பாரதிதாசன் ; தமிழவன்

வண்ணத்துப்பூச்சியின் இறகுகள் . 

  1. பாரதிதாசன் உலகக் கவிஞர் தான்

தமிழவன்

1967-இல் திராவிட அரசியல் ஆட்சிக்கு வந்த பின்பு, அதற்கு முன்பிருந்த காங்கிரஸ் அரசியலின் பண்பாட்டு வரையறுப்பு ஓரளவு மாற்றப்படுகிறது. தமிழ்ச்சார்பு, தமிழர் அடையாளம், தமிழ் வரலாறு, பழந்தமிழ்அக்கரை போன்றன முக்கியத்துவம் பெற்றன. சென்னை மாகாணமென்பது தமிழ்நாடு என்று பெயர்மாற்றப்பட்டது.சமீபத்தில் திராவிட அரசியலை அகற்றுவோம் என்ற குரல் கேட்கிறது.அதாவது தமிழ் அடையாளத்தை அகற்றுவோம் என்பதே அந்தக்குரலின் அர்த்தம்.

முன்பு சுதந்திரப் போராட்டம் பாரதியைத் தமிழ்ப் பண்பாட்டில் முக்கியப்படுத்தியது.    1967-இற்குப் பின்பு பாரதிதாசன் முக்கியமானார். பாரதியின் மூலம் அனைத்திந்தியா என்ற தேசியக் கற்பனை(Nation imagination)யும் அது சார்ந்த அரசியல் – நேரு – காந்தி – தாகூர் போன்ற பண்பாட்டுப் பார்வைகளும் முக்கியமாயின. பாரதியும் பாரதிதாசனும் என்ற தலைப்பில் சி. கனகசபாபதி என்ற இன்று மறக்கக்கப்பட்டுள்ள தமிழ்த்துறை விமரிசகர் ஆய்வு செய்தார்.பாரதி இரட்டைத் தேசியம் என்ற கருத்தாக்கத்தை வலிமையாக்கினார். அதாவது இந்தியா மற்றும் தமிழகம் இரண்டும் அவருக்கு முக்கியம். ஆனால் தமிழ்த்தேசியம் வேறு.தமிழ்த்தேசியம்  2000 ஆண்டுகால தமிழ் வரலாற்றின், தமிழ் இலக்கியத்தின் அடிப்படையில் இருந்து வந்தது. இந்தியத் தேசியம் என்பது மிகவும் மேம்போக்கான 50 ஆண்டு சரித்திரத்தை மட்டும் கொண்ட ஒரு கடந்துபோகும் சரித்திரக் கட்டம்.2000 ஆண்டு எங்கே, வெறும் 50 எங்கே? பாரதிக்குள்ளும் அவரின் காவடிச்சிந்தில் தமிழின் உள்சக்தியான பல ஆண்டுகளின் வலிமை உள்ளதுதான். அதனைச் சுதந்திரதேவி என வர்ணம் பூசினார். எனவே ஆழமான சுதந்திரப் போராட்ட உணர்வு தமிழில் கால் கொள்ளவில்லை.வ.ஊ.சியும் திரு.வி.கவும் மேலோட்டமாக சுதந்திரபோராட்ட உணர்வைத்தமிழில் கொண்டுவந்தாலும் அவர்கள் அடிப்படையில் பெருந்தமிழ்ப்பாரம்பரியத்தின் தொடர்ச்சி. அவர்களிடம் காணப்பட்டது வெறும் அனைத்திந்திய மேல் பூச்சுத்தான். கன்னட ஆஸ்தானக்கவிஞர் என்று அறியப்படும் குவெம்பு என்ற கவிஞர் ஒருவர் உள்ளார். இவருடைய அடிப்படைச் சிந்தனைகளைத் தமிழில் மொழிபெயர்த்து ஒரு நூலாகச் சமீபத்தில் கொண்டு வந்தார்கள். அதற்கு என் பங்கும் இருந்தது. அந்த