திருக்குறள் சிலையும் திருக்குறள் சிந்தனையும்

வண்ணத்துப்பூச்சியின் இறகுகள்

34.திருவள்ளுவர் சிலையும் திருக்குறள் சிந்தனையும்(தீராநதியில் வந்தது)

தமிழவன்

 

          திருவள்ளுவருக்குச் சிலையெடுப்பது பற்றிப் பேசுகிறோம். அந்த  அளவு திருவள்ளுவரின் சிந்தனையைச் சீர்தூக்கிப் பார்த்திருக்கிறோமா? அவருடைய சிந்தனையின் அடிநாதம் என்ன? அவை சங்க இலக்கியத்தில் உள்ளமைவாக உள்ள கருத்துக்கள் தாமா? அதாவது திருக்குறளுக்கு முன்னைய சங்க இலக்கியத்தின் தொடர்ச்சியா திருக்குறள்? அல்லது புதிதாய் எங்கெங்கிருந்தோ வந்த சிந்தனைகளில் எதைத் திருக்குறள் பிரதிநிதித்துவப்படுத்துகிறது?

 

இந்தக் கேள்விகளை விரிவாய் சர்ச்சிக்கும் ஆழமான நூல்கள் தமிழில் இருப்பதாய் தெரியவில்லை. ஒருவேளை இப்படியெல்லாம் சிந்தித்துப் பார்க்கவும், அச்சிந்தனையை நூல்களாய் எழுதவும் தெரியாததால்தானோ திருவள்ளுவர் என்று கற்பிதமாய் ஒரு உருவத்தைக் கல்லில் வடித்து ஊர் ஊராய் சிலையெடுக்க அலைகிறோம். முதலில் போதிய அளவு நூல்கள் இயற்றி, அவற்றை இந்திய மொழிகளில் மொழிபெயர்த்துத் திருக்குறளின் முக்கியத்துவத்தைப் பரப்பியிருந்தால் சிலையெடுக்கும்போது பிரச்சனை வந்திருக்காதோ?

 

இரண்டாம் உலகத் தமிழ்மாநாட்டையொட்டி ஒவ்வொரு பல்கலைக் கழகத்திலும் பெருந்தொகை ஒதுக்கித் திருக்குறள் ஆய்வு இருக்கைகள் உருவாக்கப்பட்டன. ஆனால், ஆய்வுகள் முடியுமுன்பு அந்த ஆய்வுத் திட்டங்கள் நிறுத்தப்பட்டன. ஓரிரு நூல்கள் வந்தாலும், அவை தொடர்ந்து அச்சிடப்பட வில்லை. அந்த ஆய்வுகள் தொடர்ந்திருந்தால் ஓரளவுக்காவது திருக்குறள் பற்றிய அறிவு வளர்ந்திருக்கும். ஆய்வுக்குப் பதிலாய் பட்டிமன்ற பாணியில் ஆயிரக்கணக்கான ‘வெற்றுநூல்கள்’ தொடர்ந்து எழுதப்படுகின்றன. ‘நானும் திருக்குறள் பற்றி எழுதிவிட்டேன்’ என்று கூறும் சுயமோகிகளின் ஆசை நிறைவேறுவதன்றி வேறேதும் பயனில்லை.

 

