ஆடிப்பாவை போல
(உரையாடல் – 2)
கே. சேகர் மற்றும் தமிழவன் ‘ஆடிப்பாவை போல’ நாவல் பற்றி இரண்டாவது உரையாடல் .
கேள்வி:
இது, நாம் இந்த நாவல் பற்றி நடத்தும் இரண்டாவது உரையாடல்.
சமீபத்திய விமரிசனத்தில் பிரதி என்று பயன் படுத்துகிறார்கள்.
பிரதி (text)யாக ஒரு எழுத்தைப் பார்ப்பதற்கும் அழகியலாகப்
பார்ப்பதற்கும் என்ன வித்தியாசம்?
பதில்: பிரதி என்றால் பல்வேறு செய்திகள் போகும் தந்திக் கம்பி எனலாம். வாழ்த்துச்
செய்தியும் போகும். மரண அறிவிப்பும் போகும். நாவல் பிரதியாகப் பார்க்கப்
படுகையில் அதன் அழகியல் தள்ளிப் போடப்படுகிறது. அழகியலாகப் பார்க்க
படுகையில் அதன் பிரதியியல் (அதாவது மொழி, வடிவம், செய்தி, உத்தி என்று
எந்திரத்தின் பல பாகங்கள் போல) தன்மைத் தள்ளிப் போடப்படுகிறது.
கேள்வி: தள்ளிப்போடப்படுகிறது. அதாவது தற்காலிகமாக. நிரந்தரமாக அல்ல.
பதில்: ஆமா. எனவே, நிரந்தரமானதும் தற்காலிகமானதும் மாறிமாறி செயல்படுகிறது
இதுபோன்ற ஒரு நவீன நாவலில்.
கேள்வி: இது நவீன நாவலின் தத்துவம். இந்தத் தத்துவம் முன்பு எழுதிய நாவல்
களுக்கும் பொருந்துமா?
பதில்: பொருந்தும். இந்த முறையில் எந்தக் கால நாவலையும் பார்க்கலாம். இப்படி,
அதாவது மரபாக எழுதப்பட்ட எந்த நாவலையும் பார்க்கலாம்.
கேள்வி: நீங்கள் முன் எழுதிய நாவல்கள் ஒவ்வொன்றும் ஒரு புதுப்பாதையைச் சுட்டும்.
இதில் ஒரு மரபான நாவலுக்குள் இரண்டு குறுநாவல்கள் அடக்கப்பட்டிருப்பது
போன்ற வடிவம் உள்ளது. ஒரு தாய்க்கு இரண்டு சேய்கள். ஒரு சேய், அகம்
வாசிப்புக்கு அகப்படுகிறது. இரண்டாவது சேய், புறம் வாசிப்புக்கு அகப்படு
கிறது. மொத்த நாவலும் தனக்குள்தாயையும்சேய்களையும் கொண்டு,
ஒருவித family resemblance என்று சொல்வார்களே
அப்படி அமைகிறது. மொத்தத்தைப் பார்க்கும்போது அழகியல் தெரியும்.
சேய்கள் என்னும் பகுதியைப் பார்த்து மொத்தத்தை மனதில் கற்பனை செய்
கிறோம். இந்த நாவலில் சேயும் தாயும் இரண்டும், பிரிந்தும் சேர்ந்தும்,
பிரிந்தும் சேர்ந்தும்……
இது ஒரு சதாஇயக்கம்.சரிதானே?
பதில்: பௌத்தர்கள் உலகமும் வாழ்வும் சதாஇயக்கத்தில் இருக்கிறது என்று சொல்
கிறார்கள். அதை க்ஷணிகவாதம் என்பார்கள்.நம் வாழ்வு என்பது ஒரு க்ஷண
நேர எதார்த்தம். முன்பு இருந்தது சற்றுநேரத்தில் இல்லை. மாறிவிடுகிறது.
கேள்வி: இப்போது பேசுவதற்கும் முன்பு உரையாடல் ஒன்றில் பேசியதற்கும்
தொடர்பு உள்ளது.இதைத்தான் நம்முதல் உரையாடலில் the politics of the
part and the whole என்று பேசினோம் அல்லவா?
பதில்: ஆமா,தமிழில் நிரந்தரப்படுத்தி இலக்கியத்தைப்பேசுவார்கள்.
