உயிருள்ள தமிழை நாம் ஆய்வுசெய்யவில்லை(தீராநதி மாத இதழ்)

வண்ணத்துப்பூச்சியின் சிறகுகள்

 

  1. உயிருள்ள தமிழை நாம் ஆய்வு செய்யவில்லை.

 

 

தமிழ்மொழியைப் பாதுகாக்க வேண்டுமென்று யாராவது சொன்னால் உடனே எல்லோரும் ஒத்துக்கொள்கிறார்கள். தமிழ்மொழி தமிழர்களின் சிந்தனையோடும் வரலாற்றோடும் பின்னிப் பிணைந்தது என்றாலும் ஒத்துக்கொள்கிறார்கள். ஆனால், இன்று தமிழ்மொழி எப்படி இருக்கிறது, எப்படி மாறுகிறது என்ற ஆராய்ச்சி இருப்பதாகத் தெரியவில்லை.

அதாவது தமிழ்ச்சொற்களும் வாக்கியங்களும் எப்படி மாறுகின்றன என்ற சிந்தனை இருப்பதாகத் தெரியவில்லை.சொற்கள் என்று சொன்னவுடன் இது இலக்கணம் பற்றிய பேச்சு என்று நினைத்துவிடாதீர்கள்.இலக்கியம் பற்றிப்பேசுகிறேன். இன்னும் அதிகம் தெளிவுடன் இதனை விளக்க வேண்டும். ஓருதாரணம் தருகிறேன். சமீபத்தில் நான் வாசித்த கவிதை நூலின் பெயர் “நகுலனின் வளர்ப்புப் பூனை” என்பது. அதன் ஆசிரியர் ஜெம்சித் ஸமான் என்றிருந்தது. முதல் கவிதைத் தொகுப்பு. இலங்கை முஸ்லீம் என்று யூகிக்கமுடிந்தது. ஓரிடத்தில் அந்தக் கவிதை இப்படி  முடிந்திருந்தது.

 

உதட்டிலிருந்து மரித்துப் போன கடவுள்

மறுபடியும்

மறுபடியும்

பிறந்து கொண்டிருந்தார்.

 

இந்த வரிகளை நூலின் நடுப்பக்கம் ஒன்றிலிருந்து புரட்டிப்படித்தபோது மனம் அடுத்த பக்கத்துக்குப் போக விடாதபடி செய்தது. ஏன் கடவுள் மரிக்க வேண்டும், ஏன் உதட்டில் கடவுள் வந்தார் என்ற கேள்விகள் யாருக்கும் தோன்றும். எனக்கும் தோன்றின. உடனே இந்தக் கேள்விகளுக்குப் பதில் காணக் கவிதை முழுதையும் படிக்க மனம் தூண்டியது. அப்போதுதான் புரிந்தது. கவிதையின் தொடக்கமே கடவுளின் மரணத்திலிருந்துதான் என்பது. எதற்காகக் கடவுள் சாகவேண்டும்? ஜெர்மன் தத்துவாதி நீட்சே கடவுள் செத்துப்போய்விட்டார் என்று சொன்ன செய்தி ஒரு தகவலாக ஞாபகத்தில் வந்தது. ஆனால் இந்தக் கவிதையில் அந்தத் தகவல் எதுவும் இல்லை. நீட்சே பெயரும் இல்லை. எனவே கடவுளின் மரணம் வேறு விதமானது என்று புரிந்தது. மீண்டும் கவிதையைப் படித்தேன். கடவுள் கொலை செய்யப்பட்ட தேசம் அது என்று கவிதைத் தொடங்கியது. அதன்பிறகு அந்தக் கடவுளை கடற்கரையில் வீசி எறிந்திருந்தார்கள் என்று கவிதையின் நடுப்பகுதியில் தகவல் இருந்தது. இறுதிப் பகுதியில்,

 

மீன்களைப் போல நீந்தத் தெரிந்த

ஏழைவீட்டுக் குழந்தை

கட்டிச் சிரிக்கும்

மணல் வீட்டினுள்ளே

உதட்டிலிருந்து மரித்துப்போன கடவுள்

மறுபடியும்

மறுபடியும்

பிறந்து கொண்டிருந்தார்.

