கோட்பாட்டில் இரண்டு வகை சம்பந்தமாய்….

 

22 எண்பதுகளில் தமிழில் தோன்றிய புதுவகை கதை இயக்கமும், சில விமரிசனங்களும்(திராவிடம்,தமிழ்தேசம் கதையாடல் நூலில் இருந்து)

தமிழ்ச்சூழலில், இன்று இலக்கியமும் அது சார்ந்த சிந்தனைகளும் செயல்படும் முறை குறித்த பின்னணியைப் பற்றிப் பேசவேண்டும்.

இதில் என்போன்றோரின் – ஒரு கால் அக்கடமிக் செயல்பாடுகளிலும் இன்னொரு கால் சிறுபத்திரிகை செயல்பாடுகளிலும் வைத்திருக்கும் நிலையில் – சிந்தனைகளின், நிலைபேறு அல்லது நிலைபேறின்மை இரண்டு பொருந்தாத வலயங்களைச் சுற்றியவையாகும்.

நான் ஒருமுறை சென்னை சென்றுவிட்டுப் பெங்களூருக்குத் திரும்பியபோது ஒரு கூட்டம் சிறுபத்திரிகைகளை வாங்கிக் கொண்டு திரும்பினேன். அதிலொரு பத்திரிகையில் – மிகவும் நிதானமாகக் கருத்துத் தெரிவிக்கும் – என் நண்பர் திலிப்குமாரின்(சிறுகதை ஆசிரியர்) கருத்துக்களைப் பார்த்தேன். அதில் இலக்கியத்தில் அபிப்பிராயங்களுக்கும் கோட்பாடுகளுக்கும் உள்ள உறவு பற்றிய தன் எண்ணங்களை வெளியிட்டிருந்தார்.( சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. எந்த ஆண்டு என ஞாபகம் இல்லை.) கோட்பாடுகளை விட இலக்கிய அபிப்பிராயங்கள் அதிகமான வலிமையுடையவையாகத் தமிழில் வந்துள்ளன என்பதுபோல் கருத்து வந்திருந்தது.

கோட்பாடுகளில் ஆர்வம் கொண்ட நான் கூட சில சந்தர்ப்பங்களில் அப்படி உணர்ந்திருக்கிறேன். ஏனெனில் படைப்புகளே என்னை அதிகம் கவர்கின்றன. சுதந்திரமான எந்தச் சுய கட்டுப்பாட்டையும் பின்பற்றாத அபிப்பிராயங்கள் ஏன் கவர்ச்சியாகத் தெரிகின்றன என்றால் கோட்பாடுகள் பின்பற்றக்கூடிய சுய ஒழுங்கும் அது சார்ந்த முறைமையும் அபிப்பிராயங்களில் இருக்கத் தேவையில்லை. பெரும்பாலும் கோட்பாடு, கல்விப்புலங்களில் இருப்பவர்களாலும் அதற்கு மாறான அபிப்பிராயத் தொகுப்புக்கள் கல்விப்புலங்களில் இல்லாதவர்களாலும் முன்வைக்கப்படுகின்றன.

இந்தப் பார்வைகூட பழைய பார்வை. அதாவது பழைய முறையில் தியரி என்பதைப் புரிந்துகொண்ட பார்வை. ஒழுங்குபடுத்தப்படாத கருத்துக்களின் தொகுப்பு, ஒழுங்குப்படுத்தப்பட்ட கருத்துக்களிலிருந்து (கோட்பாடு)மாறுபட்டிருக்கும் என்ற பார்வை இது. அதாவது இயற்கை விஞ்ஞானங்கள் வளர்ச்சி பெற்றுப் பிறதுறைகளைப் பாதித்தபோது உருவான பார்வை. தமிழில் இலக்கிய ஆர்வலர்களும் படைப்பாளிகளும் ஓரளவு படிப்புப் பெற்று உருவான காலகட்டப் பார்வை. இவர்கள் இலக்கியம் பேசும்போது அடிக்கடி உதாரணங்கள் கொடுத்துப் பேசும் காலகட்டம். இலக்கியத்தை எல்லோருக்கும் புரியும் உதாரணங்களைக் கொடுத்துப் பேசுவார்கள் (முட்டைக்கோஸ், வெங்காயம், இடியாப்பம் போன்றன சில உதாரணங்கள்). இது முதல் கட்டம்.

அடுத்த காலகட்டம் ஒன்று வந்தது. அங்குக் கோட்பாடு என்பது ‘தியரி’ என்ற சொல்லுக்கான மாற்றுச்சொல் அல்ல. அதாவது இங்குச் செயல்பட்டது தனித்தமிழ் மனோபாவம். சிந்தாந்தம் என்ற சொல்லுக்குப் பதிலாக – அது சமஸ்கிருத ஒலி என்பதால், கோட்பாடு என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. இங்குச் சிந்தாந்தம் என்பது தமிழ்ப் போன்ற சூழலில் கம்யூனிசத்தைக் குறித்தது. சிந்தாந்திகள் என்று முகத்தைக் கோணியதுக்குப் பதிலாகக் கோட்பாட்டாளர்கள் என்று தனித்தமிழ் முகக்கோணல் இது. இதற்கு உதாரணங்கள் சில மனிதர்களின் பெயர்கள். மனோ நிலைக்குத் தக இங்குப் பெயர்கள் வந்து குதிக்கும். பேராசிரியர் நா.வானமாமலையிலிருந்து கைலாசபதியிலிருந்து தோதாத்திரி, தி.சு.நடராஜன், அருணன் என்று எல்லாம் குறிப்பிடுவார்கள். உபதொழிலாக இலக்கியத்தை வைத்திருந்தவர்கள் கைங்கரியம் இது. உதாரணத்துக்கு மனிதர்களின் பெயர்களைப் பயன்படுத்துவதில் ஒரு வளர்ச்சி. இது இரண்டாம் கட்டம்.

