள் ஆண் பெண் வேறுபாடுகள் போன்றவை உள்ளன. இவற்றையெல்லாம் பொருளாதாரம் என்ற பார்வையால் விளக்கமுடியும் என்ற ஆரம்பகால மார்க்சிய விளக்கம் உலகம் முழுவதும் மெதுமெதுவாக மாறியது. மார்க்சியத்தைக் கற்ற கட்சித் தலைவர்களும் பல்கலைக்கழகப் போசிரியர்களும் தத்துவவாதிகளும் புதுப்புது முறைகளில் மார்க்சியத்தை விளக்க ஆரம்பித்தனர். சோவியத் யூனியன் சிதறாதிருந்தபோது அந்நாட்டின் தத்துவ விளக்கங்களும் சீனாவின் மாவோவின் தத்துவ விளக்கங்களும் அகில உலக அரங்கை ஆக்கிரமித்திருந்தன. சில நாடுகளில் இந்த இரு அணிகளின் சார்பில் கம்யுனிஸ்ட் கட்சிகள் பிரிந்து தம் விளக்கங்களைத் தத்தம் செயல்பாடுகளுக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டன. இந்தியாவிலும் அந்நிலை ஏற்பட்டது.

 

சோவியத் ரஷ்யாவிலும் லெனின் அவருக்கடுத்து வந்த ஸ்டாலின் ஆகியோரின் மார்க்சிய விளக்கங்களுக்குள் மாறுபாடுகள் இருந்தன. அதற்கேற்றாற் போல் அவர்கள் தத்தம் ஆட்சிகளை அமைத்தனர். அகில உலக உறவுகளை அமைவுப்படுத்தினர். ஸ்டாலின் செய்த நடவடிக்கைகளள் தவறு என்று பின்னால் வந்த பிரிஷ்னோவ் போன்றவர்கள் கருதினர். இந்தக் காலகட்டத்தில் அகில உலகமெங்கும் மார்க்சியம் பற்றிய விளக்கங்கள் மாறுபட்டன.

 

ஜெர்மனிநாட்டு பிராங்க்பர்ட் நகரின் பல்கலைக்கழகத்தில் இருந்த சிந்தனை யாளர்களும் தத்துவவாதிகளும் ஒரு குழுவை ஏற்படுத்தி மார்க்சீய ஆய்வுகளைப் புதுமுறையில் செய்தனர். ஏற்கனவே ஸ்டாலின் காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட சிந்தனைகள் அகில உலகம் முழுதும் சர்ச்சையை எழுப்பியிருந்த காலகட்டத்தில் இலக்கியம் பற்றியும் மார்க்சியத்தின் மையக்கருத்து என்ன என்பதிலும் இவர்கள் மாறுபட்டனர். அடார்னோ, ஹார்க்மேயர், ஹெர்பர்ட் மார்க்யுஸ் போன்ற முக்கிய மான சிந்தனையாள்கள் ஹிட்லர் ஜெர்மனியைக் கைப்பற்றி கம்யுனிஸ்டுகளை வதம் செய்ய ஆரம்பித்தபோது அமெரிக்காவுக்குத் தப்பியோடி பல்கலைக்கழகங் களிலும் ஆய்வு நிறுவனங்களிலும் தஞ்சம் புகுந்தனர். தப்ப முடியாமல் தற்கொலை செய்துகொண்ட வால்டர் பெஞ்சமினையும் நாம் மறக்கக்கூடாது.

 

நம் தமிழக மற்றும் இந்தியச்சூழலை வைத்துப் பார்க்கும்போது காலனியக் காலகட்டத்தில் பிரிட்டிஷார் பிரிட்டனில் பரப்பிய மார்க்சியத்தை அங்குப் படிக்கப்போன இந்தியர்கள் கற்று அதன்படி பெருந்தியாகங்கள் செய்து இந்தியாவில் பரப்பினர். இவர்கள் பிற்காலத்தில் வேறு விளக்கங்கள் மார்க்சியத்தில் ஏற்படப்போகின்றன என்பதை அறியாத தலைமுறையைச் சார்ந்தவர்களாவர். மேற்கு வங்காளத்தில் ஜோதிபாசு தமிழகத்தில் மணலி கந்தசாமி, போன்ற மதிப்புக்குரிய பலர் இந்தக் குழுவைச் சார்ந்தவர்களாவர். இவர்கள் மார்க்சியத்தைப் புத்தகமாகவும் அறிவாகவும் அதேநேரத்தில் தாங்கள் ஈடுபட்டிருந்த தொழிலாளி விவசாயி போராட்ட ஆயுதமாகவும் கண்டனர்.

 

பிராங்க்பர்ட் மார்க்சீயவாதிகள் இலக்கியத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். ஜெர்மனியில் பிறந்து அகில உலகப் புகழ்பெற்ற பெர்தோல்ட் பிரக்ட் என்ற நாடகாசிரியரும் கவிஞரும் விமர்சகருமான சிந்தனையாளர் வால்டர் பெஞ்சமினால் மிக அதிகம் புகழப்படுகிறார். ரஷ்யா மூலம் கார்க்கி போன்றவர்கள் தமிழுக்கு வந்தார்களேயன்றி பிரக்டைத் தமிழுக்கு 80களுக்குப் பிறகு கொண்டு வந்தவர்கள் கம்யுனிஸ்டுகள் அல்லர்; கலாச்சாரவாதிகளாவர். ஸ்டாலின் கால எதார்த்தவாதம் /  சோசலிச எதார்த்தவாதம் போன்றவைகள் ஜார்ஜ் லூக்காக்ஸின் சிந்தனைகளாகும். மார்க்சிய இலக்கிய விமரிசனத்தில் எதார்த்தவாதம் என்ற ஒரு மிகவும் குறுகலான உத்திமுறை எழுத்தை உலகப்புகழ்பெற வைத்ததற்கு ஜார்ஜ் லூக்காக்ஸ் என்ற படிப்பாளியும் அரசியல்வாதியுமான தத்துவவாதியே காரணம் என்பர் பலர். இவருடைய எழுத்துக்கு எதிராகப் புறப்பட்டவர் நாடக ஆசிரியரும் கவிஞருமான பெர்தோல்ட் பிரக்ட். பிரக்ட் எதார்த்தவாதத்திற்கு எதிராகப் போர்க் கொடி தூக்கினார். அப்போதிருந்த கம்யுனிஸ்டு நாடான கிழக்கு ஜெர்மனி பிரக்டைக் கொண்டாடியது. சோவியத் ரஷ்யாவிலிருந்து எதார்த்தவாதக் கோட்பாடும் கிழக்கு ஜெர்மனியிலிருந்து பிரக்ட் முன்வைத்த ஒரு நூதன இலக்கியக் கோட்பாடும் உலகமெங்கும் பரவின.

 

எழுபதுகளில் தமிழகத்தில் இலக்கியக் குழுக்கள் ‘தாமரை’ இதழின் தலைமையில் சோவியத் ரஷ்யாவை ஆதரித்தும் ‘செம்மலர்’ தலைமையில் சீனாவை ஆதரித்தும் செயல்பட்டனர். இளைஞர்களைக் கட்சி மாநாடு, எழுத்தாளர் முகாம் என்றெல்லாம் இவ்விரு அணியினர் வழிநடத்தினர். அப்போது மிகப்பெரிய தமிழ் இலக்கிய உலக நெருக்கடியாகப் புதுக்கவிதை விவாதம் நடந்தது. இந்த இரு அணியினரும் புதுக்கவிதையை அன்று ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

 

இதற்கு முன்பே 1935-வாக்கில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட முனைவர் பி.கே.கிருஷ்ணா மேல்நாட்டுப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து திரும்புகிறார். அவர் திராவிட இலக்கியக் கோட்பாடு ஒன்றை சிலப்பதிகாரம், மணிமேகலை, திருக்குறள், கபிலர்அகவல் போன்றன மூலம் உருவாக்குகிறார். இது தமிழர்களிடம் தொடரவில்லை. இவர் வேலூர் சிறையில் தமிழ்க் கம்யுனிஸ்ட் இளைஞர்களுக்கு வகுப்பும் எடுக்கிறார்.(கிருஷ்ணா எழுதிய நூல்.பிசுரம்:திராவிடப்பல்கலை.குப்பம்)

 

பிராங்க்பர்ட் மார்க்சிய விளக்கம், பிரக்டின் நூதனமான இலக்கிய எழுத்து முறை, இவை ஏதும் அறுபதுகள் எழுபதுகளில் தமிழர்களுக்கு அறிமுகமாகவில்லை. புதுக்கவிதையை என் குருநாதர்போல் அன்று விளங்கிய பேராசிரியர் வானமா மலை அதில் இணைவிழைச்சு இருக்கிறது; அது பிராய்டியம்; ஏற்கமுடியாதென எழுதினார் என்பது இன்றும் அவர் நூல்களின் மூலம் தெரிகிறது. ஆனால் பிராங்க்பர்ட் குழுவினரோ ஃபிராய்டை மார்க்சியவாதிகள் ஏற்கவேண்டும் என்று வாதாடினார்கள். பின்னர் அமைப்பியல் மார்க்சியவாதி அல்துஸ்ஸர் ஃபிராய்டை ஆதரிக்கிறார். அதாவது பண்பாட்டையும் உளவியலையும் மெதுமெதுவாக ஆதரிக்கும் நிலைபாடு தமிழகத்தில் ஏற்படுகிறது.

 

இந்தியாவில் பரவிய புதிய மார்க்சிய விளக்கங்கள் மாவோயிஸ்ட் சிந்தனைக் கவர்ச்சிக்கு ஆட்பட்ட படிப்பாளிகள், எழுத்தாளர்கள், விமர்சகர்கள், மத்தியில் தமிழகத்தில் ஏற்படுகிறது. கட்சிக்களுக்குள் இருந்த கட்டுப்பாட்டாலும் இறுக்கத்தாலும் அங்கு இச்சிந்தனைப் புதுமைகள் ஏற்படவில்லை.

 

ப்ராங்பர்ட் குழுவினால் கலாச்சாரம். மார்க்சியத்தில் முக்கியமானதாயிற்று. அதனால் கிராம்ஸ்கி போன்ற இத்தாலிய மார்க்ஸிஸ்டின் கலாச்சார மேலாண்மை என்ற கருத்து முக்கியமாயிற்று.

 

இந்தக் காலகட்டத்தில் தான் அல்துஸ்ஸரின் கருத்துக்கள் 1982-இல் தமிழில் வெளியான “ஸ்ட்ரக்சுரலிசம்” நூலில் முதன்முதலில் முன்வைக்கப்படுகின்றன. இந்நூல் வெளிவரும்வரை இப்பெயர் தமிழகத்தில் யாருக்கும் தெரியவில்லை. ஆனால். மலையாள சிந்தனை உலகில் 1982-க்கு முன்பே அல்துஸ்ஸர் பெயர் விவாதிக்கப்பட்டது. இது தமிழகப் படிப்பு உலகம், சிந்தனை உலகம் எத்தகைய எல்லைகளுக்குட்பட்டதாய் செயல்பட்டுக் கொண்டிருந்தது என்பதைக் காட்டும். திராவிட சிந்தனை ஒரு பழமைச் சிக்கலில் தமிழகத்தை மாட்டிவிட்டிருந்த காலம். 1967-இல் தி.மு.க. ஆட்சிக்கு வருகிறது.

1971-இல் பேராசிரியர் நா.வானமாமலை தொடங்கிய ஆராய்ச்சி என்ற பத்திரிக்கை 20-ஆம் நூற்றாண்டில் ஒரு வரலாற்று மைல்கல்லாகும். அக்காலத்தில் தமிழில் மார்க்சிய இலக்கிய விமரிசனத்தை எவ்வாறு உருவாக்குவது என்று முயற்சிகள் நடந்துகொண்டிருந்தன. இச்சூழலில் ஏற்பட்ட முதல்முயற்சி கைலாச பதியின் “தமிழ்நாவல் இலக்கியம்” என்ற நூலாகும். அதனைத் தொட்டடுத்துச் சிவத்தம்பியின் “தமிழ்ச்சிறுகதை இலக்கியம்” என்ற நூல் வெளிவந்தது. இந்த இரண்டு நூல்களும் தவிர வேறு நூல்கள் தமிழ்வாசகனுக்கு மார்க்சிய இலக்கிய விமரிசனத்தை அறிந்துகொள்ள அன்று இல்லை. அதுதான் உண்மை.

 

தமிழ்ச் சிந்தனைகளைப் பொறுத்தவரையில் பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து இயங்கி வந்த ஈழத்தமிழ்ச் சிந்தனையும் தமிழகச் சிந்தனையும் ஏற்படுத்திய ஒருமை இலங்கை சுதந்திரம் பெற்ற பிறகு ஒரு மந்த நிலையை எட்டுகின்றது. ஈழத் தமிழர்கள் ஒரு தனி அடையாளத்தை அடைய வேண்டுமென்ற குரல் கேட்க ஆரம்பிக்கிறது. கே.என்.பணிக்கர் போன்ற அரசியல் நிபுணர்கள் கூறிய இலங்கையையும் இந்தியாவின் ஒரு மாநிலமாக்கலாம் என்ற யோசனையை முன்னெடுத்துச் செல்ல யாருமில்லை. இந்தியா தனியாகவும் இலங்கை தனியாக வும் சுதந்திரம் பெறுகின்றன. காந்தியவாதிகளான இலங்கைத் தமிழர்களே தனி இலங்கைக்கு உழைக்கின்றனர். பின்பு தமிழர்கள் ஒதுக்கப்பட்டு சிங்கள இலங்கை உருவாகிறது.

 

மார்க்சியம் கணித சூத்திரமல்ல. எல்லாச் சூழலுக்கும் எந்த மாற்றமுமின்றி பொருந்தும் எந்திரமல்ல மார்கசியம். மார்க்சியம் மனித சமுதாயத்தின் மூளை யோடும் உணர்வோடும் கனவோடும் இணைந்து வாழ்க்கையை உருவாக்கவும் வாழ்வால் உருப்பெறவும் தயாராக இருக்கும் தத்துவமாகும்.

 

அது இன்றுவரை உலகில் உருவான எல்லா விளக்கங்களையும் உள்ளேற்றுத் தமிழ்ச்சூழலில் நமக்கு வழிகாட்டமுடியுமா? இதுதான் இன்றுள்ள கேள்வி. மார்க்சியத்துக்காக நாமல்ல; நமக்காகத்தான் மார்க்சியம்.

 

எனவே, இன்று உலகில் அனாதரவாக விடப்பட்ட இந்த இனம் – ஈழத்தில் தமிழர்களை இந்திய அரசின் துணையுடன் போர் என்ற அழித்தொழித்திருக்கும் சூழலில் – மார்க்சியம் இதுவரை பெற்ற விளக்கங்களால் நமக்குப் பயன்படக்கூடிய வடிவத்தை எடுத்திருக்கிறதா என்பதுதான் நமது கேள்வி. ஒரு கூட்டம் ஆட்களைக் கட்சி என்ற பெயரிலோ, தொழிலாளர் ஒற்றுமை என்ற பெயரிலோ அல்லது வேறு எந்தப் பெயரிலோ ஏமாற்றும் கும்பலுக்கு மார்க்சியம் துணைபோகாது.

 

இந்தப் பின்னணியில் பார்க்கும்போது தான் மார்க்சியம் வளமான தத்துவம் – வளர்ந்துகொண்டே இருக்கும் தத்துவம் – புதுப்பிரச்சனைகளுக்கு வளைந்து கொடுக்கும் முரண்பாடு, மார்க்சியத்தை அப்படியே மதக்கருத்துப்போல் விளக்கு பவர்களுக்கும் மார்க்சியத்தைச் சூழலுக்குத்தக, பிரச்சனைக்குத்தக, வளர்த்துப் புரிந்துகொள்ளக்கூடியவர்களுக்கும் மத்தியில் உள்ள முரண்பாடுதான்.

 

இன்று தமிழர்களுக்கு ஒருநாடு தரும் பாதுகாப்பில்லை. முக்கியமாய் 2009-ற்குப் பிறகு, இந்தச் சிக்கல் பூதாகரமாகியுள்ளது. நாளைய இந்திய அரசு தமிழ்மொழியை மறைமுகமாக அழித்தால் தமிழர்கள் என்ன செய்துவிடமுடியும்? தமிழிலக்கியங்களைப் படிக்காதீர், இந்தி இலக்கியங்களை மட்டுமே படியுங்கள் என்று சொன்னால் தமிழர்களுக்குத் தடுக்க முடியுமா? தமிழர்களின் தமிழகத் தலைமை வேறு ஆட்களுக்குப் போய்விட்டது. யாரும் தமிழின் பெயரால் தமிழகத்தின் தலைமைக்கு வரமுடியாது. மெதுமெதுவாக அப்படி ஒரு சூழல் உருவாகிக் கொண்டு வருகிறது.

 

இப்போது நாம் மார்க்சியக் கருத்தான மேற்கட்டுமானம் மற்றும் அடித்தளம் (Super structure and basic structure) என்ற சிந்தனைக்கு வரவேண்டும். அடித்தளம் பொருளாதாரம் என்றும் மேற்கட்டுமானம் மதம், கல்வி, சட்டம், ஆட்சி, கருத்துக்கள், சாதிகள், வரலாற்று உணர்வுகள், உளவியல்கள் என்றும் விளக்கப் பட்டன. பொருளாதாரம் சரியானால் மேற்கட்டுமானம் சரியாகிவிடும் என்று விளக்கப்பட்டது. இதற்கு மார்க்சியம் என்று பெயர் என தவறான விளக்கம் கொடுக்கப்பட்டது.

 

இது இப்படி அல்ல என்று கிராம்ஸ்கியும் அவரையொட்டி தனியொரு கோட்பாட்டைப் பிரமாதமாகச் செய்து புகழடைந்த அல்துஸ்ஸரும் கூறினர். கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் உண்டு என்றார் கிராம்ஸ்கி. அதனைக் கருத்துருவம் என்று ஒரு புதுச்சொல்லைப் பயன்படுத்தி அழைத்தார் அஸ்துஸ்ஸர். அதாவது கருத்துக்குப் பொருள்தன்மை உண்டு. அதனால் உருவம் உண்டு என்பது அல்துஸ்ஸர் சிந்தனை. மவோவும் இக்கருத்தை ஆதரிக்கிறவர் என்பது அல்துஸ்ஸர் கருத்து.

 

இந்தக் கருத்தை மறக்காமல் வர்க்கம் என்றால் என்ன என்ற கருத்துக்கு வருவோம். வர்க்கம் முதலில் மார்க்சியக் கருத்தல்ல; ஏனெனில் மார்க்சுக்கு முன்பே இருந்த கருத்து இது என்பார் மார்க்ஸ். அதனை எடுத்துக்கொண்ட மார்க்ஸ் தன் சிந்தனைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டார். வர்க்கம் என்பது உற்பத்தி உறவு, சக மனிதக் கூட்டையும் பொருளாதார உறவையும் இணைக்கும் கண்ணி. எந்திரங்களை வர்க்கம் என்பதில்லை. எனவே மனிதர்கள் வர்க்கமாகும் போது மனித உணர்வு, ஆண் பெண் உறவு, வரலாற்றுணர்வு, தமிழின உணர்வு, குடும்ப உறவு, இடம் காலம் சார்ந்த, சாதி சார்ந்த மதம் சார்ந்தவர்கள் ஆகிறார்கள். வர்க்க உணர்வு என்பது பொருள் உறவு மட்டுமல்ல. மொத்த மனிதகுல உறவு அது. எனவே தமிழின உணர்வு இங்கு வருகிறது. அதாவது இங்கே ஒரு குறுக்கல் பார்வையைத் தவிர்க்க வேண்டும். அதுபோல் தமிழ் வெறிப்பார்வையையும் ஒதுக்க வேண்டும். எந்த மொழிஇனமும் அடிமைப்படுத்தப்படும்போது அதனைப் பாதுகாக்கும் கோட்பாடாய் மார்க்சியத்தை நாம் வளர்த்தெடுக்க முடியும். இந்திய மலைப்பகுதிகளில் வாழும் ஆதிவாசிகள், தலித்துகள், பெண்கள், இலங்கையில் இன்று வாழும் தமிழர்கள் என்று பார்வை வரவேண்டும். இதுதான் மார்க்சியம்.

 

இந்த இடத்தில் சிலர் அடையாள அரசியலையும் வர்க்க அரசியலையும் இங்குக் குழப்புகிறேன் என்று வர்க்கம் என்ற சொல்லைப் பொருளாதாரமாய் சுருக்குவார்கள். அது தவறு என்பதே இன்றைய வளர்ச்சி அடைந்த மார்க்சியப் பார்வை. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் எந்திரத்தனமான விளக்கமும் சாத்தியமில்லை. கம்யுட்டரில் பணியாற்றுபவனை ‘மூலதனத்தில்’ வேலை செய்யும் தொழிலாளியாகப் பார்க்க முடியாது. பொருளாதாரவாதமாக  மார்க்சியத்தைக் குறுக்கியவர்களின் வாதமே அடையாள அரசியல் வேறு, வர்க்க அரசியல் வேறு என்பது. இந்த மாதிரியான வளர்ந்த மார்க்சியத்தைக் கிராம்ஸ்சி போன்றவர்கள் கற்பித்தார்கள். கிராம்ஸ்கி பற்றிய ஒரு அறிமுக நூலில் ஜேம்ஸ் ஜோல் (James Joll) என்பவர் இப்படிக் கூறுகிறார்.

 

“மார்க்ஸையும் எங்கல்ஸையும் யார் உண்மையில் வளர்த்தெடுத்தார்கள்?” என்று கேட்ட இன்றைய பிரஞ்சு நாட்டு மார்க்சிஸ்டான லூயி அல்துஸ்ஸர் அக்கேள்விக்கு இப்படி பதில் தருகிறார்: “கிராம்ஸ்சி மட்டுமே”.

 

இப்படிக் கூறும் ஜேம்ஸ் ஜோல் கிராம்ஸ்சியின் மேலாண்மை (ஹெஜிமனி) என்ற கருத்தாக்கம் பற்றி எழுதுகிறார்: புத்தி பரமானதும் பண்பாட்டுச் செல்வாக்குக் கொண்டதுமான கருத்தையே கிராம்சி ஆதரித்தாரேயன்றி வெறும் பொருளளாதாரத்தை அவர் கூறவில்லை (emphasis on intellectual and cultural influences rather than on purely economic ones enabled Gramssci to develop his doctrine of ‘hegemony’.) என்கிறார்.

 

அதாவது மார்க்ஸுக்கும் எங்கல்ஸுக்கும் அடுத்தபடி மார்க்சியத்தை வளர்த்தெடுத்தவர் என்று கருதப்படுகிற கிராம்ஸ்சி பொருளாதாரமே மார்க்சியம் என்பதை மறுக்கிறார். தமிழகத்தில் 1925 – வாக்கிலேயே மார்க்சியம் பரவும்போது எதிர்கொண்ட ஒரே ஒரு பிரச்சனை தமிழ்மொழியை எப்படிப் பார்ப்பது என்பது தான். தமிழ்மக்கள் பட்டினிக் கிடப்பார்கள். அவர்களுக்கு முக்கியமான பிரச்சனை மானம். பல மொழிகளில் இச்சொல்லுக்குச் சமமான சொற்கள் இல்லை. அதாவது தமிழகத்துக்கு அறிமுகமாகும் மார்க்சியம் சோற்றைப் பற்றிப் பேசுவதை விட தமிழைப் பற்றிப் பேசவேண்டும்.

 

பிரிட்டன் வழி கப்பலில் வந்திறங்கிய மார்க்சிய விளக்கம் தமிழகத்திலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் பொருளாதாரமாகப் பரவியதோடு இந்தியா என்ற தேசத்தையும் அதன் சட்டதிட்டத்தையும் பிரிட்டிஷ் காலனிப் பார்வையாக மாற்றியது. நமது கல்வி, சட்டசபை, தேர்தல், ஆட்சிமுறை, தேசக்கற்பனை, மதச் சிந்தனை எல்லாம் காலனியச் சிந்தனைகளாகவே அமைந்தன. ‘ஜாடிக்கு ஏத்த மூடி’ என்பதுபோல் இந்தியப் புரட்சிபற்றிய எண்ணம் கூட பிரிட்டிஷ் மனங்களின் மூலம் உருவாயிற்று.

 

இங்குக் கவனிக்கூடிய முக்கியமான ஒரு விசயம், இந்தியா என்ற தேசச் சிந்தனை ஒற்றை மையமிட்டதாய் அமைந்ததாகும். இந்த ஒற்றை மையமாய் இந்தி மற்றும் டெல்லி அமைந்தது. இதுவொரு காலனியச் சிந்தனையாகும். எனவே, தமிழ் போன்ற பழமையான மொழியும் ஈழத்தமிழர் பிரச்சனையும் இனி எதிர்காலத்திலும் தீர்க்கமுடியாப் பிரச்சனையாக மாறப்போகின்றன. எனவே, தமிழகம் இந்திய “பெடரிலிசத்தை” எதிர்காலத்தில் வற்புறுத்தும் நிலைமைகளை ஏற்படுத்தும். இதற்கான தீர்வு பிரிட்டிஷ் மார்க்சியத்தைத் தமிழ் மார்க்சியமாக மறுவடிவமைப்பது ஆகும். அதாவது மார்க்சியத்தை நாம் காலனிய எண்ணத்திலிருந்து விடுவிக்க வேண்டும். அதுபோல் தேசக்கற்பனையையும் நாம் காலனிய எண்ணத்திலிருந்து விடுவிக்க வேண்டும். ஒற்றை மைய இந்தியா என்பது காலனியக் கட்டமைப்பாகும். மார்க்சியம் மையமழிப்புச் செய்யப்பட்டதாக மாறவேண்டும். பன்முக மையங்களை அது ஏற்க வேண்டும். மைக்கேல் பக்தின் (Mikhail Bakthin) போன்ற சிந்தனை யாளர்களால் பன்முக மார்க்சியம் பற்றி ஏற்கனவே சிந்திக்கப்பட்டுள்ளது. இது பற்றித் தமிழில் கடந்த பல ஆண்டுகளாய் ஆய்வுகள் நடந்து வருகின்றன. தொல்காப்பியக்கூற்றுக் கோட்பாடு ஒரு தமிழ்த்திறனாய்வு முறையாய் சமீப காலங்களில் விளக்கப்பட்டு வருகிறது. அதாவது தமிழ்த்திறனாய்வைக் காலனியத் தாக்கத்திலிருந்து விடுபடவைத்தல் முக்கியமானதாகும். அண்ணா உருவாக்கிய தமிழரசியலை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும். அது முதன்முதலாக இந்திய மண்ணில் மேற்கொள்ளப்பட்ட சுயத்துவ அரசியல் நடவடிக்கை ஆகும். அது அண்ணாவுக்குப் பிறகு மாநில சுயாட்சி வழி அடுத்தக்கட்டத்துக்குப் போவதற்குப் பதில் பெரும் தோல்வியில் கடந்த பல ஆண்டுகளாய் துவண்டு போயுள்ளது.

 

மார்க்சியத்தில் இலக்கியத்திற்கு என்ன இடம் என்ற கேள்வியில் தொடர்ந்து சர்ச்சைகள் நடந்தன. பிராங்பர்ட் மார்க்சியம், ஐரோப்பிய மார்க்சியம், அமைப்பியல் மார்க்சியம் என்ற எல்லாப் பிரிவிலும் இலக்கியம் பற்றிய சர்ச்சையே முன்னணி வகுத்தது. இது மார்க்சிய சர்ச்சை கடந்து வந்த வரலாறு.

 

அதுபோல் தமிழகத்தில் மார்க்சின் கருத்துக்கள் பரவிய காலத்திலிருந்து அதனை எவ்வாறு தமிழர்கள் தங்கள் வாழ்வோடும் சிந்தனையோடும் பொருத்திக் கொள்ள வேண்டும் என்ற சர்ச்சை நடந்தது. திரு.வி.க., சிங்காரவேலர், போன்றோர் அன்றே இரண்டு முன்மாதிரிகளை முன்வைத்தனர். சிங்காரவேலர் ஆங்கில, பிரிட்டிஷ் புரிதல் மாதிரியையும் திரு.வி.க. தமிழ்முறைப்படி புரிந்துகொள்ள வேண்டும் என்றும் வழிகாட்டினார். ம.பொ.சி., பெரியார், ஜீவானந்தம் ஆகியோர் தங்கள் தங்கள் சிந்தனைகளையும் முன்வைத்தனர். இவ்வாறு தமிழ் இலக்கிய விமர்சன மாதிரிகள் பல விதமாய் முன்வைக்கப்பட்டன. மேற்கைப் போலவே தமிழகத்திலம் இலக்கியம் வழிப்பட்ட மார்க்சியம் வந்துள்ளது.

 

மொத்தமாய் தமிழ் முதன்மைப்பார்வை என்றும், பொருளாதார பார்வை என்றும் இதனைப் பொதுப்பெயர் கொடுத்து இரண்டாய் பிரிக்கலாம். யார் யார் எந்தப் பக்கம் என்று தெளிவாய் விளங்குகிறது. பெரியார், 1936-லிருந்து இந்தியை எதிர்த்து வந்ததும் கம்யுனிஸ்டுகள் இயக்கம் இதற்கு எதிரான நிலைபாட்டை எடுத்து வந்ததையும் அறியும்போது இந்திய அரசியலமைப்பை (இந்தி) மையமிட்ட ஒரு பார்வையும் தமிழ்ப் போன்ற வட்டாரங்களை – அவ்வற்றின் முக்கியத்துவத்தை மையமிட்ட பார்வையும் தமிழகத்தில் தொடர்ந்து சர்ச்சையில் இருந்ததைக் காண்கிறோம். தமிழ் மையமிட்ட பார்வையில் ம.பொ.சி., போன்றோர் கூறிய தமிழரசு என்ற கருத்தாக்கமும் அண்ணா முன்வைத்த மாநில சுயாட்சியும் மேலும் வளளர்த்தப்பட வேண்டியவைகளாய் உள்ளன.

 

ஈழத்தமிழ் பிரச்சனையில் இந்திய மைய அரசு நடந்து கொண்டுவரும் முறையைப் பார்க்கும்போது எதிர்காலத்தில் அமையப்போகும் இந்திய அரசு பிராந்தியங்களுக்கு ஏற்ற வெளிநாட்டுக் கொள்கையை உருவாக்கும் முறையில் அமையும்படி சட்டத்திருத்தங்கள் வரலாம். ஈழத்தமிழர் பற்றிய இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையைத் தமிழகமே முடிவு எடுக்கும்படி ஃபெடரலிசம் அடிப்படையில் ஒரு புதுவித இந்தியா உருவாகலாம். மார்க்சியம் இதற்கு வழிகாட்டும். புது இந்தியா உருவாகும். (கோவை வாணன் நடத்திய ஒரு கருத்தரங்கில் ஊட்டியில் வாசித்த கட்டுரை)

தமிழவன் படைப்புக் கலை

சிற்றேடு இதழில் பிரசுரம்மானது

தமிழவன் படைப்புக் கலை

கி. நாச்சிமுத்து

2000 – இல் நாகர்கோயிலில் நடைபெற்ற இலக்கியத் திருவிழா சிறப்பு மலரில் பேராசிரியர் கி. நாச்சிமுத்து எழுதிய கட்டுரை. நாச்சிமுத்து எப்போதும் தற்கால இலக்கியத்தில் ஈடுபாட்டுடன் உள்ளார் என்பதைக் காட்டும் கட்டுரை. மலரிலிருந்து எடுத்து   அனுப்பிய முருகனுக்கு நன்றி

முதன்முதலாகக் கல்வியறிவு பெறும் வாய்ப்பைப் பெற்ற சமூகங்களின் முதல் தலைமுறையிலிருந்து பல எழுத்தாளர்கள் தோன்றியிருப்பதும் அதன்வழி தமிழ் எழுத்திலக்கியத்தில் இதுவரை காணாத பல புதிய சமூக வட்டாரங்களின் வாசனையுடைய இலக்கியப் படைப்புகள் தோன்றி இருப்பதும் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தின் சிறப்பியல்களில் ஒன்றாகும்.

அத்தோடு தம்முடைய அகன்ற இலக்கிய, தத்துவப்பயிற்சி, பன்மொழி அறிவு, புலம்பெயர்ந்து வாழும் அனுபவம் இவற்றோடு சொல்புதிது சுவைபுதிது என்று புதிது புதிதாக இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்களின் புனைவுகளும் இக்காலத் தமிழ்இலக்கியத்தை வளப்படுத்தியிருக்கின்றன. வளப்படுத்தி வருகின்றன.

தமிழவன் ஆளுமை

இதற்கு ஓர் எடுத்துக்காட்டு ‘தமிழவன்’ என்ற எழுத்தாளரும் அவர் படைப்புகளும் என்று சொல்லலாம். தமிழவன் ஒரு படைப்பாளியாக மட்டுமல்லாமல் ஒரு திறனாய்வாளராகவும் பல்துறை சார்ந்த கல்வித்துறை ஆராய்ச்சியாளராகவும் சிற்றிதழ் வட்டத்தில் இருந்து செயல்படும் இதழாளராகவும் இலக்கியப் பயிற்றாசிரியராகவும் இருப்பது அவருடைய ஆளுமையின் வீச்சை உயர்த்திப் பிடிக்கிறது. அவருடைய மொத்த ஆளுமையை மதிப்பீடு செய்வது என்பது பெரிய பணியாகும். அதற்குரிய காலமும் இடமும் போதாமையால் அவர் படைப்புகளில் மிக அண்மையில் வந்த ‘ஜி.கே. எழுதிய மர்ம நாவல்’ என்ற நாவலை அடித்தளமாகக் கொண்டு அவர் இலக்கியத் திறனை மதிப்பிட முயல்கிறேன்.

சிறப்புப் பண்புகள்

இந்த இடத்தில் திரு. தமிழவன் அவர்களுக்கும் எனக்கும் இருக்கும் நெருக்கத்தைப் பற்றியும் சொல்லிக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. நானும் அவரும் பேராசிரியர் வ.ஐ.சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் வளர்ந்த கேரளத் தமிழ் ஆராய்ச்சிப் பள்ளியைச் சேர்ந்தவர்கள். அவர் நான் கற்றுப் பணியாற்றும் கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் எனக்கு ஒரு ஆண்டு மூத்தவராகப் படித்தவர் (1966 – 68). நானும் அவரும் ஓராண்டு நெருங்கிப் பழகியிருக்கிறோம். அவர் அறிவியல் படித்துவிட்டுத் தமிழுக்கு வந்தவர். அதனால் ஒரு இயல்பான துருவிப் பார்க்கும் மனம், புதுமை தேடும் நாட்டம், பரந்துபட்ட செய்திகளுக்குப் பின்புலமாக இருக்கும் கொள்கை அல்லது தத்துவங்களைத் தேடும் நுண்மாண் நுழைபுலம் இவைகளைப் பெற்றிருந்தார். அதற்கும் மேலாகத் தன் கல்வி, அறிவு, பட்டறிவு இவற்றை நமத்துப் பழசுபட்டுப் போகாமல் வைத்துக் கொள்வதில் மிகுந்த அக்கறை காட்டுபவராக இருந்தார். அதனால் இவர் எப்போதும் சமகால நிகழ்வுகள் வளர்ச்சிகள் இவற்றைக் கூர்ந்து நோக்கி அவற்றை உள்வாங்கித் தானும் தன்னைச் சார்ந்தவர்களும் அவை பற்றிய உணர்வு உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவராகவும் இருந்தார். அவர் அன்றே தீவிரமாக வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். புதிய இதழ்கள் தரமான இலக்கியப் படைப்புகள் இவற்றை உடனுக்குடன் கவனித்து அவைகளை வாசிக்கவும்  அவை பற்றி விவாதிக்கவும் பெரு விருப்புக் கொண்டிருந்தார். அதனால் இயல்பாகவே  அவர் இக்கால  இலக்கியத்தைத் தன் ஆய்வுப் பொருளாக அன்று எடுத்துக் கொண்டார். அவர் அன்று முடியரசன் கவிதைகளை எடுத்துத் திறனாய்வு செய்து முதுகலை ஆய்வேடு சமர்ப்பித்தார்.

தொல்லிலக்கியம் நாட்டுப்புறப் பண்பாடு இவற்றில் கவனம் செலுத்தி வந்தாலும் தற்கால இலக்கியத்தைப் பற்றியும் ஆரோக்கியமான கொள்கைகளைக் கொண்டிருந்ததனாலேயே இவையெல்லாம் இயன்றது என்பதையும் இங்குச் சொல்லவேண்டும்.

இக்கால  இலக்கியம் பற்றிய இவர் கவனம் படைப்பிலக்கியம் செய்வதிலும் திறனாய்வதிலும் சென்றது. இவர் ஆசிரியராக இருந்த காலத்தில் பாளையங்கோட்டையில் தன்னிடம் பயின்ற மாணவர்களிடையே இலக்கிய உணர்வு வளரவும் வளர்க்கவும் காரணராக இருந்தார். நான் மாணவனாக இருந்த காலத்தில் என்னுடனும் என் நண்பர் ஈழத்துச் சத்தியமூர்த்தியுடனும் எங்களுக்கிருந்த இலக்கிய நாட்டம் அறிவு இவைசார்ந்த ஒரு நட்புறவையும் ஒரு மதிப்பையும் எங்களிடம் காட்டிவந்தார். அதில் குறிப்பாக வயதில் இளையவனாகிய என்னைப் பொறுத்தவரை அவர் காட்டிய அன்பும் மரியாதையும், வயதையும் மீறியதாக அமைந்திருந்தது. இதன்காரணமாகவே அவரும் அவரையொத்த இளைய நண்பர்களும் எழுதிய புதுக்கவிதைத் தொகுப்பாகிய ‘ஆக்டோபஸும் நீர்ப்பூவும்’ என்ற நூலுக்கு இளையவராகிய என்னைக் கொண்டு முன்னுரை எழுத வைத்தார்.

பின்னர் அவர் திருமணத்தை நடத்துவதற்குத் துணைநின்றபோது அதுவும் ஒரு இலக்கிய உறவிற்கான முன்னுரையாக அமைந்தது என்பதையும் நினைத்துப் பார்க்கிறேன்.

படைப்பாளி

குமரி மாவட்டத்து மணலிக்கரையில் பிறந்த தமிழவன் இயற்பெயர் கார்லோஸ் என்பது சிலருக்காவது தெரியாது என்று நினைக்கிறேன். அவர் கேரளத்தில் தமிழ்ப் படித்துக் கன்னட நாட்டில் சுமார் முப்பது ஆண்டுகளாகப் பணியாற்றுவதால் மலையாளம், கன்னடம் என்ற இருமொழிகளையும் கற்று மொழிபெயர்ப்புகள் செய்திருக்கிறார். கல்வித் துறையில் அவர் நாட்டுப்புறவியலில் நாட்டம் கொண்டவர். நாட்டுப்புறவியல், இலக்கியத் திறனாய்வு, மொழிபெயர்ப்பு என்ற துறைகளிலே மட்டுமின்றிப் படைப்பிலக்கியத் துறையில் கவிதை, சிறுகதை, புதினம் என்ற மூன்று துறைகளிலும் படைப்பாக்கம் செய்து வருகிறார். அதிலும் புதினத் துறையில் அவருடைய பரிசோதனைப் படைப்புக்கள் எல்லோர் கவனத்தையும் பெற்றனவாக இருக்கின்றன.

இவர் இதுவரை பதினைந்து நூல்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் திறனாய்வு நூல்களாக ஏழும் பிறவகையைச் சேர்ந்தனவாக ஏழும் ஒன்று மொழிபெயர்ப்புமாக அமைகின்றன. அவை:

 1. இருபதில் கவிதை
 2. புதுக்கவிதைகள்: நாலு கட்டுரைகள்
 3. ஸ்ட்ரச்சுரலிசம்
 4. படைப்பும் படைப்பாளியும்
 5. அமைப்பியலும் தமிழ் இலக்கியமும்
 6. தமிழும் குறியியலும்
 7. தமிழ்க் கவிதையும் மொழிதல் கோட்பாடும்
 8. ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்
 9. சரித்திரத்தில் படிந்த நிழல்கள்
 10. ஜி.கே. எழுதிய மர்ம நாவல்
 11. தமிழவன் கதைகள்
 12. அவஸ்தை(மொ.பெ.)
 13. நாட்டுப்புற நம்பிக்கைகள்
 14. மலையாள நாட்டுப்புறப் பாடல்கள்(மொ.பெ.)
 15. நாட்டுப்புற நம்பிக்கைகள்

என்பவையாகும்.

