தமிழ் இலக்கியத்தில் விமரிசனம் இருக்கிறதா?

வண்ணத்துப்பூச்சியின் இறகுகள்(திராநதி ‘காலம்’)

தமிழில் இலக்கிய விமரிசனம் இருக்கிறதா?

 

நம்மொழி பல நூறு வருடங்களாக அப்படியே இருக்கிறதென்று கருதுகிறோம். மாறவில்லை என்று நினைக்கிறோம்.  ஆனால் உண்மை அதுவல்ல. மொழியின் சில கூறுகள்  ஆண்டாண்டாய் மாறாமலும்  வேறுசில கூறுகள் மாறிக்கொண்டும் வருகின்றன.

அதுபோல் மொழி பற்றிப் பேசும்போது மொழியின் மூலம் புதிதாய் படைக்கும் இலக்கியம் மீண்டும் நுட்பமாய் மொழியின் மீது செலுத்தும் பாதிப்புகள் பற்றி நாம் அதிகம் பேசுவதில்லை.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இல்லாத பல சொற்கள் இன்று தமிழில் புளங்குகின்றன. ‘மொக்கை’ என்றோ ‘கலாய்கிறது’ என்றோ இன்று வந்துள்ள சொற்கள் எப்படி, எங்கிருந்து வந்தன என்று யாருக்கும் தெரியாது. அதுபோல் சொல்லாடல், கதையாடல், கட்டமைப்பு போன்ற சொற்கள் தினசரிகளில் வருகின்றன.

சொற்களைவிட நுட்பமான காரியம் இலக்கியம். இலக்கியம் என்பது மொழியில் செய்யப்படுவது என்று இருபதம் நூற்றாண்டில் மேற்கில் பெரியதாய் பேசப்பட்டது. ஆகையால் மொழிக்கும் இலக்கியத்துக்கும் பெரிய தொடர்பு உள்ளது. இலக்கியம் நமக்குத் தெரியாத முறையில் நம் அன்றாட பேச்சைப் பாதிக்கிறது. மொழியியல்வாதி நோம்சாம்ஸ்கி பற்றி இன்று உலகில் தெரியாதவர்கள் இல்லை. அவர் ஒரு விஷயம் சொல்கிறார். நாம் பேசிக் கொண்டிருக்கும்போது அடுத்த வாக்கியம் எப்படிப் பேசுவோம் என்று நம்மில் யாருக்கும் தெரியாது என்கிறார். அப்படி நாம் பேசும் ஒவ்வொரு வாக்கியமும் நமக்குத் தெரியாத வாக்கியம்தான். அதாவது நிச்சயத்துக்கும் பின்னால் ஒரு நிச்சயமின்மை உள்ளது. நம் சூழலுக்குத்தக வயதுக்குத்தக பண்பாட்டுக்குத்தக வித்தியாசம் வித்தியாசமாய் சொற்கள் வந்த வண்ணமே இருக்கின்றன. அவை எழுதுவதுபோல் பலவேளைகளில் அமைவதில்லை. பேசும்போது சில வாக்கியங்களைத் தொடங்கி பாதியில் விட்டுவிடுவோம். எதிரில் இருந்து பேசுபவர் புரிந்துகொள்வார். சிலவேளை நிறுத்தாமல் பேசிக்கொண்டேயிருப்போம். அதுபோல் நம்மோடு நாம் எப்போதும் பேசிக்கொண்டேயிருக்கிறோம். தொலைபேசி என்றால் வேறுமுறையில் வாக்கியங்களும் கருத்துக்களும் வருகின்றன.

மொழியை இப்படி வாழ்க்கையாகவும், வாழ்க்கைக்குப் பதிலியாகவும், வாழ்க்கையின் தொடர்ச்சியாகவும் அதுபோல் நம் குடும்ப – சமூக உறவுகளைப் பேணவும் அல்லது உறவுகளை அழிக்கவும் பயன்படுத்துகிறோம். அழும்போது, மௌனமாகும்போது, எதிர்ப்பார்ப்பின்போது, கோபத்தின்போது, ஊடலின்போது, கூடலின்போது என்று மொழிசெய்யும் செயல்களைக் கூர்ந்து பார்க்கும்போது ஆச்சரியப்படுகிறோம். வாழ்க்கை என்பதே மொழியைக் கையாளும்  கலை மட்டும் தானோ என்று யோசிக்க வேண்டியுள்ளது. அதுபோல் மௌனம் கூட ஒருவகையில் மொழிதான்.இரண்டுபேச்சுகளுக்கு இடைவெளிதான் மௌனம்.