அடுத்த கட்டம் தான் தலையைப் பிய்த்துக்கொள்ளும் சுவராஸ்யம் கொண்டது. இங்கும் அடிபடும் வார்த்தை, கோட்பாடு என்பதுதான். ஆனால் தியரி என்ற ஆங்கிலச் சொல்லுக்கு மாற்றுச் சொல்லாகத்தான் கோட்பாடு என்ற சொல் இங்குப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இரண்டாம் கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட தியரியும், இந்த மூன்றாம் கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட தியரியும் முற்றிலும் வேறு.

கடந்த சுமார் 30 ஆண்டுகளாகத் தமிழில் புதியமுறை இலக்கிய பார்வை ஒன்று தனது வீச்சை ஏற்படுத்தியுள்ளது. நான் முன்பு குறிப்பிட்ட திலிப்குமார் பேட்டியில் இந்த வீச்சு அங்கீகரிக்கப்பட்டிருந்தது. “அதாவது இலக்கிய உருவாக்கம் ஒரு நேர்கோட்டுப் பாணியில் (Linear) இனி சாத்தியமில்லை”. இந்த வார்த்தைகளில் திலிப்குமார் கடந்த 30 ஆண்டுகளில் தமிழில் நேர்ந்திருக்கக்கூடிய படைப்புக்களுக்குப் பின்னால் ஒரு ஒட்டுமொத்த வடிவம்(கோட்பாடு) இருப்பதை உணர்ந்திருக்கிறார் என்பது தெரிகிறது. அதாவது அதுவரை பேசப்பட்ட (இவரது மொழியில்) அபிப்பிராயங்களும் அதன்பிறகு பேசப்பட்ட அபிப்பிராயங்களும் வேறுவேறு. உண்மையில் இங்கு அபிப்பிராயங்களில் நடந்த மாற்றம்தான் கோட்பாட்டு மாற்றம். கடந்த முப்பது ஆண்டுகளில் – அதாவது இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் கால்பகுதியில் ஒரு “பாரடைம்ஷிப்ட்” நடந்திருக்கிறது. இது இலக்கியம் சார்ந்த சொல்லாடலில் நடந்த “சட்டகமாற்றம்”. சட்டகமாற்றம் என்பது, மாற்றம் சிறுசிறு துணுக்கு அபிப்பிராயங்களில் ஏற்பட்டுப் பின்பு பல துணுக்கு அபிப்பிராயங்களைப் பாதித்து அந்தப் பாதிப்பு மொத்தமான சிந்தனை மாற்றத்துக்கு வழி வகுப்பதைக் குறிப்பதாகும்.

ஆகமொத்தம் நமக்குத் தெரிவது கடந்த 25 ஆண்டுகளில் நடந்துள்ள மாற்றங்கள். இந்த மாற்றத்துக்கு ஒரு குணவடிவம் உள்ளது;  அதற்கு ஒரு ஒழுங்கு உள்ளது. சில மொத்தமாய் மாறியுள்ளன;  சில மொத்தமாய் புதிதாகத் தோன்றியுள்ளன. நடந்துள்ளது ஒரு சட்டகமாற்றம் (a paradigm shift). இந்தச் சட்டகமாற்றத்தை இலக்கிய நீள்கதை அமைப்பில், “ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் ” நாவல் முதலில் செய்தது.  அந்நாவலுக்கு சுமார் இருபத்தைந்து விமரிசனங்கள் வந்தன.அதுவரை நாவலில் பின்பற்றப்பட்ட பகுத்தறிவை அடிப்படையாக வைத்த தர்க்கம் முதன்முதலில் கைவிடப்பட்டது. ஒரு புராணத் தர்க்கம் அரங்குக்கு வந்தது.

எதார்த்த எழுத்துத்தான் ஒரே உத்தி என்ற எண்ணம் மாறி அது, பல உத்திகளில்  ஒரு உத்திதான் என்ற எண்ணம் இப்போது பரவலாய் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. நாவலில் வரும் கிராமம் உண்மையான கிராமம் அல்ல.  எழுத்தில் சாத்தியமான கிராமம்தான்; இலக்கிய மரபு என்பதைத் தொல்காப்பியச் சிந்தனை உலகியல் வழக்கு மற்றும் நாடக வழக்கு என்று பிரிவினை செய்தபோதே இந்த சிந்தனை தோன்றிவிட்டது. மொழி முதன்மை என்னும் சிந்தனை மனமுதன்மை என்ற சிந்தனையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இலக்கியம் என்ற பொதுப்புத்தி இலக்கியம் என்ற அகில உலகச் சிந்தனையின் பகுதியாக மாற்றப்பட்டது. கன்னடம் பற்றி எனக்கு ஓரளவு அதிகாரபூர்வமாகவே பேசமுடியும். தமிழை விட  தாழ்ந்த நிலையில் தான் கன்னடம் இன்று புதிய இலக்கியச் சிந்தனையில் உள்ளது. மலையாளத்திலும் இத்தகைய சிநதனைகள் தமிழைவிட ஒருபடி தாழ்ந்த நிலைதான். மலையாள மொழிக்குள் புகுந்துள்ள சமஸ்கிருதம்  மலையாளத்தை விடுதலை செய்யமுடியாத நிலை. ஆனால் கன்னடத்தில் ஆஹா ஓஹோ என்ற கொண்டை சிலுப்பல்கள் இனி வேண்டாம்.

