ஷம்பாலா : ஓர் அரசியல் நாவல்.ச.வின்சென்.

ஷம்பாலா : ஓர் அரசியல் நாவல்.

ச.வின்சென்ட்

அரசியல் நாவல் என்ற கருத்தியல் தெளிவற்று பல பொருள்தருவதாக இருக்கிறது. என்னென்றேல் அரசியல் என்ற கருத்தியலே அப்படிப்பட்டது. அரசியல் என்பது ஒரு அரசினை மேலாண்மை செய்வதில் பயன்படும் வழிமுறைகளும், யுத்திகளும் என்பார்கள். மேலும் அரசியல் அறிவியல் என்பது அதிகாரத்தின் அறிவியல். அதிகாரத்தையும் அதிகாரத்தை அடைதல் பற்றிய அறிவியல். இந்தச் செயல்பாட்டில் மக்களும் அங்கம் வகிக்கிறார்கள். இன்று அரசியல் எனற சொல் ஆங்கிலத்தில் போலவே தமிழிலும் வேறு சொற்களோடு ஒட்டி வேறு கருத்தியலைத் தருகிறது: வாக்கு அரசியல், சுற்றுச்சூழல் அரசியல், பெண்ணிய அரசியல். எனவே அரசியல் நாவல் என்ற சொற்றொடரிலுள்ள அரசியல் எதைக் குறிக்கிறது?

இன்னொரு பார்வையும் இருக்கிறது.: சிலர் அரசியல் என்ற கருத்தியலையே அனைத்தையும் உள்ளடக்கத்தவாறு விரிவாக்கி இலக்கயமும், ஏன் வாழ்க்கை அனைத்துமே அரசியல்தான் என்பார்கள். கலைக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை என்ற வாதத்தை ஜார்ஜ் ஆர்வெல் ஏற்றுக்கொள்ள மாட்டார்.

ஆகவே, அரசியல் நாவல் என்றால் என்ன என்று வரையறை தருவதும் அதன் கூறுகள் எவை என்று பட்டியல் இடுவதும் எளிதில்லை. இன்றைய நவீன உலகின் சிக்கலான எந்திரத்தனத்தில் மனிதன் என்ன செய்கிறான், எப்படி அவற்றை எதிர்கொள்கிறான் என்று காட்டுவதுதான் ஒரு நாவலின் நோக்கம் என்றால், அரசியல் எனும் இலக்கியவகையும், மனிதன் ஒரு அரசியல் சூழலை எப்படி எதிர்கொள்கிறான் என்று காட்டவேண்டும். அப்படியானால் அதன் உள்ளடக்கமாக இருக்க எவற்றிற்குத் தகுதி? அதன் பின்புலம் எப்படி இருக்கவேண்டும்? சமகாலத்து அரசியல் நிகழ்வுகள், கோட்பாட்டு மோதல்கள், அரசியல்வாதிகள், மக்களின் எதிர்வினை ஆகியவை உள்ளடக்கமாக இருக்க்கும்; அவற்றிற்கு ஏற்ற கதை மாந்தரும் இருப்பர். அதேபோல பின்புலம் சமகாலத்து அரசியல் சூழலைக் கொண்டிருக்கும். நாவலாசிரியர்  ஒரு நடுவு நிலையை எடுத்துக் கொள்ளமுடியாது.. ஜார்ஜ் ஆர்வெல்லும், ஆல்டாஸ் ஹக்சிலியும் தங்கள் அரசியல் நிலைப்பாட்டை, தங்கள் கொள்கையை, விளக்கவே தங்கள் நாவல்களைப் படைத்தார்கள். ஷாம்பாலாவைப் படைத்த தமிழவனுக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கிறது. அவர் படைத்த கதைமாந்தரும் அரசியச் சூழலை வெவ்வேறு வழிகளில் எதிர் கொள்கிறார்கள்

