ஈசல்கள்(உயிரெழுத்தில் வந்த சிறுகதை)

ஈசல்கள்(சிறுகதை)

தமிழவன்

 

தன்னைப் பற்றிய கதை முன்பு எப்போதோ எழுதப்பட்டிருக்கிறதென்ற நினைப்பு அவனுக்கு வந்து கொண்டிருந்தது. எப்போது என்பது மட்டும் நினைவின் எல்லைக்குள் ஏனோ வரமாட்டேனென்கிறது.

அந்தக் கதை தன்னைப்பற்றியதல்ல என்று அவன் மறுக்க முனைந்தாலும் அதுவும் அவனுடையதுதான். அது தான் உண்மை. உண்மை கண்ணாடிபோல் தெள்ளத் தெளிவானது என்ற வாசகம் அவன் இப்போது வாழ்ந்த நகரத்தில், ஆறு சாலைகள் இணையும் கம்ப்யூட்டர் கம்பெனிகளுக்குப் பேர்போன சந்திப்பில், அடிக்கடி மின்ஒளியில் வந்து சென்று கொண்டிருந்தது. நாக்ஸல்பாரிகளைக் கொல்வதற்கும் முஸ்லீம் தீவிரவாதிகளைப் பிடிப்பதற்கும் போகும் போலீஸின் துணையில்லாமல் இப்படிப்பட்ட கறாரான வாசகங்களை இந்த நகரம் தினம்தினம் தைரியமாகச் சொல்வது பற்றி அவனுக்கு எந்தக் கருத்தும் கிடையாது.

பழைய சம்பவங்களை, நினைவானது அவன் அனுமதியின்றியே அவனிடம்  கொண்டுவந்து சேர்க்கும்போது அவன் ஒரு அலுவலகத்தில் அடிபட்டதும், அவனைப் போலக் கீழ்மட்டத்தில் பிறந்து வந்த ஓர் அலுவலக உயரதிகாரியின் தூண்டுதலால் கழுத்தைப் பிடித்து நெட்டி வெளியில் துரத்தப்பட்டதும் இன்னொருவனுக்கு (எப்போதும் அவனுடன் அவனுக்குத் தெரியாமல் வாழும் இன்னொருவனுக்கு)நிகழ்ந்தவை எனப் புரிந்து கொள்வான்.

தன் சான்றிதழிலிருந்து தான் வெறுக்கும் சாதிப்பெயர் நீக்க யாராலும் முடியாதென்பதைப் புரிந்த பின்புதான் இந்த அலைதல் தொடங்கியது.

அவன் அங்கீகரிக்காவிட்டாலும் அவனை ஒரு புண்ணியவானின் பெயரால் அழைத்தார்கள். அவனைக் கௌதமன் என்று அழைக்கும்போது எப்போதும் அவன் பதில் கொடுத்ததில்லை. யாரையோ அழைக்கிறார்கள் என்றே நினைத்திருக்கிறான். தன் பெயர் வின்சென்ட் என்றோ, லியோபால்ட் என்ற துரை.பாலசுப்பிரமணியன் என்றோ அல்லது குச்சின்ஸ்கி, லியோ டால்ஸ்டாய் என்பது போன்ற ரஷ்யப்பெயர்கள் என்றோ நினைத்துப் பல காலங்கள் ஆகிவிட்டன. அதாவது 35 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே தெளிவற்ற ஒலிகள் வாய்களால் எழுப்பப்படும்போது என்ன என்று ஷாக் அடித்தவன் போல கேட்டபடி திரும்பித் தன்னைத் தேடுவது யார் என்று பார்த்திருக்கிறான். இது பல முறை நடந்திருக்கிறது என்றால் நீங்கள் நம்பவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அவன் ஒற்றை அறையுள்ள வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்த பகுதிக்குப் பெயர் ‘ஏ’ பிளாக் என்பது. மோசமாகக் கட்டப்பட்ட கட்டடங்கள் தீப்பெட்டிக் கோபுரம் போல் கட்டப்பட்டு நான்கு ஐந்து மாடிகள் இருந்த பகுதி அது. பக்கத்தில் ஒரு சயரோக சானிட்டோரியம் இருந்தது. நோயாளிகளை ஏற்றியபடி மிகமோசமான ஆட்டோ ரிக்க்ஷாக்கள் பெரிய சப்தத்துடனும், அதிகமான கரும்புகையை எமிஸன்குழாய் வழி வெளியேற்றியபடியும் அடிக்கடி சானிட்டோரியத்துக்குப் போகும் பகுதி அது. அப்போது நகரம் அதிகம் விரிவு பெற்றிருக்கவில்லை. வயல்களை நிரப்பி யாரும் வீடு கட்டும் பகுதியாக ஆக்கி இருக்கவில்லை. காலையிலும் மாலையிலும் ஒரே ஒரு பஸ் வந்து போகும். மாநிலத்தின் தலைமை நிர்வாகம் அந்த ஊரிலிருந்து நடைபெறுவதால் சிறுசிறு கைப்கைளில் அமுக்கி வைத்திருக்கும் அலுமினிய டிபன் பாக்ஸில் சமைத்த சோறு நிறைத்து ஆண்களும் பெண்களும் அலுவலக வேலைக்குக் கரிசனத்துடன் அலுவலகப் பஸ்ஸில் காலையில் புறப்பட்டு மாலையில் வீடு வருவார்கள். இவர்கள் என்னதான் சாதிக்கிறார்கள் என்று எல்லோரையும் கேட்டுவிட்டுக் கடைசியாக அவனுடன் ஒற்றை அறைவீட்டில் தங்கும் பெண்ணிடம் கேட்டான்.