இங்கு நான் குறிப்பிட்ட சட்டகமாற்றம் சிலரால் எதிர்மறையாக (கேலி கிண்டல்) அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவர்கள் இந்தச் சட்டகமாற்றம் நடந்ததை வெளி உலகத்திற்குச் சுட்டும் குறியீடுகள்; படைப்பில் தமிழவன், முத்துக்குமாரசாமி, கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா, சுரேஷ்குமார இந்திரஜித், மா.அரங்கநாதன்,பிரேம் ரமேஷ், எம்.ஜி.சுரேஷ், யுவன் சந்திரசேகர், கௌதம சித்தார்த்தன், ஜி. முருகன், பா.வெங்கடேஷ், பிரான்சிஸ் கிருபா, ஆதவன் தீட்சண்யா, குமாரசெல்வா, பி.எ. கிருஷ்ணன், இலங்கையில் ஷோபாசக்தி – இதுபோல் இன்னும் பலர். இவர்கள் எல்லோரும் ஒரே அணியினர் என்பதற்காகவோ, ஒரே வகை எழுத்துக்களைத்  தருபவர்கள்  என்பதற்காகவோ நான் பெயர் சொல்லவில்லை. இவர்கள் எல்லோரிடமும் தமிழில் ஐம்பது, அறுபது, எழுபதுகளில் கோலோச்சிய இலக்கிய எழுத்து பற்றிய ஒரு அடிப்படை மனப்பதிவு மாறியுள்ளது. சமூகம் எழுத்தில் பிரதிபலிக்கிறதென்ற எண்ணத்தின் போதாமையும் புராணிகத் தன்மையின் தேவையும் இவர்களால் புரிந்துகொள்ளப்பட்டிருந்தன. இலக்கிய எழுத்துப்பாணியை ஓர் இறுகிய மனப் பதிவிலிருந்து விடுவித்தது இந்தச் சிந்தனை. தமிழ் உரைநடைப் புனைவை மாற்றியவர்கள் இவர்கள்.

இந்த இடத்தில் நவீனத்துவம் பற்றிக் குறிப்பிடாவிட்டால் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு பெரிய பிழையைச் செய்தவர்கள் ஆவோம். நகுலன், ந.முத்துசாமி, சா.கந்தசாமி, சி. மணி போன்றோர் பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ் நவீனத்துவம் என்ற மாடர்னிசம், தத்துவமாய் அதிக விவாதத்தை உருவாக்காவிட்டாலும் படைப்புப் பற்றித் தமிழில் இருந்த குறுகிய மனோபாவத்தைப் பலமாய் அசைத்ததில் இதற்கு ஒரு பங்கு இருந்தது.

நவீனத்துவம் ஏற்படுத்திய பிளவு வழி தத்துவச் சர்ச்சையாகவும் கோட்பாட்டுத் தேடலாகவும் அமைப்பியல் (ஸ்டரக்சுரலிசம்) என்ற நாமகரணத்துடன் ஒரு புதிய இலக்கிய இயக்கத்துக்கான குரல் கொடுக்கப்பட்டது. இதனைத்  தத்துவரீதியில் எதிர்த்தவர்கள் முற்போக்கு அணியினரும் நவீனத்துவர்களும். நவீனத்துவர்கள் சார்பில் சு.ரா. செயல்பட்டார். அவர் தலைமையில் வெளிவந்த முன்னாள் இலக்கியக் காலச்சுவடு இந்தப் புதுத்திசையை எதிர்த்தது. ஆனாலும் இந்தப் புதுப்பாணி எழுத்து – இவ்வளவு எழுத்தாளர்களை உருவாக்கியுள்ளதென்பதைக் கவனிக்கும்போது ஆச்சரியம் ஏற்படுகிறது. இந்த இயக்கம்(புராணத்தன்மையை உரை நடையில் கொணர்தல்) தமிழ் நாகரிகத்தின் முக்கிய கவனிப்பையும் கணிப்பையும் மதிப்பீட்டையும் கோரும் இயக்கம் என்பது உறுதிப்படுகிறது.

