தமிழவன் புதினம்; தனித்துவம்

தமிழவன் நாவல்களில் பொது பண்புகள்

மற்றும் அவற்றின் தனித்துவம்:

விஷ்ணுகுமாரன்.

வரலாற்று நூற்களுக்கும், நாவல்களுக்கும் இடையேயான தொடர்பினை இலக்கியக் கல்வி பேசும். எவ்வளவுதான் யதார்த்தத்தை வரலாற்று நூற்கள் கொண்டிருந்தாலும் அதில் பேசப்படும் ஒவ்வொருவரது   யதார்த்த வாழ்க்கையும், அவரைப் பற்றிய கற்பனையான செய்தியோடு அல்லது இல்லாத செய்தியோடு நிச்சயம் தொடர்புப்படுத்தப்பட்டிருக்கும்.     இது நமது வாழ்க்கைக்கும் பொருந்தும். அதாவது ஒவ்வொரு மனிதனும் யதார்த்த வாழ்க்கையுடன் அவனைப் பற்றிய புனைவுடனுமே அறியப்படுகிறான்.

நாவல்களோ புனைவாகச் சித்தரிக்கப்பட்டிருந்தாலும்       அவை யதார்த்தத்தை வேறொரு முறையில்  கொண்டிருக்கும்.   அவை குடும்பநாவலாக, சமூகநாவலாக, துப்பறியும் நாவலாக, சரித்திர நாவலாக, சீர்திருத்த நாவலாக அல்லது எந்தவகையிலான நாவலாக இருந்தாலும் நம்பத்தகுந்த வகையில்   யதார்த்தத்தைச் சித்தரிக்க முயல்கின்றன.  இது உண்மையோ என நினைக்குமளவிற்கு யதார்த்தத்தை நெருங்கி அமையும் பட்சத்தில்  அவை வெற்றி பெற்ற நாவலாகக் கருதப்படுகின்றன. எடுத்துக்காட்டாக தமிழ்வாணனது துப்பறியும் நாவல்கள், இலட்சுமியின் குடும்ப நாவல்கள், பொன்னீலனது கம்யூனிசம் சார்ந்த நாவல்கள் போன்றவற்றைச் சுட்டலாம்.

ஆக வரலாற்று நூற்களும் தனிமனித வாழ்க்கையும்   உண்மையுடன் புனைவுகளின் கலப்பு கொண்டுள்ளனஎன்றால், நாவல்களோ  புனைவுகளில் யதார்த்தத்தின் கலப்புகளாகத் திகழ்கின்றன.

நாவல்களில் யதார்த்தத்தை நெருங்கி அமைக்கும்    நிலைமை இன்று வரை தொடர்ந்தாலும் தமிழில் 1980களில் யதார்த்த எழுத்துக்களைத் தவிர்த்த வேறு வகையான எழுத்துமுறை   தோன்றிற்று. இதற்குக் காரணம்  புதியச் சிந்தனைகள் தமிழகத்தில் பரவியதாலும், தீவிர இலக்கியவாதிகள் யதார்த்த எழுத்துக்களுக்கப்பால் வேறுவகையான இலக்கியங்களைத் தேடியதாலும் ஆகும்.   நாகார்ஜூனன், ஜமாலன், எஸ்.சண்முகம் உள்பட பல விமர்சர்களும் இக்கருத்தைக் குறிப்பிடுகின்றனர்.  இந்த கட்டுரையாளர் கூட யதார்த்த எழுத்துமுறை சார்ந்த நாவல்களை வாசிப்பதையே தவிர்த்துவிட்டார். காரணம், பலவேளைகளிலும் யதார்த்த நாவல்களின் சித்தரிப்பை விட வரலாற்று நூற்கள்தான் யதார்த்த்தைத் துல்லியமாகச் சித்தரித்தன என்பதுடன் சுவாரஸ்யத்தையும் தந்தன என்பதால்.

அத்தகைய சூழலில்தான் 1985 இல் தமிழவனின்  ஏற்கனவேசொல்லப்பட்ட மனிதர்கள் எனும்  நாவலும்,  அது போல சுந்தரராமசாமியின் ஜே.ஜே.சில குறிப்புகள் எனும் நாவலும்  வெளிவந்து  தமிழ் நாவலுலகில்   திருப்புமுனையை ஏற்படுத்தின. இவற்றுள் ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்  முற்றிலும் புதுமையான பரிணாமத்துடன் வந்ததால் அது நாவலுக்குப் பிறந்தது அல்ல என்றும்  புரியவில்லை என்றும் மரபுசார்ந்த வாசகர்கள்  கூற , தீவிர இலக்கிய வாசகர்களோ   அதைப் புதிய வகை நாவலாகக் கொண்டாடினர்.  இந்த நாவலைத் தொடர்ந்து வெவ்வேறு காலகட்டங்களில் வெளிவந்த  தமிழவனது எல்லா நாவல்களுமே வடிவத்திலும் பொருண்மையிலும்    மரபார்ந்த நாவல் வகைகளான, சமூக நாவல், துப்பறியும் நாவல்,யதார்த்த நாவல் என்பன போன்ற எந்த வகை பாட்டிற்குள்ளும் கொண்டு வர முடியாதளவிற்கு வேறொரு தளத்திற்குச் சென்றுவிட்டன.எனவே புதிய வரைவிலக்கணங்களை ஏற்படுத்தினால்தான் அந்நாவல்களை       அவற்றின் கீழ் கொண்டு வரமுடியும்.

அதனடிப்படையில் அவரது நாவல்களான ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள், சரித்திரத்தில் படிந்த நிழல்கள், வார்சாவில் ஓர் கடவுள், முசல்பனி ஆகியனவற்றில்  புதிய இலக்கண முறைகள் கண்டறியப்பட்டு  அவை நிழல் நாவல் எனும் புதியவகைமையைச் சார்ந்தவை என கட்டுரையாளரால் இவண் அடையாளப்படுத்த படுகிறது.  அவரது பிற நாவல்களான ஆடிப்பாவை போல, ஜி.கே எழுதிய மர்மநாவல் ஆகியவை வேறு வடிவம் சார்ந்தவை.

முதலில்  நிழல் என்றால் என்ன?  நிழல் நாவல் என தமிழவனது நாவல்களை ஏன் புதிதாக வகைமைப்படுத்த வேண்டும் என்பதை ஆராயலாம்.                  

நிழல் தன்னளவில் உருவாகாது; எப்போதும் உண்மை உருவத்திலிருந்துதான் எழும்- ஆனால் உண்மையைப் பளிச்சென காட்டுவதில்லை. நிழலை வைத்துக் கொண்டு   அதன் அசல் உருவை விளங்கிக் கொள்ள வேண்டும்.    எனவே நிழல்நாவல் என்ற சொல்லாட்சி, நாவலை அடிப்படையாகக் கொண்ட இன்னொரு வகையான புதிய எழுத்துமுறை என்பது புலனாகிறது.

