ஆண்டர்சன் நூல்

(சிலர் ஆண்டர்சன் நூலைத்திரித்து தேசியம் கற்பிதம் என மடமையான ஒரு கருத்தைப்பரப்புகிறார்கள்.அதனால் நூலின் சுருக்கம் இங்குக்கொடுக்கப்படுகிறது.  பாரிஸில் வாழும் அசோக் நடத்திய ‘அசை’ என்ற இதழில் வந்தது.)

ஆண்டர்சனின் தேசியவாத ஆய்வு(Imagined Comunities)

நூல் சார்ந்து, ஒரு சிந்தனை.

1

  1. தேசியவாத கற்பனை:

கடந்த கால்நூற்றாண்டு காலத்தைத் தமிழின் மிக முக்கியமான காலகட்டம் என்று கூறலாம். அக்காலகட்டத்தில்தான் பிறமொழிச் சிந்தனைகள் தமிழில் மிக அதிகமாக வந்தன. அதிலும் முக்கியமாக ஆங்கில மொழி ஒரு மையமான இடத்தை வகித்தது. ஆங்கிலம் மூலமாக பிரஞ்சு, ஜெர்மன், இத்தாலியச் சிந்தனைகள் கூட தமிழுக்குள் வந்தன.

 

ஏற்கனவே தமிழில் மார்க்சியச் சிந்தனைகள் அதிக உயிரோட்டமாக இருந்ததால் அச்சிந்தனைகளை அடியொற்றி பிரஞ்சு, ஜெர்மன், இத்தாலியன் சிந்தனைகளும் படைப்பு இலக்கியத்தில் ஸ்பானிஷ் சிந்தனைகளும் வந்தன.

 

ஆங்கிலம் அதிமிகுதியாக வந்தாலும் ஆங்கிலத்தில் பெரும்பயிற்சி உள்ளவர்கள் சிலரும் அவ்வளவு பயிற்சி இல்லாத ஆனால், ஆர்வமிகுதி கொண்டவர்கள் பலரும் தமிழில் எழுதினார்கள்.

 

இவர்களில் பலர் ஆங்கிலத் துறை மற்றும் பல்கலைக்கழக பயிற்சி உள்ளவர்கள் என்று சொல்லமுடியாது. இதனால் மொழிபெயர்ப்புக்கள் பல பிழைகளைக் கொண்டு வெளிவந்துள்ளன. ஆனால், மிக அதிகமான ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் சிறு பத்திரிகைகளில்தான் வந்துள்ளன என்பது கவனிக்கத் தக்கது.

 

இவைகள் எல்லாம் ஒரு சமூகம் இயங்கும் போக்கைச் சுட்டுவனவாகும்.

 

இந்தச் சூழ்நிலையில் தான் முக்கியமான பல அகில உலகச் சிந்தனையாளர்கள் பற்றி தமிழில் அறிமுகங்கள் வந்தன.

 

சமீபகாலங்களில் தேசிய இனப்பிரச்சனை பற்றி ஈழப்போராட்டத்தின் பின்னணியில் சர்ச்சைகள் நடந்தன. இந்தச் சர்ச்சைகள் தமிழின் அடையாளம் சார்ந்த உணர்வுகள் மீதாடப்பெற்ற தமிழகத்தில் வரத்தான் செய்யும். கேரளம் போல் அல்லது மேற்குவங்காளம் போல அல்ல தமிழகம். அங்கெல்லாம் மார்க்சியம் சார்ந்த கருத்தோட்டங்கள் அதிகம் வந்தால், தமிழில் அதன் புராதன நினைவுகளோடான அடையாளம் சார்ந்த அரசியல் பேசப்படும்; பேசப்பட்டது. இதில் தமிழ்ச் சார்ந்த அழுத்தம் அதிகமாகும்போது உணர்வெழுச்சி அதிகமாகும்; சிந்தனைகள், தர்க்கங்கள் அதிகமாகும்போது அங்கு மார்க்சீய ஈடுபாட்டாளர்கள் தோன்றுவார்கள்.

 

ஈழப்போர் நடந்த சந்தர்ப்பத்தில் தேசியக் கருத்தாடல்களை முன்வைத்தவர் களை மட்டம் தட்ட, தேசியம் ஒரு கற்பிதம் என்ற ஒற்றை வாக்கியம் சார்ந்த தர்க்கம் சிலரால் பெனடிக்ட் ஆண்டர்சன் பெயரோடு இணைத்துப் பரப்பப்பட்டது. எப்போதும் கவர்ச்சியான சிந்தனைகள் ஒரு சிறு குழுவில்தான் தோன்றும். அதுபோலவே, இங்கும் ஒரு சிறு குழுவில்தான் தோன்றும். அதுபோலவே, இங்கும் ஒரு சில குழுவில் தோன்றி பல பின்பற்றாளர்களைத் தமிழகத்தில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் தமிழர்கள் மத்தியில் பொய்யாகப் பெற்றது. இந்த வகை விளக்கம்.

 

தேசியம் பற்றிய சிந்தனைகள் அது சார்ந்த அனைத்துலக அரசியல் துறையிலும் மிகக் குறைவாகவே நூல்களைளப் புரட்டிப் பார்க்கும்போது பெனடிக்ட் ஆண்டர்சன் பெயர் இன்றும் கூட முக்கியமான பெயராகவே தெரிகிறது. இவரைத் தொடர்ந்தும் விமரிசித்தும் கட்டுரைகள், நூல்கள் இன்று வந்துள்ளன. எனினும், ஆண்டர்சன் நூலை அலட்சியம் செய்துவிட்டு இந்தச் சிந்தனை பற்றி ஆய்கிறவர்கள் முன்னே போகமுடியவில்லை.

 

என்னைப் பொறுத்தவரையில் தமிழ்ச்சூழலில் ஒரு புத்தகம் அல்லது ஆசிரியர் பெயர் பேசப்படுகிறதென்றால் அந்த ஆசிரியர் பற்றிய சர்ச்சையில் ஓர் அர்த்தம் இருக்கிறது என்றுதான் படுகிறது. அதனால் ஆண்டர்சன் பற்றிய இக்கட்டுரையை எழுதுகிறேன்.

 

முதலில் எனக்கு ஆண்டர்சனின் “கற்பனை செய்யப்பட்ட சமூகம்”(Imagined Communities) என்ற நூலின் தலைப்பே பிரச்சனையாகிறது. ஆங்கிலத்தில் “இம்மாஜின்ட் கம்யுனிட்டிஸ்” என்ற நூலுக்கு ஒரு துணைத்தலைப்பு உள்ளது. “தேசியத்தின் தோற்றமும் பரவலும் பற்றிய சிந்தனைகள்” என்பதே அந்தத் துணைத் தலைப்பு. அப்படி ஒரு முக்கியமான கொட்டை எழுத்துத் தலைப்பும் சிறு எழுத்தில் உள்ள துணைத்தலைப்பும் கொண்ட பெனடிக்ட் ஆண்டர்சனின் நூல், இடதுசாரிகள் நடத்தும் லண்டன் வெர்ஸோ பதிப்பகத்திலிருந்து 1983-இல், முதல் பதிப்பு வந்தது.

 

பெனடிக்ட் ஆண்டர்சன் மார்க்சிய குடும்பத்திலிருந்து வந்தவர்; இவருடைய அண்ணன் பெர்ரி ஆண்டர்சன். பெனடிக்ட் ஆண்டர்சன் தெற்காசியா பற்றிய துறை சார்ந்த நிபுணர். பெர்ரி ஆண்டர்சன் மார்க்சிய அரசியல், வரலாறு பற்றிய நூல்களை எழுதியுள்ளார்.

 

இந்த நூலினை எரிக் அயர்பாக், வால்டர் பெஞ்சமின், வாக்டர் டர்னர் ஆகியோர் ஆழ்ந்த பாதிப்பால் எழுதியதாகக் கூறுகிறார் பெனடிக்ட் ஆண்டர்சன்.

 

எரிக் அய்ர்பாக் இலக்கிய வரலாற்றைப் புதுமையாக அணுகுபவர் என்று அறிந்திருக்கிறேன். ஒப்புமை என்ற அர்த்தத்தில் “மிமஸிஸ்” என்ற உலகப் புகழ்பெற்ற நூலை எரிக் அய்ர்பாக் எழுதியுள்ளார். அதுபோலவே வால்டர் பெஞ்சமின்னும் இலக்கியத்துறை சார்ந்தவர், ஆனால் மார்க்சிய நோக்கை வித்தியாசமாக இலக்கியத்தில் பொருத்திச் சிந்தித்தவர் இவர். மார்க்சிய இலக்கிய விமரிசனத்தில் பலர் பெயர்பெற்ற சிந்தனையாளர்களாக இருந்தாலும் வால்டர் பெஞ்சமின்னின் பார்வைக்கு ஒரு தனிக் குணம் இருந்ததை இன்று எல்லோரும் ஒத்துக் கொண்டுள்ளனர். இந்த இரண்டு இலக்கியச் சிந்தனையார்களும் இலக்கியத் துறையோடு தம்மை இணைத்துள்ளவர்கள். ஆனால், மூன்றாவது நபரான விக்டர் டர்னர் மானுடவியல் துறையைச் சார்ந்தவர். இந்த மூன்று சிந்தனையாளர்களையும் விரும்பிக் கற்று அவர்களின் கருத்துக்களால் கவரப்பட பெனடிக்ட் ஆண்டர்சன், தேசியம் என்ற சிந்தனை எவ்வாறு கட்டமைக்கப்பட்டு இருக்கிறது என்று எண்ணிப் பார்த்து, இந்தச் சிந்தனையாளர்களின் சில பார்வை களால் பாதிப்புப் பெற்று, தன் நூலை உருவாக்கியதாகச் சொல்கிறார்.

 

பல காலமாக மேற்கத்திய சிந்தனை உலகில் சமூக நடைமறைகளைளக் கறாரான தகவல்களின் மூலமாகத் திரட்டி அதன் மொத்தத்தை உண்மையாக நூல் வடிவில் முன்வைத்தனர். அமைப்பியல், பின்னமைப்பியல் போன்ற சிந்தனைகள் வந்த பின்பு, முன்புபோல் தகவல் தொகுப்புமுறையில் நூல்கள் எழுதுவதை அறிஞர்கள் குறைத்துக் கொண்டு, இலக்கியச் சிந்தனைமுறையை ஒரு முன்மாதிரி யாக வைத்து ஆய்வுத் தகவல்களைத் தொகுத்துச் சிந்தனைகளை வரையறை செய்யலாயினர். அந்த முறையையே பெனடிக்ட் ஆண்டர்சன் பின்பற்றுகிறார் என்ற சுட்டிக்காட்டல் ஆண்டர்சன் நூலைக் கற்க உதவுவதாகும்.

2

  1. தேசியவாத கற்பனை:

இந்த நூலின் தலைப்புப் பற்றி: “இம்மாஜின்ட் கம்யுனிட்டிஸ்” என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூலை “கற்பனை மூலம் உருவான சமூகங்கள்” என்றோ, “கற்பனை செய்யப்பட்ட சமூகங்கள்” என்றோ மொழிபெயர்க்கலாம் என்று நினைக்கிறேன்.

 

இங்கு “இம்மாஜின்” என்ற ஆங்கில மொழியின் வினைச்சொல் தமிழில் மொழிபெயர்க்கப்படும்போது பிரச்சனைகளை ஏற்படுத்தும். நூலை வாசித்துவிட்டு இச்சொல் எந்தப் பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று பார்க்கவேண்டும்.

 

அகராதியைப் பார்க்கும்போதே இச்சொல் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இம்மாஜின் என்பதை “கற்பனைசெய்” என்றும் இம்மாஜினேஷன் என்பதை “கற்பனை” என்று பெயர்ச்சொல்லாகவும் தமிழில் நாம் புரிந்துகொள்கிறோம்.

 

ஆனால், இந்தச்சொல் தமிழ்மொழிக்கு வெளியிலிருந்து வந்தது என்பதை மறக்கக்கூடாது. அப்படி ஒரு சொல் வரும்போது அந்தச் சொல்லின் அர்த்தமும் வெளியிலிருந்து வருகிறது. இம்மாஜின் என்ற சொல் கற்பனைசெய் என்ற சொல் அல்ல. இம்மாஜின் என்ற ஆங்கிலச் சொல்லுக்குப் பல அர்த்தங்கள் உண்டு. இம்மாஜின் என்ற கருத்துத் தமிழில் இல்லை. இந்தக் கருத்து ஆங்கிலக் கருத்து. நாம் இச்சொல்லை ஏற்கிறபோதே அணுகுமுறை ஆங்கிலேயர்கள் ஆகி விடுகிறோம். இதுபோல் நம்மொழியில் இல்லாத பல சிந்தனைகளை ஆங்கிலச் சொல் தமிழில் கொண்டு இறக்குமதி செய்துள்ளது. இரண்டு மொழிகளையும் பயன்படுத்துபவர்களும் நல்ல மொழிபெயர்ப்பாளர்களும் இவ்விசயத்தை ஏற்கனவே கண்டிருப்பார்கள். இம்மாஜின் என்ற சொல்லுக்கு அகராதி “நினை” என்று ஒரு பொருளைத் தருகிறது. அதுபோல் “இட்டுக் கட்டு” என்ற பொருளையும் “கற்பனை செய்” என்ற பொருளையும் “எதிர்பார்” என்ற பொருளையும் “பிரமை” என்ற பொருளையும் ஒரு வாக்கியத்துக்கு வலியுறுத்தல் அர்த்தத்தையும் இச்சொல் தரும். இவ்வளவு பொருள்களை அகராதி தருகிறது.

 

இனி அகராதியை மூடி வைத்துவிட்டு நூலில் இந்தச் சொல் என்னென்ன பொருள்களில் எல்லாம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது என்று பார்த்தால் இன்னும் அதிகம் தெளிவு கிடைக்கும். ஆண்டர்சனின் நூலின் பல இடங்களில் இம்மாஜின், இம்மாஜின்ட். இம்மாஜினேஷன் என்றெல்லாம் நூலின் தலைப்புப் பயன்படுத்தப் பட்டுள்ளது. அந்தந்த இடத்தின் தர்க்கத்திற்கேற்ப இச்சொற்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன.

