உலகத்தரத்தில் லதாவின் கதை த்தொகுப்பு

உலகத் தமிழ் இலக்கியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிங்கப்பூர் எழுத்தாளர் லதாவின் கதைகள்

தமிழவன்(சிற்றேடு இதழில் வெளியான கட்டுரை)

 

லதா அவர்கள் (கனகலதா) சிங்கப்பூரிலிருந்து வருகிற தமிழ்முரசு இதழின் செய்தி ஆசிரியர். இவருடைய “நான் கொலை செய்யும் பெண்கள்” என்ற சிறுகதைத் தொகுப்பில் பத்துக் கதைகள் உள்ளன. பொதுவாக, சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களிலிருந்து வரும் சிறுகதை, நாவல், நாடகம் போன்றன தமிழகத்திலிருந்து வரும் எழுத்துக்களின் நகலாக அமையும். அதனால் சீரிய இலக்கிய முயற்சிகள் இந்நாடுகளிலிருந்து எதிர்பார்க்க முடியாது என்று ஓர் எண்ணம் தமிழகத்திலுள்ள சீரிய வாசகர்கள் மத்தியிலுள்ளது.

அதனைப் பொய்யாக்குவது போல் இத்தொகுப்பு அமைந்துள்ளது.

இந்தப் பத்துக்கதைகளையும் படித்தபோது தமிழடையாளம், தமிழ்ப்பண்பாடு, தமிழர் மதம், பழக்க வழக்கம், உணவுமுறை, பிறரோடு – சீனர்களோடு – அல்லது ஆப்பிரிக்கர்களோடு, முஸ்லீம்களோடு வைத்துக்கொள்ளும் உறவு போன்ற முக்கியமான பண்பாட்டு அடையாளங்கள் அலசலுக்குட்பட்டிருப்பதைப் பார்க்கலாம். தமிழகம் இந்தியாவோடு சேர்ந்த பின்பு, பிற கலாச்சாரங்களுடன் தமிழ்ப்பண்பாடு உடனுறைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தமிழகக் கிராமங்கள் தமிழர்களின் நம்பிக்கை, சாதி, வழிபாடு, உணவு போன்றவற்றைக் காலங்காலமாக மாறாமல் வைத்திருந்தாலும் தமிழகத்தின் எல்லைகளில் பிறமொழியினர் வந்து தமிழுக்குள் மாற்றங்களை உருவாக்குகின்றனர். நவீனத் தமிழகத்தில் எல்லைப் பிரச்சனையை முக்கியப்படுத்திய முன்னோடிப் போராட்டக்காரர்களான ம.பொ.சி.யையும், நேசமணியையும், தமிழ் அடையாள அரசியலின் மையத் தலைவர்களாக்க வேண்டும். எல்லைப் பிரதேசங்களில் தமிழ்ப் படைப்புக்கள் உருவாக்கும்போது மொழி ஒரு பிரச்சனையாக்கப்பட வேண்டும். குமரி மாவட்டத்தின் படைப்பில் தமிழ் மரபில் மலையாள மரபை எந்தளவு அனுமதிக்க முடியும் என்ற விவாதம் தற்சமயம் தோன்றியுள்ளது. இது விரிவுபட வேண்டும். ஏனெனில் குமரி மாவட்டத்தில் உள்ள கலப்பு எழுத்தாளர்களைத் தமிழக, மையப் பண்பாட்டுக்குள் இருப்பவர்கள் புகழவும், தங்கள் முன்மாதிரிகளாக வர்களைச் சித்திரிக்கவும் ஆரம்பித்துள்ளனர். கண்ணகியைப் பகவதியாகக் கற்பனை செய்யும் படைப்பெழுத்தாளர் தமிழ் மரபை உள்வாங்கியவர் அல்லர். எனவே, பிற கலாச்சாரங்களோடு நவீன தமிழ்ப் பண்பாடு கொள்ளும் தொடர்பை மைய விவாதம் ஆக்கும்போது பல பிரச்சினைகள் ஏற்படு கின்றன.

