தலைவன் -சிறுகதை

 

 

        என் பெயர் லஃபோர்க் என்பதாகும்.நான் ஒரு நாவலாசிரியன் என்பதையும் புகழைப் பற்றி நான் கவலைப்படாதவன் என்பதையும் முதலிலேயே சொல்லிவிடவேண்டும் . ஆகவே உங்களுக்கு என் பெயர் அறிமுகமில்லாமல் தான் இருக்கும்.

என்னுடைய வயதான காலத்தில் நான் வசித்துகொண்டிருக்கும் இந்தத்தீவில் பேசப்படும் ‘ஒலவு’ என்ற மொழி பற்றி டாக்டர் வெண்டல்வெஸ்கி என்ற பேர்கேட்ட ஐரோப்பியர் இலக்கணம் எழுதியதால், அம்மொழி உலக அரங்கில் பிரபலமானது என்கிறார்கள். அந்த மொழியில் எழுதப்பட்டு 2007-இல் ஆகஸ்டு மாதம் எட்டாம் தேதி வெளியான என் நாவல் ஒன்று அனைத்துலகப் போட்டியில் முதல் பரிசை வென்றதுகூட  உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம். அதற்காக நீங்களோ நானோ இப்போது கவலைப்பட்டு எதுவும் நடக்கப்போவதில்லை. எவ்வளவுதான் நீங்கள் இலக்கியத்தின் அனைத்துலகப் போக்குகளையும் நுட்பத்தையும் அத்துப்படியாக வைத்திருந்தாலும் சில விசயங்கள் கவனத்துக்கு வராமல்தான் இருக்கும்.

ஒலவு மொழியில் நான் எழுதும்போது  நடக்கும் மர்மத்தைப்பற்றிக் கூறிவிடுகிறேன். நான் எழுதும் எழுத்து என்னுடைய கற்பனையை மட்டுமல்லாமல் அம்மொழியில் எழுதும் எல்லோருடைய கற்பனையையும் தீர்மானிக்கிறது என்று நான் கூறினால் ஏற்பீர்களோ என்னவோ. அதுபோல என் எழுத்து  எல்லாவிதமான அர்த்தங்களையும் அர்த்தத்தின் பகுதியான செயல் பாட்டையும் – சேர்த்துத் தீர்மானிக்கிறது.  (இது நம்ப முடியாதது என்று எனக்குத்தெரியும்; எனினும் நம்பித்தான் ஆகவேண்டும் என பிடிவாதம் பிடிக்கமாட்டேன்..)

அதனால்தான் இவ்வளவு பீடிகையுடன் நான் இந்தக் கதையைச் சொல்ல வேண்டியிருக்கிறது. (சொல்வது வேறாகவும் எழுதுவது வேறாகவும் அமையும் மொழி என்னுடைய ஒலவு மொழி என்பது இன்னொரு உபதகவல்).

என் கற்பனை பற்றி என் சக எழுத்தாளர்களுக்குப் புரியவில்லை என்று நானும், இவன் ‘பிக்க்ஷன்’ எழுத்தாளன் அல்ல, ஒலவு மொழியின் நாட்டுப்புறவியல் எழுத்தாளன் மட்டும்தான் என்று என்னோடு சேர்ந்து இரவெல்லாம் குடித்துவிட்டுக் காலையில் அவிழ்ந்து கிடக்கும் துணியை எடுத்துக் கட்டியபடி(சிவந்திருக்கும் வீங்கிய கண்களால் என்னைக் கோபத்தோடு பார்த்து)  சொல்லும் மூத்த எழுத்தாளனின் பேச்சைத் தான் நான் ஒரு எழுத்தாளனாய்  கண்ட பலன்.

ஆனால் எனக்குச் சில நிச்சயமான கருத்துக்கள் உண்டு. என் கதைகளில்  கற்பனையாக நான் கொண்டுவரும் பாத்திரங்கள்  எனது தீவினது மரம் செடி கொடிகளில் பல ஆண்டுகளாய் ஆவிகளாய் வாழும் மூதாதையர்களின் பேச்சையே பேசுகிறார்கள். கற்பனையாக நான் என் ஒலவு மொழி மூலம் எழுதும் ஒவ்வொரு சொல்லும் நிஜமான இன்னொரு குரல்தான் என்பது எனது பல ஆண்டுகால கருத்து.

இதுபோன்று என் எழுத்தில் காணப்படும் வேறு குணங்கள் பற்றி பாரிசிலிருந்து வந்த  ஒரு பத்திரிகையாளருக்கு ஒருமுறை  கொடுத்த  பேட்டியின் போது நான் பேசியதையும் உங்களிடமிருந்து மறைக்கத் தேவையில்லை.

