மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. விருது ஏற்புரை

(நவீன இலக்கியத்தையும் தமிழ்த்தேசிய அரசியலையும் தொல்காப்பியர்வழி முகம்கொடுத்தல்)

தமிழவன்

இந்த உரையை நகுலன் அந்திமக்காலத்தில் திருவனந்தபுரத்தில் ஒரு இலக்கியக் கூட்டத்திற்கு வற்புறுத்தி அழைத்து வந்தபோது கூறிய இரண்டு சொற்களோடு தொடங்கலாம். சாகித்திய அக்காதெமியின் அனைத்திந்திய ஜாம்பவான்கள் பலர் கலந்து கொண்ட கூட்டம். நகுலன் ஆங்கிலத்தில் பேசுவதாக இருந்தது. ஆனால் நகுலனை எங்கும் காணோம். யாரையோ அனுப்பி அவரை அழைத்து வந்தார்கள். கூட்டத்திற்கு வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வந்தவர். ஏதோ ஞாபகம் வந்தவராக பின்பு வேட்டியை இறக்கி  விட்டுவிட்டு தடுமாறினார். நீலபத்மநாபனோ, யாரோ ஒருவர் மேடைக்கு அழைத்து வந்தார்கள். மேடையில் ஏறியதும்  “எதுக்கு கூப்பிட்டீங்க? எதுக்குக் கூப்பிட்டீங்க? என்று தமிழில் கேட்டபடியே நின்றார். நீலபத்மநாபன் “இங்கிலீஷில் பேசுங்க”  என்றார். அதன்பின்பு ஆங்கிலத்திலும் Why did you invite me? என்று இரண்டு மூன்றுமுறை கேட்டுவிட்டுப் பின்பு ஞாபகம் வந்தவராக ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார். அவருக்கு வயோதிகம் பீடித்த நிலையில் சொற்களை அவர் மறக்க ஆரம்பித்த கட்டம் அது.

இன்று எனக்கும், ஓரளவு நகுலன் கேட்ட அதே வாக்கியம் இல்லையென்றாலும், அதுபோன்ற வேறு வாக்கியங்கள் மனதில் தோன்றத்தான் செய்கின்றன.

அதாவது தமிழ்ச்சூழலில் நிறைய பிரச்சனைகள் உள்ளன. அதற்காக ஒதுங்கி இருக்கவும் கூடாது. ஒதுங்கி இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். எல்லா நிகழ்வுகளிலும் பங்கெடுக்கவேண்டும். அதில் விருது கொடுப்பது, விருது வாங்குவது,அதுபோல விருது நிராகரிப்பது  எல்லாம் அடங்கும்.

கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நான் நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள், விமரிசனங்கள், ஆய்வுகள் என்று தமிழ்ச்சிந்தனையை வாசகப் பரப்போடு பரிமாறிக் கொண்டேயிருக்கிறேன்.முக்கியமாக,படைப்பு இலக்கியத்துக்கும் சிந்தனைத் துறைகளுக்கும்(அதாவது விமரிசனம் மூலம்) ஒரு உறவை ஏற்படுத்த முயன்று வருகிறேன் என்று சொல்லலாம். தமிழில் மிகப்பல படைப்பு எழுத்தாளர்கள் இருந்தார்கள். அவர்களிடமிருந்து தான் படைப்பு என்றால் என்ன என்று முதலில் அறிந்துகொண்டேன். திருநெல்வேலியில் இருந்த நூலகம் ஒன்றுக்குப் புதுமைப்பித்தன் கதையை முதன்முதலாகப் படிக்க பாளையிலிருந்து பஸ் ஏறி வந்தது ஞாபகம் இருக்கிறது. பு.பி.அன்று பலருக்கும் தெரியாத எழுத்தாளர். மு.வ.வை அறிந்திருந்தோம். பு.பி.யைப் படிக்க வேறு மனோநிலையும் வயதும் வேண்டியிருந்தது. நான் பு.பி.யைத் தேடிப் படிக்க வந்தபோது 22 அல்லது 23 வயது. 23 வயது என்பது நல்ல இலக்கியத்தை சொந்தப் புத்திபூர்வமாக வாசிக்கும் வயதல்ல போலுள்ளது. குறிப்பாக அப்போது. ஆனால் அன்றிலிருந்து ஏன் மு.வ.வை விட பு.பி. நல்ல இலக்கியவாதி என்ற கேள்வி தொடர்ந்தது. எனக்கான சொந்தமான பதில் உருவாகும் வரை, அந்த மனப்பழக்கம் கிடைக்கும் வரை, இந்த மற்றும் இதுபோன்ற கேள்விகள்  தொடர்ந்தன. பின்பு என் 40 ஆம் வயதில் ‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’ எழுதினேன். எதிர்காலத்தில் தள்ளிப்போட்டு எழுதப்பட்டிருக்க வேண்டும், அதன் காலத்துக்கு முன்பே வந்துவிட்டது என்றார்கள். அதன்பின்பு 1993-ல் ஏழு வருஷத்துக்குப் பின்பு, ‘சரித்திரத்தில் படிந்த நிழல்கள்’ என்ற நாவல் எழுதினேன். தமிழில் எழுதப்பட்ட பல நாவல்கள் எனக்கு முன் மாதிரியாக இருந்தன. ஆனால் அந்த முன்மாதிரிகளைத் தாண்டி வித்தியாசமான நாவல்களாக என் நாவல்கள் வடிவம் பெற்றன. அப்போது க.நா.சு.வுடைய விமர்சனங்கள், கைலாசபதியின் நாவல் பற்றிய நூல் எல்லாம் படித்து அவற்றை மனஅளவில் ஆத்மீயமாய் வைத்து மனதிலேயே பல ஆண்டுகள் சர்ச்சித்து வந்தேன் என்று உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.

