சமீபத்தில் வெளியான தமிழவனின் கட்டுரைத் தொகுப்பிலிருந்து

25.     இருபதாம் நூற்றாண்டின் கலாச்சார சிந்தனை

          இலங்கையில் போர்க்குற்றம் புரிந்த இராசபட்சவின் சகோதரர் இந்தியப் பாராளுமன்றத்தில் விருந்தினராக வருகிறார். இந்திய நாட்டின் குடியரசுத் தலைவரைச் சந்திக்கிறார்.

வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா “இனி நடக்க வேண்டியதென்ன என்றுதான் பார்க்கவேண்டும்” என்று மறைமுகமாகப் போர்க்குற்றம் பற்றி சத்தம் போடாதீர்கள் என்கிறார். சோனியாகாந்தியின் உடல்நலனுக்காக ராசபட்சவும் மனைவியும் பிரார்த்தனைப் புரிகிறார்கள். தென்பகுதியில் வாழும் 6 கோடி தமிழர்களின் சகோதரச் சகோதரிகளும், தங்கைத் தம்பிகளும் ஆக சுமார் ஒரு இலட்சம் பேரைக் கொன்ற கொலைக்காரர்கள் இந்திய மைய அரசின் சீராட்டலுக்கும் பாராட்டுதலுக்கும் பாத்திரமாகிறார்கள்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் அனைத்திந்திய அளவில் இலங்கையைப் போர்க்குற்றவாளி என்று தீர்மானம் போட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அப்படி ஒரு தீர்மானத்தைப் போடவில்லை என்பது கவனிப்பதற்குரியது.  பிரகாஷ் காரத்தோ, சீதாராம் யெச்சூரியோ இலங்கை மீது போர்க்குற்றம் சுமத்தித் தீர்மானம் போடவில்லை. இன்றைக்கு உருவாகியுள்ள பரிதாபகரமான சூழலைத் தமிழர்கள் இந்தியாவில் இதுவரை கண்டதில்லை.பக்கத்துத் தீவில் தன் இனம் அழிக்கபட்டுவருவதையும் அந்த அழிவுக்குத் தமிழர்கள் மத்திய அரசுக்கு செலுத்தும் வரிப்பணம் செலவு செய்யப்படுவதையும் தமிழர்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க வேண்டிய நிலை. நிருபமா மேனன் ராவ் என்ற வெளியுறவுச்செயலர்-உலகமெல்லாம் ராசபட்சவைப் போர்குற்றவாளி என்று கூறும் போது-தனது பணிஓய்வு பெறும் போது, ராசபட்ச முன்பு போய்நின்று பரிசுகள் பெற்றுவிட்டு டெல்லிக்குப் பறக்கிறார்.தமிழ் இனம் இவ்வாறு அவமானப்படுத்தப்படும் போது பொறுக்க முடியாமல் ஆளும் காங்கிரஸ் கட்சியிலிருந்து எனக்குத் தெரிய ஒரேயொரு தமிழர்தான் வெளியேறியிருக்கிறார். அவர் தமிழருவி மணியன்.

இந்தச் சூழலில், இந்தியச் சுதந்திரத்திற்காகப் போராடித் தன் சொத்து, சுகம் எல்லாம் இழந்த வ.உ.சிதம்பரம் என்ற மனிதனைப் பற்றிய நினைவு, பல விசயங்களை யோசிப்பதற்குப் பாதை அமைத்துக் கொடுக்கிறது.

இன்றைய கட்சிகளால் எதைச் சாதிக்கமுடிகிறதோ இல்லையோ தமிழனை யோசிக்காமல் வைக்க முடிகிறது. இருபதாம் நூற்றாண்டின் பல்வேறு பகுதிகளின் தமிழர்கள் மத்தியில் சிந்தனையாளர்கள் இருந்தார்கள். அந்த அத்தனைபேரும் பல்வேறு கருத்துக்களைக் கொண்டிருந்தார்கள். அவர்களின் தலைவராகக் குறியீட்டு முறையில் பெரியார் அமைந்தார். அந்தப் பெரியார் 1937-இல் (19-09-1937) ஈரோடு அருகில் கொல்லம்பாளையத்தில்   பேசும்போது ஒரு சிந்தனையை முன்வைத்திருக்கிறார்.

“அய்ரோப்பாவில் நார்வே, ஸ்வீடன், டென்மார்க், ஹாலண்டு, பெல்ஜியம், போர்ச்சுகல், கீரிஸ் ஆகிய நாடுகளும் நமது நான்கு ஜில்லா, மூன்று ஜில்லா, இரண்டு ஜில்லா போன்ற விஸ்தீரணமுள்ளவை. இவர்கள் எல்லோரும் தங்கள் தங்கள் நாட்டைத் தாய்நாடு என்பார்களே ஒழிய அய்ரோப்பாவைத் தாய் நாடென்பார்களா?.

