கோட்பாடு:தமிழ் மார்க்சியம்

கோட்பாடு:

தமிழ் மார்க்சியம்

பேரா. தமிழவன், இந்தியா

 

தமிழில் பொதுவுடைமை இயக்கம் மார்க்சியத்தை ஒரு வழிகாட்டுத் தத்துவமாக ஏற்றது. இடையில் மாவோயிசம் என்ற தத்துவம் வழி பிரிந்தது.

 

இதுபோல் மார்க்சியம் எங்கல்ஸின் மூலம் இன்னும் அதிக விரிவுபெற்றது. லெனின் கருத்துக்கள் பின்னர் இந்தத் தத்துவத்தோடு சேர்ந்து கொண்டன. இவ்வாறு தொடர்ந்து மார்க்சியம் புதுப்புது நாடுகளுக்குப் பரவும்போதும் அந்தந்த மண்ணுக்கும் மரபுக்கும் சூழலுக்கும் தக்கவிதமாய் விளக்கங்கள் தோன்றின. சிலர் வன்முறையம் ஒரு பாதைதான் என ஏற்றனர். வேறு சிலர் ஏற்கவில்லை.

 

மார்க்சியக் கருத்துக்கள் தமிழகத்திலும் இலங்கையில் ஈழத்தமிழர்கள் மத்தியிலும் பரவியபோது தமிழின் மரபுக்குள் வைத்துப் பல நூற்றாண்டுகள் வாசிக்கப்பட்ட இலக்கியங்கள் புதுவிளக்கங்கள் கண்டன. மார்க்சியம் என்று பிரிட்டிஷ் கம்யுனிஸ்டுகள் அவர்கள் தத்துவ – இலக்கியப் பாரம்பரியத்தை முன் வைத்துக் கண்ட விளக்கத்தை இந்தியாவிலும் பரப்பினார்கள். அதில் பொருளா தாரம் முக்கியமான அழுத்தம் பெற்றிருந்தது. அதனால் பொருளாதாரத் திட்டத்தைக் கம்யுனிஸ்ட் கட்சிகள் முக்கியமாக்கின. கட்சியில் தொழிலாளர் அமைப்புக்கள் முக்கியம் ஆயின. தொழிலாளர்கள் இருந்த பெருநகரங்களளில் கட்சி பரவியது. அதுபோல் இந்தியா போன்ற நாடுகளில் கிராமங்களும் விவசாயமும் தான் முக்கிய மான பொருளாதார மையங்கள் என்ற பார்வை தோன்றியவுடன் கம்யுனிஸ்டு கட்சி விவசாயத்தையும் விவசாயத் தொழிலாளர்களையும் மையமாகக் கொண்டு செயல்பட்டது.

 

இந்தியா போன்ற நாடுகள் வெறும் பொருளாதார சிந்தனாமுறையால் புரிந்துகொள்ள முடியாத நாடுகளாகும். தென்கிழக்காசியாவின் பூமிப்பரப்பில் மதங்கள், சாதிகள், இலக்கியங்கள், மற்றும் பண்பாட்டுக் கூறுகள், சரித்திரங்கள், பழக்கவழக்கங்கள் ஆண் பெண் வேறுபாடுகள் போன்றவை உள்ளன. இவற்றையெல்லாம் பொருளாதாரம் என்ற பார்வையால் விளக்கமுடியும் என்ற ஆரம்பகால மார்க்சிய விளக்கம் உலகம் முழுவதும் மெதுமெதுவாக மாறியது. மார்க்சியத்தைக் கற்ற கட்சித் தலைவர்களும் பல்கலைக்கழகப் போசிரியர்களும் தத்துவவாதிகளும் புதுப்புது முறைகளில் மார்க்சியத்தை விளக்க ஆரம்பித்தனர். சோவியத் யூனியன் சிதறாதிருந்தபோது அந்நாட்டின் தத்துவ விளக்கங்களும் சீனாவின் மாவோவின் தத்துவ விளக்கங்களும் அகில உலக அரங்கை ஆக்கிரமித்திருந்தன. சில நாடுகளில் இந்த இரு அணிகளின் சார்பில் கம்யுனிஸ்ட் கட்சிகள் பிரிந்து தம் விளக்கங்களைத் தத்தம் செயல்பாடுகளுக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டன. இந்தியாவிலும் அந்நிலை ஏற்பட்டது.

