மலெசிய இலக்கியம்

மலேசிய தமிழ்மரபின் ஒற்றை அடையாளம்

தமிழவன்

–  வல்லினத்தில் பிரசுரம்  –

 

நவீன் தொலைபேசியில் கேட்டுக்கொண்டதன் காரணமாக இப்போது இந்தக் கட்டுரையை எழுதுவதற்காக என் நினைவுகளையும் கருத்துக்களையும் ஒருங்கமைக்க முயல்கிறேன். நான் இரண்டுமுறை மலேசியாவுக்கு – ஒருமுறை சிங்கப்பூரில் கருத்தரங்குக்கு அழைக்கப்பட்டதன் பேரிலும் இரண்டாம் முறை நவீனும் நண்பர்களும் அமைப்பியல் பற்றிப் பேசக் கேட்டுக்கொண்டதன் பேரிலும் – சென்று முடிந்த அளவு இலக்கியம் மலேசியாவில் உருவாக்கம்பெறும் முறை, மலேசிய தமிழர்களின் இன்றைய வாழ்முறை போன்றவற்றைக் கிரகித்துக் கொண்டேன். ஓரளவு மலேசியத் தமிழர்கள் பற்றிய அமெரிக்கப் பேராசிரியர் ஆண்ட்ரு வில்போர்டின் நூல்களும் எனக்கு மலேசியா பற்றித் தெரிந்து கொள்ள உதவின. இவற்றில் மலேசியாவின் தமிழர்களின் வாழ்முறையைக் கிரகிப்பதில் ஒரு அனுகூலமான தன்மை, நானும் தமிழ்ச்சமூகத்தில் பிறந்தவன் என்ற உண்மையில் அடங்கியிருக்கிறது. அதாவது அவர்கள் 90விழுக்காடு நம்மைப்போல் தமிழர்கள்.பத்து விழுக்காடு மலேசிய மொழி, மண், வாழ்முறையால், மலேசிய வரலாற்றால், அரசியலால் தீர்மானிக்கப்பட்டவர்கள் என்ற வேறுபாட்டைக் கொண்டவர்கள். எனவே, அங்கு நான் சென்ற பின்னணியில் அவர்களுடன் கொண்ட உறவு, உரையாடல்கள், குறைசொல்லல்களாலும்,மேலும் அவர்கள்பற்றிய என்னுடைய  அறிவு – அறிவின்மைகள், போதும் –போதாமைகளின் பின்னணியில்  அவர்களின் இலக்கியம் பற்றி எழுதுகிறேன். அப்படி அவர்களைப் பிரதிபலிக்கும் அவர்களின் இலக்கியம் பற்றிய என் மதிப்பீடாக இக்கட்டுரையை அமைக்க முயல்கிறேன்.

 

எனக்கு, அங்கிருந்து வந்த “காதல்” இதழ்கள் “வல்லினம்” இதழ்கள் சிலரின் நூல்கள், அதுபோல் தொகுதிகள் படிக்கக் கிடைத்தன. அதில் என்னை ஈர்த்த ஒரேயொரு நூலின் அடிப்படையில் (இது அதிகப்படியானது என யாரேனும் கூறும் வாய்ப்பு இருக்கிறது) சிந்திக்க வேண்டும் என்ற என் இதுவரை காலத்திய தமிழிலக்கிய அறிவிலிருந்து ஏன் ஒரு முடிவுக்கு வந்தேன் என்ற கேள்வியைச் சட்டகமாக்கி முன்னேறுகிறேன். அந்த ஒரு நூல்: மகாத்மனின் சிறுகதைத் தொகுப்புகள். அதற்கு முன்பு மலேசியாவின் இலக்கியத் தொகுப்புகள் (கவிதை – சிறுகதை) சில என் பார்வைக்குக் கிட்டியுள்ளன. பெரும்பாலும் முக்கியமான நூல்கள் / ஆசிரியர்கள் / எதனையும் / யாரையும் விட்டுவிடாத ஒரு மதிப்பீடுதான் இது என்ற எண்ணத்துடன் எழுதுகிறேன்.

