தமிழவன் புதிய சிறுகதை நூலிலிருந்து(நடனக்காரியான 35 வயது,,,)

 (மாதிரிக்கான இரண்டு கதைகள் மட்டும் )

1.உங்களுக்குப் பாரம்பரியம் இல்லையென்பது உண்மையா?

 

வயதான காலத்தில் இராமநாதனுக்கு இப்படி ஒரு பழக்கம்.

தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில்  ரயில் ஏறி கேரளத்தில் பாலக்காடு வரை பயணம். பெரும்பாலும் அவர் செல்லும் ரயில் காலியாக இருக்கும். மனம் சோர்வாக இருக்கும்போது இப்படிச் செய்வார். பின்பு பாலக்காடு சென்றபின்பு யாருடனும் பேசாமல்  கேரளக் காற்றை  சுவாசித்தபடி ரயில்வே ஸ்டேஷனில் அமர்ந்து வருவோர் போவோர், பெரியவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், உடல் நலமுள்ளவர்கள், நோயாளிகள், வசதியானவர், ஏழைகள் நடுத்தர வயதினர் எல்லோரையும் பார்த்துப்பார்த்து நிறைய ஆலோசனைகளை மேற்கொள்வார். எப்போது திரும்ப வேண்டுமென்று தோன்றுகிறதோ அப்போது திரும்புவார். முன்பு அவருடைய மனைவி ருக்மணி உயிரோடிருந்தபோது திரும்ப இன்ன நேரத்தில் வீட்டுக்கு வரவேண்டுமென்று ஒரு கண்டிப்பை மனதில் ஏற்படுத்தியிருந்தார். இப்போது அப்படி ஏதும் மனதில் உறுதிப்பாடு இல்லை.

 

அன்று மற்ற கம்பார்ட்மென்டுகளில் கூட்டம் அதிகம் என்று வழக்கமாகப் பயணம் செய்யும் எஸ்4 என்ற கோச்சில் பயணம் செய்யாமல் எஸ் 8 –இல் பாலக்காட்டிலிருந்து பயணம் செய்தார் இராமநாதன். கோச் எஸ் -8 இல் அதிகமான ஆட்கள் இல்லை. அதிகம் பயணிகள் கோயம்புத்தூரில் இறங்கிவிடும் ரயில் அது.

 

கவனித்தபோது ஒரு வெள்ளைக்கார முதியவர் அமர்ந்திருந்தார். முதியவர் அவருடைய நாட்டில் பேராசிரியராக இருந்தவராம். ஏதோ ஆய்வு செய்கிறாராம். பேராசிரியரிடம் எதற்கு ஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டபோது எதையும் தெரிந்துகொள்வதில் சந்தோஷம் இருக்கிறதென்றார். இராமநாதன் இந்தியாவில் ஒரு கல்லூரியில் தத்துவப்பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற பின்பு மனம்போன போக்கில் இருக்கவேண்டும் என்று வாழ்ந்து  வருபவர்.

வெள்ளைக்காரரின் பெயர் ஜார்ஜ் மேயர் என்பது என்றும் பல ஆண்டுகள் இந்தியா பற்றி ஆய்வுகள் செய்து வருபவர் என்றும் புரிந்தது. சமஸ்கிருத மொழியை அமெரிக்காவில் படித்தபோது அந்த மொழி மூலமாகப் பழைய மனித குலத்தின் குரல் ஒன்று தனக்குக் கேட்கத் தொடங்கியது என்று கருதினார் ஜார்ஜ் மேயர். பின்பு தமிழ் படிக்க விரும்பியதையும் தமிழ் சமஸ்கிருதத்துக்கு மாறுபட்ட மனநிலை கொண்டது என்று கண்டு கொண்டதால் இந்தியாவில் வேறு உண்மைகளும் உண்டு என்று தான் அறிந்ததையும் விளக்கிச் சொன்னார் ஜார்ஜ் மேயர்.

