தமிழவன் சிறுகதையின் தொகுப்பு -ஜிப்ரி ஹாசன்

தமிழவனின் “நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்“: தமிழ்ச் சிறுகதையின் இன்னுமொரு முகம்

 

ஜிஃப்ரி ஹாஸன்

 

தமிழ்நாட்டின் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களின் நீண்ட பட்டியலை நாம் புதுமைப்பித்தன்கி.ராதி.ஜானகிராமன்ஜெயகாந்தன்அசோகமித்திரன்சுந்தர ராமசாமி, கோணங்கி, நாஞ்சில் நாடன், சாரு நிவேதிதா,  எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன்வண்ணதாசன் என ஒரு சுருக்கமான பட்டியலாகப் போட்டுக் கொண்டால் அதில் தமிழவனையும் ஒருவராகச் சேர்த்துக் கொள்வதாஅல்லது, இந்தப் பட்டியலை விடுத்து ஒரு புதிய பட்டியலைத் தமிழவனிலிலிருந்து தொடங்குவதா என்ற கேள்விதான் தமிழவனின் கதைகளை வாசிக்கும்போது எனக்குள் ஏற்பட்டதுஅவரது கதைகளை வாசிக்கும்போது இதே கேள்வி உங்களுக்கும் எழுவதற்கு அதிக சாத்தியமுள்ளது.

தமிழ்ச் சூழலில் கவிதையை ஒட்டி நடந்த விவாதங்கள் அளவுக்கு சிறுகதை பற்றி பெரிதாக நடந்தேறவில்லை. மரபுக் கவிதை, நவீன கவிதை, பின்-நவீன கவிதை என்ற வகைப்படுத்தல்களும் அது தொடர்பான உரையாடல்களும் நமது இலக்கியவெளியில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. அதன் விளைவாக கவிதை குறித்த புதிய பார்வைகளும், புதிய போக்குகளும் உருவாகின. தமிழ்க் கவிதைச் செயற்பாட்டிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களையும் வளர்ச்சியையும் அவை ஏற்படுத்தின.

தமிழில் கவிதை அளவுக்கு ஒரு நீண்ட வரலாற்றை சிறுகதைகள் கொண்டிருக்கவில்லை. இலக்கிய காலப் பாகுபாட்டில் நவீனயுகம் எனப்படும் காலப்பகுதியிலேயே சிறுகதைகள் தோற்றம் பெற்றன. மரபுச் சிறுகதைகள் என எதுவும் கிடையாது. எனினும் நவீன கால தமிழ்ச் சிறுகதைகள் கடந்த சில ஆண்டுகளில் மேலைக் கோட்பாடுகளின் தாக்கத்துக்குட்பட்டு மாற்றங்களை ஏற்றுக் கொண்டு புதிய தளத்தில் சிறு அளவில் பயணத்தை தொடங்கி இருந்தன.

பின்னர், நவீனத்துவச் சிறுகதைகளில் காணப்பட்ட மையக் கருவொன்றைச் சுற்றியே கதையை நகர்த்துதல், உரையாடல்களில் கிளை மொழிப் பாவனை (ஒரு பிரதேச உரையாடல் மொழி இன்னொரு பிரதேச வாசகனுக்கு புரியாத போதிலும் அதையே கையாளுதல்), ஒரு கதைக்குள் ஒரு கதை மட்டும் காணப்படுதல், விவரணங்கள் குறைவாக இருத்தல் போன்ற பண்புகளிலிருந்து விடுபட்டு பின்-நவீன எழுத்துமுறைக்கு நெருக்கமானதாக தமிழ்ச் சிறுகதைகள் ஒரு புதிய பயணத்தை தொடங்கின.

பொதுவாக பின்-நவீன எழுத்துமுறைக்கு நெருக்கமான சிறுகதைகள் மேலோட்டமானது போன்ற  தோற்றம் அளிக்கும் ஆழமான கதைகளாகும். வாசகர்களை கதையோடு பிணைக்கக்கூடிய மொழியைக் கொண்டவை. கிளைமொழி உரையாடல்களைத் தவிர்த்து ஒரு பொது மொழியில் உரையாடல்கள் கொண்டவை. அது கதையின் சுவாரஸ்யத்தை மேலும் மெருகூட்டுகின்றது. அவை நவீனச் சிறுகதைகளின் பிராந்திய உரையாடல் மொழிகளைத் தவிர்த்து வாசகனை கதைக்குள் உள்வாங்கும் நெகிழ்வுத் தன்மையான கதைகூறல் மொழியை கொண்டுள்ளன. ஒரு மைய சம்பவத்தையோ, மையக் கதாபாத்திரமொன்றையோ சுற்றி கதை இங்கு நகர்த்தப்படுவதில்லை.

மனித வாழ்வை, அதன் எல்லாப் பரிமாணங்களையும் ஒரு வித அங்கதத்துடன் சித்தரிக்கின்றன. இத்தகைய பின்-நவீன எழுத்துமுறைக்கு நெருக்கமான சிறுகதைகள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. ஒரு சில நாவல்களும் உள்ளன. சுந்தர ராமசாமியின் “ஜே.ஜே. சில குறிப்புகள்”, சாருநிவேதிதாவின் ”ஸீரோ டிகிரி” போன்ற நாவல்களில் இந்த எழுத்துமுறை உள்ளது. ஏன் ஷோபா சக்தியின் ‘கொரில்லா’வோ, ‘ம்’ நாவலோ இந்த எழுத்துமுறைக்கு அவ்வளவு அந்நியமானதல்ல.

தமிழில் பின்-நவீன எழுத்துமுறைக்கு நெருக்கமான சிறுகதைகள் என்ற வகையில் தமிழவனின் “நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்” தொகுப்பைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

ஆனால் நவீன சிறுகதை எழுத்தாளர்களோ, விமர்சகர்களோ இத்தகைய சிறுகதைகளை இலகுவில் அங்கீகரிப்பதில்லை. இலக்கியத்தரமுள்ள எந்தவொரு படைப்பும் நிராகரிக்கத்தக்கதல்ல. மாறாக அவை உரையாடப்படக் கூடியவையே. தேவையற்ற அச்சம் காரணமாக சில நவீன சிறுகதை எழுத்தாளர்களும், விமர்சகர்களும் தங்களிடமுள்ள அளவுகோளுக்குட்படும் கதைகளை மட்டுமே அங்கீகரிப்பதும் ஏனைய கதைகளை நிராகரித்தும் வருகின்றனர். இத்தகைய பின்-நவீனச் சிறுகதைகள் வாழ்க்கையை மேலோட்டமாகச் சித்தரிக்கின்ற மொழி விளையாட்டு என நிராகரிக்கின்றனர்.

ஆனால் இந்த நவீனத்துவப் பார்வையிலிருந்து சற்று விலகி இலக்கிய ஜனநாயக சிந்தனையின் அடிப்படையில் தமிழவனின் கதைகளை நாம் வாசிப்புச் செய்யும்போது அவரது கதைகளுக்கான இடத்தை வாசகன் கண்டுகொள்கிறான்படைப்பாளியின் வாழ்வியல் அனுபவங்களே தமிழ்ச் சிறுகதைகளின் மைய அம்சமாக கொண்டாடப்படும் ஒரு இலக்கிய காலத்தில்தான் நாம் இருக்கிறோம்தமிழவனின் “நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்”  கதைத் தொகுதியிலுள்ள அநேக கதைகள் அவரது வாழ்வியல் அனுபவங்களைப் பேசுபவையாகவே இருக்கின்றன.

கதைசொல்லிகள் தங்களது கதைகளில் அவர்களின் சொந்த அனுபவங்களை முதன்மைப்படுத்துவது நமது சிறுகதையின் மரபான பண்பாகவே இருந்து வருகிறதுஇருந்தாலும் தமது சொந்த அனுபவங்களை தமிழவன் வெளிப்படுத்தும் முறையில் ஒரு பின்நவீனத் தன்மை வெளிப்படும் விதத்தை வாசகர்களால் புரிந்து கொள்ள முடிகிறது.

மனித வாழ்வின் மீதான நுண்ணிய அதிகாரங்களையும்அவமதிப்புகளையும் அதனை எதிர்கொள்ளும் மனிதர்களின் மன அதிர்வுகளையும் தமிழவன் தன் கதைகளில் பதிவு செய்கிறார்தமிழவன் கதைகளில் உலவும் மனிதர்கள் வாழ்வின் அநீதியை எதிர்கொண்டு மேலெழும் வேட்கையுடன் வருகின்றனர்.

நமது தமிழ்ச் சிறுகதைகளின் கதைநிகழ்களத்தை வேறொரு தளத்துக்கு கொண்டு சென்று அர்த்தப்படுத்தும் முனைப்பு தமிழவனின் அநேகமான கதைகளுக்குள் கிட்டத்தட்ட ஒரு கோட்பாடாகவே வடிவம் கொண்டுள்ளது.

தமிழவனின் இந்தக் கதைத்தொகுதி தமிழின் நவீனத்துவக் கதைப்போக்கிலிருந்து ஒரு புரட்சிகரமான மீறலைச்செய்துகொண்டு தமிழ் எதார்த்தத்தைதமிழ் வாழ்க்கையை புதியதொரு கோணத்தில் பேசுகின்றனஇத்தொகுப்பிலுள்ள அநேக கதைகள் தமிழ் வாழ்வை அதற்கு முற்றிலும் அந்நியமானதொரு சூழலில் வைத்து ஆனால் அதற்கு மிகவும் நெருக்கமான மனிதர்களைக் கொண்டு பேசுகின்றன.

சிலகதைகள் முதல் வாசிப்பில் தந்த அனுபவத்தை விட இன்னுமொரு வாசிப்பில் பிறிதொரு அனுபவத்தை தருகின்றனஆக, வாசகனுக்குள் ஒரு கதை ஏற்படுத்தும் அனுபவங்களின் ஒற்றைத் தன்மையை ஒரேயடியாக உடைத்தெறிகிறார் தமிழவன்எனினும் வாழ்வின் நுண்மையான அனுபவங்களை விடவும் பேரனுபவங்களையே அவர் பேசுகிறார்இதனால் வாழ்க்கையை கலைத்துவமாக சிருஷ்டித்துக் காட்டுவதற்கு பதிலாக தத்துவார்த்தமாக சிருஷ்டித்துக் காட்டுகின்றன தமிழவனின் கதைகள்.

இத்தொகுப்பிலுள்ள கதைகள் சிறுகதைகளின் வழமையான அளவில் (சைஸ்ஒரு புதிய மீறலைச் செய்கிறதுசிறுகதைகள் என்ற வகைப்பாட்டுக்குள் வரும் கதையின் அளவைவிட சற்று சிறியதாக இந்தக் கதைகள் அமைந்திருக்கின்றனஅண்மைக்காலமாக அவை Short Fiction என்றொரு வகையாகவும் பார்க்கப்படுகின்றன.

இத் தொகுப்பிலுள்ள கதைகள் கதைகூறும் முறையிலும் நவீனத்துவக் கதைப்போக்கிலிருந்து விலகிச் செல்கின்றனதொடக்கம்உச்சம்முடிவு எனும் அரிஸ்டோட்டிலிய நியம முறைக் கதைகூறல் பண்பை தமிழவன் முற்றாகவே புறக்கணித்துள்ளார்இதனால் அவரது கதைகள் “நன்கு கட்டமைக்கப்படாத“ கதைகளாக தமிழில் ஒரு புதிய போக்கை முன்னெடுத்துச் செல்லும் தன்மையுடன் மேற்கிளம்புகின்றன.   இங்கு கதைகள் உரையாடல்களற்று கதைசொல்லியின் விவரணங்களால் மட்டுமே புனைவாக்கம் பெறுகின்றனமேலும் இக்கதைகள் ஒரு விதத்தில் முடிவடையாததாகத் தோன்றுவதோடு முடிவுகளை வாசகனே எடுத்துக்கொள்ளும் வாசக சுதந்திரத்தைக் கிட்டத்தட்ட எல்லாக் கதைகளிலுமே தமிழவன் காப்பாற்றி இருக்கிறார்

இக்கதைகளுக்குள் மையக் கதாபாத்திரம் என்று யாரும்/எதுவும்  இருப்பதில்லைமையமான கதைச்சம்பவம் என்றும் எதுவும் இருப்பதில்லை.  இதனால் நவீனத்துவச் சிறுகதைகளுக்குப் பின்னரான ஒரு புதிய கதைப்போக்கின் ஆரம்பமாக தமிழவனின் கதைகள் தோற்றங் கொள்கின்றனகதைக்குள் ஒரு மையக் கதாபாத்திரத்தை உருவாக்குவது அல்லது கதைசொல்லியே ஒரு மையக் கதாபாத்திரமாக மாறிவிடுவது என்பது கதைக்கு ஒருமுகத்தன்மையை வழங்கிவிடுகிறதுஇங்கு மையக் கதாபாத்திரங்களற்ற பின்நவீன நிலைமையானது ஒரு கதையை ‘கதை’ என ஒருமையில் அழைப்பதை விட ‘கதைகள்’ என பன்மையில் அழைக்கவும் அணுகவும் தூண்டுகிறதுஇப்படித்தான் தமிழவனின் இந்தத் தொகுப்புக்குள்ளிருக்கும் ஒரு கதை ‘கதைகளாக’ வடிவங் கொள்கிறது.

