புதுக்கம்யூனிசம்

சிறப்புக்கட்டுரை

புதுக்கம்யூனிசம்

தமிழவன்

 

திடீரென இந்திய அரசியலும் சூழலும் மாறியுள்ளன. மோதி இந்தியாவின் பிரதமரானதோடு இந்தியக் கல்வி, வரலாறு, பண்பாட்டுச் சூழல் போன்றன ஒரு பூகம்பத்துக்கு ஆட்பட்டுள்ளன:

 

“புக் ரிவ்யு லிட்டரரி அறக்கட்டளை” என்ற அமைப்பு டெல்லியில் நடத்திய  நிகில் சக்கரவர்த்தி நினைவுச் சொற்பொழிவில் புகழ்பெற்ற வரலாற்றியல் ஆய்வாளரான ரொமிலா தப்பார் ஒரு கருத்தை வெளியிட்டார்: “பாடங்கள் மாற்றப்படுகின்றன: நூல்கள் அழிக்கப்படுகின்றன. அறிவுஜீவிகள் அமைதியாகிவிட்டனர்”.

 

அறிவுஜீவிகள் அமைதியான செய்தி புதுமையானதல்ல. தமிழகத்தைப் பார்ப்போம். இடதுசாரி கட்சிகள் எந்தத் தெளிவுமின்றிச் செயல்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். திராவிடக் கட்சிகள் இரண்டுமு் ஊழலில் சிக்கியுள்ளன. மூன்றாவது அணியான சிறுகட்சிகள் சாதி உணர்வையோ, சினிமா மயக்கத்தையோ, தமிழ் உணர்வையோ பயன்படுத்திச் செயல்படுகின்றன. சமீபத்தில் மோதியின் கட்சியுடன் கூட்டணி அமைக்கவும் தயங்கவில்லை. வேல பல “லெட்டர் பாட்” கட்சிகள் உள்ளன. ஈழப் பிரச்சனையில் சில அமைப்புகளும் சிறுகட்சிகளும் உண்மையாக மக்கள் கவனத்தை ஈர்த்தன. அணு உலை போராட்டம் என்ற புதுமையான போராட்டம் வெற்றிபெற முடியவில்லை. பெரிய கட்சிகள் அத்தகைய போராட்டத்தைத் தடுக்க முடியும் என்று காட்டின.

 

அதாவது தமிழர்களுக்கு அன்று பெரியார் இருந்ததுபோல் இன்று யாருமில்லை. அன்று பெரியார் சிந்தனையின் மூலம் தமிழகத்துக்கு வெளிச்சம் தந்தார். கடவுள் நம்பிக்கையையும் சாதி மேட்டிமையையும் மூடப்பழக்க வழக்கங்களையும் பிரித்தறிய மக்கள் பயிற்சி பெறும் பொருட்டு ஓர் இயக்கத்தை நடத்தினார். அவர்போல் ஒருவர் இந்தியாவில் கர்நாடகம், ஒரிசா, அசாம், வங்காளம் என்று எந்த மாநிலத்திலும் இல்லை. பெரியாருக்குச் செய்ய வேண்டியது: அவர் சிந்தனையைத் தொடர்வது.

 

அந்த வகையில் அவர் சிந்தனையை நாம் தொடரவில்லை. தமிழகத்தைச் சிந்தனை கிளர்ச்சியுள்ள மாநிலமாக மாற்றவும் இல்லை; தமிழ்மக்கள் சுமார் 1,50,000 பேர் ஈழத்தில் கொல்லப்பட்டபோது நாம், தமிழகத் தலைவர்களால் ஏமாற்றப்பட்டோம். தமிழகப் பல்கலைக்கழகங்கள் பொருத்தமான கல்விச் சூழலை ஏற்படுத்தவில்லை. வடநாட்டினளவு கூட புதிய அறிவுச் சூழல் வளர நம் திராவிடத்தலைமை ஏதும் செய்யவில்லை. நவீன சமூகமாகத் தமிழ்ச் சமூகத்தை மாற்ற அவர்கள் விரும்பவில்லை. இலவசப் பொருள்களும் மதுவும் கொடுத்தனர். அவ்வளவுதான். இந்திய அரசியலான இந்துத் தத்துவம் தமிழகத்தில் தற்காலிகமாக இன்று தடுக்கப்பட்டுள்ளது.

 

இலக்கிய அரங்கில் சிறுகுழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அதனால் தமிழ்மொழியில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மொழிகூர்மையடைந்து வருகிறது; பெருங்கட்சிகளைத் “தமிழ்மொழிமைக்குள்” முற்றிலும் அனுமதிக்காமல் இலக்கியக் குழுக்கள் செயல்படுகின்றன. ஆபத்துக்கள் இல்லாமல் இல்லை. அரசியல்வாதிகளின் வாயில் அல்லல்படும் தமிழ் மொழியைப் பலவித சிந்தனைக் கட்டுரைகள், நாவல்கள், கவிதைகள் மூலம் கொஞ்சம் தமிழர்கள் காப்பாற்றுகிறார்கள். பிற செவ்வியல் மொழிகள் அளவுக்குப் புராதன வேர்களைக் கொண்டிருந்தாலும் தமிழ் நவீனமாகி வருகிறது. தமிழ்க்கல்வி இந்த விசயத்தில் எதிர்பார்த்த அளவு முன்னேறவில்லை என்பது வருத்தத்துக்குரியது. மரபுமரபாக தமிழ்மொழி தமிழ்மக்களது அரசியலுக்கும் வளர்ச்சிக்கும் பயன்பட்டு வருகிறது. அதாவது இரண்டாயிரம் ஆண்டுகளாக இது நடக்கிறது. தமிழ்மொழி மூலம் இது தொடரவேண்டும்.

 

இந்தச் சூழலில் அனைத்துலகச் சிந்தனைகளைக் கவனிக்கும்போது “புதுக் கம்யூனிசம்” என்ற பெயரில் உலகம் எங்கும் காட்டுத்தீயைப் போல் பலரது சிந்தனைகள் பரவுவதைக் கூறவேண்டும் என்பதற்காக இக்கட்டுரை எழுதப்படுகிறது.

 

அலென் புட்யொ (Alain Badiou) என்ற பிரஞ்சு தத்துவப் பேராசிரியருடைய கருத்துக்கள் இத்துறையில் சமீப காலத்தில் முக்கியமாகியுள்ளன. சர்க்கோஸி பிரஞ்சு தேர்தலில் அன்று நின்றபோது மீண்டும் கம்யூனிசமும் மாணவர் போராட்டமும் வரக்கூடாது என்று பேசியதைக் கண்டித்து புட்யொ அவர்கள் ஒருநூல் எழுதினார். அந்த நூலின் பெயர்:  “சர்க்கோஸியின் தரும் அர்த்தம்” என்பது. அந்த நூலின் இறுதிப் பகுதியில் கம்யூனிச யூகம் (Communist Hypothesis)  என்ற ஒரு கட்டுரையை இணைத்திருந்தார். பின்பு இக்கட்டுரை தனியாய் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு நியுலெஃப்ட் ரிவியூ என்ற இலண்டன் இடதுசாரி இதழில் 2008-இல் பிரசுரிக்கப்பட்டது. பின்பு 2009-இல்  இலண்டனில் “கம்யூனிசம் என்ற கருத்துப் பற்றி” (On the Idea of Communism)  என்ற கருத்தரங்கை ஸ்லவாய் ஷிஷெக் மற்றும் கோஸ்டாஸ் டௌசினாஸ் (Costas Dowzinas)  இருவரும் நட்த்தினார்கள். அக்கருத்தரங்கு பெர்லினில் இருந்த சுவர் உடைக்கப்பட்ட 20ஆம் ஆண்டு நிறைவுவிழாவைப் பலர் கொண்டாடியதற்கு எதிர்ப்பாய் நடத்தப்பட்டது. அதாவது சுவரை உடைத்ததுடன் கம்யூனிசம் முடிந்து விடவில்லை என்று கூறுவதற்காக இக்கருத்தரங்கு நடத்தப்பட்டது. இக்கருத்தரங்கில் முக்கிய பங்கெடுத்த ஸ்லவாய் ஷிஷெக் (இவர் பற்றிய அறிமுகத்துக்கு சிற்றேடு இதழ்கள் பார்க்க) இன்று உலகமெங்கும் தன்னுடைய சிந்தனைகளால் பூகம்பத்தை ஏற்படுத்தி வருகிறார்.

 

2009-இலண்டன் கருத்தரஙகு பலவகைகளில் முக்கியமானது. அதில் டோனி நெக்ரி (Toni Negri)  ழாக் ரான்சியர், ஸ்லவாய் ஷிஷெக் போன்றவர்கள் பங்கெடுத்தனர். இக்கருத்தரங்கைத் தொடர்ந்து 2010-இல் பாரிஸில் (ஜனவரி) புதுக்கம்யூனிசச் சிந்தனைகளைப் பற்றி விவாதிக்க ஒரு கருத்தரங்கு பாரிஸின் பிரபலமான பல்கலைக்கழகத் தத்துவப் பேராசிரியர்களும் பிற சிந்தனையாளர்களும் கலந்துகொள்ளும் முறையில் நடத்தப்பட்டது. அறுபதுகளில் பேரா.அல்துஸ்ஸரின் மாணவரகளான அலென் புடயொ, ழாக் ரான்சியர், எத்தியானி பாலிபர் (Ethianne Baliber) ஆகியோர் தம் பேராசிரியருடன் இணைந்து செயல்பட்டனர்.