அப்பெண் அவனைப் பார்த்து வேறு ஏதோ சொன்னாள்.

அவனுக்குக் கேட்கவில்லை.

கைச்சைகையால் என்ன என்று கேட்டான்.

“செவிடு, கைலியைச் சரியாகக்கட்டு” என்றாள். அப்போதுதான் பார்த்தான் காலையில் தான் படுத்திருந்த பாயைச் சுருட்டாமல் பீடியை இழுத்தபடி வாயில் கோளையுடனும் கண்களில் பீழையுடனும் இருப்பதையும் தன் அழுக்கு அரைஞாண்கயிறு தெரிய கைலி இடுப்பிலிருந்து கழன்று கிடப்பதையும்.

அந்த  அலுவலகத்தில் அன்று, பல ஆண்டுகளுக்கு முன், தான் வாங்கிய அடியைப் பொறுக்காமல் அவள் தனக்கு ஒரு காலத்தில் அடைக்கலம் தந்தவள். அந்த அலுவலகத்தை விட்டு வந்து விடு என்று சொன்னவுடன் பெட்டியுடன் தன்னுடன் வந்தவள் என்று நினைத்தான்.

“கைலி இடுப்பில் கட்டப்படத் தக்கதா” என்பது போல் பார்த்துவிட்டு மீண்டும் பாயில் படுக்கப் போனவனிடம் முதுகைக் குனிந்துகாட்டி ரவிக்கையின் பின்பக்க பின்னைப்போட வைத்தாள் அவள்.

பின்பு கிளம்பினாள். அவனைத் திரும்பிப்பார்க்கவில்லை. அவளின் ரவிக்கைக்கும் பின்பக்கத்துக்கும் இடையில் மாநிற உடல் தெரிந்தது. இன்று ஏனோ மனதில் எந்த உணர்வும் தோன்றவில்லையே என்ற நினைப்பு வராததை நினைத்தான். தான் இப்போதெல்லாம் இப்படித்தான் என்று எண்ணினான்.

நகரத்தில் எதிர்கட்சிகள் நியாயம் கேட்கும் நாள். இவனை யாரும் அழைப்பதில்லை. பக்கத்து வீட்டில் அடிக்கடி தென்படும் ஒருவன் ‘இன்று மாலையில் ஊர்வலம் இருக்கிறது, நியாயம் கேட்க வேண்டும்’ என்றான். இவன் வேறு வேலையிருக்கிறதென்றான். அவன் தான் ஒருவனாய் நியாயம் கேட்பதற்குப் புறப்பட்டான் என்றும் இவனுக்குத் தோன்றவில்லை. தோன்றுதல்கள் மிக முக்கியம் என்று சொல்லிக் கொண்டான். இப்படிச் சொன்னதை மனம் பதிவு செய்து கொண்டிருக்குமோ இல்லையோ என்று சந்தேகம் வந்தது. அதனால் மீண்டும் ஒருமுறை தனது ஒற்றை அறை உள்ள வீட்டில் உரக்கச் சொன்னான்.

‘தோன்றுதல்கள் மிக முக்கியம்’

அவனுடைய அம்மா அது. அம்மாவைவிட முப்பது வயது மூத்த வயதுடையவன் அம்மாவுடன் போகிறவன். அந்த ஏரியாவில் அவன் பெரிய ரௌடி என்று பெயர் கேட்டவன். சிறிய முகம், கூர்மையான கண்கள். ஒடுங்கிய சிறிய மூக்கு. சிறிய உதடுகளும் கவனம் கொள்ளத்தக்கவையாகும். அப்போதுதான் இவன் பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தான். இவன் அந்த வயதான ரௌடியையும் அம்மாவையும் ஒன்றாய் பார்த்தபோது இனி படிக்க வேண்டாம் என்று முடிவுகட்டினான். அன்றிலிருந்து படித்துக் கொண்டிருந்த கார்ப்பரேஷன் பள்ளியை மறந்துவிட்டான். மறந்து விடுவதும் நன்றாக வரும் இவனுக்கு.  யாரை அல்லது எதை மறக்க வேண்டுமோ அதை மிக எளிதாகச் செய்தான்.

ஒற்றை வீட்டின் வடக்கு மூலையில் பல்லி அடித்தது. பல்லியை எப்போதும் இவன் கேட்க விரும்புவதில்லை;  பார்க்கவே விரும்பியிருக்கிறான். ஆனால் மறைந்தபடியே தான் பல்லி ஒலி எழுப்பும். தைரியம் கிடையாது அதற்குத் தன் அம்மாவைப் போல என்ற நினைப்பு வந்ததும், எந்த நினைப்பும் தன்னிடம் ஒட்டிக் கொண்டிருக்கக்கூடாது என்று கருதினான். உடனே வெற்றி பெற்றான். நினைப்புகள் இவனை விட்டு அகன்றன.

இவனுடைய அம்மாவை மீண்டும் அந்த ரௌடியுடன் பார்க்கக்கூடாது என்று நினைத்ததற்கு ஒரு காரணம் அவன் தந்தை செய்த காரியம். ரௌடியைத் தன் தந்தையும் இனி பார்க்கக்கூடாது என்று  நினைத்த அன்று தாயை விட்டு ஓடிப்போனார் தந்தை. அது அவனுக்குப் பிடிக்கவில்லை.