இருபதாம் நூற்றாண்டில், தமிழில், முதலில், சுதந்திர போராட்ட இயக்கம் இலக்கியத்தையும் சமூகத்தையும் பாதித்தது. இரண்டாவது திராவிடச் சிந்தனை, படைப்பு இலக்கியம் தவிர (பாரதிதாசன் ஒரு விதி விலக்கு) பாதிப்பு செலுத்தியது. மூன்றாவது – நான் இங்குக் குறிப்பிடும் புராணப் புனைவுநிலை இயக்கம் (இதனை மாஜிக்கல் ரியலிசம், அமைப்பியல் என்றெல்லாம் கூட அழைத்தனர்) பரிமளித்தது. இலக்கிய ஸ்டைலில் (நடையில்) ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. ஞானக்கூத்தனின் எட்டுக்கவிதைகள் தான் முதன்முதலில் இந்தப் புதிய சுந்திரத்தை வழங்கின. அவை சர்ரியலிசக்கவிதைகள் என்று பெயர்பெற்றன. ‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’, தமிழ் நாவல் மரபில் இத்தகைய புதிய பாணியை அறிமுகப்படுத்தியபோது விமரிசகர் பாலா இந்நாவலையும் சர்ரியலிச நாவல் என்று விரிவாக, தன் சர்ரியலிசம் என்ற நூலில் விளக்கினார். இந்த இரண்டு செய்திகளும்  வரலாற்று உண்மைகள். யாராலும் மறுக்க முடியாது.

இங்கே நான் கொடுத்த புனைகதையாசிரியர்கள் உரைநடைத் துறையில் உருவாகும் சிறுகதை, நாவல் என்ற இரண்டு வெளியீட்டுப் பாணிகளையும் புதுசாக்கினார்கள். புராணங்களின் கட்டுப்பாடற்ற கற்பனையை அளவற்ற சாத்தியப்பாடுகளுக்குப் பயன்படுத்தினார்கள். இவர்களின் மொழிநடை – எல்லாவித சோதனைகளுக்கும் பயன்படுத்தப்பட்டது. வாக்கியங்களை எப்படி எப்படி எல்லாம் மாற்றமுடியும் என்ற சோதனை இவர்களிடம் ஓர் உச்சகட்ட முறையில் நடந்தது. புனைகதையில் இரண்டு முக்கியமான அலகுகள் காலமும் இடமும். இவை இரண்டின் சாத்தியப்பாடுகள்  அகலிக்கப்பட்டன. இந்தப் புதுத் திசைப் புனைகதை, ஒரு பத்து அல்லது இருபது ஆண்டுகளுக்குள் இப்படிப்பட்ட சாத்தியப்பாடுகளையும் எழுத்தாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்ததையும் கவனிக்கும்போது, இந்தப் புது இயக்கத்தின் முக்கியத்தைப் புரிந்துகொள்ள முடியும். இந்தப் புதுவித புனைகதை இயக்கத்தின் ஊற்றுக்கண்ணைத் திறந்தவர்களில் இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர் மார்க்வெஸுக்குப்  அவரது உலகப் புகழ்பெற்ற நாவலான ‘ஒரு நூற்றாண்டு தனிமை’ (கோணங்கியின் கல்குதிரை வெளியிட்ட சிறப்பிதழ் பார்க்க) – க்கும் முக்கிய இடமுண்டு. என்றாலும் தமிழ் மரபின்  திரைப்படங்களுக்கும் நாட்டுப்புறக் கதை, காவியங்களுக்கும் புராண மரபுக்கும்கூட  பங்களிப்பு உண்டு. எனினும் தமிழின் முதல் மாய எதார்த்தவாத நாவல் முற்றிலும் வேறுபட்டது.தமிழ் நாவல்  தோற்றம் பிரதாப முதலியார் சரித்திரம்;  தமிழ்ச்சிறுகதையின் தோற்றம் பரமார்த்தகுரு கதை. இந்த இரண்டுவித எழுத்து மரபுகளுக்கும் இடைக்காலத்தில் ஒரு பின்னடைவு வந்திருந்தது. க.நா.சு. போன்றோர் இந்த இரண்டு எழுத்துக்களையும் ஏற்கவில்லை. எனவே க.நா.சு. வின் பல முகங்களில் ஒரு முகமாய் வெளிப்பட்ட தமிழ் மாடர்னிஸ்டுகள் இந்த அதீத புனைவு மரபை ஏற்கவில்லை.  ஆனால் இந்த அதீத புனைவு மரபுக்கு ஒரு அனைத்துலகத் தன்மை உண்டு. அதுதான் பெரியார் வழியிலும் ஒரளவு க.நா.சு வழியிலும் ராஜம் ஐயர், மாதவையா வழியிலும் வெளிப்பட்ட எதார்த்தவாதம் -ரேஷனலிசம்- என்ற அறிவுவாதத்தின் (பகுத்தறிவு) மறுபக்கம். இம்மரபு மாறியதால் தமிழ்ப் புனைகதை மரபு சுதந்திரம் பெற்றது. கட்டற்ற புனைவு 1980களிலிருந்து விடுபட்டு சுதந்திரமானது. அதனால் புனைவு, தமிழில்  புதுவிதமாய் உருக்கொள்ள உதவியது. ஒரு வகையில், மேலே நான் கூறியுள்ள ஒரு கூட்டம் எழுத்தாளர்கள், சு.ரா.வின் ‘ஜே.ஜே. சில குறிப்புக்கள்’ பலப்படுத்திய அல்லது அறிமுகப்படுத்த விரும்பிய இறுக்கமான புனைகதை மரபை – மாடர்னிச மரபை – உதறிய தமிழிலக்கியக் காட்சியின் சாட்சியம் ஆவர்.

