தமிழ் நாவல்களின் தனிப்பாதையில் தமிழவன்
க. முத்துக்கிருஷ்ணன்
(நாவலாசிரியர் க. முத்துக்கிருஷ்ணன் சென்னையிலிருந்து வரும் ‘ புதுப்புனல்’ மாத இதழில் (April –May 2018) எழுதிய கட்டுரை. )
தமிழவன் அவர்கள் இலக்கியம், விமர்சனம், பல்கலைப் பேராசிரியர், நவீனத்துவம் ஆகிய பல் துறைகளில் தனக்கென ஓர் இடம் பதித்திருப்பினும் நாவலாசிரியர் என்னும் வகையில் தமிழில் முற்றிலும் மாறுபட்ட வித்தியாசமான படைப்புகளைத் தந்தவர் என்று சொல்லத்தக்க விதத்தில் அவருடைய பல நாவல்கள் அமைந்துள்ளன.
1970களில் புதுக்கவிதையில் தனது கவனத்தைச் செலுத்தி வந்த தமிழவன் மெல்ல மெல்ல ஒரு விமர்சகராக உருவெடுத்துப் (இருபதில் கவிதை என்னும் நூல்) பின்னர் புத்துத்திகளைக் கையாண்டு நாவல்கள் படைத்தலின் மூலம் ஐரோப்பிய, அமெரிக்கா, துருக்கிய நாவல் இலக்கிய வளர்ச்சிக்கு ஈடாகத் தமிழில் நாவல் இலக்கியத்தை ஒரு முன்னோக்கிய பாதையில் வழி நடத்த முனைந்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். கவிதை, நாடகம், விமர்சனம் என்ற வகைமைகளைத் தாண்டி இவரது நாவல்கள் பரிணமிக்கின்றன. சாதாரண, பாமர மக்களின் வாழ்க்கையிலிருந்தும் இன்றைய அரசியலாளர்களின் போக்கு குறித்தும் இன்னும் பன்னாட்டு கலாச்சாரம், அரசியல், இலக்கியம் ஆகியவற்றிலும் இவரது நாவல்கள் ஊடாடிச் செல்வதை வேறெந்த நாவலாசிரியர்களிடம் தமிழில் காணக் கிடைக்கப் பெறவில்லை. பெரியதொரு அரசியல் விவரணையை ஒரே ஒரு பக்கத்தில் குத்தீட்டியாய் அவரால் விவரிக்க முடிகிறது. இதுவே தமிழவனின் தனிச் சிறப்பு.
தொல்காப்பியம் போன்ற மிகப் பழமையான இலக்கண நூல்களின் பாரம்பரியத்தில் தமிழில் புதுப்புது இலக்கியங்களை உருவாக்குவதில் தன் வாழ்நாட்களின் பெரும்பகுதியைச் செலவிட்டார். அதனைக் காட்டிலும் உருவாக்குதலைவிட பழமையிலிருந்துப் புதுமையை மீட்டெடுத்தார் என்றே சொல்லலாம்.
நாவல்கள் என்றாலே ஒரு ஸ்டீரியோ டைப் என்ற நிலையில் தமிழில் இருந்ததை மாற்றி புதுவிதமான மொழி நடையுடனும் எந்தவொரு கருப்பொருளையும் கையாளலாம் என்ற தைரியத்தையும் உருவாக்கினார்.
“இலக்கியம் வாழ்க்கையின் சகல பரிமாணங்களையும் உள்ளடக்கியது. சாதாரண மனிதனும் அதில் ஈடுபட முடியும். அந்த முறையில் இலக்கியத்துக்குள் இருந்த ஒரு பரிமாணம், தமிழர்கள் பற்றிய அகில உலக கரிசனை”
என்று தமிழவன் ‘தமிழுணர்வின் வரைபடம்’ என்ற தனது கட்டுரைத் தொகுப்பின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். இச்சொற்களிலிருந்து தமிழிலக்கியம் பற்றி தமிழவனின் கரிசனம் புரியும்.
