தமிழவன் படைப்புக் கலை

சிற்றேடு இதழில் பிரசுரம்மானது

தமிழவன் படைப்புக் கலை

கி. நாச்சிமுத்து

2000 – இல் நாகர்கோயிலில் நடைபெற்ற இலக்கியத் திருவிழா சிறப்பு மலரில் பேராசிரியர் கி. நாச்சிமுத்து எழுதிய கட்டுரை. நாச்சிமுத்து எப்போதும் தற்கால இலக்கியத்தில் ஈடுபாட்டுடன் உள்ளார் என்பதைக் காட்டும் கட்டுரை. மலரிலிருந்து எடுத்து   அனுப்பிய முருகனுக்கு நன்றி

முதன்முதலாகக் கல்வியறிவு பெறும் வாய்ப்பைப் பெற்ற சமூகங்களின் முதல் தலைமுறையிலிருந்து பல எழுத்தாளர்கள் தோன்றியிருப்பதும் அதன்வழி தமிழ் எழுத்திலக்கியத்தில் இதுவரை காணாத பல புதிய சமூக வட்டாரங்களின் வாசனையுடைய இலக்கியப் படைப்புகள் தோன்றி இருப்பதும் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தின் சிறப்பியல்களில் ஒன்றாகும்.

அத்தோடு தம்முடைய அகன்ற இலக்கிய, தத்துவப்பயிற்சி, பன்மொழி அறிவு, புலம்பெயர்ந்து வாழும் அனுபவம் இவற்றோடு சொல்புதிது சுவைபுதிது என்று புதிது புதிதாக இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்களின் புனைவுகளும் இக்காலத் தமிழ்இலக்கியத்தை வளப்படுத்தியிருக்கின்றன. வளப்படுத்தி வருகின்றன.

தமிழவன் ஆளுமை

இதற்கு ஓர் எடுத்துக்காட்டு ‘தமிழவன்’ என்ற எழுத்தாளரும் அவர் படைப்புகளும் என்று சொல்லலாம். தமிழவன் ஒரு படைப்பாளியாக மட்டுமல்லாமல் ஒரு திறனாய்வாளராகவும் பல்துறை சார்ந்த கல்வித்துறை ஆராய்ச்சியாளராகவும் சிற்றிதழ் வட்டத்தில் இருந்து செயல்படும் இதழாளராகவும் இலக்கியப் பயிற்றாசிரியராகவும் இருப்பது அவருடைய ஆளுமையின் வீச்சை உயர்த்திப் பிடிக்கிறது. அவருடைய மொத்த ஆளுமையை மதிப்பீடு செய்வது என்பது பெரிய பணியாகும். அதற்குரிய காலமும் இடமும் போதாமையால் அவர் படைப்புகளில் மிக அண்மையில் வந்த ‘ஜி.கே. எழுதிய மர்ம நாவல்’ என்ற நாவலை அடித்தளமாகக் கொண்டு அவர் இலக்கியத் திறனை மதிப்பிட முயல்கிறேன்.

சிறப்புப் பண்புகள்

இந்த இடத்தில் திரு. தமிழவன் அவர்களுக்கும் எனக்கும் இருக்கும் நெருக்கத்தைப் பற்றியும் சொல்லிக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. நானும் அவரும் பேராசிரியர் வ.ஐ.சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் வளர்ந்த கேரளத் தமிழ் ஆராய்ச்சிப் பள்ளியைச் சேர்ந்தவர்கள். அவர் நான் கற்றுப் பணியாற்றும் கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் எனக்கு ஒரு ஆண்டு மூத்தவராகப் படித்தவர் (1966 – 68). நானும் அவரும் ஓராண்டு நெருங்கிப் பழகியிருக்கிறோம். அவர் அறிவியல் படித்துவிட்டுத் தமிழுக்கு வந்தவர். அதனால் ஒரு இயல்பான துருவிப் பார்க்கும் மனம், புதுமை தேடும் நாட்டம், பரந்துபட்ட செய்திகளுக்குப் பின்புலமாக இருக்கும் கொள்கை அல்லது தத்துவங்களைத் தேடும் நுண்மாண் நுழைபுலம் இவைகளைப் பெற்றிருந்தார். அதற்கும் மேலாகத் தன் கல்வி, அறிவு, பட்டறிவு இவற்றை நமத்துப் பழசுபட்டுப் போகாமல் வைத்துக் கொள்வதில் மிகுந்த அக்கறை காட்டுபவராக இருந்தார். அதனால் இவர் எப்போதும் சமகால நிகழ்வுகள் வளர்ச்சிகள் இவற்றைக் கூர்ந்து நோக்கி அவற்றை உள்வாங்கித் தானும் தன்னைச் சார்ந்தவர்களும் அவை பற்றிய உணர்வு உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவராகவும் இருந்தார். அவர் அன்றே தீவிரமாக வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். புதிய இதழ்கள் தரமான இலக்கியப் படைப்புகள் இவற்றை உடனுக்குடன் கவனித்து அவைகளை வாசிக்கவும்  அவை பற்றி விவாதிக்கவும் பெரு விருப்புக் கொண்டிருந்தார். அதனால் இயல்பாகவே  அவர் இக்கால  இலக்கியத்தைத் தன் ஆய்வுப் பொருளாக அன்று எடுத்துக் கொண்டார். அவர் அன்று முடியரசன் கவிதைகளை எடுத்துத் திறனாய்வு செய்து முதுகலை ஆய்வேடு சமர்ப்பித்தார்.