தனது ரிப்பப்ளிக்கில் லட்சிய அரசியல்பேசுகின்ற பிளேட்டோவும், அரசனும் அரசும் எப்படி இருக்கவேண்டும் என்று கற்பிக்கும் வள்ளுவரும், அரசு என்ன என்ன யுத்திகளைத் தான் பிழைக்கக் கையாளவேண்டும் என்று சொல்லும் அர்த்தசாஸ்திரமும் முதல் அரசியல் நூல்கள் என்றால், அரசியல் நாவல் என்பது விக்டோரியாவின் பிரதமர் டிஸ்ரேலியின் படைப்பில் தொடங்குகிறது. ஜோசப் கான்ரட், ஸ்டெண்டால், ஆர்தர் கோஸ்லர், ஏற்கனவே குறிப்பிட்ட ஆர்வேல், ஹக்சிலி  ஆகியோர் அரசியல் நாவலாசிரியர்கள் என்று அறியப்படுகிறார்கள். ஆங்கிலத்தில் எழுதுகிற இந்திய அரசியல் நாவலாசிரியர்களில் முல்க்ராஜ் ஆனந்த், சல்மான் ருஷ்டி, நயன்தாரா சைகல் ஆகியோர் முக்கியமானவர்கள். அரசியல் நாவலை ஒரு இலக்கியவகையாகக் கருதி அதற்குக் கோட்பாட்டை வகுத்தவர்கள் ஸ்பியர் (1923) முதல் இர்விங் ஹவ் (ஃ957) வரை பல திறனாய்வாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அரசியல் நாவலுக்குத் தருகின்ற வரையாறைகள், கூறுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தமிழவனின் ஷம்பாலாவை வாசிக்கலாம்.

அரசியல் நிகழ்வுகள், அமைப்புகள், கோட்பாடுகள் ஆகியவற்றை ஒரு கதையாடல் தொனியில் விமர்சிக்கும் நாவல்கள் அரசியல் நாவல்கள் என்பார் ஒரு கோட்பாட்டாளர். அரசியல் கோட்பாடு அல்லது சிந்தாந்தம் ஒரு முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கும். கோட்பாடுகளுக்கு இடையேயான மோதல்கள் கதைப்பின்னலின் ஓர் அங்கமாக இருக்கலாம். சட்டமியற்றல், ஆட்சி, அதுதரும் அதிகாரம், அதனைக் கையாளும் அல்லது அதற்காகப் போட்டியிடும் அரசியல்வாதிகள், அதிகார மையங்கள், அமைப்புகள் ஆகியனவும் இடம் பெறும், அரசியல் (கொள்கை) பிரச்சாரம், சீர்திருத்தம் ஆகியன நோக்கங்களாக இருக்கும். ஆசிரியரின் அரசியல் நம்பிக்கை அல்லது கோட்பாடு அவரது சார்பு அல்லது எதிர்ப்புநிலை அவர் அரசியல் நிகழ்வுகளையும் அரசியல்வாதிகளையும் விவரித்து பகுப்பாய்வு செய்வதில் வெளிப்படும், நாவலாசிரியர் சில வேளை ஜார்ஜ் ஆர்வெல் 1984 இலும் ஹக்சிலி பிரேவ் நியூ வொர்ல்டிலும் பயன்படுத்தியிருபதைப் போல அதீதக் கற்பனை உலகு எனும் யுத்தியைத் தனது கொள்கையை வெளிப்படுத்தப் பயன்படுத்தலாம்,.

தமிழவனுடைய ஆடிப்பாவை போலே என்ற நாவலைப்போலவே ஷம்பலா வும் இரட்டைக் கதையோட்டங்களக் கொண்டது. .அந்த நாவலில் இரண்டு கதையோட்டங்களும் அவ்வப்போது குறுக்கிட்டுக் கொள்கின்றன. ஆனால் ஷாம்பாலாவில் இறுதியில் சந்திப்பின் தொனிமட்டும் கேட்கிறது. இரண்டும் வேவ்வேறு அரசியல் களங்களைக் காட்டுவதால் இவ்வமைப்பு இருக்கிறதோ? ஆடிப்பாவையை அரசியல் நாவலாக எடுத்துக் கொள்ளமுடியாது, ஏனென்றால் சமகாலக் கதையை அதுசொல்லவில்லை. எனவே அது வரலாறாக ஆகிவிடுகிறது. ஷம்பாலாவின் இரு கதையோட்டங்களுமே அரசியலை, இன்றைய- இருபத்தோராம் நூற்றாண்டு இந்திய அரசியலின் திருவிளையாடல்களை மையமாகக் கொண்டுள்ளன. ஒருபக்கம் கோட்பாடுகளின் மோதல்; இன்னொருபக்கம் தனியாளிடம்- அதுவும் அடாவடித்தனமும் மூர்க்கமும் நிறைந்த தனியாளிடம் அதிகார ஆசையும், அதிகாரக்குவிப்பும் இலக்காக இருக்கும் ஹிட்லரின் எழுச்சி.

