புதிய ஊடகத்தில் தமிழிலக்கியம்

 வண்ணத்துப்பூச்சியின் இறகுகள்(திராநதியில் வந்தது)

28.புதிய ஊடகத்தில் தமிழிலக்கியம்

தமிழவன்

 

          இன்று தமிழில் பெரிய மாற்றத்தை முகநூல்கள் ஏற்படுத்தி வருகின்றன. இதனை எத்தனை பேர்கள் கவனித்தார்கள் என்று தெரியவில்லை. பல்கலைக்கழக ஊடகத்துறைகளில் இதுபற்றி ஆய்வு நடக்கவேண்டும். சமீபத்திய ஊடகங்களைக் கவனிக்காமல் தமிழிலக்கியத்தில் செயல்படமுடியாது என்று கூறும்படி ஊடகம் முக்கியமாகிவிட்டிருக்கிறது.

 

ஆனால், விஷயம் என்னவென்றால் தமிழகத்தில் நவீனச் சமூகப் பிரச்சனை களும் ஆய்வுகளும் இணைவதில்லை. பல்கலைக்கழக தமிழ் உயர்கல்வியில் நவீன இலக்கியத்தை ஆய்வு செய்யமாட்டார்கள். பொருளாதாரத்துறை, வரலாற்றுத்துறை, சமூகவியல் துறை, தத்துவத்துறை – இவை நவீன தமிழ் வாழ்வை ஆய்வதைவிட பழைய ஆய்வுகளை ஒரு சடங்குபோல் பின்பற்றுகின்றன. வடஇந்தியா இந்த விஷயங் களில் பரவாயில்லை. தமிழகம் மோசம். பிற மாநிலங்களிலும் வரலாற்றுத்துறை, அரசியல் துறை போன்றவற்றில் நவீன வாழ்வுடன் அவர்களின் ஆய்வுகளை இணைக்கிறார்கள். ஹைதராபாத்தில் கஞ்சா ஐலய்யா என்பவர் பல்கலைக்கழகப்பேராசிரியர். அவர் சமூகச்சிக்கல்கள் பற்றிய ஆய்வாளர்; பல நூல்கள் எழுதியுள்ளார். தலித்–பகுஜன் நோக்கில் ஆய்வுகளைச் செய்கிறார்.அரசியலோடு இணைத்து ஆய்வுகள் செய்ய மாணவர்களைப் பயிற்றுவிக்கிறார். இந்தியச் சமூகத்தின் அமைப்பு, செயல்பாடு, அதில் உள்ள பல தட்டுகள், தீண்டாமை போன்றவற்றைத் தனது துறையில் ஆய்வுப் பொருளாக எடுக்கிறார்.முனைவர் பட்டத்துக்கு வரும் மாணவர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறார். இது ஒரு வகையில் அனைத்துலக ஆய்வறிஞர்களின் போக்காகும். எட்வர்ட் ஸெய்த் என்றொரு ஆங்கிலப் பேராசிரியர் இருந்தார். அமெரிக்காவில் பயிற்றுவித்த பேராசிரியர். அகில உலக அரசியல் போக்குகளையும் காலனி ஆதிக்கத்தையும் ஆய்ந்தார். பாலஸ்தினிய ஆதரவாளர். இலக்கியத்தில் ஏகாதிபத்தியம் பற்றிய பார்வை பற்றி நூல் எழுதினார். இங்கிலாந்தில் ஹாப்ஸ்பாம் என்ற புகழ்பெற்ற வரலாற்றுத்துறை அறிஞர் இருந்தார். இடதுசாரிச் சிநதனையாளர். பிரான்ஸைக் கேட்கவே வேண்டாம். அங்கு சார்த்தர், அல்துஸ்ஸர் போன்ற உலகப்புகழ்பெற்ற கலகச் சிந்தனையாளர்கள் இருந்தனர். இறுதிக்காலம் வரை இவர்கள் பல்கலைக்கழகப் பேராசிரியர்களாக இருந்தனர்.  முக்கியமாக வறட்டுத் தனமான துறை என்று பலர் இந்தியாவில் கருதுகிற தத்துவத்துறையின் பேராசிரியர்கள்  இவர்கள்.  இந்தியாவில் ஜே என் யூ பல்கலைக்கழகத்தை இடதுசாரிச் சிந்தனையுள்ள உலகத்தரமான பல்கலைக் கழகம் என்பர். அதன் தரத்தைக்குறைக்க சிலர் இன்று முயல்கின்றனர்.