தந்தையையும் அவனுக்குப் பிடிக்கவில்லை. அதனால் நான்கு ஆண்டுகள் கழித்து ஒருநாள் வீட்டுக்கு வந்தபோது, அது இருள் ஏறிய நேரம் எனக் கண்டான். அந்த ரௌடி தன் தாயுடன் வாசலில் நின்று பேசிக் கொண்டு நின்றான். தாய் அழுதபடி ரௌடியிடம் இனி வராதே என்றாள். ரௌடியைத் தாய் முகத்தில் உமிழ்ந்தாள் என்று பட்டது. இருளில் ஏதும் தெளிவாகவில்லை.

அவன் ரௌடியைத் தொடர்ந்து சென்றான். ரோட்டுப் பாலத்தின் கீழ் வைத்துக் கவனமாகக் கொண்டு வந்திருந்த ஆடு வெட்டும் கத்தியால் கழுத்தை நோக்கி வெட்டினான். கண்டதுண்டம் என்ற சொல் ஞாபகத்தில் இருந்தது. அவன் தந்தை ஆடுவெட்டும் கடையில் வேலை செய்தபோது அவன் கவனமாய் எதையாவது பார்த்து மனதில் பதித்திருந்தான் என்றால் அது எப்படி வெட்டித்துண்டு செய்வது என்பதை. ஆடு வெட்டுவது போல், அந்த ரௌடியை வெட்டினான். பயமே இருக்கவில்லை என்றாலும் அக்கம் பக்கம் பார்த்தான்,  யாரும் இல்லை. மனதிலிருந்து ஏதோ ஒன்று சொன்னது:  உடலை யாரும் பார்க்காதபடி மறைத்துவை. கால்களை வெட்டி இழுக்க முடியவில்லை. எலும்பை நான்குமுறை வெட்டி உடம்பிலிருந்து அப்புறப்படுத்தினாலும் நிணம் மாலை போல் சுற்றியது கையில். நரம்பும் பலமாய் இருந்ததாகப்பட்டது.

எல்லாவற்றையும் மறந்துவிட்டான். ஜெயிலில் பல வருடங்கள் இருந்தான். எல்லாம் மறந்துவிட்டது. அம்மா என்ன ஆனாள் என்றும் அப்புறம் மறந்துவிட்டான். அவளும் மறந்து விட்டாள். அவனுக்கு வயதும் கூடிவிட்டது. அவளுடைய பிள்ளை அல்லவா? அவனும் மறக்கும் வித்தையை அவளிடமிருந்து தான் கற்றிருப்பான் என்று அவனுக்குத் தோன்றினாலும், எல்லாம் மறந்து விட்டது. அது ரொம்ப நல்ல விஷயம் என்று கருதினான். மறதி. மீண்டும் மீண்டும் மறக்க வேண்டும்.

அதன் பின்புதான் ஒற்றை அறை வீட்டில் வசிக்கும் அப்பெண்ணை முன்பு ஒரு தடவை சந்தித்த ஞாபகம் வந்தவனாய் அவள் அலுவலகத்துக்குப் போய்  அழைத்துக் கொண்டு இங்கு வந்தான். அவளுடன் வந்து பதினான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன.

அவளிடம் இருந்த அந்தக் குணம் தான் அவனுக்குப் பிடித்த குணம் என்று கூறவேண்டும். அழைத்தவுடன் வந்தாள். ஞாபகம் வருகிறது. உண்மையில் அன்று நடந்ததை இப்படிச் சொல்லலாம்.

‘வா போவோம்?’

இது அவன்.

‘எங்கே?’

இது அவள்.

‘தெரியாது’

இது அவன்.

அப்போது இப்படிக் கேட்டாள்:

‘என்ன சொன்னாய்?’

‘எங்கே போவது என்று தெரியாது  என்றேன்’

உடனே அவள் பதில் தந்தாள்.

‘சரி, அப்படியென்றால். ஓ.கே.’ பின்பு சற்று யோசித்தாள். புருவங்கள் சுருங்கின. மீண்டும் சொன்னாள்:

‘ஆனா, ஒரு கண்டிஷன்’

‘என்ன?’

‘திரும்ப இந்த ஊருக்கு வரக்கூடாது’

’சரி” என்றான்.

ஒரு நீண்ட ரயில் பயணம். எங்கே என்று தெரியாமல்தான் இருவரும் பயணம் தொடங்கினார்கள். வழியில் ‘நான் ஜெயிலில் இருந்தது…..’ என்று தொடங்கிய போது,

‘எனக்கு ஏதும் வேண்டாம்’ என்றாள்.

ரயில் நின்றபோது, மொழி தெரியாத இந்த நகரத்தில் ரயில் நின்றதைக் கண்டார்கள்.

கௌவரமாக வாழ்வதில் நம்பிக்கை கொண்டவன். நகரத்தில் ஓரளவு ஆங்கிலத்தை விருத்தி  செய்துகொண்டான். அந்த மாநிலத்தின் மொழியில் பேசுவதற்குப் பழகிக் கொண்டான். அவனோடு வாழ்பவளுக்கு இன்னும் இந்த ஊர் மொழி சரியாக வரவில்லை. அதற்கான காரணத்தை அவன் கண்டுபிடித்திருந்தான். அவளிடம் சொல்லவும் செய்தான்.

‘நீ யாரிடமும் பேசுவதில்லை’.

