தமிழவன் நடனக்காரி…நூல்

 

‘புது எழுத்து’ வெளியிட்டுள்ள குறுங்கதை நூல் பற்றிய தமிழவனுடனான ஒரு உரையாடல்

 

கேள்வி:       சமீபத்தில் வந்துள்ள உங்கள் குறுங்கதைத் தொகுப்பான   “நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்” நூல் பற்றிச் சொல்லுங்கள்.

பதில்:          அது சிறிய வடிவத்தில் கதைகளைக் குறுக்குவதால் ஏற்படும் அழகியல் விஸ்தீரணம் பற்றிய பரிசோதனையின் மூலம் எழுத்தின் பரிமாணத்தை அடைவது எப்படி என யோசிக்கிறது.

கேள்வி:       அப்படியென்றால்?

பதில்:          போர்ஹேஸ் என்ற எழுத்தாளர் கதைகளையும் விமரிசனத்தையும் கவிதைகளையும் ஒன்றுபோல எழுதுவார். கட்டுரைகளும் கதை களின் உத்தியில் எழுதுவார். அதாவது ஒரு நாவலாசிரியன் பற்றி உரைநடை எழுதும்போது உரைநடை, நாவலின் அழகியலைப் பெறும். நான் போர்ஹேஸிடமிருந்து குறுக்குதல் மூலம் அழகியலை உருவாக்குவது என்று பலகாலமாகக் கற்று வருகிறேன். ஆங்காங்கு என் படைப்புகளில் நாவல், சிறுகதைகளில் – இந்த உத்தியைப் பயன்படுத்தி வருகிறேன். சில இளம் படைப்பாளிகள் இந்த என் உரைநடையைக் கவிதை வரிகளாக மாற்றி வெற்றி பெற்றுள்ளனர்.

கேள்வி:       அதனால்தான் எல்லாக் கதைகளும் சிறியதாக்கப்பட்டுள்ளனவா?

பதில்:          ஒவ்வொரு கதையும் அந்தந்த இடத்தில் முடிந்துபோய்விட்டன. தொடக்கமும் முடிவும் என்பன வாழ்க்கை என்னும் நெரேஷனில் (கதையாடலில்) முக்கியமான இரண்டு புள்ளிகள். வாழ்வின் வேவ் லெங்க்த் (Wave length) இலக்கியத்தின் – முக்கியமாய் கதைசொல்லலின் – அலைநீளத்துடன் ஒன்றாவது இப்படித்தான்.

கேள்வி:       இது எல்லாவித பொதுவான கதைக்கும் நாவலுக்கும்கூட பொருந்ததும். ஆனால் உங்கள் இந்தத் தொகுப்பு வேறொரு பண்பைக் கூட அடிப்படையாய் கொண்டிருக்கின்றது போல் உள்ளது. அதற்கு வருமுன்பு பிற படைப்பாளர்கள் யாராவது இப்படிக் குறுக்கி எழுதியுள்ளார்களா?

பதில்:          பலர் எழுதியுள்ளனர். போர்ஹேஸின் ‘Borges and I என்ற அரைப்பக்க கதை படித்திருக்கிறீர்களா? அதில் கதைசொல்லியும் போர்ஹேஸ். பாத்திரமும் போர்ஹேஸ். நான் அந்த உத்தியை எடுக்கவில்லை. ஏனெனில் அது இலக்கியத்தைத் தத்துவமாக்கத் துடிக்கிறது. அதில் எனக்குச் சலிப்புத் தட்டுகிறது. தமிழில் மாடர்னிசக் கட்டத்தில் வண்டிவண்டியாக்க் கவிதை, இப்படி எழுதி போரடிக்க வைத்துவிட்டார்கள். நான் கதையைக் கவிதைபோல் எழுதுவதை ஏற்காத காரணத்தால் இந்த வடிவத்தை எடுத்தேன். குறுக்கும் செயல் ஒன்றுதான் கவிதையின் செயல்……….

கேள்வி:       விளக்குங்கள் இதை; குறுக்குவது எல்லாம் கவிதையா?