 

இப்பல்கலைக்கழகங்களில் எல்லாம் நவீன காலத்தின் பிரச்சனைகளோடு ஆராய்ச்சியை இணைத்திருப்பார்கள். தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள் விமர்சனச் சிந்தனைகளுக்கு வருவது கடினம்.விமரிசனச்சிந்தனை(Critical Theory) என்பது மேற்கில் முனைவர்பட்ட ஆய்வுக்குரிய சிந்தனை. அதற்கான சூழல் நம்மிடம் இல்லை. எந்தச் சிந்தனையும் இங்குத் தோன்றாது. போலிச் சமூகமாய்த்தான் தொடரும். சினிமாவின் பின்னால் ஓடும் சமூகம். எனவே, “மீடியா – ஸ்டடீஸ்” துறையானது இன்றைய பிரச்சனைகளைக் கையிலெடுக்காது. இத்துறையினர் கருத்துக் கணிப்பு மட்டும் செய்வார்கள். ஆனால் மீடியா ஆய்வு என்பது பெரிய வீச்சைக் கொண்டதாகும். அரசியல் சிந்தனைக்கும் மீடியா ஆய்வுகளுக்கும் தொடர்புண்டு. நம்முடைய மீடியா படிப்பு, சினிமாவுக்குள் நுழையும் வாசலாக இருக்கும் வரை உருப்பட வழியில்லை. உளவியல், கலை, தொழில்நுட்பம், பண்பாடு போன்ற நுட்பமான ஆய்வுகள் செய்ய ஆற்றலுள்ள  துறை வெறும் சினிமா மோகத்தைப் பரப்புகிறது.

 