என்  எழுத்துக்களில்,  சரித்திரத்தில் ஒரு காலத்தில் உண்மையாக  இருந்துவிட்டு மறைந்த நாயகர்களைப் பற்றியும் அவர்கள்  அற்பாயுளில் மறைந்து போனபோது அவர்களால் வெளிப்படுத்த முடியாத அவர்களின் ஆசை அபிலாசைகளையும் தான் எழுதுகிறேன் என்று பேட்டி அளித்தேன். வேறு எழுத்தாளர்களும் தற்கால மக்களின் ஆசை அபிலாசைகளைத் தானே எழுதுகிறார்கள் என்று தோய்ந்து மறையும் கீழ்குரலில் அந்தப் பேட்டியாளன் சொல்லிவிட்டுப் பேட்டியைப் பாதியில் முடித்துக்கொண்டு மறைந்தான். அது அவனது கீழான குணத்தைத்தான் காட்டுகிறது என்றே நினைத்தேன். பேட்டி எடுத்தவனின் நடத்தையைப்பார்த்து பிரான்சு நாடு எங்களைக் காலனியாக வைத்து ஒரு காலத்தில் ஆண்டுகொண்டிருந்தது கூட எனக்கு ஞாபகத்துக்கு வந்தது.

நான் எழுதும்போது என்னைச் சுற்றி ஆட்டம்போடும் இறந்து போனவர்களின்  குரல் எனக்கு நிதர்சனமாய் எப்போதும் கேட்கிறது. எனவே, கற்பனையும் நிஜமும் என்னைப் பொறுத்தவரையில் வித்தியாசமற்று என் புனை கதைகளில் வடிவம் கொள்கின்றன. ஆனால் நான் என் ஒருவனைப் பற்றி மட்டும் எழுதும் சுயநலக்காரன் அல்ல என்கிறேன். என்னைச் சுற்றியுள்ளவற்றைப் பற்றி- எழுதும் என் அறிவு வளராத காலத்திலேயே, காலரா நோய்வந்த மூன்றே நாட்களில் இறந்துபோனார் என்று சொல்லப்பட்ட என்னுடைய தாத்தாவும், அவரது தாத்தாவும் பல மூதாதையர்களும் என் எழுத்தில் இருக்கிறார்கள் என்பது  எனக்குத் தெரியும்.  அந்தத் தாத்தாவின் தாத்தாவும் அவர்களின் மூதாதையர்களும் கூட என்னோடு நான் எழுதும்போது பேசுகிறார்கள் என்பது  மிகவும் துல்லியமாகவும் அவர்களின் வித்தியாசமான குரல் அடையாளத்துடனும் தெரிந்துகொண்டுள்ளேன்.  இதனால் எழுத்தின் முக்கியமான பிரச்சனைகளான கர்வமோ, சுயபரிதாபமோ எனக்கு இல்லவே இல்லை.

இப்படியாக நான் எழுதுவதால் எனக்குப் பிறரைப் பற்றிய எல்லா விஷயங்களும் அத்துப்படி. அவர்களின் கள்ளக்காதலிகள், அவர்கள் சொந்த சகோதரர்களுக்குச் செய்த துரோகங்கள், எத்தனை திருமணங்களைத் தடுத்தார்கள் (திருமணங்களைத் தடுப்பது எங்கள் சமூகத்தில் மன்னிக்க முடியாத பாபம்) என்பதெல்லாம் எனக்குத் தெரிந்துவிடும். அதாவது என் எழுத்துச் சம்பவிக்கும் போது பல உண்மைகளைக் கண்டுபிடிக்கும் மந்திரக்கண்ணாடி ஒன்று என் கண்முன் இயற்கைத் தெய்வத்தின் உதவியால் பிடிக்கப்படும். இப்படித்தான் என்னால் எழுதமுடியும். கற்பனையை நிஜத்திலிருந்து கொஞ்சமும் என்னால் பிரித்தெடுக்க முடிந்ததில்லை.( இதைதானே என் விரோதிகள் என் பலவீனமெனக் கூறித் தூற்றுகிறார்கள்.)

இப்படித்தான் குகி  என்ற பெயரில் என் மொழியில் எழுதும் ஒருவனின் எழுத்தினுள் மறைந்திருக்கும் பல விஷயங்களை நான் கண்டுபிடித்து எழுதி வெளிக்கொண்டுவந்தேன். அதனால் அவன் என் அலுவலகத்துக்கு வந்து ஒரு குவளையில்  எடுத்துவந்த திராவகத்தைக் கோபத்தோடு வீசினான். நல்ல காலம்  குறி தப்பி திராவகம் சுவரில் தொங்கிக் கொண்டிருந்த காலண்டரில் இருந்த நடிகையின் முகத்தைப் பாழ்படுத்தியது. என் அலுவலக சிப்பந்திகள் குகியைப் பிடித்து நையப்புடைத்துப் போலீஸில் ஒப்படைத்தார்கள். போலீஸ் உயர் அதிகாரிக்குக் குகி வசித்து வந்த வீட்டை விற்றுப் பணம் கொடுத்துச் சிறைக்குப் போகாமல் தப்பினான் என்று எங்கள் தீவின் வதந்திகளை எழுதுவதற்காக நடத்தப்பட்ட ‘ஒலவு அப்ஸர்வர்’ என்ற பத்திரிகை, பின்பு செய்தி வெளியிட்டது.