 

லதா அவர்களின் கதைகள் தமிழகத்து மலையாளி எழுத்தாளர்களிடம் நாம் பெறமுடியாத ஆழத்தைக் காட்டி நம்மை அதிசயப்படுத்துகின்றன. இன்றைய இந்தியாவின் பிற பண்பாடுகளைத் தமிழர்கள் மதிக்க வேண்டும்; தன் கலாச்சார வேரை மதித்தபடியே பிறவற்றை, பிற என்று கருதி மதிக்க வேண்டும். லதாவின் கதைகள் கதை சொல்லும் போக்கிலேயே இங்கு நாம் சுட்டிக்காட்டும் பிரச்சினையைப் படைப்பியல் நோக்கில் அணுகுகின்றன – கதைகளை அவற்றின் போக்கில் விட்டுக் கையாள்வதால் அவை முன்கூட்டிய சுய பண்பாட்டு நிலைப்பாட்டை உடைத்துச் செல்கின்றன. தமிழன், அல்லது தமிழ் இந்து இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற முன்தீர்மானம் எந்தக் கதையிலும் உருவாகவில்லை என்பதுதான் கதைகளின் அழகியல் தளத்தின் வழிக்கதைகள் செயல்படுகின்றன என நாம் கூறுவதற்கான காரணம். இதுதான் லதா அவர்களின் கதைகளைப் “புதிய சிங்கப்பூர் கதைகள்” என்று அழைக்க வைக்கின்றன. என் போன்றோருக்கு வேறு கதைகள் இக்கதைகள் போல் படிக்கக் கிடைக்கவில்லை என்பதை வெளிப்படையாகக் கூறமுடியும். கதை ஏற்படுத்தும் வாசக மனச்சலனம், விரைவில் கதைகளின் புனைவினால் வேகம் பெற்று ஒரு அரசியல் தளமாய் விரிகிறது. அது புதிய அர்த்தப் பிராந்தியத்தை ஏற்படுத்திப் பழைய மதிப்பீடுகளை இடைநீக்கம் (suspend) செய்கிறது.

 

சில கதைகளைப் பார்க்கலாம். முதல் கதையான அடையாளம் என்ற கதையில் மலாய் டாக்ஸி ஓட்டுநன் ஒரு சிங்கப்பூர் தமிழ்ப்பெண்ணைப் பார்த்து “யு கம் ஃப்ரம் இண்டியா? கம் டூ ஹவுஸ் வர்க்?”  என்று கேட்கிறான். அதே பெண்தான் கணவனால், அவன் குடும்பத்தால் “மெய்ட்” போல் வேலை வாங்கப்படுவதைச் சித்திரிக்கும் கதை இது. இங்கே ஏன் யாருமே தனக்கு நெருக்கமாயில்லை? ஒருவேளை தன்னால் தான் இந்த ஊர் மக்களை, அவர்கள் வாழ்க்கையை நெருங்க முடியவில்லையோ? என்று நினைப்பவளுக்குச் சிங்கப்பூரில் தனக்குத் திருமணமாகும் முன்பு இந்தியாவில் தெரிந்த நண்பனின் நினைவும் வருகிறது. கடைசியில் கதை, “ஐ ஆம் சிங்கப்பூரியன்”, ‘அவளுக்கு அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை’ என்று முடிகிறது. தமிழர்களுக்குள்ளேயே, தமிழகம், சிங்கப்பூர் என்பதான உள்வேறுபாடு வெளிப்படுகிறது இக்கதையில். ஒரே மூலத்திலிருந்து கிளை பிரிந்த முற்றிலும் முரண் படாத இரு தமிழ்ப் பிரிவுகளை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்று கதை சர்ச்சிக்கிறது. தமிழ்ப்பண்பாடு, குடும்பம், உறவு போன்றன உலகமயமாகும்போது ஏற்படும் பிரச்சனைகள் வருகின்றன. சிங்கப்பூர் தேசியத்தின் வேர்களும் அலசப்படு கின்றன. சிங்கப்பூர் தமிழன் என்ற புதிய தேச எல்லைக்குள் ஏற்படும் குணவிளக்கம் 2000 ஆண்டு தமிழிலக்கியத்தில் இல்லாதது. இங்குத் தன்னைப் புது அம்சமாக அது அறிமுகப்படுத்துகிறது.