தொல்லிலக்கியம் நாட்டுப்புறப் பண்பாடு இவற்றில் கவனம் செலுத்தி வந்தாலும் தற்கால இலக்கியத்தைப் பற்றியும் ஆரோக்கியமான கொள்கைகளைக் கொண்டிருந்ததனாலேயே இவையெல்லாம் இயன்றது என்பதையும் இங்குச் சொல்லவேண்டும்.

இக்கால  இலக்கியம் பற்றிய இவர் கவனம் படைப்பிலக்கியம் செய்வதிலும் திறனாய்வதிலும் சென்றது. இவர் ஆசிரியராக இருந்த காலத்தில் பாளையங்கோட்டையில் தன்னிடம் பயின்ற மாணவர்களிடையே இலக்கிய உணர்வு வளரவும் வளர்க்கவும் காரணராக இருந்தார். நான் மாணவனாக இருந்த காலத்தில் என்னுடனும் என் நண்பர் ஈழத்துச் சத்தியமூர்த்தியுடனும் எங்களுக்கிருந்த இலக்கிய நாட்டம் அறிவு இவைசார்ந்த ஒரு நட்புறவையும் ஒரு மதிப்பையும் எங்களிடம் காட்டிவந்தார். அதில் குறிப்பாக வயதில் இளையவனாகிய என்னைப் பொறுத்தவரை அவர் காட்டிய அன்பும் மரியாதையும், வயதையும் மீறியதாக அமைந்திருந்தது. இதன்காரணமாகவே அவரும் அவரையொத்த இளைய நண்பர்களும் எழுதிய புதுக்கவிதைத் தொகுப்பாகிய ‘ஆக்டோபஸும் நீர்ப்பூவும்’ என்ற நூலுக்கு இளையவராகிய என்னைக் கொண்டு முன்னுரை எழுத வைத்தார்.

பின்னர் அவர் திருமணத்தை நடத்துவதற்குத் துணைநின்றபோது அதுவும் ஒரு இலக்கிய உறவிற்கான முன்னுரையாக அமைந்தது என்பதையும் நினைத்துப் பார்க்கிறேன்.

படைப்பாளி

குமரி மாவட்டத்து மணலிக்கரையில் பிறந்த தமிழவன் இயற்பெயர் கார்லோஸ் என்பது சிலருக்காவது தெரியாது என்று நினைக்கிறேன். அவர் கேரளத்தில் தமிழ்ப் படித்துக் கன்னட நாட்டில் சுமார் முப்பது ஆண்டுகளாகப் பணியாற்றுவதால் மலையாளம், கன்னடம் என்ற இருமொழிகளையும் கற்று மொழிபெயர்ப்புகள் செய்திருக்கிறார். கல்வித் துறையில் அவர் நாட்டுப்புறவியலில் நாட்டம் கொண்டவர். நாட்டுப்புறவியல், இலக்கியத் திறனாய்வு, மொழிபெயர்ப்பு என்ற துறைகளிலே மட்டுமின்றிப் படைப்பிலக்கியத் துறையில் கவிதை, சிறுகதை, புதினம் என்ற மூன்று துறைகளிலும் படைப்பாக்கம் செய்து வருகிறார். அதிலும் புதினத் துறையில் அவருடைய பரிசோதனைப் படைப்புக்கள் எல்லோர் கவனத்தையும் பெற்றனவாக இருக்கின்றன.