பலநாடுகளில் மொழியை அறியும் நிபுணர்கள் உள்ளனர். அவர்கள் அறிவியல் ரீதியில் பல புதிய விஷயங்களைக் கூறிஉள்ளனர். யாரும் இதை மறுக்கமுடியாது. ஆனால் அறிவியலால் மொழியை முழுவதும் அறியமுடியாது.

உதாரணமாய் டி.எஸ்.எலியட் சொன்ன சிந்தனையைப் பார்க்கலாம். அவர் சொன்ன விஷயத்தைக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தைக் கொடுத்து யாரும் யோசிக்கவில்லை. அவர் அமெரிக்காவில் பிறந்து இங்கிலாந்தில் வாழ்ந்து வங்கி ஒன்றில் பணிபுரிந்தபடியே கவிதை எழுதியவர் என்பது பலருக்குத் தெரியும். அவர் தொடங்கிய நவீனத்துவம் என்ற கொள்கைக்கேற்ப தமிழில் நிறைய கவிதைகள் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வந்தன.உலக இலக்கியத்தில் வாழ்க்கையின் இருண்ட அம்சங்களையும் ஏமாற்றங்களையும் மனித மனத்தின் அனாதை உணர்வையும் சொன்ன கலை இலக்கியக் கொள்கைக்குப் பெயர் “மாடர்னிசம்” என்பது. தமிழில் நவீனத்துவம் எனலாம். சிலர் அவ்வப்போது நவீனத்தையும் (Modern) நவீனத்துவத்தையும் (Modernism) குழப்புவதுண்டு. அது தப்பு. டி.எஸ். எலியட் இந்த மாடர்னிசம் என்ற அகில உலகக் கொள்கையை விளக்கியவர்; பரப்பியவர்.

அவரைப் பற்றிய வரலாறல்ல முக்கியம்; நன் சொல்லவருவது வேறு ஒரு விசயம். அவர் சொன்ன விஷயத்திலுள்ள உட்கிடை தான் முக்கியம். அவர் ஒவ்வொரு புதுப்படைப்பும் ஒரு எழுத்தாளனால் முன்வைக்கப்படும்போது அல்லது பிரசுரிக்கப்படும்போது அதுவரை எழுதப்பட்ட எல்லா எழுத்தும் பாதிக்கப்படுகிறதென்று சொன்னார். அதாவது சி.மணியோ, குட்டிரேவதியோ, சமீபத்தில் யுவபுரஸ்கார் பெற்ற அபிலாஷோ எழுதும்போது அவர்கள் தமிழர்களாய் பிறந்து தமிழ் விழுமியம் சார்ந்து எழுதத் தெரிந்தால் அவர்கள் ஒரு புதிய எழுத்தைத் தரும்போது தமிழின் 2000 ஆண்டுகால கவிதையும் பாதிப்படைகிறது. இதைத்தான் டி.எஸ். எலியட் கூறினார் என்று நான் எடுத்துக்கொள்கிறேன். தமிழ்மொழி அதை எழுதுகிறவர்களோடு ஒரு நித்திய ரகசியத்தைப் பேசுகிறது. அந்நியர்கள் தமிழில் எழுதமுடியாது. படைப்புஎழுத்து என்பது நம் ரத்தத்தின் மொழி. எனவேதான் கன்னடனாகவோ மலையாளியாகவோ ஒருவர் வழ்க்கையின் முதல் இருபது வயதுவரை இருந்துவிட்டு அதன்பிறகு எழுத்தில் மட்டும் தமிழைக் காட்டுகிறவனை நான் தமிழ் எழுத்தாளன் என்று ஏற்பதில்லை.

