நவீன இலக்கியமும் பழைய இலக்கியமும்

35.வண்ணத்துப்பூச்சியின் இறகுகள்

நவீன இலக்கியமும் பழைய இலக்கியமும்(தீராநதியில் பிரசுரமானது)

தமிழவன்

 

          எழுத்தாளர் ஒருவர் கவிஞர் ஞானக்கூத்தனின் மறைவு பற்றிக் கூறும்போது ஞானக்கூத்தனின் ஒரு முக்கியமான சிந்தனையை முன்வைத்தார்.

 

ஞானக்கூத்தனின் சிந்தனை இதுதான். தற்கால இலக்கியம் பற்றிய நம் சிந்தனை பழைய இலக்கியத்தை வளப்படுத்தும். இது ஆழமான ஒரு சிந்தனை. தற்கால இலக்கியம் பற்றி நாம் அதிக அக்கரை காட்டவில்லை என்றால் பழைய இலக்கியம் பற்றியும் நாம் அக்கரை காட்டவில்லை என்று பொருள். அதுவும் தமிழ்மொழிபோல 2000 ஆண்டுகால பழமை உள்ள இலக்கியத்தைக் கொண்ட மொழியில் இச்சிந்தனை பற்றி விவாதிக்க வேண்டும்.

 

நான் ஒரு பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பொறுப்பில் இருந்தபோது சில மாணவர்களுக்கு முனைவர்பட்ட தலைப்புக் கொடுக்க வேண்டியிருந்தது. என் கொள்கைப்படி தற்கால இலக்கியத்தில் ஆழமானஅறிவு இருந்தால் பழங்கால இலக்கியம் பற்றி அவர்கள் தானாகவே அறிந்துகொள்வார்கள் என்று நினைத்தேன். அதனால் தற்கால இலக்கியத் தலைப்பைக் கொடுத்து சில தற்கால நூல்களைப் படித்து வரக் கூறினேன். ஒரு வாரம் சென்ற பின்பு அவர்கள் வந்து ‘செவ்வியல் இலக்கியத் தலைப்புத்தான் வேண்டும்; தற்கால இலக்கியம் வேண்டாம்’ என்றார்கள். காரணம் கேட்டபோது தயங்கியபடி தங்கள் வாழ்வு பாதிக்கப்படும் என்றார்கள்.  செம்மொழி நிறுவனத்தில் செவ்வியல் நூல்களான 41-நூல்கள் பற்றிய ஆய்வாக இருந்தால் மட்டுமே ஆய்வுத் தொகைக்கு விண்ணப்பம் செய்யமுடியும் என்று கூறியபோது நானும் என் கொள்கையை மூட்டை கட்டி வைத்துவிட்டுத் தலைப்பை மாற்றி செவ்வியல் நூல்களான சங்க இலக்கியத்தில் தலைப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு அவர்களுக்கு உதவினேன்.

 

தற்கால இலக்கியத்தை நன்கு கற்றால் பழைய இலக்கியம் பிடிபடும் என்ற கருத்து  ஞானக்கூத்தனும் கூறியிருந்தார் என்றறிந்தபோது மகிழ்ச்சி ஏற்பட்டது.

 

சில ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவில் தமிழ் கற்பிக்கிற பல்கலைக்கழகத் துறைக்குப் போனேன். அங்குத் தமிழ் ஆய்வுகளையும் மலேசிய மொழியில் சமர்ப்பிக்க வேண்டும் என்றார்கள். அத்துடன் அங்குப் பணியாற்றும் பல பேராசிரியர்கள் தற்கால இலக்கியத்தில் ஆய்வு செய்திருப்பதை அறிந்தேன். அதற்கான காரணம் மலேசிய இலக்கியம் மிகவும் பிந்தித் தோன்றியது. அதனால் தற்காலத் தமிழ் இலக்கிய ஆய்வை பல்கலைக்கழக  மலாய் நாட்டுஅதிகாரிகள் மதிக்கிறார்கள் என்றறிந்தேன்.