நூலுக்கு ஒரு முன்னுரை எழுதியுள்ளேன். அப்போது பாரதிதாசனுக்கும் குவெம்பு என கன்னட மக்கள் ஒவ்வொருவரும் பெருமதிப்பு அளிக்கும் 20ஆம் நூற்றாண்டுக் கவிஞரையும் ஒப்பிட்டிருந்தேன். இருவர் பெயரிலும் பல்கலைக் கழகங்கள் உள்ளன. இருவரும் அவரவர் தாய்மொழியைப் போற்றுகிறவர்கள். தாய்மொழியின் வலிமையைத் தத்தம் சிந்தனைகளாக வடிவமைத்தவர்கள். சூத்திரர்களின் பண்பாட்டைப்போற்றுகிறவர்கள்.ஆனால் ஒரு மிகப் பெரும் வித்தியாசமிருப்பதைக் கண்டேன். பாரதிதாசன் சங்க இலக்கியத்திலிருந்து தன் மொழிச்சக்தியைப் பெற்றார். மாறாக குவெம்பு அப்படிப் பெறுவதற்கு வாய்ப்பிருக்கவில்லை.கன்னடத்திற்கு 2000 ஆண்டுக்கு முன்பு  சங்க இலக்கியம் போல ஒன்று அவர்களுக்கு இருக்கவில்லை. எனவே, குவெம்பு முழு ஆளுமையை சுயமரபில் மட்டும் இருந்து பெறாமல் அரவிந்தருக்குப் போகிறார். இது பாரதியும் செய்தது. எனவே தான் சமஸ்கிருதக்கலப்பல்லாத தனித்தமிழிலிருந்து பாரதிதாசன் போல்  நவீன உலகைப் பார்க்கும் சக்தி கொண்ட கவித்துவ ஆளுமை இந்திய மொழிகள் எதிலும் இல்லை. இதனை மறைமுகமாய் மறுத்து பாரதியை மட்டும் புகழும் வடநாட்டு  பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வலம் வருகிறார்.அரவிந்தரும் தாகூரும் வேதங்களில் இருந்து தம் அடிப்படை  கவித்துவத்தைப் பெற்றால் நம் பாரதிதாசன் சங்க இலக்கியம் என்ற உலகின் ஒப்புயர்வற்றதும் இயற்கையோடு இயைந்ததும் திணைகளின் அடிப்படையில் அமைந்ததுமான பழைய இலக்கியத்தில்  இருந்து தன் உள்ளாற்றலைப் பெற்றார். ஓரளவு, அமெரிக்கக் கவிஞரான வால்ட்  விட்மனிடம் அமெரிக்கப்பூர்வ குடிகளின் அதிசக்தி உள்ளது. இந்தக்கோணத்தில் அவரையும் பாரதிதாசனையும் ஒப்பிட்டுக் கட்டுரை எழுதியுள்ளேன். அதுபோல் லத்தீன் அமெரிக்காவின் போர்ஹேஸும் அர்ஜன்டினிய ஆதிவாசிக்குரல் ஒன்று தன் கவிதைகளில் கேட்கமுடியும் என்கிறார்.உலக இலக்கிய ஜாம்பவான்கள் எல்லோரும் எல்லையில்லாப்பழமையில் தத்தம் கவிதைகளின் மூலத்தைக் காண்கிறார்கள். இடதுசாரிச் சிந்தனையாளர் தொ.மு.