அந்த மாதிரி அவன் உண்மை பேசும்போது அவள் கண்களை உயர்த்தி அவனை ஒருமுறை பார்ப்பாள். அவ்வளவுதான்.  ஏதும் பேசமாட்டாள். அது உண்மை என்று ஆமோதிக்கிறாளா, இல்லை என்று நிராகரிக்கிறாளா என்று அவனுக்கு விளங்காது. அவளுக்கே அது விளங்கவில்லை என்று அவனுக்கு நினைவு வரும். எதையும் தொடர்ச்சியாக யோசிப்பதுதான் இந்தச் சமூகத்தில் நடந்துள்ள விபரீதங்களுக்கான அடிப்படைக் காரணம். தன்னைப் பெரிய சமூகச் சிந்தனையாளன் என்று கருதிக்கொள்வது அவன் வழக்கம். அப்படியும் சொல்ல முடியாதென்று தன் மனம் உடனே மறுப்பதை அவன் அறியாதவன் அல்ல.

அவள் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். இப்படி அவள் வெறித்துப் பார்ப்பதைக் கவனிக்காதவன் போல் அமர்ந்தான். இது ஒரு விளையாட்டு என்பது போல் இருவரும் செய்வார்கள். நகைச்சுவை காட்சிகளை ஒலி இல்லாமல் கவனிப்பது போல் இருவரும் நடந்து கொள்வார்கள். ஒரு மணிநேரம் அவனையே சிரிப்போ, கோபமோ, துக்கமோ இல்லாமல் அவள் பார்ப்பாள்.  முதலில் அவன் கவனிக்காதவன் போல் அமர்ந்திருப்பான். பழகப் பழக அவனும் எதிர்பார்வை செலுத்துவான். அதிலும் சிரிப்போ, கோபமோ, துக்கமோ கொஞ்சமும் இருக்காது. ஒருவர் மீது ஒருவருக்கு கவர்ச்சியோ, வசீகரமோ, காமமோ கூட தோன்றாது. ஓரிருமுறை அவன் பார்வையைத் திருப்பி ஒற்றை அறை வீட்டில் தொங்கிக் கொண்டிருக்கும் சாமி படம் போட்ட காலண்டரையும் அத்துடன் ஆணியில் தொங்கும் காய்ந்துபோன மல்லிகைப் பூ சரத்தையும் பார்ப்பான். பிறகு வெளியில் தெரியும் ஐ.டி. கம்பெனியின் கண்ணாடி ஜன்னல்கள் தெரியும்.

பல வேலைகள் பார்த்துவிட்டு இப்போது வீட்டைச் சுத்தம் செய்யும் வாக்யூம் கிளீனர் சேல்ஸ்மனாக வேலை செய்கிறான். வேலை பார்ப்பதுபோல் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்பான். ஞாயிறுகளை மிகவும் பிடிக்கும் என்பான். ஏனெனில் ஞாயிறுகளில் பலர் ஓய்வாக இருக்கிறார்கள் என்பான்.

காலையில் எழுந்து குளித்துவிட்டு வேகம் வேகமாக கம்பெனியில் போய் நிற்பான். எப்போதும் அவனிடம் எரிந்துவிழும் அவனுடைய மேலதிகாரியான பெண்மணி அவன் செய்ய வேண்டிய வேலையைச் சொல்வாள். மாதிரிக்கான சிறிய சைஸ் கிளினரையும் தோளில் தூக்கி போட்டுவிட்டு ஆர்டர் பிடிக்கும் கோப்புகளைச் சரியாய் வைத்து அவர்கள் கொடுக்கும் பில், அச்சிட்ட தாள்கள், விளம்பர வரிகள் கொண்ட நோட்டீஸ்களைப் பெறுவான்.  அவன் அணிவதற்கு அளிக்கும் சிவப்பு நிற சட்டை, வெள்ளை நிற பாண்ட் இவைகளுடன் தலையில் ஒரு ‘காப்’ அணிந்து வெயிலில் கிளம்புவான். பாதி தூரம் ட்ராமில் புறப்பட்டு, அவனுக்கு ஒதுக்கப்பட்ட ஏரியா அருகில் உள்ள நிறுத்தத்தில் இறங்குவான்.

இவ்வளவு காரியங்களையும் யாருக்காகவோ செய்பவன் போல் செய்தாலும் அவற்றில் ஒரு நேர்த்தியும் ஒழுங்கும் இருப்பதால் மிகுந்த அக்கரையுடன் வாக்யூம் கிளினர் வேலையைச் செய்கிறான் என்று பிறர் கருதுவார்கள். நேர்த்தியும் ஒழுங்கும் பல ஆண்டுகளாய்  இந்த வேலை செய்யும் நடிப்பிலிருந்து அவனுக்கு வந்தது என்பதுதான் உண்மை. நேர்மை, போலித்தனம் என்றெல்லாம் மற்றவர்கள் பேசுவதன் அர்த்தம் அவனுக்குத் தெரிந்ததில்லை.

ஒற்றை அறை வீட்டிலிருந்து கிளம்பும்போது அவனுடன் இருக்கும் பெண்மணி ‘நில்’ என்றாள். சிலவேளை கம்பனி  ’டை’யை மட்டும் வீட்டிலிருந்தே கட்டிக் கொண்டுபோவது அவன் வழக்கம். அவனுடைய வீட்டிலிருக்கும் பெண் ‘டை’ கட்டத் தெரிந்தவள். ‘டை’  கட்டுதல் உலகில் மிகவும் சிக்கலான கலை என்று கருதுகிறவன் அவன். அல்லது அவன் மூளைக்குள் இருக்கும் சோம்பேறித் தனம் அவன் ‘டை’ கட்டாத படி அவனைப் பார்த்துக் கொள்கிறது.

