தமிழவன் கதைக்கலையின் தனித்தன்மை.

தமிழவன் கதைகளின் தனிப்போக்குகள்.

நிதா எழிலரசி

 

சிறுகதை என்பது மிக வீரியமிக்க வித்து ஒன்றின் அடங்கிக்கிடக்கும் அகத்தோற்றம் அல்லது மிகவும் சூட்சமம் மிக்க வடிவமைப்பின் நுட்பமான வெளிப்பாடு எனலாம். இந்தப் புறவடிவமைப்பு, சிறுகதை என்று காண்பதற்கு வடிவம் சார்ந்து எளிமையாகவும் நுணுகி ஆராய்வதற்குக் கடினமானதாகவும் இருப்பது. கதைசொல்லியின் அகமன உணர்வு அவனைத்தாண்டி மிக நுணுக்கமான பின்னல்களைக் கொண்டது போல் அமைகின்றது. கதை கோர்வையாகவும், சிதறலாகவும், ஒழுங்கமைவாகவும், ஒழுங்கற்ற எச்சங்களாகவும் ஒரு நிலையான வடிவம் என்று சொல்ல முடியாத வடிவத்தைக் கொண்டுஅமைகிறது. கதைகள் காலந்தோறும் மாறிமாறித் தனக்கான வடிவம் மற்றும் உள்ளடக்க முறையில் தன்னைத்தானே புற உலகச் சூழலுக்கேற்ப தகவமைத்துக் கொண்டு வெளிவருகின்றன.

சிறுகதைகள் சமூகம், அரசியல், உளவியல், தத்துவம், பொருளாதாரம், உலகமயமாதல் போன்றவைகளின் இறுக்கங்களில் இருந்தும், தளர்வுகளில் இருந்தும் காலத்தின் தேவைக்கேற்ப ஒன்றிலிருந்து இன்னொன்றாகப் புதுப்புது வகைமைகளாக வெடித்து வெடித்துப் பிறக்கின்றன. இவை ஒரே மாதிரியான தொடர் வளர்ச்சியையோ அல்லது வீழ்ச்சியையோ மாறி மாறி கட்டமைக்கின்றன. இத்தகைய கட்டமைப்பு ஆழ்மனோநிலையில் இருந்து சமூக அரசியலையும், மனித அக மன உணர்வுகளையும் தொடர்ந்து கேள்வி கேட்டும், அவலங்களை வெளிச்சமிட்டும் புதுப்புது திருப்பங்களைத் திட்டமிடாமல் எதிர்ப்பதும், ஆதரிப்பதுமாகப் பொதுவற்ற அணுகலை மிக நுண்மையாகச் சிறுகதைகள் வெளிப்படுத்துகின்றன. தெளிவற்ற தன்மையிலும் கலைத்துப் போட்டு, கலைத்துப் போட்டு ஒருவித நுட்பமான அழகியலைத் தனக்குள் தானே கட்டமைத்துக் கொள்கிறது. கதை கழன்று ஒழுகும் அருவி போலவும் அடங்காமல் பீறிட்டெழும் உணர்வுகளாய் வெடித்துச் சிதறும் மௌனத்தையும் கோமாளித்தனத்தையும் வெளிப்படுத்திக் கொண்டு புதுப்புது படைப்புகளாய் தன்னைத் தானே உருவாக்கிக் கொள்கின்றன. இத்தகைய சிக்கல் நிறைந்த வடிவம் இதுதான் சிறுகதை என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாத ஒழுங்கீன வடிவமாய் வளர்ந்து உயர்கின்றது. 70, 80 -களில் வெளிவந்த சிறுகதைகளின் போக்கைப் பின்னோக்கிப் பார்க்கும் பொழுது கதைசொல்லுவதற்குக் கர்த்தா ஒருவன் மிக அவசியமாகத் தேவைப்பட்டுள்ளான். கதையில் ஆரம்பம், உச்சம், முடிவு என்ற ஒரு தொடர் கதைத்தன்மை பின்பற்றப்பட்டு வந்ததுள்ளது. அதே காலகட்டத்தில் மனித மனங்களின் மிருதுவான பாலியலும், அழகியலும் கதைகளில் தவிர்க்க முடியாத சித்திரிப்புகளாக இடம் பெற்றன. இந்தப் ‘பலவீனமான’ ரசனைமுறை ஒரு கட்டத்தில் நவீனத்துவ எழுத்துகளை உள்வாங்கிக்கொண்டு தலைவன், தலைவி, கிளைக்கதைகள் என்ற வகைமைகளில் இருந்து தன்னைத்தானே விடுவித்துக் கொண்டன.