 

சோவியத் ரஷ்யாவிலும் லெனின் அவருக்கடுத்து வந்த ஸ்டாலின் ஆகியோரின் மார்க்சிய விளக்கங்களுக்குள் மாறுபாடுகள் இருந்தன. அதற்கேற்றாற் போல் அவர்கள் தத்தம் ஆட்சிகளை அமைத்தனர். அகில உலக உறவுகளை அமைவுப்படுத்தினர். ஸ்டாலின் செய்த நடவடிக்கைகளள் தவறு என்று பின்னால் வந்த பிரிஷ்னோவ் போன்றவர்கள் கருதினர். இந்தக் காலகட்டத்தில் அகில உலகமெங்கும் மார்க்சியம் பற்றிய விளக்கங்கள் மாறுபட்டன.

 

ஜெர்மனிநாட்டு பிராங்க்பர்ட் நகரின் பல்கலைக்கழகத்தில் இருந்த சிந்தனை யாளர்களும் தத்துவவாதிகளும் ஒரு குழுவை ஏற்படுத்தி மார்க்சீய ஆய்வுகளைப் புதுமுறையில் செய்தனர். ஏற்கனவே ஸ்டாலின் காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட சிந்தனைகள் அகில உலகம் முழுதும் சர்ச்சையை எழுப்பியிருந்த காலகட்டத்தில் இலக்கியம் பற்றியும் மார்க்சியத்தின் மையக்கருத்து என்ன என்பதிலும் இவர்கள் மாறுபட்டனர். அடார்னோ, ஹார்க்மேயர், ஹெர்பர்ட் மார்க்யுஸ் போன்ற முக்கிய மான சிந்தனையாள்கள் ஹிட்லர் ஜெர்மனியைக் கைப்பற்றி கம்யுனிஸ்டுகளை வதம் செய்ய ஆரம்பித்தபோது அமெரிக்காவுக்குத் தப்பியோடி பல்கலைக்கழகங் களிலும் ஆய்வு நிறுவனங்களிலும் தஞ்சம் புகுந்தனர். தப்ப முடியாமல் தற்கொலை செய்துகொண்ட வால்டர் பெஞ்சமினையும் நாம் மறக்கக்கூடாது.

 

நம் தமிழக மற்றும் இந்தியச்சூழலை வைத்துப் பார்க்கும்போது காலனியக் காலகட்டத்தில் பிரிட்டிஷார் பிரிட்டனில் பரப்பிய மார்க்சியத்தை அங்குப் படிக்கப்போன இந்தியர்கள் கற்று அதன்படி பெருந்தியாகங்கள் செய்து இந்தியாவில் பரப்பினர். இவர்கள் பிற்காலத்தில் வேறு விளக்கங்கள் மார்க்சியத்தில் ஏற்படப்போகின்றன என்பதை அறியாத தலைமுறையைச் சார்ந்தவர்களாவர். மேற்கு வங்காளத்தில் ஜோதிபாசு தமிழகத்தில் மணலி கந்தசாமி, போன்ற மதிப்புக்குரிய பலர் இந்தக் குழுவைச் சார்ந்தவர்களாவர். இவர்கள் மார்க்சியத்தைப் புத்தகமாகவும் அறிவாகவும் அதேநேரத்தில் தாங்கள் ஈடுபட்டிருந்த தொழிலாளி விவசாயி போராட்ட ஆயுதமாகவும் கண்டனர்.

 