நகரில் 10ஆம் கிராஸிலிருந்து அவன் ஸேல்ஸ் வேலையை ஆரம்பிக்க இன்று உத்தரவு. கல் போன்று இறுகிய முகத்துடன் குள்ளமாகக் காணப்படும் அவன் 9-ஆம் கிராஸிலிருந்து 10-ஆம் கிராஸை நோட்டம் விட்டான். பஸ்கள் சிலவும் டாக்ஸிகளும் அவ்வப்போது செல்லும் ரோடுதான் 10-ஆம் கிராஸ். வீடுகள் வரிசையாக இருந்தன. ஆல்பிரட் துரையப்பா என்ற பெயர் அவனுக்குத் திடீரென்று ஞாபகம் வந்தது. பக்கத்துத் தீவில் தனது மொழிபேசும் மக்களுக்கு  ஒரு தனித்தேசம் வேண்டுமென்று கேட்ட பிரபாகரனைக் கொன்ற பின்பு பிரபாகரன் இளைஞனாக  இருந்தபோது கொன்ற யாழ்ப்பாணத்துப் போலீஸ் அதிகாரி ஆல்பிரட் துரையப்பாவின் பெயரைத் தெரிந்துகொண்டான்.

வரிசையான வீடுகளில் தென்னை மரங்கள் உள்ள வீடுகள் எத்தனை என்று எண்ணினான். 10-ஆம் கிராஸில் நான்கு குறுக்குப் பாதைகள் இடதுபுறமும் வலதுபுறமும் சந்தித்தன. முதல் குறுக்குப் பாதையில் ஒரு இளம்பெண் சைக்கிளில் போனாள்; அவளைத் தொடர்ந்து ஒரு மோட்டார் சைக்கிளில் இரு இளைஞர்கள் போனார்கள். அதே குறுக்குப் பாதை ‘ஒன்வே’ அல்ல என்பதால் இடது புறமிருந்தும் கூட்டமாய் வாகனங்களும் ஆட்களும் சற்றுநேரத்தில் வந்தார்கள்.

அவர்கள் எதற்காக இப்படி வீட்டிலிருக்காமல் ஆடைகளை உடுத்து எதையோ சாதிக்கப்போகிறவர்கள் போலப் போகிறார்கள் என்ற கேள்வி தோன்றியது. தன் பின்பக்கமிருந்து வேகமாய் ‘டை’ கட்டி கோட் போட்டபடி பெல்டை  வலது கையால் பிடித்தபடி நடந்த மனிதரிடம் கேட்டான்.

“எதற்காக இவர்கள் இவ்வளவு அவசரமாகப் போகிறார்கள் ஸார்?”

அந்த மனிதர் அவனை ஒரு மாதிரிப் பார்த்தார். இரண்டடி எடுத்து அவனைக் கடக்க நினைத்தவர் – ஏனோ நின்றார்.

அவன் இப்போது இரண்டடி எடுத்து வைத்ததும் அவருக்கு அவன் செயல் கோபமூட்டியது தெரிந்தது.

“கொன்று விடுவேன். ஜாக்கிரதை”

என்றார். அவன் ஏதும் சொல்லவில்லை. அவர், பின்பு அவசரமாய் போய்விட்டார். அவனை ஏதும் பாதிக்காததால் தொடர்ந்து வீடுகளின் முன்பு போய் நின்றான். நாய்கள் இருக்கின்றனவா என்று பார்த்துவிட்டுக்  கேட்டைத் திறந்ததும் வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினான். யாரோ வந்து வாக்யூம் கிளினர் வேண்டாம்  என்று கூறுவதையும் பொருட்படுத்தாது பையை கீழே வைத்து இந்த வாக்யூம் கிளினரின் சிறப்புகளை எந்திரம்போல் எங்கோ பார்த்தபடி கணீர் என்ற குரலில் ஒப்புவித்தான். அவனுக்காகவோ, வீட்டுக்காரருக்காகவோ, தன் கம்பெனிக்காகவோ அந்தச் செயலை அவன் செய்யவில்லை என்பதுபோல் நடந்து கொண்டான். எதற்காக? ஏதோ ஒரு பிறப்பில் இதுபோல் வாக்யூம் கிளினர் எந்திரம் பின்பு விற்கவேண்டும் என்று அவன் தலையில் கடவுள் எழுதி வைத்ததுபோல் நடந்து்கொண்டான். அவனுடைய உணர்ச்சியற்ற முகமும், அதில் இருந்த கண்களின் அசைவும் வேகம் வேகமாக இயங்கும் கைகள், உடம்பு போன்றவையும் சிவப்பு சட்டையும் நீலநிற ‘டை’யும் வீட்டுக்காரருக்கு இவன் மீது ஏதோ ஒரு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. அரைமணி நேரம் வீட்டுக்குள் இவனை அழைத்துப் பெண்கள், வயதானவர்கள் கூடியிருந்து பேசினார்கள். ஒரு எந்திரத்தை விற்றிருந்தான். கம்பெனியிலிருந்து எந்திரம் வீட்டுக்கு வந்த பின்பு அவர்கள் பணம் கொடுப்பதாகக் கூறிய பின்பு அடுத்த வீட்டை நோக்கி நடந்தான். அந்தக் குடும்பத்தினர் வாக்குத் தவறமாட்டார்கள் என்று அவனுக்குத் தெரியும்.