சரித்திரத்தில் படிந்த நிழல்கள், ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள், வார்சாவில் ஒரு கடவுள் ஜி.கே. எழுதிய மர்ம நாவல், முஸல்பனி ஆகிய நாவல்களைத் தொடர்ந்து ‘ஆடிப்பாவை போல’ என்ற நாவலைத் தற்சமயம் வெளியிட்டிருக்கிறது எதிர் வெளியீடு.
நாவல்கள் எல்லாமே, ஏதோ ஒரு முன்னுரையைப் பெற்றிருக்கும், அல்லது விளக்க உரையை விவரித்திருக்கும் அல்லது அவற்றில் சரித்திரப் பின்னணி சான்றுகளுடன் சொல்லப்பட்டிருக்கும். இந்த, ‘ஆடிப்பாவை போல’ என்ற நாவலில் ஆசிரியரின் முன்னுரை ஏதுமின்றி வாசிக்க வழிகாட்டல் என்ற வழிகாட்டுதல் வழங்கப்பட்டிருக்கிறது. அதில் மூன்று வகைகளில் இந்த நாவலைப் படிக்கலாம் என்றும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டிருக்கிறது. அதில் மூன்று வகைகளில் இந்த நாவலைப் படிக்கலாம் என்றும் முதல் வாசிப்பு, இரண்டாவது வாசிப்பு, மூன்றாவது வாசிப்பு என்று மூன்று வகை வாசிப்பு முறைகளை வகைப்படுத்தியுள்ளது. இது ஒரு புது முறையாக நாவலை நெருங்கும் ஓர் அணுகலை உணர்த்துகிறது. இது தமிழுக்கு ஒரு புதிய முறையாகத்தான் தோன்றுகிறது.
அடுத்து, தமிழில் இதுவரை வெளிவந்த எல்லா நாவல்களும் 1, 2, 3 என அத்தியாயங்களாகப் பகுக்கப்பட்டிருக்கும். அல்லது பல தலைப்புகளைத் தாங்கிய அத்தியாயங்களாக அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் ஆடிப்பாவை போல என்ற இந்த நாவல் பண்டையத் தமிழ் இலக்கண வகைக் கோட்பாடுகளான அகம் புறம் என பகுக்கப்பட்டுள்ளன. அதனுள் வரும் பிரிவுகளாக களவியல், கற்பியல் என்ற இலக்கிய வகைமைப் பிரிவுகள்போல இயல் 1, 2 என 19 வரை நீளுகிறது. இது திருக்குறளின் களவியல், கற்பியல் போன்ற பாகுபாட்டினை நினைவு கூர்கிறது. பழந்தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்களின் அடிச்சுவட்டில் அமைக்கப்பட்டிருத்தல், பழைமையிலிருந்து புதுமையினை மீட்டெடுத்தல் என்ற புதிய கண்டுபிடிப்பைக் காண முடிகிறது.
பண்டைய தமிழ் இலக்கணக் கோட்பாட்டின்படி அகம் என்றால் காதல், புறம் என்றால் வீரம் என்றும் பல தமிழ் அறிஞர்கள் பல கட்டுரைகளில் தமிழர்களின் வீரம் பற்றியும் காதல் பற்றியும் விவரியோ விவரி என்று விவரித்துத் தள்ளியிருக்கிறார்கள். இந்நாவலில் காந்திமதி, வின்சென்ட் ராஜா ஆகிய இருவரின் காதல் அகம் என்ற உள்ளடக்கத்தில் வருவதாக நாவல் படிப்போரை நினைக்க வைக்க முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல இந்தி எதிர்ப்புப் போர் என்பதைத் தமிழர்களின் வீரத்தை விவரிக்கும் பாணியில் புறம் என்ற பகுப்பில் வைக்கப்பட்டிருக்கிறது. அதையும் தாண்டி அகமும் புறமும் கலந்து ஓர் அகப்புற இலக்கியமாகவும் ஒரு புற, அக இலக்கியமாகவும் விரவிப் பின்னி ஊடாடிக் கிடந்து கதை 1960-70களின் தமிழ் இளைஞர்களின் வாழ்க்கையைத் தத்ரூபமாகப் படம்பிடித்துச் செல்கிறது. இது ஒரு புதுமை உத்தி என்றே படுகிறது. இது ஒரு 1960-70களின் சரித்திர நாவல் என்றுகூட சொல்ல வைக்கிறது. இடையில் கிருபாநிதி, ஹெலன், காதல் கதை எதற்காகச் சொல்லப்பட்டிருக்கிறது என்ற பூடகம் இறுதியில் சில இயல்களால் (அத்தியாயங்களால்)கூறப்படுகிறது. ஊன்றி நாவலைப் படித்தவர்களால் அந்த சூட்சுமத்தைப் புரிந்து கொள்ள இயலும்.