 

நான் 1987ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பெற்ற நான்காம் பதிப்பைப் படித்தேன். அதில் பக்கங்கள் 18, 37, 74, 79, 95, 101, 111, 116, 118, 122,132, 133, 140, 143 ஆகியவற்றிலும் இன்னும் சிலதிலும்இச்சொல் ஒத்த பொருளிலும் முற்றிலும் மாறுபட்ட பொருளிலும் பயன்பட்டுள்ளதைக் கண்டேன். எனவே, நூலின் தலைப்பு ஆசிரியரின் தர்க்கத்திற்கேற்ப பெரும்பொருள்பரப்பு உடையதாக மாறுவதைக் கவனித்தேன். 18-ஆம் பக்கத்தில் தேசியக் கற்பனைக்கும் சமயக் கற்பனைக்கும் ஒரு பலமான உறவுண்டு என்ற பொருளில் கற்பனை என்ற பொருளில் (இம்மாஜினிங்ஸ் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது) பக்கம் 37-இல் நியுயார்க் டைம்ஸ் என்ற பத்திரிகையில் சோவியத் யூனியனில் அந்தக் காலக் கம்யுனிஸ்டு கட்டத்தில் அரசுக்கு எதிராக செயல்புரிந்த ஒருவரைப் பற்றியும் மாலி நாட்டில் பஞ்சம் பற்றியும் மாலி நாட்டில் பஞ்சம் பற்றியும், கொடூரமான ஒரு கொலை பற்றியும் இவைகளுக்கிடையில் ஒரு தொடர்பு ‘கற்பனை செய்யப்பட்டிருக்கும்’ என்று ‘கற்பனை’ சாதாரண பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதுபோல 74-ஆம் பக்கத்தில் இச்சொல் வேறு ஒரு பொருளில் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் கவனிக்க முடிந்தது. “பிரஞ்சு நாட்டுக் கனவான்களும் ஆங்கில நாட்டு அரசர்களும் ஒரு உறவைக் காப்பாற்றுவார்கள்; அவர்களுக்குள் ஒரு மொழியோ, கலாச்சாரமோ பொதுவாக இருக்காது. அவர்களுக்குள் உள்ள மணஉறவு, நட்பு, அரசியல் அடிப்படை, போன்றவை பருமையாக இருப்பதுபோலவே கற்பனைச் செய்யப் பட்டதாகவும் இருக்கும்”. இந்த வாக்கியத்தில் ‘கற்பனை செய்யப்பட்டது’ என்ற சொல்தொடர் (இம்மாஜின்ட்) நூலின் பல இடங்களில் பயன்படுத்தப்பட்ட பொருளாகும். இங்குப் ‘பருண்மை’ என்ற சொல் (concrete) ‘கற்பனை செய்யப் பட்டது’ என்ற சொல்லுக்கு எதிர்பதமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இம்மாஜின்ட் என்ற சொல் நிஜம் என்பதற்கு மாறான கற்பனை செய்யப்பட்டது என்ற பொருளில் இங்கு வருகிறது. தேசியம் என்பது பல்வேறு காரணிகளால் கற்பனையாக இணைக்கப்பட்டது என்ற பொருளில் நூல் முழுதும் வருகிறது. பருண்மையான உறவு  என்பது இரத்த உறவின் அடிப்படையிலும் குடும்ப உறவின் அடிப்படையிலும் ஏற்படும்; கற்பனை உறவு அச்சுமூலமாக அல்லது நேரடித் தொடர்பாக இல்லாவிட்டாலும் எல்லோரும் ஒரு குறிப்பிட்ட நாவலைப் படிக்கிறோம் என்பதின் மூலம் வாசகர்கள் மனதில் ஏற்படுவதாகும் என்ற பொருள் இங்கு ஏற்படுகிறது. இன்னும் பல இடங்களில் சகோதரத்துவம் ‘கற்பனை செய்யப் பட்டுள்ளது’ என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது கற்பனை என்பது ‘நினைக்கப் படுவது’ என்ற பொருளில் இந்த இடங்களில் எல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நூலின் முன்னுரையில் தேசம் கற்பனை செய்யப்பட்டது, அதாவது எவ்வளவு சிறிய நாடானாலும் நாட்டில் வாழ்பவர்கள் ஒருவருக்கொருவர் பரிச்சயமற்றவர் களாகவே இருப்பார்கள் என்று வலியுறுத்தப்படுகிறது. இந்தப் பரஸ்பரத் தொடர்பு கொஞ்சமும் இல்லாத மக்கள் மத்தியில் அவர்கள் மத்தியிலுள்ள ஒருங்கிணைவு உணர்வின் வடிவம் இருக்கும். அந்த வடிவமே தேசக் கட்டுமான உணர்வாகும். இந்தத் தேச உணர்வு, கற்பனை செய்யப்பட்டதாகும். இதுதான் பெனடிக்ட் ஆண்டர்சன் கூறவிழையும் கருத்து. வேறுமுறையில் புரிந்து கொள்ளக்கூடாது. தேசங்கள் ஒரு காலத்தில் குடும்ப உறவாகவும், திருமண உறவாகவும் பெண் கொடுத்து எடுப்பதாகவும் புரிந்துகொள்ளப்பட்டிருந்தது. அதாவது அவ்வாறு கற்பனை செய்யப்பட்டிருந்தன, அல்லது நினைத்துப் பார்க்கப்பட்டிருந்தன என யோசிக்க வேண்டும். இந்த இடத்தில், ‘கற்பனை செய்யப்படுவதும்’, ‘நினைத்துப் பார்க்கப்படுவதும்’ ஒன்றுபோல் அமைகின்றன என்பதும் வாசகர்களுக்கு நினைவில் இருக்கவேண்டும். அதாவது ‘கற்பனை செய்யப்படுவது’ என்பதும் ‘நினைக்கப்படுகிறது’ என்பதும் ஒன்றுபோல் அமைகின்றன. ஒரு நாட்டில் சுரண்டும் குழுக்கள் இருக்கலாம், அசமத்துவம் நிலவலாம், ஆனால், அத்தகைய வேறுபட்டவர்கள் மத்தியில் ஒரு சகோதரத்துவமும் ஆழமான பிடிப்பும் காணப் படுவது தேச உணர்வால் ஏற்படுவதாகும். இங்குக் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் ‘கற்பனை செய்வதற்கு’ ஒரு சமூகம் (கம்யுனிட்டி) வேண்டியுள்ளது. கற்பனையின் மூலம், அதாவது பிரமையாகக் கற்பனை செய்வதன் மூலம் ஒரு கூட்டு உணர்வு ஏற்படுகிறது. அந்தக் கூட்டு உணர்வால்  ஒரு சமூக உணர்வு (கம்யுனிட்டி உணர்வு) ஏற்படுகிறதென்பதை நாம் கவனிக்க வேண்டும் என்று கூறுகிறார் பெனடிக்ட் ஆண்டர்சன். சாவதற்கும் கொல்வதற்கும் தேசியம் என்ற சொல் இவ்வாறு ஆற்றலைக் கொடுக்கிறது என்பது ஆச்சரியமான தாகவிருந்தாலும் அதுதான் உண்மை என்பதையும் நாம் அவதானிக்க வேண்டும். சுமார் 200 ஆண்டுகளே புழக்கத்தில் இருக்கும் தேசியம் என்ற சொல் நம்பமுடியாத அளவு தியாகங்களைச் செய்ய வலிமையைத் தருகிறதென்றால் தேசியம், கலாச்சாரத்தோடு ஆழமாக வேர்விட்டிருக்கிறதென்று கூறுகிறார் ஆண்டர்சன்.

3

இனி நாம் கற்பனை செய்யப்பட்ட சமூகங்கள் என்ற நூலைப் பற்றிப் புரிந்துகொள்வதற்கு ஓரளவாவது அதன் பல்வேறு அதிகாரங்களின் கருத்துச் சுருக்கத்தை அறிய வேண்டும். முன்னுரை நீங்கலாக இந்நூலில் எட்டுத் தலைப்புகள் உள்ளன. அவை,

 

  1. கலாச்சார வேர்கள்.
  2. தேசிய பிரக்ஞையின் தோற்றம்
  3. பழைய சாம்ராஜ்யங்கள், புதிய தேசங்கள்.
  4. பழைய மொழிகள், புதிய மாதிரிகள்.
  5. அதிகாரபூர்வமான தேசியமும் ஏகாதிபத்தியமும்
  6. கடைசி அலை
  7. நாட்டுப்பற்றும் இனவாதமும்
  8. வரலாற்றின் தேவதை.

 

இந்த எட்டுத் தலைப்புக்களைப் பற்றியும் ஓரளவாவது சுருக்கத்தைத் தருவதுதான் நியாயம்.

 

கலாச்சார வேர்கள் என்ற கட்டுரை தேசிய உணர்வின் கலாச்சார வேர்களைக் காணமுயல்கிறது. இங்கு வாசிப்பவர்களுக்குச் சில கூறவேண்டும். பங்களாதேஷ் அல்லது இலங்கை சென்று பார்ப்பவர்களுக்கும் ஐரோப்பாவில் சில காலம் தங்கியவர்களுக்கும் தேசம் என்பதும் அதன் தத்துவமான தேசியம் என்பதும் அந்தந்த நாட்டுத் தலைநகரில் உருவாவது தெரியும். திடீரென்று ஒரு ராணுவம் உருவாவதும், பாராளுமன்றம், நீதிமன்றம் – இவைகளும் இதுபோல் மக்களின் சாவையும் பிறப்பையும் தீர்மானிக்கும் ஒரு கண்ணுக்குப் புலப்படாத கடவுளாய் தேசம் எல்லோராலும் ஏற்கப்பட்டிருப்பது தெரியும். இப்படித் தேசியம் என்ற கருத்தாக்கம் இவ்வளவு ஆற்றல் பெறுவதற்கான காரணங்கள் யாவை?

 

ஒவ்வொரு நாடும் பெயர்தெரியாத படைவீரர்களுக்கான நினைவுச் சின்னத்தை மதித்துக் கௌரவம் செய்யும். இந்த நினைவுச் சின்னம் தேசியத்தின் பல அடையாளங்களில் ஒன்றாகும். இதுபோல், பெயர்தெரியாத மார்க்சீயர் களுக்கான சாவு நினைவுச் சின்னம் எங்கும் யாரும் பார்க்க முடியாது. இதிலிருந்தே தேசியம் சமயச்சிந்தனைகளுடன் உறவு கொண்டிருப்பது தெரியும். எனவே, தேசிய கலாச்சார வேர் சாவுடன் பிணைக்கப்பட்டிருப்பது புரிகிறது.

 

மதங்கள் எப்போதும் நோய், உடலுறுப்புச் சிதைவு, துக்கம், வயது, சாவு என்னும் கருத்துக்களுடனும் அனுபவங்களுடனும் உறவு கொண்டவை. மார்க்சீயம் அப்படிப்பட்டதல்ல; இந்த விஷயங்களைப் பற்றி மார்க்சியம் பேசாது. இதுதான் மதத்துக்கும் மார்க்சியத்துக்கும் உள்ள வேறுபாடு. நான் ஏன் இப்படிக் கஷ்டப்படு கிறேன் என்ற வேதனை மதத்தோடு ஒருவரை இணைக்கக்கூடியதாகும்.

 

பதினெட்டாம் நூற்றாண்டு, மேற்குலகில் தேசியங்களின் தோற்றத்தையும் மதங்களின் வீழ்ச்சியையும் காட்டியது. மதச்சார்பற்ற விதிக்கொள்கை, தவிர்க்க வியலாமை போன்றன தேசியத்தில் இருக்கிறதென்கிறார் ஆண்டர்சன்.

 

இதுபோல் அரசவம்சங்கள் தேசியச்சிந்தனையில் முக்கியமானவைகளாகும். பல தேசியங்கள் அக்காலங்களில் அரசவம்சங்களிலிருந்து தோன்றின.

 

மதங்கள் – உதாரணமாக, கிறிஸ்தவம், இஸ்லாம், கன்புசியனிசம் போன்றவை லத்தீன், அராபிக் மற்றும் சீனமொழிகளின் மூலமாக மக்களோடு உறவுகொண்டன . மதத்தில் புனிதமொழிகள் இணைக்கப்படுகின்றன.

 

கிறிஸ்தவத்தோடு லத்தீன்மொழியும், இஸ்லாத்துடன் அராபிக் மொழியும், பாலி, சைனமொழி மு`தலியவைகளும் மதச்சின்னங்கள் போலவே – அவைகளின் எழுத்துக்களால் பாவிக்கப்படுகின்றன. பக்தர்கள் புனிதமொழி அல்லது எழுத்தை மத அடையாளம் போலவே கருதுகின்றனர். இத்தகைய பழைய புனிதமொழிகள் மூலமாக உருவான தேசஉணர்வும் இன்றைய தேசஉணர்வும் சற்று மாறுபட்டவை என்றாலும், அவைகளுக்குள் தொடர்பில்லை என்று கூறமுடியாது. அதுபோல் சைன எழுத்து வடிவங்களும்  அரபிக் எழுத்து வடிவங்களும் வெறும் எழுத்துக்கள் மட்டும் அல்ல. ஒரு வகையான உண்மையை இந்தப் பழைய எழுத்து வடிவங்களில் மக்கள் கண்டார்கள். அதுபோல் இந்த எழுத்துக்களை அறிந்தவர்கள் தமக்குள் ஒரு ஒருங்கிணைவு எற்பட்டது. மனோபாவத்தையே பெனடிக்ட் ஆண்டர்சன் கற்பனை செய்தல் என்று கூறுகிறார் என்பது என் கருத்து. இத்துடன் மொழிகள் வழியாக ஒருவித சமூக ஒருங்கிணைவு என்னும் உண்மையும் எல்லை வகுத்தல் மனோ பாவமும் ஏற்படுகின்றன.

 

புனித மொழிகளின் வழியாக ஒருவித பொது மனோபாவம் உருவாவது போலவே, அம்மொழிகளின் ஒடுங்குதசையும் இத்தகைய மனோபாவங்களில் வேறொரு பண்பைக் கொண்டு வந்து சேர்த்ததை நாம் அறியவேண்டும். லத்தீன் மொழி யின் கௌரவம் ஐரோப்பாவில் மங்குவதோடு ஐரோப்பாவில் மக்கள் மொழிகள் உயிர்பெற ஆரம்பித்தன. ஜெர்மன், பிரஞ்சு, இத்தாலிய மொழிகளள் புத்துயிர் பெற ஆரம்பித்தன. கி.பி.1500வாக்கில் அச்சிடப்பட்ட நூல்களில் 77 சதமானம் புத்தகங்கள் லத்தீனிலேயே இருந்தன என்பதை மறக்கக்கூடாது என்கிறார் ஆண்டர்சன். அதாவது 23 சதமானம் நூல்கள் மக்கள் மொழிகளில் வர ஆரம்பித்து விட்டன. ஹோபஸ் (Hobbes–1588–1678), லத்தீனில் எழுதினார் என்றால் சேக்ஸ்பியர் (1564–1616) மக்கள் மொழியாகிய ஆங்கிலத்தில் எழுதினார். தெக்கார்த்தே (1596-1650) போன்ற தத்துவவாதிகள் லத்தீனிலும் பிரான்சின் சிந்தனையாளரான வால்டேர் பிரஞ்சிலும் எழுதினார்கள். அதாவது சுமார் 1640-ற்குப் பிறகு மெதுமெதுவாக லத்தீன் கீழ்த்திசையை அடைந்தது. ஐரோப்பாவின் மக்கள் மொழிகள் வளளர ஆரம்பித்தன. லத்தின் மொழியின் வீழ்ச்சியோடு புனித மொழி என்ற மனோபிம்பம் மறைய மக்கள் கூட்டங்களிலும் மாறுபாடு ஏற்பட்டது; அவை பன்முகம் கொண்டன; அதுபோல் புதுஎல்லைகளை அம்மக்கள் உருவாக்கினர்.

