தமிழ் நாவல் பின்னணியில் வார்ஸாவில் ஒரு கடவுள் .

தமிழ் நாவல் பின்னணியில்

வார்ஸாவில் ஒரு கடவுள்.

–ஜெயலலிதா(விரிவுரையாளர்,கன்னடத்துறை,திராவிடப்பல்கலைக் கழகம்)

 

(இக்கட்டுரை தமிழவனின் தமிழ் நாவல் வார்சாவில் ஒரு கடவுளின் கன்னட மொழிபெயர்ப்பின்  முன்னுரை)

தமிழவனின் இந்த “வார்ஸாவில் ஓடும் ட்ராம்கள்” என்ற நாவலை மொத்த தமிழ் நாவல் சரித்திரத்தின் பின்னணியில் பார்க்கலாம்.

 

தமிழில் வந்த முதல் நாவலின் பெயர்: பிரதாப முதலியார் சரித்திரம், கன்னடத்தின் முதல் நாவலான இந்திராபாய் போல் இந்நாவலும் நீதிதுறை சார்ந்த ஒரு முன்சீப்பான வேதநாயகம் பிள்ளையால் 1879-இல் நாட்டுப்புறவியல் பாணியில் எழுதப்பட்டது. தமிழில் வந்த இரண்டாம் நாவல் வேதாந்தக் கொள்கைகளைக் கூறும் கமலாம்பாள் சரித்திரம் (1896), நாவலாசிரியர் விவேகானந்தரின் சீடர். மூன்றாவது தமிழ் நாவலின் பெயர் பத்மாவதி சரித்திரம் (1900) பிராமண சமூகத்தில் சீர்திருத்ததைக் கொண்டுவர எழுதப்பட்ட எதார்த்த வகை நாவல்.

 

அடுத்த கட்ட தமிழ் நாவல்கள் நாட்டுப்புறவியல், மர்மவகை நாவல்கள், பிரிட்டிஷ் Folklore Society – யின் மெம்பரான நடேச சாஸ்திரியால் எழுதப்பட்டது. இவர்தான் தமிழில் முதல் மர்மநாவலாசிரியர்.

 

தமிழ் நாவல் வரலாற்றின் 19-ஆம் நூற்றாண்டை ஒட்டிய காலகட்டம் 1. நாட்டுப்புறவியல் 2 மேற்கத்திய நவ இலக்கியப் போக்குகள் 3 சமூக விமரிசனப் போக்குகள் ஆகிய மூன்று புள்ளிகளைச் சுற்றி அமைந்தன. எல்லாத் தொடக்க நாவலாசிரியர்களும் ஆங்கிலத்திலும் தமிழிலும் வல்லவர்களாதலால் இவர்கள்  நவ இலக்கியத்தின் மூலம் நவ தமிழ் வாழ்வின் தேடல்களையும் இலட்சியங்களையும் சிக்கல்களையும் அறிமுகப்படுத்தினார்கள். சமீபகாலங்களில்  தமிழ்த்தன்மை என்ற ஒரு புதிய போக்கும் தற்காலத் தமிழ் இலக்கியத்தில்  முக்கிய அம்சமாகியுள்ளது.