சி. ரகுநாதன், பாரதிக்கு நிவேதிதா மூலம் உள்சக்தி கிடைத்ததைக் கூறியதுபோல்  பாரதிதாசன் பற்றி எழுதவில்லை என்பது தமிழர்களால் மறக்கக்கூடியது அல்ல. இதுதான் நம் இடதுசாரிகள் தமிழ்மரபில் காலூன்றவில்லை என்பதோ? தெரியவில்லை. தாகூரையும் வால்ட் விட்மனையும் குவெம்புவையும்  பாரதிதாசனையும் ஒப்பிட்டு ஓர் உலகக் கவிஞருக்கான பரிமாணம் பாரதிதாசனில் இருப்பதைக் காண்கிறேன். இன்று உலகம் எங்கும் பரவியுள்ள தமிழர்கள் பாரதிதாசனை உலகக் கவித்துவ மரபாக நிறுவ காரியங்கள் செய்யட்டுமே. தாகூருக்கு உலகம் எங்கும் கோடிக்கணக்கான பணத்தைச் செலவிடுகிறது இந்திய அரசு. பாரதிதாசனுக்குச்செலவிடுமா? பாரதிதாசனை உலகக் கவிஞர் என்று கோட்பாடு எழுதத் தமிழ் விமரிசனத்துக்கு  பலமில்லையே. பலவீனம் எங்கே இருக்கிறது? இந்த அடிப்படை பலவீனத்துக்கு மரபுத்தமிழ் படித்தவர்கள் நவீனத் இலக்கியத்தை ஒதுக்கி வைத்ததே முக்கியக் காரணம். மேலும் இலக்கியம் ஒரு ஆழமான பார்வையாய் தமிழ்க்கல்வியில் இல்லை. சங்க இலக்கியத்தின் இலக்கண அமைப்புப் பற்றியதும் வரலாறு பற்றியதும்  மொழியியல் பற்றியதுமான முனைவர்ப்பட்ட ஆய்வு எத்தனை என்று ஒரு பட்டியல் எடுத்துப்பாருங்கள். இலக்கியத்தின் நவீனச் சொல்லாடல் வேண்டாம். குறுந்தொகையில்  உவமை என்றோ, அகநானூற்றில்  திணைப்பாகுபாடு  என்றோ கூட சாதாரணை இலக்கியத் தலைப்புக்கள் கூட குறைவுதான். உரைநடைமீது தமிழ்க் கல்வி யாளர்களுக்கு அப்படி ஒரு கோபம். எத்தனை ஆயிரம் நாவல்கள்,  சிறுகதைகள் வந்துள்ளன! தமிழாய்வு ஏன் இந்த முக்கியமான இலக்கிய வகைமை (Genre)யைக் கவனிப்பதில்லை? இலக்கியம் பற்றிய புறநானூற்றுக் கோட்பாட்டிற்கும்  இலக்கியம் பற்றிய புதுமைப்பித்தன்  கோட்பாட்டுக்கும்  தொடர்பு இருக்கிறது. இதுபோன்ற தலைப்பு தமிழ்த்துறைகளின் முனைவர் பட்ட தலைப்பாக வரவே வராது. அதற்கு என்ன காரணம்? இலக்கியம், அழகியல், விமரிசனம், கோட்பாடு போன்ற சிந்தனைகள் மேற்கிலிருந்து 18ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு வந்தவை. நம்மிடம் பழைய இலக்கியம் இருக்கலாம். ஆனால் அதனை நூலாகவோ, செய்தியாகவோ, இலக்கண மாகவோ பார்த்துப் பழகியவர்கள் நாம். இலக்கியப் பார்வை என்பது ஒரு  புதுவகை. சமீபத்தில் வந்த புதுவகை என்பதனால் பழந்தமிழ் மதிப்பீடான பழமை போற்றும் தமிழ்மனம் ஏற்கவில்லையா?     ஆனால் தாகூரின் முன்பு கொண்டு வந்து நிறுத்த பாரதி போதாது.(இதுபற்றி பிறகு விரிவாக பார்க்கவேண்டும்.) நமக்குப் பாரதிதாசன் தான் வேண்டும்.ஏனெனின் பாரதிதாசனின் வேர் முற்றிலும் மாறுபட்ட மண்ணில் இறங்கியுள்ளது.சங்க இலக்கிய மண்.

