தமிழவனின் சமீபத்திய நூலிலிருந்து

அடையாளம் வெளியிட்ட ‘திராவிடம், தமிழ்த்தேசம், கதையாடல்’ நூலின் பகுதி.

…………… …… அயோத்திதாசரின் முன் அன்று இருந்த ஒரே இலட்சியம் தலித் மக்கள் பிரிவினர் பற்றிய அக்கறை. அதனால் ஆங்கிலேயர்களை முற்றாக ஆதரிப்பதுதான் அவர் கொள்கை. அயோத்திதாசர் ஆய்வாளர்கள், அயோத்திதாசரிடம் இருந்த காலனி பற்றிய ஆமோதிப்புக் கண்ணோட்டத்தால் அவர் சமூக இயக்கம் சமூக வரலாறு போன்றன பற்றிய முழுப்பார்வை இல்லாதவராய் இருந்ததை அறிய வேண்டும். ஆய்வு நோக்குத்தான் இங்கெல்லாம் பயன்படுமே தவிர செயல்வீரர்நோக்கு பயன்படாது. இந்த விசயம் முக்கியமானதாகும்.

அதாவது இருபதாம் நூற்றாண்டு, தமிழகத்தின் முக்கியமான அத்தனை பேரையும் ஏதோ ஒரு வகையில் குறையுள்ளவர்களாகவே உருவாக்கியுள்ளது. அதற்கு அன்றைய சூழலும் வரலாறும் காரணம்.

ஆஷ் கொலை பற்றி மிக மிக உணர்ச்சி கலந்த வாக்கியங்களைப் பயன்படுத்துகிறார் அயோத்திதாசர். இன்றையச் சூழலிலிருந்து பார்க்கும்போது நமக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது.

“ஆஷ் அவர்களை இம்மாதம் 18தேதி காலை 10 மணி 40 நிமிஷத்திற்கு ரிவால்வரால் சுட்டுக் கொன்ற துஷ்டனை பிராமணன் என்போமா, இல்லை. இந்தப் படுபாவியின் கேடுண்ட செயலால் மற்றும் இராஜ விசுவாசமுள்ள பிராமணர்கள் என்போர்களையும் மனக் கலக்கமுறச் செய்து விட்டானே….”

என்று வருத்தப்படுகிற அயோத்திதாசர் ஆஷை மிக நல்லவர் என்று கூறுகிறார். முக்கியமாக “சகல சாதி மனுக்களையும் சமமாகப் பாவிப்பவர்” என்று மக்கள் கூறுவதாக எழுதுகிறார். மேலும் ஆஷ் கொலைக்கு, மிகச் சிறந்த வரலாற்று ஆய்வாளர் வெங்கடாசலபதி கூறுவதுபோல் மார்ச் 12-ஆம் தேதி 1908-இல் நடந்த வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகியோரின் கைதை எதிர்த்துத் திருநெல்வேலிப் பகுதிகளில் கலகம் செய்த சுதேசி இயக்கத்தின் தொடர்ச்சி காரணமாக இருக்கலாம் என்கிறார் அயோத்திதாசர். எனினும் பிரிட்டிஷ் அரசாங்கம் கலகத்துக்கு எல்லா சாதியாரையும் தண்டித்தாலும் ஒரு பிராமணன் ஏன் முன் வந்து ஆஷ் என்ற நல்ல கலெக்டரைக் கொல்ல வேண்டும் என்று கேட்கிறார் அயோத்திதாசர்.