 

தேசிய மனோபாவத்தைக் கற்பனை செய்ததில் மொழி வகித்த பங்கைப் போலவே வம்சஅரசாட்சிகளும் சமமாகவே பங்கு வகித்தன என்பது ஆண்டர்சன் கருத்து. அரச உறவு முறைகள் ஒரு உயர்மையத்தை(high centre)ச் சுற்றி எல்லா வற்றையும் கட்டமைத்தன. இதற்கான நியாயப்பாட்டை தெய்வீகக் கருத்துக்கள் ஏற்படுத்திக் கொடுத்தன. பழைய தேசிய கற்பனையில் மையம்தான் முக்கியம்; எல்லை ஓரங்கள் பலமற்றவையாகவும் தெளிவற்றவையாகவம் இருந்தன. இறையாண்மைகள் அப்போது மங்கி இன்னொன்றோடு தெளிவற்ற முறையில் கலந்திருந்தது. முன் – தற்கால  அரச வம்சங்கள் மற்றும் பேரரசுகள் நம்ப முடியாத படி நீக்குப் போக்கானவைகளாகவும் கலப்புள்ளவைகளாகவும் மக்களை நெடுங் காலமாக ஆண்டுள்ளன. இந்த அரசாட்சியில் யுத்தங்களாலும், பாலியல் அரசியலாலும்  வளர்ந்தன. அரச குடும்பத் திருமணங்கள் இங்கே முக்கியமானவை ஆகும்.  பல்மணமும் பல்தள விபச்சாரமுறையும் அரச உருவாக்கங்களோடு இணைந்திருந்ததுண்டு. இத்தகைய அரசுகள் 17-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் வீழ்ச்சியடைய தொடங்கின. 1914-வாக்கில் கூட வம்சஅரசுகள் முக்கியமாக இருந்தாலும் அவை புதுமுறைகளில் இயங்கியதால் தேசியம் இத்தகைய வம்ச அரசுகளில் இருந்து தோன்ற ஆரம்பித்தன.

 

மொழியும் வம்ச அரசும் போலவே, உலகைப் புரிந்து கொள்வதில் புதுத்தன்மைகள் தோன்றின. அதையும் நாம் புறக்கணிக்கக்கூடாது எனக் கூறும் பெனடிக்ட் ஆண்டர்சன் உலகைப் புரியும்முறை என்பது மூன்றாவது காரணி என விளக்குகிறார். அதாவது தேசியம் கற்பனை செய்யப்பட உலகைப் புரியும் முறையும் முக்கியம்.

 

மத்தியகால கிறிஸ்தவக் கோயில்களின் கண்ணாடி ஜன்னல்களில் காணப் பட்ட ஓவியங்கள் மாற்றமுற்றன. கிறிஸ்து பிறக்கப்போகிறார் என்று தெரிந்து நட்சத்திரம் வழிகாட்டச் சென்ற மூன்று இடையர்கள் சாதாரண கிராமத்து மக்களின் உடையில் தீட்டப்பெற்றனர். அந்த இடையர்களுடன் அவ்வோவியத்தைத் தீட்ட பண உதவிசெய்த பிரபுக்கள் உயர்ந்த ஆடைகளின் ஓவியர்களால் வடிக்கப் பட்டனர். மத்திய காலத்தில் கற்பனை செய்யப்பட்ட இந்த ஓவியங்களைப் பற்றிக் கூறும்போது ஆண்டர்சன் கற்பனை என்ற சொல்லை ஓவியக் கற்பனையாகப் பொருள் மாற்றுகிறார். முக்கியமாக (பக். 29-இல்) நூலின் இப்பகுதியில் உலக எதார்த்தம் இவ்வாறு கற்பனை செய்யப்பட்டது என்ற வாக்கியத்தை ஆண்டர்சன் பயன்படுத்துகிறார்.

 

இலக்கியவாதி அய்ர்பாக் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டோம். அய்ர்பாக் பைபிளில் வரும் ஐசக்கைப் பலியிடல் பற்றியும் பின்புவரும் கிறிஸ்துவின் பலி பற்றியும் கூறி, பைபிளில் இவ்விரு பலிகளள் பற்றியும் இணைத்துப் பேச்சு இல்லை என்றாலும் காலத்தாலும் காரணகாரிய தொடர்பாலும் இல்லாத ஒரு தொடர்பு வருவிக்கப்படுகிறது; சத்தியமாக்கப்படுகிறது என்கிறார். அதாவது காலம் என்பது படைக்கப்படுகிறது என்கிறார். இதனை வால்டர் பெஞ்சமின் கூறிய ‘தீர்க்கத் தரிசனமான காலம்’ என்று அழைக்கிற ஆண்டர்சன் இத்தகைய காலத்தின் மூலம் ஒரு ‘உடனடித்தன்மை’ உருவாகிதென்று கூறுகிறார். அதாவது ‘ஒருங்கிணைந்த உள்ளீடற்ற காலம்’ என்பதனோடு உடனடித்தன்மையானத காலத்தில் அகஸ்மாத்தான தன்மையால் (temporal coincidence) ஏற்படுகிறது என்கிறார் ஆண்டர்சன். இத்தன்மைகளாலும் உடனடித்தன்மை, காலத்தால் பரிவர்த்தனை ஆகி வருவதாலும் தான் தேசிய கற்பனை செய்யப்படுகிறதென்கிறார் (பக்: 30). இந்தக் கருத்தாக்க முயற்சி இந்த நூலுக்கு முக்கியமானதுது என்று நினைக்கிறேன்.

 

இந்த இடத்தில் ஐரோப்பாவில் அன்று உருவான நாவல் மற்றும் செய்திதாள் உருவாக்கத்தின் வருதலை (imagining) சுட்டுகிற ஆண்டர்சன் தேசக்கற்பனை உருவாக்கத்தில் நாவலும் செய்தித்தாளும் தொழில்நுட்பக் கருவிகளானதைச் சுட்டுகிறார்.

 

இத்தகைய உருவாகிவரும் கருத்தாக்கங்களைப் பல மொழிகளின் நாவல் களை உதாரணமாகப் பயன்படுத்தி எளிமையாக விளக்குகிறார் ஆண்டர்சன். பிலிப்பைன்ஸ் நாட்டு தேசியவாதத்தின் தந்தை என்று கருதப்படும் ஜோஸ் ரியால் (Josse Rizal) ‘நோலிமே தாங்கரெ’ என்ற தலைப்பில் ஒரு நாவல் எழுதியிருக்கிறார். இன்று தற்கால பிலிப்பைன்ஸ்  இலக்கியத்தில் மிக முக்கியமான நாவல் இது. இந்த நாவலின் தொடக்கத்தில் வரும் மதிய உணவு விளக்கம் மிக முக்கியமானது. பெயர் சொல்லப்படாத நூற்றுக்கணக்கானவர்கள் அந்த மதிய உணவு பற்றி விவாதிக் கிறார்கள். அவர்கள் யாருக்கும் தம்மை மாறிமாறித் தெரியாது. ஒரு குறிப்பிட்ட காலத்தில் அப்படிச் செய்கிறார்கள். இது கற்பனை செய்யப்பட்ட சமூகம் ஒன்றை உருவாக்குகிறது என்கிறார் ஆண்டர்சன். இந்த நாவலின் உள்ளமைந்திருக்கிற காலம் பிலிப்பினோ வாசகர்களின்  வாழ்வில் பார்க்கும் வெளியில் பார்க்கும் – காலத்தை நோக்கி முன்னேறுகிறது. ஜோஸ் ரிஸால் எழுதும்போது பிலிப்பைன்ஸ் மக்களின் தனிப்பட்ட அடையாளங்கள், வித்தியாசங்கள் ஏதும் அவருக்குத் தெரியாது. எல்லோரும் ஒற்றுமையால் ஓருடம்பாய் இருக்கிறார்கள் என்பதுபோல் எழுதுகிறார்.

செய்தித்தாள்களைப் பார்க்கும்போதும் அவை, புத்தகத்தோடும் சந்தை யோடும் தொடர்பு வைத்திருக்கிற ஒரு வடிவமாக இருக்கிறது என்று கூறுகிறார். ஆண்டர்சன். ஆரம்பத்தில் உலகில் அதிகமாக அச்சிடப்பட்டது ஒரு புத்தகம்; அது பைபிள். 15-ஆம் நூற்றாண்டுக்கு முன்பே இரண்டு கோடி பிரதிகள் அச்சிடப்பட்டு உள்ளளன. இந்த நூல்தான் நவீனமாக உற்பத்தி செய்யப்பட்ட முதல் தொழில் உற்பத்தி பொருள். அதாவது துணி, செங்கல், சர்க்கரை போன்ற தொழில் உற்பத்தி பொருளோடு ஒப்பிடும்போது  இக்கூற்றின் உண்மை புரியும். புத்தகம் தன்னளவில் முழுமையான உற்பத்திப்பொருள். சர்க்கரையைப் போல் இன்னொன்றாய் உருவம் மாற்றி (இனிப்பு வகைகள்) விற்கத் தேவையில்லை. இதுபோல் செய்தித்தாள் கூட ஒரு சிறப்பான அர்த்தத்தில் உற்பத்திப்பொருள் தான்.

 

இவ்வாறு தற்கால தேசங்கள் போலவே நாவலும் தொடர்ச்சியாகவும் சந்தடியில்லாமலும் உலக எதார்த்தத்துக்குள் நுழைந்து விடுகிறது. அப்படிச் சமூகத்தின் நம்பிக்கையாகத் தற்காலத் தேசமும் தற்கால நாவலும் அமைகின்றன. அதனால்தான் கற்பனை செய்யப்பட்டதாய் இவை இரண்டும் அமைகின்றன.

 

மொத்தத்தில் முதல் அத்தியாயத்தில் தேசத்தின் தோற்றம் என்பது மொழியும் எழுத்தும் மனித மனதில் வைத்திருந்த பிடிப்பும் வம்ச அரசுகளின்  பிடிப்பும் காலம் பற்றிய பிடிப்பும் நெகிழ்ந்த தருணத்தில், நடக்கிறதென்று முடிவு கூறுகிறார் ஆண்டர்சன்.

 

அடுத்த தலைப்பு (நூலில் மூன்றாம் அத்தியாயம்). ‘தேசிய பிரக்ஞையின் தோற்றம்’ பற்றிய கருத்துக்கள். இந்திச் சிறிய அத்தியாயத்தில் அச்சு ஒரு பண்டம் என்னும் சிந்தனைத் தொடர்கிறது. கையெழுத்துப்படிகள் தரும் அறிவைத் தோற் கடித்து முதன்முதலில் அச்சு தரும் அறிவு, உலகில் கோலோச்ச வந்தது. இதனால் முதலாளியம் நூல் உற்பத்தித் துறையில் தோன்றியது. மேலும், சந்தையில் ஒரு புது பண்டம் விற்பனைக்கு அறிமுகமாயிற்று. நூல் பதிப்பு நிறுவனங்கள் தேசிய வரையறையைத் தாண்டி தோன்றலாயின. இயற்கையாக இலாப நோக்கம் ஒரு குறிக்கோளாகத் தோன்றியது. ஆரம்ப கால சந்தை, படித்தவர்களைக் கொண்ட ஐரோப்பாவாக இருந்தது. அதாவது இந்தப் புத்தக நுகர்வாளர்களள் லத்தீன்மொழி படித்த சிறுகூட்டம் ஆகும். லத்தீன் வாசித்தவர்களுக்கு இன்னுமொரு மொழி தெரிந்தது; எனவே, இவர்கள் எல்லோரும் இரட்டை மொழியாளர்களாக இருந்தனர்.

 

இலத்தீன் மொழி சரிவுற்றலும் மக்களின் மொழிகளில் நூல்கள் சந்தையை நிறைத்தன. எனவே, முதலாளியத்தோடு மக்களின் சம்பந்தப்பட்டிருந்தன. இந்த முதலாளியப் புரட்சி மூன்று விசயங்களுக்குக் காரணமாயிருந்தது. அவற்றின் இரண்டு நேரடியாகத் தேசிய உணர்ச்சியின் எழுச்சிக்குக் காரணமாயிருந்தன என்று, இலத்தீன் மொழியின் குணம் மாறியது. அதாவது இலத்தீன் மொழியில் இருந்து அச்சுக்குக் கொண்டு வரப்பட்ட நூல்கள் தேவாலய லத்தீன் அல்ல. மக்கள் வாழ்விலிருந்து தூமாகிப் போன அந்நியத் தன்மைக் கொண்ட லத்தீன் மொழி ஆகும். இது அச்சில் வந்ததால் மர்மமானதும் ரகசியமானதுமான தன்மையைப் பெற்றது. ஏனெனில் இந்த லத்தீன் இப்பொழுது ஒரு பிரதி. தேவாலயத்தில் பாதிரியார்களால் உச்சரிக்கப்பட்ட லத்தீன் மொழியை மக்கள் கேட்டுப் பழகி இருந்தனர். ஆனால் அச்சில் வந்தது அப்படியல்ல. இரண்டாவதாக. ஐரோப்பாவில் அப்போது பரவிய சீர்த்திருத்தம். அதாவது மார்டின் லூதர் இந்தச் சீர்திருத்த மதக் கருத்தைக் கொண்டுவந்தார். மார்டின் லூதர் கருத்துக்கள் கிறிஸ்தவ மதத்தில்  சீர்திருத்தத்தைக் கொண்டு வந்த கட்டத்தில் அச்சும் பரவியிருந்ததால் அக்கருத்துக் கள் மிக வேகமாக பரவின. 1518-ஆம் ஆண்டுக்கும் 1525-ஆம் ஆண்டுக்கும் மத்தியில் அச்சிட்ட மொத்த ஜெர்மன்மொழி புத்தகங்களில் மூன்றில் ஒரு மடங்கு புத்தகங்கள் லூதரின்  புத்தகங்கள். அதாவது, உலகில் முதன்முதல் சிறந்த சிறந்த விற்பனை நூல் லூதருடையவை. நூலின் அட்டையில் லூதர் பெயரைப் பார்த்ததும் வாங்கினர் மக்கள். அடுத்த நூற்றாண்டில் பிரச்சார யுத்தம் ஐரோப்பபா முழுவதும் நடந்தது. சீர்த்திருத்த கிறிஸ்தவம் தாக்குதல் தொடுக்க அதனைக் கத்தோலிக்க மதம் தடுக்கும். நிலையில் இருந்தது. கத்தோலிக்கம் இன்னும் அதிக நூல்களை லத்தீனில் எழுதியது. சீர்த்திருத்த மதமும் அச்சு – முதலாளியமும் சேர்ந்து மிகப்பெரும் வாசகர் கூட்டம் உதயமானது.

