மணிக்கூண்டுகளுக்கிடையில் ஒரு கொலைவழக்கு-சிறுகதை

 

நகரம் அல்லோலகல்லோலப்பட்டது.

அப்போது காலனிஆதிக்க எஜமானர்களின் ஆட்சி நடந்துகொண்டிருந்தது. கோதிக் மற்றும் செராசனிக் கட்டடக்கலையும் வளைவுகளும் வளாகங்களும் மரத்தால் செய்யப்பட்ட தரைகளுடைய பங்களாக்களும் தோட்ட வீடுகளுமாகக் காணப்பட்ட நகரத்தில் குறிப்பிட்ட  அடையாளங்கள் கொண்ட இரு சமூகத்தாரின் மத்தியில் நடந்த மோதல்களில் ஒன்றுதான் அந்த வழக்கு.

நெற்றியில் இரண்டு கோடுகள் இழுக்கும் பழக்கம் கொண்ட கொண்டைகட்டி சமூகத்தார்தான் கலகத்தைச் செய்தனர். அவர்கள், நெற்றியில் எந்த அடையாளமும் இடாத கட்டையன் சமூகத்தார்களின் 78 வீடுகளை அந்த பெப்ருவரி மாதம் பதினாறாம் தேதி எரித்தும், அடித்தும், உடைத்தும் நாசம் செய்தார்கள். ஆனால் விநோதமாக வழக்கு வேறுவிதமாகப் சோடிக்கப்பட்டது. கொண்டைகட்டி சமூகத்தவரின் உடமைகளைச் சூறையாடியது மட்டுமின்றி அவர்களில் இருவரைக் கொன்று விட்டனர் கட்டையன் சமூகத்தார் என்று கோர்ட்டில் வழக்குபோடப்பட்டது. இப்படிப் பொய்யாய் ஆங்கிலக்கோர்ட்டார் நம்பும்படி சோடிக்கப்பட்டது இந்த வழக்கு. நகரம், அதன் நீண்ட கடற்கரைக்கும் வெயிலுக்கும் பெயர்பெற்றிருந்தது போலவே அவதூறுகளைப் பரப்புவதற்கும், ரகசியங்களைப் பாதுகாக்காமல் இருப்பதற்கும் பெயர்பெற்றிருந்தது.

கொண்டைகட்டிப் பிரிவினர், தலையில் இரண்டு கோடுகள் போடுவதோடு, தங்கள்தங்கள் குடுமிகளை, நான்கு புறமும் முழுதும் முடியில்லாமல் வழித்தெடுத்த தலையில், கட்டிவைத்திருந்தது போலவே மனதில் வஞ்சகமும் சூதுவாதும் கொண்டவர்கள் என்ற கருத்தை லண்டனில் சட்டம் படிக்கும் தன் தம்பியான பர்ட்டனுக்கு அடிக்கடி கடிதமாய் எழுதியிருந்த நகரின் அமைதிகாக்கும் நீதிபதி ஆர்பத்நாட்டின் முன்னிலையில் இந்தக் கலவர வழக்கு வந்தது. இந்த வழக்கு பல சட்டச்சிக்கல்கள் கொண்டதும் நீதிமன்றத்தின் வரம்புகள் பற்றிய பிரச்சனைகளுடன் தொடர்புடையதாகவும் பல தரப்புக் கருத்துக்களுக்கும் இடம் வைப்பதாகவும் இருந்ததால் அக்காலத்தில் பெரிய பிரச்சாரம் பெற்றது.