பெயரோ முகமோ தெரியாத ஒரு மனிதன் தெருவில் நின்று கொன்று விடுவேன் என்று சொன்னதால்தான் ஒரு எந்திரத்தை விற்கும் லாவகம் தனக்குள் கூடி வந்தது என்பது போல் ஏதோ ஒரு உள்ளுணர்வு இவனுக்குள் வடிவம் பெற்று சிரமமின்றி ‘ஸேல்ஸை’ முடித்தான். என்னென்ன பேசினான் என்று நினைக்க முயன்றவனுக்கு ஏதும் ஞாபகம் வராவிட்டாலும் தாகம் எடுத்தது. அதே தெருவின் மூலையில் இரண்டாம் குறுக்குப் பாதை 10-ஆம் கிராஸில் வந்துசேரும் மூலையில் இருந்த பெட்டிக்கடையில் போய் கொக்கோ கோலா என்று கேட்டான். கடைக்காரன் அவனைப் பார்த்து “ நீங்கள் கம்யூட்டர் இன்ஜீனியரா, அமெரிக்காவுக்கு இதுவரை போனதில்லையா” என்று இரண்டு கேள்விகளை ஒரே வாக்கியத்தில் கேட்டான்.

அவனுடைய தாகம் தீர்ந்ததுபோல் இருந்தது.

இப்போது மூன்றாவது குறுக்குத் தெருவில் நின்று கண்ணுக்கு எட்டும் தூரம் வரை பார்த்தான். அவனுடன் அவனைப் போல் வசிக்கும் அந்தப் பெண்ணைப் பற்றி நினைக்க வேண்டும் என்ற உணர்வு எப்போதோ மழுங்கிவிட்டிருந்ததைச் சிலவாரங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் அவனுக்கு விளக்கியது. ஒரு மொபைல் அழைப்பு அவளிடமிருந்து வந்தபோது வழக்கம்போல் – அவள் தொலைபேசி அழைப்பை ஏனோ அடிக்கடி உதாசீனப்படுத்துவான் – எடுக்கவில்லை. பத்து அழைப்புகள் வந்தன என்று ஒரு மணிநேரம் கழித்து அறிந்தபோது அலுப்புடன் அவனை அவனுடைய ஏதோ ஓர் உணர்வு அழைத்தது. அவள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள். ஏதோ சாலையில் யாரோ ஒரு ஆட்டோ ஓட்டுனன் அவளை அடித்து வீழ்த்திவிட்டுப் போன பின்பு அவள் நினைவு பிசகி ஒரு மணிநேரம் சாலையில் கிடந்தாள். யாரும் ஏறிட்டுப் பார்க்கவில்லை. எப்படியோ மருத்துவமனையில் போய்ச் சேர்ந்தாள். அவன், அவள் சொன்னவைகளை சுவாரசியமின்றி யாரோ கிணற்றுக்குள்ளிருந்து பேசுகிறார்கள் என்பதுபோல் கேட்டான். இன்று வேதனைப்படும் மனநிலை அவனுக்கு அற்றுப்போயிருக்கிறது என்பது அவனுடைய வாதம். அவளை, அவன் மருத்துவமனையில் பார்த்தபோது அவளுக்கு அவனைப் பார்த்துக் கோபம் வரவில்லை.

“ஏன் மொபைல் எடுக்கவில்லை?” என்று இரண்டு மூன்று முறை கேட்டாள்.

அவளது அந்தக் கேள்வி அவன் காதுகளுக்குள் போகும் அளவு சுவாரசியம் கொண்டதல்ல என்பதுபோல் நின்றான். வழக்கம்போல் அவனும் அவளும் ஒருவரை ஒருவர் 1மணி நேரமோ என்னமோ கண்ணெடுக்காமல் பார்க்கும் விளையாட்டை சீரியஸாகச் செய்தார்கள். அன்று ஏதோ ஒரு தவறான காரணத்தால் உந்தப்பட்டு விற்பனையாளனுக்குரிய கம்பெனி யூனிபார்மையும் ‘டை’யையும் அணிந்தபடி வந்திருந்தான். தூரத்தில் பக்கத்து வார்டில் வாக்யூம் கிளினரை வைத்துச் சுத்தம் செய்யும் ஒலி வந்ததால் அவன் முகத்தில் சுவாரஸ்யம் தோன்றிய அடையாளம் ஏற்பட்டது. மூக்கை பெருவிரலாலும்  ஆள்காட்டி விரலாலும் தொட்டுபிடித்துப் பார்த்தான். மூக்கு கழன்று விழுந்து விட்டது என்பதுபோல் அவனுடைய அச்செய்கை அமைந்திருந்தது. என் கம்பெனியின் ‘பிராண்ட்’ அல்ல அந்த எந்திரம் என்ற செய்தி அவன் மூளையில் போய் எட்டியிருக்க வேண்டும். இப்போது 16 இலட்சம் மதிப்புள்ள இன்னோவா கார்கள் தொடர்ந்து தெருக்களில் அலைந்து கொண்டிருப்பதை நினைத்தான். அந்த நினைவு அவன் ஸேல்ஸ் வேலையை மீண்டும் ஞாபகமூட்ட, எழுந்து நின்றான். பாக்கெட்டில் இருந்த நோட்டுகளை எண்ணாமல் எடுத்து அவள் அருகில் வைத்துவிட்டு எழுந்து நின்றான். அவள் ஏதும் சொல்லவில்லை. அந்த வெண்மையான மருத்துவமனையின் அறையிலிருந்து திடீரென வந்த பீனாயில் போட்டு தரை துடைக்கப்பட்ட வாசனை தாங்கமுடியாமல் போய்விடலாம் என்று பயந்தவன் போல் அங்கிருந்து புறப்பட்டபோதும் இன்னோவா கார்கள் போகும் வேகம் ஓர் உருவம் பெற்று பல்லி, பாம்பு போன்ற விநோத ஐந்துகளாய் அவன் மனதை ஆக்கிரமித்தன.