எழுத்தில் வாசகர்கள் நம்மைத் துப்பறியும் காரியமும் நடக்கிறது.  ஒரு பெண்மணியின் குடும்ப வாழ்க்கை பற்றி ஒரு கதை எழுதியிருந்தேன். குடும்பத் தலைவியை ஏமாற்றும் குடும்பத் தலைவன் வேலைக்காரியுடன் தொடர்பு வைத்திருந்ததைப் பற்றி எழுதியபோது குடும்பத் தலைவி என் எழுத்துத் தன்னைப் பற்றியது என்று கண்டுபிடித்ததோடு நிற்காமல் என் வீட்டுக்கு வந்து என்னைப் பார்த்து எங்கள் மொழி வழக்கப்படி வணக்கம் கூறி பரிசுகளும் தந்து என் எழுத்தின் மூலம் தான் கண்டுபிடித்த பல உண்மைகள் பற்றி விளக்கியபோது எனக்கே ஆச்சரியமாகவிருந்தது.இதுதான் எங்கள் மொழியில் உண்மைசார்ந்த எழுத்தின் இலக்கணம் என்கிறார்கள்.

இப்படிப் கொஞ்ச காலம் போனபோது எனக்குத் தோன்றுவதெல்லாம் உண்மைகளைச் சார்ந்ததாய் அமைந்தன; ஆனால்  அப்படி ஒரு உண்மை பற்றிய கருத்து எனக்குள் இல்லை என்பதுபோல் இயல்பாய் எழுத ஆரம்பித்தேன். ஆனாலும் நாலு நாட்கள் உணவும் நீரும் இல்லாமல் ஒருமுறை ஒரு ஆவேசத்துடன் எழுதியபோது பல விஷயங்கள் (எனக்குப் புத்தியில் பதியாதவை) என் எழுத்தில் வந்திறங்கியதை அறிந்தேன்.   பாலைவனத்தை இதுவரை பார்த்தறியாத நான் பாலைவனத்தின் தன்மைகள், உஷ்ணநிலை, வாழ்க்கைமுறை, வானிலை என்று மிகவும் கச்சிதமாக எழுதியதாய் துபாய் பக்கத்திற்கு வேலைக்குச் சென்றிருந்த பாலைவன அனுபவமுள்ள ஒருவர் தனக்குத் தெரிந்த தகவல்களைப் பற்றி எனக்குத் தெரிவித்துப் புகழ்ந்தார்.

என் எழுத்துக்களை அதன்பிறகு நான் அவதானிக்க ஆரம்பித்தேன். நான் ஏன் எழுதுகிறேன்?. தொடர்ந்து 56 ஆண்டுகளாக ஏன் எதாவது எழுதிக்கொண்டே இருக்கிறேன்?. எல்லோரும் எழுதுகிறார்களா என்ன? பரிசுக்காக என் மொழியில் பலர் எழுதுகிறார்கள். அரசியல்வாதிகளோடு தொடர்பு ஏற்படுத்துவதற்காக – வேலையில் பதவி உயர்வு வாங்குவதற்காக, தாம் செய்த ஊழலை மறைப்பதற்காக, மினிஸ்டர்களை அணுகி உதவி பெறுவதற்காக, தேர்தலில் சீட் வாங்குவதற்காக, உயர்ந்த இடத்தில் பெண் எடுப்பதற்காக – இப்படி இப்படி எத்தனையோ நோக்கங்களுடன் எழுதுகிறார்கள். சாகும்போது ஆன்மா சாந்தி அடைய வேண்டுமென்பதற்காக எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள் என்றுகூட எழுதுகிறவரின் எதிரிகள் பேசியதும் உண்டு. சரி, நான் எதற்காக எழுதுகிறேன்? அதுவும் வழக்கமில்லாத வாக்கியத் தொகுப்புகளைப் பயன்படுத்தி எதற்காக நான் எழுத வேண்டும்?. யோசணைகள் தொடர்கின்றன.

இப்படி இருக்கிற ஒருநாள் நான் வேலை பார்க்கும் சினிமா பற்றிய பத்திரிகையில் புதிதாய் வந்து வேலைக்குச் சேர்ந்த குள்ளமான, அரைத்தாடியும் சப்பை மூக்கும் சுருட்டை முடியும் கூர்மையான பார்வையும் கொண்ட இலங்கைக்காரர்,  தங்கள் மொழிக்காக ஒரு நாடு இல்லை என்பதால் கவலைப்பட்டு ஒரு படையை உருவாக்கி 30 ஆண்டுகள் படை நடத்தி இறுதியில் என்ன ஆனான் என்று அறியமுடியாதவனான ஒரு மனிதனையும் அவனது குடும்பத்தையும் பற்றி பல மணிநேரம் என்னிடம் பேச ஆரம்பித்தார்.