நாட்டுப்புறவியல் ஆய்வு

இவர் தமிழ், கன்னட நாட்டுப்புறக் கதைகளை ஒப்பாய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அவர் வழிகாட்டலில் பல மாணவர்கள் ஆய்வு செய்து முனைவர், எம்.பில். பட்டங்கள் பெற்றுள்ளனர். தன் கல்விப்பணியில் அவர் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் உள்ள பல பல்கலைக்கழகங்களுக்கும் சென்று சொற்பொழிவும் ஆராய்ச்சி கட்டுரைகளும் படித்துள்ளார். அவற்றில் பின்லாந்து நாட்டில் 1995இல் நடந்த நாட்டுப்புறவியல் கோடைப் பணிப் பட்டறையிலும் 1998இல் ஜெர்மனியில் நடந்த நாட்டுப்புறவியல் மாநாட்டிலும் கலந்துகொண்டு கட்டுரை படித்ததைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். அத்துடன் ஆங்கிலத்தில் இக்கால இலக்கியம், ஒப்பிலக்கியம், நாட்டுப்புறவியல் தொடர்பாக இந்திய ஆராய்ச்சி இதழ்களில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர், ‘இந்திய நாட்டுப்புறவியல் கழகம்’, அமெரிக்காவிலுள்ள தற்கால மொழிச்சங்கம் போன்றவற்றின் உறுப்பினராக உள்ளார். தேசியப் புத்தக நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவிலும், ‘இன்று’ ‘வித்தியாசம்’, ‘மேலும்’ – போன்ற இதழ்களின் சிறப்பாசிரியராகவும் இருந்துள்ளார். அவர் இப்போது சாகித்திய அகாதெமியின் மொழிபெயர்ப்புத் துறையின் இயக்குநராகவும் பணியாற்றுகிறார்.

நாவல்கள்

தமிழவன் நாவல்கள் மூன்றுமே பரிசோதனை அடிப்படையில் எழுந்தவை. அவடைய முதல் நாவல் ‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’ என்பது மாயக்காட்சி நடப்பியல் வகையைச் சேர்ந்தது. இவ்வகையை உருவாக்கியவர்களில் சிறப்பாகச் சொல்லப்படும் 1982இல் நோபல் பரிசு பெற்ற இலத்தீன் அமெரிக்க எழுத்தாளரான கப்ரியேல் கார்சியா மார்க்யொஸ் (1928-) பாணியைப் பின்பற்றி எழுதுவதாகத் தமிழவன் சொல்கிறார். நாவல் என்பது கதை சொல்வதற்கான உத்தி என்று கொண்டு எழுந்த சோதனை முயற்சிகளில் ஒன்றுதான் இவ்வகைப் படைப்புக்கள். மாயக்காட்சியை உருவாக்கப் பலவித மிகைப்புனைவுகளில் ஈடுபடுகிறார்கள் எழுத்தாளர்கள். சல்மான் ருஷ்டியின் படைப்புக்கள் இதற்குப் பிற எடுத்துக்காட்டாக அமையும்.

மாயக்காட்சியில் பலவகை உண்டு. இத்தகைய இலக்கிய முயற்சிகள் நம் இந்திய இலக்கியத்திற்குப் புதிதல்ல. நமது தொல்புராணக் கதைகள், நாட்டுப்புறக்கதைகள், கதாசரித்திரசாகரம், கலிங்கத்துப்பரணி போன்றவற்றில் இவற்றைப் பார்க்கலாம். பிரஞ்சில் எழுதிய போலிஷ் எழுத்தாளரான யானபோடோட்ஸ்கியின் (1761 – 1815). சாரகோசாவில் கிடைத்த சுவடி என்ற நாவல் கதைக்குள் கதையாக ஆயிரத்தொரு இரவுகள், விக்கிரமாதித்தன் கதைகள் போன்று அமைகிறது. இது வேறு ஒரு வகை.

இத்தகைய கதைகளில் வழக்கமான நேர்வரிசைக் கதைசொல்லும் முறையை விடுத்துக் கதையைச் சிதைத்துக் கால இட ஒருமைப்பாடுகளை மீறிய ஒரு கதை உலகம் படைக்கப்படும். மேலும் வழக்கமான நடப்பியல், தர்க்கம், மொழிக் குறியீடு எல்லாமே தாறுமாறாக்கப்படுகின்றன. அதற்காகப் படைப்பாளி தனக்குத்தெரிந்த கதைகூறும் முறைகள், பாத்திரங்கள், மொழிநடை போன்றவற்றைப் போல செய்து ஒரு புரிந்து கொள்ளும் பொருள் தளத்தை  உருவாக்க முயல்கிறான். இங்கே இது வேறு ஒரு இலக்கியப் பயனைத் தரும் இலக்கிய உத்தியாகவும் அமைகிறது. அதனால் அத்தகைய படைப்புக்கள் தவிர்க்க முடியாதபடி முன்மாதிரிகளின் போலி நையாண்டிகளாக அமைந்துதுவிடுகின்றன. அது கதை, பாத்திரப் படைப்பு, மொழிநடை என்று பல தளங்களில் அமைகின்றது. எடுத்துக்காட்டாகப் பழைய புராணக் கதைகளிலும் நாட்டுக் கதைமரபிலும் வரும் பாத்திரங்களின் பிறப்பு பாத்திர வருணனை போன்ற பொருட்கூறுகள் மட்டுமின்றி அவற்றின் மொழியாட்சி வருணனை மரபுகள் போன்றவற்றின் போலி நையாண்டிகளாக அமைகின்றன. இன்னும் சமகால வரலாற்று நாவல்களின் பண்புகளையும் இதுபோலவே போலச் செய்யும் முயற்சியும் காணப்படுகிறது. இது ஒரு வகையில் மாயக்காட்சி நடப்பியலின் அந்நியத் தனத்தை, மருட்சியை, அதிர்ச்சியை மட்டுப்படுத்தி நம்மிடம் நமக்குத் தெரிந்த பழங்கதை நாவல் வடிவம் மூலம் ஒரு நெருக்கத்தை உண்டுபண்ணி நமக்குப் பொருள்தர உதவுகிறது என்று சொல்லலாம். நாட்டுக்கதை, தெருக்கூத்து இவற்றில் வரும் உத்திகள் உருவங்கள் எல்லாம் இந்த எழுத்தாளர்களுக்குத் துணைக்கு வருகின்றன. போலி நையாண்டிக்குரிய இன்னொரு தன்மையாகிய அங்கதச் சுவை என்பது இன்னொரு தளத்தில் வெளிப்படுவது.

பரணி நூல்களில் வரும் காளி, கூளிகள் உலகு என்பதும் இத்தகைய மாயக்காட்சிகளைப் படைத்துத் தர இடைக்காலப் புலவனுக்கு உதவின.

மாயக்காட்சி நடப்பியல் மிகைப்புனைவியல் போலி நையாண்டிகளாக அமையும்போது அது அழித்தெழுதும் பண்பையும் பெற்றுவிடுகிறது. இதைத் தான் ஆங்கிலத்தில் Palimpsest history என்கிறார்கள். இது இதுவரை அமுக்கி அல்லது அடக்கி வைக்கப்பட்ட மக்களின் வரலாறுகளைச் சொல்வதற்குரிய வாய்ப்பாகவும் அமைந்துவிடுகிறது. கலிங்கத்துப்பரணியில் வரும் குள்ளக் கூளிகள் கள்ளக்கூளிகள் திருவிளையாடற்புராணத்தில் வரும் தடம்பூதங்கள் எல்லாம் சமகால மனிதனின் மாயக்காட்சி உருவங்கள் தானே. மேலும் கலிங்கத்துப்பரணியில் வரும் கள்ளக்கூளி இமயமலை சென்று ஒரு முனிவர் அருளால் இமயமலையில் எழுதியிருந்த சோழர் வரலாற்றை எல்லாம் படித்து வந்து இராச பாரம்பரியமாக மற்றவர்களுக்குச் சொல்லும்போது அது ஒரு அழித்தெழுதும் உத்தி என்று பல சிக்கல்களுக்குத் தீர்வு கிடைக்கக்கூடும்.

ஒதுக்கப்பட்டவர் வரலாறு

‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’ – நாவல் குமரி மாவட்டத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த சமூகங்களின் வரலாறாக அமைகிறது. அந்நாவல் தமிழவனின் முதல் முயற்சி. ஆகையால் அங்கே உடைபடும் தர்க்கங்களும் மொழி அமைப்புக்களும் உருவாக்கும் மிகைப்புனைவு, உருவகம், படிமம் சார்ந்த சொல்லாட்சிகள் ஒருவிதப் புதுமையை – அதாவது இரஷ்ய வடிவவியலாளர் கருத்தில் சொல்வதாக இருந்தால் ஒரு அசாதாரணத் தனத்தையும் சேய்மைப்படுத்தலையும் செய்கின்றன. மாதிரிக்கு ஒரு பகுதி:

“வம்ச சரித்திரம் தன் மனதின் தோலைக் கிழித்து உட்புகுந்த அத்தகைய நாட்களில், ஒரு ஞாயிற்றுக்கிழமை சுவடிகளைப் படித்துக் கொண்டிருந்த தாத்தாவின் கண்முன்பு, ஒரு வார்த்தை ஊஞ்சல்போட ஆரம்பித்தது. அந்த வார்த்தைக்கு விரைவில் ஒரு தலையும் வாலும் முளைத்தன. தலை ஒரு பக்கமாகவும் வால் அதற்கு எதிரான பக்கமாகவும் வளர்ந்தன. தன்னை வார்த்தை மிரட்டத் தொடங்குமென்று கருதிய தாத்தா அதனைப்பிடித்துக் கொல்ல நினைத்துக் கையை நீட்டும்போது அங்கு ஜான் நின்று கொண்டிருந்தான்”. பக். 3.

ஏற்கெனவே சொல்லப்பட்ட மனிதர்கள் நாவலில் பயன்படுத்திய உத்திகளுடன் வேறு சிலவற்றையும் ‘சரித்திரத்தில் படிந்த நிழல்கள்’ புதினத்தில் பயன்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. மொழி ஆட்சியில் தர்க்கம், உடைபடும் படிமங்கள் முதலியவற்றின் ஆட்சி குறைவு, கூற்றுக்கள் போன்ற நாடகப் பாணி உத்திகள் உள்ளன. இந்நாவலைப் பற்றி அதிகம் கவனிக்காமல் மிக அண்மையில்வெளிவந்துள்ள ‘ஜி.கே. எழுதிய மர்ம நாவல்’ பற்றிச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜி.கே. எழுதிய மர்ம நாவல் சற்று வேறுபட்டதாக இருக்கிறது. கதை நேர்க்கோட்டுப் பின்னலில் செல்கிறது. கதைக்குப் புறக்கதையாகக் கதை எழுதிய ஜி.கே. பற்றிய துப்பறியும் ஆராய்ச்சியும் இணைகோட்டு அமைப்பில் செல்கிறது. 1966 கணையாழி இதழில் வெளிவந்த ‘நகுபோலியன்’ என்பவர் எழுதிய ‘மழநாட்டு மகுடம்’ (கணையாழி கதைகள் – முதல் தொகுதி – 1985) என்ற போலி நையாண்டிக் கதை எனக்கு நினைவுக்கு வந்தது. கதை சொல்லும் முறையும் மொழிநடையும் கல்கியின் வரலாற்றுப் பாணியையும் மர்ம நாவல் பாணியையும் நையாண்டிப் போலி செய்கிறது. நா.பா. போன்றவர்கள் புதினங்களின் எதிர் ஒலியையும் தத்துவ விசாரங்கள் நடக்கும் பகுதியில் பார்க்கலாம்.

கதைத்தன்மை

புதினம் துப்பறியும் வரலாற்றுப் புதின வடிவில் அமைகிறது. சுருங்கை என்ற நகர நாட்டில் கதை நிகழ்கிறது. இது வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரத்தில் வரும் கற்பனை நாடு போன்றது. இதில் குவலயபுரத்திலிருந்து புரட்சிகர புத்த மத அறிஞர் தேவமித்திரர் சுருங்கை நாட்டில் நடக்கவிருக்கும் தீங்குகளைத் தடுப்பதற்காக வருகிறார். இவருக்குத் துணையாகப் பெரும்படைவீரர் அரையநாதர் மெய்க்காவலர் போல உடன் வருகிறார். தேவமித்திரர் அங்கே சரித்திரக்காரன் யுனசேனன், யவனச் சிற்பி துபல், அவன் சீடன் சராசின், கப்பில்லன் என்ற சார்வாகன், உரைகாரனான புவனநந்தி, சீங்சோது என்ற மங்கோலியன் போன்றவர்களைச் சந்திக்கிறார். இதில் அரையநாதர் உடனிருந்து உதவும் பொறுப்பில் இருக்கிறார். கதைப்பின்னலில் முக்கிய மையம் அரையநாதர் மத அடிப்படைவாதியாக இறுதியில் தோன்றும் சூனியதத்தன் மாறுவேடத்தில் இருக்கிறான். அவன் யார் என்று அறியும்போது நமக்கு அதிர்ச்சிதான் மிஞ்சுகிறது. துப்பறியும் முறையில் கதை செல்வதால் ஒரு விறுவிறுப்பு இருக்கவே செய்கிறது. ஆனால் அது வாசகனை இழுத்துப் பிடிக்கும் ஒரு வலை, அவ்வளவே. இன்னும் மகேந்திரப்பல்லவன், வச்சிரபாகு, நீலகேசி, நாகநந்தி போன்ற ஆள்மாறாட்டச் செய்திகளும் உள்ளன. சூரியக் கோயில், கிரந்தக் கோயில் போன்றவற்றின் அமைப்புக்கள் வரைபடத்துடன் விளக்கப்படுகின்றன. வட்டவடிவப்படிகள், மருபூமி சாவு போன்றவை எல்லாம் ஒருவித இரகசியக் குறியீடுகள் என்று கூறப்படுகின்றன. இதில் கிரேக்கக் கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, புத்தம், சமணம், சார்வாகம் போன்ற மதக் கருத்துக்கள், இலக்கணச் சிந்தனைகள் பலவும் விளக்கமாகப் பேசப்படுகின்றன.

சுரங்கம், ஓவியம், சிற்பம், கட்டிடம் இவை பற்றிய வருணனைகள் வரலாற்றுப் புதினங்களில் காணப்படுவது போலவே இதிலும் காணப்படுகின்றன. நோவா கப்பலைப் போன்ற வருணனை (210)யில் இடம்பெறும் மனித இனப்பெருக்கத்தை மேம்படுத்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண் பெண் பல்துறை வித்தகர்கள் பற்றிய கருத்து, ‘யூஜினிக்ஸ்’ எனப்படும் இன ஆக்க மேம்பாட்டியல் சிந்தனைகளை வெளியிடுகின்றது.

யோகச்சீட்டுப் பற்றி கருத்து தமிழ்நாட்டைப் பிடித்தாட்டும் பரிசுச் சீட்டு மோகத்தை வேறு சூழலில் சொல்லிப் பார்க்கிறது. மொத்தத்தில் புதினம் முழுவதுமே நாமும் நம்நாடும் கடந்துவந்த மதவரலாற்றை மீண்டும் எழுதிப் பார்ப்பதாக அமைந்து இன்றைய மத அடிப்படைவாதத்தின் போலி நையாண்டியாக அமைகிறது.

நடப்பியல் தர்க்கம், உடைபடும் படிம நடையாட்சி குறைவு. யுனசேனன் வரலாற்றுக்குரலில் பேசும் ஓரிரு இடங்கள் இதற்கு விதிவிலக்கு. (பக். 41). இதன் காரணமாக நாவல் சாதாரண வாசகனுக்கும் பொருள்புரியும் தன்மை பெற்றிருக்கிறது. சீங்சோது பற்றிய வருணனையில் கூட அது மாயாஜாலம் என்றே சொல்லப்படுகிறது.

“உடனே அந்த மங்கோலிய முகம் கொண்டவன் எழுந்தான். தன் பெயர் சீங்சோது என்றான். அவனது தாய் மங்கோலியப் பெண். அவள் மூலம் ஜாலவித்தை கற்றதாய்க் கூறித் திடீரென அவனது விரலை ஒரு செடியைப் பிடுங்குவது போல் பிடுங்கித் தேவமித்திரருக்கு ஒரு துணியில் வைத்துக் கொடுத்தான். எல்லோரும் ஆச்சரியப்பட்டுச் சிரித்தபோது வாய்க்குள் இடது கையை மெதுமெதுவாகக் கஷ்டப்பட்டுச் செலுத்தித் திடீரெனத் தனது குதம் வழி விரல்களை ஆட்டிக் காட்டினான்”. (பக். 148).

அறிவுப் பயிற்சி அரங்கு

ஆனால் இவற்றில் வரும் கட்டிடக்கலை, தத்துவ நுட்பங்கள் போன்றவை ஒரு அறிவுத் தன்மையை மிகுவிக்கின்றன. தமிழவன் இதற்காக நிறைய உழைத்துள்ளார். நிறையப் படித்துச் செய்திகளைத் திரட்டியுள்ளார். புதினம் என்பது வெறும் கற்பனை வயப்பட்ட புனைவு என்பதற்கு அப்பாற்பட்டு ஒரு அறிவுப் பயிற்சியரங்கு என்பதை இது காட்டுகிறது. இதனாலேயே இதை ஒரு அறிவுப்புதினம் என அழைக்கலாம். இது பற்றி முன்னுரையில் இந்திரன் சொல்வது சரிதான்.

“தமிழவன் வரலாற்றில் காணக்கிடைக்கும் பெயர்கள், தகவல்கள், ஆகியவற்றை அக்கறையுடன் சேகரித்துப் படைபாளிக்கே உரித்தான கற்பனையின் நீரை ஊற்றிப் பிசைந்து தனது புனைகதையைக் கட்டி எழுப்புகிறபோது அதனூடாகச் சில விழுமியங்கள், விமரிசனத்துக்குள்ளாகிற சிலவற்றை உயர்த்திப் பிடிக்கிற செயல்பாடும் நிறைவேறிவிடுகிறது”. (முன்னுரை. பக். 4).

துப்பறியும் வரலாற்றுப் புதினமாகிய இதை யார் எழுதியது என்ற கேள்வியை எழுப்பித் துப்பறியும் வேலையில் வாசகனை ஈடுபடுத்துவது இந்தப் புதினத்தின் இன்னொரு தளம். இதை இடையிடையே குறிப்புக்கள் என்ற முறையில் தொடர்ச்சியாக அமைந்துள்ள இடைச்செருகல் பகுதிகளில் காணலாம். இங்கே வாசகன் வரலாற்றுக் காலத்திலிருந்து இடையிடையே தற்காலத்திற்குள் வந்து விழுந்து எழுகிறான்.

இந்திரன் இவ்வாறு எழுதுகிற பகுதி நம் மதிப்பீட்டை ஒட்டியே அமைகிறது.

“கிரந்தக் கோயிலும் சுருங்கையின் மர்மப்பாதைகளும், அரசர்களும் புத்தபிட்சுகளும் நிறைந்த ஒரு பழங்காலத்தில் கதை நிகழ்கிறதென்றால், அகச்சான்றுகளும், புறச்சான்றுகளும் தேடி அலையும் ஆய்வாளர்கள் மலிந்த நிகழ்காலத்தில் ‘குறிப்புக்கள்’ இடம்பெறுகின்றன”.

மரங்கள் மனித முகங்கள் போல் தோற்றம் கொள்வதிலும், மனிதர்கள் சிலரின் மூக்கறுபட்டும், கண்கள் அறுபட்டுத் தொங்கியும் காணப்படும் கதையுலகில் தன்னை இழந்து சஞ்சரிக்கும் வாசகனை வேறொரு தளத்திற்குக் கொண்டுவந்து சஞ்சரிக்க வைக்கிறார். எல்லாம் விளையாட்டுத் தனமாகத்தான்!

“இங்குக் கதைச்சொல்லி என்பவர், எல்லாவற்றிற்கும் தன்னிடம் விடை வைத்திருக்கிற ஒருவர் என்கிற நிலையிலிருந்து நழுவி நிற்கிறார். தன்னை ஒரு பலவீனன் என்று வர்ணித்துக் கொள்ளும் அவர் இப்பன்முகப் பார்வைகளை வாசகன் முன் வைப்பதின் மூலமாக, முரண்கள் குறித்த முடிவுகளை வாசகரே எடுத்துக் கொள்ளுமாறு விட்டுவிடுகிறார்”. (முன்னுரை. பக். 5).

கதைக்குள் கதைபோன்று அமையும் இடைக்குறிப்புகள் இன்றைய இலக்கிய ஆராய்ச்சியை நையாண்டி செய்யும் பாணியில் இருக்கிறது. இரண்டையும் இணையாகப் படித்துக் கொண்டுகூட்டு முறையில் பொருள் கொள்ள வேண்டும்.

இந்த நாவல் இன்றைய மதக் கலவரங்களை வைத்து அழித்தெழுதும் வரலாறாகப் புது வரலாற்றைப் பழம் வரலாற்றின் மாதிரியில் எழுதியிருக்கிறது. இதைப் படித்தபோது வரலாற்று நாவல்கள் கூட ஒருவகை மிகைப்புனைவு வகைக் காட்சியைச் சேர்ந்த மாயக்காட்சி நடப்பியலைத் தான் சொல்கின்றன என்று தோன்றுகிறது. அதனாலேயே அவை விரும்பி இன்றும் படிக்கப் படுகின்றன என்றும் தோன்றுகிறது.

கலிங்கத்துப்பரணியில் களவாடிய பேய் இமயத்தில் சென்று முனிவர் உதவியால் இமயத்தில் எழுதிய வரலாற்றைப் படித்து இராசபாரம்பரியம் கூறுவதாக ஜெயங்கொண்டார் அமைக்கும்போது அவருக்கும் இந்த அழித்தெழுதும் உத்தி தெரிந்திருந்ததா என்று வியக்காமல் இருக்க முடியவில்லை. பேய் கூறும் வரலாற்றைக் குறிப்பிடும் கலிங்கத்துப்பரணி ஆசிரியர் போல ஜி.கே.யைக் கனவுகாணுகிறார் தமிழவன்.

தமிழவன் முயற்சி

பொதுவாக இந்தப் புதினத்தில் தமிழவன் என்ற கதைசொல்லியிடம் ஒருவித முதிர்ச்சி தென்படுகிறது போலத் தோன்றுகிறது. இது தமிழில் முக்கியக் கணிப்பைப் பெறும் என்றே தோன்றுகிறது.

அழித்தெழுதும் வகையில் இன்னொன்று பழைய புராணம், நாடோடிக் கதை இவற்றில் வரும் பாத்திரங்களை எடுத்து மறுபடைப்புச் செய்யும் முறை, மாய நடப்பியல் முறையில் எழுதும் இத்தகைய படைப்புகளைவிட இது கொஞ்சம் பரவலானது. காண்டேகரின் ‘யயாதி’ எம்.டி.வாசுதேவன் நாயரின் ‘இரண்டாமூழம்’ (வீமன் கதை) பெரும்படவம் ஸ்ரீதரனின் ‘ஒரு சங்கீதம் போல’ (சிற்பி மொழிபெயர்ப்பு) ‘தொஸ்தோவ்ஸ்கி’ போன்ற புதினங்கள் குறிப்பிடத் தக்கவை. வெ.ப.சு., புதுமைப்பித்தன், ச.து.சு.யோகி ஆகியோர் படைத்த ‘அகலிகை’யும் இவ்வகையைச் சேர்ந்ததே. தமிழவன் இம்முறையிலும் ஒரு புதினம் எழுதிப் பார்க்கலாம்.

இக்கட்டுரையில் தமிழவன் படைப்புக்களை முழுமையாக மதிப்பிட்டு அவருக்கு நியாயம் செய்ததாகச் சொல்ல முடியாது. அவை விரிவான திறனாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை. எடுத்துக்காட்டாக, அவர் சிறுகதைகள் பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லை. காலம், இடமின்மையே, காரணம். பொதுநிலையில் இங்கு அவர் புதினப் படைப்புக்கள், குறிப்பாக அண்மையில் வந்த ‘ஜி.கே. எழுதிய மர்ம நாவல்’ என்ற புதினத்தின் பின்னணியில் அக்கறையோடு கவனிக்கப்பட்டிருக்கின்றது என்பதை மட்டும் சொல்லிக் கொண்டு அவர் வயதில் இளையவர் என்பதால் இன்னும் எழுத வேண்டியவை நிறைய இருக்கின்றன என்பதை அவருக்கு நினைவூட்டி அவருக்கு வாழ்த்துதலைச் சொல்லிக் கட்டுரையை நிறைவுசெய்கிறேன்.

தமிழ்த்துறைகள் கருத்துக்களின் ஊற்றுக்கண் ஆகவேண்டும்

 

தமிழ்த்துறைகள் கருத்துக்களின் ஊற்றுக்கண் ஆகவேண்டும்.

தமிழவன்

 

        கருத்துக்கள் எப்படி உருவாகின்றன? கருத்துக்களுக்கும் மொழிக்கும் சமூகத்தின் அமைப்புக்கும் சம்பந்தம் உண்டா?

 

இந்தக் கேள்விகளைக் கேட்ட சிந்தனையாளர்கள் உண்டு. மார்க்சியம் தமிழ்ச்சமூகத்தில் பல ஆண்டுகளாக வேர்விட்டுள்ளது. கருத்துக்களின் உற்பத்தி பற்றி மார்க்சியத்தில் பல சர்ச்சைகள் உள்ளன. நாம் வீடுகளில் இருக்கும்போதும், பஸ்களில் பயணம் செய்யும்போதும் பேசுகிறோம். நாம் சும்மா இருக்கும்போதும் நம் மனதில் பேசிக்கொண்டேயிருக்கிறோம். மனதில் பேசுவதன் பெயர்தான் கருத்துக்களை உருவாக்குவது. தமிழ்ச்சமூகம் மனதில் தோன்றிய – பேசிய – கருத்துக்களைப் பல வேளைகளில் எழுதி வைத்துள்ளது. திருக்குறள் அப்படி மனதில் தோன்றிய கருத்துக்களை எழுதிவைத்த ஒருவரின் நூல். இப்படிப் பல தரப்பட்ட கருத்துக்களைத் தமிழ்ச்சமூகம் எழுதிவைத்துள்ளது.

 

ஆனால் கருத்துக்கள் எப்படி உருவாகின்றன என்ற கேள்வியோ, கருத்துக்களுக்கும் மனதுக்கும் அல்லது சமூகத்துக்கும் உள்ள தொடர்பென்ன என்ற கேள்வியோ தமிழில் பெரிய அளவில் கேட்கப்படவில்லை. அப்படிக் கேட்டவர்கள் வெளிநாட்டில் உள்ளனர். அவர்களில் சிலர் தமிழிலும் பேசப்படும் நபர்களாக உள்ளனர். சுமார் 1920 வாக்கிலிருந்து சிங்காரவேலர் போன்றவர்கள் மார்க்சியம், பொதுமைச்சிந்தனை என்றெல்லாம் பேசினார்கள். பெரியாரும் கூட சிங்காரவேலரை அழைத்துத் தனது இயக்கத்துக்கு சில சிந்தனைகளை – கருத்துக்களை – தந்து தெளிவுபடுத்தும்படி கேட்டுக்கொண்டதுண்டு. அந்தப் பொதுவுடைமைச் சிந்தனையை  உருவாக்கிய கார்ல்மார்க்ஸ் கருத்துக்களைப் பற்றிச் சிந்தித்தவர். ஆனால் சமூகத்தை இயக்குவது பொருளாதாரம் என்றும் அதனால் மனிதனிடம் தோன்றும் கருத்துக்கள் இரண்டாம்பட்சமானவை என்றும் மார்க்ஸ் கருதினார். இவரைக் காலங்காலமாகப் பின்பற்றியவர்கள் இருந்தனர்.சோவியத் ஒன்றியம் வீழ்ச்சி அடைந்தபின்பு, சமீப காலங்களில் இவரைப் பின்பற்றுபவர்கள் இவருடைய இந்தச் சிந்தனையை ஏற்கவில்லை. ஆனாலும் இவர்கள் இவருடைய ஆதரவாளர்கள்தாம். இவர்களின் சிந்தனைகளைப் “பின்-மார்க்சியம்” (Post- Marxism) என்று, இன்று மேற்கத்திய சிந்தனையாளர்கள் அழைக்கின்றனர். இந்தச்சொல்லை அறிமுகப்படுத்தியவர் அர்ஜென்டினாவிலிருந்து இங்கிலாந்துக்கு வந்து அங்குப் பேராசிரியரான எர்னஸ்டோ லக்லாவ்(Ernesto Laclau) என்பவராவார். சமூகத்திலிருந்து கருத்துக்கள் வருகின்றன என்பதைச் சற்று மாற்றி, சமூகமும் கருத்துக்களிலிருந்து வருவதுண்டு என்றனர் இந்தப் பின்-மார்க்சியர்கள். சோவியத் யூனியன் சிதறிய பிறகு இந்தப் பின்-மார்க்சியர்களின் கருத்துக்கள் உலகம் எங்கும் பரவ ஆரம்பித்துள்ளன.பின்மார்க்சியம் என்பது மர்க்சியத்தின் கருத்துக்களை நவீன முதலாளியத்தின் குணங்களுக்கு ஏற்ப மாற்றி வடிவமைப்பதாகும்.இந்தச் சிந்தனையில் இன்று சிறந்துவிளங்குபவர் ஸ்லவாய் சீஸெக் என்பவராவார். புதுக்கம்யூனிசம் என்ற சிந்தனையை இவர் பரப்பிவருகிறார்.முதலாளியம் மார்க்ஸ் எதிபார்க்காத புதிய குணங்களைப்பெற்றுள்ளது என்பதை லக்லாவ் மற்றும் சீஸெக் போன்றோர் கூறுகின்றனர்.சமூகவியல் என்ற தனிப் பல்கலைக்கழகத்துறைப் பாடம் ஒன்று உண்டு. தமிழகத்தில் இந்தப் பாடம் ஏனோ முக்கியமாகவில்லை. துணைவேந்தர்கள் நினைத்திருந்தால் இப்பாடத்தைத் தமிழகத்தில் பரப்பி இருக்கலாம். முதலமைச்சர்களின் கடைக்கண் பார்வைக்கு ஆளானால் மட்டும் துணைவேந்தர்கள் ஆகமுடியும் என்ற விதி இருப்பது வரை தமிழகத்துக்கு வேண்டிய பாடம் எப்படி வரும்? ஆனால் இந்த முக்கியமான பாடம் நம் சமூகத்தில் பரவாததாலோ என்னவோ தமிழ்த்துறைகளிலும் தமிழிலக்கியத்தைச் சமூகச் சிந்தனையுடன் இணைக்காமல் உள்ளனர். அதனால் தமிழ்த்துறை என்பது புதிய சிந்தனை பற்றியதல்ல என்ற அபிப்பிராயம் பல பேராசிரியர்களிடமும் உள்ளது. அதனால் தமிழ்க்கருத்துக்களின் உற்பத்தியில் தமிழ்த்துறைகளுக்குப் பங்கு இல்லாதபடி பார்த்துக் கொள்கின்றனர். உலகம் எங்கும் சமூகவியல், அறிவு பற்றிய சமூகவியல்  (Sociology of Knowledge) என்ற தனிப்பிரிவைக் கூடத் தொடங்கியுள்ளது. அதுபோல் தத்துவத்துறை கூட சிந்தனை, அறிவு, கருத்துப் போன்றவைகளைப் பற்றிய ஆய்வில் ஈடுபடுகிற ஒருதுறைதான். துறை (Department) என்பது பிரிவு என்று பொருள். சிந்தனையைப் பிரித்துப்பிரித்து வைத்துப் படிக்கிறார்கள். தமிழ்த்துறையைச் சிந்தனையின் பிரிவாகக் கட்டமைப்பதற்குப் பதிலாக சிந்தனையின்மையைப் பரப்பும் துறையாக அமைத்து வைத்திருக்கிறார்கள். கன்னடம், மராட்டி, வங்காளி போன்ற மொழிகள் சுமார் 10ஆம் நூற்றாண்டுக்குப் பின்பு வந்தவை. எனவே, ஆயிரம் ஆண்டு பழமையை மட்டும் படிக்கின்றனர் இம்மொழி மாணவர்கள். தமிழ் 1-ஆம் நூற்றாண்டிலிருந்தே இலக்கியங்களுடன் வாழ்ந்து வருகின்றது. அதனால் இரண்டாயிரம் ஆண்டு பழமையை மாணவர்கள் படிக்கவேண்டும். பழைய வாக்கியங்கள், நூல்கள், பழைய சிந்தனை, பழைய சொற்கள், பழைய இலக்கணம், பழைய யாப்பு இப்படி இப்படி. இந்தப் பழைய விசயங்களில் பாதிக்குமேல் இன்றுள்ள சமூகத்தோடோ, சிந்தனையோடோ சம்பந்தப்படாதவை.  ஆக மொத்தமாய் தமிழ் படிக்க வரும் அதிகமான மாணவர்களான தலித் மாணவர்கள் பழமையைப் பழமைக்காகவே இரண்டு ஆண்டுகள் முதுகலை  படிக்கவும், மூன்று ஆண்டிலிருந்து முனைவர்பட்டத்தை முடிக்க எடுக்கும் பல ஆண்டுகள் தொடர்ந்து படிக்கவும் விதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பழமை மூலமாக  நவீன சமூகம், நவீன உலகம், அதன் பிரச்சனைகள் என்று கேள்வி கேட்கும் எந்த முறைமையும் ஊக்கப்படுத்தப்படுவதில்லை. இன்று, இந்தியாவிலும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூரிலும் உள்ள தமிழ்ப்படிப்பே தமிழனை அடிமையாக வைப்பதற்கான நல்ல இரும்புக் கவசம். சுயச் சிந்தனை என்னும் கிளியைப் பழமை என்னும் பெருமை பொருந்திய கூட்டிற்குள் அடைத்து வைத்துவிட்டோம். மீண்டும் மீண்டும் எந்த மாற்றமும் வராதபடி பார்த்துக் கொள்கிறோம். பெரும்பாலும், இன்று தமிழ்ச் சிறப்புப்பாடம் படிக்க வருபவர்கள், சமூகத்தில் உள்ள ஏழைகளும் பெண்களும். கொஞ்சம்கூட ஈவு இரக்கம் ஏதும் இன்றி தமிழை ‘மானேஜ்’ செய்கிற பேராசிரியர்களின் தனிச்சொத்து ஆகிவிட்டது தமிழ்ப்படிப்பு.

 

இதில் பழந்தமிழில் தீர்க்கப்படாத பிரச்சனைகள் எத்தனை என்று சொல்ல முடியாது. பல பழந்தமிழ்ச் சொற்களுக்கு இன்றுவரை பேராசிரியருக்கும் பொருள் தெரியாது. பேராசிரியரின் பேராசிரியருக்கும் பொருள் தெரியாது. உதாரணமாய் பழனம் என்ற சொல்லை மிக அற்புதமான நூல் ஒன்றை எழுதியுள்ள குளோரியா சுந்தரமதி அவர்கள் பல பொருள் உள்ள சொல் என்கின்றார். நூலின் பெயர்: ‘சங்க இலக்கியம், மருதம்’  என்பது 1973-இல் வந்துள்ளது. ஒவ்வொரு இடத்திலும் மருதம் என்ற பகுதியைச் சார்ந்த பாடல்களில் வரும் இச்சொல் எத்தகைய பொருளைத் தரும் என்று விளக்குகிறார். அதுபோல்  தொல்காப்பியத்தின் 3-ஆம் பகுதியான பொருளதிகாரத்தின் சில பிரிவுகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஒரு பேராசிரியர் ‘இந்தச் சொல்லுக்கு அல்லது வாக்கியத்துக்குச் சரியான பொருள் தெரியவில்லை. நான் இப்படி இருக்க வேண்டும் எனக் கருதுகிறேன்’ என்கிறார். சுமார் 150 வருடங்களாகிவிட்டன சங்க இலக்கியத்தை அச்சிட்டு. இன்றும் உறுதிபட  அர்த்தம் சொல்ல முடியாத பல பகுதிகள் உள்ளன. பழம்பெரும் பேராசிரியர் ஒருவர் ஒருமுறை சொன்னார், ‘எனக்குத் தெரியாததால்  அப்படியே இருக்கும் வாக்கியத்தை எழுதுகிறேன்’ என்று. சமீபத்தில் பல பேராசிரியர்கள் ஒன்றாய் அமர்ந்து பேசும்போது ஒருவர் சொன்னார். உ.வே.சா. எந்த ஆதாரமும் இல்லாமல் ஒருசொல்லை இந்தப்பொருள்  என்கிறார். நான் உ.வே.சாவை நம்பினால் அச்சொல்லுக்கு அது அர்த்தம். நம்பாவிட்டால் அது அர்த்தமல்ல. இன்னொருவர் உடனே சொன்னார்: ‘உ.வே.சா. என்ன கடவுளா அவரை நாம் எல்லாம் நம்ப’. எனவே, பழந்தமிழ் ஒரு பெரிய பிரச்சனை. பலகோடி பணம் செலவு செய்தும்கூட சங்கப்பாடல்களுக்கு  இறுதியான அர்த்தம் என்று ஒரு கமிட்டி மூலம் உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் பழமையை ஆராய்ச்சிக்கு உட்படுத்தாமல் நம்பிக்கையின் மூலம் செயல்படுத்தும் துறையே தமிழ்த்துறை. எனவேதான், பாடத்திட்டத்தை மாற்றவோ, சர்ச்சைக்கு  உட்படுத்தவோ மறுக்கிறார்கள்.

 

அதாவது நாம் பார்த்துக்கொண்டுவந்த விசயம் தமிழ்ப்படிப்பை மாற்றி சிந்தனை உற்பத்திக்கான துறையாக, அதனை வடிவமைப்பு செய்யமுடியுமா என்பது. அதாவது மரபை அதன் அர்த்தத்தைப் புரிந்தோ புரியாமலோ  பாதுகாக்க இன்று தமிழ்ப்படிப்புப் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு சடங்குபோல் நடக்கிறது. தமிழ்ப்படிப்பு என்னும் சடங்கு. இதனைக் கருத்துக்கள் உருவாக்கும் அமைப்பாக எப்படி மாற்றுவது? மாற்றமுடியுமா? இதில் ஒரு ஆரம்பச்செயல்பாடாக இன்றைய தமிழிலக்கியத்தைத் தமிழ்த்துறைக்குள் கொண்டு வரலாம். இன்று கவிதை எழுதும் இளம்பெண்ணிடம் புதிதாய் தோன்றும் கற்பனைக்கும் நற்றிணை – கலித்தொகை – போன்றவற்றில் வந்துள்ள கற்பனைக்கும்  தொடர்புண்டா என்ற கேள்வி வரும்;  அது விவாதமாகும். அவ்விவாதம் ஆராய்ச்சிக்கு இட்டு செல்லும். பழமையைப் பயன்படு பழமை, பயன்படா பழமை என்று பகுக்கவேண்டும். ஒவ்வொரு நிமிடமும் மாறிக்கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகத்திலிருந்து இன்று கவிதை எழுதும் இளம்பெண் தனது புதிய வாக்கியததைக் கொண்டு வருவாள். இப்படி நுட்பமாகப் பார்க்கும்போது பழமையும் புதுமையும் உரசுகின்றன. அன்றைய வாழ்வும் இன்றைய வாழ்வும் சந்திக்கின்றன. ஆனால் நிதர்சனம் என்ன என்றால், தற்கால இலக்கியத்தைப் பொருட்படுத்தாமல் இன்று தமிழ் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. பெரும்பாலான தமிழ்த்துறைகளின் நிலை இது. தீக்கோழி மண்ணுக்குள் தலையைப் புதைத்திருக்கும் என்பார்களே அதுபோல் தமிழ்ப்படிப்பு பழமைக்குள் தலையைப் புதைத்துவிடக்கூடாது. அது நவீன வாழ்வுக்குப் பயன்படாது. நவீன சமூகத்தோடும், நவீன வாழ்வோடும் தொடர்பில்லாத எந்தச் செயல்பாடும் மனக்கிளர்ச்சியைத் தராது; மனக்கிளர்ச்சி, கேள்விகள், வருத்தங்கள் இல்லை என்றால் கருத்துக்கள் தோன்றா. கருத்துக்களைத் தோற்றுவிக்காத – விமர்சிக்காத – பிற கருத்துக்களோடு ஒப்பிடாத செயல்பாடாகத் தமிழ்த்துறை  என்ற ஒரு மிக முக்கியமான தமிழ்நிறுவனம் அர்த்தமில்லாமல் போய்விடக்கூடாது. அர்த்தமில்லாமல் போனால் தமிழர்கள் என்ற அடையாளம் ஊனமுறும். தமிழரசியல் பொருளிழந்து போகும். இன்றைய உலகில் பொருத்தம் இல்லாதவர்களாகிப் போவோம்.