இன்று அனைத்துலக அளவில் சிந்தனை வளர்ச்சி பற்றிப் பேசும்போது விமர்சனச் சிந்தனை (Critical thinking) என்பது பற்றிப் பேசுகிறார்கள். நூலைப் புகழ்வதை விட்டுவிட்டு, அந்த நூல் நவீன வாழ்வுக்கு எவ்வளவு பயன்படும் என்று சிந்திக்கிறார்கள். அதுபோல் சிந்தித்தலுக்கான அடிப்படை கேள்விகளை உருவாக்குவது விமர்சன சிந்தனை ஆகும். திருக்குறளை அடிப்டையாய் வைத்து எத்தனை கேள்விகள் வந்துள்ளன? திருக்குறள்  எழுதியது யார்? எந்த ஊரைச் சார்ந்தவர். இந்தக் கேள்விகள் வந்துள்ளன? திருக்குறளை எழுதியவரின் சமயம் எது? இந்த மாதிரி சாதாரண கேள்விகளுக்கே சரியான விடை தெரியவில்லை. உடனே, கொஞ்சம் கற்பனைகளைக்கூட சோ்த்துப் பதில் கண்டுபிடிக்கிறோம். திருவள்ளுவர் எப்படி இருப்பார்? யாருக்கும் தெரியாது என்றாலும் ஒரு கற்பனையை அடிப்படையாய் வைத்துப் படம் வரைகிறோம். அப்புறம் சிலை வடிக்கிறோம். தொல்காப்பியருக்கும் பிறந்த இடத்தைக் கண்டுபிடித்ததாய் கூறுகின்றனர். அவருக்கும் ஓர் உருவம் கற்பிக்கப்பட்டுச் சிலை எடுத்துவிட்டோம். நிம்மதி.உருவ வழிபாடு இன்று தமிழனை படாதபாடுபடுத்துகிறது.நடிகனின் கட்-அவுட். தலைவனின் உருவப்படம் எல்லாம் ஒன்றின் தொடர்ச்சி ஒன்னொன்று.

 

இந்த மாதிரி காரியங்களில் ஈடுபடுகிறவர்கள் திருக்குறளையோ, தொல்காப்பியத்தையோ சிந்தனையை உருவாக்கப் பயன்படுத்துகிறவர்கள் அல்லர். தங்களை முக்கியமானவர்களாக்குகிறவர்கள். கூட்டம் போட்டு மேடையில் காட்சி தரும் மேடைமோகிகள். திருக்குறளைப் பார்ப்போம். திருக்குறளைச் சங்கம் மருவிய காலத்து நூல் என்று அதன் மொழி, வாக்கிய மற்றும் இலக்கண அமைப்புப் போன்றவற்றை வைத்து ஓரளவு சரியாய் உருவாக்கப்பட்ட கணிப்பு உள்ளது. இன்னொன்று இருக்கிறது. திருக்குறளின் சிந்தனையைக் கண்டுபிடிப்பது. இது அதிகம் வளரவில்லை. உரையாசிரிரியர் களில் சமஸ்கிருத சாய்வு உள்ள பரிமேலழகரைச் சிறந்த உரையாசிரியர் என்பது ஒரு நகைமுரண். இன்று அப்படிச்சொல்லமுடியாது. அவர் சிறந்த உரையாசிரியரல்ல.

 

