தமிழ்ச்சிந்தனையில் இந்த நூல் ஒரு வியப்பு . (‘மொழியின் மறுபுனைவு’ நூல் பற்றி)

தமிழ்ச்சிந்தனையில் இந்த நூல் ஒரு வியப்பு .

(‘மொழியின் மறுபுனைவுநூல் பற்றி)

தமிழவன்

 

        இலக்கியம் பற்றிய நவீன கால எழுத்துக்களில் ஒன்றான இலக்கிய விமரிசனம், மிக உயர்ந்த வடிவமாகும். காரணம் அதில் தத்துவம், கற்பனை பற்றிய உயர்சிந்தனை, மொழிச்சிந்தனை, மற்றும் பல உலக வியாபகம் கொண்ட துறைகள் பங்கெடுக்கின்றன.

அத்துறையில் சமீபத்தில் வந்துள்ள ‘மொழியின் மறுபுனைவு’ என்ற எஸ்.சண்முகத் தின் 557-பக்க நூல் பற்றிப் பேசவேண்டும். இந்நூல் தமிழில் வரும் சாதாரண நூல்கள் போன்றதல்ல. கடந்த 40 ஆண்டுகால இலக்கியச் சிந்தனையின் பாதை மாற்றத்தை விவரித்து 8 கோடி தமிழர்களின் ‘வாழ்வாழத்தைப்’ படம்பிடிக்கும் நூல்.

வாழ்வாழம் என்ற புதுச்சொல் தமிழ் மொழிசார்ந்த ஓர் மொத்தமான உலக உண்மையோடு தொடர்புடையது. அந்த மொழியுண்மையில் மார்க்சியமும் இணைந்துள்ளது, தமிழ்மொழி பேசும் மக்களும் இணைந்துள்ளனர். மொழி என்பது இன்று உலக தத்துவத்தில் முதன்மையாகியுள்ளது. இவைகள் எழுபதுகளில் தமிழகத்தில் அண்ணாதுரை என்பவர் புதிய அரசியலான தமிழரசியலைக் கொண்டுவந்த பின்பு முக்கியமான சமுக உண்மைகளாயின. இவ்வுண்மையை முதன்முதலில் இலக்கியச் சிந்தனையின் புதிய எல்லைகளாக்குகிறார் எஸ்.சண்முகம். அதற்கு அவர் காலத்துக்கு ஓர் இருபது வருடங்களுக்கு முந்தைய காலத்திலிருந்தே, தமிழக இலக்கியச் சிந்தனையைப் புதிய பொருள்முதல்வாதக் கோணத்தில் தயாராக்கியவர்களைத் தீவிரமாக வாசித்து, இவரது  இருபதாம் வயதுகளிலிருந்தே  உள்வாங்கினார். இப்படி இவரது வாழ்நாள் முழுதும் எழுதிய எல்லாக்கட்டுரைகளையும் அழகிய நூலாகத் தொகுத்துப் பிரசுரித்துள்ளது யாவரும் பதிப்பகம். அதனால் தான் இது வியப்பு என்கிறேன். சமீபத்தில் நீதிபதி சந்ரு போன்றோரின் எண்பதுகள் காலப் பின்னணியைத் தமிழகம் கண்டுபிடித்துள்ளது. சந்ரு போன்றோரை உருவாக்கிய  எண்பதுகளின் தமிழகம் தான் சண்முகம் போன்றோரையும் உருவாக்கியது. அதனை விளக்குவதுதான் இப்போது நம்மால் பேசப்படும் புத்தகம்.  அதற்கு ஒரு தொகுப்பாளரை நியமித்துள்ளது பதிப்பகம். அவர் பெயர் வேதநாயக். இவர்கள் எல்லோரையும் பாராட்டுகிறேன்.

 

40 ஆண்டுகால தமிழர்களின் சிந்தனைப் போக்கு, 8 கோடி தமிழர்களின் வாழ்வாழம் போன்ற சொற்களை மிகக் கவனமாகப் பயன்படுத்துகிறேன். அதாவது 40 ஆண்டு காலகட்டத்தில் வெளிவந்துள்ள இத்துறை சார்ந்த இரண்டு மூன்று நூல்களில், இது மிகமுக்கிய மானதற்குக் காரணங்கள் உள்ளன.

 

ஓர் ஆங்கில நூலையோ, தமிழ் நூலையோ, சுமார் 60 ஆண்டுகளாக ஒரு வாசகனாய் இருந்து அணுகுவதில் எனக்கு அனுபவம் உண்டு. முதல் பக்கத்திலிருந்தும் வாசிக்கலாம். ஆங்காங்கு படித்துப் பார்த்தும் கருத்துத் தொகுப்புச் செய்யலாம். இந்நூலை முதலில் ஆங்காங்கு வாசித்துப் பார்த்துக் கட்டுரை அமைப்புச் சிதையாதபடி கருத்துத் தொகுப்பைச் செய்தேன். பின்பு இந்த வகை நூலை எப்படிப் படித்து ஒரு முடிவை மேற்கொள்வது என்ற கேள்வியை உருவாக்கி ஒரு தீர்மானத்துக்கு வந்தேன். பல விதமான,சிறு பல்கோணக் கட்டுரைகளுக்குள் கூட, சில பொதுமைகள் இருந்தது தெரிய  வந்தது.

சில கட்டுரைகளில் – தேன்மொழி தாஸ், ஜீவித்தா, முபின்சாதிகா, பழனிபாரதி, தமிழச்சி போன்றோரின் கவிதை பற்றிய கட்டுரைகளில், சண்முகம் பயன்படுத்திய சில சொற்கள் என் கவனத்தில் பட்டன. கவிதைசொல்லி, சொல்லாடல். குறி, குறிப்பான், குறிப்பீடு போன்றவை அவை. அடுத்த கட்ட சிந்தனை வளர்ச்சியாக  வரைதோல் எழுத்து, அழிப்பாக்கம் (ஜீவித்தா) மொழியும் மௌனமும் போன்றவற்றைக் குறிப்பிடுகிறார். புதிய கருத்துக்களான தன்னிலை, எதிர்நிலை, கதையாடல் பற்றி பழனிபாரதி கவிதைகளை விளக்குகையில் சொல்கிறார். முஸல்பனி நாவல் பற்றிக் கூறும்போது ‘எழுதி அழிப்பதன் தோற்றம்’ பற்றிக் குறிப்பிடுகிறார். எழுத்தின் தோற்றம் என்றோ அழிப்பின் தோற்றம் என்றோ சொல்லாமல் ‘எழுதி – அழிப்பதன் – தோற்றம்’ என்ற, நமக்குத் தெரிந்த சொற்களை வேறு ஓர் அர்த்தத்தில் புரிந்து கொள்ளுங்கள் என்று வலியுறுத்துகிறார் சண்முகம்.

