சிந்தனையின் இன்றைய பரிமாணங்கள் என்ன?

 

தமிழ்ச்சமூகம் எப்படி இயங்குகிறது என்று ஒரு கேள்வி கேட்கப்பட வேண்டும். அந்தக் கேள்வி கேட்கப்படும்போது தான் நாம் யோசிக்க ஆரம்பிப்போம்.

நாம் எப்படிச் சிந்திக்கிறோம் என்றறிய ஒரு சிறு உதாரணத்தைச்சொல்கிறேன் .தமிழ்ப் பெண்களுக்கும் தாலிக்கும் உள்ள தொடர்பு என்ன என்ற கேள்வி சமீபத்தில் கேட்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட கேள்வி தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாகக் கேட்கப்படுகின்றது. வன்முறையும்கூட இந்தக் கேள்விக்குக் கொடுக்கப்படும் பதிலோடு சமீபத்தில் இணைக்கப்பட்டது. சுதந்திரமாக இஷ்டம் போல் பதில் கொடுக்கக்கூடாது என்று வன்முறையாளர்கள் கூறினர். இது பற்றிக் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். கர்னாடகத்தில், ஆந்திராவில் கேரளத்தில் இப்படிப் பிரச்சனை இல்லை. அங்குத் தாலி வேண்டுமா வேண்டாமா என்ற கேள்வி வரவில்லை. ஏனெனில் தாலி வேண்டாம் என்று ஒரு கருத்து சொல்லும் சமீபத்திய சீர்திருத்தவாதி அங்குத் தோன்றவில்லை. எதையும் கேள்வி கேள் என்று கூறும் சீர்த்திருத்தவாதி அவர்களிடம் இல்லை.ஆம் எதையும் என்பது முக்கியம். இது பிரச்சனையின் ஒரு பக்கம். இன்னொரு பக்கமும் இருக்கிறது. தாலிக்கு எதிரிகள் என்று கூறுகிறவர்கள் தங்களைக் கடவுளுக்கு எதிரிகள் என்று கூறியவர்கள்; சமஸ்கிருதத்துக்கும் எதிரிகள் என்று கூறியவர்கள்.

தாலிக்கு மட்டும் எதிரிகள் அல்லர் இவர்கள். ஆனால் தாலிக்கு மட்டும் இவர்கள் எதிரிகள் என்பதுபோல் இவர்ளை எதிர்த்தவர்கள் கருதியுள்ளனர். தமிழ்ச் சினிமா வேறு தாலிக்காகப் பல ஆண்டுகளாகப் பரிந்து பேசிக்கொண்டே இருக்கிறது. தமிழ்ச் சமூகம் சிந்திக்கிற சமூகம் ஆகவேண்டும் என்கிறவர்கள் ஒன்று சேர்ந்து பல கருத்துக்களைப் பரப்பினார்கள். அவர்கள் தம் லட்சியத்தை அடையவில்லை. அதனால்தான் இன்று எதிர்ப்பு. ஒரு சமூகத்தைச் சிந்திக்கிற சமூகமாக மாற்ற ஒரு இயக்கமோ, ஒரு கட்சியோ பரப்புரை செய்வது ஒரு முறை. அதைவிட சிறந்தமுறை ஒன்று இருக்கிறது என்று உலக நிபுணர்கள் கூறுகின்றனர். கருத்துக்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை உருவாக்குவது. உதாரணமாகப் பல்கலைக் கழகங்கள் கருத்துக்களை உருவாக்கவும் பரப்பவும் முடியும். தமிழகத்தில் சமூகம் பற்றிய கருத்துக்களை உற்பத்தி செய்து பரப்ப பல்கலைக்கழக வரலாற்றுத்துறை, பொருளாதார துறை, சமூகவியல்துறை, மொழியியல் துறை, தமிழ்த்துறை, தத்துவத்துறை, வெளிவிவாகரத்துறை போன்றன சரியாய் செயல்பட்டால் போதும். பல தனியார் மற்றும் அரசுப் பல்கலைக்கழகங்களும் உள்ளன. தமிழகத்தில் இங்கே சொன்ன எந்தத் துறையும் ஆய்விதழ்களை வெளியிடவில்லை. யு.ஜி.சி. போன்றன வலியுறுத்தினாலும் ஆய்விதழ்கள் வருவதில்லை. இங்கே சொன்ன துறைகள் வெறும் ஏட்டுச் சுரைக்காய் கல்வியை மட்டும் தருகின்றன. சமூகவியல் துறையில் சாதி பற்றி ஆய்வு நடக்கும். தர்மபுரியில் சாதிமுரண்பாடு என்பது பற்றி ஆய்வு நடந்திருந்தால் அடுத்து தமிழகத்தில் சாதிக்காகச் சாவு நடக்காதபடி அறிவைப் பரப்பலாம். அறிவை உற்பத்தி செய்வதும் பரப்புவதும் பல்கலைக் கழகங்களின் வேலை. அறிவு உற்பத்தியின் அடிப்படைகளில் மதச்சாயம் இருக்கிறதா சாதிச் சாயம் இருக்கிறதா என்று கண்டுபிடிப்பதும் பல்கலைக்கழகங்களின் வேலை. ஆய்வின் வேலை கல்வியை அறிவுக்கானதாய் மாற்றி இளைஞர்களை புத்தெழுச்சி பெறச் செய்வது பல்கலைக்கழகங்களின் வேலை.