படை நடத்திய அந்த மனிதன் மீது எனக்கு முதலில் ஆர்வமோ, அவன்பற்றிச் சொல்வதைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஊக்கமோ  ஏற்படவில்லை. வயதான பின்பு பல விஷயங்கள் இப்படி ஆகிப் போகின்றன என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். ஆனால், இலங்கைக்காரர் என்ன காரணத்தினாலோ – அல்லது எந்தக்காரணமுமில்லாமலோ – நான் அலுவலகத்திலிருந்து வெளியில் செல்லும்போதெல்லாம் என்னைத் தொடர்ந்தார். அது எனக்கு விளங்கா விட்டாலும், அவர் என்னுடன் ஒட்டுறவுடன் நடக்கத் தொடங்கியதன் அர்த்தம் பிடிபட்டது. விளங்காவிட்டாலும் நாம் சில நடவடிக்கைகளில் ஈடுபடுகிறோம் தானே. இப்படித் தான் நான் கதைகள் சிலவற்றிலும் எழுதுகிறேன். விளையாட்டு மைதானத்தில் கசங்கிய ஆடையுடன் வந்து கிரிக்கட் விளையாடும் இளைஞர்களைப் பார்க்க தினமும் வருகிற மத்திய வயதினன் – வருத்தமான முகமும், கலைந்த தலையும், கண்களில் பெரிய சட்டமிட்ட கண்ணாடியும் தேய்ந்த பழைய செருப்பும் அவனுடையவை – கதை முடியும்போது எந்த நிகழ்ச்சியிலும் பங்கெடுக்காமல் கதை தொடக்கத்தில் எப்படி மைதானத்தில் இருந்தானோ அப்படியே கதை முடிவிலும்  இருக்கிறான். இந்தக் கதையும் என் பிற கதைகள் போல புரியாத கதை என்ற லேபலைப் பெற்றது. என்னிடம் விளக்கம்பெற கேள்விகள் கேட்ட – பல்கலைக்கழக முனைவர்பட்ட மாணவ மாணவியர் உட்பட – அத்தனை பேரும் நான் பதிலாக ஏதோ உளறியதைக் கேட்டுத் திருப்தி அடையாமல் போனதைப் பார்த்து எனக்குள் ரகசியமாய் மகிழ்ந்தேன். இது என் குணம்.

இலங்கைக்காரர் தனிநாடு கேட்டுப் போராடிய மனிதனைப் பற்றித் கூறியபடியே என்னைத் தொடர்வது நிற்கவில்லை. இலங்கைக்காரரும் நானும் நல்ல நண்பர்களாகிப் போனதுதான் மிச்சம். அவர்நோக்கம் புரியவில்லை. தனி நாட்டுக்காக ஒரு படையை உருவாக்க உதவிய பக்கத்துப் பெரிய நாட்டு உளவுப்பிரிவுதான்  தனிநாடு கேட்டவனுக்குப் பயிற்சி அளித்து அவனுக்குப் பணமும் கொடுத்தது என்றும் கடைசியில் அந்தப் பெரிய நாட்டின் அதே உளவுப் பிரிவும் மூன்று உயர் அதிகாரிகளும் சேர்ந்துதான் அவனையும் அவன் இனத்தைச்சார்ந்த ஒன்றரை லட்சம் மக்களையும் கொன்றது என்றும் கூறினார்.

என் கதைகளைப் பற்றிய இன்னொரு விசயமும் திடீரென்று என்புத்தியில் பதிகிறதை, உடனடியாக, நான் பதிவு செய்யாவிடில் என் இந்த எழுபதைத் தாண்டிய வயதில், மறந்து போவேன், எனவே பதிவு செய்கிறேன். ஆம் என் எதிரில் இருந்து என் பாத்திரங்களுடன் பேசும் குரல் ஒன்று எப்போதும் என் மூதாதையர்களிடமிருந்து எனக்குத் தொடர்ந்து வந்து கொண்டிருப்பது பற்றிய விளக்கம் இது. அந்த நேரங்களில் நானும் என் கதைப் பாத்திரமும் நிஜமாகிவிடுவோம். அதுதான் முக்கியம். நிஜமாவது. இரண்டுபேர் நிஜமாகி விடும்போது இரண்டு உடல்கள் ஒன்றன் முன் இன்னொன்று அமர்ந்திருக்க வேண்டும். அப்படி அமர்கையில் வெளிப்படும் வார்த்தைகளும் வாக்கியங்களும் நிஜமானதாக அமையும். இதுதான் என் கதைகளில் மறைந்திருக்கும் உண்மை. மறைவாய் இரண்டு பேர் என் ஒவ்வொரு கதையிலும் மறைந்திருக்கிறார்கள்.மூதாதையர் நேரடியாய்  வெளிப்பட்டுத் தோன்றும் முறை, இல்லாதது தோன்றும் தன்மை, அல்லது தெரியாதது தெரியும் தன்மை. இதுதான் என் எழுத்தை நான், பிறர் ஏற்கிறார்களோ இல்லையோ என்பதை சட்டை செய்யாது – அறிந்துகொள்ளும் அடிப்படை.

திரைப்படப் பத்திரிகையில் கம்ப்யூட்டர் பிரிவில் என் இலங்கைக்கார நண்பர் பணியாற்றினார். நான் சினிமாவின் கதைப்பிரிவு சார்ந்த எடிட்டோரியல் பகுதியில் பணியாற்றினேன். அது ஒரு  விநோதமான வேலைப் பிரிவினைதான் என்பது எனக்கும் தெரியும். எனக்குக் கதை எழுதுவதன் தத்துவம், உத்திகள், தொடக்கத்துக்கும் நடுவுக்கும் முடிவுக்கும் மத்தியில் இருக்கும் உறவு இப்படி எல்லாம் யோசிப்பதும், விவாதிப்பதும் பிடிக்கும் என்பதால் தீவில் பிரசித்திபெற்ற  பத்திராதிபரான  என் நண்பர், அந்த சினிமாப் பத்திரிகையில் எனக்கென்றே அந்த கதைவிவாதப் பகுதியை உருவாக்கியிருந்தார். அதனால் அவர்களின் சினிமா விமரிசனம் வளம் பெற்றது என்று பத்திராதிபர் கூறியது உண்மைதான்.