 

ஆக, நம்மிடம் ஒரு அடிப்படை பலவீனம் இருக்கிறது. இந்தப் பலவீனத்தைக் களையாமல் பாரதிதாசனை உலகக் கவிஞராக நிறுவ முடியாது. அப்படி நிறுவுகிறவருக்குப் பாப்லோ நெரூடாவை ஒரு கவிஞராய் வாசிக்கத் தெரியவேண்டும். ரஷ்யக் கவிஞர் மாயக்கோவ்ஸ்கி ஏன் கவிஞராகிறார் என்று கூறத்தெரியவேண்டும். தாகூர், வால்ட்விட்மன் ஏன் கவிஞராகிறார்கள் என்று சரியான இலக்கிய இழையைத் தொட்டுப்பேசத் தெரியவேண்டும்.இருவரும் இன்னதேதியில் பிறந்தார்கள் என்றோ இன்னதேதியில் இறந்தார்கள் என்றோ சொன்னால் போதாது. அவை தகவல்கள்.தகவல் போதாது. இத்தகைய பேச்சுக்கான, விவாதத்துக்கான அடிப்படை நிறுவனங்கள் பல்கலைக்கழக இலக்கியத்துறைகள். தமிழ்த்துறைகள் அல்லது ஆங்கிலத்துறைகள். சமீபத்தில் பெங்களூர் பல்கலைக்கழகத்திற்குரிய துணைவேந்தரோடு பேசிக்கொண்டிருந்தபோது கன்னடம் ஆங்கிலம் என்பவைகள் ஒரே துறையாக நடத்துவது பற்றி யோசித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னார். உடனே, எனக்கு மதுரையில் தெ.பொ.மீ. துணைவேந்தராக  இருந்தபோது தமிழ் மற்றும் ஆங்கில முதுகலை மாணவர்களை ஒரு வகுப்பில் வைத்து  இலக்கியப்பாடம்  எடுப்பார் என்ற செய்தி நினைவுக்கு வந்தது. இலக்கியம் மொழியைக்கடந்த ஒரு மொழி.

 