அறிவுச் சேர்ப்பதுதான் கல்வியின் முக்கிய குறிக்கோள். சுதந்திரப் போராட்ட காலத்தில் வெள்ளைக்காரக் கல்வியைப் பெற்ற காந்தி, கோகலே, நேரு, சுபாஷ் போன்றோர் கல்வியின் மூலம் அறிவைப் பெற்றனர். கல்வியைப் கல்வியாய் மட்டும் பார்த்தவர்கள் குமாஸ்தாக்கள் ஆனார்கள். கல்வியை அறிவாக ஆக்கியவர்கள் புதிய வாழ்க்கையை உருவாக்கினார்கள். கல்வியை அறிவாக்கியவர்கள் கார்ல்மார்க்ஸ், மாவோ, பெட்ரண்ட் ரஸ்ஸல், ழான் பவுல் சார்த்தரு, நெல்சன் மண்டேலா,சாம்ஸ்கி போன்று புதிதாய் சிந்தித்தார்கள்.

தமிழ்ச்சமூகத்தில் இப்படி ஓர் அறிவுப் பாரம்பரியம் இருந்தது. அதாவது கல்வியை, தகவல்களை, புதிய திறமைகளை அறிவாக (Knowledge) மாற்றியவர்கள் 20-ஆம் நூற்றாண்டில் இருந்தனர். தாலி வேண்டுமா வேண்டாமா என்ற கேள்வி தன்னளவில் முழுமைபெற்ற கேள்வி அல்ல. வேறுசில கேள்விகளுடன் தொடர்புடைய கேள்வி அது. ஆணும் பெண்ணும் சமமா என்ற கேள்வியுடன் தொடர்புடைய கேள்வி. ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்கிறவர்களிடம் தாலியை ஆண் மடடும் பெண்ணுக்குக் கட்டுவதுபோல் பெண் ஏன் ஆணுக்குக் கட்டுவதில்லை? என்று ஒரு கேள்வி தோன்றும். ஆண்கள் தான் கட்டுப்படாமல் ஓடுகிறார்கள். எனவே அவர்களுக்குத்தான் கயிறு வேண்டும் இல்லையா? ஆனால், கதை அப்படியில்லையே. சாதி வேறுபாடு பார்க்கக்கூடாது என்பவர்கள் தாலி கண்டிப்பாக வேண்டும் என்பார்களா? இப்படிப்பட்ட தரவுகளை (Data) பல்கலைக்கழகங்கள் எடுக்கலாம். இதையெல்லாம் இயக்கங்கள் செய்யாது. பல்கலைக்கழகங்களும் உயர்ஆராய்வு மையங்களும் தற்கால வாழ்க்கையோடு கல்வியை இணைக்கையில் அங்கு அறிவு தோன்றும். தமிழ்த்துறை என்றால் சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், காப்பியம் முதலியவற்றில் உள்ள பெண்ணுரிமை பற்றிய கருத்துக்களைத் தொகுத்தும் பகுத்தும் தக்க முறையில் ஆய்ந்தால் நம் சமூகத்திலும் வீட்டிலும் பெண்களின் உரிமை பற்றிய கருத்தில் எவ்வளவு மாற்றம் ஏற்படும்! எத்தனை தமிழ்ப்பெண்கள் முனைவர்பட்டம் பெற்றுள்ளார்கள்? பெறப் பயிற்சி பெறுகிறார்கள். இதுபோன்று தமிழ்ப் பெண்களின் தற்கால நிலமையை இணைத்து எத்தனை ஆய்வுகள் நடந்துள்ளன? கல்வியைச் சான்றிதழுக்காகவும், பதவிக்காகவும் பெறுவது தப்பில்லை.அத்தோடு அறிவுபெறு வாயிலாகவும் மாற்றமுடியும்.