உதாரணமாக, ‘மொழிபெயர்ப்பு நிறுவனம்” எனும் கதையில் மொழிபெயர்ப்புத் துறைப் பொறுப்பாளனா?, 17 வயதுச் சிறுவனாஅல்லது மொழிபெயர்ப்பு பணியகப் பணியாளர்களில் ஒருவரா யார் மையக் கதாபாத்திரம் என்ற கேள்விக்கு வாசகனால் இறுதிவரை விடை காண முடிவதே இல்லை.

“மூவரும் மௌனமானார்கள்” எனும் கதையிலும் இதே அனுபவத்தைத்தான் வாசகன் பெற்றுக் கொள்கிறான்அதனால் இந்த அனுபவம் வாசகனுக்கு தொடர்ச்சியாக தமிழவனின் கதைகளுக்குள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறதுமையக் கதாபாத்திரம் யார் என்ற கேள்விக்கு விடை இல்லாவிட்டாலும் கதை வாசக இரசனைக்கு மிக நெருக்கமானதாகவுள்ளது.

மொழிபெயர்ப்பு நிறுவனம்“ எனும் கதை டெல்லியை தலைமையகமாகக் கொண்டியங்கும் மொழிபெயர்ப்பு நிறுவனமொன்றுக்குள் தொழிற்படும் நுண்ணிய அதிகாரமானது மொழிபெயர்ப்பு எனும் துறையையே எப்படிச் சீரழித்துவிடுகிறது என்பதைப் பேசுகிறது.

தமிழவனின் சில கதைகள் உலக தளத்தை கதை நிகழ்களமாகக் கொண்டுள்ளனநீ புரிந்து கொள்வாய் இறுதியாக எனும் கதை போலந்து இந்திய அனுபவங்களோடு விரியும் ஒரு கதையாகும்இரு வேறுபட்ட கலாசாரங்களுக்கிடையிலான உரையாடலாகவும் இந்தக் கதையை பார்க்கலாம்ஒரு திரைப்படம் போல் நகரும் இக்கதையில் அடிக்கடி காட்சிகளும் மனிதர்களும் மாறியபடி இருக்கின்றனர்கதை ஒரு மைய சம்பவத்தைச் சுற்றி மட்டுமே சுழல்வதில்லைஅதனால் வாசகன் வேறு திசைகளுக்கும் அழைத்துச் செல்லப்படுகிறான்இந்த அலைக்கழிப்பு வாசகனுக்கு ஒரேநேரத்தில் வெவ்வேறு அனுபவங்களை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.

இந்தியத் தமிழ்ச் சிறுகதைகளில் மேலோங்கிக்காணப்பட்ட தமிழ்க் கலாசார மரபென்பது இந்து காலாசார மரபாகத்தானிருந்ததுதமிழவனின் கதைகளில் அந்த மரபு மீறப்பட்டுள்ளதுஅவரது கதைகளில் கிறிஸ்தவ கலாசாரமும் அதன் மொழிக்கூறுகளும் அதிக கவனிப்புக்குள்ளாகின்றனதமிழவன் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவராக இருப்பதாலும் அது நேர்ந்திருக்கலாம்.

தமிழவன் கதைகளில் அழுத்தம் பெறும் கிறிஸ்தவக் கலாசாரப் பதிவுகள் அவரது கதைகளில் கவனிக்கத்தக்க ஒரு புதிய பண்பாக மேலெழுகின்றனஇதுவரை கால நமது அநேகமான தமிழ்ச்சிறுகதைகளில் தமிழர் பண்பாடு இந்து மதம் சார்ந்ததாகவும் மற்றும் இஸ்லாமியப் பண்பாடுமே அதிகமும் விபரிப்புக்குள்ளாகி வந்தனதமிழ் பண்பாட்டின் கட்டடக்கூறான கோயில்கள் மற்றும் இஸ்லாமியப் பண்பாட்டின் கட்டடக்கூறான பள்ளிவாசல்கள்தர்ஹாக்கள் பற்றிய வரலாறுகளையும்அவற்றின் தொன்மங்களையும்விபரணங்களையுமே நமது தமிழ்ச் சிறுகதைகளில் வாசித்து வந்திருக்கிறோம்.

தமிழவனின் இக்கதைத் தொகுப்பிலுள்ள கணேசன் மனைவி பறந்து போனாள் கதையில் கிறிஸ்தவ பண்பாட்டு நம்பிக்கையான பலிப்பூசை பற்றிய குறிப்புகளும்சர்ச் ஒன்றின் வரலாற்றுக் குறிப்புகளும் வருகின்றனஎனினும் அந்த சர்ச்சின் வரலாறு போர்த்துக்கீசர் காலம் வரையே செல்கிறதுஇந்தியாவில் கிறிஸ்தவம் அந்தளவுக்கே பழைமைவாய்ந்ததாக இருக்கலாம்.

“மெழுகுதிரி எரிவதைப் பார்த்தேன்” ஏறத்தாழ 60 ஆண்டுகள் பழைமையான ஒரு கிறிஸ்தவக் குடும்பம் பற்றிய கதைமின்சாரமற்று இருண்டு கிடந்த தெருக்களில்வீடுகளில்கடைகளில் வாழ நேரிட்ட மக்கள் பிரிவொன்றின் இருண்ட வாழ்வை மண்வாசனையற்ற ஒரு நேர்கோட்டு மொழியில் பதிவு செய்கிறார் தமிழவன்இப்படி தமிழில் அதிகம் எழுதப்படாத கிறிஸ்தவ வாழ்வைகிறிஸ்தவப் பெயர்களைச் சூடிய கதாபாத்திரங்களை அதிகமதிகம் சிருஷ்டித்திருக்கிறார் தமிழவன்.

தொகுப்பிலுள்ள எல்லாக் கதைகளுமே சுவாரஸ்யம் குன்றாமல் ஆயினும் வாசகனுக்கு புதிர் போட்டபடி இருக்கின்றனவாசகன் புதிரை அவிழ்க்கும் தருணத்தில்தான் தமிழவனின் கதையுலகத்துக்குள் முழுமையாகப் பிரவேசிக்கும் பாதையை கண்டடைகிறான்பரபரப்பாக ஆரம்பித்துபரபரப்பாக நகர்ந்து சென்று பரபரப்புடனேயே கதை முடியும் போது வாசகனையும் ஒரு பரபரப்பு தொற்றிக் கொள்வது என்னவோ உண்மைதான்ஆனால் அந்த பரபரப்புடன் மட்டும் நின்று விடும் வாசகனால் மேற்கொண்டு தமிழவனின் கதைகள் நிகழ்த்த விரும்பும் உரையாடல்களைப் புரிந்து கொள்ள முடிவதில்லை.

தொகுப்பிலுள்ள ”பூதாகரமான மனிதர்”  போலந்து நாட்டில் நிகழும் ஒரு கதைபல்கலைக்கழக நூலகரான மார்தா மாக்கியோஸ்கியின் வீட்டில் இடம்பெறும் விருந்து நிகழ்வொன்றில் இந்தியாபங்களாதேஷ் போன்ற நாடுகளிலிருந்து கலந்துகொள்ளும் பேராசிரியர்கள் மற்றும் நூலகர் மார்தாவின் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் நிகழும் உரையாடல் மூலம் கதை நகர்த்தப்படுகிறதுகதையின் தொடக்கத்திலேயே அது பல்கலாசாரங்களுக்கிடையிலான உரையாடலாக வடிவங்கொள்கிறதுஇந்தியக் கலாசாரத்தின் தீண்டாமை எனும் சாதியத்துக்கெதிரான குரல் இங்கு பதிவு செய்யப்படுகிறது.

“ஒரு மனிதர் இன்னொரு வகை மனிதரை தொடக்கூடாது என்றொரு விதி உள்ளது என்றனர்“

என கதையில் வரும் ஒரு வரியே இந்தியப் பண்பாட்டின் நேர்மறையான இயல்பொன்றை மேலைத்தேய மனிதர்களோடு அல்லது கலாசாரத்தோடு பகிர்ந்துகொள்கிறது.

போலந்தின் முந்தைய தலைமுறைக்கும்- புதிய தலைமுறைக்குமிடையிலான இடைவெளியின் நீளத்தை அளவிட்டுக்கொள்வதற்கான சந்தர்ப்பங்களை தமிழவன் இந்தக் கதைக்குள் வாசகனுக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறார். கதையில் போலந்தின் பழைய தலைமுறையின் குறியீடாக பூதாகரமான மனிதர் வருகிறார். ஓரிடத்தில் பூதாகரமான மனிதர் மௌனமாவது அந்த தலைமுறையின் சிந்தனைகள் நவீன தலைமுறையால் நிராகரிக்கப்பட்டதன் குறியீடாகும். இதன் மூலம் இந்தியப் பண்பாட்டில் இன்னும் தீண்டாமை ஒழியாமல் தலைமுறை தலைமுறையாய் தொடர்வதை மறைமுகமாக தாக்குகிறார். இதுவே இரண்டு கலாசாரங்களுக்கிடையிலான வேறுபாடாக தமிழவன் கருதுகிறார். ஆயினும் இந்தியப் பண்பாட்டில் தீண்டாமை இன்னும் எவ்வளவு தூரம் செல்லும் என்ற கோணத்தில் ஊகங்களைச் செய்வதற்கு வாசகனை கதை தூண்டுவதில்லை.

தொகுதியிலுள்ள கதைகளில் ஒரு தொடர்பறு எழுத்து முறையே பின்பற்றப்பட்டுள்ளது. ஒரு சம்பவத்தை மையப்படுத்தாமல் சிதறலாக ஒரு கதைக்குள் பல கதைகளை நகர்த்துவதற்கு இந்த முறையே மிகவும் அணுக்கமானது. இதனால் தமிழவனின் எந்தவொரு கதைக்கும் கதைச்சுருக்கம் சொல்வது கடினம். ஆனால் அந்தக் கதைகளுக்கான விரிவாக்கங்களைத் தேடி நிச்சயம் நம்மால் பயணிக்க முடியும்.

 

 

 

தமிழவனின் சரித்திரத்தில் ………….

சரித்திரத்தில் படிந்த நிழல்கள்

(தஞ்சையில் சமீபத்தில்   ஜனிவரியில் 2017,  நடந்த இலக்கியக்கூட்டத்தில் தன் நாவல் பற்றி தமிழவன் பேசியது)

தற்காலத் தமிழ் இலக்கியம் 19ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் தோன்றியபோதே பிரச்சினை தோன்றிவிட்டது. தமிழ்த்தற்கால இலக்கியம், தமிழின் 2000 ஆண்டு பாரம்பரியத்தைத் தொடரவேண்டுமா? ஏதாவது ஓரிருவர் தொடங்கிய மாதிரியைப் பின்பற்ற வேண்டுமா? என்ற கேள்வி வருகிறது. பிரதாப முதலியார் சரித்திரத்தைப் பின்பற்ற வேண்டுமா அல்லது பத்மாவதி சரித்திரத்தைப் பின்பற்ற வேண்டுமா? சிறுகதையில் வ.வே.சு. ஐயரா, பாரதியா, புதுமைப்பித்தனா? சரி விமரிசனத்தில் யாரைப் பின்பற்றுவது? நாடகத்தில் யாரை, இப்படி இப்படி.