15 அல்லது 16ஆம் வயதில் நெல்லையிலிருந்து வந்துகொண்டிருந்த தினமலரில் என்னுடைய ‘எழுத்தாளன் முடிவு’ என்ற சிறுவயதுக் கதையை வெளியிட்டார்கள். எனவே, என் அறிவுத்தேடுதல் பழக்கம் என்பது [இது எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது] இலக்கியமா? விமரிசனமா? என்று எல்லை வகுத்து வித்தியாசம் பார்க்காதது என்பதை அடிக்கோடிட்டுக் கூறவேண்டும். அல்லது உணர்வு கலந்த சிந்தனையான படைப்புக்கும், அந்த அளவு உணர்வு கலக்காத சிந்தனையான விமரிசனத்துக்கும் நடுவில்  எல்லைக்கோடுகள் போடுவது பற்றி அக்கரைப்படாதது என் இன்றுவரைய போக்கு எனலாம். இதுபற்றி அக்கரைபடாத அரைகுறை பார்வைகள் மூலம் என்னை அணுகமுடியாது.

சமீபத்தில் வந்த விவாதத்தைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். கோட்பாட்டைப் பின்பற்றிப் படைப்பை எழுதவேண்டுமா?, அல்லது படைப்பை நேரடியாக எழுதவேண்டுமா என்று ஒரு விவாதம் முன்வைக்கப்பட்டது. என்னைப் பொறுத்தவரையில் கோட்பாடும் படைப்பும் வேறு வேறு அல்ல. ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு ஒருவழிப்பாதையில் போகாது. ஒரு சுழல்பாதை இரண்டையும் இணைக்கிறது. அதுபோல்  ஒன்றுக்குமேல் இன்னொன்று என அப்பாதை பல தளங்களில் படைப்பும் கோட்பாடும் ஆக சுற்றிச் சுழல்கின்றது. இதுதான் உண்மை. அறிவு என்பதை உருவாக்குவதும் கண்டுபிடிப்பதும் வளர்த்துவதும் படைப்பின் வேலை; அதேதான் விமரிசனத்தின் வேலையும். படைப்பை  அறிவாக்கி வாசகர்களுக்கும், சமூகத்தவர்க்கும் பகிர்ந்து கொடுக்கும் செயல்பாட்டுக்குத்தான் விமரிசனம் (அ) திறனாய்வு என்று பெயர். எல்லாப் படைப்புக்களுக்குள்ளும், இலக்கியத்திறனாய்வு இருக்கிறது. அதுபோல் எல்லா இலக்கியத் திறனாய்வு உருவங்களுக்குள்ளும் படைப்புக்கள் இருக்கின்றன. சில படைப்புக்களில் மிகப்பல படைப்புக்கள் அடக்கம். சில விமரிசனத்தில் பல படைப்புக்கள் அடக்கம்.ஒடுங்கிய அல்லது விழிப்பு அடையாத மனசோடு படித்தால் இங்கு நான் சொல்வது ஏற்கப்படாமல் போகலாம். தமிழ்த்துறையில் பெரியஅளவில் விமரிசனம் வளராததற்கு மரபை, கல் போன்று, அல்லது மண் போன்று நாம் நினைப்பதே காரணம். தொல்காப்பியம் கல் அல்ல; மண் அல்ல. ஒவ்வொரு வாசகனும் அல்லது மாணவனும் தனதே ஆன மன நிலையுடன் தொல்காப்பியத்தை வாசிக்க ஆரம்பிக்கும்போது தொல்காப்பியம் இளகிக் கொடுக்கும்; தலித் ஒருவர் வாசிக்கும்போதும் பெண் ஒருவர் வாசிக்கும் போதும் தலித் விளக்கத்தையும் பெண்ணிய விளக்கத்தையும் தொல்காப்பியம் தரும். வாசகன் தொல்காப்பியத்தின் ஆசிரியன் ஆகிறான். இதற்கு வழிசெய்ய விரும்பினால் தொல்காப்பியத்தைத் தமிழ்த்துறைகளில் பரப்பப்பட்ட மனோ நிலையில் பார்க்கக்கூடாது.ஒரு இலக்கண நூலாகப் படிக்கக்கூடாது. அது இலக்கண நூலானால் ஏன் கவிதை இலக்கியம் மற்றும் உவமை பற்றியும் காதல் பாடல்கள், வீரப் பாடல்கள் போன்றவை பற்றியும்சொல்ல  மூன்றில் ஒரு பகுதியைத் தொல்காப்பியம் ஒதுக்கியிருக்கிறது? இந்தக் கேள்வியை ஏற்கனவே பலர் எழுப்பி பதிலும் தந்துள்ளார்கள். அதில் ஒரு பதில் முக்கியமானது. அதாவது, வாழ்க்கைக்கான நூலா, அல்லது கவிதைக்கான நூலா அந்தத் தொல்காப்பியம்? இந்தக் கேள்வியில் ‘வாழ்க்கை’ என்ற சொல் முக்கியம். அதுபோல் கவிதை என்ற சொல்லும் முக்கியம். இங்கு மேற்கத்திய சிந்தனையாளர் அரிஸ்டாட்டில் என்ற பெயரைக் கொண்டுவரவேண்டும். ஏனென்றால் அரிஸ்டாட்டில் கவிதையையும் வாழ்க்கையின் சகல துறைகளையும் இணைத்தார். கவிதை பற்றிப் பேசினாலும் அவர் கவிதைக்கும் நம் இயல்புணர்வுக்கும் (Instinct) தொடர்புண்டு என்றும் மனிதன் அறிவைத் தேடும் போக்கில் தத்துவத்தில் நுழைகிறான் என்றும் கூறினார். தத்துவம் ஒரு பிரச்சனையை உலகப் பொதுவானதாக்குகிறது; எனவே, கவிதை தத்துவத்தோடு உறவுடையதாகிறது. அப்படிப்பார்க்கும்போது விலங்குகள் பற்றியும் அதனோடு தொடர்பில்லாத கடவுள், மற்றும் ஆன்மாவோடும் இயற்கை பற்றிய சிந்தனையோடும், தர்க்கம், நீதியியல், அரசியல் உளவியலுடனும்  சிந்திக்கும் முறையை நாம் மேற்கொள்ள வேண்டும் என்றார் அரிஸ்டாட்டில். இப்படி எல்லாவற்றையும் பற்றி ஒன்றுவிடாமல் யோசிக்கும் ஒருவித முறைதான் தத்துவம். இப்படிக் கவிதையை ஒரு உலகப் பொதுவான யோசனைமுறையோடு அரிஸ்டாட்டில் தொடர்புப் படுத்தினார். கவிதை வெறும் புத்தகம் சம்பந்தமானது என்று நாம் அறிந்து வைத்திருப்பது தவறு. சிந்திக்கப் பலமுறைகள் உள்ளன. அதோடு தொடர்புடையதாய் கவிதையை அரிஸ்டாட்டில் பார்த்தார் என்று நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அல்லது எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது. ஏனெனில் என் படைப்பும் – நான் எழுதும் சிறுகதைகள், நாவல்கள் – நாடகம் போன்ற இலக்கிய மொழிவழி நடத்தும் சிந்தனையும் – தொல்காப்பியமும் சம்பந்தப்பட்டவைகள்தாம். சப்பந்தப்பட்டவை அல்ல என்றால் தொல்காப்பியம் பற்றி நான் யோசிக்கத் தேவையில்லை. இன்று நான் புனைகதை எழுதுவதோடு சேர்த்து ஈடுபட்டிருக்கும் காரியத்தில் ஒன்றுதான் தொல்காப்பியம் பற்றி யோசிப்பதும். அது எனக்கும் வழிகாட்டுகின்றது. அதிகமான ஆங்கில நூல்களைப் படித்து அவற்றின் வழியாக சிந்திக்கும் பழக்கம் உள்ளவர்கள் நம்வேர்களைத்  திரும்பிப்  பார்ப்பதற்கு  தமிழ்ச்சிந்தனை முறையின் பக்கம் திரும்பவேண்டும்.நான் அமைப்பியல் பற்றி எழுதியபோது உலக அளவில் உள்ள சிந்தனையாக அது இருந்தாலும் முழுமைகிடைக்கவில்லை. தமிழோடு இணைத்துப் ‘பழந்தமிழில் அமைப்பியல் மற்றும் குறியியல்’ என்ற நூல் எழுதியபோதுதான் திருப்தி ஏற்பட்டது.     அப்படி யோசிக்கையில் தொல்காப்பியம் என்னுடைய வேர்களாகிறது. கையைப் பிடித்து இழுத்து ‘இங்கே பார்’ என எண் மண்ணுக்குக் கொண்டு வருகிறது.