இரண்டுமே இன்றைய அரசியல் களத்தில் மக்களாட்சித் தத்துவத்துக்குக் குழிபறிக்கும் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள். சொல்லப்போனால் கேள்வி கேட்பாரற்றுக் கோலோச்சும் சுதந்திரப் பறிப்பு. நாவலுக்கு அறிமுகமாகத் தரப்பட்டிருக்கும் மேற்கோளான சிறுகுறிப்புகளும் (epigraphs) செய்தித்தாள் பகுதியும் இதனை வெளிப்படுத்துகின்றன.

கோட்பாட்டு மோதலில் அமர்நாத்தின் தனியுரிமை மீறப்படுவது இன்றைக்குத் தனிமனிதனின் ஒவ்வொரு அசைவும் நாஜி ஜெர்மெனியைவிடக் கடுமையாகக் கண்காணிக்கப்படுகிறது (snooping, surveillance) என்பது மறைமுகமாக வெளிப்படுகிறது, பெரும்பான்மைச் சர்வாதிகாரத்தில் மக்களாட்சித் தத்துவமே காவுகொடுக்கப்படுகிறது. கருத்து சுதந்திரமும் எழுத்து சுதந்திரமும் இல்லாதபோது மக்களாட்சி எங்கு பிழைக்கமுடியும் என்று அஞ்சுகிறார் அமர்நாத். இன்றைய செய்தித் தொடர்பின் முதுகெலும்பு செல்பேசி. அதன்பயன்பாடும் அதில் பயன்படும் முகநூலும் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது அமர்நாத்தின் சித்தாந்தத்திற்கு ஏற்படையதில்லை. இவையும், பணமதிப்பிழப்பு அன்றாடமக்களைப் பாதிப்பது முதலானவையும் இந்தக் கதையோட்டத்தில் சுட்டிக் காட்டப்படும் இன்றைய நிகழ்வுகள். பெரியம்மாவின் மரணம் பணமதிப்பிழப்பு தந்த பரிசுதான். இன்னொரு கோட்பாட்டு மோதல் மதங்கள்ளையும் சடங்குகளையும் அரசியலாக்கி நாட்டைப்பிளவு படுத்துகிற இன்றைய வலதுசாரிகளால் ஏற்படுகிறது