அடிப்படைப் பிரச்சினை, மரபை நவீன இலக்கியமாக மாற்றுவது எப்படி? இந்தக் கேள்வி கேட்கப்படவே இல்லை. இதற்கான காரணம் தமிழ்த்துறையினர் படைப்பு இலக்கியக் களத்தில் இல்லை. காரணம் அவர்களுக்கு நவீன இலக்கியம் பற்றிய அக்கரை இல்லை. அதனால் நாவல்கள் பாடமாய் வைத்தால் மாணவர்களிடம் நீங்களே படித்துக்கொள்ளுங்கள், கதைதானே என்கிறார்கள். இந்தப் பலவீனம் எங்கிருந்து வந்தது? நவீனப் பார்வை மரபு இலக்கியத்தைகூட அறிவதற்கு (வாசிக்க அல்ல) வேண்டும் என்ற உண்மையை அவர்கள் காணாததால்.

இந்தப் பலவீனம் போன்ற இன்னொரு பலவீனம் இருக்கிறது. அது நவீன இலக்கியப் படைப்பாசிரியர்களிடம் முதலில் இருந்தே காணப்பட்டது. வேதநாயகம் நாவலை, நாட்டுப்புற கதைப்பாடல் போல எழுதினார். பத்மாவதி சரித்திரம், எதார்த்த கதைமுறையில் பிராமண வாழ்வைச் சித்திரித்தது. இவை இரண்டு முன்மாதிரிகள். இரண்டுமே சங்க இலக்கியத்தில் இருந்து சிலப்பதிகாரம், கம்பராமாயணம், சிற்றிலக்கியம் வழி கதையை வளர்த்தும் முறை ஒன்று உண்டு என்று அறியவில்லை என்று சொல்லலாமா?

இந்தப்பின்னணியில் என் கதைகளின் மாதிரிக்கு வருகிறேன். முதலில், 1985இல், ‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’ எழுதினேன். அதை வாசித்தவர்கள் சிலர் பாராட்டினார்கள். சிலர் விமரிசித்தார்கள். ஆனால் எல்லோரும் அன்று ஆச்சரியப்பட்டார்கள். அதல்ல விஷயம். மேல்பாராவில் சொன்ன வேதநாயகம் பாணியிலும், முழுமையாய், ‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’ இல்லை. மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் பாணியிலும் இல்லை. ஓரளவு- அதாவது மிக  ஓரளவு, முதலாமவர் பாணியில் வந்து அதைக் குறுக்கே புகுந்து மாற்றிய முறையில் ஏ.சொ.ம. எழுதினேன்.

ஞானக்கூத்தன் ஏ.சொ.ம.  நாவலை வேறு ஒரு மரபில் வைக்க உதவினார். அதையும் கொஞ்சம் பேசவேண்டும். சிறுகதை சரித்திரம் பற்றிச் சொல்லும் போது மணிக்கொடி பற்றிச் சொல்லுவார்கள். அக்காலம் நாற்பதுகள். அக்கால கட்டத்தில் அச்சுமூலம் இலக்கியம் பல்கிப்பெருகியது. பல தட்டு, சாதி மக்களுக்கு இலக்கியம் போக, வாசகர்கள் என்ற இலக்கியத்தைத் தீர்மானிக்கும் இன்னொரு சக்தி உருவாகிறது. இங்குத் தமிழ்மொழி துரதிருஷ்டம் செய்த மொழியாயிற்று. கன்னடம் போலவோ, மலையாளம் போலவோ அல்லாமல் வியாபாரிகள் இலக்கியத்தை விற்பனை செய்ய தமிழ்மொழியைச் சந்தைக்கு இழுத்து வந்தனர். பத்திரிகைத்தமிழ் என்று ஒன்று உருவாயிற்று. இதற்கு விலை இருந்தது. வாசிக்கிறவர்களைப் பெருக்கப் போட்டி நடந்தது. அதனால் விற்கிற இலக்கியமா, விற்காத இலக்கியமா என்று கேட்கக்கூடாத கேள்விக்கூட கேட்கப்பட்டது. பத்திரிகைத் தமிழ் உருவான கதை இது தான். உடனே இதனை எதிர்க்க சிறு பத்திரிக்கைகள் 1970களில் உருவாயிற்று. உள்ளாற்றல் உள்ள கலாச்சாரத்தில் எதிர்சக்தி இருக்கும். இந்தக் கட்டத்தில் தமிழ்மொழியின் உள்சக்தி ஒருவிதமாய் அன்றிப் பலவிதமாய் மாறிற்று. சிலர் பத்திரிகைத்தமிழில் இலக்கியம் படைக்கலாம் என்றனர்; நல்ல விதமாய் எதார்த்த நாவலை எழுதினால் போதும் என்றனர்.

இப்போது ஒரு பெரிய பாய்ச்சல், தமிழ் வாழ்க்கையில் உருவாயிற்று. அது தான் புதுக்கவிதை. இந்தக்கட்டத்தில் தான் ஞா.கூ. கேட்ட கேள்வி பொருந்துகிறது. கவிதை, பத்திரிகைத்தமிழை விட்டுவிட்டது. பத்திரிகைத் தமிழில் அல்லாது வேறு வகையாய் (அது எந்த வகை என்று பல வகைகளைக் கூறலாம்) எழுதப்பட்டது என ஞா.கூ. சுட்டிய நாவல் ஏ.சொ.ம. வருகிறது.

அதாவது தமிழ்ப்பாரம்பரியத்தில் மனிதன் என்ற தனிநபர் இல்லை என்கிறது தொல்காப்பியம். 1. முதற்பொருளும் (காலம், இடம்) 2. உரிப்பொருளும் (பொது உணர்வு) அதுபோல், செடி, விலங்கு, மலை, சூழல், ஆகாசம், தெய்வம், அடையாளங்கள் என்று விளக்கப்படும் 3. கருப்பொருள் அதாவது உலகை – பூமிக்கிரகத்தை முழுசாய் கோட்பாடாக்கியது தொல்காப்பியம். இது தான் ஏ.சொ.ம. நாவலில் மனிதன் மரத்தின் தன்மையுடன் படுத்துக்கிடக்கவும், தனிநபர் பண்புடன் இல்லாமல் கூட்டுப்பண்புடன் சித்திரிக்கவும் காரணமாயிற்று எனலாம். ஏ.சொ.ம. நாவலில் பாத்திரவார்ப்பு முறை வேதநாயகம் மற்றும் மாதவையா நாவல்களிலிருந்து மாறுபட்டது. அதிகம் தமிழானது. அதாவது ஏ.சொ.ம. வில் வரும் காதல் ஐந்திணைக்காதல் போன்றது.

இந்த நாவல் பற்றி இன்று நாம் இப்போது பேசத் தேவையில்லை. அதனால் அடுத்து நான் எழுதிய “சரித்திரத்தில் படிந்த நிழல்களு”க்கு வருவோம். பாரம்பரிய அழகியல் கோட்பாடுகள் கொண்ட தமிழ்மொழியில் நாவல் இலக்கியம் பாரம்பரியப் பின்னணியின் ஆற்றலைப் பரிசோதனை செய்து பார்த்திருக்க வேண்டும். இது மிகுந்த முக்கியத்துவம் கொண்ட விஷயம். நவீன தமிழ்ப்பண்பாடு ஏன் பாரம்பரிய ஆற்றலைப்பற்றி தன்னுடைய நவீன இலக்கியத்தில் அதிகம் கவலைப்படவில்லை என்பது தனிக்கேள்வி. ஏன் தொடர்ச்சி அறாமை இருக்கவில்லை? தொடர்ச்சியில்லாத ஞாபகம் எப்படிப்பட்டது? இதன் உளவியல் வெளிப்பாடு என்ன? சி.என். அண்ணாதுரை 1962இல் டெல்லி பாராளுமன்றத்தில் திராவிடநாடு கேட்ட பின்னணி ஓர் இனம் இழந்து போன உரிமைசார் தன் பிளவுபட்ட உள்ளத்தை – அதன் ஊனத்தை – மருந்திட்டு ஆற்ற மேற்கொண்ட முயற்சியா  என்ற கேள்வியும் வருகிறது. எனவே 18, 19 நூற்றாண்டுகளில் மேற்கத்திய பண்பாட்டுப் பாதிப்பால் தமிழ்ப்பண்பாட்டில் ஏற்பட்ட பெரும் சலனம் அடுத்து உருவாகும் இலக்கியத்தினால் ஏதோ ஒரு வகையில் எதிர்கொள்ளப்படவேண்டும். இந்த எதிர்கொள்ளலுக்குப் போதிய விதமான மரபு அறிவு அந்தச் சமூகத்தில் இருக்கவேண்டும். அல்லது பாரம்பரியம் பற்றிய அக்கரை இருக்கக்கூடிய தமிழ்மக்களின் பிரிவுகளில் இருந்து தமிழ் நாவல் அல்லது புனைவு எழுத்து வந்திருக்கவேண்டும். முதல்நாவலை எப்படி எப்படி எழுதக்கூடிய சாத்தியப்பாடுகள் இருந்திருக்கலாம் என்று இன்றுவரை கேட்டோமா?. மிக முக்கியமுள்ள கேள்வி அல்லவா இது?

இது ஒரு அறிதல் பற்றிய பிரச்சினை. அறிதல் குறையுடைய ஒரு குழுவின் – மொழி – பண்பாட்டுக் குறைப்பார்வை அது படைக்கும் இலக்கியத்திலும் வெளிப்படத் தான் செய்யும். ஏன் தொல்காப்பியத்தின் பாரம்பரியம் முதல் நாவலில் இல்லை? நவீன கதையடிப்படையில் பிறந்த இலக்கியத்தில்  மரபை வேர்விட வைக்கவேண்டும் என்ற குரல் ஏன் எழவில்லை? அய்யப்பணிக்கரையும் தாண்டிப் போயிருக்கத் தேவையான வகையில் தமிழில் பாரம்பரிய பலம் இருந்திருக்கிறது. என் இந்த நாவல்கள் தமிழ்ப்பாரம்பரியத்தையும் முதல் தமிழ் நாவல்கள் பற்றிய பல்வேறு சாத்தியப்பாடுகளையும் சுற்றி வந்த மனப்பயணத்தில் ஏற்பட்ட இரண்டு உதரணங்கள் தாம். ஆங்கில அல்லது மலையாள (நீலபத்மநாபன் – தோப்பில்) மாதிரிகள் இல்லாமல் ஏ.சொ.ம. போல எழுதிப்பார்ப்போம் எப்படி நாவல் போகிறது பார்க்கலாம் என்று தொடர்ந்து செய்து பலர் பார்த்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

‘சரித்திரத்தில் படிந்த நிழல்கள்’ நாவலில் இப்படி ஒரு பகுதி வருகிறது:

“தெகிமொலாக்கள் காலத்தைச் சதுரங்கம் போன்றது என்று கருதினார்கள். சதுரங்கத்தைக் கட்டங்களாகப் பிரிப்பது போல் காலத்தைப் பிரித்தார்கள். அதில் மிகவும் கொடுமையான இரண்டு காலங்களை எதிரும்புதிருமாக வைத்து அவர்களது காலச்சக்கரத்தை வரைந்தார்கள்”.

யாருக்கும் இதில் வருவது  பழந்தமிழ் – தொல்காப்பிய முறைப்படியான – காலப்பாகுபாடு என்று தெரியும். அப்படியே இல்லை. கொஞ்சம் மாற்றப்பட்டது.

“இரவுப்புணர்ச்சிகளின் போது புணர்ச்சி இலக்கணமும் காலநிலை நியமங்களும் பின்பற்றப்படாததிலும் தொடர்ந்து பிறந்தவர்கள் விசித்திர நினைவுகளுடனும் காலநிலை அற்ற விதமாகவும் பிறந்தனர்”.

இது நீண்ட சரித்திரம் கொண்ட மக்கள் கூட்டம் ஒன்று சரித்திரத்தின் பிளவுகளை எப்படித் தங்கள் விசித்திரம் மிக்க வாழ்க்கைமுறைகளால் மறுவுருவாக்கம் செய்தார்கள் என விளக்குகிறது.