 

“தமிழுக்கு அமுதென்று பேர்” என்ற கதை, தமிழ்மொழியானது உலகத்தில் அழிந்தபிறகு 2200 ஆண்டில் நடக்கிற கதை. எதிர்கால நோக்கில் நடக்கும் விஞ்ஞானக் கதை போன்ற உத்திகளுடன் எழுதப்பட்ட அபூர்வமான கதை இது. கம்ப்யூட்டர் மூலமே பாத்திரங்கள் பேசுகிறார்கள். “எனக்கு நீ ஓதுக்குகிற இந்தச் சில விநாடிகளைக் கூட உன்னோட கணினியால பொறுக்க முடியலியா?”  என்று கதை சொல்லியான பெண் பாத்திரம் பேசுகிறது. பேச்சு தொடர்கிறது:

 

“நான் இந்தியா போகணும்” என்கிறாள். எதற்கு என்றால் அவளுடைய மகனுக்குத் தமிழ் கற்றுக்கொடுக்க. கணவன் “இந்தியாவில் தமிழ் கற்றுக் கொடுக் கிறார்களா?” என்று சாதாரணமாகக் கேட்கிறான். அதற்கு அவள் “நான் கண்டுபிடிச்சேன், கணினி மூலம். தமிழ் தெரிஞ்சவங்க இருக்காங்களாம். ஆனா அவங்களுக்கும் எழுத்துத் தெரியாதாம். பேசமட்டுந்தான் தெரியும்” என்கிறாள். ஆனால் குழந்தை, தமிழ்ப்படிப்பு இல்லை என்று சொல்கிற பள்ளியை விரும்புகிறது. கடைசியில் ஒரு ஜப்பானியரை அழைத்து அவருக்குப் பழைய மொழிகளை எழுதத் தெரியும் என்பதால் தமிழ் எழுத்துக்களை அவள் வைத்திருக்கும் வடிவப் பிரதியைப் பார்த்து எழுத வேண்டும் என்று கேட்கிறாள்.

 

இக்கதை தமிழுக்கு என்ன நடக்கப் போகிறதென்று யூகித்து எழுதப்பட்ட கதை. கதையின் இடையில் ஓரிடத்தில் மகன் படிக்கும் பள்ளிக்கூடத்தை நடத்தும் குழு தமிழை நிறுத்திவிடலாம் என்று முடிவு செய்கிறது. ஏனெனில் தமிழ் கட்டாய பாடமில்லை என்று கதையில் ஒரு பகுதி வருகிறது. இன்று தமிழ்நாட்டில் வைகைச்செல்வன் என்ற அமைச்சரும் தமிழக முதல்வரும் எடுத்துள்ள நிலைப்பாட்டை ஒரு சிங்கப்பூர் பெண் எழுத்தாளர் எதிர்காலத்தில், நடக்கப் போகிற தமிழ்மொழி அழிப்புச் செயல்பாடு என்று 2007-இலேயே எழுதி வைத்திருக்கிறார், ஆச்சரியமாக இருக்கிறது.

 

தமிழின் பயன்பாடு அருகி வரும் நாடுகளில் வாழும் எழுத்தாளர்களுக்கு மட்டுமே ஏற்படக்கூடிய இந்தக் கற்பனையைப் பத்துக்கோடி தமிழர்களும் தெரிந்து கொள்ள வேண்டும். இக்கதையை இணையத்தளத்தில் தமிழர்கள் பரப்ப வேண்டும். சிங்கப்பூர் தமிழர் ஒருவரின் கற்பனை இது. தமிழகத் தமிழர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒரு தற்கால நிலமையை 2200-இல் தான் நடக்கப்போகிறதென்று இந்த எழுத்தாளர் எழுதியுள்ளார். ஆனால் இன்றைய அரசு சுமார் இருநூறு ஆண்டு களுக்கு முன்னாலேயே தமிழுக்கு விபத்தை உருவாக்கியிருக்கிறது.

 

இத்தகைய எழுத்துக்களைப் பார்க்கும்போது தமிழகத்துச் சிறுகதைகளைப் போல முதிர்ச்சியும் உத்தி சிறப்பும் பிறநாடுகளின் தமிழ் எழுத்தாளர்களுக்கும் வாய்க்கப்பெற்றிருக்கிறதென்று அறிகிறோம். ஆனால் இந்த எழுத்தாளர்களுக்குக் கொடுக்க வேண்டிய மதிப்பையும் தகுதிச் சான்றையும் தமிழகம் கொடுக்கவில்லை. தமிழக ஊடகங்கள், பல்கலைக்கழகங்கள், பிற நிறுவனங்கள் இத்தகைய அற்புதமான எழுத்தாளர்களையும் அவர்களின் ஜீனியஸையும் கண்டுகொள்ளாத அளவு மூடத் தனமும் உணர்வின்மையும் கொண்டு செத்துப் போயுள்ளன. உலகத் தமிழிலக்கியம் என்ற கருத்தாக்கத்தை வளர்த்தி எடுக்க வேண்டும். தமிழகப் பண்பாட்டைச் சொல்வது போல் பிற பண்பாடுகளைப் பற்றிச் சொல்வதிலும் தமிழ் புதுச்செழிப்புடன் வளரு கின்றது.