ஆகவே தமிழ் நாட்டவர்கள் – திராவிட மக்கள் எந்தக் காரணம் கொண்டு இந்தியாவைத் தாய்நாடென்று கூறவேண்டுமென்பதும் எதற்காக இந்தியா பூராவும் எப்போதும் ஒரு குடையின்கீழ் இருக்க வேண்டும் என்று ஆசைப்படவேண்டும் என்பதும் எனக்கு விளங்கவில்லை. முதலாவது ‘பாரதநாடு’ என்பதையும், நாம் எல்லாம் பரதர்கள் என்பதையும்கூட நான் ஒப்புக்கொள்ள முடியாது”

இந்த நீண்ட மேற்கோளை எதற்காக இங்கே எடுத்துக் காட்டுகிறேன் என்றால் தேசம் பற்றிய கருத்தாக்கம் இன்று உலகமெங்கும் சிந்தனைகளின் தாய்ச் சிந்தனையாகப் பரவியுள்ளது; அச்சிந்தனையின் உள்ளே இருக்கும் பல்வேறு இழைகளோடு இன்றைய பல பின் நவீனத்துவ பொருளாதார,அரசியல் சிந்தனைகள் பின்னிப் பிணைந்துள்ளன என்பதற்காக.

சரி, பாரதியார் தேசம் என்ற சிந்தனையைப் பொறுத்தவரையில் தமிழ்த்தேசமும் வேண்டும் பாரததேசமும் வேண்டுமென்கிறார். பாரதிதாசன் இந்த விசயத்தில் பாரதியை ஏற்கவில்லை. பாரத தேசத்தையும் தமிழ்த் தேசத்தையும் எதிரும் புதிருமாகக் கொண்ட சிந்தனையைத் தனது கவிதை வாழ்வின் அடிப்படையாய் வைத்தார்.

இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் 1908 வாக்கிலேயே மிகப்பெரிய தியாகம் செய்து ஆங்கிலேயர்களின் பொருளாதாரத்தில் கைவைக்கவேண்டுமென்று கப்பல் ஓட்டிய தமிழர் ஒருவர் வாழ்ந்தார். அவர் வாழ்நாளின் இறுதியில் பிறர் தரும் பணத்தில் வாழ்வை நடத்தியவர். அதற்காக வெட்கப்பட்டவர். காங்கிரஸ் இயக்கம் சரியான பாதையில் போகவில்லை என்பதால் அதிலிருந்த கொஞ்ச காலம் ஒதுங்கியும் இருந்தவர். ராசகோபாலாச்சாரி போல நேரு போல நூற்றுக்கணக்கான சுதந்திர போராட்டக்காரர்கள் போல சுதந்திரத்தால் ஒரு காசு லாபமும் பர்க்காதவர் வ.உ.சி.

இந்த மனிதரிடம் தமிழர்கள் எப்போதும் மறக்கமுடியாத சில அம்சங்கள் உள்ளன. பாரதியாரிடமும், வ.ரா., ராசகோபாலாச்சாரி என்றெல்லாம் 20-ஆம் நூற்றாண்டில் மத்திய காலம் வரை வாழ்ந்த செயலாக்கமும் சிந்தனைச் சிறப்பும் கொண்டவர்களில் தனித்தன்மை கொண்டவர் இவர். இருபதாம் நூற்றாண்டின் பெரிய தமிழ் ஆளுமைகள் என்று ஒரு பெயர்ப் பட்டியல் தயாரித்தால் கண்டிப்பாக விடுபடாமல் சேர்க்கப்பட வேண்டிய பெயராய் வ.உ.சி. எனக்குத் தெரிகிறார். ஏனென்றால், சிவஞான போதத்திற்கும் திருக்குறளுக்கும் தொல்காப்பியத்திற்கும் என்று தமிழின் மூன்று பரிமாணங்களைத் தொடர்பு கொண்ட இம்மனிதரின் மூளையும் உடலும் நான்கு ஆண்டுகள் சிறைவாசம் பூண்கிறது. அதுபோல் தொழிலாளர் போராட்டத்திலும் தலைமை தாங்குகிறது. தத்துவம், தொல்காப்பியம், பண்டையத் தமிழ் இலக்கியம், தற்காலப் பழங்கவிதை இலக்கியம், சுதந்திரப்போர், தொழிலாளர் போராட்டம் இவை ஒன்றோடொன்று தொடர்புடையவைகள் அல்ல. ஒவ்வொன்றும் வேறுவேறு திறமைகள். இவைகள் அத்தனையும் பெற்றிருந்த வ.உ.சி. அவர்கள் ஓர் அபூர்வமான மனிதர்.

வ.உ.சி.யின் தேசக்கற்பனை வேறுபட்டது. அதனைப் பார்க்கும் முன்பு வ.உ.சி. மறைந்த ஆண்டு நமக்கு முக்கியமாகிறது. ப.ஜீவானந்தம் கூற்றுப்படி வ.உ.சி. 1936ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் நாள் மரணமடைந்தார்.

