TAMILAVAN INTERVIEW IN PUTHAKAM PESUTHU AUGUST ISSUE

புத்தகம் பேசுது வாசகர்கள் சார்பாக வணக்கங்கள், தமிழ் இலக்கிய விமர்சன உலகம் உங்களைப்போன்ற திறனாய்வாளர்களை, நாவலாசிரியர்களை, புறந்தள்ளிவிட்டுப் போகமுடியாத ஒரு இலக்கிய விமர்சன மேடையில் இருக்கிறீர்கள், உங்களுடைய இளமைக்காலங்கள் குறித்து எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

நான் இப்போதைய குமரிமாவட்டத்தில் பிறந்தேன். மலையாளமும் தமிழும் கலந்து பேசும் கல்குளம் பகுதியில் மலையடிவாரக் கிராமம். அப்போது வளர்ச்சியடையாத ஊர்.  இன்று வளர்ச்சியடைந்த ஊர். அப்போது அது  திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் இருந்தது.  பிறந்தது மிகச்சாதாரண குடும்பம். ஊரில் கல்லூரிக்குச்சென்ற மூன்று நான்கு பேரில் ஒருவன். ஏழாவது வயதில் அப்பகுதியைத் தமிழகத்தோடு சேர்க்க நடந்த, நேசமணி தலைமையிலான போராட்டத்தில், துப்பாக்கிச் சூடுகள், சிறைத்தண்டனைகள், சித்திரவதைகள் அனுபவித்தவர்களைக் கண்டு தமிழ் உணர்வு ஏற்பட்டது. அது நிலவுடைமையாளர்களான மலையாளம் பேசும் நாயர்களுக்கு எதிரான போராட்டமும் கூட.  பனை ஏறும் தொழிலாளர்களும், கூலி விவசாயிகளும் அதிகம் நடமாடும் ஊர். ஏழை கிறிஸ்தவ மீனவர்களும் இருந்தனர். கிறிஸ்தவர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள் என எல்லா மதத்தவர்களும் ஒற்றுமையாக வாழ்ந்தனர். பொருளாதாரத்தில் முஸ்லிம்களும் மலையாள நாயர்களும் உயர்ந்தநிலை. நான் பள்ளி யிறுதிவகுப்பிலேயே யாப்புக்கற்று வெண்பா, ஆசிரியப்பா எல்லாம் எழுதுவேன். 1962 -இல் பாளையங்கோட்டைக்குப் படிக்க வந்தேன். கிராமத்தில் மலையாளம் கலந்த தமிழைப்பேசிய நான், என் தமிழை மாற்றுகிறேன். அது ஒரு புது உணர்வு. அதுபோல முதன் முதலாக மையத்தமிழத்துக்கு வந்த உணர்வு. முற்றிலும் வேறு உலகம். கல்லூரி மாகசினில் கவிதைகள் எழுதுவேன்.விலங்கியலில் இளங்கலை மாணவன் நான். முதலாண்டு படிக்கும்போது என்கதை தினமலரில் வந்தது. என்விடுதி நண்பர் வலம்புரி ஜான், அக்கதையை நோட்டிஸ் போர்டில் கொண்டு செருகி வைத்து அக்கதை எழுதிய மாணவன் விடுதியில் எந்த அறை எண்ணில் இருக்கிறான் என தகவல் கொடுக்கிறார். திடீர் புகழ்.  அந்த விடுதிக்கு, பின்னர் இன்றைய காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வருகிறார். வைக்கோ அவர்கள் பக்கத்து விடுதி.நான் புதுமையாக ‘காதலும் கத்தரிக்காயும்’ என சிலேடை வைத்து எழுதிய வெண்பா அடுத்து தினமலரில் வருகிறது. தளை தட்டாத யாப்பில் கவிதைகள் பிரசுரித்துக்கொண்டேயிருக்கிறேன். விலங்கியல் படித்துவிட்டுக் கேரளப்பல்லையில் தமிழ் முதுகலை முடித்தேன். பாளையங்கோட்டையில் படித்த கல்லூரியில் வேலை. ஆசிரியன் ஆன பின்பு கண்ணதாசன், தீபம், தாமரை, அப்போது வந்துகொண்டிருந்த தமிழ்நாடு என்ற நாளேடு என என் எழுத்துப் பயணம் தொடர்கிறது. ஆராய்ச்சி, ஆசிரியர் நா.வா. –வைச் சந்தித்தல். அவர் என் திசையை மாற்றுகிறார். 1971-இல் இருந்து தொடங்கி, அவர் மரணம் வரை வந்த எல்லா ஆராய்ச்சி இதழ்களையும் வரிவரியாகப் படித்து விட்டுப் பெரிய உணர்வுக் கொந்தளிப்புக்கு ஆட்படுதல். மனம் மார்க்க்சியத்தை அறிவதிலும் மேலும்மேலும் அறிவுப்பிரச்சனைகளையும் சமூகத்தின் வாழ்க்கைப்பிரச்சனைகளையும் இணைத்துப்பார்ப்பதிலும் தீவிரம் கொள்கிறது. இளமையில் கோவை ஞானியைச்சந்தித்தபோது மார்க்சியத்தில் வேறு சில வற்றைப்புரிந்துகொள்கிறேன். எழுத்து இதழ்களைச்சந்தா (இரண்டு ரூபாய்) கட்டிப் படித்ததில் வேறு கோணங்கள் அறிமுகமாதல். இப்படிப் புதிய புதிய கேள்விகள் தோன்றுகின்றன.  சுருக்கமாய்ச் சொல்வதென்றால் அதுவரை ஆங்கிலமே தெரியாத ஒரு இளைஞனைத் தமிழ்ச்சமூகம் இப்படி உருவாக்கியது.  இங்கே 1965 –இல் நான் இளங்கலை படிக்கும்போது தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பின் தாக்கமும் மனதின் உருவாக்கத்தில் பங்கு வகிக்கின்றது என்ற உண்மையைச்சொல்ல நான் மறக்கக்கூடாது..

உங்கள் பாளையங்கோட்டை ஆசிரியர் வாழ்க்கையின் போது என நினைக்கிறேன், என் ஞாபகம் சரியாக இருக்குமானால், ‘ஆக்டோபஸ்என்ற ஒரு கவிதைத் தொகுப்பில் கூட உங்களது பங்களிப்பு இருந்ததாக பின்னாட்களில் படித்த ஞாபகம்… 

அந்தக் கவிதைத் தொகுப்பின் பெயர் ஆக்டோபஸும் நீர்ப்பூவும் அது 1972 –ல் வெளிவந்தது. அதில் வேறுவேறுபெயரில் ஆறுபேர் புதுக்கவிதையாக யாப்பின் எல்லா மரபையும் உடைத்து எழுதியிருப்போம்.சென்னைப்பல்கலையில் மொழியியல் பேராசிரியராய் பின்னாளில் புகழ்பெற்ற தெய்வசுந்தரம், ‘மேலும்’சிவசு, இப்போது நாடகம், சினிமாவில் புகழ்பெற்றுள்ள மு.ராமசாமி, டெல்லி பல்கலையில் தமிழ்ப்பேராசிரியராய் பின்னாளில் புகழ்பெற்ற மாரியப்பன்,மற்றும் நான் ஆகியோர் அதில் முற்றிலும் மாறுபட்ட புதுக்கவிதைகளை எழுதினோம். அதன் புதுமை என்ன வென்றால்; அப்போது தமிழில் வந்த புதுக்கவிதை சமூக விமரிசனமாக இருக்காது.  அது வெறும் அழுகுணிச்சித்தரின் வெளிப்பாடுதான் என்று எல்லோரும் கருதிய நேரத்தில் சமூக விமரிசனத்தை உணர்வு கலக்காமல் எல்லாக்கவிதைகளும் வெளிப்படுத்தியதுதான். தேன்குரல், பன்னீர்புஷ்பம், இளநிலவு, வசந்தம், புல்லாங்குழல் என்று பலர் எழுதியபோது இப்படி எழுதியது ஒரு மாற்று. மேலும் அப்போது பரவலாகத்தெரிந்திருந்த எழுத்து, மற்றும் கசடத பற, என்ற இதழ்கள் கவிதைகளுக்கு மாறாகவும் இன்னொரு பாதையை முதன்முதலில் இக்கவிதைகள் வெளிப்படுத்தின. எழுதியவர்கள் எல்லோரும், அன்று மாணவராய் இருந்தவர்கள் அல்லது இளம் ஆசிரியர்கள். இந்நூலுக்கு வேறு பெயரில் முன்னுரை எழுதிய நாச்சிமுத்துவையும் சேர்த்து, எல்லோரும் முப்பது வயதுக்கு உட்பட்டவர்கள். இப்படி ஒருபோக்கு மாற்றத்துக்குக்காரணமான இந்த நூல்பற்றி இன்று யாருக்கும் தெரியாவிட்டாலும், இது இலக்கிய வரலாற்றில் குறிப்பிடப்படும். எதிர்கால ஆய்வாளர்களுக்காக இத்தகைய ஆவணங்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்பது என்கருத்து.

தமிழ் திறனாய்வு மற்றும் விமர்சன மரபு வரலாற்றில் நீங்கள் அறிமுகப்படுத்திய விமர்சன நோக்கு மிக முக்கியமானது. மரபான மார்க்சிய அடிக்கட்டுமானம் மேற்கட்டுமானம் என்கிற பொருளியல் வாதப்பார்வை போதாது என்று அமைப்பியல்வாதத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு அழகியல் சார்ந்த சமூகநலன் விளைவுகளை வாசித்து வெளிப்படுத்தும் பார்வை அது. உங்களுடைய இந்தப் பார்வைக்கு அடிப்படையாக அமைந்த சூழல்கள் மற்றும் தூண்டிய நூல்கள் என்னென்ன?

 

அது ஐம்பதாண்டுகளுக்கு முன்பு இருந்த சூழ்நிலை.பொருளாதாரம், அதாவது, நீங்கள் சொல்லும் அடித்தளம், மேற்தளத்தின் அதாவது பண்பாட்டின் கூறுகளான, குடும்பம், கல்வி, அரசியல் போன்றவற்றைத் தீமானிக்கும் என்ற பார்வையை அன்று எல்லோரும் நம்பினார்கள். புதுக்கவிதையும் புதுவிதமான நாடகங்களும் கதைகளும்  தமிழில் வந்தபோது தான் பிரச்சனை பெரிதானது.அறிவுப்பெருக்கமும் தமிழ்ச்சமூகத்தில் ஏற்பட்டது.பழமை மெதுமெதுவாக மாறியது. அதுவரை அறிவு மறுக்கப்பட்ட பிரிவினர் அறிவைப்பெருக்கினர். பொருளைப் பெருக்கும் முறையை அறிந்தனர். அதுபோல, சிந்திக்கும் துறைகளுக்கு வந்தார்கள். மத்தியதர வர்க்கமானார்கள். படைப்புக்கும் வந்தார்கள்.புதிய தமிழ்ச்சமூக விரிவாக்கப்பரிமாணத்தை அறிந்துகொள்ள புதிய சிந்தனைகள் வேண்டும். புதிய இதழ்கள், க ச ட த ப ற, நடை, பரிமாணம், மீட்சி, பிரக்னை, நீலக்குயில், சதங்கை போன்றன தமிழில் தோன்றுகின் றன. இந்தச் சூழலில் பொருளாதாரம், பிற எல்லாத்துறைகளையும் எந்திர கதியில் தீர்மானிக்கும் என்பது கேள்விக்குள்ளானது. அல்தூசர் பற்றி நான் அக்காலத்தில் மலையாளத்தில் முதன்முதலாக ஒரு கட்டுரை படித்தேன். பின்பு அவரை விரிவாய் அறிந்துகொள்ள பல நூல்கள் படித்தேன். அவர் அப்போது பாரிஸ் பல்கலையில் தத்துவத்துறைப்பேராசிரியர். பொதுவுடைமைக் கட்சி உறுப்பினர். அவர் பொருளதார அடித்தளம் கடைசியாய் (last instance)தான்  மேற்கட்டுமானத்தைத் தீர்மானிக்கும் என மார்க்ஸ் கூறுகிறார் என்றார். அதன் பின்பு அவருடைய விளக்கத்தைச் சொன்னார். பொருளாதாரத்தால் மேற்கட்டுமானம் அப்படித் தீர்மானிக்கப்படாமலும் போகும்  வாய்ப்புண்டு என்று அவர் சொன்னது முக்கியமான கருத்து. உதாரணத்துக்குக் கல்வி இருந்தால் பொருளாதாரம் பெருகுமே . தொழில்நுட்பத்தால் பெருகுமே. அப்படியென்றால் மேற்கட்டுமானமல்லவா அடித்தளத்தைத் தீர்மானிக்கிறது. இப்படி விவாதித் தார். நான் குமரிமாவட்ட மலைக்கிராமத்தில் அப்போது நிலத்தை வைத்திருந்த நாயர்களை மற்றவர்கள் ‘எசமான் எசமான் ‘என்று குனிந்து நின்றபடி பேசியதைக் கேட்டவன். எனக்கு முதலில் அல்தூசர் சொன்னது ஏற்றுக்கொள்ளும்படி இருக்கவில்லை என்பது தான் உண்மை. தொடர்ந்து சர்ச்சை செய்தபடியும் வாசித்தபடியும் இருந்தேன்.