 

ஒரு உதாரணமாக ம.பொ.சிவஞானம் நினைவுக்கு வருகிறார். ஒரு பல்கலைக்கழகத் துறைக்கு ஒருமுறை ம.பொ.சி. போனார். அந்தத் துறைத்தலைவர் தனது முனைவர்பட்ட மாணவர்கள் சொற்களைப் பிரித்து அவற்றின் மொழி வடிவத்தை (இலக்கணத்தை) எழுதும் மிகப் பிரம்மாண்டமான காரியத்தைச் செய்வதைப் பற்றிச் சொன்னார். 60களின் இறுதி. உடனே எதிர்காலத்தில் வரும் கணினி இதைச் செய்துவிடுமே என்று ம.பொ.சி. கூறிவிட்டார். துறைத்தலைவர் அதனை ரசிக்கவில்லை. ம.பொ.சி.யின் ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ என்ற ஆன்மீக நூலை மீண்டும் படிக்கும்போதுதான் ம.பொ.சி.யின் கூற்றின் பொருளின் பரிமாணம் புரிகிறது. பாரதியார் கவிதை என்னும் விதையைப் போட்டார். ம.பொ.சி. என்ற ஒருவர்தான் அதனைக் கருத்துக்களாய் மாற்றித் தமிழ்ப்பற்று மூலம் தனது அரசியலான இந்திய ஒருமைப்பாட்டையும் தமிழர்களுக்குள் பக்திகாலத்திலிருந்து பாதுகாக்கப்பட்ட ஆன்மநேயம் என்ற ஒரு நவீன செக்குலர் கருத்தையும் உருவாக்கினார். தமிழுக்கு இந்தியம் என்பது அன்னியமானது என்பது அவருக்கு ஏனோ புரியவில்லை. எனினும் கருத்து உருவாக்கத்தின் தத்துவம் புரிந்திருக்கிறது.என்ன ஆச்சரியம் பெரியார் மதமற்ற சிந்தனையாளர்; ம.பொ.சி. மதங்களுக்குள்  வித்தியாசமற்ற செக்குலர் அறிவைத் தேடிய சிந்தனையாளர். இன்றைய சூழலில் இந்தியா எங்கும் விவாதமாகியுள்ள பல கருத்துக்களை ம.பொ.சி. யின் இந்த நூல் தொடுகிறது. ‘ஏகஇந்தியா’ என்ற காலனியக் கருத்திலிருந்து பாரதியும் ம.பொ.சியும் விடுபடாத ஆபத்து இருந்தாலும் தமிழ் விழுமியம்  பல தேசிய இனங்கள் சேர்ந்து கட்டிய இந்தியக் கூட்டாட்சியை மட்டுமே ஏற்கும் என்பது உண்மை என்றாலும், ம.பொ.சி அன்றைய காலத்தின் சிறைக் கைதியாக இருந்தபடியே சிந்தனை வானில் கவர்ச்சியான ஒரு அதிசயப் பறவையாய் பறந்திருக்கிறார் என்பதை அந்த நூல் காட்டுகிறது. நான் சொல்ல வந்தது எந்தத் தமிழ்த்துறையும் ம.பொ.சி.யை உருவாக்கவில்லை. பல்கலைக்கழகம் ஏறாதவர். தமிழ்த்துறையோடு அவர் முரண்பட்டிருக்கிறார். ஆனால், தமிழ்த்துறைகள் செய்ய வேண்டியதை ம.பொ.சி. செய்திருக்கிறார். அருட்பா, மருட்பா பற்றிய விவாதம்  அன்று நடந்ததை அறியப் பலரைத் தான் தொடர்புகொண்டதைக் கூறும் ம.பொ.சி. ஆச்சரியமான அரசியல்வாதி.இந்த ஆச்சரியம் தமிழுக்குள்ளிலிருந்து முகிழ்த்திருக்கிறது. மிகப்பெரிய சிந்தனை ஆலமரம். வள்ளலாரையும் ஒரு அகில உலக நவீனச் சிந்தனையாளராய் செயல்பாட்டாளராய் கட்டமைப்புச் செய்கிறார் ம.பொ.சி.

 

20-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் மதத்தை எதிர்த்த சிந்தனையாளரும் மதத்தின் வழி ஆன்மநேயம் என்ற கருத்தை முன்வைத்த இன்னொரு சிந்தனையாளரும் ஒரே காலத்தில் இருந்திருக்கிறார்கள். இது தமிழ்ப்பண்பாட்டின் வளமான பன்மைத் தன்மையைச் சுட்டுகிறது. இந்தப் பன்மைக் கருத்துக்கள் ஒற்றைமுக மதவெறியை ஏற்காது. அதுபோல் ‘போஸ்ட் மார்க்சியம்’ என்ற சிந்தனை  இன்று அகில உலகமெங்கும் பரவுகிறது. மார்க்ஸ் எதிர்பார்த்ததுபோல் முதலாளியம் உச்சகட்டத்துக்குச் சென்றவுடன் சிதைந்துபோகும் என்ற கருத்துத் தவறாகியுள்ளது. முதலாளியம் பல்வேறு புதுமைகளைச் செய்து இன்டர்நெட்டாய் நவீன சமூக ஊடகமாய்,புதிய மருத்துவமாய் பன்முக அவதாரம் எடுத்துவருகிறது. சீன பொதுவுடமை முதலாளியத்தை வளர்க்கிறது. எனவே, மார்க்சை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லவேண்டிய வாதவிவாதங்களின் தொகுப்பாய் போஸ்ட் மார்க்சியம் என்ற பின்மார்க்சியம் தோன்றிப் பரவுகிறது.ஸ்லவாய் சீஸெக்  அவர்கள் மார்க்சின் இந்த(முதலாளியம் சிதையுமென்ற)க்கருத்தைத் தவிர்க்க தத்துவவாதி ஹெகலையும் உளவியல்வாதி லக்கானையும் இணைத்து ஒரு மருந்தைக் கண்டுபிடிக்கிறார்.ஹெகலும் லக்கானும் வடிவமற்ற கருத்துக்கள் என்ற ஒரு சிந்தனையை முன்வைப்பவர்கள். இதனையும் நாம் கருத்தில் கொண்டால் பெரியாரும் ம.பொ.சி.யும் இணைந்து முரண்களற்ற ஒரு கருத்துக்களின் வலயம் உருவாகும். அதாவது, சில அடையாளங்கள்  இருவரின் கருத்துக்களிலிருந்தும் உதிர்ந்துபோகும். அழகியல் என்ற, ஓரளவு தனித்தனி அடையாளமற்ற கவிதையியல்சார் சிந்தனை – இருவரின் தொடர்கருத்துக்களின் உற்பத்தியாய்  ஏற்படும். சிந்தனையும் கவிதை எழுதுதல் மற்றும் படித்தலும்   அறிவு, உணர்வு போன்றனவும் இணையும். எதிர்ப்புச் செயல் வடிவங்களில்(விருதுகளைத் திருப்புதல்) ஏற்படும் மதமற்ற ஆன்மீக இன்பமும் (மதமெனும்பேய்) நாவல் உற்பத்திக்குப் பின்னால் இருக்கும் படைப்பு உந்துதலும் இங்குச் சேரும்.

 

மொத்தத்தில் மொழிசார் சிந்தனைப்பட்டறையாய் (Language  and Thinking Workshop) செயல்பட வேண்டியன தமிழ்த்துறைகள். அடைக்கப்பட்டிருக்கும் கருத்து ஊற்றுக்கண் அடைக்காமல்

மணிக்கூண்டுகளுக்கிடையில் ஒரு கொலைவழக்கு-சிறுகதை

 

நகரம் அல்லோலகல்லோலப்பட்டது.

அப்போது காலனிஆதிக்க எஜமானர்களின் ஆட்சி நடந்துகொண்டிருந்தது. கோதிக் மற்றும் செராசனிக் கட்டடக்கலையும் வளைவுகளும் வளாகங்களும் மரத்தால் செய்யப்பட்ட தரைகளுடைய பங்களாக்களும் தோட்ட வீடுகளுமாகக் காணப்பட்ட நகரத்தில் குறிப்பிட்ட  அடையாளங்கள் கொண்ட இரு சமூகத்தாரின் மத்தியில் நடந்த மோதல்களில் ஒன்றுதான் அந்த வழக்கு.

நெற்றியில் இரண்டு கோடுகள் இழுக்கும் பழக்கம் கொண்ட கொண்டைகட்டி சமூகத்தார்தான் கலகத்தைச் செய்தனர். அவர்கள், நெற்றியில் எந்த அடையாளமும் இடாத கட்டையன் சமூகத்தார்களின் 78 வீடுகளை அந்த பெப்ருவரி மாதம் பதினாறாம் தேதி எரித்தும், அடித்தும், உடைத்தும் நாசம் செய்தார்கள். ஆனால் விநோதமாக வழக்கு வேறுவிதமாகப் சோடிக்கப்பட்டது. கொண்டைகட்டி சமூகத்தவரின் உடமைகளைச் சூறையாடியது மட்டுமின்றி அவர்களில் இருவரைக் கொன்று விட்டனர் கட்டையன் சமூகத்தார் என்று கோர்ட்டில் வழக்குபோடப்பட்டது. இப்படிப் பொய்யாய் ஆங்கிலக்கோர்ட்டார் நம்பும்படி சோடிக்கப்பட்டது இந்த வழக்கு. நகரம், அதன் நீண்ட கடற்கரைக்கும் வெயிலுக்கும் பெயர்பெற்றிருந்தது போலவே அவதூறுகளைப் பரப்புவதற்கும், ரகசியங்களைப் பாதுகாக்காமல் இருப்பதற்கும் பெயர்பெற்றிருந்தது.

கொண்டைகட்டிப் பிரிவினர், தலையில் இரண்டு கோடுகள் போடுவதோடு, தங்கள்தங்கள் குடுமிகளை, நான்கு புறமும் முழுதும் முடியில்லாமல் வழித்தெடுத்த தலையில், கட்டிவைத்திருந்தது போலவே மனதில் வஞ்சகமும் சூதுவாதும் கொண்டவர்கள் என்ற கருத்தை லண்டனில் சட்டம் படிக்கும் தன் தம்பியான பர்ட்டனுக்கு அடிக்கடி கடிதமாய் எழுதியிருந்த நகரின் அமைதிகாக்கும் நீதிபதி ஆர்பத்நாட்டின் முன்னிலையில் இந்தக் கலவர வழக்கு வந்தது. இந்த வழக்கு பல சட்டச்சிக்கல்கள் கொண்டதும் நீதிமன்றத்தின் வரம்புகள் பற்றிய பிரச்சனைகளுடன் தொடர்புடையதாகவும் பல தரப்புக் கருத்துக்களுக்கும் இடம் வைப்பதாகவும் இருந்ததால் அக்காலத்தில் பெரிய பிரச்சாரம் பெற்றது.

கொண்டைகட்டி மக்களின் தலைவர் என்று கூறிக்கொண்டு வந்த மனிதரைப் புடைசூழ நின்று, அவருடைய சமுதாயத்தவர்கள் இடுப்பில் அரிவாளை வைத்துச் செருகியபடி கோர்ட் வாசல் பக்கம் நின்ற புளியமரத்தின் கீழ், தத்தம் முட்டை மடக்கி பிருஷ்டம் தரையில் படாமல் கால்பாதத்தின் முன் பகுதியைப் புல்தரையில் ஊன்றி அமர்ந்திருந்தது பல வெள்ளைக்காரர்களுக்குக் காட்சிப்பொருளானது. கறுப்பு உடலின்மேல் வெள்ளை வெளேர் என்ற (இது அம்மக்களின் தலைவர்கள் மட்டும் அணிந்திருந்த ஆடைகளின் வண்ணம்) ஆடைகளை அணிந்ததால் அவர்களின் முகம் முதலிய உடலின் மேல்பாகம் சூரியவொளியில் மேலும் கறுப்பாகத் தெரிந்தது. கறுப்பு முகத்தின் காதுகளில் கடுக்கண் தொங்கவிட்டிருந்ததுபோல் காதுமடலின் மேல்பாகத்தில் எப்போது வேண்டுமானாலும் மலர்ந்து மணக்கப் போகும் மலரைச் செருகி வைத்திருந்தனர். தலைவருக்குத் தங்கள் சமூக இளைஞர்கள் கெட்டுப்போகாமல் வைக்கும் பொறுப்பு இருப்பதாக எண்ணம். கெட்டுப்போகாமல் இருக்க காதல் செய்யாமல் இருக்க வேண்டும் என்று அவர்களின் சாதிக்குழுவின் சபை அவரவர் ஊர்களில் வேப்பமரங்களின் கீழ் அமர்ந்து பஞ்சாயத்துகூடி முடிவு எடுத்தது. எனவே, காதல் செய்யும் அவர்கள் வீட்டுப்பிள்ளைகளை முதலில் கண்டிப்பது என்றும், அதுவும் சரிபடாதபோது கைகால்களை எடுத்துவிடுவது என்றும் பழக்கம் வைத்திருந்தார்கள். அது சரியான முடிவுதானா என்று இளைஞர்கள் சிலருக்குச் சந்தேகம் வந்தபோது (அவர்கள் சபைகளில் பெண்கள் யாரும் வரக்கூடாது என்பது முன்னோர் பின்பற்றிய வழக்கம் – பின்னால் அதாவது 17-ஆம் நூற்றாண்டிலிருந்து அது விதிமுறையானது) அவர்களுக்கிடையில் இருந்த இரண்டுபேர்,  சமூகக் கவிஞர்கள், அதுசரிதான் என்று இரண்டு காவியங்களை 101 – அடி வீதம் எழுதினார்கள். காவியம் இறுதிவரை புகழ்பெறாமல் மக்கிப்போனது.

வழக்கில் முதலில் அழைப்பது யாரை என்று நகரத்தைப் பரிபாலனம் செய்யும் நீதிமன்றக்குழு முடிவெடுப்பதில் சில நாட்கள் கழிந்தன.

இது கொண்டைகட்டி சமூகத்தினருக்குத் தினம் தினம் நகரத்துக்கு வரும் தேவையை உருவாக்கியது. நகரத்தில் வர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட படகுகளில் இரவுநேரத்தில் மகிழ்வுப் பயணம் செல்லும் கவர்னரையும் அவரது குடும்பத்தையும் கண்டு மகிழ்வதிலும், ஆளுநர் வாழும் தோட்டத்துக்கு உள்ளேயிருக்கும் மாளிகையைக் கள்ளத்தனமாக எட்டிப்பார்ப்பதிலும் கொண்டைகட்டி சமுதாயத் தலைவர்கள் ஈடுபட்டனர். மேலும், 1776-ஆம் ஆண்டிலிருந்தே மதிக்கப்பட்ட நகரமாக அது இருந்ததினால் பிரஞ்சு துருப்புகள் ஒருமுறை பீரங்கி வைத்து உடைத்த பல சிறுசிறு கோட்டைகள் சீர்செய்யப்படாமல் நூறு ஆண்டுகளுக்கு மேல் கடந்தும் அந்த நகரத்தில் இருந்தன. பிரிட்டீஷார் கைக்கு நகரம் மறுபடியும் வந்தபோது கவர்னருக்குத் தோட்டவீடு கண்டுபிடிப்பது கடினமான காரியமாயிற்று. எனவே, துவிபாஷிகள் கோவணம் கட்டிய உடம்பிற்குமேல் வெள்ளை வேஷ்டிகள் தார்பாய்ச்சிக் கட்டியபடி சேலம் வெற்றிலையை மென்றபடியும் திருச்சி சிகரெட் பிடித்தபடியும் கவர்னருக்குத் தோட்டவீடு தேடுவதில் ஒரு காலத்தில் மும்முரமாக ஈடுபட்டிருந்த சரித்திரம் கொண்ட ஊர் இது. இறுதியில் அந்த நகரின்முதல் கவர்னருக்குப் பிரஞ்சு மாலுமியான லூயி தெமோண்ந்த் என்ற பிரமுகரின் விதவையான அந்தோனியோ தெமோண்ந்த் என்பவரிடம் இருந்த பெரிய வீடு பல ஆயிரம் வராகன் விலையில் வாங்கப்பட்டது என இந்த நகரத்தின் சரித்திரம் கூறுகிறது.

வழக்கில், ஏழைகளான கட்டையன் சமூகத்தினர் சாமானியமானவர்களாய் நடந்து கொண்டனர். வெள்ளைக்காரர்களைப் பார்த்தபோது ஓரமாக ஒதுங்கிநின்று வழிவிட்டார்கள். கைகளால் வாயைப் பொத்தியபடி வாய்நீரை பக்கத்துச் சுவர்களில் உமிழ்ந்தார்கள்; அடிக்கடி பயந்தார்கள். கட்டையன் சமூகத்தினருக்குத் தாங்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் இருந்ததால் தங்கள் எதிரிகளான கொண்டைகட்டி சமூகத்தவர்களால் தங்கள் சமூகத்தின் இரு இளைஞர்களின்  ஆண்குறிகள் வெட்டப்பட்டதை மன்னித்துவிடலாம் என்ற எண்ணமே  இருந்தது. ஆனால், வெள்ளைக்கார மருத்துவர் ஜான்போப் என்பவர் கிறிஸ்தவ எண்ணங்களால் உந்தப்பட்டு, கட்டையன் சமூகத்தவர் மத்தியில் ஏசுகிறிஸ்துவையும் பைபிளையும் பரப்பிக்கொண்டே ஓய்வுநேரத்தில் தொழுநோயாளிகளுக்கு ஒரு மருத்துவமனை உருவாக்கிச் சேவையும் செய்கிறவர் – வேறு ஏதோ தன்மனதில் யோசித்ததால் வழக்கு மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. ஜான்போப் பெப்ருவரி மாதம் 16-ஆம் தேதி தன் கண் முன்பு கலவரம் நடந்ததென்று – தன் போலியோ கால்களால் நொண்டியபடியே நடந்து வந்து சாட்சி சொல்ல வந்தார். பட்டணத்தில் இந்த வழக்கு எல்லோர் வாயிலும் அவலாக மெல்லப்பட்டது. ஜான்போப் முன்வந்து சாட்சி சொல்லியதால் வழக்கு மிகவும் பலமான ஒன்றாக மாறிவிட்டது. கட்டையன் சமூகத்து இளைஞர்கள் இருவரும் நாட்டுமருத்துவரான பண்டிட் ஒருவரும் (இவருடைய தந்தை பிரஞ்சு துரை ஒருவரின் சமையலறையில் நல்லபடி மாட்டுக்கறி சமைத்ததால் மிஸஸ்லா போர்தனெ என்ற அம்மாது அவரை அடிக்கடி மெச்சியதோடு பழைய பிரஞ்சு இலக்கியத்தில் வரும் சமஉடமைக் கருத்துக்களையும் போதித்தார்) ஆக மொத்தம் ஜான்போப்பையும் சேர்த்து நான்குபேர் தாழ்த்தப்பட்ட கட்டையன் சமூகத்தவர் கொலையில் ஈடுபடவில்லை என சாட்சி சொன்னார்கள்.

வழக்கு நடந்த இடத்துக்கு இரண்டு பர்லாங் தூரத்தில் கவர்னரின் குதிரை மெய்க்காப்பாளர்கள் வசிக்கும் பெரிய வீடுகள் கர்னாடகத்திலிருந்து வந்த பேரிகெம்பையாவின் இளைய சகோதரரான பெரியநாயுடுகாருவுக்குச் சொந்தமாக இருந்தது.  ஜான்போப் ஏழைகளான கட்டையன் சமூகத்தவர் பயந்த சுபாவம் உள்ளவர்களாகையால், அவர்கள் தன் பாதுகாப்பில் இருப்பதே நல்லது என்று நினைத்ததால் கவர்னரின் குதிரை மெய்க்காப்பாளர்களின் வீட்டுக்கு அருகில்  இருந்த லாயத்துக்கு எதிரில் உள்ள வீட்டில் எல்லோரும் தங்குவதற்கு ஏற்பாடு செய்தார்.

வழக்கில் புள்ளிவிவரங்கள் இப்போது மாறின. நடந்த கலவரங்களை, இப்படி விவரித்தார்கள்: ஏழைகளான கட்டையன் சமூகத்தவரின் நூற்றைம்பது குடிசைகளும் – அவை ஓலையால் வேயப்பட்ட 10 அடிக்கு எட்டடி அகலமுள்ளவை- மேலும், நான்கு கூரைஓடுகள் உள்ள வீடுகளும் எரிக்கப்பட்டன என  முடிவு செய்யப்பட்டது. முப்பத்தேழு ஆடுகள் (நான்கு கருவுற்றிருந்தன) எட்டு பசுக்கள் (இரண்டு கருவுற்றிருந்தன என்பதைச் சாட்சிகள் ருசுப்படுத்தவில்லை) நூற்று ஆறு பூனைகள் –( 25 பூனைகள்,அதில் பிறந்து  ஓரிரு நாட்கள் ஆனவை  எரிக்கப்பட்டிருந்தன.

கலவரத்தினால் பாதிக்கக் கூடாது என கலவரத்த்துக்கு முன்பே மேல்சாதியினரின் வீடுகளில் இருந்த அவர்கள் ஆபரணங்களையும் அரிவாள், கடப்பாரை, வீட்டிலுள்ள நெல்மூட்டைகள் போன்றன  வண்டிகளில் ஏற்றப்பட்டதைப் பார்த்த கீழ்ச்சாதியினரின்  நாக்குகள் கூர்மையான சவரக்கத்தியால் அறுத்தெறியப்பட்டதையும், அவர்களுக்குத்தானே சிகிச்சை செய்ததையும் மருத்துவர் ஜான்போப்  – உறுப்புகளின் ஆங்கிலப் பெயர்களுடன் விளக்கியது மிகச்சிறந்த ஆதாரங்களாக, அவரைப்போலவே உறுப்புக்களின் பெயரை உடல் சாஸ்திரத்தில்  படித்திருந்த நீதிபதிகளால் எடுத்துக்கொள்ளப்பட்டன.

நீதிபதியாக இருந்த ஆர்பத்நாட் என்பவர் ‘ஓ மை ஹாட்’ என்று விசனம் அடைந்தது ஒரு சாட்சி இப்படி கூறியபோது தான்:

“அய்யா, எசமானர்களே மிகவும் கொடிய காரியம் என்று நான் கூறுவது – ஒரு குடிசையில் ஒரு தாய் குழந்தை பெற்றுக்கொண்டிருக்கிறாள் என்பதையும் பொருட்படுத்தாது, கலகக்காரர்கள் தாய்வயிற்றிலிருந்து வந்துகொண்டிருந்த பச்சைக்குழந்தையும் அதன் தாயையும் அங்கிருந்த மருத்துவச்சியையும் கரிக்கட்டையாய் போகும்படி எரித்த காட்சிதான்”.

“கையில் வெள்ளைத் துணியைக் கட்டிய நான்குபேர் ஒரு வரிசையில் இருந்த தாழ்த்தப்பட்டவர்களின் பத்துக்குடிசைகளை ஈவிரக்கமின்றித் தங்கள் கையில் பிடித்தபடி இருந்த பனைஓலைகளால் ஆன தீப்பந்தத்தால் எரித்தபோது தான், அந்த கொடூரமான சம்பவம் நடைபெற்றது”.

எதிர்தரப்பில் நின்றிருந்த மேல்சாதிக் கொண்டைகட்டி சமூகத்தின் தலைவன் ஏதும் பேசாமல் அப்போது நின்றான். நீதிபதி   ‘ ‘அப்படி ஒரு சம்பவம் நடந்ததா?’” என்று கேட்டதை துவிபாஷி மொழிபெயர்த்தார்.

இன்னொரு சாட்சி, கட்டையன் சமுகத்தினரின் எரிந்துபோன பயிர்களைப் பட்டியல் இட்டார். பத்து பலா மரங்களும் முழு பலாக்கனிகளுடன் எரிந்ததையும் வாழை மரங்கள்  வாழைக்கன்றுகளுடன்  எரிக்கப்பட்டதையும் விளக்கினார். கொடுமையான காட்சியான நெருப்பில் பொட்டித்தெறித்த பானைகள், அரிசி, தானியம் போன்ற உணவுப்பொருட்கள் – படுப்பதற்காக  வைத்திருந்த ஓலைப்பாய்கள் ஆண், பெண், குழந்தைகளின் ஆடைகள் எரிந்து கரியாகிப் போனதையும் கூறினார் அந்த சாட்சி.

வழக்கை நடத்திக்கொண்டிருந்த நகரத்தின் கட்டடங்களின் இந்தோ – சராசனிக் பாணியும்   கடற்கரைப்பட்டணமான அவ்வூரில் கப்பல்களை வழிமாறிப்போகாதபடி ஆங்காங்கே பாதுகாக்கும் (நோக்கம் பெரியது) பல்வேறு வகையான கலங்கரை விளக்கங்களும் நீண்ட பூங்காக்களும் அடிக்கடி மகிழ்ச்சி தோன்றும்போதெல்லாம் ஊர்வலம் போகும் கவர்னரும் அந்நகரத்தின் முக்கியக் கவர்ச்சிகளாகும்.  மேற்கத்திய அறிவையும் சட்ட நுணுக்கத்தையும் நீதி போதனையையும், தொழில்நுட்பம், வியாபார அறிவு போன்றவற்றையும் அடையாளமாகக் கொண்டு  விளங்கிய வழக்கு மன்றத்தில் அன்று மிகப் பெரிய கூட்டம் காணப்பட்டது. அதற்கான காரணம் அந்த இரண்டு கொலைகள். மேல்சாதிக் கொண்டைகட்டிகள் மிகுந்த கோபத்தோடு காணப்பட்டார்கள். அவர்கள் வழக்காடுவதற்காக நியமித்திருந்த ஜார்ஜ் சார்ட்ரீஸ் என்ற வக்கீல் பல புகழ்பெற்ற வழக்குகளை வாதித்து வென்றவர். கூம்புகளும் வட்டவடிவமும் கொண்ட அந்த நகரத்தின் கட்டடங்கள், புதிய சாலைகள், நீண்ட கடற்கரை – இவற்றின் அழகில் மயங்கியபடி தன் அழகான குதிரையை ஒருமணிநேரம் ஆசைதீர ஓட்டிவிட்டு மாளிகையில் போய் குளித்த பின்பு தன் நூலகத்தில் போய் அடுத்த நாள் நடக்கப்போகும் கொண்டைகட்டிகளின் வழக்குக்கான சட்டக்கருத்துக்களைத் தேட ஆரம்பித்தார் ஜார்ஜ் சார்ட்ரீஸ். வழக்கு வென்றால் அவருக்கு அளிக்கப்படப் போகும்  ரண்டு கருத்த பெண்கள் பற்றிய ஆசையும் அவர் மனதின் ஓரத்தில் சந்தோசம் தரத் தவறவில்லை.

கலவரத்தில்  கொண்டைகட்டிகளில் இருவர் பிணமாய்  விழுந்திருந்ததால்  ஏழைக்கட்டையன் சமூகத்துக்கு ஆதரவாய் வந்துள்ள ஜான்போப் கூட தங்களுக்குச் சாதகமாக வழக்குத் திரும்புவது கடினம் என யோசிக்குமளவு வழக்கு சிக்கலானதாகக் காணப்பட்டது.எனினும் கட்டையன் சமூகத்தவர்கள் இரண்டு கொலைக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை, தங்கள் வீடுகளும், ஆடுமாடுகளும் பயிர் பச்சைகளும் மரங்களும் நெருப்புக்கிரையாகின என்ற உண்மையை ஆங்கில நாட்டு ராணியின் தர்மத்தைப் பரிபாலிக்க வந்திருப்பவர்கள் நிலைநாட்டத் தவறமட்டார்கள் என்ற அடிப்படையில் தங்களுக்குள் விவாதித்தார்கள்.

ஏழைபாழைகளான இத்தகைய கட்டையன் சமூகத்தவரின் நம்பிக்கை அவர்களின் விரோதிகளான கொண்டைகட்டி சமூகத்தவர்களிடம் கோபத்தை உண்டு பண்ணியது. அது நிதர்சனமாக நீதிபதிக்கும் மருத்துவர் ஜான்போப்புக்கும் புரிந்தது. நியாயத்தை நிலைநாட்ட வேண்டும் என்று ஆங்கில மருத்துவர் ஜாண்போப் உறக்கமின்றி உழைத்தார். ஓரிரு கட்டையன் சமூகத்து இளைஞர்கள் மட்டும் வெள்ளைக்கார மருத்துவருக்கு உதவினார்கள். மருத்துவ பரிசோதனையில் கொண்டைகட்டி சமூகத்தவர் இருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அப்படியெனில் அது கட்டையன் சமூகத்தவர்களின் செயலேதான் என்ற பொய்யான முடிவே கிடைக்கும். மனிதர்களை இயற்கை நியதியும் காலமாற்றத்துக்குட்படாது சதா இருந்து கொண்டிருக்கக் கூடிய மாறாத நீதியும் தம் கரத்தால் காப்பாற்றும் என்ற நம்பிக்கை பரவி இருந்த காலம் அது. ஆகையால் அநீதி கோலோச்சி விடும் என்ற பயம் பெரும்பாலும் இல்லை.

அதனாலோ என்னவோ ஏழைகளாகவும் சாதுக்களாகவும் வாழ்ந்த கட்டையன் சமூகத்தவர்களுக்கு இறுதியில் நீதி கிடைத்தது. கட்டையன் சமூகத்தவர்கள் மீது அநியாயமாய் பெரிய வன்முறையைக் கட்டவிழ்த்தது கொண்டைகட்டி சமூகத்தவரே என்பது நீருபணம் ஆயிற்று. தாயையும் குழந்தையையும் அத்துடன் பேறுபார்க்க வந்த மூதாட்டியுடன் எரித்துக் கரிக்கட்டை ஆக்கியவர்களை வழக்குமன்றம் கண்டுபிடித்தது. வீடுகளைத் தீக்கிரையாக்கியவர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டன. யார்யாருக்கு என்ன தண்டனை என்று கோர்ட் தீர்ப்புச் சொல்லியபோது கட்டையன் சமூகத்தார் நியாயம் கிடைத்தது என நிம்மதி அடைந்தனர். எனினும் கொலைபற்றிய முழுத் தீர்ப்பு  உடனே வெளிவராததால் உண்மையில் கொண்டைகட்டி சமூகத்தினரின் இரண்டு பிணங்கள் விழுந்ததற்குத் தங்கள் சமூகத்தவர்கள் காரணமாயிருந்திருக்கலாமோ என்றே நினைத்தனர் .  பெரிய களேபரத்தில் அந்த இரண்டு கொண்டைகட்டி ஆட்கள் தங்கள் சமூகத்தவரால் கொல்லப்பட்டிருக்கலாமோ என்றும் ரகசியமாய் பேசிக்கொண்டனர் கட்டையன் சமூகத்தவர்கள்.

ஆனால் இறுதியில் உண்மை வெளிப்பட்டது. கொண்டைகட்டி சமூகத்தினரே அவர்கள் சமூகத்தில் இருவர் சாகக் காரணமாயிருந்தார்கள் என்று தீர்ப்பு வாசிக்கப்பட்டபோது கோர்ட்டில் அமைதி அதிக நேரம் பரவியது.  அந்த தீர்ப்பை யாரும் எதிர்பார்க்கவில்லை. நடந்த விஷயங்களைக் கோர்ட்டு தீர்ப்பு விவரித்தபோது கொண்டைகட்டி சமூகத் தலைவர் தலைகுனிந்து நின்றார். “சொந்த சமூகத்தைச் சார்ந்த  இரு மனிதர்களைக் கொன்றவன் இதோ நிற்கிறான்” என்று மிகுந்த கோபத்துடன் வெள்ளைக்கார நீதிபதி முன்பல் ஒன்றில் புழு விழுந்திருக்கும் அந்த சமூகத்துத் தலைவர் என்று பேரும் புகழும் பெற்ற மனிதரைச் சுட்டிக்காட்டினார்.

ஆனால் யாருக்கும் எப்படி நீதிபதி இந்த முடிவுக்கு வந்தார் என்பதை அறிவதில் ஆர்வம் இருக்கவில்லை. ஏனெனில் மேல்நாட்டு மனிதர்களின் நடைமுறை ஏதும் சுயநாட்டு மக்களுக்குப் புரியாமலே காரியங்கள் நியதிபோல் நடந்த காலம் அது.

*                               *                                            *                            *

இது பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடந்த கதை.  நான்கு கலவரங்கள் அந்த மக்களுக்குச் சுதந்திரம் கிடைத்த பின்பும்கூட அச்சடையாளமாய் இதுபோலவே நடந்ததனை ஆய்வு செய்த, மத்திய வயதைக் கடந்த சமூகவியல் ஆய்வாளர் ஒருவர், பழைய நூலகங்களில்போய்  இந்தச் சமூகங்களின் மோதல் வரலாற்றைப் படிக்கப் பழைய வழக்குகளைப் பூரணமாக ஆய்ந்தார். அப்போது ஒருநாள் விநோதமான ஒரு பழைய வழக்கையும் அதன் தீர்ப்பையும் படித்து சமீபத்தில் நடந்தது போலவே சுமார் இரு நூறு ஆண்டுகளுக்கு முன்பும் ஒரு பெப்ருவரி மாதம் பதினாறாம் தேதி அதே தந்திரத்தைப் பயன்படுத்தி 2 பேர் கொலை செய்யப்பட்டிருப்பதை அறிந்து மிகவும் திக்பிரமை அடைந்தார். ஆய்வாளருக்கு ஏதும் புரியவில்லை.

ஆண்டுகளையும் கோர்வையற்ற நிகழ்ச்சிகளையும் ஒழுங்கில்லாமல் அடுக்கி, தந்தையும் தாத்தாவும் மகனும் ஒரே (கடவுளின்) பெயரை மீண்டும் மீண்டும் வைக்கும் மரபுள்ள அச்சமூகத்தில் வரலாற்றைக் கண்டுபிடிக்கும் ஒரே நோக்கத்தினால் ஆய்வாளர் இறுதியல் வந்தடைந்த முடிவுகள் எல்லோரையும் பயங்கரமும் திக்பிரமையும் அடையவைத்தன.

சமீபத்தில் அதாவது சட்டசபைகளும், நாளிதழ்களும், டி.வி.க்களும் வந்து விட்ட இன்று இரண்டு கொலைகளைத் தாங்களே செய்துவிட்டு எதிரிச் சமூகத்தின் மீது சுமத்தியதுபோல் அன்றும் செய்த தந்திரத்தை ஆய்வாளர் கீழ்வருமாறு பல குறிப்புக்களை இணைத்து எழுதினார்.

கலவரம் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே கொண்டைகட்டிச் சமூகத்தவர்கள் வாழும் பகுதியில் பஞ்சாயத்தினர் கூடும் செல்லிஅம்மன் கோயில் முன்புள்ள சத்திரத்தில் முக்கியமான எல்லோரும் கூடினார்கள். முன்பல்லில் புழுவிழுந்த சமூகத்தலைவர், “வெள்ளைக்கார துரைமார் நியாயத்தைக் கண்டுபிடிப்பதில் நிபுணர்கள், சதா கடிகாரங்களையும் மணிக்கூண்டுகளையும் கலங்கரை விளக்கங்களையும் கொண்டிருக்கக்கூடிய இந்த நகரத்தில் வெள்ளைக்கார துரைமாரின் நியாய உணர்வை வெல்ல வேறு எந்தச் சக்தியும் இல்லாததால் கவனமாக நாம் நடந்துகொள்ள வேண்டும்” என்று கூறிவிட்டு  உடுத்திய வெள்ளைத் துணியைத் தூக்கி வெறும்பிருஷ்டம் பட அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து இருளில் மெதுவாய் நடந்து மறைந்தார். இந்த திட்டம் ஏதும் அறியத்தேவையில்லாத ஜார்ஜ் சார்ட்ரீஸ் வழக்கமாய் தான்பார்க்கும் அச்சமூகத்தின் வழக்குகள் வரும்போது கிடைப்பதுபோல் கருப்புப்பெண் கிடைக்கப் போகும் நினைவுடன் ஆழ்ந்த உறக்கத்தில் கிடந்தார்.

நம்பமுடியாத காரியங்கள் நடந்தன.இருவர் தாங்களாகவே முன்வந்து தத்தம் உயிரைப் பலியிடத் தயார் செய்யப்பட்டனர். அவ்விருவருக்கும் ஊரின் பெரிய கிணற்றுக்கு அருகில் நிற்கும் ஆலமரத்துக்குக் கீழ் இரட்டைக்கல் உருவங்களாய் நினைவுச்சின்னம் எழுப்பி வருடம்தோறும் விழா எடுக்கப்படும்  என்று ஊர்பிரதானிகள் வெத்திலை பாக்கு உள்ளங்கையில் வைத்து உறுதிமொழி எடுத்தனர். ரகசியமாய் நடக்கப்போகிற விபரங்கள் பலிகொடுக்கப் பட இருக்கும் இருவருக்குச் சொல்லப்பட்ட பின்பு அந்த இருவரும்தெய்வம் ஏறியவர்கள்போல் ஒன்றாய் அலைந்தனர். அவர்கள் வீட்டாருக்கும் ஏதும் தெரியாது. கலவரம் தொடங்கிய அன்று கம்பு, கத்தி, தீப்பந்தத்துடன் கலவரத்தில் ஈடுபடும் கட்டுமஸ்தான உடல் உள்ளவர்களுக்கு நம் சனங்கள் என்று அடையாளம் அறிவதற்காய் எல்லோருக்கும் வண்ணானிடம் நீலம் போட்டுத் துவைக்கப்பட்ட புதிய வேட்டிகள் கொண்டுவந்து அவற்றைச் சிறுசிறு துண்டுகளாய் கிழித்து அடையாளம் கட்டிக் கொள்வது கலவரங்கள் நடக்கும் போது வழக்கம்.  இப்போது அப்படி எல்லோருக்கும் அடையாளத்துணி கட்டியவர்கள் கொலை செய்யப்படப் போகும் இந்த இருமனிதர்கள்தாம்.

கலவரம் நடந்தது பற்றி பல தாக்கலைகள் வெள்ளைக்கார நீதிபதியான ஆர்பத்நாட்டின் நீதிமன்றத்தில் பாதுகாக்கப்பட்டதால் கொலையைப்பற்றி ஆய்வாளர் இப்படிஎழுதினார்.

கத்தியோ, இரும்பு வஸ்துகளோ பயன்படுத்தாமல் சொந்த சாதியினரே நெல்லிமரத்தின்கீழ் இருவரையும் கைகாலைக் கட்டி வைத்துப் பலர்சேர்ந்து தத்தம் கைகளால் ஓங்கிஓங்கி மிக அதிகமான பலத்துடன் அடித்தனர். ஒவ்வொரு முறை அடிக்கும்போதும் ஏதேனும் குரல் வருகிறதா என்று கவனித்துப் பார்த்தபோது இருவரும் எந்த ஒலியும் எழுப்பவில்லை. இறுதியாய் குப்புறப்போட்டுப் புளியமரக்கிளைகளால் அடித்தவுடன் இருவரும் இறந்திருக்க வேண்டும். ஒருவனின் கண்மட்டும் வெளியே பிதுங்கி  இரத்தம் வடிந்திருந்தது. எந்த ஒலியும் வெளிப்படாத அளவு எதிர்சாதி மேல் குரோதமும் வன்மமும்  அவ்விருவரையும் ஆக்கிரமித்திருந்தது. அவர்கள் சம்மதத்துடன் அடித்துக் கொன்ற இடம் எதிரிச் சாதியான கட்டையன் சமூகத்தவர்கள் வாழும் பகுதி என்பதை கட்டையன் சமூகத்தவர்கள் மறுநாள் காலையில் கண்டனர். பிரிட்டிஷ் உயர்போலீஸ் அதிகாரி ஒருவர் குதிரை பூட்டிய ஜட்கா வண்டியில் வந்து வழக்கமாய் சாதுவானவர்களானாலும் ஏதோ கோபத்தால் கட்டையன் சமூகத்தவர் கொண்டைகட்டி சமூகத்திலிருந்து இருவரைக் கொன்றிருக்கிறார்கள் என்ற ஆராய்ந்து பார்க்காத தன் ஐயத்தை முடிவாய் எழுதி வைத்தார்.