நிழல்நாவல் என குறிப்பிடுவதற்கான  பின்னணி-  எந்தவொரு எழுத்துமுறைக்கும்    அதற்கான பின்னணி தெளிவாக உள்ளது.  முதன் முதலில் தமிழ் நாவல் 19 ஆம் நூற்றாண்டில் தோன்றியது என்றால் தமிழிலக்கியம் புதுமையை நாடி அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்துள்ளது என்பது அர்த்தம். அது போன்றுதான் புதிய எழுத்து முறையான நிழல் நாவல் எழுந்துள்ளது என்றால் ஏதோ ஒரு சிந்தனைப்போக்கு  அதன் பின்னணியில் உள்ளது என்று புரிந்துகொள்ள முடிகிறது.

இந்த (நிழல்)நாவல்கள் தோன்றியுள்ள காலமாக, இருபதாம் நூற்றாண்டின் இறுதி(1980கள் தொடங்கி)  மற்றும் இருபத்தோராம் நூற்றாண்டினை அடையாளப்படுத்தலாம். இக்காலகட்டத்தில்தான் தொலைக்காட்சி, இணையத்தளம், அலைபேசி என்பன போன்ற பல்வேறு அறிவியல் அதிநுட்ப செயல்பாடுகள் உருவெடுத்து மக்களின் வாழ்க்கை முறையையே மாற்றிவிட்டன.   பனிப்போர் முடிவுக்கு வந்தது. மேலும் உலகமயமாதல், தடையற்ற வர்த்தகம் எனும் கொள்கைகள் உலகநாடுகளை இன்னும் நெருக்கமாக்கின. பின்நவீனத்துவக் கோட்பாடுகள் பரவலாயின. உலகமயமாதல், தடையற்ற வர்த்தகம் போன்றன  நாடுகளை இன்னும் நெருக்கமாகப் பிணைத்தன. எதையும் இன்னொன்றாக மாற்றிப் பார்க்கும் மனிதச் சிந்தனைப் போக்கு தீவிரமானது. இது போன்ற நிகழ்வுகளால் அகிலத்தில் நிகழ்ந்த மாற்றங்கள் போலவே தமிழகம் உள்ளிட்ட இந்தியத் துணைகண்டத்திலும் வெகுவான மாற்றங்கள் ஏற்பட்டன.

தமிழகத்தைப் பொறுத்தவரை பல நூற்றாண்டுகளாகச் சமூகத்தில்  நீடித்து வந்த கூட்டுக்குடும்பமுறை வெகுவாகச் சிதறிப்போனது. இயற்கை வளங்கள் கடுமையாகச் சுரண்டப்பட்டன.  வேளாண்சார் நிலவுடைமை உடைந்து போய் பண்ணையார்கள் குறைந்துப் போனார்கள். கல்விபயின்றோரது வாழ்க்கை முன்னுக்கு வந்தது. மனிதர்களிடையே பணம்,சாதி அடிப்படையிலான இடைவெளி சற்று குறைந்தது. அதிகார பலம் பரவலாகியது. ஒடுக்கப்பட்டோர் சமூகத்தில் உயர்ந்தனர். பருவம் அடைந்ததும் திருமணம் வரை வீட்டுக்குள்ளே அடைக்கப்பட்டிருந்த பெண்கள் ஆண்களைப் போன்று கல்விபெற்று சொந்தக்காலில்  வாழ்க்கை நடத்தும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது. வாழ்க்கையின் எல்லா பாகங்களும் எந்திரங்களினால் இலகுவாகி விட்டன. வாழ்க்கையும் விரைவாக நடைபெறுகிறது. அத்துடன் திராவிடக் கட்சிகளின் ஆட்சி, இலங்கையில் தமிழர்களை அழித்தல் போன்ற நிகழ்வுகளும் தமிழ் இலக்கியங்களிலும் தாக்கம் ஏற்படுத்தின.

இவ்வாறான பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்த காலகட்டத்தில்தான் அல்லது சூழலில்தான் தமிழ்மொழியும் மாறுதலுக்குள்ளானது.   அதன் மூலம் தமிழ் நாவல் எழுத்துமுறைகள் இரண்டு பிரிவுகளாகி விட்டன என்று கூறமுடியும். ஒன்று-வழக்கமான யதார்த்த எழுத்துப் பாணியில் அமைந்த நாவல்கள். இப்பிரிவினுள் பெண்ணியம், தலித்தியம், கம்யூனிசம், போன்ற புதினங்கள்  முதல் துப்பறியும் நாவல்கள் வரை எல்லா நாவல்களையும் அடக்கிவிடலாம்.

இரண்டாவது வகை  காலத்திற்கேற்ற மாறுதலைக் கொண்ட, வழக்கமான   எழுத்துப் பாணிக்கு மாறான மொழிநடை கொண்டவை. இந்நடையில்தான் அறிவுசார் எழுத்துக்கள் சிறுபத்திரிகைகளில் எழுதப்பட்டன. அதுபோல   புதுமையான முறையில்  நாவல்களும் எழுதப்பட்டன. அவை  சர்ரியலிசம், மாந்திரீக யதார்த்த வாதம், பின்நவீனத்துவம் போன்ற தமிழுக்குப் புதுமையான கோட்பாடுகளை உள்ளடக்கமாகக்  கொண்டிருந்தன.  இந்த நாவல்களைத் துலக்கமாக இனங்காட்டும் அம்சம், அவற்றில் வெளிப்படும் fantacy எனப்படும் வினோதம் உள்பட வேறு சில பண்புகளும் ஆகும். இந்த வகையான பண்புகளைக் கொண்ட நாவல்களுக்கு முன்னோடியாக அமைந்தவையே   தமிழவனின் நாவல்கள்!. அவற்றை   முன்னரே குறிப்பிட்டது போல நிழல் நாவல்கள் என வரையறைப்படுத்திக் கொள்ளலாம்.  அவற்றின் இயல்புகள் எவ்வாறு இருக்கும் என்பதையும் அதற்கான கோட்பாடுகளையும் தமிழவனின் நாவல்களிலிருந்தே பெற்றுக் கொள்ளலாம்.

