வண்ணத்துப்பூச்சியின் கனவுகள்

32.தமிழிலக்கியத்தில் ஆங்கிலப்பாதிப்பு.

தமிழவன்

 

          தமிழர்களுக்கு இன்று ஆங்கில அறிவு அதிகமாகி உள்ளது.ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்களுக்கு இருந்த  ஆங்கில அறிவுக்கும் இன்று அவர்கள் பெற்றுள்ள ஆங்கில அறிவுக்கும் வேறுபாடு உண்டு. அதனால் ஆங்கில நூல்களை எப்படிப் படிக்க வேண்டும்,எப்படிப் புரிந்துகொள்ளவேண்டும்  என்று கேட்க வேண்டிய காலம் வந்துள்ளது. அதுபோல் ஆங்கிலம் நமக்குள் புகுந்துவிட்டது என்பதையும் ஒத்துக்கொள்ள வேண்டும்.

 

ஒரு காலத்தில் அண்ணா அவர்கள் ஆங்கிலம் தெரிந்தவர் என்பதைத் தமிழ் மக்கள் சொல்லி மகிழ்ந்தார்கள். பல கதைகள் கட்டினார்கள். இன்று அப்படி அல்ல. இலட்சக்கணக்கான தமிழர்கள் ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் படிக்கவும் வல்லவர்கள். ஆனால் ஒரு பிரச்சனை இருக்கிறது. தமிழில்  இன்று எழுதுகிறவர்கள் பலர் ஆங்கிலம் படிக்காத சூழலில் இருந்து வந்தவர்கள். கதை, நாவல், கவிதை, விமரிசனம் எழுதுகிறவர்களில் மிகச்சிலரே ஆங்கிலம் படித்து அதன் கருத்துக்களால் தாக்கம் பெற்றவர்கள். ஆனால், ஆங்கிலம் தெரிந்தவர்களின் மொழிபெயர்ப்புகள் இன்றைய தமிழைப் பாதித்துள்ளது. புதுக்கவிதை தமிழில் இன்று நிலைநின்றுவிட்டது. அதற்கிருந்த எதிர்ப்பு மறைந்துவிட்டது. புதுக்கவிதை ஒரு வகையில் ஆங்கிலப் பாதிப்புத் தமிழில் வந்து ஏற்கனவே இருந்த தமிழின் ஒரு மரபான சிந்தனை மாறிய சரித்திரத்தை வெளிப்படுத்தும். ஆமாம் சிந்தனையே மாறியது என்பதை அறியவேண்டும். யாப்பு மட்டுமே மாறியது என்று சிலர் நினைக்கிறார்கள். அப்படி அல்ல. வானம்பாடிக் கவிதைகளும் அன்றைய எழுத்து இதழில் வெளியான கவிதைகளும் முற்றிலும் வேறு பட்டவை. பிற்காலத்தில் தமிழ் மரபுள்ளவை என்று கருதப்பட்ட வானம்பாடி பாணி மறைந்தது. எழுத்து இதழ்ப்பாணியின் வளர்ச்சியான இன்றைய புதுக்கவிதையின் நூற்றுக்கணக்கான கிளைப்பிரிவுகள் இன்று  மரபாகிவிட்டன.

 

அதுபோல் ஈழக்கவிதைகளின் சரித்திரம் வேறு. ஆங்கிலப் பாதிப்பில்லா மல்  மஹாகவி எனன்ற உருத்திரமூர்த்தி மூலம் ஒருவித மங்கலான நவீன கவிதை மரபு அங்கு உருவாகி முருகையன்,  த. சிவராமலிங்ககம்,சண்முகம் சிவலிங்கம் என ஒருவகை ஈழக் கவிதையின் அடித்தளம் உருவானது. இவை எவற்றிலும் ஆங்கில வாக்கிய – அல்லது கவித்துவ பாதிப்பு “எழுத்து”போல இருக்கவில்லை என்பது கவனித்துப் பேசப்பட வேண்டும். மலேசியா – சிங்கப்பூரிலும் புதிய தமிழ்க்கவிதை உருவானபோது தமிழகத் தாக்கம் இருந்ததேயன்றி, ஆங்கிலப் படிப்பின் தாக்கம் அவர்கள் கவிதையில் ஏற்படவில்லை.