 

கட்டுரைக்குள் நுழையுமுன்பு வாசலில் நின்றவாறே என் சிந்தனைக் கட்டமைப்பு ஓரளவு என் கல்விப்புலம் சார்ந்ததாகவும், ஓரளவு என் தனிப்பட்ட வாசிப்பு, என் படைப்பு ‘எழுத்துக்கள் (சிறுகதை – மூன்று தொகுப்புக்கள்) – நாவல்கள் – ஆறு நாவல்கள்) மற்றும் சுமார் 1500 பக்க விமரிசன நூல் தொகுப்புகள் போன்றன என் பின்னணியில் உள்ளன என்ற ஓர்மையுடன் இக்கட்டுரையை வாசிப்பவர்கள் மேற்செல்லும் கடமை உண்டு.

 

சரி, விஷயத்துக்கு வருகிறேன். சில மலேசிய இலக்கியப் போக்குகள் ஏற்கனவே இன்றைய மலேசிய இலக்கியத்தை நிர்ணயிக்கின்றன. தமிழகத்தின் திராவிடப்பாணி, வானம்பாடி பாணி, இடதுசாரி (தாமரை இதழ்) மற்றும் இவைகளைத் தாண்டி இன்று கணினி ஊடகம், முகநூல் பாதிப்புகள் வழி உருவாகும் புதிய தன்மைகள் மலேசிய மனங்களை – எழுத்தை – நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதித்து அதன்பின்பு 21ஆம் நூற்றாண்டின் மலேசிய இலக்கியம் என்ற உண்மை சம்பவித்து வருகிறது. அந்த மலேசிய இலக்கியம் என்ற உண்மையின் பின்னணி வரலாறு, அதன் மீதான தாக்கங்கள் பற்றிய வரலாறு பற்றிய அவதானிப்பாக ஓரளவாவது இக்கட்டுரை அமையவேண்டும் என்பது என் அவா.

 

மகாத்மனின் சிறுகதைகளை அச்சிட்டு வெளிப்படுத்திய சக்திகள் எத்தகையவை என்ற என் கேள்வியை மறக்காமல் அக்கதைகளை அச்சமூகம் விளைவித்தது என்ற விஷயத்துக்கு வருவோம். (மகாத்மன் பற்றிய என் கட்டுரையை, வசதி உள்ளவர்கள் படிக்க வேண்டும். பார்க்க: tamizhavan.com) எதற்காக இந்த நூலை மீண்டும் மீண்டும் நான் குறிப்பிட்டு வருகிறேன்? இந்த நூல் “நாளை மற்றுமொரு நாளே”, அதுபோல் நகுலனின் “நினைவுப்பாதை” இரண்டையும் யாருக்கும் நினைவுக்கு கொண்டுவரும். நான் குறிப்பிடும் இவை தமிழகத்தின் மைய எழுத்தல்ல. ஆனால் அகில உலக அளவில் காஃப்கா மைய எழுத்தாளராக இருக்கும்போது இத்தகைய காஃப்கா போன்ற எழுத்துக்களில் உள்ள எதிர்மறைப் பண்பு –  நாகராஜன், நகுலன், மகாத்மன் ஆகியோரை இணைக்கின்றன என்பேன். இவ்வெதிர் மறைப்பண்பு ஏன் மொத்த உலகஅளவுத் தமிழின், பொதுப்பண்பாகக் கூட இல்லாமல் போகும்? உலகத் தமிழ்ச் சமூகம் (மலேசியா, சிங்கப்பூர், தமிழகம், ஈழம்) தன்னை ஒவ்வொரு நாட்டிலும் அடிமையின் இடத்தில் வைத்திருக்கும்போது அடிமை, நோய்மை உள்ளவனாகவும் (மகாத்மன் கூறுவதுபோல்) சிறையில் அடிபடுபவனாகவும் தானே இருப்பான். மலேசியப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறையில் தமிழ்க் கற்பிக்கப்படுவதால் நோய் மையமற்ற இடத்தில் மலேசியத் தமிழ்ச் சமூகம் இருக்கிறதென்று ஆகிவிடாது. அதாவது இன்றைய அகில உலகமெங்கும் ஈழத்தின் அகதிகள் பரவியுள்ள சூழலில் – தமிழகத்திலேயே  தமிழன் தன்அடையாளத்தை நிலைநாட்டமுடியாத பின்னணியில் – ஏதோ ஒரு எதிர்மறைத் தன்மைதான் இன்றைய 21-ஆம் நூற்றாண்டின் தமிழனின் வாழ்நிலையின் இருத்தலியல் உண்மை. அத்தோடு புதுக்கவிதை, தமிழகத் தமிழில் உருவான பொதுஉலகப் போக்கு சார்ந்த சம்பவம். அதுவரை சாத்தியப்படாத மொழி, படிமம், கற்பனை, வாக்கியம், எண்ணம், சித்தரிப்பு யாப்பற்ற ஒலிநயம் என்பது போன்ற மிகப்பல மொழிசார் சத்தியங்களை அறிமுகப்படுத்தியது. இதனால் தமிழன் அறிந்த உண்மை முற்றிலும் தலைகீழாக்கப்பட்டது. நாடு, வீடு, கனவு, எல்லாம் பற்றிய மனக்கட்டமைப்பு ஒரு பக்கம் சிதறியது. இன்னொரு பக்கம் புதிதாய் மறுவடிவம் உற்றது. ஏதொவொன்றில் நிம்மதி கண்ட தமிழ்மனம் புதிதாய் இரண்டு துருவங்களுக்கு நடுவிலுள்ள அல்லாட்டத்தில் வைக்கப்பட்டது. உறுதிப்பாடு இல்லாமல் ஆனது. தமிழகத்தில் சி.மணி என்ற கவிஞர் இருந்தார். முதன்முதலில் பாரதிதாசனைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த புராணிக கதையாடலை (Narrative) வாழ்வென ஊரெல்லாம் பறைகொட்டித் தமிழனடா என்று பெருமை பேசியது ஒரு தொன்மம் (Myth) என்ற நிர்தாட்சண்யமான செய்தியை சி.மணி கவிதையில் தெரிவித்தார். அப்போது அவர் பாரதிதாசனையும் புதிதாய் அணுகக் கற்பித்தார்.  தமிழக இலக்கியம் பற்றிய தீவிர உரையாடலை முழுசும் மலேசியா அறிந்திருந்தால் வெறும் இணையதளம் மூலம் எழுத்தாளர்களை அறியும் துக்ககரமான செயல் அவர்களுக்கு நடந்திருக்காது. மலேசியத் தமிழ் இலக்கியக் கல்வியும் கூட மேலோட்டமான தமிழக இலக்கியக் கல்வியால் கறைபட்டது என்பதுதான் என் கணிப்பு.