இப்படி ஓரளவு ஆங்கிலமும் விருத்தி செய்து பலவற்றைப் படித்தேன். அமைப்பியல் பற்றி முதலில் “ஸ்ட்ரக்சுரலிசம் “என என் நூல் வந்தது. அதில் இக்கருத்துக்களை எழுதினேன். முதல் பதிப்பு 1982 –இல் பளையங்கோட்டையில் அப்போது இருந்த லூர்து என்னும் பேராசிரியர் தன் ஆர்வத்தால் அச்சிட்டார். அதில் அமைப்பியலை மானுடவியல், மொழியியல், இலக்கியம் போன்றன எந்த முறையில் பயன் படுத்துகின்றன என ஓரளவு விரிவாகப் படித்து விளக்கினேன். மூலநூல்களைப் படித்தேன்.மார்க்சியம் கற்றுவிட்டால் மற்ற துறைகளைப் புரிந்துவிடலாம். பல துறைகளில் அமைப்பியல் முறை விளக்கப்படுகிறது என அதன் சிந்தனையைப் புரிந்து எழுதினேன். அது விரிவான நூலாக வந்து இப்போதும் பல பதிப்புகளாய் தமிழில் விற்கப்படுகிறது. அப்போது பத்மநாப ஐயர் இலங்கையிலிருந்து வந்திருந்தபோது பாளயங்கோட்டை க்குச் சென்று 25 படிகள் விலைகொடுத்து வாங்கிச் சென்றார். அது ஈழப்போராட்டம் நடந்த காலகட்டம். பல குழுக்கள் அதனைப்பயன்படுத் தின என ஒரு முறை நான் லண்டன் போனபோது கூறினார்கள். இனவிடுதலை எப்படி வர்க்க விடுதலையோடு தொடர்புடையது என அங்குப் பல குழுக்கள் விவாதித்த நேரம். அந்நூலில் உள்ள கருத்துக்கள் வழி  இது  பற்றிச் சிந்திக்க முடியும். தமிழகத்தில் அப்போது உள்ளொளியும் மூடநம்பிக்கைகளும் படைப்புக்குக் காரணம் என பரவலான கருத்து இருந்தது. தாங்கள் பாரதியின் தொடர்ச்சி என உரிமை கொண்டாடிய மேல்தட்டினர் இந்த நூலின் இலக்கியக் கருத்துக்களால் எரிச்சலுற்றனர் அவர்களுக்குக் காலம் மாறுகிறது என்பதும் வேறு பிரிவினர் கல்வி கற்று வருகிறார்கள் தமிழகத்தில் என்பதும் புரியவில்லை. மீண்டும் லட்சுமி காடாட்சத்தால் தான் கவிதை எழுதுகிறேன் என்றார்கள். அப்படிக் கூறியவர்கள், முதலாளியம் என்பது முதலாளிகள் மனம் மாறி எல்லோருக்கும் சமமாய் பகிர்ந்துகொடுக்கும் போதுதான் ஒழியும் என்றார்கள். அவர்கள் இது போன்ற நூல்களின் விவாதத்தைச் சரியாய் எதிர்கொள்ள வில்லை. படித்தால் புரியாது என்று ஒரு கருத்தைப்பரப்பினார்கள். புரியாதபடி எழுதுகிறவர்கள் என்று பகடி செய்தனர். படித்தவர்களால் இலக்கியம் படைக்கமுடியாது என இன்னொரு புதுக்கரடியைக் கொண்டுவந்தார்கள். உள்ளொளி இருந்தால் தான் படைக்கமுடியும் என்றும் உள்ளொளி இருப்பவர்கள் படைப்பு ரகசியம் அறிந்தவர்கள் என்றும் கூறினார்கள். நடக்கும் போது இரண்டு அடிக்கு ஒரு முறை நின்று வானத்தைப் பார்ப்பவர்கள் அந்த படைப்பு ரகசியத்தை அறிந்தவர்கள் என்றனர். சிலவேளை பிறப்பிலேயே அது தீர்மானிக்கப்படுகிறது என்றும் கூறி முத்தாய்ப்பு வைத்தனர். இங்குத்தான் பிரச்சனை வருகிறது. படைப்பு ஓர் ரகசியம். என்னதான், மேற்கத்திய அறிவோ, விஞ்ஞானமோ, பெற்றாலும் பயன் இல்லை. படைப்பு ரகசியத்தைக் கற்க முடியாது. சிலவேளை கலை என்ற சொல்லையும் பாவித்தனர். அதாவது இவ்விவாதங்களுக்குள் இரு சமூகத்தட்டினரின் முரண்பாடுதான் வெளியாயிற்று என்று தோன்றுகிறது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து தற்கால இலக்கியத்தை ஆக்கிரமித்து வந்தவர்களுக்கும் எழுபதுகளில் திராவிட மற்றும் முற்போக்குக் கட்சிகள் உதவியால் விழிப்புப்பெற்று கல்விக்கூடங்களில் சேர்ந்து புதிதாய்ப்படிப்பு பெற்றவர்களுக்கும் நடந்த போராட்டம். அமைப்பியலைச் சுற்றியும் பொதுவான இலக்கியத்தைச்சுற்றியும் தமிழில் நடந்த சர்ச்சைகளை இப்படித்தான் பார்க்கிறேன். அதுவரை படிப்பு மறுக்கப்பட்டவர்கள்   விழிப்புற்று, புதிதாய் எழுச்சி பெற்றபோது நடந்த இலக்கிய உலகப் போராட்டம். அயோத்திதாசர் சிந்தனைகள், சிங்காரவேலர் சிந்தனைகள், சுய மரியாதைச்சிந்தனைகள் போன்றன தமிழ்ச்சமூகத்தில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அதாவது முதல் இருபதுகளில், பரவுகின்றன. அதற்கிடையில் மேற்தட்டினர் பிரதான பங்கு வகித்த அனைத்திந்தியச் சுதந்திரப் போராட்ட ச் சிந்தனைகள் பரவ ஆரம்பிக்கின்றன. அக்காலத்தில் ஈனப்பறையர்கள் என்ற சொல்பிரயோகம் பற்றிய அயோத்திதாசரின் பாரதிக்கு விரோதமான கருத்து வெளிப்படுகிறது. இது பற்றிய ஸ்டாலின் ராஜாங்கத்தின் சில மாதங்களுக்கு முன்பு வந்த கட்டுரை  முக்கியம். நல்ல மனிதரான ஆஷ் துரையைக்கொன்ற வாஞ்சிநாதன் துஷ்டன் என அயோத்திதாசர் எழுதுகிறார். அயோத்திதாசர் படைப்பு எழுத்தாளர் அல்ல. ஆனால் பரதியாரைவிட அயோத்திதாசருக்கு விரிவான புரிதலும் அறிவும் இருந்திருக்கிறது. இதனை, ப. மருதநாயகம் தன் அயோத்திதாசர் பற்றிய நூலில் கூறுகிறார்.பாரதியாருக்கு அன்றைய அனைத்திந்திய சுதந்திரபோராட்டத்தில் வேதத்தைக் கலந்த திலகர் வழி அரசியல் அவருக்குக் கவிஞராகவும் சித்தராகவும்/பித்தராகவும் பயன் பட்டது. அரவிந்தரால் பாரதி தன்னையொத்த அவதார புருஷர் என பிரகடனப்படுத்தப்பட்ட செய்தியை போன புத்தகம் பேசுது இதழில் இரா.மீனாட்சி கூறுகிறார். பாரதி திருவனந்தபுரத்தில் உள்ள மிருக காட்சிச்சாலையில் போய் புலியிடம் ஆபத்தை உணராமல் பேசப்போவதை அவருடைய கவிஞர் ஸ்தானத்துக்கு சான்றிதழாய்ப் பயன் படுத்துபவர்கள் அவரை பித்தர் எண்றுகூறி, பித்துநிலை படைப்பாளிகளின் தகுதி என்பார்கள். இப்படித்தமிழ் நவீன இலக்கியம் சித்தர்/பித்தர் வழியில் போகத் தடம் போடும் பாதையில் பலவும் பின் தள்ளப்படுகின்றன. அறிவு வழியை நாடும் அயோத்தி தாசரும் அடுத்த அறுபது, எழுபது ஆண்டுகள் மறக்கப்பட பல காரணங்கள் இருந்தன. இந்த சித்தர் வழிபாடும் ஒரு காரணம். அயோத்திதாசர் மிகவும் கராரான அறிவைப்போற்றுபவர். பாரதியின் அறிவுத்தோற்றவியலுக்கு (Epistemology) எதிர்மாறான பௌத்தச் சிந்தனையாளர். ஆனால் தமிழில் வெற்றி பெற்றது பாரதியின்/திலகரின் ஆரியர் போற்றும் மரபு . சங்க இலக்கியத்தில் ஆரியர் அந்நியர். ந.பிச்சமூர்த்தியிலிருந்து எழுபதுகள் வரை, மணிக்கொடியாகட்டும் எழுத்து இதழ் ஆகட்டும் மதத்தையும் நவீன இலக்கியத்தையும் எல்லைக்கோடிட்டுப் பிரிக்கவில்லை. இது பெரிய பிழை. இன்று இந்திய அரசியல் போகும் பாதையின் ஆபத்திலிருந்து இது சாதரணப்பிழை மட்டும் அல்ல, என்பது புரியும். எனவே தான் சொல்கிறேன் தற்கால இலக்கிய வரலாற்றில் எழுபது வரை ஆதிக்கம் செலுத்திய சக்திகள் எழுபதுகளுக்குப்பிறகு தோன்றிய முற்போக்குசக்திகளின், திராவிடச்சக்திகளின், கூட்டால் உருவான மன நிலை கொண்ட புதிய இளைஞர்களின் உலகப் பார்வையோடு முரண்பட்டன. இன்றின் சூழலிலிருந்து பழையதை மீள்பார்வை மூலம் பார்க்கும்போது இப்படித் தான் தோன்றுகிறது. இவற்றை நேரடியாக வறட்டுத்தனமாய் வரையறுக்கக்கூடாது . சில கூறுகள் இரண்டு தரப்பாரிடமும் பொதுவாயும் காணப்படும். இலக்கியமும் பாண்பாட்டு உருவாக்கமும் மிகவும் சிக்கலானது. எனினும் சமயச்சார்பும் அதற்கு மாறான செக்குலர் மரபும் தயவு தாட்சண்யமில்லாமல் வேறுபடுத்திப் பார்க்கப்படவேண்டும். மரபு மார்க்சியத்துடன் சில புதிய கூறுகளைக் கொண்டுவர அமைப்பியல் பயன் பட்டது. நீங்கள் அமைப்பியல் பற்றிக் கேட்டதால் இவ்வளவும் சொன்னேன். இன்று தமிழகத்தில், எதிர்காலத்தில் வரப்போகிற பாசிச சக்திகள் பற்றிய ஆழ்ந்த கவனம், இல்லை. அவை மதத்தைப் பயன்படுத்திக் கொண்டுள்ளன. அவை மறைமுகமாய் இலக்கியத்தையும் பயன்படுத்துகின்றன. சில விஷயங்கள் நான் இப்போது சொல்லமுடியாது.  பாரதி மரபைத்தான் அவர்கள் எடுக்கப் போகிறார்கள். ஆகையால் முன் யோசனையாகச் சிலவற்றைச்சொன்னேன். ஏனெனில் மார்க்சிய அமைப்பியலாளரான அல்தூசர் அன்றைய பிரான்சின் பொதுவுடைமைச் சிந்தனையாளர் மட்டுமல்லாது இரண்டாம் உலகப்போர் சமயத்தில் பாசிச எதிப்பு அணிகளோடு இருந்தவர். பாசிசம் வேறு வேறு உருவத்தில் வரும். இன்னொரு உண்மையையும் கூறவேண்டும். இதுவரை பார்த்த தமிழ் இலக்கிய உலகப் போராட்டம் இப்போதும் தமிழில் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அன்று தோற்றவர்கள் இன்று வேறு நிறுவனங்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். வேறுவித உத்திகளைப்பயன் படுத்துகின்றனர். அவர்களின் இன்றைய விவாதங்கள் வேறு.

1972-இல் கசடதபற இதழில் வெளியான ஞானக்கூத்தன் கவிதைகளுக்கு நீங்கள் எழுதிய விமர்சனத்திற்கு எவ்வாறு எதிர்வினைகள் வந்தன? அவற்றை எவ்வாறு எதிர்கொண்டீர்கள்?

 

நீங்கள் நன்றாக நினைவில் வைத்திருக்கிறீர்கள். நான் பெங்களூருக்கு வேலையின் பொருட்டு வந்த புதிது. நான் அப்போது வந்துகொண்டிருந்த கசடதபற இதழைப்படித்த போது எட்டுக்கவிதைகள் என்ற தலைப்பில் ஞானக்கூத்தன் என்ற பெயரில் அப்போது எனக்குத்தெரியாத யாரோ ஒருவர் புதுக்கவிதை எழுதியிருந்தார். ‘விழிக்கிறான் முழங்காலொன்று காணலை’, என்றும் ‘ஒளித்துவைத்த மூக்கு’ என்றும் வரும் வரிகளைத் தமிழ் எம்.ஏ. படித்திருக்கிற எனக்கு அந்த வயதில் புரிந்துகொள்ள முடியவில்லை. பெரிய குழப்பம். ஆனாலும் அவை என்னை விட்டுவிடவில்லை. நான் ஒரு கட்டுரை இரண்டு பக்க அளவில் எழுதி தாமரைக்கு அனுப்பினேன். உடனே அழகான கையெழுத்தில் தி.க.சி.யிடமிருந்து ஒரு அஞ்சல் அட்டை. அதனை விரிவாக எழுதுங்கள் என்று.நான் விரிவாய் எழுதி அனுப்ப அக்கட்டுரை வெளிவந்து முற்போக்கு அணியினர் பேசுபொருளாய் அக்கட்டுரை ஆனது. நான் அக்கவிதைகள் ஏற்கத்தக்கன அல்ல எனவும் , மனித உடலை அவை கூறுபோடும் பார்வை என்றும் எழுதினேன். ஆனால் பின்னர் சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து அக்கவிதைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நீலக்குயில் என்ற இதழில் எழுதினேன். எனக்கு இந்தமாதிரி கவிதைகளைப் புரிந்து மதிப்பிடுவதில் தேர்ச்சியில்லை, தடுமாறுகிறேன் என்பதை உணர்ந்தேன். அதற்கான காரணம், இந்தவித உத்தி அல்ல. உத்திக்குப்பின்னால் இருக்கும் தத்துவப்புரிதல். இலக்கியம் மனிதக் கூறுபோடலைச் சொல்லலாம், அது தவறு அல்ல என்று என் பார்வையைத் திருத்திக்கொண்டேன். அதன் பின்பு காஃப்காவின் கரப்பான்பூச்சியாக மனிதன் மாறும் கதையையும் ஏற்றுக்கொள்ளலாம் என்ற நிலபாட்டை எடுத்தேன். இது ஒரு நிலைபாட்டில் உள்ள தத்துவ மாற்றம். இதற்கு மார்க்சியத்தில் இடமுண்டு என்றும் விவாதிக்கலாம். அதை ஐரோப்பிய மார்க்சியத்தினர் மேற்கொண்டனர். உதாரணமாய் ஜெர்மன் மார்க்சிய விமரிசகர், லூசியன் கோல்ட்மன் என்பவர் அக்கருத்துக் கொண்டவர். வாசகர்கள் தேடிப்பிடித்தால் தான் இவர் அறிமுகம் கிடைக்கும். பரவலாகத்தெரிந்தவர் அல்ல. மார்க்சிய விமரிசகர், வால்டர் பெஞ்சமின் கூட காஃப்காவை ஏற்பார். ‘மூக்கை ஒளித்துவைத்தேன்’ என மனித உடல்கூறு போடுதலுக்கு, மார்க்சியத்தில் இடமில்லை என்றும் விவாதிக்கலாம். அதை சோவியத் யூனியன் அன்று மேற்கொண்டது. அந்த ஞானக்கூத்தன் கவிதைகளை, சோவியத் விமரிசகர்களிடம் கொடுத்தால் இது நல்ல இலக்கியம் இல்லை என்று கூறிவிடுவார்கள்.  நான் இப்படி முரண்பட்ட இரண்டு நிலைபாடுகளுக்கு இடையில் தெளிவில்லாமல் தடுமாறி, பின்பு ஒருநிலைபாடு எடுத்து என்னைத் திருத்திக்கொண்டதை, அன்று வேகமாகவும் வசைச்சொற்களையும் தயங்காமல் பயன்படுத்தும் ஒரு விமரிசகர் பல்டி என்று வருணித்தார். அவருக்கு அவர் பயன்படுத்தும் இம்மாதிரிச்சொற்கள் தத்துவம், இலக்கியம் போன்ற துறைகளில் பயன் படுத்தக்கூடாது என்று தெரியவில்லை. நான் எண்பதுகளில் இருந்த சூழலைச்சொல்கிறேன். மார்க்சியத்தில் பலவிளக்கங்கள் எப்படி ஏற்பட்டன? மார்க்சியம் சமூக அறிவியல். இயற்பியல் அல்ல. விலங்கியல் அல்ல. சமூக அறிவியலுக்கு ஒரு தனித்தன்மை உண்டு. சூழலுக்குத்தக்க  வேறுவேறு விளக்கங்களை மேற்கொள்ளும். ரஷ்யாவில் ஒரு வகையும் லத்தீன் அமெரிக்காவில் இன்னொரு வகையும், சீனாவில் இன்னொரு வகையும் அவரவர் கலாச்சாரத்துக்கு ஏற்ப இருக்கும். நம் புராதன தமிழ்க்கலாச்சாரத்துக்கு ஏற்ப நாம் ஒருவித தமிழ்க்குணம் உள்ள மார்க்சிய இலக்கிய விமரிசனத்தை ஏற்கவேண்டும். இப்போது யோசித்துப் பார்க்கும்போது வேடிக்கையாகத் தெரிகிறது. நாங்கள் எல்லாம் எப்படி இளமையில் இலக்கியம் படித்தோம் என்று எண்ணுகையில்.

சங்க இலக்கியங்கள் குறித்து உங்களுடைய நவீன விமர்சனங்களை எவ்வாறு வைக்கலாம்? சங்க இலக்கியங்களின் மீட்டுருவாக்கம் தொடர்பான உங்களின் பங்களிப்பு அல்லது திட்டங்கள் என்னென்ன?