அகப்பொருள் தொடர்பான காதல் கதை என்றாலும் வின்சென்ட் ராஜா, காந்திமதியின் காதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்னும் புறப்பொருள் தொடர்பான போர் என்று வீரத்தன்மை கலந்த நிகழ்வுகளோடு இயைந்து கதையோட்டம் நிகழ்கிறது. அதனைப்போலவே புறப்பொருள் தொடர்பான இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்ற வீரத்தன்மை கலந்த நிகழ்வுகளோடு வின்சென்ட் ராஜா, காந்திமதியின் காதல் கதை ஊடாடிச் செல்கிறது என்பதுதான் இந்நாவலின் சிறப்பம்சம். ஆயினும் ஆசிரியர் அகம்புறம் எனப் பிரிந்து இயல்களாக வெவ்வேறு கதைகள் என்று காட்டினாலும் இரு கதைகளும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து கதையை இலாவகமாக விஸ்தரித்துச் செல்கிறது. புதியதொரு உத்தி என்று அகம்,புறம் இயல்களைக் குறிப்பிட்டாலும் கதை ஒன்றோடொன்று தொடர்புடையதாய் இருப்பதை படிக்கும்போது நன்கு உணர முடிகிறது.
தமிழவனின் பிற நாவல்களிலிருந்து ‘ஆடிப்பாவைபோல’ என்ற நாவல் எவ்வாறு வேறுபட்டுத் திகழ்கிறது என்பதை உற்று நோக்கினால் இது மிக எளிதான காதல் கதை போன்றும் ஒரு போராட்டத்தை (இந்தி எதிர்ப்பு) விவரிப்பதாகவும் தோன்றும். உள்ளுக்குள் புதியதான உத்தி பின்பற்றப்பட்டிருக்கிறது என்பதை இந்த நாவல் எங்கிருந்து பிறப்பெடுக்கிறது என்பதைக் கவனித்தால் நன்கு புலப்படும்.
நாவலின் கடைசி இயலில் கடைசி பத்திக்கு முந்தின பத்தியின் கடைசி வரியில் வின்சென்ட் ராஜா, “ஒரு நாவல் எழுதியிருக்கிறேன்” என்று வெட்கப்பட்டுக் கொண்டு காந்திமதியிடம் சொல்கிறான் என்று நாவலாசிரியர் விளக்குகிறார். இதில் ஒரு நாவல் எழுதியிருக்கிறேன் என்று ஒரு பாத்திரம் அதுவும் கதாநாயகன் சொல்வதன் உள்ளர்த்தம் என்ன என்பதைச் சிந்தித்தால் கதாநாயகன் எழுதிய நாவலைத் தான் நாவலாசிரியர் இதுவரை சொல்லியிருக்கிறார். ஆடிப்பாவைப் போல என்ற குறுந்தொகை வரியை நினைவு கூர்ந்தால் அவன் எழுதிய நாவலை இவர் சொல்லியிருக்கிறார் என்ற புதிதான ஓர் உத்தியை, உத்திபோல் தோன்றாதவாறு புகுத்தியுள்ளார். ஆடி, அதாவது முகம் பார்க்கும் கண்ணாடியில் தெரியும் உருவம் எந்த உருவம் பார்க்கிறதோ அந்த உருவத்தைத்தான் பிரதிபலிக்கும். வின்சென்ட் ராஜா என்ற கதாபாத்திரம் எழுதிய நாவலை நாவலாசிரியர் பிரதிபலிப்பதாக இதனைக் கொள்ளலாம். வின்சென்ட் ராஜா என்ற பாத்திரம், நாவலாசிரியர் படைத்த பாத்திரம் என்றபோதும் தமிழவன் உள்ளுக்குள் ஒன்று பிரதிபலிப்பது போன்ற ஒரு சுழலும் உத்தியைப் பயன்படுத்தியிருக்கிறார்.