 

அடுத்த முக்கியமான, அதாவது மூன்றாவது விசயம், ஆட்சியியலுக்கு வந்த மக்கள் மொழிகள். இந்த முறையில் எல்லா மேற்கூறப்பட்ட அம்சங்களும் சேர்ந்து மொழி – தேசியவாதம் தோன்றியது. இவ்வாறு லத்தீன் மொழி கோலோச்சிய இடத்தில் மர்மமும் ரகசியமும் கொண்ட லத்தீனும் சீர்திருத்த கிருஸ்தவமும் ஆட்சியியல் மக்கள் மொழிகளும் தோன்றின. இந்த மூன்றும் ஒரு மிக்க தோன்றிய இடங்களில் புதியதாக கற்பனை செய்யப்பட்ட சமூகங்கள் தோன்றின. இந்தச் சமூகங்களுக்குக் கற்பனைத் தன்மையைக் கொடுத்தவை, உற்பத்தியும் உற்பத்தி உறவில் தோன்றிய முதலாளிய முறையும் அச்சு என்னும் தொழில்நுட்ப தொடர்புறுத்தலும், மனிதமொழிகள் என்னும் பரவலாக்கமும் ஆகும். இவை ஒன்றையொன்று சார்ந்து ஊடாடி நின்றன.

 

இக்கூட்டத்தில் மக்கள் ஓரிடத்தில் பேசிய மொழி இன்னொரு இடத்தில் அப்படியே பேசப்படவில்லை. அச்சு வளர்ச்சியால் மொழியில் ஒருமையும், ஒரு இறுக்கமும் தோன்றிற்று. இதனால் வாசகர்கள் ஒருங்கிணைவு கொண்டனர். முதலாளியம் மொழிகளை ஒருமுகப்படுத்தியது. இங்குச் சந்தை வகித்த பங்கையும் மறக்கக்கூடாது நாம்.

 

அச்சு – மொழி மூன்றுவிதமாக தேச பிரக்ஞையை உருவாக்கியது. ஒன்று: ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரஞ்சு மொழிகள் வெகுவேகமாக கருத்து தொடர்புறுத்தும்  எளிய வாகனங்களாயின. புரிதல்தன்மையும் மக்கள் மத்தியில் உருவாயிற்று. எனவே, வாசகர்களிடம் தேசியமாக கற்பனை சமூகம் தோன்றியது. இரண்டு்: அச்சு – முதலாளியம் மொழிக்கு இறுக்கமும் புராதனத் தன்மையும்  கொடுத்துத் தேசம் என்னும் புதுக்கருத்துத் தோன்றியது. அச்சான நூல் மொழிக்கும் தேசியத்துக்கும் ஒரு நிரந்தர வடிவத்தைக் கொடுத்தது. எல்லையற்ற மறுஉருவாக்கமும் நூல் சந்தையில் ஏற்பட்டது. மூன்று: அச்சு – முதலாளியம் மக்கள்மொழி, ஆட்சி இல்லாத அதிகாரத்தை மொழிக்கு அளித்தது. இதில் சில பகுதிகளின் பேச்சுமொழி அதிகாரத்துக்கு அருகில் நெருங்கி அச்சுமொழியாயின. சில கிளைமொழிகளுக்கு அந்த யோகம் கிட்டவில்லை.

 

இதுவரை  பார்த்தவைகளை ஆண்டர்சன் சுருக்கி இப்படித் தருகிறார்: முதலாளியத் தோற்றமும் பல்விதமாய் பெருகி மொழிகளின் அச்சு தொழில் நுட்பமும் ஒன்றிணைந்து புதிய “கற்பனை செய்யப்பட்ட சமூகத்தை” படைத்தன; இக்கற்பனைச் சமூகம் இன்றைய தேசத்தை உற்பவித்தது.

 

அடுத்த அத்தியாயம் “பழைய சாம்ராஜ்யங்கள், புதிய தேசங்கள்” என்பதாகும்.

 

மானுடவியலரான விக்டர் டர்னர், மக்கள் புனித இடங்களுக்குப் பயணம் செய்வதை அர்த்தம் உருவாக்கும் செயல்பாடு என்கிறார். பிறப்பிலிருந்து சாவுவரை மேற்கொள்ளும் பல்வித பயணங்களை மதங்கள் பல்வித கருத்தாக்கங்களாய் கட்டுகின்றன. கிறிஸ்தவஙர்களும், முஸ்லீம்களும், இந்துக்களும் ரோம், மெக்கா மற்றும் காசிக்குப் புனித பயணம் மேற்கொள்வார்கள். பழைய மதக் குழுக்களால் என்ன மாதிரி சமயப் பயணம் செய்யப்படுகிறதென்பதை வைத்து, தம் குழுவின் அமைப்பை  அறிவார்கள். இப்படித்தான் எங்கோ  உள்ளவர்கள் தத்தம் ஒருமை உணர்வை புனிதப் பயணத்தில் கட்டமைக்கிறார்கள். நாம் முஸ்லீம்கள், கிறிஸ்தவர் கள் என்ற அடையாளம் உருவாக்கப்படுகிறது. இதில் கலந்து கொள்பவர்கள் படிப்பறிவில்லாத மக்கள் மொழியாளர்கள், அச்சு வருவதற்கு முன்புள்ள சமூகங்கள் இப்படிப்பட்ட பல பயணங்களால் தம் சமூகத்தைக் கற்பனை செய்கிறார்கள். இப்படிக் கட்டப்பட்ட சமூகங்கள் தம்முள்ளே முழுமையான ஒரு அதிகாரத்தை எற்படுத்தி, அதன்மூலம் பழைய நிலபிரபுத்துவ மதச்சமூகத்தின் மையம் அழிக்கப்பட்ட சமூகத்தை கட்டுப்பாட்டுக்குள் கொணர்கிறார்கள். இப்படிப் பட்ட பயணங்களில் தன்னுடன் பயணம் செய்பவனோடு மட்டுமே தொடர்பும் உறவும் உருவாகிறது. இங்குத்தான் முழுமை என்னும் கருத்து உருவாகி  பயணியை ஆறுதல்  தந்த வலிமையுள்ளவனாக்குகிறது. கற்பனையில் முக்கியமான அம்சம் இது.  இப்படிக் கற்பனை செய்து முழுமையை மனிதன் கட்டமைப்பதுதான் தேசக் கற்பனைக்கான முதல் தேவை. இங்க மக்கள் மொழிகள் (vernaculars) முக்கியம்  ஆகின்றன. லத்தீன்அல்ல. அதாவது மொழியும் தேசமும் பின்னிப்பிணைந்திருப்பது இப்படித்தான். அதாவது பரஸ்பர தொடர்புறுத்தல், பரிமாற்றம் மூலமாக ஒரு புது பிரக்ஞை உருவாகிறது.

 

ஐரோப்பாவிலிருந்து தென்அமெரிக்காவில் காலனி ஆதிக்கம் புரிந்த பலர் ஒரு பொதுவான விதியால் (fatality) கட்டப்பட்டிருந்தனர்.  யார் யார் காலனிகளில் பிறந்தார்களோ அவர்கள் ‘கிரியோல்’ என்னும் ஒரு நிலையைப் பெற்றனர். இவர்கள் ஐரோப்பாவில் வாழும் இவர்களின் உறவினர்களைப் போல நிறம், மதம். மொழியுடையவர்கள். ஆனால், காலனிகளில் பிறந்துவிட்டதால் கிரியோல் என ஒரு புது விதிக்கு  உட்படுத்தப்பட்டனர்  என்கிறார் ஆண்டர்சன். ஆரம்பத்தில் கோவாவில் போர்த்துக்கீசியர்கள் மத்தியில் சமயப்பணி ஆற்றிய போர்த்துக்கீஸில் இருந்து வந்த பிரான்ஸிஸ்கன் பாதிரிகள்,  இந்தியாவில் பிறந்த  போர்த்துக்கீசியர் கள் தங்களைப் போல பாதிரிகள் ஆகக்கூடாது எனக் கூறினர். அதாவது அந்தந்த காலனி நாடுகளில் பிறந்தவர்களுக்கு இப்படிப்பட்ட புதுநெருக்கடி ஏற்பட்டது.

 

ஐரோப்பாவில் பரவிய புத்தொளிக் கருத்துக்களும் ஐரோப்பியர்களையும்  கிரியோல்களான அந்தந்த நாடுகளில் பிறந்த ஐரோப்பியர்களையும் வேறுபடுத்தி யது. அதாவது பயணம் புனிதத்திலிருந்து மதநீக்கம் செய்யப்பட்டவுடன் ஐரோப்பா வில் இருப்பவன் உயர்ந்தவனாகவும் காலனிக்குச் சென்று அங்குக் குழந்தைகள் பிறந்தவுடன் அக்குழந்தைகள் வேறாகவும்  ஒரு தாரதம்மியம் நிலைநிறுத்தப்படு கிறது.

 

இதுபோல் அச்சு பரவியபோது, தென்அமெரிக்காவில் அரசர்களும் தேவாலயத்தர்களும் அதனைத் தம் கட்டப்பாட்டில் வைத்திருந்தனர். 17-ஆம் நூற்றாண்டின் இறுதிவரை அச்சு, தேவாலயங்களின் பிடியிலேயே இருந்தது. 18-ஆம் நூற்றாண்டில் திடீரென ஒரு புரட்சி ஏற்பட்டது. 1691-லிருந்து 1820-வரை 2120 செய்தித்தாள்கள் இங்குத் தோன்றின என்ற தகவலைத் தருகிறார் ஆண்டர்சன்.

 

வடஅமெரிக்காவில், பிராங்க்ளின் ரூஸ்வெல்ட். கிரியோல் என்ற ஐரோப்பா விலிருந்து வந்து குடியமர்ந்த குடும்பங்களோடு தன்னை இனங்காண்கிறார்கள். 18ஆம் நூற்றாண்டு வரை வடஅமெரிக்காவில் அச்சம் செய்தித்தாளும் வளரவில்லை. பின்பு அச்சும் செய்தித்தாளும் லாபமான தொழில் ஆயிற்று இங்கு. இவ்வாறு அச்சும் செய்தித்தாளும் இணைந்து சமூக ஒருங்கிணைவு ஏறற்பட்டது. இது ஒரு சமூக அறிவு ஜீவிதத்தை ஏற்படுத்தியது என்கிறார் ஆண்டர்சனன். அமெரிக்காவின் ஸ்பானிஷ் மொழியினரிடம் 18-ஆம் நூற்றாண்டின் மத்திக்குப் பிறகுதான் பிராந்திய அச்சகங்கள் தோன்றின.

 

வட, மற்றும் தென்அமெரிக்காவில் சந்தையின் தொங்குச்சதையாகவே செய்திதாள்கள் தோன்றின. ஆரம்பகாலச் செய்தித்தாள்களில் எப்போது கப்பல்கள்  வரும் மற்றும் புறப்படும் என்றும் பெரிய குடும்பங்களின் திருமணம், காலனிய அதிகாரிகள் பணியமர்த்தல் போன்றவைகள் செய்திகளாக வந்தன. இவ்வாறு விலைவாசியும் கப்பல்களும், பிஷப்புகளும், மணப்பெண்களும் சமூகக் கற்பனையை ஏற்படுத்தின கருவிகளாகும் என்று கூறுகிறார் ஆண்டர்சன்.

எப்போதும் அந்தப் பிராந்தியத் தன்மையும் அர்ஜென்டினாவின் பியுனஸ் அய்ராஸும் மெக்ஸிகோ நகரமும் ஒன்றுதான் என்ற இடம் தாண்டிய வாசகர்களுக்கான பன்முகத்தன்மையையும் இந்தச் செய்தித்தாள்கள் ஊக்கப்படுத்தி முன்வைத்தன.

 

இந்த மாதிரியாக, உலக சம்பவங்கள்அந்தந்த பிராந்தியத்துக்குத் தக மாறிய சாயலுடன் வாசகர்களுக்குக் கிடைத்தன. இது ஒரு இரட்டைத் தன்மையை மக்களிடம் ஏற்படுத்தியது. இவ்வாறு முதலாளியமும் தொழில்நுட்பமும்  ஸ்பானிஷ் கலாச்சாரம் இருந்த அமெரிக்காவில் பரவியது. இதுபோல் ஒவ்வொரு நாட்டுச் சூழலுக்கேற்ப, தேசியம் அதன் குறிப்பிட்ட சமூக எதிர்ப்பார்ப்புகளுக்குத்தக தோன்றியது. இந்தியாவில் ஆட்சியியலும், சந்தையும் ஒருங்கமைவு பெறும் முறையில் தேசியம் தோன்றியது.

 

மொத்தத்தில் பிராந்தியங்களில் வந்து நிலைத்த ஐரோப்பிய குடிகளின் மூலம் உருவான அச்சும், அதுபோல் புனித பயணங்களின் மாதிரிகளும், ஒரு புதிய மனநிலையைக் கற்பனை செய்தன என்று ஒரு முடிவுக்கு வருகிறார் ஆண்டர்சன்.

 

இதற்கடுத்த அத்தியாத்தில் (பழைய மொழிகள், புதிய மாதிரிகள்) முந்திய அத்தியாயத்தின் கருத்தாக்கங்களைளத் தொடர்கிறார் இவர். தென்அமெரிக்காவில் தேசவிடுதலைப் போராட்டங்கள் ஓய்வதும் தேசியம் ஐரோப்பிய நாடுகளில் தோன்றுவதும் ஒரே காலத்தில்தான். ஐரோப்பாவின் இந்தப் புதிய தேசியவாதங் களில் இரண்டு அம்சங்கள் கவனிக்கப்படத்தக்கன. இங்கு முதலில், அச்சு உருவாக்கம் பெற்ற மொழிகள் ஒரு சித்தாங்க சூழலை  உருவாக்கின. ஆனால் ஸ்பானிஷ் மொழியும் ஆங்கிலமும் தென்அமெரிக்காவில் அப்படி உருவாக வில்லை. இரண்டாவது. இந்த எல்லாப் புதிய தேசங்களும் – பிரஞ்சு புரட்சி நடந்த பின்பு, ஒரு முன்மாதிரியை வைத்தே நடந்தன. இவ்வாறு ஓரிடத்தில் இருந்து கொள்ளையிடப்பட்டதாகவே (primary) இந்த தேசங்கள் அமைந்தன. அவைகள் ஏற்கனவே இருந்ததாய் பார்க்கப்பட்டனவே ஒழிய மெதுமெதுவாக உருவானவையாய் நினைக்கப்படவில்லை. தேசம் திடீரென எதிர்பார்க்காத கைகளில் இருந்தது. எனவே, இந்த அத்தியாயம் அச்சு – மொழிகள் பற்றியும் கொள்ளையிடல் பற்றியும் அலசமுயலுகிறது என்கிறார் ஆண்டர்சன்.

 

ஜோன் ஹாட்பிரிட், வான் ஹெர்டர் போன்ற (1744 – 1803) சிந்தனையாளர்கள் தேசியத்துவம் என்பது மொழி ஒரு தனிச்சொத்து என்ற சிந்தனையுடன் பிணைந்தத என்றனர். இந்தக் கருத்து ஒருவேளை 14-ஆம் நூற்றாண்டிலிருந்து புதிய உலகப்பகுதிகள் கண்டுபிடித்ததுடன் ஐரோப்பா சுருக்க ஆரம்பித்ததுடன் தொடர்புடையது என்கிறார் ஆண்டர்சன்.