பிராங்க்பர்ட் மார்க்சீயவாதிகள் இலக்கியத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். ஜெர்மனியில் பிறந்து அகில உலகப் புகழ்பெற்ற பெர்தோல்ட் பிரக்ட் என்ற நாடகாசிரியரும் கவிஞரும் விமர்சகருமான சிந்தனையாளர் வால்டர் பெஞ்சமினால் மிக அதிகம் புகழப்படுகிறார். ரஷ்யா மூலம் கார்க்கி போன்றவர்கள் தமிழுக்கு வந்தார்களேயன்றி பிரக்டைத் தமிழுக்கு 80களுக்குப் பிறகு கொண்டு வந்தவர்கள் கம்யுனிஸ்டுகள் அல்லர்; கலாச்சாரவாதிகளாவர். ஸ்டாலின் கால எதார்த்தவாதம் /  சோசலிச எதார்த்தவாதம் போன்றவைகள் ஜார்ஜ் லூக்காக்ஸின் சிந்தனைகளாகும். மார்க்சிய இலக்கிய விமரிசனத்தில் எதார்த்தவாதம் என்ற ஒரு மிகவும் குறுகலான உத்திமுறை எழுத்தை உலகப்புகழ்பெற வைத்ததற்கு ஜார்ஜ் லூக்காக்ஸ் என்ற படிப்பாளியும் அரசியல்வாதியுமான தத்துவவாதியே காரணம் என்பர் பலர். இவருடைய எழுத்துக்கு எதிராகப் புறப்பட்டவர் நாடக ஆசிரியரும் கவிஞருமான பெர்தோல்ட் பிரக்ட். பிரக்ட் எதார்த்தவாதத்திற்கு எதிராகப் போர்க் கொடி தூக்கினார். அப்போதிருந்த கம்யுனிஸ்டு நாடான கிழக்கு ஜெர்மனி பிரக்டைக் கொண்டாடியது. சோவியத் ரஷ்யாவிலிருந்து எதார்த்தவாதக் கோட்பாடும் கிழக்கு ஜெர்மனியிலிருந்து பிரக்ட் முன்வைத்த ஒரு நூதன இலக்கியக் கோட்பாடும் உலகமெங்கும் பரவின.

 

எழுபதுகளில் தமிழகத்தில் இலக்கியக் குழுக்கள் ‘தாமரை’ இதழின் தலைமையில் சோவியத் ரஷ்யாவை ஆதரித்தும் ‘செம்மலர்’ தலைமையில் சீனாவை ஆதரித்தும் செயல்பட்டனர். இளைஞர்களைக் கட்சி மாநாடு, எழுத்தாளர் முகாம் என்றெல்லாம் இவ்விரு அணியினர் வழிநடத்தினர். அப்போது மிகப்பெரிய தமிழ் இலக்கிய உலக நெருக்கடியாகப் புதுக்கவிதை விவாதம் நடந்தது. இந்த இரு அணியினரும் புதுக்கவிதையை அன்று ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

 

இதற்கு முன்பே 1935-வாக்கில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட முனைவர் பி.கே.கிருஷ்ணா மேல்நாட்டுப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து திரும்புகிறார். அவர் திராவிட இலக்கியக் கோட்பாடு ஒன்றை சிலப்பதிகாரம், மணிமேகலை, திருக்குறள், கபிலர்அகவல் போன்றன மூலம் உருவாக்குகிறார். இது தமிழர்களிடம் தொடரவில்லை. இவர் வேலூர் சிறையில் தமிழ்க் கம்யுனிஸ்ட் இளைஞர்களுக்கு வகுப்பும் எடுக்கிறார்.(கிருஷ்ணா எழுதிய நூல்.பிசுரம்:திராவிடப்பல்கலை.குப்பம்)

 

பிராங்க்பர்ட் மார்க்சிய விளக்கம், பிரக்டின் நூதனமான இலக்கிய எழுத்து முறை, இவை ஏதும் அறுபதுகள் எழுபதுகளில் தமிழர்களுக்கு அறிமுகமாகவில்லை. புதுக்கவிதையை என் குருநாதர்போல் அன்று விளங்கிய பேராசிரியர் வானமா மலை அதில் இணைவிழைச்சு இருக்கிறது; அது பிராய்டியம்; ஏற்கமுடியாதென எழுதினார் என்பது இன்றும் அவர் நூல்களின் மூலம் தெரிகிறது. ஆனால் பிராங்க்பர்ட் குழுவினரோ ஃபிராய்டை மார்க்சியவாதிகள் ஏற்கவேண்டும் என்று வாதாடினார்கள். பின்னர் அமைப்பியல் மார்க்சியவாதி அல்துஸ்ஸர் ஃபிராய்டை ஆதரிக்கிறார். அதாவது பண்பாட்டையும் உளவியலையும் மெதுமெதுவாக ஆதரிக்கும் நிலைபாடு தமிழகத்தில் ஏற்படுகிறது.

 

இந்தியாவில் பரவிய புதிய மார்க்சிய விளக்கங்கள் மாவோயிஸ்ட் சிந்தனைக் கவர்ச்சிக்கு ஆட்பட்ட படிப்பாளிகள், எழுத்தாளர்கள், விமர்சகர்கள், மத்தியில் தமிழகத்தில் ஏற்படுகிறது. கட்சிக்களுக்குள் இருந்த கட்டுப்பாட்டாலும் இறுக்கத்தாலும் அங்கு இச்சிந்தனைப் புதுமைகள் ஏற்படவில்லை.