தமிழ் மனிதன் என்ற உருவாக்கம் மேற்கத்திய மாதிரியில் வடிவமைக்க 19, 20, 21 நூற்றாண்டுகளில் முயற்சி செய்யப்பட்டன. அதற்கு முன்பு பர்ஷிய, மொகல் சரித்திர, மராட்டிய இடையீடுகளும் தமிழ் உள்வாங்கிற்று. அதன் கதைப்புனைவு மாதிரிகள் எப்படிப்பட்டவை? அவற்றின் சில மாதிரிகள் சமீப நாவல் சரித்திரத்தில் தமிழிலும் வருகின்றன.

நாம் தொடர்ந்து கொண்டுவரவேண்டிய விஷயங்களைத் தர்க்கமாக மாற்றப் பார்க்கிறேன். தமிழில் பாரம்பரியம் இருந்தது என்ற ஓர்மையையை முற்றிலும் ஏன் நீக்கினோம்? 2009இல் தமிழ் அடையாளம் பற்றிய கேள்விகள் பழம் ஞாபகத்தின் அழுத்தத்தைத் தந்ததால் சிந்தனை கட்டமைப்புகளாய் வெளிப்போந்தன. கட்சிகளாய், குழுக்களாய், அரசியல் இதுதான் என்ற பெயரில் தமிழகமெங்கும் ‘தமிழன் யார்’ என்ற இளைஞர்களின் கேள்விகளுடன் நிறைய சலனம் ஏற்பட்டுள்ளது. இவற்றை முற்றாய் ஒதுக்க முனையவே மாட்டேன். இவர்களின் மொழியின் – சொல்லின் – அர்த்தம் என்ன? (மீண்டும் தொல்காப்பியம்?) யார் இந்தத் தெகிமொலாக்கள்? இந்த நாவலின் இறைச்சிப்பொருள் எது என்று கேட்கமுடியுமா? உள்ளுறை உவமையாக, நவீன குறியியல் அர்த்தங்களாக எல்லாவற்றையும் பார்ப்பதில் தவறில்லை. தன்னை வரலாற்றில் இழந்த ஒரு மக்கள் கூட்டம் வழிதெரியாது தவிக்கிறது.

நான் ஒரு கட்டுரையில் பெரியார் நம் நாட்டுப்புற மரபுகளை மதிக்கவில்லை என்று எழுதினேன். நாட்டுப்புற கதைப்பாடல்கள் – தேசிங்குராஜன் கதையிலிருந்து முத்துப்பாட்டன் வழி – இன்னும் அண்ணன்மார் சுவாமி என பெரும் பிரவாகம் உண்டு. செவ்வியல் மரபும் சங்கம், சிலப்பதிகாரம் என்று வேறோரு ஞாபகத்தமிழ் மரபாய் இணையாகத் தமிழர்களை நினைவுறுத்தியப்படியே இருக்கிறது.

நாட்டுப்புறக் கதையில் தேவதைக்கதை எப்போதும், உலகம் முழுவதும், திருமணத்தில் தான் முடியும் என்று ஒரு மறுக்கமுடியாத கோட்பாடு உண்டு. அதாவது, திருமணம், மந்திரசக்தி, விடைதெரியாக் கேள்விகள், மோதிரம் இப்படிப்பட்ட ஒவ்வொன்றும் ஓராயிரம் அர்த்தங்கள் கொண்டவை. செவ்வியலும் அப்படித்தான். குறுந்தொகையில் வரும் குறிஞ்சி என்ற புணர்ச்சி பற்றிய ஞாபகம், குறிஞ்சிப்பாட்டில் நீண்ட கதை சொல்லலாகி, சிலப்பதிகாரத்தில் மிகப்பெரும் கதைப்பாரம்பரியமாகிறது. நாவல் பாத்திர வார்ப்பை – மேற்கின் எதார்த்த முறையை மறுக்காமல் உலகப் பொதுகதைகளை நாம் ஏன் உருவாக்க முடியாது?

வேடிக்கை என்னவென்றால் 19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலம் வழி அந்த கிளுகிளுப்பு மரபை முக்கியமாக்கி, நூறு வருடங்களாய் நம் பாரம்பரியக்கதைகளை மீட்டெடுப்பதைக் கேலி பேசும் அளவுக்குப்போன மூடச்செயல் தான். தமிழ் உரைநடையைத் தமிழ்மொழிக்கு ஏற்ப எழுதுவதே பல சிக்கல்களைக் கொண்ட காரியம். பெஸ்கி எழுதியது உரைநடையா? நச்சினார்க்கினியர் எழுதியது தமிழ் உரைநடையா? நாம் கேள்வி கேட்க முடியவே இல்லை. முதலில் தமிழ் உள்ளம் அங்கீகரிக்கும் கருத்தைச் சரியாய் வெளிப்படுத்தும் உரைநடையே வரவில்லை. பின் எப்படி உரைநடைக்கலையான நாவலை எப்படி எழுதுவது என்ற பிரச்சினையைத் தீர்ப்பது?

இன்னும் ஒரு முக்கியமான விஷயம். புரிகிற எழுத்து, புரியாத எழுத்து பற்றிய பிரச்சினை. பாரம்பரியத் தமிழில் எல்லாமே புரியாத எழுத்துத்தான். எந்த உரையாசிரியர் புரியக்கூடிய முறையில் எழுதியிருக்கிறார்? நிகண்டு என்பதும் அகராதியும் புரியாமையை இலக்கணத்தையும் அங்கீகரிக்கும் செயல் தானே. பழக்கமானது பழகாதது என்று தான் உண்டு. எல்லாம் ஏகதேசமானது தான்.

செவ்வியல் கதைகளான நெடுநெல்வாடை போன்றவற்றில் வரும் பாத்திரங்கள் அரசன், அரசி போன்றோரின் இடங்களில் அசைவு இல்லை. அரசி படுக்கையோடு காட்சித் தருவாள். அரசன் பாசறையோடு காட்சித்தருவான். அல்லது முல்லைப்பாட்டில் அரசன் தேரில் வந்து கொண்டிருப்பான். இட அசைவு (Move) கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். சரித்திரத்தில் படிந்த நிழல்களில் பச்சைராஜன், பாக்கியத்தாய், மலைமீது ஒளி (அம்மிக்குழவி, மொழித்துறையினர், சர்க்கஸ் கோமாளி) இவர்களின் இடங்களும் இட அசைவுகளும் (Move) கூட கட்டுப்படுத்தப்பட்ட அசைவுகளுக்கு உட்பட்டவை.

இதுபோல் எதார்த்தபாணி கதைசொல்லலில் அல்லது உளவியல்பாணி கதைசொல்லலின் பாத்திர வார்ப்பைவிட நாட்டுப்புறவியல் கதைசொல்லலில் சமூகக் கதையாடல் நடக்கிறது. ஏனெனில் உளவியல் கதையாடலில் தனிநபர் சமூகம் வருகிறது. நாட்டுப்புறக் கதைகளின் பாத்திரங்களில் நாய்கள் மனிதர்களாவது உண்டு. ஒரு ஊரில் ஒரு நாய்க்கு இரண்டு பெண்கள் பிறந்தனர். இரு அரச குமாரர்கள் மூத்தவளையும் இளையவளையும் திருமணம் செய்தபின்பு தாய் – நாய் மூத்த மகளிடம் வருகிறாள். வெந்நீர் ஊற்றி விரட்டுகிறாள் மூத்தவள். இளையவள் உணவு கொடுத்து பாதுகாக்கிறாள்….. என்பது போன்ற கதை கேட்டிருப்பீர்கள். மனித – விலங்கு இணைவு ஏற்படுவதோடு பாத்திரங்கள் சமூக மாதிரிகளாகின்றன. கதையில் இறந்த நாய் இளையவளுக்குத் தங்கக்கட்டியாகி உதவும். மூத்தவள் வெந்நீர் ஊற்றியதால் வெறும்புழுவாய்த் தன் உடம்பை மாற்றி தண்டனைக் கொடுக்கும். “தண்டனையும் பரிசளிப்பும்” என்ற கருத்தாக்கம் கதையின் அமைப்பாகிறது. இங்குக் கதைமை என்பது  கருத்தமைவு என்று வடிவம் கொள்கிறது. சரித்திரத்தில் படிந்த நிழல்களில், பச்சை ராஜனுக்கும் பாக்கியத்தாய்க்கும் ஏற்படும் பல்வேறு கதை இடஅசைவுகள் கருத்து + அமைவு = புனைவு என்று புதுவித அர்த்த உருவாக்கமாகிறது. தமிழ்ச்சமூகம் சினிமாவைத் தனக்குள்ளே வடிவமைத்த செயல் நம் கதைமுறை வேறுபட்டது என்பதைத் தான் விளக்குகிறது. (இக்கதைபற்றி சண்முக. விமல்குமார் ஒரு நீண்ட கட்டுரை எழுதியுள்ளார்.)

கார்ல்மார்க்ஸ் “British Rule in India” என்று ஒரு கட்டுரை 1853இல் எழுதியது பல வாதவிவாதங்களை உருவாக்கியது. இந்தியா போன்ற சமூகத்தின் தேக்கத்தைப் பிரிட்டிஷ் அரசு உடைத்து ரயில், தனிச்சொத்து, அறிவியல், தொடர்பியல் போன்றவற்றைத் தந்தது என்பார் மார்க்ஸ். உடனே மார்க்ஸும் ஒரு வெள்ளைமனம் கொண்டவர் தான் என்று விமரிசித்தனர். பிரிட்டீசாரை அவர் கண்டிக்கவில்லை என்றனர்.ஆனால் மார்க்ஸ் சொன்னது ஒரு உண்மை. அதாவது நாட்டுப்புறவியல் இட அசைவின் அடிப்படையில் இயங்கும் சமூகம் இந்தியாவில் செயல்படுகிறது என்று அவர் கூறியதாகத்தான் நாம் எடுத்துக் கொள்ளவேண்டும். அதாவது தமிழர்களின் சரித்திரம் ஐரோப்பிய சரித்திரம் போன்றதல்ல என்று தமிழ் அறிதல் வழி மார்க்ஸை அணுகுவதற்கு இங்கு முயலவேண்டும். தமிழ்க்கதையாடல் (Tamil Narration) ஒன்றை மார்க்ஸ் மேற்குறித்த கட்டுரையில் உருவமைக்கும் விதைகளை அறிமுகப்படுத்துகிறார். நம் சரித்திரப் போக்கான பிராந்திய அசைவுக்கும் ஹெகலிய பிரபஞ்ச இயங்கியல் அசைவுக்கும் வேறுபாடு உண்டு. ஹெகலியம் அனைத்துலக ஒற்றைப்பார்வையை முன்வைத்த போது அதன் பெறுபேறாக உருவான நம் இடதுசாரிப்பார்வைகள் மாறவேண்டும் என்பதும் இங்கு உணர்த்தப்படுகிறது. “சரித்திரத்தில் படிந்த நிழல்கள்” இத்தகைய நாட்டுப்புறவியல்/தமிழ் அறிதல் கொள்கை சார் கதையாடல் முறையை விரிவாய் சர்ச்சை செய்யும் சந்தர்ப்பத்தை வழங்குகிறது.

“இன்னொரு விஷயத்திலும் ராணியின் வார்த்தைவழி பிறந்த மைந்தன் தெகிமொலாக்களின் இரண்டுபட்ட மனத்துடன் நடந்துகொண்டான். அவன் பனிக்காலத்தில் ஒரு காலும் கோடைக்காலத்தில் இன்னொரு காலும் வைத்துக் காலத்தின் தடைகளைத் தாண்டினான். அதுபோலவே அவன் அரச சபையில் வளர்வதற்குப் பதிலாக மக்களின் சபைகளிலும் அதுபோல் கவிதைப்பிரியர்களான தெகிமொலாக்களின் மனங்களிலும் ஒரே நேரத்தில் இருந்தான்” (பக்.19)

இவ்விதம் நாவல் கதையாடலில் வரும் இட அசைவு என்பது நாட்டுப்புறக்கதைகளில் இருந்து எடுக்கப்பட்டு இங்கு வேறு முறையில் கற்பனை செய்யப்படுவதை அறியவேண்டும். மையக்கதைப்பாத்திரம் நாட்டுப்புறக்கதையில் தனது குறிக்கோளான யாருக்கும் செய்ய முடியாத செயலைச் (பகைவனைத் தோற்கடிப்பது, மந்திரத்தைக்கற்பது, மாயமோதிரத்தைப் பெறுவது என்பது போல்) செய்யும் வழியில் இன்னொரு உபகதை என்னு வேறு ஒருகதை வழி அவனுடைய எதிர்கால மனைவியைச் சந்திப்பான் அல்லது தன் நண்பனைச் சந்திப்பான். இப்படி உபகதை கிளை பிரியும் இடத்தை “இட அசைவு” என்பார்கள். ச. ப. நி. நாவலில் இது வியாக்கியனம்/மறுவடிவாக்கம் பெற்று ஒரு பாத்திரம் “இரண்டு மனத்துடன்” அல்லது “பனிக்காலத்தில் ஒரு காலும் கோடைகாலத்தில் ஒரு காலும்” அல்லது “மக்களின் சபைகளிலும்” “தெகிமொலாக்களின் மனங்களிலும் ஒரே நேரத்தில்” இருக்கிறான். இதுபோல பல உத்திகள் ச.ப.நி.நாவலில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.இவை என்னுடைய சில கருத்துக்கள்.விவாதிப்போம்.