கொண்டைகட்டி மக்களின் தலைவர் என்று கூறிக்கொண்டு வந்த மனிதரைப் புடைசூழ நின்று, அவருடைய சமுதாயத்தவர்கள் இடுப்பில் அரிவாளை வைத்துச் செருகியபடி கோர்ட் வாசல் பக்கம் நின்ற புளியமரத்தின் கீழ், தத்தம் முட்டை மடக்கி பிருஷ்டம் தரையில் படாமல் கால்பாதத்தின் முன் பகுதியைப் புல்தரையில் ஊன்றி அமர்ந்திருந்தது பல வெள்ளைக்காரர்களுக்குக் காட்சிப்பொருளானது. கறுப்பு உடலின்மேல் வெள்ளை வெளேர் என்ற (இது அம்மக்களின் தலைவர்கள் மட்டும் அணிந்திருந்த ஆடைகளின் வண்ணம்) ஆடைகளை அணிந்ததால் அவர்களின் முகம் முதலிய உடலின் மேல்பாகம் சூரியவொளியில் மேலும் கறுப்பாகத் தெரிந்தது. கறுப்பு முகத்தின் காதுகளில் கடுக்கண் தொங்கவிட்டிருந்ததுபோல் காதுமடலின் மேல்பாகத்தில் எப்போது வேண்டுமானாலும் மலர்ந்து மணக்கப் போகும் மலரைச் செருகி வைத்திருந்தனர். தலைவருக்குத் தங்கள் சமூக இளைஞர்கள் கெட்டுப்போகாமல் வைக்கும் பொறுப்பு இருப்பதாக எண்ணம். கெட்டுப்போகாமல் இருக்க காதல் செய்யாமல் இருக்க வேண்டும் என்று அவர்களின் சாதிக்குழுவின் சபை அவரவர் ஊர்களில் வேப்பமரங்களின் கீழ் அமர்ந்து பஞ்சாயத்துகூடி முடிவு எடுத்தது. எனவே, காதல் செய்யும் அவர்கள் வீட்டுப்பிள்ளைகளை முதலில் கண்டிப்பது என்றும், அதுவும் சரிபடாதபோது கைகால்களை எடுத்துவிடுவது என்றும் பழக்கம் வைத்திருந்தார்கள். அது சரியான முடிவுதானா என்று இளைஞர்கள் சிலருக்குச் சந்தேகம் வந்தபோது (அவர்கள் சபைகளில் பெண்கள் யாரும் வரக்கூடாது என்பது முன்னோர் பின்பற்றிய வழக்கம் – பின்னால் அதாவது 17-ஆம் நூற்றாண்டிலிருந்து அது விதிமுறையானது) அவர்களுக்கிடையில் இருந்த இரண்டுபேர்,  சமூகக் கவிஞர்கள், அதுசரிதான் என்று இரண்டு காவியங்களை 101 – அடி வீதம் எழுதினார்கள். காவியம் இறுதிவரை புகழ்பெறாமல் மக்கிப்போனது.

வழக்கில் முதலில் அழைப்பது யாரை என்று நகரத்தைப் பரிபாலனம் செய்யும் நீதிமன்றக்குழு முடிவெடுப்பதில் சில நாட்கள் கழிந்தன.

இது கொண்டைகட்டி சமூகத்தினருக்குத் தினம் தினம் நகரத்துக்கு வரும் தேவையை உருவாக்கியது. நகரத்தில் வர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட படகுகளில் இரவுநேரத்தில் மகிழ்வுப் பயணம் செல்லும் கவர்னரையும் அவரது குடும்பத்தையும் கண்டு மகிழ்வதிலும், ஆளுநர் வாழும் தோட்டத்துக்கு உள்ளேயிருக்கும் மாளிகையைக் கள்ளத்தனமாக எட்டிப்பார்ப்பதிலும் கொண்டைகட்டி சமுதாயத் தலைவர்கள் ஈடுபட்டனர். மேலும், 1776-ஆம் ஆண்டிலிருந்தே மதிக்கப்பட்ட நகரமாக அது இருந்ததினால் பிரஞ்சு துருப்புகள் ஒருமுறை பீரங்கி வைத்து உடைத்த பல சிறுசிறு கோட்டைகள் சீர்செய்யப்படாமல் நூறு ஆண்டுகளுக்கு மேல் கடந்தும் அந்த நகரத்தில் இருந்தன. பிரிட்டீஷார் கைக்கு நகரம் மறுபடியும் வந்தபோது கவர்னருக்குத் தோட்டவீடு கண்டுபிடிப்பது கடினமான காரியமாயிற்று. எனவே, துவிபாஷிகள் கோவணம் கட்டிய உடம்பிற்குமேல் வெள்ளை வேஷ்டிகள் தார்பாய்ச்சிக் கட்டியபடி சேலம் வெற்றிலையை மென்றபடியும் திருச்சி சிகரெட் பிடித்தபடியும் கவர்னருக்குத் தோட்டவீடு தேடுவதில் ஒரு காலத்தில் மும்முரமாக ஈடுபட்டிருந்த சரித்திரம் கொண்ட ஊர் இது. இறுதியில் அந்த நகரின்முதல் கவர்னருக்குப் பிரஞ்சு மாலுமியான லூயி தெமோண்ந்த் என்ற பிரமுகரின் விதவையான அந்தோனியோ தெமோண்ந்த் என்பவரிடம் இருந்த பெரிய வீடு பல ஆயிரம் வராகன் விலையில் வாங்கப்பட்டது என இந்த நகரத்தின் சரித்திரம் கூறுகிறது.