மீண்டும் அரிஸ்டாட்டிலுக்கும் தொல்காப்பியத்துக்கும் உள்ள தொடர்பு பற்றிப்பார்ப்போம். அப்படிப் பார்க்கையில் தொல்காப்பியமும் உலகை முழுமையான ஒன்றாகப் பார்க்கிறது; அரிஸ்டாட்டிலும் உலகை முழுமையான ஒன்றாகப் பார்க்கிறார். அதாவது இருவரின் முறைகளும் அருகில் வருகின்றன. தொல்காப்பியரும் அரிஸ்டாட்டிலும் காலம்பற்றிய ஒழுங்கு (Unity of time) மற்றும் இடம் பற்றிய ஒழுங்கு (Unity of Place) பற்றிச் சிந்திக்கிறார்கள். காலம், இடம் என்ற இரண்டு பரிமாணங்களுக்குத் தொல்காப்பியர் ‘முதல்பொருள்’ என்று பெயர் கொடுக்கிறார். காலம் என்பதை ஒரு ஆண்டின் பல்வேறு பிரிவுகள் என்று தொகாப்பியர் வடிவப்படுத்துவதைத் தொடர்ந்து நீட்சிப்படுத்துகிறார் அரிஸ்டாட்டில். அவ்வளவுதான். இடமும் தொல்காப்பியருக்கு (குறிஞ்சி, முல்லை, மருதம், போன்றவை) என்றால் அரிஸ்டாட்டிலுக்கு பொது இடம்; உலகப் பரப்பு என்று நீட்சிப்படுகிறது.