நாங்கள் வசித்தது என்னவோ சிறிய நாடுதான் என்றாலும் சினிமா தயாரிப்பதிலும் சினிமா வியாபாரத்திலும் அவுட்டோர் ஷுட்டிங் நடத்தவரும் பல வெளிநாட்டு நிறுவனங்களுக்கு உதவுவதிலும்  நல்ல வருமானம் வந்தது. எங்கள் நாட்டிலும் ஜனாதிபதியாக வருபவர் முன்னாள் நடிகராகவோ நடிகையாகவோ தான் இருக்கிறார். எங்கள் மக்கள் அதற்கெல்லாம் அசராமல் தொடர்ந்து சினிமாக்காரர்களையே தேர்ந்தெடுத்து வருகிறார்கள். சமீப காலங்களில் நிலமை இன்னும் மோசம்.

இலங்கைக்காரர் என்னிடம் அவர்கள் நாட்டில் படங்கள் தயாரிப்பு  வளரவில்லை என்றார். ஒருநாள் வழக்கம் போல – நான் எதிர்பார்த்ததும் அதுதான் – தனிநாடு கேட்டு அவர்கள் நாட்டில் நடத்த யுத்தத்தில் படை உருவாக்கிய மனிதனின் முடிவு பற்றி மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மனதில் விசனத்துடன்   சொன்னார்.

“கடைசியில் அந்த மனிதன் எதிரியின் சைன்யத்தால் கேவலப்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டான். அவனுடைய உடைகள் களையப்பட்டிருந்தன; அவை பல இணையத்தளங்களில் புகைப்படங்களாய் வெளிப்பட்டன. தலையில் கோடரி போன்ற வஸ்துவால் வெட்டப்பட்டது. கண்களை மூடாமல் படம் எடுத்திருந்ததால் மரணமுற்ற மனிதனின் கண்கள் திறந்திருந்தன. எதிரி இரக்கமில்லாதவன் என்பதையும் எதிரியை மரணத்திற்குப் பிறகும் அவன் பார்த்துக்கொண்டு இருக்கிறான் என்று அவனுடைய இனத்தவரான நாங்கள் நினைப்போம் என்பதையும் அந்தத் திறந்த கண்கள் சுட்டிக் கூறின”.

இலங்கைக்காரரின் நட்பால் கவரப்பட்டிருந்த நான் அவருடைய உணர்வில் இப்போதெல்லாம் பங்கெடுக்க ஆரம்பித்தேன். எங்கோ இருந்த யாரோ ஒரு தேசியத் தலைவைனைப் பற்றிக் கூறுகிறார் என் நண்பரான இலங்கைக்காரர் என்ற உணர்வு மாற ஆரம்பித்தது. என் எழுத்துக்களின் உள்ளே இருக்கும் ஒரு மர்மமான முடிச்சை விடுவிக்கும் விடுகதைக்கான பதிலை என் நண்பர் எப்படியோ எனக்குள் உருவாக்கிவிட்டார் என்று உணர ஆரம்பித்தேன். எனக்கு வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அந்தத் தேச சுதந்திரத்துக்குத்  தன் உயிரையும் மனைவி மக்களின் உயிரையும் பணயம் வைத்த தலைவனைப் பற்றிய தகவல்களை நானும் திரட்ட ஆரம்பித்தேன்.

தொடர்ந்து நான் கூறிக்கொண்டுவரும் என் எழுத்தின் தத்துவம், பின்புலம், உளவியல்  விவரணைகள் என் ஒவ்வொரு எழுத்திலும் வரும்படி எழுதிக்கொண்டே இருந்தேன். அத்தகைய காலத்தில் நான் ஒரு புதிய கதை எழுதுவதற்கான தகவல்களைத் திரட்டிக்கொண்டிருந்தேன். தனிமையாலும் வயோதிகத்தாலும் பீடிக்கப்பட்ட ஒருவன் தனித்தீவில் மாட்டிக்கொண்டு வாழ்வின் அர்த்தத்தை எல்லாவித ஆபத்துக்களையும் எதிர்கொண்டு மனதுக்குள் உருவாக்கும் அந்தக் கதையில் ஒவ்வொரு ஆபத்தும் அவன் மனதைத் திறந்துவிடுகின்றது. ஆபத்தில்லாவிட்டால் அவனால் வாழமுடியாதென்று கருதும் அளவு போகிறான். அதற்காகத் தற்கொலை மனோநிலையை அவன் உருவாக்குவதில்லை என்பதுதான் அவன் கதையின் தனிச்சிறப்பு என்பது எனக்கு நன்கு தெரிந்திருந்தது.

அக்காலத்தில் இலங்கைக்கார நண்பர்  தனிநாடு கேட்டுத் தன் மக்களுக்காக மரணமடைந்த மனிதனைப் பற்றிய புதுத் தகவல்களைக் கொண்டு வந்தார்.