 

இராமநாதனுக்கு எல்லாம் வியப்பாக இருந்தது. தன்னுடைய மொழியைப் படித்து அதில் உள்ள ரகசியங்களைத் தேடி வந்திருக்கிறார் ஒருவர் என்பது ஞாபகங்களைத் தாண்டிய உணர்வுகளை எழுப்பியது. அவை என்ன உணர்வுகள் என்று தெரியவில்லை.

 

திடீரென்று உங்களைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என்றார் ஜார்ஜ் மேயர்.

 

நான் சாதாரண மனிதன். மனைவி பெயர் ருக்மணி. ஐந்தாண்டுகளுக்கு முன்பு இறந்துபோனார். ருக்மணி போன பின்பு எல்லாம் போனது போல் பட்டது. அது மகிழ்ச்சி என்றும் பட்டது. தனக்குக் குழந்தைகள் இல்லை. இப்படிப்பட்ட தகவல்களைச் சொன்னார் இராமநாதன்.குழந்தைகள் இல்லயா எனத்தனக்குதானே வெள்ளைக்காரர் சொல்லிக்கொண்டார். இருவரும் பேசிக் கொண்டிருந்த போதும் இராமநாதன் ரயில் ஜன்னல்வழி மரச்சீனி கம்புகள், வாழை, மா, பலா, முருங்கை மரங்களைக் கவனித்தபடியே பேசினார். வீடுகள், வேலிகள், வீசும் காற்று, சூரியக் கதிர், ஓடும் ரயிலைக் கண்டு பயப்படாமல் மேயும் ஆடுகள், ரயிலைப் பார்க்கும் வழிப்போக்கர்கள் என இராமநாதன் எதைப் பார்க்க வந்தாரோ, அதில் எதையும் விடாமல் கவனித்த படியே பேசினார்.

 

பேசப்பேச ஜார்ஜ்மேயருக்கு இராமநாதனிடம் ஏதோ இருக்கிறதென்று பட்டிருக்கவேண்டும்.

 

தனது தந்தையைப் பற்றியும் அவரது தந்தை அதாவது தாத்தா பற்றியும் சொன்னார் இராமநாதன். அதற்குமேல் தனது குடும்பம் பற்றித் தெரியாதென்றார்.

 

ஜார்ஜ் மேயர், இராமநாதனின் தாய் பற்றிக் கேட்டபோது தாயின் பழக்க வழக்கங்கள், தாயின் மரணம் பற்றியெல்லாம் சொல்லிவிட்டுத் தாயின் தாய், அதாவது தனது பாட்டி பற்றி ஓரளவு தெரியும் என்றார் இராமநாதன். தெரிந்ததைச் சொன்னார்.

 

அவர்களுக்கு முந்தியுள்ள யாரையும் தெரியாதா என்று கேட்ட ஜார்ஜுக்குத் தெரியாது என்றார் இராமநாதன். அப்படியென்றால் உங்களுக்குக் குழந்தை இல்லை. எனவே உங்கள் அறிவு மூன்று தலைமுறை வரை மட்டுமே விரிந்தது. அதற்கு முன்பும் யாரைப் பற்றியும் ஒன்றும் தெரியாது. உங்களுக்குப் பின்பும் எதுவும் தெரியாமல் போகப்போகிறது என்றார். உங்கள் மரணத்தோடு மூன்று தலைமுறைகளின் சரித்திர ஞாபகம் முற்றுபெற்று விடும்.

 

இராமநாதன் ஆச்சரியத்துடன் ஜார்ஜ் மேயரைப் பார்த்தார்.

 

உங்கள் நாகரிகத்தை மிகவும் பழமை வாய்ந்தது என்று எல்லோரும் பொய் சொல்கிறார்களே என்று மீண்டும் அந்த வெள்ளைக்காரர் சொன்னபோது இராமநாதன் ஏதாவது சொல்லலாமா என்று நினைத்தாலும் ஏதும் சொல்ல வில்லை.  உங்கள் ஞாபகத்தில் உங்கள் குடும்பம் பற்றிக்கூட இல்லை. இரண்டு தலைமுறை ஞாபகம்தான் உங்கள் சொத்து என்றார் வெள்ளைக்காரர்.