 

இக்கட்டுரை வழி இன்றுள்ள இலக்கியம் பற்றிய எழுத்தில் பயன்படுத்தப்படும் பிரத்தியேகச் சொற்பயன்பாடு பற்றிக் கொஞ்சம் சொல்ல எனக்கு விருப்பம். சண்முகம் பயன்படுத்தும் திறனாய்வு விளக்கச் சொற்கள், எண்பதுகளுக்குப் பின்பு சிலர் பயன்படுத்தும் சொற்கள். அதற்கு முன்பு விமரிசனத்தில் பயன்படுத்திய சொற்கள் முற்றாய் ஒதுக்கப்பட்டுள்ளன.

கவிதைசொல்லி:

உதாரணத்துக்குக் கவிதைசொல்லி என்ற சொல்; கவிதையைச் சொல்லும் கவிஞன் என்று பொருளல்ல. சண்முகத்தின் உரைநடை விமரிசனமும் கவிதை விமரிசனமும் இப்புதுச் சொற்களால் நிறைந்துள்ளன. இதில் சில சொற்கள் ஜமாலனைத் தவிர வேறு யாரும் பயன்படுத்தியதை நான் வாசித்ததில்லை (நான் ஒரு தீவிர விமரிசனக் கட்டுரை வாசகன் என்பதையும் ஓரிரு பக்க விமரிசனமும் கூட என் கவனத்திலிருந்து தப்பமுடியாது என்பதையும் என் எழுத்தில் பழக்கமில்லாத வாசகர்கள் நம்ப வேண்டும்.) கவிதைச் சொல்லி என்ற சொல்,  ஒரு நபராகவும் அவரின் குரலாகவும் கருதப்பட்டலாம். அது கவிதையின் மொழி, வாய் திறந்து வெளிப்படுத்தும் மொழிக்குரலாகவும் வரலாம். இதை சண்முகத்தின் விமரிசனம் சுட்டிக் கொண்டே போகிறது. 2008-இல் இவர் எழுதிய ஆத்மாநாம் பற்றிய கட்டுரையிலும் அதுபோல், 2019-இல் எழுதிய ஜீவித்தாவின் கவித்வ மொழி பற்றிய கட்டுரையிலும் ஒரே சொல்லை, ‘கவிதைசொல்லி’யைப் பயன்படுத்துகிறார்.   அதனைப் பத்து ஆண்டுகளாக மனதில் ஊறப்போட்ட கருத்தாக்கமாய் அறிகிறார். அதாவது நேரத்துக்கேற்ற பாஷனாக இவர் கலைச்சொற்களைப் பாவிக்கவில்லை. அழுத்தமான அறிவுத்தூண்டலால் உந்தப்பெற்று நிச்சயமான பார்வையுடன் வெளிப்படுத்துகிறார். ஜீவித்தாவின் கவிதைகள் பற்றிச் சொல்லும்போது இப்படிக் கூறுகிறார்: “கவிதைசொல்லி யின் எண்ணற்ற குரலிழைகளின் வழியே பிரதியினை இனம் காணுவது என்பது துவங்கு கிறது. ஒரு பிரதியின் முழுமைபெற்ற வடிவம் என்று ஒன்றுமில்லை..” அதாவது ‘எண்ணற்ற குரலிழைகளை உற்பத்தி செய்வது ஒரு செயல். அதைச் செய்வது ஒரு ஆணோ, பெண்ணோ அல்ல; ஒரு பிரதி அதைச் செய்கிறது. கவிதையில் பிரதி என்பது முழுமை பெற்றதல்ல. அதாவது கவிதை செய்யும் நிரந்தரமான ஒலி எழுப்பல் இது. தொடங்குவதும் இல்லை; முடிவதும் இல்லை. இவர் தன்  நூலில், கவிதைசொல்லி என்ற ஒரே சொல்லையே பல்வேறு அர்த்தங்களைக் கூற வர்ணம் மாறும் காட்சி போல மாற்றிமாற்றி கவிதையின் வீரியத்துக்கேற்ப பயன்படுத்திக் கொண்டே செல்கிறார். ஒரே கலைச்சொல்தான், தன் வலிமையைத் கவிதையின் பல்வேறு வாசித்தல்களுக்குத் தகப் பெருக்கிக்கொண்டே போகிறது.