ஒன்றரை லட்சம் மக்கள் இறந்த யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் நடந்த தகவல்கள் யாருக்கும் தெரியவில்லை. அந்தத் தலைவனின் மனைவியும் மகனும் கொலை செய்யப்பட்ட தகவல் மட்டும் வெளியில் வந்திருந்தது.நண்பரும் அதைக் கூறி வருந்தினார். நான் எதிர்பார்க்காத விதமாய்  இந்தத் தகவல்களைக் கொண்டுவந்த மறுநாள் பெருமையாய் அந்த இலங்கைக்காரர் வந்து எனக்கு உணவு வாங்கிக் கொடுத்தார். எதற்கு என்று கேட்டபோது தலைவனின் மரணப்புகைப்படங்கள் மார்ஃப் செய்தவை; எதிரிகளால் செயற்கையாக உருவாக்கப் பட்டவை என்றார். தலைவனும் அவனது துணைவியும் தப்பிவிட்டார்கள் என்று தகவல்கள் வந்துள்ளன என்றார். அவரளவு நான் அச்செய்தியைக் கேட்டு மகிழவில்லை. எனக்கு எதுவும் புரியாமல் இருந்தது. ஒருவேளை இறந்தவன் உயிர்த்தெழுவது எனக்குப் புதியதல்ல என்பதாலாக இருக்கலாம்.

அதன் பின்பு வழக்கம்போல நண்பர் அவரது கணினி வேலையிலும் நான் என்னுடைய கதை டிப்பார்ட்மென்டில் கதைகளை அலசும் வேலையிலும் ஈடுபட்டோம். என் காரியங்கள் வேறு. இன்று ஒரு சினிமாவில் வரும் தேவையில்லாத ஒரு பெண் பாத்திரம்  இறுதியில் சந்திக்கும் விபத்து பற்றி யோசித்தபடி இருந்தேன். அது எனக்குப் பிடிக்காத என்தொழில். எனினும் அடுத்த நாளிலிருந்து எனக்குப்பிடித்த காரியமான சுயபரிசோதனையில் ஆழ்ந்தேன்: நான் என் கதைகளைப் பற்றியும் என் இலக்கியத்தின் அடிப்படைத் தன்மை பற்றிய தொடர் விசாரத்திலும் ஈடுபட்டேன். ஒருவன் எதற்காக எழுதுகிறான்? நான் எதற்காக எழுதுகிறேன்?என்ற கேள்வி மீண்டும் வந்தது. ஒரு ஆங்கிலக் கவிஞன் ‘நான் கவிதை எழுதுவதால் எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்பதைக்கண்டுபிடித்தேன்’ என்றான். அப்படியென்றால் எனக்கும் கடவுள் நம்பிக்கை இல்லை என்பதால் நான் எழுதுகிறேனா என்ற கேள்வி தோன்றியது. எனக்குக் கேள்விகள் போதும் என்று நான் வாழ்பவன். அதனால் விடைகளை நான் கஷ்டப்பட்டுக் கண்டுபிடிப்பதற்குச் சிரமம் எடுப்பதில்லை. கேள்விகளே விடைகளின் சந்தோஷத்தை எனக்கு அளிக்கின்றன. இந்த அர்த்தத்தைக் கொண்ட வாக்கியம் புரியாததாகப் பல மொழிகளில் கருதப்படும்போது என் மொழியில் இது மிகவும் நன்றாகப் புரிகிற வாக்கியம் என்பதை நான் சொல்லித் தான் தீர வேண்டும்.

எதிர்பாராத விதமாக – என் தீவிலிருந்து, மிகப் பல ஆண்டுகளுக்கு முன்பு – 1943-இல் ஜனவரி நாலாம் தேதி காணாமல்போன என் தம்பி, தாடியுடன் நேற்று திரும்பி வந்தபோது என் வீட்டில் அவனை அமர வைத்துவிட்டு வெளியே நான் போனேன். நான் அப்படி ஒரு அடி வெளியே எடுத்து வைத்துவிட்டு  மீண்டும் வீட்டுக்குள் சென்று அவனையே பார்த்துக் கொண்டு நின்றேன். அவன் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.