அதன்பின் ஒரு மாதமோ என்னமோ ஆகியிருக்கும். ஆனால் அவன் அதே எட்டாம் எண் கிராஸில் நின்று முதலில் நீலவானத்தைப் பார்த்து ரசித்தான். எட்டாம் எண் கிராஸில்  நீண்ட சாலையில் மூன்று வீடுகளுக்கு மாடிகளைக் கட்டுவதில் ஆட்கள் ஈடுபட்டிருந்தனர். வீடுகள் கட்டுவது நல்ல விஷயம் தான் என்பது ஒப்புக்கொள்ளக் கூடியதென்ற மனோநிலை அவனுக்கு ஏற்பட்டது. கட்டட வேலை நடந்து கொண்டிருந்த இடத்தில் கிரேன் ஒன்று மேலிருந்து ஜல்லியையும் மணலையும் மெதுவாய் அசைந்தபடியே எடுத்ததைப் பார்த்தபோது, தன் கைகள் வாக்யூம் கிளினரைப் பிரித்துக் கஸ்டமர்களுக்குக் காட்டும் செயல் மனதில் வந்தது.

அந்த மூன்று கட்டடங்களையும் தாண்டி ஐந்து கிராஸ்கள் தாண்டி மூன்றாம் கிராஸில் வந்து சேரும் மூன்றாம் குறுக்குத் தெருவைப் பார்த்தபோது அறிவிப்புப் பலகையில் இருந்தது கண்ணில்பட்டது. “மூன்றாவது மெயின்”.

குறுக்குத் தெருக்களின் பெயர் மெயின் என்று புரிந்தது. மூன்றாம் மெயினில் மூலையில் இருந்த கடையில் மீண்டும் கண்கள் நிலைத்தன. இவனைக் கண்கொட்டாமல் கடைக்காரன் பார்த்தபடி இருந்தது தெரிந்தது.

மூன்றாம் மெயின்ரோடு மிக நீளமானதாகவும் அதிகம் வெயில் உள்ளதாகவும் எட்டாம் எண் கிராஸ்போல் அடர்ந்த மரங்களற்றதாகவும் இருந்ததால் இது மத்தியதர வர்க்கத்தின் உயர்ந்த மக்கள் வாழும் பகுதி அல்ல என்று அவன் மூளை சொன்னது. கீழ் மத்திய தர மக்களின் மீது அவனுக்குக் குரோதம் ஏற்கனவே இருந்தது.

திரும்பி நான்காவது மெயினுக்குப் போய் நோட்டம் விட்டான். பின்பக்கம் யாரோ வந்து நிற்பதுபோல் பட்டது. அவனும் பார்க்கவில்லை; அந்த நபரும் அவனை அழைக்கவில்லை. அவன் கவனத்தை ஒரு இன்னோவா கார் கவர்ந்தது. லிப்ஸ்டிக் போட்ட வெள்ளைநிறப் பெண்மணி – கறுப்புக் கண்ணாடியுடன் அமர்ந்திருந்தது தெரிந்தது. அது அவனுக்குப் பிடித்த காட்சி. அவள் குழந்தையைப் பள்ளியிலிருந்து அழைத்துக்கொண்டு போகிறாள் என்று நினைத்து, அந்தக் காரையே தன் கண்களால் பின்தொடர்ந்தான். காரின் பிரேக் சிவப்பு விளக்கு ஒளிர்ந்தது. ஒரு சிவப்புத் தாமரை போல் ஒளி சுழன்றது போல் கண்களில் பதிவானது. பெரிய வீட்டின் முன்பு கார் நிற்க, பெண்மணி தன் சிறிய வயது மகளுடன் அவசரமாக இறங்கினாள். அவன் எதிர்பார்த்த செயல் அது. எத்தனைபேர் அதுபோலவே அவசரமாய் இறங்கியதை வாழ்க்கையில்  பார்த்திருக்கிறான்!

அவன் அந்த வீட்டில் இருந்த வாக்யூம் கிளினர் எந்திரம் பழுதாகியிருக்கும் என்று ஒரு கற்பனையை உருவாக்கிக்கொண்டு நடக்க ஓரடி எடுத்து வைத்தபோது தன்னை அரசியல் கூட்டத்துக்கு அழைத்தவன் நின்று தன் தோளில் கை வைத்ததை உணர்ந்தான்.

“தலைவர் ஜெயித்துவிட்டார். இனி ஏழைகள் என்று இந்த நாட்டில் யாரும் இருக்கமாட்டார்கள். உறுதியாக நம்பு.”

அப்புறம் ஒரு சினிமாப்பாட்டைப்  பாடியபடியே பீடி இழுத்தபடி நண்பன் புறப்பட  அவன் அணிந்திருந்த டி-சர்ட்டில் அவனுடைய தலைவன் அடிக்கடி சொல்லும் வாசகம் பதிக்கப்பட்டிருந்ததை, அது அந்த மாநிலத்தின் மொழி என்பதால், எழுத்துக்கூட்டிப் படித்தான்.