 

ஆனால் தமிழகத்தில் எழுத்து இதழிலும் (1959 – 71) க.நா.சு.வின் “இலக்கிய வட்டத்திலும்” தமிழர்களின் ஆங்கிலப் படிப்பானது தாக்கம் செலுத்தியது. புதுமைப்பித்தன் ஆங்கிலப்பாதிப்பால் எழுதினார். க.நா.சு. நாவலில் ஆங்கிலப் படிப்பின் தாக்கத்தைப் பெரிய அளவில் கொண்டு வந்தார். பல நாவல்களை ஆங்கில மாதிரியில் எழுதினார். அத்தகைய வடிவத்தை நிலை நாட்ட விமரிசனத்தையும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தினார். ‘படித்திருக்கிறீர்களா’, ‘முதல் ஐந்து நாவல்கள், ‘விமரிசனக் கலை’ போன்ற நூல்கள் மூலம் தமிழ் மரபில் இல்லாத ஒரு நவீன Creative Writing மரபை நிலைநாட்டினார். அதனால் தமிழின் மரபு வழியில் மு.வ. போன்றோர் மேற்கொண்ட படைப்பிலக்கிய- விமரிசன மரபு பலமிழந்தது. நாம் சரித்திரத்தை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இன்று அமைப்பியல்  கொடுத்த தூண்டுதலில் தொல்காப்பிய மாதிரி இலக்கிய விமரிசனம் என்ற புரட்சிகர செயல்பாடு மீண்டும் தலையெடுத்துள்ளது புரிந்துகொள்ளப்படும். அதாவது மு.வ.மரபு மீண்டும் தலையெடுக்கிறது.  ‘நல்லா இருக்கு – நல்லா இல்லெ’ என்ற ருசி பார்ப்பு விமரிசனம் காலாவதியாகிவிட்டதையும் அறியமுடியும். புதுவகை விமரிசனம் அமைப்பியல் மற்றும் தொல்காப்பியப்பாணியில் மு.வ.மரபில் வளர்ந்துவருவதை அறியாதவர்கள் விமரிசனம் இன்று இல்லையே என்று பிலாக்கணம் வைக்கிறார்கள். மு.வ. மரபிலும் ஆங்கிலப்பாதிப்பு உண்டு. மு.வ. மரபில் உள்ளவையாக க.நா.சு.சுட்டிய  தவறுகள் இன்று உருவாகியுள்ள தொல்காப்பிய மரபு விமரிசனத்தில் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. அதாவது நான் சொல்வது ஆங்கில வாசிப்புத் தமிழோடு இரண்டற கலந்துவிட்ட கதை. க.நா.சு. ஆங்கிலம் படித்து உருவாக்கிய மரபை சுந்தரராமசாமி போன்ற ஆங்கிலம் படிக்காதவர்கள் பின்பற்றினார்கள். ஆங்கிலம்தெரியாத வேறு பலரும்  பின்பற்றினர். அதர்க்கர்த்தம்  இவர்கள் படைப்பில்  ஆங்கிலப்பாதிப்பு இல்லை என்பதல்ல.

 

அதாவது நவீன தமிழ்ப்படைப்பும், விமரிசனமும் மொழியியலும், நவீனச் சிந்தனையும் தமிழர்களின் ஆங்கில அறிவுடன் இரண்டறக் கலந்தன என்பதுதான் உண்மை. இங்கு ஒரு கேள்வி வரும். ஈழத்தில் எப்படி ஆங்கிலத் தாக்கமில்லாத கவிதைகள் தோன்றின? எனது பதில் இதுதான். ஈழக்கவிஞர்கள் எல்லோரும் எழுத்து இதழை மிகுந்த அக்கறையுடன் வாசித்தார்கள். தற்கால இலக்கிய சரித்திரம் எழுதப்படும்போது இவைகள் நிரூபிக்கப்படும். அதாவது ஆங்கில உந்துதல் மூலம் உருவான எழுத்து இதழுக்கான ஏதோ ஒரு விதமான பதில்தான் முருகையன், த.சிவராமலிங்கம், சண்முகம் சிவலிங்கம் தர்முசிவராம் எல்லோரும். மொத்தத்தில் ஆங்கில – தமிழ் இருமொழியாளர்களின் (Bi-lingual) கலாச்சாரமே தற்கால அனைத்துச் சிந்தனையும்.