அதுபோல் இன்றைய தமிழ் என்பது மொழி – கருத்து – உத்வேகம் என்னும் வலயம். அந்த வலயத்தில் இன்றைய எழுத்தாளன் தன்னுடைய செயலைப் புரிகிறபோது (எழுதும்போது) அவன் 20-ஆம் அல்லது 21-ஆம் நூற்றாண்டின் பிரதிநிதியாய் செயல்படுகிறான். இன்றைய தொழில்நுட்பம்/ இன்றைய எந்திரங்கள் / அதிகார மையங்கள் / அரசியல் போன்றன இவன்மூலம் செயல்படுகின்றன. நவீன பிரக்ஞையின் அதிவேக மனிதகுல அலையை மொழியென்னும் மனிதகுலத் தொடர்ச்சிக்குள் பாய்ச்சுகிறவன் எழுத்தாளன். உலகம் இதுவரை கண்டிராத அறிவு / தொழில்நுட்ப / விஞ்ஞான / வானவியல் / புத்தறிவு முதலியன எல்லாம் ஒட்டுமொத்தமாய் நவீன புரிதலோடு எழுதும் தமிழ் மனிதன் மூலம் இலக்கியத்துக்குள் வருகின்றன.

தொல்காப்பியரும் உலகஅளவில் அறியப்படும் அரிஸ்டாட்டில்போல் இலக்கியம், மொழி என்றெல்லாம் சிந்தித்தவர்தான். ஆனால், ஐ-போனோ, ஐ-பாடோ, ஸாட்டலைட் போனோ வைத்திருப்பவனின் மூளையின் அலைகளும் இரத்தத் துடிப்பும் தொல்காப்பியருக்குள் போயிருக்காது. நவீனத் தமிழன் தன் நவீன அறிவாலும் இருபத்தொரு நூற்றாண்டுகளாய் வளர்த்தெடுக்கப்பட்டுக் கொண்டுவந்த தொழில் நுட்பத்தாலும் ஒரு மிகப்புதிய மனிதனாய் தமிழிலக்கியத்தைப் படைக்கவும் படிக்கவும் செய்கிறான். இந்தப் புதிய தமிழ்மொழிக் கட்டுமானம் என்னும் செயல்தான் நவீன தமிழ் எழுத்தாளனின் வாழ்வுத் தளம். தமிழ்த்தேசிய உணர்வின்றி தமிழ்ப் படைப்பு இல்லை.இது உறுதி.

இந்த மொழித்தளம் என்பதையும் ஓரளவு விளக்க வேண்டும். மொழி என்பது சொற்கள்,வாக்கியம் மட்டுமல்ல. நவீன உரையாடல்கள், தொடர்புறு கருவிகள், இன்டர்நெட் போன்ற சமூக வலைத்தளங்கள், எலக்ட்ரானிக் பகிர்வுகள், விளம்பரங்கள், உலகத்தொலைக்காட்சி படிமங்கள் – என இருவரோடும் இருவருக்கு அதிகமானவர்களோடும்  பகிர்ந்துகொள்ளப்படும் எல்லாமே மொழி என்று ஒரு கருத்து உண்டு. அதாவது உடலின் இயங்குமுறை, இசை, மருத்துவம், பயிரியல், சுற்றுச்சூழல் எல்லாம் மொழியின் பகிர்வுத்தன்மையாய் பார்க்கப்படுகின்றன. அதனால் இவை எல்லாம் மொழிதான்.

 

19-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் காலனியச் சிந்தனைவழி புத்தொளிக் கருத்துக்குள் இருந்த மனித விடுதலைக்கான சாத்தியம் இந்தியாவிலும் பிராந்தியங்களிலும் பரவியது. இந்திய மொழிகளில் சமஸ்கிருதமும் அதற்குமாறான திராவிடமொழிக் குடும்பத்தின் மிகப் பழமையான இலக்கியமுள்ள மொழியான தமிழும் மேற்கிலிருந்து வந்த புத்தொளிக் காலக் கருத்துக்கள்  வழி உலக வெளிச்சம் பெற்றன. ஈழம், மலேயா என பல இடங்களில் புழங்கிய தமிழ்மொழி பிரஞ்சு, போர்த்துக்கீஸ், இத்தாலியம், ஜெர்மன் என்று உலக மொழிகளுடன் ஒப்பிடப்பட்டு உலக மொழியானது. இத்துடன் தமிழ் அடையாள அரசியலும் தமிழகத்திலும் ஈழத்திலும் தோன்றியது. இந்திய ஒன்றியத்தில் தமிழ்போல உலகத் தன்மையுள்ள வேறுமொழி இல்லை.அதாவது பழமையும் அதிக இலக்கணங்களும் இந்தியில் இல்லை.இது உண்மை.மலேசியாவிலோ இலங்கையிலோ இந்திக்கு முக்கியத்துவம் இல்லை.சமீபத்தில் தான் இந்தி உலகின் நான்காவது பெரும் பான்மை மொழியாகியுள்ளது.