 

ப்ராங்பர்ட் குழுவினால் கலாச்சாரம். மார்க்சியத்தில் முக்கியமானதாயிற்று. அதனால் கிராம்ஸ்கி போன்ற இத்தாலிய மார்க்ஸிஸ்டின் கலாச்சார மேலாண்மை என்ற கருத்து முக்கியமாயிற்று.

 

இந்தக் காலகட்டத்தில் தான் அல்துஸ்ஸரின் கருத்துக்கள் 1982-இல் தமிழில் வெளியான “ஸ்ட்ரக்சுரலிசம்” நூலில் முதன்முதலில் முன்வைக்கப்படுகின்றன. இந்நூல் வெளிவரும்வரை இப்பெயர் தமிழகத்தில் யாருக்கும் தெரியவில்லை. ஆனால். மலையாள சிந்தனை உலகில் 1982-க்கு முன்பே அல்துஸ்ஸர் பெயர் விவாதிக்கப்பட்டது. இது தமிழகப் படிப்பு உலகம், சிந்தனை உலகம் எத்தகைய எல்லைகளுக்குட்பட்டதாய் செயல்பட்டுக் கொண்டிருந்தது என்பதைக் காட்டும். திராவிட சிந்தனை ஒரு பழமைச் சிக்கலில் தமிழகத்தை மாட்டிவிட்டிருந்த காலம். 1967-இல் தி.மு.க. ஆட்சிக்கு வருகிறது.

1971-இல் பேராசிரியர் நா.வானமாமலை தொடங்கிய ஆராய்ச்சி என்ற பத்திரிக்கை 20-ஆம் நூற்றாண்டில் ஒரு வரலாற்று மைல்கல்லாகும். அக்காலத்தில் தமிழில் மார்க்சிய இலக்கிய விமரிசனத்தை எவ்வாறு உருவாக்குவது என்று முயற்சிகள் நடந்துகொண்டிருந்தன. இச்சூழலில் ஏற்பட்ட முதல்முயற்சி கைலாச பதியின் “தமிழ்நாவல் இலக்கியம்” என்ற நூலாகும். அதனைத் தொட்டடுத்துச் சிவத்தம்பியின் “தமிழ்ச்சிறுகதை இலக்கியம்” என்ற நூல் வெளிவந்தது. இந்த இரண்டு நூல்களும் தவிர வேறு நூல்கள் தமிழ்வாசகனுக்கு மார்க்சிய இலக்கிய விமரிசனத்தை அறிந்துகொள்ள அன்று இல்லை. அதுதான் உண்மை.

 

தமிழ்ச் சிந்தனைகளைப் பொறுத்தவரையில் பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து இயங்கி வந்த ஈழத்தமிழ்ச் சிந்தனையும் தமிழகச் சிந்தனையும் ஏற்படுத்திய ஒருமை இலங்கை சுதந்திரம் பெற்ற பிறகு ஒரு மந்த நிலையை எட்டுகின்றது. ஈழத் தமிழர்கள் ஒரு தனி அடையாளத்தை அடைய வேண்டுமென்ற குரல் கேட்க ஆரம்பிக்கிறது. கே.என்.பணிக்கர் போன்ற அரசியல் நிபுணர்கள் கூறிய இலங்கையையும் இந்தியாவின் ஒரு மாநிலமாக்கலாம் என்ற யோசனையை முன்னெடுத்துச் செல்ல யாருமில்லை. இந்தியா தனியாகவும் இலங்கை தனியாக வும் சுதந்திரம் பெறுகின்றன. காந்தியவாதிகளான இலங்கைத் தமிழர்களே தனி இலங்கைக்கு உழைக்கின்றனர். பின்பு தமிழர்கள் ஒதுக்கப்பட்டு சிங்கள இலங்கை உருவாகிறது.

 

மார்க்சியம் கணித சூத்திரமல்ல. எல்லாச் சூழலுக்கும் எந்த மாற்றமுமின்றி பொருந்தும் எந்திரமல்ல மார்கசியம். மார்க்சியம் மனித சமுதாயத்தின் மூளை யோடும் உணர்வோடும் கனவோடும் இணைந்து வாழ்க்கையை உருவாக்கவும் வாழ்வால் உருப்பெறவும் தயாராக இருக்கும் தத்துவமாகும்.