 

அடுத்த விஷயத்துக்கு வருவோம். விமரிசனச் சிந்தனையின் தோற்றமே ஆங்கிலப் படிப்பில்தான் அடங்கி உள்ளது. சமூக ஆய்வியல், இலக்கிய விமரிசனம், தத்துவம் ஆகிய மூன்றும் ஆங்கிலம் வழி வந்தால்தான் உண்டு. தொல்காப்பிய – உரையாசிரியர் மரபில் உறைந்துகெட்டித்தட்டிப் போன பழந்தமிழ் அறிவு மத்திய காலத்துக்குப் பிறகு வளரவே இல்லை. அப்போது வரலாற்றில் மெதுமெதுவாக சமஸ்கிருதம் நுழைகிறது. தமிழ் – சமஸ்கிருத இணைவு இன்று ஆபத்தானதாக இருக்கலாம். ஆனால் அன்று அப்படி இல்லை என்பதைத் திருக்குறள் போன்றன விளக்கும். எத்தனை சிலைகள்தான் வையுங்கள் திருக்குறள் தமிழ்-சமஸ்கிருத இணைவின் அடையாளம் தான். தமிழும் சமஸ்கிருதமும் இணைந்தபோது நமக்குச்சில புதுச்சிந்தனைகள் வந்தன. வள்ளுவர் தமிழ்ச் சிந்தனையின் எல்லையை ஓரளவு உடைத்துவளர்த்தி காமத்துப் பாலைத் தமிழ்வழியில் எழுதி தப்பித்துவிட்டார். அதாவது அன்று மத்திய காலத்தில் தூயதமிழ் – சமஸ்கிருதம். இன்று தூயதமிழ் – ஆங்கிலம். இந்த  இருமொழிப்பயணம் இல்லை என்றால் சிந்தனை இல்லை.

இனி பேசவேண்டிய விஷயங்கள் முக்கியமானவை. இன்று என்ன நடக்கிறது? ஆங்கிலத்தில்  உம்பர்த்தோ எக்கோவையோ, டெர்ரிடாவையோ, ஃபூக்கோவையோ படிப்பவர்கள் இந்தச் சிந்தனையாளர்களை எப்படி அணுகுகிறார்கள்? நான்  ஆங்கிலம் நன்கு கற்ற ஒரு கட்டுரையாளரின் கட்டுரையைப் படித்தேன். மறைந்த இத்தாலி எழுத்தாளர் உம்பர்த்தோ எக்கோவின் கட்டுரையிலிருந்து இரண்டு வரிகளை மேற்கோள் காட்டி இன்னொரு தமிழ் எழுத்தாளரின் படைப்பை அணுகியிருந்தார். எக்கோவின் இரண்டு வரிகள் ஏன் எடுக்கப்பட்டன? எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டன? எக்கோவிடம் பல வகையான சிந்தனைப் பிரிவுகள் உள்ளன. எக்கோ, மொழியியல், குறியியல், இலக்கியம், விமரிசனம், தத்துவம் இதழ்களில் எழுதும் பத்தி என பல பிரிவுகளில் நூல்களும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். எந்தப் பிரிவிலிருந்து எதற்காகத் தமிழ்க் கட்டுரையாளர் இரண்டு வரிகளை உருவினார் என்பதைக் கட்டுரையைப் படிப்பவர்கள் அறியவே முடியாது. அப்படியென்றால் அக்கட்டுரை பயனுடையதாக இருக்க முடியாது. இளைஞர்கள் ஆர்வத்தில் இப்படிச் செய்தால் உடனடி கண்டிக்கக்கூடாது. அவர்கள் வளர்ந்து வரட்டும் என்று விட்டுவிடலாம்.  பின்னால் புரிந்து கொள்வார்கள். ஆனால், யாருமே இந்த இரண்டு வரி மேற்கத்திய மேற்கோளைப் பற்றிக் கருத்துச் சொல்வதே இல்லையே. இவ்வாறு ‘நான் எக்கோயெல்லாம் படித்து விட்டவனாக்கும்’ என்று ஜம்பம் அடிக்கவும் முகநூலில் நண்பர்களிடம் பகிர்ந்து போலிக்கௌரவம் தேடவும் இந்த இரண்டு வரி எக்கோ சிந்தனை பயன்படலாமே ஒழிய வேறு பயன் இல்லை.