ஒரே ஒரு கதைசொல்லியே முழு கதைக்குள்ளும் காற்றுக்குள் வாசம் பரவுவது போல மெல்ல பயணம் செய்து சொல்ல வேண்டிய கதைகளைச் சொல்லி அழிந்தொழிவதுண்டு. இது போன்ற கதைகளும் தொடர்ந்து தன் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. 80-களில் அறிமுகமான அமைப்பியலின் தாக்கத்தால் வந்த பின்நவீனத்துவ கதைகள் மிக நுண்ணிய அரசியல் சார்ந்த கலகக்குரலை எதார்த்தத்திற்கு அப்பால்போய் நம்ப முடியாத கற்பனாவாதத்தின் சிக்கல்களை உடைத்தன. பின்னர் தொன்மங்களைச் சிதைத்துக் கொண்டும் தன்னைத்தானே விமர்சித்துக் கொண்டும் வடிவமற்ற வடவங்களை உருவாக்கியும், சிதைத்தும் முந்தைய பிரதிகளில் இருந்து புதிய பிரதிகள் பகடிச் செய்து கொண்டே தொடர்ந்து வருகின்றன. இந்தப் பிரதிகளும் இன்றளவும் மிக நுணுக்கமான பின்னல்களையும், கதைக்களத்தையும் நிகழ்த்தித் தனக்கான அடையாள அரசியலை முன் வைக்கின்றன.

மிக நீண்ட இலக்கிய கால வெளியில் கு.ப.ரா., ந. பி., கா.ந.சு., சி.சு.செ., மௌனி, லா.சா.ரா., புதுமைப்பித்தன், நகுலன், சு.ரா., மா.அரங்கநாதன், நீல.பத்மநாபன், பொன்னீலன் என்ற நெடிய நவீனத்துவத்தின் ஆரம்ப காலகட்டத்தின் கூறுகளை வெளிப்படுத்தி கதைத்தளங்களைச் சமூக விழுமியங்களில் இருந்து உருவாக்கினார்கள். அதே காலகட்டத்தில் இவர்களில் இருந்து மாறுபட்ட கதைக்களங்களைத் தமிழகத்தின் எழுச்சிமிக்கச் சிறுபத்திரிக்கைகள் முன் வைத்தன. இந்த மாற்று அரசியலின் ஊடாக சீரியஸ் லிட்ரெச்சரும் ஜனரஞ்சக இலக்கியமும் இணைக்கோடுகளாக வளர ஆரம்பித்தன. சிறு பத்திரிக்கைகள் தொடர்ந்து  நடு பத்திரிக்கை என்ற வடிவம் பெற்று அவை ஜனரஞ்சக அரசியலைச் சீரியஸ் லிட்ரெச்சர் என்று போலி செய்து மிக வேகமாக உருவாகி வருகின்றன. உணமையான இலக்கியம் எது என்பதையும், வணிக இலக்கியம் எது என்பதையும் தெரியாத வண்ணம் மிக நுட்பமாகக் கடை விரிக்கின்றன. இந்த அரசியலின் மத்தியில் சிக்குண்டு தவிக்கும் வாசகன் எதைத் தேர்ந்தெடுப்பது என்று விழிக்கின்றான்.

இவை அனைத்தும் ஒரு புறமாக இருக்கக் கடந்த நூற்றாண்டின் இலக்கியப் போக்குகளில் இருந்து 21-ஆம் நூற்றாண்டின் இலக்கியப் போக்குகள் புதுவிதமான, நுட்பமான போக்குகளை உருவாக்கிக் கொண்டு வெளிவருகின்றன. இத்தகைய அதிநவீன எழுத்துகள் எண்பதுகளில் இருந்து தமிழிலக்கியத்தின் மரபுக்கு எதிரான மாற்று கேள்விகளை எழுப்பிவருவதற்குக் காரணம் இலத்தீன் அமெரிக்கா எழுத்துகளே ஆகும். அதன் தாக்கத்தால் உருவான நவீன இலக்கியத்தின் உச்ச பட்ச வளர்ச்சியில் மார்க்சியம், உலகமயமாதல், தத்துவம், உளவியல் போன்றவற்றைப் அறிமுகப்படுத்திப் புதுவிதமாகப் பிரதிபலித்தன. போர்ஹெஸின் சிறுகதைகளும், இட்டாலோ கால்வினா, மார்கியூஸின் நாவல்களும் தமிழிற்கு வந்து சேரும் போது தமிழில் உருவாகியிருந்த வெற்றிடம் கேள்விக்குள்ளாயின. இதனை ஈடுசெய்யும் பொருட்டுத் தமிழவன் துவங்கி கோணங்கி, எஸ்.இராமகிருஷ்ணன், ஜெயமோகன், பிரேம்-ரமேஷ் போன்றவர்கள் மாற்றுப்பிரதிகளை முன்வைத்தனர். தமிழிற்கு அமைப்பியல்வாத சிந்தனையை 80-களில் தமிழவன் கொண்டு வந்ததின் தத்துவவிளைவாக நவீன அமைப்பியல் சார்ந்த சிந்தனாப்பள்ளி ஒன்று உருவாகி வளர்ந்து வருகின்றது. வடிவமற்ற கதைசொல்லல் முறை இருக்கும் மரபுகளை உடைத்துக் கொண்டு வெளிவந்தது.