 

சங்க இலக்கியம், தொல்காப்பியம், இவை அமைப்பியலின் வெளிச்சத்தில் பார்க்கப்படவேண்டும் என தொடர்ந்து நான் கூறுகிறேன். காரணம் மேற்கத்தியக்கருத்துக்களைத் தமிழால் உரசிப்பார்த்து எவை தமிழுக்குப் பொருந்தும், எவை பொருந்தாது என அறியவேண்டும்.ஏதோ ஒரு அனைத்துலகத் தத்துவம் வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். பின் நவீனத்துவம் ஆகட்டும், அல்லது வேறொன்று ஆகட்டும். அதன் தத்துவத்தளமோ அல்லது இன்னொரு கூறோ தமிழோடு ஏதோ ஒரு அம்சத்தில்  ஒப்பிடக்கூடியதாக இருக்கும். அந்த அம்சத்தை விரிவாக்கி நாம் தமிழில் பேசவேண்டும். நான் பழந்தமிழில் ‘அமைப்பியல் மற்றும் குறியியல்’ என ஒரு நூலில் இதைத்தான் செய்தேன்.தொல்காப்பியத்தின் மொழிபற்றிய சிந்தனைக்கும் அமைப்பியலை அறிமுகப்படுத்திய சசூரின் சிந்தனைக்கும் தொடர்பிருப்பது தெரிந்தது.  சசூரின் சிந்தனையிலிருந்து மானுடவியல், மார்க்சியம், இலக்கியம் என  ஒவ்வொரு பிரிவிலும் புதுச்சிந்தனைகள் தோன்றி உலகை வியப்பிலாழ்த்தின.  தொல்காப்பியம் சசூரைப்போன்று மொழிபற்றிய சிந்தனை. சசூரை எப்படி மறுவிசாரணை செய்து ஐரோப்பியர் வளர்த்தெடுத்துள்ளனரோ அது போல உரையாசிரியர்கள் தொல்காப்பியத்தை மறுவிசாரணை மட்டும் செய்துள்ளனர். சிந்தனையையை வளர்த்தெடுக்க முடியவில்லை. அதனால்  தமிழிலிருந்து புதுவித சிந்தனைகள் வரவில்லை . சசூரை மறு சிந்தனைக்கு உட்படுத்திய ‘மாதிரி’யில் உரையாசிரியர்கள் தொல்காப்பியத்தை மறுவிசாரணைக்கு உட்படுத்தவில்லை.  உரையாசிரியர்கள் ஒன்றில் சேனாவரையரின் சமஸ்கிருத  ‘மாதிரி’யில் அல்லது இளம்பூரணர் போல தமிழ் ‘மாதிரியில்’ மறுவிசாரணை , அல்லது மறுவாசிப்புச் செய்தனர். ஒரு விசயத்தை ஒத்துக்கொள்ளவேண்டும்.  நம்மிடம் கேள்விகேட்கும் சிந்தனைப் பின்னணி இல்லை. எனவே நம் கேள்வி இலக்கணத்துக்குள்ளேயே சுற்றிச்சுற்றி வந்தது. உதாரணத்துக்கு இன்றைய மேற்கத்திய மரபில் வந்த அமெரிக்கத் தமிழ் ஆய்வாளர் ஜார்ஜ் ஹார்ட் போன்றோரின் கேள்வி சார்ந்த சிந்தனைக்கு வருவோம்.  அவர் இந்தியாவுக்கு இரண்டு பாரம்பரிய மாதிரிகள் உள்ளன என்கிறார். ஒன்று சமஸ்கிருத மாதிரி, இன்னொன்று தமிழ் மாதிரி என்கிறார். தமிழ், சமஸ்கிருதத்துக்கு மாற்று. இதை விளக்குகிறார் ஜார்ஜ் ஹார்ட்.. அவரைத்தொடர்ந்து நாம் இன்னும் சிலவற்றைக்கூற முடியும். சமஸ்கிருதம் வேரில்லாமல் தன் நிறத்தை மாற்றி மாற்றிப் பரவும்குணம் கொண்டது. ஷெல்டன் போலக் என்பவர் இது பற்றி விளக்கிக்கூறுகிறார்.  இக்கருத்தை எடுத்துவந்து தமிழ் பற்றி வேறு கோணத்தில் பேசலாம். தமிழ் பிராந்திய மண்மணத்தை விடாமல் வேரை வலிமைப்படுத்தும் மொழி. தெற்காசியா முழுதும் தமிழ் அரசர்கள் போனாலும்  அவர்களும் சமஸ்கிருதத்தையே அங்கு நிலை நாட்டினார் கள். சோழர்கள் சமஸ்கிருதப் பெயரையே தாங்கள் வைத்திருந்தனர்.வடமொழி வேதம் பரவ, பிரம்மதேயக் கிராமங்களை, எல்லாச் சோழ மன்னர்களும் ஆதரித்துக் காவேரி தீரங்களில் உருவாக்கினர்.  இப்போது தமிழ், சோழர்களுக்கு நாடு பிடிக்கப்பயன் படவில்லை எனத்தெரிகிறது. நாடுகளைப்பிடிக்க காற்றுப்போல எல்லா இடங்களிலும் வேரில்லாமல் பரவும் சமஸ்கிருதம் வேண்டும். சஸ்கிருதம் தெற்காசியா முழுதும் பரவியதை, ஷெல்டன் போலக் மிகவிரிவாக எடுத்துரைக்கிறார். தமிழ் அப்படிப்பட்ட மொழி அல்ல. தமிழின் வேர் ஆழமானது. பிடுங்கமுடியாது. அதன் மீது சமஸ்கிருதக் காற்று வீசும். காற்று போனதும் மரம் பழையது போல நிமிர்ந்துவிடும். விஜயநகர மன்னர்கள், நாயக்கர்கள், யார்யாரோ சுமார் ஆயிரமாண்டுகளாய் தமிழரல்லாதவர்கள் தமிழகத்தை முழுதும் ஆண்டனர்.  தமிழ் அழிந்து போகவில்லை. தமிழ் எப்படிப்பட்ட மொழி யென்றால் அது சமஸ்கிருதத்தை மாற்றித் தமிழின் ஒரு பகுதியாக்கும். அது ஒரு வலிமை. நிறைய உதாரணங்கள் நான் சொல்லமுடியும். சமஸ்கிருத ‘லோகதர்மி’ என்பதை உலகவழக்கு என மாற்றுவதோடு அர்த்தத்தையும் மாற்றும். ரசக்கோட்பாட்டை, புதிதாக்கி தமிழண்ணல் கூறுவது போல வேறு ஒரு கருத்தாக்கமான மெய்ப்பாடு ஆக்கும். தொல்காப்பியம் அப்படி செரித்துக்கொண்ட பல சமஸ்கிருத கருத்தாக்கங்கள் உண்டு. இதுபற்றிய தெளிவில்லாத சிலர் சமீபத்தில், சமஸ்கிருதம் தொல்காப்பியத்திற்குள்ளே ஏறி அதை அரித்துவிட்டது என கெக்கெலி கொட்டிச்சிரித்ததை ஓரிதழ் சிறப்பு மலராய் வெளியிட்டு மகிழ்ந்திருந்தது.  இப்படித் தமிழ் மாதிரியானது, திராவிடக் கலாசாரங்களின் பிரதிநிதி மட்டுமல்லாது ஆதிவாசிகள் பண்பாடு, நாட்டுப்புறவியல் போன்றவைகளுக்கும் பிரதிநிதி. அது மட்டு மின்றி, உலகமெங்கும் தன்மண்ணுக்காகப் போராடுகிறவர்களின் பிரதிநிதி. எனவே புதிய உலகச் சிந்தனைகளைத் தமிழ்த்துறைகள், புதிய தமிழ் விளக்கம் மூலம் கொண்டுவரவேண்டும் என்கிறேன். பாடத்திட்டங்கள், சமூகவியல், வரலாறு, தத்துவம்,  இலக்கியவியல் மொழியியல், போன்றவற்றின்   மிகப்பிந்திய சிந்தனைகளோடு மறுகட்டமைப்புச் செய்யாவிடில் இன்றைய தமிழ்க்கல்வி பிரயோஜனமற்றது. இப்படிப்பட்ட சிந்தனைகளை உரையாசிரியர்களின் வழியில் அவர்களை புதிதாக்கி மேற்செல்லவேண்டும். பாடதிட்டங்கள், மாற்றப்படவேண்டும்.சங்க இலக்கியம், தொல்காப்பியம் போன்றன அப்போது சிந்தனையின் ஊற்றாக மாறும். இப்போது இருப்பதுபோல, சங்க இலக்கியமும் தொல்காப்பியமும் மாணவர்களால் மேற்கோள் காட்டும்,மனனம்செய்யும் வெறும் துண்டு துணுக்குகளாய் இருக்காது. அரசியல் அடிமைகளாக இருப்பதுபோல் சிந்தனைத்துறை அடிமைகளாகவும் இருக்கிறோம்.

தமிழ்க்கல்வி வெறும் பழமைநிலைபெற்ற கல்வியாக இல்லாமல் எதிர்காலம் நோக்கிய கல்வியாக வேண்டும். அதற்கு உலகமெல்லாம் உள்ள சிந்தனைகளைத் தொல்காப்பியர் அன்று அவரது உலக அறிவை வைத்துக்கொண்டுவந்ததுபோல செய்யவேண்டும். இதை விரிவாக இங்கே பேச இடம் இல்லை.

முந்தைய கேள்வியை ஒட்டி இன்னொரு கேள்வி: உங்கள் மொழிதல் கோட்பாடும் தமிழிலக்கியமும்என்ற நூல் பற்றியும் அதுபோல், ‘திராவிடம், தமிழ்த்தேசம், கதையாடல்என்ற நூல் பற்றியும், சொல்லுங்கள்.

என்னுடைய மொழிதல் கோட்பாடு நூல்பற்றிச் சமீபத்தில் சில இளம் ஆய்வாளர்கள் ஒரு கல்லூரியில் ஒருவாரம் கணினி வகுப்பு நடத்தினார்கள். அது தமிழ்த்துறைகள் மாறிவருவதைச்சுட்டின. மொழிதல் என்பது கூற்று என்று சங்க இலக்கியம் சொல்லுமே அதுதான். தலைவி, தோழி, தலைவன்  போன்றவர்கள் பேசுவதுபோல் தான் அகப்பாடல்களை எழுதமுடியும் என்று ஒரு மரபு. இதனை மறுவிளக்கம் மூலம் அனைத்துலகச் சிந்தனையாக, மார்க்சியம், மொழியியல், வடிவவியல் போன்ற சிந்தனைகளில் பொதுச்சிந்தனையாக மாற்றலாம். இதற்கு ரஷ்யாவின் மைக்கேல் பக்தின் என்பவரின் சிந்தனைகள் தமிழில், தமிழுக்காகப் பயன் படுத்தப்பட்டன. பக்தின், ரஷ்யாவில் புரட்சி வந்த காலத்தில் உருவானவர். அவர் சிந்தனைகளை ஓரளவு விரிவாகப்படித்திருக்கிறேன். எனக்கு இன்றைய சூழலிருந்து பார்க்கும்போது அவரை வளர்மார்க்சிய முன்னோடி என்றே கூறத்தோன்றுகிறது. டெரி ஈகிள்டன் கூட அப்படித்தான் கூறுகிறார். இந்த மேலே குறிப்பிட்ட என் நூல் 27 ஆண்டுகளுக்கு முன்பு வந்தது. மீண்டும் புதிய பதிப்பு கொண்டுவந்து இப்போது விவாதிக்கிறார்கள். மொழிதல் (கூற்று) என்பது பரஸ்பரம் உரையாடுதல். இதை ‘டைலாஜிக்’ என அழைப்பார் பக்தின். தமிழில் வடிவமைத்த மொழிதல் கோட்பாடு பக்தின் கோட்பாடு மட்டும் அல்ல. பக்தினைச் சற்று மாற்றி வேறு சிலரைச்சேர்த்து, சங்க இலக்கியத்துக்கு ஏற்ப மறுவடிவமைப்புச் செய்யப்பட்டது. ஏனென்றால் நம் மரபு வேறு. இதன் மூலம் தமிழில் அப்போது வந்த புதுக்கவிதைகளை விமரிசனம் செய்யலாம் என உதாரணம் கொடுப்பதன் மூலம் நீட்சிப்படுத்தப்பட்டது. கூற்றுக் கோட்பாடு, இப்படித்  தமிழ்ப்புதுக்கவிதைக்கேற்ற மார்க்சிய அடிப்படை கொண்ட விமரிசனமாக மாற்றமுற்று உருவானது. அதற்கு வோலஷினொவின், “மார்க்சியமும் மொழித் தத்துவமும்” என்ற நூலின், சில தர்க்கங்கள் பயன் படுத்தப்பட்டன. மனித குல மொழிகளின் உள்ளே இருக்கும் உரையாடல் என்ற பண்பின் தத்துவமாய் மார்க்சியத்தை மறு வடிவமைப்பு செய்திருப்பார் வொலஷினொவ். மொழி என்றாலே உரையாடல் தானே. நம் தமிழன் கண்டுபிடித்த கூற்று, வெறும் காதல் சம்பத்தப்பட்ட சிந்தனை என்பதை மாற்றி, இப்படி உலகச்சிந்தனையான மார்க்சியமாக்க முடிந்தது.ஆனால் எனக்கு என்ன வியப்புத் தெரியுமா ? 27ஆண்டுகள் வரை ஏன் இந்த முயற்சியைத் தமிழில் மார்க்சியவாதிகள் கண்டுகொள்ள்ளவில்லை? அவர்கள் அளவு படித்தவர்கள் வேறு யாரும் இல்லையே. இப்போதும் கூட  தமிழ்த்துறையினர்தான் இதுபற்றி ஒரு ‘வெபினார்’ வகுப்பு நடத்தினார்களே ஒழிய மார்க்சியர் கள் அல்ல. இன்னும் தமிழ்ச்சூழலில் நாம் தீர்க்காத தத்துவப்பிரச்சனைகள் இருக்கின்றன என்பதைத் தான் இது காட்டுகிறது. தமிழர்கள் அளவு மொழிபற்றி அக்கரை காட்டுபவர்கள் உலகத்தில் யாருண்டு? தமிழர்கள் ஒவ்வொரு காலத்திலும் தமிழ் மூலமாகவே உலகைப் புரிந்திருக்கிறார்கள். ”இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்” என்ற கூப்பாடு எதைக்காட்டுகிறது? அந்நியர் ஆட்சி காலத்தில் ஒரு இலக்கிய வடிவத்தை உருவாக்கி தமிழ்த்தூது என்கிறார்கள்.அதுபோல், “வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறும் நல்லுலகம் “என்று தமிழகத்துக்கு எல்லை வகுக்கிறார்கள். பிள்ளைத்தமிழ் என்று இன்னொரு இலக்கிய வகைக்கு பெயர்சூட்டுகிறார்கள். ஒன்றும் வேண்டாம், மொழிப்போராட்டத்தின் மூலம்தானே தமிழர்கள் ஒன்றிணைந்து அனைத்திந்தியக் கட்சிகள் இனி வேண்டாம் என்று முடிவெடுத்தார்கள். ஆனால் வொலஷினொவின் (இவரும் பக்தினும் ஒருவரே என்றும் பக்தின் ஓரிடத்தில் கூறுவார்.) மொழியியல் மார்க்சியம் நமக்கு ஏன் இன்னும் மொழிபெயர்ப்பாக வரவில்லை? இடதுசாரிகளின் அக்கரைக்கு உள்ளாகவில்லை? எவ்வளவு ரஷ்ய நூல்கள் மொழிபெயர்த்துள்ளோம்.  வொலஷினொவ் கூறும் மொழியல் மிகவும் வித்தியாசமான மொழியியல்.  தொல்காப்பியம் படித்த எனக்குத் தொல்காப்பியத்தின் தத்துவச்சாரம் உள்ள நூல் அது என்று கூறத்தயக்கமே இல்லை. படிக்கவேண்டிய முறையில் படித்தால் நான் சொல்வது விளங்கும். நம் மொழியியல் துறைகள் அக்கரை காட்டாது. அதற்கு வேறுகாரணம்.

அடுத்து, “திராவிடம், தமிழ்த்தேசம், கதையாடல்” என்ற நூல் பற்றிக்கொஞ்சம் பேசுகிறேன். இக்கட்டுரைகளை 2009- இல் ஈழத்தில் போர்நடக்கும்போது ஒரு இதழில் தொடராக எழுதினேன். தமிழ் பற்றி காலமெல்லாம் ஏன் தமிழர்கள் பேசிக்கொண்டே இருந்தார்கள் என அப்போது எனக்கு ஒரு கேள்வி உருவானது. அப்போதுதான் சங்க இலக்கியம் கூறிய, சிலப்பதிகாரம் வலியுறுத்திய, தமிழ் பேசும் அத்தனை பேருக்குமான ஒற்றைத் தமிழ் அரசியல் அடையாளம் தமிழர் வரலாற்றில் ஆயிரமாண்டுகளுக்கு மேல் இல்லாமல் இருந்தது தெரிந்தது. அதனைத் ‘தமிழ் அரசியல்’ என அண்ணா அழைத்து ஊரெல்லாம் போய் சொற்பொழிவாற்றி மீண்டும் ஆயிரமாண்டுகளுக்குப் பிறகு உருவாக்கினார். இத்தாலியின் விடுதலைக்குப் போராடிய மாஜினி, கரிபால்டி என்றெல்லாம் அவர் அன்று சொன்னதன் அர்த்தம் இதுதான். அதற்கு, பெரியாரின் பகுத்தறிவு அண்ணாவுக்குப்பயன்பட்டது தெரிந்தது. பெரியாரும் அண்ணாவும் மேற்கத்திய ரெனைசான்ஸ் சிந்தனையால் தாக்கம் பெற்றவர்கள். பகுத்தறிவை அளவுகோலாக வைத்துச் சிந்திப்பவர்கள். நிகரற்ற சிந்தனையாளர்கள். அத்துடன் பாரதிதாசன் 1930 இலிருந்து செய்த தமிழ் உணர்வு வலியுறுத்தல் அண்ணாவுக்குப்பயன் பட்டது.  அடிக்கட்டுமானம் மேற்கட்டுமானம் என்று நாம் பார்த்த விஷயத்துக்கு வருவோம். அடிக்கட்டுமானம் இறுதியாகத்தான் தீர்மானிக்கும் என்ற மார்க்சின் வாசகத்தில் உள்ள பொருளாதாரம்  ‘இறுதியில் தான் தீர்மானிக்கும்’  என்ற சொற்களை விளக்க வேண்டும். தமிழ் உணர்வு என்பது கருத்துக் கலப்பு உள்ளது. கருத்தை, பொருள்தன்மை உள்ள கருத்தென்றும் பொருள்தன்மை இல்லாத கருத்து என்று பிரிக்கலாம். பொருள்தன்மை உள்ள தமிழ்உணர்வை மார்க்சிய தத்துவம் ஏற்கவேண்டும். அப்படி அது அடித்தட்டுச்சிந்தனையாகிவிடுகிறது.இது போலச்சிந்தனை அல்தூசரிடமும் கிராம்ஷ்சியிடமும் காணப்படுகிறது. இப்படிப்பட்ட சிந்தனைகள் அந்த எனது நூலில் உண்டு.