சுப்பிரமணிய பாரதி பாரதமும் தமிழகமும் என்ற இரண்டு தேசியக் கருத்தாக்கத்தை முன்வைத்தார். பாரதிக்கு முன்பு முதல் தமிழ் நாவலாசிரியரான வேதநாயகம் பிள்ளை தான் தமிழ்த் தன்மை பற்றி கவலைப்பட்ட முதல் புனைகதை ஆசிரியர் (Fiction Writer). அவர் தமிழ்மொழியின் புகழையும் பழமையையும் பற்றி கூறி அதன் உயர்வைத் தமிழர்கள் ஸ்தாபிக்க வேண்டும் என்று தனது முதல் நாவலில் ஒரு பாத்திரத்தின் மூலம் கூறி இத்தகைய தமிழ்த்தன்மையை ஒரு concept  ஆக உருவாக்கினார். இது பின்னர் கடந்த ஒரு நூற்றாண்டுகால தமிழக அரசியலையும் இலக்கியத்தையும் தீர்மானிக்கிற சக்தி ஆகி 1967-இல் காங்கிரஸ் கட்சியை ஆட்சியிலிருந்து விரட்டி, திராவிடக் கட்சிகளை அன்றிலிருந்து மாநில ஆட்சியில் வைத்துள்ளது. மலையாள இலக்கியத்தில் ‘கேரளியதா’ தோன்றியதுபோலவும் கன்னடத்தில் ‘கன்னடத்தன’ என்ற கருத்துத் தோன்றியது போலவும் தமிழகத்தில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ‘தமிழ்த்தனம்’ நவீன இலக்கியத்தையும் நவீன அரசியலையும் தீர்மானிக்கும் சக்தியாகியுள்ளது. பாரதிதாசன் என்ற கவிஞர், கன்னடத்தில் புட்டப்பா போன்று பிராந்திய விழுமியங்களைச் சார்ந்து நின்றார். அவர் சங்க இலக்கிய வேருக்குப் போய் புதுவிதமான ‘தமிழ்த்தனத்தை’ மையமாக்கிய கவித்துவத்தை உருவாக்கினார். இது திராவிடக்கட்சி இலக்கியத்தில் மலினமானாலும் முற்றிலும் ஆற்றல் இல்லாததாய் ஆகிவிடவில்லை. ஏனெனில் 21-ஆம் நூற்றாண்டில் 2009-இல் ஈழத்தில் (Srilanka –வின் வடபகுதி) சுமார் 1½ இலட்சம் தமிழ் மக்களை சிங்களர்கள் கொன்றபோது மீண்டும் இந்தத் ‘தமிழ்த்தனம்’ முக்கிய அடிப்படைஅறிவுத் தளமாய்   தற்காலத் தமிழ் இலக்கியத்தில் புதுவடிவம் பெற்றுள்ளது.

 

இங்குத்தான் தொல்காப்பியர் காலத்திலிருந்து தமிழிலக்கியம் மட்டுமே உயர்சாதிகளுக்கு எதிரான தமிழ்க்காவிய மீமாம்சையைத் தென்கிழக்காசியாவில் அறிமுகப்படுத்திய உண்மையை அறியவேண்டும். குறிஞ்சிமுல்லை, மருதம் நெய்தல், பாலை என்ற சமஸ்கிருதத்துக்கு மாற்றான கவிதை ‘Aesthetics’ இந்தியாவின் தெற்குப் பகுதியில் தோன்றியதைப் புரிந்துகொள்ள  வேண்டும். கன்னடத்தில் தொன்னூறுகளில் தமிழ்க்காவிய மீமாம்சை என்ற நூல் தோன்றிய பிறகு வந்த கன்னடகாவிய மீமாம்சை சார்ந்த Discourses பலமிழப்பதற்குக் காரணம் கன்னடத்தில் ஒரு தொல்காப்பியமோ, அதனால் தென்கிழக்காசியா எங்கும் இல்லாத சிலப்பதிகாரம் தோன்றியதோ சம்பவிக்கவில்லை. கன்னடத்தின் தேசி பரம்பரையின் மகுடமான வசன சாகித்தியம் தமிழ் பக்தி இலக்கியத்தின் (புராதனரு) தொடர்ச்சி (தமிழ்ப்பக்திக்கு சங்க இலக்கியத்தின் சில போக்குகளின் பாதிப்பு உண்டு என்பது எல்லோரும் அறிந்ததே) என்பதனை ஆழமான இருமொழி ஆய்வுகள் ஸ்தாபிக்கும்.

 

தொல்காப்பியமும் அதன் விதிகளுக்கேற்ப உருவான மிகவும் வித்தியாசமானதும் சமஸ்கிருத காவியம் பற்றிய விதிகளை மீறியும் எழுந்த சிலப்பதிகாரமும் இந்தியாவுக்கும் தெற்கிழக்காசியாவுக்கும் சாதாரண மக்களின் பிரதிநிதிகளான நூல்களாகும். சாதாரணர்களின் வாழ்விலும் இலக்கியத்துக்கும் கற்பனைக்கும் இடமுண்டு என்று பல நூற்றாண்டுகளாகக் கூறிக்கொண்டு இந்த நூல்கள் இருக்கின்றன. அவை எவை என்றால் தமிழின் ஆதி இலக்கியங்களும் இலக்கணங்களும்.

 

(2)

 

வேதநாயகம் என்ற முதல் தமிழ் நாவலாசிரியன் தமிழ்த்தனத்தை – தமிழில் இதுவரை இல்லாத உரைநடை இலக்கியத்தைத் தோற்றுவிப்பதற்காக நாவல் எழுதிய மரபு தொடர்ந்து பேணப்படவில்லை.