தமிழவன் என்ற கதைசொல்லி 1963-இல் துவங்கி இன்று வரையிலான நெடிய காலகட்டத்தில் கதைசொல்லும் மரபில் புதுவித மாற்றங்களைப் அமைத்துள்ளார். அவருடைய மூன்று தொகுப்புகளைப்பார்ப்போம். “தமிழவன் கதைகள்” என்ற தொகுப்பு 1992-இல் 13 கதைகளோடு வெளிவந்துள்ளது. இந்தக் கதைகளில் சமகால எழுத்துகளில் இருந்து சற்றுமாறி நவீனமான எழுத்துகளை உருவாக்கியுள்ளார். அதாவது “பூட்ஸ் கால்களில் சிக்கிய நட்சத்திரங்கள்,” “கைது செய்பவர்களும் காத்திருப்பவர்களும்,” “தகரகொட்டாய் மற்றும் தவளை மனிதர்கள்,” “காரல் மார்க்சும் தாணு ஆச்சாரியும்” என்று அழகியல் அல்லாத தலைப்புகளை முன் வைத்துப் படைத்துள்ளார். மரபாக இருந்த காலகட்டத்தில் பிரமிப்பையூட்டும் தலைப்புகளிலும் நம்ப முடியாத தலைப்புகளிலும் கதைகள் வெளியாகியுள்ளன என்பது இன்று நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. இதனைத் தொடர்ந்து மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2011-இல் “இரட்டைச் சொற்கள்” என்ற சிறுகதைத் தொகுப்பில் 20 கதைகள் வெளியாகியுள்ளன. இந்தக் கதைகளின் கதைத்தளம் பின்நவீனத்துவ பாணியைக் கைக்கொண்டு கதைசொல்லி யாரென்றே சொல்ல முடியாத அளவிற்குக் கதைகள் ஆழ் மன நிலையில் இருந்து கலைத்துப் போடப்படுகின்றன. இந்த நிலை வாசகனை ஒரு இருண்மைக்குள் அழைத்துச் செல்கின்றது. இத்தொகுப்பில் உள்ள 20 கதைகளும் ஒன்றிற்கொன்று எந்தத் தொடர்பும் அற்ற கதைகளாகவே உள்ளன. கதைப்பின்னல் வெவ்வேறான கதைத்தளங்களைக் கொண்டு அதன் அர்த்தம் ஆழத்தைக் கூட்டுவதாக அமைந்துள்ளது. ஆகவே கதைக்குள் ஆழமான, சிக்கலான விவாதங்களைக் கொண்டு வந்து சேர்க்கின்றன. தொடர்ந்து கதைகளை வளர்க்க பலவித கோட்பாடுகளை முன்வைத்தும் கதைகள் நகர்த்தப்படுகின்றன. கதைத்தளம் தமிழ்ச் சிறுகதைகளைத் தாண்டி உலகளாவிய பிரச்சினைகளையும் இலக்கியநுட்பங்களையும் முன்வைத்து 21-ஆம் நூற்றாண்டின் தமிழ் அடையாளங்கள் அழிக்கப்பட்டதை விவாதத்திற்கு உள்ளாக்குகின்றன. சிறு கதைகளுள் தமிழ்த் தேசியத்தின் அடையாளமாக மொழிக்குள் தேசம் உருவாக்கப்படுகின்றது. அதாவது 21-ஆம் நூற்றாண்டில் இலங்கையில் தமிழ் அடையாளங்கள் அழிக்கப்பட்டன. அதற்குப் பிறகு தமிழ்த்தேசியம், தமிழ் அரசியல் என்பதெல்லாம் கதையாடலாக்கப்பட்டன. அதாவது கற்பனைக்குள் தேசம் கொண்டு வந்து சேர்க்கப்படுகின்றது.