இன்னொரு கதையோட்டம் ஹிட்லர் என்பவனின் அரசியல் எழுச்சியின் வரலாறு. அவன் குழந்தைப்பருவ அனுபவங்களும் அவனுடைய இயற்கை உந்துதல்களும் எப்படி அவனை ‘ஹிட்லராக’ உருவாக்கின என்பதை இங்கே விளக்கமுடியாது. மூர்க்கத்தனமான பேராசைக்காரனிடம் நுண்ணறிவும் உடல் வலுவும், சிலவேளைகளில் வெளிப்படும் மென்மையான உணர்வுகளும் ஒருவனில் சேரும்போது அரசியல்செய்வது அவன் கைகளில் இயற்கையான விளைவாக ஆகிவிடுகிறது. இறுதியில் சொல்லப்படுவதுபோலவே வரளாற்று ஹிட்லராகவே அவன் மாறிவிடுகிறான். இன்றைக்கு நம்து நாட்டில் அடாவடித்தனம் செய்தே பதவிக்கு வந்தவர்களின் ஒட்டுமொத்த உருவம் அவன்.. அவ்வளவுதான்.. நாவலின் பின்னட்டையில் அமர்நாத் நாவலின் ‘மையக் கதாபாத்திரம்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் மில்டனின் சாத்தானைப் போல ஹிட்லர்தான் கதை முழுவதையும் ஆக்கிரமித்துக்  கொண்டிருக்கும் எதிர் நாயகன்போலத் தோன்றுகிறான். அமர்நாத் கதையில் அரசியல் சார்ந்த நிகழ்வுகள் காணப்பட்டாலும் கோட்பாட்டு மோதல்கள் மறைமுகமகமாகவே வெளிப்பாடுகின்றன. ஹிட்லர் கதையே அரசியல்தான். இப்படித்தான் அரசியல் நடக்கிறது என்று நம்மைப்போன்ற சாமான்யர்களூக்கும், ஆசிரியருக்கும்கூட தெரிந்திருக்க நியாயமில்லை. எல்லாம் திரைக் கதைகளின் மூலம் பெற்ற அறிவுதான். அதனால்தானோ என்னவோ ஹிட்லரின் கதைப்பகுதியில் சினிமாத்தனம் தெரிகிறது.

சரி, கடைசியில் ஷம்பாலா எங்கிருந்து வருகிறது? தண்டிபத்லா சாஸ்திரி ஏன் வருகிறார்? இன்றைய அறிவியில் அனைத்தும் வடமொழிநூல்களில் என்று பெருமை பேசும் அரசியலை சாஸ்திரி மூலம் பகடி செய்கிறாரா, ஆசிரியர்? பல அரசியல் நாவல்களில் கதைக் களமாக இருக்கிற ஆர்வெல்லிலும் ஹக்சிலியிலும் வருகிற அதீதப் புனைவுலகினைக் கொண்டுவருகிறார். ஜேம்ஸ் ஹில்டன் தனது நாவலில் முழுமையடைந்த அழகிய அதீதக் கற்பனை உலகிற்கு ஷங்க்ரி லா என்று பெயர் வைத்தார். அவர் திபெத்திய புத்த புனித அரசாகக் கருதப்பட்ட ஷாம்பாலா என்ற தொன்மத்திலிருந்து எடுத்தாண்டார் என்று சொல்வார்கள். இது மிக உயர்ந்த முழுமை நிலையிலுள்ள லட்சிய உலகு, உடோப்பியா. ஆனால் தமிழவனின் ஷிம்பாலா இதற்கு நேர் எதிர் ஆனது. அங்கே அதிகாரம் குவிந்திருக்கும். பெருந்துன்பமும் அநீதியும் ஆட்சி செய்யும். இது டிஸ்டோப்பியா. அதைத்தான் நமது ஹிட்லர் தேடுகிறான். வரலாற்று ஹிட்லரும் அதைத்தான் தேடினார். இங்கு ஆர்வல், ஹக்சிலி நாவல்களின் கற்பனை உலகில் இருப்பதுபோன்ற அதிகார வன்முறை ஆட்சியமைப்பு இருக்கும் ஃபூக்கோ ஒரு சமுதாயத்தினுள் அதிகாரத்தைப் பயன்படுத்தும் ஆட்சிஅமைப்பையும் அதன் மூலமான அறிவையும் பற்றிக் கூறுகிறார்.    .. அறிவும் அதிகாரமும் இணையும்போது என்ன நடக்கும்? தமிழவனின் ஷிம்பாலாவில் வடமொழி நூல் காட்டும் அறிவு அதிகார மையத்தை ஏற்படுத்தும்ப்போது உரிமை, சுதந்திரம் என்ற கோட்பாடே இல்லாது போகும்.

இவ்வாறு தமிழவனின் ஷிம்பாலா நாவலில் ஓர் அரசியல் நாவலின் கூறுகள் அனைத்தும் இடம்பெறுகின்றன. தமிழ் அரசியல் நாவல்கள் என்ற ஒரு இலக்கிய வகையில் இது சிறப்பாகக் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று.