இங்குத்தான் முக்கியமான ஓர் உண்மை நம் கவனத்தில் படவேண்டும். 1937-இல் அதாவது ஓர் ஆண்டுக்குப் பிறகு பெரியார் மிகத் தெளிவாகத் தமிழ்த்தேசம் வேறு என்று கூறியுள்ளார். வ.உ.சி. போன்றோருக்கு ஏன் தமிழ்த்தேசம் வேறு என்ற சிந்தனை அன்று உதிக்கவில்லை? இதுதான் நாம் கேட்க வேண்டிய கேள்வி. யார் சொல்வது சரியானது என்பதல்ல என் அக்கறை. எப்படிச் சிந்தனைகள் தோன்றுகின்றன? தமிழ்மண் எத்தகைய சிந்தனையாளர்களைப் பிறப்பிக்கிறது? பெரியார் கடவுள் நம்பிக்கையற்றவர். ஆனால் வ.உ.சி. கடவுள் நம்பிக்கையில் தனக்கான ஒரு பாணியைக் கடைபிடித்தவர். நெல்லையைச் சார்ந்த பெ.திவான் என்ற வரலாற்றாசிரியர் வெளியிட்ட ஒரு சிறுநூல் வ.உ.சி.யின் 1927ஆம் ஆண்டு சொற்பொழிவாகும். மிக முக்கியமானது. அந்தச் சொற்பொழிவை

“எல்லாம் வல்ல இறைவனும் எனக்குத் துணைபுரியும்படியாக யான் வணங்கி பிரார்த்திக்கிறேன்” என்றே முடிக்கிறார். வ.உ.சி. மொத்தத்தில் தமிழகத்தில் இருபதாம் நூற்றாண்டில் பெரிய புயலாய் வீசிய நாத்திகச் சிந்தனையை ஏற்கவில்லை.

இதுபோல் இன்னும் இரண்டு அனைத்திந்திய சிந்தனையாளர்கள் இவருடன் ஒப்பிடக் கூடியவகையில் இருபதாம் நூற்றாண்டில்  வாழ்ந்தனர். ஒருவர் திரு.வி.க. இன்னொருவர் ம.பொ.சிவஞானம்.

முதலில் திரு.வி.க.வின் அனைத்திந்திய கற்பனை பற்றிப் பார்ப்போம். திரு.வி.க.தான் ‘தேசபக்தன்’ என்ற பத்திரிகையை நடத்தும்போது ஒரு கருத்தாக்கத்தை நீருற்றி வளர்த்துகிறார். அச்சொல் தேசபக்தி. இந்தச் சொற்சேர்க்கையின் அகராதிப் பொருள்களான ‘நாடு’ என்பதும் ‘தெய்வநம்பிக்கை’ என்பதும் இங்குப் பொருத்தப்படுகின்றன. தேசபக்தி என்பது பற்றி விரிவாக திரு.வி.க. விளக்கங்கள் எழுதியுள்ளார். “சுய ஆட்சி பெற வேண்டும் என்று கூறிக்கொண்டே காங்கிரஸ்  மகாசபை வேலை செய்து தருகிறது; அரசியல் உணர்ச்சியை வளர்த்து வருகிறது. அதற்குத் துணையாகத் தேசபக்தியை வளர்க்க மற்றும் ஒரு  சங்கம் தேவை. அச்சங்கம் பொதுமக்களுக்குப் பெரிதும் பயன்படுவதாயிருத்தல் வேண்டும். நம் முன்னோர் ஈசுர பக்தியை வளர்க்க எவ்வெவ் முறைகளைக் கொண்டனரோ அவ்வம் முறைகளைத் தேசபக்தியை வளர்க்க நாமும் கொள்ளல் வேண்டும்…. மேல்நாட்டு நூலாராய்ச்சியில் தோன்றும் அரசியல் ஞானம் நம்நாட்டு மக்களுக்கு முதிர்ந்த தேசபக்தியை உண்டாக்காது” என்கிறார் திரு.வி.க. பின்பு தன் பத்திரிகையான ‘தேச பக்தனில்’ ஒரு தேசபக்த சமாஜம் உருவாக வேண்டும் என்று எழுதி ஓர் அமைப்பை உருவாக்குகிறார். அந்தச் சமாஜத்தின் இயல்பு ஆலயங்களிலும் திருவிழாக்களிலும்  தேசப்பக்திப் பிரச்சாரம் செய்வது.  அதுபோல் பாரததேவி ஆலயம், தேசபக்தர் கோயில் முதலியவற்றால் தேசபக்தி வளர்ப்பது திரு.வி.க.வின் நோக்கம். இந்த நிகழ்ச்சிகளில் பாரததேவியை நினைத்து பஜனைபாடி “என்னருமை நாடே உன்னிலை இவ்வாறாகி விட்டதா” என்று உள்ளம் கசிந்துருக வேண்டும் என்று வேண்டுகோள் விடுகிறார் திரு.வி.க. தேசபக்த சமாஜத்தின் தொண்டர்கள் இப்படிக் கசிந்துருகிக் கொண்டிருக்க வேண்டுமென்பது முன்னாள் வெஸ்லி  கல்லூரித் தமிழ்ப்பேராசிரியரின் கருத்து. அந்த அளவு போகிறார். அதுமட்டுமல்ல “தேசபக்தி முறுகி எழுமாயின் பலர் தியாகத்துக்கு முற்படுவர்” என்கிறார். தேசபக்தி என்பது சுயசித்திரவதை (Self Torture) என்கிற மாதிரி விளக்கம் வரும்படி திரு.வி.க. எழுதுகிறார்.