தொல்காப்பியத்தில் வரும் காலம், இடம் என்ற இரண்டு பரிமாணங்கள் மனிதர்களின் உணர்வோடும் (உரிப்பொருள்) புறஉயிர்களான பலவற்றோடும் (கருப்பொருள்) கருத்து ரீதியில் இறுக்கமாகத் தொடர்பு கொண்டிருக்கிறது. எனவே, தொல்காப்பியரும் உலகப்பொதுவான (Universal) தத்துவப் பார்வையின்  அடித்தளத்தில் தன் சிந்தனைமுறையை விரிவாக்குகிறார். அரிஸ்டாட்டிலும் உலகச் சிந்தனையின் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாய் கவிதைகளைப் பார்க்கிறார்.  விலங்குகள், பறவைகள், தலைவன், தலைவி, காதல், யுத்தம், வெற்றி தோல்வி, உடல்புணர்ச்சி, உள்ளப்புணர்ச்சி, சோகம், பிரிவு, பயணம், அரசியல், அரசனுக்குப் புத்தி சொல்லுதல், குடும்பப் பிரச்சனை, கணிகை, மனைவி, புதல்வன், காடு, நாடு என்று பல்வேறு கருத்தாக்கங்கள் பற்றித் தொல்காப்பியமும் அதன் கருத்தாக்கங்களோடு தொடர்புள்ள சங்க இலக்கியமும் சிந்திக்கின்றன. அரிஸ்டாட்டிலின் பார்வையின் அடிப்படையும் இதுபோன்றதுதான் என்றே கூறுவேன். அடிப்படை என்ற சொல் முக்கியம். ஏனெனில் அரிஸ்டாட்டில் கருத்தாக்கமாக ஆக்குகிறார். தொல்.அப்படிச்செய்வதில்லை. இது வேறுபாடு. அதனால் தொல்காப்பிய பாதைவழியில் மேற்கத்திய தத்துவமரபு தட்டுப்படவில்லை. எனினும் அவரிடம் அரிஸ்டாட்டில் போலவே ஒருங்கிணைக்கும் பார்வை உள்ளது. இந்த ஒருங்கமைவு பெற்ற பார்வைதான் ஆதித்தமிழர்களின் பார்வை. இது சமஸ்கிருதம், மெதுவாய் தொல்காப்பியத்தின் சில சூத்திரங்கள் மூலமும் கருத்தாக்கங்கள் மூலமும் பக்தி இலக்கியம் மூலமும் தமிழர்களின் வாழ்வில் தலைநீட்டு முன்பே இருந்த தமிழ் உலகப்பார்வை. ஒருங்கமைவு பெற்ற பார்வை (Integrated) எனலாம். எனவே, 21-ஆம் நூற்றாண்டில் வாழும் நாம் இன்றைக்குள்ள நம் அரசியல், சரித்திர, சமூக, பண்பாட்டுச் சூழலுக்கேற்ப இலக்கியத் திறனாய்வை மறுவடிவாக்கம் செய்ய வேண்டியுள்ளது. இன்றைய தமிழர்களின் சரித்திரம் மிகவும் பலவீனமான சரித்திரம். அவர்கள் சிந்தனைக்குள்ளேயே அவர்களுக்கு விடிவு காலம் உள்ளது என்பது அவர்களுக்குத்தெரியாது. அதனை அறியாதபடி வாழ்கிறார்கள். அத்தகைய புதிய நெறிகாட்டல், தொல்காப்பியத்தின் கருத்தாக்கங்களை அகில உலக சிந்தனைமுறைமைகளோடு உறழ்ந்தும் ஒப்பிட்டும் வகை, தொகை செய்தும் பார்க்கும்போது கிடைக்கின்றது. தமிழ்முறை சிந்தனை மூலம் நமக்கு வந்து சேர்ந்திருக்கிற கடந்த சுமார் 150 வருட காலத் தற்கால இலக்கியத்தைப் பார்க்கும்போது பல ஆழ் யோசனைகள் ஏற்படுகின்றன. எத்தகைய பாதிப்புக்களால் தற்காலத் தமிழ் இலக்கியம் தன்னை உருவாக்கியுள்ளது? இரண்டு பாதிப்புக்கள் முக்கியமாகச் சுட்டிக்காட்டப்பட வேண்டும்.

  1. பாரதி வழி வந்த தற்கால இலக்கியப் பாரம்பரியம் என்று ஒரு நூற்றாண்டு முழுவதும் பாய்ந்த விரிவு ஒன்று.
  2. பாரதிதாசன் வழி வந்த தற்கால இலக்கியப் பாரம்பரியம் இன்னொன்று.இந்த 2 ஆம் கருத்தைப் பலர் அங்கீகரிக்க ஏனோ மறுக்கிறார்கள்.(1)