“ஓராயிரம் பகைவர்கள் ஓடோடி வந்தாலும்

ஓரடி கொடுத்துப் பின்வாங்க வைப்பேன்”

அவன் அந்தப் பெரிய வீட்டின் கேட்டை அவனது வழக்கப்படி திறந்து தடதடஎன்று நேரடியாய் வீட்டை நோக்கி நடந்தான்.

அவனுடன் வாழ்பவள் அடிக்கடி அவனிடம் சொல்வாள்.

“நீ மிகவும் வித்தியாசமான பிறவி என்பதை நான் கவனித்திருக்கிறேன். நீ எல்லோரையும் போல் சிரிப்பதில்லை; அழுவதில்லை. நீ அழுது நான் பார்த்ததில்லை. ஆனால், இத்தனை ஆண்டுகளாய் நான் உண்னை விரும்ப ஒரே காரணம் நீ நிழல்களைப் போல் வாழ்கிறவன். அப்படிப் பட்டவர்களை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். எனக்குக் காரணம் கேட்டால் தெரியாவிட்டாலும் எனக்கு நீ அப்படி இருப்பதால் பிடிக்கிறது”.

அவன் உள்ளே போய் “அம்மா, அம்மா, மேடம், மேடம்” என்று முதலில் அழைத்தான். வீட்டின் முன் நாயும் இல்லை, காவலாளியும் இல்லை. இவ்வளவு பெரிய வீட்டில் காவலாளி இல்லை என்பது சரியில்லை என்று முதலில் கூறவேண்டும் என்று நினைத்தான். வீட்டின் முன்பக்கம் சிறு கார்டன் இருந்தது. குழாயிலிருந்து நீர் சொட்டிக்கொண்டிருந்தது. அது அந்த இடத்தில் பரவிய மௌனத்தை விரட்டுவதுபோல் இருந்தது. அது அவனுக்குப் பிடித்திருந்தது. மீண்டும் அழைத்தான். யாரும் இல்லை. மேல் வீட்டிற்குச் செல்லும்படி வெளியேயும் உள்ளேயும் படிகள் வைக்கப்பட்டிருந்த வீடு அது. குருவிகள் எச்சமிட்டிருந்த இரும்பு ரெய்லிங் வழியாக கை விரல்களை வைத்து உராய்ந்தபடியே மேலே ஏறினான். வீடு ஜன்னல்களில் கர்ட்டன் போட்டு மூடப்பட்டிருந்தது. ஜன்னல்கள் வழி எட்டிப்பார்த்தான். வீட்டினுள் இருக்கும் அமைதி அவனுக்குக் கேட்டது. வீடு அகலம் முப்பது அடியாகவும் நீளம் அறுபது அடியாகவும் இருக்கும். இடதுபுறமும் வலதுபுறமும் இருந்த நடை வராண்டாவழி பின்பக்கம் போய்பார்த்தான். மேல் வீட்டுக்கு உள்ளேயிருக்கும் படி வழியாக, அந்தப் பெண்மணி மேலே வந்திருக்கமுடியாது. ஒரு அரைமணிநேரம் சுற்றிச் சுற்றிப் பார்த்தான். யாரும் இருப்பதாய் தெரியவில்லை. இரண்டாம் மாடியின் மேல் ஸோலார் ஹீட்டிங் மட்டும் இருந்தது. துணி உயர்த்தும் கொடி காற்றில் தனியாக ஆடியது.

அவன் நின்று நகரத்தைப் பார்த்தான். முதலில் வடக்குப் பகுதியைப் பார்த்தபோது பிரம்மாண்டமான அந்த நகரத்தின் உயர்ந்த கட்டடங்கள் தெரிந்தன. ஓரளவு வடக்குப் பகுதியைப் பார்த்து முடித்தாயிற்று என நினைத்தபோது அடுத்த பகுதியைப் பார்த்தான். இப்படி நான்கு பகுதியையும் நின்று நிதானமாகப் பார்த்தபின்பு வந்த வழியே கீழே இறங்கினான். முன்புபோல குழாயில் நீர் சொட்டிக் கொண்டிருந்தது. இரும்புக் கேட்டைத் திறந்து ரோட்டில் இறங்கியபோது அவனுடன் வாழ்பவள் பற்றி நேற்றுக் காலையில் கண்ட கனவு நினைவில் வந்தது.

அவளுடைய இருதயம் பூ போல் விரிய ஒவ்வொரு இதழிலிருந்தும் மென்மையான இறகுகள் கொண்ட கருஞ்சிவப்பு ஈசல்கள் ஆயிரம் பறந்தன.

நடந்துகொண்டிருந்த அவன் சாலையில் போக்குவரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் சாலை நடுவே தொடர்ந்து நடந்தான். அவனுக்குத் தெரிந்த யாரோ அவனை அழைத்தார்களோ என்றிருந்தது. அவன் மீது முழுச் சாலையும் போவதுபோல் உணர்ந்தபோது காரில் அடிபட்டுக் கிடந்த அந்த உருவம் அவன் கண்ணில் பட்டது. அவன் அம்மாபோல் இருந்த உருவத்தின் அருகில் போனபோது அவ்வுருவம் வானளாவ விரிந்து பின்பு காற்றாகிப் போனது.தன்னுடன் தங்கும் பெண்ணிடம் மறக்காமல் இதைச் சொல்லவேண்டும் சோர்வையும் சோம்பலையும் பொருட்படுத்தாமல், என்று நினைத்தான்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>