 

ஆங்கிலம் படித்தவர்கள் தமிழில் ஆங்கில கருத்தாக்கங்களைப் பயன் படுத்தும் போது பல சிக்கல்கள் எழுகின்றன. உதாரணமாக ஒன்றைச் சொல்கிறேன். எண்பதுகளில் ஆசிரியன் என்ற மையத்தைச் சுற்றி விமரிசனம் தமிழில் எழுதினார்கள். அதாவது வள்ளுவரைத் தெய்வப்புலவன் என்பார்கள். அதே சிந்தனையைத் தொடர்ந்து கதை எழுதுபவரையும் தெய்வக் கடாட்சம் பெற்ற எழுத்தாளர் என்று சொன்னார்கள். நீங்கள் நம்பமாட்டீர்கள். ந.பிச்ச மூர்த்தி என்ற சிறுகதை, புதுக்கவிதை, எழுத்தாளர் லட்சுமிகடாட்சத்தால் தான் எழுதுவதாக நேர்காணல் கொடுத்திருக்கிறார். சிவன் பற்றி தர்முசிவராமு புதுக்கவிதை எழுதினார். இவை அத்தனையும் மறைந்து பெரியாரின் செக்குலர் பரப்புரைகளால் இன்று நல்லகாலம்  பிறந்துள்ளது. மதச்சிந்தனை இன்றைய தமிழ் எழுத்தில் இல்லை. மதச்சிந்தனையை அப்புறப்படுத்தவும் ஆசிரிய மைச்சிந்தனையை அமைப்பியல் கோணத்திலிருந்து ஒதுக்கவும் மேற்கொள்ளப்பட்ட ஓர்  உதாரணத்தைப்பார்ப்போம். ஆங்கிலம் படித்தவர்கள் நிகழ்த்துதல் (Performance) என்ற நாடக அரங்கில் புழங்கும் கலைச்சொல்லைக் கவிதையின் கவித்துவத்தை (லட்சுமி கடாட்சம் ஆபத்திலிருந்து மீட்டெடுக்க) விளக்கப் பயன்படுத்தினார்கள். கவனியுங்கள், இந்த ‘நிகழ்த்துதல்’ என்ற கலைச் சொல் நாடகத்தைச் சார்ந்தது. ஒரு விமர்சனச் சர்ச்சையில் நாடகத்துறையிலிருந்து புலம்பெயர வைத்துக் கவிதைத் துறைக்குக் கொண்டு வந்தனர். இன்னும் சற்று விளக்கவேண்டும்.நகுலனின் கவிதை ஒன்று உள்ளது.ஐந்து வரிகள் தான்.

“எங்கிருந்தோ வந்தான்

என்கிறோம்

அவனும் இங்கிருந்து தான்

வந்தான்

அவன் அங்குச் சென்றதால்.”