தமிழக வரலாற்றில் நடந்த காரியங்களையும் மறக்கக்கூடாது. 1967-ல் சிறுபத்திரிக்கை உலகில் மாடர்னிசம் உச்சகட்டமாக இருந்தபோதுதான் தி.மு.க. இந்தச் சீரிய சிந்தனை உலகைக் கண்டுகொள்ளாமலே – ந.பிச்சமூர்த்தியின் தி.மு.க. கிண்டல்களைக் கண்டு கொள்ளாமலே – அரியணை ஏறியது. தி.மு.க. வின் நாடகம், புனைகதையில் இருந்த lose தன்மை ஒன்று இங்கே குறிப்பிட்ட எழுத்தாளர்களிடம் மறுவடிவம்  கொண்டது என்றும் கூறலாமா? அதாவது மொத்தத்தில் முற்போக்கினரும் மாடர்னிசவாதிகளும் ஒருவரை ஒருவர் எதிர்த்தபடியே தமிழ்ப்புனைகதைக்குள்  கொண்டு வந்திருந்த மூச்சுத் திணறலை மார்க்யொஸுசம், தமிழ்ப் புராண மரபும் நாட்டுப்புறவியலும் சேர்ந்து நீக்கிய காரியம்தான் 1980 – களில் புதுப்புனைகதை மரபு தமிழில் தோன்றியதன் தாத்பரியம். இப்படியான புதுவகைப் புனைவு தன்னுள் ஒரு பேராற்றலைக் கொண்டிருந்தது. அந்த ஆற்றல் அதுவரைத்திய இறுக்கத்தைத் தளர்த்தியது போலவே கதையே – அல்லது கதைசொல்லலே ஒரு புது ஆற்றல் என்ற சிந்தனையைக் கொண்டிருந்தது. எதார்த்தக் கதைகளின் காலகட்டத்தில் கதை சொல்லல், சமூக நடப்பு என்ற உள்ளடக்கத்தை வெளியிடும் கருவியாகக் குறுக்கப்பட்டது. அந்தக் குறுக்கலில் இருந்து தப்பித்துக் கதைசொல்லலேகூட ஒரு அறிவுதான், ஒரு சமூகவடிவம் தான், என்ற புதுச்சிந்தனை உருவானவுடன்  எதார்த்தக்கதை கூட ஒரு உத்திதான் – ஒரு வகையான கதைமுறைதான் என்ற எண்ணம் உதித்தது. எதார்த்தக் கதையும் புனைவும் கதை என்ற அறிவுமுறையின் பாற்படுகின்றன. இங்கே, எண்பதுகளில் தொடங்கி இன்றுவரை ஒரு புதுவகை புனைகதை தொடர் பாய்ச்சலாக வந்துகொண்டிருப்பது இதனால்தான். இது தமிழ்ப்பூமியின் ஒரு முக்கியமான உள்ளுறைந்த ஆற்றலின் வெளியீடு. இந்த வகையில் தமிழ்க்குணம் ஒன்று அதன் மண்ணோடும் மணத்தோடும் கிளை பரப்பும் அடையாளமாக இந்தப் புதுக்கதை புனைவு வகையைக் கூறலாம்.

இந்தப் புதுவையான, காலம்- இடத்துக்கும், முன் – பின் என்ற தர்க்கநீட்சிக்கும், மாயை- நிஜம் என்பவைகளுக்கும் இடையில் இருந்த இடைவெளியை உடைத்த , கதைசொல்லல் பயன்படுத்திய முறை தமிழில்  பாரதூரமான விளைவை ஏற்படுத்திய  காரியமாகும். தமிழ் மற்றும் இந்திய மரபில் ஓர் அற்புதம் என்று சொல்லக்கூடிய விநாயகர் பற்றிய அறிவைச் சுற்றிய சித்தரிப்புகளும் கதைகளும் நாம் பொதுவாய் தெரிந்துவைத்திருக்கும் வடிவப்படுத்தலை எல்லாம் தாண்டிச் செல்லும் காரியமாகும். கோபால் என்ற சிற்பி விநாயகரை மட்டுமே புதுமுறையி்ல் வாழ்நாள் முழுதும் அலுப்பில்லாமல் மறுவடிவம் செய்து கொண்டேயிருப்பதில் சிற்பக்கலை தத்துவத்தையே புதிதாக்குவதை உணர்ந்து நான் ஆச்சரியப்ட்டிருக்கிறேன்.  அதுபோன்ற காரியம் தான் போர்ஹேஸ்  மீண்டும் மீண்டும் தான் முன்பு படித்த கதைகளை வேறுவேறு முறையில் மறுபடி மறுபடி  எழுதிக் கொண்டேயிருப்பதும். திரும்பவரல் (Repetition) என்னும் தத்துவம் நேர்கோட்டைச் சார்ந்ததல்ல. வளைகோட்டைச் சார்ந்தது. ஒருவகை ஒழுங்கின்மையைச் சார்ந்தது. டெல்லுஸ் மற்றும் கொத்தாரி ஆகியோரின் தத்துவமுறையில் இந்தக் குழப்பமும், ஒழுங்கின்மையும் முக்கிய ஸ்தானம் பெறுகின்றன. மடிப்பு (fold)  என்பதன் போக்கில் ஏற்பட்டுள்ள புதுத் தத்துவத்தை அக்கால தத்துவவாதி லைப்னிஸ் மற்றும் Baroque கட்டடக்கலை வழி உருவாக்க டெல்லுஸ் முயல்வது இங்குக் காணப்பட வேண்டும். இங்கு நான் சுட்டவிரும்பும் காரியம் தமிழில் கதை தன், மைய அச்சிலிருந்து கழன்றது எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த செயல் என்பதைச் சுட்ட. இந்த இடத்தில் மனக்கிளர்ச்சித் தரத்தக்க இத்தனை விஷயங்களையும் எண்பதுகளிலிருந்து மாற ஆரம்பித்திருக்கும் கதை என்னும் புதுத்தமிழ் அறிவுமுறை உள்ளேற்றிருக்கின்றது என அறியவேண்டும். டெலுசும் கொத்தாரியும் அறிமுகப்படுத்திய Fold  தத்துவம், யார் யார் நாவலில் அமைந்துள்ளது, விநாயகர் தாத்பரியம் யார் யாரின் கதைசொல்லலில் அடங்கியுள்ளது. ரெப்பிட்டிஷன் என்னும் திரும்பவரல் சிந்தனையைக் கொண்டிருக்கும் புனைகதை எந்த எழுத்தாளரின் புனைகதை உலகை நிறைத்திருக்கிறதென்பதெல்லாம் அடுத்தகட்டத்தில் செய்யப்பட வேண்டிய விசாரிப்புகள்.