இந்தக்கட்டத்தில் தான் தற்கால தமிழிலக்கியம் மெதுமெதுவாய் வளர ஆரம்பித்தது. அறுபதுகளில் தற்கால இலக்கியச் சிந்தனை தனி அடையாளத்துடன் வளர்ந்திருக்கவில்லை. சமஸ்கிருதக் கருத்துக்களும் ஆங்கிலக் கருத்துகளும் தற்கால இலக்கியத்தில் ஓரிருவரால் விமரிசனக் களத்தில் பேசப்பட்டன. ஆனால், எண்பதுகளில் தான் தமிழில் புதுவிதமான விமரிசனக் கருத்துக்கள் முழு வளர்ச்சி அடைந்தன. அதாவது தொல்காப்பியம் என்ற தனித்தமிழ் அடையாளத்தை விளக்கிய நூல் தற்கால இலக்கிய விமரிசனத்தின் அடிப்படை நூலானது. வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறு நல்லுலகம் என்று தமிழர்களுக்கு அடையாள எல்லை வகுத்த நூல் இன்றைய இலக்கிய விமரிசனத்தின் ஆதிநூல். இக்கருத்தை விளக்க போதிய ஆதாரங்கள் உள்ளன. சமஸ்கிருத உந்துதலினால் தற்காலத் தமிழிலக்கிய விமரிசனத்திலும் “ஸகிருதயிர்கள்” எங்கே என்று தேடியவர்களால்  செரிக்கமுடியாத கருத்து இது. இவர்களால் உரையாசிரியர்கள்  பழம்கவிதைகளை அணுகிய விதம் நவீன இலக்கிய விமரிசனம் அல்ல என்று பேசப்பட்டது. அன்று சி. கனகசபாபதி,கைலாசபதி போன்ற தமிழ்ப்பேராசிரியர்கள் இதற்கெதிராக எழுப்பிய விவாதங்கள் ஸகிருதய விமரிசகர்களால் புரிந்துகொள்ளப்படவும் இல்லை. ஏற்கப்படவும் இல்லை. சமஸ்கிருதவாணர்கள் தமிழிலக்கிய விமரிசனத்தில் இருந்து மெதுமெதுவாய் மறைய ஆரம்பித்தது 80களிலிருந்துதான். சமஸ்கிருத உந்துதலில் இருந்து தமிழில் விமரிசனம் செய்தவர்கள் மறைய ஆரம்பித்தபோது 80களிலிருந்து தமிழில் விமரிசனம் இல்லை என்ற பொய்யையும் பரப்பிவிட்டுப் போனார்கள்.