 

ஷம்பாலா, தமிழவன். பாரதி புத்தகாலயம் வெளியீடு 2019. பக் 220. விலை ரூபாய் 215.

ச. வின்சென்ட்

தமிழவன் புதிய புதினம்;எதேச்சாதிகாரத்தின் பின் இயங்கும் உளவியலைப் பேசும் நாவல்

எதேச்சாதிகாரத்தின் பின் இயங்கும் உளவியலைப் பேசும் நாவல்

ஜி.குப்புசாமி

தமிழில் அரசியல் நாவல்களுக்கு நீண்ட வரலாறு உண்டு. சுதந்திரப் போராட்ட காலத்தின் தேசபக்தி நாவல்கள் தொடங்கி , திராவிட , இடதுசாரி, பெண்ணிய, தலித்திய அரசியல் நாவல்கள் தத்தமது  சமூக , அரசியல் , பண்பாட்டுப் பார்வைகளோடு இன்றும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. தற்போது நாவலின் அட்டையிலேயே  ‘ ஓர் அரசியல் நாவல் ‘ என்ற உபதலைப்புடன் வந்திருக்கும் தமிழவனின் ‘ ஷம்பாலா ‘ மிகவும் வெளிப்படையாக இன்றைய வலதுசாரி, மதச்சார்பரசியலையும் , ஆட்சியாளர் , குடிமக்களின் மாறிவரும் உளவியலையும் சித்தரிக்கும் காத்திரமான நாவல்.

தமிழவனின் முந்தைய நாவல்களில் பூடகமாக வெளிப்பட்ட அரசியல் பார்வை இந்நாவலில்  நேரடியாக வெளிப்படுகிறது. ‘ சரித்திரத்தில் படிந்த நிழல்கள் ‘ என்ற இவரது ‘ உருவக நாவ ‘ லில் திரைப்பட மோகம் , மொழி அதிகார அரசியல் , அயோத்தி, யாழ்ப்பாண நூலக எரிப்பு போன்றவற்றை உள்ளடக்கிப் பேசியிருந்தாலும் , ‘ ஷம்பாலா ‘ வில் இன்றைய அரசியல் நிகழ்வுகளின் பின்னால் இயங்கும் உளவியல்கூறுகள் கதாபாத்திரங்களின் வழியாக விவாதிக்கப்படுகின்றன.

‘ ஷம்பாலா ‘ நாவலை வாசிக்கத் தொடங்கும்போதே சென்ற நூற்றாண்டில் வெளிவந்த சில எதிர்கால துர்க்கற்பனை (dystopian ) நாவல்கள் நினைவுக்கு வருகின்றன. குறிப்பாக ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984 என்ற புகழ்பெற்ற நாவலில் நாட்டுமக்களின் சிந்தனைகளை வேவு பார்க்கும் ‘சிந்தனை காவல்துறை‘ இந்நாவலிலும் முக்கியப் பங்கெடுக்கிறது. அல்டஸ் ஹக்ஸ்லியின்  ‘துணிச்சலான புதிய உலகம்‘ நாவலில் இடம்பெற்ற மரபணு ஆய்வு மூலம் ஒரே கருமுட்டையிலிருந்து பலநூறு கருக்களை வளர்த்து , ஒரே மாதிரியான சிந்தனையமைப்பு கொண்டவர்களை உருவாக்கும் முறை இந்நாவலில் ஊடக பிரச்சாரம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