தமிழ் அடையாளத்துடன் இந்தப் புதுக்கதை மரபைக் கொண்டுவந்து சேர்க்கும்போதே தமிழ்ப் புனைகதையில் ஏற்பட்ட இன்னொரு மலையாள மரபுத் தர்க்கத்தையும் குறிப்பிடவேண்டும். அது நீலபத்மநாபன், ஆ. மாதவன், தோப்பில் முகம்மது மீரான், ஜெயமோகன், சுந்தர ராமசாமி என்று முக்கியமான ஒரு பிரிவைச் சுட்டுகிறது.  இது தனியான பரிசீலனைக்குரியது. எனினும் இந்த உபமரபு தமிழ் நாவல் மைய மரபை சவாலுக்கழைத்து வருவது கவனிக்கத்தக்கது.

எண்பதுகளில் உருவான இந்தப் புதுவித கதைமரபு பற்றிய விளக்கத்துக்கான முழு அறிவும் ஏற்பட தனியான  ஆய்வு ஆழமாக நடத்தபடவேண்டும். அது ஒவ்வொரு கதைக்காரரின் தனித்தன்மைகளை வடிவமைத்துக் கொடுக்கும். எல்லோரும் பகிர்ந்து கொள்ளும்  பொதுத்தன்மைகளைக்கூட இன்னும் அதிக வலிமையுடன் நிறுவும். அது இங்கு நம் நோக்கம் அல்ல.

எனினும் இன்னொரு முக்கிய விஷயம் பற்றிக் குறிப்பிடாவிட்டால் இங்குச் சுட்டிப் பேச எடுக்கப்பட்டிருக்கும் தலைப்பின் மையப்புள்ளி சரியாகப் படம்பிடிக்கப்பாடாமல் போகலாம். இந்தப் புதுக்கவிதைப்பாணி ஒரு தத்துவ அக்கரையுடன் உதித்தது என்பதை மறக்கக்கூடாது. எனவே அதிக அழுத்தம் கோட்பாட்டின் மீது விழுந்தது. இங்கு நான் சொல்லும் ‘கோட்பாடு’ என்ற சொல் இந்தக் கட்டுரையில் ஆரம்பப் பகுதியில்  வந்த மூன்றாவது கட்டமாய் வந்த ‘தியரி என்றும் கோட்பாடு. மற்ற இரண்டு கட்டங்களில் பயன்பட்ட பொருளில் இங்கே கோட்பாடு என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.

