தமிழவனின் இரு புனைவுகள் பற்றி மிகாத் விமரிசனம்.

தமிழவனின் ” ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் ” மற்றும் ” ஜீ.கே எழுதிய மர்ம நாவல் ” ஆகிய புனைவுகள் குறித்து மிஹாத் முன்வைத்த கருத்துகள்.
________________________________________

தமிழவன் தற்போதைய தமிழ் எழுத்துச் செயல்பாடுகளின் முக்கியமான ஆளுமைதான். தமிழின் அண்மைக்கால மரபார்ந்த அணுகுமுறைகளைத் தகர்த்தெறிந்து அங்கு புதுவிதமான எழுத்து முறைமைகளை அறிமுகம் செய்தவர்களில் முதன்மையானவர். எண்பதுகளின் ஆரம்பத்தில் இலக்கியப் புனிதப் பிரதியாக தன்னை நிலை நிறுத்தும் தோரணையில் தமிழின் பிற எழுத்துக்களை மோசமாக எள்ளலாடியபடி வெளிவந்த “ஜே ஜே : சில குறிப்புகள் ” வாசகர்கள் மத்தியில் ஒரு காய்ச்சலை ஏற்படுத்தியது. அதுவரையிலான புனைவுகளை விட அது எடுத்துரைப்பிலும் வடிவக் குறிப்புகளிலும் சற்று மாறுபட்டிருந்ததை பலரும் வியந்து பார்த்தாலும் அது அக்காலத்தில் தோற்றம் பெற்றிருந்து புதிய இலக்கிய வழிமுறைகளை ஏற்றுக்கொள்ளாமல் ஒருதலைப் பட்சமான எழுத்ததிகாரமொன்றை வலியுறுத்தியது. அதன் புனிதப்படுத்தல் உண்டாக்கிய மூளைச்சலவையில் மயங்கியிருந்தவர்களின் பித்தினை கலைத்து விடும் விதமாக அடுத்த சில வருடங்களில் வெளிவந்த புனைவுதான் தமிழவனின் ” ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் ” என்பதாகும்.

கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் உலக இலக்கியக் களத்திலும் பண்பாட்டின் நடைமுறைகளிலும் தீவிரமாக நிலைகொள்ள முயன்ற புதுவிதக் கோட்பாட்டு மாற்றங்களின் தமிழ் அடையாளமாக தமிழவன் போன்றவர்கள் செயல்பட ஆரம்பித்த நேரமது.

ஏற்கனவே தமிழ் மனதில் பீடித்திருந்த பொதுப்புத்தி சார்பான பார்வைகளை சிதறடிக்கும் எழுத்தாகவே தமிழவனின் ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் எனும் கதையை விபரிக்க வேண்டும்.

மொழியின் மீதான பிந்திய கால புரிதல்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு எழுந்த கதையாக இதனைக் குறிப்பிடலாம். அதேவேளை கடந்த நூற்றாண்டில் பிரபலமடைந்த லத்தீன் அமெரிக்க எழுத்து வடிவ பாதிப்பாகவும் தமிழவனின் கதை அமைந்திருந்தது.

மொழி பற்றிய பிந்திய கால புரிதல் என்பதனை நாம் விளங்கிக் கொள்ளாமல் எழுத்துகளை அணுகுவது குறைபாடு மிக்கது எனக் கருதுகிறேன்.அதுமட்டுமல்லாமல் தமிழவனின் எழுத்துகளைப் புரிந்து கொள்ள அது அவசியமானதும் கூட. அதனால் அவை பற்றிய சிறியதொரு அலசல் அவசியமாகிறது.

மொழியில் அர்த்தம் என்பது நிரந்தரமற்றது.
அது எப்போதும் மாற்றமடையக் கூடியது.

எதார்த்தம் என்பது போலியானது. அதுவும் குறிப்பிட்ட படைப்பொன்றில் தற்செயலாக உருவாகுவது.

புனைவு என்பது பன்மையான சாத்தியங்களை உருவாக்கிக் காண்பிக்கும் செயல்தான் என்பது போன்ற அறிதல்களை முன்கொண்டு செல்லும் பரந்து பட்ட பரிசீலிப்புகளூடான வாசிப்பையும் எழுத்தையும் சகஜமாக அணுகும் ஒரு நிலையிலிருந்தே எனது கருத்துகளைப் பகிர விரும்புகிறேன்.

“ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் ” எனும் புனைவு ஆனது வெளிவந்து முப்பது வருடங்களாகிறது. அதன் கட்டமைப்பு பல்வேறு காரணங்களின் அடிப்படையில் இன்றளவும் ஆச்சரியங்களை நிகழ்த்தும் ஒன்றாகவே இருக்கிறது.

வெகு மக்களின் பொதுவான புரிதல் என்னும் அடிப்படை வழிகளுக்குள் நுழைய முடியாத உருவகங்கள் மற்றும் குறியீடுகள் மூலமாக சராசரியான மதிப்பீடுகளை சீர்குலைத்து விடும் கதைமொழி இந்நாவலின் தனித்துவமாகும்.

இதில் தமிழ் மனதின் நிலவியலும் அதன் பண்பாடுகளுக்குள் ஊறியிருக்கும் அரசியல் தன்மைகளும் ஒரு விதமான hyper events ஆக மாற்றப்படுகின்றன.

இதன் மூலம் ஒரு தளத்தில் அந்நியத்தன்மையாக உணரப்பட்டாலும் வேறு வகைப் பார்வையில் அரசியல் எள்ளலாகவே வடிவமைகிறது.

அத்துடன் காட்டூன் சலனப் படங்களில் மிக நேர்த்தியாகக் கையாளப்படும் அமானுஸ்ய சாகசங்களை எழுத்துகளுக்குள் படிமமாக மாற்றி அதன் மூலம் புதுவகை நகல் உண்மைகளை உண்டாக்கி தமிழ் வாழ்வின் புறக்கணிக்கப்பட்ட பண்பாட்டு அர்த்தங்களாக மீட்டுருவாக்கம் செய்கிறது.

ஒற்றை மத அடையாளமாக இந்தியாவை வடிவமைக்க முயலும் பாசிச சக்திகளுக்கு எதிரான இலக்கிய எடுத்துரைப்பாக மாறுவதற்காக வெவ்வேறு மத அடையாளக் குழுக்களின் வாழ்வியல் நெருக்கடிகளை அதீத தொன்மங்களின் வாயிலாக தகர்க்க முனைகிறது. அந்த நாட்டங்களை செறிவுள்ளதாக நிலைநிறுத்துவதற்கு புராணக் கதைகளைக் கூர்மைப்படுத்தி கதைக்குள் உலவும் மாந்தர்களின் எண்ணங்களை நிரப்பி விடுகிறது. பின்னர் பல்வேறு உரையாடல்களிலும் அதனை வெளிப்படுத்தல் என்னும் காரியச் செயலாக புனைவு பெருக்கமடைகிறது.
(பக்கம் 14,15)

இன்னொரு புறம் பல்வேறு அறிவியல் நம்பிக்கைகளையும் புனைவுக்குள் உரையாடும் நிகழ்வாக மாற்றி அதனை பின்னோக்கிய நிகழ்வில் தேயவைத்தல் அல்லது சராசரியான அறிவியல் நம்பிக்கைகளைத் தகர்த்துக் கலைத்துப் போடுவதன் மூலம் புராண வாய் வழிக் கதைகளையும் அறிவியல் சார்ந்த புரிதல்களையும் சமமான பரிசீலிப்புக்குள்ளான அம்சமாக மாற்றுதல் எனும் நிகழ்வை ஏற்படுத்தி ஓர நிலைச் சமுதாயக் குழுக்களின் வாழ்வியலை மேலெழுப்பி விருத்தியடைந்த சமுதாயத்திற்கு இணையானதாக சம தளத்தில் நிறுத்த முனைகிறது.
(14,15)

கவிதையின் கூறுகளை உடைய படிம முறைச் சொல்லாடல்களை சம்பவ விபரிப்பாக்குவதன் ஊடாகவும் அந்த எடுத்துரைப்புகளை வழமையான மனப்பதிவுகளுக்கு மாற்றான பாசாங்குகளாக கையாளவும் கதைத் திட்டம் பயன்படுத்தப் படுகிறது.
(33, 34 அந்த நாளிலிருந்து, ஒரு மலர் மாலை)

கதை சொல்லி புனைவின் சில சம்பவங்களின் எதிரே தோன்றி வாசகனைக் குறுக்கிடுவதும் நம்புவதற்கான சாத்தியங்களை விளக்குவதும் ஒரு தந்திரோபாயமாக இடம்பெறுகிறது.
(15, 36 )

இந்தக் கதையின் நிலவியலானது நகர வாழ்க்கைக்குத் தூரமான வட்டாரச் சூழலாக கட்டியெழுப்பப் பட்டிருந்தாலும் பொதுவான வாசிப்புக்குச் சௌகரியமான மொழியில் முன்வைக்கப்படுகிறது. ஆனால் பொதுவான வாசிப்பு மனங்களைத் தொடர்ச்சியாகத் தொந்தரவு செய்து வேறொரு வாழ்வியல் வெளியின் கலக வீழ்படிவாக நிறைகிறது.