 

அப்போது இவர்கள் அல்துஸ்ஸரின் மாவோயிசக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டிருந்தனர். அல்துஸ்ஸரின்  மனநோய் சார்ந்த மரணத்துக்குப் பிறகும் அலென் புட்யொ மாவேயிசத்தால் ஈர்க்கப்பட்டுப் புது தத்துவக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதில் தான் வாழ்நாளைச் செலவிட்டார். புதுக் கட்சி ஒன்றையும் தொடங்கினார். ரான்சியர் தன் பாதையில் தத்துவத்தில் பயணம் மேற்கொண்டார். பாலிபரும் மார்க்ஸின் தத்துவம் முதலிய நூல்களை எழுதுவதில் ஈடுபட்டனர். எல்லோரும் கலை இலக்கியம் தனியானது என்ற கருத்தில் உடன்பட்டாலும் பிற சிந்தனைகளில் வேறுபட்டனர். ஆனால் இவர்கள் எல்லோரும் 2010-இல் நடந்த  பாரிஸ் கருத்தரங்குக்கு வந்திருந்தனர். அறுபதுகளில் சார்த்தர் உயிருடன் இருந்தபோது பாரிஸ் உலகப் புரட்சிச் சிந்தனையின் அறிவார்த்த தலைமையிடமாக இருந்ததுபோல் 21-ஆம் நூற்றாண்டின்  தொடக்கப் பகுதியில் புதுக்கம்யூனிசம் என்ற சொல் உலக அறிவாளிகளிடம் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. இந்தச் சிந்தனைகளின் மையப்புள்ளியாக 74 வயதான அலென் புட்யொவும் 64வயதான ஸ்லவாய் ஷிஷெக்கும் செயல்படுகின்றனர். 2013-இல் சமயம் ஷிஷெக் அவர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கும் தென்கொரியாவில்  அவர் அலென் புட்யொவுடன் இணைந்து புதுக்கம்யூனிசம் பற்றி இன்னொரு கருத்தரங்கு நடததினார். இவ்வாறு உலகம் எங்கும் ஆய்விதழ்களும், அரங்குகளும் சொற்பொழிவுகளும், தத்துவச் சிந்தனைகளும் புதியமுறையில் கம்யூனிசத்தை நாட ஆரம்பித்துள்ளன. இவர்களும் இத்தகைய சிந்தனைகளும் திடீரென நேற்று வந்த மழையில் இன்று முளைத்த காளாண்களா? இச்சிந்தனைகளுக்கு ஏதேனும் பின்னணி உண்டா?

 

மார்க்சியத்துக்குள் மாற்றுக்குரல்கள்

லெனின் சோவியத்நாட்டில் புரட்சியைக் கொண்டுவந்தபோதே அவருடைய பாதையை விமரிசித்த குரல்கள் தோன்றின. முக்கியமானது ரோஸா ல்க்ஸம்பர்க் என்பவருடையது. மார்கஸின் கருத்துக்களுக்கு மாறாகத்தான் லெனின் வளர்ச்சியடையாத – விவசாய அடிப்படைகளுள்ள ஒரு நாட்டில் புரட்சியைக் கொண்டு வந்தார். ரோஸா லக்ஸம்பர்க் என்ற அம்மையார் லெனினின் பல கருத்துக்களை மறுத்தார். லெனின் திட்டமிட்ட கட்சி மூலம் தான் புரட்சி இயக்கப்பட வேண்டுமென்று கூறியபோது ரோஸாலக்ஸம்பர்க் சுயஉந்துதலும் முனைப்பும் (Spontaneity) போதும் என்றார். அதுபோல் 1920 வாக்கில் ஜார்ஜ் லூக்காக்ஸ் ஹெகல் தத்துவத்தை மார்க்ஸீயத்துக்குள் கொண்டுவந்து மார்க்ஸீயம் ஒரு முறைமையை (Method) மட்டுமே தருகிறது என்று விவாதித்து “வரலாறும் வர்க்க உணர்வும்” என்ற நூலை எழுதினார். பின்பு பிராங்க்பர்ட் மார்க்சீயர்கள் தோன்றினர். இவர்கள் பிராய்டின் உளவியல் ஆய்வுகளை ஏற்று மார்க்சீயத்துக்குள் உளவியல் உண்மைகளை இணைத்தனர். இவர்களில் ஒருவரான மார்க்கூஸ் (Marcuse)  சோவியத் யூனியன் இறுகிய ஒற்றைப் பரிமாண மனிதனை உருவாக்குகிறது என்றும் மத்தியதர வர்க்கமும் தொழிலாளிவர்க்கம்போல் புரட்சிகரமானதே என்றும் கருத்தை முன்வைத்தார். இவ்வணியைச் சார்ந்த அடார்னோ (Adorno)  மற்றும் ஹொர்ஹேமர் (Horkheimer) ஆகியோர் மார்க்சியத்திலிருந்து அறிவொளிக்கால விஞ்ஞானவாதத்தை நிராகரிக்க வேண்டும் என்றும் தொழிலபிவிருத்தியின் மூலம் மட்டுமே புதிய சமூகம் படைக்கப்படும் என்பது உண்மை அல்ல என்றும் விவாதித்தனர். மேலும் இவர்கள் அறிவுவழி என்பதையும் கேள்வி கேட்டனர். மனிதகுலம் அறிவின் மூலமும் விஞ்ஞானத்தின் மூலமும் உலகை அழிக்கவும் முடியும் என்ற கருத்துக்களை உருவா்ககினர். சோவியத் ரஷ்யாவிலும் எங்கெல்ஸ் அவர்களிடமும் காண்ப்பட்ட இயங்கியல் (Dialectics)  சார்ந்த ஹெகலின் கருத்தை இக்குழுவினர் ஏற்கவில்லை. எங்கெல்ஸ் இயங்கியலைச் சரியாய் புரிந்து கொள்ளவில்லை என்று ஏற்கனவே தத்துவ நிபுணரான ஜார்ஜ்லூக்காக்ஸ் கூறிய குற்றச்சாட்டும் இங்கு நினைக்கத்தக்கது. அடுத்ததாக எக்ஸிஸ்டென்ஷியல் மார்க்சீயம் பிரான்சில் தோன்றியது. இதன்கருத்தை ழீன் பவுல் சார்த்தர் என்ற பிரான்ஸின் தத்துவப் பேராசிரியர் விரிவுபடுத்தி நூல்கள் எழுதினார். இக்கருத்துக்களோடு முரண்பட்ட லூயி அல்துஸ்ஸர் என்ற பிரஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரும் தத்துவப் பேராசிரியருமான நிபுணர் தன் தத்துவத்துறை மாணவர்களுடன் இணைந்து மார்க்ஸின் அறிவுவாதத்தையும் விஞ்ஞானத் தன்மையையும் வலியுறுத்தி நூல்கள் எழுதினர். இவருடைய மாணவர்கள் – இவரைப் போலவே – மாவோயிஸ்டுகளாக முதலில் இருந்து பின்பு தத்தம் வழியில் மார்க்சீய விளக்கங்களை இன்று கொடுத்து வருகின்றனர்.

 

எர்னஸ்டோ லெக்லாவ்

அல்துஸ்ஸரின் கருத்துக்களால் முதலில் ஈர்க்கப்பட்ட எர்னஸ்டோ லெக்லாவ் (Ernesto Laclau)என்பவர் அர்ஜென்டினாவிலிருந்து இங்கிலாந்துக்கு வந்து அரசியல் துறையில் முதலில் ஆய்வாளராகவும் பின்னர் பேராசிரியராகவும் மாறினார். இவரும் சந்தால் மாஃபே (Chantal Mouffe)  என்பவரும் இணைந்து 1989 –இல் “மேலாதிக்கமும் சோசலிச தந்திரோபாயங்களும்”  (Hegemoney and Socialist Stategy) என்ற நூலை எழுதினார். இந்நூல் மிகவும் புகழ்பெற்றது. இந்நூலில் தங்களைப் பின்னை மார்க்சீயர்கள் (Post Marxists)  என்று அழைத்துக் கொண்டதால் இவர்கள் விமரிசிக்கப்பட்டனர்; அதுபோல் வேறு தரப்பால் பாராட்டப்பட்டனர். இந்நூலில் ஒருவிதமான தனியான மொழிநடையை இவ்விருவரும் கையாண்டதோடு பிரஞ்சு உளவியலாளரான லக்கானின் கருத்தாக்கங்களை  மையமாக ஏற்று மார்க்சீய விளக்கங்கள் தந்தனர். தன்னிலை ( சுயம்) என்பது லக்கான் கூறுவது. அது குறையுள்ள தன்னிலை (Subject of Lack)  என்று விளக்கினர்.

 

இந்த இடத்தில் போஸ்ட்மாடர்னிச நிலமை (PostModernist Condition) என்ற நூலை எழுதிப் புகழ்பெற்ற லையோத்தார் (Lyotard) என்ற பிரஞ்சு அறிஞரின் இன்னொரு நூலான லிபிடோவின் பொருளாதாரம் (Libidinal Economy) என்ற நூலில் அவர் மார்க்சின் உற்பத்தி பற்றிய அக்கரை முதலாளிகளின் அக்கரை என்று கூறியதையும் சுட்டலாம். இவர்கள் பொருளாதார முதன்மையைப் பெரும்பாலும் மார்க்சியத்திலிருந்து நீக்க பெரு முயற்சி செய்தனர். அதுபோல் லெக்லாவும் சந்தால் மாஃபேயும் பன்முகக் கட்சி அமைப்பை ஆதரித்தனர். தொழிலாளி வர்க்கம் என்ற கருத்தாக்கம் பொருளாதாரவாத மார்க்சீயம் என்ற கருத்திலிருந்து தோன்றுவது என்றனர். மார்க்சீயத்தை உள்ளிருந்து விமரிசித்தவர்களும் அதன்வெளியிலிருந்து விமரிசித்தவர்களும் பெரும்பாலும் ஒத்த கருத்துக்களை மேற்கொண்டனர்.

 

இக்கட்டத்தில் டெரிடா என்ற பிரஞ்சு தத்துவவாதி உலகம் பூரா தன்னுடைய கருத்தால் பிரபலமானார். அவர் தான் ஒரு மார்க்சியவாதி அல்ல என்று கூறினாலும் மார்க்சீயம் மிகவும் மதிப்புக்குரியது என்று பிரகடனம் செய்தார். “மார்க்சீயப் பேய்” (Spectre of Marxism)  என்ற நூலில் மார்க்சின் பேய் தொடர்ந்து உலகை்ப பிடிக்கத்தான் செய்யும் என்றும் மார்க்சீயக் கட்சிகள் பலவிதமாய் இருக்கலாம் என்றும் கூறினார். இக்கருத்தைத்தான் லெக்லா சந்தால் மாஃபேயும் கூறினார்.