இதுபோல் நிறைய இடைவெளிகளும் யூகங்களும் கொடூரமும் நிறைந்த கதையைப் பிற்காலத்தில் யாரும் நினைவில் கொள்ளவில்லை என்பது பொதுவாய் மக்களின் ஞாபக மறதியைச் சுட்டுவதோடு அவர்களின் முட்டாள் தனத்தையும் சுட்டுகிறதென்று மத்திய வயதைக் கடந்த அந்த ஆய்வாளர் தனது முடிவைத் தெரிவித்திருந்தார்.

எழுதப்பட்டிருந்த  ஜான் ஸ்டுயர்ட்டின் கதை

 

சிறுகதை

 

நமக்குக் கற்பனைவளம் இருக்கிறது என்றால், லண்டனில் 1559-ஆம் ஆண்டில் இருந்த  முக்கியமான நகரங்களில் ஒன்றான ப்ளைமவுத் பற்றிக் கற்பனை செய்யமுடியும்.

ஏனென்றால் கடலுக்குச் சென்று செல்வம் ஈட்டியவனும் ப்ளைமவுத் வாசியுமான பதினாறாம் நூற்றாண்டின் கப்பல் காப்டன்களில் ஒருவன் எனத் தன்னுடைய ஊரில் பெயர்பெற்றிருந்த காப்டன் ஜான் ஸ்டுயர்ட், உலகில் பலப்பல நகரங்களில் வாழ்ந்தாலும் கடவுள் பக்தி கொண்ட தன்னுடைய தாயின் சொல்லைத் தட்ட முடிந்ததில்லை. அதனால் உலகின் எந்தக் கடற்காற்றில் அவனது முகத்தின் தோல் ஸ்பரிசம் கொண்டாலும் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் தாயிடம் வாக்குக் கொடுத்தது போல்  ப்ளைமவுத்திற்கு வந்துவிடுவான். அப்படி வந்து அங்கு உள்ள சர்ச்சில் அவளுடன் சேர்ந்து ஞாயிறு ஒன்றின் காலை வேளையில் பாதிரி கொடுக்கும் திவ்ய நற்கருணையை அவன் புசிக்காமல் இருந்ததில்லை.

ஒரே ஒருமுறை – ஜான் ஸ்டுயர்ட் தன்  தாயிடம் சொன்னதுபோல் லண்டனுக்குப் போகாததற்கு விதியைத் தான் காரணமாகச் சொல்லலாம்;  ஆனால், அந்தக் காலத்தில் ஆக்ஸ்ஃபோர்டில் நாத்திகப் பேராசிரியர் என்று பிரபலமாகியிருந்த மிஸ்டர் மில் என்பவருடைய ஓரிரு சொற்பொழிவுகளைக் கேட்டிருந்த ஜான் ஸ்டுயர்டுக்கு  விதி பற்றிய கருத்தில் உடன்பாடில்லை. அப்படி என்றால் தாய் சொல்வதற்கு எதிர்ப்புக் கூறாமல் சர்ச்சுக்கு, ப்ளைமவுத்தின் பெரிய பங்களாக்கள் (கடந்த 50 ஆண்டுகளில் பழைய, சிறிய, வீடுகள் பெரியவைகளாக விஸ்தரித்துக் கட்டப்பட்டு வருகின்றன) கொண்ட தெருவழி தாயின் கையைப் பற்றியபடி இன்னும் திருமணம் செய்ய நேரமில்லாத ஜான் ஸ்டுயர்ட் போவதற்குக் காரணம், அவனால் தன் தாயிடம் பேராசிரியர் மில்லின் கருத்துக்களைச் சொல்லி அதற்காகத் தாய் முழுந்தாள் போட்டு நெஞ்சில் சிலுவை அடையாளம் செய்து உரக்க அழுவதைப் பார்க்கத் தைரியமில்லாததால் தான். அதனால் ப்ளைமவுத்தில் ஜான் ஸ்டுயர்ட் இருக்கும் எந்த ஞாயிற்றுக்கிழமையும் தாயுடன் சர்ச்சுக்குப் போகாமல் இருந்ததில்லை.

 

ஒரே ஒருமுறை தாயிடம் சொல்லியதுபோல் இங்கிலாந்து திரும்ப முடியாததற்கு அந்த முட்டாள் கோழிக்கோட்டு சமாரினுடைய போர்வீரர்கள் செய்த மடத்தனம்தான் காரணம். எனினும், காப்டன் தாயை நினைத்து மிகவும் வருந்தாததற்குக் காரணமிருந்தது. போனதடவை ஆப்பிரிக்காவிலிருந்து அழைத்து வந்த பன்னிரண்டு வயது அடிமையைத் தாய்க்கு மிகவும் பிடித்துவிட்டது. தன் அடிமையைக் கடவுள் பற்றிய அறிவு இல்லாதவனாகத் தாயால் பார்க்கமுடியாததால் அவனை ஞானஸ்நானம் செய்வித்து கிறிஸ்தவனாக்கியதோடு அவளது பள்ளித் தோழியான மிஸஸ் டங்கனை, அந்த ஒல்லியான தேகமும் ஆறு விரல்களும் கொண்ட யாக்கப்புக்கு ஞானத் தாயாகவும் நியமித்தாள். அன்று சர்ச்சில் பாதிரியார், கோபர்னிக்கஸ் என்பவன் சொல்லுவதுபோல் சூரியனைச் சுற்றித்தான் பூமி சுழல்கிறது என்ற கருத்தை யாரும் நம்பக்கூடாது; அது பைபிளில் இல்லாத கருத்து என்றார்.

கள்ளிக்கோட்டை சமாரினால் சிறைசெய்யப்பட்ட ஜான் ஸ்டுயர்ட்,  கொட்டைப் பாக்கையோ, கிராம்பையோ, ரப்பரையோ, மிளகையோ, பிற கப்பல்காரர்கள் போல் திருடாவிட்டாலும்  அவன் திருட விரும்பிய வேறு ஒரு பொருள்.  அதுபற்றி சக கப்பல் காப்டன்கள் அரசல்புரசலாய் பேசிக் கொண்டது நம்பக்கூடியதாகத் தான் இருந்தது.

ஜான் ஸ்டுயர்ட் நாத்திகத்தில் நம்பிக்கை வைத்ததுபோல் சமாரினுடைய கள்ளக்காதலியாய் அதிக தென்னைமரங்கள் வளர்ந்திருந்த, அரபிக்கடலின் தீவு ஒன்றில் வாழ்ந்து கொண்டிருந்த கறுப்புநிறமுள்ள கிழக்கத்தியப் பெண் மீதும் நம்பிக்கை வைத்திருந்தான் என்பதே அந்தச் சக கப்பல் காப்டன்களின் கருத்து.

எது எப்படியோ, ஜான் ஸ்டுயர்ட் யாருக்கும் தெரியாமல் மூன்றுமாதம் சமாரியனின் சிறையிலிருந்துவிட்டு லண்டனுக்குச் சென்றபோது, இரட்டை நாடியுடன் பெருத்த உடம்பைத் தூக்கிக்கொண்டு நடமாடிய அவனுடைய தாயிடம் தொடர்ந்து பல பொய்களைச் சொல்லவேண்டியதாயிற்று.  சிறுவயது அடிமையான யாக்கப்புடன் அவர்கள் வீட்டின் பல ஆண்டுகளாக நம்பகமான இன்னொரு அடிமை வேலை பார்த்தான். வயது எத்தனை என்று அறியாத, பற்களில் புழுவரிப்பால் அடிக்கடி படுத்துக்கொண்டு அழும், தலைமுடி நரைத்த அடிமையான ராபின்சன் வழக்கம்போல் ஸ்டுயர்ட்டின் பொய்களைக் கண்டுபிடித்து ஸ்டுயர்ட் சார்பில் ஏசுவிடம் மன்னிப்புக் கேட்டான்.

பல பொய்களில் ஒன்று – தாய்க்குப் பிடிக்கும் என்பதால், பல இந்துக்கள் அவர்கள் வழிபடும் பாம்பையும் கல்லையும் விட்டுவிட்டு நிஜமான கடவுளை வழிபடச் செய்வதற்காக ஒரு சர்ச்சைக் கட்டுவதற்கு அரபியக் கடற்கரையோரம் ஒரு ஏக்கர் நிலம் வாங்கிச் சர்ச் ஒன்று கட்டும் பூர்வாங்க வேலைகளைச் செய்துவிட்டு வருவதால் இங்கிலாந்துக்கு வருவதற்குத் தாமதம் ஏற்பட்டது என்பது. அத்துடன் கடற்கொந்தளிப்புப் பற்றியும் அதனால் தன் கப்பலில் ஏற்பட்ட கோளாறுகளை அராபியக் கடற் கொள்ளையர்களுடன் நட்புபாராட்டி  சீர்செய்தது பற்றியும் ஜான் ஸ்டுயர்ட் தடுமாறாமல் – பொய்யென்று தோன்றாதவாறு தாயிடம் அன்பு இழையோடும் குரலில் சொன்னான்.

வயதான, அடிமை ராபின்சன் ஸ்டுயர்டின் தாயின் ஆடையைத் துவைத்தபடி இருந்த சின்னப்பையனான அடிமை யாக்கப்பை ஒருவிதமாய் ஓரக்கண்ணால் பார்த்ததை இப்போது ஸ்டுயர்ட் கடைக்கண்ணால் கவனித்தான். ராபின்சனுக்கு நல்லவர்களின் மனதில் என்ன எண்ணங்கள் வந்து போகும் என்பது தெரியாவிட்டாலும் பொய்யர்கள், கபடதாரிகள், சதிகாரர்கள், பெண்களோடு வெறியுள்ளவர்கள், வீடுகளில் சமையலறையில் உணவுப் பண்டங்களைத் திருடுபவர்களின் மனதில் ஓடும் சிந்தனைகளை அறியும் விசேஷ திறமை இருந்தது.

தன் தந்தையால் விலைக்கு, ஸ்பெயின் கப்பல் காப்டன் ஒருவனிடமிருந்து எண்ணூறு டாலர்கள் கொடுத்து வாங்கிக் கொண்டுவரப்பட்ட ராபின்சனுக்கு அந்தத் திறமை உண்டு என்பதைப் பல ஆண்டுகளாய் அறிந்திருந்தான் ஸ்டுயர்ட். குதிரைக் கொட்டகையில் சாணத்துக்கிடையில் தலையில் வலது கைவைத்து சல்யுட் அடித்தபடி மேலாடையில்லாமல் உடம்பில் சதக்சதக் என்று விழும் பெல்ட் அடிகளைத் தடுத்தபடி ஆங்கிலத்தில் “தாயிடம் சொல்லமாட்டேன் எஜமான்” என்று மீண்டும் மீண்டும் சபதம் செய்ததை நம்பக்கூடாது என்பது ஸ்டுயர்டுக்குத் தெரியும். அந்த அளவு தன் தாய் மீது பற்று அவனுக்கு. அவள் கேட்டால் சொல்லிவிடுவான்.ஆங்காங்கு வெளிப்படும் இரத்தத்தை ராபின்சன் வலது கைபெருவிரலால் துடைத்து துடைத்து, நாவில் ஒற்றியபடி எழும்பும்போது ஸ்டுயர்ட் அகன்றான் அங்கிருந்து.

அப்போது ஸ்டுயர்ட், “பரவாயில்லை உன் ஆங்கிலம் முன்னேற்றம் கண்டுள்ளது, அதனால் இப்போது உன்னை விடுகிறேன்” என்று சொன்னான்.

தூரத்தில் மரத்தில் மேல் ஏறி ஒளிந்து எல்லாவற்றையும் தன் பெரிய கண்களை மரத்தில் சேர்த்து வைத்து உடம்பை மறைத்தபடி பார்த்துக்கொண்டிருந்த இளைய வயது அடிமையான யாக்கப்பை ஸ்டுயர்ட் அப்போது கவனிக்கவில்லை.

தன்மகனை உத்தமனாகக் கிறிஸ்தவ நெறி தவறாமல் வளர்ப்பதற்கு அவனுடைய பத்துவயது வரை உதவிவிட்டுக் காலரா பரவிய தேசம் ஒன்றிலிருந்து உயிரின்றித் திரும்பிய தனது கணவன் மீது மீண்டும் அந்த ஆங்கில மாதுவுக்கு அன்பு  தோன்றியது. அன்பு தோன்றும்போது, தனது பங்களாவின் நடுக்கூடத்தில் கோவாவிலிருந்து கொண்டுவந்த யானைத் தந்தங்களால் ஆன சட்டமிட்டு உயரமாய் மாட்டப்பட்டிருக்கும், சமீபத்தில் பலர் வீடுகளில் காணப்படும், அச்சிட்ட கறுப்பு வெள்ளையாலான ஏசுவின் இருதயம் ஒன்றைப் பார்த்து ஜெபம் செய்ய ஆரம்பித்தாள். தன் தோழர்களுடன் பணம் வைத்துச் சூதாடும் இரகசிய இடத்துக்குப் போகும்போது ஸ்டுயர்ட் தனது ஞானத்தாயிடம் தந்தையான பாதிரி கிறிஸ்டோபரைப் பார்த்து வருவதாய்  பொய்சொல்லிவிட்டுப்  பிளைமவுத்தில் புதிதாய் நடைபாதை போட்டிருந்த ரோட்டில் மிடுக்காக நடந்தான்.

1716-இல் வாழ்ந்த தெரதள் என்ற  இளம் பெண் இங்குக் கதையில் நுழைகிறாள்.

தனது மூதாதையர்களைப் பாத்திரமாக வைத்து எழுதபட்ட,  அவ்வளவு சிறப்பில்லாததும், ஆனால் தன் குடும்பத்தின் முக்கியமான நபர்களைப் பாத்திரமாக வைத்து எழுதப்பட்டதால் தனது குடும்பத்தின் மூத்தவர்களால் அடிக்கடி குறிப்பிடப்படுவதும்  “கார்லாண்ட் ஆஃப் பெர்ள்ஸ்” (முத்துக்களால் ஆன மாலை) என்று அழைக்கப்படுவதுமான நீள்கதையைப் படித்தபோது தெரதள் ஸ்டுயர்ட்டுக்கு வயது 30. அவளுக்கு அப்போது இந்தியாவில் காணப்படும் யானைகளை வந்து பார்க்கும் ஆசை ஏற்பட்டது. தெரதள் ஸ்டுயர்ட் தனது மூதாதையான  ஜான் ஸ்டுயர்ட் என்ற நபரின் நாணயமில்லாத   பாத்திரப்படைப்பு பற்றி நினைத்து வருத்தம் அடைந்தாள் என்பதுதான் வாஸ்தவம்.

ஓரம் கிழிந்திருந்த தாள்களால் ஆன தங்க எழுத்துக்களை அதிகாரத் தலைப்புகளுக்குப் பயன்படுத்தியிருந்த அந்த கதை நூலை நாவல் என்று ஆங்கில ஆசிரியர்கள் கருதாததால் அவர்களின் இலக்கிய வரலாற்றில் சேர்க்கவில்லை என்றறிந்தாள் தெரதள் ஸ்டுயர்ட். எனினும், சுவாரஸ்யமிக்க அந்த நூலின் சுருக்கத்தையாவது 1715-லிருந்து 1718 வரை பிளைமவுத்திலிருந்து வந்த ‘பிளைமவுத் லிட்டரரி கெசட்டீர்’ என்ற இலக்கிய இதழின் நாற்பதாம் தொகுப்பிலும் நாற்பத்தொன்றாம் தொகுப்பிலும் பிற்கால ஆங்கில நடையில் எழுதிப் பிரசுரித்தாள் அவள். அந்தச் சுருக்கம் பற்றியச் செய்திகள் கீழ்வருமாறு:

ஜான் ஸ்டுயர்ட்டின் ஆறு கடல் பயணங்களிலில் இரண்டில் மட்டும் பிரஞ்சு கப்பல்களுடன் குண்டுகள் போட்டு யுத்தம் செய்த தகவல் வருகிறது. அதில் ஒரு பயணத்தின்போது ஒரு இஸ்பானியக் கப்பலை அழித்துவிட்டு நாற்பது பீரங்கிகளிலிருந்து குண்டுகள் போடும் சக்தி வாய்ந்த 800 டன் எடையுள்ள பெரிய ஆங்கிலக்கப்பலில் ஸ்டுயர்ட் பயணம் செய்த விபரம் உள்ளது. ஆறு கடல் பயணங்களில் ஒன்றில் புதிய வகை கறுப்பு மீன் ஒன்றைப் பார்த்தது பற்றிய தகவல்கள் இப்படி பதிவுபெற்றுள்ளன:  அதாவது பதிவின் முடிவில் கறுப்பு மீனுக்கு இரண்டு தலைகளும், ஆறு கண்களும் நான்கு வால்களும் (நான்கும் நான்கு வேறு வேறு வர்ணங்கள் – நான்காம் வால் நம்பமுடியாதபடி மயிலிறகால் ஆனது) உள்ளன. ஒரு பயணத்தில் ராபின்சனை ஸ்டுயர்ட் தனக்கான உதவியாளனாய் அழைத்துச் சென்று திரும்பவும் லண்டனுக்கு அழைத்து வந்தபோது அவனுக்கு இரண்டு மாதங்கள் பிளைமவுத்தின் பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியது வந்தது. அதன் காரணம் கேட்ட ஸ்டுயர்டின் தாய்க்கு அரேபியக் காய்ச்சல் என்று கூறப்பட்டாலும் டாக்டர், துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததே காரணம் என்று  நோய் பற்றிய விபரத்தை எழுதும் மருத்துவமனையின் பெரிய குறிப்பேட்டில் எழுதியிருந்தார். அப்படி எழுதப்பட்ட பக்கங்களின் தாள்களை யாரோ மர்மமாய் கிழிந்தெறிந்த பின்பு – ஸ்டுயர்டின் செல்வாக்கு பிளைமவுத்தில் எப்படிப்பட்டது என்பதை அந்த வீட்டின் இரண்டு அடிமைகளும் ( இருவரும் இப்போது நல்ல கிறிஸ்தவர்களாகி பாதிரியிடம் பாப சங்கீர்த்தனம் செய்யப் பழகியிருந்தனர் )அனுபவ பூர்வமாக அறிந்தனர்.

பாப சங்கீர்த்தனத்தில்  சொல்லப்பட்ட விஷயத்தைப் பாதிரிகள் யாருக்கும் சொல்லக்கூடாது என்றாலும் சர்ச்சுடனும் சர்ச் காரியங்களுடனும் தன்னைப் பல ஆண்டுகளாய் இணைந்திருந்த ஸ்டுயர்ட்டின் தாய் எப்படியோ தனது மகன் தன்னை ஏமாற்றிக் கொண்டிருப்பதை அறிந்து விடுகிறாள். அவள் உலகம் அத்துடன் தகர்ந்தது என்பதை எந்த முட்டாளும் ஊகிக்க முடியும்.  மகன் கப்பலில் காப்டன் இல்லை என்றும் ஒரு சாதாரண ஊழியன் என்றும் அறிந்தபோது இத்தனை நாள் தன்னை ஏமாற்றிய தன் மகனைத் தெய்வக் குற்றம் சும்மாவிடாது, இப்படி ஒரு பாவியாகத் தன்மகன் வளர்ந்துவிட்டானே என்று விசனம் கொண்டாள். அவன், தான் தோற்பதில்லை என்றும் இத்தனை நாள் தான் நம்பிய கடவுள் தன்னைக் கைவிடமாட்டார் என்றும் கருதினாள்.

அன்று இரவு தன் மகன் வந்தபோது மறுநாள் ஞாயிற்றுக்கிழமையில்லை என்றாலும்  தன்னை சர்ச்சுக்கு அழைத்துப் போகுமாறு கூறினாள். ஏதோ வழக்கத்துக்கு மாறான முறையில் பெரிய உடம்புடன் அசையும் தாய் நடந்து கொள்வதை யூகிக்காமல் இருக்கத்தான் ஒன்றும் முட்டாள் இல்லை என்று ஸ்டுயர்ட் தனக்குள்  சொல்லிக்கொண்டான். என்ன நினைத்து என்ன? மிகுந்த பாரம் கொண்ட கோயில் மணியை சர்ச்சில் தொங்கித் தொங்கி வடத்தைப் பிடித்து இழுத்து அடிக்கும் பிளைமவுத் சர்ச்சின் பாதிரியார் அன்று அப்படி அடித்ததும் புறப்படத் தயாரான தாயுடன் ஏதும் அறியாதவன்போல் ஸ்டுயர்ட் கிளம்பினான்.

தூரத்தில்  தனது பக்கத்து வீட்டில் வாழ்ந்து குதிரைகளுக்கு லாடம் அடித்துப் பெரிய பணக்காரனாகி இப்போது இரண்டு அடிமைகளுடன் மதிப்பாக சர்ச்சுக்குப்போகிற பக்கத்து வீட்டுக்காரனைப் பார்த்தாள் ஸ்டுயர்ட்டின் தாய். அவளுடைய இரண்டு அடிமைகளும் வழக்கம் போல் கைளிலும் கால்களிலும் சங்கிலியால் கட்டப்பட்டு மெதுவாய், நடக்கமுடியாமல், சாலை ஓரமாய் நகர்ந்து சென்றனர். கோயிலுக்கு வெளியில் குதிரைகளைப் பிடித்தபடி நிறைய அடிமைகள் நின்றனர். சில அடிமைகள் கைகளில் பைபிள் வைத்தபடி பிச்சை கேட்டுக் கொண்டிருந்தனர்.

“நாமும் நம் அடிமைகளை அதுபோல் காட்சிப்பொருளாக்கியிருக்கலாம் அல்லவா ஸ்டுயர்ட்” என்றபோது தன் தாய் அங்கதமாய் பேசுகிறாள் என்பதை ஸ்டுயர்ட் அறிந்திருக்கவில்லை. ஸ்டுயர்டின் தாய் அக்காலத்தில் இளம்பாதிரிகளிடம் பரவியிருந்த அடிமை முறை எதிர்ப்பு மனோபாவம் கொண்டவளல்ல என்றாலும் அடிமைகளிடம் கருணையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்ற கருத்தைத் தன்னுடன் தன் ஊரில் படித்து இப்போதெல்லாம் பிரபுக்களாலும் கொண்டாடப்படும் எட்மண்ட் ஸ்பென்சர் என்ற எழுத்தாளரிடம் தெரிவித்தபோது அவரும் அவளுடைய கருத்தோடு உடன்படுவதை அக்கம் பக்கம் பார்த்து ரகசியமாய் தெரிவித்தார். “இந்த எழுத்தாளர்களே இப்படிதான், பயந்தாங்கொள்ளிகள்” என்று முணுமுணுத்தாள் அவள்.

சமீபத்தில் பல சர்ச்சுக்களில் நடத்தப்படும் நாடகங்கள் எல்லாம்  புதிதாய் நாடகங்கள் எழுதி நடத்தும் சேக்ஸ்பியர் என்பவருடைய நாடகங்கள் போல் புகழ்பெறவில்லை என்றாலும் இளைஞர்களும் இளம்பெண்களும் தொடர்ந்து நாடகங்களில் நடித்தவண்ணம் இருந்தார்கள். ஸ்பென்சரும் ஸ்டுயர்டின் தாயும் ஒரு அரங்க நாடக நிகழ்ச்சியில் மீண்டும் சந்தித்தபோது ஸ்பென்சர், ஓரளவு காது மந்தமாகப் போக ஆரம்பித்திருக்கும் தன் ஊர்  தோழியிடம் குனிந்து காதுக்கருகில் சென்று சொன்ன இரண்டு விஷயங்களில் ஒன்று லண்டனில் சமீபத்தில் பரவிய ப்ளேக் நோய் எலிகளால் பரவுவதால் எலிகள் முழுதும் கொல்லப்படும் விஷயம். இரண்டாவது 80 ஆயிரம் பேர் அந்த நோயால் எலிஸபெத் ராணியால் ஆளப்படும் இந்த மகோன்னதமான இங்கிலாந்தில் செத்துபோன விஷயம்.

கோயிலுக்குள் நடந்த சம்பவங்கள் முக்கியமானவைகளாய் இருந்தாலும் யாராலும் எதிர்பார்க்கக்கூடியவை அல்ல.

கோயிலில் கிழக்கத்திய தேக்கினால் செய்த பெஞ்சுகளில் மெத்தை தைக்கப்பட்டு முன்பக்கத்தில் போடப்பட்டிருந்த, பிரபுக் குடும்பத்தவர்களுக்கான ஜந்து வரிசை அமர்வுப் பலகைகளுக்கு அடுத்த படியாக ஜான் ஸ்டுயர்டுக்கும் அவன் தாய்க்கும் ஒரு பெஞ்சில் அமர உரிமை இருந்ததற்குக் காரணம் ஜான் ஸ்டுயர்ட் தான் இந்தியாவிலிருந்து, அந்த எல்லா இருக்கைகளுக்கும் பயன்படுத்தப்பட்டிருந்த தேக்குமரப் பலகைகளைக் கொண்டு வந்திருந்தான். பாதிரி ‘மாஸ்’ நிறைவேற்றுவதற்கான ‘ஆல்டர்’ செய்வதற்கும் மலபார் காடுகளிலிருந்து திருடிக் கொண்டு வந்த சந்தன மரம் பயன்பட்டது. இதற்கும் ஜான் ஸ்டுயர்ட்டின் உதவி பாதிரிக்குப் பயன்பட்டிருந்தது.

பாதிரியார் சர்ச்சின் வலது புறத்தில் நடுப்பகுதியில் சுவருடன் சுமார் 10 அடி உயரத்துக்கு எழுப்பப்பட்ட கைவேலைப்பாடுடன் கூடிய கார்வ் செய்யப்பட்ட, மேடையில் நின்று பிரசங்கித்தார். உலக நிகழ்ச்சிகளை அடிப்படையாய் வைத்துப் பிரசங்கம் செய்யும் வழக்கம் கொண்ட பாதிரி அன்றைய பிரசங்கத்தில் முகலாய ராஜ குடும்பத்தைச் சார்ந்த அக்பர் இந்துக்களுடன் சமீபத்தில் சமரசம் செய்துகொண்டது எவ்வளவு தவறான செயல் என்று கூறினார். அத்துடன் இன்னொரு தகவலும் தந்தார். “கேளுங்கள் இங்கிலாந்து ராணியின் பிரஜைகளே தலைக்கோட்டையில் ஒரு வாரத்துக்கு முன்பு நடந்த யுத்தத்தில் டெக்கானை ஆண்டுக்கொண்டிருந்த சுல்தான் எப்பேர்பட்ட விஜயநகர மன்னனைத் தோற்கடித்திருக்கிறான் தெரியுமா” என்று கேட்டார்.

அந்த நேரத்தில் ஜான் ஸ்டுயர்ட்டின் தாய் எதிர்பாராத விதமாக எழுந்து நின்றபோது ஆடிய தனது உடலை அமர்நதிருந்த பெஞ்சின் வெல்வெட் துணிபோர்த்தப்படாத கைப்பிடியில் பிடித்து சுதாரித்துக்கொண்டாள். பின்பு கத்தினாள்.

“எல்லோரும் கேளுங்கள், ஜான் ஸ்டுயர்ட் என்ற என்மகன் இனிமேல் என் மகன் அல்ல; கப்பலில் காப்டன் அல்ல அவன். காப்டன் என்று பொய் சொல்லி என்னை ஏமாற்றினான். அதுபோல் கிழக்கே இருக்கும் மலபாரை ஆண்டு கொண்டிருந்த சமாரினின் கள்ளக்காதலியோடு நம் மதக்கொள்கைகளுக்கு விரோதமாகக் குடும்ப வாழ்க்கை நடத்தியவன். இவன் பாவி. இவனை உங்கள் சமூகத்தில் நான் என் மகன் இல்லை என்று பிரகடனம் செய்கிறேன். மேலும் ஒன்று சொல்கிறேன். இவன் தெய்வ நம்பிக்கையும் இல்லாதவன்; இவன் சர்ச்சுக்கு வருவது வெறும் நடிப்பு”.

அவள் பேசி முடிக்குமுன்பு அவள் வாயைத் தன் கைகளால் அடைக்க முயன்ற ஜான் ஸ்டுயர்டைத் தனது இரு கைகளாலும் இடது பக்கமும் வலது பக்கமும் பெரும் ஆங்காரத்துடன் அறைய ஆரம்பித்தாள் தாய்.

சற்றுநேரம் சர்ச்சில் ஒரே மௌனம். அப்போது கோயிலின் மூன்று பக்கங்களிலும் இருந்த ஆறு கதவுகளுக்கும் வெளியில் சலசல என்று பேசிய படியே பலிப்பூசையைப் பார்த்துக் கொண்டிருந்த அடிமைகள் கூட பேசுவதை நிறுத்தி ஜான் ஸ்டுயர்டின் தாய் திடீரென்று எல்லோருக்கும் சொன்ன செய்தியால் திக்பிரமை பிடித்தவர்களாய் மௌனமானார்கள். ஏது செய்வது என அறியாமல் ஒரு அடிமை இன்னொரு அடிமையை மாறிமாறி பார்த்தபடி இருந்தான்.

ஜான் ஸ்டுயர்ட் மட்டும்தான் என்ன செய்யவேண்டும் என்று தெளிவாய் அறிந்தவன் போல் தன் தாயை இழுத்தபடி ஒரு வாசல் வழி வெளியேற முயன்றான். கால்களால் அங்குக் கூட்டமாய் இருந்த அடிமைகளை உதைத்து வழி உண்டு பண்ணி விட்டு வெளியேறும்போது “ஜான்……. …. ” என்று புல்பட்டிலிருந்து தன் கணீரென்ற குரலில் தன்னைக் கண்டிக்கும் பாதிரியின் குரல் விழுந்தது ஸ்டுயர்ட்டின் காதில். ஞாபகம் வந்தவன் போல் தாயைத் தரையில் தள்ளிவிட்டுப் பாதிரிக்கும் அன்று சர்ச்சுக்கு வந்தவர்களுக்கும் கேட்கும்படி கத்தினான் ஜான் ஸ்டுயர்ட்.

“என் தாய்க்கு நேற்றுக் காலையிலிருந்து பேய் பிடித்துவிட்டது. என்னிடம் நிரூபணம் இருக்கிறது. இதோ பாருங்கள் நம் புனித ஜெபமாலையை வெறுக்கிறாள்” என்று தன் கோட்டிலிருந்த ஜெபமாலையை அவள் முகத்துக்கெதிரில் அவன் சிரித்தபடியே ஆட்ட அவள் அதனை உதறினாள். ஒருவருக்குப் பேய் பிடித்திருப்பது என்பது சாத்தானின் ஏவலால் வரும் நோய் என்ற கருத்துக் கொண்டிருந்த அந்த கிறிஸ்தவ மக்கள் அதனைக்கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தார்கள். எல்லோரும் ஜான் ஸ்டுயர்டு சொன்னதை நம்பகூடிய முறையில் தெளிவாகக் கூறினான் அவன். எனினும், அவர்களில் பலர் அவன் சொன்னதை நம்பவில்லை என்பது சர்ச்சில் எழுந்த கசமுசன்ற சப்தத்தால் தெளிவானது.

ப்ளைமவுத் சர்ச்சில் போனவாரம்தான் சாத்தானின் ஏவலால் திருஇருதயப் படத்தை நெருப்பிட்ட ஒரு இளம்பெண்ணை சர்ச் உறுப்பினர்கள் ‘ஓக்’ மரத்தில் கட்டி நெருப்பிட்டுக் கொன்றார்கள். சாவதற்கு முன்பு அந்த 26-வயது பெண் புனித நீரைத் தன் மீது தெளித்த பாதிரியைப் பார்த்து வெறிவந்தவள்போல் கண்களைப் பயங்கரமாய் சுழற்றி,  விலங்கு பூட்டிய இருகைகளாலும் தன் தலையில்  அடித்துத் தன் ஆடையைக் கிழித்தெறிந்து அட்டகாசம் செய்தாள். சற்று நேரத்தில் நெருப்பு திகுதிகு என்று பற்றி எரிய ஆரம்பித்தபோது பேய்பிடித்தவர்களை எரிக்கும்போது இறுதிவரை யாரும் நிற்கக்கூடாதென்பதால் ப்ளைமவுத்தின் மக்கள் கலைந்து சென்றனர். ஆனால் இருள் மூளும் நேரம் வரை மரம் ஒன்றின் மேலிருந்து அப்பெண் எரிவதை ஒரு கறுப்பு அடிமை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான். அவன் வேறு யாருமல்ல ஆறு விரல் கொண்ட யாக்கப்தான்.

ஏற்கனவே எழுதப்பட்டிருக்கிற அந்தக் கதையில் அந்தக் கால வாள்சண்டைகளும் குதிரை ஓட்டும் முறையைப் பற்றியும் பல தகவல்கள் வந்தாலும் தெரதள் ஸ்டுயர்ட் தன் குடும்பத்தின்  அந்நிகழ்ச்சிகளைத் தன்காலத்தில் யாரும்  வாசிக்கும் தகுதி படைத்தவைகளாய் கருதாததால்  சுருக்கியும்தொகுத்தும் கற்பனையைச்சேர்த்தும் எழுதிய அந்தக் கதையில் சேர்க்கவில்லை.

எனினும் ஜான் ஸ்டுயர்ட் தன் தாயை உண்மையிலேயே சாத்தானின் ஏவல்களைச் செய்வதற்கு ஆயத்தமான ஒரு பேய்பிடித்தவள் என்று நிரூபிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டபோது அவனைப் போலவே தங்கள் தங்கள் வீடுகளில் தங்களைக் காப்டன் என்று பொய் சொல்லிக் கடல்பயணம் செய்த பல நண்பர்கள் ( அவர்கள் எதைக் கற்காவிட்டாலும் எல்லோரும் நல்ல முறையில், அக்காலத்தில் சாதாரண மக்களிடமும் பரவியதுபோல் வாள்வீசக் கற்றுக் கொண்டவர்கள் )உதவினார்கள்.

பாதிரி விசாரித்தபோது அப்படிப்பட்ட ஒரு நண்பன் ( அவன் இங்கிலாந்து அரசியைப் பற்றி எழுதப்பட்ட கவிதைப் புத்தகம் விற்பவரின் மகன் ) இரவில் ஒருநாள் தான் ஜான் ஸ்டுயர்ட்டின் வீட்டுக்குத் தன் குதிரை ஒன்றில் ஏறி அவனை இரவு நடக்கும் நாடகத்துக்கு அழைக்கப்போனபோது வீட்டில் யாரும் இல்லாததால் பின்புறம் வாசல் திறந்து கிடந்ததைப் பார்த்து  உள்ளே நுழைந்தபோது ஸ்டுயர்டின் தாய் தன் தலையிலிருந்த ஆணியை உருவிக் கொண்டிருந்ததைத் தான் கண்ணால் கண்டதை எல்லோர் முன்னிலையிலும் கூறிய செய்தி தெரதள்ஸ்டுயர்ட்  பாதுகாக்கத்தக்க  ஒரு சம்பவம் என்று கருதி நீண்ட கதை யின் சுருக்கத்தில்  தன்து கால வாசகர்களுக்காகக் கொடுத்திருந்தாள். ஸ்டுயர்டின் தாய் அவளின் விரல்களை நீட்டி கணப்பு அறையில் இருந்த விறகு கரித்துண்டுகளைக் கையில் எடுத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்த செயல் அதிகம் முக்கியத்துவம்  ஏதும்  கொடுக்காமல் மூலநூலில் இருந்தது போலவே மறுஉருவாக்கம் செய்யப்பட்டக் கதையிலும் இருந்தது. ஜேக்கப்பின் ஞானத்தாயும் ஸ்டுயர்ட்டின் தாயின்  தோழியுமான திருமதி டங்கன் பெயர் அச்செய்தி எழுதப்பட்டிருந்த பக்கங்களில் சாட்சிகளின் இரண்டு பெயர்களில் ஒன்றாய் சேர்க்கப்பட்டிருந்ததை தெரதள் யோசனையுடன் கவனித்தாள். நூலில் அக்காலத்தில் ஜான் ஸ்டுயர்ட் மேற்குத் தீவுகளுக்குப் போய் வந்தபோது மிகெல் சர்வான்டிஸ் என்ற இஸ்பானிய வீரன் ஒருவனுடன் நட்பு ஏற்பட்டதால் சர்வாண்டிஸ் எழுத ஆரம்பித்திருந்த சாகஸக் கதைகளின் பாணியில் தானும் சில தகவல்களை எழுதியிருந்ததை ஏற்கனவே அறிந்த   இலக்கிய அறிஞர்கள் சிலர் சொன்னபோது தெரதள் அங்கீகரித்தாள். தன்னுடைய காலத்தில் பல மொழிகளில் – இத்தாலியன், ஆங்கிலம், டானிஷ் போன்றவற்றில் மொழிபெயர்க்கப்பட்ட செர்வான்டிஸின் கதை நூலான ‘டான்குவிக்ஸாட்டே’யை எழுதிய ஆசிரியனோடு தனது குடும்பத்தில் ஒருவருக்குத் தொடர்பிருந்திருந்ததென்ற உண்மை தெரதளுக்குப் பெருமை தந்தது. அதன் மேலோட்டமான தழுவல் தான் தன் குடும்பக் கதை என்றும் அறிந்தாள்.அக்கதையை சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்குப் பிறகு மறு உருவாக்கம் செய்து “பிளைமௌத் லிட்டரரி கெசட்டீரில்” வெளியிடுவது பெருமைக்குரிய செயல் என்றே கருதினாள்.

தன் மூதாதையரான ஜான் ஸ்டுயர்ட் ஸ்பானிய நாவலாசிரியன் செர்வான்டிஸின் தாய்மொழியான ஸ்பானிஷ் மொழியை அறிந்திருந்ததையும் தெரதள் பதிவு செய்தாள்.

தெரதள் ஸ்டுயர்ட் மறுபதிவு செய்யாதது என்று கூறத்தக்கவை பிளைமவுத்தில் முதன்முதலாக அந்த ஊரின் பிரபுக் குடும்பத்தவர்கள் விளையாடிய கிரிக்கட்டும் அவளது குடும்பத்தினர் நடத்திய கோழிச்சண்டையும்.

அத்துடன் அவள் வேண்டுமென்றே தவிர்த்த நிகழ்ச்சி என்று கூறவேண்டுமெனில் ப்ளைமவுத் சர்ச்சின் முக்கியமான பாதிரிக்கு துணைவரான இன்னொரு பாதிரி ஒருவர் – அவர் இளைஞர் – ஜான் ஸ்டுயர்ட்டுடன் குதிரைச் சவாரி செய்து சாலையில் போட்டியிட்டு ஜெயித்ததைப் பொறுத்துக் கொள்ளாத ஜான் ஸ்டுயர்ட் அவரை ஒருநாள் கொன்று விடுவதாக மிரட்டி விட்டுப் போன செய்தி. அச்செய்தி எங்கும் பரவியபின்பு  ப்ளைமவுத் சர்ச்சின் முக்கிய பாதிரி ஜான் ஸ்டுயர்ட் அவன் தாயைப் பற்றிப் பரப்பிய, அவள் பேய் பிடித்தவள் என்ற செய்தியைச் சந்தேகப்பட ஆரம்பித்தார்.

அதன் பின்பு தெரதள் எழுதிய நீள் கதையில் தெளிவில்லாத சம்பவங்களும், தொடர்ச்சியில்லாமல் அடிக்கடி வந்த வாள்சண்டைகளும் வாள் சண்டை செய்த நபர்களின் குடும்ப விபரங்களும் குடும்பங்களின் மூதாதையர்களின் விபரங்களும் காணப்பட்டன.

தெரதளுக்குப் பயன் பட்ட மூலநூலின் சில அதிகாரங்களில் புதியதாய் பரவ ஆரம்பித்த புரொஸ்டஸ்டான்ட் மதம் கூறும் 95 கருத்துக்களில் முக்கியமானவை எழுதப்பட்டிருந்தன. அவ்வளவு சிறப்பில்லாதவை என்று சொல்லத்தக்க  சில கதைப்பகுதிகளில் இங்கிலாந்தில் பரவும் அம்மை நோய்க்கு மருந்தாகக் கப்பலில் இந்தியா போகிற வெள்ளைக்காரர்கள் கொண்டு வந்த குழிகைகளும் வேப்பிலை வைத்தியமும் தெளிவாக எழுதப்பட்டிருந்தன. இவை ஏதும் தெரதளைக் கவரவில்லை.