 

தமிழவனின் (முனைவர் கார்லோஸ்) ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் என்ற நாவல் (இதன் கன்னடமொழிபெயர்ப்பு இவரு கதெயாதவரு என பிரியதர்ஷினி பிரகாஷன மூலம் 2000-இல் வெளியானது). தமிழில் 1985-இல் வந்த அந்நாவல் தமிழக பிரத்தியேக மரபான சுயபண்பாட்டின் கதைகூறு முறைமையை லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் கார்சியா மார்க்கேஸ் பாதிப்புடன் மறுகண்டுபிடிப்புச் செய்து, தமிழில் பரபரப்பான விமர்சனங்களுக்கு வழிவைத்தது. சுமார் 25 விமரிசனஙகள் வெளிவந்தன. எதார்த்தவாதத்தை, அக்காலத்தில் தாங்கிப்பிடித்த இடதுசாரியினர் அந்நாவலை எதிர்த்தது துரதிருஷ்டவசமானது. அவர்கள் பல கருத்தரங்குகளில் கண்டித்தனர். இதனால் இப்பாணி எழுத்துப் பிரபலமானது .தமிழ்த்துறைகளில் பல முதுகலை மையங்களில் பாடமாக அந்நூல் ஆனது. இன்றைய தமிழ்ப்பல்கலைக்கழகம் (தஞ்சாவூர்) துணைவேந்தரான ம. திருமலை அவர்கள் ஆதரித்து எழுதிய விமரிசனம் பலர் கவனத்தைப் பெற்றது. க.நா.சுப்பிரமணியன் அந்நாவலை வைத்து ஒரு கருத்தரங்கம் நடத்த ஆசைப்பட்டார். பல வாதவிவாதங்களை உருவாக்கிய  தமிழின் அந்த முதல் மாய எதார்த்த நாவலின் பாணியைத் தொடர்ந்து இன்று சுமார் 15 எழுத்தாளர்கள், இடதுசாரிகளையும் சேர்த்து, அப்பாணியில் நாவல்களும், சிறுகதைகளும் கடந்த 25 ஆண்டுகளாக எழுதி வருகின்றனர். கிறிஸ்தவக்கதையை உருவாக்கித் தமிழிலக்கியத்தின் பல்சமய Space – க்கு வழிவகுத்தது இந்நாவல்.

 

இந்த நூற்றாண்டின் முதல் எண்பது வருடங்களில் தமிழ் நாவல் பல ‘மாதிரிகளை’க் கண்டுள்ளது. எனினும் அவை வெகுசில முக்கியமான மாதிரிகளையே (Model)  முன்வைத்தன. 1910களிலும் 20களிலும் தமிழில் நாவல் எழுதிய பொன்னுசாமிப்பிள்ளை பற்றி 20 – ஆம் நூற்றாண்டின் நாவல் வரலாறு விசேஷமாய் குறிப்பிடுவதில்லை. 1926 – 50 – க்கும் இடையில் கோதை நாயகி அம்மாள் என்ற பெண் எழுத்தாளர் தமிழ் மர்மநாவல்களாய் எழுதித் தள்ளினார். வேறுசிலரும் இதையே செய்தனர். 50கள் காலகட்டத்தில் தமிழில் வரலாற்று நாவல்கள் அறிமுகமாயின. அவை இலக்கியக் குணம் இல்லாவிட்டாலும் வரலாற்று உணர்வைப் பரப்பி தமிழ்த்தனத்தின் வீரவரலாற்றைப் பிரச்சாரம் செய்தன. அத்தகைய நாவல்களை எழுதிய கல்கி தொடர்கதைகளாய் வரலாற்று நாவல்களை வாசகர்கள் ரசிக்கும் விதமாய் திருப்பங்களை மையமாக்கி எழுதினார். எனவே, வாசகர்கள் கூட்டமிருந்தது. எனவே, தமிழில் ஒரு மாஸ்தி வெங்கடேச ஐயங்காரின் சிக்க வீர ராஜேந்திரா மாதிரி நாவல் தோன்றவில்லை. கல்கியின் வரலாற்று நாவல்களை மேற்கத்திய ஆய்வாளரான கமில் ஸ்வலபில் (Kamil ZVelebil) அவர்கள் Historical Romances  என்கிறார். வால்டர் ஸ்காட், டூமாஸ் போன்றோர் போல் இந்த வரலாற்று ரொமான்ஸ் நாவல்கள் எழுதப்பட்டன. 1941-இல் வந்த பார்த்திபன் கனவு, ஐந்து நூல்களாக வந்து வாசகர்களைக் கவர்ந்த பொன்னியின் செல்வன் (1955), சிவகாமியின் சபதம் (1948) போன்ற நாவல்கள் தமிழில் சிறந்த ரசனையைப் பாழ்படுத் தின என்பது விமரிசகர் க.நா.சுப்பிரமணியம் கருத்து. அத்துடன் பாரத தேசியக் கருத்தை அலையோசை (1953) போன்ற நாவல்கள் மூலம் கல்கி பரப்பினார்.