ஒரு நாவலையாகட்டும் கவிதையாகட்டும் அதன் சரீரம் நிரந்தரமானது
என்று கருதுகிறார்கள்.அத்தகைய கருத்துக்களுக்கு இந்த
நாவலின் அமைப்பு ஒரு மாற்றை முன்வைக்கிறது என்று கருதலாம்.
கேள்வி: இன்றைய திராவிட அரசியலின் தோற்றம் பற்றியது இந்த நாவல். இந்தவித
அணுகல் எப்படி அந்த உள்ளடக்கத்தை அறிய உதவுகிறது?
பதில்: இன்று திராவிட அரசியல் தேவையில்லை என்று சிலர் பேசவந்துள்ளனர்.
அந்தச் சூழலில் திராவிட அரசியலை deconstruct செய்து, அதனை இந்த
நாவல் துண்டு துண்டாக்கிப் பார்க்கவேண்டும் என
வேண்டுகோள் வைக்கிறது.
கெலடஸ்கோப் வழிபார்க்கும்போது துண்டுகள் பல்வேறு சாத்தியப்பாடுகள்
வழி ஒட்டுமே அதுபோல இந்நாவல் வேலை செய்கிறது. மேலும், தமிழ்க்
குடும்பத்தின் வழி – தமிழ் ஆண், பெண் வாழ்முறைவழி, இந்தத் ‘துண்டு
படுத்துதல் – முழுமைப்படுத்துதல்’ பார்வை செயல்படுகிறது.
கேள்வி: மரபான முறையில் மட்டும் இந்த நாவலை வாசிக்கலாமே. இந்த வாசகர் வழி
காட்டல் இல்லாமலே வாசிக்கலாமே என்று சிலர் கூறுவது
பற்றி என்னசொல்கிறீர்கள்?
பதில்: இல்லை; இல்லை. வாசகர்கள் பழைய மாதிரியில் வாசிக்கவும் முழுஉரிமை
உண்டு. புதிய மாதிரியிலும் வாசிக்கவும் முழுஉரிமை உண்டு. இந்த choice
(தேர்ந்தெடுக்கும் உரிமை)-க்கான உரிமையை யாரும் தடுக்கக்கூடாது என்பது
தான் இந்த நாவல் விரும்பும் சுதந்திரம்.
கேள்வி: இன்று பி.ஜே.பி. வந்தபிறகு சுதந்திரம் பறிக்கப்படும் ஆபத்தைப் பற்றி நாவல்
தன் வடிவம் மூலம் பேசுகிறது எனலாமா?
பதில்: நாவல் தன் வடிவமைப்பின் மூலம் பல செய்திகளைச் சொல்கிறது. பி.ஜே.பி
அரசியலில் உள்ள ஆபத்து மனித இயல்புக்கு எதிரானதாகும்போது இந்த
நாவலின் நிரந்தர ‘கெலடெஸ்கோப்’ விளையாட்டு அதனை எதிர்க்கிறது.
எதிர்காலத்தில் வரும் பிற ஃபாஸிஸ்டு அரசியல் போக்குகளையும் இந்த வடிவ
மாற்ற விளையாட்டு எதிர்க்கும்.
கேள்வி: இது பின்நவீனத்துவம் அறிமுகப்படுத்திய போக்கைச் சார்ந்த நாவலா?
பதில்: தன்னைப் பார்த்தவாறு பிறவற்றையும் பார்ப்பது என்று ஒரு தன்மை பின்
நவீனத்துவ நாவல்களில் உண்டு. Self Reflexive என்பார்கள். ஆசிரியன்
இடையில் வந்து பேசுவது அல்லது வாசகரை விளித்துக்கூறுவது. பல
சமீபத்திய ஆங்கில நாவல்களில் இதுபோல வரும். இது கதையை இடையில்
புகுந்து வழிமாற்றும் விதமான சுயப்பார்வை எனலாம். அது இங்கும் செயல்
படுவதால் இது பின்நவீனத்துவ மரபில் வந்தது எனலாம். அப்படி மிகப்பல
மாதிரிகள் உண்டு.
கேள்வி: மீண்டும் நாம் பேசி வந்த விஷயத்துக்குப் போவோம். திராவிட அரசியல் பற்றி.