மூலநூலில், மேற்கிந்திய தீவில் பணம் திருடியதற்காக மிகைல் செர்வான்டிஸோடு சேர்த்து ஜான் ஸ்டுயர்டும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட செய்தி காணப்பட்டாலும் உலகப் புகழ்பெற்ற மிகைல் செல்வான்டிஸின் பெயரைப் பொறாமையால், கெடுக்க அயோக்கியன் ஜான் ஸ்டுயர்ட் விழைந்ததால் தான் சிறை சென்ற விஷயத்தை செர்வான்டஸுடன் பொய்யாய் இணைத்துள்ளான் என நூலில் ஓரத்தில் மயிலிறகுப் பேனாவால் யாரோ எழுதியிருந்தார்கள். மேலும், அந்தக் கதை நூலின் பக்கங்கள் பலதும் நினைவில் நிற்காத விபரத் தொகுப்புக்கள் கொண்டிருந்தன. தேவதூதர்களின் ஓவியங்களை எப்படித் தீட்ட வேண்டும் என்று யாரோ ஒரு ஓவியப் பேராசிரியர் இந்தக் கதை நூலில் இடைச்செருகலாய்  எழுதிவிட்டார் என்று கூறுமளவு அத்தகவல்கள் எழுதிக் குவிக்கப்பட்ட பக்கங்களைத் தாண்டி  தெரதள் படித்தபோது பின்வரும் கதை காணப்பட்டது:

பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒருமுறை மேற்கிந்தியத் தீவுகளிலிருந்து ஸ்டூயர்ட் தனது முதிய அடிமையான ராபின்சன் இல்லாமல் தனியாய் வீடு திரும்பியபோது, இளம் அடிமையான யாக்கப் (அப்போது 28 வயது ) தன் ஆறாம் விரலைப் பார்த்தபடி வாசலில் நின்று வரவேற்றான்.

தெரதளின் இரண்டு நாள் தூக்கமின்மைக்கான தகவல் இது:

ஜான் ஸ்டுயர்ட் சர்ச் பாதிரியுடன் வாள்சண்டை செய்ததால் ஏற்பட்ட ஊமைக் காயமே  தன் இறுதியை விரைவில் கொண்டுவரப்போகிறது என்று நினைத்தான். அவனது 69-ஆம் வயதில் வந்த முடிவு பற்றித் தெளிவாய் யாருக்கும் தெரியாவிட்டாலும் யாக்கப் அவ்விஷயம் பற்றித் தெரிந்தவன்போல் நடுக்கூடத்தில் செத்துக் கொண்டிருந்த ஜான் ஸ்டுயர்ட்டைப் பார்த்தான். அடிமையான இளம்  யாக்கப் தன்னைத் தாய்போல் வளர்த்த ஸ்டுயர்டின் தாயின் நினைவால் யாருக்கும் தெரியாமல் இவ்வளவு காலமாய் சித்திரவதைப்பட்டான்.  வெளியில் சீர்திருத்தக் கிறித்தவர்கள் கத்தோலிக்க மதகுருவான போப்பைப் பற்றிக் கீழ்த்தரமாக பிரச்சாரம் செய்து பைபிளை வாசித்து இசைக்கருவிகள் இசைத்த வண்ணம் சென்ற சந்தடி யாக்கோபின் காதில் விழுந்தது.

ஜான் ஸ்டுயர்ட் தன் தொண்டைக்குழியில் சர்ச் பாதிரியின் வாள் பாய்ந்தது என்று எல்லோரையும் நம்பவைத்தான். தன் கெட்ட நண்பர்கள் பலரும் சேர்ந்து தன் தாயைப் பேய்பிடித்தவள் என்று கூறி எரித்துக் கொன்றபின் தன்னுடன் பலர் நட்பு பாராட்டுவதில்லை என்பதை அவன் அறிந்தான். பாப்லர் மரத்தினடியில், தூரத்தில் கிராமத்தவர்கள் குஸ்திபோட்டுக் கொண்டிருக்கும் களேபரத்துக்கிடையில் தான் சர்ச் பாதிரியுடன் வாள்சண்டை செய்த வாள் தொங்கிக் கொண்டிருந்த மூலையையே பார்த்தபடி கிடந்தான் ஜான் ஸ்டுயர்ட். அவன் எதிர்பார்த்த மரணம் விரைவில்  வந்தது. ஒருநாள் 24 தூண்களுள்ள கூரையுடன் சிறிய ஆம்பித்தியேட்டரில் வீட்டிலிருந்து ஒரு பர்லாங் தூரத்தில் பிரபுகள் நாடகம் பார்த்துக் கொண்டிருக்கையில் ஸ்டுயர்ட் தூங்கும் நேரம் பார்த்து அவன் குரல்வளையில் அழுத்திக் கொன்ற கொடூரமான தனது ஆறாம் விரலைப் பார்த்தபடி நின்ற அடிமை யாக்கப், எஜமானன் ஸ்டுயர்ட் நினைவுக்குள் ஏன் தன் ஆறாம் விரல் ஒரு வாள்முனையாய் தெரிகிறதென்பது புரியாமல் ஸ்டுயர்டின் சாவுக்காகக் காத்திருந்தான்.

நேரடியாக எழுதப்படாமல் இருந்த இந்தச் செய்திகளைப் பல பக்கங்களில் படித்துவிட்டு பல நிகழ்ச்சிகளை நிராகரித்தாள் தெரதாள். கதையின் முடிவைச் சரியானது தானா என்ற நிச்சயமில்லாமல் ஒருவாறாகத் தொகுத்துக் கொண்ட தெரதள் ஸ்டுயர்ட், தன் குடும்பத்தின் உறுப்பினர்கள் பற்றிய கொடூரமும் பயங்கரமும் கொண்ட துயர சம்பவங்கள் தன் மனதைப் பாதிக்ககூடாதென்று எண்ணினாள். அதனால் வேறுவழியின்றிப்  பல ஆண்டுகளாய் கதைகள் கேட்டுக் கற்பனை செய்து வைத்திருந்த இந்தியக் காடுகளில் மதர்ப்புடன் அலையும் யானைகளையும் அந்த யானைகளைப் பிடித்து அடக்கித் தம் மாளிகைகளுக்குக் கொண்டுவருவதில் மகிழும் ராஜாக்களையும் நேரில் பார்க்க அடுத்த மாதம் இந்தியா செல்லும் கப்பல் ஒன்றில் பயணம் மேற்கொள்ள எத்தனித்தாள்.அதற்கு முன்பு தான் மூலநூலின் அடிப்படையில் எழுதிய கதையின்  இரண்டு படிகளை மறக்காமல் தான் பயணம் செய்யும் கப்பலில் எடுத்துச் சென்ற அந்த நாள் 1776 ஆம் ஆண்டில் ஜுன் மாதம் முதல்தேதி.

தலைவன் -சிறுகதை

 

 

        என் பெயர் லஃபோர்க் என்பதாகும்.நான் ஒரு நாவலாசிரியன் என்பதையும் புகழைப் பற்றி நான் கவலைப்படாதவன் என்பதையும் முதலிலேயே சொல்லிவிடவேண்டும் . ஆகவே உங்களுக்கு என் பெயர் அறிமுகமில்லாமல் தான் இருக்கும்.

என்னுடைய வயதான காலத்தில் நான் வசித்துகொண்டிருக்கும் இந்தத்தீவில் பேசப்படும் ‘ஒலவு’ என்ற மொழி பற்றி டாக்டர் வெண்டல்வெஸ்கி என்ற பேர்கேட்ட ஐரோப்பியர் இலக்கணம் எழுதியதால், அம்மொழி உலக அரங்கில் பிரபலமானது என்கிறார்கள். அந்த மொழியில் எழுதப்பட்டு 2007-இல் ஆகஸ்டு மாதம் எட்டாம் தேதி வெளியான என் நாவல் ஒன்று அனைத்துலகப் போட்டியில் முதல் பரிசை வென்றதுகூட  உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம். அதற்காக நீங்களோ நானோ இப்போது கவலைப்பட்டு எதுவும் நடக்கப்போவதில்லை. எவ்வளவுதான் நீங்கள் இலக்கியத்தின் அனைத்துலகப் போக்குகளையும் நுட்பத்தையும் அத்துப்படியாக வைத்திருந்தாலும் சில விசயங்கள் கவனத்துக்கு வராமல்தான் இருக்கும்.

ஒலவு மொழியில் நான் எழுதும்போது  நடக்கும் மர்மத்தைப்பற்றிக் கூறிவிடுகிறேன். நான் எழுதும் எழுத்து என்னுடைய கற்பனையை மட்டுமல்லாமல் அம்மொழியில் எழுதும் எல்லோருடைய கற்பனையையும் தீர்மானிக்கிறது என்று நான் கூறினால் ஏற்பீர்களோ என்னவோ. அதுபோல என் எழுத்து  எல்லாவிதமான அர்த்தங்களையும் அர்த்தத்தின் பகுதியான செயல் பாட்டையும் – சேர்த்துத் தீர்மானிக்கிறது.  (இது நம்ப முடியாதது என்று எனக்குத்தெரியும்; எனினும் நம்பித்தான் ஆகவேண்டும் என பிடிவாதம் பிடிக்கமாட்டேன்..)

அதனால்தான் இவ்வளவு பீடிகையுடன் நான் இந்தக் கதையைச் சொல்ல வேண்டியிருக்கிறது. (சொல்வது வேறாகவும் எழுதுவது வேறாகவும் அமையும் மொழி என்னுடைய ஒலவு மொழி என்பது இன்னொரு உபதகவல்).

என் கற்பனை பற்றி என் சக எழுத்தாளர்களுக்குப் புரியவில்லை என்று நானும், இவன் ‘பிக்க்ஷன்’ எழுத்தாளன் அல்ல, ஒலவு மொழியின் நாட்டுப்புறவியல் எழுத்தாளன் மட்டும்தான் என்று என்னோடு சேர்ந்து இரவெல்லாம் குடித்துவிட்டுக் காலையில் அவிழ்ந்து கிடக்கும் துணியை எடுத்துக் கட்டியபடி(சிவந்திருக்கும் வீங்கிய கண்களால் என்னைக் கோபத்தோடு பார்த்து)  சொல்லும் மூத்த எழுத்தாளனின் பேச்சைத் தான் நான் ஒரு எழுத்தாளனாய்  கண்ட பலன்.

ஆனால் எனக்குச் சில நிச்சயமான கருத்துக்கள் உண்டு. என் கதைகளில்  கற்பனையாக நான் கொண்டுவரும் பாத்திரங்கள்  எனது தீவினது மரம் செடி கொடிகளில் பல ஆண்டுகளாய் ஆவிகளாய் வாழும் மூதாதையர்களின் பேச்சையே பேசுகிறார்கள். கற்பனையாக நான் என் ஒலவு மொழி மூலம் எழுதும் ஒவ்வொரு சொல்லும் நிஜமான இன்னொரு குரல்தான் என்பது எனது பல ஆண்டுகால கருத்து.

இதுபோன்று என் எழுத்தில் காணப்படும் வேறு குணங்கள் பற்றி பாரிசிலிருந்து வந்த  ஒரு பத்திரிகையாளருக்கு ஒருமுறை  கொடுத்த  பேட்டியின் போது நான் பேசியதையும் உங்களிடமிருந்து மறைக்கத் தேவையில்லை.

என்  எழுத்துக்களில்,  சரித்திரத்தில் ஒரு காலத்தில் உண்மையாக  இருந்துவிட்டு மறைந்த நாயகர்களைப் பற்றியும் அவர்கள்  அற்பாயுளில் மறைந்து போனபோது அவர்களால் வெளிப்படுத்த முடியாத அவர்களின் ஆசை அபிலாசைகளையும் தான் எழுதுகிறேன் என்று பேட்டி அளித்தேன். வேறு எழுத்தாளர்களும் தற்கால மக்களின் ஆசை அபிலாசைகளைத் தானே எழுதுகிறார்கள் என்று தோய்ந்து மறையும் கீழ்குரலில் அந்தப் பேட்டியாளன் சொல்லிவிட்டுப் பேட்டியைப் பாதியில் முடித்துக்கொண்டு மறைந்தான். அது அவனது கீழான குணத்தைத்தான் காட்டுகிறது என்றே நினைத்தேன். பேட்டி எடுத்தவனின் நடத்தையைப்பார்த்து பிரான்சு நாடு எங்களைக் காலனியாக வைத்து ஒரு காலத்தில் ஆண்டுகொண்டிருந்தது கூட எனக்கு ஞாபகத்துக்கு வந்தது.

நான் எழுதும்போது என்னைச் சுற்றி ஆட்டம்போடும் இறந்து போனவர்களின்  குரல் எனக்கு நிதர்சனமாய் எப்போதும் கேட்கிறது. எனவே, கற்பனையும் நிஜமும் என்னைப் பொறுத்தவரையில் வித்தியாசமற்று என் புனை கதைகளில் வடிவம் கொள்கின்றன. ஆனால் நான் என் ஒருவனைப் பற்றி மட்டும் எழுதும் சுயநலக்காரன் அல்ல என்கிறேன். என்னைச் சுற்றியுள்ளவற்றைப் பற்றி- எழுதும் என் அறிவு வளராத காலத்திலேயே, காலரா நோய்வந்த மூன்றே நாட்களில் இறந்துபோனார் என்று சொல்லப்பட்ட என்னுடைய தாத்தாவும், அவரது தாத்தாவும் பல மூதாதையர்களும் என் எழுத்தில் இருக்கிறார்கள் என்பது  எனக்குத் தெரியும்.  அந்தத் தாத்தாவின் தாத்தாவும் அவர்களின் மூதாதையர்களும் கூட என்னோடு நான் எழுதும்போது பேசுகிறார்கள் என்பது  மிகவும் துல்லியமாகவும் அவர்களின் வித்தியாசமான குரல் அடையாளத்துடனும் தெரிந்துகொண்டுள்ளேன்.  இதனால் எழுத்தின் முக்கியமான பிரச்சனைகளான கர்வமோ, சுயபரிதாபமோ எனக்கு இல்லவே இல்லை.

இப்படியாக நான் எழுதுவதால் எனக்குப் பிறரைப் பற்றிய எல்லா விஷயங்களும் அத்துப்படி. அவர்களின் கள்ளக்காதலிகள், அவர்கள் சொந்த சகோதரர்களுக்குச் செய்த துரோகங்கள், எத்தனை திருமணங்களைத் தடுத்தார்கள் (திருமணங்களைத் தடுப்பது எங்கள் சமூகத்தில் மன்னிக்க முடியாத பாபம்) என்பதெல்லாம் எனக்குத் தெரிந்துவிடும். அதாவது என் எழுத்துச் சம்பவிக்கும் போது பல உண்மைகளைக் கண்டுபிடிக்கும் மந்திரக்கண்ணாடி ஒன்று என் கண்முன் இயற்கைத் தெய்வத்தின் உதவியால் பிடிக்கப்படும். இப்படித்தான் என்னால் எழுதமுடியும். கற்பனையை நிஜத்திலிருந்து கொஞ்சமும் என்னால் பிரித்தெடுக்க முடிந்ததில்லை.( இதைதானே என் விரோதிகள் என் பலவீனமெனக் கூறித் தூற்றுகிறார்கள்.)

இப்படித்தான் குகி  என்ற பெயரில் என் மொழியில் எழுதும் ஒருவனின் எழுத்தினுள் மறைந்திருக்கும் பல விஷயங்களை நான் கண்டுபிடித்து எழுதி வெளிக்கொண்டுவந்தேன். அதனால் அவன் என் அலுவலகத்துக்கு வந்து ஒரு குவளையில்  எடுத்துவந்த திராவகத்தைக் கோபத்தோடு வீசினான். நல்ல காலம்  குறி தப்பி திராவகம் சுவரில் தொங்கிக் கொண்டிருந்த காலண்டரில் இருந்த நடிகையின் முகத்தைப் பாழ்படுத்தியது. என் அலுவலக சிப்பந்திகள் குகியைப் பிடித்து நையப்புடைத்துப் போலீஸில் ஒப்படைத்தார்கள். போலீஸ் உயர் அதிகாரிக்குக் குகி வசித்து வந்த வீட்டை விற்றுப் பணம் கொடுத்துச் சிறைக்குப் போகாமல் தப்பினான் என்று எங்கள் தீவின் வதந்திகளை எழுதுவதற்காக நடத்தப்பட்ட ‘ஒலவு அப்ஸர்வர்’ என்ற பத்திரிகை, பின்பு செய்தி வெளியிட்டது.

எழுத்தில் வாசகர்கள் நம்மைத் துப்பறியும் காரியமும் நடக்கிறது.  ஒரு பெண்மணியின் குடும்ப வாழ்க்கை பற்றி ஒரு கதை எழுதியிருந்தேன். குடும்பத் தலைவியை ஏமாற்றும் குடும்பத் தலைவன் வேலைக்காரியுடன் தொடர்பு வைத்திருந்ததைப் பற்றி எழுதியபோது குடும்பத் தலைவி என் எழுத்துத் தன்னைப் பற்றியது என்று கண்டுபிடித்ததோடு நிற்காமல் என் வீட்டுக்கு வந்து என்னைப் பார்த்து எங்கள் மொழி வழக்கப்படி வணக்கம் கூறி பரிசுகளும் தந்து என் எழுத்தின் மூலம் தான் கண்டுபிடித்த பல உண்மைகள் பற்றி விளக்கியபோது எனக்கே ஆச்சரியமாகவிருந்தது.இதுதான் எங்கள் மொழியில் உண்மைசார்ந்த எழுத்தின் இலக்கணம் என்கிறார்கள்.

இப்படிப் கொஞ்ச காலம் போனபோது எனக்குத் தோன்றுவதெல்லாம் உண்மைகளைச் சார்ந்ததாய் அமைந்தன; ஆனால்  அப்படி ஒரு உண்மை பற்றிய கருத்து எனக்குள் இல்லை என்பதுபோல் இயல்பாய் எழுத ஆரம்பித்தேன். ஆனாலும் நாலு நாட்கள் உணவும் நீரும் இல்லாமல் ஒருமுறை ஒரு ஆவேசத்துடன் எழுதியபோது பல விஷயங்கள் (எனக்குப் புத்தியில் பதியாதவை) என் எழுத்தில் வந்திறங்கியதை அறிந்தேன்.   பாலைவனத்தை இதுவரை பார்த்தறியாத நான் பாலைவனத்தின் தன்மைகள், உஷ்ணநிலை, வாழ்க்கைமுறை, வானிலை என்று மிகவும் கச்சிதமாக எழுதியதாய் துபாய் பக்கத்திற்கு வேலைக்குச் சென்றிருந்த பாலைவன அனுபவமுள்ள ஒருவர் தனக்குத் தெரிந்த தகவல்களைப் பற்றி எனக்குத் தெரிவித்துப் புகழ்ந்தார்.

என் எழுத்துக்களை அதன்பிறகு நான் அவதானிக்க ஆரம்பித்தேன். நான் ஏன் எழுதுகிறேன்?. தொடர்ந்து 56 ஆண்டுகளாக ஏன் எதாவது எழுதிக்கொண்டே இருக்கிறேன்?. எல்லோரும் எழுதுகிறார்களா என்ன? பரிசுக்காக என் மொழியில் பலர் எழுதுகிறார்கள். அரசியல்வாதிகளோடு தொடர்பு ஏற்படுத்துவதற்காக – வேலையில் பதவி உயர்வு வாங்குவதற்காக, தாம் செய்த ஊழலை மறைப்பதற்காக, மினிஸ்டர்களை அணுகி உதவி பெறுவதற்காக, தேர்தலில் சீட் வாங்குவதற்காக, உயர்ந்த இடத்தில் பெண் எடுப்பதற்காக – இப்படி இப்படி எத்தனையோ நோக்கங்களுடன் எழுதுகிறார்கள். சாகும்போது ஆன்மா சாந்தி அடைய வேண்டுமென்பதற்காக எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள் என்றுகூட எழுதுகிறவரின் எதிரிகள் பேசியதும் உண்டு. சரி, நான் எதற்காக எழுதுகிறேன்? அதுவும் வழக்கமில்லாத வாக்கியத் தொகுப்புகளைப் பயன்படுத்தி எதற்காக நான் எழுத வேண்டும்?. யோசணைகள் தொடர்கின்றன.

இப்படி இருக்கிற ஒருநாள் நான் வேலை பார்க்கும் சினிமா பற்றிய பத்திரிகையில் புதிதாய் வந்து வேலைக்குச் சேர்ந்த குள்ளமான, அரைத்தாடியும் சப்பை மூக்கும் சுருட்டை முடியும் கூர்மையான பார்வையும் கொண்ட இலங்கைக்காரர்,  தங்கள் மொழிக்காக ஒரு நாடு இல்லை என்பதால் கவலைப்பட்டு ஒரு படையை உருவாக்கி 30 ஆண்டுகள் படை நடத்தி இறுதியில் என்ன ஆனான் என்று அறியமுடியாதவனான ஒரு மனிதனையும் அவனது குடும்பத்தையும் பற்றி பல மணிநேரம் என்னிடம் பேச ஆரம்பித்தார்.

படை நடத்திய அந்த மனிதன் மீது எனக்கு முதலில் ஆர்வமோ, அவன்பற்றிச் சொல்வதைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஊக்கமோ  ஏற்படவில்லை. வயதான பின்பு பல விஷயங்கள் இப்படி ஆகிப் போகின்றன என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். ஆனால், இலங்கைக்காரர் என்ன காரணத்தினாலோ – அல்லது எந்தக்காரணமுமில்லாமலோ – நான் அலுவலகத்திலிருந்து வெளியில் செல்லும்போதெல்லாம் என்னைத் தொடர்ந்தார். அது எனக்கு விளங்கா விட்டாலும், அவர் என்னுடன் ஒட்டுறவுடன் நடக்கத் தொடங்கியதன் அர்த்தம் பிடிபட்டது. விளங்காவிட்டாலும் நாம் சில நடவடிக்கைகளில் ஈடுபடுகிறோம் தானே. இப்படித் தான் நான் கதைகள் சிலவற்றிலும் எழுதுகிறேன். விளையாட்டு மைதானத்தில் கசங்கிய ஆடையுடன் வந்து கிரிக்கட் விளையாடும் இளைஞர்களைப் பார்க்க தினமும் வருகிற மத்திய வயதினன் – வருத்தமான முகமும், கலைந்த தலையும், கண்களில் பெரிய சட்டமிட்ட கண்ணாடியும் தேய்ந்த பழைய செருப்பும் அவனுடையவை – கதை முடியும்போது எந்த நிகழ்ச்சியிலும் பங்கெடுக்காமல் கதை தொடக்கத்தில் எப்படி மைதானத்தில் இருந்தானோ அப்படியே கதை முடிவிலும்  இருக்கிறான். இந்தக் கதையும் என் பிற கதைகள் போல புரியாத கதை என்ற லேபலைப் பெற்றது. என்னிடம் விளக்கம்பெற கேள்விகள் கேட்ட – பல்கலைக்கழக முனைவர்பட்ட மாணவ மாணவியர் உட்பட – அத்தனை பேரும் நான் பதிலாக ஏதோ உளறியதைக் கேட்டுத் திருப்தி அடையாமல் போனதைப் பார்த்து எனக்குள் ரகசியமாய் மகிழ்ந்தேன். இது என் குணம்.

இலங்கைக்காரர் தனிநாடு கேட்டுப் போராடிய மனிதனைப் பற்றித் கூறியபடியே என்னைத் தொடர்வது நிற்கவில்லை. இலங்கைக்காரரும் நானும் நல்ல நண்பர்களாகிப் போனதுதான் மிச்சம். அவர்நோக்கம் புரியவில்லை. தனி நாட்டுக்காக ஒரு படையை உருவாக்க உதவிய பக்கத்துப் பெரிய நாட்டு உளவுப்பிரிவுதான்  தனிநாடு கேட்டவனுக்குப் பயிற்சி அளித்து அவனுக்குப் பணமும் கொடுத்தது என்றும் கடைசியில் அந்தப் பெரிய நாட்டின் அதே உளவுப் பிரிவும் மூன்று உயர் அதிகாரிகளும் சேர்ந்துதான் அவனையும் அவன் இனத்தைச்சார்ந்த ஒன்றரை லட்சம் மக்களையும் கொன்றது என்றும் கூறினார்.

என் கதைகளைப் பற்றிய இன்னொரு விசயமும் திடீரென்று என்புத்தியில் பதிகிறதை, உடனடியாக, நான் பதிவு செய்யாவிடில் என் இந்த எழுபதைத் தாண்டிய வயதில், மறந்து போவேன், எனவே பதிவு செய்கிறேன். ஆம் என் எதிரில் இருந்து என் பாத்திரங்களுடன் பேசும் குரல் ஒன்று எப்போதும் என் மூதாதையர்களிடமிருந்து எனக்குத் தொடர்ந்து வந்து கொண்டிருப்பது பற்றிய விளக்கம் இது. அந்த நேரங்களில் நானும் என் கதைப் பாத்திரமும் நிஜமாகிவிடுவோம். அதுதான் முக்கியம். நிஜமாவது. இரண்டுபேர் நிஜமாகி விடும்போது இரண்டு உடல்கள் ஒன்றன் முன் இன்னொன்று அமர்ந்திருக்க வேண்டும். அப்படி அமர்கையில் வெளிப்படும் வார்த்தைகளும் வாக்கியங்களும் நிஜமானதாக அமையும். இதுதான் என் கதைகளில் மறைந்திருக்கும் உண்மை. மறைவாய் இரண்டு பேர் என் ஒவ்வொரு கதையிலும் மறைந்திருக்கிறார்கள்.மூதாதையர் நேரடியாய்  வெளிப்பட்டுத் தோன்றும் முறை, இல்லாதது தோன்றும் தன்மை, அல்லது தெரியாதது தெரியும் தன்மை. இதுதான் என் எழுத்தை நான், பிறர் ஏற்கிறார்களோ இல்லையோ என்பதை சட்டை செய்யாது – அறிந்துகொள்ளும் அடிப்படை.

திரைப்படப் பத்திரிகையில் கம்ப்யூட்டர் பிரிவில் என் இலங்கைக்கார நண்பர் பணியாற்றினார். நான் சினிமாவின் கதைப்பிரிவு சார்ந்த எடிட்டோரியல் பகுதியில் பணியாற்றினேன். அது ஒரு  விநோதமான வேலைப் பிரிவினைதான் என்பது எனக்கும் தெரியும். எனக்குக் கதை எழுதுவதன் தத்துவம், உத்திகள், தொடக்கத்துக்கும் நடுவுக்கும் முடிவுக்கும் மத்தியில் இருக்கும் உறவு இப்படி எல்லாம் யோசிப்பதும், விவாதிப்பதும் பிடிக்கும் என்பதால் தீவில் பிரசித்திபெற்ற  பத்திராதிபரான  என் நண்பர், அந்த சினிமாப் பத்திரிகையில் எனக்கென்றே அந்த கதைவிவாதப் பகுதியை உருவாக்கியிருந்தார். அதனால் அவர்களின் சினிமா விமரிசனம் வளம் பெற்றது என்று பத்திராதிபர் கூறியது உண்மைதான்.

நாங்கள் வசித்தது என்னவோ சிறிய நாடுதான் என்றாலும் சினிமா தயாரிப்பதிலும் சினிமா வியாபாரத்திலும் அவுட்டோர் ஷுட்டிங் நடத்தவரும் பல வெளிநாட்டு நிறுவனங்களுக்கு உதவுவதிலும்  நல்ல வருமானம் வந்தது. எங்கள் நாட்டிலும் ஜனாதிபதியாக வருபவர் முன்னாள் நடிகராகவோ நடிகையாகவோ தான் இருக்கிறார். எங்கள் மக்கள் அதற்கெல்லாம் அசராமல் தொடர்ந்து சினிமாக்காரர்களையே தேர்ந்தெடுத்து வருகிறார்கள். சமீப காலங்களில் நிலமை இன்னும் மோசம்.

இலங்கைக்காரர் என்னிடம் அவர்கள் நாட்டில் படங்கள் தயாரிப்பு  வளரவில்லை என்றார். ஒருநாள் வழக்கம் போல – நான் எதிர்பார்த்ததும் அதுதான் – தனிநாடு கேட்டு அவர்கள் நாட்டில் நடத்த யுத்தத்தில் படை உருவாக்கிய மனிதனின் முடிவு பற்றி மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மனதில் விசனத்துடன்   சொன்னார்.

“கடைசியில் அந்த மனிதன் எதிரியின் சைன்யத்தால் கேவலப்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டான். அவனுடைய உடைகள் களையப்பட்டிருந்தன; அவை பல இணையத்தளங்களில் புகைப்படங்களாய் வெளிப்பட்டன. தலையில் கோடரி போன்ற வஸ்துவால் வெட்டப்பட்டது. கண்களை மூடாமல் படம் எடுத்திருந்ததால் மரணமுற்ற மனிதனின் கண்கள் திறந்திருந்தன. எதிரி இரக்கமில்லாதவன் என்பதையும் எதிரியை மரணத்திற்குப் பிறகும் அவன் பார்த்துக்கொண்டு இருக்கிறான் என்று அவனுடைய இனத்தவரான நாங்கள் நினைப்போம் என்பதையும் அந்தத் திறந்த கண்கள் சுட்டிக் கூறின”.

இலங்கைக்காரரின் நட்பால் கவரப்பட்டிருந்த நான் அவருடைய உணர்வில் இப்போதெல்லாம் பங்கெடுக்க ஆரம்பித்தேன். எங்கோ இருந்த யாரோ ஒரு தேசியத் தலைவைனைப் பற்றிக் கூறுகிறார் என் நண்பரான இலங்கைக்காரர் என்ற உணர்வு மாற ஆரம்பித்தது. என் எழுத்துக்களின் உள்ளே இருக்கும் ஒரு மர்மமான முடிச்சை விடுவிக்கும் விடுகதைக்கான பதிலை என் நண்பர் எப்படியோ எனக்குள் உருவாக்கிவிட்டார் என்று உணர ஆரம்பித்தேன். எனக்கு வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அந்தத் தேச சுதந்திரத்துக்குத்  தன் உயிரையும் மனைவி மக்களின் உயிரையும் பணயம் வைத்த தலைவனைப் பற்றிய தகவல்களை நானும் திரட்ட ஆரம்பித்தேன்.

தொடர்ந்து நான் கூறிக்கொண்டுவரும் என் எழுத்தின் தத்துவம், பின்புலம், உளவியல்  விவரணைகள் என் ஒவ்வொரு எழுத்திலும் வரும்படி எழுதிக்கொண்டே இருந்தேன். அத்தகைய காலத்தில் நான் ஒரு புதிய கதை எழுதுவதற்கான தகவல்களைத் திரட்டிக்கொண்டிருந்தேன். தனிமையாலும் வயோதிகத்தாலும் பீடிக்கப்பட்ட ஒருவன் தனித்தீவில் மாட்டிக்கொண்டு வாழ்வின் அர்த்தத்தை எல்லாவித ஆபத்துக்களையும் எதிர்கொண்டு மனதுக்குள் உருவாக்கும் அந்தக் கதையில் ஒவ்வொரு ஆபத்தும் அவன் மனதைத் திறந்துவிடுகின்றது. ஆபத்தில்லாவிட்டால் அவனால் வாழமுடியாதென்று கருதும் அளவு போகிறான். அதற்காகத் தற்கொலை மனோநிலையை அவன் உருவாக்குவதில்லை என்பதுதான் அவன் கதையின் தனிச்சிறப்பு என்பது எனக்கு நன்கு தெரிந்திருந்தது.

அக்காலத்தில் இலங்கைக்கார நண்பர்  தனிநாடு கேட்டுத் தன் மக்களுக்காக மரணமடைந்த மனிதனைப் பற்றிய புதுத் தகவல்களைக் கொண்டு வந்தார்.

ஒன்றரை லட்சம் மக்கள் இறந்த யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் நடந்த தகவல்கள் யாருக்கும் தெரியவில்லை. அந்தத் தலைவனின் மனைவியும் மகனும் கொலை செய்யப்பட்ட தகவல் மட்டும் வெளியில் வந்திருந்தது.நண்பரும் அதைக் கூறி வருந்தினார். நான் எதிர்பார்க்காத விதமாய்  இந்தத் தகவல்களைக் கொண்டுவந்த மறுநாள் பெருமையாய் அந்த இலங்கைக்காரர் வந்து எனக்கு உணவு வாங்கிக் கொடுத்தார். எதற்கு என்று கேட்டபோது தலைவனின் மரணப்புகைப்படங்கள் மார்ஃப் செய்தவை; எதிரிகளால் செயற்கையாக உருவாக்கப் பட்டவை என்றார். தலைவனும் அவனது துணைவியும் தப்பிவிட்டார்கள் என்று தகவல்கள் வந்துள்ளன என்றார். அவரளவு நான் அச்செய்தியைக் கேட்டு மகிழவில்லை. எனக்கு எதுவும் புரியாமல் இருந்தது. ஒருவேளை இறந்தவன் உயிர்த்தெழுவது எனக்குப் புதியதல்ல என்பதாலாக இருக்கலாம்.

அதன் பின்பு வழக்கம்போல நண்பர் அவரது கணினி வேலையிலும் நான் என்னுடைய கதை டிப்பார்ட்மென்டில் கதைகளை அலசும் வேலையிலும் ஈடுபட்டோம். என் காரியங்கள் வேறு. இன்று ஒரு சினிமாவில் வரும் தேவையில்லாத ஒரு பெண் பாத்திரம்  இறுதியில் சந்திக்கும் விபத்து பற்றி யோசித்தபடி இருந்தேன். அது எனக்குப் பிடிக்காத என்தொழில். எனினும் அடுத்த நாளிலிருந்து எனக்குப்பிடித்த காரியமான சுயபரிசோதனையில் ஆழ்ந்தேன்: நான் என் கதைகளைப் பற்றியும் என் இலக்கியத்தின் அடிப்படைத் தன்மை பற்றிய தொடர் விசாரத்திலும் ஈடுபட்டேன். ஒருவன் எதற்காக எழுதுகிறான்? நான் எதற்காக எழுதுகிறேன்?என்ற கேள்வி மீண்டும் வந்தது. ஒரு ஆங்கிலக் கவிஞன் ‘நான் கவிதை எழுதுவதால் எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்பதைக்கண்டுபிடித்தேன்’ என்றான். அப்படியென்றால் எனக்கும் கடவுள் நம்பிக்கை இல்லை என்பதால் நான் எழுதுகிறேனா என்ற கேள்வி தோன்றியது. எனக்குக் கேள்விகள் போதும் என்று நான் வாழ்பவன். அதனால் விடைகளை நான் கஷ்டப்பட்டுக் கண்டுபிடிப்பதற்குச் சிரமம் எடுப்பதில்லை. கேள்விகளே விடைகளின் சந்தோஷத்தை எனக்கு அளிக்கின்றன. இந்த அர்த்தத்தைக் கொண்ட வாக்கியம் புரியாததாகப் பல மொழிகளில் கருதப்படும்போது என் மொழியில் இது மிகவும் நன்றாகப் புரிகிற வாக்கியம் என்பதை நான் சொல்லித் தான் தீர வேண்டும்.

எதிர்பாராத விதமாக – என் தீவிலிருந்து, மிகப் பல ஆண்டுகளுக்கு முன்பு – 1943-இல் ஜனவரி நாலாம் தேதி காணாமல்போன என் தம்பி, தாடியுடன் நேற்று திரும்பி வந்தபோது என் வீட்டில் அவனை அமர வைத்துவிட்டு வெளியே நான் போனேன். நான் அப்படி ஒரு அடி வெளியே எடுத்து வைத்துவிட்டு  மீண்டும் வீட்டுக்குள் சென்று அவனையே பார்த்துக் கொண்டு நின்றேன். அவன் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.

என் எழுத்துக்கள் தோல்வியானவையா வெற்றி பெற்றவையா என்று ஆங்கிலத்திலும் பிறமொழிகளிலும் வருகின்ற நூல்களைப் படித்த எங்கள் விமரிசகர்கள் எப்போதும் ஒரு கேள்வியைக் கேட்பதற்குச் சலிப்படைவதில்லை. அந்தக் கேள்வியை அவர்கள் கேட்டுக்கொண்டு சாகட்டும் என்று நான் விட்டுவிட்டேன். என்ன பதில் வரப்போகிறதென்று நான் தலைமுடியைப் பிய்த்துக் கொள்வது கிடையாது; அப்படி இருப்பது  என் வரப்பிரசாதமான மனநிலை என்று எனக்கு நான் கூறிக் கொள்கிறேன். அதுபோல் என்னைப் போலவே புனைகதை எழுதும் எழுத்தாளர்கள்  –  என்மொழியில் சக எழுத்தாளனைப் பற்றிப் பேசினாலே அது கெட்ட சகுனம் – அவர்களின்  ஒலவு மொழி எழுத்து எங்கள் தீவில் பிரசுரிக்கப்படுகின்றன. இங்குக் கிடைக்கும் ‘சீப்’பான தாளில் அழகற்ற ஆதிவாசிப் பெண்களின் (இவர்கள் படத்தைப் போட்டால்தான் நூல் விற்கும் என்கிற மூடநம்பிக்கை இருக்கிறது) அட்டைப் படத்துடன் முதல் பதிப்பு, 500 பிரதிகள்  அச்சடிக்கப்படும். எங்கள் ஜனாதிபதிகள்  கடந்த 45 வருடங்களாக மாறிமாறி ஆட்சிக்கு வரும் போது இருவரும் போட்டி போட்டு நாவல் எழுதுகிறார்கள்.(அதற்கு  முன்பு பிரான்ஸிடமிருந்து  தீவின் சுதந்திரத்துகாகப் போராடியவர்கள் ஜனாதிபதிகளாய் இருந்தனர்.) போட்டிபோட்டு அவர்கள் இருவர் எழுதும் கி.பி. 1000 ஆண்டைச் சார்ந்த வரலாற்று நாவல்கள் மட்டும் 6000 காப்பிகள் விற்கும். பிரஞ்சு மொழியில் அவை பெரிய விளம்பரத்துடன் வந்து விடுகின்றன என்ற தகவல் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் தொடர்ச்சியாக என் எழுத்து எதற்காக உருவாக்கப்படுகிறதென்று எனக்குள் எழும் கேள்விகளுக்குப் பதில் எதிர்பார்த்தபடியே வாழ்வதும் எழுதுவதுமாக என் காலம் ஓடிக்கொண்டேயிருக்கிறது.

1943-இல் எங்கள் தீவில் அந்நியர்கள் வாழ்ந்தபோது காடுகளில் பதுங்கியிருந்து ‘ஓகோல்’ (சுதந்திரம் என்று பொருள்) என்ற ரகசிய இயக்கத்தின் துணைத் தளபதியாக இருந்து நாடு கடத்தப்பட்ட என் தம்பி பல ஆண்டுகளுக்குப் பிறகு வயதான தோற்றத்தில் வந்தவன் யாருக்கும் தெரியாமல், ஒரு வாரம் முழுதும் தூங்கிக் கொண்டேயிருந்தான்.இத்தனை ஆண்டுகள் ஒருநாள்கூட தூங்குவதற்கு நேரம் கிடைக்காதவன்  போலத் தூங்கினான். இன்றைய அரசாங்கம் அவன் உயிருடன் இருக்கிறான் என்பதை அறிந்தால் என்ன செய்யும் என்பதைப் பற்றிய எந்த அறிவும் இல்லாத நாங்கள் அவன் ஊரில் இருக்கும் விசயத்தை யாருக்கும் சொல்லவில்லை. என் வீட்டுக்குப் பல நாட்டு சினிமாக்காரர்கள் வந்துபோவது வாடிக்கை என்பதால் யாரும் தாடியுடன் இருக்கும் என் வயதொத்த இன்னொரு முதியவனைச் சந்தேகக் கண்கொண்டு  பார்க்கவில்லை என்றாலும் என் தம்பி ஒரு வாரத்துக்குபின் என்னிடம் சொல்லாமல் புறப்பட்டு விட்டான் என்பது மட்டும் புரிந்தது.

என் புனைகதைகளின் அடுத்த விசயத்துக்கு வருகிறேன்.  விலங்குகளும் குழந்தைகளும் பாத்திரங்களாய் தோன்றியபோது அவர்களும் காலங்காலமாக என் பிறப்புக்கு முன்பிருந்தே என்னிடம் பேசியவைகளை என் கதைகளிலும் அமர்ந்து பேசினார்கள். அது பற்றிய ஒரு நிச்சயமான எண்ணம்  எனக்கு இருந்தாலும் அவ்விஷயத்தை யாருக்கும் சொன்னதில்லை. எனினும் என் பேட்டிகளைத் தொகுத்து வெளியிட்டிருந்த என் வாசக நண்பர் சமீபத்தில் என்னிடம் இக்கருத்தைப்பகிர்ந்து கொண்டபோது எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது.

இலங்கைக்காரர், நான் உடல்நலமின்றி இருந்ததால் அலுவலகம் போகாதபோது இரண்டு நாட்கள்  எனக்காகக் காத்திருந்த விஷயத்தை பின்பு நான் அலுவலகம் போனபோது கூறி  அவர்களின் தலைவன் பற்றிய மிகப் பிந்திய தகவலை என்னிடம் பகிர்ந்தார்.