பதில்:          நான் சொல்வது வேறு. கவிதை என்பது கதையற்ற “மொழிமை” ஆகும். கதை என்பது கவிதையற்றதாக இருக்கவேண்டும். கவிதையின் “உள்ளே போதல்” தன்மை வேறு ஒரு மனித நாகரிகம். கதையில் இதற்கு எதிரான ‘வெளியே போதல்’ தான் உண்டு. ஒன்று Centrifugal. இன்னொன்று Centripetel ஆகும். அதனால் இந்த எல்லாக்  கதைகளும் கவிதைக்கு எதிராய் எழுதியதுதான். போர்ஹேஸின் Borges and I என்ற கதை, தத்துவமாகையில் கவிதைக்கும் கதைக்கும் மத்தியில் ஒரு சமரசத்தைச் செய்கிறது. நான் அதை ஏற்கவில்லை. போர்ஹேஸ் தத்துவத்திலிருந்து கதையை உருவாக்குவார். அதுவேறு. சுருக்குதல் என்பதை ஒரு செயல் பாடாய் நான் ஏற்கையில் இந்தக் கதைகள் எனக்கு எழுத முடிந்தன. கற்றுக் கொடுத்தவர் போர்ஹேஸ். அதை நான் வேறு காரியத்துக்குப் பயன் படுத்துகிறேன் இதற்குப் பல காலமாகப் பயிற்சி செய்தேன். பத்தாண்டுகளுக்கு முன்பு நான் படித்த ஆங்கில நாவல்களைச் சுருக்கி எழுதி வைத்தேன். பிறகு அவை எங்கோ போயிற்று. இந்தக் கதைகளை 2 வருடங்களுக்கு முன்பு எழுதினேன். முருகன் (மனோன்மணி) உற்சாகம் காட்டினார். அதனால் பிரசுரம் ஆகின்றன.

கேள்வி:       நீளமாக எழுதுவதற்கும் குறுக்குவதற்கும் இப்படிப்பட்ட முக்கியத்துவம் உள்ளனவா?

பதில்:          உள்ளன. தலையணை ஸைஸ் நாவல்களுக்கு எதிராய் மைக்ரோ நாவல்கள் தோன்றி வருவது பற்றி நடக்கும் சர்ச்சையைக் கவனித்திருப்பீர்கள்.

கேள்வி:       வேறு யார் யார், அளவுக்குறுக்குவதை அழகியலுக்குரிய செயல்பாடாய் செய்கிறார்கள்?

பதில்:          அஸ்கார் வைல்ட் என்ற ஆங்கில எழுத்தாளரைப் போர்ஹேஸிற்கு அதிகம் பிடிக்கும். அஸ்கார் வைல்ட், அபோரிசம் (Aporism) என்ற பொன்மொழிகள் அளவு படைப்பைச் சுருக்குவார். அது ஒரு எல்லை. இதிலிருந்து தத்துவமாக்கி graphic novel-க்குக் கூட வர முடியும். புத்த ஜாதகக் கதைகள், நம் நாட்டுப்புறக்கதைகள், Myths என்கிற தொல்கதைகள் இவற்றிலும் கருத்தில் குறுக்கம் செயல்படுகிறது. சினிமா, குறும்படம் மேற்கில் இப்படிப்பட்ட தத்துவத்தில் செயல் படுகிறது.

கேள்வி:       இப்படியெல்லாம் தெரிந்துகொண்டால்தான் நீங்கள் இந்தக் கதை களை எழுத முடியுமா?

பதில்:          தேவையில்லை. இவையெல்லாம் குறுக்கத்தின் பின்னணிகள் என்று சொன்னேன். நம் இன்பத்துப்பால் சார்ந்த திருக்குறளுக்கும் குறுந்தொகைக்கும் அகநானூறுக்கும் ஒப்பிட்டுவிட்டுப் பத்துப் பாட்டுக்கும் அதன்பின்பு சிலப்பதிகாரத்துக்கும் போகமுடியும்.

கேள்வி:       உங்களின் இந்தத் தொகுப்புக்கு வருவோம். எடுத்துப் படித்ததும் மொழிநடைக்கும் புனைகதைக்கும் நடுவில் ஒரு கொக்கி போட்டு இருக்கின்றன எல்லாக்கதைகளும். அதைப்பற்றிச் சொல்லுங்கள்.