ஆனால் ” ஜீ.கே. எழுதிய மர்ம நாவல் ” எனும் புனைவுப் பிரதியானது வேறு விதமான அனுபவங்களை பிறப்பிக்கும் சாத்தியங்களை நிரப்பி வைத்திருப்பதாகவே கருதுகிறேன். துப்பறியும் கதை வகையைச் சேர்ந்ததாக இது இருக்கிறது. இரண்டு வகையான கதை சொல்லும் உத்தியை இது கொண்டிருக்கிறது.

ஒரு கதை ஜீ.கே. எழுதிய மர்ம நாவலின் பகுதிகளாகச் செல்கிறது. இன்னொரு கதையானது நாவலின் கதை சொல்லி தருகின்ற குறிப்புகளாக நகர்கிறது. ஜீ.கே.எழுதிய மர்ம நாவலாகத் தொடரும் கதையானது ஒரு பயணத்தில் இணையும் இரண்டு பாத்திரங்களின் பொழுதுகளில் நிகழும் சம்பவங்களாக விரிந்து செல்கிறது. குறிப்புகளானது கதையை எழுதிய ஜீ.கே. சம்பந்தமான தகவல்களின் அடிப்படையில் அவனை அறிந்து கொள்ளும் புலனாய்வாக நகர்கிறது.

கதைக்குள் அரியநாதர் என்னும் விகடமான துப்பறிவாளனும் தேவமித்ரர் என்னும் மர்மங்கள் நிரம்பிய பௌத்த துறவியும் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். இவர்களின் பயணத்தில் இடம்பெறும் பல்வேறு வகையான நிகழ்வுகளை வெவ்வேறு விதமான கருத்தியல் விபரணைகளாக்குகிறது கதை. கொலையாளியும் துப்பறிவாளனும் அருகருகே இருந்தாலும் கதை உத்தியானது அவர்களை இறுதி வரை தூரமாகவே வைத்திருக்கிறது.

இந்தக் கதை நகர்வின் அத்தியாயங்களுக்கிடையில் வரும் குறிப்புகள் ஜீ.கே. யார் என்பதற்கான பல்வேறு யூகப் பின்னணிகளையும் அதை தெளிவாக அறிந்து கொள்வதற்கான காரண காரியங்களையும் உருவாக்க எத்தனிக்கிறது.

மர்ம நாவலின் கதையானது பரபரப்புகளையும் திடீர் திருப்பங்களையும் கொண்டதாக ஆர்முகலடையும் திசையின் குறுக்கே குறிப்புகள் வழி மறித்து இன்னொரு கதையை முன்வைக்கிறது.

கதைக்குள் உலவும் கொலையாளியைத் துப்பறிவதா? அல்லது கதையை எழுதிய ஜீ.கே வை அறிந்து கொள்வதா என்னும் களேபரத்தினுள் வாசகன் அலைக்கழிக்கப்படும் தருணங்கள் பிரதியை இலக்கியத் தரமுள்ளதாக மாற்றி விடுகிறது.

துப்பறிவாளன் மற்றும் கொலையாளி மற்றும் கதையோடு தொடர்பு படும் ஏனையவர்களுக்குள் நிகழும் உரையாடல்களும் விவாதங்களும் வரலாறு, அரசியல் மற்றும் வாழ்வு என்பவற்றின் மீது மாற்றுத் தர்க்கங்களை உருவாக்குவதோடு பிரத்தியேக அரசியல் விருப்புறுதியின் எதிர் விளைவாகவும் கட்டமைக்கப்படுகிறது.