என் எழுத்துக்கள் தோல்வியானவையா வெற்றி பெற்றவையா என்று ஆங்கிலத்திலும் பிறமொழிகளிலும் வருகின்ற நூல்களைப் படித்த எங்கள் விமரிசகர்கள் எப்போதும் ஒரு கேள்வியைக் கேட்பதற்குச் சலிப்படைவதில்லை. அந்தக் கேள்வியை அவர்கள் கேட்டுக்கொண்டு சாகட்டும் என்று நான் விட்டுவிட்டேன். என்ன பதில் வரப்போகிறதென்று நான் தலைமுடியைப் பிய்த்துக் கொள்வது கிடையாது; அப்படி இருப்பது  என் வரப்பிரசாதமான மனநிலை என்று எனக்கு நான் கூறிக் கொள்கிறேன். அதுபோல் என்னைப் போலவே புனைகதை எழுதும் எழுத்தாளர்கள்  –  என்மொழியில் சக எழுத்தாளனைப் பற்றிப் பேசினாலே அது கெட்ட சகுனம் – அவர்களின்  ஒலவு மொழி எழுத்து எங்கள் தீவில் பிரசுரிக்கப்படுகின்றன. இங்குக் கிடைக்கும் ‘சீப்’பான தாளில் அழகற்ற ஆதிவாசிப் பெண்களின் (இவர்கள் படத்தைப் போட்டால்தான் நூல் விற்கும் என்கிற மூடநம்பிக்கை இருக்கிறது) அட்டைப் படத்துடன் முதல் பதிப்பு, 500 பிரதிகள்  அச்சடிக்கப்படும். எங்கள் ஜனாதிபதிகள்  கடந்த 45 வருடங்களாக மாறிமாறி ஆட்சிக்கு வரும் போது இருவரும் போட்டி போட்டு நாவல் எழுதுகிறார்கள்.(அதற்கு  முன்பு பிரான்ஸிடமிருந்து  தீவின் சுதந்திரத்துகாகப் போராடியவர்கள் ஜனாதிபதிகளாய் இருந்தனர்.) போட்டிபோட்டு அவர்கள் இருவர் எழுதும் கி.பி. 1000 ஆண்டைச் சார்ந்த வரலாற்று நாவல்கள் மட்டும் 6000 காப்பிகள் விற்கும். பிரஞ்சு மொழியில் அவை பெரிய விளம்பரத்துடன் வந்து விடுகின்றன என்ற தகவல் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் தொடர்ச்சியாக என் எழுத்து எதற்காக உருவாக்கப்படுகிறதென்று எனக்குள் எழும் கேள்விகளுக்குப் பதில் எதிர்பார்த்தபடியே வாழ்வதும் எழுதுவதுமாக என் காலம் ஓடிக்கொண்டேயிருக்கிறது.

1943-இல் எங்கள் தீவில் அந்நியர்கள் வாழ்ந்தபோது காடுகளில் பதுங்கியிருந்து ‘ஓகோல்’ (சுதந்திரம் என்று பொருள்) என்ற ரகசிய இயக்கத்தின் துணைத் தளபதியாக இருந்து நாடு கடத்தப்பட்ட என் தம்பி பல ஆண்டுகளுக்குப் பிறகு வயதான தோற்றத்தில் வந்தவன் யாருக்கும் தெரியாமல், ஒரு வாரம் முழுதும் தூங்கிக் கொண்டேயிருந்தான்.இத்தனை ஆண்டுகள் ஒருநாள்கூட தூங்குவதற்கு நேரம் கிடைக்காதவன்  போலத் தூங்கினான். இன்றைய அரசாங்கம் அவன் உயிருடன் இருக்கிறான் என்பதை அறிந்தால் என்ன செய்யும் என்பதைப் பற்றிய எந்த அறிவும் இல்லாத நாங்கள் அவன் ஊரில் இருக்கும் விசயத்தை யாருக்கும் சொல்லவில்லை. என் வீட்டுக்குப் பல நாட்டு சினிமாக்காரர்கள் வந்துபோவது வாடிக்கை என்பதால் யாரும் தாடியுடன் இருக்கும் என் வயதொத்த இன்னொரு முதியவனைச் சந்தேகக் கண்கொண்டு  பார்க்கவில்லை என்றாலும் என் தம்பி ஒரு வாரத்துக்குபின் என்னிடம் சொல்லாமல் புறப்பட்டு விட்டான் என்பது மட்டும் புரிந்தது.

என் புனைகதைகளின் அடுத்த விசயத்துக்கு வருகிறேன்.  விலங்குகளும் குழந்தைகளும் பாத்திரங்களாய் தோன்றியபோது அவர்களும் காலங்காலமாக என் பிறப்புக்கு முன்பிருந்தே என்னிடம் பேசியவைகளை என் கதைகளிலும் அமர்ந்து பேசினார்கள். அது பற்றிய ஒரு நிச்சயமான எண்ணம்  எனக்கு இருந்தாலும் அவ்விஷயத்தை யாருக்கும் சொன்னதில்லை. எனினும் என் பேட்டிகளைத் தொகுத்து வெளியிட்டிருந்த என் வாசக நண்பர் சமீபத்தில் என்னிடம் இக்கருத்தைப்பகிர்ந்து கொண்டபோது எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது.

இலங்கைக்காரர், நான் உடல்நலமின்றி இருந்ததால் அலுவலகம் போகாதபோது இரண்டு நாட்கள்  எனக்காகக் காத்திருந்த விஷயத்தை பின்பு நான் அலுவலகம் போனபோது கூறி  அவர்களின் தலைவன் பற்றிய மிகப் பிந்திய தகவலை என்னிடம் பகிர்ந்தார்.

‘அவரும் குடும்பமும் பலிபோடப்பட்டுவிட்டார்கள். நான் போனமுறை சொன்னது தவறாகிவிட்டது’  என்றார்.

‘அது நான் எதிர்ப்பார்த்தது  தான்’ என்று அவரிடம்    கூறிவிட்டு,       இருவரும் எங்கள் தீவில் தயார் செய்யப்பட்ட கசப்பு மிகுந்த டீயை அருந்தியபடி பேசிக்கொண்டு அமர்ந்தோம். அவர் தொடர்ந்தார்.