 

எதையோ தெரிந்தவர்போல் இராமநாதன் மௌனமானார். அது வெள்ளைக்காரருக்குப் புரிந்தது.

 

நான் நிறுத்த வேண்டும் என்று திடீரென மௌனமானார் ஜார்ஜ் மேயர்

 

அந்த மெளனம் நீடித்தது.

2.நீ புரிந்துகொள்வாய் இறுதியாக

 

வார்ஸா நகரம். வெயில் சுள்ளென்று அடிக்கும் ஜுலை மாதம். அன்னா ஸ்தானோவிச் அவனிடம் கையைக் கோர்த்தபடி ‘ஸ்தாரி ம்யாஸ்தோவ்’ என்று போலிஷ் மொழியில் அழைக்கப்படும் பழைய அந்த நகரில் நின்றபடி பேசினாள்.

 

சொல் அப்போது என்ன நடந்தது.

டக்டக் என்று அவன் கையைப் பிடித்தபடி நடந்துகொண்டே மீண்டும் கேட்டாள்.

சொல்லேன் பிளீஸ் அப்போது நான் எப்படி நடந்துகொண்டேன், ராஜா பிளீஸ் சொல்.

 

இப்போது பெரிய மைதானம் வந்தது. தூரத்தில் சர்ச் தெரிந்தது. அதன் உயரமான கோபுரமும் அதன் உச்சியில் பொருத்தப்பட்ட சிலுவை அடையாளமும் வானமேகத்துக்கு நடுவில் தென்பட்டன.

கையை விட்டாள். அவளுடைய ஸ்வெட்டரை இடுப்பிற்குக் கீழ் இழுத்தாள்.

ராஜா கோட் அணிந்து சிவப்பு நிற டை கட்டியபடி அவளுடன் நின்றான்.

. நேற்று இரவு முழுதும் அன்னா ஸ்தானோவிச் கால்கள் வலிக்க வலிக்க நடனமாடினாள்.

ராஜாவுக்கு நடனம் வராது. அது பிடிக்காது. ஆனால், அன்னாவுக்காக எதுவும் செய்யமுடியும் அவனால். அதுதான் அவனுடைய பலம் என்று நினைப்பவன். டெல்லியில் அவனது தாய் தந்தையர்கள் வசிக்கிறார்கள்.

 

சொல் ராஜா என்று மீண்டும் வற்புறுத்தியபோது சொன்னான்.

பலதும் நினைவில்லை..சரி, தொல்லை கொடுக்காதே சொல்கிறேன்.

ஆனால் உண்மையில் பல விஷயங்கள் அவனுக்கு மறந்துவிட்டன.

பரவாயில்லை உனக்கு எப்போதும் ஞாபகம் இருக்கும் என்று எனக்குத் தெரியும்.

 

உன் நம்பிக்கைக்கு நன்றி என்றான்.

சொல்.

நீ கோபத்துடன் இருந்தாய். நமக்குத்  திருமணம் ஆகியிருந்தது. இந்து முறைப்படி டெல்லியில் வைத்துத் திருமணம். நீ ஒரு ஸ்காலர்ஷிப் பெற்று டெல்லியில் நடனம் கற்பதற்காக வந்திருந்தபோதுதான்  நம்மிடையே நட்பு ஏற்பட்டது. உனக்கு இந்தியா மிகவும் பிடிக்கும். ஆனால் உன் நாட்டுக் கலாச்சாரத்தில் வளர்ந்தவள் நீ. அப்போது உனக்கு சரியாக பதினெட்டு வயது.

 

அவள் திருத்தினாள். பதினெட்டு  வருடம் ஆறு மாதங்கள். பதினெட்டரை வயது.