நடப்பு காலச்சூழலுக்கு மாற்றாக எதிர்கால சமூகம் ஒன்றை கற்பனையில் சித்தரித்துப் பார்ப்பது ஷேக்ஸ்பியரின் ‘The Tempest’ முதல் இலக்கிய உலகில் நடந்து வருகிறது. எதிர்கால உலகம் நன்நெறிகளோடு உன்னதமாக இருக்குமென கற்பனை செய்வதை ‘Utopia’ என்றும், எதிர்காலம் தீநெறிகளோடு மிகமோசமாக இருக்குமென கற்பனை செய்வதை ‘Dystopia’ என்றும் வகைப்படுத்தப்படுகிறது. மேற்சொன்ன ஆர்வெல் , ஹக்ஸ்லி ஆகியோரின்  நாவல்களும் சமீபத்தில் வெளிவந்த மார்க்ரெt அட்வுட்டின் ‘The Handmaid’s Tale‘ ‘The Testements‘ ஆகியவையும் துர்கற்பனைகள்தாம். ஆனால் இந்நாவல்கள் அனுமானித்த துர்க்கனவு நிகழ்காலத்தில் நனவாகிவிட்டிருப்பதையும், இன்றைய சூழல் எந்தளவுக்கு சுதந்திரச்சிந்தனைக்கும் , அறிவுச்செயற்பாடுகளுக்கு எதிராக இருக்கிறது என்பதையும் எந்தத் தரப்பின் சார்பாகவும் நிற்காமல் சுயமான குரலில் பேசுகிறது ‘ஷம்பாலா’.

நாவலின் மையப்பாத்திரமான பேராசிரியர் அமர்நாத் ஓர் அறிவுஜீவி , சுதந்திரச் சிந்தனையாளர் . அவர் வீட்டுக்கு சிந்தனை போலிஸ் நுழைந்து அவரது கட்டுரைகளை கையகப்படுத்துகின்றனர். அவர் பயன்படுத்தும் சொற்கள் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டவை என்கின்றனர். “ நீங்கள் நிறைய வார்த்தைகள் தெரிந்தவர் என்றும் , நாட்டுப்பற்று என்ற சொல் உங்களிடம் இல்லை என்றும் காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது” என்கிறார்கள். அவர்கள் அவரைக் கைது செய்வதில்லை, ஆனால் மிக நுட்பமாக அவர் மீது உளவியல் தாக்குதல் நடத்துகின்றனர்.  அவர் வீட்டு கழிவறையை , உள்ளாடைகளை சோதனை செய்கின்றனர்.  அவர்கள் சென்ற பிறகு , வீட்டில் பத்திரமாக இருக்கும் அவருடைய மகள் கடத்தப்பட்டதாக போலீசுக்கு புகார் வந்திருப்பதாகவும் , காவல்துறை தேடலுக்கு அமர்நாத் ஒத்துழைக்க வேண்டுமென்றும் குறுஞ்செய்திகளும், தொலைபேசித் தகவல்களும் தொடர்ந்து வந்தபடி இருக்கின்றன. அமர்நாத் போன்ற அறிவுலக செயற்பாட்டாளர்களே எதேச்சாதிகார அரசுகளுக்கு பெரும் அச்சமளிப்பவர்களாகக் கருதப்படுகிறார்கள். அவர்களை உளவியல்ரீதியாக ஒடுக்குவதுதான் இன்றைய புதிய அடக்குமுறை உத்தி.  “புத்தகங்களை அழிப்பது பழைய முறை;  புத்தகங்களை உருவாக்கும் மனங்களை ஆட்சியாளர்கள் அழிப்பதுதான் புதியமுறை. “ (பக். 189 )

மனிதாபிமானச் சிந்தனையும் , அறநெறி ஓழுக்கங்களும் கொண்டவர்களுக்குப் பெரும் துயரளிப்பவை சக மனிதர்கள் – குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர் – அதிகாரத்துக்குப் பணிந்து போவதும் அடக்குமுறைகளைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல் இருப்பதும், அரசு வன்முறைகளை நியாயப்படுத்தும்படியான காரணங்களைத் தாமே கண்டுபிடித்து தங்களுக்குள் சமாதானம் செய்து கொள்வதுமே. இந்த மத்தியமர் நிலைப்பாட்டுக்குப் பின்னால் உள்ள உளவியலையும் அறிவுச்சமூகம் தமது முன்னெடுப்பில் தவறவிடுகின்ற இடங்களையும் தமிழவன் நாவலின் பாத்திரங்களின் வழியே பேசுகிறார். பற்பல கட்டுரைகளின் வழியாகச் சொல்லவேண்டிய விமர்சனங்கள் நாவலின் இயல்பான போக்கில் உரையாடல்களாக, விவாதங்களாக இடம்பெற்றுவிடுகின்றன.