வழக்கில், ஏழைகளான கட்டையன் சமூகத்தினர் சாமானியமானவர்களாய் நடந்து கொண்டனர். வெள்ளைக்காரர்களைப் பார்த்தபோது ஓரமாக ஒதுங்கிநின்று வழிவிட்டார்கள். கைகளால் வாயைப் பொத்தியபடி வாய்நீரை பக்கத்துச் சுவர்களில் உமிழ்ந்தார்கள்; அடிக்கடி பயந்தார்கள். கட்டையன் சமூகத்தினருக்குத் தாங்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் இருந்ததால் தங்கள் எதிரிகளான கொண்டைகட்டி சமூகத்தவர்களால் தங்கள் சமூகத்தின் இரு இளைஞர்களின்  ஆண்குறிகள் வெட்டப்பட்டதை மன்னித்துவிடலாம் என்ற எண்ணமே  இருந்தது. ஆனால், வெள்ளைக்கார மருத்துவர் ஜான்போப் என்பவர் கிறிஸ்தவ எண்ணங்களால் உந்தப்பட்டு, கட்டையன் சமூகத்தவர் மத்தியில் ஏசுகிறிஸ்துவையும் பைபிளையும் பரப்பிக்கொண்டே ஓய்வுநேரத்தில் தொழுநோயாளிகளுக்கு ஒரு மருத்துவமனை உருவாக்கிச் சேவையும் செய்கிறவர் – வேறு ஏதோ தன்மனதில் யோசித்ததால் வழக்கு மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. ஜான்போப் பெப்ருவரி மாதம் 16-ஆம் தேதி தன் கண் முன்பு கலவரம் நடந்ததென்று – தன் போலியோ கால்களால் நொண்டியபடியே நடந்து வந்து சாட்சி சொல்ல வந்தார். பட்டணத்தில் இந்த வழக்கு எல்லோர் வாயிலும் அவலாக மெல்லப்பட்டது. ஜான்போப் முன்வந்து சாட்சி சொல்லியதால் வழக்கு மிகவும் பலமான ஒன்றாக மாறிவிட்டது. கட்டையன் சமூகத்து இளைஞர்கள் இருவரும் நாட்டுமருத்துவரான பண்டிட் ஒருவரும் (இவருடைய தந்தை பிரஞ்சு துரை ஒருவரின் சமையலறையில் நல்லபடி மாட்டுக்கறி சமைத்ததால் மிஸஸ்லா போர்தனெ என்ற அம்மாது அவரை அடிக்கடி மெச்சியதோடு பழைய பிரஞ்சு இலக்கியத்தில் வரும் சமஉடமைக் கருத்துக்களையும் போதித்தார்) ஆக மொத்தம் ஜான்போப்பையும் சேர்த்து நான்குபேர் தாழ்த்தப்பட்ட கட்டையன் சமூகத்தவர் கொலையில் ஈடுபடவில்லை என சாட்சி சொன்னார்கள்.

வழக்கு நடந்த இடத்துக்கு இரண்டு பர்லாங் தூரத்தில் கவர்னரின் குதிரை மெய்க்காப்பாளர்கள் வசிக்கும் பெரிய வீடுகள் கர்னாடகத்திலிருந்து வந்த பேரிகெம்பையாவின் இளைய சகோதரரான பெரியநாயுடுகாருவுக்குச் சொந்தமாக இருந்தது.  ஜான்போப் ஏழைகளான கட்டையன் சமூகத்தவர் பயந்த சுபாவம் உள்ளவர்களாகையால், அவர்கள் தன் பாதுகாப்பில் இருப்பதே நல்லது என்று நினைத்ததால் கவர்னரின் குதிரை மெய்க்காப்பாளர்களின் வீட்டுக்கு அருகில்  இருந்த லாயத்துக்கு எதிரில் உள்ள வீட்டில் எல்லோரும் தங்குவதற்கு ஏற்பாடு செய்தார்.