 

இப்படிப்பட்ட பலவித விளக்கங்களுக்கு மார்க்சீயம் உட்பட்டு வந்த கட்டத்தில் மேற்கு ஜெர்மனி மற்றும் கிழக்கு ஜெர்மனி இணைவதற்குத் தடையாக இருந்த சுவர் உடைக்கப்பட்டதும் சோவியத் ஒன்றியம் தகர்ந்ததும் நடந்தன. இரு அறிஞர்களான டெலுஸும் (Delazue) கொத்தாரி (Guattari)யும் இக்கட்டத்தில் “ஈடிப்பஸுக்கு எதிர்” (Anti Oedipus)  என்ற நூலை எழுதினர். இந்தநுல் ஒரு வித மனநோய் கொண்டவர்களே இன்றைய முதலாளியத்தின் விளைவு என்றும் அவர்களே முதலாளியத்தை எதிர்க்கும் குறியீடு என்றும் விவாதித்தது பலருக்குப் புதுமையாகப்பட்டது. அத்துடன் ஆசை (Desire)  என்ற கருத்து முக்கியமானதென்றனர்.  மார்க்சீயமும் முதலாளி ஆதரவாளர்களும் ஆசை அறு என்று பௌத்தச் சிந்தனை மற்றும் காந்தியவாதிகள் போல பேசிக் கொண்டிருந்த கட்டத்தில் மனிதனின் இயல்பே ஆசையுடன் இருப்பதுதான் என்று கூறினர். முதலாளியம் மனிதர்களின் ஆசையுடன் தொடர்புடையது என்ற கருத்து பொருளாதாரமே மனிதனை உருவாக்குகிறது; அவனது சரித்திரத்தை அது உருவாக்குகிறது என்ற கருத்தை அடிப்படையில் மறுக்கிறது. மார்க்சீயம் என்பதே கார்ல்மார்கஸ் எழுதிய திஸ் காப்பிட்டல் நூல் மட்டும்தான் என்ற கருத்தை டெலுஸும் கொத்தாரியும்  கூறிய கருத்துக்கள் மறுத்தன. ஏற்கனவே பாசிஸ்டுகளின் சிறையில் இருந்து மறைந்த அன்டொனியோ கிராம்ஷ்சி (Antonio Gramci)  திஸ் காப்பிட்டலுக்கு எதிராகப் புரட்சி செய்வோம் என்று கூறி எழுப்பிய முழக்கம் தொடர்ந்து பலரால் வலியுறுத்தப்பட்டது. டெலுஸும் கொத்தாரியும் அடுத்து எழுதிய நூலின் பெயர்:  ஆயிரம் பீடபூமிகள் (Thousand Plateus)  என்பது. இந்த நூலில் “ரைஸோம்” (Rhizome) என்ற சிந்தனையை முன்வைத்தனர். ரைஸோம் என்பது வேறு ஏதுமல்ல, இஞ்சிவேர் நிலத்துக்கு அடியில் வலைபோல் பின்னியபடி காட்சி தருமல்லவா அதுதான். சிந்தனை என்பது குறிப்பிட்ட பொருளாதார அடிக்கட்டுமானத்திலிருந்து தோன்றுவதோ மேலிருந்து கீழாகவும் கிடைகோட்டிலும் வரும் என்ற பெர்தெனந்த் தெ சசூர் கருத்துப் போலவோ கிளாட் லெவிஸ்ட்ராஸின் அமைப்புமுறைச் சிந்தனை ஆகவோ அமைவதில்லை என்றார்கள் இந்த இரு சிந்தனையாளர்களும். ஆனால் இன்றயை முதலாளியத்தை மனிதகுலத்தின் நாசசக்தி  என்றும் பயங்கரம் (Terror) என்றும் வருணித்தார். பெரும்பாலும் மிஷெல் ஃபூக்கோ என்ற அறிஞரின் கருத்துக்களில் அதிகாரமுறையிலும் ஒழுங்குமுறையிலும் சமூகமும் சிந்தனைகளும் அமைந்திருக்கும் வகைமையை விளக்கியதையும் இங்கு நாம் நினைவுகொள்ள வேண்டும்.

 

இப்படித் தத்துவவாதிகளும் சிந்தனையாளர்களும் என பல்வேறு முறையில் நூல்கள் எழுதிவந்த அறிஞர்களின் தொடர்ச்சி இன்றும் நீண்டு கொண்டேயிருக்கிறது.

 

எனினும் முதலாளியத்திற்கான மாற்று பற்றிய சிந்தனை இல்லை. இச்சூழலில் எர்னஸ்ட் லெக்காவும் சந்தால் மாஃபேயும் உளவியலாளரான லக்கானை சமூகவிஞ்ஞானங்களின் ஒரு துறையான அரசியலுக்குப் பயன்படுத்தினார்கள். அச்செயல் ஸ்லவாய் ஷிஷெக்கைக் கவர்ந்ததன் மூலம் அவரின் சிந்தனைகள் வளர்த்தெடுக்கப்படுகின்றன. அதுபோல் அல்துஸ்ஸர் என்ற அமைப்பியல் மார்க்சீயரின் சிந்தனைக்கால்வழியில் வந்த அலென் புட்யொவும் முதலாளியத்தின் மாற்றுவழி என்ன என்று யோசித்தன் விளைவுதான் புதுக்கம்யூனிசம்.

 

அமைப்பியலானது டெரிடாவால் கட்டுடைப்புச் செய்யப்பட்டது. அதன்பிறகு அமைப்பியலின் ஒரு பகுதியான கட்டமைப்புத்தான் தகர்ந்ததே ஒழிய அமைப்பியல் சிந்தனையில் இருந்த வேறொரு அம்சம் தகறவில்லை. லக்கான் சார்ந்த கல கருத்துக்கள் அமைப்பியலில் இருந்தன. இன்றைய புதுக்கம்யூனிசத் தோற்றத்துக்குக் காரணமாயின என்பதையும் மறக்கக்கூடாது.

 

பழைய கம்யூனிசமும் புதுக் கம்யூனிசமும்

முன்பு கிராமத்தில் யாரையாவது பயப்படுத்த வேண்டுமென்றால் கம்யூனிசம் என்ற சொல்போதும். பேய், பிசாசு போன்ற சொற்களைப் போல் கம்யூனிசம், கம்யூனிஸ்ட்  போன்ற சொற்கள் பயன்பட்டன. அதாவது கம்யூனிசம் ரஷ்யாவில் உண்மையாகவே ஆட்சியைப் பிடித்தது என்று கருதினார்கள். இந்தியாவில் இருந்த பெருமுதலாளிகள் பயந்ததால் ஏழைகளையும் கிராமத்தவர்களையும் பயமுறுத்த செய்தித்தாள்களில் கம்யூனிசம் என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள். ரஷ்யாவில் லெனின் கம்யூனிசத்தைக் கொண்டுவர முயன்றார். எனினும் ரோஸா லக்சம்பர்க் லெனினைத் தாக்கினார். அதிகமான திட்டமிடலும் ஒழுங்கும் அதிகார வர்க்கத்தின் மீதான சாய்வும் லெனினிடம் இருந்ததென்றும் அக்கருத்துக்கள் கம்யூனிசத்தைக் கொண்டுவராது என்றும் ரோஸாலக்சம்பர்க் கருதினார். திட்டமிடல் மூலமும் இப்படித்தான் கம்யூனிசம் இருக்குமென்று கூறுவதன் மூலமும் புதுக்கம்யூனிசம் வராது என்கிறார்கள். கம்யுனிசம் ஒரு சாத்தியமின்மையைச் சாத்தியப்படுத்துவது என்கிறார்கள். லெனினை ஓரளவு ஏற்றுக்கொண்டாலும் ஸ்டாலினை முற்றாய் புதுக்கம்யூனிஸ்டுகள் ஏற்பதில்லை ஸ்டாலின் கம்யூனிசத்தை அறியாதவர். லெனின் ஏற்படுத்திய திட்டமிடலையும் பொருளாதார வளர்ச்சியையும் ஆதிக்கம் செலுத்துதலையும் சனநாயகமின்மையையும் தவறாய் கம்யூனிசம் என்று கருதினார். அது கொலையையும் ரகசியத்தையும் போல்பாட்டின் கொலைவெறியையும் தான் உருவாக்கும் என்றனர். உலகம்பூரா நடைபெறும் ஆயுதப் போராட்டங்களில் சில அம்சங்களில் ஸ்டானிலிசமும் போல்பாட்டிசமுமே நடைபெறுகின்றன என்கின்றனர் புதுக்கம்யூனிஸ்டுகள். இதன்மூலம் சைனா, தினமென் சதுக்கம், வடகொரியாக் கம்யூனிசம் போன்றவற்றை மறுக்கும் புதுக்கம்யூனிஸ்டுகள் முற்றிலும் வன்முறையை மறுக்கவும் இல்லை. ஏனெனில் முதலாளியம் மனித வரலாறு காணாத கொலைகளையும் ஆட்சிக் கவிழ்ப்புகளையும் வன்முறையையும் செய்துள்ளது. நம் கண்முன் ஈராக்கில் எண்ணெய் திருட அமெரிக்கா புரிந்த கொடுமை மீண்டும் மத்திய ஆசியாவை பெரிய பிரச்சனைக்குள் ஆழ்த்தியுள்ளது. தேச அரசுகள் மூலம் முதலாளியம் உலகமெங்கும் எத்தனை யுத்தங்களை நடத்தியுள்ளன? யுத்தங்களுக்குக் காரணம் முதலாளியமும் தேச அரசுகளும். புதுக் கம்யூனிசம் தேச அரசுகளை அழிப்பதாகும். ‘அரசுகள் உதிர்ந்து விடும்’ (States will whither away) என்ற மார்க்சின் பொன்மொழியைப் புதுக் கம்யூனிஸ்டுகள் ஏற்கின்றனர். சிலவேளை மார்க்சீயத்தை விட பின்னை மார்க்சீயத்தை (Post Marxism)  ஏற்கும் புதுக்கம்யூனிஸ்டுகள் மார்க்சீயத்தில் நிறைய வழிகாட்டுதல்கள் உண்டு என்கிறார்கள். “பாரிஸ் கம்யூன்”, “பிரான்சில் வர்க்கப்போராட்டம்” போன்ற மார்க்சின் நூல்கள் முக்கியமானவை என்கிறார்கள். புதுக்கம்யூனிஸ்டுகள். இவற்றை மரபுக் கம்யூனிஸ்டுகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது மார்க்சீயத்தைப் படித்தவர்களுக்குத் தெரியும். மார்க்சீயத்தைப் பாடநூலாகவோ விதிகளின் தொகுப்பாகவோ புதுக் கம்யூனிஸ்டுகள் பார்க்கக்கூடாது என்கிறார்கள்.