 

இந்தச் சூழலில் மகாத்மனின் சிறுகதைகளிலும் பாலமுருகனின் நாவல், ரேணுகாவின் கவிதைகள், நவீன் கவிதைகள் போன்றன இன்றைய தமிழக இலக்கியத்தோடு ஒரு வகை உறவை ஏற்படுத்துகின்றன. அவை தான் என் கவனத்தைப்பெறுகின்றன. மேலும் இங்கே குறிப்பிட்ட எழுத்தாளர்களுக்கும் தமிழ்க்கல்வி உலகத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மலேசிய பொதுத் தமிழ்க் கல்வி உலகம் பட்டிமன்ற தரத்தில் இலக்கியத்தை அணுகுகிறது. தமிழகமோ ஈழம் போலவேதான். இதில் ஏதோ குறைபாடு உள்ளது. தமிழகத்தில் வானம்பாடி இயக்கம் மரபுக்கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் நடுபட்ட மொழிவயப்பட்டதும் – புதுமையை முழுவதும் ஏற்க முடியாததுமான மனநிலையின் படப்பிடிப்பு. தோன்றி சிறிது காலத்துக்குப்பிறகு தமிழகத்தில் வானம்பாடி இயக்கம் மறைந்தது. இதற்கு மாறானரீதியில்  யாப்பற்ற புதுவித கவிதைகள் உரைநடை அமைப்பின் வழி உற்பத்தியானபோது அது மரபுத் தமிழ்க்கல்விக்கு வெளியில் வாழ்ந்தவர்களின் ஆசை, ஈடுபாடு, வாழ்க்கை முறையோடு இணைந்து வெளிப்பட்டது. இதில் கதைகள், நாவல்கள், எல்லாம் அமைந்தன. அக்காலகட்டத்தின் தர்மங்களைக் கொண்டு வந்தன. இறுகியதான 19-ஆம் நூற்றாண்டின் வாக்கியமுறை வித்தியாசப்பட்ட இக்கட்டத்தில் வந்த புதுவகையான புனைவை மௌனி, நாகராஜன், நகுலன், மா.அரங்கநாதன் போன்றோர் தமிழகத்தில் எழுதினார்கள். இவ்வெழுத்துக்களில் ஒருவகை பாசாங்குத் தனமான புராணீகம் (Quality of Myths) சிதைக்கப்பட்ட, தனிமனிதன் சார்ந்த, உணர்வு வழிப்பயணம் சித்தரிக்கப்பட்டது. எதார்த்த வகை எழுத்து இந்தியாவிலும் மலேசியாவிலும் கடினமான வாழ்க்கையை  மிகைப்படுத்தியோ அல்லது மலினப்படுத்தியோ எதார்த்தவாத சித்தரிப்புடன் முன்வைத்தன. உள்ளடக்கம், வடிவம், என்று சலீசாய் பிரித்துப்பேச வாகாய் இவை அமைந்தன. தமிழகம் – மலேசியாவில் – ஏன் ஈழத்திலும் இந்தவித மரபுரீதியான உரைநடை இலக்கியம் இருந்தது. இதனை சை.பீர்முகம்மது அவர்களின் உதாசீனப்படுத்த முடியாத, வரலாற்றுக்குப் பயன்படக்கூடிய, அதே நேரத்தில் உத்தம மானவை என்றும் கூற முடியாத தொகுப்புக்கள் காட்டின. இதனைச் சிதைக்கும் புதுமரபு இல்லாதிருந்தபோது மேலே கூறிய மலேசிய புதுவித எழுத்துக்காரர்கள் வெளிப்பட்டனர். இவர்களிடம் புராணிகத்தின் நம்பமுடியா தன்மைகள் இருக்காது. புராணிகம் தகும் கனவுத்தன்மைக்கு மாறாக ஒரு வெறுமை, அந்த இடத்தில் முன்வைக்கப்பட்டது.

 

