எழுதப்பட்டிருந்த  ஜான் ஸ்டுயர்ட்டின் கதை

 

சிறுகதை

 

நமக்குக் கற்பனைவளம் இருக்கிறது என்றால், லண்டனில் 1559-ஆம் ஆண்டில் இருந்த  முக்கியமான நகரங்களில் ஒன்றான ப்ளைமவுத் பற்றிக் கற்பனை செய்யமுடியும்.

ஏனென்றால் கடலுக்குச் சென்று செல்வம் ஈட்டியவனும் ப்ளைமவுத் வாசியுமான பதினாறாம் நூற்றாண்டின் கப்பல் காப்டன்களில் ஒருவன் எனத் தன்னுடைய ஊரில் பெயர்பெற்றிருந்த காப்டன் ஜான் ஸ்டுயர்ட், உலகில் பலப்பல நகரங்களில் வாழ்ந்தாலும் கடவுள் பக்தி கொண்ட தன்னுடைய தாயின் சொல்லைத் தட்ட முடிந்ததில்லை. அதனால் உலகின் எந்தக் கடற்காற்றில் அவனது முகத்தின் தோல் ஸ்பரிசம் கொண்டாலும் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் தாயிடம் வாக்குக் கொடுத்தது போல்  ப்ளைமவுத்திற்கு வந்துவிடுவான். அப்படி வந்து அங்கு உள்ள சர்ச்சில் அவளுடன் சேர்ந்து ஞாயிறு ஒன்றின் காலை வேளையில் பாதிரி கொடுக்கும் திவ்ய நற்கருணையை அவன் புசிக்காமல் இருந்ததில்லை.

ஒரே ஒருமுறை – ஜான் ஸ்டுயர்ட் தன்  தாயிடம் சொன்னதுபோல் லண்டனுக்குப் போகாததற்கு விதியைத் தான் காரணமாகச் சொல்லலாம்;  ஆனால், அந்தக் காலத்தில் ஆக்ஸ்ஃபோர்டில் நாத்திகப் பேராசிரியர் என்று பிரபலமாகியிருந்த மிஸ்டர் மில் என்பவருடைய ஓரிரு சொற்பொழிவுகளைக் கேட்டிருந்த ஜான் ஸ்டுயர்டுக்கு  விதி பற்றிய கருத்தில் உடன்பாடில்லை. அப்படி என்றால் தாய் சொல்வதற்கு எதிர்ப்புக் கூறாமல் சர்ச்சுக்கு, ப்ளைமவுத்தின் பெரிய பங்களாக்கள் (கடந்த 50 ஆண்டுகளில் பழைய, சிறிய, வீடுகள் பெரியவைகளாக விஸ்தரித்துக் கட்டப்பட்டு வருகின்றன) கொண்ட தெருவழி தாயின் கையைப் பற்றியபடி இன்னும் திருமணம் செய்ய நேரமில்லாத ஜான் ஸ்டுயர்ட் போவதற்குக் காரணம், அவனால் தன் தாயிடம் பேராசிரியர் மில்லின் கருத்துக்களைச் சொல்லி அதற்காகத் தாய் முழுந்தாள் போட்டு நெஞ்சில் சிலுவை அடையாளம் செய்து உரக்க அழுவதைப் பார்க்கத் தைரியமில்லாததால் தான். அதனால் ப்ளைமவுத்தில் ஜான் ஸ்டுயர்ட் இருக்கும் எந்த ஞாயிற்றுக்கிழமையும் தாயுடன் சர்ச்சுக்குப் போகாமல் இருந்ததில்லை.

 

ஒரே ஒருமுறை தாயிடம் சொல்லியதுபோல் இங்கிலாந்து திரும்ப முடியாததற்கு அந்த முட்டாள் கோழிக்கோட்டு சமாரினுடைய போர்வீரர்கள் செய்த மடத்தனம்தான் காரணம். எனினும், காப்டன் தாயை நினைத்து மிகவும் வருந்தாததற்குக் காரணமிருந்தது. போனதடவை ஆப்பிரிக்காவிலிருந்து அழைத்து வந்த பன்னிரண்டு வயது அடிமையைத் தாய்க்கு மிகவும் பிடித்துவிட்டது. தன் அடிமையைக் கடவுள் பற்றிய அறிவு இல்லாதவனாகத் தாயால் பார்க்கமுடியாததால் அவனை ஞானஸ்நானம் செய்வித்து கிறிஸ்தவனாக்கியதோடு அவளது பள்ளித் தோழியான மிஸஸ் டங்கனை, அந்த ஒல்லியான தேகமும் ஆறு விரல்களும் கொண்ட யாக்கப்புக்கு ஞானத் தாயாகவும் நியமித்தாள். அன்று சர்ச்சில் பாதிரியார், கோபர்னிக்கஸ் என்பவன் சொல்லுவதுபோல் சூரியனைச் சுற்றித்தான் பூமி சுழல்கிறது என்ற கருத்தை யாரும் நம்பக்கூடாது; அது பைபிளில் இல்லாத கருத்து என்றார்.