 

இப்போதைக்குக் கட்சி கடடுவது செயல் நடைமுறைகளைத் தீர்மானிப்பது போன்ற எந்தத் திட்டத்தையும் மேற்கொள்ளாது பெரும்பாலும் தத்துவ இயக்கமாக நடத்தி வரப்படும் புதுக்கம்யூனிசம் “தெரியும்” என்று சொல்வதைவிட “தெரியாது” என்று அதிகம் சொல்கிறது. புதுக்கம்யூனிசக் கருத்துக்களைத் தன்னுடைய தத்துவ நூலான “ஸ்திதியும் நிகழ்வும்” (Being and Event) அடிப்படையில் வளர்த்தெடுத்து பரப்பி வருவதில் பெரும்பங்கு வகித்தவரான அலென் புட்யொவிடம் ஒருமுறை கம்யூனிசம் வருமா என்று பிபிசி ரிப்போர்ட்டர் ஒரு பேட்டியில் கேட்டபோது “எனக்குத் தெரியாது” என்ற பதிலைக் கூறினார். அதன்பிறகு பெரிய தத்துவ உரைபோல் “எனக்குத் தெரியாது” என்ற வாசகம் பரவியது.

 

மரபுக் கம்யூனிசமும் சோவியத் ரஷ்யாவும் செய்த மிகப்பெரிய பிழை அரசு எந்திரம் தற்காலிகமானது என்பதைப் புரியாதிருந்ததாகும். சோவியத் ரஷ்யாவில் அரசு எந்திரமும் தேச அடையாளங்களின் அழிவும் அமெரிக்க முதலாளியத்தால் எதிர்மறையாய் தீர்மானிக்கப்பட்டன. அமெரிக்கா முதலாளியத்தைக் காப்பாற்ற பல நாடுகளின் தேசியத்தைப் பயன்படுத்தியது. இந்தியா சுதந்திரம் பெறுவது மனித சமுதாய வரலாற்றில் முற்போக்கான செயல்; அதுபோல் நேரு சோசலிச மாதிரியில் சமைக்க விரும்பிய இந்தியா முற்போக்கான தேசீயமாகும். ஆனால், தேசியங்களுக்குள் முதலாளியம் ஊடுருவி உலக வரலாற்றைச் சிக்கலாக்கியது. எல்லா தேசியங்களும் முற்றாய் உதிரும் என்ற “சாத்தியமற்றது சாத்தியமாகும்போது” தான் தேச அரசுகள் என்ற அமைப்பு வலிமையற்றதாகும். முதலாளியம் அறிவையும் மிகவும் சிக்கலாகி விட்டது.  எனவேதான் டெரிடா போன்ற தத்துவவாதிகள் கட்டுடைப்பு என்ற தத்துவத்தைப் பயன்படுத்தி எல்லாவித உறுதித் தன்மைகளையும் சம்சயத்துக்கு உட்படுத்திய பின்புதான் மீண்டும் புதுக்கம்யூனிசச் சிந்தனைகள் உலகம் எங்கும் பரவுகின்றன.

புத்தொளிக் காலத்தின் (Enlightenment) சிந்தனைகளான முழுமை (Totality) மனிதாபிமானம், ஒழுங்கு (Order) ஓர் அமைப்பு இன்னொன்றுடன் ஒட்டி அதன் பொறுப்பில் இருக்கிறது என்பது போன்ற சிந்தனைகள் டெரிடா, டெலுஸ்-கொத்தாரி, அலென் புட்யொ, ஷிஷெக், ரான்சியர் (Rancier) போன்ற பல்வேறு நவீன சிந்தனையாளர்களால் ஏற்கப்படுவதில்லை. அல்துஸ்ஸரின் மார்க்சீயம் ஒரு விஞ்ஞானம் என்ற கூற்று மறுக்கப்பட்டாலும் அஸ்துஸ்ஸரின் கருத்துருவம் பற்றிய லக்கான் சார்ந்த கருத்துக்களைப் புதுக்கம்யூனிசம் ஏற்கிறது. புத்தொளிக்கால முழுமை மனிதாபிமானம், ஒழுங்கு போன்ற சிந்தனைகளால் ஏற்பட்ட அழிவும் சோவியத் ஸ்டாலினிசமும் உலகமெங்கும் பரவிய ஆயுதப் போராட்டம் என்ற மனித அழிப்பும் அர்த்தமற்ற தியாகங்களும் புதுக்கம்யூனிசத்தால் கேள்விக்குட்படத்தப்படுகின்றன.

 

இந்தியா போன்ற நாடுகளில் புத்தொளிக் காலத்தை முற்றாய் ஒதுக்க முடியாதென்கிற வங்காள அறிவுஜீவி காயத்திரி சக்கரவர்த்தி ஸ்பிவக் போன்றோர் நவீன எதிர்ப்பு வடிவங்களையும் கல்வியையும், சமத்துவத்தையும் மூன்றாமுலகில் பரப்பியதில் புத்தொளிக் காலத்துக்குப் பங்கு இருக்கிறது என்கிறார்கள். பெரியார் என்ற தமிழகத்தின் அபூர்வ புத்திஜீவி புத்தொளியின் விளைவு. எனவே புத்தொளிக் காலம் பரப்பிய “கட்டுப்படுத்தும் அறிவு” வடிவங்களை மட்டும் நாம் நிராகரிக்கக் கற்கவேண்டும். புத்தொளிக்காலம் தந்த மனித சுதந்திரம் பற்றிய நல்ல அம்சங்களை மறுக்க முடியாது.

 

எல்லாவற்றையும் சந்தேகப்படுதலும் எந்தவிஷயமும் முற்றானதல்ல என்ற கருத்தும் புதுக்கம்யூனிசம் தோன்றிய தத்துவப் பின்புலமாக இருக்கிறது. மூன்றாமுலகத்தில் பரவிய பொதுவுடமைக் கருத்துக்கள் இங்கிலாந்தின் புத்தொளி சார்ந்து பரவியதால் இன்று மேற்குவங்காளத்திலும் பிற இடங்களிலும் அழிக்கப்பட்டுவிட்டது. அதாவது சோவியத் ரஷ்யாவில் கருதியதுபோல் அரசு எந்திரம் இறுதிவடிவம் என கம்யூனிஸ்டுகள் கருதக் கூடாது. எனினும் அக்கருத்தே உலகம்பூரா கம்யூனிஸ்டுகள் மத்தியில் பரவியது.

 

மாவோவை எப்படிப் புதுக்கம்யூனிஸ்டுகள் அணுகுகின்றனர்? சைனாவின் அரசையும் அரசாங்கத்தையும் பாதுகாத்த மாவோவைப் புதுக் கம்யூனிஸ்டுகள் ஏற்காவிட்டாலும் கலாச்சாரப் புரட்சி (Cultural Revolution) ஏற்படுத்திய மாவோவை ஏற்கின்றனர். மார்க்சின் அரசுஎந்திரம் உதிரும் என்ற கருத்தை மாவோ நடைமுறைப்படுத்த விரும்பியவர். ஆனால் இன்றைய உலக அமைப்பில் அது முடியாது என்று அறிந்ததால் ஒரு நாட்டில் கம்யூனிசம் என்ற கோட்பாட்டை ஏற்று சைனமாதிரியில் கம்யூனிசம் வரட்டும் என்று கருதி இருக்கிறார். மாவோ என்கிறார்கள், மாவோவுக்குள், சேக்குவாராவுக்குள், இருந்த உலக மனிதன் என்ற அம்சங்களைப் புதுக்கம்யூனிஸ்டுகள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.

 

ஜெர்மனியில் பிறந்து அங்கு ஹிட்லர் வந்துவிட்டதால் அமெரிக்காவுக்குச் சென்று மார்க்சீயத்தைச் சுதந்திரமாய் அறியவும் படிக்கவும் பரப்பவும் செய்து ஹெர்பர்ட் மார்க்யூஸ் என்ற அறிஞர் சோவியத் ரஷ்யாவில் உள்ள கம்யூனிசத்தை முற்றாய் எதிர்த்தவர். உடனே சோவியத் ரஷ்யா அவரைக் குழப்பவாதி என்று கண்டித்து நூல் எழுதி அன்றைய சோவியத் நூல் விற்கும் கடைகள் மூலம் இந்திய நகரங்களிலும் பரப்பியது. ஆனால் இப்போது பிராங்க்ஃபர்ட் பள்ளிமார்க்சீயக் கருத்துக்களால் பயனடைந்துள்ள புதுக் கம்யூனிஸ்டுகளைப் பார்க்கும்போது மார்க்யூஸ் முதலாளியத்தால் நவீன சமூகத்தின் மனிதன் ஒற்றைப் பரிமாணமுள்ள மனிதனாய் எந்திரம்போல் – மாறிக்கொண்டிருக்கிறான் என்று கூறியது சரியான கருத்து எனத் தெரிகிறது. எனவே அப்படி அ டிமையாக்கப்பட்ட எந்திரமாய் மாறிய மனிதனின் மன உலகம் அமைப்புகளிலிருந்து முற்றாய் விடுதலைபெற்று எழுகிறது என்ற குரல் ஹெர்பர்ட் மார்க்யூசின் அன்றைய கருத்துக்களின் உண்மைத் தன்மையை வலியுறுத்துகிறது. கட்டுப்பெட்டியாய் அங்கு இங்குப் பார்க்காதே என்று சில வீடுகளில் குழந்தைகளை வளர்ப்பதுபோல் வளர்க்கப்பட்ட மார்க்சீயத்தை இன்றைய இறுகி உறைந்துபோன கம்யூனிஸ்டு கட்சிகளிடமிருந்து மீட்க ஹெர்பரட் மார்க்யூனின் கருத்துக்களும் மிகவும் பயன்படும்.