இன்று விலைவாசியில் இருந்து ஒவ்வொன்றுக்கும் அகிலஉலக அளவுகோல் பயன்படுத்தபடாவிட்டால் பிரச்சனை நழுவி விடும் அபாயம் உள்ளது. இலக்கியக்களத்திலும் அகில உலகப்போக்குகள் பற்றிய பரிச்சயம் இல்லாவிட்டால் இலக்கியத்தைச் சாராம்சவாத குண்டுச்சட்டிக்குள்ளிருந்து வெளியில் கொண்டுவர முடியாமல் போய்விடும்; குமாஸ்தாத்தனமான கருத்துத்திரட்டலுக்கு மேல் கட்டுரை எழுத முடியாமல்  போய்விடும். இவர்கள் இலக்கியம் என்பது கடந்த சுமார் 200 ஆண்டுகளாய் மட்டும் அதன் சரியான அர்த்தத்தில் இருந்து வருகிறது என்ற உண்மையை அறியாமல் கட்டுரை எழுதுபவர்கள். இலக்கியம் என்பது வரலாற்றாலும், சமூகத்தாலும், உள அமைப்பாலும் வாசகர்களாலும் கட்டியமைக்கபட்ட ஒன்று. தன்னளவில் மொழிக்கு வெளியில் இலக்கியம் இல்லை. எண்பதுகளில் நடத்தப்பட்ட பாலபாடம் இது. இலக்கிய மத நம்பிக்கையாளர்கள் கடந்த சில வருடங்களாய் போடும் கூச்சலில் இந்த அமைப்பியல் பாலபாடம் பலருக்கு மறந்துவிட்டது. இலக்கியம் பல சக்திகளால் ‘கட்டப்பட்டது’  என்ற அறிவைத் தருவதுதான் மூன்றாம்கட்ட கோட்பாடு. இதனைத் தந்தவர்கள்தான் மூன்றாம்கட்ட கோட்பாட்டாளர்கள். இவர்கள் மார்க்சீயக் கோட்பாட்டாளர்களான சிவத்தம்பி மற்றும் கைலாசபதி மரபுக்குள் மட்டும் அடங்குபவர்கள் அல்லர். இவர்கள் சிவத்தம்பி மற்றும் கைலாசபதி போல இலக்கியத்தைப் பொருளாதார, சமூக உறவின் சந்தர்ப்பத்தில் மட்டும் காண்பவர்களும் அல்லர். இலக்கியத்தை மிகமிக ஆழமாகப் பார்க்கிறவர்கள். அதே நேரத்தில் இலக்கியத்தை விளக்கமுடியாததாய் – மௌடீகமாய் – சித்தரிப்பவர்களும் அல்லர். இதுவரை கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் துறைகளின் இறுதி வடிவத்தை ஆய்ந்து அவற்றின் எல்லைக் கோட்டிற்கு அப்பால் சென்று குறிக்கப்பட்டிருக்கும் வரைகோட்டில் இன்னொரு துறையில் நிழல் விழும் இடத்தில் நிற்கத் தெரிந்தவர்கள். எனவே இலக்கியத்தை இவர்கள் உளவியலாய் குறுக்குகிறார்கள் என்றோ,  அல்லது வேறு ஏதோ ஒன்றாய் மட்டும் காண்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுக் கல்வீச்சுக்கு இவர்கள் பலியாக மாட்டார்கள். பலியாவார்கள் என்பது அரைகுறை சாராம்சவாத  விமர்சகர்களின் எதிர்ப்பார்ப்பு. மிக நுட்பமாகக் கலாச்சாரமும் இலக்கியமும் ஒன்றின் நிழலில் இன்னொன்று தன் சாயலைத் தொடர்ந்து மாற்றும் கணத்தின் சித்தரிப்பு பற்றி இந்தப் புதிய கோட்பாட்டாளர்கள் அறிந்தவர்கள். வெறும் கருத்துத்திரட்டாய் இலக்கியத்தை அறியும் சாதாரண எழுத்தாளர்களுக்கு இது புரிய நாள் செல்லலாம். இவர்கள் ஒன்றில் பண்பாடாய் இலக்கியத்தைச் சுருக்கினால்தான் புரிய முடியும் என்று கூறுபவர்கள் அல்லது இலக்கியம் தனக்கான விதிமுறைகளைக் கொண்டது என்று பண்பாட்டிலிருந்து அதனைக் கத்தரித்து இலக்கியத்தின் live  செயல்பாட்டை மறந்தபடி செயல்படுகிறவர்கள். குறுக்கல் பார்வை கொண்டவர்கள். இவர்கள் எண்பதுகளின் கோட்பாடுகளை நிராகரிப்பவர்கள். அதனைத் தன் வழியில்  படித்துப் புரிபவர்களாக இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். இந்தக் கேட்டினால்  சமீபத்திய இருபது வருடமாகத் திறனாய்வு, அதன் அனைத்துலக தரத்தில் நடக்கவில்லை. திறனாய்வு (அல்லது இன்றைய பெயரில் கலாச்சாரக் கோட்பாடு – Cultural theory) இல்லாது போனால், அந்தக் காலகட்ட இலக்கிய எழுத்துக்கான ஆழமான விவாதமும் தர்க்கமும் தாபிக்கப்படாமல் போகும். இது தொடர்ந்த இலக்கிய வளர்ச்சிக்கு உதவாது.