 

உங்களின் முதல் நாவல் ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள், தமிழ் இலக்கிய உலகில் ஏற்படுத்திய சலசலப்புகள், அந்த நாவலைப்புறக்கணிப்பதற்காக நிகழ்ந்த அறிவு ஜீவிகளின் முன்னெடுப்புகள் ஒரு பெருங்கதையாடலாக உலவிய காலங்கள் பற்றி

 

‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் ‘என்ற நாவல் 1985 இல் வந்தது. அதன் வாக்கியங்கள் புதுமையானவை. அதுவரை அப்படிப்பட்ட வாக்கியங்களை ஒரு நாவலில் பயன்படுத்தமுடியமா என யாரும் முயற்சி செய்யவில்லை. எனவே நிறைய சலசலப்பு ஏற்பட்டது. தமிழின் முதல் மாய எதார்த்த நாவல் என அழைக்கப்பட்டது. ஒரு பாத்திரம் தன் நிழலோடு சீட்டு விளையாடுகிறது. பீரங்கியை மந்திரவாதம் செய்து செயலிழக்க வைக்கமுடியும் எனப் பேசப்படுகிறது. ஒருவரின் உடலில் சிலந்தி வலை பின்னுகிறது. படுத்துக்கிடக்கிற முதியவரின் உடலில் இலைகள் முளைக்கின்றன. இப்படி படிமங்கள் மூலம் உருவான நாவல். சாகித்திய அக்காடமியின் தமிழ்ப்பிரிவின் மேநாள் ஒருங்கிணைப்பாளர் நாச்சிமுத்து, இந்நாவல் குமரி மாவட்ட நாட்டுப்புறவியலில் இருந்து வந்தது என்றார்.

க.நா.சு.இந்த நாவல் மீது ஒரு கருத்தரங்கு வைத்துப்பார்க்கவிரும்பினார் என ஒரு முறை அவரோடு டெல்லியில் இருந்த பெண்ணேஸ்வரன் கூட்டத்தில் பேசினார்.கோணங்கி அதனைப்படித்துவிட்டு என்னைப் பார்க்க பெங்களுருக்கு வந்தார். அவர் எழுத்துக்கள் வேறுமுறையில் மாற அது காரணமாக இருந்தது. இன்னும் பலரும் நீளவாக்கியங்கள் வைத்து எழுதுவது, மாயங்களைவைத்து எழுதுவது போன்றவற்றைப் பயன்படுத்தி எழுத இந்த நாவல் பாதை  உருவாக்கியது. நிறைய வாதவிவாதங்கள் வந்தன. அதிகமான விமரிசனங்கள் வந்தன. முப்பது நாற்பதுபேர் எழுதியிருப்பார்கள். இலக்கிய உலக சூது வாதுகள் பற்றி, அவைகளை இன்று பேசுவதால் என்ன பயன் ? இதுபோன்ற நாவல்கள் சங்கத்தமிழின் உள்ளுறை போன்றவற்றின் ஒரு புதுவகைத் தொடர்ச்சி. இப்படி, மேலோட்டமான ஆங்கிலக் கதைசொல்லல் பாணியின் பலகீனம் தமிழ் வரலாற்றில் வெளிப்பட்டது. தமிழ் மரபிற்குள் இருக்கும் கதைமரபு  இக்கட்டத்தில் வெளிப்பட்டது.

சரித்திரத்தில் படிந்த நிழல்கள் நாவலும் அரசியல் பின்புலத்தைக் கொண்டதுதான். இது பரவலாக தமிழ் வாசகர்களால் வரவேற்கப்பட்டதா?

 

நீங்கள் குறிப்பிடும் அந்த நாவலிலும் படிமமுறைக் கதை சொல்லலைப் பயன்படுத்தினேன். அது என் இரண்டாவது நாவல். ஒரு ராணி. அவள் தெகிமொலா என்றழைக்கப்படும் மக்களின் ராணி. கண்மூடியபடியே அவளால் பார்க்கமுடியும். அவளுக்கு இரண்டு குழந்தைகள், ஒருவன் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் நிற்பான். இப்படிக்கதை போகும். இவை வித்தியாசமான நாவல்கள். ஏன் இப்படி எழுதப்பட்டன? என்று ஒரு கேள்வி வரும். அதற்குப்போகவேண் டும். புதுக்கவிதை இன்று ஒரு ஐம்பதாயிரம்  தமிழர்கள் எழுதமாட்டார் களா? ஐந்து இலட்சம் பேர் படிக்கமாட்டார்களா? புதுக்கவிதை வந்ததும் தமிழ் வாக்கியம், கருத்தைச் சொல்லும் முறை, தலைகீழாகிவிட்டது. பக்தி காலத்தில் சொல் தான் கடவுள். சொல்லையும், அது குறிப்பிடும் பொருளையும் பிரிக்கமுடியாது. புதுக்கவிதைக் காலத்தில் சொல் அது சுட்டும் பொருள் அல்ல. அதனால் ஒரு கவிஞர் மூக்கை ஒளித்து வைத்தேன் என்கிறார். இங்கு மூக்கு என்பது மூக்கு அல்ல. இன்னொருவர் கையைத் தோள்முனைத் தொங்கல் என்பார். கை என்ன என்பது, அன்று அவருக்குத்தெரியவில்லை. இந்தக் கட்டத்தில் மரபான வாக்கியத்தில் நாவல் எழுதினால் ,வாக்கியத்தில் பொருள் தங்காது. அதனால் புதுவித புனைவுமொழி வருகிறது.எத்தனை பெட்டிசன் எழுதினாலும் அதிகாரிக்கு அதன் மொழி புரிவதில்லை.  வேறு ஏதோ செய்யவேண்டியுள்ளது. கையூட்டு கோடுக்கவேண்டியுள்ளது. நூறு வருடங்களுக்கு முன்பு அப்படி இல்லை. புதுக்கவிதை வந்த போதே சமூகத்திற்குள் ஒருவித மொழிப்பிரச்சனை வந்து விட்டது என்றே பொருள். காட்சியைப்படம் பிடிக்கும் படிமம் கவிதைக்குள் வரும் போதே எழுத்து, பயன் இல்லை மனதில் படம் போடுதலே முக்கியம் என்று ஆகிவிட்டது.

ஜி.கே எழுதிய மர்ம நாவல் என்னும் உங்களின் புதினம் பௌத்த சமண முரண்பாடுகள் போன்ற கனமான விஷயங்கள் குறித்துப் பேசிய ஒரு நாவல் என்றாலும், அதன் தலைப்பு, நாவலின் கனத்தைக் குறைத்துவிட்டதாக நினைக்கிறீர்களா?

 

‘ஜி.கே.எழுதிய மர்ம நாவல்’ என்பது எனது மூன்றாவது நாவல்.இந்த நாவல் பற்றிச் சொல்லுமுன்பு சில விசயங்களைச் சொல்லவேண்டும்.சங்க இலக்கியம் அறிவு மரபிலிருந்து வருகிறது.  மணிமேகலை, சீவகசிந்தாமணி, திருக்குறள், சிற்றிலக்கியம் எல்லாம் அதே மரபு. அதற்குக்காரணம் சமணம், பௌத்தம் வலியுறுத்திய அறிவு மரபு. புறவயமாகச் சித்தரிக்கும் மரபு. கதையை இணைப்புக்கள் மூலம் உருவாக்கலாம். மாறாக, பக்தி மரபு பல்லவர் அறிமுகப்படுத்திய சஸ்கிருத உணர்வு மரபிலிருந்து வருகிறது. அங்கு, தன்னை மறத்தல் முக்கியம். அறிவு மரபு தர்க்கத்தின் மரபு. அறிவு மரபை வலியுறுத்தும் என் நாவல்கள்  சங்க இலக்கிய அறிவு மரபின் தொடர்ச்சி எனலாம். குறிப்பாய் நீங்கள் கேட்கும் ‘ஜி.கே.எழுதிய மர்மநாவல்’, பல விசயங்களின் குவி மையம். இந்த நாவல் வந்த நேரம் பாப்ரி மசூதி, வலதுசாரியினரால் உடைக்கப்பட்டது. என் நாவலில் மதக்கொலைகள் நடக்கும். ஒரு மிகப்பழங்கால கற்பனையான நாடு வரும். சுருங்கை எனப்பெயர். சிலப்பதிகாரத்தில் வரும் இச்சொல் கிரேக்கச்சொல் என்பார் வையாபுரிப்பிள்ளை. அதை இந்த நாவல் எடுத்துப் பல விதமான தத்துவம், நூலாய்ச்சி, மத ஆராய்ச்சி, போன்றவற்றை அடிப்படையாய் வைத்து எழுதப்பட்டது. ஒரு பௌத்த துறவி கொலைகளைக் கண்டுபிடித் துக் கொண்டே வருவார். இத்தோடு இந்த நாவலை எழுதியது யார் என்ற கேள்வியும் வரும். இடையிடயே அக்கேள்வி குறிப்புகளாய் வந்துகோண்டே இருக்கும். கடைசியில் ஓர் இலங்கைத் தமிழர் தான் எழுதினார் என இக்கேள்விகளைக் குறிப்புகள் வழியே கேட்கும் கதைசொல்லி முடிவுக்கு வருவார். இது நாவலுக்கு வெளியே.  மர்மநாவல் வடிவில் பல ஆயிரம் தகவல்களுடன் எழுதப்பட்ட அரசியல் நாவல். கட்டடக்கலை பற்றி பல தகவல்கள் உண்டு. கட்டடக்கலை தொடர்பான பல்வேறு கலைச்சொற்கள் வரும். கொலைகள், துப்பு துலக்கும் உத்திகள், கொல்லும் முறைகள் எல்லாம் உண்டு.இப்படி எழுதுவது இன்று ஓர் உலக மரபு. இந்த ஒரு நாவல் தான் இப்படித் தமிழில் உள்ளது என்று கருதுகிறேன். படைப்பு எழுத் து ஒரு ரயில் பயண நேரப்போக்குக்காய் எழுதப்படுவது அல்ல. உடனடி வாசகர்களைக் கவராவிட்டாலும் அவை அந்த மொழியில் வரவேண்டும். உலகில் பல நாவல்கள் முக்கியமாய், ஜேம்ஸ் ஜாய்ஸ் போன்றோர் எழுதுவது உடனடியாக நுகர்வதற்காக அல்ல. மார்க்ஸ் சொன்னது போல நுகர்வது என்பது, சரக்கு உற்பத்தியோடு தொடர்பு கொண்டது. இலக்கிய உற்பத்தி, சரக்கு உற்பத்தி அல்ல. இலக்கியம் ஒரு வித புதிய அறிவு.மனிதகுலம் கண்டுபிடித்த எல்லா சாஸ்திரங்களையும் விட வித்தியாசமான கண்டுபிடிப்பு. ஏனெனில் ஒவ்வொரு புனைவும் முந்தியதிலிருந்து மாறுபடும். இந்த நாவலில் பல புத்தகங்களின் கதைகள் வரும். எழுத்தாளர் போர்ஹஸ் அவர் கதையில் கூறும் லாட்டரி சீட்டு வரும்.போர்ஹஸும் ஒரு சிறந்த மர்மக்கதை எழுத்தாளர் தெரியுமா? ஊடும் பாவுமாய் பல நூல்களின் பகுதிகளில் இருந்து கொண்டுவந்தது  போல சில இடங்களில் இந்த நாவலில் எழுதப்பட்டிருக்கும். பொய்நூல்கள் பற்றி வரும். எண் முந்நூற்றிஅறுபத்தைந்தின் ரகசியம் வரும். இந்த நாவலில் மிகப்பல குடும்பவரலாறுகள் வரும். பல அரச குடும்பங்களின் கதைகள் வரும்.இவை எல்லாம் மதங்களின் போராட்டப் பின்னணியில், மதத்துக்குள் விழுந்துள்ள இந்தியாவின் இன்றைய வரலாறுபோல் இருக்கும். ஆனால் புற வடிவத்தில் ஒரு மர்மக் கதை.இதன் தலைப்பு இதன் முக்கியத்துவத்தைக் குறைத்ததாக நான் நினைக்கவில்லை.   இதை, அந்தக்காலத்தில் படித்த நண்பர் ஆதவன் தீட்சண்யா மிகக்குறுகிய காலத்தில் ஒரே அமர்வில் படித்ததாய் சொன்னார்.

வார்சாவிலிருந்து ஒரு கடவுள் என்னும் உங்களது நாவல் ஒரு புலம்பெயர் இலக்கியம் எனக்கொள்ளலாமா? அந்த நாவலுக்கு எந்த வகையான வரவேற்பு கிடைத்தது? அநேகமாக, இந்த நாவல் தமிழ் வாசகர்களைவிட கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டதால் கன்னட வாசகர்களை அதிகம் சென்றடைந்தது என்று சொல்லலாமா?