சிலர் பாரதி வழியை மட்டுமே புதுக்கவிதை உருவாக்காரணம் எனப்  பார்ப்பது முற்றிலும் சரியான பார்வை அல்ல. பாரதிதாசன் பாரம்பரியம்  புதுக்கவிதையில் எண்பதுகளில் இருந்து இன்றுவரை உள்ளது. இதுபற்றிய திறனாய்வு முழுசாய் வரவில்லை.இது குறை. பாரதிதாசன் வழிவந்த பாரம்பரியம் சங்க இலக்கியத்தில் வேர்விட்டு பின்னோக்கு (Reverse) கொண்டு ஒரு திரும்பல்மூலம் உருவானதாகும். அதாவது தற்காலத்திலிருந்து திரும்பிச் சங்காலத்தைப் பாக்கிறார் பா.தாசன். பாரதி பாரம்பரியம் சமஸ்கிருத இலக்கியம் வழி உருவான தமிழின் மத்தியகால வேரிலிருந்து  உருவானது. இதில் ஓரளவு நாட்டுப்புறத் தன்மைகளும் உண்டு. அது மிக மெலிதான இழை. இன்றைய தமிழ் முதன்மைச் சிந்தனையான, தமிழ் அடையாள அரசியல் அனைத்திந்தியச் சூழலோடு ஒப்பிட்டுப்பார்க்கும் ஒரு பிரத்தியேக நோக்குமுறையை இன்று உயிர்ப்பித்துள்ளது. இதற்கான கலை இலக்கியப்பார்வை நம் தற்கால இலக்கியத்தில் இருக்கிறதா? 1.) 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பகட்டம் பாரதி மற்றும் அயோத்திதாசர் சிந்தனைக் கட்டமைப்புக்கள் வழி அமைகிறது. பாரதி மரபுக்கு (இந்திய சுதந்திரம்) அயோத்திதாசர் மரபு சுதந்திரத்தை எதிர்த்து மாற்று மரபாகிறது. 2.) 20ஆம் நூற்றாண்டின் மணிக்கொடி – தேசிய விநாயகம், நாமக்கல் கவிஞர் போன்றோரிடம் காணப்பட்ட இன்றைக்குப் பொருந்தாத ஏக இந்தியப் பார்வைக்கு எதிராக பாரதிதாசன் வருகிறார். 3.) 20-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தோன்றிய நகுலன் சார்ந்த இலக்கிய மாடர்னிசத்துக்கு(Literary Modernism) எதிரான பொருளாதார மாடர்னிட்டி, மற்றும் பின்-நவீனத்துவப் போக்குகள் வந்தன. மேலே கூறிய இரண்டு பாதிப்புக்கள்(பாரதி-பாரதிதாசன்) இந்த மூன்றுவிதமான , இருபதாம் நூற்றாண்டு இலக்கியவரலாற்றின் இலக்கிய நடைகளை (Literary Styles) எப்படிப் பாதித்துள்ளன? ந.பிச்சமூர்த்தி பாரதி மொழி வழி வந்தார் என்றால்  சி.மணி, பாரதிதாசன் மொழிவழி உருவானார் எனலாம்.புதுக்கவிதையில் பிரதிபலித்த  பா.தா மொழி எப்படிப்பட்டது? இதுவும் யாரும் கவலைப்படாத வெறும் கேள்வியே.தற்கால இலக்கிய ஆய்வில் விழுந்துள்ள இடைவெளிகள் இவை.

 

இந்த மூன்றுவித 20ஆம் நூற்றாண்டு வரலாற்று நிலைப்பட்ட படைப்பிலக்கியத்தில் தமிழ் அடையாளத்தை எப்படி வடிவப்படுத்தி அரசியல் அறிவாக்கமாக்குவது? 2009 தமிழினப் படுகொலையை உள்ளமைவாகவும், வெளிப்படையாகவும் ஞாபகமாய் கொண்டிருக்கும் தற்கால இலக்கியப் படைப்புக்கள் எவை? அதற்கேற்ற திறனாய்வு வடிவமைப்பு, தமிழ்ச்சமூக உள்முரண்களும், வெளிமுரண்களும் களத்தில் எடுக்கப்பட்ட சிந்தனை முன்னெடுப்புகளாய் வந்துள்ளனவா?

தொல்காப்பியம் பற்றிய மறுஓர்மையானது கடந்த சுமார் 35, 40 ஆண்டுகளாகவே, தற்கால இலக்கியத் திறனாய்வில் மெதுமெதுவாகத் தலைகாட்டி வருகின்றது. அதன்வேர்கள் தி.சு.நடராசன் ஆய்வேட்டில் உள்ளது. அதற்கான தேவை ஒரு நீண்ட பாரம்பரிய உந்துதலின் மூலம் வெளிப்பட்டுள்ளது. இது ஒருவித தமிழ் அடையாளத்தேடலில் உள்ளது. தமிழ் அடையாளம் பற்றிப்பேசும் போது தொல்காப்பியம் அதிகம் பேசப்படுகிறது. நன்னூல் அல்ல. வ.உ.சி., திரு.வி.க., மறைமலை, மனோன்மணியம் சுந்தரனார், அண்ணா, ம.பொ.சி. நேசமணி என்று பல்வேறு சுட்டிகள் (Index) 20-ஆம் நூற்றாண்டின் தமிழ்ச்சார் சிந்தனையின் உலகப்பொதுப்பொருண்மைகளைத் தீர்மானிக்கிறார்கள். சிலர் அரசியலில், சிலர் தத்துவம், ஆய்வுகளில். வரலாற்றில் தொல்காப்பியம் மற்றும் நன்னூல் என்னும் இரண்டு இலக்கணநூல் வடிவாக்கம் பற்றிய ஒப்பீட்டுச் சிந்தனை தொல்காப்பியத்தின் தமிழ்ப் பொருத்தப்பாட்டை வலியுறுத்துகிறது. அதாவது நன்னூல் பொருளதிகாரத்தைச் சுருக்கிவிடும் அரசியல் கொண்டிருக் கிறது. எழுத்ததிகாரத்தில்  தமிழ் ஒலிகள் பற்றியும், சொல்லதிகாரத்தில் அந்த ஒலிகள் அர்த்தமாவது பற்றியும் பொருளதிகாரத்தில் கவிதை மற்றும் ஒட்டுமொத்த தமிழடையாளம் உருவாவதும் வருகிறது. இது 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியில் தமிழுணர்வாகி, தமிழரசியல் என்ற நவீன உலக வரலாற்றை உள்ளேற்ற தேர்ந்தேடுப்புமுறை அரசியலாகத் தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே, சுருக்கமாகச் சொன்னால் தொல்காப்பியம் மீதான  மறுஓர்மை என்பது வரலாற்றில் பின்னேநோக்கிப் போவதல்ல, பழமையிலிருந்து நவீன அரசியலைப் பார்க்கும் புதியமுகம் ஒன்றைப் பெறும் உத்தியாகவே இருக்கிறது. இதனோடு தான் தமிழ்ப் படிக்கும் மாணவர்களின் வாழ்க்கைப் பின்னிப் பிணைந்திருக்கிறது. தமிழ்ப் படைப்பிலக்கியத்திற்குள் தமிழ் படிக்கும் இளைஞர்கள் வரவேண்டியது இங்குத்தான் முக்கியத்துவம் பெறுகிறது. தொல்காப்பியத்தின் விதிகளுக்குப் பின்புறம் காணப்படும் அதன் பிம்பத்தின் வழி ஒரு ‘பிம்பத் தொல்காப்பியம்’ இருக்கிறது. அந்தப் பிம்பம்தான் தமிழ்ப்படைப்பு மனத்தைத் தீர்மானிக்கவேண்டும். யார்யாரோ இங்கு உள்ளார்கள்.