பதில்:          இட்டாலோ கால்வினோ என்ற இத்தாலிய புனைகதை எழுத்தாளர் அமைப்பியல் நன்கு கற்றவர். அவர் நாட்டுப்புறப்பாடல்களில் உள்ள பொருட்படுத்தத் தகாத தகவல் ஒரு பிரம்மிக்கத்தக்க புனைவு எழுச்சியைத் தனக்குள் கொண்டிருக்க முடியும் என்கிறார். உதாரணத்துக்கு ‘ராஜாவுக்கு உடல்நலமில்லாமல் ஆனது என்று கதை தொடங்கும், ஏன் உடல் நலமில்லை என்றோ அப்படி எத்தனைநாள் ஆயிற்று என்றோ தகவல் இருக்காது. நோய் எந்த மருந்து தின்றாலும் தீராது. ஒரு மருத்துவர் வந்து மருந்து சொல்வார். ஆனால், மருத்துவர் சொல்லும் மருந்து எங்கும் கிடைக்காது. அப்படிப்பட்ட அபூர்வ மருந்து. இதுதான் கதைக்குள் ஒரு புதிய ஆர்வத்தை ஏற்படுத்தும் கண்ணி. நல்ல புனைவில் இதுபோன்று கண்ணிகள் இருந்து எழுதுபவன் – வாசகன் உறவை இலக்கிய அதிர்வலைகளாய் உருவாக்கிக் கொண்டே போகும். இது ஒரு blindspot; விளக்கமுடியாதது. உதாரணமாய் நீங்கள் சொன்ன விஷயத்துக்கு வருவோம் மொழிநடையும் கதைமையும் பின்னிப் பிணைந்திருப்பது பற்றிக் கேட்டீர்கள்.

கேள்வி:       நான் எதைக் கேட்டேன் என்றால்…,

பதில் :       ஓருதாரணம் தருகிறேன். என் தொகுப்பில் 16-ஆவது கதை: தலைப்பு – யாருக்கும் தெரியாதது.கதை இப்படிதொடரும்………..

‘யாரிடமும் பேசாதவர்’ இது நண்பன்.

‘நீ என்ன சொன்னாய்?’ என்றான் நண்பன். பக்கத்தில் ஏதோ இரும்பை அடித்தார்கள்.

‘வித்தியாசமான மனிதர்’ என்றேன் நான். அப்போதும் இரும்பை யாரோ அடித்தார்கள். நான் நண்பனுக்குக் கேட்காது என்று மீண்டும் சொல்லப்போனேன். அவன் என்னைத் தடுத்தான்.

‘வித்தியாசமான மனிதர் என்றுதானே சொன்னாய்’ இது நண்பன்.

பதில்:          இந்த மேற்கோள் மூலம் ஒரு சுழற்சி உரையடைக்கு உதாரணம் காட்டுகிறீர்கள். அந்தக் கதை ஒரு கடலோரமான ஊரில் உள்ள லாட்ஜில் நடக்கும் யானைக்கால் நோயுள்ளவனின் தற்கொலை பற்றியது. அவனை யாருக்கும் எப்படிப்பட்டவன் என்று தெரியாது. ஆனால் அவனைப் பற்றிச் சொல்வது அவன் அழகாக விளம்பரப் பலகை எழுதுபவன் என்பது. வித்தியாசமான மனிதர் என்ற வாக்கியம் சுருண்டு சுழல்கிறது. அதன்மூலம் ஒரு stillness அதாவது அசைவின்மை வெளிப்படுகிறது.  அதுதான் தற்கொலை செய்பவனைக் கதையாக்குகிறது. இதனை மாயஎதார்த்தம் என்றும் சொல்லலாம். எதார்த்தக் கதை மாய எதார்த்தமாகும் உத்திதான் அசைவின்மை. எனவே, உரையாடலும் உள்ளடக்கமும் பிணைந்து நிற்கின்றன.

கேள்வி:       இந்த Stillness பற்றி விளக்குங்கள். ஏனெனில் முதன்முதலாக அசைவின்மையை ஒரு உத்தி என்கிறீர்கள். தமிழில் செய்யுளியலில் (தொல்காப்பியம்) பல உத்திகள் பற்றி சொல்கிறது. அசைவின்மை -யைத் தொல்காப்பியம் சொல்வதில் எந்த உத்தி என்று சொல்லலாம்?