 

‘வார்சாவில் ஒரு கடவுள் ‘எனக்கு வேறுபட்ட அனுபவத்தை எழுதும்போதும் எழுதிய பின்னும் கொடுத்தது. பெரிய நாவல் சுமார் 450 பக்கங்கள். இது நீங்கள் சொல்வதுபோல புலம் பெயர்தல் பற்றிய நாவல். தமிழர்கள் எவ்வளவு சிக்கலான பாதையில் புலம் பெயர்கிறார்கள் எனக் கூறியது. வார்ஸாவில் நான் பேராசிரியனாக இருந்த போது ஆறுமாதங்கள் அதிகம் இருக்கவேண்டும் என்றனர். நிறைய ஓய்வு இருந்தது. அங்கு இருந்த பிரிட்டீஷ் நூலகத்தில் ஏற்கனவே பல ஆங்கில நாவல்களைப் படித்திருந்த சூழலில் நாவல் எழுதும் ஆசை வந்தது. இரண்டு நாவல்களை எழுதினேன்.  அதில் ஒன்று இது. இதில் கிழக்கும் மேற்கும் சந்திக்கிற கதை அமைப்பு வருகிறது. பர்மாவிலிருந்து இரண்டாம் உலகப்போரின் போது திரும்பிவரும் ஒரு கோயம்புத்தூர் தமிழர், தனியாய் விடப்பட்டு உயிருக்குப்போராடும்  மூன்று வயது மங்கோலியப்பெண் குழந்தையைக் காப்பாற்றி எடுத்துக்கொண்டு வருகிறார். அக்குழந்தை, கோவையில் ஒரு தமிழ்க்குழந்தையாக வளர்கிறாள். அந்த நல்ல மனிதர் தன்னுடைய மற்ற பெண்களைப்போல எந்த வித்தியாசமுமற்ற விதமாக வளர்க்கிறார். தமிழ்பேசி வளர்ந்து ஒரு தமிழருக்குத் திருமணமாகிறாள் அப்பெண்.  அவள் பெற்றெடுத்த  மகன் சந்திரன். சந்திரன் வளர்ந்து 2005 வாக்கில் வார்சாவுக்குப் போகிறான். இரண்டாம் உலக யுத்தத்தின் எச்சங்களுக்கு இடையில் வாழும் பலரைச் சந்திக்கிறான். இப்படிக் கிழக்கில்  யுத்தத்தின் போது கண்டெடுக்கப்பட்ட தாயின் வயிற்றில் பிறந்த ஒருவன், மேற்கில் யுத்தத்தால் உடைக்கப்பட்ட நகரில் சுற்றித்திரிகிறான். அப்போது தன்னை யாரென வினவாமல் தன்னுடன் வா என அழைக்கும் போலந்து நாட்டுப் பெண்ணான  அன்னாவுடன் செல்கிறான். தன் வரலாற்றைச் சொல்கிறான். சமஸ்கிருதம் படித்து இந்தியவியல் அறிஞனாகி, வார்சா பல்கலைகழகத்தில் கற்பித்துக்கொண்டிருக்கும்போது கொல்லபடுகிற ஒருவனின் தங்கையையும் சந்திக்கிறான். அவளை அடிக்கடி சந்திக்கும் போது போலந்தின் சரித்திரம் அப்பெண்ணின் உளவியல் மூலம் புரிகிறது. தமிழ்நாட்டிலிருந்து மாஸ்கோ வழியாக போலந்துக்குச் சட்டவிரோதமாக வரும் போது ஜெர்மனியில் மாட்டிக்கொண்டு சிறையில் இருந்தவர் சிவநேசம். அவர் இன்னொரு பாத்திரம். சந்திரன், அவருடன் நெருக்கமாகப் பழகுகிறான். சிவநேசம், சிறை மருத்துவமனையில் சயரோகத்துக்கு சிகிச்சை பெறும் போது ஹிட்லரின் நாசிவதை முகாமில் நர்சாக இருந்த பார்வையிழந்த மூதாட்டியின், இரவில் மட்டும் பணிசெய்பவர், அன்புக்கு ஆளாகிறார். அம்மூதாட்டி, நாசி வதை முகாமில் பல ஜெர்மனியர் போல ஒரு காலத்தில் பணியில் இருந்தாலும் சயரோகத்தால் பீடிக்கப்பட்ட சிவநேசத்தின் தலையை வருடி  சிவநேசத்துக்கு  உயிர் வாழும் ஆசையை  ஏற்படுத்துகிறார். சந்திரன் தன் இறந்த மனைவியின் கதையைப் போலந்தில் பத்திரிகை ஒன்றில், தான் அங்கு முதலில் சந்தித்த அன்னா உதவியோடு பிரசுரிக்கிறான். ஆதிவாசிகளுக்கு உதவிய தீவிர வாதி என  போலீஸ் என்கௌன்டரில் கொல்லப்பட்ட மருத்துவ மாணவனான,  மனைவியின் தம்பி பற்றியும் அப்பத்திரிகையில் கதைபோல் எழுதப்படுகிறது. இப்படி கிழக்கும் மேற்கும்  தொடர்ந்து நாவலில் கொண்டுவரப்படுகின்றன.  இது ஒரு அனைத்துலக மதிப்பீடுகளைக் கொண்ட நாவல். யுத்தம், நாசிசம், நாசிசக் கொடுமைகள், இந்தியாவிலிருந்து மேற்கு, எதைத்தேடுகிறது போன்ற கேள்விகள் புனைவாக்கப்பட்டன. இழந்துபோன எதையோ கண்டடைய ஐரோப்பா ஏன் தனக்கான இந்தியாவைக் கட்டமைக்க விரும்புகிறது? அதுபோல இங்கிருந்து ஐரோப்பா போன சந்திரன், சிவநேசம் அதீத ஆற்றல் உள்ளவரா இல்லையா என யோசித்து முடிவுக்கு வர முடியாமல் இறுதிவரை, தடுமாறுகிறான்.

இந்த நாவல் கனடா நாட்டு இலக்கியத்தோட்டம் அமைப்பால் 2008-இல் வெளி வந்த சிறந்த தமிழ் நாவல் விருதுபெற்றது.  நான் நாவல் பிரதி அனுப்பாவிட்டாலும் அவர்களே வாசித்துப் பார்த்து விருது அளித்தனர். கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டபோது மிகச்சிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான விருதை கர்நாடக அரசிடமிருந்து 2016 இல் பெற்றது. அதுபோல் ஒரே ஆண்டில் கர்நாடகத்தில் ஆயிரம் பிரதிகள் விற்றன. அப்போது தான் தமிழ் வாசகர்கள் பற்றி யோசித்தேன். நம் நாவல் வாசகர்கள் கல்கி, ஆனந்தவிகடன் பத்திரிகை நாவல்களால் தீர்மானிக்கப்பட்ட  பெண்களின் வாசிப்புப்பழக்கத்தால் தாக்கம் பெற்றவர்கள். அவர்களை ஜெயகாந்தன் அதே பத்திரிகைகளில் எழுதி மாற்றப்பார்த்தார். அதற்குள் சுஜாதா வந்துவிட்டார். இலக்கிய நாவல் வேறுவகை வாசகர்களைக்கொண்டது. சிறு பத்திரிகைகள் இத்தகைய வாசகர்களை உருவாக்கத் தொடர்ந்து முயற்சித்தது. சமூகச்சூழல் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. தமிழிலும் சிறுவட்ட வாசகர்கள் வாசிக்கும் படைப்புகள், பெருவாரி வாசகர்கள் படிக்கும் நூல்கள் என்ற பாகுபாடு வந்துவிட்டது.இத்தாலியின் எழுத்தாளரான இட்டாலோ கால்வினோ இத்தாலிய பத்திப்பகம் ஒன்றில் வேலைபார்த்தார். அவருடைய பார்க்க ‘முடியா நகரங்கள்’ என்ற சிறுநாவல் உலக அளவில் விற்பனையில் சாதனை படைக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அவர் பதிப்பக அளவு கோல் தெரிந்தவர். அதனால் அது சாதனை படைத்தது. நாம் படித்தாலும் அந்த நாவலில் அனைத்துல விற்பனை சாதனை புரியும் எனச்சொல்ல எந்த அம்சமும் அதில் இல்லை என்பதறிவோம். மார்க்கோபோலோவும் குப்ளாய்கானும் பல நகரங்களைப்பற்றி பேசிக்கொண்டே யிருக்கிறார்கள். ஆனால் அது சிறந்த நாவல். ஒரு வாசகன் நிறைய இலக்கியம் படிக்கும்போது இலக்கிய அளவுபோல் மனதில் உருவாகும். இலக்கியச்சிறப்பை அளந்து கூறும் அளவு கோல் சிக்கலானது. இதற்கு, கலைஞராக இருந்தால் போதும், நமக்கு அந்த அளவுகோல் பிடிபடும் என்று சிலர் கூறுகின்றனர்.  கலைஞராக இருப்பது என்றால் என்ன? வேறு என்ன? கலைஞன் பிறக்கிறான் என்றுதானே பொருள். யார் நேரடியாகவோ மறைமுகமாகவோ பிறவி பற்றிக்கூறுகிறானோ அவன் யார் என்பது நமக்குத் தெரியாதா? சரி, விடுவோம். இத்தாலியில் இட்டாலோ கால்வினோ எழுதிய முதல் நாவல் ஒன்று உண்டு. அது வேறு வகையானது. நான் அதைப்படித்தேன். அகிலன் பாணியில் அதை எழுதலாம். இத்தாலியில் இன்னொரு நாவலாசிரியர் இருந்தார். உம்பெர்த்தோ இக்கோ என்று பெயர். அவரும் உலகப்புகழ் பெற்ற நாவல்களை எழுதினார். அவர் அங்குப் பேராசிரியர். அவரும் கால்வினோ போல அறிவை வைத்து நாவல் எழுதலாம் எனக்காட்டுபவர். ஆனால் இருவரின் நாவல்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இப்போது சொல்லுங்கள் வாசகர்களைக் கணிக்கமுடியுமா? கன்னடத்தில் கூட ஏற்கனவே ஆங்கிலப் பேராசிரியர்கள் கூட்டாக கன்னடத்தில் எழுதி, ஒரு ஐம்பது ஆண்டுகளாக தரமான வாசகர்களை உருவாக்கினார்கள்.    அடிப்படையில் ஒரு மொழியின் சூழல் முக்கியம். எனக்கு மொழியின் ஆழத்தில் சரடு போல ஓடும் மரபு, தமிழ் போன்ற மொழியில் முக்கியம் என்று படுகிறது. அது சங்க இலக்கிய அறிவு மரபா மத்தியகால பக்தி மரபா? எதன் அடிப்படையில் தரமான வாசகர்களை உருவாக்குவது? இது வரை தமிழில் இருந்த, இலக்கியத்தை மட்டும் வலியுறுத்தும்  ஒரே அளவு கோல் க.நா.சு. உருவாக்கியது. அது எண்பதுகளிலேயே காலாவதி ஆகிவிட்டது. அப்போது எட்டுமணிநேரப்பேட்டி ஒன்று அவருடன் எடுத்தோம் . அதில் அவர் சமூகவியல் என்பது என்ன என்று தனக்குத்தெரியாது என்றார். அவருடைய தந்தை அந்த வார்த்தையைக் கேட்டிருந்தால் வெறுத்திருப்பார் என்றார். மார்க்சியமும் தெரியாது என்றார். அவர் ஐம்பது களின் உலக இலக்கியத்தை வைத்துத் தமிழில் சில வரையறைகளை உருவாக்கினார். இலக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் எனவும் இலக்கியமே அளவு கோல், என்றும் கூறியவர்களும் இப்படி அத்தனைபேரும் அவரது கருத்துக்களைத்தான் கொஞ்சம் மாற்றி, மாற்றிப் பயன் படுத்தினார்கள். அந்த வரையறை, உலக சிந்தனை மரபுகளை உள்வாங்கி உதித்த அமைப்பியலும் அதுபோல பல்வகை மார்க்சிய மற்றும் அழகியல் தத்துவப்போக்குகளும் தமிழில் வந் தவுடன் காலாவதியாகிவிட்டன. அவற்றுடன் ஒட்டிக்கொண்டிருந்த மேல்தட்டுக்குரிய குணமும் காலாவதியாகி விட்டது. இறுதியாக ஒன்று கூறுகிறேன். இலக்கியம் என்பது ஏற்கனவே இருக்கும் சாரம்சம் அல்ல. அந்தந்த காலமும் சூழலும் உருவாக்குவது. அவற்றிற்கேற்ப, பல்வேறு காரணிகள் மூலம், கட்டமைப்பது தான். ரசனை கொண்ட வாசகர்கள் இயல்பிலேயே இருக்கமாட்டார்கள். வாசகர்களும் இலக்கிய கட்டமைப்புக்குத்தக உருவாகிறார்கள்.

முதல் இந்தி எதிர்ப்பு நாவல் என்று சொல்லக்கூடிய உங்களது ஆடிப்பாவை போலநாவலுக்கு தமிழ் நாட்டில் எந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்தது? அது வெளிவந்திருக்கவேண்டிய கால கட்டம் அதுதானா?

 

எனது  ‘ஆடிப்பாவை போல’ என்ற நாவல் இந்தி எதிர்ப்பைப் பற்றிப் பேசுகிறது.அந்த நாவலை தொடர்ந்தும் வாசிக்கலாம். ஒவ்வொரு அதிகாரத்தையும் தாண்டித்தாண்டியும் வாசிக்கலாம். வாசகர்களுக்குக் குறிப்புகள் கொடுக்கப் பட்டிருக்கும். கிண்டிலில் வாசிக்க ஏற்ற விதமான உத்தியில் எழுதப்பட்டிருக்கும். காலம் மாற மாற இலக்கிய மாதிரியும் மாறும். இதன் உள்ளடக்கம் 1965- இல் நடந்த இந்தி எதிர்ப்பின் போது தமிழகத்தின் தென் பகுதியைச்சார்ந்த இரு கல்லூரி மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட காதல் பற்றியது. அக்காலகட்டத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வரவில்லை. காங்கிரஸின் மதிப்பீடுகள் தமிழ்ச்சமூக மதிப்பீடுகளாய் இருந்த காலம். இப்போது பெரிய பேருந்து நிலையமாய் இருக்கும் இடம் அப்போது சிறிய பேருந்து நிலையம். மாணவ மாணவியர் பழக்க வழக்கங்கள் அன்று வேறுபட்டவை. காதல் புரிவார்கள். ஆனால் சாதி அன்றும் பெரியதடை . சதித்திட்டங்கள் அதுவரை ஆட்சிக்கு வராத புதிய கட்சியிலும் உண்டு. விடுதி மாணவர்கள் வேறுவிதமானவர்கள். பணப்புழக்கம் இல்லை. ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் மிகப்பெரிய தொகை.  சாதி வேறுபாடு இன்று போல் அன்றும் உக்கிரமாக இருந்து. மேடைப்பேச்சுத் திறமை ஒருவரை பாராளுமன்ற உறுப்பினராக்கிவிடும். ஆனால் அரசியல் தந்திரங்கள் மிகவும் முக்கியம். உறவுமுறைகளும் அரசியலில் முக்கியம்.ஒரு ஊர்வலம் நடக்கிறது அது துப்பாக்கிச்சூட்டில் முடிந்த போது அடுத்து ஆட்சி மாறும் என்று  சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் பல துப்பாகிச்சூடுகள் நடக்கின்றன. ஆனால் உறவு முறைகள் தான் தத்துவத்தை விட பலமானவை. அதாவது குடும்பம் தமிழ்ச்சமூகத்தில் முக்கியமானது. தமிழும் குடும்பமும் பின்னிப்பிணைந்திருக்கும் சமூகம் தமிழ்ச்சமூகம் என பல நிகழ்ச்சிகள் விளக்குகின்றன. அப்போதே திரைப்படமும் அரசியலும் கலக்க ஆரம்பித்துவிட்டன. இடது சாரிகள், நக்சல்பாரி அனுதாபிகள் கொல்லப்படுகின்றனர். ஆனால் இடதுசாரிகளுக்கு ஆட்சியைப் பிடிக்கமுடியாது. எப்போதும் தியாகம் செய்பவர்கள் அவர்கள். அமரன் என்ற மாணவன் வருகிறான்.   இடது சாரி ஒருவரே அமரனின் பேச்சுத்திறமையைப் புகழ்கிறார்.வேறு ஒரு பேராசிரியர் வருகிறார்.  தனித்தமிழ் நாடு பற்றிப்பேசுபவர். அமரனை ஓரிடத்தில் ப்ளாட்பாரம் ஸ்பீக்கர் என கேவலப்படுத்துகிறார்.   பிளாட்பாரம் ஸ்பீக்கர் பெரிய குடும்பத்தாரிடம் தோற்கிறான். அக்குடும்பத்தார் எந்த கட்சி வந்தாலும் முக்கியமானவர்கள் ஆகிறார்கள்.  அது போலவே அவனைக் கேவலப்படுத்திய பேராசிரியரும் இழுத்து இழுத்துப் பேசும் அடுக்கு மொழிகள் நிறைந்த சொற்பொழிவு ஒன்றைக்கேட்டுவிட்டு இனி தாக்குப்பிடிக்க முடியாது என்று ஊரைக்காலி செய்கிறார். தலித்துகள் அன்றும் எரிக்கப்பட்டனர். கட்டுரைகள் எழுதும், இலக்கிய ஆசையுள்ள கதைத்தலைவனுக்கு  சொற்பொழிவுக்குப்பரிசு வாங்குபவளாய் அறிமுகமாகும் அவன் காதலி திடீரென இந்தி எதிர்ப்புக்குப் பிறகு ஏன் கல்லூரியைத்தொடரவில்லை என்பது புரியவில்லை. அவன் படிப்பை முடித்து, டெல்லியில் பத்திரிகையாளனாய் மாறி, போராட்டம் நடந்து கொண்டிருக்கும் இலங்கைக்குச்செல்கிறான். இடையில் பிரிகிற கதைத் தலைவனும் லண்டனிலிருந்து வரும் அவன் காதலியும் வயதான பிறகு திடீரென ஐரோப்பாவில் சந்திக்கிறார்கள். இந்தி எதிர்ப்பின் மூலம் அப்போது தமிழகத்தில் மேலெழுந்த மக்கள் பிரிவுகளில் நடைபெற்ற சமுக மாற்றம் எத்தகையது என அலசும் நாவல்.