அந்த முறையில் தொல்காப்பியத்தின் மூன்றுபெரும் அதிகாரங்களை கவிதையியலாகவும் சிந்தனையியலாகவும்  தத்துவமாகவும் “மொழிபெயர்ப்பது” எப்படி என்று பார்க்கவேண்டும். அந்த மொழிபெயர்ப்பு சற்று மாறுபட்ட வடிவமாற்றம் ஆகும். சங்க இலக்கியம் தொல்காப்பியமாக மொழிபெயர்க்கப் பட்டது. பாரதிதாசனும்  சங்க இலக்கியத்தின் மொழிபெயர்ப்பே. இதனைக் சற்று ஆழமாகப் புரிந்து கொள்ளவேண்டும். அதற்கு மீண்டும் அரிஸ்டாட்டிலின் உதவியை நாட வேண்டியிருக்கிறது. சிந்தனையில் அந்நியம், சுயம் என்று வேறுபாடு பார்க்கத் தேவையில்லை என்பதைத் தொல்காப்பியம் தன் நெறியாக பிரச்சாரம் செய்கிறது. கூர்ந்து கவனித்தால் அது தெளிவாகும்.

எழுத்து, சொல், பொருள் என்ற முப்பிரிவினையைவிட வேறு ஒரு நெறி வழி தொல்காப்பியம் அணுகப்படவேண்டும் என்று தொல்காப்பியக் கல்வியாளர்களான உரையாசிரியர்கள் வலியுறுத்துகிறார்கள் என நான் எடுத்துக்கொள்ள காரணங்கள் உள்ளன. அதில் உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்ற இரண்டு நோக்கு நிலைகள் வடிவப்படுத்தப்படுகின்றன. இது உலகப்பொதுச் சிந்தனை. புற உலகம் சிந்தனை உலகம்; அல்லது மனதில் உள்ள புறத்தன்மையான மொழி.  ‘உலக வழக்கையும்’‘செய்யுள் வழக்கையும்’ வியாக்கியானப்படுத்தலாம். அதாவது விரிவு படுத்தலாம். தொல்காப்பியத்தின் ஓர் இயலான பெயரியலில் சொன்மை, பொருண்மை உள்ளன.அவற்றை (expression and content) என்றும்  கூறலாம். அரிஸ்டாட்டில் ஒப்புமைச் சிந்தனை (Mimesis) என்று ஒன்றை அறிமுகம் செய்கிறார். எதனோடு ஒப்பிடுவது? கவிதைக்குள், துன்பியல் நாடகத்துக்குள் வரும் உணர்வு அல்லது நாடகப் பாத்திரம் அல்லது அவற்றின் அர்த்தம் உலகோடு ஒப்பிடப்படுகிறது என்கிறார் அரிஸ்டாட்டில். சற்று நீட்சிப்படுத்தினால் உலக வழக்கு, செய்யுள் வழக்கு அல்லது சொன்மை(சொல்தன்மை), பொருண்மை(பொருள்தன்மை) போன்றன ஒப்பீட்டுச் சிந்தனைகள் என்று மறுவியாக்கியானம் செய்யப்படத் தக்கவையே. சற்று விரிவாகப் பார்ப்போம்.( 2)