கவிதைசொல்லி என்ற கருத்தாக்கம், ஓர் இலக்கியக் கலைச்சொல். இலக்கியச் சொல்அகராதியில் வழக்கமாய் வரும் மூன்று அர்த்தங்களோ, நான்கு அர்த்தங்களோ மட்டும் பட்டியலிடப்படும் பொருள் புரியாச் சொல் அல்ல. இச்சொல் முதன்முதலாக எனக்குத் தெரிய, இன்று பலரும் மறந்துபோன, முக்கியமான இடதுசாரி சனநாயகவாதியாக இருந்த, கோமல் சுவாமிநாதனின் வெகுசனங்களையும் ஈர்த்த, சுபமங்களா என்ற இதழில் வந்த சொல். சுந்தரராமசாமியின் மேலோட்டமான கருத்தை மறுக்குமுகமாகப் பயன்படுத்திய சொல். ‘கவிதையை – உள்ளொளி கொண்ட, தெய்வத் தன்மை கொண்ட, படைப்பாளியும் காரணனும் மூலனுமான  திருவாளர் கவிஞர் பிரான் படைக்கிறார் ‘ என்ற கருத்தை மறுக்குமுகமாக வந்த சொல்.  அன்று ஒரு சர்ச்சையில் அறிமுகமான சொல். அமைப்பியல் அப்போது தான் கவிதையில் மெதுமெதுவாக விமர்சன மாற்றுக்கலைச் சொல்லாக்கத்துக்கு உதவிய காலகட்டம் அது. இப்படி ஒரு சொல்லின் சரித்திரம்கூட இன்று முக்கிய மாகும் படி உள்ளது. காரணம் பல இளைஞர்களுக்கு இச்சொற்கள் வந்த கதை தெரியாது. இதில் சண்முகம் வேறுபட்டவர். அவர் அச்சொற்களைக் கவனமாய் தொகுத்துக்கொண்டதோடு அச்சொற்களைப் புதுப்புது அர்த்த மலர்களைச் சேர்ப்பதுபோல சேர்த்துப் புதிய மாலையைக் கட்டுகிறார். அப்படிக் கவிதைசொல்லி அல்லது கவிதையாடலைப் பற்பல அர்த்தங்கள் வரும்படி விகசிக்க வைக்கிறார். நீச்சல் குளத்தில் நீரில் குதிப்பதற்கு அமைக்கப்பட்டிருக்கும்  அசைகிற படியிலிருந்து உந்துதலை வாங்கி எவ்வளவு தூரத்தில் எம்பிப்போய் பாயவேண்டும் என முடிவு செய்யும் சாகசத்தை நிகழ்த்துகிறார். இதை எப்படி என விளக்குகிறேன். ஈழப்பெண் கவிஞர் அனாரின் கவிதைகளில் மொழிக்குள் ஒரு மொழி வெளியைக் காண்கிறார். பின்பு அந்த மொழிவெளி எப்படி உருவம் பெறுகிறது என்று விளக்கத் தொடங்குகிறார். கவிதை வருவதற்கு முன்பு மொழியின் உள்ளே உறைந்திருக்கும் ஒன்று (உள்ளுறை) கருக்கொள்கிறதா எனக் கேட்கிறார். அங்கு ஒரு நிச்சயமின்மை துவங்குகிறது என்கிறார். உள்ளுறைதான் அந்த நிச்சயமின்மையைத் தொடங்குகிறது என்பது இவர் எண்ணம். உள்ளுறை, வடிவம், கரு, நிச்சயமின்மையின் துவக்கம் போன்றவற்றை மொழிச் சுழற்சி எனப் பெயர் சூட்டுகிறார். மொழிதொடரும் போது – தொடர்ந்து இயங்கும்போது – மொழி தனக்குள் நடத்தும் செயல்வலைப்பின்னலாயும் பின்னப்படுவதாகவும் கட்டவிழ் வதாகவும் ஒரு முரண் பண்பு உருக்கொள்கிறது என்கிறார். அதாவது அமைப்பும் அமைப்பை உடைத்தலையும் கவிதையின் செயல் களத்தில் பார்க்கிறார். அமைப்பை உடைத்தல் ‘டிகன்ஸ்ட்ரக்ஷன்’. இது எதிரும் புதிருமான பண்புகள். இதுதான் கவிதையின் சொல்லுதல் அல்லது கவிதையாடல். இப்படிக்கூறி  இதுவரை பயணித்த / போராடிய விளையாட்டு அரங்கிலிருந்து வெற்றியீட்டிய வீரனைப் போல் மேடைக்கு மேல் வந்து தோற்றம் தருகிறார். என்னுடைய பழங்கால உவமைகளை (வீரன் அரங்கம் etc.) புறந்தள்ளிவிட்டு வாசகர்கள் வாசித்தால் கவித்துவம் என்ற சொல்லுக்குப் பதிலாய் கவிதையாடலை ஒரு மாற்றுச் சொல்லாய் விளக்கங்களுடன் அறிமுகப்படுத்துகிறார் என்பது புரியும்.

 

கவிதைசொல்லியின் கவிதையாடல்  ஒரு பெரிய கவிதை விமரிசன தளப்பெயர்ச்சியை (shift) தமிழ்த்திறனாய்வில் கொண்டு வந்துள்ளது. சிந்தனைச் சரித்திரம் மாறிவிட்டது. அதாவது இந்த இடத்தில் எனக்குப் பிடித்த ஒரு சொல்லைப் பயன்படுத்துகிறேன். பொருள்முதல்வாத மொழி விளக்கம். அவ்வப்போது மதநூல்களை மேற்கோள் காட்டும் நூலாசிரியரின் சிந்தனை உலகு, மேலோட்டமாய் அடையாளமாகையில் பொதுவான மத அடையாளம் போல் தெரிந்தாலும் அதனுள் மொழியின் குறிப்பான், குறிப்பீடு, அவைகளுக்கிடையில் உள்ள பல்தளக் கட்டமைப்புக்கள், முரண்கள், மேலேறுதல்கள், அடங்குதல்கள் என்று ஒரு பெரும்தளம் இயங்குகிறது. அது பொருள்முதல் வாதம். சசூரைச் சரியான இடங்களில் அழைத்துக் கொண்டு வரத் தெரிந்தவர் என்று பல இடங்களில் நிரூபிக்கிறார். சசூரின் மொழி விளக்கம்தான் பொருள்முதல்வாதம்.

கதையாடல்:

இனி அடுத்த விசயம். இந்த நூலாசிரியர் இலக்கியத்தைப் பத்திரிகைத் தமிழில் பார்ப்பவர் அல்ல. அதனை செய்தித் தொகுப்பாகப் பார்ப்பவரும் அல்ல. இலக்கியம் என்பது,  சமூக ஆவணம் மட்டுமே என கட்சி சார்ந்த பயிற்சி பெற்றவர்கள் போல பார்ப்பவரும் அல்ல. இவை எனக்கு உடன்பாடான விசயங்கள். இலக்கிய ‘ஜானர்களான’ கவிதையும் புனைகதையும் இவருடைய முக்கியமான இரண்டு ஈடுபாடுகள். இந்த இரண்டையும் உலகம் முழுவதும் விசேடித்துக் குறிப்பவை அவ்வம்மொழியின் வாக்கியங்கள். இதே வாக்கியம் திடீரென கதைசொல்லல்கள் ஆகிவிடும். அதனை வசதிக்கேற்ப கவிதை விமரிசனத்தில் சண்முகம் கவிதைசொல்லி எனவும் கதைவிமரிசனத்தில் கதையாடல் எனவும் குறிப்பிடுகிறார். கவிதையும் கதையும் ஒரு தனித்துறையாக மொழியின் வாக்கிய வெளிப்பாட்டுக்குள் சேர்த்துப் பார்க்கும்முறை  அமைப்பியல் வந்த பின்பு ஏற்பட்டது.  ஒவ்வொரு சொல்லுக்கும் குறிப்பிட்ட அர்த்த வரையறை, தனித் தன்மை யுடன் உண்டு. அப்படித்தான் பயன்படுத்த வேண்டும். சண்முகம் கதையாடல் என்ற சொல்லைப் புனைகதை விமரிசனம் எழுத ஆரம்பித்த காலத்திலிருந்தே பயன்படுத்துகிறார். 60கள், 70களில் இச்சொல் தமிழ் விமரிசனத்தில் இல்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

 