”மக்களுக்கு எப்போதும் எதிலும் திருப்தி இருப்பதில்லை. ஒன்றைப்  பூர்த்தி செய்தால் அடுத்ததை ஏன் பூர்த்தி செய்யவில்லை என்று கேட்பார்கள். இன்றைய ஆட்சியாளர்கள் மக்களின் இந்த இயல்பைப் புரிந்து அவர்களை ஒரு பயத்தில் எப்போதும் வைத்து, இருப்பது போதும் என்று ஆட்சியாளர்களைக் கேள்வி கேட்காத மனநிலையை உருவாக்கிவிடுகிறார்கள்”. (பக்.58)

“ உலகம் முழுவதும் எதேச்சாதிகாரப் போக்குள்ளவர்களும், ஜனநாயகப்பண்புகளைத் தோண்டிப்புதைக்கும் நபர்களும் இயக்கங்களும் தேர்தலில் வெற்றி பெற்று வருகிறார்கள். தங்களுக்குக் கஷ்டம் கொடுத்தாலும் இந்த எதேச்சாதிகாரிகளை மக்கள் எதற்காகத் தொடர்ந்து தேர்ந்தெடுத்து வருகிறார்கள் என்பதை விளக்கிக் கூறுவதற்கு நமது அறிவுத்துறை வளரவில்லை. “

இத்தகைய நேரடியான விமர்சனங்களைத் தவிர, நாவலில் எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத, வழக்கத்துக்கு மாறான சில சம்பவங்கள் நடக்கும்போது அவை உளவியல் ரீதியாக விளக்கப்படுகின்றன. ஒரு தலித் மாணவன் தன்னை தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் என்று அழைக்கும்போது அவமானமாக உணர்வதாகவும் , ஆனால் ‘நாங்கள் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள்‘ என்ற முழக்கத்தில் சேர்ந்து கொள்ளும்போது அவனுக்கு ஆன்ம திருப்தி கிடைப்பதாகவும் சொல்கிறான்.

அமர்நாத்தின் முஸ்லிம் நண்பர் ஒருவர் அவரது  தெருவில் உள்ள மைனாரிட்டி முஸ்லிம்கள் எல்லோரும் வலதுசாரிகளுக்கு ஆதரவாக வாக்களித்ததாகச் சொல்கிறார். வலதுசாரிகள் யாரும் அவர்களை வற்புறுத்தவோ தொந்தரவு செய்யவோ இல்லை. ஆனாலும் ஒரு காவியுடை சாமியாருக்கு வாக்களித்துவிட்டு வந்ததன் பின்னால் இருக்கும் மனநிலையை அமர்நாத் விளக்குகிறார்.

“ரகசியமாக வலதுசாரிக்கு வாக்களிக்கிற முஸ்லிம்தான் பிரிவினையின் போது இந்த நாட்டில் வாழ்வதற்காக ஒரு முடிவு மேற்கொண்டவனின் தேர்வு. அது நாளடைவில் ஒரு தவறான உளவியலை அவர்களுக்குத் தருகிறது ……. இந்த முஸ்லிம் வாக்காளன்தான்., ஒருவகையில் இந்த நாட்டின் வலதுசாரி பாசிஸத்தை உருவாக்குகிறான். ‘அடங்கிப் போய்விடுவோம்‘ என்ற மனநிலை எப்போதுமே மறுபக்கத்தில் பிய்த்துக் கொண்டு வெளியில் வந்துவிடும். அடிமைத்தனத்தின் உளவியல் மிகவும் ஆபத்தானது …………‘சுதந்திர உணர்வுதான் மனிதனை தீர்மானிக்கும் அடிப்படை உயிராற்றல்‘ என்கிறார்  சார்த்தர்“. (பக் .101 )

இந்துத்துவ வலதுசாரிகள் மக்களிடையே செல்வாக்கு பெறுவதற்கும், இடதுசாரிகள் ஆதரவு இழந்து வருவதற்கும் விவாதத்துக்குரிய ஒரு புதிய காரணம் நாவலில் சொல்லப்படுகிறது.ல் “இடதுசாரிகள் இல்லாத ஒரு லட்சிய உலகை  மனதில் கொண்டு அதற்காக வக்காலத்து வாங்குகிறார்கள். ஆனால் இந்துத்துவ வலதுசாரிகள் இருப்பதை மட்டும் லட்சியமாக காட்டுகிறார்கள்’ (பக்.182).