 

மனிதாபிமானம் என்பது முக்கியமான விசயமாய் இக்கட்டத்தில் வருகிறது. அய்ர்பாக் சொல்வதுபோல் மனிதாபிமானத்தோடு பழமை சேர்ந்து கொள்கிறது. மனித முதன்மைக்கும் பழமைக்கும் தொடர்புண்டு. அய்ர்பாக் பைபிள் கதைகளுக்கும் செவ்வியல் வரலாற்றுக்கும் தொடர்பை மனிதாபிமானம், நிலைநாட்டியதைக் குறிப்பிடுகிறார். இங்குக்காலம் நீட்சிப்படுத்தப்படுகிறது. பழைமையும் நவீனத்துவமும் எதிரெதிர் ஆகின்றன.

 

16-ஆம் நூற்றாண்டு வாக்கில் ஐரோப்பாவானது சீனா, ஜப்பான், தென் கிழக்காசியா, இந்திய துணைக்கண்டம், மெக்ஸிகோ, பெரு போன்ற புதிய பூமிப் பகுதிகளையும் அவற்றின் நாகரிகங்களையும் கண்டுபிடிக்கிறது. இதுவொரு மனிதப் பன்மையை ஐரோப்பிய மனங்களுக்குள் கொண்டு வருகிறது. இந்தப் புதிய பூமிப் பகுதிகள் ஐரோப்பிய நாகரிகத்தின் தொடர்பின்றியே உருவானவைகள் ஆகும். ஏதேன் தோட்டத்துக்கு வெளியிலிருந்து மனிதன் தோன்றுகிறான். எனவே, ஒருமைப்பட்ட ஒரு காலியாகிப்போன காலம் என்ற கருத்தாக்கத்தால் மட்டுமே புதிய மாற்றங்களைப் புரிந்துகொள்ள வேண்டியதாகிறது. ‘உட்டோபியா’ என்ற கருத்தாக்கம் மூர் (More) என்ற எழுத்தாளரால் இக்கட்டத்தில் உருவாக்கப் படுகிறது. ஐரோப்பியர்களான விக்கோ (vico), மாண்டேகு, வால்டேர், ரூஸோ போன்றவர்களால் ஐரோப்பா அல்லாததுதான் உண்மை என்பதான கருத்து ஐரோப்பாவின் முதுகில் சாட்டையாய் விழுந்தது.

 

கண்டுபிடிப்புகளும் ஆக்கிரமிப்புகளும் மொழி பற்றிய சிந்தனையைப் புரட்சி கரமாக்கியது. போர்த்துக்கீஸ், டச்சு மற்றும் ஸ்பானிஷ் கடல்பயணிகளும், வியாபாரிகளும் மதபோதகர்களும் புதிய பிரதேசங்களில் தம் கருத்தைச் சொல்லவும் பிழைப்பை நடத்தும் அந்தப் பிரதேச மொழிகளின் சொற்பட்டியலை முதலில் தொகுத்தனர். பின்பு இவை லெக்சிகன்களாயின. பின்பு 18-ஆம் நூற்றாண்டில் விஞ்ஞானரீதியான ஒப்பியல் மொழி ஆய்வு நடந்தது. ஆங்கிலேயர் வங்காளத்தை ஆக்கிரமித்ததுடன் வில்லியம் ஜோன்ஸ் சமஸ்கிருத்தத்தை ஆய்ந்ததையும் இணைக்க முடியும். இந்த ஆய்வால் இந்திய பண்பாடு கிரீஸ் மற்றும் யுதேயா நாகரிகங்களைவிட பழையது என்ற போதம் உலகமெங்கும் பரவியது. நெப்போலியன் எகிப்தைப் பிடிக்கச் சென்றபோது ஹைரோகிளிபிக்ஸ் என்ற புராதன எழுத்துக் கண்டுபிடிக்கப்பட்டது. அத்தோடு ஐரோப்பியர்களின் பழமை பற்றிய எண்ணத்தைப் பரவலாக்க வேண்டிய கட்டாயம் தோன்றியது. புதிய வம்சாவழிகள் தோன்றின.  அதற்குக் காலியான காலம் அல்லது உள்ளீடற்ற காலம் என்ற எண்ணம் முக்கியமான விசயமாகும் அல்லது வம்சாவளித் தொடர் உருவாக்க முடியாது. மொழிநூல் முக்கியமான படிப்பானது. அதனால் ஒப்பியல் இலக்கணமும், மொழிக்குடும்பங்களும் இப்போதைய மொழிகளின் மூதாதை மொழிகள் பற்றிய கருத்தாக்கமும் உருவாயின. ஏற்கனவே இருந்த ஆய்வுநெறிகளில் இந்தப் புதிய நெறிகள் வந்து சேர்ந்தன.

 

அச்சு பரவியதால், மக்கள் மொழிகள் எழுச்சி பெற்றதால், அச்சுமுதலாளியம் உருவானதை ஏற்கனவே பார்த்தோம். அகராதி வல்லுநர்கள், இலக்கணக்காரர்கள். மொழிநூல் வல்லுநர்கள் இலக்கியவாதிகள் ஆகியோர் ஒரு புதிய தொழில்சார்ந்து  உருவாயினர். இவர்களின் தொழிலோடு தேசியவாதம் தோன்றியது. இந்த வகையில் ஐரோப்பிய தேசியவாதம் தென்அமெரிக்க தேசியவாதத்திலிருந்து வேறுபட்டதாக விளங்கியது. மொழிகள் மத்தியில் மேல்கீழ் என்ற இல்லை என்பதை அக்காலத்தில் உருவான இருமொழி அகராதிகள் சுட்டின. இத்துடன் மொழிக்கல்வி பள்ளி, பல்கலைக்கழகங்கள் எல்லாம் தோன்றின. இக்கட்டத்தில் ஐரோப்பியர் மத்தியில் அவர்கள் கிரேக்கர்களின் பரம்பரையினர் என்ற பிரக்ஞை தோன்றியது.

 

ரஷ்ய இலக்கணமும்அகராதியும் தோன்றின. செக், ஹங்கேரி, பல்கேரியா, உக்ரைன், பின்லாந்து, நார்வே, ஆப்பிரிக்கா, துருக்கி போன்ற நாடுகளின் மொழிகள் சார்ந்து அகராதி, இலக்கணம் போன்றன தோன்றி அம்மக்களிடம் புதுவிழிப்புணர்வை வளர்த்தன.

 

இக்கட்டத்தில் பொருளாதார மாற்றம் ஏற்பட்டு ஒரு மத்தியதர வர்க்கம் ஐரோப்பாவில் தோன்றியது. அச்சுக்கு முன்புள்ள ஐரோப்பிய சமூகத்தின் பூர்ஷ்வாக்கள் அச்சு வந்த பின்பு மாறினார்கள். தொழிற்சாலைகள் தோன்றின. இந்த நிலை 19-ஆம் நூற்றாண்டில் முற்றிலுமாக மாறிவிட்டதால் இலத்தீன் மொழி முற்றிலும் தோற்கடிக்கப்பட்டது. மக்கள் மொழிகள் எல்லா இடத்திலும் பரவிற்று. தொழில் வல்லுநர்களும் சந்தையோடு தொடர்புடையவர்களும் இந்த மொழிநூல் புரட்சியின் சமூக பெறுபேறாகத் தோன்றினர். மீண்டும் இந்த இடத்திலும் ஆண்டர்சன். இவ்விஷயங்களில் தென்அமெரிக்க சூழலும், ஐரோப்பியச் சூழலும் வேறாக அமைந்ததைச் சுட்டத் தவறவில்லை.

 

இங்கு விஞ்ஞானம் வளர்ந்தபோது மக்கள்மொழிகள் விஞ்ஞானத்தைப் பேசின.  இலத்தீன் விஞ்ஞானத்திலிருந்து ஒதுக்கப்பட்டது என்கிறார் ஆண்டர்சன்.  இது கவனிக்கத்தக்க ஒரு கூற்றாகும். இதுபோல் மக்கள் மொழிகளான ஆங்கிலம், பிரஞ்சு போன்றன தம்மை இன்னும் தெளிவுள்ளவையாக்கி  தம் முந்தைய வடிவங்களிலிருந்து விடுபட்ட தம் அடையாளத்தையும் நிலைநிறுத்தின.

 

இன்னொரு முக்கிய நிகழ்வாகப் பல இடங்களில் அச்சு – முதலாளியம் பரவியவுடன் பொதுமக்கள் கூட்டத்தினர் வரலாற்றுக்குள் நுழைந்ததைக் கூறலாம். தேசியத்தை, மத்தியதரவர்க்கத்தினர் இந்த முறையில் பொதுமக்களிடம் கொண்டு வந்து சேர்ந்தனர்.

 

மொத்தத்தில் ‘மொழி தேசியங்கள்’ தோன்றியதைப் பிற நாடுகள் தங்கள் தங்கள் மக்களுக்குக் கொண்டுவந்து சேர்த்தன. இவற்றுக்கு மத்தியில் ஒரு ஒற்றுமை இருந்தது. ஆனால் ஆண்டர்சன், ஏற்கனவே, பார்த்தது போல, ஒரு ‘தேசிய மாதிரியை’ கொள்ளையடித்து அடுத்த நாட்டுக்குக் கொண்டுவந்தனர் என்கிறார். இதன் விளைவுகள் பல தரப்பட்டன. தென்அமெரிக்காவின் அடிமைகள் மறைய வேண்டியதாயிற்று; கல்வி பரவலாயிற்று; மக்களின் கருத்துக்கள் அரசியலில் முக்கியமாகி ஒருவகை வெகுசனத்துவம்  (பாபுலிசம்) தோன்றியது; வாசகர்களும் மக்கள் மொழி பேசுபவர்களும் இறையாண்மையைக் கொண்டு வந்தனர்.

 

அடுத்துவரும் “அதிகாரபூர்வமான தேசியமும் ஏகாதிபத்தியமும்” என்கிற அத்தியாயம் வம்சாவளி அரசுகளில் தோன்றிய தேசியஉணர்வை ஆரம்பகட்ட தேசியம் என்றழைக்கப்படுகிறது. அவை அரசுகளில் தோன்றுகின்றன. எனவே, அவற்றை ஆண்டர்சன் “அதிகாரபூர்வமான தேசியங்கள்” என்றழைக்கப்படுகிறார். வம்ச அரசுகளில் தேசிய உணர்வு ஏற்பட்டதற்கு ஒரு பின்னணி இருக்கிறது. அதாவது ஐரோப்பாவில் தேசிய இயக்கங்கள் 1920களில் தோன்றியதால் பிற வம்ச அரசுகளிலும் அவ்வுணர்வு பரவியது. இவ்வுணர்வு ரஷ்யா, உக்ரைன் பகுதிகளில் எப்படிப் பரவியது என்று விரிவாக, ஆண்டர்சன் விளக்குகிறார். 1813-இல் கிழக்கிந்தியக் கம்பெனி பற்றிய விபரங்கள் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் வந்தபோது பாராளுமன்றம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு இலட்சம் ரூபாயை இந்தியர்களின் கல்விக்குச் செலவிட வேண்டும் என்ற ஆணை பிறப்பித்தது. இந்தத் தொகை சுதேசிய ஓரியண்டல் கல்விக்கும், மேற்கத்திய கல்விக்கும் சேர்த்துச் செலவுக்கு ஒதுக்கப்பட்ட தொகையாகும். பின்பு 1823-இல் தாமஸ் பாபிங்டன் மெக்காலே 1813-இல் உருவான ‘பப்ளிக் இன்ஸ்ரக்ஷன்’ என்ற கமிட்டியின் தலைவரானவுடன் இந்திய இரத்தமும் ஆங்கில ரசனை உள்ள ஒரு கூட்டம் இளைஞர்களை உருவாக்க இக்கல்வியை பயன்படுத்த நினைத்தார். கல்வியால் கலாச்சாரமும் விக்கிரக வழிபாடும் பாதிப்புற்றன. அதாவது இந்தியாவில் ஒரு வகை ஆங்கிலமயமாக்கல் மூலமாகத் தேசிய உணர்வ ஏற்பட்டது என்பது ஆண்டர்சன் கருத்து. அதுபொல் ரஷ்ய மன்னர்கள் தங்கள் ஆட்சி எல்லைக்குள் உள்ளிருந்த மக்கள் பேசிய பிரஞ்சு மொழியை ரஷ்ய மொழியைப்  புகுத்தி ஒரு விதமான “ரஷ்யமயமாக்கினார்கள்” இதுதான் ரஷ்ய எல்லையிலிருந்து பல தேசியங்கள் அவர்கள் மொழிவழி தோன்றுவதற்குக் காரணமாயிற்று.

 

மேலும், இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேயர்களும் தென் அமெரிக்காவுக்குச் சென்ற ஸ்பானிஷ் ஜெர்மன் மொழி பேசிய சிரியோல்களைப் போலவே மாறினார்கள் என்பதையும் பிபின் சந்திரபால் என்ற ஆரம்பகால சிந்தனையாளரின் மேற்கோள் ஒன்றை அவருடைய (“என் வாழ்வும் நினைவுகளும்” என்ற நூலை அதிகாரமாக வைத்து)க் கூறுகிறார் ஆண்டர்சன். இது அதிகாரபூர்வ தேசியம் தோன்ற வசதியாயிற்று.

 

கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவிலிருந்து ஒதுங்குகையில்  ஜப்பானுக்குச் சென்று. அந்தச் சமூகம் மாற ஆரம்பித்ததையும் சமூக இயல்பாக அதிகாரபூர்வ தேசியம் தோன்றுவதையும் விளக்குகிறார் ஆண்டர்சன். அப்படி ஆங்கிலக் கம்பெனி ஆட்சிக்கு வரும்போது ஏற்பட்ட பல்வேறு சமூகமாற்றங்கள் விளக்கப்படு கின்றன. அங்கிருந்த ஜப்பானிய வம்ச அரசாட்சிகள் தேசிய உணர்வை இவ்வாறு வளர்க்கின்றன. இந்தப் போக்குகள் 1900-குப்பிறகு  மெக்காலே இந்தியாவில் நடக்க வேண்டுமென விரும்பியதுபோல்  ஒரு புதிய கலாச்சாரமாய் கொரியா, தைவான், பர்மா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் என்று பரவுகின்றது.