நாம் பேச வந்த விஷயம் முகநூல் இன்று தமிழிலக்கியத்தில் செயல்படும்முறை பற்றியது. ஆயிரக் கணக்கான  இளைஞர்கள்  முகநூலைப்  பின்பற்றுகிறார்கள்.  அதில் மிக விரைவில் போதை ஏற்படுகிறது. பெரியவர்கள், குடும்பத்தில் இருக்கும் மகளிர், மாணவ-மாணவியர், இலக்கியப் படைப்பாளர்கள், திரைப்பட ஆர்வலர்கள், இப்படி ஆயிரக்கணக்கானவர்களை அரக்குபோல் ஒட்டி இழுக்கிறது முகநூல். பல நாடுகளில் இருப்பவர்கள் தங்களுக்குள்  –  தமிழ்மொழி மூலம் – விவாதிக்க முடிகிறது.  இது அரிதான வாய்ப்பு. ஆங்கிலத்தின் மூலமும் தமிழர்கள் சர்ச்சைகள் நடத்துகின்றனர். அரசியல்வாதிகளுக்கும் சினிமா நடிகர்களுக்கும் முகநூல் பயன்படுவது பற்றி பேசவேண்டாம். அங்கு வேறுவிதமான உளவியல் செயல்படுகிறது. பெரும்பாலும் அது மோசடித்தனம்தான். வணிக நூலாசிரியர்கள் தந்திரமாய் தங்கள் நாவல்களை விற்க முகநூலைப் பயன்படுத்துகின்றனர். ஸால்மன் ருஷ்டியின் நாவலைவிட வணிக நோக்கில் எழுதப்படும் சேத்தன் பகத் போன்ற குப்பை நாவலாசிரியர்கள் ஆங்கிலத்திலும் முகநூல், ட்விட்டர் போன்றவற்றில் பரவுகிறார்கள். பிரமுகர்களாகிறார்கள். அதிகம் வாசகர்களைக் கொண்டிருத்தல் என்பது முக்கியமாகியிருக்கிறது. அதிகம் என்பது முகநூல் விழுமியமாகியுள்ளது. அதிகம்பேர் ‘லைக்’ போட்டால் ஒரு குப்பை நூல் தரமானதாகிவிடும் என்ற தர்க்கத்தை முகநூல் அடிப்படையாய் கொண்டு செயல்படுகிறது. தங்கமுடியாத குப்பைகள் எல்லாம் தரமான நூல்களுடன் விளம்பரப்படுத்தப்படுகின்றன. எண்பதுகளில் தமிழில் அதிகமான வாசகர்கள் படித்தால் அது சிறந்தது என்ற எண்ணம் உடைத்தெறியப்பட்டது. மலையாளத்தில் இத்தகைய எழுத்துகளுக்குப்  ‘பைங்கிளி சாகித்தியம்’ என்று கேலிப்  பெயர்கொடுத்து ஒதுக்கித் தள்ளினார்கள்.கொஞ்சம் பேர் படித்தாலும் ஒரு படைப்புச் சிறப்பானதாக இருக்கமுடியும் என்று கருதப்பட்டது.  ஆனால் முப்பதாண்டுகளுக்குப் பிறகு அன்று நிராகரிக்கப்பட்ட இந்த  அதிகம்பேர்சார்ந்த பைத்தியக்காரத்தனமான விழுமியம் மீண்டும் தலைதூக்குகிறது. இதற்குக்காரணம் முகநூல். ஒவ்வொருவரும் தத்தம் நூலை ஒரு நண்பர்கள் வட்டத்தை உருவாக்கிப் பரப்புரை செய்யமுடியும். பரப்புரை முக்கியமானதால் இலக்கியப்பண்பு இரண்டாம் பட்சமானது. எதிர்காலத்தில் சாகித்திய அக்காதமி போன்றவை கூட அதிகம்பேர் படிக்கிற நூலைத்தேர்வு செய்யலாம். யார் கண்டது? அதிகம் பக்கங்கள் உள்ள நூலைத் தேர்வு செய்துவிட்டுச் சிறந்த இலக்கியத்தைத் தேர்வு செய்ததாய் பெருமை பேசும். அதிகம் என்கிற சனரஞ்சக மூடத்தனம் உருவாக்கிய எந்திர உலக விழுமியம்  வாழ்க்கை எங்கும் கான்சர் நோய்போல் பரவப் போகிறது. தமிழ்ச் சமூகமும் இந்தக் கொடிய நோய்க்கு  அறுபதுகளில் பலியானதுபோல் மீண்டும் பலியாகும். அறுபதுகளில் அச்சுப்பெருக்கம் அதிகம் என்ற விழுமியத்தைக் தமிழுக்குள் கொண்டுவந்தது.எந்திரத்தைச் சும்மா போட்டால் முதலீடு நஷ்டம் ஆவதால் அதிகமாகத் தாள்களை அச்சடிக்க வேண்டிய நிலை தமிழிலக்கியத்தைத் தரமற்றதாக்கி சனரஞ்சக படுகுழியில் தள்ளியது. வியாபாரத்துக்காய் அதிகமாய் அச்சடித்த தாள்களை நூலாக்கவேண்டித் தமிழிலக்கியம் அழிந்தது. மீண்டும் அசுரத்தனமான கணினித் தொழில்நுட்பம் இலக்கியத்தை அழிக்கலாம்.

 