கதையின் போக்கை வாசிப்பின் நிலையிலிருந்து அணுகும் போது ஒரு தட்டையான புனைவு வரைபாகவே தோன்றினாலும் அதன் உள்ளீடுகளுக்குள் எடுத்தாளப்படும் சம்பவ உத்திகள் அரசியல் பிரக்ஞை மிக்க இனக் குழுமம் ஒன்றின் மூலங்களைக் கண்டடைவதற்கு வேறு வகை வரலாறுகளைச் சிதைக்கும் காரியத்தின் புனைவு நுட்பமாக தீவிரமடைகிறது.

வலுவாக நிலைபெற்றிருக்கும் பண்பாடுகள் கூட சில இடங்களில் முன்னணிப் பாத்திரங்களின் எள்ளலுக்குள் சிதைக்கப்படுவதும் சில மதம் சார்ந்த அடிப்படை நெறிகள் மாற்று விமர்சனத்தினுள் நசுக்கப்படுவதும் நிகழ்கிறது. ஏற்கனவே நடைமுறையிலுள்ள சம்பவங்களை மறுதலிப்பதன் மூலம் சிதைவுறச் செய்து வேறு புதிய அர்த்தங்களை உருவாக்குவதன் மூலம் கதையின் போக்கிற்கு பிரத்தியேகமான அரசியல் விழிப்புணர்வொன்றை பெற்றுக் கொள்ள முனைகிறது.

கதைச் சம்பவங்களுக்குள் அடிக்கடி விறுவிறுப்பான தருணங்களை உருவாக்குவதும் அதன் உச்ச நிகழ்வை ஹாஸ்யமாக்கிக் கடந்து போவதும் இந்தப் புனைவின் கிளசிக் விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டியதாகும்.

வரலாறுகளை மூடி மறைக்கவும் அல்லது திரிபு படுத்தவும் எழுத்து இன்றியமையாததென இந்நாவல் பிரசங்கிக்கிறது.

22 அத்தியாயங்களையும், 11 குறிப்புகளையும் கொண்டிருக்கும் புனைவினுள் தமிழக வரலாறு பற்றிய நினைவில் என்றும் அழியாமல் ஞாபகம் வைத்திருக்க வேண்டிய போலியான சரித்திரமொன்றை புனைவுத் துணையுடன் உருவாக்கிச் செல்லுகையில் வாசகர்களின் கவனத்தை வேறொரு திசையில் இரு வகைத் துப்பறிபவர்களாக்கி அலைய விடுவதே இந்தப் பிரதி தரும் கிளர்ச்சியாகும்.

குறிப்புகளின் வழியாக நகரும் கதையானது ஏராளமான தகவல்களூடாக வாசிப்பை திசை திருப்பி இறுதியில் கதைசொல்லியையும் கொலையாளியையும் நாவலை எழுதிய ஜீ.கே வையும் அடையாளம் காட்டி விடுகிறது.

பதினோராவது குறிப்பில் நாவலை எழுதிய ஜீ.கே.என்பவர் 1983 ஜூலைக் கலவரத்தில் பாதிக்கப்பட்டு லண்டனுக்குப் புலம்பெயர்ந்த தமிழர் என்றும் அவர் தமிழகத்தில் தங்கியிருந்த போது எழுதியதே இந்த நாவல் என்றும் முடித்து வைக்கப்படும் போது இயல்பாகவே ஜீ.கே. மேலே சந்தேகம் எழுந்து விடுகிறது. அதனால் இந்தப் புனைவுக்கு அவசியமாகின்ற பனிரெண்டாவது குறிப்பை நான் எழுத விரும்பினேன். இந்தக் குறிப்புத்தான் இப்புனைவுக்கான இறைய கால முடிவாக இருக்க முடியுமென நம்புகிறேன்.

பனிரெண்டாவது குறிப்பு :

இந்த நாவலை எழுதியுள்ள ஜீ.கே.இலங்கையைச் சேர்ந்தவராக இருக்கவே முடியாது. 1983 ஜூலைக் கலவரத்தில் பாதிக்கப்பட்டு முதலில் தமிழகத்திற்கு இடம்பெயர்ந்த அவர் அங்கு வைத்துத்தான் அதை எழுதினார் என்பதும் தவறான தகவலாகவே இருக்க முடியும்.அத்தோடு தேசமற்ற ஒருவன் வேறொரு நாட்டின் ஆவணக் காப்பகங்களில் தனது மண்ணுக்கான வரலாறுகளைத் தேடியதாக நம்ப வைக்கப்படுவதும் ஏற்றுக் கொள்ளப் பொருத்தமற்றதுதான். அது மட்டுமல்லாமல் தமிழக மண் வாசனை கொண்ட பௌத்த நகல் வரலாற்றை தனது தேச அக்கறைகளை வடிவமைப்பதற்கான சிதைப்பாகவும் செய்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இலங்கை மண்ணில் நிலை கொண்ட பௌத்த வரலாறுகளின் மர்மக் கூறுகளுக்குள்தான் தனது மூதாதையரின் அரசியல் அடையாளத்தை அவன் தேட வேண்டிய அவசியம் இருக்கிறது.