‘உண்மையா? எங்கள் மக்களின் விடுதலைக்கு இனி யாரும் இல்லையா? தலைவனும் அவன் துணைவியும் உயிரோடு இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை பொய்யாகி விட்டதா?’

‘உங்கள் மக்களின் தலைவனையும் அவன் மனைவியையும் யாரும் கொல்ல முடியாது’ என்றேன் மிக உறுதியாக. என் நண்பர் திருப்தி அடையவில்லை என்னுடைய பதிலால் என்பதறிந்தேன்.

‘உண்மை என்ன சொல்லுங்கள். நான் போன வாரம் உங்கள் தம்பியைச் சந்தித்தேன். இறந்துபோனவர் என்று பல ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் மக்கள் நினைத்தார்கள். அவர் உயிருடன் இருக்கிறார். அதுபோல் எங்கள் தலைவனும் வருவானா?’

‘என் தம்பியைத் திரும்ப இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பேன் என்று நானும்  நினைக்கவில்லை.’என்றேன்.

‘அவர் ஏன் புறப்பட்டுப் போய்விட்டார்?’

‘அவரைப் பொறுத்தவரையில் அவர் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து போனவர்’.

‘உங்களைப் பொறுத்தவரையில்?’

இலங்கைக்காரர் கேட்ட கேள்விக்கு நான் சொல்லப் போகும் பதில் அவருக்குத் தெரியும் என்பதுபோல் அவருடைய முகபாவம் தென்பட்டது.

அதனால் அவர் அமைதியானார். என் வாய் அவருக்குத் கேட்காதபடி  முணுமுணுத்தது.

‘என் தம்பி ஏற்கனவே இறந்து போனவர்’.

எழுபத்தைந்தாம் வயதைத் தொடப் போகிற நான் மறுநாள் வெளிநாட்டுப் படத் தயாரிப்புக் குழு ஒன்றின் வருகைக்காகக் காத்திருந்தபோது இலங்கைக்காரர் எனது பின்பக்கமிருந்து ஒரு நிழல்போல் வந்து என் முன்பு தென்பட்டார். அன்று சுள்ளென்று சூரியன் சுடுவதுபோல் வெயில் அடித்தது. வழக்கமாய் எப்போதும் 25 டிகிரி செல்சியஸ்க்கு மேல் போகாத இதமான காலநிலை இருக்கும் எங்கள் தீவில் வெயில் அடித்ததால் அது எல்லோருக்கும் குதூகலமான மனநிலையை உருவாக்கியது.

அப்போது அடித்த வேகமான காற்றில் நண்பர் சொன்னது லேசாகக் கேட்டது.

‘எங்கள் தலைவனும் அவனது துணைவியாரும் உயிருடன்தான் இருப்பார்கள்.மீண்டும்  வருவார்கள்.’

உணர்ச்சிப் பெருக்கால் நண்பரின் தொண்டை கமறியது. கண்களில் கண்ணீர் முட்டியது.

நான் ஆமோதித்தேன். என்னை அறியாமல் சொற்கள் வெளிப்பட்டன.

‘தலைவன் கண்டிப்பாக  வருவான்.நான் உண்மையாகவே நம்புகிறேன்.’

அவரின் முகத்தில் தெரிந்த பிரகாசம் அமானுஷியமாயிருந்தது.

அதன் பின்பு நான் அவரைப்பல மாதங்கள் சந்திக்கவில்லை. வேலையை விட்டு விட்டாரோ என்று நினைத்தேன்.

அப்படி  பல மாதங்கள் கடந்தன. இடையில் ஏதேதோ வேலைகளில் நான் ஈடுபட்டேன்.

மீண்டும் ஒருநாள்  என் நினைவுகளில், நான் எழுதப்போகிற  – அல்லது எழுதிய பல பாத்திரங்கள் என்னுடன் பேச ஆரம்பித்தார்கள். அவற்றில் உயிர் உள்ள பாத்திரங்களும் இல்லாத பாத்திரங்களும் இருந்தனர். எப்போதும் என் கற்பனை எழுத்துக்குள் நான் கொண்டு வருகிற உரையாடலில் என்னதான் பழைய மூதாதையர்கள் தூண்டுகோலாக வந்தாலும்  ஒரு நிஜ நபரின் குரல் கேட்காவிட்டால் என் கதையை நான் தொடர்ந்து எழுத முடியாதென்று பல காலமாக  உணர்ந்த விஷயம் இப்போதும் மனதில் பதிந்தது.

என் தம்பி மீண்டும் கனவில் வந்த அன்று தீவில் பேரளவு கடல்கொந்தளித்தது. பல கட்டுமரங்கள் சிதைந்து பதினெட்டுத் திமிங்கலங்கள் செத்து கரை ஒதுங்கிய அன்று பல்வித உற்பாதங்களும் தீவில் ஏற்பட்டபோது எனக்கு ஏனோ அரைதாடியும் சுருட்டை முடியும் கொண்ட இலங்கைக்காரரும்  அதுபோல் கண்திறந்தபடி காட்சி தந்த ஒரு தலைவனும் மனக்கண்ணில் ஒப்புமையில்லா உள்காட்சியாய் தோன்றினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>