நிழல் நாவலின் இயல்புகள்

1.ஏதாவதொரு கேட்பாட்டை துலக்கமாகக் கொண்டு வெளிப்படுத்துதல்,

2.எதார்த்த நாவலைப் போல ஒரு தொடர்ச்சியான வரிசை அமைவைக் கொண்டிராமை,

3.காலம், இடம், செயல் ஆகியவற்றின் பொருத்தப்பாட்டை இல்லாமலாக்குதல்,

4.பகுத்தறிவிற்கு அப்பாலான நிகழ்வுகளை சர்வ சாதாரணமாக வெளிப்படுத்துதல்,

5.நகைச்சுவை இழையோடும் தன்மையைக் கொண்டிருத்தல்,

6.வினோதமான கதப்பாத்திரங்கள் மற்றும் மீ சக்திகளைக் கொண்டிருத்தல்,

7.வழக்கமான மொழி நடைக்கு மாறானது,

8.ஒரே நேரத்தில் இரட்டைப் பொருளைத் தரக் கூடிய ஒன்றாக வாக்கியங்கள் தென்படும்,

9.முற்றிலும் அறிவுத் தளத்தில் இயங்கக் கூடியதாக இருத்தல்.

  1. பிரதிக்கு அப்பால் வாசகனைச் சிந்திக்கத் தூண்டுதல்.

 

இந்த இயல்புகளையே  தமிழவனது நாவல்கள் துலக்கமாகக் கொண்டுள்ளன. இந்த இயல்புகள் பிறவகை நாவல்களில் ஒரு சேர   வந்து பொருந்துவதில்லை. எடுத்துக்காட்டாக நகைச்சுவை இழையோடும் தன்மையைச் சுட்டலாம். பாக்கியம் ராமசாமியின் கதைகள் அனைத்தும் நகைச்சுவை இழையோடும் தன்மை கொண்டிருக்கும். ஆனால் அறிவுத்தளத்தில் இயங்காது- பிரதிக்கு அப்பால் வாசகனைச் சிந்திக்கத் தூண்டாது. காலம் இடம் ஆகியவற்றின் பொருத்தப்பாட்டைச் சிதைக்காது. ஆனால் மேலே சொல்லப்பட்ட பத்து இயல்புகளும் ஒரு சேர தமிழவனது நாவல்களில் இடம் பெற்றிருக்கும்  . இதே பண்புகளைக் கொண்டு பிற்காலத்திலும் குறிப்பிடத்தக்க சில நாவல்கள் வேறு நாவலாசிரியர்களாலும் சிறப்பான முறையில் எழுதப்பட்டுள்ளன. அவற்றையும் நிழல்நாவலாக வகைப்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, பிரேம் எழுதிய சொல் என்றொரு சொல், எம்.ஜி.சுரேஷின் அலெக்சாண்டரும் ஒரு கோப்பை தேநீரும், முத்துக்கிருஷ்ணனின் அடைக்கோழி  ஆகிய நாவல்களைச் சுட்டலாம். ஆயினும் நிழல்நாவல் எனச் சுட்டத்தக்க வரையறைகள் தமிழவன் நாவல்களில்தான் முதன் முதலில் காணப்படுகின்றன. அவற்றை இனி விளக்கமாகக் காணலாம்.

1.ஏதாவதொரு கேட்பாட்டைத் துலக்கமாகக் கொண்டு வெளிப்படுத்துதல்,

1985 இல் வெளியான ‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்  வழக்கமான நாவல் அமைப்பிலிருந்து மாறுபட்டு விளங்குவதோடு சர்ரியலிசம் மற்றும் மாந்திரீக யதார்த்தக் கோட்பாடுகளைத் துலக்கமாக வெளிப்படுத்துகின்றது.                எழுத்தாளர் ஜெயமோகன்   ‘நாவல்’ என்ற தனது நூலில் ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் -ஐ சர்ரியலிச எழுத்தாலான முதல் தமிழ் நாவல் என குறிப்பிடுகிறார் . இந்நாவலில் நம்பமுடியாத சம்பவங்கள் இயல்பாக நடப்பதாகக் காட்டப்படும். எடுத்துக்காட்டாக-தெய்வமூர்த்தி என்பவர் தனது தம்பியுடன் காட்டுப்பாதையில் போய் கொண்டிருந்த போது அவரது தம்பியைப் பேய் நாயாக உருமாற்றி விடும். உடனே தனது மந்திரசக்தியால்  தம்பியை மறுபடியும் மனிதனாக்கி விடுவார். இது போன்ற மாந்திரீக யதார்த்தங்களை இந்த நாவலில் சர்வசாதாரணமாகக் காணமுடியும்.

“இதெல்லாம் மூடநம்பிக்கை,” “பேய்நாவல்களும் இது போன்றவற்றைத்தானே காட்டுகின்றன”– அப்படியிருக்க, இந்த செய்திகளைக் கூறுவதால் இந்த நாவலுக்கான சிறப்பு என்ன வந்துவிடப் போகிறது என சாதாரண வாசகர் கேள்வி எழுப்பலாம். பேய்நாவல்களைப் பொறுத்தவரை   பேயின் பயங்கரத்தையும் பக்தியின் பெயரால் பேய் முறியடிக்கப் படுவதையும் மட்டுமே காட்டும். ஆனால் இந்த   இந்த நாவலோ நம் வாழ்க்கையின் ஒரு பாகமாக வகிக்கும் மந்திரவாதம் மற்றும் பேய்கள் குறித்து சித்தரிக்கிறது.  பேய்கள் அல்லது மந்திரவாதம் இருக்கிறதோ இல்லையோ- ஆனால் 1980 கள் வரை பேய்கள், சாமிகள்,மந்திரவாதம் பற்றிய நம்பிக்கைகள் இந்தியக் கிராமங்களில் மிகுந்த ஆதிக்கம் செலுத்தியிருந்தது உண்மை. தனது வீட்டுத் திருமணம், பொருளாதாரச் சிக்கல்கள் உட்பட அனைத்திற்கும் தீர்வுகாண தன் குடும்பத்தில   இறந்து போனவரது ஆவியின் ஆசியை எதிர்பார்த்து வீட்டில் பூஜை,படையல் செய்வது சர்வசாதாரணமாகவே நிகழ்ந்துள்ளது. இன்றளவும் குக்கிராமங்களில் காணப்படுகிறது. இந்த சமூக யதார்த்தங்களை நவீனத்துவ நாவல்கள் மூடநம்பிக்கையென புறக்கணித்துவிட்டன. ஆனால் “ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்” நாவலோ  இது போன்ற யதார்த்தங்களை மாந்திரீக யதார்த்தமாக – சமூக யதார்த்தமாகச் சித்தரித்துள்ளது.  மாந்திரீக யதார்த்தம் இப்போது பிற எழுத்தாளர்களாலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

.