முதன்முலில் தேசம் என்ற கருத்தாக்கத்தை உருவாக்கியவர் பெனிடிக்ட் ஆண்டர்சன்(Benedict Anderson). இவர் எழுதிய “Imagined Communities” என்ற நூலில் நாவல் எழுதுவதன் மூலமாகத் தேசம் கட்டமைக்கப்படுகின்றது என்கிறார். இவரின் தேசம் என்னும் கருத்தாக்கத்தை விரிவு செய்து“Nation and Narration” என்ற நூலில் ஹோமிபாபா குறிப்பிடுகிறார்.இந் நூலில் தேசம் கிடைக்கும் போது தான் நாவல் பிறக்கிறது, உருவாகிறது என்று விரிவாய் சர்ச்சிக்கப்பட்டுள்ளது.

இந்திய சுதந்திரத்தின் போது வெளிவந்த இலக்கிய வடிவங்களின் மொத்த வெளிப்பாடும் இந்திய தேசத்தினை உருவாக்கும் வெளிப்பாடாகவே அமைந்தன.
21-ஆம் நூற்றாண்டில் தமிழ் அடையாளங்கள் அழிக்கப்பட்ட போது தோன்றிய இலக்கிய வடிவங்கள் (கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, சினிமா) தமிழ்த்தேசியம், தமிழ்த்தேசம், உருவாக்கத்தினை உரத்த குரலில் வெளிக்கொண்டு வந்தன. இக்கருத்தை மூலகதையாகக் கொண்ட புனைகதைகள் புதிய உந்துதல்களோடு வெளிவந்தன. அதாவது பூடகமாகவும் வெளிப்படையாகவும்- ஆதரித்தும், எதிர்த்தும் பல புனைகதைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த வகையில் இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள் தமிழ்த்தேச அடையாளத்தொனியை முன்வைக்கின்றன.

இந்தச் சிறுகதைகள் இறுக்கமான மொழிநடையைக் கொண்டுள்ளன. அதற்குப் பழைய தொன்மங்கள், மேற்கத்திய நவீனக் கோட்பாடுகள், தத்துவங்கள், வரலாறுகள், அறிவியல் தன்மைகள் போன்றவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கதைக்குள் கதைசொல்லியின் குரல் மட்டுமே ஒலிக்காமல் ஒரு சில இடங்களில் வாசகனின் கேள்விக்குப்பதிலும் அளிக்கப்படுகின்றது. அதாவது வாசகனை ஈர்க்கும் உத்திப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது இச்சிறுகதைகளில். கதைக்குள் நேர்கோட்டுக் கதைசொல்லல் இல்லாமல் ஒரு திருகு அமைப்பும் பின்நவீனத்துவமும் கலந்தே காணப்படுகின்றன. கதைகளின் உள்ளியக்கத்திற்கு வலிமை சேர்ப்பது கதைகளின் வைப்புமுறை ஆகும். எந்தக் கதையும் மற்ற கதைகளின் தொடர்ச்சியாகவோ, சார்ந்தோ அமையவில்லை. ஒவ்வொன்றும் புதிய வடிவமாகவே காணப்படுகின்றது. இது வாசகனின் வாசிப்பிற்கு ஒரு தடையற்ற தன்மையை ஏற்படுத்துகின்றது.

இலக்கிய விமர்சனக் கட்டுரையின் தன்மையைக் கதையாகப் பயன்படுத்துகின்றன இத்தொகுப்புச்சிறுகதைகள். இவற்றில் ஒற்றைக்குரல் முனைப்பு அழிக்கப்பட்டுப் பலகுரல்கள் பேசுகின்றன. அகில உலக்க் கதைப்போக்குகளை இக்கதைகள் கொண்டுள்ளன. இந்தச் சிறுகதைகள் உண்மையிலும், உண்மையற்றதிலும் தொடங்கப்படுகின்றன. மேலும் உயிர் உள்ளதையும், உயிர் அற்றதையும் இணைத்துப் பேசுகின்றன. கனவிலும், எதார்த்தத்திலும் கதைகளை வைத்துப் பேசுகின்றன. பின்நவீனத்துவத்தின் உச்சக்கட்ட கதையாடலைக் கொண்டது இந்தச் சிறுகதைகள்.

“போர்ஹெஸ் கதைகள் உலகப் புனைகதைக்குள் வந்த பிறகு தமிழ்க் கதைக்குள்ளும் அவற்றின் தொனிப்பும் வாக்கிய அமைப்பும் வந்தன. இது ஆங்கில வாக்கியத்திலிருந்து போர்ஹெஸ் கதையைத் தமிழிற்குக் கொண்டு வந்தவர்களுக்குத் தெரியும். தமிழ் வாக்கியம் இயங்கும் தமிழ் மனமும் போர்ஹெஸ் கதைவாக்கியம் இயங்கத் தேவைப்படும் தமிழ் மனமும் வேறுபட்டவை என்று. இதனைத் தமிழில் வேறுபடுத்த முடியாமல் புது அழகியல் தோன்றியுள்ளது.” இந்த இரண்டு வித வாக்கியத்துக்கான மனநிலையை ஒன்றுபோல் மாற்றியுள்ளது இச்சிறுகதைகள்.