காந்தி லிபி(சிறுகதை)

காந்தி லிபி(சிறுகதை)     (PUBLISHED IN VIRUTCHAM)

தமிழவன்

 

          எதிர்பார்க்காதது தான் நடந்தது எனக்கு.

 

நான் ஆய்வின் பொருட்டு அந்தக் கோடை காலத்தில் குளிராக இருக்கும் சுகவாசஸ்தலத்துக்கு 1978-ஆம் ஆண்டு போவேன் என்றோ அங்கு அப்போது 90 வயதான பழம்பெரும் சுதந்திரப் போராட்ட வீரரான ராஜகோபால பிள்ளையைச் சந்திப்பேன் என்றோ கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

ஆறு அடி ஓரங்குலம் உயரம் உள்ள பிள்ளை, ஒல்லியான தேகம், கனத்த சட்டமுள்ள கண்ணாடி, கதராடை சகிதம் காட்சி தந்தார். கைகள் மட்டும் ஆடியபடியே இருந்ததைத் தவிர ஆரோக்கியமானவர். கன்னங்கள் ஒட்டி, நரைத்த பெரிய மீசையுடன் காணப்பட்ட அவர், என்னைப் போலவே பழைய வரலாற்று ரெக்கார்டுகளைத் தேடி சேசுசபை பாதிரியார்கள் சேமித்துவைத்த அரிய பல ஆவணங்களைப் பார்வையிட வந்திருந்தார். காலில் கனத்த ‘வாரால்’ ஆன செருப்பு அணிந்திருந்ததுபோலவே தோளில் தொங்கும் சாயம் போன பையுடன் காணப்பட்டார். அவரை அழைத்து வந்த பாதிரியார், நான் கர்நாடகத்தித்திலிருந்துவந்துள்ள கன்னட மொழிபேசும் ஓர் ஆய்வாளன் என்றும் சேசுசபை குருக்கள் 18-ஆம் நூற்றாண்டில் ரோமுக்கு அனுப்பிய கடிதங்களைப் பார்வையிட வந்துள்ளேன் என்றும் பிள்ளையிடம் அறிமுகம் செய்தார். பிள்ளை என்னைப்பார்ப்பதற்குப் பதிலாக காந்தியின் நினைவாய் கதர்ஜிப்பாவில் தொங்கவிடப்பட்ட அந்தக்கால கடிகாரத்தை ஒரு முறை பார்த்தார்.

 

மரத்தாலான தரையுள்ள கான்டீனில் ‘பிரட்டில்’ ஜாம் தடவி எனக்கும் பிள்ளைக்கும் கான்டீன் சிப்பந்தி காலை உணவை வைத்தபோது, கதர்ஜிப்பாவின் வலது பக்கத்திலிருந்து எடுத்த மூக்குப்பொடியை இடது கையால் லாவகமாய் எடுத்து மூக்கில் போட்டவாறே பிள்ளை சொன்னார்.

‘நீங்கள் பழையகால காந்தியவாதிகளைப் பார்த்துப் பார்த்துச் சலித்துப் போயிருப்பீர்கள் இல்லையா?’

 

நான் நிஜத்தை ஒத்துக்கொண்டேன்.

 

‘வாஸ்தவமாக சொன்னால், அதுதான் உண்மை’

 

‘ஆனா உங்களுக்குக் காந்தியைப் பற்றி ஒன்றும் தெரியாது’.

பிள்ளையின் குரலில் கோபம் லேசாக வெளிபட்டதோ என்று ஐயம் தோன்றும்படி பேச ஆரம்பித்தார்.

 

‘காந்தியின் தந்தையின் பெயரும், தாயின் பெயரும் அறிந்திருப்பீர்கள். அவர் குஜராத் பனியா சாதியைச் சார்ந்தவர் என்றும் கேள்விப்பட்டிருப்பீர்கள். மகாத்மாகாந்தியின் தாய் புத்லிபாய் நான்காவது மனைவி, அவர் தந்தைக்கு. காந்தி ஒரு வருடம் பம்பாயில் சட்டம் படித்தார். அதன்பிறகு தான் லண்டனுக்குச் சட்டம் படிக்கப் போனார். எல்லாரும் காந்தி லண்டனில்தான் சட்டம் படித்தார் என்று கருதுகிறார்கள். அவர் முதலில் சட்டம் படித்தது இந்தியாவில்தான்…’

 

என்னையே கூர்மையாய் பார்த்தபடி பேசிக்கொண்டிருந்த பிள்ளையின் சிரிப்பு வழக்கம்போல் இருக்கவில்லை. தனக்குள் சிரிப்பதுபோல் பட்டது.  எனக்கு, காந்தி பற்றி பெரிதாகக் கவர்ச்சி ஏதும் கிடையாது. கர்னாடகத்தில் நண்பர்கள்  அம்பேட்கருக்கும் காந்திக்கும் நடந்த சண்டை பற்றி விவாதம் வந்தபோது அம்பேட்கர் சார்பாய் பேசினார்கள். நான் ஒரு கர்நாடக இலக்கிய சூழலில் வளர்ந்த கன்னடமொழி பேசக்கூடியவன் என்பதும்கூட இதற்குக் காரணமாகலாம். அதுபோல் நான் காந்தி இறந்த பத்து வருடங்களுக்குப் பிறகு பிறந்து வளர்ந்தவன்.

 

‘காந்தி லண்டனில் சட்டம் படித்து 1891-ல் முடித்துவிட்டு இந்தியாவுக்கு வந்து ஒரு வருடம் பம்பாயில் வக்கீலாக இருந்தது தெரிந்திருப்பீர்கள். அதுக்கு முன்னாடியே கஸ்துர்பா மெக்கான்ஜ் என்பவரை, காந்தி 13-ஆம் வயதில் திருமணம் செய்திருந்தார்’.

 

வயதான பிள்ளை சொன்ன சிறுசிறு தகவல்கள் எனக்குப் புதிதாய் தென்பட்டன. நான் வரலாற்றுத் தகவல்களைத் தேடி ஓடும் உள்ளுணர்வு படைத்தவன். அதனால் காந்தியிடம் ஈடுபாடு இல்லாவிட்டாலும் கஸ்தூர்பாவின் முழுப்பெயர் கஸ்தூர்பா மெக்கன்ஜ் என்பதும் காந்தி முதன்முதலாகச் சட்டம் படித்தது பம்பாய் என்பதும் புதுத்தகவல்களாக இருந்தன.

 

‘காந்தி முதலில் பிரிட்டீஷாரால் கௌரவிக்கப்பட்டார். முதல் உலகப்போரில் தென்ஆப்பிரிக்காவில் யுத்தத்தில் முன்னூறு பேர் அடங்கிய ஒரு குழு சேவையாளர்களை ஒருங்கிணைத்து யுத்தத்தில் புண்பட்டவர்களுக்கு அவர் உதவினார். அதற்காக பிரிட்டீஷாரால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர் காந்தி’.

 

காந்தியைப் பற்றிப் பேசுவதில் சலிப்புத் தட்டாதவர் பிள்ளை என்று நான் நம்பும்படி அவர் பேசிக்கொண்டிருந்தபோது எங்கள் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த இரு இளம் வெள்ளைக்கார பாதிரிகள் சிலுவை அடையாளமிட்டு விட்டுக் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த வெள்ளைத் துண்டால் வாயுதட்டை ஒற்றியபடியே சாப்பிட்ட ‘புள்பாயில்’ முட்டையின் பொடியைத் துடைத்த திருப்தியுடன் எழுந்து புறப்பட்டனர். அவர்கள் புறப்படும் முன்பு கர்னாடகத்திலிருந்து வந்திருந்த என்னையும் சுதந்திர போராட்ட வீரரான பிள்ளையையும் நோக்கி சிறு புன்முறுவல் பூக்க மறக்கவில்லை. சாப்பிடும் போது அவர் கைகள் ஆடவில்லை. தொடர்ந்தார் பிள்ளை.

 

‘காந்தி, 1947-இல் இந்தியா சுதந்திரமடைந்தபோது எந்த சுதந்திரவிழா விலும் கலந்துகொள்ளவில்லை. அதுபோல் 1948-இல் நாதுராம் கோத்ஸேயால் சுட்டுக்கொல்லப்படுவதன் முன்பே மூன்றுமுறை அவர் மீது கொலைமுயற்சி நடந்தது. காந்தி சிறு வயதில் படித்தது ஒரு கிறிஸ்தவப் பள்ளி. அதன் பெயர் ஆல்பிரட் உயர்நிலைப்பள்ளி. ஒருமுறை காந்தி காங்கிரஸ் கட்சியிலிருந்து ராஜிநாமா செய்தார்….’

 

இப்படி இப்படி பிள்ளை தன் ஆடிய கைகளால் அடிக்கடி மூக்குப்பொடி போட்டவாறே நான் அறிந்திராத தகவல்களைக் காந்தி பற்றிக் கொடுத்துக் கொண்டேயிருந்தார். இடையில் ஒருமுறை மூக்குப்பொடி வைக்கும் சதுரமான ஓரங்குல நீளமும் அகலமும் கால் அங்குலம் உயரமும் கொண்ட புலிப்பல்லில் செய்த பொடி டப்பாவை என்னிடம் காட்டியபோது  நான் புன்னகை செய்தேன். ஏனெனில் சில ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்த என் தாயின் தந்தையான என் தாத்தாவின் மூக்குப்பொடி டப்பாவை எப்போதும் நான் வைத்துக்கொண்டு அவருக்கு அவர் விரும்பிய போதெல்லாம் கொண்டு போய் கொடுக்கும் என் சிறு வயது அனுபவம் ஞாபகம் வந்தது. மூக்குப்பொடி டப்பாவில் அடிக்கப்பட்டிருந்த  சிறு ஆணியில் மேல்மூடியும் கீழ்முடியும் பொருந்தியிருக்கும் தொழில்நுட்பம் என்னை அக்காலத்தில் வெகுவாகக் கவர்ந்திருந்தது. தாத்தாவின் பொடிடப்பாவை மேல்மூடியும், கீழ்த்தட்டும் வெகுநுட்பமாய்  மூடிக்கொள்ளும் முறையில்  சிரமப்பட்டு யாரோ கைவினைஞர் மூக்குப்பொடி டப்பாவை செய்திருந்தது ஞாபகம் வந்தது.

இதனைப் பற்றி பிள்ளையிடம் நான் சொன்னபோது அவர் தன்னுடைய கையிலிருந்த மூக்குப்பொடி டப்பாவை என்னிடம் ‘இதோ பாருங்கள்’ என்று தந்தார்.