இவர் இதுவரை பதினைந்து நூல்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் திறனாய்வு நூல்களாக ஏழும் பிறவகையைச் சேர்ந்தனவாக ஏழும் ஒன்று மொழிபெயர்ப்புமாக அமைகின்றன. அவை:

 1. இருபதில் கவிதை
 2. புதுக்கவிதைகள்: நாலு கட்டுரைகள்
 3. ஸ்ட்ரச்சுரலிசம்
 4. படைப்பும் படைப்பாளியும்
 5. அமைப்பியலும் தமிழ் இலக்கியமும்
 6. தமிழும் குறியியலும்
 7. தமிழ்க் கவிதையும் மொழிதல் கோட்பாடும்
 8. ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்
 9. சரித்திரத்தில் படிந்த நிழல்கள்
 10. ஜி.கே. எழுதிய மர்ம நாவல்
 11. தமிழவன் கதைகள்
 12. அவஸ்தை(மொ.பெ.)
 13. நாட்டுப்புற நம்பிக்கைகள்
 14. மலையாள நாட்டுப்புறப் பாடல்கள்(மொ.பெ.)
 15. நாட்டுப்புற நம்பிக்கைகள்

என்பவையாகும்.

நாட்டுப்புறவியல் ஆய்வு

இவர் தமிழ், கன்னட நாட்டுப்புறக் கதைகளை ஒப்பாய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அவர் வழிகாட்டலில் பல மாணவர்கள் ஆய்வு செய்து முனைவர், எம்.பில். பட்டங்கள் பெற்றுள்ளனர். தன் கல்விப்பணியில் அவர் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் உள்ள பல பல்கலைக்கழகங்களுக்கும் சென்று சொற்பொழிவும் ஆராய்ச்சி கட்டுரைகளும் படித்துள்ளார். அவற்றில் பின்லாந்து நாட்டில் 1995இல் நடந்த நாட்டுப்புறவியல் கோடைப் பணிப் பட்டறையிலும் 1998இல் ஜெர்மனியில் நடந்த நாட்டுப்புறவியல் மாநாட்டிலும் கலந்துகொண்டு கட்டுரை படித்ததைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். அத்துடன் ஆங்கிலத்தில் இக்கால இலக்கியம், ஒப்பிலக்கியம், நாட்டுப்புறவியல் தொடர்பாக இந்திய ஆராய்ச்சி இதழ்களில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர், ‘இந்திய நாட்டுப்புறவியல் கழகம்’, அமெரிக்காவிலுள்ள தற்கால மொழிச்சங்கம் போன்றவற்றின் உறுப்பினராக உள்ளார். தேசியப் புத்தக நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவிலும், ‘இன்று’ ‘வித்தியாசம்’, ‘மேலும்’ – போன்ற இதழ்களின் சிறப்பாசிரியராகவும் இருந்துள்ளார். அவர் இப்போது சாகித்திய அகாதெமியின் மொழிபெயர்ப்புத் துறையின் இயக்குநராகவும் பணியாற்றுகிறார்.

நாவல்கள்

தமிழவன் நாவல்கள் மூன்றுமே பரிசோதனை அடிப்படையில் எழுந்தவை. அவடைய முதல் நாவல் ‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’ என்பது மாயக்காட்சி நடப்பியல் வகையைச் சேர்ந்தது. இவ்வகையை உருவாக்கியவர்களில் சிறப்பாகச் சொல்லப்படும் 1982இல் நோபல் பரிசு பெற்ற இலத்தீன் அமெரிக்க எழுத்தாளரான கப்ரியேல் கார்சியா மார்க்யொஸ் (1928-) பாணியைப் பின்பற்றி எழுதுவதாகத் தமிழவன் சொல்கிறார். நாவல் என்பது கதை சொல்வதற்கான உத்தி என்று கொண்டு எழுந்த சோதனை முயற்சிகளில் ஒன்றுதான் இவ்வகைப் படைப்புக்கள். மாயக்காட்சியை உருவாக்கப் பலவித மிகைப்புனைவுகளில் ஈடுபடுகிறார்கள் எழுத்தாளர்கள். சல்மான் ருஷ்டியின் படைப்புக்கள் இதற்குப் பிற எடுத்துக்காட்டாக அமையும்.