70, 80-களில் உருவாக்கப்பட்ட கதைகள் லட்சியம் என்பதை மையமிட்டதாகவே இருந்தன. இந்த லட்சியப் போக்கு மாறி வரும் போது போராட்டங்கள் மூலம் தீர்வு காண முடியும் என்ற கருத்தாங்களாக மாறிற்று. இதற்குக் காரணம் ரஷ்ய புரட்சி, மாஸ்கோவின் வெடிப்பு, லெனின் மாற்று அரசியல் போராட்டம், காரல் மார்க்சின் மூலதனம், ஸ்டாலின் புரட்சிக்குக் கிடைத்த வெற்றி போன்றவைகளாகும்.

இவற்றை உள்வாங்கிய தமிழ் அரசியல் சூழலில் பெரியார் பிராமணர்களையும் வேதங்களையும் எதிர்க்கத் துணிந்தார். மொழி எதிர்ப்பு என பல படிகளில் வெளிப்பட்டன. இத்தகைய உந்துதல்களின் விளைவாக முதலாளித்துவத்தை எதிர்த்த தலித்துகள் கீழ்வெண்மணியில் கொல்லப்படுகிறார்கள். இதனால் ஒரு வகையில் முதலாளித்துவ அரசியலைத் தக்க வைத்துக் கொள்ளுதலும், முதலாளித்துவத்தை அழித்துச் சமநிலைக்குக் கொண்டு வருவதுமான எதிர் இணைவுகள் சமூகத்தில் எழுச்சிப் பெற்றன. இவற்றை முன்வைத்துப் பல இலக்கியப் பிரதிகள் போரட்டத்தின் மூலம் வெற்றி கிடைக்கும் என்ற உச்சக்கருத்தை மையப்படுத்தி எழுதி குப்பைகளாகத் தள்ளின. பிராமணிசமும், முதலாளித்துவமும் வேறு வடிவில் காலூன்றியதைப் புரிந்து கொள்ளாத வறட்டு மார்க்சியமும் எதுவும் செய்ய இயலாமல் நுனி மழுங்கிய அயுதமாயிற்று.

அடுத்து இரண்டாம் கட்டமாக அரசியலுக்கு எதிரான மாய எதார்த்தத் தன்மை இலக்கியப் பிரதிகளில் மிக வேகமாகப் பரவ ஆரம்பித்தது. இது சமூகத்தையும் முந்தைய பிரதிகளையும் பகடிச் செய்துகொண்டு மாயத்தன்மையுடன் வெளிவந்தது.

இது தமிழ் அறிவுலகிற்கு வரும்போது தமிழ் தன்மைக்கொண்ட மாயஎதார்த்தவாதமாக உருப்பெற்றது. இந்தத் தன்மையால் புதுவித மாற்றங்கள் வந்தன.

இன்றைய காலகட்டத்தில் இலட்சியம், புரட்சி, தீர்வு என்பவைகளை நோக்கிய பயணங்கள் மங்கலாயின. அதாவது தற்போது வெளிவரும் பிரதிகள் எந்த நோக்கமும், நம்பிக்கையும் அற்று ஒரு மாய்மாலத் தன்மையில் வெளிவருகின்றன. சமூகம், அரசியல், வரலாறு இவைகளைக் கூர்ந்து கவனித்தவாறு அடுத்தக் கட்ட முன் நகர்த்துதல்களுக்குப் புதுவித சிந்தனாப்போக்கை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்ற காத்திருப்புகளோடு அமுக்கலாக வெளிவருகின்றன. இந்த அமுக்கலான பிரதிகளுக்கு 2015-இல் உயிர் எழுத்து இதழில் வெளிவந்த தமிழவனின் மூன்று சிறுகதைகளைக் காணலாம்.

தமிழவனின் 1970-இல் இருந்த உணர்வெழுச்சி, போராட்ட குணம் (நக்சல் மனோநிலை) 80-களுக்குப் பிறகு நவீனத்துவம், பின்நவீனத்துவம் மாய எதார்த்தவாதத்தின் மூலம் சாதிக்க முடியும் என்று வெகுண்டெழுந்த மனம் 2009ற்குப் பிறகுமாறுகிறது. இலங்கையில் தமிழ் அடையாள அழிவிற்குப் பிறகு வெளிவந்த தமிழவனின் பிரதிகள் மங்கலானதாக மாறுகின்றன. எதிர்ப்பு என்பது பலவகை க்குணம் கொண்டது என விளக்கப்படுகிறது.இந்த மாற்றங்களுக்குச் சமூகத்தில் ஏற்பட்டு வரும் குவலயமய ஏற்றத்தாழ்வுகளும், அரசியல் சூழல்களும் மைய காரணமாகின்றன.

