தமிழவன் பற்றி ஓர் எளிய அறிமுகம்.நிதாஎழிலரசி(முகநூலில்)

தமிழவன் பற்றி

நிதா எழிலரசி( முகநூலில்)

அழகிய சிங்கரின் கருத்துகளின் தொடர்ச்சியாக இன்னும் சில..  தமிழவனின் விமரிசன முறை ஒருவகையில் எழுத்து பத்திரிக்கையின் தாக்கத்தால் ஏற்பட்டிருக்கலாம். இவர் முதுகலைத்தமிழ் படிக்கும் போதே எழுத்து பத்திரிக்கையால் கவரப்பட்டவர். சி.சு. செல்லப்பாவுடன் பழகியதால் அவருடைய விமரிசன பார்வை இவருக்கு வாய்த்தது எனலாம். ஓரிடத்தில் சி.சு.செ.யும் நா.வானமாமலையும் தன்னைப்பாத்தித்தவர்கள் என்கிறார்.இவ்விருவரின்  சிந்தனா பள்ளியின் தொடர்ச்சியால் தொடர்ந்து தன்னை வளப்படுத்திக்கொண்டதாலும் படைப்பிலக்கியம், திறனாய்வு, விமரிசனம் என்ற முப்பரிமாணங்களில் ஆழமாகச் சிந்திப்பதும் செயல்படுபவதுமாக இயங்கி வருகிறார். இவரின் பயணம் 70களில் துவங்கி 2016 வரையிலான நீண்ட இடைவெளியில் இயங்குகின்றன.படைப்புகள் அனைத்தும் வெவ்வேறு தளங்களை மையப்படுத்தியும் புதிய பாய்ச்சல்களை வெளிப்படுத்தியும் வெளிவந்திருக்கின்றன.

1985இல் மாயா யதார்த்தம் என்ற கதை சொல்லல் முறையைத் தமிழிற்கு முதல்முறையாகத் தமிழவன் ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் என்ற நாவல் மூலம் முன்வைத்தவர். நவீன கதை சொல்லலையும் அறிமுகப்படுத்தியவர். இந்தக் கதைசொல்லல் முறை அதுவரை இருந்த கதைசொல்லல் முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதொரு கதையாடல் முறையை மிக நுண்மையாக முன்வைத்தது. அந்தக் காலகட்டத்தில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த விவாதம் தமிழின் 80களிலான கதைசொல்லல் முறைகளைப் புதியதொரு பரிமாணத்திற்குக் கொண்டுசேர்த்தது. இதன் தாக்கத்தால் தமிழில் பல அறிவுஜீவிகளும் ஏற்பதா மறுப்பதா என்று குழப்பம் அடைந்த எண்ண அலையை மாயாயதார்த்தம் உருவாக்கித்தந்தது. பலரும் வரவேற்றனர். 85க்குப் பிறகான இலக்கியப் பிரதிகளின் வடிவத்தையும் உள்ளடக்கத்தையும் புதியதொரு பாய்ச்சலுடன் சொல்லியும் சொல்லாமலும் ஏற்றுக்கொண்டது தமிழ்ச்சமூகம்.”ஏற்கனவே…”.நாவலை கல்விப்புலம் சார்ந்த பலரும் பல்கலைக்கழகப் பாடதிட்டத்தில் வைத்தனர். இதைத்தொடர்ந்து கல்விப்புலம் சாராத எஸ். சண்முகம், ஜமாலன், நாகார்ஜுனன், கோணங்கி,  போன்றவர்கள் ஒவ்வொரு முறையில் முன்னெடுத்தனர். இதை அடுத்து “சரித்திரத்தில் படிந்த நிழல்கள்”, “ஜி.கே. எழுதிய மர்மநாவல்”, “வார்சாவில் ஒரு கடவுள்”, “முஸல்பனி “போன்ற நாவல்கள் வெளிவந்தன.

தமிழவனின் அமைப்பியல் வந்த பிறகு தமிழிலக்கிய விமரிசனம் முற்றிலும் மாறியது. பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதை இன்னும்  பலரும் முன்னெடுத்தனர். அதன்பிறகு “தமிழவன் கதைகள்”, “இரட்டைச்சொற்கள்”, “நடனக்காரியான 35வயது எழுத்தாளர்” என்ற மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. தமிழில் இதுவரை யாரும் கையாளாததொரு நடையையும் கதைசொல்லல் முறையையும் முன்வைத்துள்ளது இது. குறிப்பாகத் தமிழவனின் ஏனைய பிரதிகளில் இருந்து நடனக்காரியான 35வயது எழுத்தாளர் மாறுபட்டதொரு உலகச்சூழலில் குவலயமாதலின் நுட்பமிக்க இருத்தலியல் தன்மையையும் இருண்மையையும் உள்முகங்களாகக் கொண்டு விளங்குகின்றது.

இச்சிறுகதைத்தொகுப்பு மூன்றாவது ஆகும். இச்சிறுகதைத்தொகுப்பில் உள்ள சிறுகதைகளின் அழகியல் பரிமாணம், உள்ளடக்கப் பரிமாணம் தமிழில் முன்னுதாரணம் இல்லாதவை. இதை விவாதித்து சூழல் மையப்படுத்த வேண்டியிருக்கிறது. தமிழ் இலக்கியச் சூழலில் இதன் இடம் என்ன? இந்த மாற்றம் ஏன் வந்தது? எப்படி உருவானது? இதன் பரிமாற்றம், தொடர்பு என்ன? என்பதை விவாதித்து உறுதிப்படுத்தும் போது தமிழ் இலக்கியத்தை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்லமுடியும். இந்தப் புதிய மாற்றங்களை எதிர்கொள்ளும் போதும் சமாளிக்கும் போதும் பலம் பொருந்திய மொழியாகத் தமிழ் மொழியை மாற்ற முடியும். விவாதம் நடக்கவில்லை என்றால் பலம் பொருந்திய மொழியாக மாற்றமுடியாது. ஒரு கதையை எப்படி வாசிக்கிறோம் எப்படி விவாதிக்கிறோம் அதன் பொருளைப் பல பரிணாமங்களில் எவ்வாறெல்லாம் கொண்டுசெல்வது என்பதை யோசிக்கவேண்டும். தமிழ்த்துறைகளில் 21ஆம் நூற்றாண்டின் நவீன தமிழ் மூலமாக அதன் அழகியல் தன்மையைக் கலை இலக்கியத்தோடும் வாழ்க்கையோடும் இணைக்க வேண்டும். பழைய இலக்கியமும் தற்கால வாழ்க்கையும் இணையும் போது புதியதோர் அழகியல் உருவாகின்றது. இது போல புதிய இலக்கியத்தைப் பழைய இலக்கியத்தில் புகுத்தி மரபின் பகுதியாக மாற்றவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>