மாயக்காட்சியில் பலவகை உண்டு. இத்தகைய இலக்கிய முயற்சிகள் நம் இந்திய இலக்கியத்திற்குப் புதிதல்ல. நமது தொல்புராணக் கதைகள், நாட்டுப்புறக்கதைகள், கதாசரித்திரசாகரம், கலிங்கத்துப்பரணி போன்றவற்றில் இவற்றைப் பார்க்கலாம். பிரஞ்சில் எழுதிய போலிஷ் எழுத்தாளரான யானபோடோட்ஸ்கியின் (1761 – 1815). சாரகோசாவில் கிடைத்த சுவடி என்ற நாவல் கதைக்குள் கதையாக ஆயிரத்தொரு இரவுகள், விக்கிரமாதித்தன் கதைகள் போன்று அமைகிறது. இது வேறு ஒரு வகை.

இத்தகைய கதைகளில் வழக்கமான நேர்வரிசைக் கதைசொல்லும் முறையை விடுத்துக் கதையைச் சிதைத்துக் கால இட ஒருமைப்பாடுகளை மீறிய ஒரு கதை உலகம் படைக்கப்படும். மேலும் வழக்கமான நடப்பியல், தர்க்கம், மொழிக் குறியீடு எல்லாமே தாறுமாறாக்கப்படுகின்றன. அதற்காகப் படைப்பாளி தனக்குத்தெரிந்த கதைகூறும் முறைகள், பாத்திரங்கள், மொழிநடை போன்றவற்றைப் போல செய்து ஒரு புரிந்து கொள்ளும் பொருள் தளத்தை  உருவாக்க முயல்கிறான். இங்கே இது வேறு ஒரு இலக்கியப் பயனைத் தரும் இலக்கிய உத்தியாகவும் அமைகிறது. அதனால் அத்தகைய படைப்புக்கள் தவிர்க்க முடியாதபடி முன்மாதிரிகளின் போலி நையாண்டிகளாக அமைந்துதுவிடுகின்றன. அது கதை, பாத்திரப் படைப்பு, மொழிநடை என்று பல தளங்களில் அமைகின்றது. எடுத்துக்காட்டாகப் பழைய புராணக் கதைகளிலும் நாட்டுக் கதைமரபிலும் வரும் பாத்திரங்களின் பிறப்பு பாத்திர வருணனை போன்ற பொருட்கூறுகள் மட்டுமின்றி அவற்றின் மொழியாட்சி வருணனை மரபுகள் போன்றவற்றின் போலி நையாண்டிகளாக அமைகின்றன. இன்னும் சமகால வரலாற்று நாவல்களின் பண்புகளையும் இதுபோலவே போலச் செய்யும் முயற்சியும் காணப்படுகிறது. இது ஒரு வகையில் மாயக்காட்சி நடப்பியலின் அந்நியத் தனத்தை, மருட்சியை, அதிர்ச்சியை மட்டுப்படுத்தி நம்மிடம் நமக்குத் தெரிந்த பழங்கதை நாவல் வடிவம் மூலம் ஒரு நெருக்கத்தை உண்டுபண்ணி நமக்குப் பொருள்தர உதவுகிறது என்று சொல்லலாம். நாட்டுக்கதை, தெருக்கூத்து இவற்றில் வரும் உத்திகள் உருவங்கள் எல்லாம் இந்த எழுத்தாளர்களுக்குத் துணைக்கு வருகின்றன. போலி நையாண்டிக்குரிய இன்னொரு தன்மையாகிய அங்கதச் சுவை என்பது இன்னொரு தளத்தில் வெளிப்படுவது.

பரணி நூல்களில் வரும் காளி, கூளிகள் உலகு என்பதும் இத்தகைய மாயக்காட்சிகளைப் படைத்துத் தர இடைக்காலப் புலவனுக்கு உதவின.

மாயக்காட்சி நடப்பியல் மிகைப்புனைவியல் போலி நையாண்டிகளாக அமையும்போது அது அழித்தெழுதும் பண்பையும் பெற்றுவிடுகிறது. இதைத் தான் ஆங்கிலத்தில் Palimpsest history என்கிறார்கள். இது இதுவரை அமுக்கி அல்லது அடக்கி வைக்கப்பட்ட மக்களின் வரலாறுகளைச் சொல்வதற்குரிய வாய்ப்பாகவும் அமைந்துவிடுகிறது. கலிங்கத்துப்பரணியில் வரும் குள்ளக் கூளிகள் கள்ளக்கூளிகள் திருவிளையாடற்புராணத்தில் வரும் தடம்பூதங்கள் எல்லாம் சமகால மனிதனின் மாயக்காட்சி உருவங்கள் தானே. மேலும் கலிங்கத்துப்பரணியில் வரும் கள்ளக்கூளி இமயமலை சென்று ஒரு முனிவர் அருளால் இமயமலையில் எழுதியிருந்த சோழர் வரலாற்றை எல்லாம் படித்து வந்து இராச பாரம்பரியமாக மற்றவர்களுக்குச் சொல்லும்போது அது ஒரு அழித்தெழுதும் உத்தி என்று பல சிக்கல்களுக்குத் தீர்வு கிடைக்கக்கூடும்.