நல்ல காரியங்களும் சில நடக்கின்றன. தமிழை மட்டும் வைத்துப் பேசுவதென்றால் பல நாடுகளில் இருக்கும் தமிழ் எழுத்தாளர்கள் முகநூலில் விவாதிக்கமுடிகிறது. இது ஒரு அரிதான வாய்ப்பு. சிலர் தங்களை விளம்பரப்படுத்த முடிகிற அதேநேரம் சில இலக்கிய விவாதங்கள் தோன்றியுள்ளன. உதாரணமாக இலங்கைக் கவிதைகளுக்கும் தமிழகக் கவிதைகளுக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமையும் அவைகளின் எதிர்காலப் போக்கு போன்றனவும் சமீபத்தில்  விவாதப் பொருளாயின. முன்பு இத்தகைய விவாதங்கள் உலகத் தமிழ்மாநாடுகளில் மட்டும் நடந்துள்ளதை நான் கவனித்துள்ளேன். ஏனெனில் வேறெங்கும் இலங்கை ஆய்வாளரும் தமிழக ஆய்வாளரும் மலேசிய ஆய்வாளரும் ஓரிடத்தில் சந்திக்கமுடியாது. ஆனால், மிக எளிதாக நினைத்த மாத்திரத்தில் சில மணிநேரங்களுக்குள்  இலங்கையின் கவிதைகளில் ஏன் சோலைக்கிளி என்ற மிகவும் வித்தியாசமான கவிஞர் சேரன் போன்ற தமிழடையாள ஈழக் கவிஞர்களிடமிருந்து  முற்றிலும் மாறுபட்டவராய் உருவானார் என்ற கேள்வி வந்துள்ளது.  முன்பு ஒரு அரசாங்கம் நினைத்து உலகத் தமிழ்மாநாடு கூட்டும்போது தான் ஈழத்தவர்களும் தமிழகத்தவர்களும் இரண்டு நாடுகளின் வரலாற்றோடும், தேசிய உணர்வுகளுடனும் பின்னிப்பிணைந்த நவீன கவிதையின் ஊற்றுக்கண்ணைச் சார்ந்து விவாதிக்க முடியும். அப்படி விவாதிப்பது எப்படிபட்ட மகோன்னதமான காரியம்.ஆனால்,  முகநூலில் நுட்பமான அவதானிப்பு கொண்ட சிலரால் எளிதாய் நடத்தப்பட்டது. எந்தப் பொருட்செலவும் இல்லாமல் ஆர்வலர்கள் நடத்தினார்கள்.

 

அதேபோல இரண்டு நாடுகளின் கவிதைகளில் இன்னொரு உபபிரிவு தோன்றி உள்ளது. முஸ்லீமான சோலைக்கிளி இலங்கையின் ஈழ அடையாளத்துக்கு வெளியில் உள்ளார். எழுபதுகளில் தமிழகத்தில் தோன்றிய கவிதை உருவாக்கப் பல்பரிமாணத்தில் ஞானக்கூத்தன் அதுவரை தமிழில் இல்லாத சர்ரியலிசக் கவிதை அமைப்பை கசடதபற இதழில் வெளியான கவிதைகளில் 1971-இல் முதன்முதலாக அறிமுகம் செய்தார். அது கவித்துவ வரலாற்றில் ஒரு ஆவணம். அந்தச் சர்ரியலிசப் பண்பு இலங்கை முஸ்லீம் அடையாளத்துடன் 80களில் வந்த அந்த நாட்டுச் சோலைக்கிளியிடம் காணப்பட்டது. ஈழத்தமிழ்த்தேசிய போராட்ட அடையாளத்தில் ஒப்புதல் இல்லாத  அல்லது அது பற்றி கலைப்படாத ஒரு உபபிரிவு இது. இலங்கை முஸ்லீம்கள் தமிழர்கள் அல்ல வேறு பிரிவினர் என்று சிலர் சொல்ல ஆரம்பித்துள்ள சூழலில் அற்புதமாய் தமிழைக் கையாளும் சோலைகிளி அந்தக் கோட்பாட்டை ஏற்கமுடியாத மனத்தடையை உருவாகுகிறார்.

 

 

ஈழம் என்ற அடையாளம் சேரன், வ.ஐ.ச. ஜெயபாலனிடம் காணப்பட அதேநேரம்  முஸ்லீம் கவிதைத் தனியடையாளம் ஆவதைக் கவனிக்க வேண்டும்.  அப்போதுதான் தீபச்செல்வன் போன்றோர் சேரன், வ.ஐ.ச.வின் ஈழக்கவிதை  மரபைத் தனிவழியில் தொடர்வது தெரியும். அது போலவே, சோலைக்கிளியின் கால்வழியில் வேறுவகையில் இலங்கையின் ரியாஸ்குரானா, ஜெம்சித் ஸமான்  போன்றோர் தொடர்கிறார்கள். தீபச்செல்வனும், ரியாஸ்குரானாவும் – இலங்கைத் தமிழுக்குள்ளேயே – சமீபத்தில் ஏற்பட்டிருக்கக் கூடிய இருவழிப் பாதைகளில் சமீபத்தியக்குரலாய் பயணம் செய்கிறார்கள். முகநூலில் ஏற்பட்ட விவாதத்தை – இரண்டு நாடுகளின் கவிதை வரலாறாய் நீட்டிக்க முடியும். இப்படி ஒரு கவிதை விமரிசனம் இருநாடுகளின் கவிதை விமரிசனமாய் அனைத்துலகத் தமிழ்க் கவிதை வரலாற்றில் பங்களிப்புச் செய்ய முடியும்.