ஆனால், பரிமேலழகர் திருக்குறளின் சிந்தனைக் கட்டமைப்பை சமஸ்கிருத நூல்களோடு ஒப்பிட்டார். அகம் புறம் என்ற தொல்காப்பியச் சிந்தனை திருக்குறளில் எங்கே என்ற முக்கியமான கேள்வியைக் கூட அவர் கேட்டார். சமஸ்கிருதவாணர் ஒருவர் சங்ககால இலக்கிய ஒழுக்கத்தையும் புறக்கணிக்கவில்லை. இது அசலான சிந்தனை. இப்படித்தான் சிந்திக்க வேண்டும். அவர் காலத்தில் சமஸ்கிருத மற்றும் பழந்தமிழ் ஒப்பீட்டுப் பார்வைகளைத் திருக்குறளில் பொருத்திப் பார்த்தார்கள். இன்று நமக்கு ஆங்கிலம் தெரியும். அந்த சிந்தனை மரபையும் இணைக்க வேண்டும். உலகளவில் ஆங்கிலம் மூலம் சிந்தனைகளை நாம் அறியமுடியும். ஆங்கிலம் மூலம் சமூகவியல், வரலாற்றுக் கோட்பாடு, தத்துவம் போன்றன பற்றி அறிந்து “விமர்சனச் சிநதனை”  மூலம் திருக்குறள் கருத்துக்களோடு உலகச் சிந்தனைகளை ஒப்பிடமுடியும். இதுதான் நவீனச் சிந்தனையைத் தமிழில் கொண்டுவரும் முறை. விமர்சனச் சிந்தனை என்பது இலக்கிய விமரிசனம் அல்ல. சிந்தனைகளுக்கான கோட்பாடுகளான மார்க்சியம், பிராய்டியம், வரலாற்றுமுறைச்சிந்தனை, தத்துவமுறைச் சிந்தனை போன்றவற்றை திருக்குறள் சிந்தனையில் இணைத்துச் சிந்திப்பதாகும். இதனை ஜி.யு.போப் கூட தொடங்கி வைக்கவில்லை. பல்கலைக்கழகங்களில் உள்ள, சமூகவியல், உளவியல், வரலாற்றியல், தத்துவவியல் துறைகளில் சுய சிந்தனையை வளர்த்த வேண்டும். இப்போதும் தமிழக மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படும் பல்கலைக்கழகங்களில், இங்கே கூறிய துறைகள் உள்ளன. அவற்றில் முதலில் தமிழில் போதிக்கப்பெற வேண்டும். தமிழில் பாடம் சொல்லி, தமிழில் எம்ஃபில், பிஎச்டி பட்டங்கள் நடைபெறவேண்டும். அதன் அடுத்தக் கட்டமாக சுயசிந்தனை இத்துறைகளில் உதயமாகும். பண்பாட்டு விழிப்புணர்வு உள்ள தமிழகத்தில் இது நடக்கும். பண்பாட்டை வழிபாடாகவும் சடங்காகவும் அரசியல்வாதிகளின் துதிபாடவும் பயன்படுத்தும் நாடு உருப்படாது. தமிழகத் தில் பழைய மதவழிபாட்டை மடைமாற்றி புதிய வழிபாடாக ஆக்கியுள்ளோம். பழைய சடங்கை புதுவடிவமாக்கி நடிகன் கட்-அவுட்டுக்கு பால் வார்க்கிறோம். ஒரு அறிஞராவது அவற்றைக் கண்டிக்கவில்லை. தமிழனின் மனதே சடங்காச்சார மனதாகிவிட்டது. 2009-இல் இந்தியப்படை தமிழர்களைக் கொலை செய்து விட்டதென்றால் தமிழன் தனக்குள்ளேயே சடங்குகளாலும் ஆச்சாரங்களாலும் வழிபாட்டு மனம் கொண்டவனாகவும் ஆனதால் தான். இவன் விழிப்புணர்வற்றவன் என்று எல்லோருக்கும் தெரியும். இதைப் புரிந்த வடநாட்டான் “உனக்குச் சிலை வைக்க வேண்டும், அவ்வளவு தானே! இதோ வைத்துத் தருகிறேன் அடிமையே அழிந்து போ” என்று கூறுகிறான். விமர்சனச் சிந்தனை, நம் பல்கலைக்கழகங்களில் வளர்ந்திருந்தால் யாரும் ஏமாற்றமுடியாது. விமர்சனச் சிந்தனைக்கு முறைமை (Method) உண்டு. எது விமர்சனச் சிந்தனை, எது விமர்சனச் சிந்தனை அல்ல என்று கண்டுபிடிக்கமுடியும். இதற்குப் பல கால பயிற்சி வேண்டும். சிந்தனைத் துறையை மதிக்கிற இனமாகத் தமிழினம் இருந்தால் இந்தப் பயிற்சி தொடங்கப்பட்டிருக்கும். கணினியில் உலகளவில் தேர்ந்த தமிழர்கள் உள்ளனர். இயற்பியலில் உள்ளனர். அவை நேரடியாக மனிதக்குழுவினர் பற்றிய சிந்தனை இல்லை. மனிதாய அறிவியல் (Human Sciences) மூலச்சிந்தனையாய் (Original thinking) தமிழில் வளரவும் இல்லை. அதற்கான சூழலும் இல்லை. சமீபத்தில் மதுரை அருகில் புதைஉண்ட நகரம் கண்டுபிடிக்கப்பட்டது. ஒழுங்கான அறிவு விழிப்பும், சிந்தனை செய்யும் பயிற்சியும் பெற்ற இனமாக இருந்தால் எல்லா நாளிதழிலும் கொட்டை எழுத்தில் தலைப்புச் செய்தியாக வந்திருக்க வேண்டிய  செய்தி ஆயிற்றே இது. டி.வி, ஊடகங்கள் எல்லாவற்றிலும் முக்கியச் செய்தியாகப் பலநாள் ஒளிபரப்பப்பட்டு வாதவிவாதங்கள் நடந்திருக்க வேண்டும். எதுவும் நடக்கவில்லை. கபாலி படத்துக்குக் கொடுத்த பிரச்சாராத்தைவிட புதிய நகரம் கண்டுபிடிக்கப்பட்ட தற்கும், அந்நகரத்துக்கும் சங்க இலக்கியத்தில் நகர்பற்றி வரும் விளக்கங்களுக்கும் உள்ள ஒற்றுமைப் பற்றியும் பேசியிருக்க வேண்டும். ஹரப்பாவுக்கும் இந்த நகரத்துக்கும் உள்ள ஒற்றுமைப் பற்றி பேச்சு வந்தது. அதற்குள் அந்தப் பேச்சு நின்றுபோனது. சமூகச் சிந்தனை நம்மிடம் இல்லை. பல்கலைக்கழகங்கள் தோற்றுவிட்டன. பிறநாடுகளில் தமிழனின் பரிதாப நிலையைப் பற்றி சினிமா எடுக்கப்பட்ட 1950களில் இருந்த போலி பராசக்தி விழிப்புணர்வுகூட ஒன்றரை இலட்சம் தமிழர்களைக் கொன்ற இன்று இல்லை. அடிப்படை பிரச்சனை எங்கேயிருக் கிறது? பெரியார் கண்டுபிடித்ததுதானா? மதஉணர்வு மிதமிஞ்சி ஒரு இனத்தை கல்லில் அடையாளம், கட்சி மாநாட்டு அடையாளம், தலைவர் வழிபாட்டு அடையாளம், பட்டிமன்ற கேளிக்கை அடையாளம், நடிகர் நடிகைக்குக் கோயில் கட்டுதல் அல்லது அவர்களுக்காக தற்கொலை செய்தல் இப்படி இப்படியே உள்முகச் சடங்குகளில் ஓரினம் அழிந்துகொண்டிருப்பதைப் பற்றி யோசிக்க முயற்சிக்கிறோமா?