 

புதுக்கம்யூனிசத்தின் கருத்துக்களைக் கட்டுப்பெட்டி கம்யூனிஸ்டுகள் தங்களைச் சுயபரிசீலனை செய்து புதுக்காற்றை ஏற்கமுன் வரவேண்டும் புதிய விவாதங்களை உருவாக்க வேண்டும். உலகின் இன்றைய சூழல் சரியில்லை. அணுஆயுதப் பெருக்கமும் குவலய வெப்பமாதலும், குளோனிங் மூலமாய் மனிதன் மறு உற்பத்தி செய்யப்படுவதும் புதுப்பிரச்சனைகளாய் வந்துள்ளன. அணு ஆயுத யுத்தம் உலகை எப்போதும் அழிக்கலாம். பழைய கம்யூனிசத்தை அரசு எந்திரங்களுக்கு ஏற்ப வடிவமைத்திருக்கும் கட்சிகள் தங்கள் இறுதிக் குறிக்கோளை மீண்டும் நினைவு கொள்வதற்கு இப்போது ஒரு நல்வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சோர்ந்திருக்கக்கூடிய கட்சிகளின் தொடக்க இலட்சியங்கள் சரியானவை என்ற புதுக்குரல் கேட்கிறது. கட்சிகள் சுயவிமரிசனத்துக்குத் தயங்கக்கூடாது.

 

வரலாறும் புதுக்கம்யூனிசமும்

இரண்டுவிதமாக வரலாறு பற்றிய சிந்தனைகளைப் பிரிக்க வேண்டும்.

 

ஒன்று மரபு மார்க்சீய ஆய்வுகள் வரலாற்றை அணுகியிருக்கும் முறையியல். சார்லஸ் டார்வினுடைய பரிணாம வளர்ச்சி (Evolutionary Growth) என்ற கருத்துச் சமூக விஞ்ஞானங்களிலும் பரவியது. அன்று சென்னைவரை டார்வினின் கருத்துக்கள் லண்டனிலிருந்து பரவிய செய்தி சென்னை லௌகீகச் சங்கம் நடத்திய இதழ்களில் தெரிகிறது. பரிணாம வளர்சசி 60களிலிருந்து மார்க்சீய விளக்கமாய் தமிழகத்தில் பரவியது. முதலில் ஆதிவாசி சமூகம் பின்பு நிலபிரபுத்துவம், அதன்பின்பு முதலாளித்துவம் என்று ஒழுங்கான நம் விருப்பப்படியான உலக வரலாறு ஒன்று அமைந்திருக்கிறதென்று விளக்கினோம். உலக வரலாறு யாருடைய விருப்பப்படியும் அமையாது.  எங்கெல்ஸ் கருத்துக்கள் இவை. இயங்கியலையும், வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தையும் (Historical Materialism)  எங்கெல்ஸ் இப்படி வடிவமைத்தார். இப்படிப்பட்ட ஒருமுகப்பட்ட வளர்ச்சி (linear growth)  உண்மைக்குப் புறம்பானது. உண்மை ஒழுங்குபடி அமையாது. அது குழப்பமானது; கரடுமுரடானது. புதுக் கம்யூனிசம் ரோஸாலக்சம்பர்கின் சிந்தனைபோல் லெனினின் ஒழுங்குபட்ட கம்யூனிச மாற்றம் என்ற கருத்தை விமரிசிப்பதை ஆதரிப்பதால் இத்தகைய ஒருமுகப்பட்ட வரலாற்றை ஏற்பதில்லை. வரலாறு குழப்பமானது. எந்தக் கட்டத்திலும் வரலாற்றுக்குள் நுழைந்து அதை மாற்றலாம். அதாவது படிப்படியாகவும் ஒழுங்காகவும் வரலாறு மாறும் என்பதைப் புதுக்கம்யூனிசம் ஏற்கவில்லை.

 

இரண்டாவது கருத்துக்கு வருவோம். அலென் புட்யொவிடம் வெளிப்படும் கருத்து இது: அவர் இரண்டு விதமாய் பிரிக்கிறார். அவர் பிரஞ்சு புரட்சியையும் பாரிஸ் கம்யூனையும் வரலாற்றுக் கட்டங்களாய் பார்க்கிறார். உலகம் தோன்றியதிலிருந்து வரும் சரித்திரம் என்ற கற்பனைக் கதையை நம்புவதில்லை. அதாவது 1792-இலிருந்து 1871வரைத்திய காலகட்டம் ஒரு தொடர்ச்சி என்கிறார். இந்த இரண்டு ஆண்டுகளில் 1792-ல் வெகுசன இயக்கம் வந்ததும் 1871-இல் இருந்த அமைப்புப் பிரான்சில் தூக்கி வீசப்பட்டதும் நடைபெறுகின்றன என்கிறார். அலென் புட்யொ அவரின் இன்னொரு காலகட்டப் பிரிவு சோவியத் புரட்சி நடந்த 1917-லிருந்து 1976வரை. முதல் ஆண்டு போல்ஷ்விக் புரட்சி நடந்த ஆண்டு. இரண்டாவது ஆண்டு சீனாவின் கலாச்சாரப் புரட்சியும் உலகம் முழுதும் நடந்த புரட்சிகர எழுச்சியும் (Militant upsurge) வந்தன என்கிறார். அதாவது 19-ஆம் நூற்றாண்டிற்கு முன்பு கனவு என்றும் உட்டோபியா என்றும் யூகம் என்றும் கருதப்பட்டது நிஜமாக்கப்பட்ட இரண்டு கட்டங்கள் இவை என்று கம்யூனிஸ்டு யூகத்துக்கு இனி வாய்ப்பில்லை என்று கொக்கரித்த அன்றைய பிரஞ்சு அதிபர் சார்க்கோஸி (Sarkozy)-க்கு ப் பதிலளிக்கிறார். கம்யூனிஸ்ட் யூகம் (Communist Hypothesis)என்ற நியுலெஃப்ட் ரிவ்யூ வெளியிட்ட கட்டுரையில் இவ்விஷயங்களை முன்வைத்தார் அலென் புட்யொ அவர்கள்.

 

அதாவது வரலாறு என்பது ஒழுங்கானதல்ல. ஒன்றை அடுத்து வரும் இன்னொரு சமூக அடுக்கு அல்ல. சமூக நிகழ்வுகள் தர்க்கத்துக்கும் விதிமுறைக்கும் உட்பட்டதல்ல. ஆரம்பத்தில் சிறியதாயும் பின்னர் மெதுமெதுவாய் கிரமமாய் வரிசையாய் காலமுறையில் வளர்வது என்ற கற்பனைக்கதை இங்கு நடப்பதில்லை. முதல் நிகழ்ச்சி ழூ1792 -1871) நடந்து முடிந்ததற்கும் இரண்டாம் நிகழ்ச்சி (1917) தொடங்குவதற்கும் இடையில் சுமார் 40 வருடங்களில் கம்யுனிசம் யூகம் செய்யப்பட்டதால் 1917-இல் போல்ஷ்விக் புரட்சி வந்தது. அது 1970-இல் முடிகிறது. 1970-இலிருந்து நாம் இன்னொரு கட்டத்தில் இருக்கிறோம் என்கிறார் அலென் புட்யொ. ஆனால், ஏகாதிபத்தியம் பரவிய இருபதாம் நூற்றாண்டில் வந்த தொழிலாளர் அமைப்புகள், சோசலிசம், புரட்சிகள் எல்லாம் பயனற்றவையாகப் போய்விட்டன என சோவியத் மற்றும் சீன புரட்சிகளையும் பிற புரட்சிகளையும்  அலென் புட்யொ நிராகரிக்கிறார். ஆனால் இவை ஒரு திசைவழியைக் கற்பிக்கத் தவறவில்லை. அதிலிருந்து ஒரு பாடத்தை எப்படி படிப்பது என்பதுதான் கேள்வி என்கிறார். எனவே வரலாறு தற்காலம்தான் என்று அறிவுறுத்துகிறார். தற்காலம் போல் பழங்காலத்தையும் பார்ப்பதுதான் என்கிறார்.

 

அதாவது புதுக்கம்யூனிசச் சிந்தனை என்பது இன்றுவரை உலகம் கண்ட எல்லாத் தத்துவம் கோட்பாடு உளவியல் ஆய்வு என பின்நவீனத்துவம் வரை எல்லா மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய சிந்தனைகளின் முக்கியமான அம்சங்களை உட்கிரகித்துத் தோன்றியதாகும்.

 

கம்யூனிசத்தின் நிஜத்தன்மை

கம்யூனிசம் பற்றி பழைய மார்க்சீயத்திலும் சோவியத் மற்றும் சீனாவின் தலைமையிலான கம்யூனிசக் கட்சிகளிலும் பேசப்பட்டவை பொய்யான கம்யூனிசம, இப்போது பேசப்படுவதுதான் நிஜக்கம்யூனிசம் (Actuality) என்கின்றனர். அமெரிக்காவில் வேலை பார்க்கும் பேராசிரியரான புரூனோ பாஸ்டீல் (Bruno Bosteele) என்பவர் “கம்யூனிசத்தின் நிஜத்தன்மை” (Actuality of Communism)  என்று சிவப்பு நிற அட்டையுடன் ஒர நூல் வெளியிட்டுள்ளார். ஜோடி டீன் (Jody Dean) என்ற அமெரிக்காவின் இன்னொரு பேராசிரியரும் இன்னொரு சிவப்புப் புத்தகத்தை இந்தப் புதுக்கம்யூனிசம் பற்றி விளக்க வெளியிட்டுள்ளார்.

 

நவீன தமிழ்மொழியில் மேற்கத்திய தத்துவக் கருத்துக்கள் அதிகம் சுயமாய் சொல்ல முடியாத தன்மை உள்ளதால் புதுக்கம்யூனிசம் தன் நிஜத்தன்மையை விளக்கப் பயன்படுத்தும் பல கருத்துக்கள் சொல் விளையாட்டுப் போல் தென்படலாம். “அன்டாலஜி” என்கிற “தோற்றவியல்” (இது எப்பிஸ்டமாலஜி என்கிற “அறிவுத் தோற்றவியல்” அல்ல) கம்யூனிசத்ின் நிஜத்தன்மையை விளக்கத் தேவையானதாகும். ரான்சியர் என்ற பிரஞ்சு தத்துவவாதி, அல்துஸ்ஸருடன் சேர்ந்து அவருடைய ஆய்வு வட்டத்தில் இருந்த மாணவராவர். இப்போது மிகப்பெரிய தத்துவவாதியாக மிளர்கிறார். இவர் அழகியல் என்பது கலை இலக்கியத்தில் இருப்பது என்பார். இவர் புதுக்கம்யூனிசம் நிஜமானது; ஏனெனில் அது “தோற்றவியல்” மூலம் அறிந்து கொள்ளக்கூடியது என்கிறார்.