 

மொத்தத்தில் அதிகாரபூர்வ தேசியம் என்பதற்குள் தேசம் என்னும் கருத்தும் வம்ச அரசாட்சி என்ற கருத்தும் ஒன்றுக்குள் ஒன்று ஒட்டி உறவாடியபடி காட்சி தந்தன. இவ்வாறு தற்கால தேசியம் தோன்றுமுன்பு உலகம் முழுதும் எவ்வாறு இதன் முன்வடிவம் காட்சி தந்தது என்று ஆய்ந்து விளக்குகிறார் ஆண்டர்சன். ‘கடைசி அலை’ என்ற அடுத்த அத்தியாயத்தில் முதல் மகாயுத்தம் வம்ச அரசுகளை முடிவுக்குள் கொண்டு வந்ததை ஆண்டர்சன் கூறுகிறார். ஐ.நா.வுக்கு முந்திய வடிவமான “லீக்-அப்-நேஷன்ஸ்” என்ற அமைப்பில் ஐரோப்பியர் அல்லாத தேசங்களும் பங்கு வகித்தன. அதாவது தேச அரசுகள் வழமை ஆயின.  இரண்டாம் உலகப்போர் சமயத்தில் தேசஅரசுகள் அங்கீகாரம் பெற்றன. இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பிறகு தோன்றிய தேச அரசுகள் அமெரிக்காவையும் ஐரோப்பா வையும் ஒவ்வொரு விசயத்தில் முன்மாதிரிகளாகக் எடுத்துக்கொண்டன. புதிய அரசுகள் பொதுசன ஊடகம், கல்வி, மற்றும் ஆட்சியதிகார வடிவமைப்பின் மூலம் தத்தம் தேசிய கருத்துருவத்தை ஏற்படுத்தின. இரண்டுமொழி பேசும் படிப்பாளிகள் ஒற்றை மொழிக்கல்வியினரைவிட அதிக மதிப்பு பெற்றனர். புனித பயணங்களில் இரட்டைமொழியாளர்கள் எதிர்ப்பட்டனர். அவர்களுக்கும் ஒரு சமூக உணர்வு எற்பட்டது. காலனிய சமூகங்கள் தேசிய சமூகங்களாயின.

 

ரயில்வே, கப்பல்கள் முதலியன தோன்றின. இதனால் மக்கள் மத்தியில் சலனம் ஏற்பட்டது. பயணங்கள் ஒருவித தேவைகளில் மாறின. மொழி, காலனிய எஜமானர்களையும் உள்ளுரினரையும் இணைத்தது. பல அலுவலர்கள் புதிதாய்  தோன்றினர். பள்ளியாசிரியர்,  நீர்ப்பாசன பொறியாளளர், போலீஸ் துறையினர், மருத்து அதிகாரி முதலியோர் தோன்றினர். இத்தகைய படித்த வர்க்கத்தோடு தேசியம் பலமாய் தோன்றியது. கல்வி பரவியதால் தேசிய வாணர்கள், பள்ளிகளில் இருந்து தோன்றினர். மரபான பள்ளிக்கூடங்களைவிட காலனியப் பள்ளிக் கூடங்கள் புதிய அறிவைத் தந்தன. புதிய பள்ளிகள் பல்வேறு பிராந்திய மக்களை ஒருங்கிணைத்தன. புதிய எதார்த்தம் ஒன்று கற்பனை செய்யப்பட்டது. பள்ளிகளில் இருந்து  படித்து வீட்டுக்குப் போனவர்கள் பின்னர் தேசியவாதத் தலைவர்கள் ஆனார்கள். அச்சுருவாகிய மொழியிலிருந்து தேசியத்தைப் பிரிக்கமுடியாததுபோல அரசியலிலிருந்தும் தேசியத்தைப் பிரித்து மாற்றமுடியவில்லை.

தேசியவாதத்தின் கடைசி அலை ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் ஏகாதி பத்தியத்திற்கான எதிர்வினையாகவே இருந்தன. மார்க்ஸ் தனது ‘கம்யுனிஸ்டு அறிக்கையில்’ கூறியதுபோல் முதலாளியம் பூர்ஷ்வாக்களை உலகம் எங்கும் பரவ வைத்தது. மக்கள் மொழிகளில் தேசியம் தோன்றியது. கல்விக்கூடங்களில் தேசியம் உருவானது போலவே புதிய கற்பனைச் செய்யப்பட்ட சமூகமும் உருவானது. அமெரிக்க, மற்றும் ஐரோப்பாவின் ஒரு நூற்றாண்டுக்கு முன்னைய வரலாறு எப்போதும் ஒரு முன்மாதிரியை இந்தப் பள்ளிக்கூடங்கள் மூலம் பரப்பியது.

 

அடுத்து வருவது ‘நாட்டுப்பற்றும் இனவாதமும்’ என்னும் அத்தியாயம் முந்திய அத்தியாயங்களில் எப்படித் தேசங்கள் கற்பனை செய்யப்பட்டன என்றும் பின்பு அவை முன்மாதிரிகளைக் கொண்டு உருவானதும் அவை தம்மைச் சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொடுத்ததையும் கண்டோம். இந்த வகை ஆய்வு எப்படிச் சமூகங்கள் மாறின என்பதையும் பிரக்ஞைகள் மாறின என்பதையும் விளக்கிக் கூறின.  அதனால் சமூகக் கற்பனைமுறைக்கும் புதிய கண்டுபிடிப்பான தேசிய உணர்வுக்குமுள்ள தொடர்புகள் சிந்திக்கப்பட்டன. இங்குக் கேட்கப்பட வேண்டிய முக்கியமான கேள்வி, இப்படிப்பட்ட கண்டுபிடிப்பான தேசிய உணர்வுக்காக ஏன் மக்கள் சாகவும் தயாரானார்கள் என்பதுதான்.

 

முற்போக்கான சிந்தனையாளர்களாலும் அனைத்துலக கோணத்தில் சிந்திக்கும் காஸ்மாபாலிட்டன் புத்திஜீவிகளாலும் மனப்பிறழ்வு ஏற்படுத்துமளவு போகும் தேசியவாதம் சிலாகிக்கப்பட்டது. தேசியவாதத்தின் பயப்பிராந்தியம் இன வாதத் தொடர்பும் மற்றவர்கள் மீதான வெறுப்பும் பேசப்பட்டன. இங்குத் தேசங்கள் மனிதர்களிடம் அன்பைத் தோற்றுவிப்பதையும் – அதுவும் தியாகங்களுக்குத் தயாரான அன்பைப் போதிப்பதையும் அறியமுடியும். தேசியவாதத்தின் பெறுபேறுகளான, கவிதை, கற்பனை, உரைநடை, இசை, சிற்பம் போன்றன இந்தக் காதலை ஆயிரக்கணக்கான முறைகளில் வெளிப்படுத்த முடியும். ஆனால் தேசியவாத்தின் கலைவெளிப்பாடுகளில் பயமும் வெறுப்பும் அரிதாகவே காணப்படுகின்றன என்கிறார் ஆண்டர்சன். அதுபோல் அடிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் காலனி எஜமானர்களை அவதூறு சொல்லி சித்தரிக்கும் சுதேசி படைப்புக்கள் இல்லை என்றே சொல்லலாம் என்பது ஆண்டர்சன் கருத்து.

 

இயற்கை என்பது தேசிய உணர்வில் நம்மால் தேர்ந்து எடுக்கப்படாத  ஒரு தன்மையாக உள்ளது; அதாவது ஏற்கனவே இருக்கும் தன்மை தேசஉணர்வில் உள்ளது. தேசத்தன்மை என்பது தோலின் நிறம், பாலினம், தாய்-தந்தை உறவு, பிறப்பு, காலகட்டம் என்ற பலதோடும் தொடர்புடையதுதான். இந்த உறவுகள் எப்போதும் ஈடுபாடில்லாத உறவாகவே (disinterested) எஞ்சுகிறது. அதாவது இயற்கையாக நம்மைத் தாண்டி இருப்பதாகக் கருதப்படுகிறது. இவ்வாறு ஏற்கனவே, இருந்துவரும் ஒன்று தியாகங்களைச் செய்யத் தூண்டுவது புரிந்து கொள்ளக்கூடியதுதான். இங்குத்தான் ஆண்டர்சன் கூறும் விதிவாதம் முக்கியம் ஆகிறது.  தேசிய உணர்வில் தவிர்க்கமுடியாமை – அதாவது விதிவாதம்  – செயல்படுகிறது. எனவே, சாவுகள் தவிர்க்கவியலாதவை ஆகின்றன. யாரும் மருத்துவச் சங்கத்துக்காகவோ, அம்னெஷ்டி இன்டர்நாஷனலுக்காகவோ சாக முன்வரமாட்டார்கள். புரட்சிகளுக்காகவும் மார்க்சிய நிலைபாடான தொழிலாளர் ஒற்றுமைக்காகச் சாகிறார்கள். ஏனெனில் அவற்றிலும் ஒரு தூயதன்மையை காண்கிறார்கள். தொழிலாளர்கள் கூலி அதிகம் கேட்டு குளிர்சாதனப்பெட்டி வாங்கப்போவதை நினைத்தால் சாகமுன்வருவார்களா என்று ஆண்டர்சன் கேட்கிறார். மார்க்சியம் கூறும் வரலாறு பற்றிய விளக்கத்தில் தூய்மைவாதமும், ஏற்கனவே நம் தேர்விற்கு உட்படாமல் எல்லாம் இருக்கின்றன என்ற தத்துவமும் இருக்கவே செய்கின்றன.

 

இங்கு மீண்டும் நாம் மொழி பற்றிய சிந்தனைக்குத் திரும்ப வேண்டும் என்கிற ஆண்டர்சன் நவீனமான மொழிகளும்கூட ஒரு ஆதிப்படிவத் தன்மை கொண்டவைகளே என்கிறார். இந்த ஆண்டு பிறந்தது என்று எந்த மொழிக்கும் பிறந்த தேதி கூறமுடியாது. ஒவ்வொன்றும் ஒரு இருண்ட பழங்காலத்தோடு தொடர்புடையவை தாம். மனிதர்கள் சாவை மொழியோடுதான் பொருத்திப் பேச முடியும் என்கிற ஆண்டர்சன் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலத்தில் பேசியவர்கள் ஓர் உடனடித்தன்மையையும் ஒருமைப் பண்பையும் உள்ளீடற்ற காலத்தையும் அடைந்தார்கள் என்கிறார். இவை அவர்களின் மூதாதையர்களின் ஆங்கிலத்துவத்திலிருந்து வந்தது எனலாம்.

 

கவிதைகளிலும் பாடல்களிலும் ஒரு சிறப்புப் பண்புகொண்ட தற்காலத் தன்மை காணப்படும்.  தேசியகீதங்களில் இந்தத் தன்மை உள்ளது.  எவ்வளவு  மோசமான வார்த்தைகள் இருந்தாலும் அப்பாடல் ஒரு ஆற்றலைபப் பெற்று விடுகிறது – அதாவது அதற்கு ஒரு  தற்காலத் தன்மை கிடைத்துவிடுகிறது. மாறி மாறித் தெரியாதவர்கள் ஒரு ராகத்துக்கு உட்பட்டுப் பாடுகையில் ஒரு ஒற்றைக் குரல் உருவாகிறது. இதுதான் கற்பனை செய்யப்பட்ட சமூகத்தின் பௌதீகக் குரல். இந்த ஒற்றைக்குரல் தன்னமற்றது. கற்பனைச் செய்யப்பட்ட ராகம் இது – குரல் இது.

 

இன்னொரு விசயம், தேசம் ஒரே நேரத்தில் திறந்ததும் மூடியதுமாகும்.  இது ஓர் முரண். ஜான்மூர் என்ற ஆங்கிலக் கவிஞரின் பாடலொன்றை ஆண்டர்சன் உதாரணம் காட்டி இந்த முரண்பண்பு கவிதையின் லயத்தில் இருப்பதை விளக்கு கிறார். கவிதையும் மொழியும் இணைந்திருப்பதைக்  கூறுகிறார்.

 

ஒவ்வொரு மொழிக்கும்  ஒரு அந்தரங்கம் உண்டு. அதனால்தான் அமெரிக்கா  வியட்நாமிலிருந்து எல்லாவற்றையும் அபகரித்தாலும் அவர்களின் மொழியை  ஒன்றும் செய்யமுடியவில்லை என்கிறார் ஆண்டர்சன்.

 

தேசிய வாதத்திலிருந்து இனத்துவேசமும் பாசிசமும் உருவாவதைச் சில சிந்தனையாளர்கள் கூறுவதை ஆண்டர்சன் மறுக்கிறார். வர்க்கக்கருத்துருவங் களில்தான் இனத்துவேசம் உள்ளது என்கிறார் ஆண்டர்சன். தேசியவாதம் வரலாறு சார்ந்த மாற்றமுறாத இறுதிவிதிகளை முன்வைக்கிறது. இனவாதமென்ற  ‘ரேசிய லிசம்’ எப்போதுமுள்ள தூஷணைகளில் நம்பிக்கை வைக்கிறது.  இனத்து வேஷமும் ஸெமிட்டிசவெறுப்பும் தேசஎல்லைகளுக்கு மத்தியில் செயல்படுவ தில்லை. தேசங்களுக்கு உள்ளேதான் செயல்படுகின்றன.

 

இவ்வாறு தேசியத்தைக் கட்டமைப்பதில் பங்கு வகிக்கிற முக்கியமான எல்லா உறுப்புக்களும் தமக்குள் உள்ள இணைவை ஒரு கற்பனை மூலமே செய்  கின்றன. தேசிய காதலனுக்கு முக்கியமான கண்போல் செயல்படுவது மொழி யாகும்.  இந்த மொழி, கற்பனையை உற்பத்திசெய்து பிற எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துத் தேசிய வடிவமைப்பு மனதில் உருவகம் – அதாவது கற்பனை செய்யப்பட – உதவுகிறது. இப்படித்தான் ஒரு மொழி பேசப்படக்கூடியவர்கள் மத்தியில்  சகோதரத்துவம் ஏற்படுகிறது.

 

அடுத்த அத்தியாயம் ‘வரலாற்றின் தேவதை’ என்பதாகும். ஆண்டர்சன் இந்த நூலின் ஆய்வை எப்படித் தொடங்கினார் என்று இந்த அத்தியாயத்தில் நினைவு படுத்துகிறார். அதாவது சோசலிச அரசுகளுக்குள் ஏன் யுத்தங்கள் வருகின்றன என்ற கேள்வியை முன்வைத்து அவைகள் அதிகமும் தேசியத்தை வலியுறுத்துகின்ற காரணத்தால் தத்தம் நாடுகளுக்கிடையில் உள்ள உறவு சீர்குலைகிறதா?  என்று  யோசித்தார். டாம் நய்ரன் என்ற சோசலிச சிந்தனையாளர் கூறும் ஒரு நாட்டின் சோசலித்தை  இன்னொரு நாடு காப்பி அடிக்க முடியாதென்கிற சிந்தனையையும்  ஆண்டர்சன் இங்குக் கவனப்படுத்துகிறார். அதாவது ஒரு நாடுபோல் – அவை சோசலிசச நாடுகளானாலும் இன்னொரு நாடு, தனது தொழில்நுட்பம், பொருளாதாரம் போன்றவற்றில் அமையமுடியாது.  ஏனெனில் அந்தக்கட்டத்திற்கு வருவதற்கு முன்பு ஒன்றுபோல் மற்றொன்று இருக்கவில்லை. இன்று யுத்தம் செய்கிற இரு சோசலிச நாடுகள் இரண்டு விஷயங்களைக் கொண்ட அமைப்பு: ஒன்று புரட்சி,  இன்னொன்று தேசியம். கற்பனை செய்யப்பட்ட தன்மை பற்றிக் கூறும்போது முதலாளியமும்  கற்பனை; மார்க்சியமும் கற்பனை. அதுபோல்  புரட்சி மற்றும்  தேசியவாதமும் கற்பனை என்பதை  ஆண்டர்சன் கருத்து; அதாவது இவைகள் கருத்துகளால் வனையப்பட்டவை.