சரித்திரத்தில் படிந்த நிழல்கள் நாவல்   சர்ரியலிச கோட்பாட்டை  பிரதிபலிக்கிறது. அதாவது கட்டற்ற சுதந்திர எழுத்தைப் பயன்படுத்துகிறது. மனித வாழ்க்கை சிறு விசயங்கள் முதல் பெரிய விசயம் வரை எல்லாவற்றிலும் விதிகளால் கட்டுப்படுத்தப் பட்டிருக்கின்றது. அந்த விதிகளிலிருந்து விடுபட்டு வாழ மனம்போல சர்ரியலிச இயக்கம் தோன்றியது.  அது எழுத்துக்களிலும் பிரதிபலித்தது. இப்படித்தான் ஓர் ஒழுங்கு முறையில் எழுதவேண்டும் என்ற நிலை மாறி, கனவு எவ்வாறு சுதந்திரமாக நிகழ்கிறதோ அது போன்று தன் விருப்பப்படி கட்டற்ற முறையில் எழுதும் போக்கினை சர்ரியலிஸ்ட்கள் செய்தனர். அந்த எழுத்து முறை      சரித்திரத்தில் படிந்த நிழல்களில்  துலக்கமாகக் காணப்படுகிறது. இந்நாவலில் பாத்திரங்களாகப்  பழங்கால அரசர் இடம்பெற்றிருப்பார். ஆனால் பல்கலைக்கழகம் இடம்பெறும்… அரசி கண்ணை மூடிக்கொண்டுதான் எல்லாவற்றையும் பார்ப்பாள்- இப்படி வழக்கத்திற்கு மாறாகத் தன் விருப்பப்படி வினோதமாக சர்ரியலிஸ்ட் நடையில் எழுதியுள்ள பாங்கினை இந்நாவலில் முழுக்க முழுக்கக் காணப்படுகிறது.

2.எதார்த்த நாவலைப் போல ஒரு தொடர்ச்சியான வரிசைக் கிரமத்தைக கொண்டிராமை.

ஒரு தொடர்ச்சியினை இவரது நாவல்களில் காணமுடியவில்லை. வார்சாவில் ஒரு கடவுள் என்ற நாவலில் கதை சொல்லும் உத்தி வெவ்வேறு முறைகளில் உள்ளது. முசல்பனியில் ஒரு அத்தியாயத்திற்கும் அடுத்த அத்தியாயத்திற்கும்  நேரடி தொடர்பு இருக்காது. ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்களில் தற்காலமும் , கழிந்தகாலமும் கலந்து, கலந்து காட்டப்படுகின்றன. சரித்திரத்தில் படிந்த நிழல்களிலும் இதே முறைதான் காணப்படுகிறது. எனவே நிழல் நாவல் என்பது ஒரு தொடர்ச்சியான வரிசை அமைவைக் கொண்டிருக்காது என்பதை உறுதிபடக் கூறமுடிகிறது.

3.காலம், இடம், செயல் ஆகியவற்றின் பொருத்தப்பாட்டை இல்லாமலாக்குதல்

          இந்த இயல்புகள் துலக்கமாகவே தமிழவனின் நாவல்களில் காணப்படும். சரித்திரத்தில் படிந்த நிழல்கள், முசல்பனி ஆகியவற்றில் மிக அதிகமாகக் காணப்படும். எடுத்துக்காட்டாக முசல்பனி நாவலில் வரும் வாக்கியங்களைச் சுட்டலாம் ’அத்திரிகப்பாவின் மகள் 3300 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகாலை 3 மணிக்கு 3 மணி இருக்கும் போது பிறந்தாள். அவள் பிறந்த நேரத்தைத் திசைக்கொரு கடவுளாக நான்கு கடவுளர்கள் சாட்சி கூறினாலும் நான்கு திசையையும் ஒரே முகமாகக் கொண்ட கடவுள் ஏற்கவில்லை’’.  இந்த வாக்கியத்தில் தர்க்கமுறை எதுவும் இல்லை. இவ்வாறு தர்க்கமுறையை உடைத்துச் செல்லும் தன்மை கொண்டன  நிழல்நாவல்கள். சரித்திரத்தில் படிந்த நிழல்களில்  நாவலிலும் இதே அமைப்பு மிகுதியாகக் காணப்படுகிறது. இந்நாவலில் காட்டப்படுவது பழையகாலத்து இராஜா கதை போல தோன்றும். ஆனால் கதையில் பல்கலைக்கழக மொழியியல் ஆசிரியர்கள் மொழி ஆராய்ச்சி செய்வதாகக் காட்சிகள் அமையும்.

4.பகுத்தறிவிற்கு அப்பாலான நிகழ்வுகளை சர்வ சாதாரணமாக வெளிப்படுத்துதல்.

இந்த இயல்புகள் கண்டிப்பாகத் தமிழவனது நாவல்களில் இடம்பெற்றே தீரும்.

5.நகைச்சுவை இழையோடும் தன்மையைக் கொண்டிருத்தல்,

நகைச்சுவை அல்லது ஒரு வகையான வினோதமான  அல்லது ஒரு வகையான கிண்டல்  வாக்கியங்களில் இழையோடி காணப்படும்.    எடுத்துக்காட்டாக, ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்களில் வரும் வாக்கியத்தைச் சுட்டலாம்.

அவனது வேட்டி அவிழ்ந்தபோது, அவள் தன் கண்களை மூடி தன் கற்பைக் காத்துக் கொண்டவிதம் அந்த பள்ளியில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டது”.

5.வினோதமான கதாப்பாத்திரங்கள் மற்றும் மீ சக்திகளைக் கொண்டிருத்தல்

தமிழவனது நாவல்களில் வரும் பல பாத்திரங்களும் வழக்கமான மனிதர்கள் அல்லர். அதன் உச்சகட்டமாக வார்சாவில் ஒரு கடவுள் நாவலில் வரும் பெரும்பாலான பாத்திரங்கள் வழக்கத்திற்கு மாறாகவே உள்ளனர். எங்கோ தீ பிடிப்பதைக் கண்டுபிடித்து விடும் சந்திரன், கூரையைப் பிய்த்துக் கொண்டு பறப்பவன், இரவில் மட்டுமே கண்ணால் பார்க்கும் நர்ஸ் என வித்தியாசமான பாத்திரங்கள் காணப்படுகின்றனர். ஒரே நேரத்தில்   வெவ்வேறிடங்களில் நடமாடுபவன் பற்றி சரித்திரத்தில் படிந்த நிழல்கள் பேசும்.  தனது நிழலுடன் சீட்டாடும் கிழவன் பற்றி முசல்பனி நாவல் பேசும்.  .