‘அவரும் குடும்பமும் பலிபோடப்பட்டுவிட்டார்கள். நான் போனமுறை சொன்னது தவறாகிவிட்டது’  என்றார்.

‘அது நான் எதிர்ப்பார்த்தது  தான்’ என்று அவரிடம்    கூறிவிட்டு,       இருவரும் எங்கள் தீவில் தயார் செய்யப்பட்ட கசப்பு மிகுந்த டீயை அருந்தியபடி பேசிக்கொண்டு அமர்ந்தோம். அவர் தொடர்ந்தார்.

‘உண்மையா? எங்கள் மக்களின் விடுதலைக்கு இனி யாரும் இல்லையா? தலைவனும் அவன் துணைவியும் உயிரோடு இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை பொய்யாகி விட்டதா?’

‘உங்கள் மக்களின் தலைவனையும் அவன் மனைவியையும் யாரும் கொல்ல முடியாது’ என்றேன் மிக உறுதியாக. என் நண்பர் திருப்தி அடையவில்லை என்னுடைய பதிலால் என்பதறிந்தேன்.

‘உண்மை என்ன சொல்லுங்கள். நான் போன வாரம் உங்கள் தம்பியைச் சந்தித்தேன். இறந்துபோனவர் என்று பல ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் மக்கள் நினைத்தார்கள். அவர் உயிருடன் இருக்கிறார். அதுபோல் எங்கள் தலைவனும் வருவானா?’

‘என் தம்பியைத் திரும்ப இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பேன் என்று நானும்  நினைக்கவில்லை.’என்றேன்.

‘அவர் ஏன் புறப்பட்டுப் போய்விட்டார்?’

‘அவரைப் பொறுத்தவரையில் அவர் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து போனவர்’.

‘உங்களைப் பொறுத்தவரையில்?’

இலங்கைக்காரர் கேட்ட கேள்விக்கு நான் சொல்லப் போகும் பதில் அவருக்குத் தெரியும் என்பதுபோல் அவருடைய முகபாவம் தென்பட்டது.

அதனால் அவர் அமைதியானார். என் வாய் அவருக்குத் கேட்காதபடி  முணுமுணுத்தது.

‘என் தம்பி ஏற்கனவே இறந்து போனவர்’.

எழுபத்தைந்தாம் வயதைத் தொடப் போகிற நான் மறுநாள் வெளிநாட்டுப் படத் தயாரிப்புக் குழு ஒன்றின் வருகைக்காகக் காத்திருந்தபோது இலங்கைக்காரர் எனது பின்பக்கமிருந்து ஒரு நிழல்போல் வந்து என் முன்பு தென்பட்டார். அன்று சுள்ளென்று சூரியன் சுடுவதுபோல் வெயில் அடித்தது. வழக்கமாய் எப்போதும் 25 டிகிரி செல்சியஸ்க்கு மேல் போகாத இதமான காலநிலை இருக்கும் எங்கள் தீவில் வெயில் அடித்ததால் அது எல்லோருக்கும் குதூகலமான மனநிலையை உருவாக்கியது.

அப்போது அடித்த வேகமான காற்றில் நண்பர் சொன்னது லேசாகக் கேட்டது.

‘எங்கள் தலைவனும் அவனது துணைவியாரும் உயிருடன்தான் இருப்பார்கள்.மீண்டும்  வருவார்கள்.’

உணர்ச்சிப் பெருக்கால் நண்பரின் தொண்டை கமறியது. கண்களில் கண்ணீர் முட்டியது.

நான் ஆமோதித்தேன். என்னை அறியாமல் சொற்கள் வெளிப்பட்டன.

‘தலைவன் கண்டிப்பாக  வருவான்.நான் உண்மையாகவே நம்புகிறேன்.’

அவரின் முகத்தில் தெரிந்த பிரகாசம் அமானுஷியமாயிருந்தது.

அதன் பின்பு நான் அவரைப்பல மாதங்கள் சந்திக்கவில்லை. வேலையை விட்டு விட்டாரோ என்று நினைத்தேன்.

அப்படி  பல மாதங்கள் கடந்தன. இடையில் ஏதேதோ வேலைகளில் நான் ஈடுபட்டேன்.

மீண்டும் ஒருநாள்  என் நினைவுகளில், நான் எழுதப்போகிற  – அல்லது எழுதிய பல பாத்திரங்கள் என்னுடன் பேச ஆரம்பித்தார்கள். அவற்றில் உயிர் உள்ள பாத்திரங்களும் இல்லாத பாத்திரங்களும் இருந்தனர். எப்போதும் என் கற்பனை எழுத்துக்குள் நான் கொண்டு வருகிற உரையாடலில் என்னதான் பழைய மூதாதையர்கள் தூண்டுகோலாக வந்தாலும்  ஒரு நிஜ நபரின் குரல் கேட்காவிட்டால் என் கதையை நான் தொடர்ந்து எழுத முடியாதென்று பல காலமாக  உணர்ந்த விஷயம் இப்போதும் மனதில் பதிந்தது.

என் தம்பி மீண்டும் கனவில் வந்த அன்று தீவில் பேரளவு கடல்கொந்தளித்தது. பல கட்டுமரங்கள் சிதைந்து பதினெட்டுத் திமிங்கலங்கள் செத்து கரை ஒதுங்கிய அன்று பல்வித உற்பாதங்களும் தீவில் ஏற்பட்டபோது எனக்கு ஏனோ அரைதாடியும் சுருட்டை முடியும் கொண்ட இலங்கைக்காரரும்  அதுபோல் கண்திறந்தபடி காட்சி தந்த ஒரு தலைவனும் மனக்கண்ணில் ஒப்புமையில்லா உள்காட்சியாய் தோன்றினார்கள்.

மலேசிய நாவல்: உலகத் தமிழ் நாவல் பரிமாணம்

 

 

தமிழகத்தில், ஈழத் துன்பியலுக்குப் பிறகு மௌனமாக ஒரு மாற்றம் நடந்திருக்கிறது. படைப்பில் குறிப்பிட்ட மொழியைப் பேசுபவர்களின் வரலாறும் இனஉணர்வும், அவர்களின் மரபுக்குள்ள முக்கியத்துவமும், அந்த முக்கியத்துவத்தால் உருவாகும் புது அர்த்தங்களும் இடம்பெற வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. மொழிதான் அந்த நிர்பந்தத்தை உருவாக்கி இருக்கிறது. இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் காந்திய இலக்கியமும் சுதந்திர போராட்டமும் ஓரளவு தமிழ்ப்படைப்பைப் பாதித்தன. திராவிட இலக்கிய காலத்தில் சினிமா மோகம் கெடுத்தாலும் பாரதிதாசன் மட்டும், கவிதைக்கு இனவேர் முக்கியம் என்று உணர்ந்ததால் அவர் மட்டும் 20-ஆம் நூற்றாண்டின் வேர்ப்பிடிப்புள்ள கவிஞராய் எஞ்சினார். இக்காலத்துக்கு அடுத்து மார்க்சியம் தமிழைப் பொறுத்தவரையில் சில சூழல்களை உருவாக்கியது. 2009-இல் ஈழப்போர் தோற்கடிக்கப்பட்ட சூழலில் பெரிய மாற்றங்கள் மொழித்தளத்தில் ஏற்பட்டதால் அனைத்துலகத் தமிழர்கள் என்ற புதுத் தமிழ்ப் பிரக்ஞை ஏற்பட்டது.

 

இதனால் தமிழகம் பிரக்ஞை அளவில் தனியாக இல்லை, மலேசியா-சிங்கப்பூர் மற்றும் ஈழம் தொடங்கி அனைத்துலக நாடுகளின் எழுத்து ஒருங்கிணைந்த ஒருவித நவீன ஓர்மை தோன்றியுள்ளது என்ற கோட்பாடு தோன்றியுள்ளது. இதன் பின்னணியாக மலேசிய, சிங்கப்பூர் எழுத்தில் வெளிப்படும் உள்ளமைவுகளைத் தமிழக எழுத்தோடு இணைக்கும் முயற்சி தொடங்கியுள்ளது.

 

இந்தச் சூழலில் தமிழகத் தமிழில் இல்லாத பாடுபொருள்கள் மலேசிய மண்ணில் பிறந்து வளர்ந்த எழுத்தாளர்களிடம் எப்படிக் காணப்படுகின்றன என்பதைத் திறனாய்வில் வடிவமைக்க வேண்டும்.

 

“நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள்” என்ற தலைப்பில் வெளிவந்துள்ள கே.பாலமுருகனின் மலேசியத் தமிழ் நாவல், வாசித்தவுடன், பல புது அம்சங்களைக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது.

 

தமிழர்கள் மலேசியாவிலும், சிங்கப்பூரிலும், ஈழத்திலும் பூர்விகமாக வாழ்கிறார்கள். மலேசியாவில் தோட்டங்கள் அழிக்கப்பட்ட பின்னுள்ள வாழ்க்கையும் நகரத்துக்கு வரும் சரித்திரத்தின் தொடக்கமும் இந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கின்றன.

 

பழைய நாவல்களையோ, சிறுகதையையோ போலல்லாமல் நிலம் பெயர்ந்த தமிழ் வாழ்க்கை ஒருமையமற்ற (decentred) நாவலை உருவாக்கியுள்ளது. புதிய மலேசிய சிறுகதைகளும் கவிதைகளும்கூட இந்த எதார்த்தத்தைத் தைரியமாய் எதிர்கொள்கின்றன. ஜெயகாந்தன், அகிலன், நா.பார்த்தசாரதி போன்றோர் தமிழிலக்கிய முன்மாதிரிகளாய் இந்த எந்தப் படைப்பிலும் இல்லை. மலேசிய எதார்த்தத்திலிருந்து அதன்வாழ்க்கையிலிருந்து இயல்பாய் மலர்ந்துள்ள இந்த குரூரமான சித்திரிப்புகளில் வாழ்க்கையின் உள் உந்துதல் தென்படுகிறது. மலாய், சீனம் என்று எந்த வேறுபாடும் இல்லை. ஆனால், தமிழ்ச் சகோதரத்துவம் எல்லாரின் வாழ்விலும் எப்படியோ பூடகமாய், வாழ்விலும் தாழ்விலும் நீக்கமற பதிவு பெறுகிறது. புக்கிட் லெம்பு என்ற தமிழகத் தமிழர்களுக்குப் புரியாத சொல்லைப் பெயராகக் கொண்ட தோட்டத்தின் பாம்புகளுக்கும், நல்லதுக்கும் கெட்டதுக்கும், பால்வெட்டும் மரங்களுக்கும் பள்ளிக்கூடங்களுக்கும், கடனுக்கும் நடுவிலிருந்த வாழ்வு சிதைக்கப்பட்டுச் சீதாம்பரன் என்ற பால்வெட்டும் வேலைக்காரன் தன் மகன்கள், மகள், மனைவி, நண்பர்கள், எசமானர்கள், அவமானப் படுத்துபவர்கள்  என்ற சூழலை விட்டுவிட்டு நகரத்துக்குக் குடியேறுகிறான்.

 

அப்படிக் குடியேறும்போது அவனை வெறுக்கும் மூத்தமகன் ஏற்கனவே வெளியேறி இருக்கிறான். தாய் தந்தையர் பார்த்துத் திருமணம் செய்து அனுப்பப்பட்ட மகள் அஞ்சலியை மணந்தவன் ஏமாற்றுக்காரனாக வாழ்க்கையை நடத்தும் ஒரு தமிழன். அவனை விட்டுவிட்டு வெளியேறும் தைரியத்தை வாழ்க்கை அவளுக்குக் கொடுத்துள்ளது நாவல் இறுதியில் தெளிவாகிறது.

 

நாவலில் கதைத் திருப்பங்களோ, பெரிய கதையோ தொடர்ந்த மொழிநடை சாதுரியமோ துருத்திக்கொண்டு நிற்கவில்லை. மலேசியாவில் சீரழிந்து போய் விடுவோமோ என்று பயத்துடன் இயங்கும் தமிழ்வாழ்வு நாவலில் இயல்பாய் இருக்கிறது. “பிள்ளையைத் தூக்கி கைலி சட்டைக்குள் அதன் தலையை விட்டு, மார்புக்காம்புகளை, அந்தக் குழந்தையின் வாயில் திணிக்கும்போதெல்லாம் சாரதா மெய் சிலிர்த்துப் போவாள்” என்று பாலமுருகன் எழுதும்போது மொழியாற்றல் எங்கெங்கு வேண்டுமோ அங்கங்கு இருக்கிறது என்பதை அறிகிறோம்.

 

இந்த நாவலின் கட்டமைப்பு மிக முக்கியமானது. காட்சிகள் துண்டு துண்டாகப் பிரிக்கப்பட்டு “ஒருவிதமான” கதை அமைப்புப் படிக்கிறவர்களின் மனதில் லேசாய் உருவாவதுபோல் ஜோடிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் பழைய வாழ்க்கையும் புதிய வாழ்க்கையும் எந்த வித்தியாசமும் அற்ற வறுமையுடனான கொடூரத்துடன் அமைக்கப்படுகின்றன. கதையின் சுகத்தில் வாசகன் தன்னை மறக்கும் தமிழக டி.வி., சினிமா, தொடர்கதைகளின் சாபக்கேடு தன் எழுத்தில் வந்துவிடக் கூடாது என்று முழு பிரக்ஞையுடன் எழுதப்பட்டிருக்கிறது; இந்நாவலின் வெற்றிக்கான அடிப்படை இது.

 

நாவலின் பக்கங்கள் புரள புரள சாரதா என்ற குடும்பத் தலைவியும், சீதாம்பரம் என்ற தோட்ட வேலைக்காரனும் குடும்பத்துக்காய் படும்பாடு வாசிப்பவர்களை ஊசியால் தொடர்ந்து குத்துவதுபோல் உணர்வெழுப்பு கின்றன.

 

எந்த நிகழ்ச்சியும் பெரிதுபடுத்தப்படவில்லை. தலைபெரிதாய் பிறந்த நோயாளியான குழந்தையை யாரிடமோ கொடுக்கும்போதும் கடன்வாங்கி மகள் அஞ்சலிக்குத் திருமணம் செய்து அனுப்பும்போதும் ஒரே மாதிரியான கதைசொல்லல் நடைபெறுகிறது.

 

இந்த நாவலின் இன்னொரு உத்தி பற்றி கண்டிப்பாகச் சொல்ல வேண்டும். நாவலின் 46-ஆம் பக்கத்தில் சீதாம்பரம் கோலாலம்பூர் போகிற விஷயம் வருகிறது. நாவலின் இறுதியில் உதாரணமாக பக்கம் 234-இல் சாரதா “யேங்க, கோலாலம்பூரா அது பெரிய ஊரா?” என்று கேட்கும் போதும் நாவல் சுமார் 190 பக்கங்களைத் தாண்டியிருக்கிறது. அதாவது 19 ஜுன் மாதம் 1995-இல் ஒரே நாளில் நடக்கும் நிகழ்ச்சிகள் இரண்டு இடங்களில் தரப்படுகின்றன. தொடர்ச்சியின்மையை ஒரு உத்தியாய் நாவல் முன்வைக்கிறது. தொடர்ச்சி இல்லாத வாழ்க்கை. அன்றும் வறுமை இன்றும் வறுமை என்பதை நாவலின் உத்தி இவ்வாறு காட்டுகிறது.

 

இந்த நாவலில் குழந்தைகளைப் பிறருக்குக் கொடுத்துத் துன்பத்திலிருந்து விடுபடலாம் என்று நினைக்கும் சீதாம்பரம் மீண்டும் வாழ்வின் கொடூரத்தில் சிக்கி விடுபட முடியாமலாகிறான்.

பிரமை தொடர்வது, தேதிகள் குறிப்பிட்டுக் கதை நகர்த்துவது போன்றன நாவலை படிப்பவர்களுக்குச் சிரமத்தைக் கொடுத்தாலும் நாவல் சொல்லவந்த மைய உள்ளடக்கத்தை மையமற்ற கதையாடல் உத்தி மூலம் சொன்னதின் மூலம் மலேசிய இலக்கிய வரலாற்றில் இந்நாவல் யாராலும் நீக்க முடியாத அங்கமாகிவிட்டது என உறுதிபடக்கூறலாம்.

 

பல சொற்கள் (மலாய், சீன சொற்கள்) தமிழகத்திலிருப்பவர்களால் புரிந்து கொள்ளமுடியாதவை.

 

“சாப்டணே, இட்லி இருக்கு, கோரேங் எல்லாம் இருக்கு…. தோச இருக்கு”

 

இதுபோல் பேச்சுமொழியும் நமக்குப் புரியாத சொற்களும் தமிழ் நாவல் இலக்கியத்தின் பரப்பு விரிவாகிக் கொண்டு போவதை உறுதிப்படுத்துகின்றன.

 

இவ்வாறு ஒரு உலகத்தன்மை தமிழ் எழுத்தில் வந்து சேர்ந்துள்ளது எனலாம்.

நவீனின் மலேசியக் கவிதைகள்: உலகத் தமிழினத்தின் ரகசியம்

 

 

 

நவீன் என்ற பெயரில் மலேசிய இலக்கியச் சூழலில் புதிய இலக்கியச் செயல்பாடுகளில், தொடர்புபடுத்தி வருபவரும், இளைய வயதும், ஆழ்ந்த இலக்கிய அக்கரையும் கொண்டவரும் ஆன கவிஞரின் அபூர்வமான கவிதைகளை வாசிக்கும் வாய்ப்பு எனக்குச் சமீபத்தில் வாய்த்தது.

 

மலேசியாவில் தோட்டவாழ்க்கை என்னும் எதார்த்தம் சிதைந்த பின்பு நகரங்களுக்குக் குடிபெயர்ந்த முன்னாள் தமிழகத்துச் சகோதரர்கள் சுமார் 80 களிலிருந்து தங்கள் புதிய வாழ்க்கைமுறையை இலக்கியத்தில் புதிய முறையில் பதிவு செய்து வருகின்றனர். நவீன் பலரோடு முரண்படுகிற இலக்கிய ‘ஆக்டிவிஸ்டாகவும்’ சமரசமற்ற கவிஞராகவும் விளங்குவது மலேசிய இதழ்களான காதல், வல்லினம் போன்றவற்றைப் படித்தவர்களுக்குத் தெரியும். சிங்கப்பூர், மலேசிய இலக்கியச் சூழலை அறிந்தவர்களுக்கு இலக்கியத்துக்குப் புறம்பான காரணங்களை வைத்து இலக்கிய அந்தஸ்து கோருபவர்கள் நிறைய இருக்கிறார்கள் என்பது நாம் அறியவேண்டும். அதுபோல் தமிழகத்தின் பெரும் பத்திரிகை, டி.வி.க்கள், சினிமா போன்றவற்றின் பொதுஜனமனோநிலையின் இலக்கியம் அல்லாத கூறுகள் தமிழகத்தின் கும்பல் கலாச்சார மனோநிலையைச் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாகச் சிறுபத்திரிகை சார் விழுமியங்கள் தமிழகத்தில் முக்கியமான சக்தியாக மாறியுள்ளன. அதனால் தமிழ்த்துறைகள் தமிழகத்திலும் (ஈழம், சீரிய மரபுக்குள் 70களில் வந்துள்ளது. சினிமா பாடலாசிரியனைத் தவறுதலாகக்  கவிஞன் என்று கருதாது) மாறத் தொடங்கியதை இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் கண்டோம்.

 

தமிழகம் எப்போதும் மலேசியத் தமிழர்களின் தாய்ப்பூமியாகவே விளங்குகிறது. தமிழகத்தின் மாற்றங்களை நுட்பமாக வெளியிடும் தமிழிலக்கியம் மலேசிய இலக்கியத்தையும் பாதித்துள்ளது. மலாய், சீன, இலககிய பாதிப்புகள் அனைத்துலகப் பண்பை மலேசியா வழியாக தாய்த் தமிழிலக்கியத்துக்கு அறிமுகப்படுத்துகின்றன. இவ்வாறு மலேசியத் தமிழிலக்கியம் ஒரே நேரத்தில் தெற்காசிய இலக்கியமாகவும் மிகப்பிந்திய தமிழிலக்கியமாகவும் விளங்குகிறது. இந்தச் சிறப்புப் பண்பு இன்றைய இந்தி இலக்கியத்துக்கோ, மராட்டி, மலையாள, கன்னடம் போன்ற இலக்கியத்துக்கோ இல்லாதது; எனினும் இந்தியாவில் முக்கியமான இந்தப் பண்புள்ள தமிழிலக்கியம் கண்டு கொள்ளப்படவில்லை. சினிமா பாடலாசிரியர்களே சிறந்த கவிஞர்களாக ஊதிப் பெருக்கி டி.வி. ஊடகங்களும் தினத்தாள்களும் பரப்புரை செய்வதால் இந்திக்காரனோ, பிறரோ இந்திய அளவிலும் அனைத்துலக அளவிலும் நிஜமான தமிழிலக்கியத்தின் புதிய தன்மைகளை அறியாமல் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் நடந்த தமிழில் புலம்பெயர் இலக்கியம் என்பது பற்றி நடந்த கருத்தரங்கில் தமிழிலக்கியத்தின் அனைத்துலக முக்கியத்துவத்தை சிக்காகோ பல்கலைக்கழகத் தமிழ் விரிவுரையாளரான ஒரு ஜெர்மன் தேசத்தவர் ஆங்கிலக் கட்டுரையாக முன்வைத்தார். “ஒப்பியல் இலக்கியம்” என்ற மேற்கத்தியச் சிந்தனைத் துறையில் இவ்விஷயங்கள் சிந்திக்கப்படும்போது நாடுவிட்டு நாடு பெயர்தல், இலக்கிய, கலாச்சார கலப்புப் போன்ற ஆய்வுகள் புதுப்பிரச்சனைகளை எதிர்கொள்ளும்.

 

இந்தச் சிந்தனைகளை நம்முன் கொண்டு வரும் கட்டாயத்துடன் எழுதப்பட்டுள்ளன நவீன் கவிதைகள். மலேசியாவிலிருந்து வரும் கவிதைகளிலிருந்து தனித்துத் தெரிகின்றன இக்கவிதைகள். பல கவிதைக் கோட்பாடுகளை தொல்காப்பியத்திலிருந்து இன்றுவரை – எழுதும் தமிழ் அறிவு, இன்னும் பல புதிய கோட்பாடுகளைக் கண்டுபிடிக்கும் தேவையை நவீனின் ஒவ்வொரு கவிதையும் தோற்றுவிக்கும் பரிமாணத்தின் எல்லையைச் சுட்டுகின்றன. ஒரு கவிதை போல் இன்னொரு கவிதை இல்லை என்பதை நான் கண்டுபிடித்தபோது அவற்றின் மையமழிப்பும் நோக்கு வீச்சும் தொடர்ந்து வியப்படைய வைத்தன. தனி அடையாளத்தோடு இன்று தாயகத்திலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வரும் ஈழக்கவிதைகளையும் தமிழகக் கவிதைகளையும் ஒப்பிடும்போது ஒரு தனியான வீச்சும் மொழிலாவகமும் கட்டமைப்பும், தொடக்கமும், முடிவும், உருவாக்கும் முழுமைத் தொனிப்பும் என்னை வியக்க வைத்தன.

 

குற்ற உணர்ச்சியைச் சேமித்தல் பற்றியும் (பக்.13), பொறுமை இழந்த கடிகார முட்கள் (13) பற்றியும், கொக்கு மரமாவதும் (17) யாரும் கழுத்து இறுகுவதை நினைவூட்டாமல் இருப்பதும் (17) கவிதையை உருவாக்கிய பெட்டி (18)யும் என்னைக் காணவில்லை (19) என்றும், பழைய பானையில் இருக்கும் யோனியும் அப்பானையை நடிகையின் முலை கேட்டு உடைக்கும் (20) செயலும், இறந்து கிடக்கும் ஒற்றைக்கரமும் (20) அசுத்தம் துறக்கும் நிமிடம் குறித்த சிந்தனைகளும் (24) இறக்கை மட்டும் மனித உடலிலிருந்து தனியே பறந்து செல்லுவதும் (24) என் தேவதைகள் பிறரது தேவதைகளைக் கொல்வதும் (27) மரணத்தின் மொழியில் நுட்பத்தைக் காண்பதும் (36) ஒரு குழந்தை கீழே விழுகையில் அது கால்களைக் கண்டுபிடிப்பதும் அக்குழந்தை தூக்கச் சொன்னபோது கால்கள் கவிதையானதும்  (26) எழுத்தை எறும்புகள் பொறுக்குதலும் (33) விழித்துக் கண்ணின்றிப் பார்த்தபோது இமையின்றி கைகளைக் காணமுடியவில்லை (47) என்பதும் இரண்டாவது முறை இறப்பதும் இரண்டாவது முறை வாழ்வதும் (48) பற்றிச் சொல்வதும் என கவிதைகள் ஒரு புதிய நுட்பத்துடனும் ஆகோஷிக்கும் அர்த்தங்களுடன், கும்மாளமிடும் மொழியாற்றலும் கவிதையும் ஒன்றோடு ஒன்று கவிஞரின் திறமையை வெளிப்படுத்துவதில் போட்டியிடுகின்றன. இப்படி ஆங்காங்கே நம்மைக் கவரும் வரிகளையும் படிமங்களையும் முழுக்கவிதையோடு இணைக்கையில்தான் இவரது கவிதைக்களுக்கு நியாயம் செய்தவர்கள் ஆவோம்.

 

“கடிகாரம்” என்ற கவிதை இப்படித் தொடங்குகிறது.

 

“குறிப்பிட்ட நேரத்துக்குப்பின்

பொறுமை இழந்த கடிகார முட்கள்

கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளிப்பட்டன

————————

நீங்கள் தாமதித்துக் கொண்டிருந்தீர்கள்”

 

கவிதையின் முதல் பத்தியான இந்த வரிகளைப் படிக்கும்போது எதற்காக கடிகார முட்கள் பொறுமையிழந்தன என்று கவிதையில் எங்கும் இல்லை. அதுபோல் இதே கவிதையின் இன்னொரு பகுதி. அதாவது கவிதை முடிகிறது.

 

“ஏதோ ஒரு துவாரத்தில் நுழைந்து

இதயத்தை முற்றிலுமாய்

அறுக்க முற்பட்ட நேரம் நீங்கள்

வழக்கமான புன்னகையோடு வெளிப்பட்டீர்கள்

கடிகாரத்தில் முட்கள் இல்லாததை நீங்கள்

கவனிக்கவில்லை”.

 

கவிதையின் முதல் பகுதியும் கடைசிப் பகுதியும் இக்கவிதையின் அசாதாரணத் தன்மையைத் தன் அறிவுத் தோற்றவியலாய் (எப்பிஸ்டமாலஜி) கொண்டு கவிதையின் பிற உறுப்புகளை மொழித்தளத்தில் உருவாக்கியுள்ளன. இப்போது இந்த வரிகளை மீண்டும் ஒருமுறை படியுங்கள். ஏதோ ஒரு துவாரம் என்பதில் உள்ள “ஏதோ ஒரு” என்பதும் இதயத்தை அறுக்கமுயல்வதன் காரணம் கவிதையில் இல்லாததும் நீங்கள் புன்னகையுடன் வருகிறீர்கள்;  அந்தப் புன்னகை வழக்கமான புன்னகை; அப்போது நீங்கள் கடிகாரத்தில்  இருந்த முட்கள்  மறைந்திருப்பதை எந்தக் காரணத்தாலோ கவனிக்கவில்லை; ஏதோ ஒரு, காரணமற்ற விதமான இதய அறுப்பு, எதற்காகவோ கடிகார முட்கள் மறைகின்றன. இப்படிக் கவிதை ஒரு காரணமற்ற நிகழ்வை கவனத்தில் கொண்டு வருகிறது. அதாவது இக்கவிதையில் வந்தவைகளால் அன்றி கவிதையில் வராதவைகளால் கவிதையின் அர்த்தம் உருவாக்கப்படுகிறது. இது நவீன் கவிதைகளில் அகஸ்மாத்தாக ஏற்பட்ட அர்த்த கட்டமைப்பு முறை அல்ல. “கொக்குமரம்” என்ற கவிதையில்,

 

“கொக்குமரம்

இன்னும் ஒரு மீனுக்காகக் காத்திருக்கிறது.

அதன் கிளை பற்றி அமரும்

பிற கொக்குகளை

அது கவனம் வைப்பதில்லை.

 

என்ற பகுதியிலும் ஒரு மீனுக்காக ஏன் கொக்கு மரம் காத்திருக்கிறது என்றோ ஏன் பிற கொக்குகளை அது கவனம் வைப்பதில்லை என்றோ கவிதை சொல்வதில்லை. புதுக்கவிதை தமிழ்ச் சமூகத்தின் ரகசியங்களைச் சொல்கிறது. அதனை இன்றில்லாவிட்டாலும் இன்னொரு நாள் புரிந்துகொள்ளும் சூழலும், விளக்கமும், அரசியலும் உலகமெங்குமுள்ள இந்த இனம் கண்டுகொள்ளாமல் போகாது.

 

மொத்தத்தில், நவீனின் கவிதைகளைப் பற்றி விரிவாகத் தமிழ்ச்சமூகம் ஆய்வு செய்து தன்னை அறிந்துகொள்வதற்கான வேண்டுகோளாய் இச்சிறு மதிப்புரை அவருடைய “சர்வம் ப்ரம்மாஸ்மி” (2009-இல் வெளியிடப்பட்டது) என்ற நூலை அடிப்படையாய் வைத்துச் செய்யப்படுகிறது. (நூலாசிரியர் தொடர்பு: vallinamm@gmail.com)

 

 

 

மலேசியா

மலேசிய நாவல்: உலகத் தமிழ் நாவல் பரிமாணம்

எஸ்.சி.எஸ்.

 

தமிழகத்தில், ஈழத் துன்பியலுக்குப் பிறகு மௌனமாக ஒரு மாற்றம் நடந்திருக்கிறது. படைப்பில் குறிப்பிட்ட மொழியைப் பேசுபவர்களின் வரலாறும் இனஉணர்வும், அவர்களின் மரபுக்குள்ள முக்கியத்துவமும், அந்த முக்கியத்துவத்தால் உருவாகும் புது அர்த்தங்களும் இடம்பெற வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. மொழிதான் அந்த நிர்பந்தத்தை உருவாக்கி இருக்கிறது. இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் காந்திய இலக்கியமும் சுதந்திர போராட்டமும் ஓரளவு தமிழ்ப்படைப்பைப் பாதித்தன. திராவிட இலக்கிய காலத்தில் சினிமா மோகம் கெடுத்தாலும் பாரதிதாசன் மட்டும், கவிதைக்கு இனவேர் முக்கியம் என்று உணர்ந்ததால் அவர் மட்டும் 20-ஆம் நூற்றாண்டின் வேர்ப்பிடிப்புள்ள கவிஞராய் எஞ்சினார். இக்காலத்துக்கு அடுத்து மார்க்சியம் தமிழைப் பொறுத்தவரையில் சில சூழல்களை உருவாக்கியது. 2009-இல் ஈழப்போர் தோற்கடிக்கப்பட்ட சூழலில் பெரிய மாற்றங்கள் மொழித்தளத்தில் ஏற்பட்டதால் அனைத்துலகத் தமிழர்கள் என்ற புதுத் தமிழ்ப் பிரக்ஞை ஏற்பட்டது.

 

இதனால் தமிழகம் பிரக்ஞை அளவில் தனியாக இல்லை, மலேசியா-சிங்கப்பூர் மற்றும் ஈழம் தொடங்கி அனைத்துலக நாடுகளின் எழுத்து ஒருங்கிணைந்த ஒருவித நவீன ஓர்மை தோன்றியுள்ளது என்ற கோட்பாடு தோன்றியுள்ளது. இதன் பின்னணியாக மலேசிய, சிங்கப்பூர் எழுத்தில் வெளிப்படும் உள்ளமைவுகளைத் தமிழக எழுத்தோடு இணைக்கும் முயற்சி தொடங்கியுள்ளது.

 

இந்தச் சூழலில் தமிழகத் தமிழில் இல்லாத பாடுபொருள்கள் மலேசிய மண்ணில் பிறந்து வளர்ந்த எழுத்தாளர்களிடம் எப்படிக் காணப்படுகின்றன என்பதைத் திறனாய்வில் வடிவமைக்க வேண்டும்.

 

“நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள்” என்ற தலைப்பில் வெளிவந்துள்ள கே.பாலமுருகனின் மலேசியத் தமிழ் நாவல், வாசித்தவுடன், பல புது அம்சங்களைக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது.

 

தமிழர்கள் மலேசியாவிலும், சிங்கப்பூரிலும், ஈழத்திலும் பூர்விகமாக வாழ்கிறார்கள். மலேசியாவில் தோட்டங்கள் அழிக்கப்பட்ட பின்னுள்ள வாழ்க்கையும் நகரத்துக்கு வரும் சரித்திரத்தின் தொடக்கமும் இந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கின்றன.

 

பழைய நாவல்களையோ, சிறுகதையையோ போலல்லாமல் நிலம் பெயர்ந்த தமிழ் வாழ்க்கை ஒருமையமற்ற (decentred) நாவலை உருவாக்கியுள்ளது. புதிய மலேசிய சிறுகதைகளும் கவிதைகளும்கூட இந்த எதார்த்தத்தைத் தைரியமாய் எதிர்கொள்கின்றன. ஜெயகாந்தன், அகிலன், நா.பார்த்தசாரதி போன்றோர் தமிழிலக்கிய முன்மாதிரிகளாய் இந்த எந்தப் படைப்பிலும் இல்லை. மலேசிய எதார்த்தத்திலிருந்து அதன்வாழ்க்கையிலிருந்து இயல்பாய் மலர்ந்துள்ள இந்த குரூரமான சித்திரிப்புகளில் வாழ்க்கையின் உள் உந்துதல் தென்படுகிறது. மலாய், சீனம் என்று எந்த வேறுபாடும் இல்லை. ஆனால், தமிழ்ச் சகோதரத்துவம் எல்லாரின் வாழ்விலும் எப்படியோ பூடகமாய், வாழ்விலும் தாழ்விலும் நீக்கமற பதிவு பெறுகிறது. புக்கிட் லெம்பு என்ற தமிழகத் தமிழர்களுக்குப் புரியாத சொல்லைப் பெயராகக் கொண்ட தோட்டத்தின் பாம்புகளுக்கும், நல்லதுக்கும் கெட்டதுக்கும், பால்வெட்டும் மரங்களுக்கும் பள்ளிக்கூடங்களுக்கும், கடனுக்கும் நடுவிலிருந்த வாழ்வு சிதைக்கப்பட்டுச் சீதாம்பரன் என்ற பால்வெட்டும் வேலைக்காரன் தன் மகன்கள், மகள், மனைவி, நண்பர்கள், எசமானர்கள், அவமானப் படுத்துபவர்கள்  என்ற சூழலை விட்டுவிட்டு நகரத்துக்குக் குடியேறுகிறான்.

 

அப்படிக் குடியேறும்போது அவனை வெறுக்கும் மூத்தமகன் ஏற்கனவே வெளியேறி இருக்கிறான். தாய் தந்தையர் பார்த்துத் திருமணம் செய்து அனுப்பப்பட்ட மகள் அஞ்சலியை மணந்தவன் ஏமாற்றுக்காரனாக வாழ்க்கையை நடத்தும் ஒரு தமிழன். அவனை விட்டுவிட்டு வெளியேறும் தைரியத்தை வாழ்க்கை அவளுக்குக் கொடுத்துள்ளது நாவல் இறுதியில் தெளிவாகிறது.

 

நாவலில் கதைத் திருப்பங்களோ, பெரிய கதையோ தொடர்ந்த மொழிநடை சாதுரியமோ துருத்திக்கொண்டு நிற்கவில்லை. மலேசியாவில் சீரழிந்து போய் விடுவோமோ என்று பயத்துடன் இயங்கும் தமிழ்வாழ்வு நாவலில் இயல்பாய் இருக்கிறது. “பிள்ளையைத் தூக்கி கைலி சட்டைக்குள் அதன் தலையை விட்டு, மார்புக்காம்புகளை, அந்தக் குழந்தையின் வாயில் திணிக்கும்போதெல்லாம் சாரதா மெய் சிலிர்த்துப் போவாள்” என்று பாலமுருகன் எழுதும்போது மொழியாற்றல் எங்கெங்கு வேண்டுமோ அங்கங்கு இருக்கிறது என்பதை அறிகிறோம்.

 

இந்த நாவலின் கட்டமைப்பு மிக முக்கியமானது. காட்சிகள் துண்டு துண்டாகப் பிரிக்கப்பட்டு “ஒருவிதமான” கதை அமைப்புப் படிக்கிறவர்களின் மனதில் லேசாய் உருவாவதுபோல் ஜோடிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் பழைய வாழ்க்கையும் புதிய வாழ்க்கையும் எந்த வித்தியாசமும் அற்ற வறுமையுடனான கொடூரத்துடன் அமைக்கப்படுகின்றன. கதையின் சுகத்தில் வாசகன் தன்னை மறக்கும் தமிழக டி.வி., சினிமா, தொடர்கதைகளின் சாபக்கேடு தன் எழுத்தில் வந்துவிடக் கூடாது என்று முழு பிரக்ஞையுடன் எழுதப்பட்டிருக்கிறது; இந்நாவலின் வெற்றிக்கான அடிப்படை இது.

 

நாவலின் பக்கங்கள் புரள புரள சாரதா என்ற குடும்பத் தலைவியும், சீதாம்பரம் என்ற தோட்ட வேலைக்காரனும் குடும்பத்துக்காய் படும்பாடு வாசிப்பவர்களை ஊசியால் தொடர்ந்து குத்துவதுபோல் உணர்வெழுப்பு கின்றன.

 

எந்த நிகழ்ச்சியும் பெரிதுபடுத்தப்படவில்லை. தலைபெரிதாய் பிறந்த நோயாளியான குழந்தையை யாரிடமோ கொடுக்கும்போதும் கடன்வாங்கி மகள் அஞ்சலிக்குத் திருமணம் செய்து அனுப்பும்போதும் ஒரே மாதிரியான கதைசொல்லல் நடைபெறுகிறது.

 

இந்த நாவலின் இன்னொரு உத்தி பற்றி கண்டிப்பாகச் சொல்ல வேண்டும். நாவலின் 46-ஆம் பக்கத்தில் சீதாம்பரம் கோலாலம்பூர் போகிற விஷயம் வருகிறது. நாவலின் இறுதியில் உதாரணமாக பக்கம் 234-இல் சாரதா “யேங்க, கோலாலம்பூரா அது பெரிய ஊரா?” என்று கேட்கும் போதும் நாவல் சுமார் 190 பக்கங்களைத் தாண்டியிருக்கிறது. அதாவது 19 ஜுன் மாதம் 1995-இல் ஒரே நாளில் நடக்கும் நிகழ்ச்சிகள் இரண்டு இடங்களில் தரப்படுகின்றன. தொடர்ச்சியின்மையை ஒரு உத்தியாய் நாவல் முன்வைக்கிறது. தொடர்ச்சி இல்லாத வாழ்க்கை. அன்றும் வறுமை இன்றும் வறுமை என்பதை நாவலின் உத்தி இவ்வாறு காட்டுகிறது.

 

இந்த நாவலில் குழந்தைகளைப் பிறருக்குக் கொடுத்துத் துன்பத்திலிருந்து விடுபடலாம் என்று நினைக்கும் சீதாம்பரம் மீண்டும் வாழ்வின் கொடூரத்தில் சிக்கி விடுபட முடியாமலாகிறான்.

பிரமை தொடர்வது, தேதிகள் குறிப்பிட்டுக் கதை நகர்த்துவது போன்றன நாவலை படிப்பவர்களுக்குச் சிரமத்தைக் கொடுத்தாலும் நாவல் சொல்லவந்த மைய உள்ளடக்கத்தை மையமற்ற கதையாடல் உத்தி மூலம் சொன்னதின் மூலம் மலேசிய இலக்கிய வரலாற்றில் இந்நாவல் யாராலும் நீக்க முடியாத அங்கமாகிவிட்டது என உறுதிபடக்கூறலாம்.

 

பல சொற்கள் (மலாய், சீன சொற்கள்) தமிழகத்திலிருப்பவர்களால் புரிந்து கொள்ளமுடியாதவை.

 

“சாப்டணே, இட்லி இருக்கு, கோரேங் எல்லாம் இருக்கு…. தோச இருக்கு”

 

இதுபோல் பேச்சுமொழியும் நமக்குப் புரியாத சொற்களும் தமிழ் நாவல் இலக்கியத்தின் பரப்பு விரிவாகிக் கொண்டு போவதை உறுதிப்படுத்துகின்றன.