வெகுசனங்களுக்கு இவைகளில் இஷ்டமிருக்காது. வெகுசனத் தமிழ் சன உடம்புச் சுகமும் இருக்காது. (இதனைத் தமிழ் நடிகர்களும், தமிழக சினிமாவும் அவர்களுக்கு வழங்குகிறது). நிம்மதி சார்ந்த நிற்பும் கவலையின்மையும் இருக்காது. இதற்குப் பதிலாக மகாத்மனின் சிறுகதைகளில் வெளிப்படும் பாத்திரங்கள் படும் அவலம் முதலும் முடிவுமாக இருக்கும். ஜி.நாகராஜனின் கந்தன் என்ற பாத்திரம் இத்தகையவன். மா. அரங்கநாதன் படைப்புக்களில் சமய உணர்வும் அற்புதமும் சம்பவிக்கின்றன. கந்தனுக்கு மாற்று இந்த மா. அரங்கநாதன் படைப்புக்கள். வெறுமைக்குச் சமயஉணர்வு மாற்று. மலேசியாவில் இலக்கிய விமரிசனம், விமரிசனக் கோட்பாடு போன்றன ஏன் வளரவில்லை?ஒருவித போலிப்பாராட்டு நிறைந்துள்ளது. தமிழ்க்கல்வித் துறைகளின் உதவி இதற்குத் தேவைப்படும். ஆனால், மலேசியாவின் தமிழ்க்கல்வி உலகம் இத்தகைய காரியங்களுக்குத் தயாராக இல்லை. பெருவாரித் தமிழகக் கல்வி, நிறுவனங்கள் போலத்தான். மலேசியாவின் படைப்பு உந்துதல் ஒரு சமூக இயக்கமாக வளரவில்லை. கருத்துருவமாகத் திராவிடர்கழகப் பாதிப்புடன் செயல்முறைகளை மேற்கொள்வது அங்கு இருந்தது. அது நவீனத் தமிழைப் பாதிக்கும் உள்ளாழம் கொண்டிருக்க வில்லை.நான் ஒருமுறை அமைப்பியல் பற்றி பேசப் போனபோது அமைப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்த செவிமடுப்போரின் ஓரிருவர் பேராசிரியர்கள். மற்றபடி பள்ளி மாணவர்கள். எனக்குப் பெரிய ஏமாற்றமாக இருந்தது. பல்கலைக்கழகத்தில் படிப்பவர்களுக்கும் படிப்பிப்பவர்களுக்கும் ஈடுபாடு இருக்கவில்லை. விதை ஊன்ற முடியாத விவசாயின் மனநிலையில் நான் திரும்பினேன். ஏதோ சில இடைவெளிகள் தமிழகத்துக்கும் மலேசிய அறிவுஜீவிகளுக்கும் உள்ளது. இதனைத் தாண்டி நடைபெறும் காரியங்களில் உள் உரம் ஒன்று எப்படியோ அந்த மண்ணில் இருப்பது மட்டுமே நம்பிக்கை தருகிறது. அந்த உள்உரத்திலிருந்து முளைத்த ஒற்றை மரம்தான் மகாத்மன். மகாத்மனின் வாழ்க்கைமுறை, நாகராஜனைப் போலவே, மரபு பிறழ்ந்தது. எனவே அவரது அடுத்த தொகுப்பு வரவில்லை போலுள்ளது. அந்த உள்உரம் எத்தனை நாட்கள் எடுத்துப் புதிய மரம் ஒன்றோ, ஒரு தோட்டமோ உருவாகக் காரணமாக இருக்கும்? வெறும் உற்சாகமும் நாலைந்து பேரின் இளம்வயதும் மட்டும் அந்தத் தோட்டத்தை நாளை உருவாக்குமா? தமிழ்க்கல்வியோடு இலக்கியம் சேராவிட்டால் எதிர்காலம் மலேசியாவுக்கும் – தமிழகம் போல – நம்பிக்கையில்லாததே.