 

இது எப்படியிருந்தாலும் தற்கால இலக்கியமும் பழைய இலக்கியமும் நுண்மையாய் கற்றிருந்தவர் ஞானக்கூத்தன். எளியமுறையில் ஆழமான கருத்துக்களைச் சொல்லிக் கொண்டிருந்தவர். சமஸ்கிருதம்கூட அறிந்தவர். இரண்டு செவ்வியல் மொழிகளை அறிந்தவர் தற்கால இலக்கியம் கற்றால் செவ்வியல் இலக்கியம் தானாக வளரும் என்று ஏன் கூறினார்? வழக்கமாய் செவ்வியல் தமிழை நாம் ஏன் மதிக்கிறோம்? அது பழமையானது என்பதால் சமூகத்தில் ஒரு மதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இது நம் சமூகத்தின் உளவியலோடு சம்பந்தப்பட்ட சிந்தனை. தமிழ்ச்சமூகத்தில்  வயதானவர்களை மதிக்கிறோம். பழைய சம்பிரதாயங்களை அதன் பொருள் தெரியாவிட்டாலும் பின்பற்றுகிறோம். இது சமுதாய உளவியல். இந்தப் பழமையை உடைத்தன பெரியாரின் கருத்துக்கள். கேள்வி கேட்க வைத்தன. இந்த மாதிரியான பழமையும் புதுமையும் கலந்த சமூகம் இன்றைய தமிழ்ச்சமூகம்.

 

ஆனால் தமிழ்த்துறைகளில் பழையதை மட்டும் போற்றும் உளவியலே பெருவாரியாக உள்ளது. புதுமையின் அடையாளமான மொழியியல் (மொழி விஞ்ஞானம்) ஒரு அறிவுத் துறையாகத் தமிழ்த்துறைகளில் வந்தாலும் இலக்கியத்தில் புதுமை புகவில்லை. மதுரைப் பல்கலைக்கழகத்தில் முத்துச்சண்முகமும் சி. கனக சபாபதியும் சேர்ந்து புதுமையைப் புகுத்தினார்கள். அப்போது நவீனத்தமிழ் அங்கு ஆய்வுக்கு எடுக்கப்பட்டது. அது பின்னர் நின்றுபோனது. அக்காலகட்டத்தில் மதுரையில் தமிழ் ஆய்வில் பொதுவாக ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டது.அதற்குக் காரணம் சி.க. நவீனத்தமிழிலும் முத்துச்சண்முகம் அமெரிக்காவில் இருந்து நவீனப்பார்வைகளின் பழக்கத்துடனும் வந்தது என்று கூறலாம்.

 

வெளிநாட்டுக்கவிஞர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் புதிய இலக்கியத்தைப் பழைய இலக்கியத்தின் அடியொற்றி உருவாக்க முனைந்தார்கள். முக்கியமாக மாடர்னிச இலக்கிய இயக்கத்தைச்சார்ந்த  டி.எஸ்.எலியட், எஸ்ரா பௌண்ட் (Ezra Pound) போன்றோரால் 20ஆம் நூற்றாண்டில் புது இலக்கியம் உருவானபோது இவ்விருவரும் பழைய இலக்கியம், சிந்தனை, போன்றவைகளைத் தங்கள் சிந்தனைகளின் மூலவேராக மாற்றமுனைந்தார்கள். நவீனத்தத்துவவாதிகளும் பழைய கிரேக்க தத்துவத்தை அடியொற்றியே புதியவைகளை உருவாக்குகிறார்கள். நீட்சேயிடம் கிரேக்க இலக்கிய தாக்கம் உண்டு.பழையதின் தேவை என்ன?  ஏன் பழையதைத் தேடவேண்டும்?