 

அடுத்ததாகத் தமிழில் வாசிக்க விரும்பும் உலகத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த நான் விரும்பும் கதை “முகாந்திரம்” என்பது. இதன் கதையாடல் (கதை சொல்முறை) அமைப்பு, ஆழமாகிச் சிக்கல் கொண்டதாக இருந்தாலும் சிங்கப்பூரின் தமிழர்களும் தமிழ் முஸ்லீம்களும் ஒற்றுமையாய், குடும்ப உறுப்பினர்கள் போல் வாழ்ந்த பழங்காலத்திலிருந்து மும்பாய் குண்டுவெடிப்பு வரை நீள்கிறது. உலக முஸ்லீம் மற்றும் பிற மக்கள் மத்தியில் இக்காலகட்டத்தில் ஏற்பட்ட கலாச்சார, ஆச்சார, நடைமுறை மாற்றங்களைக் கூறுகிறது இக்கதை. மனதைத் தொடும் வளர்ச்சிப் பிரவாகமாய் கதை முன்னோக்கி நகர்கிறது. எல்லோரோடும் சகஜமாகப் பழகிய ஒரு பாத்திரத்தின் தற்கொலையைச் சுற்றி, பூடகமாய்க் கடைசி வரை எதற்காகத் தற்கொலை செய்தாள் என்ற கேள்விக்கு விடை வருவிக்கப்படாமலே கதை முடிகிறது. இந்துக்கள் அதிகம் இந்துவாகிறார்கள். முஸ்லீம்கள் அதிகம் ஆசாரவாதி முஸ்லீம்களாகிறார்கள். ஒரே குடும்பத்து உறுப்பினர்களாய், குழந்தையிலிருந்தே பழகியவர்கள் மனஅளவில் தமிழ் இந்து – முஸ்லீம் என்று பிரிக்கிறார்கள். இந்தியாவில் இந்துத்துவக் கட்சி ஒன்று உருவாகும்போது – அது தமிழகத்தைப் பாதிக்காமலிருக்கலாம் – ஆனால், தென்கிழக்காசியாவை முழுதும் பாதிக்கிறது. மலேசியாவில் சிங்கப்பூரில் இந்தியர்கள் என்றால் தமிழர்கள். ஆனால் இந்த இலங்கை, மலேசியத் தமிழர்களுக்கு இந்தியாவில் – டெல்லியில் ஆளுபவர்களுக்கு ஈழம் போன்ற பிரச்சனையில் தமிழர்கள் இந்தியர்கள் இல்லை என்ற மனோபாவம் இருப்பது தெரியாது போலிருக்கிறது. லதா அவர்களின் கதை திடீரென்று தென்கிழக்கு ஆசியப் பிரச்சனைகளைப் பேசும் ஊடகமாகி பெருவிரிவு பெறுகிறது. இந்தப் பரிமாணம் மிகச்சிறந்த தமிழகக் கதைக்கும் கூட இல்லாத ஒரு விஷயமாகும் என்று பதிவு பண்ண விரும்புகிறேன்.

 

இந்தக் கதை பல கதைப்பாத்திரங்களின் குரலில் பேசுகிறது. அதுபோல் உரையாடல் மூலம் கதை நகர்த்தப்படும் உத்தி அதன் தீவிர எல்லைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது லதாவால் இக்கதையில். முஸ்லீம் பெண்தோழியும் இந்துத் தோழியும் குழந்தையிலிருந்தே ஒன்றாய் வளர்க்கப்பட்ட பின்னனி லேசாய்ச் சிதைய ஆரம்பித்துள்ள சூழ்நிலை கீழ்வரும் உரையாடலில் வருகிறது.