தாலி வேண்டுமா வேண்டாமா என்ற கேள்வி எப்போதும் ஒரு பொதுஅறிவு வெளியுடன் (Public Sphere) இணைக்கப்படவேண்டும். தமிழகத்தில் ஓர் இருமை எதிர்வாக அதாவது எரிந்த கட்சி எரியாத கட்சி சமாச்சாரமாக இக்கேள்வி மாற்றப்பட்டது. அப்படி மாற்றப்படுவதற்கு இன்றைய தமிழகத்தில் ஒருவகை மனோபாவம் கோலோச்சுவதே காரணம். அதனைப் பட்டிமன்ற மனோபாவம் என்று கூறலாம். கண்ணகியா, மாதவியா என்று பிறந்த குழந்தைக்குக் கூட கேட்கத் தெரியும். நல்லது அல்லது கெட்டது என்பது தமிழ்ச்சினிமா போதிக்கும மனோபாவம். நல்லவன் வாழ்வான். கதாநாயகன் கடைசியில் வில்லனை மொத்துவான் என்ற மனோபாவம். இது ஒரு எளிய நாட்டுப்புறத் தர்க்கம் (Folk Logic). ஆனால், உண்மை அப்படியிருக்க வேண்டுமென்றில்லை. தாலி வேண்டுமா வேண்டாமா என்ற பிரச்சனை பல மதிப்பீடுகளை (Values) சமூக அக்கரைகளை, உள் ஆழங்களை, சாதி நடவடிக்கைகளைச் சார்ந்த பிரச்சினை. ஒன்று இன்னொன்றோடு பரஸ்பரம் உறவு கொண்ட பிரச்சினை. ஆனால், ஒரு பட்டிமன்ற மனோபாவத்தால் பீடிக்கப்பட்ட கல்வி அறிவு இல்லாத நான்கைந்து பேர் இக்கேள்வியின் உண்மை தங்களுக்குத் தெரியும் என்று நினைத்து வன்முறையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். கண்ணகியா, மாதவியா என்று தொலைக்காட்சியில் சிரிக்கச் சிரிக்க பட்டிமன்றம் நடத்தும் பேராசிரியர் தான் இந்த வன்முறையாளனை மறைமுகமாக உற்பத்தி செய்பவர் என்பது உண்மையில்லையா? தாலியால் பிரயோஜனமில்லை என்று கடா கண்ஷஸனாக முரட்டுத்தனமாய் ஒற்றை வாக்கியத்தில் பேசம் நபரும் இதே வன்முறையாளனின் இன்னொரு வடிவம் தான் என்று நாம் கூறத் தயங்கக்கூடாது. தாலி பல ஆண்டுகளாய் வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வின் பிரதிபலிப்பு என்கையில் அது “பவித்திரமானதாக” கோடிக்கணக்கானவர்களுக்குத் தென்படும். அதனையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது ஒற்றை வாக்கியங்களில் உண்மையை வெளிப்படுத்தும் மேடைப் பேச்சுகள் தமிழ்ச்சீர்த்திருத்த இயக்கங்கள், சமயச் சொற்பொழிவுகள், தமிழ்வகைப்பட்ட சினிமாக்கள், தொலைக்காட்சிகள் இவைகளின் பிரதிபலிப்பான இன்றைய சமூக ஊடகங்கள் எல்லாம் சில அடிப்படைப் பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டுள்ளன. சாய்ந்தால் சாய்கிற குணங்களும் புனிதங்களும் நம்மை மூடியுள்ளன. எதையும் பார்க்க முடியாத கருத்துக்குருடராக நாம் இருப்பது மீண்டும் மீண்டும் பிரச்சனைக்குள் நம்மை அழுத்தத்தான் செய்யும்.