தற்கால இலக்கியத்திற்குப் பழைய இலக்கியமும் பழைய சிந்தனையும்  ஏன் வந்து முட்டுக் கொடுக்க வேண்டும்? ஒரு காரணம்  எனக்குத் தோன்றுகிறது. நாம் ஒரு புத்தகத்தைப் படித்து விமரிசனம் எழுதப்புகும்போது, அந்தப் புத்தகத்தின் வாசிப்பு அறிவு உடனே பிடிபடுவதில்லை. எனக்கு இந்த அனுபவம் நடந்திருக்கிறது. அந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு உடனே எழுத முடியாது. கொஞ்ச நாள் தள்ளிப் போடுவேன். பின்பு நூலை ஓரளவு மறந்தபிறகு மீண்டும் எழுத உட்காருவேன். நூலின் தன்மை அப்போது பிடிபடும். எழுதிவிடுவேன். ஏன் நூலை மறக்க வேண்டும்? நூலிலிருந்து அகன்று  நின்றால்தான் நூலின் முழுமை மனதில் சேகரமாகும். இந்த “அகன்று நிற்றலைச்” சாத்தியப்படுத்துவதற்குத்தான்  டி.எஸ்.எலியட்டும் எஸ்ரா பௌண்டும் கூட தற்காலக் கவிதைக்குள் பழைய செவ்வியல்  இலக்கியத்தின்  குணத்தைக் கொண்டு வந்தார்கள்.ஆனால் அவர்கள் ஒரு புது வித கவித்துவத்தை அறிமுகப்படுத்த “அகன்று நிற்றலை”க் கொண்டு வந்தார்கள். நான் கூறிய அகன்று நிற்றல் வேறு. அவர்களின் அகன்று நிற்றல் வேறு. ரஷ்யாவில் வடிவவியல் வாதிகள்(Formalists)என்ற பெயரில் ஒரு குழுவினர் இருந்தனர்.அவர்களும் ஒரு புதுவித அழகியலை அறிமுகப்படுத்தினர். நல்ல படைப்பு ஒரு விதமான தூரத்தில் நிற்கும் தன்மையை (Distanciation)வாசகனிடம் ஏற்படுத்தும் என்றனர்.நம் மனவெளியில் எந்த அளவு இந்த உணர்ச்சிவயபடாத தூரத்தில் நிற்கும் தன்மையை ஒரு கவிதையோ நாவலோ உருவாக்குமோ அந்த அளவு அந்தப்படைப்பு நல்லது என்பது அவர்களின் கருத்து. இதுபோல் பிரக்ட் என்ற பெயரில் ஜெர்மன்நாடக ஆசிரியர்  ஒருவர் இருந்தார்.அவர் நாடகம் பார்ப்பவர்கள் நாடக ப் பாத்திரங்களோடு தங்களை இனம்காணக்கூடாது என்பதற்கு நாடகத்தில் இடைஇடையே அட்டைகளில் எழுதிக் காட்டி அது நாடகம் என்று உணர்த்தினார். இந்த உத்தியை “அன்னியமாதல்” என்று கூறினார். இப்படிப் படைப்புக்களில் இருந்து அதைப்பயன்படுத்தும் மக்கள் ஒதுங்கியிருப்பதற்கான தேவையை ஏன் வலியுறுத்தினர்? எம்.ஜி.ஆர்.படங்களைப்  பார்த்துவிட்டு மக்கள் அவரே சினிமாவில் வரும் பாத்திரம் என்று கருதினார்கள்.பாத்திரத்தையும் நடிகரையும்வேறுபடுத்த தெரியவில்லை.குறையுள்ள சமூகங்களில் இது நடக்கும். அதனால் இம்மாதிரி குறையிலிருந்து சமூகத்தைக்காக்க இத்தகைய அகன்றுநின்று வாசிக்கும் அல்லது அகன்றுநின்று காட்சிக்கலைகளை அணுகும் சித்தாந்தங்கள் கலையுலகில் தோன்றின.இப்போது புரிகிறது தற்கால இலக்கியம் படித்தால் பழைய இலக்கியத்தின் நுட்பம் பிடிபடும் என்றுஞானக்கூத்தன் கூறிய காரணம். ஞானக்கூத்தன் கவிதைகளும் அகன்றுநின்று வாசிக்கும் அழகியலைக்கொண்டிருக்கிறதை வாசிப்பவர்கள் அறியமுடியும்.அகன்றுநின்று வாசிக்கும் அழகியலா என்று கேட்கிறீகளா? ஞானக்கூத்தன் கவிதைகளிருந்து ஓர் உதாரணம்.