 

தமிழவனின் இரண்டாவது நாவல் ‘சரித்திரத்தில் படிந்த நிழல்கள்’ (1993) என்பதாகும். அதிலும் சரித்திரம் முக்கியமான கதாவஸ்து ஆகிறது. ஆனால் வாசகர்களைச் சிந்திக்கிறவர்களாக மாற்றும் பூடகமான கதைசொல்முறை மூலம் தற்கால தமிழக அரசியலின் தலைவர்களும் திராவிடக் கட்சிகளின் சினிமாத் தனங்களும் கேலி செய்யப்படுகின்றன. தொல்காப்பியர், பாரதிதாசன் வழி ஒரு நவீனமான கதை அமைப்புமுறை தமிழ்க்கதைப் பாடல்கள், பழமொழிகள், நாட்டுப்புறக் கதைகள் வழி இங்கு உருவாகின்றன. ஒருவித புதுமையான அங்கதம் வழி ‘சரித்திரம்’ பற்றி எழுதப்பட்ட நாவலாகும் இது.  தமிழவன் பெங்களூர் பல்கலைக்கழகக் கன்னடத் துறையின் தமிழ்ப்பேராசிரியராக இருந்தாலும் இந்நாவல்கன்னட மொழியில் பெயர்க்கப்படவில்லை. தமிழில் இப்போது இரண்டாவது பதிப்பாக வந்துள்ளது இந்நாவல். தமிழில் எல்லோரும் சரித்திரத்தைப் பற்றி வாசகப் பரபரப்புக்குத் தீனி போடும் திருப்பங்களும் மர்மங்களும் சேர்த்து இலக்கியத் தரம் பற்றிக் கவலைப்படாமல் பத்திரிகை தொடர்கதைகளாக  எழுதிக் குவித்தபோது முதன்முதலில் இந்த நாவல் தமிழின் Mass Culture  சார்ந்த பைத்தியக்காரத் தனத்தை நாவலின் கதாநாயகனாக்கியது.

 

தமிழில் மர்மக்கதைகள் இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே எழுதப்பட்டன என்று பார்த்தோம். தமிழவன் 1999 –இல் எழுதிய ‘ஜி.கே. எழுதிய மர்மநாவல்’ என்பது மர்மநாவல் உத்தியைப் பயன்படுத்தி எழுதப்பட்ட சுருங்கை என்னும் ஊரைச் சுற்றி எழுதப்பட்ட நாவல். சொந்தஊர் என்பது தமிழ் வரலாற்றில் முக்கியமான தேடலாகும். தமிழர்களின் தாயகம் எது என்ற சர்ச்சைகள் அடிக்கடி ஆய்வுலகில் நடக்கும். அந்த Identity சர்ச்சையையுடன் சமணம், பௌத்தம் போன்ற தத்துவங்கள் பற்றிய உரையாடலாகவும் பொதுவான மனித அர்த்தத்தை reconstruct செய்வதாகவும், ஈழத்தமிழன் ஒருவன் நூல்களைப் பயன்படுத்தித் தமிழனின் ஊர் எது என்று ஒரு தத்துவப் பயணம் மேற்கொள்வதாகவும் நாவல் அமைந்தது. Umberto Eco தனது Name of the Rose, என்ற நாவலில் ஏற்கனவே இருந்த மர்மநாவல் genre-யைப் பயன்படுத்தியதுபோல்  இந்த நாவல் தமிழ் மர்ம நாவல் பாணியைப் பயன்படுத்தியது. முக்கியமாய் நடேச சாஸ்திரி ஆங்கிலப் பாத்திரமான Dick Donovan – யைப் பின்பற்றி “தானவன் என்ற போலீஸ் நிபுணன் கண்டுபிடித்த அற்புத குற்றங்கள்” என மர்ம நாவல் எழுதிய முறையில் (Method) இந்தத் தமிழ்நாவல் எழுதப்பட்டது எனலாம்.