ஒதுக்கப்பட்டவர் வரலாறு

‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’ – நாவல் குமரி மாவட்டத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த சமூகங்களின் வரலாறாக அமைகிறது. அந்நாவல் தமிழவனின் முதல் முயற்சி. ஆகையால் அங்கே உடைபடும் தர்க்கங்களும் மொழி அமைப்புக்களும் உருவாக்கும் மிகைப்புனைவு, உருவகம், படிமம் சார்ந்த சொல்லாட்சிகள் ஒருவிதப் புதுமையை – அதாவது இரஷ்ய வடிவவியலாளர் கருத்தில் சொல்வதாக இருந்தால் ஒரு அசாதாரணத் தனத்தையும் சேய்மைப்படுத்தலையும் செய்கின்றன. மாதிரிக்கு ஒரு பகுதி:

“வம்ச சரித்திரம் தன் மனதின் தோலைக் கிழித்து உட்புகுந்த அத்தகைய நாட்களில், ஒரு ஞாயிற்றுக்கிழமை சுவடிகளைப் படித்துக் கொண்டிருந்த தாத்தாவின் கண்முன்பு, ஒரு வார்த்தை ஊஞ்சல்போட ஆரம்பித்தது. அந்த வார்த்தைக்கு விரைவில் ஒரு தலையும் வாலும் முளைத்தன. தலை ஒரு பக்கமாகவும் வால் அதற்கு எதிரான பக்கமாகவும் வளர்ந்தன. தன்னை வார்த்தை மிரட்டத் தொடங்குமென்று கருதிய தாத்தா அதனைப்பிடித்துக் கொல்ல நினைத்துக் கையை நீட்டும்போது அங்கு ஜான் நின்று கொண்டிருந்தான்”. பக். 3.

ஏற்கெனவே சொல்லப்பட்ட மனிதர்கள் நாவலில் பயன்படுத்திய உத்திகளுடன் வேறு சிலவற்றையும் ‘சரித்திரத்தில் படிந்த நிழல்கள்’ புதினத்தில் பயன்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. மொழி ஆட்சியில் தர்க்கம், உடைபடும் படிமங்கள் முதலியவற்றின் ஆட்சி குறைவு, கூற்றுக்கள் போன்ற நாடகப் பாணி உத்திகள் உள்ளன. இந்நாவலைப் பற்றி அதிகம் கவனிக்காமல் மிக அண்மையில்வெளிவந்துள்ள ‘ஜி.கே. எழுதிய மர்ம நாவல்’ பற்றிச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜி.கே. எழுதிய மர்ம நாவல் சற்று வேறுபட்டதாக இருக்கிறது. கதை நேர்க்கோட்டுப் பின்னலில் செல்கிறது. கதைக்குப் புறக்கதையாகக் கதை எழுதிய ஜி.கே. பற்றிய துப்பறியும் ஆராய்ச்சியும் இணைகோட்டு அமைப்பில் செல்கிறது. 1966 கணையாழி இதழில் வெளிவந்த ‘நகுபோலியன்’ என்பவர் எழுதிய ‘மழநாட்டு மகுடம்’ (கணையாழி கதைகள் – முதல் தொகுதி – 1985) என்ற போலி நையாண்டிக் கதை எனக்கு நினைவுக்கு வந்தது. கதை சொல்லும் முறையும் மொழிநடையும் கல்கியின் வரலாற்றுப் பாணியையும் மர்ம நாவல் பாணியையும் நையாண்டிப் போலி செய்கிறது. நா.பா. போன்றவர்கள் புதினங்களின் எதிர் ஒலியையும் தத்துவ விசாரங்கள் நடக்கும் பகுதியில் பார்க்கலாம்.