இக்கட்டத்தில் ஏற்பட்ட சிக்கல்களையும் நாம் நடுநிலையாய் விவாதிக்கவும் அலசவும் வேண்டும். 1960களுக்கு முன்னர் மேற்கிலிருந்த வடிவவியல் (Formalist) விமரிசனத்தைக் கலந்து சமஸ்கிருதக் கருத்துக்களோடு முன்வைத்தவர்கள் பழந்தமிழ் உரையாசிரியர்களை இலக்கிய விமர்சன வழிகாட்டிகளாய் ஏற்க வில்லை. மார்க்சீய  அடிப்படையில் விமரிசனத்தை உருவாக்க விரும்பியவர்கள் உரையாசிரியர்களை ஏற்றனர். கைலாசபதி ஏற்றார்: ஆனால் விரிவாய் விளக்கவில்லை. இங்குத் தத்துவ அடிப்படை முக்கியம். உரையாசிரியர்கள் ஒரு படைப்பை வாசக (Reader Response) நோக்கிலும் நவீன இலக்கியச் சித்தாந்தியான ரோலான் பார்த் (Roland Barthes) கூறிய மொழியின் தீவிர ஆழமே படைப்பு என்ற நோக்கிலும் அணுகினார்கள். படைப்பாளி படைப்பில் ஈடுபடுதல் என்பது ஒருவகையான தீவிரத்துவ மொழிப்பயணம் ;லட்சுமிதேவியின் அனுக்கிரகத்தால் அல்ல. இந்த மேற்கத்திய வழிகாட்டுக்கருத்துக்கள் சி.சு.செல்லப்பா காலத்தில் தமிழில் பேசப்படாததால் விவாதங்கள் முழுமை அடையவில்லை. எனவே அவர் உருவம், உள்ளடக்கம் என்று பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். இன்று நமக்குக் கிடைக்கும் சமஸ்கிருத (பத்ருகிரி) மற்றும் மேற்கத்திய இலக்கிய அறிவானது தொல்காப்பியரை மகா பிரமாண்டமான இலக்கியத் தத்துவவாதி என்றும் இலக்கிய விமரிசன வழிகாட்டி என்றும் கூறுகின்றன. அதாவது உரையாசிரியர்கள் “கைட்”  (வழிகாட்டி நூல்) எழுதியவர்களாய் சிலர் கருதினர். உரையாசிரியர்கள் தங்களுக்குள் ஒரு மொழித் தத்துவத்தை (Philosophy of Language) வைத்து ஒவ்வொரு கவிதையையும் அந்த மொழித் தத்துவத்தோடு ஒப்பிட்டும் உரசியும் தத்தம் வாழ்க்கைப் பார்வையை முன்வைத்த தமிழிலக்கிய விமரிசன முன்னோடிகளாவர். அய்யப்ப பணிக்கரின் இந்தியக் கவிதையியல் பற்றிய நுல் விரிவாக விளக்குகிறது.உலகமே மெச்சவேண்டிய  நூல்தொல்காப்பியம் என்கிறார்.

சமீபத்தில் யாரோ ஒருவர் எழுதினார் தமிழில் விமரிசனம் இல்லை என்று. அவர் விமரிசனம் என்று கருதியது ஒரு கவிதையின் அல்லது நாவலின் நல்ல அம்சங்களையும் குறைகளையும் லிஸ்ட் போடுவது. இது ஆரம்பக் கட்டத்திலிருக்கும் மாணவர்களின் இலக்கிய விமரிசன அறிவு. இந்தச் சிறுபிள்ளைகளுக்கான ஆரம்பகட்ட இலக்கிய விமரிசனம் தமிழில் 70களுக்கு முன்பே மறைந்துவிட்டது. இப்போதுள்ள இலக்கியஅறிவு வேறு. தமிழ் வேகமாக மாறுகிறது. ஒவ்வொரு படைப்பின் மொழியும் அதுவரை எழுதப்பட்ட படைப்பு அத்தனையோடும் ஒரு உரையாடலைச் செய்கிறது. உரையாடல் என்ற பன்மை மையங்களைக் கொண்ட தத்துவம்தான் இன்றைய இலக்கிய விமரிசனம். அந்தளவு உரையாடல் பலம் என்ற தமிழ் ஆழ்மனபலம் கொண்ட படைப்புக்கள் இன்று எழுதப்படுகின்றனவா என்ற பரிசீலனை நடைபெறும் போர்க்களமே இன்றைய விமரிசனக்களம். அது மெதுமெதுவாகத் தொல்காப்பியரின் நிழலில் நடை இட ஆரம்பித்துள்ளது. உரையாசிரியர்களின் நீண்ட இலக்கணப் பாரம்பரியத்துடனும்  மொழித் தத்துவத்துடனும்  அணுகப்படும் போது ஒவ்வொரு படைப்பும் நாவலும் சிறுகதையும் இன்றைய தமிழ் மனிதனின் அகிலஉலக மொழித் தத்துவ உரையாடலாய் அமையும்.