 

அலென் புட்யொ அவர்கள் கம்யூனிசம் என்பது ஒரு “கருத்து” என்பார். (தமிழில் கருத்து என்றால் வரும் பொருள் அல்ல. புட்யொ சொல்லும் கருத்து). அதாவது புட்யொவின் கருத்தை விளங்கிக்கொள்ள நாம் இம்மானுவல் கான்ட் (Immanuel Kant)  என்ற ஜெர்மன் கருத்து முதல்வாதத் தத்துவவாதியிடம் செல்ல வேண்டும். கருத்துமுதல்வாதமா என்று பழைய கம்யூனிஸ்டுகள் காலைப் பின் வைப்பார்கள். இன்றைய புதுக்கம்யூனிஸ்டுகளில் பொருள்முதல்வாதிகள் இருந்தாலும் அவர்களில் சிலர் கருத்துமுதல்வாதம் பொருள்முதல்வாதம் பிரிவினையை எளிமைப்படுத்தி ஒதுக்குவதில்லை. உதாரணமாக ஷிஷெக் அவர்கள் கான்ட்,ஹெகல், ஷில்லர் என்ற மூன்று ஜெர்மன் கருத்துமுதல் வாதிகளையும் (German Idealists) தான் சொல்லும் கருத்திற்குப் பின்னணியும் அழுத்தமும் தருவதற்காகப் பயன்படுத்துகிறார். சரி புட்யொ சொல்லும் விஷயத்துக்கு வருவோம். தத்துவவாதி கான்ட் கருத்துப்பற்றி விரிவாகப் பேசுகிறார். நாம் அதற்கெல்லாம் போகத் தேவையில்லை. வரையறுக்கப்பட்ட கருத்து (Regulative Idea) என்றொரு கருத்தாக்கம் கான்டிடம் காணப்படுகிறது. அதன்பொருள்  செயல்படும் கருத்து அல்லது பயன்படு கருத்து என்பதாகும். அந்த அர்த்தத்தில் கம்யுனிசம் ஒரு கருத்து என்று தத்துவவாதியும் முன்னாள் மாவோயிஸ்டுமான அலென் புட்யொ கூறுகையில் கம்யூனிசம் ஒரு பயன்படு கருத்து என அறிகிறோம். இதுதான் அதன் நிஜத்தன்மை.

 

தத்துவங்களின் வரலாற்றைப் பற்றிக் கூறுகிறவர்கள் உலகிலுள்ள பொருள்களை நாம் நம் மன உணர்வு, இயல்பு, உளவியல், பரம்பரை,  மொழிவரலாறு போன்றவற்றிற்குத் தக்க முறையில் தான் புரிந்துகொள்ள முடியும் என்பார்கள். அதாவது நாம் கற்பிதம் (Speculate)  செய்துதான் புறஉலகைப் புரிந்துகொள்ள முடியும். இதுபோல் புதுக்கம்யூனிசம் ஸ்பெக்குலேட்டிவ் என்ற கற்பிதச் சிந்தனை  கொண்ட இடதுசாரிகளால் (Speculative Leftists) அமைவு (கட்சி) பெறும் என்கிறார்கள். தத்துவக் கருத்துக்கள் பல ஆயிரம் ஆண்டுகளாய் பயிலப்படும் மேற்கத்திய நாடுகள் போல் இத்தகைய கருததுக்கள் தத்துவக் கருத்துக்கள் வளராத நாடுகளில் (தமிழிலும்) புரிந்துகொள்ளப்படமாட்ட. கேலி செய்யக்கூட சில மூடர்கள் தயங்கமாட்டார்கள்.

 

ஷிஷெக், புதுக்கம்யூனிசத்தின் நிஜத்தன்மை பற்றிக் கூறுகையில் லெனினை உதாரணம் காட்டுகிறார். லெனின் இதுவரை சரித்திரத்தில் இல்லாத சமூகத்தைக் கட்டும்போது நாம் தோல்வி காண்போம்; அப்போது கவனமாகப் பின்வாங்கவேண்டும் என்கிறார். மீண்டும் மீண்டும் மலை ஏறுபவன் தன் இலட்சியத்தை அடையும் வரை பின்வாங்கிப் பின் வாங்கிப் பல்வேறு பாதைகளில் மேலும் மேலும் முன்னேறி இறுதி இலட்சியத்தை அடைவான் என்கிறார் லெனின். லெனினை மேற்கோள்காடடி, அதாவது தொடக்கத்திலிருந்து தொடங்க வேண்டும் (To Begin from the Beginning)  என்பதுதான் புதுக்கம்யூனிசத்தை நிஜமாக்கும் முறை என்கிறார் ஷிஷெக். இங்கு ஷிஷெக், பெக்கட் என்ற நவீனத்துவகால இலக்கியவாதியின் (நாடகாசிரியர்) “மேலும் முயலுங்கள், மேலும் தோல்வி அடையுங்கள், சரியாய் தோல்வியடையுங்கள்” என்ற மேற்கோளைத் தருகிறார். [பார்க்க: Slavojzizek, “How to begin from the Beginning” என்னும் கட்டுரை].

 

புரூனோ பாஸ்டீல் தத்துவத்துறையில் பயன்படும் “தோற்றவியல்” மூலமே இதுவரையில்லாத சிந்தனையான கம்யூனிசம் பற்றிச் சிந்திக்க முடியும் என்கிறார். அதுபோல் புதுக்கம்யூனிசம் எப்படி நிஜமான கம்யூனிசம் (actual Communism) ஆகும் என்று சில எண்ணங்களைப் பட்டியலிடுகிறார் பாஸ்டீல்.

 

  1. புதுக்கம்யூனிசம் அனைத்துலகம் முழுமையாய் இணைகையில் ஏற்படும் எங்கும் தனிச்சொத்து இல்லை.
  2. இன்றிருக்கும் உலக அமைப்பை முழுதும் நிராகரிக்கும்.
  3. மார்க்சீயம், லெனினியம், மாவோயிசம் என்னும் போலீஸ் சிந்தனைகளை ஏற்கமுடியாது. புதுக்கம்யூனிசம் கற்பித இடதுசாரி களால் கொண்டுவரப்படும். (சிலர் இக்கருத்துக்களில் மாறுபடவும் செய்வர்).
  4. புதுக்கம்யூனிசம் வரலாற்றுக்குள் நடப்பதல்ல; வரலாற்றுக்கு வெளியில் (ahistorical) நடப்பது.

 

மலேசியா

நவீனின் மலேசியக் கவிதைகள்: உலகத் தமிழினத்தின் ரகசியம்

மெ..கா

 

நவீன் என்ற பெயரில் மலேசிய இலக்கியச் சூழலில் புதிய இலக்கியச் செயல்பாடுகளில், தொடர்புபடுத்தி வருபவரும், இளைய வயதும், ஆழ்ந்த இலக்கிய அக்கரையும் கொண்டவரும் ஆன கவிஞரின் அபூர்வமான கவிதைகளை வாசிக்கும் வாய்ப்பு எனக்குச் சமீபத்தில் வாய்த்தது.

 

மலேசியாவில் தோட்டவாழ்க்கை என்னும் எதார்த்தம் சிதைந்த பின்பு நகரங்களுக்குக் குடிபெயர்ந்த முன்னாள் தமிழகத்துச் சகோதரர்கள் சுமார் 80 களிலிருந்து தங்கள் புதிய வாழ்க்கைமுறையை இலக்கியத்தில் புதிய முறையில் பதிவு செய்து வருகின்றனர். நவீன் பலரோடு முரண்படுகிற இலக்கிய ‘ஆக்டிவிஸ்டாகவும்’ சமரசமற்ற கவிஞராகவும் விளங்குவது மலேசிய இதழ்களான காதல், வல்லினம் போன்றவற்றைப் படித்தவர்களுக்குத் தெரியும். சிங்கப்பூர், மலேசிய இலக்கியச் சூழலை அறிந்தவர்களுக்கு இலக்கியத்துக்குப் புறம்பான காரணங்களை வைத்து இலக்கிய அந்தஸ்து கோருபவர்கள் நிறைய இருக்கிறார்கள் என்பது நாம் அறியவேண்டும். அதுபோல் தமிழகத்தின் பெரும் பத்திரிகை, டி.வி.க்கள், சினிமா போன்றவற்றின் பொதுஜனமனோநிலையின் இலக்கியம் அல்லாத கூறுகள் தமிழகத்தின் கும்பல் கலாச்சார மனோநிலையைச் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாகச் சிறுபத்திரிகை சார் விழுமியங்கள் தமிழகத்தில் முக்கியமான சக்தியாக மாறியுள்ளன. அதனால் தமிழ்த்துறைகள் தமிழகத்திலும் (ஈழம், சீரிய மரபுக்குள் 70களில் வந்துள்ளது. சினிமா பாடலாசிரியனைத் தவறுதலாகக்  கவிஞன் என்று கருதாது) மாறத் தொடங்கியதை இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் கண்டோம்.

 

தமிழகம் எப்போதும் மலேசியத் தமிழர்களின் தாய்ப்பூமியாகவே விளங்குகிறது. தமிழகத்தின் மாற்றங்களை நுட்பமாக வெளியிடும் தமிழிலக்கியம் மலேசிய இலக்கியத்தையும் பாதித்துள்ளது. மலாய், சீன, இலககிய பாதிப்புகள் அனைத்துலகப் பண்பை மலேசியா வழியாக தாய்த் தமிழிலக்கியத்துக்கு அறிமுகப்படுத்துகின்றன. இவ்வாறு மலேசியத் தமிழிலக்கியம் ஒரே நேரத்தில் தெற்காசிய இலக்கியமாகவும் மிகப்பிந்திய தமிழிலக்கியமாகவும் விளங்குகிறது. இந்தச் சிறப்புப் பண்பு இன்றைய இந்தி இலக்கியத்துக்கோ, மராட்டி, மலையாள, கன்னடம் போன்ற இலக்கியத்துக்கோ இல்லாதது; எனினும் இந்தியாவில் முக்கியமான இந்தப் பண்புள்ள தமிழிலக்கியம் கண்டு கொள்ளப்படவில்லை. சினிமா பாடலாசிரியர்களே சிறந்த கவிஞர்களாக ஊதிப் பெருக்கி டி.வி. ஊடகங்களும் தினத்தாள்களும் பரப்புரை செய்வதால் இந்திக்காரனோ, பிறரோ இந்திய அளவிலும் அனைத்துலக அளவிலும் நிஜமான தமிழிலக்கியத்தின் புதிய தன்மைகளை அறியாமல் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் நடந்த தமிழில் புலம்பெயர் இலக்கியம் என்பது பற்றி நடந்த கருத்தரங்கில் தமிழிலக்கியத்தின் அனைத்துலக முக்கியத்துவத்தை சிக்காகோ பல்கலைக்கழகத் தமிழ் விரிவுரையாளரான ஒரு ஜெர்மன் தேசத்தவர் ஆங்கிலக் கட்டுரையாக முன்வைத்தார். “ஒப்பியல் இலக்கியம்” என்ற மேற்கத்தியச் சிந்தனைத் துறையில் இவ்விஷயங்கள் சிந்திக்கப்படும்போது நாடுவிட்டு நாடு பெயர்தல், இலக்கிய, கலாச்சார கலப்புப் போன்ற ஆய்வுகள் புதுப்பிரச்சனைகளை எதிர்கொள்ளும்.