 

அது இன்றுவரை உலகில் உருவான எல்லா விளக்கங்களையும் உள்ளேற்றுத் தமிழ்ச்சூழலில் நமக்கு வழிகாட்டமுடியுமா? இதுதான் இன்றுள்ள கேள்வி. மார்க்சியத்துக்காக நாமல்ல; நமக்காகத்தான் மார்க்சியம்.

 

எனவே, இன்று உலகில் அனாதரவாக விடப்பட்ட இந்த இனம் – ஈழத்தில் தமிழர்களை இந்திய அரசின் துணையுடன் போர் என்ற அழித்தொழித்திருக்கும் சூழலில் – மார்க்சியம் இதுவரை பெற்ற விளக்கங்களால் நமக்குப் பயன்படக்கூடிய வடிவத்தை எடுத்திருக்கிறதா என்பதுதான் நமது கேள்வி. ஒரு கூட்டம் ஆட்களைக் கட்சி என்ற பெயரிலோ, தொழிலாளர் ஒற்றுமை என்ற பெயரிலோ அல்லது வேறு எந்தப் பெயரிலோ ஏமாற்றும் கும்பலுக்கு மார்க்சியம் துணைபோகாது.

 

இந்தப் பின்னணியில் பார்க்கும்போது தான் மார்க்சியம் வளமான தத்துவம் – வளர்ந்துகொண்டே இருக்கும் தத்துவம் – புதுப்பிரச்சனைகளுக்கு வளைந்து கொடுக்கும் முரண்பாடு, மார்க்சியத்தை அப்படியே மதக்கருத்துப்போல் விளக்கு பவர்களுக்கும் மார்க்சியத்தைச் சூழலுக்குத்தக, பிரச்சனைக்குத்தக, வளர்த்துப் புரிந்துகொள்ளக்கூடியவர்களுக்கும் மத்தியில் உள்ள முரண்பாடுதான்.

 

இன்று தமிழர்களுக்கு ஒருநாடு தரும் பாதுகாப்பில்லை. முக்கியமாய் 2009-ற்குப் பிறகு, இந்தச் சிக்கல் பூதாகரமாகியுள்ளது. நாளைய இந்திய அரசு தமிழ்மொழியை மறைமுகமாக அழித்தால் தமிழர்கள் என்ன செய்துவிடமுடியும்? தமிழிலக்கியங்களைப் படிக்காதீர், இந்தி இலக்கியங்களை மட்டுமே படியுங்கள் என்று சொன்னால் தமிழர்களுக்குத் தடுக்க முடியுமா? தமிழர்களின் தமிழகத் தலைமை வேறு ஆட்களுக்குப் போய்விட்டது. யாரும் தமிழின் பெயரால் தமிழகத்தின் தலைமைக்கு வரமுடியாது. மெதுமெதுவாக அப்படி ஒரு சூழல் உருவாகிக் கொண்டு வருகிறது.

 

இப்போது நாம் மார்க்சியக் கருத்தான மேற்கட்டுமானம் மற்றும் அடித்தளம் (Super structure and basic structure) என்ற சிந்தனைக்கு வரவேண்டும். அடித்தளம் பொருளாதாரம் என்றும் மேற்கட்டுமானம் மதம், கல்வி, சட்டம், ஆட்சி, கருத்துக்கள், சாதிகள், வரலாற்று உணர்வுகள், உளவியல்கள் என்றும் விளக்கப் பட்டன. பொருளாதாரம் சரியானால் மேற்கட்டுமானம் சரியாகிவிடும் என்று விளக்கப்பட்டது. இதற்கு மார்க்சியம் என்று பெயர் என தவறான விளக்கம் கொடுக்கப்பட்டது.

 

இது இப்படி அல்ல என்று கிராம்ஸ்கியும் அவரையொட்டி தனியொரு கோட்பாட்டைப் பிரமாதமாகச் செய்து புகழடைந்த அல்துஸ்ஸரும் கூறினர். கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் உண்டு என்றார் கிராம்ஸ்கி. அதனைக் கருத்துருவம் என்று ஒரு புதுச்சொல்லைப் பயன்படுத்தி அழைத்தார் அஸ்துஸ்ஸர். அதாவது கருத்துக்குப் பொருள்தன்மை உண்டு. அதனால் உருவம் உண்டு என்பது அல்துஸ்ஸர் சிந்தனை. மவோவும் இக்கருத்தை ஆதரிக்கிறவர் என்பது அல்துஸ்ஸர் கருத்து.