வழக்கில் புள்ளிவிவரங்கள் இப்போது மாறின. நடந்த கலவரங்களை, இப்படி விவரித்தார்கள்: ஏழைகளான கட்டையன் சமூகத்தவரின் நூற்றைம்பது குடிசைகளும் – அவை ஓலையால் வேயப்பட்ட 10 அடிக்கு எட்டடி அகலமுள்ளவை- மேலும், நான்கு கூரைஓடுகள் உள்ள வீடுகளும் எரிக்கப்பட்டன என  முடிவு செய்யப்பட்டது. முப்பத்தேழு ஆடுகள் (நான்கு கருவுற்றிருந்தன) எட்டு பசுக்கள் (இரண்டு கருவுற்றிருந்தன என்பதைச் சாட்சிகள் ருசுப்படுத்தவில்லை) நூற்று ஆறு பூனைகள் –( 25 பூனைகள்,அதில் பிறந்து  ஓரிரு நாட்கள் ஆனவை  எரிக்கப்பட்டிருந்தன.

கலவரத்தினால் பாதிக்கக் கூடாது என கலவரத்த்துக்கு முன்பே மேல்சாதியினரின் வீடுகளில் இருந்த அவர்கள் ஆபரணங்களையும் அரிவாள், கடப்பாரை, வீட்டிலுள்ள நெல்மூட்டைகள் போன்றன  வண்டிகளில் ஏற்றப்பட்டதைப் பார்த்த கீழ்ச்சாதியினரின்  நாக்குகள் கூர்மையான சவரக்கத்தியால் அறுத்தெறியப்பட்டதையும், அவர்களுக்குத்தானே சிகிச்சை செய்ததையும் மருத்துவர் ஜான்போப்  – உறுப்புகளின் ஆங்கிலப் பெயர்களுடன் விளக்கியது மிகச்சிறந்த ஆதாரங்களாக, அவரைப்போலவே உறுப்புக்களின் பெயரை உடல் சாஸ்திரத்தில்  படித்திருந்த நீதிபதிகளால் எடுத்துக்கொள்ளப்பட்டன.

நீதிபதியாக இருந்த ஆர்பத்நாட் என்பவர் ‘ஓ மை ஹாட்’ என்று விசனம் அடைந்தது ஒரு சாட்சி இப்படி கூறியபோது தான்:

“அய்யா, எசமானர்களே மிகவும் கொடிய காரியம் என்று நான் கூறுவது – ஒரு குடிசையில் ஒரு தாய் குழந்தை பெற்றுக்கொண்டிருக்கிறாள் என்பதையும் பொருட்படுத்தாது, கலகக்காரர்கள் தாய்வயிற்றிலிருந்து வந்துகொண்டிருந்த பச்சைக்குழந்தையும் அதன் தாயையும் அங்கிருந்த மருத்துவச்சியையும் கரிக்கட்டையாய் போகும்படி எரித்த காட்சிதான்”.

“கையில் வெள்ளைத் துணியைக் கட்டிய நான்குபேர் ஒரு வரிசையில் இருந்த தாழ்த்தப்பட்டவர்களின் பத்துக்குடிசைகளை ஈவிரக்கமின்றித் தங்கள் கையில் பிடித்தபடி இருந்த பனைஓலைகளால் ஆன தீப்பந்தத்தால் எரித்தபோது தான், அந்த கொடூரமான சம்பவம் நடைபெற்றது”.

எதிர்தரப்பில் நின்றிருந்த மேல்சாதிக் கொண்டைகட்டி சமூகத்தின் தலைவன் ஏதும் பேசாமல் அப்போது நின்றான். நீதிபதி   ‘ ‘அப்படி ஒரு சம்பவம் நடந்ததா?’” என்று கேட்டதை துவிபாஷி மொழிபெயர்த்தார்.

இன்னொரு சாட்சி, கட்டையன் சமுகத்தினரின் எரிந்துபோன பயிர்களைப் பட்டியல் இட்டார். பத்து பலா மரங்களும் முழு பலாக்கனிகளுடன் எரிந்ததையும் வாழை மரங்கள்  வாழைக்கன்றுகளுடன்  எரிக்கப்பட்டதையும் விளக்கினார். கொடுமையான காட்சியான நெருப்பில் பொட்டித்தெறித்த பானைகள், அரிசி, தானியம் போன்ற உணவுப்பொருட்கள் – படுப்பதற்காக  வைத்திருந்த ஓலைப்பாய்கள் ஆண், பெண், குழந்தைகளின் ஆடைகள் எரிந்து கரியாகிப் போனதையும் கூறினார் அந்த சாட்சி.