 

இந்தச் சிந்தனைகளை நம்முன் கொண்டு வரும் கட்டாயத்துடன் எழுதப்பட்டுள்ளன நவீன் கவிதைகள். மலேசியாவிலிருந்து வரும் கவிதைகளிலிருந்து தனித்துத் தெரிகின்றன இக்கவிதைகள். பல கவிதைக் கோட்பாடுகளை தொல்காப்பியத்திலிருந்து இன்றுவரை – எழுதும் தமிழ் அறிவு, இன்னும் பல புதிய கோட்பாடுகளைக் கண்டுபிடிக்கும் தேவையை நவீனின் ஒவ்வொரு கவிதையும் தோற்றுவிக்கும் பரிமாணத்தின் எல்லையைச் சுட்டுகின்றன. ஒரு கவிதை போல் இன்னொரு கவிதை இல்லை என்பதை நான் கண்டுபிடித்தபோது அவற்றின் மையமழிப்பும் நோக்கு வீச்சும் தொடர்ந்து வியப்படைய வைத்தன. தனி அடையாளத்தோடு இன்று தாயகத்திலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வரும் ஈழக்கவிதைகளையும் தமிழகக் கவிதைகளையும் ஒப்பிடும்போது ஒரு தனியான வீச்சும் மொழிலாவகமும் கட்டமைப்பும், தொடக்கமும், முடிவும், உருவாக்கும் முழுமைத் தொனிப்பும் என்னை வியக்க வைத்தன.

 

குற்ற உணர்ச்சியைச் சேமித்தல் பற்றியும் (பக்.13), பொறுமை இழந்த கடிகார முட்கள் (13) பற்றியும், கொக்கு மரமாவதும் (17) யாரும் கழுத்து இறுகுவதை நினைவூட்டாமல் இருப்பதும் (17) கவிதையை உருவாக்கிய பெட்டி (18)யும் என்னைக் காணவில்லை (19) என்றும், பழைய பானையில் இருக்கும் யோனியும் அப்பானையை நடிகையின் முலை கேட்டு உடைக்கும் (20) செயலும், இறந்து கிடக்கும் ஒற்றைக்கரமும் (20) அசுத்தம் துறக்கும் நிமிடம் குறித்த சிந்தனைகளும் (24) இறக்கை மட்டும் மனித உடலிலிருந்து தனியே பறந்து செல்லுவதும் (24) என் தேவதைகள் பிறரது தேவதைகளைக் கொல்வதும் (27) மரணத்தின் மொழியில் நுட்பத்தைக் காண்பதும் (36) ஒரு குழந்தை கீழே விழுகையில் அது கால்களைக் கண்டுபிடிப்பதும் அக்குழந்தை தூக்கச் சொன்னபோது கால்கள் கவிதையானதும்  (26) எழுத்தை எறும்புகள் பொறுக்குதலும் (33) விழித்துக் கண்ணின்றிப் பார்த்தபோது இமையின்றி கைகளைக் காணமுடியவில்லை (47) என்பதும் இரண்டாவது முறை இறப்பதும் இரண்டாவது முறை வாழ்வதும் (48) பற்றிச் சொல்வதும் என கவிதைகள் ஒரு புதிய நுட்பத்துடனும் ஆகோஷிக்கும் அர்த்தங்களுடன், கும்மாளமிடும் மொழியாற்றலும் கவிதையும் ஒன்றோடு ஒன்று கவிஞரின் திறமையை வெளிப்படுத்துவதில் போட்டியிடுகின்றன. இப்படி ஆங்காங்கே நம்மைக் கவரும் வரிகளையும் படிமங்களையும் முழுக்கவிதையோடு இணைக்கையில்தான் இவரது கவிதைக்களுக்கு நியாயம் செய்தவர்கள் ஆவோம்.

 

“கடிகாரம்” என்ற கவிதை இப்படித் தொடங்குகிறது.

 

“குறிப்பிட்ட நேரத்துக்குப்பின்

பொறுமை இழந்த கடிகார முட்கள்

கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளிப்பட்டன

————————

நீங்கள் தாமதித்துக் கொண்டிருந்தீர்கள்”

 

கவிதையின் முதல் பத்தியான இந்த வரிகளைப் படிக்கும்போது எதற்காக கடிகார முட்கள் பொறுமையிழந்தன என்று கவிதையில் எங்கும் இல்லை. அதுபோல் இதே கவிதையின் இன்னொரு பகுதி. அதாவது கவிதை முடிகிறது.

 

“ஏதோ ஒரு துவாரத்தில் நுழைந்து

இதயத்தை முற்றிலுமாய்

அறுக்க முற்பட்ட நேரம் நீங்கள்

வழக்கமான புன்னகையோடு வெளிப்பட்டீர்கள்

கடிகாரத்தில் முட்கள் இல்லாததை நீங்கள்

கவனிக்கவில்லை”.

 

கவிதையின் முதல் பகுதியும் கடைசிப் பகுதியும் இக்கவிதையின் அசாதாரணத் தன்மையைத் தன் அறிவுத் தோற்றவியலாய் (எப்பிஸ்டமாலஜி) கொண்டு கவிதையின் பிற உறுப்புகளை மொழித்தளத்தில் உருவாக்கியுள்ளன. இப்போது இந்த வரிகளை மீண்டும் ஒருமுறை படியுங்கள். ஏதோ ஒரு துவாரம் என்பதில் உள்ள “ஏதோ ஒரு” என்பதும் இதயத்தை அறுக்கமுயல்வதன் காரணம் கவிதையில் இல்லாததும் நீங்கள் புன்னகையுடன் வருகிறீர்கள்;  அந்தப் புன்னகை வழக்கமான புன்னகை; அப்போது நீங்கள் கடிகாரத்தில்  இருந்த முட்கள்  மறைந்திருப்பதை எந்தக் காரணத்தாலோ கவனிக்கவில்லை; ஏதோ ஒரு, காரணமற்ற விதமான இதய அறுப்பு, எதற்காகவோ கடிகார முட்கள் மறைகின்றன. இப்படிக் கவிதை ஒரு காரணமற்ற நிகழ்வை கவனத்தில் கொண்டு வருகிறது. அதாவது இக்கவிதையில் வந்தவைகளால் அன்றி கவிதையில் வராதவைகளால் கவிதையின் அர்த்தம் உருவாக்கப்படுகிறது. இது நவீன் கவிதைகளில் அகஸ்மாத்தாக ஏற்பட்ட அர்த்த கட்டமைப்பு முறை அல்ல. “கொக்குமரம்” என்ற கவிதையில்,

 

“கொக்குமரம்

இன்னும் ஒரு மீனுக்காகக் காத்திருக்கிறது.

அதன் கிளை பற்றி அமரும்

பிற கொக்குகளை

அது கவனம் வைப்பதில்லை.

 

என்ற பகுதியிலும் ஒரு மீனுக்காக ஏன் கொக்கு மரம் காத்திருக்கிறது என்றோ ஏன் பிற கொக்குகளை அது கவனம் வைப்பதில்லை என்றோ கவிதை சொல்வதில்லை. புதுக்கவிதை தமிழ்ச் சமூகத்தின் ரகசியங்களைச் சொல்கிறது. அதனை இன்றில்லாவிட்டாலும் இன்னொரு நாள் புரிந்துகொள்ளும் சூழலும், விளக்கமும், அரசியலும் உலகமெங்குமுள்ள இந்த இனம் கண்டுகொள்ளாமல் போகாது.

 

மொத்தத்தில், நவீனின் கவிதைகளைப் பற்றி விரிவாகத் தமிழ்ச்சமூகம் ஆய்வு செய்து தன்னை அறிந்துகொள்வதற்கான வேண்டுகோளாய் இச்சிறு மதிப்புரை அவருடைய “சர்வம் ப்ரம்மாஸ்மி” (2009-இல் வெளியிடப்பட்டது) என்ற நூலை அடிப்படையாய் வைத்துச் செய்யப்படுகிறது. (நூலாசிரியர் தொடர்பு: vallinamm@gmail.com)

 

 

 

மலேசியா

மலேசிய நாவல்: உலகத் தமிழ் நாவல் பரிமாணம்

எஸ்.சி.எஸ்.

 

தமிழகத்தில், ஈழத் துன்பியலுக்குப் பிறகு மௌனமாக ஒரு மாற்றம் நடந்திருக்கிறது. படைப்பில் குறிப்பிட்ட மொழியைப் பேசுபவர்களின் வரலாறும் இனஉணர்வும், அவர்களின் மரபுக்குள்ள முக்கியத்துவமும், அந்த முக்கியத்துவத்தால் உருவாகும் புது அர்த்தங்களும் இடம்பெற வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. மொழிதான் அந்த நிர்பந்தத்தை உருவாக்கி இருக்கிறது. இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் காந்திய இலக்கியமும் சுதந்திர போராட்டமும் ஓரளவு தமிழ்ப்படைப்பைப் பாதித்தன. திராவிட இலக்கிய காலத்தில் சினிமா மோகம் கெடுத்தாலும் பாரதிதாசன் மட்டும், கவிதைக்கு இனவேர் முக்கியம் என்று உணர்ந்ததால் அவர் மட்டும் 20-ஆம் நூற்றாண்டின் வேர்ப்பிடிப்புள்ள கவிஞராய் எஞ்சினார். இக்காலத்துக்கு அடுத்து மார்க்சியம் தமிழைப் பொறுத்தவரையில் சில சூழல்களை உருவாக்கியது. 2009-இல் ஈழப்போர் தோற்கடிக்கப்பட்ட சூழலில் பெரிய மாற்றங்கள் மொழித்தளத்தில் ஏற்பட்டதால் அனைத்துலகத் தமிழர்கள் என்ற புதுத் தமிழ்ப் பிரக்ஞை ஏற்பட்டது.