 

இப்போது சிலருக்குக் கேள்வி ஒன்று வரும்: மகாத்மனின் பாத்திரங்களின் பிறழ்வும், மனநிலை பாதிப்பும், அடிமட்ட வாழ்க்கைத் தளத்தில் உழல்வதும், நம்பிக்கை இன்மையும் ஒரு தமிழனின் வாழ்வா? நான் சொல்கிறேன். அப்படி அல்ல. இன்றைய இலக்கியம் “சித்தரிப்பு” என்ற இலக்கிய இலக்கணத்தை மீறிப் போய்விட்டது. மலேசியாவில் உள்ள முருகன் வழிபாட்டைச் சித்தரிக்கும் கதைகளில் ஒரு தொடக்கம் ஒரு திருப்பம் ஒரு முடிப்பு  உள்ளது. ‘அமுதசுரபி’ என்ற தமிழக இதழ் கதைபோல் மலேசியாவில் எழுதப்பட்ட கதைகள் உள்ளன. எனக்கு மகாத்மனின் இலக்கியம் வாழ்க்கையை “சித்தரிப்பு” செய்யும் இலக்கியமல்ல. சித்தரிப்பு செய்யும் இலக்கியவாதிகள் தமிழகத்திலிருந்து மலேசியாவுக்கு அடிக்கடி வருகிறார்கள். இவர்கள் நவ இலக்கியம் அறிந்தவர்கள் அல்லர். நவீன இலக்கியம் பற்றிய அறிவை மலேசியத் தமிழிலக்கிய மாணவர்கள் முதலில் பெறவேண்டும்.அங்குக் கூட்டம் ஏற்படுத்தும் ஆர்வலர்கள் மலேசியாவில் இருக்கும் ஆங்கில இலக்கியம் கற்ற தமிழர்களை நாடி ஆங்கிலம் மூலம் வெளிப்பட்டுள்ள மேற்கின் இலக்கியத்தை  மலேசிய இளைஞர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும். அப்போது “சித்தரிப்புப் பாணி” இப்போது நவீனமாகிப்போய்விட்ட  வாழ்க்கையின் – சமூகத்தின் – இன்றைய வரலாற்றின் (நகரம் – கோலாலம்பூர் – இன்றைய உலக சரித்திரத்தின் குறியீடு) அர்த்த தீவிரத்தைத் தரமுடியாத பழைய பாணி என்பது விளங்கும். அடுத்து என்ன பாணி? காஃப்கா போன்றோர், ஹொர்கே லூயிஸ் போர்ஹேஸ்,  இட்டாலோ கால்வினோ போன்றோர் உலக இலக்கியத்தில் கொண்டு வந்துள்ள ஒருவகை குறியீட்டுப்பாணி இன்று சமூகப்பிரச்சனையின் அதிமுக்கிய வெளியீட்டுப் பாணி ஆகியிருக்கிறது. மகாத்மனின் எழுத்து இருள்மயமான அழிவின், சாவின், சிதைவின் எழுத்து மட்டுமல்ல. அது “குறியீட்டு” எழுத்து. எதன் குறியீடு? மகாத்மன், தோட்டத் திலிருந்து குரூரமாய் விரட்டப்பட்ட தமிழ்இனத்தின் நினைவிலியை அதே குரூரத்துடன் படைக்கிறார். State என்ற மலேசிய அரசின் கொடுங்கரம் கொண்ட வல்லாண்மையைப் படைக்கிறார். அதன் நீதிமன்றத்தை படைக்கிறார். இன்றைய தமிழ்மனிதன் தன் 2000ஆண்டு சரித்திரத்தை உள்மனக்கேடயமாய்  வைத்துத் தாக்குப் பிடிக்கும் சரித்திரத்தை ஓரிரு தகவல்கள் மூலம் நவீன உரைநடைக்காவியமாய்த் தருகிறார். “குறியீடு” என்பது