 

என்று எட்டு வரிகளுடன் கவிதை முடிந்திருந்தது. மொத்தக் கவிதையையும் வாசித்து முடித்த பிறகும் கடவுள் எதற்குக் கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் இல்லை. கவிதை எழுதியவருக்கு அத்தகவல் தேவை இல்லை என்று கவிதை எழுதிய முறை என்னை யூகிக்க வைத்தது. நானும் ஏற்றுக்கொண்டேன். மீண்டும் வரிகளை வாசிக்க வைத்தது கவிதை. ‘மீன்களைப் போல நீந்தத் தெரிந்த ஏழைவீட்டுக் குழந்தை கட்டிச் சிரித்த மணல் வீடு’ என்ற சித்தரிப்பு என்னைக் கவர்ந்தது.

 

கவிதையின் முதல் வரியில், இறந்த கடவுள் அந்த வீட்டில் கடைசியாகப் பிறந்த செய்தி இருந்தது. அதாவது கடவுள் இறந்ததே மணல் வீட்டில் பிறப்பதற்காக என்று கவிதை கூறியது என்று எடுத்துக்கொண்டேன். ஒட்டுமொத்த கவிதையும் மீண்டும் வாசிக்க மனம் தூண்டியபோது,

 

குகையின் மறுகதவைத் திறக்க

உதடுகளில் பூக்கள் வளர்க்க வேண்டும்

 

என்ற வரிகள் மனதில் பதிந்தன. அதுபோல் சிலவரிகள் தாண்டி,

 

பொத்திய

கைகளுக்குள்ளிலிருந்து

கடலை விரிக்கிறாள் சிறுமி.

 

என்ற வரிகளிலும் ஒரு நம்பமுடியாத காரியம் சொல்லப்படுகிறது. படிக்கும் நம் மனம் ஒரு நம்பக்கூடிய யூகம் செய்து அனுபவிக்கக்கூடிய உலகத்தை உருவாக்குகிறது. இந்தக் கவிதை ஒரு கற்பனை உலகை வெறும் கற்பனையாகவே எழுதி மகிழ்வதைச் செய்துள்ளது. இதுதான் என்னைப் பொறுத்தவரையில் உண்மை. கவிதைகளை வாசிப்பதற்கான உத்தி, முறை, தந்திரம், கருத்தாக்கம், மரபுவழி, இப்படி இப்படிப் பல பாதைகள் உள்ளன. அவைகளைப் பொருத்திப் புதுப்புது அர்த்தங்களைக் கண்டுபிடித்து ஒன்று இரண்டு என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அது அடுத்தகட்டம்.

 