இரண்டொரு நாட்கள் குளிப்பதற்கில்லை

வைத்தியர் சொற்படி ஒருநாள்

கவனம் கருதி மற்றும் ஒருநாள்

உடல் நலம் கேட்டு யாரும் வருவார்.

திரும்பும் போது

தயவு செய்தெனக்காகச்

சந்துவிடாமல் கதவை மூடெனக்

கேட்கணும்

பொருந்தி மூடா கதவின் சந்தில்

குத்திட்டு நிற்கும் குழல் விளக்காகத்

தெரிந்திடும் வானை

எத்தனை நேரம் பார்த்துக் கிடப்பது.

 

இக்கவிதையில் அகன்று நின்று வாசிக்கும் அழலியல்பண்பு வெளிப்பட்டிருப்பதை அறியலாம். புற நானூற்றில் வரும் மரணம் பற்றிய   கவிதைகளில்  இந்த தொனி உண்டு.

 

இங்கு ஓர் ஆபத்தையும் தமிழ்ச்சூழலில் உடனே நாம் எதிர்கொண்டாக வேண்டும். பலர் வண்டி வண்டியாய் பழைய திருக்குறள் வரிகளையோ, கம்பராமாயண வரிகளையோ கொட்டி நிறைத்துத் தற்கால இலக்கியம் எழுதுவதைப் பார்த்திருக்கிறோம். வானம்பாடி பாணி கவிதைகளை ஞானக்கூத்தன்  ஏற்கவில்லை. அதற்கான காரணம் பழமையைத் தேவைக்கதிகமாக வானம்பாடிக் கவிதைகளில் அவர் பார்த்தார். ஓர் “அகன்று நிற்கும் தன்மைக்கு”ப் பதிலாக பழமையில் மூழ்கி முகம் மறைய ஆரம்பித்தபோது நவீன கவிதை பிறக்கவில்லை என்று ஞானக்கூத்தன் கருதினார். அகன்று நிற்கும் தன்மை அக்கவிதைகளில் இல்லை. எவ்வளவு பழையது இருக்க வேண்டும்? எவ்வளவு புதியது இருக்கவேண்டும்? இந்த நுட்ப அறிவு இருப்பவர்களே புதிய இலக்கியம் படைக்க முடியும். கடந்த 50 ஆண்டுகால தமிழ்த்துறைப் போக்குகளைக் கவனிப்பவர்களுக்கு இந்த நுட்பமான அறிவு சமீபகாலங்களில் மிக அதிகமாக அத்துறைகளில் வந்திருக்கிறது என்பது தெரியும். முன்பு இருக்கவில்லை என்பதும் தெரியும்.க.நா.சு. பேராசிரியர் மு.வ.வின் நாவல்களை ஏற்கவில்லை. அதற்கு அவர் கூறிய காரணம் பலர் அறிந்ததுதான். மு.வ. தன் நாவல்களில் திருக்குறளையே திணித்து வைத்து எழுகிறாரென்பது. அதாவது பழமை தேவைக்கதிகமாய் புதிய இலக்கியத்தில் வந்ததை ஞானக்கூத்தனைப்போலவே க.நா.சுவும் ஏற்கவில்லை.