பதில்:          நேரடியாகச் சொல்ல முடியுமா என்று பார்க்க வேண்டும். எழுத்து என்று செய்யுளியலில் தொடங்குகிறது. செய்யுளியலில் வரும் ‘எழுத்து’ Stillnessதான். பார்க்க மட்டுமே முடியும். ‘தளை’ கூட இரண்டு அசைகளைப் பூட்டி அசைவற்றதாக ஆக்குவதால் Stillness என்றே கூறவேண்டும். நீங்கள் சொன்னதுபோல் அசைவின்மை பற்றி நான் பேசியது இல்லை, இதுவரை. இந்த மேற்கோளில் இரும்புச் சப்தம் இருவரும் பேசுவதை மாறிமாறி கேட்கவிடவில்லை. ஒரே வார்த்தையை இருவரும் மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள். Waiting for Godot என்ற பெக்கட்டின் நாடகக்காட்சிபோல் உரையாடல் அமைகிறது.

கேள்வி:       தொடர்ந்து   ‘அசைவின்மை’ பற்றிப் பேசுவோம். உரையாடலில் அசைவின்மை; வேறு எதில் அசைவின்மை இருக்கிறது.

பதில்:          கதைமுடிவுகளில் கதையின் இயக்கம் நிறுத்தப்படுகிறது. இது எளிதான உத்தி. ஆனால், பல கதைகளில்– வழக்கமான கதைகளில் கதைமுடிவில் அது முடியாது. இயங்கும்படியும் முடிக்கலாம். இயங்காத படியும் கதைக்கு முடிவு கொடுக்கலாம். என்னுடைய இந்தப் புத்தகக் கதைகள் எல்லாம் இயங்காதபடி முடிக்கப்படுகின்றன. இயக்கமின்மை கல்லின் தன்மை. சிலப்பதிகாரத்தில் கண்ணகி கணவன் தவறு செய்ய வில்லை என்றவுடன் அரசனும் அரசியும் மரணமடைவது கல்தன்மை பெறுவது – Stillness – ஆகும். அடுத்து கண்ணகி உயரமான மலையில் தோன்றி இறந்தவன் எழுந்துவர சொர்க்கம் போவது Stillness-க்கு எதிரான Lightness ஆகும். இதுபற்றி எழுத்தாளர் கால்வினோ எழுதியிருக்கிறார். எனக்கு இந்தத் தொகுப்பில் கால்வினோவிற்கு எதிரான மனநிலையே உயர்ந்தது எனத் தோன்றுகிறது. சுழல்தல் என்பது நீரின் தன்மை. நீர்தான் Still ஆக நிற்கும். எனக்கு அசையா நீரின் தன்மையை அழகியலாக்க இக்கதைகள் உதவுகின்றன.

கேள்வி:       ஒரு கதையை உதாரணமாக்கி நீங்கள் இப்போது  பேசுவதை விளக்கமுடியுமா?