புத்தகக்கடை என்ற சிறுகதை பின்நவீனத்துவத்தின் அடுத்தக்கட்டமாகும். இந்தக் கதையின் தன்மை முற்றிலும் மாறுபட்டது. கதையின் துவக்கத்தில் ஒரு புத்தகக்கடையைத் தேடிக்கொண்டு கதைசொல்லி ஒரு நகரத்தின் தெருக்களில் வழிகேட்டு அலைகின்றான். அவனுக்கு வழி சொல்லும் நபர் ஒரு குழந்தையுடன் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கொண்டே வழி சொல்கிறான். குழப்பமான நகரத் தெருக்களில் புத்தகக்கடை தொலைந்து போக திரும்பவும் வழி சொன்னவனிடமே வருகின்றான். மீண்டும் விட்ட இடத்தில் இருந்தே புத்தகக்கடையைத் தேடுகின்றான். இறுதியில் கடையைக் கண்டுபிடித்துவிடுகிறான்.

இந்தக் கதையில் புத்தகக்கடையைத் தேடுபவன், வழி சொல்பவன், நகரத்தெருக்கள், சமூக ஏற்றத்தாழ்வு, உலகமயமாக்கல் அனைத்தும் ஒரு மங்கலானத் தன்மையில் படைக்கப்பட்டுள்ளன.

  1. இந்தக் கதையில் புத்தகக்கடையைத் தேடுவது என்பது வாழ்க்கையில் தேடிக்கொண்டிருக்கிற உண்மை.
  2. தெருக்கள் என்பது நகரமயமாக்கலுக்கும், உலகமயமாக்கலுக்கும் இடையில் நசுங்கும் தன்மை.
  3. கதைசொல்லி, புத்தகக்கடை, இரண்டும் முக்கியமற்ற கதாபாத்திரங்கள். தேடுவது மட்டும் கதை நகர்த்தலுக்குப் பயன்படும் முதல் கதாப்பாத்திரம்.

கதை நேராகப் போகாமல் பக்கவாட்டில் வளர்ச்சி (lateral growth) அடைந்து செல்கிறது. கதை ஒன்றில் ஆரம்பித்து இன்னொன்றாக வளராமல் ஆரம்பித்த இடத்திலே முடிகின்றது.

 

அடுத்து ‘நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்’ என்ற தமிழவனின் சிறுகதைத்தொகுப்பு அண்மையில் புதுஎழுத்து வெளியீடாக வந்துள்ளது. 22 கதைகளைக் கொண்ட இத்தொகுப்புத் தமிழில் இதுவரை பயன்படுத்தப்படாத சாத்தியப்பாடுகளை முன்வைக்கும் முகமாக அமைந்துள்ளது. முதல் சிறுகதை: உங்களுக்குப் பாரம்பரியம் இல்லையென்பது உண்மையா? இக்கதை, கோவை இரயில் நிலையத்தில் துவங்கி பாலக்காடு இரயில் நிலையம் வரை பொழுதுபோக்குக்காகச் சென்று வரும் இராமநாதனும் ஒரு வெள்ளைகார துரையும் பேசிக்கொள்ளும் தன்மையில் அமைந்துள்ளது. இந்தக்கதையில் கதை என்பது இல்லை. கதை இல்லாமலும் கதை சொல்லமுடியும் என்ற நவீன உத்தி இதில் கையாளப்பட்டுள்ளது. உரையாடலுக்கு நடுவில் ஜன்னலுக்கு வெளியே உள்ள மரம், செடி, கொடி, வேலி, பூக்கள் என பேசாத பொருட்கள் மூலம் பேச வைக்கின்றது குறியீட்டு முறையில் அமைந்த இக்கதை. வாசகனின் ஒரு தொனிப்பில் சிக்காத சிக்கலான கதை எங்குமே இல்லை. உரையாடல், மௌனம், என சில நேரங்களில் தலையசைத்துக் கதை நகர்த்துதலை வாசகன் செய்கிறான். கதைசொல்லிக்கும் வாசகனுக்கும் இடையிலான இடைவெளி அழிக்கப்பட்டு வாசகனும் தனக்கான கதையை வாசிப்பின் ஊடாக விரிக்கின்றான். இத்தன்மை சிறுகதையின் அடுத்த தளத்திற்கு வாசனின் வாசிப்பு அனுபவத்தைப் பொறுத்து அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கை ஏற்படுகின்றது.