இதைப்போலவே சர்ச்சைக்குரிய பல சிந்தனைகளும் நாவலின் பாத்திரங்கள் வழியே எழுப்பப்படுகின்றன. “ புத்தகங்கள் , அறிவு போன்றவற்றை உள்வாங்கிக் கொள்ள முடியாதவர்களுக்கு உடல்உழைப்பு வாழ்க்கையில் வெற்றி ஈட்டித்தரும் வழியாகத் தெரிகிறது. …  அப்படியானவர்களின் மனதில் வெகு எளிதாக மதவெறி எண்ணங்களையும் , மற்றவர் மீதான வெறுப்பு, எதிர்ப்பு கோப எண்ணங்களையும் வலதுசாரிகளால் புகுத்திவிட முடிகிறது. (பக்.184,188)

அநேகமாக எல்லா சமகாலப் பிரச்சனைகள் குறித்தும் நாவலில் பேசப்படுகிறது எனலாம். கோடீஸ்வர தொழிலதிபர்கள் வங்கிகளிடமிருந்து பெருந்தொகைகளைக் கடனாகப் பெற்று தலைமறைவாவது , சபரிமலையில் பெண்கள் நுழைவு, பணமதிப்பிழப்பு மலைப்பகுதி பழங்குடியினரிடம் செல்லும்படி ஆகாதது , மத அரசியல் செய்பவர்களின் பொதுநலப்பணிகள் , என்கவுன்டர் கொலை செய்ய ஆட்சியாளர்களிடமிருந்து காவல்துறைக்கு வரும் மறைமுக அழுத்தங்கள் , ராமர் கோயில் கட்டியபின்பு அடுத்த 150 வருடங்களுக்கான பொருளாதார மூலதனம் கிடைக்கும் என்ற ரகசியத்திட்டம் என விரிவான தளத்தில் தமிழவனின் கூர்மையான அலசல்கள் நாவலில் உறுத்தாமல் கலந்திருக்கின்றன.

‘ ஷம்பாலா ‘ என்ற இடம் திபெத்தில் உள்ளதாகவும் உலகிலேயே அதிகமான அதிகாரம் உறைந்திருக்கும் இடம் என்றும் , அந்த இடம் உலகத்தை அழிக்கவும் ஆக்கவும் வல்லது என்றும் தொன்மக்கதைகள் கூறுகின்றன. அந்த இடத்தை அடைந்து பெரும் சக்தியைப் பெற்று பெரும் அதிகாரத்தைப் பெறுவதற்கு மிகச்சாதாரண நிலையிலிருந்து அமைச்சராக உயர்ந்த ‘ஹிட்லர்‘ என்ற பெயர் கொண்ட ஒரு பாத்திரம் தயாராவது இந்நாவலுக்குள்ளே பொதிந்திருக்கும் ஓர் உபகதையாகியிருக்கிறது. மையக்கதைக்கு இணையாகச் செல்லும் இது அமர்நாத் எழுதும் கதை என்று நாவலில் சொல்லப்படுகிறது. அதிகாரப் பிரயோகம் ஒவ்வொரு தளத்திலும் இயங்கும் விதங்களைப் பதிவு செய்வதாக இருந்தாலும் நாவலின் தீவிரத்தன்மையை இப்பகுதி சற்று தளர்வடையச் செய்கிறது.

பிரச்சாரங்கள் , கட்டுரைகள் மூலம் முன்வைக்கப்படும் விமர்சனங்களை விட ஓர் இலக்கியப்படைப்பின் குரல் கூர்மையானது என்பதை தமிழவனின் ‘ ஷம்பாலா ‘ நிரூபிக்கிறது.