 

எனக்கும் அவருக்கும் அந்தக் கோடைகால சுகவாசஸ்தலத்தில் ஆவணக் காப்பகத்தில்  அன்றைய வேலை முடிந்த பின்பு தங்குவதற்கென்று அறை கொடுத்தார்கள். மிகக் குறைந்த கட்டணத்தில் தங்க வசதியான அறைகள். கழிப்பறையில் தண்ணீர் அடிப்பதற்குச் சங்கிலியால் சிறுடாங்கிலிருந்து நீரை இழுத்து வெளியேற்ற வேண்டும். இந்திய சுதந்திரத்துக்கு முன்பே வெள்ளைக் காரர்கள் இங்கு இருந்தபோது அமைத்திருந்த முறை. அதுபோல் முகம் பார்க்கும் கண்ணாடிகளில் பாதரசம் மங்கிப் போய் இருந்தது. அந்த அறைகள் பெரும்பாலும் இந்தியா முழுவதிலிமிருந்து வரும் பாதிரிகளால் பயன்படுத்தப் பட்டவை. எனவே, தன் அழகைப் பற்றிய பிரக்ஞையைப் பாதிரிகள் நிராகரித்ததால் அவர்களின் முக அழகைப் பாதுகாக்க அவர்கள் ஒப்பனை செய்வதில்லை. அதனாலோ என்னவோ கண்ணாடிகளில் பாதரசம் இல்லை. ஒருநாள் பிள்ளை அவர்களின் அறைக் கண்ணாடியிலும் பாதரசம் கழன்று போயிருந்ததைக் கவனித்தேன்.

 

நான் கண்ணாடியைக் கவனிப்பதைக் கண்ட பிள்ளை அடிக்கடி செய்வது போல் தனது வயதான நீண்ட கைவிரல்களால் வெள்ளையாக மாறிய முடியுடன் காட்சி தந்த தலையைத் தடவிவிட்டுச் சொன்னார்.

 

இது, பாதிரிகள் தத்தம் முகஅழகில் ஈடுபடக்கூடாது என்பதற்காக வேண்டுமென்றே செய்யப்பட்டவேலை. பாதரசத்தைச் சுரண்டி முகம் அழகாய் தெரியாதபடி கண்ணாடிகளை மாற்றுகிறார்கள்.

 

பிள்ளை வயதானவராக இருந்தாலும் சுவராசியமான மனிதராய் தென்பட்டார். கண்ணாடியில் பாதரசம் சுரண்டப்பட்டிருப்பது பற்றிச் சொல்வதாக இருந்தாலும் சரி, நம் எல்லோருக்கும் தெரியும் என்று நாம் கருதியிருக்கும் காந்தியைப் பற்றிப் பேசுவதாக இருந்தாலும் சரி, நமக்குத் தெரியாத புதுத்தகவல்களைத் தருகிறாரே என்று எண்ணிக் கொண்டேன்.

 

இடையிடையே என்னைப் பற்றி பிள்ளை அவர்கள்  கேட்டுத் தெரிந்துகொண்டார். நான் ஒரு கன்னட எழுத்தாளனின் மகன் என்பது தெரிந்ததும் கன்னட இலக்கியம் பற்றிக் கேட்டார். என் தந்தை பாலகிருஷ்ண கௌடாவை எங்களின் மங்களூர் பக்கத்து எஸ்டேட்டில் சந்திக்க வரும் எழுத்தாளர்கள் பற்றி நான் தெரிந்த விஷயங்களைப் பிள்ளைக்குத் தெரிவித்தேன்.

 

‘பாலகிருஷ்ண கௌடா…….. பழைய சுதந்திர போராட்ட தியாகி அல்லவா?’.

 

‘ஆம்’ – இது நான்.

 

‘நீங்கள் அவர் பிள்ளையா? நானும் அவரும் பெல்லாரி சிறையில் ஒன்றாக இருந்தோம். ஒருமுறை அசெம்பிளி எலெக்சனில் வெற்றி பெற்றாரே’ என்று கேட்டார் பிள்ளை.

 

‘ஆமா. எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறீர்களே’ என்ற போது சிரித்தார் பிள்ளை. நண்பனின் மகனுடனிருக்கிறோம் என்று குதூகலம் கொண்டார்.   ‘உன் தந்தையின் எழுத்தில் ஒரு மாந்திரிகத் தன்மையும் உண்டு. சமீபத்தில் கூட உன் தந்தையின்  நாவல் ‘மைசூர் அரண்மனையின் நிழல்’ என்பதைப் படித்து எனக்குப் பிடித்த சில பகுதிகளை எழுதி வைத்திருக்கிறேன் பார்’ என்று மாலையில் ஆவணக்காப்பகத்தில்  இருந்து இருவரும் காண்டீன் சென்று சுத்தமாகத் துடைத்து அமைதியாக இருக்கும் அறையின் மேசையில் வைக்கப்பட்ட வடையையும் காப்பியையும் எடுத்துக் குடித்தபோது கூறினார் பிள்ளை. பின்பு அவர் அறைக்கு என்னை அழைத்துச் சென்று அவருடைய பைன்ட் செய்யப்பட்ட (சுமார் 800 பக்கங்கள் கொண்ட) குறிப்பு எடுக்கும் நோட்டை எடுத்துப் பிரித்துப் படித்தார். நான் அறிந்திராத என் தந்தையின் ஒரு நாவலின் பகுதி என்று பிள்ளை படித்த பாரா இப்படி எழுதப்பட்டிருந்தது. அது நூலின் முன்னுரை.

 

‘மைசூர் அரசன் கொலை செய்யப்பட்ட இடத்தில் இரண்டு பெரிய மைல்கல்கள் நடப்பட்டிருந்தன – ஒன்று கறுப்பு நிறம், இன்னொன்று சிவப்பு நிறம். அவை மைசூர் அரசின் இரண்டுவிதமான நீதி பரிபாலனத்தைச் சுட்டின. நீதியும் வீரமும். நீதியைச் சுட்டிய கறுப்புக் கல்லில் செதுக்கப்பட்ட , நெளியும் குறுக்குமறுக்குமான இரண்டு பாம்புகளின்  திறந்த வாய்களில் லத்தீன்மொழி வாசகங்கள் எழுதப்பட்ட ஓலைகள் காணப்பட்டன.  வாள் பிடித்த ஒரு பெண்ணின் கை, மேகத்திலிருந்து வெளிப்பட்டுப் பாம்பிடம் ஆணையிட்டது. சிவப்புக் கல்லில் ஒரு பிடிக்குள்ளே இரண்டு வாள்கள் இருந்தன. அந்த இரட்டைவாள் கீழிலிருந்து மேல் நோக்கித் தீட்டப்பட்டிருந்தது. மர்மம் முழுதும்  இந்தக் குறிகளை அறிவதில் அடங்கியிருக்கிறதென்பதை புரியும் துப்பறிபவன் மைசூர் அரசரின் கொலையாளியை இறுதியில் கண்டுபிடித்தாலும் அவனைப் பிடிப்பதில்லை…..’

 

பிள்ளை ‘இவ்வளவுதான் எழுதினேன்’ என்றார்.

 

‘நான், என் தந்தையின் காலத்து எழுத்துப்பாணியைவிட கன்னடக்கவிஞர் கோபாலகிருஷ்ண அடிகா போன்றோரின் பாணி கவிதைகளைத் தான் அதிகம் ரசிக்கிறவன் என்று கூறியது பிள்ளைக்குப் பிடிக்கவில்லை. எனினும், தன் எண்ணத்தை என்னிடம் வெளிப்படுத்தவில்லை அவர். அவரளவு வயதானவர் களின் முதிர்ச்சி அது என்று எண்ணினேன்.

 

இவ்வாறு பிள்ளையும் நானும் சுமார் ஒருவாரம் அந்த சுகவாசஸ்தலத்தில் தகவல்கள் சேகரித்தோம்.

 

கடைசிநாள் பிள்ளை அவர்களை அந்த ஊர் ரயில்வே ஸ்டேஷனில் நான் வழியனுப்பிவிட்டு வந்தேன். எனக்கு இன்னும் ஒரு வாரம் ஆவணக் காப்பகத்திலேயே இருந்து முடிக்க வேண்டிய வேலைகள் இருந்தன.

 

மறுநாள் நான் ஆவணக்காப்பகத்தில் பழைய நூல்களையும் காட்டலாக்கு களையும் டைப் செய்யப்பட்ட தாஸ்தாவேஜூகளையும் புரட்டிக் கொண்டிருந்த போது திரும்பிப் பார்த்தால் கதர்ஜிப்பா  போட்ட குண்டான ஒரு வயதான மனிதர். இவரிடம், மதியம் உணவுக்குப் போகும்போது கான்டீனில் வைத்து பேசியதில் இவர் ராஜகோபால் பிள்ளையைத் தேடிவந்தவர் என்றும் பிள்ளை அவர்கள் போய்விட்ட செய்தி தெரியாததால் அன்று அங்கேயே தங்க வேண்டியதாகிவிட்டதால் நேரத்தைப்போக்க ஆவணக் காப்பகத்தில் ஆவணங்களைப் பார்வையிட வந்தவராகவும் தன்னை அறிமுகப்படுத்தினார். இவருடைய பெயர் ஸ்டான்லி குமரப்பா.  சுகவாசஸ்தலத்திற்கு இரண்டு குன்றுகள் தாண்டி அப்பாலிருக்கும் பஞ்சாயத்துக்குத் தலைவர். ராஜ கோபால பிள்ளை காந்தி பற்றி நன்கு அறிந்தவர் என்றும் பல அரசியல் தலைவர்களின் குருபோல் செயல்பட்டவர் என்றும் கூறிய ஸ்டான்லி  குமரப்பா என்னைப் பற்றி விசாரித்தார். என் தந்தை ஒரு கன்னட எழுத்தாளர்,  ஒருகாலத்தில் சுதந்திரப்போராட்டத்தில் ராஜகோபால் பிள்ளையுடன் பெல்லாரி சிறையில் இருந்தவர் என்றேன்.

 

ராஜகோபால் பிள்ளையின் நண்பரின் மகன் என்பதால் ஸ்டான்லி குமரப்பா சகஜமாகப் பழகினார். நவீனகால கன்னட இலக்கியத்தில் நான் ஈடுபாடு கொண்டவன் என்பதைச் சொன்னபோது குமரப்பா அதிகம் அதில் அக்கறை காட்டவில்லை.

 

எனினும், குமரப்பா வைத்திருந்த கையெழுத்துப் பிரதி ஒன்றைப் பார்த்தபோது குமரப்பாவம் எழுத்தாளராக இருப்பாரோ என்று எனக்கு சந்தேகம் ஏற்பட்டதால் கோபாலகிருஷ்ண அடிகா மற்றும் ராமச்சந்திர சர்மா போன்ற கன்னடத்தின் ‘நவ்ய’ இலக்கிய இயக்கத்தைச் சார்ந்த கவிஞர்கள் பற்றிச் சொல்லலாமா என்று யோசித்தேன்.

 

குமரப்பா ஏதோ நினைத்தபடி, அப்போது என்னைக் கண்களில் தீர்க்கமாய் பார்த்தபடி, இப்படிக் கேட்டார்.

 

‘ராஜகோபால் பிள்ளை எழுதிய காந்திமகான் சரித்திரம் என்ற நூல் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?’

 

‘இல்லை; மேலும் நான் தமிழ்ப் படிக்கத் தெரியாத கன்னடம் பேசுபவன். நான் எப்படி  காந்தி மகான்  சரித்திரம் என்ற தமிழ்நூலைப் படிக்கமுடியும்?’

 

‘நீங்கள் நினைத்தால் படிக்க முடியும். ஆனால், நினைக்க வேண்டும். நினைக்கும் சக்தி இருப்பவர்களுக்குப் படிக்க முடியும்’ என்று  நிறுத்தினார்.

 

‘எப்படி? தமிழ் எழுத்து எனக்குத் தெரியாதே’ என்றேன்.

‘எழுத்துத்  தெரியாதவர்களுக்காக இந்தியாவின் பல மொழிகளின் எழுத்துக்களைச் சேர்த்து உருவாக்கிய ‘பாரதம் முழுமைக்கான  லிபியில்’ எழுதப்பட்டது இந்தக் காந்தி மகான் சரித்திரம். கன்னட எழுத்து ஆதியில் பிராமியில் இருந்து தானே வந்தது?.

 

‘ஆம்’

 

‘அப்படி எனில் திராவிடமொழிகளின் மூல எழுத்து பிராமி. சரிதானே?’

 

‘சரிதான்’.