“முன்னை நாளில் கடவுளிடத்துக் கொண்ட அன்பு மேலீட்டால் நம் முன்னோர் தமது கண்ணைப் பிடுங்கியும் கழுத்தை அறுத்தும் வயிற்றைக் கீறியும் இன்பமடைந்த கதைகள் உங்கட்குத் தெரியும்” என எழுதுகிறார். பாரததேவியின் வெறிபிடித்தாட்டுகிறது திரு.வி.க.வை.  இதற்கு வேப்பிலை அடித்து இறக்குவதற்கு தமிழகத்தில் பெரியார் பிறந்திருந்தார்.

ம.பொ.சி. அவர்களிடமும் தமிழ்த்தேசச் சிந்தனை இருந்தாலும் பாரததேவி வழிபாடும் இருக்கிறது. “எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே” என்ற வரியை மேற்கோள்காட்டும் ம.பொ.சி., இந்தப் பாடலைப் பற்றி எழுதும் விளக்கம் ஓர் உள் முரணை மறைக்கிறது. இந்தப் பாடலில் “எவ்வளவு தேசபக்தி! எத்தகைய தமிழ்ச்சுவை! எப்படிப்பட்ட பழம்பெருமை! தேசபக்தி வேறு; தமிழ்ப்பக்தி வேறு;  தெய்வ பக்தி வேறு என்று வேறுபடுத்திப் பார்க்காதவன் பாரதி. அவன் தேசபக்தியைப் பாடும்போதும் தெய்வ பக்தியைக் கலந்துவிடுவான், தன்னை அறியாமலே. தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை என்ற தேசபக்தி பாடலிலே தெய்வ பக்தியும் மணக்கின்றதல்லவா? தெய்வ பக்தியோடு அவன் பராசக்தியைப் பாடியுள்ள பாடல்களிலே தேசபக்தியும் மணப்பதைப் பார்க்கிறோம் என்கிறார் ம.பொ.சி.

இங்குச் சில விசயங்களை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். திரு.வி.க. ஒரு அசல் சிந்தனையாளர்.அசல் சிந்தனையாளரென்றால் சொந்த சிந்தனை இருக்கவேண்டும். அப்படி இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் இருந்த முக்கியமான சிந்தனையாளர். தமிழ் மண்ணிலிருந்து முளைத்த வித்து. முஸ்லிம்களையும் கிறிஸ்துவர்களையும் தன் சிந்தனைச் சட்டகத்தால் அரவணைத்தவர். காந்தியையும் மார்க்ஸையும் இணைத்தவர். அதாவது உலகின் இரண்டு பிளவுகள் என்று மொத்த உலகமும் கருதிய வன்முறையையும் ஒரு வழிமுறையாக ஏற்றுக்கொண்ட மார்க்ஸையும் சாத்வீகத்தையும் தவிர வேறுவழியில்லை என்ற காந்தியையும் தன் சிந்தனை பலத்தால் இணைத்த தமிழ் மரபின் வளம் திரு.வி.க.விடமிருந்தது. எனினும் தமிழ்த்தேசம் என்ற தனிநாட்டை, பெரியார் போல் ஏற்க இவரால் முடியவில்லை. இன்றைய இந்து அரசியலில் சித்தாந்தத்தை முன்வைக்கும் கட்சிகள், அமைப்புகள்போல் தான் கொண்டிருந்த மத உணர்வு திரு.வி.க.வைப் பெரியாரிலிருந்து வேறுபடுத்துகிறது. பெரியார் இத்தகைய உள்ளமைவு பெற்ற எந்தத் தெய்வீகச் சிந்தனையையும் ஏற்கவில்லை. புற செயல்பாட்டு எதார்த்தங்களால் உருவான சிந்தனையாளர் அவர். திரு.வி.க.மாறாக, அகச் செயல்பாடுச் சிந்தனையாளர்.