 

அப்போது அதிகம் வெயில் அடித்தது. அவன் அணிந்திருந்த கோட்டைக் கழற்றினான். வார்ஸா பழைய நகரத்தைப் பார்க்க  நிறைய வெளிநாட்டுப் பயணிகள் தூரத்தில் நின்ற பஸ்ஸிலிருந்து இறங்கினார்கள். பெண்களும் குழந்தைகளும் இருந்தனர். பிரஞ்சு மொழி பேசினார்கள். பெரும்பாலும் எல்லோர் கைகளிலும் காமெரா இருந்தது. அன்னாவிடமும் ராஜாவிடமும் தங்கள் தங்கள் காமெராவைக் கொடுத்து கருங்கற்களால் கட்டப்பட்ட உயர்ந்த சர்ச்சைப் பின்னணியாக வைத்துப் புகைப்படம் எடுக்கக் கூறினார்கள். பின்பு அவர்கள் மறைந்தனர்.

 

நீ டெல்லியில் நடனம் கற்கப்  போகும்போது நான் தினசரி உன்னைச் சந்திப்பேன். நாம் காதலர்கள் ஆனோம்.

 

இனி நான் சொல்கிறேன் என்றாள்.

ஓர் ஒடுங்கிய பாதை வார்ஸாவின் பழைய நகரத்தில் இருந்தது.  சூரிய நிழல் அதில்  விழவில்லை. அதில் இரு பக்கமும் தெருவில் கடைபோட்டிருந்தார்கள். ஸ்வொட்டர், பொம்மைகள், ஆம்பர் கற்கள் எல்லாம் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. வயதான டூரிஸ்டுகள் மெதுவாக வருவதும் போவதுமாக இருந்தனர்.

 

நம் திருமணம் நடந்த பிறகு இந்தியாவில் உன் வீட்டில் உன்தாயும் தந்தையும் நம் திருமணத்தை விரும்பவில்லை என்பதை அறிந்தேன். அது எனக்குப் பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தது.

 

அப்போது ஒரு மியுஸியத்தை இருவரும் பார்க்க டிக்கட் வாங்கினார்கள். ரெம்பரான்ஸ்ட் ஓவியங்கள் ஒரிஜினல் காட்சிக்கு வந்திருந்தன. தூரத்தில் யாரோ  ஒரு இந்தியக் குடும்பத்தினர் ஓவியம் பார்த்தபடி இருந்தனர். இவனைப் பார்த்ததும் அக்குடும்பத்தினர் சிரித்தனர். அக்குடும்பத்தின் மூத்த மனிதர் ஹலோ  என்றார் ராஜாவைப் பார்த்து. கோட்டைக் கழற்றி வைத்திருந்த கையை உயர்த்தி ராஜாவும் ஹலோ என்றான். பின்பு அவர்கள் போய்விட்டனர்.

 

சொல் என்றான் அன்னாவைப் பார்த்து ராஜா. அவள் தொடர்ந்தாள்.

 

நீ ஏன் உன் வீட்டினரிடம் சரியாகச் சொல்லவில்லை அவ்விஷயத்தை என்பதில் எனக்கு உன்மேல் கோபம் ஏற்பட்டது. நான் பல தடவை, நடனத்துக்குப் போகும்போது உன்னைச் சந்தித்த போதெல்லாம் கேட்டேன். அவர்கள் எதிர்ப்புச் சொல்ல மாட்டார்கள, நாம் திருமணம் செய்ய எந்த எதிர்ப்பும் இருக்காது என்றாய். நான் உன்னை முழுவதும் நம்பினேன். அதனால் என் அம்மாவுக்குப் பிடிக்காத போதும் நான் டெல்லியிலேயே உன் குடும்பத்தைத் திருப்திப்படுத்த உங்கள் வழக்கப்படி திருமணம் செய்தேன். என் தாய் தந்தையர் யாரும் வரவில்லை. உன் நண்பர்கள் மட்டும் வந்தார்கள்.

 

கல் பாவப்பட்ட பெரிய மைதானத்துக்கு, ஓவியக்கூடத்தைப் பார்த்துவிட்டு வந்தவர்களுடன் சேர்ந்து அன்னாவும் ராஜாவும் வந்தார்கள். வார்ஸாவின் அழகு அங்கிருக்கக்கூடிய சிறியதும் பெரியதுமான ரெஸ்டாரண்டுகள். வார்ஸாவின் பழைய நகரத்தில் பல ரெஸ்டாரண்டுகள் திறந்தவெளியில் அமைக்கப்பட்டிருந்தன.