 

அந்த மூல லிபியின் வடிவங்களும் இந்தி, பெங்காளி போன்ற எழுத்துக்களின் மூல லிபிகளின்  வடிவங்களும் சேர்த்து ராஜகோபால் பிள்ளை, ‘காந்தி லிபி’ என்ற பாரதநாடு முழுமைக்கும் ஒற்றை லிபியை உருவாக்கினார். அதை இந்திய மொழிகள் எல்லாம் பின்பற்ற வேண்டும் என்று நேரு பிரதமராக இருக்கும் போது ஓரிரு கடிதங்களை எழுதினார். யாரும் கண்டுகொள்ளவில்லை. அதன்பின் அந்த லிபியைத் தான் ஒருவனே அறிந்தவன் என்றும் எல்லாஇடத்திலும் நிலைத்திருக்கும் லிபியாக அதை மாற்றவேண்டுமென்று யோசித்தார். அதன் விளைவாக காந்திலிபியில் உருவான சரித்திரம்தான் ‘காந்திமகான் சரித்திரம்’.

 

‘ஒரே ஒருவருக்குத் தெரிந்த லிபியின் எழுதப்பட்டுள்ளது காந்திமகான் சரித்திரம்?’.

 

அப்போது என் கேள்வியை செவியுற்ற ஸ்டான்லி குமரப்பாவும் நானும்  அந்தச் சுகவாசஸ்தலத்தில்  ஒரு சிறிய குன்றினருகில் அருகருகே  நடந்து கொண்டிருந்தோம்.

 

ஆமா! அதுதான் இந்த நூலின் சிறப்பு என்று தனது காதித்துணியாலான தோள் பையின் பக்கம் பார்வையைச் செலுத்தினார் ஸ்டான்லி குமரப்பா. தாட்டியான உடலாகையால்  இரைத்தபடி நடந்தார். அன்று நல்ல வெயிலடித்த நாளாகையால் வானம் தெளிவாக இருந்தது.

 

நான் பொறுமையை மீறி “அந்த நூல் உங்களிடம் இருக்கிறதா?”என்று கேட்டதும் குமரப்பா என்னை நோக்கிப் புன்முறுவல்  பூத்தார்.

 

அறையில் போனபிறகு காட்டுவார் என்று நம்பினேன். சில நிமிடங்களில் நாங்கள் தங்கும் விடுதி வந்தது. அவரது அறைக்கு என்னை  அழைத்துக் குமரப்பா வாசிக்க  ஆரம்பித்தார்.  குமரப்பா ‘காந்திலிபியைப்’ படிக்கத் தெரிந்த இரண்டாம் நபர் என்று அறிந்தேன். பின் ஏன் ஒருவருக்கு மட்டுமே காந்திலிபி என்ற அனைந்திந்திய மொழிகளை எழுதும் லிபி  தெரியும் என்று கூறினார் என்ற கேள்வி  எனக்குத் தோன்றியது. கன்னடம், இந்தி, மராட்டி, வங்காளி, அஸ்ஸாமி, ஒரியா, தமிழ், மலையாளம், தெலுங்கு, பஞ்சாபி, மைதிலி, துளு, காஷ்மீரி போன்ற  எல்லா மொழிகளையும் ஒரே லிபியைப் பயன்படுத்தி எழுதும் லிபி புரட்சிகரமானதுதான். ஆனால், அதனை இந்தியாவின் எல்லா மக்களும் அறிந்துகொள்ளவில்லையே என்று எனக்கு வேதனையாக இருந்தது. இதுபோன்ற செய்தியை என் தந்தையான பாலகிருஷ்ண கௌடா ஒரு முறை கோபால கிருஷ்ண அடிகா என்ற எங்கள் மொழியின் புகழ்பெற்ற கவிஞரைச் சந்தித்தபோது கூறினார் என்ற செய்தியை லிங்காயத்து மடம் ஒன்றில் வைத்து ‘மதே ஸ்நான’ என்ற பெயரில் தலித்தினர் பிராமணர் உணவு உண்ட எச்சில் இலைமீது உருளும் சடங்கைக் கேள்விப் பட்டுக் கண்டித்த லங்கேஷ் என்ற பெயரில் கன்னடத்தில் அறியப்படும் எழுத்தாளர் கோபமாகப் பேசிய செய்தி ஒன்று நான் கேள்விப்பட்டதுண்டு. என் தந்தை மரணப்படுக்கையில் இருந்தபோது அவரைப் பார்க்க வந்தத ஓர் இளம் தலித் எழுத்தாளர் இச்செய்தியைக் குறிப்பிட்டதை என் தந்தையின் மரணத்தைப் பற்றி எழுதிய ஒரு பெங்களூர் கன்னடத்  தினத்தாள் அச்சிட்டிருந்தது என் ஞாபகத்துக்கு வந்தது.

 

‘காந்திலிபியைத் தெரிந்த இன்னொருவர் தாங்களா?’ என்று கேக்கும் ஆர்வம் இருந்தாலும் என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு குமரப்பா அடுத்து வாசிக்கப் போவதைக் கவனித்தேன்.

 

‘காந்தி 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி பிர்லா ஹௌஸில் மாலை ஐந்து மணிக்குப் பிரார்த்தனைக்கு வருவார் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தியாகையால் ஒரு சிறிய கூட்டம் அங்குத் திரண்டிருந்தபோது நானும் இருந்தேன். என் நண்பரான பி.பி.சியின் டெல்லி நிருபர்  பாப் ஸ்டிம்ஸன்  என்பவர் காந்தியிடம் ஏதோ கேட்பதற்காக அங்கு வந்தபோது இந்தியரான என்னையும் அழைத்தார்…..’ (இந்த இடத்தில் என் பார்வைக்குப் படாமல் வைத்துப் படித்த காந்திலிபியால் எழுதப்பட்ட நூலைப் படிக்க சிரமப்பட்டு நிறுத்தினார் குமரப்பா.)

 

அதன்பின்பு தட்டுத்தடுமாறிப் படித்தாலும் குமரப்பா என்முன் கொண்டு வரவேண்டிய வாக்கியங்கள் என் மனதில் பதியாமல் போகவில்லை.

 

‘காந்தி காலில் செருப்புடன் பிர்லா ஹௌஸின் புல்வெளியைக் கடந்து இருபெண்களின் மீது சாய்ந்தவாறு நடந்துவந்துபோது மணி 5.12 ஆனது. எல்லோரும் ஏன் இன்று காந்தி பிந்திவிட்டார் என்று கேள்வியை விழிகளால் தெரியப்படுத்தினார்கள். அப்போது ஒருவன் காந்தியின் கால்களில் விழுந்தான். இரண்டு வெள்ளையர்கள் காந்திக்கு 10 அடி தூரத்தில்  நின்று கடவுளைப் பார்ப்பது போல அவரைப் பார்த்துக் கொண்டு நின்றனர்’.

 

குமரப்பா அதன்பின்பு ஒரு நூலை வாசித்தாரா அல்லது பேசினாரா என்ற வித்தியாசமின்றி எதையோ ஒன்றை வாசித்தார். நான் புரிந்துகொண்டேன். ஆதிவாசிகள் உக்ரம் வந்து தலையைச் சுழற்றுவது போல் அவர் செய்யாவிட்டா லும் கண்கள் வெறிகொண்டு நிலைத்தன அவருக்கு.  எனக்குக் குமரப்பாவின் அறையில் இனியும் அமர்ந்திருக்க முடியும் என்று தோன்றாத சூழ்நிலை உருவாயிற்று. காந்தியவாதி போல் தோற்றத்தில் தென்பட்டாலும் ரகசியமாக மது அருந்தும் பழக்கம் உள்ளவரோ  என்று நான் சந்தேகம் கொள்ளும் விதமாக நடந்துகொண்ட குமரப்பாவை நான் சாந்தப்படுத்த முடியாமலானது.   மதம்பிடித்த யானைபோல் தரையில் படுப்பதும் எழுவதும்  ஏதெதோ பேசுவதுமாக  இருந்தவர்  தொடர்ந்து எனக்குப் புரியாத ஒரு மொழியிலே  சுத்தமாய் தெளிவாகப் பேசுவதுபோல் பட்டது.  அந்தப் பேச்சு வெறும்  ஒலி அல்ல; இலக்கணச் சுத்தமான  இன்னொரு மொழி என்பது எனக்கு  நன்றாகத் தெரிந்தது.  நான் பேசுவது  அவருடைய  காதில் விழவில்லை. காந்திலிபி  அவரின் சிந்தனா சக்தியைக் குழப்பியது. அங்கிருந்த சூழல் அப்படிப்பட்டது என நான் அங்கீகரிப்பதை விட வேறு வழியில்லை. இது எனக்கு நன்கு விளங்கியபோது, குமரப்பாவின் அறையிலிருந்து வெளியேறினேன். ஆனால், அவர்  ஏதோ ஒரு மொழிக்குக் காற்றோடு  உரையாடும் தன்மை இருக்கலாம் என்பதுபோல் பேசிக்கொண்டே இருந்தார். தூரத்தில் நடந்துகொண்டிருந்த எனக்கு வெளிக்காற்றும் அவரது வாய்வழி வெளிப்பட்ட புரியாத  மொழி என்னும் காற்றும் கலந்தது போல் பட்டது.

 

காலம் உருண்டோடி விட்டது. பல ஆண்டுகள் சென்றன.

 

ஆனாலும்  பழைய நூல்களையும் வயதான காந்தியவாதிகளையும், பழைய சரித்திரங்களையும்  தேடிப்போகும்  என் சாகசம்  நிற்காமல்  தொடர்ந்தது. அக்காலத்து யுத்த தந்திரங்களும் அரசர்களும்,  ராஜபிரதானிகளும், தளபதிகளும்,  17,18-ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த  ஆங்கில,  பிரஞ்சு படை வீரர்களிடம் இருந்த ஆயுதங்களும்,  முகமூடிகளும் நெஞ்சை மூடும்  இரும்புவலைகள், விதம்விதமான துப்பாக்கிகளும் என்னை ஈர்ப்பதை நிறுத்தவில்லை. இடையிடையே பழங்கால கல்வெட்டுக்களும், மந்திர தந்திர நூல்களும், கௌளி சாஸ்திரங்கள், மூலிகை ரகசியங்கள், யோக நூல்கள், எல்லை இல்லாத் தந்திரமுறைகளைத் தீட்டிய செப்பேடுகள், பல்வேறு சதுரங்க விளையாட்டை விளக்கும் நூல்கள், பாம்பும் ஏணியும் கொண்ட விளையாட்டுப் பற்றிய நூல்கள் போன்றன தொடர்ந்து என்னால் தொகுக்கப்பட்டன. எனக்கு இப்போது எழுபது வயது.

 

இவ்வாறு அலைந்துகொண்டிருந்தபோது சந்தித்த மனிதர் ஒரு தமிழ்ப்பேராசிரியர். நான் கர்நாடகத்தவனாகையால் நான் தமிழ்ப்பேராசிரியர் ஒருவரை சந்திப்பது முதல்முறை. நெற்றியில் குத்துக்கோட்டில் சிவப்பு வர்ணம் போட்டுக் குடுமி வைத்திருந்தார். சமய பக்தர் என்றார். அவர் திருப்பதியில் இருக்கும் வெங்கடேஸ்வரனை வழிபடும் வழியில் நானும் அவரும் ஆந்திராவில் இருக்கும் சித்தூரில் அபூர்வமான பழைய நூல்களைக் கொண்ட நூலகத்தில் சந்தித்தோம்.