பக்கம் 47இல் ஒருத்தன் அடி முட்டாள், இன்னொருத்தன் வடிகட்டின முட்டாள் என்ற அரசியல்வாதிகளின் விவரிப்பு நாவலாசிரியரின் துணிவை ஒரு தூக்கலான நகைச்சுவை உணர்வுடன் சொல்லப்பட்டிருப்பது நாவல் கலையின் வல்லமையை நாவலாசிரியர் கைவசம் வைத்துள்ளார் என்பதை நிலைநாட்டுகிறது. இதனைப்போல பல நிகழ்வுகளைச் சொல்லலாம்.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பேருந்து எரிப்பு, மக்களின் அவதி, மாணவர்கள் மீது காவல்துறையின் தடியடிப் பிரயோகம் எல்லாம் 1964இல் நடந்த நிகழ்வுகளை இந்தத் தலைமுறையினருக்கு லாவகமாகத் தகவல்களை ஒரு மாபெரும் சரித்திரத்தை விளக்குவதுபோல விளக்கியிருக்கிறார் தமிழவன்.
தமிழில் நாவல் இலக்கியம் தோன்றி சற்றொப்ப ஒரு நூற்றைம்பது ஆண்டுகள் பல்வேறு வளர்ச்சியைப் பெற்றுள்ளது. எனினும் முதல் நாவலான ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ புனை கதைகளாலான நகைச்சுவை நிகழ்வுகளால் நகர்த்திச் செல்லப்படுவனவதாகவே அமைக்கப்பட்டுள்ளது. அதன் பின் வந்த ‘கமலாம்பாள் சரித்திரம்’ மற்றும் ‘பத்மாவதி சரித்திரம்’ ஆகிய நாவல்கள் சமூக விழிப்புணர்வையும் சமுதாயச் சிக்கல்களையும் தீவிரமாகப் பேசத் தொடங்கின எனலாம். அதன் பின்னர் துப்பறியும் நாவல்களும் வெற்றுக் கற்பனைப் புனைவு நாவல்களும் தோன்றின. பின்னர் வரலாற்று நாவல்கள் மக்களின் மனதில் இடம் பெற்று நாவல் படிக்கும் பழக்கத்தைப் பரவலாக விரிவாக்கியது. அதனைத் தொடர்ந்து நீதிக்கதைகள் பாணியில் கட்டுரை வடிவிலான நாவல்கள் பல தமிழ்ப் பேராசிரியர்களால் எழுதப்பட்டன. அவை நாவல் இலக்கியத்தின் நுண்மையை உணர்த்துவதாக அமையவில்லை. இதிலிருந்து ஜெயகாந்தனின் நாவல்கள் மாறுபட்டபோதிலும் தமிழ் நாவல் உலகில் பிற எவராலும் புதியதொரு பாதையை வகுத்திட இயலாமல் போயிற்று. சுந்தர ராமசாமி, நீல. பத்மநாபன், லா.ச. ராமாமிர்தம் ஆகியோர் புதிய முயற்சிகளில் வெற்றி பெற்றார்கள். எனினும் அதனைத் தொடர்ந்து மேலைநாடுகளில் வளர்ச்சி பெற்ற அளவிற்கு நாவல், இலக்கியம் தமிழில் வேரூன்றாத நிலையில் தமிழவனின் நாவல்கள் மேலை நாடுகளின் நாவல்களின் தரத்திற்கு ஈடான படைப்புகளாகத் திகழ்கின்றன. இதுவே தமிழவனின் விடா முயற்சியின் விளைவாக இன்று தமிழவனின் இலக்கிய வகைமையைப் பின்பற்றியவர்களும் படிப்பவர்களும் அதிகமாகிக் கொண்டே செல்கின்றனர் என்பது உணரத் தக்கது.