ஒட்டுமொத்தமாய் ஒரு அறிவுபெறு சமூகமாய் கருத்துமாறுபாடுகளை மதிக்கிற சமூகமாய் நாம் மாற வேண்டியதிருக்கிறது. அதுதான் நம்மை நவீனச் சமூகமாக மாற்றும்.

இன்று உலகம் மாறியுள்ளது. உலகமயம் சமூகப் பண்புகளில் தோன்றி உள்ளது. தொலைக்காட்சிகளிலும் திரைப்படங்களிலும் பாரம்பரியப் பண்புகள் மாறியுள்ளளன. பெண்களின் உடலைப் பார்க்கும் முறை மிகப்பெரிய அளவில் மாறியுள்ளது. பாலியல் கிளர்ச்சி பற்றிய முன்பிருந்த கருத்தும் இன்றைய கருத்தும் மிகவும் மாறியுள்ளன. குடும்பத்தில் ஆணும் பெண்ணும் சேர்ந்து பார்க்கும் நடனக் காட்சிகளில் பழைய ஆண் பெண் பழகுமுறை இல்லை. தமிழ்ச் சமூகம் இதனை ஏற்றுக்கொண்டுள்ளது. இதுதான் சமூகம் மாறுகிறது என்று புரிந்துகொள்ளும் அளவுகோல். இந்தப் பின்னணியில் தாலி என்னும் அடையாளம் பற்றிச் சிந்திக்க வேண்டும். தாலி என்பது அடையாளமாகிறபோது அந்த அடையாளம் எப்படிப் பட்டது என்ற கேள்வி தோன்றுகிறது. புகைப்படம் கூட அடையாளம்தான். திரைப்படத்தில் ஒருவருடைய மதிப்பு குறைகிறது என்று காட்ட அந்தப் பெரியவருடைய புகைப்படம் நீக்கப்படுவதுபோல் காட்டுவார்கள். அல்லது காதலியின் படம் இளைஞனின் சட்டைப்பையில் இருக்கும். புகைப்படம் ஒரு வகை அடையாளம் . தாலி இன்னொரு வகை அடையாளம். கணவன் இறந்ததும் தாலி நீக்கப்படுகிறது. உயிரோடு இணைக்கப்பட்ட அடையாளம் தாலி. அதே நேரத்தில் பெண் – ஆண் என்ற சமத்துவத்தை மறுக்கிற அடையாளம் தாலி. புகைப்படம் அப்படி அல்ல. உப்பு பற்றி நமக்குத் தெரியும். உப்புக்கும் அரசியலுக்கும் தொடர்பு உண்டு என யாரும் சொன்னதில்லை. காந்தி வந்துசொன்னார். உப்பைப் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அரசியலுக்கு எதிராய் பயன்படுத்தி உப்பு என்ற சமையலுக்குப் பயன்படும் பொருளை அரசியல் அடையாளமாக்கினார். புதிய அடையாளங்கள் உருவாக்க முடியும். பெரியார் சமூக ஏற்றத்தாழ்வுக்கு “பிராமணர்” என்ற அடையாளத்தைக் காரணமாகச் சுட்டினார். அடையாளம் என்பது ஒரு அரசியல் சிந்தனையாக மேற்கத்திய பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படுகிறது. அரசியல் என்பது பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படுகிற