கதையாடல் என்ற சொல்லையும் ஆங்கிலத்தில் ‘நெரேஷன்’ என்ற சொல்லின் மொழிபெயர்ப்பாகப் பயன்படுத்தலாம். ஆனால் இவர் ஆங்கிலச்சொல்லை மொழிபெயர்த்துப் பயன்படுத்தும் சிந்தனைக் காப்பியிஸ்ட் அல்ல. சிந்தனையைக் கிளர்ந்தெழ வைப்பவராகையில் தமிழ்ப்படுத்தவும் சிந்தனைப்படுத்த வும் செய்கிறார். கதையாடல் என்ற சொல்லுக்கு ஒரு, தனி பொருள்தள விரிவைத் தருகிறார். இவருடைய 500 சொச்சம் பக்க புத்தகத்தில் கதையாடல் என்ற சொல் வரும் 50க்கும் அதிகமான இடங்களில் சுமார் 25-க்கும் அதிகமான வகைமாதிரி பொருள்தளங் களை உருவாக்குகிறார். நான் குறிப்பெடுத்து வைத்துவிட்டு பேசுகிறேன். எல்லாப் பொருள்தளமும் ‘மொழிமையில்’ –மொழித்தன்மையில் – வேரடித்து நிற்கின்றன. கோட்பாட்டு ரீதியில் தொல்காப்பியரின் பிரிவுகளான எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று பிரிவுகள் ஒருமை கொள்வதும் “மொழிமையில்” தான் என்று கருதுகிறேன். (எந்தத் தொல்காப்பியப் பண்டிட்டுடனும் நாம்  இது பற்றி பேசமுடியும். ஆனால் அவர்கள் அமைப்பியல் படிக்கவேண்டுமே!) பொதுவாய் தொல்காப்பியம் படித்தவர்கள் ‘கப்’பென்று பிடித்துக்கொள்வார்கள் என்றுதான் கருதுகிறேன்.  இந்த இடம் கூர்த்த மதியுடையோர்க்குப் பழம்தமிழ்ப்பார்வையில் விளக்கப்படுகின்றது. அதாவது  ‘’மொழியின் மறுபுனைவு”  நூலுக்கும் தொல்காப்பிய நூல் அமைப்புக்கும் தொடர்புள்ளது.

 

பக்கம் 140-இல் சல்மான் ருஷ்டியின் ‘ஹரூன் மற்றும் கதாசாகரம்’ என்ற ஆங்கில நூலின் கதையியலை விளக்கும்போது ஓர் அபூர்வமான வாக்கியத்தை எழுதுகிறார். இதோ அந்த வாக்கியம்:

 

‘….. வாசித்து முடித்துவிட்டு, வாசிப்பில் நாம் தாண்டிச்சென்ற வாக்கியங்களை நினைவுப்படுத்திப் பார்த்தால் அந்த வாக்கியங்கள் நிச்சயமற்றதாக நாம் குறிப்பிடுகிற குறியீட்டை நகர்த்திக் கொண்டே போவதைத் தெரிந்து கொள்ளலாம்…’

 

என்ன சொல்கிறார் இந்த மேற்கோளில்? அதே பக்கத்தில் சற்றுமேலே ‘கதை யானது சொல்லப்படும்போது, கேட்பவர்கள் (வாசிப்பவர்கள்), கதையில் சொல்லுதலைக் கதைசொல்லியின் மனஒழுங்கிலேயே உள்வாங்குதல் என்ற நிச்சயம் தகர்ந்துவிடுகிறது’ என்பார். (இலக்கணப் பிழையுடன் எழுதப்பட்டது போலக் காணப்படுகிறது இவ்வாக்கியம்.  சரியாய் புரிந்துகொள்ள, வாசிக்கும் நண்பர்களை இந்த முழுக்கட்டுரையையும் படித்துப் பாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.)

 

அதாவது ‘கதைசொல்லி’ என்ற சொல் ஒரு குறியீடுபோல் ஒன்றைச் சொல்லி இன்னொன்றையோ, பலதையோ மனதில் வரவைக்கும் சொல். என்ன வரவைக்கப்படு கிறதென்றால் ஒரு ‘நிச்சயமின்மை’. நான் இங்கே காட்டும் இரண்டு வாக்கியங்களிலும் ஒளிந்தபடி நிச்சயமின்மை, நிச்சயம் தகர்தல் போன்றன வருகின்றன. கதைசொல்லி என்ற சொல்லைச் சிலர் தவறாய்  ‘நான் கதைசொல்லி’ என்று சுயதம்பட்டமாய் நெற்றியில் ஒட்டியபடி அலைகின்றனர். இவர்களின் அறிவுமட்டம் பற்றி நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் கதைசொல்லி என்பது வேறு ஓர் அர்த்த பரிமாணமாகும் என இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

 

மேலே இதுவரை நாம் பார்த்ததில் இரண்டுவிதக் கதையாடல்கள் பற்றிச் சொன்னார். கதையாடல் என்பது நிச்சயமின்மை. அடுத்தது, அது ஓர் அகப்பரப்பு. இந்த இரண்டு விசயங்களை மட்டும், தற்சமயம் பார்க்கலாம். முதல் மேற்கோளில், வாக்கியங்கள் மனதில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவதால் அப்படியா அல்லது இப்படியா என்ற அல்லாட்டம் (நிச்சயமின்மை) ஏற்படுகிறது. வாக்கியத்தை அப்படிக் கொண்டுபோனால் (ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு ராஜா) அது ஒரு கதையாகவும் (ஒரு காட்டில் ஒரு ராட்சசன் இருந்தான்) என்று இப்படிக் கொண்டு போனால் அது வேறு ஒரு கதையாகவும் மாறும். சொல்கதையில் மட்டுமின்றி எழுத்திலும் இப்படித்தான்.

அதுபோலத்தான் ருஷ்டி கதையிலும்.  ரஷீத் என்பவனின் மனைவி, ரஷீதின் கதைசொல்லலை நிறுத்துவதற்காக வேறு ஒருவனுடன் ஓடிப்போகிறாள்; அதனால் ரஷீத் கதை சொல்லமுடியாமல் ஆகிறான் என்று ருஷ்டி ஒரு கதை எழுதுகிறார். அப்படித்தான் கதையாடல் (கதைசொல்லல்) அகப்பரப்பாகிறது. கதை அப்படி போகிறதா அல்லது இப்படிப் போகிறதா என்று முடிவு செய்யாமல் தடுமாறும் இடபரிமாணம் தோன்றுகிறது.  இங்கு அகப்பரப்பு, என்று சண்முகம் விளக்கும் கதைப்பரிமாணம் அந்த இடப்பரிமாணம்   தான்.