இந்த நாவல் வெளிவரவேண்டிய காலம் இது தானா என்ற உங்கள் கேள்விக்கு வருகிறேன்.1965 இந்தி எதிர்ப்பு நேரத்தில் சாதாரண மக்களும் அரசியல் வாதிகளும் மாணவர்களும் எப்படி இருந்தனர் என்று இந்த நாவல் பார்க்கிறது. இன்று இந்தி எதிர்ப்புப்பற்றி பேசினால் சிலர் எரிச்சல் அடைகின்றனர். அதுபோல எண்பதுகளின் மேல் தட்டு அழகியல், அதன் அடுத்தகட்டமாக லத்தீன் அமெரிக்க மாதிரியில் எழுதுவதற்கு அனுமதிக்கும். ஆனால் இந்தி எதிர்ப்பு பற்றி எழுதுவதற்கும்  வலதுசாரிகளை எதிர்த்து அரசியலை எழுதுவதற்கும் யாரையும் அது உந்தவில்லை பார்த்தீர்களா? இலக்கியத்தூய்மை வாதம் பல மாதிரிகளில் கடந்த முப்பது ஆண்டுகளாக முகமூடி இட்டு இங்கே உலவுகிறது. புதுக்கவிதைகளில் இருந்தும் அரசியலை கடந்த முப்பது ஆண்டுகளாய் ஒதுக்கிவிட்டிருக்கிறது. ஆத்மாநாமைச்சிலர் பேசுகின்றனர். அவருடைய எமர்ஜென்சிக்கான எதிர்ப்பு நிலைபாடு அவர்களுக்கு மறந்துபோயிற்று. இந்தி எதிர்ப்புப் பற்றிப்பேசும் போது, அது நாவல் வடிவம் எடுக்கும் போது, ஏதாவது ஒரு அரசியல் கட்சியை ஆதரிப்பதோ எதிர்ப்பதோ முக்கியம் அல்ல. அன்று இந்தி எதிர்ப்பை நடத்திய சமூகம் எப்படிப்பட்டது  என்று பார்ப்பது முக்கியம். இந்த நாவலில் ஒரு வரலாற்றுப்பார்வை உள்ளது. இன்றைய கோணத்தில் இந்தி எதிர்ப்பு நோக்கபடுகிறது. இன்றைய சமூகத்துக்கும் அந்த சமூகத்துக்கும் என்ன ஒற்றுமை, வேற்றுமைகள் உள்ளன என்ற பார்வையும் முக்கியம். அதுபோல் இந்தி எதிர்ப்பு என்பது மொழி எதிர்ப்பு மாத்திரமல்ல. தமிழ் மொழி இருக்கும் வரை அது ஆதிக்கம் செலுத்தும் எல்லா  மொழிகளையும் மனோபாவங்களையும் எதிர்க்கத்தான் செய்யும். தமிழ், முன்பு நான் சொன்னதுபோல பிராந்தியத்தின் வலிமையின் பெயர். அசாம், கர்நாடகா, கேரளா கூட தம் உரிமையைப் பெற தமிழ் உதவ வேண்டும். மாநில சுயாட்சி அரசியல் அதுதான். கர்நாடகத்தில் இந்தியை எதிர்க்க தொடங்கிவிட்டார்கள் பார்த்தீர்களா?  பிரதமர் திருக்குறள் சொல்லிவிட்டால் தமிழர்கள் அவர்களை வர விட்டு விடுவார்களா? அவர்கள் தமிழை ஆதரிப்பவர்கள் ஆகி விடுவார்களா? அதுபோல், மார்க்யெஸ் என்றும் சரமாகோ என்றும் சில பெயர்களைச் சொல்வதால் எழுத்துக்குள்ளே இருக்கும் சனாதனம் மூடி மறைக்கப்பட்டுவிடுமா? இப்படிப்பட்ட கேள்விகளையெல்லாம் ‘ஆடிப்பாவை போல’ என்ற நாவலின் அரசியலை அறிகையில் கேட்க மூடியும்.  அது கேட்கிறது.

 

உங்களின் நாவல் முயற்சிகள் எல்லாம் உங்கள் இலக்கியப் பயணத்தில் போதிய அங்கீகாரத்தைப் பெற்றதாக நினைக்கிறீர்களா? இவைகள் பல்கலைக்கழக வளாகங்களுக்குள் விவாதிக்கப் பட்டனவா?

 

என் நாவல்கள் நகுலன் நாவல்களுக்கு எதிரிடையானவை. நகுலனைப் பலர் ஏற்றுக்கொள்ளவில்லை. நகுலன் தீவிரமான உளவியலுக்குள் போவார். குறிப்பிட்ட நான்கைந்துபேர் அவரிடம் நேரம் போக்குவதற்காகப் போவார்கள். அவரை நான் பல முறை சந்தித்திருக்கிறேன். ஆங்கில மாடர்னிச நாவல்கள் படித்து அந்த தாக்கத்தில் எழுதியவர். கதையம்சம் அதிகம் அவர் நாவல்களைத் தீர்மானிக்காது. உணர்வோட்ட மே கதைப்பாத்திரங்கள். ஆனால் என் நாவல்கள் புற வய நாவல்கள் என்று கூறலாம். புறநானூறு இப்படிப்பட்டது. மணிமேகலையின் அழகியல் இப்படிப்பட்டது. பதிற்றுப்பத்து வெளியீட்டு முறை இப்படிப்பட்டது. ‘பிரதாபமுதலியார் சரித்திரத்தின்’ நாட்டுப்புறவியல் இப்படிப்பட்டது. சிலப்பதிகாரம் இப்படிப்பட்டது. அம்சன் குமார் என் ‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்களை’ சிலம்பிடம் சேர்த்து எழுதியிருப்பார். தெ.பொ.மீ. சிலப்பதிகாரம் பற்றி எழுதியதைப் படித்தபோது என் நாவல்களில் வரும் பாத்திரங்களின் அறிமுகம் போல இருந்தது. ஏன் தமிழில் காவிய மரபுக்கதைகள் எல்லாம் புறவயக்கதைகளைக் கொண்டிருக்கின்றன? இக்குணத்தைக்கவனித்து, நாகார்ச்சுனனும், எஸ்.சண்முகமும் என்நாவல்கள் பற்றி விரிவாய் எழுதியுள்ளார்கள்.  இந்த எல்லா நாவல்களும் மாத நாவல்கள் போல வாசிக்கப்படாது. என் சில நாவல்கள் வாசகர்களே என்று அழைத்துக்கதை சொல்லும். சரித்திரத்தில் படிந்த நிழல்கள் நாவல், விநாயகர் வணக்க வெண்பாவுடன் தொடங்கும். என்னுடைய  ‘ஜி.கே.எழுதிய மர்ம நாவலில்’ இயல்களுக்கு இடையிடையே குறிப்புக்கள் வரும். ஜெர்மன் நாடக ஆசிரியர் பிரக்ட் தன் நாடகங்களில் குறிப்புகள் எழுதி இது நாடகம் தான் என உணரவைப்பார். வாசகன் படைப்போடு ஐக்கியப்படக்கூடாது என்பார். அதை அந்நியமாக்கும் உத்தி என்பார். என்நாவல்கள் இந்த உத்தியைபிபிரதானமாகக்கொண்டது.   மேலும் நாவல் இலக்கியம் என்பது அந்த மக்கள் கூட்டதின் ஆதி மொழியுடன் ஒன்றிணைந்தது என்று கூறுவது என் நாவலின் கலைக்கோட்பாடு எனலாம். சங்க இலக்கியமும் சிலம்பும் அந்த ஆதி மொழியின் குரல்கள். இன்றைய  நாவல் அதன் தொடர்ச்சி என்பது என்கருத்து. இப்படிப்பட்ட ஒரு கருத்து சிறுபத்திரிகையில் எப்போதும் ஒலித்ததே  இல்லை. சங்க இலக்கியமும் சிலம்பும் தற்கால இலக்கியத்தை எழுதும் புனிதக் கைகளில் படுவதே பாவம் என்றுதான் அன்றுமுதல் எல்லோரும் நினைத்தார்கள். இன்றும் அப்படியே நினைக்கிறார்கள். மரபு வேண்டாம் என்பதே எல்லோரின் ஏகோபித்த குரல். முக்கியமான காரணம், தற்கால இலக்கியம் வேறு கைகளில் மாட்டிக்கொண்டிருந்தது என்று ஏற்கனவே சுட்டிக் காட்டியுள்ளேன். இதுபோல ஒரு சுட்டிக்காட்டல் தொ.மு.சி. ரகுநாதனின் ஒரு நூலில் வந்தபோது பெரிய பரபரப்பு  ஏற்பட்டது.  சிலருக்கு ஞாபகமிருக்கலாம். தமிழ் நாவல் இலக்கியத்துக்குச் சங்க கால மரபு வேண்டும் என்பது பெரிய பாவம் ஏதும் இல்லை. ஜேம்ஸ் ஜாய்ஸ் அவரது நாவலான,யுலிசஸில், ஹோமர் காவியத்தைப் பயன்படுத்துகிறார். இந்தச் சங்கதி  இவர்களில் ஓரிருவருக்குத்தெரிந்தாலும் இவர்கள் சங்க இலக்கியம் படிக்க அது தூண்டுதலாகாது. தமிழன் மரபில் இவர்களுக்கு மதிப்புமில்லை, அறிவுமில்லை. இன்னொரு விஷயம். எண்பதுகளில் வாசகர்கள் ஒரு குறுகிய வட்டத்தினர் தான். பொது வாசகர்கள் இல்லை. பொது வாசகர்களைப் பெரும் பத்திரிகைகள் வியாபாரத்துக்காகப் பயன்படுத்தின. இலக்கிய தரத்தில் எழுதப்பட்ட நாவல்கள் சிறு பதிப்பகங்களால் வெளியிடப்பட்டன. நகுலன் கைச்செலவு செய்து வெளியிடுவதாய் தன்னை நையாண்டி செய்வார். சுந்தர ராமசாமி படைப்புக்கள் க்ரியா மூலம் வந்தன. இவர்கள் யாருடைய நாவலும் கல்கி, குமுதம், வாசகர்களால் வாசிக்கப்படவில்லை .அகிலனுக்கு ஞானபீடம் வந்தபோது சு.ரா. ஒரு கட்டுரை எழுதி அகிலனைக் காலி செய்தார். இந்திராபார்த்தசாரதியின் குருதிப்புனல் வந்தபோது அம்பை ஒரு கட்டுரை எழுதி அவரை ‘ஆண்மை நாவலாசிரியர்’ என விளக்கினார். நகுலன்  பொதுசன படைப்பாளி அல்ல. இப்படி அன்று யாரும் பொதுவாசகர்களால் வாசிக்கப்படவில்லை. இது பற்றிக்கொஞ்சம் பார்ப்போம். நம்மிடம் வாசகர் சர்வே எதுவும் கிடையாது. அது சமூகவியலாளர்களின் வேலை. நம் பல்கலைகளில் அப்படிப்பட்ட சமூகவியல் என ஒரு துறை இருக்கிறதா என்றே யாருக்கும் தெரியாது. கர்நாடகத்தில் பெரும்பாலான எல்லா கல்லூரியிலும் அது ஒரு முக்கியமான பாடம்.  வாசகர் சர்வே அவர்கள் எடுப்பது உண்டு. சரி, வாசகர்கள் நம்மிடமும் அதிகம் உண்டுதான். அது நேரப்போக்காய், நாவல் வாசிப்பைக் கருதுபவர்கள். ஒரு காலத்தில் நா. பார்த்தசாரதிக்கும் மு.வ.வுக்கும் இருந்த வாசகர்கள் எழுபது எண்பதுகளில்  இரண்டாய் பிரிந்து, ஒரு பிரிவு, சிறு பத்திரிகைக்குப் போயிற்று. க.நா.சு.போன்றவர்களின் தீவிர இலக்கியம் வேண்டும் என்ற பிரச்சாரமும் அதுபோல, திராவிட பரம்பரை ஆட்சிக்கு வந்த பின்பு  திராவிட வாசகர் கூட்டம்  இலக்கியத்திலிருந்து வெளியேறியதும் ஒரு புதிய சூழலைத் தமிழில் உருவாக்கியது. குறுங்குழுவினர் சிலர் மேல்சாதி சார்ந்து மாடர்னிசத்தைத் தமிழுக்குக்கொண்டுவர முயன்றனர். அபத்தநாடகம் (அப்ஸர்ட் தியேட்டர்) போன்றன வந்தன. அதற்கு எதிராக அப்போது தி.க.சி.ஆசிரியத்துவத்தில் செயல்பட்ட தாமரை பத்திரிகை முக்கியமாயிற்று. இப்படி ஒருவித சிறுவாரி (ஜமாலனின் தத்துவச் சொல்லாட்சி இது) எழுத்தும் வாசிப்பும் தமிழைத் தீர்மானிக்கும் சரித்திரம் உருவாயிற்று. அதே இலக்கியச்சூழலாயும் ஆயிற்று. இது 21 ஆம் நூற்றாண்டின் முதல் ஐந்தாண்டுகள் வரை ஒரு குறிப்பிட்ட குணத்தைத் தமிழுக்கு அளித்தது. இக்கட்டத்தில் நாவல்களுக்கு வாசகர்கள் கிடையாது. பத்திரிகை தொடர்கதையின் வாசகர்களைப் பற்றி நாம் பேசவேண்டாம்.அவர்கள் எப்போதும் இருப்பார்கள். ஆனால் எதையும் தீர்மானிக்கமாட்டார்கள். ஆனந்தவிகடன் வாசகர்களாய் ஐம்பதுகளில் இருந்தனர். இவர்கள் வருவார்கள் போவார்கள். எனவே என்போன்றவர் எழுத்துக்களுக்கோ, வேறு சீரிய எழுத்துக்களுக்கோ, கன்னடம் போல, தமிழில் இலக்கிய நாவல் வாசிப்பவர்கள் பேரளவில் இருக்கமாட்டார்கள்.

தமிழ்த்துறையினர் தற்கால இலக்கியத்திற்கு ஏனோ வரவில்லை. மு.வ.நாவல்கள் வந்தபோதும் பாடமாக இருக்குமே தவிர அவற்றின் மீது அந்த காலத்தில் இங்கிலாந்தில் ஆங்கிலப்பேரா. எஃப்.ஆர்.லீவிஸ் நாவல் இலக்கியம் மீது எழுதியதுபோல ‘பெருமரபு’ (Great Tradition) இது என விளக்கிச்சொல்லும்  ஒரு நூல் வராது. பெரும்பாலும் கற்பிக்கமாட்டார்கள். மாணவர்களே படிக்கவேண்டும்.

தமிழ் இலக்கிய உலகில், வாசக எண்ணிக்கை ஒரு புறம் குறைந்துகொண்டே இருக்கையில், தினமும் மலம் கழிப்பதுபோல் இன்றைய எழுத்தாளர்கள் நிறைய எழுதிக் குவிக்கிறார்கள்; பெரிய பெரிய புத்தகங்களாக எழுதுகிறார்கள்; இது ஒருவகையான பைத்தியக் காரத்தனமாக காணப்படுகிறது. இப்படிப்பட்ட இலக்கிய வகைமைகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? ஏனென்றால், பொதுவாக உங்களுக்கான இலக்கியக் களமாடல் நாவல் வடிவத்தில் இருக்கிறது. அதனால்தான் இந்தக் கேள்வி.