 

ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்களில் வரும் மாந்தர்களோ தனிமனிதர்கள் பற்றியதல்ல. ஒரு காலகட்டத்தில் வாழ்ந்த மனிதர்களின் பிரதிநிதியாக வருகிறவர்கள். எடுத்துக்காட்டாக, சினேகப்பூ என்பவள் தனது மகனது நோய்க்கு இறந்துபோனவனது ஆவிதான் காரணமென நினைத்து அந்த ஆவியைத் திட்டுவதைச் சுட்டலாம். 1980கள் வரை  இறந்தோரைத் திட்டுவது நம் சமூகத்தில் சர்வசாதாரணமாக நிகழ்ந்த வழக்கம். இது போல் அந்நாவலில் வரும் அனைத்து பாத்திரங்களுமே  ஒரு காலகட்டத்தில் வாழ்ந்த மக்களின் பிம்பங்களாகக் காட்சியளிக்கின்றன. ஆடிப்பாவை எனும் நாவலில் மட்டுமே வழக்கமான மனிதர்கள் இடம்பெறுகின்றனர். அதில் கூட எல்லா பாத்திரங்களுமே குடும்ப வாழ்வில் பாதிக்கப்பட்டவர்களாகவே சித்தரிக்கப்பட்டுள்ளனர்

 

7.வழக்கமான மொழி நடைக்கு மாறானது,

வழக்கத்திற்கு மாறான மொழிநடையினை இந்நாவல்கள் கொண்டிருக்கும்.

8.ஒரே நேரத்தில் இரட்டைப் பொருளைத் தரக் கூடிய ஒன்றாக வாக்கியங்கள் தென்படும்.

பல செய்திகளைக் குறியீடுகளாக அமைத்து செல்வதால் வாக்கியங்களுக்கு அப்பால் புதைநிலை உண்மைகளைக் காணவியலும். எடுத்துக்காட்டாக,  ‘’மலையின்மேல் ஒளி’’  என்ற சொல்லாட்சி சரித்திரத்தில் படிந்த நிழல்கள் நாவலில் இடம் பெறுவதைச் சுட்டலாம. இது திமுக-வைக் குறிக்கும். அது போன்று ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் நாவலில்  வரும் மனிதர்கள் பலர் மேலோட்டமாக வேடிக்கையாகக் காட்சியளிப்பவர்கள் உண்மையில் கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸ்காரர்கள், தி.மு.கவினர் ஆகியோர் பற்றி குறிப்பனவாகும். எடுத்துக்காட்டாக கனவுகளை விற்பவன் எனக் குறிப்பிடப்படுபவன் காங்கிரஸ்காரன்!

9.முற்றிலும் அறிவுத் தளத்தில் இயங்கக் கூடியதாக இருத்தல்.

தமிழவனின் நாவல்கள்  அறிவுத்தளத்தில்  இயங்குபவை. அவை பொழுதுப்போக்கை நாடும் சாதாரணமான வாசகனுக்காகனவை அல்ல. தமிழ் தெரிந்திருந்தால்  கலைஞர் கருணாநிதியின் நாவல்களையோ வைரமுத்துவின் நாவல்களையே  வாசித்துப் புரிந்து கொள்ளமுடியும். ஆனால் தமிழவன் நாவல்களோ சாதாரண வாசகனுக்குப் புரியாதவை. ஓரளவு வாசிப்பறிவும் பிறதுறை அறிவும் இருந்தால் மட்டுமே அவற்றைப் புரிந்துக்கொள்ள முடியும். காரணம் அவை அறிவுத்தளத்தில் இயங்குபவை.      எடுத்துக்காட்டாக முசல்பனி நாவலில் இடம்பெறும் பின் வரும் பத்திகளைச் சுட்டலாம்.

பாத்திக்கட்டிப் பிரித்திருக்கும் பயிர் போன்ற மக்கள்

உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இதுவரை இந்தநாட்டு மக்களைப் பற்றி நான்கூறவே இல்லையே  என்று .  இவர்கள் தங்களை வயல்பரப்புப் போல் பாத்தி கட்டிப் பிரித்துவைத்திருப்பார்கள். மொத்தம் 5 பாத்திகள். எனவே இம்மக்கள் பயிர் போல் வளர்பவர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்வார்கள். மேலும் இவர்கள் நித்தியமானவர்கள்.

  முதல் பாத்தியில் நடப்படுபவர்கள் தலையை மேலேவைத்தும் கால்களைச் சேற்றுக்குள் மறைத்துப் புதைத்தும் வைக்கப்படுவார்கள். இவர்கள் உயர்ந்தவர்கள். கடைசியாக வரும் ஐந்தாம் பாத்திக்காரர்கள் கால்களை மேலே வைத்தும் தலையைச் சேற்றுக்குள் புதைத்தும் நடப்படுபவர்கள். இவர்களின் ஒவ்வொரு பிரிவுக்கும் ஐந்து ஐந்து கடவுள்கள் உண்டு. கடவுள்கள் போர்செய்வார்கள். இவர்கள் கடவுள்களுக்குப் பெரியவிழா எடுத்துப் பலிகொடுப்பார்கள். காதல்செய்யும்போது கலவரங்கள் ஏற்படும். ஒரு பிரிவு அடுத்தப் பிரிவைக் காதலிக்கக்கூடாது என்று விதி எழுதப்பட்டிருக்கிறது. விதியை மீறிக் காதல் செய்தால் வீடு, வாசல்,கூரை வாகனம் உணவுப்பொருள்கள் என்று எரிப்பார்கள். காதுகளைப் பூக்களால் அலங்காரம் செய்வது என்பது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். 

     இந்த வாக்கியங்கள் தமிழக நாட்டு நடப்புக்களை நன்றாகப் புரிந்துகொண்டோருக்கும் தமிழின் குறிஞ்சி, முல்லை, மருதம் ,நெய்தல்,பாலை எனும்  நிலப்பாகுபாட்டைப் புரிந்தகொண்டோருக்கும் மட்டுமே விளங்கும்.  இது போன்றே தமிழவனது நாவல்கள் காணப்படுவதால் பரந்த வாசிப்பு உடைய வாசகர் தமிழவனது நாவல்களைச் சிறந்தவை எனப் போற்றுவதையும், சாதாரண வாசகர் அதே நாவல்களைப் புரியாதவை என நிராகரிப்பதையும் காணமுடிகிறது.

 

  1. பிரதிக்கு அப்பால் வாசகனைச் சிந்திக்கத் தூண்டுதல்.