 

கதையாடல் என்பது மொழியில் நடக்கிறது. ஊமைகூட செய்கைமூலம் கதை சொன்னால் அது மொழிக்குறிதான். இப்படிக் கதை ஒரு மொழிச் செயலாகிறது. அதாவது மொழிமூலம் நடக்கும் செயலாகிறது. இன்னும் சற்று நுட்பமாகப் பார்த்தோமென்றால் கவிதையாடலும் கதையாடலும் ஆகிய இரண்டும், புதுக்கவிதையும் நாவல் எழுதுவதும் வந்தபின்பு, மொழி என்னும் நிலத்தில் வளர்ந்த இரு மரங்கள். மொழியே இவற்றின் அடிப்படை. நான் வாசிப்பவர் களுக்குப் புரியவேண்டுமென்று சுருக்கி விளக்குகிறேன். எனவே கதையாடலின் பரிமாணங்களைச் சண்முகம் விவரிப்பதை குற்றவுணர்வோடு   நான் விட்டுவிட்டு அடுத்த விசயத்துக்குச் செல்கிறேன்.

 

பிரதி:

இந்தக் கனமான நூலின் ஆரம்பத்திலிருந்து கடைசிக் கட்டுரை வரை – சிறிதும் பெரிதுமான கட்டுரைகளில் ஓடும் தீவிரமான இலக்கிய மனம் – சில சொற்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டே, இந்த நூற்றாண்டின் ஆரம்பகட்டத்தில், ஒரு சாகசப் பயணம் செய்கிறது. அதில் இரண்டு சொற்களைப் பற்றி விளக்கிய பின்பு மூன்றாவது அடுத்த சொல்லுக்குப் போகிறேன் நான். அது பிரதி என்ற மூன்றாவது சொல். முதல் இரண்டு சொற்களை விட அதீத விசாலமும் தீவிரமும் ஆழமும் கொண்ட சொல் இது. 1982-ல் வெளிவந்த அமைப்பியலை  தமிழ் அறிமுகம் செய்வது எதற்காக? தமிழுக்கு என்ன அன்று வேண்டியிருந்தது?அதுவரை இருந்த மௌடீக இலக்கியச் சூழலைச் சகதியும் அழுக்கும் சேர்ந்த  அசுத்தம் எனக் கருதினர் அமைப்பியல் கற்றவர்கள். நீர் ஊற்றிக் கழுவி அச்சூழலை  அமைப்பியலின் தர்க்கங்கள் சுத்தம் செய்ததைச் சண்முகம் அடிக்கடிக் கூறுகிறார்.  அப்படிச் சிந்தனைக் கட்டமைப்பைப் புதிதாய் அறிமுகப்படுத்திய சூழலை இந்நூலாசிரியர்  பல இடங்களில்  கவனித்தீகளா, கவனித்தீர்களா, என கேட்டு விளக்கிச் செல்கிறார்.  அதனால்தான் முக்கியமான இவ்விஷயம் பற்றி விதந்தோத வேண்டியுள்ளது. பிரதி என்ற சொல், நூல் என்ற சொல்லுக்குப் பதிலி அல்ல என்று அமைப்பியல்வாதி ரோலான்பார்த், மிகத் தெளிவாகச் சொல்கிறார். கம்பராமாயண நூல் என்பது வேறு பொருள். கம்பராமாயணம் என்னும் பிரதி என்று சொல்வது வேறுபொருள். என்றாலும்,  இதனைச் சிலர் தவறாகச் சொல்கிறார்கள். அப்படிச் சொல்பவர்களைக் கிஞ்சித்தும் பொருட்படுத்தாது தன் பாதையில் பிரதி என்னும் சொல்லை சுமார் 30, 40 பொருள்தள விரிவுகளுடன் கையாள்கிறார். இது அபாரமான வேலை. இனி பிரதி என்னும் சொல்லைக் கையாள விரும்புகிறவர்கள் இந்த நூலைப் படித்துப் பிரதி என்னும் சொல் எப்படி எப்படி எல்லாம் கையாளத்தக்கச் சொல் என்று கண்டுபிடித்து மகிழலாம். இதை நான் எதற்காகச் சொல்கிறேன் என்றால், நவீனத் தமிழ், தான் நவீனமாகும்போது – புதுச்சொற்களைப் பயன்படுத்தும்போது (மச்சி என்பது, கலாய்க்கிறான் என்பது போன்ற தமாஷான சொற்கள்) – ஒரு பெருவாரிமுகத்தை வேடிக்கையாக எடுக்கிறது. திருக்குறள், தொல்காப்பியம் போன்ற சிறுவாரி அறிவு மரபைப் புதுச்சொல்லாக்கத் தத்துவம் பின்பற்ற வில்லை.மச்சி என்பது தொல்காப்பிய மரபா? இது மொழியியல் பேசும் விஷயம் . விளக்கம், இப்போது வேண்டாம்.  அதுபோல் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டால், சென்னைத் தமிழைப் பேசி அசத்தக்கூடிய நூலாசிரியர், ‘பிரதி’ என்ற சொல்லைப் பயன்படுத்துவது, தமிழின் 2000 ஆண்டுகால அறிவுமரபுப் பாரம்பரியப்படி என்பேன். அதாவது விமரிசனம் (திறனாய்வு) என்ற சிந்தனையின் எல்லையைப் பிரக்ஞாபூர்வமாக விரிவாக்கி அதன் அடுத்தகட்டமான கோட்பாடு என்ற செயலுக்குப் போகிறார். சர்வதேச அறிஞர்களான டெர்ரி ஈகிள்டன், பிரடெரிக் ஜேம்சன், பால்டிமான், போன்றோரின் செயலைத் தமிழ்த்தெளிவுடன் செய்கிறார்; அனாயசமாகச் செய்கிறார். அதாவது திறனாய்வு வேறு கோட்பாடு வேறு என்பதை கடந்த 30 ஆண்டுகளாக, தமிழிலும் ஆங்கிலத்திலுமாக மிகுந்த ஆய்வறிஞனின் சிரத்தையுடன் கற்றுப் புரிந்துவிட்டார் என்பதை அவர் நூலில் பல இடங்களில் நான் காண்கிறேன். அது உண்மையான ஒரு நிரூபணம் என்பதை பிரதி என்ற சொல்லை இவர் பயன்படுத்தும் எல்லா இடத்திலும் கவனித்துப் புரிந்துகொள்ளலாம்.