 

ஆமாம், இப்போது வந்துகொண்டிருக்கும் எழுத்துக்கள் எழுபதுகளில் ஆரம்பித்து, தொன்னூறுகள் முடிய வந்த இலக்கியச்சூழலுக்கு மிகவும் மாறாக உள்ளன. உங்களைப்போல நானும் கவனித்துள்ளேன். அதாவது இவை பெரும் பாலும் முகநூல் வந்தபின்பு தீர்மானிக்கப்பட்டது. இது ஏற்கனவே நான் சொன்னதுபோல கடந்த சுமார் இருபது ஆண்டு கால நிகழ்வு. 2005 –க்கு பிந்திய நிகழ்வு.  முகநூலில் ‘லைக்’ வாங்குவதற்காக ஒரு புத்தகம் வரும். அடுத்து ஏதும் வராது. அவர் காணாமல் போவார். அதுபோல விருதுகள். விருது பெற்றவர் இனி நிறைய எழுதுவார், தமிழுக்கு அடித்தது யோகம் என்று நாம் நினைத்தால் அவரும் முகநூலில் சில போட்டோக்கள் போட்ட பின்பு காணாமல் போவார். முகநூல் புறரீதியான அடையாளம். சிறுபத்திரிகைபோல, அகரீதியான அடையாளம் அல்ல. ஆனால், மொத்தத்தில் பெரிய மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. நாம் இவைகளைக் கவனிக்கவும் அவற்றின் மூலம் வெளிப்படும் பாடங்களையும் கற்கவும் தவறக்கூடாது. அந்தக்காலத்தில் கையெழுத்துப் பத்திரிகை நடத்துவது போல இப்போது முகநூல் பயன்படுகிறது. உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் அதிகம் முகநூலில் பங்கெடுக்கிறார்கள். அவர்களைக் கவர சீப்பான செக்ஸ் உத்திகளைச் சிலர் பயன் படுத்தினார்கள். டிஜிட்டல் குற்றம் பற்றிய சட்டங்கள் வந்தபின்பு அவை குறைந்திருக்கின்றன. அறுபது வயது எழுத்தாளர் நாற்பது வருடங்களாக எழுதிய அனுபவம் சார்ந்து இறுதியாக அவர் வந்தடைந்த ஒரு கருத்தை எழுதுகிறார் என்று வைத்து கொள்வோம். பத்து ‘லைக்’இருக்கும். அடுத்து அவர் நன்றாக முகச்சவரம் செய்து ஒரு போட்டோ பதிவேற்றுகிறார் என்று வைத்துக்கொள்வோம். சுமார் ஐந்நூறு லைக் இருக்கும். இதிலிருந்து என்ன முடிவுக்கு வர? அவர் கருத்தை விட அவர் முகம் நன்றாக இருக்கிறது என்றுதானே. இது அவரைக்கேலி செய்வது ஆகாதா? சிலர் தமக்கிருக்கும் மனநோயை இறக்கிவைக்கவும் வெளிநாட்டில் இருப்பவர்கள் குடித்தபின்பு தோன்றுவதையெல்லாம் கிறுக்கவும் பயன் படுத்துகின்றனர்.ஒரு முறை ஒரு ஆங்கிலப்பேராசிரியர் கவித்துவம் என்பது ஒரு நிகழ்த்துதல், (ஃபெர்பார்மென்ஸ்) என்று எழுதினார். அது ஒரு ஆழமான சிந்தனை. அதை முக நூலில் படித்த பலர் நாடக நிகழ்த்துதல் எனப்பொருள்கொண்டு நாடகம் பற்றி எதிர்வினை ஆற்றினார்கள். ஆங்கிலப் பேராசிரியரும் தான் எழுதியது நாடகம் பற்றித்தானோ என்று ஐயம் கொண்டு கடைசியில் தன்னையே மாற்ற ஆரம்பித்துவிட்டார். இது ஒரு பெரிய தமாஷ். அதாவது புதியது தோன்றுவதற்குப் பதில் பெருவாரியானது  தீர்மானச்சக்தியாகிறது. இது இப்படியே போனால் கடைசியில் பாசிசத் துக்கு வழி வைக்கும். கூட்டம் தான் பாசிசத்தை உருவாக்குவது. ஹிட்லர் பாசிசத்தை உருவாக்கியதை விட கூட்டத்தினர் தான் அவரைக் கொலைகாரராக்கியது. இது இப்போது இந்தியாவிலும் பாசிசமாக வந்து கொண்டிருக்கிறது.வங்கிகள் முன்பு கால்கடுக்க நின்று செத்துப்போன மக்களைப் பார்த்தபின்பும் அதற்குக் காரணமான அதே கூட்டம் இன்னும் அதிக பலத்துடன் வெற்றிபெறுவது எப்படி?  கணினி வந்தபின்பு இதெல்லாம் மிக எளிது. ஒருவர் ஆஹா, மக்கள் அதிகாரம் பெற ஆரம்பித்துவிட்டார்கள் என மகிழ்ந்தார். ‘கூட்டத்துக்கும்’ மக்களுக்கும் வித்தியாசம் அவருக்குத் தெரியவில்லை. இலக்கியத்தை இந்தச் சூழல் எப்படிப்பாதிக்கிறது என்பது இன்னும் ஆழமாகப்பேச வேண்டியது. நூல்விமரிசனமும் கேள்விமரபும் மழுங்கியுள்ளன. பாராட்டுரைகள் மட்டும் பரவுகின்றன. சமீபத்தில் ஒரு நாவலுக்கு பெரிய விருது வந்தது. விருது பெற்றவரை எல்லோரும் பாராட்டினர். ஏழாயிரம் பிரதிகள் விற்றன. ஏழாயிரம் பேர் படித்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? சுமார் இருநூறுபேர் முழுதும் படித்திருந்தால் மிகப்பெரிய விசயம். வீடுகளில் அடையாளப்பொருளாய் வைக்க வாங்கினார்கள்.  அடையாளங்கள் ஊடகங்கள் மூலம் உருவாகின்றன. அடையாள உருவாக்கம் வேறு ஒரு சமுக வெளிப்பாடு. அதனை உடைத்து அதன் உள்ளே இருக்கும் பொருள் என்ன எனப்பார்ப்பது இன்னொரு விதமாய் சமூக அர்த்தத்தைத் தேடும் காரியம். விரிவாய் இவற்றை இங்கே பேசமுடியாது.

தமிழில், கணினி, முகநூல்,  இவை மூலம்  கொஞ்சம்  நல்லதும் நடக்கிறது, மறுப்பதற்கில்லை.  பரவலாய்ச் செய்திகளைக் கொண்டுபோக முடிகிறது. பெரும்பான்மையாதல், பரவுதல், வேகமாக தொடர்புறுத்துதல் நடக்கின்றன. இத்தன்மைகள் நல்லதும் கெட்டதும் கொண்டது. முக நூலில் எழுதியதைப்பலர் நூலாக்குகின்றனர். சில நல்ல நூல்கள் அப்படி வந்துள்ளன. மறுப்பதற்கில்லை. முகநூல் பற்றி முழுஆய்வுகள் வந்த பின்புதான் இறுதியான முடிவு எடுக்கவேண்டும். நான் எதிர்மறைகளை அதிகம் பேசிவிட்டேன். முற்றிலும் எதிர்மறையான தீர்ப்பும் வழங்கக்கூடாது. புதிய ஊடகம் இது.

உங்களின் சமீபத்திய நாவல் ஷம்பாலா, இன்றைய மோடி அரசின் நடவடிக்கைகளை நையாண்டி பண்ணும் ஒரு அரசியல் நாவல். இப்படி நேரடியாக விமர்சித்து எழுதும் மன நிலைக்கு நீங்கள் தள்ளப்பட்டீர்களா? அல்லது இயல்பாக இன்றைய அரசியல் நடவடிக்கைகளால் ஏற்பட்ட அழுத்தத்தால் எழுதினீர்களா?

 

இனி நான் இறுதியாக எழுதிய ஷம்பாலா என்ற நாவல் பற்றிச்சொல்கிறேன். என் நாவல் எழுத்து முறையின் தொடர்ச்சியும் விலகலும் இந்த நாவலில் உண்டு. 2014 க்கு பின் வந்துள்ள வலதுசாரி அரசியலில் பாசிசத்தின் இந்திய முகம் தெரிந்தது. 14-7-20 அன்று வரலாற்றாய்வாளர் ராமச்சந்திரா குஹாவின் மோடி-ஷா ஆட்சிபற்றிய மதிப்பீடு வந்துள்ளது . அவர் சொல்லும் விஷயங்கள் மிகுந்த கவனத்துக்குரியவை. அதில் இந்திராவின் நெருக்கடி பிரகடனத்துடன் இணைத்து இன்றைய வலது சாரிகளின் பாசிசப்போக்கை உணர்த்துகிறார். அவர் இன்று ஊடகங்களும் நீதிமன்றமும், அதிகாரிகளும் தோற்றுப்போனதோடு, வேறுபல நிறுவனங்களான மிலிட்டரி, சிவில் ஆட்சித்துறை, இன்கம்  டாக்ஸ், வங்கித்துறை போன்ற பலவும் அதனதன் தன்னுரிமையை இழந்து சனநாயகம் இனி பெரிய ஆபத்தைச்சந்திக்கும் என்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைக் கோடிக் கணக்கில் பணம் கொடுத்து கவிழ்க்கிறார்கள் என்கிறார். அவர்கள் எல்லாவற்றையும் தங்கள் பிடிக்குள் கொண்டுவருகிறார்கள் என்கிறார்.இந்த ஆபத்து எல்லோரும் அறிந்ததுபோல படைப்பு மனத்திலும் படும். அது வேறு வடிவத்தில் இருக்கும்.  எல்லாவற்றையும் இந்து முஸ்லிம் பிரச்சனை ஆக்குவது என்பது பெரிய பாசிச உத்தி. அது மிகுந்த மன உளைச்சலைத் தந்தது. அவர்கள் உருவாக்கிய சொல்லாட்சி, அர்பன் நக்சல். அதுபோன்ற சூழலுக்கு முகம் கொடுக்கும் ஒரு கதைப்பாத்திரம் இந்த நாவலில் வருகிறது. பாசிசத்தின் அடையாளச் சொல் ஹிட்லர். அது இன்னொரு பாத்திரம். இப்படி ஒரு தற்கால அரசியல் நாவல் எழுத எண்ணிய போது என்ன வடிவம் கொடுப்பது என்று யோசித்தேன். என் பல நாவல்களில் வரும் இரண்டு அடுக்கு கதைமுறை எனக்குத்தெரியாமலே உருவானது. ஒரு சுவாமிஜி வருகிறார். ஷம்பாலா என்ற இடத்தில் உலகின் அதிகாரம் எல்லாம் கிடைக்கும் என்ற புராணக்கதை உள்ளது. சுவாமிஜி, நவீன ஹிட்லருக்கு அந்த இடம் பற்றிக்கூறுகிறார். அரசியலும் மதவழிபாடும் எப்படிப் பின்னிப் பிணைந்துள்ளன எனக்காட்டுவதற்காக அப்பாத்திரம். அழகியலைப் பொறுத்தவரையில் இந்த நாவல் என் முந்தைய நாவல்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. நேரடியாக வாசகரைத் தொடுவதற்காக நேரடி அரசியல் வரும். 2014 லிருந்து 2018 வரை இங்கு நடந்த பல சம்பவங்களை நேரடியாகத் தந்து அவற்றைச்சுற்றி உலக அளவில் அரசியல் எதிர்ப்பு நாவல்கள் பலதில் வருவதுபோல ஒரு உருவகத்தன்மையை உருவாக்கினேன். உருவகம் என்றால் கதை அமைப்பில் இந்த எல்லா உண்மைகளையும் அடக்கிய ஒரு உருவம் வரும் படி  கற்பனை செய்து பாத்திரம், பேச்சு, சம்பவம் என எழுதுதல். அதனால் தான் நாவலில் அறிவை உளவு பார்க்கும் நிகழ்ச்சிகள் வந்தன. அறிவை உளவு பார்த்தல் பாசிசம் செய்வது. உருவகமும் யதார்த்தமும் அப்படி இணைத்தேன். பாசிசமும் இன்று உடலைப்பேணுங்கள் யோகா செய்யுங்கள் என்று கூறும். அது பற்றி நேரடியாகக் கூறாமல் குஸ்தி பயிற்சிபெற்ற பள்ளிக்கூட சிறுவனை ஹிட்லர் பெயர் கொண்டவனாய் அறிமுகப்படுத்தினேன். இதன் மதிப்புரை இந்து தமிழில் வந்தபோது மிக அதிகமான அழைப்புக்கள் எனக்கு வந்ததைப்பார்த்து வியந்தேன். லண்டனின் இருக்கும் ஒரு மருத்துவர் ஊருக்கு வந்தபோது கிடைத்த மதிப்புரையை படித்துவிட்டு தன்னை அறிமுகப்படுத்திவிட்டுக் கொஞ்சநேரம் பேசினார். அவர் மதிப்பீட்டில் தமிழகத்தில் வலதுசாதி அமைப்புக்கள் பலப்பல பெயரில் கோயில் சார்ந்து செய்யும் காரியங்கள் இன்னும் பயங்கரமானவை. அதுபோல் தமிழ்ப்பண்பாட்டு வெளியில் பாசிசத்தை அகவயப்படுத்தும் காரியங்களைப் பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் காட்சி ஊடகங்கள் மிகத்திறமையாகச்செய்வது புரிந்தது. சினிமாவும் ‘மாயைப்படுத்தலைச்’ சிறப்பாகச் செய்து இளைஞர்களை அரசியலற்றவர்களாக்குகிறது. என் ஷம்பாலா நாவல்போல பல நேரடியான அரசியல் நாவல்கள் தமிழில் வரவேண்டும். சமீப காலங்களில் தமிழ்ப்பண்பாடும் இலக்கியமும் அரசியல் மயப்படுத்தாத போக்கைக் கையாள்கின்றன. அரசியல் மயப்படுத்தப்படாமல், உள்ளதால் பண்பாடு என்றால் சினிமா பற்றிப்பேசுவதுதான் என்றாகிவிட்டிருக்கிறது. இது எப்படிப்பட்ட ஆபத்து என பலருக்கும் தெரியவில்லை. உலக இலக்கியத்தில் அரசியல் நாவல்கள் பல உள்ளன. அதற்கு ஒரு மரபு உள்ளது. பிரிட்டிஷ் எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘விலங்குப்பண்ணை’ முக்கியமானது. அது முற்றிலும் உருவகம். ஷம்பாலா சற்று மாறுபட்டது. இந்த நாவலுக்கு நிறைய எதிர்வினைகள் வந்தன. மாலன் ஒரு கட்டுரை எழுதி எனக்கு அனுப்பினார். ஹிட்லருக்குப் பதிலாக ஸ்டாலின் வரக்கூடாதா என்பது போல எழுதினார்.அவரிடம் என்குறி தப்பவில்லை என்றேன்.

 

 

 

படிகள் மற்றும் சிற்றேடு இதழ்கள் குறித்து ஓரிரு வார்த்தைகள்

படிகள், இதழ் பற்றிப் பலர் கேட்கிறார்கள்.  ஜி.கே. இராமசாமி, மற்றும் சிவராமன் என்ற இரண்டு சமூகவியல் பேராசிரியர்களுடன் செயல்பட்டேன்.அவர்களின் சமூகவியல் அறிவு அவ்விதழில் பிரதிபலித்தது. சிற்றேடு என்ற இதழ் தமிழ்த்துறையையும் சிறுபத்திரிகையும் இணைக்கும் இலட்சியத்தில் பல இளம் பேராசிரிய நண்பர்கள் துணையுடன் தொடங்கப்பட்டது என்பதைத்தெரிவிக்கிறேன். .

இலக்கு இலக்கியப் போக்குகள் வீரியத்துடன் எழும்பி கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப் போனதாக உணர்கிறீர்களா?

 

ஓ, நீங்கள் இலக்குக் கூட்டங்களில் கலந்திருப்பீர்கள் அல்லவா? இலக்கு அமைப்பு, பத்தாண்டு தமிழிலக்கியப் போக்குகளை மதிப்பிடுவதை ஒரு திட்டமாக வைத்திருந்தது. அப்படி மூன்று நாள் கருத்தரங்கு சென்னை வில்லிவாக்கத்தில் நடந்தது. அது ஒரு முக்கியமான இலட்சியத்தை வைத்திருந்தது. ‘மாஸ் கல்சர்’ என்று சொல்லப்படும் பெரும் பத்திரிகை மற்றும் பொது சன மாயையை மக்களிடம் உருவாக்கும் சக்திகளை அடையாளம் காண்பது. அப்போது மாதநாவல் தமிழில் உச்சத்தில் விற்ற சமயம். சுஜாதா பெரிய பத்திரிகை வியாபாரத்திற்குப் புது வேகம் கொடுத்தார். இலக்கியம் வணிகப்பொருள் அல்ல என்ற முழக்கத்துடன் பல மாறுபட்ட கருத்துள்ளவர்களை, கோவை ஞானி, திருச்சி ஆல்பர்ட், அக்னிபுத்திரன், பெங்களூர் படிகள், திருச்சி மானுடம் இதழ், பு.வ.மணிக்கண்ணனின் நீலமலை பனிமலர் போன்ற அமைப்புகளும் தனிநபர்களும் இணைந்து சிலகாலம் கருத்தரங்குகள் நடந்தன.சென்னையில் நடந்தது. மதுரைப் பல்கலைக்கழகத்தில் மூன்றுநாள் கருத்தரங்கம் நடந்தது. அப்போது இளைஞராக இருந்த, இன்றைய நீதியரசர் மகாதேவன் சென்னையிலிருந்து அதற்காகவே மதுரைக்கு வந்து கலந்து கருத்தரங்கைக்கேட்டார். கோவை, பெங்களூர், திருச்சி, ஹோசூர் என்றெல்லாம் இடங்களில் கருத்தரங்குகள் ஏற்பாடாயின. ஒவ்வொரு கருத்தரங்கும் நூல்களாக வந்தன. பல தகவல்கள் மறந்துவிட்டன.  இந்தச் செயல்களைத் தொடர்வீர்களா எனக்கேட்கிறீகள். இளைஞர்கள் முன்னெடுக்க வேண்டும்.