ஒரு படைப்பு  மகிழ்வூட்டலையும் அறிவுதரும் பணியையும் செய்வதுடன் அதற்கப்பாலும் வாசகனைச் சிந்திக்க வைக்கும்போதுதான், அது மகத்தான வெற்றி பெற்றதாகக் கருதமுடியும். அவ்வகையில்  தமிழவனது  நிழல் நாவல்கள் எல்லாமே வெற்றி பெற்றுவிட்டன என்று கூறமுடியும். எடுத்துக்காட்டாக, சரித்திரத்தில் படிந்த நிழல்கள். இந்நாவலைப் படித்தபின் சரித்திரத்திற்கும் கதைக்கும் இடையேயான வேறுபாடு என்ன என்பதைச் சிந்திக்கச் செய்கின்றது. சரித்திரம் என்பது எழுதுபவரின் மனநிலையைச் சார்ந்தது என்றும் உண்மை அப்படியே இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை எனும் எண்ணத்தை வாசகனின் மனதில் ஏற்படுத்துகிறது.

வார்சாவில் ஒரு கடவுள் எனும்  நாவலை வாசிக்கும் போது, கடவுள் அறிவுக்கெட்டாதவர், கண்ணால் காணமுடியாதவர் எனும் நம்பிக்கைகள் மாறி கடவுள் நமது வாழ்வில் தினந்தோறும் காட்சியளிக்கிறார்- ஆனால் நாம்தான் அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை எனும் உணர்வைத் தருகிறது .

ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் நாவலில் கனவை விற்கும் இளைஞன், சாரைப் பாம்பு போல வந்துசெல்லும் மனிதன் போன்றோர் இடம் பெறுகின்றநர். மேலோட்டமாக இவை அர்த்தம் தந்தாலும் உண்மையில் 1960 களில் நடைமுறையிலிருந்து காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்கள் பற்றிய கருத்துக்களையே தருகின்றன. இவ்வாறு மொழியின் வாக்கியங்களுக்கும் அப்பால் சென்று கருத்தைத் தரவல்லன தமிழவனின் நாவல்கள்.

 

ஆக மேலே விளக்கப்பட்ட கூறுகள் கொண்டவையாகத் தமிழவனது  நிழல்நாவல்கள் உள்ளன.  இந்த நிழல்நாவல்கள் மீது  ‘ உண்மைக்கு மாறானவை’   ‘உடனடியாக விளங்கமுடியாதவை’என்பன போன்ற கடும் விமர்சனங்கள்  வைக்கப்படுகின்றன. ஆனால் இவைதான் தற்காலத்திற்கு ஏற்ற நாவல்கள் என்பதுடன் இவைதான் யதார்த்த எழுத்துக்களை விட மிகச் சிறந்த இலக்கிய அனுபவத்தைத் தருகின்றன என்பதை உறுதியாகச் சொல்லமுடியும்   மேலும்  யதார்த்த இலக்கிய எழுத்துக்கள் இன்றைய காலத்தில்     கேள்விக்குறிக்குள்ளாகிறது. காரணம், இன்றைய காலத்தில் யதார்த்த இலக்கியங்களைக் காட்டிலும் நக்கீரன், ஜூனியர் விகடன் போன்ற பத்திரிகைகள் மற்றும் வரலாற்று நூற்கள்தான்  யதார்த்த நிகழ்ச்சிகளை, அனுபவங்களை   மிகுந்த இரசனையோடும், சுவாரஸ்யத்தோடும் தருகின்றன. பல வேளைகளிலும் உண்மைச் சம்பவங்களை இரசனையாக வழங்குவதில் யதார்த்த நாவல்களைப் பின்னுக்குத் தள்ளுகின்றன. இந்த சூழலில் இந்த நிழல்நாவல்களே யதார்த்த நாவல்களை விட    புதிய இலக்கிய இரசனையைத் தருவது வெளிப்படையாக விளங்கும்.

அப்படியானால் யதார்த்த நாவல்களுக்கென தனித்துவம் இல்லையா என்று கேட்டால், அதற்கான பதில் உண்டு என்பதுதான். 1980 கள் வரை  யதார்த்த நாவல்களுக்கு வேலை இருந்தது. அதாவது தற்காலம் போல காட்சிப்படுத்தல், ஆவணப்படம் தயாரித்தல் போன்றவற்றை விரைந்த நிலையில் உடனுக்குடன் பதிவுசெய்ய போதுமானளவு   வசதிகள் 1980 கள் வரை இல்லை. ஆனால் 1980 களுக்குப் பின்னர்  குறும்படங்கள் , நேரடிப்பேட்டிகள், தத்ரூபப் படங்கள், ஆவணப்படங்கள்,பத்திரிகை விவரிப்புகள் யதார்த்த நாவல்களை விடத் தெளிவாகப் பதிவுசெய்து விடத் தொடங்கின. அதற்குரிய சமூகவிளைவையும்  ஏற்படுத்திவருகின்றன. இத்தகைய சூழலில் நாவல்களில்  யதார்த்த எழுத்துக்கள் அல்லது சித்தரிப்புக்கள் தோல்வியடைந்து விட்டன. –மேலும்      பின்நவீனத்துவகாலத்திற்கும் அப்பால் எழும் நாவல்கள் புதுவடிவில் அமையவேண்டும் என்ற எதிர்பார்ப்பு தவிர்க்கவியலாது. அந்த எதிர்பார்ப்பை நடைமுறைப்படுத்துவனவாக நிழல் நாவல்கள்தாம் உள்ளன என்ற முடிவுக்கு வரஇயலுகிறது. அதற்கு முன்னோடியாக அமைபவை தமிழவன் நாவல்கள் என்பதே உண்மை.  நிழல்நாவல்கள் யதார்த்த்தையை இன்னொரு கோணத்தில் காட்டுகின்றன என்பதையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தம்

 

.இதுவரை தமிழவனின் நாவல்களின் பொதுப் பண்புகளாக நிழல் தன்மை அமைந்திருப்பது விளக்கப்பட்டது. இனி அவரது ஒவ்வொரு நாவலின் தனித் தன்மையை விளக்கிக் காட்டலாம்.

முசல்பனி – 2012 – ல் வெளிவந்த முசல்பனி என்ற நாவல் முதன் முறையாக நாவலின் இலக்கண தர்க்கங்களை உடைக்கிறது, அதில் வரும் பாத்திரங்களின் ஊடாகப் பழங்கால தமிழ் உலகமும், இன்றைய நவீன தமிழ் உலகமும் இணைக்கப்படுகின்றன. 100 பக்கங்களுக்குள் தமிழ் சரித்திரம்

நிழலாய் படிந்துக் கிடக்கிறது. ஆனால் தமிழர், தமிழகம் என்ற சொல் எங்குமே நேரடியாகக் கூறப்படவில்லை. தமிழ்நாட்டை தெமிலிகா எனக் குறிப்பிடுவதில் தொடங்கி இலங்கைத் தமிழர் படுகொலையைக் கூறுவதுடன் இந்நாவல் முடிவின்றி முடிவுறுகிறது. இந்நாவலின் நேரடியான சிறப்பினைக் கூறவேண்டுமென்றால் முதல் அத்தியாயத்திற்கும், அடுத்த அத்தியாயத்திற்கும் கதைத் தொடர்பு எதுவுமில்லை என்பதாகும். இருப்பினும் சிறுகதையின் தொகுப்பெனக் கூறவும் முடியாது. நாவலை எந்த இடத்திலிருந்து எப்படி வாசித்தாலும் அதற்கான சுவையுண்டு. நாவலை முழுமையாகப் படிக்காவிட்டாலும் ஒன்றிரண்டு பத்திகளை வாசித்தால் கூட அவற்றிலும் தனித்ததொரு சுவையைக் காணமுடிகிறது. இதுவே ஒரு கற்பனைத் திறனாகக் கொள்ளலாம்.