 

ராஜாவின் மனம் லேசாக இருந்தது. வார்ஸாவின் காற்றில் சுத்தம் இருந்தது என்றான். அன்னா சிரித்தாள். பழைய நகரம் பிடிக்கிறது என்றான். தனக்கும் பிடிக்கும் என்றாள்.

ஒரு ரெஸ்டாரென்டில் அவள் அவனை அழைக்காமல் நுழைந்தாள். அவன் அவளைப் பின்தொடர்ந்தான். இருவரும் சாப்பிட்டனர்.

 

நீ வார்ஸாவுக்கு முதல் முதலாய் வந்திருக்கிறாய். போலீஷ் நாட்டு சாப்பாட்டைச் சுவைத்துப்பார். இந்தியச் சாப்பாட்டுக்கும் எங்கள் சாப்பாட்டுக்கும்  உள்ள வேறுபாட்டைப் பார்.

 

சில உணவுப் பொருட்களை அவனால் சாப்பிட முடியவில்லை. ஒதுக்கி வைத்தான். அவற்றை அவள் விரும்பிச் சாப்பிட்டாள். அவன் சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தான்.

உன் முடி ஏன் இப்படி நரைத்து இருக்கிறது என்றாள்.

அவன் சிரித்தான்.

 

நீ முன்பு போலவே இருக்கிறாய். பனிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எனக்குத் தெரிந்தது போலவே இருக்கிறாய். அதுவும் சாப்பிடும்போது அழகாய் இருக்கிறாய். நீ இந்தியாவிலிருந்தபோது நடனப் பயிற்சி  முடிந்த பிறகு பசியோடு இருப்பாய். மிகுந்த பசியோடு இருக்கிறேன் என்பாய். முதலில் இந்திய உணவு உனக்குப் பிடிக்கவில்லை. காரமான பொருள்களை ஒதுக்கினாய். ஒதுக்கவில்லை என்றால் இரண்டு நாட்கள் நோய்வாய்ப்பட்டிருப்பாய். ஆனால், போகப்போக உனக்கு இந்திய உணவுக்கு உடம்பு ஒத்துக்கொண்டது. எதையும் சாப்பிடுவாய். எனக்கும் நீ தான் சாப்பாடு வாங்கித் தருவாய். மகோன்னதமான நாட்கள் அவை. நான் நிறைய கனவுகள் கண்ட நாட்கள் அவை.

 

ரெஸ்டாரண்டிலிருந்து இருவரும் வெளியில் வந்தனர். சற்றுதூரம் நடந்தபோது ஒரு பழைய கட்டடம் இருந்தது. பல பயணிகள் அதன்  உள்ளே நுழைந்தனர். அன்னாவும் ராஜாவும் உள்ளே நுழைந்தனர். போலிஷ்நாட்டு வரலாறு  அங்கு விளக்கப்பட்டுகொண்டிருந்தது. அவர்கள் நாட்டுச் சரித்திரத்தின் முக்கிய கட்டங்கள் ஒலி ஒளி மூலம் போலிஷ் பாஷையிலும் ஆங்கிலத்திலும் யாரோ விளக்கினார்கள்.

வெளியே வந்தபோது அவனுக்கு வெறுமையாக இருந்தது.

அதன் பிறகு அவள் ஏதும் பேசவில்லை. அன்னா தனக்கு நேரமாகிறது என்று திடீரென்று புறப்பட்டாள். நீ புரிந்துகொள்வாய் என்றாள் இறுதியாக.

 

மறுநாள் காலை ராஜா புறப்பட்டான். அவளுடன் வாழும் பத்து வயதான அவனுடைய மகளை ஒருமுறை பார்க்கலாம் என்று  கருதி வந்தவன் அவன். மகளை அவள் காட்டாததோடு அவளுடைய புதிய கணவனையும் அறிமுகம் செய்ய மென்மையான குரலில் அன்னா மறுத்தது அவன் எதிர்ப்பார்த்ததுதான்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>