 

இந்தக் கருத்தை மறக்காமல் வர்க்கம் என்றால் என்ன என்ற கருத்துக்கு வருவோம். வர்க்கம் முதலில் மார்க்சியக் கருத்தல்ல; ஏனெனில் மார்க்சுக்கு முன்பே இருந்த கருத்து இது என்பார் மார்க்ஸ். அதனை எடுத்துக்கொண்ட மார்க்ஸ் தன் சிந்தனைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டார். வர்க்கம் என்பது உற்பத்தி உறவு, சக மனிதக் கூட்டையும் பொருளாதார உறவையும் இணைக்கும் கண்ணி. எந்திரங்களை வர்க்கம் என்பதில்லை. எனவே மனிதர்கள் வர்க்கமாகும் போது மனித உணர்வு, ஆண் பெண் உறவு, வரலாற்றுணர்வு, தமிழின உணர்வு, குடும்ப உறவு, இடம் காலம் சார்ந்த, சாதி சார்ந்த மதம் சார்ந்தவர்கள் ஆகிறார்கள். வர்க்க உணர்வு என்பது பொருள் உறவு மட்டுமல்ல. மொத்த மனிதகுல உறவு அது. எனவே தமிழின உணர்வு இங்கு வருகிறது. அதாவது இங்கே ஒரு குறுக்கல் பார்வையைத் தவிர்க்க வேண்டும். அதுபோல் தமிழ் வெறிப்பார்வையையும் ஒதுக்க வேண்டும். எந்த மொழிஇனமும் அடிமைப்படுத்தப்படும்போது அதனைப் பாதுகாக்கும் கோட்பாடாய் மார்க்சியத்தை நாம் வளர்த்தெடுக்க முடியும். இந்திய மலைப்பகுதிகளில் வாழும் ஆதிவாசிகள், தலித்துகள், பெண்கள், இலங்கையில் இன்று வாழும் தமிழர்கள் என்று பார்வை வரவேண்டும். இதுதான் மார்க்சியம்.

 

இந்த இடத்தில் சிலர் அடையாள அரசியலையும் வர்க்க அரசியலையும் இங்குக் குழப்புகிறேன் என்று வர்க்கம் என்ற சொல்லைப் பொருளாதாரமாய் சுருக்குவார்கள். அது தவறு என்பதே இன்றைய வளர்ச்சி அடைந்த மார்க்சியப் பார்வை. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் எந்திரத்தனமான விளக்கமும் சாத்தியமில்லை. கம்யுட்டரில் பணியாற்றுபவனை ‘மூலதனத்தில்’ வேலை செய்யும் தொழிலாளியாகப் பார்க்க முடியாது. பொருளாதாரவாதமாக  மார்க்சியத்தைக் குறுக்கியவர்களின் வாதமே அடையாள அரசியல் வேறு, வர்க்க அரசியல் வேறு என்பது. இந்த மாதிரியான வளர்ந்த மார்க்சியத்தைக் கிராம்ஸ்சி போன்றவர்கள் கற்பித்தார்கள். கிராம்ஸ்கி பற்றிய ஒரு அறிமுக நூலில் ஜேம்ஸ் ஜோல் (James Joll) என்பவர் இப்படிக் கூறுகிறார்.

 

“மார்க்ஸையும் எங்கல்ஸையும் யார் உண்மையில் வளர்த்தெடுத்தார்கள்?” என்று கேட்ட இன்றைய பிரஞ்சு நாட்டு மார்க்சிஸ்டான லூயி அல்துஸ்ஸர் அக்கேள்விக்கு இப்படி பதில் தருகிறார்: “கிராம்ஸ்சி மட்டுமே”.

 

இப்படிக் கூறும் ஜேம்ஸ் ஜோல் கிராம்ஸ்சியின் மேலாண்மை (ஹெஜிமனி) என்ற கருத்தாக்கம் பற்றி எழுதுகிறார்: புத்தி பரமானதும் பண்பாட்டுச் செல்வாக்குக் கொண்டதுமான கருத்தையே கிராம்சி ஆதரித்தாரேயன்றி வெறும் பொருளளாதாரத்தை அவர் கூறவில்லை (emphasis on intellectual and cultural influences rather than on purely economic ones enabled Gramssci to develop his doctrine of ‘hegemony’.) என்கிறார்.