கதைத்தன்மை

புதினம் துப்பறியும் வரலாற்றுப் புதின வடிவில் அமைகிறது. சுருங்கை என்ற நகர நாட்டில் கதை நிகழ்கிறது. இது வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரத்தில் வரும் கற்பனை நாடு போன்றது. இதில் குவலயபுரத்திலிருந்து புரட்சிகர புத்த மத அறிஞர் தேவமித்திரர் சுருங்கை நாட்டில் நடக்கவிருக்கும் தீங்குகளைத் தடுப்பதற்காக வருகிறார். இவருக்குத் துணையாகப் பெரும்படைவீரர் அரையநாதர் மெய்க்காவலர் போல உடன் வருகிறார். தேவமித்திரர் அங்கே சரித்திரக்காரன் யுனசேனன், யவனச் சிற்பி துபல், அவன் சீடன் சராசின், கப்பில்லன் என்ற சார்வாகன், உரைகாரனான புவனநந்தி, சீங்சோது என்ற மங்கோலியன் போன்றவர்களைச் சந்திக்கிறார். இதில் அரையநாதர் உடனிருந்து உதவும் பொறுப்பில் இருக்கிறார். கதைப்பின்னலில் முக்கிய மையம் அரையநாதர் மத அடிப்படைவாதியாக இறுதியில் தோன்றும் சூனியதத்தன் மாறுவேடத்தில் இருக்கிறான். அவன் யார் என்று அறியும்போது நமக்கு அதிர்ச்சிதான் மிஞ்சுகிறது. துப்பறியும் முறையில் கதை செல்வதால் ஒரு விறுவிறுப்பு இருக்கவே செய்கிறது. ஆனால் அது வாசகனை இழுத்துப் பிடிக்கும் ஒரு வலை, அவ்வளவே. இன்னும் மகேந்திரப்பல்லவன், வச்சிரபாகு, நீலகேசி, நாகநந்தி போன்ற ஆள்மாறாட்டச் செய்திகளும் உள்ளன. சூரியக் கோயில், கிரந்தக் கோயில் போன்றவற்றின் அமைப்புக்கள் வரைபடத்துடன் விளக்கப்படுகின்றன. வட்டவடிவப்படிகள், மருபூமி சாவு போன்றவை எல்லாம் ஒருவித இரகசியக் குறியீடுகள் என்று கூறப்படுகின்றன. இதில் கிரேக்கக் கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, புத்தம், சமணம், சார்வாகம் போன்ற மதக் கருத்துக்கள், இலக்கணச் சிந்தனைகள் பலவும் விளக்கமாகப் பேசப்படுகின்றன.

சுரங்கம், ஓவியம், சிற்பம், கட்டிடம் இவை பற்றிய வருணனைகள் வரலாற்றுப் புதினங்களில் காணப்படுவது போலவே இதிலும் காணப்படுகின்றன. நோவா கப்பலைப் போன்ற வருணனை (210)யில் இடம்பெறும் மனித இனப்பெருக்கத்தை மேம்படுத்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண் பெண் பல்துறை வித்தகர்கள் பற்றிய கருத்து, ‘யூஜினிக்ஸ்’ எனப்படும் இன ஆக்க மேம்பாட்டியல் சிந்தனைகளை வெளியிடுகின்றது.

யோகச்சீட்டுப் பற்றி கருத்து தமிழ்நாட்டைப் பிடித்தாட்டும் பரிசுச் சீட்டு மோகத்தை வேறு சூழலில் சொல்லிப் பார்க்கிறது. மொத்தத்தில் புதினம் முழுவதுமே நாமும் நம்நாடும் கடந்துவந்த மதவரலாற்றை மீண்டும் எழுதிப் பார்ப்பதாக அமைந்து இன்றைய மத அடிப்படைவாதத்தின் போலி நையாண்டியாக அமைகிறது.

நடப்பியல் தர்க்கம், உடைபடும் படிம நடையாட்சி குறைவு. யுனசேனன் வரலாற்றுக்குரலில் பேசும் ஓரிரு இடங்கள் இதற்கு விதிவிலக்கு. (பக். 41). இதன் காரணமாக நாவல் சாதாரண வாசகனுக்கும் பொருள்புரியும் தன்மை பெற்றிருக்கிறது. சீங்சோது பற்றிய வருணனையில் கூட அது மாயாஜாலம் என்றே சொல்லப்படுகிறது.