மனிதர்கள் தொடர்ந்து தன்னையும் சுற்றுப்புறத்தையும் அறியமுயல்கிறார்கள்.அப்போதுஒவ்வொன்றையும்ஒப்பிடுகிறார்கள். ஒன்றுபோல் இன்னொன்று இருப்பதை அறிகிறார்கள். இந்த ஒப்புமைச் சிந்தனையே அறிவு பெறுவதற்கு அடிப்படை. இவ்வாறு அறிவுநாட்டம் கவிதையின் ஒலி, ஒத்திசைவு(Rhythm), மொழிநாட்டமாக அமைகிறது என்கிறார் அரிஸ்டாட்டில். இதனை விரிவாக அரிஸ்டாட்டில் விளக்குகிறார். இந்த விளக்கம் தொல்காப்பியத்தில் இல்லையென்றாலும் ஒலி ஒழுங்குகளும் (எழுத்ததிகாரம்)வாக்கியங்கள்(சொல்லதிகாரம்),கவிதை(பொருளதிகாரம்)யும் தொல்காப்பியத்தில் இணைகின்றன. அது அறிவுத் தேட்டத்தின் செயல்பாடாகும். தொல்காப்பியத்தை எழுத்ததிகாரம், சொல்லதிகாரமாக சுருக்கியதோடான்றி இலக்கணம் வேறு அணி அலங்காரம் வேறு என்ற சமஸ்கிருதப் பார்வை தமிழில் மத்திய பிற்காலத்தில் கோலோச்சியது. தொல்காப்பியத் தனிப்பார்வை, தமிழ்ப்பார்வை. இதனை ஏனோ சமஸ்கிருதப்பார்வை அழித்தது. சமஸ்கிருதத்தோடு தொடர்பில்லாத பார்வையை மறைமலை தலைமையில் பிற்காலத்தில் கட்டி உருவாக்கினார்கள். இந்தத் தமிழ்ப் பார்வைக்கும் அரிஸ்டாட்டில் பார்வைக்கும் ஒற்றுமை இருப்பதைக் காண்கிறோம்.

இப்படி, கவிதை என்பது மொழியால்  ஆனதால் (பேச்சிலும், எழுத்திலும்) உலக உண்மையின் பிரதிபலிப்பு அல்லது பிம்பம் அல்லது போன்மைச்செயல் என்ற அரிஸ்டாட்டிலியக் கருத்து (மிமஸிஸ்) தொல்காப்பிபயத்தை விளக்குவதற்கும் பயன்படும். இங்குத்தான் சங்க இலக்கியத்தின் மொழி பெயர்ப்பு (கோட்பாட்டாக்கம்)தான் தொல்காப்பியம் என்ற பார்வை கிடைக்கிறது. தொல்காப்பியத்தில் உவமையியல் என்ற பகுதி ஒன்று உள்ளது. உவமை எப்படி உருவாகிறது என்ற கேள்விக்கான சிந்தனை இவ்வியலில் உண்டு. முதல்நூற்பா3 அதுபற்றி விளக்குகிறது. பேராசிரியர் என்ற உரையாசிரியர் பிரச்சனையை விரிவாக அணுகுகிறார். தொழில், பயன், வடிவம், நிறம் சார்ந்து ஒப்புமை (உவமை) வரும் என்று தொல்காப்பிய நூற்பாவுக்குப் பொருள்சொல்லும் பேராசிரியர் செவி சார்ந்தது (குயில்போல மொழி)  என்றும் நாக்கு சார்ந்தது என்றும் (வேம்பு போல கைக்கும்) மூக்கு சார்ந்தது என்றும் (ஆம்பல் நாறும் துவர்வாய்) மெய் சார்ந்தது (தீப்போலச் சுடும்) என்றும் விரிவுபடுத்துகிறார். ஆக செவி, நாக்கு, மெய், மூக்கு என்று முக்கியமான ஐம்பொறிகளின் நான்கு சார்ந்து புலன் அறிவாக வரும் உலகம் ஒப்புமைச் சிந்தனைக்கு முக்கியமாகிறது. உலகத்தை மனிதர்கள் புலன்களால் மட்டுமே அறிய முடியும். இது  ஈ.வெ.ரா. பெரியார்போன்றோர்  தமிழ்மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்த தத்துவம். உலகை மொழி மூலம் ஒப்புமையாக்கச்சிந்தனை செய்வதே உவமை என பேராசிரியர் கூறிகிறார் இங்கு. இதன்வழி கிடைக்கும் உவமையியல் சமஸ்கிருதம் போல அலங்காரமாக அல்லாமல் அரிஸ்டாட்டிலின் ஒப்புமையாகிறது.

இந்த என் விளக்கத்தால் திருப்தி அடையாதவர்கள் கூட திருப்தி அடையும்படி பேராசிரியர் உரையில் வேறு ஓரிடம் வருகிறது. இந்த நூற்பாவில் வரும் நான்கு அம்சங்களும் (வினை முதலியன) அகத்திற்கு மட்டுமா அல்லது புறத்துக்கும் சேர்த்தா என்று கேள்வி எழுப்பி, பதில் தருகிறார் பேராசிரியர். புறத்துக்கும் அகத்திற்கும் இந்த நான்கும் பொருந்தும் என்கிறார் பேராசிரியர்4. வெறும் அலங்காரம்தான் என்று சமஸ்கிருதப் பார்வையை அங்கீகரிக்கும் உரையாசிரியர்களும் உண்டு5. எனவே, அன்றைய தமிழகத்தில் சமஸ்கிருதம் சார்ந்தும் சாராதும் சிந்தித்துள்ள அக்காலச் சிந்தனையாளர்கள் பற்றியும் அறிகிறோம். இதில் சமஸ்கிருதம் சாராத பேராசிரியர் என்பவரின் தொல்காப்பிய விளக்கம் அரிஸ்டாட்டிலிய விளக்கத்தோடு பொருந்துகிறது.