கவிதை வரலாற்றுக்குப்போய் நம் ஞாபகத்தில் இருக்கும் சங்க காலக் கவிதை, அடுத்துப் பக்திக் காலக் கவிதை, காவியகாலக் கவிதை, சிற்றிலக்கியக் கவிதை என்று யோசிக்கலாம். 2000 வருட கவிதைகளில் இது போல கவிதை இல்லையே என்று உடனே தோன்றும். எனக்குத் தோன்றியது. இதற்கு அடுத்த விஷயம். இந்தக் கவிதை வெளிப்படுத்தும் மொழி புதியதல்லவா என்ற செய்தி. பொத்திய கைகளுக்குள் விரியும் கடல் என்ற காட்சி கவர்கிறது. கவிதை ஒட்டுமொத்தமாய் பெரிய ஒரு மகிழ்ச்சியைத் தருகிறது. அதற்கான காரணம் இல்லை. மகிழ்ச்சியைச் சொல்லும் முறை புதிதாய் இருக்கிறது. இதற்கான பின்னணி கவிதை எழுதியவரின் வாழ்வில் இருக்கிறதா இல்லையா, அவர் மதம், அவரது பிராந்தியம் என்பவைகள் இந்த விளக்கிச் சொல்லமுடியாத ஒரு மகிழ்ச்சிக்குக் காரணமா என்று ஏதும் எனக்குத் தேவையில்லை. ஒரு வேளை பிற கவிதைகளையும் படித்து அவரது மொத்த கவிதைகளிலும் வெளிப்படும் உணர்வு, உத்தி, வாழ்வுப் பார்வை பற்றிப் பேசலாம். அல்லது பேசாமல் இந்தக் கவிதையை வாசித்துவிட்டு நிறுத்திவிடலாம். நிறுத்தி விட்டால்  என்ன மனநிலை ஏற்படுகிறது என்ற கேள்விக்கூட நியாயமானதுதான். ஒரே ஒரு கவிதை. அதை வாசித்ததோடு  நிறுத்திக் கொண்டு விடுகிறோம். அல்லது நான் நிறுத்திக் கொண்டுவிடுகிறேன். இது நான் எடுத்த முடிவு.

 

அடுத்து வேறு சில விஷயங்களை யோசிக்கலாம். அதாவது இந்தக் கவிதையின் மூலமாகத் தமிழ் மொழியில் என்ன சம்பவித்தது என்று ஒரு கேள்வி கேட்டால் என்ன பதில் கிடைக்கும்?

 

‘பூக்கள் வளரும் உதடுகள்’

 

என்று ஒரு சித்திரம் மனதில் பதிகிறது.

 

‘சிறுமியின் கைகளில் கடல் வருகிறது’

 

என்று இன்னொரு காட்சி விரிகிறது.

 

‘மரித்த கடவுள் மணல் வீட்டில் பிறந்தார்’

 

என்று வேறொரு சித்தரிப்பு வருகிறது.

இவை போல வேறு சில காட்சிகள் கூட கவிதையில் வந்தாலும் அவற்றை நான் விட்டு விடுகிறேன். எளிதான இந்த மூன்று காட்சிகளையும் மட்டும் ஒரு வசதிக்காக நான் சுட்டிக்காட்டிப் பேசுகிறேன்.

 

இந்தக் கவிதைபோல பல கவிதைகளைக் சுட்டிக்காட்டலாம். இப்போதெல்லாம் பலர் எழுதுகிறார்கள் இதுபோல. 1970களில் புதுக்கவிதைக்கான தமிழ்மொழி தோன்றியது. ஈழம், தமிழகம், மலேசியா என்று எந்த நாட்டுத் தமிழானாலும் தமிழ்மொழி 1970களுக்குப் பிறகு மாற்றமுற்றது. அதாவது யாப்பை இனி விட்டுவிடலாம் என்ற செய்தி தமிழில் பரவிய பிறகு தமிழர்கள் இந்த நாடுகளில் எழுதிய கவிதை இப்படிப் புதிய வகையாக மாறியது. அதுவரை இது போன்ற தமிழ்மொழி இல்லை. இது இப்படியே தானே இனி இருக்கப்போகிறது. அதனால் புதிய வகை தமிழ்மொழி தமிழ் மக்களின் எழுத்திலும் பேச்சிலும் தொடர்ந்து இருக்கப்போகிறது. மனதோடு இணைந்த மொழி மாறும் போது தமிழர்கள் மட்டும் மாறாமல் இருக்கமுடியுமா? இதைச் சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா?