 

இவ்வாறு ஒரு உலகத்தன்மை தமிழ் எழுத்தில் வந்து சேர்ந்துள்ளது எனலாம்.

புதுக்கம்யூனிசம்

சிறப்புக்கட்டுரை

புதுக்கம்யூனிசம்

தமிழவன்

 

திடீரென இந்திய அரசியலும் சூழலும் மாறியுள்ளன. மோதி இந்தியாவின் பிரதமரானதோடு இந்தியக் கல்வி, வரலாறு, பண்பாட்டுச் சூழல் போன்றன ஒரு பூகம்பத்துக்கு ஆட்பட்டுள்ளன:

 

“புக் ரிவ்யு லிட்டரரி அறக்கட்டளை” என்ற அமைப்பு டெல்லியில் நடத்திய  நிகில் சக்கரவர்த்தி நினைவுச் சொற்பொழிவில் புகழ்பெற்ற வரலாற்றியல் ஆய்வாளரான ரொமிலா தப்பார் ஒரு கருத்தை வெளியிட்டார்: “பாடங்கள் மாற்றப்படுகின்றன: நூல்கள் அழிக்கப்படுகின்றன. அறிவுஜீவிகள் அமைதியாகிவிட்டனர்”.

 

அறிவுஜீவிகள் அமைதியான செய்தி புதுமையானதல்ல. தமிழகத்தைப் பார்ப்போம். இடதுசாரி கட்சிகள் எந்தத் தெளிவுமின்றிச் செயல்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். திராவிடக் கட்சிகள் இரண்டுமு் ஊழலில் சிக்கியுள்ளன. மூன்றாவது அணியான சிறுகட்சிகள் சாதி உணர்வையோ, சினிமா மயக்கத்தையோ, தமிழ் உணர்வையோ பயன்படுத்திச் செயல்படுகின்றன. சமீபத்தில் மோதியின் கட்சியுடன் கூட்டணி அமைக்கவும் தயங்கவில்லை. வேல பல “லெட்டர் பாட்” கட்சிகள் உள்ளன. ஈழப் பிரச்சனையில் சில அமைப்புகளும் சிறுகட்சிகளும் உண்மையாக மக்கள் கவனத்தை ஈர்த்தன. அணு உலை போராட்டம் என்ற புதுமையான போராட்டம் வெற்றிபெற முடியவில்லை. பெரிய கட்சிகள் அத்தகைய போராட்டத்தைத் தடுக்க முடியும் என்று காட்டின.

 

அதாவது தமிழர்களுக்கு அன்று பெரியார் இருந்ததுபோல் இன்று யாருமில்லை. அன்று பெரியார் சிந்தனையின் மூலம் தமிழகத்துக்கு வெளிச்சம் தந்தார். கடவுள் நம்பிக்கையையும் சாதி மேட்டிமையையும் மூடப்பழக்க வழக்கங்களையும் பிரித்தறிய மக்கள் பயிற்சி பெறும் பொருட்டு ஓர் இயக்கத்தை நடத்தினார். அவர்போல் ஒருவர் இந்தியாவில் கர்நாடகம், ஒரிசா, அசாம், வங்காளம் என்று எந்த மாநிலத்திலும் இல்லை. பெரியாருக்குச் செய்ய வேண்டியது: அவர் சிந்தனையைத் தொடர்வது.

 

அந்த வகையில் அவர் சிந்தனையை நாம் தொடரவில்லை. தமிழகத்தைச் சிந்தனை கிளர்ச்சியுள்ள மாநிலமாக மாற்றவும் இல்லை; தமிழ்மக்கள் சுமார் 1,50,000 பேர் ஈழத்தில் கொல்லப்பட்டபோது நாம், தமிழகத் தலைவர்களால் ஏமாற்றப்பட்டோம். தமிழகப் பல்கலைக்கழகங்கள் பொருத்தமான கல்விச் சூழலை ஏற்படுத்தவில்லை. வடநாட்டினளவு கூட புதிய அறிவுச் சூழல் வளர நம் திராவிடத்தலைமை ஏதும் செய்யவில்லை. நவீன சமூகமாகத் தமிழ்ச் சமூகத்தை மாற்ற அவர்கள் விரும்பவில்லை. இலவசப் பொருள்களும் மதுவும் கொடுத்தனர். அவ்வளவுதான். இந்திய அரசியலான இந்துத் தத்துவம் தமிழகத்தில் தற்காலிகமாக இன்று தடுக்கப்பட்டுள்ளது.

 

இலக்கிய அரங்கில் சிறுகுழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அதனால் தமிழ்மொழியில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மொழிகூர்மையடைந்து வருகிறது; பெருங்கட்சிகளைத் “தமிழ்மொழிமைக்குள்” முற்றிலும் அனுமதிக்காமல் இலக்கியக் குழுக்கள் செயல்படுகின்றன. ஆபத்துக்கள் இல்லாமல் இல்லை. அரசியல்வாதிகளின் வாயில் அல்லல்படும் தமிழ் மொழியைப் பலவித சிந்தனைக் கட்டுரைகள், நாவல்கள், கவிதைகள் மூலம் கொஞ்சம் தமிழர்கள் காப்பாற்றுகிறார்கள். பிற செவ்வியல் மொழிகள் அளவுக்குப் புராதன வேர்களைக் கொண்டிருந்தாலும் தமிழ் நவீனமாகி வருகிறது. தமிழ்க்கல்வி இந்த விசயத்தில் எதிர்பார்த்த அளவு முன்னேறவில்லை என்பது வருத்தத்துக்குரியது. மரபுமரபாக தமிழ்மொழி தமிழ்மக்களது அரசியலுக்கும் வளர்ச்சிக்கும் பயன்பட்டு வருகிறது. அதாவது இரண்டாயிரம் ஆண்டுகளாக இது நடக்கிறது. தமிழ்மொழி மூலம் இது தொடரவேண்டும்.

 

இந்தச் சூழலில் அனைத்துலகச் சிந்தனைகளைக் கவனிக்கும்போது “புதுக் கம்யூனிசம்” என்ற பெயரில் உலகம் எங்கும் காட்டுத்தீயைப் போல் பலரது சிந்தனைகள் பரவுவதைக் கூறவேண்டும் என்பதற்காக இக்கட்டுரை எழுதப்படுகிறது.

 

அலென் புட்யொ (Alain Badiou) என்ற பிரஞ்சு தத்துவப் பேராசிரியருடைய கருத்துக்கள் இத்துறையில் சமீப காலத்தில் முக்கியமாகியுள்ளன. சர்க்கோஸி பிரஞ்சு தேர்தலில் அன்று நின்றபோது மீண்டும் கம்யூனிசமும் மாணவர் போராட்டமும் வரக்கூடாது என்று பேசியதைக் கண்டித்து புட்யொ அவர்கள் ஒருநூல் எழுதினார். அந்த நூலின் பெயர்:  “சர்க்கோஸியின் தரும் அர்த்தம்” என்பது. அந்த நூலின் இறுதிப் பகுதியில் கம்யூனிச யூகம் (Communist Hypothesis)  என்ற ஒரு கட்டுரையை இணைத்திருந்தார். பின்பு இக்கட்டுரை தனியாய் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு நியுலெஃப்ட் ரிவியூ என்ற இலண்டன் இடதுசாரி இதழில் 2008-இல் பிரசுரிக்கப்பட்டது. பின்பு 2009-இல்  இலண்டனில் “கம்யூனிசம் என்ற கருத்துப் பற்றி” (On the Idea of Communism)  என்ற கருத்தரங்கை ஸ்லவாய் ஷிஷெக் மற்றும் கோஸ்டாஸ் டௌசினாஸ் (Costas Dowzinas)  இருவரும் நட்த்தினார்கள். அக்கருத்தரங்கு பெர்லினில் இருந்த சுவர் உடைக்கப்பட்ட 20ஆம் ஆண்டு நிறைவுவிழாவைப் பலர் கொண்டாடியதற்கு எதிர்ப்பாய் நடத்தப்பட்டது. அதாவது சுவரை உடைத்ததுடன் கம்யூனிசம் முடிந்து விடவில்லை என்று கூறுவதற்காக இக்கருத்தரங்கு நடத்தப்பட்டது. இக்கருத்தரங்கில் முக்கிய பங்கெடுத்த ஸ்லவாய் ஷிஷெக் (இவர் பற்றிய அறிமுகத்துக்கு சிற்றேடு இதழ்கள் பார்க்க) இன்று உலகமெங்கும் தன்னுடைய சிந்தனைகளால் பூகம்பத்தை ஏற்படுத்தி வருகிறார்.

 

2009-இலண்டன் கருத்தரஙகு பலவகைகளில் முக்கியமானது. அதில் டோனி நெக்ரி (Toni Negri)  ழாக் ரான்சியர், ஸ்லவாய் ஷிஷெக் போன்றவர்கள் பங்கெடுத்தனர். இக்கருத்தரங்கைத் தொடர்ந்து 2010-இல் பாரிஸில் (ஜனவரி) புதுக்கம்யூனிசச் சிந்தனைகளைப் பற்றி விவாதிக்க ஒரு கருத்தரங்கு பாரிஸின் பிரபலமான பல்கலைக்கழகத் தத்துவப் பேராசிரியர்களும் பிற சிந்தனையாளர்களும் கலந்துகொள்ளும் முறையில் நடத்தப்பட்டது. அறுபதுகளில் பேரா.அல்துஸ்ஸரின் மாணவரகளான அலென் புடயொ, ழாக் ரான்சியர், எத்தியானி பாலிபர் (Ethianne Baliber) ஆகியோர் தம் பேராசிரியருடன் இணைந்து செயல்பட்டனர்.

 

அப்போது இவர்கள் அல்துஸ்ஸரின் மாவோயிசக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டிருந்தனர். அல்துஸ்ஸரின்  மனநோய் சார்ந்த மரணத்துக்குப் பிறகும் அலென் புட்யொ மாவேயிசத்தால் ஈர்க்கப்பட்டுப் புது தத்துவக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதில் தான் வாழ்நாளைச் செலவிட்டார். புதுக் கட்சி ஒன்றையும் தொடங்கினார். ரான்சியர் தன் பாதையில் தத்துவத்தில் பயணம் மேற்கொண்டார். பாலிபரும் மார்க்ஸின் தத்துவம் முதலிய நூல்களை எழுதுவதில் ஈடுபட்டனர். எல்லோரும் கலை இலக்கியம் தனியானது என்ற கருத்தில் உடன்பட்டாலும் பிற சிந்தனைகளில் வேறுபட்டனர். ஆனால் இவர்கள் எல்லோரும் 2010-இல் நடந்த  பாரிஸ் கருத்தரங்குக்கு வந்திருந்தனர். அறுபதுகளில் சார்த்தர் உயிருடன் இருந்தபோது பாரிஸ் உலகப் புரட்சிச் சிந்தனையின் அறிவார்த்த தலைமையிடமாக இருந்ததுபோல் 21-ஆம் நூற்றாண்டின்  தொடக்கப் பகுதியில் புதுக்கம்யூனிசம் என்ற சொல் உலக அறிவாளிகளிடம் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. இந்தச் சிந்தனைகளின் மையப்புள்ளியாக 74 வயதான அலென் புட்யொவும் 64வயதான ஸ்லவாய் ஷிஷெக்கும் செயல்படுகின்றனர். 2013-இல் சமயம் ஷிஷெக் அவர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கும் தென்கொரியாவில்  அவர் அலென் புட்யொவுடன் இணைந்து புதுக்கம்யூனிசம் பற்றி இன்னொரு கருத்தரங்கு நடததினார். இவ்வாறு உலகம் எங்கும் ஆய்விதழ்களும், அரங்குகளும் சொற்பொழிவுகளும், தத்துவச் சிந்தனைகளும் புதியமுறையில் கம்யூனிசத்தை நாட ஆரம்பித்துள்ளன. இவர்களும் இத்தகைய சிந்தனைகளும் திடீரென நேற்று வந்த மழையில் இன்று முளைத்த காளாண்களா? இச்சிந்தனைகளுக்கு ஏதேனும் பின்னணி உண்டா?

 

மார்க்சியத்துக்குள் மாற்றுக்குரல்கள்

லெனின் சோவியத்நாட்டில் புரட்சியைக் கொண்டுவந்தபோதே அவருடைய பாதையை விமரிசித்த குரல்கள் தோன்றின. முக்கியமானது ரோஸா ல்க்ஸம்பர்க் என்பவருடையது. மார்கஸின் கருத்துக்களுக்கு மாறாகத்தான் லெனின் வளர்ச்சியடையாத – விவசாய அடிப்படைகளுள்ள ஒரு நாட்டில் புரட்சியைக் கொண்டு வந்தார். ரோஸா லக்ஸம்பர்க் என்ற அம்மையார் லெனினின் பல கருத்துக்களை மறுத்தார். லெனின் திட்டமிட்ட கட்சி மூலம் தான் புரட்சி இயக்கப்பட வேண்டுமென்று கூறியபோது ரோஸாலக்ஸம்பர்க் சுயஉந்துதலும் முனைப்பும் (Spontaneity) போதும் என்றார். அதுபோல் 1920 வாக்கில் ஜார்ஜ் லூக்காக்ஸ் ஹெகல் தத்துவத்தை மார்க்ஸீயத்துக்குள் கொண்டுவந்து மார்க்ஸீயம் ஒரு முறைமையை (Method) மட்டுமே தருகிறது என்று விவாதித்து “வரலாறும் வர்க்க உணர்வும்” என்ற நூலை எழுதினார். பின்பு பிராங்க்பர்ட் மார்க்சீயர்கள் தோன்றினர். இவர்கள் பிராய்டின் உளவியல் ஆய்வுகளை ஏற்று மார்க்சீயத்துக்குள் உளவியல் உண்மைகளை இணைத்தனர். இவர்களில் ஒருவரான மார்க்கூஸ் (Marcuse)  சோவியத் யூனியன் இறுகிய ஒற்றைப் பரிமாண மனிதனை உருவாக்குகிறது என்றும் மத்தியதர வர்க்கமும் தொழிலாளிவர்க்கம்போல் புரட்சிகரமானதே என்றும் கருத்தை முன்வைத்தார். இவ்வணியைச் சார்ந்த அடார்னோ (Adorno)  மற்றும் ஹொர்ஹேமர் (Horkheimer) ஆகியோர் மார்க்சியத்திலிருந்து அறிவொளிக்கால விஞ்ஞானவாதத்தை நிராகரிக்க வேண்டும் என்றும் தொழிலபிவிருத்தியின் மூலம் மட்டுமே புதிய சமூகம் படைக்கப்படும் என்பது உண்மை அல்ல என்றும் விவாதித்தனர். மேலும் இவர்கள் அறிவுவழி என்பதையும் கேள்வி கேட்டனர். மனிதகுலம் அறிவின் மூலமும் விஞ்ஞானத்தின் மூலமும் உலகை அழிக்கவும் முடியும் என்ற கருத்துக்களை உருவா்ககினர். சோவியத் ரஷ்யாவிலும் எங்கெல்ஸ் அவர்களிடமும் காண்ப்பட்ட இயங்கியல் (Dialectics)  சார்ந்த ஹெகலின் கருத்தை இக்குழுவினர் ஏற்கவில்லை. எங்கெல்ஸ் இயங்கியலைச் சரியாய் புரிந்து கொள்ளவில்லை என்று ஏற்கனவே தத்துவ நிபுணரான ஜார்ஜ்லூக்காக்ஸ் கூறிய குற்றச்சாட்டும் இங்கு நினைக்கத்தக்கது. அடுத்ததாக எக்ஸிஸ்டென்ஷியல் மார்க்சீயம் பிரான்சில் தோன்றியது. இதன்கருத்தை ழீன் பவுல் சார்த்தர் என்ற பிரான்ஸின் தத்துவப் பேராசிரியர் விரிவுபடுத்தி நூல்கள் எழுதினார். இக்கருத்துக்களோடு முரண்பட்ட லூயி அல்துஸ்ஸர் என்ற பிரஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரும் தத்துவப் பேராசிரியருமான நிபுணர் தன் தத்துவத்துறை மாணவர்களுடன் இணைந்து மார்க்ஸின் அறிவுவாதத்தையும் விஞ்ஞானத் தன்மையையும் வலியுறுத்தி நூல்கள் எழுதினர். இவருடைய மாணவர்கள் – இவரைப் போலவே – மாவோயிஸ்டுகளாக முதலில் இருந்து பின்பு தத்தம் வழியில் மார்க்சீய விளக்கங்களை இன்று கொடுத்து வருகின்றனர்.

 

எர்னஸ்டோ லெக்லாவ்

அல்துஸ்ஸரின் கருத்துக்களால் முதலில் ஈர்க்கப்பட்ட எர்னஸ்டோ லெக்லாவ் (Ernesto Laclau)என்பவர் அர்ஜென்டினாவிலிருந்து இங்கிலாந்துக்கு வந்து அரசியல் துறையில் முதலில் ஆய்வாளராகவும் பின்னர் பேராசிரியராகவும் மாறினார். இவரும் சந்தால் மாஃபே (Chantal Mouffe)  என்பவரும் இணைந்து 1989 –இல் “மேலாதிக்கமும் சோசலிச தந்திரோபாயங்களும்”  (Hegemoney and Socialist Stategy) என்ற நூலை எழுதினார். இந்நூல் மிகவும் புகழ்பெற்றது. இந்நூலில் தங்களைப் பின்னை மார்க்சீயர்கள் (Post Marxists)  என்று அழைத்துக் கொண்டதால் இவர்கள் விமரிசிக்கப்பட்டனர்; அதுபோல் வேறு தரப்பால் பாராட்டப்பட்டனர். இந்நூலில் ஒருவிதமான தனியான மொழிநடையை இவ்விருவரும் கையாண்டதோடு பிரஞ்சு உளவியலாளரான லக்கானின் கருத்தாக்கங்களை  மையமாக ஏற்று மார்க்சீய விளக்கங்கள் தந்தனர். தன்னிலை ( சுயம்) என்பது லக்கான் கூறுவது. அது குறையுள்ள தன்னிலை (Subject of Lack)  என்று விளக்கினர்.

 

இந்த இடத்தில் போஸ்ட்மாடர்னிச நிலமை (PostModernist Condition) என்ற நூலை எழுதிப் புகழ்பெற்ற லையோத்தார் (Lyotard) என்ற பிரஞ்சு அறிஞரின் இன்னொரு நூலான லிபிடோவின் பொருளாதாரம் (Libidinal Economy) என்ற நூலில் அவர் மார்க்சின் உற்பத்தி பற்றிய அக்கரை முதலாளிகளின் அக்கரை என்று கூறியதையும் சுட்டலாம். இவர்கள் பொருளாதார முதன்மையைப் பெரும்பாலும் மார்க்சியத்திலிருந்து நீக்க பெரு முயற்சி செய்தனர். அதுபோல் லெக்லாவும் சந்தால் மாஃபேயும் பன்முகக் கட்சி அமைப்பை ஆதரித்தனர். தொழிலாளி வர்க்கம் என்ற கருத்தாக்கம் பொருளாதாரவாத மார்க்சீயம் என்ற கருத்திலிருந்து தோன்றுவது என்றனர். மார்க்சீயத்தை உள்ளிருந்து விமரிசித்தவர்களும் அதன்வெளியிலிருந்து விமரிசித்தவர்களும் பெரும்பாலும் ஒத்த கருத்துக்களை மேற்கொண்டனர்.

 

இக்கட்டத்தில் டெரிடா என்ற பிரஞ்சு தத்துவவாதி உலகம் பூரா தன்னுடைய கருத்தால் பிரபலமானார். அவர் தான் ஒரு மார்க்சியவாதி அல்ல என்று கூறினாலும் மார்க்சீயம் மிகவும் மதிப்புக்குரியது என்று பிரகடனம் செய்தார். “மார்க்சீயப் பேய்” (Spectre of Marxism)  என்ற நூலில் மார்க்சின் பேய் தொடர்ந்து உலகை்ப பிடிக்கத்தான் செய்யும் என்றும் மார்க்சீயக் கட்சிகள் பலவிதமாய் இருக்கலாம் என்றும் கூறினார். இக்கருத்தைத்தான் லெக்லா சந்தால் மாஃபேயும் கூறினார்.

 

இப்படிப்பட்ட பலவித விளக்கங்களுக்கு மார்க்சீயம் உட்பட்டு வந்த கட்டத்தில் மேற்கு ஜெர்மனி மற்றும் கிழக்கு ஜெர்மனி இணைவதற்குத் தடையாக இருந்த சுவர் உடைக்கப்பட்டதும் சோவியத் ஒன்றியம் தகர்ந்ததும் நடந்தன. இரு அறிஞர்களான டெலுஸும் (Delazue) கொத்தாரி (Guattari)யும் இக்கட்டத்தில் “ஈடிப்பஸுக்கு எதிர்” (Anti Oedipus)  என்ற நூலை எழுதினர். இந்தநுல் ஒரு வித மனநோய் கொண்டவர்களே இன்றைய முதலாளியத்தின் விளைவு என்றும் அவர்களே முதலாளியத்தை எதிர்க்கும் குறியீடு என்றும் விவாதித்தது பலருக்குப் புதுமையாகப்பட்டது. அத்துடன் ஆசை (Desire)  என்ற கருத்து முக்கியமானதென்றனர்.  மார்க்சீயமும் முதலாளி ஆதரவாளர்களும் ஆசை அறு என்று பௌத்தச் சிந்தனை மற்றும் காந்தியவாதிகள் போல பேசிக் கொண்டிருந்த கட்டத்தில் மனிதனின் இயல்பே ஆசையுடன் இருப்பதுதான் என்று கூறினர். முதலாளியம் மனிதர்களின் ஆசையுடன் தொடர்புடையது என்ற கருத்து பொருளாதாரமே மனிதனை உருவாக்குகிறது; அவனது சரித்திரத்தை அது உருவாக்குகிறது என்ற கருத்தை அடிப்படையில் மறுக்கிறது. மார்க்சீயம் என்பதே கார்ல்மார்கஸ் எழுதிய திஸ் காப்பிட்டல் நூல் மட்டும்தான் என்ற கருத்தை டெலுஸும் கொத்தாரியும்  கூறிய கருத்துக்கள் மறுத்தன. ஏற்கனவே பாசிஸ்டுகளின் சிறையில் இருந்து மறைந்த அன்டொனியோ கிராம்ஷ்சி (Antonio Gramci)  திஸ் காப்பிட்டலுக்கு எதிராகப் புரட்சி செய்வோம் என்று கூறி எழுப்பிய முழக்கம் தொடர்ந்து பலரால் வலியுறுத்தப்பட்டது. டெலுஸும் கொத்தாரியும் அடுத்து எழுதிய நூலின் பெயர்:  ஆயிரம் பீடபூமிகள் (Thousand Plateus)  என்பது. இந்த நூலில் “ரைஸோம்” (Rhizome) என்ற சிந்தனையை முன்வைத்தனர். ரைஸோம் என்பது வேறு ஏதுமல்ல, இஞ்சிவேர் நிலத்துக்கு அடியில் வலைபோல் பின்னியபடி காட்சி தருமல்லவா அதுதான். சிந்தனை என்பது குறிப்பிட்ட பொருளாதார அடிக்கட்டுமானத்திலிருந்து தோன்றுவதோ மேலிருந்து கீழாகவும் கிடைகோட்டிலும் வரும் என்ற பெர்தெனந்த் தெ சசூர் கருத்துப் போலவோ கிளாட் லெவிஸ்ட்ராஸின் அமைப்புமுறைச் சிந்தனை ஆகவோ அமைவதில்லை என்றார்கள் இந்த இரு சிந்தனையாளர்களும். ஆனால் இன்றயை முதலாளியத்தை மனிதகுலத்தின் நாசசக்தி  என்றும் பயங்கரம் (Terror) என்றும் வருணித்தார். பெரும்பாலும் மிஷெல் ஃபூக்கோ என்ற அறிஞரின் கருத்துக்களில் அதிகாரமுறையிலும் ஒழுங்குமுறையிலும் சமூகமும் சிந்தனைகளும் அமைந்திருக்கும் வகைமையை விளக்கியதையும் இங்கு நாம் நினைவுகொள்ள வேண்டும்.

 

இப்படித் தத்துவவாதிகளும் சிந்தனையாளர்களும் என பல்வேறு முறையில் நூல்கள் எழுதிவந்த அறிஞர்களின் தொடர்ச்சி இன்றும் நீண்டு கொண்டேயிருக்கிறது.

 

எனினும் முதலாளியத்திற்கான மாற்று பற்றிய சிந்தனை இல்லை. இச்சூழலில் எர்னஸ்ட் லெக்காவும் சந்தால் மாஃபேயும் உளவியலாளரான லக்கானை சமூகவிஞ்ஞானங்களின் ஒரு துறையான அரசியலுக்குப் பயன்படுத்தினார்கள். அச்செயல் ஸ்லவாய் ஷிஷெக்கைக் கவர்ந்ததன் மூலம் அவரின் சிந்தனைகள் வளர்த்தெடுக்கப்படுகின்றன. அதுபோல் அல்துஸ்ஸர் என்ற அமைப்பியல் மார்க்சீயரின் சிந்தனைக்கால்வழியில் வந்த அலென் புட்யொவும் முதலாளியத்தின் மாற்றுவழி என்ன என்று யோசித்தன் விளைவுதான் புதுக்கம்யூனிசம்.

 

அமைப்பியலானது டெரிடாவால் கட்டுடைப்புச் செய்யப்பட்டது. அதன்பிறகு அமைப்பியலின் ஒரு பகுதியான கட்டமைப்புத்தான் தகர்ந்ததே ஒழிய அமைப்பியல் சிந்தனையில் இருந்த வேறொரு அம்சம் தகறவில்லை. லக்கான் சார்ந்த கல கருத்துக்கள் அமைப்பியலில் இருந்தன. இன்றைய புதுக்கம்யூனிசத் தோற்றத்துக்குக் காரணமாயின என்பதையும் மறக்கக்கூடாது.

 

பழைய கம்யூனிசமும் புதுக் கம்யூனிசமும்

முன்பு கிராமத்தில் யாரையாவது பயப்படுத்த வேண்டுமென்றால் கம்யூனிசம் என்ற சொல்போதும். பேய், பிசாசு போன்ற சொற்களைப் போல் கம்யூனிசம், கம்யூனிஸ்ட்  போன்ற சொற்கள் பயன்பட்டன. அதாவது கம்யூனிசம் ரஷ்யாவில் உண்மையாகவே ஆட்சியைப் பிடித்தது என்று கருதினார்கள். இந்தியாவில் இருந்த பெருமுதலாளிகள் பயந்ததால் ஏழைகளையும் கிராமத்தவர்களையும் பயமுறுத்த செய்தித்தாள்களில் கம்யூனிசம் என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள். ரஷ்யாவில் லெனின் கம்யூனிசத்தைக் கொண்டுவர முயன்றார். எனினும் ரோஸா லக்சம்பர்க் லெனினைத் தாக்கினார். அதிகமான திட்டமிடலும் ஒழுங்கும் அதிகார வர்க்கத்தின் மீதான சாய்வும் லெனினிடம் இருந்ததென்றும் அக்கருத்துக்கள் கம்யூனிசத்தைக் கொண்டுவராது என்றும் ரோஸாலக்சம்பர்க் கருதினார். திட்டமிடல் மூலமும் இப்படித்தான் கம்யூனிசம் இருக்குமென்று கூறுவதன் மூலமும் புதுக்கம்யூனிசம் வராது என்கிறார்கள். கம்யுனிசம் ஒரு சாத்தியமின்மையைச் சாத்தியப்படுத்துவது என்கிறார்கள். லெனினை ஓரளவு ஏற்றுக்கொண்டாலும் ஸ்டாலினை முற்றாய் புதுக்கம்யூனிஸ்டுகள் ஏற்பதில்லை ஸ்டாலின் கம்யூனிசத்தை அறியாதவர். லெனின் ஏற்படுத்திய திட்டமிடலையும் பொருளாதார வளர்ச்சியையும் ஆதிக்கம் செலுத்துதலையும் சனநாயகமின்மையையும் தவறாய் கம்யூனிசம் என்று கருதினார். அது கொலையையும் ரகசியத்தையும் போல்பாட்டின் கொலைவெறியையும் தான் உருவாக்கும் என்றனர். உலகம்பூரா நடைபெறும் ஆயுதப் போராட்டங்களில் சில அம்சங்களில் ஸ்டானிலிசமும் போல்பாட்டிசமுமே நடைபெறுகின்றன என்கின்றனர் புதுக்கம்யூனிஸ்டுகள். இதன்மூலம் சைனா, தினமென் சதுக்கம், வடகொரியாக் கம்யூனிசம் போன்றவற்றை மறுக்கும் புதுக்கம்யூனிஸ்டுகள் முற்றிலும் வன்முறையை மறுக்கவும் இல்லை. ஏனெனில் முதலாளியம் மனித வரலாறு காணாத கொலைகளையும் ஆட்சிக் கவிழ்ப்புகளையும் வன்முறையையும் செய்துள்ளது. நம் கண்முன் ஈராக்கில் எண்ணெய் திருட அமெரிக்கா புரிந்த கொடுமை மீண்டும் மத்திய ஆசியாவை பெரிய பிரச்சனைக்குள் ஆழ்த்தியுள்ளது. தேச அரசுகள் மூலம் முதலாளியம் உலகமெங்கும் எத்தனை யுத்தங்களை நடத்தியுள்ளன? யுத்தங்களுக்குக் காரணம் முதலாளியமும் தேச அரசுகளும். புதுக் கம்யூனிசம் தேச அரசுகளை அழிப்பதாகும். ‘அரசுகள் உதிர்ந்து விடும்’ (States will whither away) என்ற மார்க்சின் பொன்மொழியைப் புதுக் கம்யூனிஸ்டுகள் ஏற்கின்றனர். சிலவேளை மார்க்சீயத்தை விட பின்னை மார்க்சீயத்தை (Post Marxism)  ஏற்கும் புதுக்கம்யூனிஸ்டுகள் மார்க்சீயத்தில் நிறைய வழிகாட்டுதல்கள் உண்டு என்கிறார்கள். “பாரிஸ் கம்யூன்”, “பிரான்சில் வர்க்கப்போராட்டம்” போன்ற மார்க்சின் நூல்கள் முக்கியமானவை என்கிறார்கள். புதுக்கம்யூனிஸ்டுகள். இவற்றை மரபுக் கம்யூனிஸ்டுகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது மார்க்சீயத்தைப் படித்தவர்களுக்குத் தெரியும். மார்க்சீயத்தைப் பாடநூலாகவோ விதிகளின் தொகுப்பாகவோ புதுக் கம்யூனிஸ்டுகள் பார்க்கக்கூடாது என்கிறார்கள்.

 

இப்போதைக்குக் கட்சி கடடுவது செயல் நடைமுறைகளைத் தீர்மானிப்பது போன்ற எந்தத் திட்டத்தையும் மேற்கொள்ளாது பெரும்பாலும் தத்துவ இயக்கமாக நடத்தி வரப்படும் புதுக்கம்யூனிசம் “தெரியும்” என்று சொல்வதைவிட “தெரியாது” என்று அதிகம் சொல்கிறது. புதுக்கம்யூனிசக் கருத்துக்களைத் தன்னுடைய தத்துவ நூலான “ஸ்திதியும் நிகழ்வும்” (Being and Event) அடிப்படையில் வளர்த்தெடுத்து பரப்பி வருவதில் பெரும்பங்கு வகித்தவரான அலென் புட்யொவிடம் ஒருமுறை கம்யூனிசம் வருமா என்று பிபிசி ரிப்போர்ட்டர் ஒரு பேட்டியில் கேட்டபோது “எனக்குத் தெரியாது” என்ற பதிலைக் கூறினார். அதன்பிறகு பெரிய தத்துவ உரைபோல் “எனக்குத் தெரியாது” என்ற வாசகம் பரவியது.

 

மரபுக் கம்யூனிசமும் சோவியத் ரஷ்யாவும் செய்த மிகப்பெரிய பிழை அரசு எந்திரம் தற்காலிகமானது என்பதைப் புரியாதிருந்ததாகும். சோவியத் ரஷ்யாவில் அரசு எந்திரமும் தேச அடையாளங்களின் அழிவும் அமெரிக்க முதலாளியத்தால் எதிர்மறையாய் தீர்மானிக்கப்பட்டன. அமெரிக்கா முதலாளியத்தைக் காப்பாற்ற பல நாடுகளின் தேசியத்தைப் பயன்படுத்தியது. இந்தியா சுதந்திரம் பெறுவது மனித சமுதாய வரலாற்றில் முற்போக்கான செயல்; அதுபோல் நேரு சோசலிச மாதிரியில் சமைக்க விரும்பிய இந்தியா முற்போக்கான தேசீயமாகும். ஆனால், தேசியங்களுக்குள் முதலாளியம் ஊடுருவி உலக வரலாற்றைச் சிக்கலாக்கியது. எல்லா தேசியங்களும் முற்றாய் உதிரும் என்ற “சாத்தியமற்றது சாத்தியமாகும்போது” தான் தேச அரசுகள் என்ற அமைப்பு வலிமையற்றதாகும். முதலாளியம் அறிவையும் மிகவும் சிக்கலாகி விட்டது.  எனவேதான் டெரிடா போன்ற தத்துவவாதிகள் கட்டுடைப்பு என்ற தத்துவத்தைப் பயன்படுத்தி எல்லாவித உறுதித் தன்மைகளையும் சம்சயத்துக்கு உட்படுத்திய பின்புதான் மீண்டும் புதுக்கம்யூனிசச் சிந்தனைகள் உலகம் எங்கும் பரவுகின்றன.

புத்தொளிக் காலத்தின் (Enlightenment) சிந்தனைகளான முழுமை (Totality) மனிதாபிமானம், ஒழுங்கு (Order) ஓர் அமைப்பு இன்னொன்றுடன் ஒட்டி அதன் பொறுப்பில் இருக்கிறது என்பது போன்ற சிந்தனைகள் டெரிடா, டெலுஸ்-கொத்தாரி, அலென் புட்யொ, ஷிஷெக், ரான்சியர் (Rancier) போன்ற பல்வேறு நவீன சிந்தனையாளர்களால் ஏற்கப்படுவதில்லை. அல்துஸ்ஸரின் மார்க்சீயம் ஒரு விஞ்ஞானம் என்ற கூற்று மறுக்கப்பட்டாலும் அஸ்துஸ்ஸரின் கருத்துருவம் பற்றிய லக்கான் சார்ந்த கருத்துக்களைப் புதுக்கம்யூனிசம் ஏற்கிறது. புத்தொளிக்கால முழுமை மனிதாபிமானம், ஒழுங்கு போன்ற சிந்தனைகளால் ஏற்பட்ட அழிவும் சோவியத் ஸ்டாலினிசமும் உலகமெங்கும் பரவிய ஆயுதப் போராட்டம் என்ற மனித அழிப்பும் அர்த்தமற்ற தியாகங்களும் புதுக்கம்யூனிசத்தால் கேள்விக்குட்படத்தப்படுகின்றன.

 

இந்தியா போன்ற நாடுகளில் புத்தொளிக் காலத்தை முற்றாய் ஒதுக்க முடியாதென்கிற வங்காள அறிவுஜீவி காயத்திரி சக்கரவர்த்தி ஸ்பிவக் போன்றோர் நவீன எதிர்ப்பு வடிவங்களையும் கல்வியையும், சமத்துவத்தையும் மூன்றாமுலகில் பரப்பியதில் புத்தொளிக் காலத்துக்குப் பங்கு இருக்கிறது என்கிறார்கள். பெரியார் என்ற தமிழகத்தின் அபூர்வ புத்திஜீவி புத்தொளியின் விளைவு. எனவே புத்தொளிக் காலம் பரப்பிய “கட்டுப்படுத்தும் அறிவு” வடிவங்களை மட்டும் நாம் நிராகரிக்கக் கற்கவேண்டும். புத்தொளிக்காலம் தந்த மனித சுதந்திரம் பற்றிய நல்ல அம்சங்களை மறுக்க முடியாது.

 

எல்லாவற்றையும் சந்தேகப்படுதலும் எந்தவிஷயமும் முற்றானதல்ல என்ற கருத்தும் புதுக்கம்யூனிசம் தோன்றிய தத்துவப் பின்புலமாக இருக்கிறது. மூன்றாமுலகத்தில் பரவிய பொதுவுடமைக் கருத்துக்கள் இங்கிலாந்தின் புத்தொளி சார்ந்து பரவியதால் இன்று மேற்குவங்காளத்திலும் பிற இடங்களிலும் அழிக்கப்பட்டுவிட்டது. அதாவது சோவியத் ரஷ்யாவில் கருதியதுபோல் அரசு எந்திரம் இறுதிவடிவம் என கம்யூனிஸ்டுகள் கருதக் கூடாது. எனினும் அக்கருத்தே உலகம்பூரா கம்யூனிஸ்டுகள் மத்தியில் பரவியது.

 

மாவோவை எப்படிப் புதுக்கம்யூனிஸ்டுகள் அணுகுகின்றனர்? சைனாவின் அரசையும் அரசாங்கத்தையும் பாதுகாத்த மாவோவைப் புதுக் கம்யூனிஸ்டுகள் ஏற்காவிட்டாலும் கலாச்சாரப் புரட்சி (Cultural Revolution) ஏற்படுத்திய மாவோவை ஏற்கின்றனர். மார்க்சின் அரசுஎந்திரம் உதிரும் என்ற கருத்தை மாவோ நடைமுறைப்படுத்த விரும்பியவர். ஆனால் இன்றைய உலக அமைப்பில் அது முடியாது என்று அறிந்ததால் ஒரு நாட்டில் கம்யூனிசம் என்ற கோட்பாட்டை ஏற்று சைனமாதிரியில் கம்யூனிசம் வரட்டும் என்று கருதி இருக்கிறார். மாவோ என்கிறார்கள், மாவோவுக்குள், சேக்குவாராவுக்குள், இருந்த உலக மனிதன் என்ற அம்சங்களைப் புதுக்கம்யூனிஸ்டுகள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.

 

ஜெர்மனியில் பிறந்து அங்கு ஹிட்லர் வந்துவிட்டதால் அமெரிக்காவுக்குச் சென்று மார்க்சீயத்தைச் சுதந்திரமாய் அறியவும் படிக்கவும் பரப்பவும் செய்து ஹெர்பர்ட் மார்க்யூஸ் என்ற அறிஞர் சோவியத் ரஷ்யாவில் உள்ள கம்யூனிசத்தை முற்றாய் எதிர்த்தவர். உடனே சோவியத் ரஷ்யா அவரைக் குழப்பவாதி என்று கண்டித்து நூல் எழுதி அன்றைய சோவியத் நூல் விற்கும் கடைகள் மூலம் இந்திய நகரங்களிலும் பரப்பியது. ஆனால் இப்போது பிராங்க்ஃபர்ட் பள்ளிமார்க்சீயக் கருத்துக்களால் பயனடைந்துள்ள புதுக் கம்யூனிஸ்டுகளைப் பார்க்கும்போது மார்க்யூஸ் முதலாளியத்தால் நவீன சமூகத்தின் மனிதன் ஒற்றைப் பரிமாணமுள்ள மனிதனாய் எந்திரம்போல் – மாறிக்கொண்டிருக்கிறான் என்று கூறியது சரியான கருத்து எனத் தெரிகிறது. எனவே அப்படி அ டிமையாக்கப்பட்ட எந்திரமாய் மாறிய மனிதனின் மன உலகம் அமைப்புகளிலிருந்து முற்றாய் விடுதலைபெற்று எழுகிறது என்ற குரல் ஹெர்பர்ட் மார்க்யூசின் அன்றைய கருத்துக்களின் உண்மைத் தன்மையை வலியுறுத்துகிறது. கட்டுப்பெட்டியாய் அங்கு இங்குப் பார்க்காதே என்று சில வீடுகளில் குழந்தைகளை வளர்ப்பதுபோல் வளர்க்கப்பட்ட மார்க்சீயத்தை இன்றைய இறுகி உறைந்துபோன கம்யூனிஸ்டு கட்சிகளிடமிருந்து மீட்க ஹெர்பரட் மார்க்யூனின் கருத்துக்களும் மிகவும் பயன்படும்.