வடமொழியில் மொழிக்கும் அர்த்தத்துக்கும் உள்ள உறவைப் பற்றிப் பேசியவர் பத்ருகிரி. மேற்கில் அரிஸ்டாட்டில். இவர்கள் இருவரைவிட சிறப்பாக நவீன நோக்கில் மொழிக்கும் அர்த்தத்துக்கும் உள்ள உறவைத் தொல்காப்பியர் சொல்கிறார். 80கள் வரை அறைகுறை சமஸ்கிருதக் கவிதையியலைப் படித்தவர்கள் தமிழிலக்கிய விமரிசனக் கட்டுரைகள் எழுதியதோடு தொல்காப்பியத்தை அறியாமல் இருட்டடிப்புச் செய்தனர். வ.வே.சு. அய்யர் கூட கம்பராமாயணம் பற்றிய அழகியலைத் தேடியபோது தொல்காப்பியத்தை மறந்தார்;  சமஸ்கிருதத்துக்குப் போனார். ஆதாரங்களுள்ளன. இங்கு வரும் பார்வை தொல்காப்பியத்தை நவீன தமிழ் விமரிசன வழிகாட்டியாய் நிலைநிறுத்தும். ஏனெனில் பத்ருகிரி மட்டும் அல்லது அரிஸ்டாட்டில் மட்டும் படித்தால் விளக்க முடியா பல விஷயங்களைத் தொல்காப்பிய இலக்கண மரபுச் சிந்தனையாளர்களும்  உரையாசிரியர்களும் விளக்குவார்கள். எனவே தான் இன்றைய படைப்பிலக்கியம் அகில உலகமெங்கும் தமிழனின் இன்றைய மொழி வாழ்வனுபவங்களின் ஆவணமாய் வரவேண்டிய தேவை இருக்கிறது.

இலக்கிய விமரிசனம் என்பது வெறும் அழகுகளையோ, ரசனையையோ ஓரிரு வரியில் சொல்வதோ, ருசி பார்ப்பதோ கிடையாது என்று 60களிலிருந்து உலகம் எங்கும் புது இலக்கிய விமரிசனக் குரல் பரவியுள்ளது. அதாவது இலக்கியம் என்பது மனித உள்மொழி /  வெளிமொழி என்ற இயங்கியல் சார்ந்த உரையாடல். ஒரு நாவலில் அந்த மொழி எப்படி அமைவு பெற்றிருக்கிறது என்பதைப் பொறுத்ததுதான். அந்த நாவல் பேசும் மனித விழுமியங்களும் சமூக – உளவியல் விழுமியங்களும் மொழிவிழுமியங்களே. மொழியில் வெளிப்படும் வடிவத்திலும் வெளிப்படா வடிவத்திலும் வரலாறு இயங்குகிறது; காலம் இயங்குகிறது. இடப் பரிமாணம் விஸ்தாரம் கொள்கிறது. இதை தொல்காப்பியமும் முதற்பொருள் என்று சொல்கிறது. இடமும் காலமும் என்ற இரு எல்லைகளால் கட்டுப்படுத்தப்பட்ட ஆயிரமாயிரம் பல்வேறு தளங்களின் வெளிப்படல்களே மொத்த உலகச் சரித்திரம். இன்று இலக்கிய விமரிசனமானது கிரகங்கள் (Planetary)  சார்ந்து விரிவடைய வேண்டும் என்று கூறுகிறார்கள் காயத்ரி சர்கிரவர்த்தி ஸ்பிவாக் (Gayathri Chakravorthy Spivak) போன்ற உலக இலக்கிய – சிந்தனை – அரசியல் – தத்துவச் சிந்தனையாளர்கள். இனி  தத்துவமில்லாதது விமரிசனமாகாது, இலக்கியமாகாது. அப்போது தான் நம் விமரிசனம் இன்றைய உலக உண்மைகள் நம்மை எப்படிப் பாதிக்கின்றன என சொல்லமுடியும். உலகத்துக்கு ஒரு உண்மையும், தமிழர்களுக்கு  சின்னதான வேறு ஒரு உண்மையும் கிடையாது. குவலயமாக்கலின் சுழலில் சிக்கியுள்ள தமிழர்களும் உலகப்போக்குகள் என்ற பிரமாண்டத்தை நம்மொழி, பண்பாட்டு, இயல்புகளுக்கு ஏற்ப அறிந்துகொள்ள வேண்டும். அப்படி அறியவில்லை எனில் ஆதிவாசி குகைகளுக்குள் வாழ்வதற்கு மட்டுமே நாம் தகுதி படைத்தவர்களாவோம். தொல்காப்பியம் ஆச்சிரியகரமாக மொழியை  ஒரு அறிவு பெறுவாயிலாக வைத்து நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதனால் நமக்கு சமஸ்கிருதத்தைத் தாண்டி உலக உண்மைகளை அறிய அது உதவுகிறது. சிந்தனைகள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவை அல்ல;  தொடர்ந்து தீர்மானிக்கப் பட்டுக் கொண்டேயிருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>