 

ஹாப்ஸ்பாம் என்னும் வரலாற்று அறிஞர் கூறுவதுபோல் பிரஞ்சு புரட்சிப் பின்னால் அதைக் கொண்டுவந்த எந்த இயக்கமும் இல்லை. அச்சு – முதலாளியம், பிரஞ்சு புரட்சியை மக்கள் மனதில் அழிக்க முடியாததாக்கியது. அது புரிந்து கொள்ளத்தக்க வடிவத்தில் இருந்ததை அச்சு – ஊடகம் பரப்பியது. ஒரு நூற்றாண்டுக்கு அப்புறம் போஸ்ஷ்விக் புரட்சி தோன்றியது. இந்தப் புரட்சி தீர்மானமான ஒரு முன்மாதிரியாகப் பல சமூகங்களுக்கு அமைந்தது. ரஷ்ய சமூகத்தை விட பின்தங்கிய சமூகங்கள் அதைப் பின்பற்ற முன்வந்தன. ஐரோப்பாவிற்கு வெளியிலும் ரஷ்ய மாதிரியை முயன்று பார்க்கலாம் என்று விளக்கியவர் மாசேதுங் அவர்கள்.

 

18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தேசியவாதம் பல்வகைப்பட்ட மாற்றங்களுக்கும் பின்பற்றலுக்கும் ஆளாயிற்று என்பதை மறக்கக்கூடாது. பல்வகை காலங்கள், சூழல்கள், அரசாட்சிகள், பொருளாதார, சமூக வடிவமைப்புகளுக்குத் தக்கவிதமாகத் தேசியவாதம் மாற்றமுற்றது. கற்பனை செய்யப்பட்ட சமூகம் இச்சூழலில் தற்கால சமூகம் பலவற்றிற்கும் பரவிற்று. தற்கால கம்போடியா ஒருவகை என்றால் வியட்நாம் இன்னொரு வகை தேசியவாதத்தை ஏற்றுக்கொண்டது. இந்த இரண்டு நாடுகளிலும் தேசியவாதம் செயல்படும்விதம் தேசியவாத கற்பனையின் ஆற்றலை வெளிப்படுத்துவதாக உள்ளது.

 

நாளின் இறுதியில் ஆண்டர்சன் கூறுவது முக்கியமானது. சைனாவும் வியட்நாமும் கம்போடியாவும் மார்க்சியத்திலிருந்து தோன்றிய மூன்றுவகை நாடுகள். அவற்றின் வேறுபாடுகள் மார்க்சியம் கூறும் தேசியவாதத்தை விளக்கு கின்றன. அதாவது மார்க்சியர்கள் கூறுவதுபோல் அமைவதில்லை. அவர்களில் சிலர் ‘மார்க்சியம் தேசியவாதமில்லை’ என்கின்றனர். வேறுசிலர் ‘தேசியவாதம் நவீன வரலாற்று பொருள்வளர்ச்சியிலிருந்து உருவான ஒருவகை பித்தம்’ என்கின்றனர். ஆனால், வால்டர் பெஞ்சமின் கூறுவது கவனிக்கத்தக்கது. அவர் இப்படிக் கூறுகிறார்.

 

“வரலாறு என்னும் தேவதையின் முகம் பழமையை நோக்கியபடியுள்ளது. அது ஒரு சிதைவை இன்னொரு சிதைவின் மீதுஅடுக்கி தன் கால்களுக்கு முன் கொண்டுவந்து குவிக்கிறது. அது உடைந்தவைகளை முழுமையாக்குகிறது. இறந்ததை உயிர்ப்பிக்கிறது. ஆனால், தேவதை இருக்கும் சொர்கத்தில் ஒரு புயல் கிளம்பும்போது தேவதையின் இறகுகள் மாட்டிக் கொள்கின்றன. புயல் எதிர் காலத்தை நோக்கித் தள்ளுகிறது. அப்போது எதிர்காலத்தினை நோக்கித் தேவதையின் புறமுதுகு இருக்கிறது. சிதைந்து கிடந்தவை அப்போது வானில் எழும்புகின்றன. இந்தப் புயல் தான் நம்மால் வளர்ச்சி என்று அழைக்கப்படுகிறது”.

 

இதுதான் பெஞ்சமின் கூற்று.

 

  1. தமிழ்ச்சூழலை வைத்து:

இதுவரை பார்த்த நூலின் எல்லா அத்தியாயங்களும் தேசியங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் எவ்வாறு தோன்றின என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன.

 

இதிலிருந்து ஒப்பீடாகப் பார்க்கும்போது தமிழ்த்தேசியச் சிந்தனை தென்கிழக்காசியாவில் தோன்றியதை நினைக்காமல் இருக்கமுடியாது. பேரளவில் ஆண்டர்சன் கூறிய எல்லாச் சிந்தனைகளும் தமிழ் அடையாளம் அன்றிலிருந்து தோன்றியதோடு இணைக்கப்படமுடியும்.

 

தமிழடையாளத்தைத் தமிழகம், ஐரோப்பாவும் தென்அமெரிக்காவும் தத்தம் மொழியடையாளங்களைப் பெற்ற அதே காலத்தில் அதே சூழலில் பெற்றுள்ளது கவனிப்பதற்குரியது.

 

தமிழகம் என்று சொல்வது ஒரு வசதிக்காகத்தான். தமிழ்ப் பேசப்படக்கூடிய தென்கிழக்காசியப் பகுதிகள் எங்கும்க இந்தத் தன்மையிருந்தது. தமிழகமும் ஈழமும் முக்கியமான பூகோளப் பிரதேசங்கள். மலேசியா, சிங்கப்பூர் பகுதிகள் இந்தத் தமிழக, ஈழ மாதிரியில் அமைந்ததாகக் கொள்ளலாம்.

 

தமிழ்மொழியில்தான் தென்கிழக்காசியாவில் முதன்முதலாக அச்சு தோன்றுகிறது. பிலிப்பைன்ஸ் போன்றும் மற்றும் சில நாடுகள் போன்றும் அச்சும் – உரைநடையும் மிஷனரிகளால் தமிழுக்குக் கொண்டுவரப்படுகின்றன. இது புனிதசேவியரின் கட்டளையால் தமிழில் முதல் நவீன இலக்கணத்தை எழுதிய அன்ரிக்கஸ் என்ற பாதிரியாரால் தொடங்கப்படுகிறது. இந்த நவீன மாதிரி இலக்கணம் லத்தீன் மொழியில் அமைந்து அகில உலக தேசிய மாதிரியில் தமிழ்த் தேசியம்  கால்கோள் இடப்பட உதவுகிறது. இன்றைய இந்தியாவின் (அதாவது இது 1947-ற்கு பிறகு உருவானது) எந்த வேறு மொழிக்கோ, இந்தி மொழிக்கோ பொருந்தாத விளக்கம் இது. எனவே, உலகின் வேறு பல மொழியடையாளங்கள் போல் தமிழத்தேசியம் தன்னை ஒரு நாடாக உருவமைக்காத காரணங்களையும் சேர்த்தே சிந்திக்க வேண்டும்.

 

அன்ரிக்கஸுக்குப்பின் இந்தத் தமிழ்த்தேசியத்துக்கு ஒரு தொடர்ந்த வடிவம் கொடுத்தவர்கான்ஸ்டன்டைன் சோசப் பெஸ்கி என்ற வீரமாமுனிவர். இவருடைய அகராதிகள் தமிழை உலகமொழிகளோடு இணைக்கும் ஆச்சரியகரான காரியத்தை 18-ஆம் நூற்றாண்டில் செய்கின்றன. பிரஞ்சு-தமிழ் இலணக்கம், தமிழ் – இத்தாலிய இலக்கணம் என்று ஒரு அகில உலகத்தைத் தென்தமிழகத்தின் கடற்கரையோரம் உருவாக்கினார் இந்த பாதிரி. அகராதிகள் இரண்டு மொழிகளின் மக்களை ஒரே தரப்படுத்துகின்றன என்கிறார் ஆண்டர்சன். இவ்வாறு தமிழ்த்தேசியம் ஒரு அனைத்துலக அஸ்திவாரத்தில் 18-ஆம் நூற்றாண்டில் பலமாக நிலைப்படுத்து கிறது. இந்த அகராதிகள் இன்னும் விரிவாக்கப்படுகின்றன பின்னர். இன்று பயனற்றவை என்று தமிழர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள இத்தகைய அகராதிகள் தமிழடையாளத்தைப் பிற அகில உலக ஐரோப்பிய மொழிகளின் தோளோடு தோளாக நிற்கவைத்துக் கட்டப்பட்ட காரியம் இன்று தமிழின் நிலையை நினைத்துப் பார்த்து எல்லோரையும் வெட்கப்பட வைக்கிறது. தமிழின் தேசிய அடையாளம் இருவழிகளில் கட்டப்பட்டவை. ஒன்று, தமிழின் – மொழி, இலக்கியம், இலக்கணம் என்றும் அரச வரலாறு என்றும் கட்டப்பட்டது. இன்னொன்று, அனைத்துலக தேசியங்களின் உருவமைப்போடு இணைக்கப் படுமாறு கட்டப்பட்டது.  ஒன்று உள்ளிருந்து வெளியே வரும் அசைவுப்பாதை யிலும் உருவாகின்றன. முதலாமதை ஆங்கிலத்தில் ‘வெர்டிக்கல்’ என்றும் இரண்டாமதை ‘ஹாரிஸான்டல்’ என்றும் கூறலாம். எவை இரண்டாவது கட்டமைப்பு இலத்தீனிலிருந்த வெளியே வந்து சுயஅடையாளத்தை நிலைநிறுத்திய பிரஞ்சு, ஜெர்மன், இத்தாலியன் மொழி உறவாய் கட்டப்படுகிறது என்பது தமிழின் அகில உலகக் குணத்தை வலியுறுத்துகிறது. இதுபற்றி அவ்வளவு தெளிவற்ற தி.அண்ணாதுரைதான் 1950-வாக்கில் ஒரு தமிழரசியலை வடிவப்படுத்த கனவு கண்டார். அவருடைய மக்கள்கூட்டத்தைக் கவரும் சக்திக்குள் அவருடைய திறமையைவிட தமிழடையாளத்தைக் கனவாய் கொண்ட ஒரு மக்கள்திரள் காலங் காலமாய் இருந்தது என்பதுதான் உண்மை. ஆனால், சென்னையில் கூட்டிய இரண்டாம் தமிழ்மாநாட்டில் வீரமாமுனிவருக்குத் திறக்கப்பட்ட சிலை அண்ணா அவர்கள் 18-ஆம் நூற்றாண்டின் உள்வரலாறாய் தொடர்ந்த தமிழ்த்தேசியத்தை இனங்கண்டதைத் தான் காட்டுகிறது. வீரமாமுனிவர் அன்று தமிழகம் சின்னா பின்னப்படுத்தப்பட்டு நாயக்கர்கள், சந்தாசாகிபு மற்றும் கடற்கரைகளில் வெளி நாட்டு ஆதிக்கம் என்று பின்னப்படுத்தப்பட்ட தமிழ்த்தேசிய ஒருங்குணர்வின் அடையாளமாய் திகழ்ந்திருக்கிறார் என்று இன்று பின்னோக்கிப் பார்த்துக் கூற முடியும்.

 

ஆண்டர்சன் பலநாட்டு முதல் நாவல்களைத் தேசிய இனஅடையாளத்தோடு சேர்த்துச் சிந்திக்கிறார். வேதநாயகம் பிள்ளையின் முதல் நாவலில் வெள்ளைக்காரர் கள் கொண்டுவந்த நீதித்துறை பற்றிய சிலாகிப்பு மிக முக்கியமான ஒரு குறிப்பு ஆகும். மக்கள் கதைவழி தமிழ் உளவியலை ஒருங்கிணைக்கும் முகமாக ஒரு கண்டுபிடிப்பைச் செய்த  வேதநாயகம் அதில் அரசர்களைக் கற்பனை செய்கிறார். ஞானம்பாள் என்னும் பெண் தத்துவத்தைத் தமிழின் உள்உளவியலில் இருந்து உருவாக்கி கதையாடலை (narrative) தமிழ்த்தேசியத் திசைவழி நகர்த்துகிறார். அதனாலேயே தமிழ்மொழியின் சிறப்பு மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழுக்கும் தமிழ்விடு தூதுக்கும் அப்புறம் உரைநடை காவியம் ஒன்றில் பல பக்கங்களுக்கு நீள்கிறது. இந்த நாவல் தோன்றி சுமார் நாற்பது அல்லது ஐம்பது ஆண்டுக்குப் பின்னர் பாரதிவழியாக இந்தியத்தேசியத்தோடு தமிழ்த்தேசியம் முதன்முதலாக இணைக்கப்படுகிறது. கருவாகி வந்த ஒரு தமிழ்அடையாளம் முதன்முதலாக சுதந்திரப் போராட்டம் என்னும் பிறமொழியிலிருந்து வந்த (பெங்காளி மொழி) கருத்துருவம் ஒன்றோடு சமன்படுத்தப்பட்டு வீரியம் இழக்கிறது. வீரமாமுனிவர் தோற்றுவித்த தமிழின் அனைத்துலக வியாபகம் தமிழை உலகமயப்படுத்தி எழுச்சி பெற வைத்தபோது – பாரதிவழி வௌளிப்பட்டது, முற்றிலும் வேறு. அது எதிர்கால அரசியலில் எத்தகைய தன்மையைக் கொண்டுவரும் என்பதை உணர்ந்த அண்ணா அவர்கள் ஒரு புதிய முறை சிந்தனையைக் கொண்டு வந்தார்.

 

ஆண்டர்சனால் புதுவகையில் சிந்திக்கப்பட்ட கலாச்சார அடிப்படையிலான சமூகக் கருத்துருவான தேசியவாதம், அச்சு – முதலாளியத்தையும் கலாச்சாரத்தை யும் இணைக்கிறது. தமிழிலும் அதுதான் நடந்தது. பிரதாப முதலியார் சரித்திரமும் பரமார்த்தக் குருவின் கதையும் கதையாய் சமூகத்தைத்  தமிழ்மக்களின் பிரக்ஞைக் குள் முதன்முதலாக வடிவமைக்கப்படுகின்றன.