 

சரி, சில உதாரணங்களைப் பார்ப்போம். ‘லாடம்’ என்ற பாலைவன லாந்தரின் கவிதைத்தொகுப்புப் பற்றி பேசும்போது இப்படி எழுதுகிறார்: ‘பிரதிகளை எழுதுபவர்களின் அறிதல் முறை… intersubjective ஆக அமைந்துள்ளது’ (பக். 227) என்கிறார். அடுத்து (பிரதி) ‘பல்வேறு பிம்பக்கூறுகளாலும் அதனைச் சார்ந்தவைகளாலும் கட்டப்பட்டுள்ளது’ (பக். 227) என்கிறார். இருவர் தத்தமக்குள் கடத்தும் (intersubjective) செய்திகள் என்னும் அறிதல்முறை தான் பிரதி. ஞாபகம் இருக்கட்டும் text என்ற சொல், புத்தகம் அல்ல என்று மொட்டையாக விளக்கமின்றி ரோலான் பார்த் சொல்லிவிட்ட இடத்திலிருந்து வேறு ஒரு திசையில் பயணிக்கிறார் நூலாசிரியர் சண்முகம். தமிழில் ஒரு கவிஞர் எழுதும் கவிதையில் பிரதி எப்படி வடிவம் கொள்கிறது என விளக்குகிறார். அதாவது பிரதி, பரஸ்பர மனித மொழியாடல் என்பது ஒரு விளக்கம். அடுத்து மொழியின் பிம்பங்கள் (பிம்பக்கூறு) என்று இன்னொரு விளக்கம் தருகிறார். மூன்றாவதாக, பிம்பம் மட்டுமல்ல, பிம்பத்தைச் சார்ந்தவைகளும் பிரதி தான் என்பது இவர் பார்வை. அதன்பின்பு பிரதி பற்றி முழுசாய் தான் சொல்லி முடிக்கவில்லை என்ற ஓர்மை வந்தவுடன் நான்காவது விசயத்துக்குப் போகிறார். அது முபின் கவிதை பற்றிக் கூறும் இடம். ‘வேட்கை…… பிரதியாக்கம்…….. ’ ஆகிறது என பிரதி என்ற சொல்லை ஓர் உணர்வு என்று நாம் எதிர்பாராத ஓர் சுட்டுதலைத் தருகிறார் (பக்.277). அதே கட்டுரையில் பிரதி என்பது மொழி மட்டுமல்ல என்றுகூறிவிட்டு, மொழி முடிந்துவிடும்  இடத்தையும் பிரதி என்று அழைக்கலாம் என்கிறார். அதாவது இதுவரை பிரதிக்கு ஏழு அர்த்தங்களைத் தந்துள்ளார் சண்முகம். எனவே, பிரதியை அறிவாகவும், பிம்பமாகவும், மனித வேட்கையாகவும் கூறுகிறார். பின்பு மொழியின் சரீரம் மட்டுமல்ல, சரீரம் இழந்த மௌனம் கூட ‘பிரதி’ என்றே தான் கருதுவதையும் சொல்கிறார். எம்.ஏ.ஷகியின் கவிதைகள் பற்றிப் பேசும்போது மொழிச்செயலின் விளிம்புக்கு வெளியே பல வடிவங்கள் காணப்படுகின்றன என்கிற திறனாய்வாளர், ‘இதன் விளிம்பிற்கு வெளியே உள்ள வடிவங்களோடு பிரதி பரிவர்த்தனம் கொள்கிறது’ (பக். 291) என்கிறார். பிரதி கருத்துப்பரிமாணம் மட்டுமின்றி, பார்வைப் பரிமாணமும் கொள்ளும் எனச்சுட்டி,   பொருள்தளமான வடிவ விளிம்புகள் கூட பிரதி ஆகலாம் (பிரதியின் பரிவர்த்தனை – exchange –) என்கிறார். இதுதான், ”தன் வசமிருந்த ஏதோவொன்றை இழந்துவிட்டு அதைத் தேடியலையும் திக்கற்ற அலைதலின் மொழியாய் ஷகியின் கவிதைகள் தன்னைக் கட்டமைத்துக் கொண்டுள்ளன” என்று அக்கட்டுரையைத் தொடங்குமிடத்தில் எழுதுவதற்கான காரணம்.

 

இங்கெல்லாம் கவிதை எழுதுவதுபோல சண்முகம் கோட்பாடு எழுதுகிறார். என்னிடம்பல இளைஞர்கள்,  ‘ஸார், இவர் விமரிசனத்தில் கவிதை எழுதுகிறார் ஸார்’ என்கிறார்கள். இரண்டையும் முழுமுற்றாகக் கைவரப் பெற்றவர். கோட்பாடு ஒழிக என்று கோஷம் போடுபவர்களுக்கு இதெல்லாம் பிடிபடாது. கவிதை, திறனாய்வு, கோட்பாடு இப்படி மூன்று  அந்தரத்தில் தொங்கும்  கம்பிகளின் மீது லாவகமாய் நடமிடுகிறார் நூலாசிரியர்.

 

மூன்றுகட்டுரைகள்:

 

இந்த இடத்தில் இந்நூலின் மூன்று கட்டுரைகளைக் குறிப்பிட்டுப் பேசவேண்டும். 1.) புதுக்கவிதை: நவீனத்துவமும் பின் – நவீனத்துவமும். 2.) அமைப்பியல் – பின்அமைப்பியல் – பின்நவீனத்துவம். 3.) லெவிஸ்ட்ராஸ் பற்றிய கட்டுரை.

 