 

தமிழ் நாவல் வரலாற்றில் ப. சிங்காரத்தின் நாவல் “கடலில் ஒரு தோணி” மலேசியா, சிங்கப்பூர் தமிழர்கள் பற்றிக் கூறுகிறது. ஜெயகாந்தனின் பாரிஸுக்குப் போ, பாரிஸ் என்ற அயல் கருத்துப் பற்றிக் கூறுகிறது. அதுபோல் தமிழவனின் நான்காவது நாவல் “வார்ஸாவில் ஓடும் டிராம்கள்” – என்ற நாவல் வார்ஸாவை மையமாகக் கொள்கிறது. அவர் 2001 – இலிருந்து 2005 வரை வார்ஸா பல்கலைக் கழகத்தில் தமிழும், ஆரம்ப level கன்னட மொழியும் (முதன்முதலில் அப்பல்கலைக் கழகத்தில் கன்னடம் கற்பிக்கப்பட்டது) கற்பித்தார். இந்நாவல் வார்ஸா ஓடும் ட்ராம்கள் என்று கன்னடத்தில் மொழிபெயர்க்கப்படுகிறது. பெங்களூர் பல்கலைக்கழகக் கன்னடத்துறையில் தமிழ்ப்பேராசிரியராக  இருந்தபோது (இன்று பிரபலமாகி உள்ள பல மாணவர்களுக்கு) புகழ் பெற்ற கன்னடப் பேராசிரியர்கள் பலருடன் Comparative Literature –ம்,  Folklore – உம் கற்பித்த தமிழவன் Globalization – இன் பின்னணியில் கிழக்கு ஐய்ரோப்பிய  நாடுகளைப் பின்னணியாக வைத்து Pan – Indian  நாவல் ஒன்றை எழுதியுள்ளார். தனிவாழ்க்கை – பொதுவாழ்க்கை (நாக்ஸலிசம்) பாலியல் – ஆன்மீகம், கிழக்கு – மேற்கு, எதார்த்தம் – Magic, விஞ்ஞானம் – Fantasy, ஈழச்சிக்கல் – ஐரோப்பிய Diospora என்று பல விஷயங்களை நாவல் தொடுகிறது. கன்னட வாசகர்கள் வரவேற்பார்கள் என்பது என் உறுதியான நம்பிக்கை.

 

தொல்காப்பியர் எழுதிய Alternate Poetics – ஆன திணை சித்தாந்தத்தின் அடிப்படையில் narration –  உத்திகளும் அர்த்தங்களும் தமிழவனின் மொத்த நாவல்  எழுத்தில் பின்பற்றப்படுகிறது. வழக்கமாக தற்கால தமிழ் வாழ்க்கையில் மரபு மிகவும் இறுக்கமாகி நவீன விஷயங்களை ஏற்கமுடியாத மொழியாக தமிழ் ஆகியுள்ளது என்ற குற்றச்சாட்டு உண்டு. புதுக்கவிதை கூட 50களில் கன்னடத்தில் வந்ததென்றால் 70களுக்குப் பிறகுதான் தமிழில் தோன்றியது. மாற்றத்தைக் கண்டு பயப்படும் சுபாவம் தமிழில் காணப்படுகிறது. அத்தகைய மொழியில் மேற்கை நன்றாக ஜெரித்துவிட்டு அதனால் தமிழ்மரபுகளைச் சுதந்திரமாகத் தமிழவன் கையாள்வதை அவருடைய விமரிசனத்திலும் நாவல்களிலும் காணலாம். இதற்குக் கன்னட இலக்கியச் சர்ச்சைகளை அவர் கவனித்ததே காரணம் என்பர்.

 

நாவல்களில் திணைவழி உருவான சங்கப்பாடல்களான பத்துப்பாட்டு, சிலப்பதிகாரத்தின் கதை அமைப்பைப் பல்வேறு சோதனைகள் மூலம் கொண்டு வருகிறார். (through many experiments in narration). பெரும்பாலும் Borges (தமிழவன் Borges மீது ஆழ்ந்த புலமை உள்ளவர் – பார்க்க அபினவா வெளியிட்டுள்ள Borges பற்றிய கன்னட நூல்) கதை உலகத்துக்குக் கொண்டு வந்துள்ள புதுமைகளைப் போல் பல புதுமைகளைப் புனைகதை செய்யும் முறைக்குத் தமிழவன் கொண்டு வந்துள்ளார். திணை Poetics – லிருந்து உணர்வை (Feeling) உதறி எறிந்துவிட்டு அறிவை (Knowledge) பிரதானமாக்கும் Narration உத்தியானது அதிகம் இலக்கிய ஈடுபாடு இல்லாத தமிழ் வாசகர்களைத் திக்குமுக்காட வைத்தாலும் தமிழவன் சீரிய சிறுபத்திரிகை வாசிக்கும் உலகத் தமிழ் வாசகர்கள் மத்தியில் தொடர்ந்து சர்ச்சிக்கப்பட்டு வருகிறார். மலேசியா, ஈழம், மேற்கு நாடுகளில் இவரின் வாசகர்கள்  இருக்கிறார்கள்.