 

முகநூலின் தொழில்நுட்பம் இதற்கு வழிவகை செய்துகொடுத்துள்ளது. இது 21-ஆம் நூற்றாண்டுக்கே உரிய நிகழ்வு. இதுபோல் ஓரிருவர் தம்மைப் பற்றி விளம்பரமும் தங்களுக்குக் கிடைக்கப்போகிற நோபல் பரிசையும் பற்றிய பொய் களையும் அவிழ்த்துவிட்டு உயர்நிலைப்பள்ளி படிக்கும் குழந்தைகளை நூற்றுக் கணக்கில் ஏமாற்றுகிறார்கள். அதுபோல் ஒழுக்கத்துக்குப் புறம்பான எழுத்துக்களை அவ்வப்போது வெளியிட்டுத் தங்கள் வாசகர் கூட்டத்தைப் பெருக்கியது பலருக்குத் தெரியும். அதன் மூலம் தமிழில் சர்ச்சை ஏற்படுத்தி சுளுவாய் தங்களை முன்னிலைக்குக் கொண்டு வந்துள்ளனர். அதன்பிறகு டி.வி.க்களில் இத்தகைய நபர்கள் தங்கள் பிரபால்யத்தைப் பயன்படுத்தி கருத்துச்சொல்ல அழைக்கப்படு கின்றனர். எனவே, வெட்டியும் ஒட்டியும் பேச, இந்தப் பட்டிமன்ற மனோபாவத்தால் கட்டமைக்கப்பட்டுள்ள தமிழ்ச் சமூகத்தில் ஒரு ‘சர்ச்சைக்குரிய’ நபர் வேண்டியிருக்கிறார். ‘சர்ச்சைக்குரிய’  என்பது பிராபல்யம் என தவறாய் அங்கீகரிக்கப்படுகிறது. கணினி, முகநூல் போன்றன புதிய ஊடகங்கள் – அவற்றை சட்டவிரோதமாய் பயன்படுத்தக்கூடாது என்பதற்காக சமீபகாலங்களில்தான் நீதியியல் துறை விழிப்புற்றிருக்கிறது. அதுபோலவே, தற்காலத் தமிழ் இலக்கியத்தில் ஒரு புதுப் போக்காய் கணினி மிகமுக்கிய பங்கை ஆற்றுவதற்குப் பல உதாரணங்கள் உள்ளன. இன்று புனைகதையில் பாலியல் சார் எழுத்துக்கள் வந்துள்ளதும் பெண்களின் கவிதைகளில் பெண்களின் பார்வையில்  புணர்ச்சி பற்றி எழுதுவதும் வயது குறைந்தவர்களின் பங்களிப்புகள். மாணிக்கவாசகரும் ஆண்டாளும் பாலியல்சார் படிமங்களை – ஆன்மீகமரபின் பாதையாய் பயன்படுத்தியிருக்கிறார்கள். இளமையின் பார்வையும் ஞானத்தின் பார்வையும் இரண்டு சம்பந்தமில்லாத வேறுவேறு உலகங்கள். இளமையோடு மூடத்தனம் எப்போதும் பின்னிப்பிணைந்திருப்பது தெரிந்த விஷயம்தான். தமிழிலக்கியத்தில் பல புதிய இலக்கிய மரபுகளான மீபுனைவு (Metafiction), மாய எதார்த்தம், கட்-அண்ட்- பேஸ்ட் கதைசொல்முறை என்றெல்லாம் பல விஷயங்கள் பேசப்பட்டபோது வயது குறைந்த ஆண்களும் பெண்களும் பாலியல் எழுத்து என்ற