ஓரான் பாமுக் (Orhan Pamuk)என்ற துருக்கிய நாவலாசிரியர் எழுதிய ‘ஸ்னோ’ என்ற நாவலில் கவிஞன் கா என்கிற கதாநாயகன், தான் செல்லுமிடங்களில் சந்திக்கக் கூடிய பாத்திரங்கள் வாயிலாக அந்த நாட்டின், அந்த நகரத்தில், உள்ள கொடுமைகள், மனித மனங்களின் சீரழிவுகள், மக்களின் ஆசாபாசங்கள், அறிவார்ந்த செயல்பாடுகள், தவிர்க்கவியலாத காம இச்சைகள் போன்ற மிகச் சாதாரணமாக மனித மனங்களில் ஊடாடிக் கிடக்கும் விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு நாவல் படுவேகமாக நகர்ந்து செல்கிறது என்பது டிசம்பர் 2014இல் கணையாழில் வெளிவந்துள்ள ‘பனி படித்ததில் பதிந்தவை’ என்ற எனது கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது. ‘சரித்திரத்தில் படிந்த நிழல்கள்’ என்ற தமிழவனின் நாவலில் சாதாரண தமிழ் மக்களின் வாழ்க்கையோடு இயைந்த மனப் போராட்டங்களையும் மனித மனக்கிலேசங்களையும் மிகவும் அற்புதமாக மிகவும் வித்தியாசமான தமிழ்மொழி நடையில் விவரித்துச் செல்லும் பாங்கு தமிழில் புத்தம் புதிய ஒன்று.
காப்ரியல் கார்ஸியோ மார்க்யுஸ் என்ற நோபல் பரிசு பெற்ற ஸ்பானிஷ் நாவல் ஆசிரியர் எழுதிய ‘One hundred years of solitude’’ என்ற நாவலுக்கு இணையாக மாறுபட்ட வடிவம் நடை கொண்ட நாவலாக தமிழவனின் ‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’(1985) என்ற நாவலைத் தயக்கமேதுமின்றிச் சொல்லலாம். ஒரு வாரிசுப் பட்டியலுடன் வம்சா வழியினரின் பெயர்கள் அடங்கிய அட்டவணையுடன் One hundred years of solitude நாவல் துவங்குகிறது. ஐந்து தலைமுறைகளின் பரம்பரையின் கதை தமிழவனின் ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் நாவலில் சொல்லப்படுகிறது. இது கணையாழி ஜூலை 2014 இதழில் வெளி வந்துள்ள ‘காபோ என்கிற மார்க்கேசும் கார்லோஸ் என்கிற தமிழவனும்’ என்ற என் இன்னொரு கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மார்க்கேசும் தமிழவனும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள நாவல்களில் சமுதாயம், அரசியல், மனிதமன வீழ்ச்சிகளை நேரடியாகக் கூறாமல் வேறொரு புதிய மொழி நடையில் மறைமுகமாகக் கூறுகின்றனர்.