 

இப்போது பாரதியாரின் தமிழ்மொழியை எடுத்துப் பாருங்கள். பாரதிதாசனின் தமிழ்மொழியை வாசித்துப் பாருங்கள். மேலே காட்டிய உதாரணக் கவிதையின் மாதிரி அவை இல்லை என்று உடனே முடிவுக்கு வந்துவிடுகிறோம். அவர்களின் தமிழை விட இந்தத் தமிழ் சிறப்பானது என்று கூறக்கூடாது. அப்படிச் சொல்வது தவறு. இது வேறு. அவை வேறு. இங்கு நான் சொல்ல முயல்வது தமிழ்மொழி மாறிக் கொண்டேயிருக்கிறது. அந்த மொழியில் தொடர்ந்து எழுதிக்கொண்டேயிருக்கிறார்கள். 2000 ஆண்டுகளாய் மாறிக்கொண்டேயிருக்கிறது. இங்கு ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். அது முக்கியம். இந்த மாறிய நவீனத் தமிழில் இலக்கணம் மாறவில்லை. வாக்கிய அமைப்பு மாறவில்லை. அவள் என்று தொடங்கினால் வந்தாள் என்றுதான் வாக்கியத்தை முடிக்க வேண்டும். ஆனால் புதிதாய் ஒரு கவிதையை வாசித்தவுடன் மொழி மாறிவிட்டது என்று அறிகிறோம். பாரதி, பாரதிதாசன், இன்றைய புதுக் கவிஞர்கள் என எல்லோரும் ஒரே இலக்கணத்தைத்தான் பயன்படுத்தினாலும் ஒவ்வொருவரின் தமிழும் மாறிவிட்டது.

 

நான் அடிக்கடி கூறும் விஷயம்தான், மீண்டும் சொல்கிறேன். டி.எஸ்.எலியட் மாடர்னிசக் கவிதையை உலகம் கண்டுபிடிக்கக் காரணமானவர். அவர் இன்று நாம் எழுதும் கவிதை நம் மொழியின் எல்லாக் கவிதைகள் மீதும் தாக்கம் செலுத்துகிறது என்ற விசித்திரமான கருத்தைக் கூறுகிறார். அதாவது 2016-இல் எழுதும் கவிதை 2000 வருடக் கவிதை மீதும் தாக்கம் செலுத்துமாம்.கபிலர் எழுதிய கவதை மீதும்  தாக்கம் செலுத்தும். இளங்கோவடிகள் எழுதிய கவிதை மீதும் தாக்கம் செலுத்துமாம். ஜெம்சித் ஸ்மான் என்பவரின் இந்தக் கவிதை எப்படிச் சங்க காலக் கவிதைகளின் மீது தாக்கம் செலுத்தும்? இது ஒரு கேள்வி. சங்ககாலக் கவிதைகளும்கூட இயற்கையும் மனித சமூகமும் பின்னிப்பிணைந்த கவிதைகள். இங்கே நாம் பார்த்த கவிதையிலும் இயற்கையும் மனித உணர்வும் பின்னிப் பிணைந்துள்ளன. யாரும் மறுக்கமாட்டார்கள். பூக்கள், இறகு, பூக்காம்பு, பறவை, கடல், சூரியன், சந்திரன், மீன்கள் போன்ற சொற்கள் கவிதையில் காணப்படுகின்றன. ஆனால் இக்கவிதை சங்ககாலக் கவிதை போல இல்லை என்றும் கூறலாம். அதாவது சொல்லப்பட்ட விதம் வேறு. ‘கடவுள் கொலை செய்யப்பட்ட தேசம்’ என்ற சித்தரிப்பைப் பாருங்கள்.மேற்கத்திய சமய நம்பிக்கையில் இப்படியொரு தொல்கதை(Myth) உள்ளது. இது சங்ககாலக் கற்பனையில் இல்லை. முழுவதும் இல்லையென்றும் கூறமுடியாது. சங்கம் மருவிய கால இலக்கியமான சிலப்பதிகாரத்தில் கடவுள் கொல்லப்படவும் மலைமீது உயிர்த்தெழவும் செய்கிறார். கோவலன் இறந்தபிறகு உயிர்க்கிறான். இறந்தபின்பு உயிர்பெறுகிறவன் கடவுள்தானே. அப்படியென்றால் சங்கமும் சங்கம் மருவிய காலமும் ஈழ முஸ்லீமான ஜெம்சித் ஸமான் என்ற கவிஞரிடம் இணைகின்றன. தமிழிலக்கிய வரலாறு புதுவிதமாக வாசிக்கப்படுகிறது. என்ன அற்புதமான காரியம். தமிழ் மரபுக்குள்ளேயே ஒரு புத்தாக்கம் நடைபெறுகிறது. டி.எஸ். எலியட் கருத்து இதுதானே. அவர்கூறிய பெரிய விஷயம் இது. காலங்காலமாகத் தமிழ் இரத்தம் பாயாத மூளைக்குள் இந்தத் தமிழ் அற்புதம் நடக்குமா? உடனேயே ஈழமுஸ்லீம்கள் தமிழ் இனம் இல்லை என்று கூறுகிறார்கள் என்று ஒரு ஈழ அறிஞர் கூறியதும் என் நினைவில் வருகிறது. எனக்கு அவரை நம்ப முடியவில்லை. ஒருவேளை வேறு இனத்தில் தோன்றியிருந்தாலும் இந்தக் கவிதையைத் தரும் ஜெம்சித் ஸமான் தமிழின் ஆதி உணர்வு கொண்ட அச்சு அசலான தமிழர்தான். இரண்டு மூன்று தலைமுறைகளாகத் தமிழகத்தில் பிறந்து தமிழில் எழுதும் தமிழகத்தில் வாழும் – அத்தனை பேரும் தமிழர்கள்தாம். இன்று எழுந்துள்ள குரலான ‘தமிழர்கள் என்பவர்கள் யார்? என்ற கேள்வியின் அசட்டுத்தனம் இங்கே வெளிப்படுகிறது.