 

இந்தமாதிரி உள்முக அழிவு ஒரு மக்கள் கூட்டத்துக்கு ஏன் ஏற்படுகிறது என்பதையும் வெளிமுக அழிவான பிற எதிரிகளால் ஏற்படும் நாசம் பற்றியும் தெளிவு தருவது விமரிசனச் சிந்தனை. எதையும் கேள்வி கேட்க அனுமதி தருவது அது. தமிழர்களிடம் திருக்குறளில் குறையுள்ளது என்று பேசமுடியுமா? அவர்கள் வழிபடும் தலைவரிடம் குறையுண்டு என்று பேசிவிட்டுத் தப்பமுடியுமா? நடிகனுக்குப் பாலாபிஷேகம் செய்வது தவறு என்று எதிர்ப்புத் தெரிவிக்க ஒரு தமிழ்த்தேசியக் குழு கூட முன்வரவில்லையே. சடங்குகளில் மூழ்கிப்போகிற போது, நடுநிலையான சிந்தனைக்கு வழியில்லை. பூஜை மனோபாவம் ஆபத்தானது. தமிழிலக்கியத்தின் காலத்தைப் பின்னால் வைத்தால்  சகிக்கமாட்டார்கள். தமிழர்கள் தோன்றியது கி.மு.வில் பத்தாயிரமாம். தொல் காப்பியம் தோன்றியது கி.மு. ஆயிரமாம். தெரியாத   ஒன்றை தெரியாது என்று சொல்ல வேண்டும். உடனே ஒரு கற்பனையை உருவாக்குகிறோம். இது கையாலாகாத ஓரினத்தின் மத  உணர்வன்றி வேறென்ன? (இது தொல்கதையாக்கம். அதற்கும் ஒரு எல்லை உண்டு.)இந்த வழிபாட்டுணர்வு, சடங்காச்சார உணர்வு, ஆராய்ச்சி உணர்வை மழுங்கடித்துவிட்டது. ஆராய்ச்சி உணா்வு இல்லாத சமூகத்தில் விமரிசனச் சிந்தனை வளராது.