போக்கைக் சுளுவாகக் கடைபிடித்தார்கள். அதாவது தத்துவ அறியாமையும் மேற்கத்தியப்போக்குகளின் அறியாமையும  இந்தப் பாலியல் எழுத்துக்குச் சுளுவாக  உந்தின. சுளுவாய் பலர் கவனத்தை ஈர்க்க, இதனை இளைஞர்கள் (அல்லது அப்போது இளைஞர்களாய் இருந்தவர்கள்) செய்தனர். அதாவது தற்கால இலக்கியம்  பல அனைத்துலக சிந்தனைகளை முன்வைத்தபோது, இன்னொரு தரப்பால் பாலியல் முன்வைக்கப்பட்டு வாசகர் கவனம் தங்கள்பால் ஈர்க்கப்பட்டது. இலக்கியத்துக்கு எந்தப் பயனும் இதனால் ஏற்படவில்லை. ஒருசில வருடங்கள் ‘கிசுகிசு’ பேச்சாய் இவையிருந்த கட்டம் முடிந்துவிட்டது. பெண்ணியச் சிந்தனையாளர்களான சிமொன் தெ பவ்வாரோ, ஜுடித் பட்லரோ, வேறு எவருமோ தமிழில் நடந்தது போன்ற செயல்பாட்டை ஆதரிக்கும் முறையில் எழுத வில்லை. ஜெர்மன் கிரியர் என்ற பெண்ணியவாதிகூட பெண்கள் புணர்ச்சி பற்றிய சிந்தனை மையமே, பெமினிசம் என்ற கோட்பாடு எழுதவில்லை. பெண்புணர்ச்சி முதன்மைக் கவிதைகள் ஒரு புதிய படிம ஆற்றலைக் கொண்டிருந்ததை நான் மறுக்கவில்லை. நான் கூறுவது அத்தகைய கவிதை வெளிப்பாடு ஒரு தொடர் தத்துவ சர்ச்சையோடு முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டுமென்பது. அது நடக்காததால் நவீன இலக்கிய வரலாற்றில் பெண்எழுத்து திடீரென பாலியல் முனைப்பு என்ற ஒற்றைப் பரிமாணத்தோடு (இது இலக்கியப் பரிமாணமல்ல; பொதுவான இளம்வயதுசார் கரிசனம்) நின்றுவிட்டது. 2016   -இல் நின்று பார்க்கும்போது அடுத்தக்கட்ட புதுமை எதுவும் இத்தகைய கவிதைகளுக்கு இல்லாமலிருப்பதுதான் இந்த போக்கின் குறுகிய எல்லையை சுட்டும் அடையாளம். மொத்தத்தில் இளைஞர்கள் தங்கள் அறிவுப்பயணத்தில்  அரசியல் மற்றும் தலித் சர்ச்சைகளையும் உலகத் தத்துவப் போக்குகளையும் கவனம்கொண்ட 80-களை ஒப்பிடுகையில் 21-ஆம் நூற்றாண்டை உடல்  மீதான கவனம் ஆட்டிப்படைத்துள்ளது என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. இளைஞர்கள் முக நூலில் ஈர்க்கப்பட்டபோது பாலியல் எழுத்து எழுதினால் தான் அது லேட்டஸ்ட் எழுத்தாகும் என்று கூறப்பட்டதும் அகஸ்மாத்தாக நடந்தவை அல்ல. இதனோடு மேற்கத்திய பெயர்கள் சில உதிர்க்கப்பட்டன.