மீண்டும் பாரதிதாசனுக்கு வருவோம். என் சிற்றிதழ் நண்பர்கள் சிலர் பாரதிதாசன் அவ்வளவு பெரிய கவிஞரா எனக் கேட்பதைக் கவனித்திருக்கிறேன். இன்னொரு குழுவினர் உள்ளனர். பாரதிதாசனைக் கவிஞர் இல்லை என்றால் உயிரை விட்டு விடும் பக்தர்கள். இப்படி இரு குழுக்கள்  தமிழகத்தில் உண்டு. சிற்றிதழ்க்காரர்கள் புதுக்கவிதையின் மேலோட்டமான அளவுகோல்களைப் பாரதிதாசனிடம் கொண்டு வருகிறவர்கள். ஆனால் பக்தர்கள் ஒரு நம்பிக்கையை வைத்திருப்பார்கள். நம்பிக்கையாளர்கள் இலக்கியம் பற்றியல்ல. சினிமா நடிகன், இராமாயணம், பெரியபுராணம் போன்ற எல்லாவற்றையும் ஆய்வு செய்யாமல்  ஒரு முடிவை நம்பும் பக்தகோடிகள். பக்தகோடிகள் மாறுபட்ட  கருத்தை நம்பிக்கையின் அடிப்படையில் பார்ப்பவர்கள். இவர்கள் தங்களுக்கான  இஷ்ட தெய்வங்களுக்குக் கோயில் கட்டுபவர்கள். இவர்களைப் பொருட்படுத்தத் தேவையில்லை. பாரதிதாசனை மறுக்கும் – கவிஞராக ஏற்றுக்கொள்ளாத- சிற்றிதழ் இலக்கியவாதிகளுக்கு வருவோம். இவர்களிலும் சில பக்தர்கள் உண்டு.  அவர்களை விட்டுவிட்டு விமர்சனக் கருத்துக்கள் உருவாக்கத் தெரிந்தவர்களைப் பார்ப்போம். கவனிக்கவும் விமரிசனக்கருத்து உருவாக்கத்தெரிந்தவர்கள். இவர்களோடு விவாதிப்பது பயன் உள்ளது.  பாரதிதாசனை மறுக்கும் இவர்கள்தான் முக்கியமானவர்கள். இவர்கள் ஆங்கிலத்தில் படிப்பவர்கள், தர்க்கிக்கத் தெரிந்தவர்கள். இவர்கள் ஏன் பாரதிதாசனை ஏற்கவில்லை என்ற கேள்வி முக்கியமானது. பாரதிதாசன்  முதல் மூன்று தொகுப்புக்கும் பாண்டியன் பரிசுக்கும், அழகின் சிரிப்புக்கும் இசையமுது முதல் தொகுப்புக்கும்  அப்பால் பாரதிதாசனால் கவித்துவத்தைத் தங்க வைக்க முடியவில்லை என்பவர்கள் இவர்கள்.  குறிஞ்சித்திட்டு, மணிமேகலை வெண்பா,  கண்ணகி காவியம், தமிழச்சியின் கத்தி போன்ற நூல்களில் முதலில் சொன்ன ஐந்து நூல்களின் உள்கவித்துவ ஆற்றல் இல்லை என்பார்கள். ஓரளவு அது உண்மைதான். இந்த இடம்தான் முக்கியம். தாகூர்போல பலவிதமான நாவல்கள் பாரதிதாசனால்  எழுத முடியவில்லை. அப்படியானால்  தாகூர் முன் பாரதிதாசனை  எப்படி நிறுத்த முடியும்? அதுபோல் தாகூர் வரைந்த ஓவியங்களின் அழகியல் உலகு இன்னொரு  பரிமாணம். அது பாரதி, பாரதி தாசனுக்கு இல்லை. மாயக்கோவஸ்கி, நெரூடா, மார்க்கேஷ், போர்ஹேஸ், யாருக்கும் இல்லை. அது ஒரு தனிப் பண்பு. தாகூரின்  சாந்தி நிகேதன், அவரது சிந்தனைக் கட்டுரைகள் இசை,எல்லாம்  கூட உள்ளன. அவருக்கு நிகரான  ஆளுமை உலகிலேயே ஒன்றோ   இரண்டோ தான். ஆனால் ஒரு கவிஞராய் பாரதிதாசன் தனி ஆளுமை. அவரும் ஓர் உலக நிகழ்வு என்கிற கூற்றுக்கு வருவோம். கவித்துவம் என்பது கவிதை, உரைநடைகளின்  அடிப்படை. அந்த முறையில் பாரதிதாசனிடம்  ஒரு பண்பாட்டின் (தமிழின்) அடிப்படை உள்ளது. இந்த அடிப்படை விழுமியம், சங்க இலக்கியம் என்ற மனித – இயற்கை – சார்ந்த அகம் புறம் என்ற குறியீடுகளால்  பிற்காலத்துக்காகச் சேமித்து வைத்த நாகரிகப் பொக்கிஷத்(Civilizational  Treasure)தில் நிலைகொண்டு உள்ளது. பாரதிதாசன் முதல் ஐந்து அல்லது ஆறு நூல்களில்  அது கால்கோள் இடுகிறது. அது 1930களுக்குப் பிறகு  பாரதிதாசன், பெரியார் இயக்கத்துக்கு வந்த பின்பு அவருடைய கவித்துவ மொழி சங்க இலக்கிய – புராதன primitive communism-த்தின் செக்குலாரிசத்தில் கலந்து  ஒரு பேரண்டம்சார் மனித வேறுபாடு கடந்த  அன்பாய் விகசிக்கிறது. அந்த விகசிப்புப் பரப்பு ஒரு மனிதசக்திமையத்தின் நிரந்தர அசைவு. மனிதா்களும், இயற்கையும், கடல், உடுக்கள், என பாரதிதாசன் தமிழ் என்றால் என்ன என(சங்கே முழங்கு…) ஒரு அகண்டாகாரத்தை நவீன தமிழ்மொழியாய் கட்டுகிறாரே அதுதான் எல்லாம். முதல் 6 நூல்கள் வழிவந்த அந்த மொழி என்னும் எழுச்சி தான் பாரதிதாசன் தமிழ்வாசகர்களுக்காகக்கண்டுபிடித்தது. 20ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய தமிழ் நாகரிகச் செயல் அது. இதன் அலை, அவரின் பிற்கால நூல்களில் – மொழிப்பயன்பாட்டில் முழுதாய் இல்லை எனினும் இருக்கத்தான்  செய்கிறது. குடும்பவிளக்கு போன்ற நூல்களை முற்றாய் நிராகரிக்க முடியாது.