“உடனே அந்த மங்கோலிய முகம் கொண்டவன் எழுந்தான். தன் பெயர் சீங்சோது என்றான். அவனது தாய் மங்கோலியப் பெண். அவள் மூலம் ஜாலவித்தை கற்றதாய்க் கூறித் திடீரென அவனது விரலை ஒரு செடியைப் பிடுங்குவது போல் பிடுங்கித் தேவமித்திரருக்கு ஒரு துணியில் வைத்துக் கொடுத்தான். எல்லோரும் ஆச்சரியப்பட்டுச் சிரித்தபோது வாய்க்குள் இடது கையை மெதுமெதுவாகக் கஷ்டப்பட்டுச் செலுத்தித் திடீரெனத் தனது குதம் வழி விரல்களை ஆட்டிக் காட்டினான்”. (பக். 148).

அறிவுப் பயிற்சி அரங்கு

ஆனால் இவற்றில் வரும் கட்டிடக்கலை, தத்துவ நுட்பங்கள் போன்றவை ஒரு அறிவுத் தன்மையை மிகுவிக்கின்றன. தமிழவன் இதற்காக நிறைய உழைத்துள்ளார். நிறையப் படித்துச் செய்திகளைத் திரட்டியுள்ளார். புதினம் என்பது வெறும் கற்பனை வயப்பட்ட புனைவு என்பதற்கு அப்பாற்பட்டு ஒரு அறிவுப் பயிற்சியரங்கு என்பதை இது காட்டுகிறது. இதனாலேயே இதை ஒரு அறிவுப்புதினம் என அழைக்கலாம். இது பற்றி முன்னுரையில் இந்திரன் சொல்வது சரிதான்.

“தமிழவன் வரலாற்றில் காணக்கிடைக்கும் பெயர்கள், தகவல்கள், ஆகியவற்றை அக்கறையுடன் சேகரித்துப் படைபாளிக்கே உரித்தான கற்பனையின் நீரை ஊற்றிப் பிசைந்து தனது புனைகதையைக் கட்டி எழுப்புகிறபோது அதனூடாகச் சில விழுமியங்கள், விமரிசனத்துக்குள்ளாகிற சிலவற்றை உயர்த்திப் பிடிக்கிற செயல்பாடும் நிறைவேறிவிடுகிறது”. (முன்னுரை. பக். 4).

துப்பறியும் வரலாற்றுப் புதினமாகிய இதை யார் எழுதியது என்ற கேள்வியை எழுப்பித் துப்பறியும் வேலையில் வாசகனை ஈடுபடுத்துவது இந்தப் புதினத்தின் இன்னொரு தளம். இதை இடையிடையே குறிப்புக்கள் என்ற முறையில் தொடர்ச்சியாக அமைந்துள்ள இடைச்செருகல் பகுதிகளில் காணலாம். இங்கே வாசகன் வரலாற்றுக் காலத்திலிருந்து இடையிடையே தற்காலத்திற்குள் வந்து விழுந்து எழுகிறான்.

இந்திரன் இவ்வாறு எழுதுகிற பகுதி நம் மதிப்பீட்டை ஒட்டியே அமைகிறது.

“கிரந்தக் கோயிலும் சுருங்கையின் மர்மப்பாதைகளும், அரசர்களும் புத்தபிட்சுகளும் நிறைந்த ஒரு பழங்காலத்தில் கதை நிகழ்கிறதென்றால், அகச்சான்றுகளும், புறச்சான்றுகளும் தேடி அலையும் ஆய்வாளர்கள் மலிந்த நிகழ்காலத்தில் ‘குறிப்புக்கள்’ இடம்பெறுகின்றன”.

மரங்கள் மனித முகங்கள் போல் தோற்றம் கொள்வதிலும், மனிதர்கள் சிலரின் மூக்கறுபட்டும், கண்கள் அறுபட்டுத் தொங்கியும் காணப்படும் கதையுலகில் தன்னை இழந்து சஞ்சரிக்கும் வாசகனை வேறொரு தளத்திற்குக் கொண்டுவந்து சஞ்சரிக்க வைக்கிறார். எல்லாம் விளையாட்டுத் தனமாகத்தான்!

“இங்குக் கதைச்சொல்லி என்பவர், எல்லாவற்றிற்கும் தன்னிடம் விடை வைத்திருக்கிற ஒருவர் என்கிற நிலையிலிருந்து நழுவி நிற்கிறார். தன்னை ஒரு பலவீனன் என்று வர்ணித்துக் கொள்ளும் அவர் இப்பன்முகப் பார்வைகளை வாசகன் முன் வைப்பதின் மூலமாக, முரண்கள் குறித்த முடிவுகளை வாசகரே எடுத்துக் கொள்ளுமாறு விட்டுவிடுகிறார்”. (முன்னுரை. பக். 5).