 

இதனால் தமிழகம் பிரக்ஞை அளவில் தனியாக இல்லை, மலேசியா-சிங்கப்பூர் மற்றும் ஈழம் தொடங்கி அனைத்துலக நாடுகளின் எழுத்து ஒருங்கிணைந்த ஒருவித நவீன ஓர்மை தோன்றியுள்ளது என்ற கோட்பாடு தோன்றியுள்ளது. இதன் பின்னணியாக மலேசிய, சிங்கப்பூர் எழுத்தில் வெளிப்படும் உள்ளமைவுகளைத் தமிழக எழுத்தோடு இணைக்கும் முயற்சி தொடங்கியுள்ளது.

 

இந்தச் சூழலில் தமிழகத் தமிழில் இல்லாத பாடுபொருள்கள் மலேசிய மண்ணில் பிறந்து வளர்ந்த எழுத்தாளர்களிடம் எப்படிக் காணப்படுகின்றன என்பதைத் திறனாய்வில் வடிவமைக்க வேண்டும்.

 

“நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள்” என்ற தலைப்பில் வெளிவந்துள்ள கே.பாலமுருகனின் மலேசியத் தமிழ் நாவல், வாசித்தவுடன், பல புது அம்சங்களைக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது.

 

தமிழர்கள் மலேசியாவிலும், சிங்கப்பூரிலும், ஈழத்திலும் பூர்விகமாக வாழ்கிறார்கள். மலேசியாவில் தோட்டங்கள் அழிக்கப்பட்ட பின்னுள்ள வாழ்க்கையும் நகரத்துக்கு வரும் சரித்திரத்தின் தொடக்கமும் இந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கின்றன.

 

பழைய நாவல்களையோ, சிறுகதையையோ போலல்லாமல் நிலம் பெயர்ந்த தமிழ் வாழ்க்கை ஒருமையமற்ற (decentred) நாவலை உருவாக்கியுள்ளது. புதிய மலேசிய சிறுகதைகளும் கவிதைகளும்கூட இந்த எதார்த்தத்தைத் தைரியமாய் எதிர்கொள்கின்றன. ஜெயகாந்தன், அகிலன், நா.பார்த்தசாரதி போன்றோர் தமிழிலக்கிய முன்மாதிரிகளாய் இந்த எந்தப் படைப்பிலும் இல்லை. மலேசிய எதார்த்தத்திலிருந்து அதன்வாழ்க்கையிலிருந்து இயல்பாய் மலர்ந்துள்ள இந்த குரூரமான சித்திரிப்புகளில் வாழ்க்கையின் உள் உந்துதல் தென்படுகிறது. மலாய், சீனம் என்று எந்த வேறுபாடும் இல்லை. ஆனால், தமிழ்ச் சகோதரத்துவம் எல்லாரின் வாழ்விலும் எப்படியோ பூடகமாய், வாழ்விலும் தாழ்விலும் நீக்கமற பதிவு பெறுகிறது. புக்கிட் லெம்பு என்ற தமிழகத் தமிழர்களுக்குப் புரியாத சொல்லைப் பெயராகக் கொண்ட தோட்டத்தின் பாம்புகளுக்கும், நல்லதுக்கும் கெட்டதுக்கும், பால்வெட்டும் மரங்களுக்கும் பள்ளிக்கூடங்களுக்கும், கடனுக்கும் நடுவிலிருந்த வாழ்வு சிதைக்கப்பட்டுச் சீதாம்பரன் என்ற பால்வெட்டும் வேலைக்காரன் தன் மகன்கள், மகள், மனைவி, நண்பர்கள், எசமானர்கள், அவமானப் படுத்துபவர்கள்  என்ற சூழலை விட்டுவிட்டு நகரத்துக்குக் குடியேறுகிறான்.

 

அப்படிக் குடியேறும்போது அவனை வெறுக்கும் மூத்தமகன் ஏற்கனவே வெளியேறி இருக்கிறான். தாய் தந்தையர் பார்த்துத் திருமணம் செய்து அனுப்பப்பட்ட மகள் அஞ்சலியை மணந்தவன் ஏமாற்றுக்காரனாக வாழ்க்கையை நடத்தும் ஒரு தமிழன். அவனை விட்டுவிட்டு வெளியேறும் தைரியத்தை வாழ்க்கை அவளுக்குக் கொடுத்துள்ளது நாவல் இறுதியில் தெளிவாகிறது.

 

நாவலில் கதைத் திருப்பங்களோ, பெரிய கதையோ தொடர்ந்த மொழிநடை சாதுரியமோ துருத்திக்கொண்டு நிற்கவில்லை. மலேசியாவில் சீரழிந்து போய் விடுவோமோ என்று பயத்துடன் இயங்கும் தமிழ்வாழ்வு நாவலில் இயல்பாய் இருக்கிறது. “பிள்ளையைத் தூக்கி கைலி சட்டைக்குள் அதன் தலையை விட்டு, மார்புக்காம்புகளை, அந்தக் குழந்தையின் வாயில் திணிக்கும்போதெல்லாம் சாரதா மெய் சிலிர்த்துப் போவாள்” என்று பாலமுருகன் எழுதும்போது மொழியாற்றல் எங்கெங்கு வேண்டுமோ அங்கங்கு இருக்கிறது என்பதை அறிகிறோம்.

 

இந்த நாவலின் கட்டமைப்பு மிக முக்கியமானது. காட்சிகள் துண்டு துண்டாகப் பிரிக்கப்பட்டு “ஒருவிதமான” கதை அமைப்புப் படிக்கிறவர்களின் மனதில் லேசாய் உருவாவதுபோல் ஜோடிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் பழைய வாழ்க்கையும் புதிய வாழ்க்கையும் எந்த வித்தியாசமும் அற்ற வறுமையுடனான கொடூரத்துடன் அமைக்கப்படுகின்றன. கதையின் சுகத்தில் வாசகன் தன்னை மறக்கும் தமிழக டி.வி., சினிமா, தொடர்கதைகளின் சாபக்கேடு தன் எழுத்தில் வந்துவிடக் கூடாது என்று முழு பிரக்ஞையுடன் எழுதப்பட்டிருக்கிறது; இந்நாவலின் வெற்றிக்கான அடிப்படை இது.

 

நாவலின் பக்கங்கள் புரள புரள சாரதா என்ற குடும்பத் தலைவியும், சீதாம்பரம் என்ற தோட்ட வேலைக்காரனும் குடும்பத்துக்காய் படும்பாடு வாசிப்பவர்களை ஊசியால் தொடர்ந்து குத்துவதுபோல் உணர்வெழுப்பு கின்றன.

 

எந்த நிகழ்ச்சியும் பெரிதுபடுத்தப்படவில்லை. தலைபெரிதாய் பிறந்த நோயாளியான குழந்தையை யாரிடமோ கொடுக்கும்போதும் கடன்வாங்கி மகள் அஞ்சலிக்குத் திருமணம் செய்து அனுப்பும்போதும் ஒரே மாதிரியான கதைசொல்லல் நடைபெறுகிறது.

 

இந்த நாவலின் இன்னொரு உத்தி பற்றி கண்டிப்பாகச் சொல்ல வேண்டும். நாவலின் 46-ஆம் பக்கத்தில் சீதாம்பரம் கோலாலம்பூர் போகிற விஷயம் வருகிறது. நாவலின் இறுதியில் உதாரணமாக பக்கம் 234-இல் சாரதா “யேங்க, கோலாலம்பூரா அது பெரிய ஊரா?” என்று கேட்கும் போதும் நாவல் சுமார் 190 பக்கங்களைத் தாண்டியிருக்கிறது. அதாவது 19 ஜுன் மாதம் 1995-இல் ஒரே நாளில் நடக்கும் நிகழ்ச்சிகள் இரண்டு இடங்களில் தரப்படுகின்றன. தொடர்ச்சியின்மையை ஒரு உத்தியாய் நாவல் முன்வைக்கிறது. தொடர்ச்சி இல்லாத வாழ்க்கை. அன்றும் வறுமை இன்றும் வறுமை என்பதை நாவலின் உத்தி இவ்வாறு காட்டுகிறது.

 

இந்த நாவலில் குழந்தைகளைப் பிறருக்குக் கொடுத்துத் துன்பத்திலிருந்து விடுபடலாம் என்று நினைக்கும் சீதாம்பரம் மீண்டும் வாழ்வின் கொடூரத்தில் சிக்கி விடுபட முடியாமலாகிறான்.

பிரமை தொடர்வது, தேதிகள் குறிப்பிட்டுக் கதை நகர்த்துவது போன்றன நாவலை படிப்பவர்களுக்குச் சிரமத்தைக் கொடுத்தாலும் நாவல் சொல்லவந்த மைய உள்ளடக்கத்தை மையமற்ற கதையாடல் உத்தி மூலம் சொன்னதின் மூலம் மலேசிய இலக்கிய வரலாற்றில் இந்நாவல் யாராலும் நீக்க முடியாத அங்கமாகிவிட்டது என உறுதிபடக்கூறலாம்.

 

பல சொற்கள் (மலாய், சீன சொற்கள்) தமிழகத்திலிருப்பவர்களால் புரிந்து கொள்ளமுடியாதவை.

 

“சாப்டணே, இட்லி இருக்கு, கோரேங் எல்லாம் இருக்கு…. தோச இருக்கு”

 

இதுபோல் பேச்சுமொழியும் நமக்குப் புரியாத சொற்களும் தமிழ் நாவல் இலக்கியத்தின் பரப்பு விரிவாகிக் கொண்டு போவதை உறுதிப்படுத்துகின்றன.

 

இவ்வாறு ஒரு உலகத்தன்மை தமிழ் எழுத்தில் வந்து சேர்ந்துள்ளது எனலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>