 

பாரதிதாசன் செய்த கண்டுபிடிப்பின் உச்சகட்டம் ஒரு நவீன கவித்துவத் தமிழ். அதன் தொடர்ச்சிதான் 20ஆம் நூற்றாண்டில் சி.மணியில் மெதுவாய் தொடங்கி, புதுக்கவிதைக்குள் பருமையான யாப்பை உதறிவிட்டு  ஒரு மென்குரல் யாப்பற்ற தன்மை தொடர்ந்த சங்கதி. இன்று மரபு சார்ந்து, தமிழ், இயற்கை, பூமி, ஆகாசம், நீர், நதி என  புதுக்கவிதை ஒரு பெருமரபாய் 1970களிலிருந்து 2017 வரை ஆயிரக்கணக்கான  புதுக்கவிஞர்களில் உள்குரலாய்  அமைவு பெற்றிருப்பது. அது  பாரதிதாசன் கண்டுபிடித்த  குரல்தான். இதனை நாம் நிரூபிக்கவேண்டும்.(எல்லாத்தமிழ்த்துறைகளிலும் இரண்டு இரண்டு என ஒரு இருபது ஆய்வாளர்களாவது இந்த ஆய்வில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது). இன்று யாரும் பக்திக் கவிதையோ, இராமாயணமோ,  மகாபாரதமோ, மனுநீதியோ,  கீதையோ நவீனப் புதுக்கவிதைக்குள் இன்று வரை பொருட்படுத்தும் விதமாய் எழுதவில்லை என்றால் என்ன பொருள்? பாரதிதாசன் திறந்துவிட்ட தமிழ் மடை கடந்த 50 ஆண்டுகளைக் கபளீகரம்  செய்திருக்கிறது என்று தானே. இதுதான் பாரதிதாசனின் உலக அளவுக்கான பொருத்தப்பாடு.உலகமெங்கும் உள்ள பத்துகோடி மக்களின்  வாழ்வையும் மொழியையும் இணைத்தது பாரதிதாசன் கவித்துவத்தினுடையவும் அதன் மூலம் வந்த தமிழரசியலினுடையவும் அடிப்படையாகும்.இதனை மேலும் நாம் வளர்த்தவேண்டும். அத்தகைய முறையில்  ஒரு விவாதத்தை அறிவுரீதியாகக் கட்டுவதற்குத் தமிழகத்தில் இலக்கியத்துறையில் அறிவு அடிப்படை வளர்ச்சிபெறவேண்டும்.இது ஒரு புது கவிதையியலாகும்.(கவிதையியல் என்பது பலவித தனிக்கவிஞர்களின் கவித்துவத்தின் ஒட்டு மொத்த வரையறுப்பு).இன்று புதுக்கவிதையை விளக்க நாம் பயன் படுத்தும் கவிதையியல் பெரும்பாலும் தனிமனிதர்கள் சார்ந்தது. நான் கூறுவது அது அல்ல.  ஆழ்ந்த 2000 கால தமிழ் மரபிலிருந்து உருவாக்குவதாகும். பாரதிதாசனை அப்படி இனம்காண்பதும் புதுமுறையில் விளங்குவதும் தமிழர்கள் தங்களின் வாழ்வு மீது இன்று படிந்திருக்கும் அடிமைத்தனம் எனும் அழுக்கை அகற்றுவதற்கான முதற்படி ஆகும். அப்படிப்பார்க்கையில் மிகு நவீனமான  கவிதையியல் தமிழின் பழந்தமிழிலிருந்து உருவாகும் கவிதையியலாகும். அதன்வழிதான் பாரதிதாசனை அறியமுடியும்.பாரதிதாசன் உலகக்கவிஞர் என்பதையும் நிலைநாட்டமுடியும்.