பதில்:          நான் நாட்டுப்புறக்கதைகளில் இருந்து இதனைக் கற்றேன். பிராப் என்ற ஆய்வாளர் (ரஷ்யா) எல்லாவித உலகத் தேவதைக் கதை களும் திருமணத்தில்தான் முடியும் என்று சொல்கிறார். நான் நாட்டுப்புறக் கதைகளில் பல்கலைக்கழகத்தில் என் முனைவர் பட்டத்தைப் பெற்றவன். பல ஆராய்ச்சிகள் என் முனைவர்பட்ட மாணவர்களுடன் செய்துள்ளேன். கதைகளின் உள்ரகசியம் Still ness என்று அப்போது கண்டுபிடித்தேன். ஆயிரக்கணக்கான பிரிவுகள் இந்த ஸ்தம்பித்த நிலைக்கு உண்டு. ‘ஹர்ஷவர்த்தனர் அறிவு’ என்று ஒரு கதை இந்தத் தொகுப்பில் உள்ளது. அரசர் ஹர்ஷவர்த்தனர் நடக்கையில் பலரை எதிர்கொள்கிறார். ஒவ்வொருவரும் ஒரு பதிலைச் சொல்லிச் செல்லுவதுதான் கதை. தொகுப்பிலேயே மிகச்சிறிய கதையற்ற கதை.  எல்லோரும் அசைகின்றனர். ஆனால், அசைவின்மையை உணரமுடியும. கதையைப் படித்த பின்பு, கதை தொடக்கம், கதைமுடிவு என்பவை கூட இக்கதையில் இல்லை என்பீர்கள். இது ஜாதகக் கதைகளின் அழகியல் தத்துவம். அதுபோல் இன்னொரு கதை. மூன்றுநாள் சைக்கிள் ஓட்டுபவன் நடத்தும் நிகழ்ச்சி பற்றியது. தந்தை ஒருவருக்கும் மகனுக்கும் உள்ள உபகதை ஒன்று சைக்கிளின் சுழற்சியோடு இணைகிறது. சைக்கிள் ஓட்டும்போது பாருங்கள். அது Stillness ஆகும். சைக்கிள் அசைவு ஒரு விதம் ரயில் அசைவு, கார் அசைவு வேறுவிதம். காளைவண்டி சைக்கிள் போன்றது. அந்தக் கதையின் பெயர்: அற்புதம். சைக்கிள் போல் ஒரு மைதானத்தில் சுழல்கிறது கதை. சைக்கிள் ஓட்டுபவன் பற்றிய சம்பவங்களுக்குள் தந்தை – தனயன் கதை உபகதையாக நுழைந்து அந்த அசைவின்மையை வலிமைப்படுத்துகிறது. இந்த உத்தி பல கதைகளில் பயன்படுத்தப் படுகிறது. அல்லது அல்லது பிற உத்திகளுடன் இந்த உத்தியும் ஒருமிக்க ஒரே கதையில் காணப்படுவதும் உண்டு. உதாரணமாக யானைக்காலனின் தற்கொலை பற்றிய கதையில் பல்கலைக்கழக மாணவன் கதைமுடிவில் தற்கொலை செய்தவனின் அறையை மறுநாள் பார்க்கும்போது இன்னொருவன் அவ்வறையில்  தங்க வந்திருப்பது தெரிகிறது. தங்குவதற்குப் பலர் காலியாகும் அறைகளுக்காக காத்திருப்பதும் தெரிகிறது. அத்துடன் புதிதாய் வசிக்க வந்து இருப்பவனுக்கு யானைக்கால் இல்லை என்று கதையின் இறுதி வரி முடிகிறது. அதாவது கதைகள் ஆலமரத்தின் விழுதுகள் போல் ஒன்றிலிருந்து இன்னொன்று முளைத்துக் கொண்டேயிருக்கிறது. யானைக்கால் உள்ளவனுக்கும் யானைக்கால் இல்லாதவனுக்கும் ஆன வித்தியாசம் ஒரு பார்க்கத்தக்க படமாய் கதைமுடிகையில் உருவாகையில் முகத்தில் திடீரென எதிர்பாரா திசையிலிருந்து வீசப்பட்ட கல் வந்து விழுவதுபோல் உணர்கிறோம்.

கேள்வி:       அசையாத நீரின் தன்மை என்று கூறுகிறீர்கள். அதில் ஒரு மர்மமும் இருக்கிறதென்று கூறலாமா? உதாரணமாக உங்கள் இந்தத் தொகுப்பில் ‘பழைய நாணய விற்பனை’ என்று ஒரு கதை உள்ளது. அதற்கு வருவோம். டௌன் ஹாலின் முன்பு பழைய நாணயங்களைப் பார்க்கிறான் ஒருவன். பழைய நாணயம் விற்பவர் ஒரு முஸ்லீம். விநோதமான நாணயங்கள் காணப்படுகின்றன. தவறாக அடித்து உருவாக்கப்பட்ட நாணயங்கள் ஆகையால், அதனை Mint செய்த அரசர்கள் செலாவணிக்கு விடவில்லை. பல கைகள் என்று சிதைக்கப்பட்ட – அல்லது புராணத்தன்மை கொண்ட நாணயங்கள். கதைமுடியும்போது – ஏனெனில் முடிவுகள் தானே அர்த்தக்கோப்பை உருவாக்குபவை- நாணயம் பார்க்க  வந்தவனின் மேலாடை விழுகிறது. அவனுக்கு ஒரு கையில்லை. ஒரு மர்மம் எழுந்து கதையை மூடுகிறது. திறக்கவில்லை. சரிதானா இப்படிப் பார்ப்பது?