 

இந்தக் கிறிஸ்தவத்தன்மை மிகவிரைவில் தமிழர் மத்தியில் ஒரு சமயமாக சைவத்தை மாற்றுகிறது. அகில உலகளவில் புதிய சிந்தனையைப் பரப்பிய சீர்த்திருத்தக் கிறிஸ்தவம் தரங்கம்பாடி வழியாகத் தமிழகத்தின் மக்களை அணுகு கிறது. அதனைச் சார்ந்த கால்டுவெல் மீண்டுமொரு வரலாறு படைக்கிறார். தமிழ் மொழியும் அதன் தொடர்புடைய வேறு மொழிகளும் சமஸ்கிருதக் குடும்பத்தைச் சார்ந்தவை அல்ல என்றம் தனிக்குடும்ப மொழிகள் என்றும் கூறுகிறார். தமிழ் இந்த மொழிகளில் மூத்த மொழி அதிகமான குடும்பக் குணத்தை இன்றும் காப்பாற்றும் மொழி என்று விவாதித்து ஒர நூல் எழுதுகிறார். தமிழ் அகிலம் என்ற புது உணர்வு தோன்றுகிறது. இந்திய சுதந்திர போராட்டம் தெற்கில் புதுமாதிரியை எதிர்கொள்ள ஜஸ்டிஸ் கட்சி தோன்றுகிறது. மதராஸ் ராஜதானி என்பது புதுவகைத் தமிழ்த் தேசியத்துக்கும், அதேநேரத்தில் சிதைவிற்கும் காரணமாகிறது.

 

ஜி.யு.போப் சீர்த்திருத்தக் கிறிஸ்தவத்திற்கும் சைவசிந்தனைக்கும் ஓர் சமன்பாட்டைக் காண்கிறார். திருவாசக ஆங்கிலமொழிபெயர்ப்புத் தோன்றுகிறது. சைவசிந்தனையில் புதிய விளக்கங்களுளம் விரிவாக்கங்களும் தோன்றுகின்றன. மேற்கத்திய தத்துவம் சைவசித்தாந்தத்தோடு ஒப்பிடப்படுகிறது. சைவச்சிந்தனை விழிப்பு ஏற்படுகிறது. இது தமிழ்த்தேசிய கட்டமைப்பைக் கொண்டிருந்தாலும் பிரம்மஞானசபை சார்ந்து அன்றுவரையில்லாத வேறொரு வங்காளி மையப் படுத்தப்பட்ட, மராட்டி மையப்படுத்தப்பட்ட அடையாளமும் தமிழ்வேரும் அற்ற ஒருங்கிணைவுத் தேசியத்தை தனது முகமாக்குகிறது.

 

சைவப் புதுவிழிப்பு ஆறுமுகநாவலர் வழி ஈழத்தின் பக்கம் பரவி அங்குத் தமிழ்மொழி சார்ந்த தமிழ்த்தேசியம் பிற்காலத்தில் தமிழ்த்திராவிடத்தின் மரபுசார்ந்து வளர்வதற்குக் காரணமாகிறது. இருபதாம் நூற்றாண்டு ஈழத் தமிழ்த் தேசியம் பல வரலாற்றுக் கட்டங்களைக் கண்டுவிட்டது. இருபத்தொன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இப்போராட்டம் ராணுவப் போராட்டம் என்ற உச்சத்தை அடைந்து அகில உலகத்தின் கவனத்தை ஈர்த்த பல துக்ககரமான சம்பவங்களைத் தன்னுள்ளடக்கியுள்ளது. அத்துடன் இரண்டு மூன்று தேசங் களுக்கு மத்தியில் தமிழர்களும் தமிழ் அடையாளமும் பரவிக் கிடப்பதால் ஏற்படும் புதுப்பிரச்சனைகளும் முன்னுக்கு வந்துள்ளன. இந்திய அரசு பற்றிய குணமும் இக்கட்டத்தில் உலகத் தமிழர்களுக்கு விளங்கியது. வரலாறு வரலாறாக உருவான தமிழர் என்ற ஒற்றை அடையாளத்தை இந்தியா ஏற்காது என்பதையம் அதை உடைக்க முனையும் என்பதையும் தமிழர்கள் உணர்ந்தனர்.

 

ஆண்டர்சனின் நூலைப் படித்தபோது தனிப்பட்ட வாசக நிலையில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் இங்குக் கூறுவது பொருந்தும். அவர் முக்கியமாய் கற்பனை, கொள்ளையிடல் (priacy) புனித பயணம், ரஷ்ய மயமாக்கம் என்னும் உருவங்களை அடிப்படையாய் வைத்து ஒரு கருத்தக்கமான தேசியவாதத்தை வரலாற்று நோக்கில் ஆய்ந்தார். நான் அவருடைய நூல் சுருக்கம் தரும்போது இவ்வுருவகங்களை முடிந்த அளவு பாதுகாத்து ஆங்காங்குப் பல அத்தியாயங்களில் கொடுத்தேன். ஆனால் ரஷ்யமயமாக்கம் (Russification) என்ற கருத்தாக்கத்தை ஓரளவு உதாசீனப்படுத்தினேன் என்று நினைக்கிறேன். ஏனெனில் என் நூல் சுருக்கம் தமிழ்ச்சூழலுக்காக என்று அமைந்தபோது ‘ரஷ்யமொழிவயமாக்கம்’ என்ற உருவகம் அரசவம்சங்களின் ஆட்சியிலிருந்து உருவான அந்த தன்மை தமிழ்மொழிக்குப் பொருந்தாது என்று நினைத்தேன். மேலும், ஒரு நூலை எப்படிப் படிக்க வேண்டும் என்று தமிழ் வாசகர்களுக்குத் தெரிவிக்கும் நோக்கம் எனக்கிருக்கிறது. எனவே, சற்று விரிவான சுருக்கமாகவே நான் அமைத்திருக் கிறேன் என்பதையும் கூறிக்கொள்கிறேன். கற்பனை என்ற உருவகப் பிரயோகம் தமிழில் ஓரளவு சர்ச்சையை உருவாக்கியுள்ளதால் அப்பதம் எப்படியெல்லாம் நூல் முழுவதும் பொருள் மாற்றியபடி போகிறது என்பதை வாசகர் கவனிக்கும்படி நூல் சுருக்கத்தை அமைத்தேன். இப்படிச் சுருக்கும்போது குறைகளும் தோன்றமுடியும் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன். ‘கொள்ளையிடல்’ என்ற உருவகமும் ‘புனிதப் பயணம்’ என்ற உருவகமும் எப்படிக் கருத்துக்களை ஆய்வுகளில் உருவாக்கி அவை போன்ற பிற நிகழ்வுகளை மாற்றுப் பெயர்கொடுத்து அறிவது என்பதற்கு உதாரணங்களாகப் பயன்படுத்தியுள்ளேன். ஒருவகையில் இலக்கிய ஆய்வுபோல் இவற்றை ஆண்டர்சன் செய்வதால் அன்று அவருடைய நூலுக்கு அகில உலக முக்கியத்துவம் கிடைத்தது. இன்று இத்தகைய ஆய்வுகள் மிக அதிகமாகியுள்ளன. எனினும் சமூகவிஞ்ஞானமும் இலக்கியம்பொல் மாறிக் கொண்டு வருகிறதென்ற மேற்கத்திய ஆய்வுலக பாதைமாற்றத்தையும் பல்துறை ஊடாட்டங்கள் எப்படி அமைகின்றன என்பதையும் விளக்க இவை பயன்படும்.

 

அடுத்து இன்னொரு விசயமும் இங்குச் சுட்டிக்காட்டப்பெற வேண்டும். பெஞ்சமின். அய்ர்பாக், டர்னர் ஆகியோரில் முதல் இருவரும் இலக்கிய ஆய்வாளர்கள். அவர்களின் கருத்துக்களே கொள்ளையிடல், புனிதப்பயணம் போன்றவை. அது நூல் முழுவதும் பெஞ்சமின்னின் ‘உள்ளீடற்று காலியான காலம்’ என்ற கருத்தாக்கமும், அதுபோல் விதித்தன்மை (fatality), ஆதிப்படிவத் தன்மை (primoralial) தற்காலத்தன்மை போன்ற கருத்தாக்கங்களும் வருகின்றன. தேசிய வாதத்தின் எழுத்து, நூல், இலக்கியம், பிரதித்தன்மையைச் சுட்ட இவற்றை ஆண்டர்சன் பயன்படுத்துகிறார். இதன்மூலம் தேசியவாதத்தில் உள்ள மாறா மனநிலை, உடனடித்தன்மை, காலம் கடந்த தன்மை அசைவுத்தன்மையின் ஒரு குறிப்பிட்ட முறைமை போன்றனவற்றின் பால் முதன்முதலாக ஆண்டர்சன் கவனத்தைத் திருப்புகிறார். தமிழர்களின் சிந்தனை வரலாறும், மொழி இலக்கிய, இலக்கண வரலாறும், பழமையும் ஆண்டர்சன் பரிச்சயத்துக்குட்படவில்லை. எனினும், அவரது பொதுவிளக்கம். தமிழுக்கும் மிகச்சரியாகப் பொருந்துகின்றன.

 

இன்ற தமிழில் சீரிய சிந்தனைகள் ஒருவகை கட்சிசாரா மார்க்சியர்பால் தான் அதிகமும் காணப்படுகிறது. அவர்களிடம் உள்ள சிந்தனையில் ஆண்டர்சன் கருத்துக்களுக்கு மாறான மார்க்சியச் சிந்தனைகளான இயங்கியல் தன்மை தான் அதிகம் காணப்படுகிறது. இதனை இங்குக் கூறும்போது ஒரு சிந்தனை மாற்றம் சுட்டிக்காட்டப்படுகிறது.  தமிழ்ச்சிந்தனைகளில் காலங்காலமாக ஒருவித காலமற்ற தன்மை இருந்து வந்தது. ஆனால் மேற்கத்தியர்களின் தொடர்பால் காலத் தன்மையை நமது சிந்தனைமுறையாக நாம் வரித்துக்கொண்டோம். மீண்டும் தேசிய சிந்தனையின் ஊற்றுக்கண்ணாய் காலமற்ற அம்சத்தை நாம் திரும்பிப் பார்க்க வேண்டுமென்று தோன்றுகிறது. அதுபோல் அசையும் தன்மைக்கு மாறான நிலைத்தன்மையை ஆண்டர்சன் தேசியவாதத் தன்மையினுள் இனம் காண்கிறா். இந்த நிலைத்தன்மை தமிழில் காணப்படக்கூடியது; அல்லது சக்கர வடிவமான சுழல்சிந்தனை தமிழின் ஆதிகாலத்தில் – தொல்காப்பியம் போன்றவை கூறும் காலம் பற்றிய கருத்தாக்கத்தில் காணப்படுவதாகும். இதனையும் நாம் மீண்டும் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும் எனத் தோன்றுகிறது. இருபதாம் நூற்றாண்டில் ஹெகல் வழிப்பட்ட இயங்கியல் சிந்தனை தமிழிற்கு வந்தது. தமிழில் காலங்காலமாக இருந்த சிந்தனையை இயங்கியல் எவ்வாறு நவீன சமூகம் சார்ந்த சிந்தனை முறையாக்கியது என்பது யோசித்துப் பார்க்கத்தக்கதாகும்.

 

இவைகளுடன் நாம் இலக்கியத்தைப் பார்க்கும் சிந்தனையில் ஏற்பட்ட மாற்றத்தையும் ஆண்டர்சன் சுட்டுகிறார் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். இலக்கியம் வெறும் அபிப்பிராய உதிர்ப்பு சார்ந்தது அல்ல; திட்டவட்டமான சமூக உள்போக்குகளைச் சார்ந்தது இலக்கியம் என்பதைச் சுட்டுகிறார் என்று அறிய வேண்டும். அதாவது இலக்கியம் சமூகத்தின் படப்பிடிப்பு அல்ல. ஆனால் அது சமூகத்தின் பல்வேறு கருத்து உருவாக்கங்களோடு செயல்படுகிறது. அரசியல் கருத்து உருவாக்கம் மனிதனின் சாவு மற்றும் வாழ்வுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை ஆண்டர்சன் தன் நூலில் நன்கு விளக்குகிறார். இது இலக்கியத்தை அழகுணர்வு என்ற ‘காஸ்மெட்டிக்ஸாக’ பாவித்தவர்களுக்குக் கொஞ்சமும் ஏற்கமுடியாததாகும்.

 

நூல் முழுவதும் லத்தீன் மொழியின் இடத்தை மக்கள் மொழிகளான பிரஞ்சு, ஜெர்மன், லத்தீன், ஆங்கிலம், ஸ்பானிஷ் போன்றவை பிடித்த இடத்தில் தன் மாளிகையை எழுப்பிய தேசியவாதம் பற்றிப் பேசிக் கொண்டுவருகிறார் ஆண்டர்சன். இந்திய – தமிழ்ச்சூழலில் இச்சிந்தனை முக்கியமானதாகும். தமிழில் 6, 7-ஆம் நூற்றாண்டு முதல் சமஸ்கிருதம் நுழைந்து 17, 18-ஆம் நூற்றாண்டுவரை மெதுமெதுவாகத் தமிழ்மொழியையும் இலக்கியத்தையும் தீர்மானித்தது. திராவிட மொழிக்குடும்பங்களில் அதிகம் சமஸ்கிருதமயமாகாத தமிழுக்கே இந்தக் கதி என்றால் மற்ற மொழிகளைப் பற்றிக் கேட்கவேண்டாம். இங்கு மொழிகள் ஒன்றின் இடத்தில் இன்னொன்று வருவதற்கும் தேசியவாதம் தோன்றுவதற்கும் தொடர்பு கூறப்படுகிறது. தமிழில் இந்தத் தேசியவாத உணர்வு முழுவீச்சைப் பெற்று பாரதிதாசனிடம் என்பது இப்போது எல்லோருக்கும் தெரியும். அதனால்தான் தமிழரசியலை ஏற்படுத்திய தலைவரான அண்ணாதுரையவர்கள் பாரதிதாசனைத் தனது அறிவுத்தோற்றவியலுக்கு அடிப்படையானவராகத் தேர்ந்தெடுத்தார். 1937-இலிருந்து தமிழ் மற்றும் சமஸ்கிருதம்  என்ற இரட்டை எதிரிணை தமிழ் மற்றும் இந்தி என்று எதிரிணையால் மாற்றம்கொண்டு தமிழ்த்தேசிய அரசியலை உருவப் படுத்தின. எனவே, ஆண்டர்சனின் நூலைத் தமிழர்கள் தங்கள் கருத்தாக்கங்களை வளர்த்தெடுக்கும் நோக்கிலும் படிக்க முடியும். இங்குத் தமிழைப் பிற அரசியல் கோட்பாடுள்ளவர்களின் அனைத்திந்தியத் தமிழ்த்தேசியம் என்றும் காங்கிரஸ் தமிழ்த்தேசியம் என்றும் கூறி பிரிவினை கருத்துக்குப் புறம்பான தமிழ்த்தேசிய உருவமைப்புக்குச் சிலர் இருபதாம் நூற்றாண்டின் அறுபதுகளில் முயன்றதையும் மறக்கக்கூடாது.

 

மொத்தத்தில் ஆண்டர்சனின் நூல் தமிழரசியலின் பண்பாட்டுத் தொடர்பு   களை அறிய ஒரு முக்கியமான தூண்டுகோலென்பதை யாரும் மறுக்க முடியாது