பதில்: திராவிட அரசியலும் தமிழ்க் குடும்பமும் பின்னிப்பிணைந்தவை. நாவலில்
இரண்டு பலவித குடும்பமாதிரிகள் வருகின்றன. ஒவ்வொன்றும்
தமிழ் அரசியல் உடன் எப்படி உறவு ஏற்படுத்துகின்றன என்பது
முக்கியம். பின்னால் இருந்து இயக்கும் ஒரு force (‘உந்துவேகம்’)மரபு
என அழைக்கப்படுகிறது. இது நவீன
பாராளுமன்ற அரசியலுக்கு ஒத்துப்போவதில்லை. மலையாள பட்டரின்
மகனுக்குக் குடும்பம் இல்லை. அந்தப் பெண் போன்ற முகம் கொண்டவன்
கையில் துப்பாக்கி மறைத்து வைத்திருக்கிறான்.இந்த நாவல் சிறுசிறுகதைகள்,
சம்பவங்கள் வழி சமூகக் கதையாடலைத் தருகின்றது. சமூகக் கதையாடல்
என்பது நம் சமூக வரலாறு.நாவல் வ்ரலாறு இல்லாமல் எழுதப்பட
முடியாது என்பார் மார்க்சியவிமரிசகர் ஜார்ஜ்லூக்காச்.(George Lucaks).
திராவிட வரலாறு கால்டுவெல் எழுதிய ஒரு புத்தகத்தின் தாக்கம்.அவர்
திராவிட மொழிகள் சமஸ்கிருதத்திலிருந்து வேறுபட்டது என்றார். அதன் அடிப்
படையில் ஒரு அடையாளத்தை உருவாக்கி, இந்தி என்னும் ஏக
அடையாள எதிர்ப்பைக்குடும்பம்வழி அணுகுகிறதுநாவல்.தமிழை
மையப்படுத்திய 1965-இல் நடந்த அரசியல், வின்சென்ட் – காந்திமதி என்ற
இருவரின் சேர்தல் – பிரிதல் – சேர்தல் வழி, நாவல் வடிவம் பெறுகிறது. காந்தி
மதியின் தந்தை திராவிட அரசியல் ஏதும் செய்வதில்லை. அவர் – மகள் நுட்ப
மான உறவு ப்ராய்டிய இடிப்பஸ் காம்ப்ளக்ஸா தெரியவில்லை. அதைவிட
சிக்கலானது. அது மையப்பாத்திரங்கள் பிரிய (அகலுதல்) காரணமாகிறது.
பிரிதல் என்பது அவள் (காந்திமதி) திடீரென்று நாவலின் space-இல்
காணாமல் ஆகிறாள். இறுதியில் ஆம்ஸ்டர்டாமின் காட்சி தரும்போது அவள்
வருகை நாவலை முடிக்கத் தேவைப்படுகிறது. அங்கு கதாநாயகன்
(வின்சென்ட்) இரண்டு பிரச்சனைகளைக் கூறி அவற்றின் வழி தான் maturity
(முதிர்ச்சியடைதல்) அடைந்ததை அவளுக்குச் சொல்கிறான்: அவை 1. ஈழத்து
க்கு அவன் போதல் 2. அவன் நேரடியாய் தலித் இளைஞன் சந்தோஷம்
எரிக்கப்படுவதைச் சொல்லுதல். ஈழப்பிரச்சனையின் ராணுவத்தன்மை,
தமிழ்க்குடும்பத்திலிருந்து வந்தது. தமிழ்க்குடும்பம் – ஈழம் – தலித்
பிரச்சனை தமிழ்ச்சமூகம் சுற்றிச் சுழலும் மையஅச்சுகள். அகம் மற்றும்
புறம் என்பவை மாறிமாறி வந்து கொண்டே தான் வரும். வீட்டுக்
குள்ளே இருந்தால் அகம். வீட்டுக்கு
வெளியே வந்தால் புறம். இது ஒரு பயங்கரமான பாகுபாடற்ற பாகுபாடு. சங்க
இலக்கியத்தின் மையத்துக்குள் இந்த நாவல் மீண்டும் பாய்கிறது. அல்லது
சங்கப்பாடல்களுக்குள்ளிருந்து பாய்கிறது.
கேள்வி: பாகுபாடற்ற பாகுபாடு..இன்னும் பல விஷயங்கள் உள்ளன.
பதில்: ஆமா. இன்னொரு முறை அவற்றை அலசலாம்.