ஒவ்வொரு வாசிப்பிற்கும் வெவ்வேறு அர்த்தத் தளங்களை உருவாக்கி இயக்கும் சக்தியுடன் இக்கதையின் அமைப்புமுறை பின்னப்பட்டுள்ளது. இந்தப்பின்னல் ஒரு முரண் தன்மையையும் ஈர்ப்பையும் கொண்டு சேர்க்கின்றது. சிக்கல் இல்லாத சிக்கலை உருவாக்குவதிலும் அழிப்பாக்கம் செய்வதிலும் மூலகதையும் கிளைக்கதையும் கதைகளைத் தமக்குள் தாமே பகிர்வதாகவும் கேள்விகேட்பதாகவும் வெட்டுப்படாமல் தப்பித்தாடும் ஆடுபுலிஆட்டமாக நகர்த்தப்படுகின்றன. இத்தகைய நகர்த்தல் இதுவரை தமிழ்க்கதைகளில் கையாளப்பட்டதா என்பது கேள்வியாகவே உள்ளது.

இரண்டாவது சிறுகதையின் தலைப்பு: நீ புரிந்துகொள்வாய் இறுதியாக. இதன் மையக் கதை இது. பழைய காதலியும் மனைவியுமான வார்ஸாவில் வாழும் அன்னாவைச் சந்திக்கச் செல்கிறான் ராஜா. இருவருக்குமான உரையாடல் மெல்ல நீள்கின்றது. வார்ஸாவின் நகர தெருக்களில் நடந்தவாறு, பழைய கட்டிடம், புதிய கட்டிடம், ஹோட்டல்கள் என இவர்களின் உரையாடலின் நடுவில் வந்துபோகின்றன. இடையிடையே குறுக்கீடாக டூரிஸ்டுகள் வந்து செல்கின்றனர். கதையில் எவ்விதமான ஒழுங்கும் பின்பற்றப்படவில்லை. குறுக்கீடுகளால் கதை உதிரியாக்கப்பட்டுக் கதை நகர்கின்றது. அவனும் அவளும் தத்தம் நினைவுகளில் இருந்து பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்சென்று இளமையை நிரப்புகின்றனர். உனக்கு முடி நரைத்திருக்கின்றது என்கிறாள். அவன் நீ அப்படியே இருக்கிறாய் என்கிறான். சர்ச் ஒன்றின் முன்னால் இவர்கள் கடந்து செல்லும் போது பழமை அவனுக்குப் பிடித்ததாகவும் தெருக்களில் உள்ள புதிய புதிய கட்டிடங்கள் அவளுக்குப் பிடித்ததாகவும் பழமையும் புதுமையும் முரணாய் இணைகின்றன. வாழ்க்கையும் அதே போன்று கிழக்கும் மேற்கும் இணைந்து நவீன கலாச்சார பரிமாற்றம் ஒன்று வாசகன்முன் விரிகின்றது. முரண் பெரிதாகி ஓரிழையில் கதையில் அவன் தன்னுடைய பத்து வயது மகளைப் பார்ப்பதற்காக வந்து இறுதியில் பார்க்காமல் செல்கிறான்.  உரையாடல்களின் மூலம் பலவிதமான நுண்ணிய காட்சிப்படுத்தல்கள் வாசகனின் மனதில் இடைவெளிகளை இட்டு நிரப்பும் தொனிப்பில் கதை நகர்கின்றது.