 

புதுக்கம்யூனிசத்தின் கருத்துக்களைக் கட்டுப்பெட்டி கம்யூனிஸ்டுகள் தங்களைச் சுயபரிசீலனை செய்து புதுக்காற்றை ஏற்கமுன் வரவேண்டும் புதிய விவாதங்களை உருவாக்க வேண்டும். உலகின் இன்றைய சூழல் சரியில்லை. அணுஆயுதப் பெருக்கமும் குவலய வெப்பமாதலும், குளோனிங் மூலமாய் மனிதன் மறு உற்பத்தி செய்யப்படுவதும் புதுப்பிரச்சனைகளாய் வந்துள்ளன. அணு ஆயுத யுத்தம் உலகை எப்போதும் அழிக்கலாம். பழைய கம்யூனிசத்தை அரசு எந்திரங்களுக்கு ஏற்ப வடிவமைத்திருக்கும் கட்சிகள் தங்கள் இறுதிக் குறிக்கோளை மீண்டும் நினைவு கொள்வதற்கு இப்போது ஒரு நல்வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சோர்ந்திருக்கக்கூடிய கட்சிகளின் தொடக்க இலட்சியங்கள் சரியானவை என்ற புதுக்குரல் கேட்கிறது. கட்சிகள் சுயவிமரிசனத்துக்குத் தயங்கக்கூடாது.

 

வரலாறும் புதுக்கம்யூனிசமும்

இரண்டுவிதமாக வரலாறு பற்றிய சிந்தனைகளைப் பிரிக்க வேண்டும்.

 

ஒன்று மரபு மார்க்சீய ஆய்வுகள் வரலாற்றை அணுகியிருக்கும் முறையியல். சார்லஸ் டார்வினுடைய பரிணாம வளர்ச்சி (Evolutionary Growth) என்ற கருத்துச் சமூக விஞ்ஞானங்களிலும் பரவியது. அன்று சென்னைவரை டார்வினின் கருத்துக்கள் லண்டனிலிருந்து பரவிய செய்தி சென்னை லௌகீகச் சங்கம் நடத்திய இதழ்களில் தெரிகிறது. பரிணாம வளர்சசி 60களிலிருந்து மார்க்சீய விளக்கமாய் தமிழகத்தில் பரவியது. முதலில் ஆதிவாசி சமூகம் பின்பு நிலபிரபுத்துவம், அதன்பின்பு முதலாளித்துவம் என்று ஒழுங்கான நம் விருப்பப்படியான உலக வரலாறு ஒன்று அமைந்திருக்கிறதென்று விளக்கினோம். உலக வரலாறு யாருடைய விருப்பப்படியும் அமையாது.  எங்கெல்ஸ் கருத்துக்கள் இவை. இயங்கியலையும், வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தையும் (Historical Materialism)  எங்கெல்ஸ் இப்படி வடிவமைத்தார். இப்படிப்பட்ட ஒருமுகப்பட்ட வளர்ச்சி (linear growth)  உண்மைக்குப் புறம்பானது. உண்மை ஒழுங்குபடி அமையாது. அது குழப்பமானது; கரடுமுரடானது. புதுக் கம்யூனிசம் ரோஸாலக்சம்பர்கின் சிந்தனைபோல் லெனினின் ஒழுங்குபட்ட கம்யூனிச மாற்றம் என்ற கருத்தை விமரிசிப்பதை ஆதரிப்பதால் இத்தகைய ஒருமுகப்பட்ட வரலாற்றை ஏற்பதில்லை. வரலாறு குழப்பமானது. எந்தக் கட்டத்திலும் வரலாற்றுக்குள் நுழைந்து அதை மாற்றலாம். அதாவது படிப்படியாகவும் ஒழுங்காகவும் வரலாறு மாறும் என்பதைப் புதுக்கம்யூனிசம் ஏற்கவில்லை.

 

இரண்டாவது கருத்துக்கு வருவோம். அலென் புட்யொவிடம் வெளிப்படும் கருத்து இது: அவர் இரண்டு விதமாய் பிரிக்கிறார். அவர் பிரஞ்சு புரட்சியையும் பாரிஸ் கம்யூனையும் வரலாற்றுக் கட்டங்களாய் பார்க்கிறார். உலகம் தோன்றியதிலிருந்து வரும் சரித்திரம் என்ற கற்பனைக் கதையை நம்புவதில்லை. அதாவது 1792-இலிருந்து 1871வரைத்திய காலகட்டம் ஒரு தொடர்ச்சி என்கிறார். இந்த இரண்டு ஆண்டுகளில் 1792-ல் வெகுசன இயக்கம் வந்ததும் 1871-இல் இருந்த அமைப்புப் பிரான்சில் தூக்கி வீசப்பட்டதும் நடைபெறுகின்றன என்கிறார். அலென் புட்யொ அவரின் இன்னொரு காலகட்டப் பிரிவு சோவியத் புரட்சி நடந்த 1917-லிருந்து 1976வரை. முதல் ஆண்டு போல்ஷ்விக் புரட்சி நடந்த ஆண்டு. இரண்டாவது ஆண்டு சீனாவின் கலாச்சாரப் புரட்சியும் உலகம் முழுதும் நடந்த புரட்சிகர எழுச்சியும் (Militant upsurge) வந்தன என்கிறார். அதாவது 19-ஆம் நூற்றாண்டிற்கு முன்பு கனவு என்றும் உட்டோபியா என்றும் யூகம் என்றும் கருதப்பட்டது நிஜமாக்கப்பட்ட இரண்டு கட்டங்கள் இவை என்று கம்யூனிஸ்டு யூகத்துக்கு இனி வாய்ப்பில்லை என்று கொக்கரித்த அன்றைய பிரஞ்சு அதிபர் சார்க்கோஸி (Sarkozy)-க்கு ப் பதிலளிக்கிறார். கம்யூனிஸ்ட் யூகம் (Communist Hypothesis)என்ற நியுலெஃப்ட் ரிவ்யூ வெளியிட்ட கட்டுரையில் இவ்விஷயங்களை முன்வைத்தார் அலென் புட்யொ அவர்கள்.

 

அதாவது வரலாறு என்பது ஒழுங்கானதல்ல. ஒன்றை அடுத்து வரும் இன்னொரு சமூக அடுக்கு அல்ல. சமூக நிகழ்வுகள் தர்க்கத்துக்கும் விதிமுறைக்கும் உட்பட்டதல்ல. ஆரம்பத்தில் சிறியதாயும் பின்னர் மெதுமெதுவாய் கிரமமாய் வரிசையாய் காலமுறையில் வளர்வது என்ற கற்பனைக்கதை இங்கு நடப்பதில்லை. முதல் நிகழ்ச்சி ழூ1792 -1871) நடந்து முடிந்ததற்கும் இரண்டாம் நிகழ்ச்சி (1917) தொடங்குவதற்கும் இடையில் சுமார் 40 வருடங்களில் கம்யுனிசம் யூகம் செய்யப்பட்டதால் 1917-இல் போல்ஷ்விக் புரட்சி வந்தது. அது 1970-இல் முடிகிறது. 1970-இலிருந்து நாம் இன்னொரு கட்டத்தில் இருக்கிறோம் என்கிறார் அலென் புட்யொ. ஆனால், ஏகாதிபத்தியம் பரவிய இருபதாம் நூற்றாண்டில் வந்த தொழிலாளர் அமைப்புகள், சோசலிசம், புரட்சிகள் எல்லாம் பயனற்றவையாகப் போய்விட்டன என சோவியத் மற்றும் சீன புரட்சிகளையும் பிற புரட்சிகளையும்  அலென் புட்யொ நிராகரிக்கிறார். ஆனால் இவை ஒரு திசைவழியைக் கற்பிக்கத் தவறவில்லை. அதிலிருந்து ஒரு பாடத்தை எப்படி படிப்பது என்பதுதான் கேள்வி என்கிறார். எனவே வரலாறு தற்காலம்தான் என்று அறிவுறுத்துகிறார். தற்காலம் போல் பழங்காலத்தையும் பார்ப்பதுதான் என்கிறார்.

 

அதாவது புதுக்கம்யூனிசச் சிந்தனை என்பது இன்றுவரை உலகம் கண்ட எல்லாத் தத்துவம் கோட்பாடு உளவியல் ஆய்வு என பின்நவீனத்துவம் வரை எல்லா மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய சிந்தனைகளின் முக்கியமான அம்சங்களை உட்கிரகித்துத் தோன்றியதாகும்.

 

கம்யூனிசத்தின் நிஜத்தன்மை

கம்யூனிசம் பற்றி பழைய மார்க்சீயத்திலும் சோவியத் மற்றும் சீனாவின் தலைமையிலான கம்யூனிசக் கட்சிகளிலும் பேசப்பட்டவை பொய்யான கம்யூனிசம, இப்போது பேசப்படுவதுதான் நிஜக்கம்யூனிசம் (Actuality) என்கின்றனர். அமெரிக்காவில் வேலை பார்க்கும் பேராசிரியரான புரூனோ பாஸ்டீல் (Bruno Bosteele) என்பவர் “கம்யூனிசத்தின் நிஜத்தன்மை” (Actuality of Communism)  என்று சிவப்பு நிற அட்டையுடன் ஒர நூல் வெளியிட்டுள்ளார். ஜோடி டீன் (Jody Dean) என்ற அமெரிக்காவின் இன்னொரு பேராசிரியரும் இன்னொரு சிவப்புப் புத்தகத்தை இந்தப் புதுக்கம்யூனிசம் பற்றி விளக்க வெளியிட்டுள்ளார்.

 

நவீன தமிழ்மொழியில் மேற்கத்திய தத்துவக் கருத்துக்கள் அதிகம் சுயமாய் சொல்ல முடியாத தன்மை உள்ளதால் புதுக்கம்யூனிசம் தன் நிஜத்தன்மையை விளக்கப் பயன்படுத்தும் பல கருத்துக்கள் சொல் விளையாட்டுப் போல் தென்படலாம். “அன்டாலஜி” என்கிற “தோற்றவியல்” (இது எப்பிஸ்டமாலஜி என்கிற “அறிவுத் தோற்றவியல்” அல்ல) கம்யூனிசத்ின் நிஜத்தன்மையை விளக்கத் தேவையானதாகும். ரான்சியர் என்ற பிரஞ்சு தத்துவவாதி, அல்துஸ்ஸருடன் சேர்ந்து அவருடைய ஆய்வு வட்டத்தில் இருந்த மாணவராவர். இப்போது மிகப்பெரிய தத்துவவாதியாக மிளர்கிறார். இவர் அழகியல் என்பது கலை இலக்கியத்தில் இருப்பது என்பார். இவர் புதுக்கம்யூனிசம் நிஜமானது; ஏனெனில் அது “தோற்றவியல்” மூலம் அறிந்து கொள்ளக்கூடியது என்கிறார்.

 

அலென் புட்யொ அவர்கள் கம்யூனிசம் என்பது ஒரு “கருத்து” என்பார். (தமிழில் கருத்து என்றால் வரும் பொருள் அல்ல. புட்யொ சொல்லும் கருத்து). அதாவது புட்யொவின் கருத்தை விளங்கிக்கொள்ள நாம் இம்மானுவல் கான்ட் (Immanuel Kant)  என்ற ஜெர்மன் கருத்து முதல்வாதத் தத்துவவாதியிடம் செல்ல வேண்டும். கருத்துமுதல்வாதமா என்று பழைய கம்யூனிஸ்டுகள் காலைப் பின் வைப்பார்கள். இன்றைய புதுக்கம்யூனிஸ்டுகளில் பொருள்முதல்வாதிகள் இருந்தாலும் அவர்களில் சிலர் கருத்துமுதல்வாதம் பொருள்முதல்வாதம் பிரிவினையை எளிமைப்படுத்தி ஒதுக்குவதில்லை. உதாரணமாக ஷிஷெக் அவர்கள் கான்ட்,ஹெகல், ஷில்லர் என்ற மூன்று ஜெர்மன் கருத்துமுதல் வாதிகளையும் (German Idealists) தான் சொல்லும் கருத்திற்குப் பின்னணியும் அழுத்தமும் தருவதற்காகப் பயன்படுத்துகிறார். சரி புட்யொ சொல்லும் விஷயத்துக்கு வருவோம். தத்துவவாதி கான்ட் கருத்துப்பற்றி விரிவாகப் பேசுகிறார். நாம் அதற்கெல்லாம் போகத் தேவையில்லை. வரையறுக்கப்பட்ட கருத்து (Regulative Idea) என்றொரு கருத்தாக்கம் கான்டிடம் காணப்படுகிறது. அதன்பொருள்  செயல்படும் கருத்து அல்லது பயன்படு கருத்து என்பதாகும். அந்த அர்த்தத்தில் கம்யுனிசம் ஒரு கருத்து என்று தத்துவவாதியும் முன்னாள் மாவோயிஸ்டுமான அலென் புட்யொ கூறுகையில் கம்யூனிசம் ஒரு பயன்படு கருத்து என அறிகிறோம். இதுதான் அதன் நிஜத்தன்மை.

 

தத்துவங்களின் வரலாற்றைப் பற்றிக் கூறுகிறவர்கள் உலகிலுள்ள பொருள்களை நாம் நம் மன உணர்வு, இயல்பு, உளவியல், பரம்பரை,  மொழிவரலாறு போன்றவற்றிற்குத் தக்க முறையில் தான் புரிந்துகொள்ள முடியும் என்பார்கள். அதாவது நாம் கற்பிதம் (Speculate)  செய்துதான் புறஉலகைப் புரிந்துகொள்ள முடியும். இதுபோல் புதுக்கம்யூனிசம் ஸ்பெக்குலேட்டிவ் என்ற கற்பிதச் சிந்தனை  கொண்ட இடதுசாரிகளால் (Speculative Leftists) அமைவு (கட்சி) பெறும் என்கிறார்கள். தத்துவக் கருத்துக்கள் பல ஆயிரம் ஆண்டுகளாய் பயிலப்படும் மேற்கத்திய நாடுகள் போல் இத்தகைய கருததுக்கள் தத்துவக் கருத்துக்கள் வளராத நாடுகளில் (தமிழிலும்) புரிந்துகொள்ளப்படமாட்ட. கேலி செய்யக்கூட சில மூடர்கள் தயங்கமாட்டார்கள்.

 

ஷிஷெக், புதுக்கம்யூனிசத்தின் நிஜத்தன்மை பற்றிக் கூறுகையில் லெனினை உதாரணம் காட்டுகிறார். லெனின் இதுவரை சரித்திரத்தில் இல்லாத சமூகத்தைக் கட்டும்போது நாம் தோல்வி காண்போம்; அப்போது கவனமாகப் பின்வாங்கவேண்டும் என்கிறார். மீண்டும் மீண்டும் மலை ஏறுபவன் தன் இலட்சியத்தை அடையும் வரை பின்வாங்கிப் பின் வாங்கிப் பல்வேறு பாதைகளில் மேலும் மேலும் முன்னேறி இறுதி இலட்சியத்தை அடைவான் என்கிறார் லெனின். லெனினை மேற்கோள்காடடி, அதாவது தொடக்கத்திலிருந்து தொடங்க வேண்டும் (To Begin from the Beginning)  என்பதுதான் புதுக்கம்யூனிசத்தை நிஜமாக்கும் முறை என்கிறார் ஷிஷெக். இங்கு ஷிஷெக், பெக்கட் என்ற நவீனத்துவகால இலக்கியவாதியின் (நாடகாசிரியர்) “மேலும் முயலுங்கள், மேலும் தோல்வி அடையுங்கள், சரியாய் தோல்வியடையுங்கள்” என்ற மேற்கோளைத் தருகிறார். [பார்க்க: Slavojzizek, “How to begin from the Beginning” என்னும் கட்டுரை].

 

புரூனோ பாஸ்டீல் தத்துவத்துறையில் பயன்படும் “தோற்றவியல்” மூலமே இதுவரையில்லாத சிந்தனையான கம்யூனிசம் பற்றிச் சிந்திக்க முடியும் என்கிறார். அதுபோல் புதுக்கம்யூனிசம் எப்படி நிஜமான கம்யூனிசம் (actual Communism) ஆகும் என்று சில எண்ணங்களைப் பட்டியலிடுகிறார் பாஸ்டீல்.

 

 1. புதுக்கம்யூனிசம் அனைத்துலகம் முழுமையாய் இணைகையில் ஏற்படும் எங்கும் தனிச்சொத்து இல்லை.
 2. இன்றிருக்கும் உலக அமைப்பை முழுதும் நிராகரிக்கும்.
 3. மார்க்சீயம், லெனினியம், மாவோயிசம் என்னும் போலீஸ் சிந்தனைகளை ஏற்கமுடியாது. புதுக்கம்யூனிசம் கற்பித இடதுசாரி களால் கொண்டுவரப்படும். (சிலர் இக்கருத்துக்களில் மாறுபடவும் செய்வர்).
 4. புதுக்கம்யூனிசம் வரலாற்றுக்குள் நடப்பதல்ல; வரலாற்றுக்கு வெளியில் (ahistorical) நடப்பது.

 

மலேசியா

நவீனின் மலேசியக் கவிதைகள்: உலகத் தமிழினத்தின் ரகசியம்

மெ..கா

 

நவீன் என்ற பெயரில் மலேசிய இலக்கியச் சூழலில் புதிய இலக்கியச் செயல்பாடுகளில், தொடர்புபடுத்தி வருபவரும், இளைய வயதும், ஆழ்ந்த இலக்கிய அக்கரையும் கொண்டவரும் ஆன கவிஞரின் அபூர்வமான கவிதைகளை வாசிக்கும் வாய்ப்பு எனக்குச் சமீபத்தில் வாய்த்தது.

 

மலேசியாவில் தோட்டவாழ்க்கை என்னும் எதார்த்தம் சிதைந்த பின்பு நகரங்களுக்குக் குடிபெயர்ந்த முன்னாள் தமிழகத்துச் சகோதரர்கள் சுமார் 80 களிலிருந்து தங்கள் புதிய வாழ்க்கைமுறையை இலக்கியத்தில் புதிய முறையில் பதிவு செய்து வருகின்றனர். நவீன் பலரோடு முரண்படுகிற இலக்கிய ‘ஆக்டிவிஸ்டாகவும்’ சமரசமற்ற கவிஞராகவும் விளங்குவது மலேசிய இதழ்களான காதல், வல்லினம் போன்றவற்றைப் படித்தவர்களுக்குத் தெரியும். சிங்கப்பூர், மலேசிய இலக்கியச் சூழலை அறிந்தவர்களுக்கு இலக்கியத்துக்குப் புறம்பான காரணங்களை வைத்து இலக்கிய அந்தஸ்து கோருபவர்கள் நிறைய இருக்கிறார்கள் என்பது நாம் அறியவேண்டும். அதுபோல் தமிழகத்தின் பெரும் பத்திரிகை, டி.வி.க்கள், சினிமா போன்றவற்றின் பொதுஜனமனோநிலையின் இலக்கியம் அல்லாத கூறுகள் தமிழகத்தின் கும்பல் கலாச்சார மனோநிலையைச் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாகச் சிறுபத்திரிகை சார் விழுமியங்கள் தமிழகத்தில் முக்கியமான சக்தியாக மாறியுள்ளன. அதனால் தமிழ்த்துறைகள் தமிழகத்திலும் (ஈழம், சீரிய மரபுக்குள் 70களில் வந்துள்ளது. சினிமா பாடலாசிரியனைத் தவறுதலாகக்  கவிஞன் என்று கருதாது) மாறத் தொடங்கியதை இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் கண்டோம்.

 

தமிழகம் எப்போதும் மலேசியத் தமிழர்களின் தாய்ப்பூமியாகவே விளங்குகிறது. தமிழகத்தின் மாற்றங்களை நுட்பமாக வெளியிடும் தமிழிலக்கியம் மலேசிய இலக்கியத்தையும் பாதித்துள்ளது. மலாய், சீன, இலககிய பாதிப்புகள் அனைத்துலகப் பண்பை மலேசியா வழியாக தாய்த் தமிழிலக்கியத்துக்கு அறிமுகப்படுத்துகின்றன. இவ்வாறு மலேசியத் தமிழிலக்கியம் ஒரே நேரத்தில் தெற்காசிய இலக்கியமாகவும் மிகப்பிந்திய தமிழிலக்கியமாகவும் விளங்குகிறது. இந்தச் சிறப்புப் பண்பு இன்றைய இந்தி இலக்கியத்துக்கோ, மராட்டி, மலையாள, கன்னடம் போன்ற இலக்கியத்துக்கோ இல்லாதது; எனினும் இந்தியாவில் முக்கியமான இந்தப் பண்புள்ள தமிழிலக்கியம் கண்டு கொள்ளப்படவில்லை. சினிமா பாடலாசிரியர்களே சிறந்த கவிஞர்களாக ஊதிப் பெருக்கி டி.வி. ஊடகங்களும் தினத்தாள்களும் பரப்புரை செய்வதால் இந்திக்காரனோ, பிறரோ இந்திய அளவிலும் அனைத்துலக அளவிலும் நிஜமான தமிழிலக்கியத்தின் புதிய தன்மைகளை அறியாமல் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் நடந்த தமிழில் புலம்பெயர் இலக்கியம் என்பது பற்றி நடந்த கருத்தரங்கில் தமிழிலக்கியத்தின் அனைத்துலக முக்கியத்துவத்தை சிக்காகோ பல்கலைக்கழகத் தமிழ் விரிவுரையாளரான ஒரு ஜெர்மன் தேசத்தவர் ஆங்கிலக் கட்டுரையாக முன்வைத்தார். “ஒப்பியல் இலக்கியம்” என்ற மேற்கத்தியச் சிந்தனைத் துறையில் இவ்விஷயங்கள் சிந்திக்கப்படும்போது நாடுவிட்டு நாடு பெயர்தல், இலக்கிய, கலாச்சார கலப்புப் போன்ற ஆய்வுகள் புதுப்பிரச்சனைகளை எதிர்கொள்ளும்.

 

இந்தச் சிந்தனைகளை நம்முன் கொண்டு வரும் கட்டாயத்துடன் எழுதப்பட்டுள்ளன நவீன் கவிதைகள். மலேசியாவிலிருந்து வரும் கவிதைகளிலிருந்து தனித்துத் தெரிகின்றன இக்கவிதைகள். பல கவிதைக் கோட்பாடுகளை தொல்காப்பியத்திலிருந்து இன்றுவரை – எழுதும் தமிழ் அறிவு, இன்னும் பல புதிய கோட்பாடுகளைக் கண்டுபிடிக்கும் தேவையை நவீனின் ஒவ்வொரு கவிதையும் தோற்றுவிக்கும் பரிமாணத்தின் எல்லையைச் சுட்டுகின்றன. ஒரு கவிதை போல் இன்னொரு கவிதை இல்லை என்பதை நான் கண்டுபிடித்தபோது அவற்றின் மையமழிப்பும் நோக்கு வீச்சும் தொடர்ந்து வியப்படைய வைத்தன. தனி அடையாளத்தோடு இன்று தாயகத்திலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வரும் ஈழக்கவிதைகளையும் தமிழகக் கவிதைகளையும் ஒப்பிடும்போது ஒரு தனியான வீச்சும் மொழிலாவகமும் கட்டமைப்பும், தொடக்கமும், முடிவும், உருவாக்கும் முழுமைத் தொனிப்பும் என்னை வியக்க வைத்தன.

 

குற்ற உணர்ச்சியைச் சேமித்தல் பற்றியும் (பக்.13), பொறுமை இழந்த கடிகார முட்கள் (13) பற்றியும், கொக்கு மரமாவதும் (17) யாரும் கழுத்து இறுகுவதை நினைவூட்டாமல் இருப்பதும் (17) கவிதையை உருவாக்கிய பெட்டி (18)யும் என்னைக் காணவில்லை (19) என்றும், பழைய பானையில் இருக்கும் யோனியும் அப்பானையை நடிகையின் முலை கேட்டு உடைக்கும் (20) செயலும், இறந்து கிடக்கும் ஒற்றைக்கரமும் (20) அசுத்தம் துறக்கும் நிமிடம் குறித்த சிந்தனைகளும் (24) இறக்கை மட்டும் மனித உடலிலிருந்து தனியே பறந்து செல்லுவதும் (24) என் தேவதைகள் பிறரது தேவதைகளைக் கொல்வதும் (27) மரணத்தின் மொழியில் நுட்பத்தைக் காண்பதும் (36) ஒரு குழந்தை கீழே விழுகையில் அது கால்களைக் கண்டுபிடிப்பதும் அக்குழந்தை தூக்கச் சொன்னபோது கால்கள் கவிதையானதும்  (26) எழுத்தை எறும்புகள் பொறுக்குதலும் (33) விழித்துக் கண்ணின்றிப் பார்த்தபோது இமையின்றி கைகளைக் காணமுடியவில்லை (47) என்பதும் இரண்டாவது முறை இறப்பதும் இரண்டாவது முறை வாழ்வதும் (48) பற்றிச் சொல்வதும் என கவிதைகள் ஒரு புதிய நுட்பத்துடனும் ஆகோஷிக்கும் அர்த்தங்களுடன், கும்மாளமிடும் மொழியாற்றலும் கவிதையும் ஒன்றோடு ஒன்று கவிஞரின் திறமையை வெளிப்படுத்துவதில் போட்டியிடுகின்றன. இப்படி ஆங்காங்கே நம்மைக் கவரும் வரிகளையும் படிமங்களையும் முழுக்கவிதையோடு இணைக்கையில்தான் இவரது கவிதைக்களுக்கு நியாயம் செய்தவர்கள் ஆவோம்.

 

“கடிகாரம்” என்ற கவிதை இப்படித் தொடங்குகிறது.

 

“குறிப்பிட்ட நேரத்துக்குப்பின்

பொறுமை இழந்த கடிகார முட்கள்

கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளிப்பட்டன

————————

நீங்கள் தாமதித்துக் கொண்டிருந்தீர்கள்”

 

கவிதையின் முதல் பத்தியான இந்த வரிகளைப் படிக்கும்போது எதற்காக கடிகார முட்கள் பொறுமையிழந்தன என்று கவிதையில் எங்கும் இல்லை. அதுபோல் இதே கவிதையின் இன்னொரு பகுதி. அதாவது கவிதை முடிகிறது.

 

“ஏதோ ஒரு துவாரத்தில் நுழைந்து

இதயத்தை முற்றிலுமாய்

அறுக்க முற்பட்ட நேரம் நீங்கள்

வழக்கமான புன்னகையோடு வெளிப்பட்டீர்கள்

கடிகாரத்தில் முட்கள் இல்லாததை நீங்கள்

கவனிக்கவில்லை”.

 

கவிதையின் முதல் பகுதியும் கடைசிப் பகுதியும் இக்கவிதையின் அசாதாரணத் தன்மையைத் தன் அறிவுத் தோற்றவியலாய் (எப்பிஸ்டமாலஜி) கொண்டு கவிதையின் பிற உறுப்புகளை மொழித்தளத்தில் உருவாக்கியுள்ளன. இப்போது இந்த வரிகளை மீண்டும் ஒருமுறை படியுங்கள். ஏதோ ஒரு துவாரம் என்பதில் உள்ள “ஏதோ ஒரு” என்பதும் இதயத்தை அறுக்கமுயல்வதன் காரணம் கவிதையில் இல்லாததும் நீங்கள் புன்னகையுடன் வருகிறீர்கள்;  அந்தப் புன்னகை வழக்கமான புன்னகை; அப்போது நீங்கள் கடிகாரத்தில்  இருந்த முட்கள்  மறைந்திருப்பதை எந்தக் காரணத்தாலோ கவனிக்கவில்லை; ஏதோ ஒரு, காரணமற்ற விதமான இதய அறுப்பு, எதற்காகவோ கடிகார முட்கள் மறைகின்றன. இப்படிக் கவிதை ஒரு காரணமற்ற நிகழ்வை கவனத்தில் கொண்டு வருகிறது. அதாவது இக்கவிதையில் வந்தவைகளால் அன்றி கவிதையில் வராதவைகளால் கவிதையின் அர்த்தம் உருவாக்கப்படுகிறது. இது நவீன் கவிதைகளில் அகஸ்மாத்தாக ஏற்பட்ட அர்த்த கட்டமைப்பு முறை அல்ல. “கொக்குமரம்” என்ற கவிதையில்,

 

“கொக்குமரம்

இன்னும் ஒரு மீனுக்காகக் காத்திருக்கிறது.

அதன் கிளை பற்றி அமரும்

பிற கொக்குகளை

அது கவனம் வைப்பதில்லை.

 

என்ற பகுதியிலும் ஒரு மீனுக்காக ஏன் கொக்கு மரம் காத்திருக்கிறது என்றோ ஏன் பிற கொக்குகளை அது கவனம் வைப்பதில்லை என்றோ கவிதை சொல்வதில்லை. புதுக்கவிதை தமிழ்ச் சமூகத்தின் ரகசியங்களைச் சொல்கிறது. அதனை இன்றில்லாவிட்டாலும் இன்னொரு நாள் புரிந்துகொள்ளும் சூழலும், விளக்கமும், அரசியலும் உலகமெங்குமுள்ள இந்த இனம் கண்டுகொள்ளாமல் போகாது.

 

மொத்தத்தில், நவீனின் கவிதைகளைப் பற்றி விரிவாகத் தமிழ்ச்சமூகம் ஆய்வு செய்து தன்னை அறிந்துகொள்வதற்கான வேண்டுகோளாய் இச்சிறு மதிப்புரை அவருடைய “சர்வம் ப்ரம்மாஸ்மி” (2009-இல் வெளியிடப்பட்டது) என்ற நூலை அடிப்படையாய் வைத்துச் செய்யப்படுகிறது. (நூலாசிரியர் தொடர்பு: vallinamm@gmail.com)

 

 

 

மலேசியா

மலேசிய நாவல்: உலகத் தமிழ் நாவல் பரிமாணம்

எஸ்.சி.எஸ்.

 

தமிழகத்தில், ஈழத் துன்பியலுக்குப் பிறகு மௌனமாக ஒரு மாற்றம் நடந்திருக்கிறது. படைப்பில் குறிப்பிட்ட மொழியைப் பேசுபவர்களின் வரலாறும் இனஉணர்வும், அவர்களின் மரபுக்குள்ள முக்கியத்துவமும், அந்த முக்கியத்துவத்தால் உருவாகும் புது அர்த்தங்களும் இடம்பெற வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. மொழிதான் அந்த நிர்பந்தத்தை உருவாக்கி இருக்கிறது. இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் காந்திய இலக்கியமும் சுதந்திர போராட்டமும் ஓரளவு தமிழ்ப்படைப்பைப் பாதித்தன. திராவிட இலக்கிய காலத்தில் சினிமா மோகம் கெடுத்தாலும் பாரதிதாசன் மட்டும், கவிதைக்கு இனவேர் முக்கியம் என்று உணர்ந்ததால் அவர் மட்டும் 20-ஆம் நூற்றாண்டின் வேர்ப்பிடிப்புள்ள கவிஞராய் எஞ்சினார். இக்காலத்துக்கு அடுத்து மார்க்சியம் தமிழைப் பொறுத்தவரையில் சில சூழல்களை உருவாக்கியது. 2009-இல் ஈழப்போர் தோற்கடிக்கப்பட்ட சூழலில் பெரிய மாற்றங்கள் மொழித்தளத்தில் ஏற்பட்டதால் அனைத்துலகத் தமிழர்கள் என்ற புதுத் தமிழ்ப் பிரக்ஞை ஏற்பட்டது.

 

இதனால் தமிழகம் பிரக்ஞை அளவில் தனியாக இல்லை, மலேசியா-சிங்கப்பூர் மற்றும் ஈழம் தொடங்கி அனைத்துலக நாடுகளின் எழுத்து ஒருங்கிணைந்த ஒருவித நவீன ஓர்மை தோன்றியுள்ளது என்ற கோட்பாடு தோன்றியுள்ளது. இதன் பின்னணியாக மலேசிய, சிங்கப்பூர் எழுத்தில் வெளிப்படும் உள்ளமைவுகளைத் தமிழக எழுத்தோடு இணைக்கும் முயற்சி தொடங்கியுள்ளது.

 

இந்தச் சூழலில் தமிழகத் தமிழில் இல்லாத பாடுபொருள்கள் மலேசிய மண்ணில் பிறந்து வளர்ந்த எழுத்தாளர்களிடம் எப்படிக் காணப்படுகின்றன என்பதைத் திறனாய்வில் வடிவமைக்க வேண்டும்.

 

“நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள்” என்ற தலைப்பில் வெளிவந்துள்ள கே.பாலமுருகனின் மலேசியத் தமிழ் நாவல், வாசித்தவுடன், பல புது அம்சங்களைக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது.

 

தமிழர்கள் மலேசியாவிலும், சிங்கப்பூரிலும், ஈழத்திலும் பூர்விகமாக வாழ்கிறார்கள். மலேசியாவில் தோட்டங்கள் அழிக்கப்பட்ட பின்னுள்ள வாழ்க்கையும் நகரத்துக்கு வரும் சரித்திரத்தின் தொடக்கமும் இந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கின்றன.

 

பழைய நாவல்களையோ, சிறுகதையையோ போலல்லாமல் நிலம் பெயர்ந்த தமிழ் வாழ்க்கை ஒருமையமற்ற (decentred) நாவலை உருவாக்கியுள்ளது. புதிய மலேசிய சிறுகதைகளும் கவிதைகளும்கூட இந்த எதார்த்தத்தைத் தைரியமாய் எதிர்கொள்கின்றன. ஜெயகாந்தன், அகிலன், நா.பார்த்தசாரதி போன்றோர் தமிழிலக்கிய முன்மாதிரிகளாய் இந்த எந்தப் படைப்பிலும் இல்லை. மலேசிய எதார்த்தத்திலிருந்து அதன்வாழ்க்கையிலிருந்து இயல்பாய் மலர்ந்துள்ள இந்த குரூரமான சித்திரிப்புகளில் வாழ்க்கையின் உள் உந்துதல் தென்படுகிறது. மலாய், சீனம் என்று எந்த வேறுபாடும் இல்லை. ஆனால், தமிழ்ச் சகோதரத்துவம் எல்லாரின் வாழ்விலும் எப்படியோ பூடகமாய், வாழ்விலும் தாழ்விலும் நீக்கமற பதிவு பெறுகிறது. புக்கிட் லெம்பு என்ற தமிழகத் தமிழர்களுக்குப் புரியாத சொல்லைப் பெயராகக் கொண்ட தோட்டத்தின் பாம்புகளுக்கும், நல்லதுக்கும் கெட்டதுக்கும், பால்வெட்டும் மரங்களுக்கும் பள்ளிக்கூடங்களுக்கும், கடனுக்கும் நடுவிலிருந்த வாழ்வு சிதைக்கப்பட்டுச் சீதாம்பரன் என்ற பால்வெட்டும் வேலைக்காரன் தன் மகன்கள், மகள், மனைவி, நண்பர்கள், எசமானர்கள், அவமானப் படுத்துபவர்கள்  என்ற சூழலை விட்டுவிட்டு நகரத்துக்குக் குடியேறுகிறான்.

 

அப்படிக் குடியேறும்போது அவனை வெறுக்கும் மூத்தமகன் ஏற்கனவே வெளியேறி இருக்கிறான். தாய் தந்தையர் பார்த்துத் திருமணம் செய்து அனுப்பப்பட்ட மகள் அஞ்சலியை மணந்தவன் ஏமாற்றுக்காரனாக வாழ்க்கையை நடத்தும் ஒரு தமிழன். அவனை விட்டுவிட்டு வெளியேறும் தைரியத்தை வாழ்க்கை அவளுக்குக் கொடுத்துள்ளது நாவல் இறுதியில் தெளிவாகிறது.

 

நாவலில் கதைத் திருப்பங்களோ, பெரிய கதையோ தொடர்ந்த மொழிநடை சாதுரியமோ துருத்திக்கொண்டு நிற்கவில்லை. மலேசியாவில் சீரழிந்து போய் விடுவோமோ என்று பயத்துடன் இயங்கும் தமிழ்வாழ்வு நாவலில் இயல்பாய் இருக்கிறது. “பிள்ளையைத் தூக்கி கைலி சட்டைக்குள் அதன் தலையை விட்டு, மார்புக்காம்புகளை, அந்தக் குழந்தையின் வாயில் திணிக்கும்போதெல்லாம் சாரதா மெய் சிலிர்த்துப் போவாள்” என்று பாலமுருகன் எழுதும்போது மொழியாற்றல் எங்கெங்கு வேண்டுமோ அங்கங்கு இருக்கிறது என்பதை அறிகிறோம்.

 

இந்த நாவலின் கட்டமைப்பு மிக முக்கியமானது. காட்சிகள் துண்டு துண்டாகப் பிரிக்கப்பட்டு “ஒருவிதமான” கதை அமைப்புப் படிக்கிறவர்களின் மனதில் லேசாய் உருவாவதுபோல் ஜோடிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் பழைய வாழ்க்கையும் புதிய வாழ்க்கையும் எந்த வித்தியாசமும் அற்ற வறுமையுடனான கொடூரத்துடன் அமைக்கப்படுகின்றன. கதையின் சுகத்தில் வாசகன் தன்னை மறக்கும் தமிழக டி.வி., சினிமா, தொடர்கதைகளின் சாபக்கேடு தன் எழுத்தில் வந்துவிடக் கூடாது என்று முழு பிரக்ஞையுடன் எழுதப்பட்டிருக்கிறது; இந்நாவலின் வெற்றிக்கான அடிப்படை இது.

 

நாவலின் பக்கங்கள் புரள புரள சாரதா என்ற குடும்பத் தலைவியும், சீதாம்பரம் என்ற தோட்ட வேலைக்காரனும் குடும்பத்துக்காய் படும்பாடு வாசிப்பவர்களை ஊசியால் தொடர்ந்து குத்துவதுபோல் உணர்வெழுப்பு கின்றன.

 

எந்த நிகழ்ச்சியும் பெரிதுபடுத்தப்படவில்லை. தலைபெரிதாய் பிறந்த நோயாளியான குழந்தையை யாரிடமோ கொடுக்கும்போதும் கடன்வாங்கி மகள் அஞ்சலிக்குத் திருமணம் செய்து அனுப்பும்போதும் ஒரே மாதிரியான கதைசொல்லல் நடைபெறுகிறது.

 

இந்த நாவலின் இன்னொரு உத்தி பற்றி கண்டிப்பாகச் சொல்ல வேண்டும். நாவலின் 46-ஆம் பக்கத்தில் சீதாம்பரம் கோலாலம்பூர் போகிற விஷயம் வருகிறது. நாவலின் இறுதியில் உதாரணமாக பக்கம் 234-இல் சாரதா “யேங்க, கோலாலம்பூரா அது பெரிய ஊரா?” என்று கேட்கும் போதும் நாவல் சுமார் 190 பக்கங்களைத் தாண்டியிருக்கிறது. அதாவது 19 ஜுன் மாதம் 1995-இல் ஒரே நாளில் நடக்கும் நிகழ்ச்சிகள் இரண்டு இடங்களில் தரப்படுகின்றன. தொடர்ச்சியின்மையை ஒரு உத்தியாய் நாவல் முன்வைக்கிறது. தொடர்ச்சி இல்லாத வாழ்க்கை. அன்றும் வறுமை இன்றும் வறுமை என்பதை நாவலின் உத்தி இவ்வாறு காட்டுகிறது.

 

இந்த நாவலில் குழந்தைகளைப் பிறருக்குக் கொடுத்துத் துன்பத்திலிருந்து விடுபடலாம் என்று நினைக்கும் சீதாம்பரம் மீண்டும் வாழ்வின் கொடூரத்தில் சிக்கி விடுபட முடியாமலாகிறான்.

பிரமை தொடர்வது, தேதிகள் குறிப்பிட்டுக் கதை நகர்த்துவது போன்றன நாவலை படிப்பவர்களுக்குச் சிரமத்தைக் கொடுத்தாலும் நாவல் சொல்லவந்த மைய உள்ளடக்கத்தை மையமற்ற கதையாடல் உத்தி மூலம் சொன்னதின் மூலம் மலேசிய இலக்கிய வரலாற்றில் இந்நாவல் யாராலும் நீக்க முடியாத அங்கமாகிவிட்டது என உறுதிபடக்கூறலாம்.

 

பல சொற்கள் (மலாய், சீன சொற்கள்) தமிழகத்திலிருப்பவர்களால் புரிந்து கொள்ளமுடியாதவை.

 

“சாப்டணே, இட்லி இருக்கு, கோரேங் எல்லாம் இருக்கு…. தோச இருக்கு”

 

இதுபோல் பேச்சுமொழியும் நமக்குப் புரியாத சொற்களும் தமிழ் நாவல் இலக்கியத்தின் பரப்பு விரிவாகிக் கொண்டு போவதை உறுதிப்படுத்துகின்றன.

 

இவ்வாறு ஒரு உலகத்தன்மை தமிழ் எழுத்தில் வந்து சேர்ந்துள்ளது எனலாம்.