அயோத்திதாசர் “இராஜ துரோகிகளை அடக்கும் வழி” என்ற கட்டுரையில் கருணை தங்கிய ராஜாங்கத்தார் துஷ்டர்களாம் இராஜதுரோகிகளையும் கொலை பாதகர்களையும் குடிகேடர்களையும் களவாடிகளையும் சிறையில் அடைக்கும் போது என்ன செய்ய வேண்டும் என ஒரு ஆலோசனை வழங்குகிறார். அதாவது மேல்சாதியார்கள் ஆஷ் போன்றவர்களைக் கொலை செயது சிறைக்கு வரும்போது “அவர்கள் செய்து வந்த செயல்கள் யாவும் கீழ்ச்சாதி செயல்கள் எனக் கணித்துச் சிறைப்பட்டவர்களில் மேல்சாதி கிடையாதெனும் ஓர் பொதுச்சட்டத்தை விதித்து விடுவார்களாயின்” சாதி மமதை சமூகத்திலிருந்து நீங்கும் என்கிறார்.

அயோத்திதாசர் ஒற்றை நோக்கு உடையவராய் காலனியம் என்ற பன்முக உண்மையை அணுகுகிறார். அந்த ஒற்றை நோக்கு, தன் மக்களுக்கு விடுதலை. எனவே வாஞ்சிநாதனைப் பிராமண குலத்திற்கு அடாது செய்த படுபாவியாய் பார்க்கிறார். ஒரு தனிமனித குணம் சார்ந்ததாய் ஆஷைக் கொலை செய்தவனின் கொலைக்குணத்தைக் கணிக்கிறார் அயோத்திதாசர்…… ……. ……

5 thoughts on “தமிழவனின் சமீபத்திய நூலிலிருந்து”

  1. பெரியார் குறித்து மாற்றுப்பார்வையை ரவிக்குமார் முன் வைத்ததும்,
    அயோத்திதாசர் குறித்த ஒரு பார்வையை முன் வைத்ததும் தமிழ் சூழலில் வெவ்வேறு பார்வைகளுக்கான இடம் இருக்கிறது எனபதைக் காட்டுகிறது.

  2. அயோத்திதாசரைப் பற்றிய மாற்றுச் சிந்தனை தமிழ் புத்திஜீவிகள் இடையே ஏற்படவில்லை. அவரைப் பற்றி ஒருவித அழகியல் தன்மையோடு தனக்கான ஒரு பொருளாக ஆக்கிக் கொள்ள முயலும் இந்த சமயத்தில் மாற்றுச் சிந்தனையுடன் முன்வைக்கும் இந்தக் கட்டுரை மிகவும் கவனப்படுத்த வேண்டியுள்ளது.

  3. அயோத்திதாசர் மீதான தமிழவனின் கட்டுரை வேறுவெளிச்சத்தை நமக்குத் தருகிறது. ஆங்கிலேயர்கள் இரக்கமில்லாதவர்கள், கடுமையாக நடந்துகொண்டவர்கள், கொடுங்கோலர்கள் என்றெல்லாம் நமக்குச் சரித்திரப்பாடங்கள் மூலம் தரப்பட்ட கருத்துக்கள் சரியானவையல்ல எனும் உண்மை நமக்குப் புலனாகிறது. ஆங்கிலேயர்கள் கொடுமையானவர்கள் என்றால் அவர்களை விட அயோக்கியர்கள் இந்துமத உயர்சாதியினர் என்ற உண்மையை அயோத்திதாசரின் கருத்து நமக்கு உணர்த்துகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஏழைகளுக்குச் சேவைசெய்த ஆஸ்திரேலியப் பாதிரியார் ஒருவர் மனைவி, குழந்தையுடன் இந்துவெறியர்களால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்- மதமாற்றத்திற்குத் தரப்பட்டத் தண்டனை என பலரும் கூறிக்கொண்டார்கள். ஆனால் அவரது சேவையை யாரும் கண்டுகொண்டதே இல்லை. இதே போன்றுதான் ஆஷ் கொலை வழக்கைப் புரிந்துகொள்ளவேண்டும். ஆஷ் நிச்சயமாக இந்துக்கட்டமைப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிசெய்திருக்க வேண்டும்- அது பொறுக்கமுடியாமல் உயர்சாதிக்காரரான வாஞ்சிநாதனால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்க வேண்டும்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>