வழக்கை நடத்திக்கொண்டிருந்த நகரத்தின் கட்டடங்களின் இந்தோ – சராசனிக் பாணியும்   கடற்கரைப்பட்டணமான அவ்வூரில் கப்பல்களை வழிமாறிப்போகாதபடி ஆங்காங்கே பாதுகாக்கும் (நோக்கம் பெரியது) பல்வேறு வகையான கலங்கரை விளக்கங்களும் நீண்ட பூங்காக்களும் அடிக்கடி மகிழ்ச்சி தோன்றும்போதெல்லாம் ஊர்வலம் போகும் கவர்னரும் அந்நகரத்தின் முக்கியக் கவர்ச்சிகளாகும்.  மேற்கத்திய அறிவையும் சட்ட நுணுக்கத்தையும் நீதி போதனையையும், தொழில்நுட்பம், வியாபார அறிவு போன்றவற்றையும் அடையாளமாகக் கொண்டு  விளங்கிய வழக்கு மன்றத்தில் அன்று மிகப் பெரிய கூட்டம் காணப்பட்டது. அதற்கான காரணம் அந்த இரண்டு கொலைகள். மேல்சாதிக் கொண்டைகட்டிகள் மிகுந்த கோபத்தோடு காணப்பட்டார்கள். அவர்கள் வழக்காடுவதற்காக நியமித்திருந்த ஜார்ஜ் சார்ட்ரீஸ் என்ற வக்கீல் பல புகழ்பெற்ற வழக்குகளை வாதித்து வென்றவர். கூம்புகளும் வட்டவடிவமும் கொண்ட அந்த நகரத்தின் கட்டடங்கள், புதிய சாலைகள், நீண்ட கடற்கரை – இவற்றின் அழகில் மயங்கியபடி தன் அழகான குதிரையை ஒருமணிநேரம் ஆசைதீர ஓட்டிவிட்டு மாளிகையில் போய் குளித்த பின்பு தன் நூலகத்தில் போய் அடுத்த நாள் நடக்கப்போகும் கொண்டைகட்டிகளின் வழக்குக்கான சட்டக்கருத்துக்களைத் தேட ஆரம்பித்தார் ஜார்ஜ் சார்ட்ரீஸ். வழக்கு வென்றால் அவருக்கு அளிக்கப்படப் போகும்  ரண்டு கருத்த பெண்கள் பற்றிய ஆசையும் அவர் மனதின் ஓரத்தில் சந்தோசம் தரத் தவறவில்லை.

கலவரத்தில்  கொண்டைகட்டிகளில் இருவர் பிணமாய்  விழுந்திருந்ததால்  ஏழைக்கட்டையன் சமூகத்துக்கு ஆதரவாய் வந்துள்ள ஜான்போப் கூட தங்களுக்குச் சாதகமாக வழக்குத் திரும்புவது கடினம் என யோசிக்குமளவு வழக்கு சிக்கலானதாகக் காணப்பட்டது.எனினும் கட்டையன் சமூகத்தவர்கள் இரண்டு கொலைக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை, தங்கள் வீடுகளும், ஆடுமாடுகளும் பயிர் பச்சைகளும் மரங்களும் நெருப்புக்கிரையாகின என்ற உண்மையை ஆங்கில நாட்டு ராணியின் தர்மத்தைப் பரிபாலிக்க வந்திருப்பவர்கள் நிலைநாட்டத் தவறமட்டார்கள் என்ற அடிப்படையில் தங்களுக்குள் விவாதித்தார்கள்.