இந்தக் கட்டுரையை முடிக்கும் முன்னால் ஒரு முக்கிய விஷயத்தைத் தொடவேண்டும் என்று தோன்றுகிறது. என் இலக்கியக் கவனிப்பின் பிரகாரம் எண்பதுகளில் தோன்றிய புனைகதைத் தர்க்கத்தின் இறுக்கத்தைத் தளர்த்திய அதிக முக்கியமான செயல்பாட்டின் உள்ளே சமூக இயக்கம் சார்ந்த ஒரு பெரிய காரியம் நடந்தது. அதாவது தமிழ்ச்சமூகத்தின் புராதனத்துக்குள்ளேயும் வரலாற்றுக்குள்ளேயும் பொதிந்து வைக்கப்பட்டிருந்த மதநம்பிக்கை சார்ந்த (Unsecular) உள் இறுகத்தைத் தகர்த்த காரியம் ஒன்று, தலித் எழுச்சி; இரண்டு, பெண் உணர்வின் விடுதலை. பெரியாரின் கருத்துக்கள், கன்னடம்வழி வந்த தலித் குரல், அம்பேத்கார் அவர்களின் கருத்துக்கள் தமிழில் அங்கீகரிக்கப்பட்டமை, இவை எல்லாவற்றையும் ஒருங்கிணைப்பு செய்த சுதந்திர மார்க்சீயம்  போன்றவைகளோடு  கதை சொல்லல் என்னும் சுதந்திரத்தின் மூலம் ஏற்பட்ட  எதையும்  உள்வயப்படுத்தும் (inclusive) தர்க்கச் சாயையும் முக்கியம். இந்தக் கட்டத்தில் கதைசொல்லலில் ஏற்பட்ட புதுப்பிரபஞ்ச  வருகையை நாம் சற்று அதிக ஸ்தூலப்படுத்திப் பேசவே விழைகிறேன். ஏனெனில் தமிழ்ச்சிந்தனை வரலாற்றின் வழி மன உருவாக்கத்தை ஆய விரும்பும் நான் இருபதாம் நூற்றாண்டின் இறுதிக்கால் பகுதியை அதன் எல்லாவித புனைவுச் சூழலின் விகசிப்பாய் பார்க்க முயலுகையில் ஒரு labrynth- இன் ஆழத்தையும் வடிவத்தையும் மேல்மட்டத்தில் காணும் அழகிய குழப்பத்தையும், ஒரு சித்திரம்போல் மனதில் உருவாக்க விரும்புகிறேன். அப்போது கதைசொல்லலில் ஏற்பட்ட labrynth குணம் ஒரு தீவிரமான பண்பாட்டு மாற்றத்தின் மையஅச்சை ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு கட்டத்திற்கு நகர்த்தியது என்ற உண்மை வெளிப்படும். சுனாமி அலை என்பது ஒரு பெரும்பாறையும் இன்னொரு பெரும்பாறையும் உடைந்து அச்சு மாற்றியதால் ஏற்பட்ட விளைவு என்று கூறிய காரணத்தை ஞாபகம் வைப்பவர்கள் இங்குக் கதைசொல்லலில் இருக்கும் பண்பாட்டு உச்சரிப்பின் வலிமையைக் கவனிப்பார்கள். அப்படிப் பார்க்கையில் புதுநாவல் கதைகள், தமிழில் எதார்த்தம்  மற்றும் (மாடர்னிசம் என்ற) நவீனத்துவத்திலிருந்து ஒரு அச்சு மாற்றம் செய்து பின்நவீனத்துவக் கதையை நோக்கி நகர்ந்ததன் மூலம் ஏற்பட்ட விளைவு என புரியும். அதன் அதிசுதந்தரமான மூச்சுக் காற்றில் கிளைத்த புதுச்செடிகள் தாம் தமிழில் புதிதாய் வந்த, பெண் உணர்வும், தலித் உணர்வும் என்று கூறலாம். அதாவது எல்லாவற்றின் வேர்களும் தத்துவமனப்போக்கோடு இணைந்தவை என்ற கருத்தை ஏற்றுக்கொண்டால் கதை சொல்லல் என்பது கடைசியில் தத்துவமன உணர்வுப் பிராந்தியத்தில் ஏற்படும்  மாற்றம் என புரியும். மொத்தத்தில் தமிழில் எண்பதுகளில் ஏற்பட்ட புதிய புனைகதை வெளியை நாம் தமிழ்  ஆலோசனை வடிவத்தில் இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மிகமுக்கியமான சம்பவமாய் ஏற்கவேண்டும். அப்போது  தமிழ்ப்பெண் உணர்வில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள புரட்சிகரமான மாற்றமும் அதன் பயனாய் ஏற்பட்டுள்ள புதிய பெண்கவிஞர்களின் கவிதைகளில் வெளிப்படும் விடுதலை உணர்வும்  எண்பதுகளின் புதுக்கவிதை தந்த ஒருவகை ஆன்ம வலய விடுதலையுடன் இணைந்தவை என்பது வெளிப்படும். அதுபோலவே தலித்  உணர்வாக வெளிப்பட்ட சொல்லாடல்கள் கூட அமைகின்றன. புதுக்கதை வெளி ஓர் தொடர்பற்ற தொடர்பாகத் தமிழ்ச்சமூகத்தின் எல்லாமட்டத்தையும் தொட்டது என்பதுதான் உண்மை

2 thoughts on “கோட்பாட்டில் இரண்டு வகை சம்பந்தமாய்….”

  1. இந்நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்த் துறை மாணவன் நான். கோட்பாடு சார்ந்து முகநூல்களில் அதிகம் விவாதிப்பதைப் பார்த்து இக்கட்டுரையைத் தேடி வாசித்தேன். என்போன்ற தொடக்க நிலையினருக்கு புரியுமளவு எளிய விவரணை. நான் படித்த இலக்கிய வரலாற்று நூல்களில் இருப்பதுபோலான வெறும் புத்தப்பெயர்கள் இல்லாமல் (அவ்வாறு எழுதியிருந்தால் போர் அடித்திருக்கும்) வரலாற்றில் நடத்த மாற்றத்தை (சட்டக மாற்றம் இது எனக்கு புதிய சொல்) விளக்கமாகவும் சுருக்கமாகவும் சொல்கிறீர்கள். ஏதோ தெரிந்துகொண்ட திருப்தி. நாங்கள் படிக்கும் இலக்கிய வரலாற்று நூல்களும் இப்படி எழுதப்பட்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.

    1. கோபி இக்கட்டுரை படித்தது பற்றி மகிழ்ச்சி-தமிழவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>