பிறமொழிகளைப்போலல்லாது, தமிழில் தலித் இலக்கியப் படைப்புக்கள் பெரிய அளவில் வரவில்லை என்றே தோன்றுகிறது; உங்களுடைய பார்வையில் எவ்வாறு கணிக்கிறீர்கள்?

பிற மொழிகளான கன்னடம், மராத்தி போன்றவற்றில் தலித் இலக்கியம் முக்கியம். நான் கூட சாகித்திய அக்காடமி மூலம் ‘கன்னடத்தில் தலித் இலக்கியம்’ என்று ஒரு கன்னட தலித் இலக்கியத் தொகுப்பு நூலை அறிமுகம் செய்துள்ளேன். பலர் மூலம் மொழிபெயர்த்த கன்னட இலக்கிய மாதிரிகளைஅந்த  நூல் அறிமுகம் செய்யும். பிரதிபா, நீங்கள் எல்லாம் கவிதை எழுதிய அக்கால கட்டத்தில் தலித் இலக்கியம் தமிழில் பிற மொழிகள் போல முக்கியமாகும் என நினைத்தோம். 1980 வாக்கில் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒரு கருத்தரங்கு நடத்தியபோது எதிர்காலக் கவிதை எனத் தலைப்புத் தந்தார்கள். நான், தமிழில் எதிர்காலத்தில் தலித் கவிதை வரப்போகிறது என கட்டுரை வாசித்தேன். தமிழில் முற்போக்கு இயக்கம் சார்ந்து இலக்கியம் உள்ளது. பெண்ணிய இயக்கம் சார்ந்து கவிதை உள்ளது.   இன்னும் சிலகாலம் போனபிறகு தான் தலித் இயக்கம் ஒரு இயக்கமாக வரையறுக்கப்படுமா தமிழில் எனக்கூறமுடியும் என்று நினைக்கிறேன். ஆனால் வரையறை பெறவேண்டும். பரியேறும் பெருமாள் போன்ற திரைப்படம் இப்போது எல்லோர் கவனத்தையும் கவர்கிறது. தலித் பிரச்சனையை வேறு கோணத்தில் அது அணுகுகிறது.

 

இந்திய கம்யூனிச வரலாற்றை எவ்வாறு பார்க்கிறீர்கள்? அதன் இயல்பூக்கங்கள் உயிரோட்டத்துடன் இன்னும் இருப்பதாகக் கருதுகிறீர்களா? கம்யூனிசச் சித்தாந்தம் சார்ந்த புனைவுகள் தமிழில் போதுமான அளவில் வெளிவந்துள்ளனவா?

உலக கம்யூனிசம் இன்று மாறிவிட்டது. புதுக்கம்யூனிசம்  என்று பெயருடன் ஒரு போக்கைச் சிலர் உருவாக்க முன்று வருகின்றனர்.அலென் பதயூ ( Alain Badiou.), ஸ்லவாய் ஷிஷெக்(Slavoj Zizek)  போன்றோர். முதலாமவர் பிரான்ஸ்நாட்டுத் தத்துவப்பேராசிரியர். அல்தூசரின் மாணவர். இரண்டாமவர் ஸ்லோவொக்கியா என்று இன்றைக்கு அழைக்கப்படும் சிறிய ஐரோப்பிய நாட்டவர். பழைய   யுகோஸ்லாவாகிய பல துண்டுகளாக உடைந்த போது உருவான நாடு. இரண்டாமவர், லக்கான் என்ற தத்துவ வாதியைப்பயன்படுத்துகிறார். தத்துவவாதி    ஹெஹலையும். இவர்கள் எல்லோரும் ஸ்டாலினை ஏற்பதில்லை. நான் புதுக்கம்யூனிசம் என்ற தலைப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஓர் கட்டுரையைச் சிற்றேடு இதழில் வெளியிட்டேன். பழைய தவறுகளை, அடையாளம் கண்டு ஒதுக்கிப் புதுக்கம்யூனிசம் இன்று மனித குலத்தைக் காப்பாற்றும் போக்கில் சிந்தனைத் துறையில் ஒரு போக்காய் வருகிறது. சமீபத்தில் அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சார்ந்த ஜார்ஜ் ப்ளாய்ட் கொல்லப்பட்டபோது எதிர்ப்புத்தெரிவிக்க உருவான எதிர் பாசிச (ஆன்டிஃபா) அமைப்புக்கள் இத்தகைய சிந்தனைகளால் ஊக்கம் பெற்றவை. இப்படி மார்க்சியச் சிந்தனைகளின் மாற்றுவழி பற்றி  சோவியத் யூனியன் உடையாமல் இருந்தபோதே பலர் சித்தித்தனர். அவர்கள் ஆரம்பத்தில் பிராங்பர்ட் மார்க்சியர் எனப்பெயரிட்டுக்கொண்டு உருவானார்கள். அவர்களில் ஒருவர் மாக்ஸ் ஹொர்ஹேமர், இன்னொருவர் ஊடகங்கள் பற்றி ஆய்ந்த தியோடர் அடார்னோ, வேறொருவர் ஹெர்பர்ட் மார்க்யூஸ். மார்க்சியத்தில் உளவியலாளரான இவர் பிராய்ட் சிந்தனைகளை இணைத்தவர். இன்னும் பலர். இவர்கள் எல்லோரும் மார்க்சியத்தில் வந்து சேர்ந்த அதிகமான பகுத்தறிவுப் போக்குத்தான், ஸ்டாலினிசமும் இறுக்கமான எதேச்சாதிகாரப்போக்கும் கம்யூனிச இயக்கத்தில் உருவாகக் காரணங்கள் என்றனர். அப்போக்கை எந்திர மயவாத பகுத்தறிவு என்று பெயரிட்டு அழைத்தனர்.  அது மிகையான விஞ்ஞானத்தை வலியுறுத்திப் பேசியதால் வந்த ஆபத்து என்றனர். அதற்கு எதிராக இவர்கள் சிந்தித்தனர். பகுத்தறிவுத் தத்துவத்துக்குக்கு எதிரான தத்துவங்களையும் சமூகச்சிந்தனைகளையும் மார்க்சியத்தில் கொண்டுவந்து அந்தந்த நாடுகளுக்கும் சூழலுக்கும் தக இணைத்தனர். ஆனால் இரண்டாம் அலை பிரங்ஃபர்ட் சிந்தனையாளரான, யுர்கன் ஹேபெர்மாஸ் என்பவர், இவர்கள் பலருக்கு இளையவர். அவர் பகுத்தறிவும் அதனால் சமூகத்தில் உருவான வளர்ச்சியும்  தன் பயன்பாட்டை முடித்துக்கொள்ளவில்லை என ஒரு கருத்தை முன்வைத்தார். இவர்களுக்கு மாற்று. ஒருவகையில் பெரியார் கருத்துக்கள் இன்னும்வேண்டும் என்று கூறுவதுபோன்ற விவாதம் இது. பெரியாரில் மேற்கத்திய அறிவுவாதம் அதிகம் உண்டு. இவர்கள் எல்லோரும் தங்களை ‘விமர்சனச் சிந்தனையாளர்கள்’ என்று அழைத்துக்கொண்டனர். எதிர்த்து, கேள்விகேட்டு, விவாதித்துச் சிந்தனையை உருவாக்கவேண்டும் என்பது இவர்களது கருத்து. இவர்களிடமிருந்து நாம் பெறவேண்டிய பாடம், எது என்றால் இவர்கள் பலரும் இலக்கியத்தை மிகமுக்கியமான சிந்தனை என எடுத்துக்கொண்டனர் என்பதுதான்.  இவர்களில் ஹேபர்மாஸை அதிகம் நாம் கற்க வேண்டும் என்பேன். அவர் நவீன பெருமுதலாளியம் இன்றைய அரசுகளிடம் ஏற்படுத்தும் , பண்பு மாற்றம் பற்றி ஆய்கிறார். ஊடகங்கள் பற்றி ஆய்கிறார்.   நவீன முதலாளியம் உருவாக்கும் புதுத் தன்மைகள் பற்றிச்சிந்திப்பவர். சமயம், சட்டத்துறைச் சிந்தனைகள், மொழியியலின் பொருண்மையியல் (Semantics) போன்ற மிக நவீனமானவற்றைச் சிந்திக்கிறார். இந்தியாவில் வலதுசாரி மௌடீக வாதம் வளரும்போது பெரியார் வேண்டும் என்று எல்லா இடங்களிலும் பேசுகிறார்கள். பகுத்தறிவை அடிப்படையாக்கியுள்ள ஹேபர்மாஸையும் நாம் இங்குக் கொண்டு வரவேண்டும். அதேநேரத்தில் நம்முடையது மரபுரீதியான சமூகம்.  எனவே நமக்கு வேண்டியது, முழு அறிவு வாதமா, அதற்கு எதிர்ப்பான எதிர்-அறிவுவாதமா, என்றால் நம் சூழலுக்குப் பொருத்த மானதைக் கொண்டுவந்து வடிவமைக்கவேண்டும் என்பதே என் பதிலாகும். அது போல இன்று நம் முன்புள்ள ஆபத்து வலதுசாரிகள், அடையாளத்தோடும் அடையாளமில்லாமலும் தமிழுக்குள் ஊடுருவுவதைத்  தடுப்பது. அவர்கள் அறிவைப் பயன்படுத்தாமல் கூட்டத்தையும் தேசப்பற்றையும் உபயோகப் படுத்தும் அரசியலைச் செய்கிறார்கள்.  ‘நாமா, அந்நியரா’ என்ற இருமையில் ஒன்றைத்தேர்ந்தெடு எனக்கேட்கும் சிந்தனையைப் பயன்படுத்துகின்றனர். பெரியாரை மட்டும் அவர்களால் சாயம் மாற்றிப் பயன்படுத்த முடியவில்லை.  அம்பேத்கரை கூட உள்ளே இழுத்துக் கொண்டனர். ஏன் பெரியாரை மறுக்கின்றனர்? சிலை மீது காவிச்சாயம் பூசுகின்றனர்? கோயில் கட்டினால் எல்லாம் சரியாகிவிடும் என்ற மாயையும் உருவாக்குகின்றனர்.  பெரிய ஆபத்துக்கள் காத்திருக்கின்றன. இதற்கு மார்க்சிய மரபின் குறிப்பிட்ட விளக்கங்களை மட்டும் ஏற்பது என்ற எண்ணத்தை விட்டு நம் பார்வையை அகன்றதாக்கவேண்டும்.  அமெரிக்காவில் உள்ள   ஃப்ரடரிக் ஜேம்சன், இங்கிலாந்தின் டெரிஈகிள்டன், போன்றோர் விரிவாக்கப்பட்ட மார்க்சிய மரபில் வருவர். இடதுசாரி அறிவை விசாலமாக்குகின்றனர். பாரதி புத்தகாலயம், டெரிஈகிள்டனின் நூலையும், ஜார்ஜ் லூக்காக்சின் ‘வரலாறும் வர்க்க பிரக்ஞையும்’ என்ற நூலையும் எர்னஸ்ட் பிஷரின், ‘கலையின் அவசியம்’ என்ற நூலையும் வெளியிட்டுள்ளது. இந்நூல்கள்  பாராட்டுக்குரியன.

தற்போது சாகித்ய அகாதெமியில் என்ன பொறுப்பு வகிக்கிறீர்கள்? இப்பொறுப்பின் மூலம் தமிழ்   இலக்கிய உலகில் நீங்கள் செய்ய நினைத்திருக்கும் செயற்பாடுகள் என்னென்ன?

சாகித்திய அகாடமியின் இப்போதுள்ள ஐந்து பொதுக்குழு உறுப்பினரில் நானொருவன். ஒருங்கிணைப்பாளர் கவிஞர் சிற்பி. ஆரம்பத்தில் இந்தியாவின் இருபத்திரண்டு மொழிகளிலிருந்து வருபவர்களைப் பார்த்து மகிழ்ச்சி ஏற்பட்டது. இந்தியாவின் பல மொழிகளின் பிரதிநிதிகள் ஒரே இடத்தில் கூடுவது எவ்வளவு முக்கியம். அப்படிப்பட்ட  அமைப்பு  இது ஒன்றே. ஆனால் ஒரு விஷயம் தெளிவானது ஒவ்வொரு மொழியும் வேறு வேறானது என்பது. இந்திய மொழி என்று ஒன்றும் இல்லை. இலக்கியத்தைப்பொறுத்த அளவில் இந்தி கூட பிராந்திய மொழியே. இந்திய இலக்கியம் என்று ஒன்று இல்லை.  ஒவ்வொரு மொழியிலும் வேறு வேறு இலக்கியங்கள் அந்தந்த பிராந்தியத்துக்கு ஏற்றவிதமாய் இருக்கின்றன. இரண்டு விசயங்களில் அம்மொழிகளுக்குள் ஒற்றுமை உள்ளன. ஒன்று, அவை பெரும்பாலும் ஒன்றுபோல, தற்கால இலக்கியத்தைப் பொறுத்தமட்டில், ஆங்கில இலக்கியத்தின் நிழல்கள். நாவலும் சிறுகதையும் கவிதையும் கூட அப்படித்தான். இரண்டு, அவை பெரும்பா லும் இராமாயண, மகாபாரதத்தின்  நிழல்கள். சங்க மரபும், சிலப்பதிகார, மணிமேகலை கதை மரபும் அவர்கள் அறியாதவை. நம் தூய தமிழ் மரபை நம் தொடக்க கால நாவலாசிரியர்களும் படைப்பாளிகளும் உதாசீனப்படுத்தி ஆங்கிலம் வழி வரும் நாவல், படைப்பு, மரபுக்குப் போயினர். நாம், மணிமேகலை மரபில் கதை எழுதினால் நம் படைப்புப் புதிய இந்திய மரபை, படைப்பு இலக்கியத்தில் கொண்டுவரும். அசோகமித்திரனின் ஆகாசத்தாமரை  என்ற நாவல் மற்றும் கதைகள், காஃப்கா போல இருக்கும். நகுலனின் நாவல் வர்ஜினியா வுல்ஃப், போல இருக்கும். இது போல அனைத்திந்தியாவிலும் பார்க்கலாம். இது மாறி நம் தமிழ் மரபின்வழி  நவீன இலக்கியம் வர வேண்டும்.  அப்போது இந்திய மரபாய்த் தமிழ் மரபு எல்லா இடத்திலும் பரவும். இரண்டாயிரம் ஆண்டுகளாய் வற்றாத ஆறுபோல பாயும் இலக்கிய மரபு சமஸ்கிருதம் தவிர எந்த இந்திய மொழிக்கும் கிடையாது. சமஸ்கிருதத்தில் தற்கால இலக்கியம் தமிழ் போல இல்லை. செயற்கையாக எழுதுகின்றனர். தமிழ் பழமையும் தற்கால இயல்புத்தன்மையும் கொண்ட மொழி.  பிற மொழியினர், அவர்கள் பின்பற்றும் போலி ஆங்கில மாதிரியும் மீண்டும் மீண்டும் பின்பற்றப்படும் போலி இராமாயண, மகாபாரத மாதிரியும் இனி மேல் ஒதுங்கும். இதற்கு மிகப் பல காலம் எடுக்கும்.  நம் மாநில அரசுகளும் பிற மொழிகளில் இருந்து பிரதிநிதிகளை அழைத்துத் தமிழின் பல்வேறு போக்குக்களை அவர்களின் மொழிகளுடன் ஒப்பிட வேண்டும். அப்போது தமிழின் தனித்தன்மை விளங்கும்.  சமீபத்தில் கன்னடத்தில் தொல்காப்பியம் மொழிபெயர்ப்பு வந்துள்ளது. அவர்கள் அதற்கு ஏங்கிக்கொண்டிருந்தனர். அவர்கள் சமஸ்கிருதம் அல்லாத கூறுகளைத் தேட ஆரம்பித்துள்ளார்கள்.  தமிழுக்கும் கன்னடத்துக்கும் ஒரு ஆழமான தொடர்பு உண்டு. வலதுசாரிகளால் கொல்லப்பட்ட முன்னாள் துணை வேந்தரான கல்புர்ஹி, சங்க இலக்கியம் மீதும் தமிழ் மீதும் மிகவும் அன்பு கொண்டவர் என்பதை நாம் அறியவேண்டும். பெரியார் சிந்தனைகளின் தேர்ந்தெடுத்த தொகுப்பையும் கன்னடத்தில் கொண்டுவந்துள்ளனர். இதுபோல பிற மொழிகளோடு நம் மொழியை ஒப்பிட சாகித்திய அக்காடமியைப் பயன் படுத்திக்கொள்ளலாம்.