இந்தக் கட்டுரைகள் ஆங்காங்கு நூல் தொகுப்பில் அச்சிடப்பட்டுள்ளன. எனினும் இந்த மூன்று கட்டுரைகளும் சண்முகம் கட்டுரைகள் எல்லாவற்றிற்கும் அஸ்திவாரமாகும். அதாவது முதலில் சொன்ன, ‘புதுக்கவிதை, நவீனத்துவம் பின்நவீனத்துவம்’ கட்டுரை 1980களின் இறுதியில் லண்டனில் இருந்து வந்த New Left Review-வில் அச்சான அமெரிக்க மார்க்சிஸ்ட், பிரடெரிக் ஜேம்சனின் ஒரு கட்டுரையின் தர்க்கத்தைப் பின்பற்றி தமிழில் புதுக்கவிதை பற்றி எழுதப்பட்ட கட்டுரையை சன்முகம் படித்த்தால் உருவான்  அவர் பாணிக்கட்டுரை என நினைக்கிறேன். தமிழ்ப்புதுக் கவிதை போகும் போக்கைப் பற்றி ஒரு கோட்பாட்டை,  படிகள் இதழில் 1985-இல் வந்த கட்டுரை ஒன்று முன்மொழிந்திருந்தது. (தமிழவன், படிகள், 1985) அக்கட்டுரை மொத்தத் தமிழ்க் கலாச்சாரமும் ‘நானின்’ அழிவைப் பற்றிப் பேசத் தொடங்கியுள்ளது எனக் கூறியது. அதற்கு ஆதாரமாக ஞானக்கூத்தன், ஆத்மாநாம், பிரம்மராஜன் ஆகியோர் கவிதைகள் எடுத்து விளக்கப்பட்டன. அப்போது சண்முகத்துக்கு இருபது வயது இருக்கலாம் அக்கட்டுரையில்  உதாரணக் கவிதையாகக் கொடுக்கப்பட்ட  ‘என்னை நான் பிரித்துப் பார்த்தேன்……’ (ஞானக்கூத்தன்) என்ற வரிகளில் இருந்த புதுமையான ‘நான் இழப்பு’ ஒரு பொதுப் பண்பாக தமிழில்   இருந்தது கண்டுபிடித்து படிகள் இதழில் எழுதப்பட்டிருந்தது. ‘நானின் அழிவும்’ ‘நாடகீயமும்’ தமிழ் உளவியலில் இருந்ததை அக்கட்டுரை சுட்டி, ஈழப்போராட்டத்தை ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அப்போது ஆட்சியிலிருந்த எம்.ஐி.ஆர். கறுப்பு பாட்ஜுடன் துக்கம் கொண்டாடி வயிறுமுட்ட உணவு உண்ட ‘நாடகீயத்தை’ கட்டுரை பேசியது.

 

நானின் இழப்பும் கறுப்பு பாட்ஜ் அணிந்து ஐந்து நட்சத்திர ஹோட்டல் விருந்தும் இணையும் விசித்திரப் புள்ளியில் பின்நவீனத்துவம் தமிழில் பிறப்பெடுக்கிறது என்ற உண்மையை உணர்ந்த சண்முகம் தன் கோட்பாட்டு மாளிகையைக் கட்டத் தொடங்கினார். அவர் அறிதல்முறையின் கோட்பாட்டு அடிப்படை இந்த இடம். கடந்த 35 ஆண்டுகளாய் இந்த மரபை வளர்த் தெடுத்து வந்தார். சும்மாவுக்கும் ஓடிச்சென்று இவர் கட்டுரையைப் படித்துவிட முடியாது. பலமான அனைத்துலக பின்புலம் வேண்டும். பிரடிரிக் ஜேம்சன் பின்னர் மேலே நான் சுட்டிய அவரது சிறுகட்டுரையைப் பெரிய நூலாய் விரித்து எழுதி “போஸ்ட் மாடர்னிசம். பிந்திய முதலாளியத்தின் பண்பாட்டுத் தர்க்கம்”என அமெரிக்காவில் பிரசுரித்தார். அந்த நூல்,  அமெரிக்க மாணவர்களுக்கு எழுதப்பட்ட பாடநூல்; உலகப்புகழ்பெற்றது.  இப்படி உலக வியாபகம் கொண்ட கட்டுரை, நூல், போன்றவற்றில் ஸ்தாபிதம் பெற்ற அடிப்படை சண்முகம் சிந்தனைக்கு உள்ளது. அதை இந்தக் கட்டுரை (2008 –இல் வந்த கதைமொழி என்ற நூலில் இருந்த கட்டுரை)சுட்டும். இதனை மொழியின் மறு புனைவு என்ற இந்த நூலில் முதல் கட்டுரையாகத் தொகுப்பாளர் சேர்த்திருக்கிறார். தமிழ்ச் சமூகம் பற்றிய சித்தரிப்பு ஒன்றைப் புரிந்து கொள்ளாமல் புதுக்கவிதை இந்தச் சமூகத்தில் ஏன் தோன்றியது என விளக்க முடியாது. தொடர்ந்து தமிழில் ஏன் புதுக்கவிதை, எழுதப்பட்டுக் கொண்டேயிருக்கிறது என விளங்கிக் கொள்ளமுடியாது.

 

நூலில் கடைசிக்கு முந்தின கட்டுரை இன்னொரு முக்கியமான கட்டுரை. தலைப்பு: அமைப்பியல், பின்அமைப்பியல், பின்நவீனத்துவம். அதில் (பக். 528) தன் சிந்தனை மண்டபத்தின் நூறு கால்களில் ஒரு மையமான காலை நிறுவுகிறார். தமிழ் விமரிசன வரலாற்றை ரசனைவாதம், தமிழ்க் கல்வியியல், மற்றும் மார்க்சியம் என்று மூன்றாய் இனம்கண்டு பிரதியியல் விமரிசனம் இந்த மூன்றின் உள்ள ஊடாட்டமே என்று நிறுவும் இடம் இவருடைய சிந்தனையின் தனித்தன்மையாகும். க.நா.சு. விலிருந்து இன்றுவரை எழுதும் க. நா.சு.வின் நிழல்கள்  யாரிடமும் கூட இல்லாத  இடம் இது.  மூன்று போக்குகளில் உள்ள சத்துவம் வழி தன்னுடைய (நான் மேலே விளக்கிய) பிரதியியல் விமரிசனத்தைப் பெயர்ச்சூட்டி அறிவிக்கிறார். இதில் ஜமாலுனுக்கு (பார்க்க: அவருடைய ‘பிரதியில் கிளைக்கும் பிம்பங்கள்’  என்ற நூலுக்கு நான் எழுதிய முன்னுரை) ஒரு தொடர்ச்சியிருக்கிறது. ஜமாலனின் பிரதி என்ற விளக்கம் கொஞ்சம் வேறுபட்டதும், கொஞ்சம் ஒற்றுமை உள்ளதுமாகும். இருவரும் நண்பர்களாதலால் இவர்களுக்குள் நடக்கும் நீண்ட நேர விவாதம் குறிப்பிடத் தக்கது.