ஏழைபாழைகளான இத்தகைய கட்டையன் சமூகத்தவரின் நம்பிக்கை அவர்களின் விரோதிகளான கொண்டைகட்டி சமூகத்தவர்களிடம் கோபத்தை உண்டு பண்ணியது. அது நிதர்சனமாக நீதிபதிக்கும் மருத்துவர் ஜான்போப்புக்கும் புரிந்தது. நியாயத்தை நிலைநாட்ட வேண்டும் என்று ஆங்கில மருத்துவர் ஜாண்போப் உறக்கமின்றி உழைத்தார். ஓரிரு கட்டையன் சமூகத்து இளைஞர்கள் மட்டும் வெள்ளைக்கார மருத்துவருக்கு உதவினார்கள். மருத்துவ பரிசோதனையில் கொண்டைகட்டி சமூகத்தவர் இருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அப்படியெனில் அது கட்டையன் சமூகத்தவர்களின் செயலேதான் என்ற பொய்யான முடிவே கிடைக்கும். மனிதர்களை இயற்கை நியதியும் காலமாற்றத்துக்குட்படாது சதா இருந்து கொண்டிருக்கக் கூடிய மாறாத நீதியும் தம் கரத்தால் காப்பாற்றும் என்ற நம்பிக்கை பரவி இருந்த காலம் அது. ஆகையால் அநீதி கோலோச்சி விடும் என்ற பயம் பெரும்பாலும் இல்லை.

அதனாலோ என்னவோ ஏழைகளாகவும் சாதுக்களாகவும் வாழ்ந்த கட்டையன் சமூகத்தவர்களுக்கு இறுதியில் நீதி கிடைத்தது. கட்டையன் சமூகத்தவர்கள் மீது அநியாயமாய் பெரிய வன்முறையைக் கட்டவிழ்த்தது கொண்டைகட்டி சமூகத்தவரே என்பது நீருபணம் ஆயிற்று. தாயையும் குழந்தையையும் அத்துடன் பேறுபார்க்க வந்த மூதாட்டியுடன் எரித்துக் கரிக்கட்டை ஆக்கியவர்களை வழக்குமன்றம் கண்டுபிடித்தது. வீடுகளைத் தீக்கிரையாக்கியவர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டன. யார்யாருக்கு என்ன தண்டனை என்று கோர்ட் தீர்ப்புச் சொல்லியபோது கட்டையன் சமூகத்தார் நியாயம் கிடைத்தது என நிம்மதி அடைந்தனர். எனினும் கொலைபற்றிய முழுத் தீர்ப்பு  உடனே வெளிவராததால் உண்மையில் கொண்டைகட்டி சமூகத்தினரின் இரண்டு பிணங்கள் விழுந்ததற்குத் தங்கள் சமூகத்தவர்கள் காரணமாயிருந்திருக்கலாமோ என்றே நினைத்தனர் .  பெரிய களேபரத்தில் அந்த இரண்டு கொண்டைகட்டி ஆட்கள் தங்கள் சமூகத்தவரால் கொல்லப்பட்டிருக்கலாமோ என்றும் ரகசியமாய் பேசிக்கொண்டனர் கட்டையன் சமூகத்தவர்கள்.

ஆனால் இறுதியில் உண்மை வெளிப்பட்டது. கொண்டைகட்டி சமூகத்தினரே அவர்கள் சமூகத்தில் இருவர் சாகக் காரணமாயிருந்தார்கள் என்று தீர்ப்பு வாசிக்கப்பட்டபோது கோர்ட்டில் அமைதி அதிக நேரம் பரவியது.  அந்த தீர்ப்பை யாரும் எதிர்பார்க்கவில்லை. நடந்த விஷயங்களைக் கோர்ட்டு தீர்ப்பு விவரித்தபோது கொண்டைகட்டி சமூகத் தலைவர் தலைகுனிந்து நின்றார். “சொந்த சமூகத்தைச் சார்ந்த  இரு மனிதர்களைக் கொன்றவன் இதோ நிற்கிறான்” என்று மிகுந்த கோபத்துடன் வெள்ளைக்கார நீதிபதி முன்பல் ஒன்றில் புழு விழுந்திருக்கும் அந்த சமூகத்துத் தலைவர் என்று பேரும் புகழும் பெற்ற மனிதரைச் சுட்டிக்காட்டினார்.

ஆனால் யாருக்கும் எப்படி நீதிபதி இந்த முடிவுக்கு வந்தார் என்பதை அறிவதில் ஆர்வம் இருக்கவில்லை. ஏனெனில் மேல்நாட்டு மனிதர்களின் நடைமுறை ஏதும் சுயநாட்டு மக்களுக்குப் புரியாமலே காரியங்கள் நியதிபோல் நடந்த காலம் அது.