 

அதாவது மார்க்ஸுக்கும் எங்கல்ஸுக்கும் அடுத்தபடி மார்க்சியத்தை வளர்த்தெடுத்தவர் என்று கருதப்படுகிற கிராம்ஸ்சி பொருளாதாரமே மார்க்சியம் என்பதை மறுக்கிறார். தமிழகத்தில் 1925 – வாக்கிலேயே மார்க்சியம் பரவும்போது எதிர்கொண்ட ஒரே ஒரு பிரச்சனை தமிழ்மொழியை எப்படிப் பார்ப்பது என்பது தான். தமிழ்மக்கள் பட்டினிக் கிடப்பார்கள். அவர்களுக்கு முக்கியமான பிரச்சனை மானம். பல மொழிகளில் இச்சொல்லுக்குச் சமமான சொற்கள் இல்லை. அதாவது தமிழகத்துக்கு அறிமுகமாகும் மார்க்சியம் சோற்றைப் பற்றிப் பேசுவதை விட தமிழைப் பற்றிப் பேசவேண்டும்.

 

பிரிட்டன் வழி கப்பலில் வந்திறங்கிய மார்க்சிய விளக்கம் தமிழகத்திலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் பொருளாதாரமாகப் பரவியதோடு இந்தியா என்ற தேசத்தையும் அதன் சட்டதிட்டத்தையும் பிரிட்டிஷ் காலனிப் பார்வையாக மாற்றியது. நமது கல்வி, சட்டசபை, தேர்தல், ஆட்சிமுறை, தேசக்கற்பனை, மதச் சிந்தனை எல்லாம் காலனியச் சிந்தனைகளாகவே அமைந்தன. ‘ஜாடிக்கு ஏத்த மூடி’ என்பதுபோல் இந்தியப் புரட்சிபற்றிய எண்ணம் கூட பிரிட்டிஷ் மனங்களின் மூலம் உருவாயிற்று.

 

இங்குக் கவனிக்கூடிய முக்கியமான ஒரு விசயம், இந்தியா என்ற தேசச் சிந்தனை ஒற்றை மையமிட்டதாய் அமைந்ததாகும். இந்த ஒற்றை மையமாய் இந்தி மற்றும் டெல்லி அமைந்தது. இதுவொரு காலனியச் சிந்தனையாகும். எனவே, தமிழ் போன்ற பழமையான மொழியும் ஈழத்தமிழர் பிரச்சனையும் இனி எதிர்காலத்திலும் தீர்க்கமுடியாப் பிரச்சனையாக மாறப்போகின்றன. எனவே, தமிழகம் இந்திய “பெடரிலிசத்தை” எதிர்காலத்தில் வற்புறுத்தும் நிலைமைகளை ஏற்படுத்தும். இதற்கான தீர்வு பிரிட்டிஷ் மார்க்சியத்தைத் தமிழ் மார்க்சியமாக மறுவடிவமைப்பது ஆகும். அதாவது மார்க்சியத்தை நாம் காலனிய எண்ணத்திலிருந்து விடுவிக்க வேண்டும். அதுபோல் தேசக்கற்பனையையும் நாம் காலனிய எண்ணத்திலிருந்து விடுவிக்க வேண்டும். ஒற்றை மைய இந்தியா என்பது காலனியக் கட்டமைப்பாகும். மார்க்சியம் மையமழிப்புச் செய்யப்பட்டதாக மாறவேண்டும். பன்முக மையங்களை அது ஏற்க வேண்டும். மைக்கேல் பக்தின் (Mikhail Bakthin) போன்ற சிந்தனை யாளர்களால் பன்முக மார்க்சியம் பற்றி ஏற்கனவே சிந்திக்கப்பட்டுள்ளது. இது பற்றித் தமிழில் கடந்த பல ஆண்டுகளாய் ஆய்வுகள் நடந்து வருகின்றன. தொல்காப்பியக்கூற்றுக் கோட்பாடு ஒரு தமிழ்த்திறனாய்வு முறையாய் சமீப காலங்களில் விளக்கப்பட்டு வருகிறது. அதாவது தமிழ்த்திறனாய்வைக் காலனியத் தாக்கத்திலிருந்து விடுபடவைத்தல் முக்கியமானதாகும். அண்ணா உருவாக்கிய தமிழரசியலை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும். அது முதன்முதலாக இந்திய மண்ணில் மேற்கொள்ளப்பட்ட சுயத்துவ அரசியல் நடவடிக்கை ஆகும். அது அண்ணாவுக்குப் பிறகு மாநில சுயாட்சி வழி அடுத்தக்கட்டத்துக்குப் போவதற்குப் பதில் பெரும் தோல்வியில் கடந்த பல ஆண்டுகளாய் துவண்டு போயுள்ளது.