கதையைத் தேடும் போது கதை தென்படுவதில்லை. உரையாடலும் நகரவருணனையும் கதையை நகர்த்திக் காட்சிப்படுத்தல் மூலம் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இதுவரை பயன்படுத்தப்படாத உத்தி இத்தொகுப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கதைசொல்லி தொடர்ந்து ஒரு கதையைச் சொல்லாமல் காட்சிகள், குறியீடுகள், குறுக்கீடுகள் மூலம் கதை நகர்த்துகின்றது. துண்டு துண்டான செருகல்களை ஆங்காங்கே செருகுவதன் மூலம் கதை முழுமைபெற்றதாகவும் முழுமை பெறாததாகவும் ஒருவித மிதப்புதத்துவத்தின் வெளிப்பாடாகவுள்ளது. இந்தக் கதைகளின் உரையாடல்களில் கேள்விகளுக்கு நேரடி பதிலோ விளக்கமோ இல்லை. தலையசைத்துத் தாவிச்செல்லுதல் நிராகரித்தல் என புதுவித வர்ணஜாலத்தில் வாசகனின் ஊகத்திற்கு எதிரான கதைகளம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தகைய கதைக்களம் கரைந்தும் விரவியும் நீர்த்தும் வெவ்வேறுவிதமான பரிணாமங்களைத் தருகின்றது. கதைகள் சிதைக்கப்பட்டும் அழிப்பாக்கம் செய்யப்பட்டும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இத்தொகுப்பில் உள்ள் கதைகளின் உரையாடல் வித்தியாசமான தொனிப்பில் புனையப்பட்டுள்ளன. இது எதார்த்தமும் ஏக்கமும் தவிப்பும் கலந்த கலவையாகத் தனக்கான முகங்களை இயல்பாகக் காட்சிப்படுத்தாமல் யூகிக்கமுடியாததொரு மூலையில் இருந்து வாசகனைப் புரட்டி எடுக்கின்றது. அதிர்ந்து போகும் வாசகனின் பிரதிக்கும் அவனுக்குமான உறவு மிக நெருக்கமடைகின்றது. இந்த நடைக்கு காமமோ வசீகரமோ பயன்படுத்தாமலே ஒருவித உயிர்ப்புத்தன்மை பிரதிக்குள் இயக்கமுறுகின்றது. இந்த இயக்கமுறும் தன்மை கவனிக்கத்தக்கது. இதுவரை தமிழ்ச் சிறுகதைகளின் வரலாற்றில் இந்த உத்தியைக் கையாண்டுள்ளனரா என்ற கேள்வி வாசகனின் மனதில் பல இடங்களில் மிகத் தீர்க்கமாக எழுகின்றது.  “இது அவன், இது அவள் ………இது” போன்ற உரையாடல்கள் தமிழ்ச் சிறுகதைகளில் இடம்பெற்றுள்ளதா என்பதும் சந்தேகமே. உரையாடல்களுக்கு மத்தியில் வரும் மூன்றாவது கதாபாத்திரம் தன்னைத் தானே குறுக்கிட்டுக்கொண்டும் அறிமுகப்படுத்திக்கொண்டும் அழிந்தொழிகின்றது. தொடர்ச்சியான கதைகள் நேர்கோட்டிலோ குத்துக்கோட்டிலோ தனக்கான பணியினைச் சீராகவும் சிதைவாகவும் தன் பாணிக்கேற்ப இயக்கமுறுத்துகின்றன.

தமிழில் இன்றைய நவீன கதைச்சூழலுக்கு ஆரம்ப கட்ட கதைசொல்லல் மரபுகளில் இருந்து பூடகமான மாற்றங்கள் சமூக காலகட்டங்களுக்கு ஏற்ப தன்னைத்தானே மாற்றியமைத்துக் கொண்டு வந்துள்ளன. இந்த மாற்றங்களைத் தனித்த ஒரு சிந்தனாப்பள்ளியாகவே வளர்த்தெடுத்தவர் தமிழவன் என்று கூறலாம். தமிழவன் தான் வாசித்த மேலைத்தத்துவங்களையும் இலக்கியக்கோட்பாடுகள் மற்றும் இலக்கிய வகைமைகளைத் தமிழிற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நிலையில் தொடர்ந்து கோட்பாடு, நாவல், சிறுகதை, விமரிசனம், திறனாய்வு என்ற பல வெளிகளைப் பயன்படுத்தி இலக்கியத்துள் வளம் சேர்த்தவர். நவீன இலக்கியத்தின் மைல்கல் என்று சொல்லப்படும் அளவிற்கு இவருடைய சிந்தானப்புலம் ஒன்றிலிருந்து இன்னொன்றாகத் தாவிக்கொண்டே இருக்கின்றது.

ஆரம்ப கதைசொல்லலில் இருந்து 2015-இல் வந்த கதைகள் வரை கதைசொல்லல் சமூக, அரசியல் காரணிகளுக்கேற்ப தன்னைத்தானே தகவமைத்துக் கொண்டும் உலகளாவிய இலக்கியதாக்கங்களைத் தமிழிற்குக் கொண்டுசேர்த்தும் தொடர்ந்து பலசோதனை முயற்சிகளைக் கையாண்டும் புதுப்புது களன்களை உருவாக்கியுள்ள தனித்தன்மையையும் காண முடிகின்றன. இந்தப் பின்புலங்களின் வாயிலாகத் தமிழ்ச் சிறுகதையின் வளர்ச்சிநிலையைப் பார்க்கும் போது புதுவிதமான பரிமாணங்களை அது எட்டியுள்ளது என்பதை எவராலும் மறுக்கவியலாது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>