 

நம் பழையசங்க இலக்கியம் ஆச்சரியமான ஓர் உலக இலக்கியம். அதில் உள்ள பழமையான மொழித்தளத்தில் பல பூடகங்கள் உள்ளன. காலம் மற்றும் இடம் என்ற பரிமாணம் உள்ளது. கிரேக்க ஆரம்பகட்ட தத்துவத்திலிருந்து நவீனத் தத்துவம்  (ஹைடேக்கர், டெரிடா வரை) வரை காலம் (Time) இடம் (Place)  என்ற இரு உண்மைகளை விட்டுவிட்டு அவர்கள் பேசமுடியாது. சங்க இலக்கியத்தை எடுத்துப் படியுங்கள். மனஉணர்வும் இயற்கை உணர்வும் ஒரு ரகசியப் பேச்சுப் போல கவிதைகளில் இருந்து கேட்கும். இந்த ரகசியத்தைத் தற்கால கவிதையில் கொண்டு வரத் தெரிந்தவர்கள்  நல்ல கவிதையை எழுத முடியும். குறிஞ்சி, முல்லை என்றெல்லாம் பூக்களின் பெயர்களின் பின்னால் எவ்வளவு பூடகமான மன உணர்வுகள் பொதிந்து வைக்கப்பட்டிருக்கின்றன. குறிஞ்சிக்கு என்று ஓர் ‘இடம்’ உண்டு;  ஒரு ‘காலம்’ உண்டு. அதுபோல் முல்லைக்கும் உண்டு. எவ்வளவு ஆச்சரியமான சிந்தனைகள் இந்தப் பழைய கவிதைகளுக்குள் உள்ளன!

 

ஆனால், சங்ககாலக் கவிதைகளை ஏன் வெறும் சடம்போல படித்துக் கொண்டே இருக்கிறோம். அதன் உயிரைச் சாகடித்தவர்கள் யார்? புதிய காலம் என்பது நாம் வாழும் காலம். புதிய இலக்கியத்தில் நாம் பழமையைக்கொண்டுவந்து புதிய இலக்கியத்தை வளமுள்ளதாக்க முடிந்ததுபோல பழைய இலக்கியத்தை வெறும் சடமாகவும் ஆக்க மூடியும். நம் இன்றைய நவீன வாழ்விலிருந்து பழைய கவிதையை எந்த நிமிடத்தில் அகற்றி அதனை நமக்குத் தொடர்பு இல்லாத இன்னொரு பழைய காலத்தின் பழைய மொழியின் கவிதையாக – ஒரு சடமாக – பார்க்கிறோமோ, அப்போதே அக்கவிதை செத்துப் போகிறது. சாகாமல் உயிருள்ள கவிதையாய் பழைய கவிதையை இன்னும் பயன்படுகிற கவிதையாய் வைத்துக் கொள்ள ஒரே வழி பழையதை நவீன இலக்கியத்தின் கண்ணாடி வழி படிக்கவேண்டும். அதுதான் ஒரே வழி. ஆக பழையதை டி.எஸ் எலியட் போல புது உத்தியாய் பயன் படுத்தவும் முடியும். மு.வ.விடம் க.நா.சு.கண்ட குறையைப்போல அதிகமான பழமை நவீன இலக்கியத்தில் வந்து கெடுக்கவும் முடியும்.

நவீன இலக்கியத்தைப் பழைய இலக்கியத்தில் எப்படிச் சரியாய் பயன்படுத்துவது? இதற்காகப் பல முறைகளைப் பேராசிரியர்கள் பின்பற்றலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. பழைய கவிதையையும் புதிய கவிதையையும் அருகருகே பாடத்தில் வைத்துப் பாடபுத்தகம் தயாரிப்பது. பல கல்வி நிறுவனங்கள் சுயாட்சி நிறுவனங்களாகியுள்ளன. இப்படிச் செய்வது சாத்தியம்தான். தமிழையும் மாணவர்களையும் இப்படிக் காக்க வேண்டும். தமிழ்க்கல்வியில் புதுமை வராவிட்டால் தமிழ்ச் சமூகத்தில் புதுமைவராது.(Photos: Gnanakuthan, Ezra pound,T.S.Eliot,BertoldBrecht ,M.G.R. etc.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>