ம.பொ.சி. புதிதாகத் தமிழ்ப் பக்தியைத் தேசபக்தியின் ஒரு பாகமாக்கினார். இது காலத்தின் தேவை. தனித்தமிழ்நாடு என்ற முழக்கம் தோன்றியபோது ம.பொ.சி. தன் சிந்தனையிலிருக்கும் முரண்பாடு பற்றிக்கூட கவலைப்படாமல் எந்தையும் தாயும் என்று தமிழகத்துக்கு வெளியில் வாழ்ந்த தமிழர்களின் முன்னோரைத் தமிழோடு அடையாளங் காண்கிறார். பாரதியிடமும் இந்தப் பார்வைதான் இருந்தது என்கிறார் ம.பொ.சி. “தேசபக்தி (பாரத) வேறு; தமிழ்ப் பக்தி வேறு; தெய்வப்பக்தி வேறு என்று வேறுபடுத்திப் பார்க்காதவன் பாரதி” என்பது ம.பொ.சி. எழுதும் வாக்கியம் (பார்க்க: “தொல்காப்பியரிலிருந்து பாரதி வரை”).  அதாவது பெரியார்  போன்றோர் ஜின்னா தனிநாடு கேட்கும் முன்பே, இந்தியாவை எப்படிக் கட்டமைப்பது (Contructing India) என்று கருத்துகளை முன்வைத்தபோது “தனித்தமிழ்நாடு” என்ற தம் கருத்தை முன்வைத்தனர். ம.பொ.சி. போன்றோர் தமிழரசு என்றொரு கருத்தாக்கத்தையும் இன்னும் சிலர் “தக்சஷண்” (தென்னாடு) என்ற கருத்தாக்கத்தையும் முன்வைத்தனர். அதாவது இன்றுள்ள இந்தியா தொடர்ந்து  உருவாகக்கூடிய ஒரு தேசமாகும். காங்கிரஸ், பி.ஜே.பி. போன்ற சிந்தனை வறட்சிமிக்க கட்சிகள் போலன்றி பிராந்திய கட்சிகள் இன்று பல்கிப் பெருகியிருப்பது தொடர்ந்து கற்பனை செய்யப்படும் ஒரு இந்தியாவைக் காட்டுகிறது.  ம.பொ.சி., பாரதி பாடலான “எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய நாடு” என்ற வரிக்கு பாரத நாடு என்று பொருள் தராமல் தமிழ்நாடு என்று பொருள் தந்திருந்தால் அது அவர் நம்பிய தொல்காப்பியலிருந்து பாரதி வரை வரும் மரபாகும்.  பாரதநாடு என்ற பொருள் காலனியப பொருளாகும் (Colonial meaning). வட்டார கலாச்சாரங்களால், மொழிகளால், சமயங்களால், பழக்கவழக்கங்களால் உருவான செயற்கையான அமைப்புதான் இந்தியா என்பதை ஒத்துக்கொள்வதே இன்றைக்கு சிங்கள கொலைகாரர்களை இந்தியப் பாராளுமன்றம் வரவேற்பதில் உள்ள பெரும்பிழையைப் புரிந்துக்கொள்ள வழிவைக்கும்.

இந்தப் பிரச்னையை எல்லாம் சரியாகப் புரிந்துகொண்ட பெரியார் கேட்கம் கேள்விகளைப் பாருங்கள்.

“இந்தியா ஒரு நேஷனா? அதற்கு மொழி எது? மதம் எது? இந்தியாவில் எத்தனை மதம்? எத்தனை ஆசார அனுஷ்டானம்?  முதலாவது இந்து மதம் என்பதைத் தமிழர்கள் ஒப்புக்கொள்கிறார்களா? தோழர் கே.பி.பிள்ளை தன்னை இந்து என்று சொல்வாரானால் இந்து மத ஆதாரமாகிய வேதத்தையும் மனுதர்ம சாஸ்திரத்தையும் கீதையையும் ஒப்புக் கொள்கிறாரா? அதன் படி நடக்க இன்று சம்மதிக்கிறாரா? மற்றவன் நடக்காவாவது இவர் அனுமதிக்கிறாரா? இந்து மதத்தால் இந்தியா நேஷனாயிற்று என்றால், அதாவது நேஷனுக்கு மதமே பிரதானம் என்றால் இஸ்லாமியருக்கும் கிறிஸ்தவர்க்கும் பௌத்தர்க்கும் பார்சிக்களுக்கும் இந்தியா நேஷனாகுமா?  எதைக்கொண்டு அவர்கள் இந்தியாவை நேஷன் என்பது? ” இந்தக் கேள்விதான் அன்று பெரியார் கேட்டது.

அதாவது இந்தியா தமிழர்களுக்கான இந்தியாவாக இருக்கவில்லை என்பதால்தான் ஐ.நா.சபையால் கொலைப்பாதகர்கள் என்று கூறப்பட்ட ராஜபட்சவை வடநாட்டார் காமன்வெல்த் விளையாட்டுக்கு அழைக்கிறார்கள். ராஜபட்சவின் சகோதரனை இந்தியப் பாராளுமன்றத்தில் வரவேற்கும்போது உலகின் ஏழுகோடி தமிழர்களும் வாயடைத்துப் போய் நிற்கின்றனர். அதாவது இந்தியா இன்னும் தமிழர்களான அதன் உறுப்பினர்களின் ஆசையை, அபிலாசைகளைப் பிரதிநிதித்துவம் செய்யும்விதமாக தன்னை வளர்த்துக்கொள்ளவில்லை. இந்தியாவின் வெளியுறவு விதிகள் தமிழிந்தியாவின்(தமிழர்களைக் கொண்டிருக்கிற இந்தியா அல்ல) வெளியுறுவு விதிகளாய் வளர்த்துக்கொள்ளத் தெரியவில்லை.இதை வலியுறுத்த தமிழகத்தில் போதிய தலைவர்கள் இல்லை. சிந்தனையாளர்கள் இல்லை. மீண்டும் மீண்டும் ஓரிரு வாதங்களையே முன்வைத்து மட்டும் பேசத் தெரிந்த இரண்டாம்தர கற்றுச் சொல்லிகளே சிந்தனையாளர்கள். அண்ணா போல் ஒரு வரலாற்று ஆசையை அரசியல் அமைப்பாக ஆக்கத் தெரிந்தவர்களோ பெரியார் போன்ற பயமற்ற சிந்தனையாளர்களோ இன்று இல்லை. எனினும் அண்ணா ஆட்சிக்கு வந்த போதே தமிழடையாள இந்தியாவைப் பற்றிய கருத்தைப் பற்றி ஆய்வு செய்ய ஒரு கமிசனை(Commision) உருவாக்கியிருக்கவேண்டும்.ஒரு சமுதாயம் பெரும்சிக்கலில் மாட்டிக்கொள்ளும்போது அதன் புதல்வர்கள் தலைவர்களாய் பேரெழுச்சிக் கொள்வார்கள். ஆனால், சங்க இலக்கியத்திலிருந்து தொடர்ச்சியறா சிந்தனைப் பாரம்பரியம் கொண்ட தமிழ்ச்சமுதாயம் இன்று தன் புதல்வர்களைக் கொலைபாதகர்களிடம் காவுகொடுத்துவிட்டு என்ன செய்வது என்று கை பிசைந்த படி நிற்கிறது.