ஆயிரம் பிரச்சனைகள் நான்கு ஐந்து தகவல்கள் மூலம் முன்வைக்கும் முறைக்குப் பெயர். ஒரு தேசத்துக்கு ஒரு கொடி இருக்கும். கொடி தேசத்தின் குறியீடு. கொடியை அவமானப்படுத்தினால் சிறைதண்டனை கொடுப்பார்கள் அல்லவா! அதுதான் குறியீடு. குறியீடு சாதாரணமானதல்ல. உயிர் உறிஞ்சும் சக்தி கொண்டது. உலகில் வாழும் பத்து இலட்சம் தமிழர்களின் உயிரை உறிஞ்சி வெளிப்பட்டிருப்பது மகாத்மனின் எழுத்துமுறை. அதாவது உண்மை என்பது எழுத்தின் வழி காட்டப்படும் என்ற இலக்கியக் கோட்பாட்டை தன் எழுத்தின் தொடக்கத்திலேயே தூக்கிவீசிவிட்டார் அவர். அவருக்குக் கோட்பாடு, கீட்பாடு எதுவும் தெரியாமல் இருக்கும். ஆனால் வாழ்தலின் சூழல்தீவிரம், அவரது கதைகள் எப்படிப்பட்ட பாத்திரத்தைக் கொண்டு இருக்கும், எந்தெந்த சம்பவங்களை அடிப்படையாக்கும் என்ற அறிவைக் கொடுத்து இருக்கிறது. கோட்பாட்டு அறிவு என்பது வேறு. அது வாசிக்கும் முறை. மகாத்மனை அறிய கோட்பாடு வேண்டும். அவர் படைப்புக்குக் கோட்பாடு வேண்டாம்.

 

அதாவது நான் என்ன சொல்ல வருகிறேன்? மகாத்மன் போன்ற ஓர் எழுத்தாளர் இருக்கும்போது மலேசியாவுக்குக் கதைபற்றி – கவிதைப்பற்றி – நாவல் பற்றி வகுப்பு எடுப்பதற்கு மலேசியர்கள் மகாத்மன் அளவு தரமற்ற எழுத்தாளர்களைத் தமிழகத்திலிருந்து ஏன் அழைக்க வேண்டும்? மகாத்மனைச் செயல்முறையில் கட்டுடைப்புச் செய்யும் (deconstruct) ஆட்களை மலேசியாவில் இருந்தே அழைத்து மகாத்மனைப் பற்றி மீண்டும் மீண்டும் பலவித கோணங்களில் அணுகுவது தவிர வேறு வழியில்லை. ஏனென்று கூறுகிறேன். மகாத்மனும் காஃப்காவும், மகாத்மனும் போர்ஹேஸும், மகாத்மனும் இட்டாலோ கால்வினோவும் மகாத்மனும் நாகராஜனும், மகாத்மனும் நகுலனும் என்றெல்லாம் பல்வேறு கருத்தரங்கு நடத்துங்கள். அதன் வழி மகாத்மனின் நூத்திச்சொச்சம் பக்க புத்தகத்தின் வியாக்கியானம் 1000 பக்கங்களை எட்டும் என்பதை அறிவீர்கள். அந்த 1000 பக்கங்களில் சிங்கப்பூர் லாதாவின் எழுத்தும் மற்றும்  அங்கும் வாழும் இந்திரஜித்தின் எழுத்தின் உள்வெளிகூட மகாத்மனிடம் இருப்பதை அறிவீர்கள். நாடகத்தில் இளங்கோவன். அதுபோல் தமிழகத்தின் உயர்எழுத்து மரபுகளும் அனைத்துலக எழுத்தும் மகாத்மன் என்ற மையப்புள்ளி வழி குறுக்கும்மறுக்குமாய் பல்வேறு திசைகளில் பயணப்படுவது தெரியும்.