சரித்திரத்தில் படிந்த நிழல்கள் – “சரித்திரத்தில் படிந்த நிழல்கள்” முற்றிலும் புதுமையைக் கொண்ட நாவலாகக் காணப்படுகிறது. இந்நாவலைக் குறித்து எழுத்தாளரான குமார செல்வா ‘’இந்தியாவில் இதைப் போன்றதொரு நாவல் இதுவரை தோன்றியதேயில்லை என   அடையாளப்படுத்துகிறார். இந்நாவல் இரு விஷயங்களை நமக்குள் உணர்த்தும். அது என்னவெனில் பிரதிக்குஅப்பால் நம்மை ஏதேனுமொரு விஷயத்தைக் கண்டிப்பாகச் சிந்திக்க வைக்கும். மேலும், புராணங்கள் எவ்வாறு உருவாகின்றன, சரித்திரம் எவ்வாறு உருவாகிறது என்பதற்கான விடையாக இந்த நாவலே அமைகிறது.

சூரியப் புராணக் கோட்பாட்டை மார்க்ஸ்முல்லர்  விளக்கும்போது   வார்த்தைகள் எவ்வாறு ஒரு கதையை உருவாக்குகின்றன– என்பது குறித்து  குறிப்பிடுவார். சொல்ல வந்தது ஒன்று, அதைப் புரிந்துக் கொள்ளுதல் வேறொன்று என்ற கருத்தை   விளக்குவார். அவருடைய விளக்கத்தை இந்நூலில் காணமுடியும். எடுத்துக் காட்டாக, “அவன் கூறியவுடன் சொற்கள்

அனைத்தும் அங்குள்ள தூண்களின் பின்னால் சென்று ஒளிந்துக் கொண்டன” எனும் வரிகள் சூரிய புராணக்கோட்பாட்டின் நீட்சியாக அமைகின்றது.

அடுத்ததாக ஒரு சரித்திரம் எவ்வாறு உருவாகிறது? நாம் படிக்கும் சரித்திரம் சரித்திரமா?என்பதெல்லாம் நமக்குள் ஒரு கேள்வியை எழுப்பக் கூடிய ஒரு தன்மை இந்நாவலுக்கு உண்டு. இந்நாவலைப் படித்த பின் கட்டுரையாளருக்கு ஒரு புது வித சிந்தனைத் தோன்றலாயிற்று.

எடுத்துக்காட்டாக, கிருஷ்ணகிரி நகரத்தில்  பல இடங்களிலும் அந்நாளைய முதல்வர் ஜெயலலிதா குற்த்த  ஒரு விளம்பரம் இவ்வாறு ஒட்டப்பட்டிருந்தது. “கிருஷ்ணகிரி மக்களின்  தண்ணீர்தாகம் தீர்த்த தாயே வருக வருக!” எனும் இந்த விளம்பரத்தைக் கல்வெட்டில் பொறித்து வைத்தால் 100 ஆண்டுகளுக்குப் பின்னால் மக்கள் எப்படி நினைப்பார்கள். கிருஷ்ணகிரி மாவட்டமக்கள் ஜெயலலிதா  ஆட்சிக்கு வருவதை வரையிலும் தண்ணீர் குடிப்பதற்காக வெளிமாவட்டங்கள் சென்றுவந்தனர். ஜெயல்லிதா வந்த பின்னர்தான் மக்கள் நிம்மதியாக தண்ணீர் குடித்தனர் -என்ற தவறான புரிதல் ஏற்படும். அது போலத்தான்   நாம் படிக்கும் வரலாறும் வரலாற்றாசிரியர்களின் விருப்பு வெறுப்பிற்கேற்ப அவர்களது புரிதல்களுக்கேற்ப எழுதப்பட்டுள்ளது என்ற சிந்தனையை இந்த கட்டுரையாளர் மனதில் ஏற்படுத்தியது.

இந்நாவலில் சிறந்த வாசகமாக “எலி தன் கூட்டத்திற்கான தலைவனைத்

தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால், அவ்விடத்திற்கு ஒரு பூனையையே தேர்ந்தெடுக்கும்” என்ற வாசகத்தைச் சுட்டலாம். இதன் மூலம் நம் நாட்டு   மக்கள் தங்களது எதிரியையே தம் தலைவர்களாகத் தேர்ந்தெடுத்து வருகின்றனர் என்பது நகைச்சுவையாய் உணர்த்தப்படுகிறது.

இந்நூலில் பலரும் கவனிக்க தவறிய ஒரு நிகழ்ச்சி – “காயமுற்ற அரசி மருத்துவமனையில் சேர்க்கப்பட அவளது உடல் தினந்தோறும் ஊதி பெருத்து வர, மக்கள் கவலையுற்று தம் கடமையை மறந்தவர்களாய் அரசியையே எண்ணிக் கிடந்தனர்” இந்த காட்சியானது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் இறப்பினை நிகழ்காலத்தில் நினைவு கூறும் விதமாக உள்ளது. இந்நாவலில் தமிழகம் பற்றிய நிழல் சித்திரம் காணப்படுகிறது. நடைமுறையிலுள்ள கதாப்பாத்திரங்கள் நிழல் சித்திரங்களாய் காட்சியளிக்கின்றன. நிழல்கள் யார் என்று வாசிப்பறிவுக்

கொண்டவர்கள் மட்டுமே அறிந்துக் கொள்ள முடியும்.

வார்சாவில் கடவுள் – வார்சாவில் கடவுள்

தத்துவத்தை மையமிட்ட தமிழ் நாவல்கள் குறைவாக  இருக்க  இந்நாவல் பல தத்துவ சிந்தனைகளை எடுத்துப் பேசும்.- உலகின் பல நாடுகளை களனாகக் கொண்டிருக்கும்- பல்வேறு முறையில் கதை சொல்லும் உத்தி அமைந்திருக்கும். பெரும்பாலான கதாபாத்திரங்களும் இயல்புக்கு மாறாக அமைந்திருக்கும். இம்மாதிரி பல கருத்துக்களை இந்நாவல் குறித்து விளக்கிக் கொண்டே போகலாம் .