மார்க்கேஸின் கதைகள் உயர்மதிப்புடையதாகவும் அதன்விஷயங்கள் அதிர்வு ஏற்படுத்துவதாகவும் மிக்க நம்பிக்கை அளிப்பதாகவும் சொல்வளம் மிக்கதாகவும் திகழ்கின்றன எனவும் ஒரு வார்த்தையைக்கூட அதனின்றும் நீக்கிவிடமுடியாத மாயஎதார்த்த தன்மைகொண்டதாகத் திகழ்கின்றன என்றும் ஜான் அப்டைக் (John Updike) என்பவர் கூறுகிறார்.( “The stories are rich and startling in their matter and… confident and elegent in their manner… They … the word cannot be avoided – magical” ). இக்கூற்று, தமிழவன் நாவல்களில் பெரிதும் பொருந்தி வருகிறது. ‘ஆடிப்பாவை போல’ நாவலும் இதனின்று தவறவில்லை. அதனைப் போலவே ‘One hundred years of solitude’ என்ற மார்க்கேஸின் நாவல் பற்றி கரோலினா ஹொரிரா என்ற விமர்சகர் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
“It’s the most magical book I have ever read, Marquez has influenced the world”. இக்கூற்று தமிழவனுக்கும் பொருந்துவதாக அமைந்துள்ளது. மாக்கேஸின் நாவல்கள் உலகளாவிய அளவில் ஆதிக்கம் ஏற்படுத்துகிறது போலவே தமிழுலகில் தமிழவனின் நாவல்கள் பெரியதொரு செல்வாக்கை அல்லது பாதிப்பை உருவாக்குகின்றன.
ஆப்பிரிக்காவிலுள்ள ஐரோப்பியர்களைப்பற்றி புதுவகையான அணுகல்முறையில் அன்பின் விவரிப்பும் ஒரு புதிய உருவாக்கமுமாகபிரஞ்சுமொழியில் புது அலை ஏற்படுத்தும் நாவலென்றும் லெகிளசியோவின் நீண்ட இலக்கியப்பணியில் மிகவியப்பிற்குரிய உன்னதங்களில் ஒன்று என்றும்(“An uncharacteristically accessible and romatic narative about Europeans in Africa from one of the avatars of the French New wave novel… The most surprising work of Le clezio’s long career, and one of his best”)
மாதமிருமுறை நியூயார்க்கிலிருந்து ,1933லிருந்து, வெளிவரும் Kirkus Review என்ற பத்திரிகையில் நோபல் பரிசு பெற்ற ஜே.எம்.ஜி. லெகிலேஸியோவின் நாவலான ஒனிஸ்ட்டா (Onitsha)என்பது பற்றிக் குறிப்பிடுகிறார் அதன் மதிப்புரையாளர். இக்கூற்றும் தமிழவனின் எழுத்துக்களுக்கு மிகவும் பொருந்தி வருகிறது என்பது கவனிப்பிற்குரியது. ‘லெ பீரான்ஸ்வெர்பல்’ என்ற தலைப்பில் பிரெஞ்சு மொழியிலும் ‘இன்ட்ரோகேஸன்’ என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும் லெ கிளேஸியோ எழுதிய நாவலில் ‘பல்லாண்டுகால அறிவுசார்ந்த விஷயங்களும், தத்துவ ஊடாடல்களும், மனித மன சஞ்சலங்களும், வாழ்வைத் தேடித் திரிந்து அலைதலையும் படிப்பவர்கள் சிந்தனைத் தாக்கத்திற்குள்ளாக்க வேண்டும் என்ற பேரீடுபாட்டையும் காணலாம்’ என்று மார்ச் 2016இல் கணையாழி இதழில் வெளிவந்துள்ள ‘பிரெஞ்சு படைப்பாளி லெ கிளேஸியோ ஒரு சிறு விவரணை’ என்ற கட்டுரை விளக்குகிறது.
பிற நாடுகளில் பெருமையோடு பேசப்படும் நாவல் இலக்கியங்களோடு ஒப்பிடக்கூடிய அளவில் தமிழவனின் நாவல்கள் அமைந்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. தமிழ் மக்கள் எப்போதுமே தேர்ந்தெடுக்கத் தயங்குகிறவர்களாயும் தவறான தேர்ந்தெடுத்தலில் முனைப்புடையோர்களாகவும் திகழ்வதால் இந்திய, தமிழகத்தின் பரிசுகள் ஏதும் தமிழவனுக்குக் கிட்டாமல் போய்க் கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி எழுத்து வல்லமை மட்டும் புகழுக்கும் பரிசுகளுக்கும் தமிழகத்தில் போதுமானதன்று என்பதும் ஓர் உண்மை.
- Muthukrishnan
291, Secretariat Colony
Duraipakkam, Chennai – 600 097.
9445329255
muthu77000@gmail.com