ஜூலைக் கலவரம் இடம்பெறும் வரை இலங்கையில் வாழ்ந்து அச்சூழலில் அவதிப்பட்டு வெளியேறிய சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருத்தனுக்கு சரித்திரத்தின் மூலவேர்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லாது போனாலும் அவன் வாழ்ந்த காலத்தை அண்மித்த வரலாற்றுப் பரிச்சயம் இல்லாமல் ஒரு எழுத்தாளனாக இருக்க வாய்ப்பில்லை.

ஜீ.கே.இலங்கையைச் சேர்ந்தவனாக இருந்திருந்தால் அநகாரிக தர்மபால வழியில் உருவான பௌத்த தேசியவாதத்தையும் அது சுதந்திர இலங்கையின் அரசியலில் ஏற்படுத்திய அதீத தாக்கத்தையும் புனைவுக்குள் கொண்டு வராமல் கடந்து செல்ல வாய்ப்பில்லை.

தர்மபாலவின் சிந்தனைகளை உள்ளீர்த்து தீவிரக் கருத்தை கக்கிய துறவிகளின் முன்னோர்களையும் எல்லாவல மேதானந்த போன்று செயற்கையான பௌத்த ஆதாரங்களின் அடிப்படையில் சிறுபான்மை இருப்பை கேள்விக்குள்ளாக்க நினைத்த துறவிகளையோ அல்லது populist கடும் போக்காளரான கங்கொடவில சோம தேரரையோ அல்லது பௌத்த வன்முறைகளுக்குத் தூபமிடும் ஞானசாரவையோ அடையாள நீக்கம் செய்து தேவமித்திரராக புனைவுக்குள் உலவ விட்டிருப்பதனை மட்டும் ஒரு தடயமாகக் கொண்டு ஜீ.கே.வை இலங்கையர் என அனுமானித்து விட முடியாது.

நீண்ட கால பழியுணர்ச்சி கொண்ட இனத்தைச் சேர்ந்த ஒருவன் தன்னை அடக்கி வைத்திருக்கும் அதிகார இனத்தைச் சேர்ந்த துறவியுடன் பவ்யமாக அனுசரித்துக் கிடப்பதாக புனையும் ஜீ.கே. இலங்கை உணர்வுகளுக்குப் பொருந்தாத எழுத்தாளராக அந்நியப்பட்டுத் தெரிவதனால் அவர் இங்கிருந்தவர் அல்ல என்ற முடிவுக்கு வரலாம்.

மேலும் ஜெய்சங்கர் கால ஜேம்ஸ்பாண்ட் துப்பறியும் படங்களுக்கு இணையான சம்பவக் கோர்வைகளை அறிவார்ந்த வரலாற்று எள்ளலாக்கி புனைவுத் தர்க்கமாக இடம்மாற்றும் சாமர்த்தியம் இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு கைவருமா என்பதும் சந்தேகமே.

இலங்கைச் சிறுபான்மையினரின் அரசியல் நெருக்கடிகளை பொழுதுபோக்கும் காரியமாக எடுத்துக் கொண்டு தமது வசதி கருதி செயல்படும் அரசியல்வாதிகளின் பிழையான பிரசங்கம் போல ஜீ.கே.வை இலங்கையராக அறிவித்து விடுவது கதைசொல்லியின் உள்நோக்கமுடைய மூத்தண்ணன் மனநிலையை பறைசாற்றுவதாகும். அத்துடன் வாசகனுக்கு எதிரேயுள்ள புனைவின் புதிர்ப் பாதைகளை மூடி விடும் செயலுமாகும். அதனால் ஜீ.கே.வைத் தேடும் பணி நின்று விடக் கூடாதென்பதே எனது வாசிப்பின் அவா ஆகும்.
* *
ஏனெனில் இந்தக் குறிப்பு நாவலின் அர்த்தங்களை மேலும் பெருக்கிடும் என இப்போதைக்கு நம்பலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>