இந்தக்கவிதையில் “கவித்துவம்” உள்ளது என்றுகூற முடியாது.ஆனால் இது கவிதை. இங்கு வரும் சொற்களின் அர்த்தத்தின் திசை மாற்றிப் போடப்பட்டுள்ளது.அதனால் இது வேறுவகைக் கவித்துவம். இதை விளக்க ஒரு புதுப்பெயர் கொடுக்க வேண்டும். பாரதிதாசனின் கவித்துவம் போன்றதல்ல இக்கவிதையின் கவித்துவம். இல்லையா? அதனால் நாடகத்துறையில் புழங்கும் கலைச்சொல்லை இங்கே கொண்டுவந்து விளக்குவதற்கு ஆங்கிலம் படித்த சிலர் முயன்றனர்.இது ஆங்கில  இலக்கிய சர்ச்சையில் சாதாரணம்.அதனால் இந்தப் புதுவகைக் கவித்துவத்தை விளக்க “நிகழ்த்துதல்” என்று புதுப்பெயர் சூட்டினர் ஆங்கிலம் படித்த தமிழர்கள்.. இந்த விமரிசனத் துறை சர்ச்சை இருமொழிகளில் படிப்பு உள்ளவர்களுக்குச்சொல்லிப் புரியவைக்கத் தேவை இல்லை. இது பற்றி அறியாத ஒருவர் முகநூலில் திடீர் என்று குதித்தார். அவருக்கு ஆங்கில  இலக்கிய சர்ச்சைபற்றிய அறிவு இல்லை. தான் பெரிய இலக்கிய அறிவாளி என்று காட்டவும் அமெரிக்கா, ஈழம், கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் என்று பல நாடுகளில் பரவியுள்ளள தன் நண்பர்களைக் கவரவும் விரும்பினார். நிகழ்த்துதல் என்பது கவிதையின் உள்ளடக்கத்தில் வரும் சிவனுடைய நாட்டியம் என்று நினைத்துக் கருத்துச் சொல்ல ஆரம்பித்துவிட்டார். அவருடைய சிங்கப்பூர் சீடர்கள் சிதம்பரம் கோயிலுக்குப் போனது பற்றியும் சிவனின் சிதம்பர ரகசியம் பற்றியும், கோயிலுக்குப் போகும்போது பார்த்த பிச்சைக்காரர்கள் பற்றியும் அங்குக் காணப்பட்ட அழுக்குப் பிடித்த தெருக்கள் பற்றியும்  எழுதினார்கள். கவிதையின் நிகழ்த்துதல் என்ற கருத்தாக்கம் தடம்புரண்டு சிதம்பரம் கோயில் பக்கத்து அழுக்குப் பிடித்த தெரு பற்றிய சர்ச்சையாய் மாற ஆரம்பித்தது. விபரீதம் எங்கு நடந்தது? ஆங்கிலம் படித்தவரின் சிந்தனையின் அலைவரிசையில் ஆங்கிலம் படிக்காமல் ‘தனக்குத் தெரியாத இலக்கிய சர்ச்சை இருக்க முடியுமா?’ என்ற அகங்காரத்தால் வந்து சர்ச்சை செய்தவர் கலந்துகொண்டபோது தான். முகநூலில் பின்னூட்டம் போட்டுச் சர்ச்சையை வழிமாற்றிக் கொண்டு போகிறவர்களைப் புன்முறுவலுடன் நீங்கள் கவனிக்கலாம். இலக்கியம் பற்றிய உயர்சர்ச்சையில் ஒன்றும்தெரியாதவர் கலந்துகொண்டு தமிழ் அரசியல் அல்லது சினிமாவில் புழங்கும் சீப்பான அறிவை கலக்கப்பார்ப்பார்கள். அதுபோல் நிகழ்த்துதல் என்ற கருத்தாக்கம் (Concept) பட்ட பாட்டை, நான் ஆனந்தமாய் கவனித்தேன்.

 

ஆங்கிலம், தமிழ் இரண்டு மொழிகள் மூலம் சிந்தித்து எழுதும் இன்றைய நடைமுறையை நாம் இன்றைய குவலமயமாதல் (Globalization) காலகட்டத்தில் தடைபோட முடியாது. எப்.டி.ஐ.வேறு வந்துவிட்டது.தமிழன் வாழ்க்கைமுறை மாறிவிட்டது. ஆங்கிலம் பள்ளிக் கல்வியில் மட்டும் திறந்தவீட்டில் நாய் புகுந்ததுபோல் புகுந்துவிட்டது என்று நாம் பொதுமேடைகளில் ரொம்பவம் விசனப்படுகிறோம். விஷயம் அப்படி அல்ல. மனதுக்குள்ளேயே புகுந்துவிட்டது. கால்சட்டை அணியாமல் வேட்டி மட்டும் கட்டினால் போதாது. நம் சிந்தனை பற்றி ஆழமாய் சர்ச்சிக்க வேண்டும். தமிழ்மொழியைச் சிந்தனையின் மொழியாக்க வேண்டும். தமிழின் பாரம்பரியத்தில் சமஸ்கிருதம் -தமிழ் இணைவு இச்செயலை ஒருகாலத்தில் செய்தது இன்று ஆங்கிலம்- தமிழ் செய்கிறது.

 

ஆங்கில மொழி தமிழ்ப் படித்தவர்கள் மத்தியில் வந்துவிட்டது. இது ஒரு எதார்த்தம். அந்த நேரத்தில் நம் சிந்தனைத் துறைகளில் ஆங்கிலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் எத்தகைய பாதிப்பைச் செலுத்துகிறது? என்று சிந்திப்பதுதவிர்க்க முடியாதது. இதனை விரிவாகச் செய்யவேண்டும்.(Pictures: Umberto Echo, Derrida, Mu.Varatharajan etc)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>