 

இன்று தமிழ்த்துறையில் ஆய்வு செய்யப்படும் தமிழ்மொழி செத்த தமிழ். இந்தக் கவிதையில் வெளிப்படும் உயிரோட்டமான (live) தமிழ்மொழியை ஆய்வுசெய்ய மறந்துபோனோம். செத்த தமிழ் என்பது பழைய இலக்கண ஆய்வு. இலக்கணத்துக்காகவே இலக்கணத்தில் செய்யப்படும் ஆய்வு. அளபெடை பற்றி இன்னும் தேர்வில் கேள்விகேட்கிறோம். ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் பற்றிக் கேள்வி கேட்கிறோம். மேலே காட்டிய நவீனமான கவிதைக்குள் குமிழியிடும் நவதமிழின் உயிரை ஆய்வுசெய்ய மறந்துவிட்டோம். எந்த வார்த்தையில் எந்த அசையில் அந்த உயிர் உள்ளது? ஆய்வு செய்தோமா? இல்லையே. சரி,பழைய தமிழை மறக்கக் கூடாது. ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இன்றைய தமிழைச் சாகவிடலாமா? இதுதான் என் கேள்வி. நம் உயிருக்குள் உணர்வுக்குள் இன்றைய தமிழ் என்னென்ன மாற்றத்தைச் செய்கிறது என்று ஆய்வு செய்வதில்லை. இன்றைய உயிருள்ள தமிழ் என்று அறியாமையால் கோடானுகோடி தமிழன் சினிமாப்பாடலை முணுமுணுக்கிறான். அது பெரிய தவறு. இசையைத் தமிழ் என்று தவறாய் நினைக்கிறான். அதனால்தான் கூறவேண்டியதிருக்கிறது: சினிமாப்பாட்டு ஒரு காலத்திலும் பெரிய பாரம்பரியமிக்க தமிழிலக்கியத் தோட்டத்தின் பகுதியாகவே ஆகாது. வெட்டி வீசக்கூடிய வெறும் களையாக மட்டுமே இருக்க முடியும்.  (Photos: Nakulan,Bharathi, Bharathidasan etc)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>