அதாவது இங்கு நான் சொல்ல வருவது இதுதான். உவமை என்றால் ஒன்று இன்னொன்றோடு ஒப்பிடுவது. உலகில் உள்ள, புலன்கள் மூலன் அறியத்தக்க, ஓர் உண்மையை அல்லது வஸ்துவை இன்னொன்றோடு ஒப்பிடுவது பற்றியதே உவமயியல் என்று தத்துவமாக்கிக் கூறுகிறார் பேராசிரியர். இப்படி நாம் பார்ப்பது சரி என்றால் தொல்காப்பியரும் அரிஸ்டாட்டிலும் ஒரே சிந்தனையை முன்வைக்கின்றனர். கவிதையின் அடிப்படை, ஒப்புமை சிந்தனை (imitative) தான். அரிஸ்டாட்டில் வெளிப்படையாகவும் தொல்காப்பியர் (பேராசிரியர் என்ற உரையாசிரியர் வழியில்) உள்ளர்த்தமாகவும் கூறியுள்ளனர். தொல்காப்பியரில் இச்சிந்தனை இருப்பதை வருவித்து நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

இப்போது நாம் அடுத்த படியில் ஏறவேண்டும். அதாவது சங்க இலக்கியம் வந்த பிறகு தொல்காப்பியம் வந்ததா? அல்லது முன்பே வந்ததா என்ற கேள்வி. சிவத்தம்பி போன்றோர் கேட்கிற கேள்வி. கேள்வியைத் தாண்டி சிந்திக்க முயலவேண்டும். சங்க இலக்கியத்தின் கோட்பாடுகளின் தொகுப்பா தொல்காப்பியம், அல்லது தொல்காப்பியம் சொல்லும் கோட்பாடுகளைப் பின்பற்றி எழுதப்பட்டதா சங்க இலக்கியப் பாடல்களான எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும்? தமிழ் மொழியில் சங்க இலக்கியம் படைப்பு; தொல்காப்பியம் கோட்பாடு. இரண்டும் கலக்கப்படவேண்டும்.இப்படிக் கலப்பதால் மனதில் ஏற்படும் அறிவின் வெளிபாடாய் அமைந்ததே இருபது நூற்றாண்டுகள் பேரருவியாய் பாய்ந்த தமிழ் இலக்கிய வரலாறு.உவமைச்சிந்தனை என்பது உலகை புலன்கள் மூலம் அறிவது என்று நாம் இப்போது நிரூபித்து உள்ளதால் இந்த இரண்டாயிர வருட இலக்கிய வரலாறு என்பது நம் இரண்டாயிர ஆண்டு சிந்தனையின் வரலாறு  ஆகிறது.இந்த வரலாறு என்னும் மறைகுறி( system of codes)த்தொகுப்பு, தமிழர்கள் பற்றியும் அவர்களின் எல்லாச் சிந்தனையைப் பற்றியும்   அரசியலைப் பற்றியும் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறது.எனவே தொல்காப்பியமும் சங்க இலக்கியமும் இன்றைய, நமக்குச்சொல்லும்,  நுட்பமான திறனாய்வுச் செய்தி எது என்று கேட்டால் அது நமது நாவல், சிறுகதை, போன்ற படைப்புகளும் சிந்தனையும் பின்னிப்பிணைந்தே உள்ளன என்பது.இந்த வலியுறுத்தல் தான் 2000 ஆண்டுகளாகத் தமிழ் அதன் சிந்தனைக் கட்டமைப்பைச் செய்யும் படைப்பாளிகளிடம் முன்வைக்கும் வேண்டுகோள்.அதாவது இனி வரும் தொல்காப்பியர்கள் யார் என்று நீங்கள் கேட்டால் அவர்கள் தமிழில் எழுதும் திறனாய்வாளர்களே.

இப்படிப் பலவித நீட்சிப்படுத்தப்பட்ட கேள்விகளுக்கு  நீட்சிப்படுத்தப்பட்ட பதில்களைச் சொல்வது எப்படி என்று மாணவர்கள் அறியவேண்டும் என்று கூறவரும்போதே  நடக்கிற காரியங்கள் சோர்வையும் தருகின்றன. பரிசு பெறுவதைவிட எழுத்தின் மீது விவாதம் நடக்கும் என்று நினைத்தேன். இறுதியாக நான் பொதுவான ஒரு சிந்தனையைச் சொல்வது என்றால்   இலக்கியப் படைப்பில், கோட்பாடு உள்ளது என்றும்  அதுபோல் கோட்பாட்டில், இலக்கியப் படைப்பு உள்ளது என்றும் முடிவு கூறலாம். எனவேதான் இக்கட்டுரையை என் படைப்பும் திறனாய்வும் ஒன்றுக்குள்  இன்னொன்று ஊடுபாவாக உள்ளன என்று கூறித்தொடங்கினேன்.  எல்லோருக்கும் நன்றி.

குறிப்பு:

  1. பாரதிதாசன் பற்றிய என் நூல்  கட்டுரைகளும், என் இதர  தனிக்கட்டுரைகளும் பார்க்கலாம்.
  2. சொன்மை பற்றிய என் கட்டுரைகளும் பிற ஆய்வாளர்களின் கட்டுரைகளும் பார்க்கலாம்.
  3. வினை, பயன், மெய், உரு என்ற நான்கே

வகைபெற வந்த உவமைத் தோற்றம்  (தொல்.பொருள் உவமயியல்)

 

  1. மற்று அகம் புறம் என்பனவற்றுள் இஃது என்ன பொருள் எனப்படுமோ எனின் அவ்விரண்டு மெனப்படும். (தொல். உரைவளம். பொருளதிகாரம், உவமயியல் – தொகுப்பு : ஆ. சிவலிங்கனார். பக். 4, 1998).

 

  1. இளம்பூரணர் இங்கு அலங்காரம் சார்ந்த பார்வையை வெளிப்படுத்துகிறார். (மேலது நூல். பக். 2).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>