 

மார்க்சியத்தில் இலக்கியத்திற்கு என்ன இடம் என்ற கேள்வியில் தொடர்ந்து சர்ச்சைகள் நடந்தன. பிராங்பர்ட் மார்க்சியம், ஐரோப்பிய மார்க்சியம், அமைப்பியல் மார்க்சியம் என்ற எல்லாப் பிரிவிலும் இலக்கியம் பற்றிய சர்ச்சையே முன்னணி வகுத்தது. இது மார்க்சிய சர்ச்சை கடந்து வந்த வரலாறு.

 

அதுபோல் தமிழகத்தில் மார்க்சின் கருத்துக்கள் பரவிய காலத்திலிருந்து அதனை எவ்வாறு தமிழர்கள் தங்கள் வாழ்வோடும் சிந்தனையோடும் பொருத்திக் கொள்ள வேண்டும் என்ற சர்ச்சை நடந்தது. திரு.வி.க., சிங்காரவேலர், போன்றோர் அன்றே இரண்டு முன்மாதிரிகளை முன்வைத்தனர். சிங்காரவேலர் ஆங்கில, பிரிட்டிஷ் புரிதல் மாதிரியையும் திரு.வி.க. தமிழ்முறைப்படி புரிந்துகொள்ள வேண்டும் என்றும் வழிகாட்டினார். ம.பொ.சி., பெரியார், ஜீவானந்தம் ஆகியோர் தங்கள் தங்கள் சிந்தனைகளையும் முன்வைத்தனர். இவ்வாறு தமிழ் இலக்கிய விமர்சன மாதிரிகள் பல விதமாய் முன்வைக்கப்பட்டன. மேற்கைப் போலவே தமிழகத்திலம் இலக்கியம் வழிப்பட்ட மார்க்சியம் வந்துள்ளது.

 

மொத்தமாய் தமிழ் முதன்மைப்பார்வை என்றும், பொருளாதார பார்வை என்றும் இதனைப் பொதுப்பெயர் கொடுத்து இரண்டாய் பிரிக்கலாம். யார் யார் எந்தப் பக்கம் என்று தெளிவாய் விளங்குகிறது. பெரியார், 1936-லிருந்து இந்தியை எதிர்த்து வந்ததும் கம்யுனிஸ்டுகள் இயக்கம் இதற்கு எதிரான நிலைபாட்டை எடுத்து வந்ததையும் அறியும்போது இந்திய அரசியலமைப்பை (இந்தி) மையமிட்ட ஒரு பார்வையும் தமிழ்ப் போன்ற வட்டாரங்களை – அவ்வற்றின் முக்கியத்துவத்தை மையமிட்ட பார்வையும் தமிழகத்தில் தொடர்ந்து சர்ச்சையில் இருந்ததைக் காண்கிறோம். தமிழ் மையமிட்ட பார்வையில் ம.பொ.சி., போன்றோர் கூறிய தமிழரசு என்ற கருத்தாக்கமும் அண்ணா முன்வைத்த மாநில சுயாட்சியும் மேலும் வளளர்த்தப்பட வேண்டியவைகளாய் உள்ளன.

 

ஈழத்தமிழ் பிரச்சனையில் இந்திய மைய அரசு நடந்து கொண்டுவரும் முறையைப் பார்க்கும்போது எதிர்காலத்தில் அமையப்போகும் இந்திய அரசு பிராந்தியங்களுக்கு ஏற்ற வெளிநாட்டுக் கொள்கையை உருவாக்கும் முறையில் அமையும்படி சட்டத்திருத்தங்கள் வரலாம். ஈழத்தமிழர் பற்றிய இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையைத் தமிழகமே முடிவு எடுக்கும்படி ஃபெடரலிசம் அடிப்படையில் ஒரு புதுவித இந்தியா உருவாகலாம். மார்க்சியம் இதற்கு வழிகாட்டும். புது இந்தியா உருவாகும். (கோவை வாணன் நடத்திய ஒரு கருத்தரங்கில் ஊட்டியில் வாசித்த கட்டுரை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>