 

மலேசியாவில் ஆரோக்கியமான ஒரு காரியத்தைத் தமிழ் எழுத்தாளர்கள் செய்ததைக் கவனித்தேன். அதாவது மலேசிய மொழியில்  எழுதுபவர்களுடன்  நல்ல உறவு வைத்துள்ளனர். மலேசிய மொழி கிழக்காசியாவின் முக்கியமான உள்ளோட்டங் கள் கொண்ட மொழி. அம்மொழியின் பல்வேறுபட்ட காலங்களின் உள் அறைகளில் இருக்கும் கிழக்கத்திய மனிதனின் ஆன்மாவை மகாத்மனின் கதைகளில் காணலாம். மகாத்மனை உடனடியாக மிகச்சிறந்த மலேசிய படைப்பாளி மூலம் மலாயில் மொழி பெயர்க்க ஏற்பாடு செய்யுங்கள். இது மிக எளிது. ஏனெனில் தமிழ்ப் பட்டப்படிப்புக் கான ஆய்வேட்டைக் கூட மலாய் மொழியின் சமர்ப்பிக்கிறார்களாம், தமிழ் மாணவர்கள். எவ்வளவு பெரிய வாய்ப்பு! மகாத்மனை மலேசிய பண்பாட்டிற்கு அறிமுகம் செய்வதற்கு!

 

மகாத்மன் தமிழின் 2000வருட இலக்கிய வரலாற்றின் இரத்தம் ஓடும் கடைசி தமிழ்வம்சத்தின் விருட்சம்.அவர் தமிழகம்,மலேசியா, ஈழம்,சிங்கப்பூர் வழி ஓடும் ஒரு தமிழ் இலக்கிய மரபுக்குச்சொந்தக்காரர். அவரைப் புரிந்துகொள்ள பயிற்சிப்பட்டறை நடத்தாமல் அரைகுறை விருது வாங்கிவிட்டார் இன்னார் என்றும் எனவே, அவரை ஆப்பிரிக்காவிலிருந்து விமானம் பயணச் செலவு கொடுத்து அழைக்கிறோம் என்பதும் எவ்வளவு தவறான காரியம்? முழுவதும் மகாத்மனை மையப்படுத்துவது மலேசிய இலக்கியத்தின் எதிர்கால வளர்ச்சி. மலேசியத்தமிழ் எழுத்தாளர்களில் என் மதிப்புக்குரிய பலர் மகாத்மனின் உள்ளே இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் எனக்கு எந்தெந்த நபரைப் படிக்க வேண்டும் என்றுகூறி மகாத்மனை இனங்காட்டினார். அச்செயல் மலேசியா, தன் அடையாளத்தை மகாத்மன் வழி அறிந்துகொள்ள தயாராக இருக்கிறது என்பதை எனக்குச் சுட்டியது. அந்த நபர் பெயரை, நான் வேண்டுமென்றே, இங்குத் தவிர்க்கிறேன். மகாத்மனைப் போல வாழத்தேவையில்லை. கூடாது. ஆனால் மகாத்மனை ஒரு முன்மாதிரி இலக்கியவாதிபோல வைத்துப் புதிய ஓர் இலக்கிய இயக்கத்தைத் தொடங்குவது முக்கியம். (இது எதிர்வினைக்காக எழுதப்படுகிறது. எதிர்வினை தாருங்கள்.அதாவது நான் உங்கள் சூழலிருந்து கற்கவும் வேண்டும்.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>