இத்தகைய சிந்தனைகளின் பின்னணியில் வ.உ.சி. தேசம் பற்றிச் சிந்தித்துள்ளாரா என்று பார்க்க வேண்டும். வ.உ.சி. இன்றைக்கு காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்களைப் போன்றே மனநிலை கொண்டிருக்கவில்லை. எப்படித் தலைவர் ஆகலாம். அல்லது மத்திய அமைச்சர் ஆக வழியுண்டா,  அதற்குத் தமிழக மக்களை ஏமாற்றித் தன்னை வளர்த்துக் கொள்ள என்ன வழி என்று யோசிக்கவில்லை. வ.உ.சி.யின் சுயசரிதையைப் படிப்பவர்கள் வெள்ளைக்காரன் சிறையில் கொடுக்கும் சலுகைகளைக் கூட ஏற்றுக் கொள்ளாத நிரந்தர புரட்சிக்காரராய் அவர் தென்படுகிறார். இன்றைக்கு சேகுவேரா பற்றிக் கேட்பது போல் இருக்கிறது. வ.உ.சி.யின் வாழ்க்கையை அவரது சுயசரிதையைப் படிப்பது. கவிதையில் அந்தச் சுயசரிதையை எழுதினாலும் அதே காலகட்டத்தில் வாழ்ந்து உலகப் புகழ்பெற்ற பாரதியாரின் கவிதைபோல் அதில் கருத்து விழிப்பும் மொழி நெகிழ்வும் உள்ளது. புரட்சிப்பிழம்பாய் சிறையில் வாழ்ந்து வெளியே வந்த மனிதர் சிவஞானப்போதமும் தொல்காப்பியமும் திருக்குறளும்  தொழிலாளர் போராட்டமும்  என்று வேறுவேறு பரிமாணங்களை அடைகிறார். 1872-இல் பிறந்த மனிதன் ஒட்டப்பிடாரம் என்ற சாதாரணமான ஊரில் வளர்ந்து தனது 33ஆம் வயதில் பிரிட்டிஷாரின் இதயம் செயல்படும் கப்பல் தொழிலைக் கைப்பற்ற விரும்புகிறார். பல தடவைக் காந்தியைச் சந்தித்த வ.உ.சி. காந்தியால் ஈர்க்கப்படவில்லை. ராசகோபாலாச்சாரி மற்றும் பலரைப் போலன்றி இவர் திலகரால் ஈர்க்கப்பட்டனர். 1908-இல் அதாவது தனது 36-ஆம் வயதில் தூத்துக்குடி கோரல் ஆலைத் தொழிலாளர் போராட்டத்திற்குத் தலைமை தாங்கி இந்தியாவின் முதல் தொழிலாளர் போரட்டத்தை நடத்துகிறார்.இந்தப் போராட்டம் பற்றிப் பிற்காலத்தில் மாற்று ஆன்மிகம் ஒன்றைப் பாண்டிச்சேரியை தலைமையிடமாக வைத்து நடத்திய அரவிந்தர் கேள்விப்பட்டுப் பாராட்டுகிறார். இன்று தமிழ் மக்களைக் கொன்று குவித்த படுபாவிகளை வரவேற்று போர்க்குற்றவாளி என்று உலகம் தண்டிக்காதபடி பாதுகாக்கும் காங்கிரஸ் நிறுவனம், வ.உ.சி. தமிழ்மண்ணின் அசல் பயிர் என்று அறியுமா? தமிழ்மண்ணின் – சிவஞானபோதத்தையும் தொல்காப்பியத்தையும் திருக்குறளையும் தோற்றுவித்த மண்ணின்- பண்பைத் தன் கருவறை வாசனையாய் பெற்ற வ.உ.சி. அவர்கள் 1908இல் கைது செய்யப்பட்டு  20 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பாகிறது. மேற்கத்திய நாகரிகம் – இன்று ராசபட்ச ஒரு போர்க்குற்றவாளி என்று கூறுகிற நாகரிகம் – சானல் 4 – மூலமாக உலகத்துக்கு ஈழமக்களை இரத்தவெள்ளத்தில் கொன்றுகுவித்த கொடுமையைக் கொண்டு செல்லும் மனிதாபிமான நாகரிகம் – ஆம் அதுதான் வ.உ.சி.யை மன்னித்து நான்காண்டு தண்டனையாய் குறைக்கிறது. அந்த மனிதனை “செக்கிழுத்தச் செம்மல்” என்று தன் வழக்கப்படி பட்டம் சூட்டி மகிழ்கிறது இன்று அவரது தமிழ் மக்கள் கூட்டம். இந்த மனிதனின் இரத்த உறவுகள்தான் காங்கிரஸ் கட்சியால் ஆளப்படும் இந்தியாவின் துணையுடன் 2009 – மே மாதம் பக்கத்து தீவில் சாட்சிகள் இல்லாமல் கொன்றுகுவிக்கப்பட்டார்கள்.