 

இதனோடு கணினி ஊடகத்தின் பயன்பாடுகளை ஒரு விமரிசனா நோக்கில் அணுகுகையில் வலதுசாரிகள் கணினிமூலம் கவனம் பெற்றதுபோல் வெறும் உடல்சார் உரை நடை எழுத்தும் கவனம் பெற்றது. உடல்சார் கவனத்தைச் சிந்தனை வரலாற்றோடு கொண்டிணைத்த அமெரிக்கச் சிந்தனையாளரான ஹெர்பர்ட் மார்க்யூஸ்  (Herbert Marcuse) பற்றிக் கொஞ்சம்பேசுவது இங்குப் பொருத்தமானது. அவர் வியட்நாம் மீது அமெரிக்கா போர் தொடுத்திருந்த காலத்தில் அமெரிக்க மாணவர்கள் போரை எதிர்த்தபோது வாழ்ந்த தத்துவவாதி; பல்கலைக்கழகப் பேராசிரியர். அவர் பிராங்க்பர்ட் பள்ளியைச் சார்ந்த மார்க்சியவாதியாவார். பிராங்பர்ட் பள்ளி என்பது மார்சியத்தில் ஒரு சிந்தனைப்பிரிவு ஆகும். அதாவது மார்க்சையும் பிராய்டையும் இணைப்பது மார்க்யூஸின் தனித்துவம். உடலிச்சையை மார்க்யூஸ் முக்கியத்துவம் கொடுத்து தன் தத்துவத்தில் ஏற்பவர். மார்க்யூஸின் ஒரு நூலின் பெயர் “பால் உந்துதலும் நாகரிகமும்” (Eros and Civilization) என்பது. இவருடைய கருத்தை ஏற்ற அமெரிக்க மாணவர்கள் “காதல் செய்யுங்கள் போர் செய்யாதீர்கள்” (Make love not war) என்று முழக்கம் எழுப்பினார்கள். இந்த வாசகத்துக்குப் பின்னால் மார்க்சியத்தின் மூலவேரான சிந்தனை இருந்தது.  இந்த உலகத்தின் மனித சரித்திரம் தொடர்ந்து தளையுண்டு கிடக்கிறது  அந்தத் தளையை உடைத்தெறிவது மனிதகுலத்தின் ஒரே செயல் என்ற அறைகூவல் காணப்பட்டது. அந்தத் தளையைப் பொருளாதார அடிமைத்தனத்தைத் தகர்ப்பதன் மூலம் உடைக்கலாம் என்று மார்க்சிய மரபாளர்கள் கூறியபோது மார்க்யூஸ் மனிதனின் பாலியல் அந்தரங்கமும் மனிதன் தளையுண்டிருப்பதற்குக் காரணம் என்று கூறிய பிராய்டையும் துணைக்கழைத்தார். மார்க்சியத்தில் மார்க்யூஸ் உலக அளவில் முக்கியமான குரல். தமிழ்ச் சமூகம் பெண்களை அடிமைப் படுத்துவதற்குக் காரணம் “தந்தைமைச் சமூகம்” என்று கூறியிருக்க வேண்டும். தந்தைமை (Patriarchy) என்ற தத்துவ வயப்பட்ட புரிதலுக்குப் பதில் இளமைத்துடிப்பு என்ற கொச்சைப்படுத்துதல் பார்வைதான் நம் பெண்கவிஞர்களின் சில கவித்துவக்கூறுகளைத் தூண்டியது. தத்துவமும் கோட்பாடுகள் பற்றிய விரிவானப் பார்வையும் இருந்திருந்தால் தமிழ்ப் பெண்கவிஞர்களின் இயக்கம் பிரம்மாண்டமான ஒரு தற்காலத் தமிழிலக்கிய புரட்சியைச் செய்திருக்கும். இப்போது அது முற்றுப்பெற்றுள்ள முறையில் முற்றுப் பெற்றிருக்காது. இத்துடன் செக்ஸ் எழுத்து என்ற கணினிச் சுரண்டலும் – யாரும் கவனிக்காமலே தமிழில் நடந்தது. புதிய ஒரு தொழில்நுட்பம் தமிழ்போன்ற மொழியில் நுழையும்போது ஏற்படும் விளைவுகளைப் பற்றி  ஊடகத் துறையில் ஆய்வுகள் நடத்தப்படவேண்டும். அங்கு இலக்கியம், கலை, நாகரிகம், உளவியல் போன்ற பல சிந்தனைகள் சம்பந்தப்பட்டு இருக்கின்றன என்பதை நாம் மறக்கக்கூடாது. ( Herbert Marcuse, Cheran,V.I.S.Jeyabalan, Cholaikkili, Simone De Bauvoir etc.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>