 

இந்த நாவல் மொழிபெயர்ப்புக் கன்னடத்தில் நம் சகோதர மொழியான தமிழின் இலக்கியப்போக்குகள் பற்றிய ஆரோக்கியமான சர்ச்சையை ஏற்படுத்தும் என்று நம்பலாம். அதற்கு இந்த அரிதான (rare) நாவல் பயன்படுமெனில் என் இதுநாள்வரைய மொழிபெயர்ப்பு பிரயத்தனங்களுக்கு அர்த்தம் ஏற்படும் என்று நம்புகிறேன்.

 

‘வார்ஸாவில் ஓடும் டிராம்கள்’ என்ற தமிழ் நாவல் கனடா நாட்டின் Literary Garden என்ற அமைப்பால் 2008 – ஆம் ஆண்டில் சிறந்த தமிழ் நாவலாய் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பரிசு அளிக்கப்பட்டது. இந்த நாவல் இவரது பிற நாவல்கள் போலவே சோதனை ரீதியானதாகவும் மனிதமனங்களின் மர்மங்கள் கொண்டதாகவும் உள்ளது.

 

இந்நாவல் கதை இதுதான். சந்திரன் என்ற இந்தியாவிலிருந்து வார்ஸாவுக்குச் சென்ற பாத்திரம், வார்ஸா போன பின்பு ஒரு பத்திரிக்கைக்குத் தனது கதையைக் கூற ஒரு போலந்து நாட்டு இளம்பெண். அதனை இந்தியன் ஒருவனின் கதை எனப் பிரசுரிக்கிறான். அவளுக்கும் ஒரு கதை இருக்கிறது; அது போலந்து நாடு ஜெர்மன் பாசிசத்தால் தாக்கப்பட்டபோது அந்நாடு சந்தித்த துயரத்தோடு அவர்களின் இன்றைய வாழ்வும் பின்னிப் பிணைந்திருப்பதைச் சுட்டுகிறது. சந்திரனின் தாய் பர்மாவிலிருந்து 2-ஆம் உலகப்போர் சந்தர்ப்பத்தில் குழந்தையாய் கோயம்புத்தூருக்கு அருகில் வளர்க்கப்பட்ட கதையைச் சந்திரன் கூறுகிறான். சந்திரன் சந்திக்கும் இன்னொரு பெண் லிடியா. இவளுடைய அண்ணன், மற்றும் இளம்காதலன், ஆகியோரைச் சுற்றிப் பிணைந்த கதையை லிடியா கூறுகிறாள். சந்திரனை வார்ஸாவில் வரவேற்கும் சிவநேசம் தன் இளம்வயது கதையைக் கூறுகிறார். சந்திரனே தான் இந்தியாவிலிருந்தபோது தனக்கு நடந்த திருமணம்,மற்றும் அவனது மனைவிக்கு நேர்ந்த துயரம் – இவற்றை எல்லாம் கூறுகிறான். மிகச்சிறிய கதைச்சுருக்கம் இது.

 

தமிழவனின் ஒவ்வொரு கதையும் Non – linear பாணியில் பின்னிப்பிணைந்து பல தளங்களில் இயங்கி, பல தத்துவங்கள், வரலாறுகள், பண்பாட்டு மோதல்களை வெளிக்கொண்டு வருகின்றது. இவ்வாறு ஒரு Postmodernist இந்திய நாவலின் சமீபத்திய உதாரணமாக அமைகிறது. இது கன்னட நாவல்களுடன் தமிழ் நாவல்களை ஒப்பிட்டுத் தீரவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது என எனக்குப்படுகிறது.  (தமிழில்:ஜெயலலிதா,விரிவுரையாளர்,கன்னடத் துறை,திராவிடப் பல்கலைக் கழகம்,குப்பம்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>