இந்த இந்தியா இன்று கொண்டிருக்கிற மனசாட்சியற்ற தன்மை எங்கிருந்து வந்தது? அதன் அமைப்பிலிருந்தே வருகிறது. இதனை அண்ணா, பெரியார், ம.பொ.சி., வ.உ.சி.  போன்ற எல்லோரும் யோசித்து இருப்பதாகவே தெரிகிறது. ஜின்னா தனிநாடு கேட்பதற்கு முன்பே பெரியார் தனிநாடு பற்றி யோசித்தது இதனால்தான்.  இந்திய அமைப்பு (இதில் பூமி பரப்பு, மொழிகள், சட்டத்திட்டங்கள் அமையும்) அதன் எல்லா உறுப்பினர்களுக்கும் நியாயம் செய்ய முடியாது. அதன் ஒரு பகுதி என்று அரசியல் சாசனம் கூறும் தமிழ்மக்களுக்கு நியாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும் என்று பெரியார் புரிந்திருந்தார். அதனால்தான் அண்ணா தமிழரசியலை உருவாக்கினார். அண்ணா மாநில சுய ஆட்சி என்று கொண்டு வந்த சிந்தனைமுறை ஒரு குறிப்பிட்ட இடத்தில் தேங்கிவிட்டது. இதற்காக உருவாக்கப் பட்ட கமிசன்கள் வெறும் நிர்வாக மாநில சுயாட்சி என்று அண்ணாவின் தமிழரசியல் தத்துவத்தின் எதிர்காலவிரிவை அறியாமல்  குறுக்கிவிட்டன.உலக அரசியல் அறிவற்ற நீதிபதிகளிடம்  அந்த மாநில சுயாட்சி பற்றிய கமிஷன்களை கொடுத்தபோதே அண்ணாவின் மாநில சுயாட்சி பற்றிய கற்பனைச் சிதைந்துவிட்டது என்று அர்த்தம். திராவிட நாடு பிரிவினையைக் கைவிட்டபோதே இன்னொரு இந்தியாவை அண்ணா கற்பனை செய்தார். அன்றைய திராவிடக் கட்சிக் கட்சியல்ல இன்றிருப்பது.இது அதன்   எலும்புக் கூடு.