கதைக்குள் கதைபோன்று அமையும் இடைக்குறிப்புகள் இன்றைய இலக்கிய ஆராய்ச்சியை நையாண்டி செய்யும் பாணியில் இருக்கிறது. இரண்டையும் இணையாகப் படித்துக் கொண்டுகூட்டு முறையில் பொருள் கொள்ள வேண்டும்.

இந்த நாவல் இன்றைய மதக் கலவரங்களை வைத்து அழித்தெழுதும் வரலாறாகப் புது வரலாற்றைப் பழம் வரலாற்றின் மாதிரியில் எழுதியிருக்கிறது. இதைப் படித்தபோது வரலாற்று நாவல்கள் கூட ஒருவகை மிகைப்புனைவு வகைக் காட்சியைச் சேர்ந்த மாயக்காட்சி நடப்பியலைத் தான் சொல்கின்றன என்று தோன்றுகிறது. அதனாலேயே அவை விரும்பி இன்றும் படிக்கப் படுகின்றன என்றும் தோன்றுகிறது.

கலிங்கத்துப்பரணியில் களவாடிய பேய் இமயத்தில் சென்று முனிவர் உதவியால் இமயத்தில் எழுதிய வரலாற்றைப் படித்து இராசபாரம்பரியம் கூறுவதாக ஜெயங்கொண்டார் அமைக்கும்போது அவருக்கும் இந்த அழித்தெழுதும் உத்தி தெரிந்திருந்ததா என்று வியக்காமல் இருக்க முடியவில்லை. பேய் கூறும் வரலாற்றைக் குறிப்பிடும் கலிங்கத்துப்பரணி ஆசிரியர் போல ஜி.கே.யைக் கனவுகாணுகிறார் தமிழவன்.

தமிழவன் முயற்சி

பொதுவாக இந்தப் புதினத்தில் தமிழவன் என்ற கதைசொல்லியிடம் ஒருவித முதிர்ச்சி தென்படுகிறது போலத் தோன்றுகிறது. இது தமிழில் முக்கியக் கணிப்பைப் பெறும் என்றே தோன்றுகிறது.

அழித்தெழுதும் வகையில் இன்னொன்று பழைய புராணம், நாடோடிக் கதை இவற்றில் வரும் பாத்திரங்களை எடுத்து மறுபடைப்புச் செய்யும் முறை, மாய நடப்பியல் முறையில் எழுதும் இத்தகைய படைப்புகளைவிட இது கொஞ்சம் பரவலானது. காண்டேகரின் ‘யயாதி’ எம்.டி.வாசுதேவன் நாயரின் ‘இரண்டாமூழம்’ (வீமன் கதை) பெரும்படவம் ஸ்ரீதரனின் ‘ஒரு சங்கீதம் போல’ (சிற்பி மொழிபெயர்ப்பு) ‘தொஸ்தோவ்ஸ்கி’ போன்ற புதினங்கள் குறிப்பிடத் தக்கவை. வெ.ப.சு., புதுமைப்பித்தன், ச.து.சு.யோகி ஆகியோர் படைத்த ‘அகலிகை’யும் இவ்வகையைச் சேர்ந்ததே. தமிழவன் இம்முறையிலும் ஒரு புதினம் எழுதிப் பார்க்கலாம்.

இக்கட்டுரையில் தமிழவன் படைப்புக்களை முழுமையாக மதிப்பிட்டு அவருக்கு நியாயம் செய்ததாகச் சொல்ல முடியாது. அவை விரிவான திறனாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை. எடுத்துக்காட்டாக, அவர் சிறுகதைகள் பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லை. காலம், இடமின்மையே, காரணம். பொதுநிலையில் இங்கு அவர் புதினப் படைப்புக்கள், குறிப்பாக அண்மையில் வந்த ‘ஜி.கே. எழுதிய மர்ம நாவல்’ என்ற புதினத்தின் பின்னணியில் அக்கறையோடு கவனிக்கப்பட்டிருக்கின்றது என்பதை மட்டும் சொல்லிக் கொண்டு அவர் வயதில் இளையவர் என்பதால் இன்னும் எழுத வேண்டியவை நிறைய இருக்கின்றன என்பதை அவருக்கு நினைவூட்டி அவருக்கு வாழ்த்துதலைச் சொல்லிக் கட்டுரையை நிறைவுசெய்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>