நான் மேலே சுட்டிய கட்டுரையில் இரண்டு மூன்று விசயங்களைச் சொல்கிறார். ஏற்கனவே பார்த்ததுபோல, தமிழ்த் திறனாய்வு வரலாற்றில் எண்பதுகளில் வந்த அமைப்பியல் ஒர்,  Cut off Period என நம்புகிறார். அதனால் தனது பிரதியியல் கோட்பாட்டை அமைப்பியலிலிருந்து வார்த்தைகளைப்பெற்று, மொழிக்கிடங்கு, பேச்சு (பரோல்) என மொழித்தத்துவம் காண்கிறார். பின்பு இன்னும் அதிபுரட்சிகரமான ஒரு செயலைச் செய்கிறார். தமிழ்த்தொல்காப்பியத்தோடு ஒட்டி உரைசொல்லல் சார்ந்து நடந்த சர்ச்சைக்குப்  போகிறார். எது விமரிசனம் என சி.சு.செல்லப்பா, க.கைலாசபதி ஆகியோர் மூலம் ஒரு விவாதம் நடந்தது உண்டு. பழைய உரைமரபில் இருந்ததா, நவீன விமரிசனம் என்பது போல.  சண்முகமும், இளம்பூரண வழிவந்த உரைசொல்லல் எனும் மொழித் தத்துவச்செயல்பாடு, விமரிசனத்தின் எந்த  எல்லைக்கோட்டைத் தொடுகிறது என யோசிக்கிறார். பாருங்கள், இப்படி எழுதுகிறார்: வாசிப்பதற்கு, ஒரு பிரதி உள்ளது;  ஆசிரியன் வாசகன்- உரையாளன் (உரையாசிரியன்) என்ற பங்கேற்பாளர்களும் (பக். 529) உள்ளனர் எனச் சொல்கிறார். பிரதி என்பதை ஒரு பருண்மையான வடிவமாக அமைப்பியல் முன்வைத்தது என்கிறார். இதன் அடிப்படையில் பருண்மைப் பகுப்பாய்வு (objective analysis) அடிப்படையில்  விமரிசன முறை வந்தது என்கிறார். ந.பிச்சமூர்த்தி போன்றோர் பாரதியின் மேல்தட்டு சனாதனத்தின் தொடர்ச்சியாய், தற்காலத் தமிழிலக்கியத்தைச் சித்தரித்து வந்த எழுபதுகளில் பருண்மைவாதம் என்ற புறவய பொருள்முதல்வாதம் சனாதனத்தின் முதுகெலும்பை உடைத்த கதை இது. இதிலிருந்து சொல்லாடல் போன்ற அமைப்பியல் சொற்கள் வந்த விதத்தை விளக்கலாம். என்னிடம்(புத்தகம்பேசுது,2021ஆம் ஆண்டில் ஓர் இதழ்) பிரதிபா ஜெயச்சந்திரன் என்கிற தோழர் ஒரு நேர்காணல் கண்டபோது ஐம்பதாண்டு கால தமிழிலக்கிய  வரலாற்றில் மேலே தெரியாத ஒரு வர்க்கப்போர் நடக்கிறது என்றேன். சண்முகம் கூறும் புறவயம் தான் வர்க்கப்போர் நடப்பதைவெளிப்படுத்தும் சொல். இப்படி இவருடைய கட்டுரைகளைத் தொடர்ந்து வாசித்து விளக்க நண்பர்கள் தயாராகி வருகிறார்கள். இக்கருத்திலிருந்து லையோத்தார் போன்ற பின் நவீனத்துவ வாதிகளின் சிந்தனையுடன் வெகுநுட்பமான தொடர்பிருக்கிறது என்று சொல்லும்  சிந்தனைக் கண்ணிக்கு வருகிறார். அமைப்பியலை மொழியியலுடன் தொடர்பு படுத்திய தர்க்கம் பொருள்முதல்வாதமாய் இருப்பதை இவர் எழுதியுள்ள லெவிஸ்ட்ராஸின் கட்டுரையிலும் பார்க்கலாம். அது தனியாகக் கவனம் பெறவேண்டும். அதைத்தான் மூன்றாவது கட்டுரையாக மேலே குறித்தேன். மொத்தத்தில் இது இவர் நூல் மீதான ஒரு தொடக்கக் கட்டுரை.

 

திறனாய்வும்  கோட்பாடும் இணைதல்:

 

என் இந்தக் கட்டுரையில் நான் விமரிசனமும் கோட்பாடும் இந்த நூலின் அடிப்படை தர்க்கத்தில் உள்ளது என்று பல இடங்களில் குறிப்பிட்டுள்ளேன். சிலருக்கு ஒரு குழப்பம் வரலாம். விமரிசனம் எழுதும்பாணி வேறு;  கோட்பாடும் எழுதும் பாணி வேறு. எண்பதுகளிலிருந்து அமைப்பியலானது தமிழ் இலக்கியச் சிந்தனையில் தோன்றிய பிறகு இரண்டையும் வேறுபடுத்திப்  பலர் எழுதுகிறார்கள். பலருக்கு இவ்விரண்டும் தனிக்கிளைகளாவது  சீரிய முறையில் தமிழ்ச்சிந்தனை வளருவதன் அறிகுறி எனத்தெரிய ஆரம்பித்துள்ளது.  விமரிசனமும் கோட்பாடும்  இலக்கியத்தைச் சீரிய துறையாகக் கருதாமல் முகநூலில் அரைப்பக்க அபிப்பிராயம் எழுதுபவர்கள் லேசாகவாவது விமரிசனத்தைத் தொடமுடியும் தான். ஆனால் நல்ல விமரிசனத்தில், ஒரு முழுமையான தர்க்கம் இருக்கும். அது வளர்ந்து கோட்பாடு உருவாகும். வெறும் நூல் மதிப்புரைகள் கோட்பாடு ஆகாது. எனினும் அப்படி எழுதுபவர்களையும் விட்டுவிடமுடியாது.

 

இவர் இந்த   நூளில் மதிப்புரைப் பார்வையை எழுதினாலும் பெரும்பான்மை இடங்களில், அவற்றின் அடிப்படையில், இவருக்கான ஒரு முழுமைப்பார்வை உள்ளதை நான் கவனித்தேன்.  அதனால் கோட்பாட்டை விட்டுவிடாமல் அதைப்பின்புலமாக வைத்து சண்முகம் இந்தச்சிறு கட்டுரைகளைத் தன் தீவிரத்தைக் கைவிடாமலே,  எழுதியுள்ளார் என்று கூறுவேன். ரயாஸ் குரானா, ஸ்ரீநேசன், தவசி, பைசால், தூரன் குணா போன்றோர் பற்றிச் சிறுகுறிப்புகள்  எழுதினாலும் அந்தக் குறிப்புக்கள், வலிமையான ஒரு கோட்பாட்டு தொடக்கத்திலிருந்தே முகிழ்த்துள்ளன என்பதே என் திடமான கருத்து.

 

மொத்தத்தில்,  நூலை வாசிப்பவர்களுக்கு உதவ  வேண்டி ஓர் ஆரம்பமாக இக்கட்டுரையை எழுதியுள்ளேன்.  தொடர்ந்து விவாதங்கள் வரவேண்டும்.