பதில்:          அழகாகச் சொல்கிறீர்கள். சரிதான். இந்த மர்மம் நீருள்ள ஆழ்ந்த கிணற்றில் சூரியன் நடுவில் வரும்போது தண்ணீர் தெரியுமே. அதுபோன்ற மர்மம். அதுதான் Stillness என்கிறேன்.  ஒவ்வொரு கதையிலும் இந்தத் தேங்கிய நீரின் உள்ளுள்ள மர்மம்தான் மையம். அதற்கு உயிர்கொடுப்பதற்கும் உயிர்த்தெழ வைப்பதற்கும்…..

கேள்வி:       மர்மத்தை உயிர்த்தெழ வைக்க முடியுமா?

பதில்:          வழக்கத்தில் முடியாது. ஆனால், கதைசொல்லுதலில் – கதை யாடலில் – முடியும். கதையை இறுக்க வேண்டும். விரிக்கக் கூடாது.

கேள்வி:       உங்கள் மைக்ரோ நாவலான ‘முசல்பனி’ என்பதிலும் இதே முறைதான் வருகிறது.

பதில்:          ஆமா. 1000 பக்கம் என்று சிலர் கதையை அவிழ்த்துவிட வருகிறபோது மர்மத்தை நாசப்படுத்துகிறார்கள். ஒரு வகையில் இலக்கியத்துக்கு எதிரானவர்கள் அவர்கள். விவரணையின் தொடர்ச்சி அது.  அது மட்டுமே இலக்கியமல்ல. எனக்கு விவரணையை கதையின் உள்உந்துதலுடன் முடிச்சுபோடும் போது எழும்பும் Energy யோட பேச வைப்பதில் ஈடுபாடு உண்டு. என் சமீபத்திய நீண்ட சிறுகதைகளிலும் இதைப்பார்க்கலாம். மலைகள்.காம் கணினி இதழில் தலைவன் என்ற தலைப்பில் இப்படி ஒரு கதை எழுதி உள்ளேன். பிரபாகரன் பற்றி.சரி பேசிக்கொண்டு வந்த விஷயம் தடம் மாறுகிறது. இந்தத் தொகுப்பில் அதிமர்மமான கதைகளில் ஒன்று ‘பழைய நாணய விற்பனை’. அக்கதைகளில் பல முடிச்சுகள் உண்டு. மர்மம் வேறு, முடிச்சு வேறு. ஓரிடத்தில் அந்த முஸ்லீமின் துணைவியார் வருவர். இருவரும் ரகசியமாய் ஏதோ பேசுவார்கள். தன் மகன் ISIS-இல் சேர்ந்து வருவான் என்று பயப்படுகிறார்களோ தெரியாது. கால்வினோ ஒரு பாடம் சொல்வார். அதைக் கற்க வேண்டும். வியாக்கியானம் அதிகம் செய்யக்கூடாது என்பார். எப்போதும் வியாக்கியானத்தை மீறி நல்ல கதையில் ஏதோ கொஞ்சம் இருக்கும். அவர் Myth பற்றிச் சொல்வது நவீனக் கதைக்கும் பொருந்தும்…

கேள்வி:       ஒரு நிமிடம். நவீன கதை என்ற சொல் வந்தவுடன் எனக்கு ஒரு கேள்வி. இந்தத் தொகுப்புக் கதைகளை நாட்டுப்புறக்கதைகள், அல்லது தொல்கதை (Myth) என்று கூறமுடியுமா? உங்கள் பதில் என்ன?

பதில்:          இல்லை.

கேள்வி:       நான் வேண்டுமென்றே கேட்கிறேன்.