திருக்குறளில் அறம், பொருள் பற்றிய பாகுபாடு (தர்மா, அர்த்த என்ற) சமஸ்கிருத வேதங்களில் உள்ள சிந்தனைத் தொடர்ச்சி என்றும் இன்பம் என்ற மூன்றாவது பகுதி சிருஷ்காரம் என்றும் கூறியதில் தவறுகள் உண்டு. அந்தத் தவறை நிரூபிக்க சங்க இலக்கியத்தை நன்கு கற்று திருக்குறளின் சொல், வாக்கியங்களின் இலக்கணம், அமைப்பு என ஒப்பிட்டிருக்க வேண்டும். முதலில் சங்க இலக்கியத்துக்கே பொருள் சொல்ல சங்கச்சொல்லகராதிகள் வரவில்லை.

திருக்குறள் சொற்துணுக்குகளுடன் ஒப்பிடுவது அடுத்த காரியம். இதற்கடுத்து விமர்சனச் சிந்தனை. இதே பத்தியில் நான் ஒரு முறை நீட்சேயின் கருத்துக்களுடன் திருக்குறள் கருத்துக்கள் ஒப்பிடப்படவேண்டும் என்றேன். எதிர்ப்புத்தான் வந்தது. நீட்சே சந்நியாச மனோபாவம் (ascetic)உள்ள இடத்தில் தோல்வி மனப்பான்மை இருக்கும் என்கிறார்.சந்நியாசம்  பற்றி வள்ளுவர் சொல்வதால் நீட்சே சொல்லும் மனிதகுல தோல்வியுணர்வு – எதிர்மறை உணர்வு (Nihilism) திருக்குறளின் ஒட்டுமொத்த சிந்தனைச் சட்டகத்தில் உள்ளதா என்று கேட்க வேண்டும். அந்தக் கேள்வியில் தவறில்லை. ‘நான் வழிபடும் திருக்குறளை எப்படி நீ விமரிசிக்கலாம்?’ என்று கோபப்படு கிறார்கள். சமீபத்தில் பகுத்தறிவாளர்களை மதவெறியர்கள் கொலை செய்தனர். அதே மதவெறிதான்  நூல்வெறியிலும் வெளிப்படுகிறது. ஓரளவு இறுக்கத்தைத் தளர்த்தாவிட்டால் சிந்தனை மனதுக்குள் புகாது. சிந்தனை புகாத மனது மூடிய மனது. மூடிய மனதுக்குள் இருள்தான் இருக்கும். ஒளி இருக்காது. காலம் மாறிக் கொண்டிருக்கிறது. வெறியுணர்வு இனி பயன்படாது. ஆயுதங்கள் வளர்ந்து விட்டன. வளர்ச்சியடைந்த ஆயுதங்களைக்கூட தோற்கடிக்கும் ஆயுதம் சிந்தனை ஆகும். சிந்தனையை மையமாக்கித் தமிழ்ச்சமூகம்க வளரவேண்டும். (pict: Nietzsche, Thiruvalluvar, Tholkappiyar etc.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>