உலகளவில் புகழ் பெற்ற  சில நாவல்களில் கடவுளைப் பற்றியக் சிந்தனைகள் காணப்படும்.  உதாரணமாக,

நீட்சேவின் ஜரதுஷ்டா இவ்வாறு பேசினான் எனும் நாவல்  கடவுள்  இறந்து விட்டான் என்ற செய்தியை அறிவிப்பதுடன் மனிதன் அதீத சக்தியுடையவனாக மாற வேண்டும் எனும் கருத்தை முன்வைக்கும். ஹெர்மன் ஹெஸ்ஸேயின் சித்தார்த்தா எனும் ஜெர்மன் நாவல் கடவுளைக் காண முயற்சிப்பவனது கதை பற்றியதாகும். மதங்கள் ஒதுக்கித் தள்ளுகின்ற தேவரடியாளிடம் இறுதி உண்மையைக் கண்டடைகின்ற சித்தார்த்தனைப் பற்றி பேசும் .

இவை போன்ற ஒரு தத்துவ நிலைபாட்டை வார்சாவில் ஒரு கடவுள் கொண்டிருக்கிறது. இந்நாவலை வாசித்த பிறகு , கடவுளை நாம் தினந்தோறும் பார்த்து வருகிறோம். ஆனால் நம்மால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை என்ற உணர்வு வாசகனுக்கு ஏற்படுகிறது.

இந்நாவலிலுள்ள பல கதாப்பாத்திரங்களும் விசித்திரமானவை என்பது

குறிப்பிடத்தக்கது.  இதில் நர்ஸ் ஒருவருக்கு இரவில் மட்டுமே கண் தெரியும்,

சந்திரன் என்பவன் எங்கு தீ பற்றி எறிந்தாலும் அறியும் திறனுடையவன். மற்றொருவன் வீட்டின் மேற்கூரையை  உடைத்தவாறு பறந்துவிடுவான். தமிழ்நாவல்களில் விசித்திரமான பாத்திரங்களை  அதிகம் கொண்ட ஒரே நாவல் வார்சாவில் ஒரு கடவுளாகத்தான் இருக்க முடியும்.

தமிழவனது நாவல்களில் இயல்புக்கு மாறான விசித்திரமான பாத்திரங்கள் இடம் பெறுகின்றன என்பது ஆய்வுக்குரிய ஒன்று .

 

முக்கியமாக நாவலாசிரியர் தமிழவன்   கதையில் எந்த இடத்திலும் தன்னைப் புலப்படுத்துவதில்லை. இருப்பினும் சில நாவல்களின் இடையில் அவரே வலிய வந்து விளக்கம் தருவார். இது நமக்கு சிரிப்பளிக்கும்.. இதைக் குறிப்பிடக் காரணம் உண்டு. தமிழுலகில் நவீனத்துவ நாவல்கள் எழுதிய நகுலனின் படைப்புகளையும், அவரது வாழ்க்கையையும் ஆராய்ந்து பார்த்த மாரியப்பன் என்கிற   ஆய்வாளர் நகுலனின் வாழ்விற்கும், அவருடைய வாழ்விற்கும் எந்தவொரு இடைவெளியும் இல்லையென்றுக் கூறுகிறார். நகுலன் தான் அவருடைய படைப்புகளில் வருகிறார். ஆனால் தமிழவனுக்கும் அவரது நாவல்களுக்கும் தொடர்பில்லை.

ற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்  இந்நாவல் மூன்று

தலைமுறைகளைக் காட்டுவதுடன் அவற்றில் நிகழ்ந்த மாற்றங்களை மிக சூட்சமமாகச் சித்தரிக்கிறது. அதில் முதல் தலைமுறையினர் 100 வருடங்களுக்கு முந்திய காலத்தவர். அச்சமூகத்தினர் மாந்திரீகம், பில்லி சூன்யம் என்பவற்றிற்கு முக்கியத்துவம்  கொடுத்தவர்களாவர். இரண்டாம் தலைமுறையினர் அறிவியல் கண்டுபிடிப்புகளால் பயன்பெறும் சமூகம். இச்சமூகம் மாந்திரீகம் மற்றும், விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகம். மூன்றாம் சமூகம் அறிவியல் உண்டு- ஆனால், மாந்திரீகம் இல்லையென்றுக் கூறும் இயல்புடையது. இம்மூன்று சமூகத்தையும் ஒன்றாக இணைத்துக் காட்டி ஒவ்வொரு சமூகமும் கொண்டுள்ள சமூகவிழுமியம் எது என்பது குறித்து வாசகனைச் சிந்திக்கச் செய்கிறது நாவல்.

குறிப்பாக அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பழம் சமூகம் முதன்முதலில் எவ்வாறு எதிர்கொண்டது என்பதைப் பற்றிய இந்நாவலின் சித்தரிப்புகள் வரலாற்று நூல்கள் பதிவு செய்யாதவை ஆகும். மின்சாரத்தால் பேய்கள் தம் இருப்பிடம் விட்டு அகன்றமை, மின்சாரத் தாக்குதால் இறப்புக்குக் காரணம் பேய் , டாக்டர் அணிந்திருக்கும் ஸ்டெதெஸ்கோப் நோய்க்குக் காரணமான ஆவிகளைப் பிடித்துச் செல்லப் பயன்படும் கருவி என்றெல்லாம் மக்கள் எண்ணியிருந்ததைப் பதிவுசெய்துள்ளது இந்த நாவல். அதாவது யதார்த்தங்களைப் பதவி செய்துள்ளது.

இருபதாம் நூற்றாண்டில் 1960 கள் வரை மக்கள் பொதுவாக எந்த மாதிரியாக வாழ்ந்தனர் எனும் யதார்த்தத்தை இந்த புனைவுநூல் அழகாகச் சித்தரிக்கிறது.

ஆக தமிழவனது எல்லா நாவல்களுமே தமக்கென பொதுவான குணங்கள் கொண்டிருக்கின்றன-அவற்றை நிழல்நாவல்கள் என்ற தனி வகைப்பாட்டிற்குள்தான் அடக்கமுடியும். இந்த வகைபாட்டை பின்பற்றி தற்பொழுது குறிப்பிடத்தக்க நாவல்கள் தோன்றியுள்ளன. அது போலவே தமிழவனது ஒவ்வொரு நாவலுமே தனிப்பட்ட சிறப்பான கூறுகளைக் கொண்டுள்ளன என்பதும் அவை முற்றிலும் பிற தமிழ் நாவல்களினின்றும் விலகியே காணப்படுகின்றன என்பதும் வெளிப்படை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>