அண்ணா மட்டுமல்ல நேருவும் மற்றவர்களும் கூட இந்திய அமைப்புப் பற்றி உறுதியான கருத்துக் கொண்டிருக்கவில்லை. சுயராஜ்ஜியம் பற்றிய சர்ச்சைகள் காங்கிரஸ் இயக்கத்தில் பல மட்டங்களில் நடந்தன. அப்போது வ.உ.சி. எழுதியதைப் பாருங்கள்.  செ.திவான் அவர்கள் மூலம் வெளிப்பட்ட வ.உ.சி.யால் 1927-இல் சேலத்தில் கொடுக்கப்பட்ட சொற்பொழிவில் பிரிட்டிஷாரிடமிருந்து பெறும் சுய அரசாட்சி எப்படி இருக்கவேண்டும் என்று சொல்கிறார். நான்குவிதமான சுய அரசாட்சிகள் பற்றி விளக்குகிறார்.  இது இன்று பிரான்ஸ் தேசத்திலும், அமெரிக்காவிலும் உள்ளதுபோன்ற “குடியாட்சி” (Republic) ஆகலாம். அல்லது இங்கிலாந்து அல்லது ஜப்பான் ‘கோனாட்சி’ ஆகலாம். அல்லது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சார்ந்த குடியாட்சி (Dependent Republic) ஆகலாம். அல்லது அன்று ஆஸ்திரேலியா, கனடாவில் இருந்ததுபோன்ற “சார்ந்த கோனாட்சி” (Dependent Monarch) ஆகலாம். இந்த நான்கு வகை சுய அரசாட்சி பற்றி யோசித்த வ.உ.சி. அன்றே பிரிட்டிஷாரிடமிருந்து பெறும் இந்தியா பற்றிய சர்ச்சையில் ஈடுபட்டார் என்பதுதான் முக்கியம்; பெரியார் இன்னொரு வித சர்ச்சையில் ஈடுபட்டார். அண்ணா தமிழ் அரசியல் மூலம் இன்னொரு சர்ச்சையில் ஈடுபட்டார். அண்ணாவின் காலத்திற்குப் பிறகு தமிழகம் இந்திய அமைப்பில் எத்தகைய உறவில் அமையவேண்டும் என்ற சர்ச்சை திசைதிரும்பியது. இந்த சர்ச்சை தொடர்ந்திருந்தால் பலவேறு காரியங்கள் நடந்திருக்கும். தமிழ்ச் செம்மொழி உரிமை கேட்டவுடன் கர்நாடகாவும் ஆந்திராவும் கேட்டன. தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கியவுடன் கன்னட, தெலுங்கு பல்கலைக்கழகங்கள் உருவாகின. தமிழர்களைப் பார்த்துக் காப்பியடிக்கவும் அவர்களோடு போட்டியிடவும் இந்தியாவில் பல மாநிலங்கள் தயாராக உள்ளன. அதாவது தி.மு.க.ஆட்சிக்கு வந்தவுடன் ஆட்சியால் வரக்கூடிய லாபநோக்குக் கட்சிக்காரர்களிடம் உருவாகித் தமிழகத்தைச் சுருக்கிப் பல மாநிலங்களைப்போல் ஓர் மாநிலம் ஆக்கியதே ஒழிய அண்ணா கண்ட கனவான தனிச் சிறப்பான-குறைந்தது ஜம்மு-காசுமீர் போல்-ஒரு தமிழ் இந்தியாவுக்கு அட்டித்தளமிடப்படவில்லை.அதுபோல இந்தியாவின் மாநிலங்கள் சுயாட்சி உரிமையுடன் உண்மையான சுதந்திரப் பிரதேசங்களாக உருவாக அனைத்துலக சட்டத்தில் வழியுண்டு. அதாவது ஐ.நா.சபையில் இந்தியாவின் மாநிலங்கள் சுதந்திரமாக தத்தம் பிரத்தியேகக் கொடியுடன் இருக்கலாம் என்கிறார்கள் அனைத்துலக சட்டம் தெரிந்தவர்கள். அதாவது இந்தியா தேங்கிப் போகாமல் வளரும்போது அதன் அமைப்புப் பற்றிய சுதந்திரமான சர்ச்சைகள் தோன்றும். அப்படியான அறிவுச் சுதந்திரம் இன்றைய இந்தியாவின் சட்டத்திட்டங்களிலும் ஆட்சியிலும் உள்ளது.  இல்லையென்று கூறுவதற்கு இயலாது. தொடர்ந்து இந்தியாவின் அரசியல் சட்டம் மாற்றப்பட்டுக் கொண்டிருப்பது சுதந்திரத்திற்கான நல்ல அறிகுறி.  வ.உ.சி. அவர்களின் உள் இயக்கம் தமிழ் நூல்களால் கட்டுப்பட்டு ஆளப்படுகிற தமிழ்மனங்களை ஈர்க்கவும் தொடர்ந்து படைப்புச் சிந்தனையை மேற்கொள்ளவும் தூண்டும். ராசகோபாலாச்சாரி கூட “தக்சஷன்” என்ற தென்னாட்டுக்கு ஒரு மைய அரசை உருவாக்கும் நேரு அவர்களின் ஆலோசனையை ஏற்றார் என்பது வரலாறு.  இந்திய அமைப்பைப் புதிதாக்குவதில்தான் புரட்சிக்கர சிந்தனையாளரான பெரியார் மிக முக்கியமான தலைவராக விளங்கினார். ஏன் அவர் பெயர் மறையவில்லை என்றால் அவர் கருத்துக்கள் இன்றும் புதிய சர்ச்சைகளை  உருவாக்கும் வலிமைப்பெற்றவை.

அனைத்துலக சட்டத்தில்  பலமுறைகள் உள்ளன. எதிர்காலத்தில் இந்தியாவின் தமிழர்கள் தங்களின் இனம், உலகின் எந்தப் பகுதியில் பிரச்னைக்குள்ளானாலும் அப்பிரச்னையை நேரிடையாக ஐ.நா. சபையில் தெரிவிக்கும் உரிமையைப் பெறும் வாய்ப்பு ஏற்படலாம். அதுபோல் தமிழர்களின் இந்தியா என்று ஒன்று உருவாகும்போது ஈழப்போரில் நேரடியாக இந்தியா யாரை ஆதரிக்க வேண்டும் என்று இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் தமிழகம் இருக்கலாம். அதுபோல் குஜராத்திகள், கன்னடர்கள், அசாமிகளும் செய்யமுடியும். இது இந்தியா வளர முடியும் என்ற கோணத்தில் ஏற்படும் சாத்தியங்கள்.

மொத்தத்தில் தமிழ்க்கலாச்சாரத் தலைவர்களும் தமிழ் அரசியல் தலைவர்களும் இன்றைக்கு எழுந்துள்ள அகில உலகத் தமிழ்ப்பிரச்சனைக்கு ஏதோ ஒருவகையில் முகம்காட்டியுள்ளனர்.  தமிழர்கள் ஓர் இனமாய் எதிர்கொள்ளும் பிரச்னைக்கு அவர்களின் கலாச்சாரத் தலைவர்களின் வழியே அவர்களின் சிந்தனைப் போக்கின், நூல்களின் வழியே தீர்வையும் காணமுடியும். இது இருபதாம் நூற்றாண்டின் நூல்களை வாசித்தலின் இன்னொரு பரிமாணம். .

 

தமிழவனின் ‘திராவிடம், தமிழ்த்தேசம், கதையாடல்’ என்ற நூலில் இருபத்தைந்து கட்டுரைகள் உள்ளன. அடையாளம் வெளியீடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>