 

அவருக்கு – எல்லாம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருக்கிறது என்ற தத்துவத்தில் உடன்பாடிருந்தது – எனக்கு இந்தத் தத்துவத்தில் உடன்பாடில்லா விட்டாலும் நடந்த காரியங்கள் ஆச்சரியப்பட வைக்கத் தவறவில்லை. குடுமி வைத்த, 21-ஆம் நூற்றாண்டில் நான் சந்தித்த தமிழ்ப் பேராசிரியரின், சித்தப்பாவாம் ஸ்டான்லி  குமரப்பா. (ஸ்டான்லி என்பது குமரப்பாவின் குருவான ஒரு வெள்ளைக்கார இந்து சன்னியாசியாம்). அதாவது 90 வயது கொண்ட ராஜகோபால் பிள்ளை என்ற மூத்த காந்தியவாதியின் நண்பர் என்று உரிமை கொண்டாடிக் கொண்டு வந்தவர்.  20 இந்தியமொழிகளை ஒரே லிபியில்  எழுதும்முறையை ராஜகோபால்பிள்ளை கண்டுபிடித்து அந்த அதிசய லிபியில் எழுதிய ஒரே ஒருவருக்குத் தெரிந்த  நூலை (குமரப்பாவுக்கு அந்த லிபி தெரியும் என்றால் இருவருக்கும்  மட்டும் தெரிந்த நூல்)  பல ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் என்னிடம் வாசித்த நிகழ்ச்சி இப்போது என் நினைவுக்கு வந்தது. அந்த நிகழ்ச்சியிலிருந்து விடுபடாமல்  கடந்த பல ஆண்டுகளாக அலைந்து கொண்டிருக்கிற  எனக்கு ராஜகோபால்பிள்ளை என்ற மூத்த காந்தியவாதி இறந்த செய்தி  ஒருமுறை ஹம்பியில் இருக்கும் கன்னட பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்புவிழா நிகழ்ச்சியில் கலந்து பட்டமளிப்பு விழா உரை ஆற்றுவதற்காக வந்த வி.ஐ.சுப்பிரமணியம் என்ற மொழியியல்வாதியால் சொல்லப்பட்டது. வி.ஐ.சு.வின் இளமைக்கால நண்பராம் ராஜகோபால் பிள்ளை.

 

குடுமி வைத்த தமிழ்ப்பேராசிரியரை நான் விடாமல் பின்தொடர்ந்து, இப்போது முழுவதும் தொடர்பில்லாமல் போய்விட்ட அந்தக் கோடை வாசஸ்தலத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களைச்சொல்ல ஆசைப்பட்டேன். சித்தூரில் உள்ள கோயில், குளம் எல்லாம் சுற்றி வந்த குடுமி வைத்த தமிழ்ப் பேராசிரியரோடு  எல்லாக் கோயில் குளங்களையும் சுற்றிய பின்பு ஒரு பாடாவதி லாட்ஜில் (சுதர்சன நாச்சியார் லாட்ஜ்) நானும் அவரும்  தங்கியபோது  என் ஐயங்களைக் கேட்டேன். ஸ்டான்லி குமரப்பாவின் காந்திலிபி பற்றிய பயிற்சி பற்றி ஏதும் சொல்வதற்கில்லை, ஏனெனில் தான் காந்தி லிபி பற்றி இதுவரை கேட்ட தில்லை என்றார் குடுமித் தமிழ்ப் பேராசிரியர். ஆனால் ஸ்டான்லி குமரப்பா பலவிதமான திறமைகள் கொண்டவர் என்பதில் எங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் ஒத்த கருத்து உண்டு; எனவே, அவர் காந்திலிபி பற்றித் தெரிந்திருக்க வாய்ப்புண்டு என்றார் பேராசிரியர்.

 

மறுநாள் சித்தூருக்குப் பக்கத்து ஊர்களில் உள்ள சிறுதெய்வங்களுக்கான கோயில்கள் சிலவற்றைச் சுற்றி வந்துவிட்டால் கர்னாடகத்திலிருந்து வந்துள்ள இலக்கிய நண்பரான எனக்குக் கொஞ்சம் ஆச்சர்யங்களை அளிக்கமுடியும் என்றார் பேராசிரியர்.

 

என் முதுகுவலியையும் 70-ஆம் வயதை கடந்த என் வயோதிகத்தையும் மறந்து, அன்று முழுவதும், கோயில்கள் முன்பு படுத்துக் கிடக்கும் நந்திகளையும் நின்று கொண்டிருக்கும் எண்ணெய் வழிந்தோடும் விநாயகர் கற்சிலைகளையும் சுற்றிச் சுற்றிக் கால்வலிக்க ஓடிக்கொண்டிருந்த எனக்கு அன்று மாலையில் சுதர்சன நாச்சியார் லாட்ஜில் பெரிய ஆச்சரியம் ஒன்று காத்திருக்கிறதென்று தெரியாது.

 

தமிழ்ப்பேராசிரியர் அவருடைய பெயிண்ட் போன ட்ரங்பெட்டியில் (இதனைத்தான்  அவர் பயன்படுத்தினார் என்பது உண்மை) கீழ்ப்பகுதியில் இருந்து உருவிப் பழைய தோல்பையிலிருந்த கறுப்பு வெளுப்பு  போட்டோக்களை எடுத்தபோது  துல்லியமாக நானும் ஸ்டான்லி குமரப்பாவும் சேர்ந்து நிற்கும் படம் அதில் இருக்குமென்று நான் நினைக்கவில்லை. பேராசிரியரும் நினைக்கவில்லை. இது அகஸ்மாத்தாக நடந்ததாக நான் நினைத்தாலும் பேராசிரியர் அப்படி நினைக்கவில்லை என்பதை அவர் நடவடிக்கைகளில் தெரிந்த மாற்றம் காட்டியது. பேராசிரியர் படபடப்புடன்  இருந்ததுபோல் பட்டது.

 

மறுநாள் அதிகாலையில் என்னிடம் வந்து  என் அப்பன் திருமலை இறைவனைத் தரிசிக்க வேண்டும் என நேற்று தூங்கும்போது, கட்டளை வந்துவிட்டது; நான் கிளம்புகிறேன் என்று திருப்பதிக்குப் புறப்பட்ட பேராசிரியர் என்னிடம் ஒரு கத்தை பழம்தாள்களை விட்டுச் செல்வதில் குறியாக இருந்தார்.

 

பழம்பெரும் ஆங்கில சிறுகதையாசிர் எட்கர் ஆலன்போவின் ஆங்கில நடையை நகல்பண்ணி எழுதப்பட்ட காந்திமகான் சரித்திரம் இப்போது என் கையில் இருந்தது. முதல் பக்கத்தில் மொழிபெயர்த்தவர் ஸ்டான்லி குமரப்பா என்றிருந்தது.

 

நான் பல ஆண்டுகளுக்கு முன்பு  தமிழ்நாட்டில் ஒரு கோடைவாசஸ்தலத்தில் இருந்தபோது ஸ்டான்லி குமரப்பாவால் பாதி தெரிவிக்கப்பட்ட மகாத்மா காந்தியின் மரணம் பற்றிய விபரம் தொடர்ந்தது.

 

அதில் இருந்த செய்திகள் எனக்கும் இந்தியாவுக்கும், ஏன் காந்தியைப் பற்றி அறிந்துகொள்ள விரும்பும் உலகத்தவருக்கும், பெரும் கொந்தளிப்பையும் வியப்பையும் கொடுக்கக்கூடிய செய்திகள்.

 

டெல்லியில் காந்தி, பிர்லா ஹௌசில்  புல் தரையில் நடந்து பிரார்த்தனைக்குப் போய் மேடைமீது  ஏறியதும் நான்கு முறை  துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன.(சிலர் மூன்றுமுறை என்கிறார்கள், இந்த வேறுபட்ட வாசிப்பு கவனத்துக்குரியதும் முக்கியமானதுமாகும்) பாய்ந்த குண்டுகளின் மங்கலான ஓசை கேட்டதுவரை இன்றைக்கு எல்லோருக்கும் தெரியும் தகவல்கள் சரி என்றும் அடுத்து நடந்தது வேறு என்றும் அங்கு நின்றிருந்த ராஜகோபல் பிள்ளை ஒருவருக்கு மட்டுமே (ஸ்டான்லி குமரப்பாவுக்கும் அந்த லிபி தெரிந்திருந்தால், இருவருக்கு மட்டும்) தெரிந்திருந்த லிபியில் எழுதிய நூலில்  தெரிவித்திருந்தார். ஏற்கனவே, மூன்றுமுறை  கொலைத் தாக்குதல் முயற்சி  நடைபெற்றதால் ராஜகோபால் பிள்ளையும்  வேறு நான்கு தென்னிந்தியர்களும் அன்று காந்தியைப் பாதுகாத்துக் கடத்திவிட்டார்கள் என்றும் உலகம் காந்தியின் உடல் என்று கருதியது காந்தியைப் போன்ற தோற்றத்தில்  இருந்த காந்தி பக்தரான கும்பகோணத்தைச் சார்ந்த வெங்கட்ராம முதலியார் என்பவரின்  குண்டு துளைத்த உடலைத்  தான் என்றும் தெளிவாய் (ஆனாலும் பழைய ஆங்கிலத்தில் தான்) எழுதப்பட்டிருந்தன. காரியங்களைத் தக்க முறையில் செய்வதில்  சாமர்த்தியம்  கொண்ட ராஜகோபால்பிள்ளை  காந்திலிபியால் எழுதப்பட்ட நூலில் இவற்றை எழுதியதை குமரப்பா பழைய ஆங்கிலத்தில்  மொழிபெயர்த்திருந்த  கையெழுத்துப் படியை நான் படித்து முடித்தபோது எனக்கு எதுவும் புரியவில்லை. காந்திதான் என்று கூறும்படி தோற்றம்கொண்டிருந்த  வெங்கட்ராம முதலியார் வேறுயாருமல்ல. முன்னாள் தமிழ்நாட்டுகாங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியின் சிறுவயது நண்பர். சேலத்தில் காந்தி ஆசிரமம் நடத்தியவர்.

அவர் காந்தியைப் போலவே 1869 அக். 2-ம் நாள் பிறந்து 1948 ஜன 30-ஆம் நாள் மறைந்தவர்.இன்னொருவர்.

தலையைப்பிய்த்துக்கொள்ளும் என் சந்தேகங்களைக் கேட்கலாம் என்றால் குடுமிவைத்த தமிழ்ப்பேராசிரியரும் சித்தூரை விட்டுப்போய்விட்டார். திருப்பதிக்கு நானும் பயணத்தைத் தொடரலாம் என்று யோசித்தபோது அந்த நம்பிக்கையில்லாத நீண்ட பயணத்தின் மூலம் பேராசிரியரைச் சந்திக்க முடிந்தாலும் காந்தி பற்றிய  தகவல்களின் உண்மையை வெளிக்கொண்டு வந்துவிடமுடியாது என்பது புரிந்தது. ஏனெனில் காந்திலிபியில் எழுதிய மூலநூல் எங்கும் இல்லாததுபோல் அதனைப் படிக்கத் தெரிந்த ஒருவர் அல்லது இருவரில் யாரும் இப்போது உயிருடனும் இல்லை.

 

என்னை – அரசியலில் ஈடுபாடோ, கட்சிகளின் செயல்முறைகளில் நம்பிக்கையோ இல்லாத என்னை – காந்திலிபியும் என் தந்தை எழுதியதாகக் கூறிய ‘மைசூர் அரண்மனையின் நிழல்’ என்ற நூலும் ஆக்கிரமித்தன இப்போது. என் தந்தையின் அந்த நூலைப் பற்றி ராஜகோபால் பிள்ளை கூறிய நாளிலிருந்து தொடங்கித் தேடினாலும் அந்த நூல் கிடைக்கவே இல்லை. அப்படி ஒரு நூல் எழுதப்படவில்லை என்று என் தந்தையின் கன்னட இலக்கிய நண்பர்கள் என்னிடம் அடித்துக்கூறுகிறார்கள். பல இடங்களில் தேடியும் கிடைக்காத என் தந்தை பாலகிருஷ்ண கௌடாவின் மாயத்தன்மையுடன் கூடிய நூலும் இன்றில்லாத ஒரு லிபியில், இன்று உயிரோடில்லாதவர் களில் ஒருவர் எழுதிய, இன்னொருவர் ஆங்கிலத்தில் 19-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த எட்கார் ஆலன்போ எழுதுவதுபோல் மொழிபெயர்த்த மகாத்மா காந்தியின் யாரும் நம்பாத சரித்திரத்தைப்பற்றியும் அதன்பிறகு நான் யாரிடமும் கூறமுடியாத வனாய் ஆகிப்போனேன். அது, எனக்குத் தெரியும், மிகுந்த துருதிருஷ்டம்தான்.

 

இன்று – இந்த நிகழ்ச்சிகளும் நபர்களும் என் நினைவிலிருந்து மிகமிக தூரமாகிப் போன சுமார் முப்பது ஆண்டுகள் கழிந்த இன்று – வயோதிகமும் அடிக்கடி அலைக்கழிக்கும் நோயும் பாதிக்குமளவு வேறேதும் பாதிக்கவில்லை என்பதையும் கூறத்தானே வேண்டும்.