*                               *                                            *                            *

இது பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடந்த கதை.  நான்கு கலவரங்கள் அந்த மக்களுக்குச் சுதந்திரம் கிடைத்த பின்பும்கூட அச்சடையாளமாய் இதுபோலவே நடந்ததனை ஆய்வு செய்த, மத்திய வயதைக் கடந்த சமூகவியல் ஆய்வாளர் ஒருவர், பழைய நூலகங்களில்போய்  இந்தச் சமூகங்களின் மோதல் வரலாற்றைப் படிக்கப் பழைய வழக்குகளைப் பூரணமாக ஆய்ந்தார். அப்போது ஒருநாள் விநோதமான ஒரு பழைய வழக்கையும் அதன் தீர்ப்பையும் படித்து சமீபத்தில் நடந்தது போலவே சுமார் இரு நூறு ஆண்டுகளுக்கு முன்பும் ஒரு பெப்ருவரி மாதம் பதினாறாம் தேதி அதே தந்திரத்தைப் பயன்படுத்தி 2 பேர் கொலை செய்யப்பட்டிருப்பதை அறிந்து மிகவும் திக்பிரமை அடைந்தார். ஆய்வாளருக்கு ஏதும் புரியவில்லை.

ஆண்டுகளையும் கோர்வையற்ற நிகழ்ச்சிகளையும் ஒழுங்கில்லாமல் அடுக்கி, தந்தையும் தாத்தாவும் மகனும் ஒரே (கடவுளின்) பெயரை மீண்டும் மீண்டும் வைக்கும் மரபுள்ள அச்சமூகத்தில் வரலாற்றைக் கண்டுபிடிக்கும் ஒரே நோக்கத்தினால் ஆய்வாளர் இறுதியல் வந்தடைந்த முடிவுகள் எல்லோரையும் பயங்கரமும் திக்பிரமையும் அடையவைத்தன.

சமீபத்தில் அதாவது சட்டசபைகளும், நாளிதழ்களும், டி.வி.க்களும் வந்து விட்ட இன்று இரண்டு கொலைகளைத் தாங்களே செய்துவிட்டு எதிரிச் சமூகத்தின் மீது சுமத்தியதுபோல் அன்றும் செய்த தந்திரத்தை ஆய்வாளர் கீழ்வருமாறு பல குறிப்புக்களை இணைத்து எழுதினார்.

கலவரம் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே கொண்டைகட்டிச் சமூகத்தவர்கள் வாழும் பகுதியில் பஞ்சாயத்தினர் கூடும் செல்லிஅம்மன் கோயில் முன்புள்ள சத்திரத்தில் முக்கியமான எல்லோரும் கூடினார்கள். முன்பல்லில் புழுவிழுந்த சமூகத்தலைவர், “வெள்ளைக்கார துரைமார் நியாயத்தைக் கண்டுபிடிப்பதில் நிபுணர்கள், சதா கடிகாரங்களையும் மணிக்கூண்டுகளையும் கலங்கரை விளக்கங்களையும் கொண்டிருக்கக்கூடிய இந்த நகரத்தில் வெள்ளைக்கார துரைமாரின் நியாய உணர்வை வெல்ல வேறு எந்தச் சக்தியும் இல்லாததால் கவனமாக நாம் நடந்துகொள்ள வேண்டும்” என்று கூறிவிட்டு  உடுத்திய வெள்ளைத் துணியைத் தூக்கி வெறும்பிருஷ்டம் பட அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து இருளில் மெதுவாய் நடந்து மறைந்தார். இந்த திட்டம் ஏதும் அறியத்தேவையில்லாத ஜார்ஜ் சார்ட்ரீஸ் வழக்கமாய் தான்பார்க்கும் அச்சமூகத்தின் வழக்குகள் வரும்போது கிடைப்பதுபோல் கருப்புப்பெண் கிடைக்கப் போகும் நினைவுடன் ஆழ்ந்த உறக்கத்தில் கிடந்தார்.