பதில்:          சில கதைகளின் களம் போலந்து நாடு. ‘பூதாகரமான மனிதர்’ என்ற கதையில் போலந்து நாட்டுப் பாத்திரங்களும் இந்திய நாட்டுப் பாத்திரங்களும் வருகின்றன. மார்த்தா என்ற நூலகர்தான் மையப்பாத்திரம். அவருடைய தந்தைதான் பூதாகரமான தோற்றம் கொண்ட போலிஷ் மொழி மட்டுமே அறிந்த மனிதர்.  இந்தியர் களுக்கு, அந்த மொழி தெரியாததால் மார்த்தா மொழிபெயர்த்துச் சொல்லச்சொல்ல கதைமுன்னேறுகிறது.மொழிபெயர்த்தல் என்ற செயலைப் பற்றி யோசித்துப் பாருங்கள். முழுவதும் நாம் வார்த்தை க்கு வார்த்தை மொழிபெயர்ப்பதில்லை. ஒரு வகை மர்மம் உற்பத்தியாகிறது. அதனுடன் பூதாகரமான மனிதர் கற்பனையாய் உருவாக்கும் இல்லாத குடும்ப உறுப்பினர் பற்றி மார்த்தா விளக்குவதுடன் கதைமுடிகிறது. இந்தக் கதை ஒரு வகை Mythதான். ஆனால் என் குறுங்கதைகள் எல்லாம் நீள்கதை வடிவத்தின் குறுக்கத்தையும் தொல்கதையின் ஆழத்தையும் கொண்டவை.

கேள்வி:       சரி. இப்படி மாற்றிக் கேட்கிறேன்: நவீனக் கதையில் தொல்கதை என்ற Myth-யை நுழைக்கிறீர்களா? ஏனெனில் தொல்கதைகளில் ராட்சசர்கள் வருவார்கள். ராட்சசர்கள் என்றால் மனிதனை மீறிய சக்திகள். இன்று சூப்பர்மேன். இந்தப் பூதாகரமான மனிதர் என்ற குறுங்கதையில் அந்த மனிதர் ராட்சசர் போலத்தான். அவரை ஒரு வண்டியில் வைத்துத் தள்ளிக் கொண்டு வருகிறார்கள்.

பதில்:          ஆமா. சரிதான். ஒன்று நீங்கள்கவனிக்க வேண்டும். அதனால் அந்த மனிதர் தொல்கதையில் வரும் முழுமையான பாத்திரம் அல்ல. தொல்கதை விளக்கமுடியாத பலப்பல வியாக்கியானங்களுக்குக் கொள்கலன். அந்த விளக்கமுடியாத தன்மையின் அழகை அந்தக் கதைக்குள் கொண்டு வரவேண்டும். அதேநேரத்தில் அக்கதை நவீனக் கதையென்பதையும் மறக்கக்கூடாது. அதாவது Stillness, மர்மம் இப்படி எத்தனையோ சொற்களை வைத்து விளக்கினாலும், விளக்க முடியாமல் மிஞ்சுவதுதான் இலக்கியம். ஆகையால் தொல்கதையின் ஒரு பாத்திரத்தையோ, கதையையோ அக்கதை உள்செருகி வைக்கவில்லை. இரண்டு வடிவங்கள் (தொல்கதை, சிறுகதை) வாசகனுக்கு நல்கும் படிமங்களை இணைப்பது என்று கூறலாம்.

கேள்வி:       கருத்துக்குப் படிமம் (Images) உண்டு. இப்போது வடிவத்துக்கும் வடிவம் உண்டு என்று சுட்டிக்காட்டுகிறீர்கள்.

பதில்:          ஆமா. படிமம் என்பது நிழல். மரத்தின் நிழல்போல கருத்து ஒன்றின் நிழல் படிமம். வடிவத்தின் நிழலை, அந்த வடிவத்தின் படிமம் என்கலாம்.

கேள்வி:       சிறுகதைக்கும் நிழல் உண்டு. அதனையும் இக்கதைகள் பயன் படுத்துகின்றன அல்லவா?

பதில்:          ஆமா. நல்ல ஒரு உரையாடல்.  இங்கே முடித்துக்கொள்ளா விட்டால் அந்தத்தொகுப்பின் கதைகளைப் படிப்பவர்கள் எதையோ தாமாகக் கண்டுபிடிக்கும் இன்பம் கிடைக்காது.

கேள்வி:       நன்றி. பாரிஸ் ரிவ்யூவின் தரத்தில் ஒரு நேர்காணல் தந்தமைக்கு…

பதில்:          நன்றி.

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>