கல்வி என்பது தமிழில் பலருக்குத் தெரியாது. அரசியல் என்பது பணம் சுருட்டுவதற்கான சுளுவான முறை என்று பலர் நினைக்கிறார்கள். அப்படி அல்ல. அது ஒரு சிந்தனை முறை. அந்தச் சிந்தனை “அடையாள அரசியல்” (Identity Politics) என்று மொழி, தேசம் போன்றவற்றினை அடிப்படையாய் வைத்து உருவாகிறது. மார்க்சீயர்கள் பொருளாதாரத்தை அடிப்படையாய் வைத்து அரசியலை விளக்குவதுபோல் அடையாள அரசியல் பேசுபவர்கள் மொழி என்றோ தேசம் என்றோ கூறி அவர்களின் அரசியலை விளக்குவார்கள். அமைப்பியல் என்ற பெயரில் பரவிய சிந்தனை மொழிதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்று கூறியது. மொழி என்ற அடையாளம் மனிதகுலத்தின் சிந்தனையைக் கூட நிர்ணயிக்கிறது என்றது. சற்று மாறுபட்ட சிந்தனை. இப்படி இப்படி அடையாளம் பற்றித் தொடர்ந்து சிநதிக்க முடியும். தாலி பற்றி தமிழில் சமீபத்தில் சிந்தித்தவர்கள் பிற அறிவுமுறைகளுடன் பழக்கமில்லாதவர்கள் போலிருந்தது. இன்று கட்டுரை இலக்கியம் தமிழில் இல்லாததற்கும் பிற அறிவுத்துறைகளுடன் இணைத்து எழுதத் தெரியாததே காரணம். பிற சிந்தனைகளுடன் இணைத்து ஒரு சிந்தனையின் பல்வேறு சாத்தியப் பாடுகளுடனும் அச்சிந்தனையின் மனிதவியல் விழுமியத்துடனும் இணைத்துச் சிந்திக்கும்போதுதான் பிழை தவிர்க்கப்படுகிறது. இன்று சிந்தனை முக்கியமாகி இருக்கிறது. சிந்தனை என்பது தகவல்களை அறிவதிலிருந்து அடுத்தகட்டத்துக்குச் சென்றுள்ளது. அது சமூகஇயக்கத்தோடும் நம் வாழ்வோடும் இரண்டறக் கலந்துள்ளது. வெறும் கல்வி என்பது வெறும் தகவல் தொகுப்பு. சிந்தனை என்பது தகவல் தொகுப்பு மட்டுமல்ல.தகவல்களைப் பிழிந்தெடுத்த சாறு. இன்று உலகமயமான உலகம் அறிவால் ஆளப் படுகிறது. கல்வி அறிவாக மாறும்போது சமூகத்தோடும் வாழ்வோடும் இணைகிறது. எதையும் ஒற்றைப் பரிமாணத்தில் சிந்திப்பதை நாம் தவிர்க்க வேண்டும். ஒற்றைப்பரிமாணம் என்பது பட்டைபோட்ட குதிரைகளின் பார்வை.சாதீயப்பார்வை.இன்று கட்சிகள் இதனைத்தான் ஊக்கபடுத்துகின்றன. அதனை மறுக்கவேண்டும். அதுதான் சிந்தனையின் தொடக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>