 

“ரொம்ப வேல செரீன் (முஸ்லீம் பெயர்). தேவாரங்களைத் தொகுத்தாச்சு. அதை டைப் செய்யணும். அதுக்குக் கூட நேரமில்லை”

 

“நான் செய்து தரலாம் ஆனா நீங்க ஒத்துக்க மாட்டீங்க”

 

“உனக்கு என்ன ஆச்சி செரீன்”

 

“திடீர்னு ரொம்ப பயமாயிருக்கு சென்னா”

 

இப்படி உரையாடல், புரியாமையைக் கூட, பொருட்படுத்தாமல் கதையின் தீவிர மையத்தின் சக்தியால் தொடர்கிறது.

 

லதா அவர்களின் உரையாடல் அவ்வளவு ஆற்றலுடன் அதே நேரத்தில் பல பண்பாடுகளை இழுத்து வரும் வாகனமாய் அமைகிறது. ஓர் உதாரணம்: பயணம் என்ற கதை. பழைய தமிழில் ஒரு சக்தி வாய்ந்த கவிதைச் சொல்முறை உண்டு. பழைய தமிழ்ப் படித்தவர்கள் அதனை “கூற்று” என்று அழைப்பார்கள். அதுபோல் லதாவின் கதையில் அந்தக் கூற்று (உரையாடல்) ஒரு தத்துவ உயரத்தில் கதையின் உள்பிரதியை (sub-text) உயர்த்தும் முறையில் அமைந்துள்ளது. அது நமக்குத் தெரியாமல் ஒரு தொனி அர்த்தத்தை வாக்கியங்களுக்கிடையில் நுழைக்கிறது.

 

சீன கார் ஓட்டுநன் பேசுவதை லதா முன்வைக்கிறார், பாருங்கள்:

 

“உனக்குத் தமிழ் தெரியுமா?”

 

“தெரியாது”

 

“தமிழ் காசெட் வாங்கி வைத்திருக்கிறாய்”

 

“பயணிகளுக்காகத்தான். பார் நிறைய காசெட் வாங்கி வைத்திருக்கிறேன். வயதானவர்களுக்கு இது. இளைஞர்களுக்கு இது. பெண்கள் என்றால் இந்த காசெட்”.

 

முன்னால் சாய்ந்து அவனோடு பேசத் தொடங்கினேன்.

 

அவன் திடீரென்று “சாரி” என்றான்.

 

“எதுக்கு?”

 

“உள்ளே சாப்பாடு வச்சிருக்கேன்”

 

“அதனாலென்ன? பரவாயில்லை”

 

“இன்று வெள்ளிக்கிழமை. நீங்கள் சாமி கும்பிடுவீர்கள். இது மாடு. வாடை அடிக்கும் நீ பூ வாங்கி இருக்கிறாய் தானே”.

 

”ஆமாம். பரவாயில்லையே நீ இந்தியர்களைப் பற்றி நிறைய தெரிந்து வைத்திருக்கிறாய்”.

 

இப்படி பல்வேறு மொழி, மத, சம்பிரதாயங்களைச் சங்கமிக்க வைக்கிறது லதா அவர்களின் சிறுகதைகளின் ஆற்றல் வாய்ந்த உரையாடல்.

 

இன்னொரு கதையைப் பற்றிச் சொல்லாமல் லதாவின் கதைகளைப் பற்றிய இக்கட்டுரையை முடிவுக்குக் கொண்டுவர முடியவில்லை.

 

“மழை – அப்பா” என்ற தலைப்பில் ஒரு கதை. அப்பா அழுக்காடையுடன் இருக்கிறார். மகள் வேறு ஒரு சுத்தமான உலகில் வாழ்கிறாள். ஒருநாள், “என் அப்பா என்று அறிமுகப்படுத்தவே நான் கூச்சப்படும், கூட நடந்து செல்லவே வெட்கப்படும், இவருக்குப் போய் மகளாய் பிறந்தேனே என்று தினமும் நான் வேதனைப்படும் அப்பாவா….. அப்பா ரேடியோ கேட்பாரா?” என்று மகள் ஆச்சரியப்படும் அப்பா, சந்திரனுக்குப் போகும் நீல் ஆம்ஸ்ட்ராங் பற்றிப் பேசுகிறார். ஒருநாள், எப்போதும் பீர் குடிக்கும், அழுக்கு ஆடையுடன் இருக்கும் அப்பா, சிகரெட் குடிக்கும் அவளை அழைத்துப் பேசுகிறார். அவர், அவளுக்குக் காப்பி கலக்கிக் கொடுத்தபோது, அவர் குவளையைக் கழுவியிருப்பாரா என யோசிக்கிறாள் மகள். தந்தை மலேசிய தோட்டத்திலிருந்து நகரத்துக்கு வந்த மகளுடன் இருக்கிறார். அவர் சொல்கிறார்:

 

“நான் கலக்கினா நீ குடிக்க மாட்டேன்னு தெரியும். ஆனா காலேலேர்ந்து வெறும் வயித்தோட இருக்கிற. அதான் கலக்கினேன். அவ வேலுச்சாமியோட தான் போயிருக்கணும்” என்று அவரது மனைவி ஓடிப் போனதைச் சொல்கிறார்.

 

அவளுக்கு அப்போது மட்டும் கண் கலங்குகிறது. அதன்பிறகு 16 ஆண்டுகள் தந்தை மகளிடம் அம்மா பற்றிப் பேசவே இல்லை, என்று கதையாசிரியர் எழுதுகிறார். ஓவர்டைம் வேலை செய்ததில் ஏற்பட்ட முதுகுவலி சுளீரென்று உறைக்க வருமானத்தை தாண்டிய செலவுகள் பற்றி மகள் நினைக்கிறாள்.

 

தமிழ் மக்கள் வேறுநாட்டில் அவர்களின் அழுக்குப்பிடித்த தந்தைமாரை நினைத்தபடி வாழ்வதையும் தந்தை மகளுக்குள் இருக்கும் வேறுபாடுகளையும் சொல்லும் கதை இப்படி முடிகிறது:

 

“முப்பது வருஷம் முன்னாடி ஒருநாள் இப்படி மழைபெய்தபோதுதான் நிலவுக்கு அப்பொல்லொ போச்சுது”

 

கதைசொல் முறையாலும் உரையாடல் அமைப்பாலும் கவனத்தைக் கோரு கிறது. சிங்கப்பூர் போன்ற இடங்களில் உள்ள ஓரளவு பணம் புழங்கும் குடும்ப வாழ்க்கையில், முந்திய தலைமுறையில் அழுக்கும் தாய் ஓடிப்போனதை நினைவில் கொண்டு வராமலும் வாழும் வாழ்க்கை அச்சடையாளமாகப் பதிவாகிறது. இந்தியா வில் தமிழக மத்தியதர வாழ்க்கையும் சென்னை, பெங்களூர் – நகரங்களில் நடை பெறும் வாழ்க்கையும் லதா சித்தரிப்பதுபோல் – கதைகளாகவில்லை என்பதையும் நாம் மறப்பதற்கில்லை.

 

இதுவரை சில கதைகளை மட்டுமே இங்கு அறிமுகப்படுத்தியுள்ளேன். “நாளை ஒரு விடுதலை” என்ற கதையில் வீட்டுவேலை செய்கிறவள் கஷ்டங்களுக்கிடையில் கடைசியாக வீட்டு எஜமானனின் உடல் பசிக்கு இணங்கும்போது “நமக்கும் தான் வேண்டியிருக்கிறதே” என்கிறாள். “இதுவரை” என்ற கதை விமான ஓட்டியான கதை சொல்லியின் கஷ்டங்கள், நினைவுகள், முடிவு என அமைகிறது. வீடு, அறை என்ற இரண்டு கதைகளும் இடத்தோடு மனித உயிர்கள் கொள்ளும் உறவு பற்றிச் சொல் கின்றன. படுகளம் என்ற கதை சமயம், புராணம் இவற்றில் ஊறிப்போன வாழ்வு வழி பாட்டை தன்னிலிருந்து வேறுபடுத்தாமல் அவையாகவே மாறிவிடும் பாத்திரத்தைக்  காட்டுகிறது.

 

உலகத் தமிழ் இலக்கியம் என்ற எதார்த்தம் உண்மை உருவாகிவிட்டது. இவற்றை ஆய்வு செய்ய, விவாதிக்கப் போதிய பயிற்சி, தமிழ்ச் சமூகத்தில் இல்லை எனினும் லதாவின் கதைகள் உலகத்தரமான தமிழ்க்கதைகள் என்று தயக்கமில்லாமல் கூறலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>