நம்பமுடியாத காரியங்கள் நடந்தன.இருவர் தாங்களாகவே முன்வந்து தத்தம் உயிரைப் பலியிடத் தயார் செய்யப்பட்டனர். அவ்விருவருக்கும் ஊரின் பெரிய கிணற்றுக்கு அருகில் நிற்கும் ஆலமரத்துக்குக் கீழ் இரட்டைக்கல் உருவங்களாய் நினைவுச்சின்னம் எழுப்பி வருடம்தோறும் விழா எடுக்கப்படும்  என்று ஊர்பிரதானிகள் வெத்திலை பாக்கு உள்ளங்கையில் வைத்து உறுதிமொழி எடுத்தனர். ரகசியமாய் நடக்கப்போகிற விபரங்கள் பலிகொடுக்கப் பட இருக்கும் இருவருக்குச் சொல்லப்பட்ட பின்பு அந்த இருவரும்தெய்வம் ஏறியவர்கள்போல் ஒன்றாய் அலைந்தனர். அவர்கள் வீட்டாருக்கும் ஏதும் தெரியாது. கலவரம் தொடங்கிய அன்று கம்பு, கத்தி, தீப்பந்தத்துடன் கலவரத்தில் ஈடுபடும் கட்டுமஸ்தான உடல் உள்ளவர்களுக்கு நம் சனங்கள் என்று அடையாளம் அறிவதற்காய் எல்லோருக்கும் வண்ணானிடம் நீலம் போட்டுத் துவைக்கப்பட்ட புதிய வேட்டிகள் கொண்டுவந்து அவற்றைச் சிறுசிறு துண்டுகளாய் கிழித்து அடையாளம் கட்டிக் கொள்வது கலவரங்கள் நடக்கும் போது வழக்கம்.  இப்போது அப்படி எல்லோருக்கும் அடையாளத்துணி கட்டியவர்கள் கொலை செய்யப்படப் போகும் இந்த இருமனிதர்கள்தாம்.

கலவரம் நடந்தது பற்றி பல தாக்கலைகள் வெள்ளைக்கார நீதிபதியான ஆர்பத்நாட்டின் நீதிமன்றத்தில் பாதுகாக்கப்பட்டதால் கொலையைப்பற்றி ஆய்வாளர் இப்படிஎழுதினார்.

கத்தியோ, இரும்பு வஸ்துகளோ பயன்படுத்தாமல் சொந்த சாதியினரே நெல்லிமரத்தின்கீழ் இருவரையும் கைகாலைக் கட்டி வைத்துப் பலர்சேர்ந்து தத்தம் கைகளால் ஓங்கிஓங்கி மிக அதிகமான பலத்துடன் அடித்தனர். ஒவ்வொரு முறை அடிக்கும்போதும் ஏதேனும் குரல் வருகிறதா என்று கவனித்துப் பார்த்தபோது இருவரும் எந்த ஒலியும் எழுப்பவில்லை. இறுதியாய் குப்புறப்போட்டுப் புளியமரக்கிளைகளால் அடித்தவுடன் இருவரும் இறந்திருக்க வேண்டும். ஒருவனின் கண்மட்டும் வெளியே பிதுங்கி  இரத்தம் வடிந்திருந்தது. எந்த ஒலியும் வெளிப்படாத அளவு எதிர்சாதி மேல் குரோதமும் வன்மமும்  அவ்விருவரையும் ஆக்கிரமித்திருந்தது. அவர்கள் சம்மதத்துடன் அடித்துக் கொன்ற இடம் எதிரிச் சாதியான கட்டையன் சமூகத்தவர்கள் வாழும் பகுதி என்பதை கட்டையன் சமூகத்தவர்கள் மறுநாள் காலையில் கண்டனர். பிரிட்டிஷ் உயர்போலீஸ் அதிகாரி ஒருவர் குதிரை பூட்டிய ஜட்கா வண்டியில் வந்து வழக்கமாய் சாதுவானவர்களானாலும் ஏதோ கோபத்தால் கட்டையன் சமூகத்தவர் கொண்டைகட்டி சமூகத்திலிருந்து இருவரைக் கொன்றிருக்கிறார்கள் என்ற ஆராய்ந்து பார்க்காத தன் ஐயத்தை முடிவாய் எழுதி வைத்தார்.

இதுபோல் நிறைய இடைவெளிகளும் யூகங்களும் கொடூரமும் நிறைந்த கதையைப் பிற்காலத்தில் யாரும் நினைவில் கொள்ளவில்லை என்பது பொதுவாய் மக்களின் ஞாபக மறதியைச் சுட்டுவதோடு அவர்களின் முட்டாள் தனத்தையும் சுட்டுகிறதென்று மத்திய வயதைக் கடந்த அந்த ஆய்வாளர் தனது முடிவைத் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>