கள்ளிக்கோட்டை சமாரினால் சிறைசெய்யப்பட்ட ஜான் ஸ்டுயர்ட்,  கொட்டைப் பாக்கையோ, கிராம்பையோ, ரப்பரையோ, மிளகையோ, பிற கப்பல்காரர்கள் போல் திருடாவிட்டாலும்  அவன் திருட விரும்பிய வேறு ஒரு பொருள்.  அதுபற்றி சக கப்பல் காப்டன்கள் அரசல்புரசலாய் பேசிக் கொண்டது நம்பக்கூடியதாகத் தான் இருந்தது.

ஜான் ஸ்டுயர்ட் நாத்திகத்தில் நம்பிக்கை வைத்ததுபோல் சமாரினுடைய கள்ளக்காதலியாய் அதிக தென்னைமரங்கள் வளர்ந்திருந்த, அரபிக்கடலின் தீவு ஒன்றில் வாழ்ந்து கொண்டிருந்த கறுப்புநிறமுள்ள கிழக்கத்தியப் பெண் மீதும் நம்பிக்கை வைத்திருந்தான் என்பதே அந்தச் சக கப்பல் காப்டன்களின் கருத்து.

எது எப்படியோ, ஜான் ஸ்டுயர்ட் யாருக்கும் தெரியாமல் மூன்றுமாதம் சமாரியனின் சிறையிலிருந்துவிட்டு லண்டனுக்குச் சென்றபோது, இரட்டை நாடியுடன் பெருத்த உடம்பைத் தூக்கிக்கொண்டு நடமாடிய அவனுடைய தாயிடம் தொடர்ந்து பல பொய்களைச் சொல்லவேண்டியதாயிற்று.  சிறுவயது அடிமையான யாக்கப்புடன் அவர்கள் வீட்டின் பல ஆண்டுகளாக நம்பகமான இன்னொரு அடிமை வேலை பார்த்தான். வயது எத்தனை என்று அறியாத, பற்களில் புழுவரிப்பால் அடிக்கடி படுத்துக்கொண்டு அழும், தலைமுடி நரைத்த அடிமையான ராபின்சன் வழக்கம்போல் ஸ்டுயர்ட்டின் பொய்களைக் கண்டுபிடித்து ஸ்டுயர்ட் சார்பில் ஏசுவிடம் மன்னிப்புக் கேட்டான்.

பல பொய்களில் ஒன்று – தாய்க்குப் பிடிக்கும் என்பதால், பல இந்துக்கள் அவர்கள் வழிபடும் பாம்பையும் கல்லையும் விட்டுவிட்டு நிஜமான கடவுளை வழிபடச் செய்வதற்காக ஒரு சர்ச்சைக் கட்டுவதற்கு அரபியக் கடற்கரையோரம் ஒரு ஏக்கர் நிலம் வாங்கிச் சர்ச் ஒன்று கட்டும் பூர்வாங்க வேலைகளைச் செய்துவிட்டு வருவதால் இங்கிலாந்துக்கு வருவதற்குத் தாமதம் ஏற்பட்டது என்பது. அத்துடன் கடற்கொந்தளிப்புப் பற்றியும் அதனால் தன் கப்பலில் ஏற்பட்ட கோளாறுகளை அராபியக் கடற் கொள்ளையர்களுடன் நட்புபாராட்டி  சீர்செய்தது பற்றியும் ஜான் ஸ்டுயர்ட் தடுமாறாமல் – பொய்யென்று தோன்றாதவாறு தாயிடம் அன்பு இழையோடும் குரலில் சொன்னான்.

வயதான, அடிமை ராபின்சன் ஸ்டுயர்டின் தாயின் ஆடையைத் துவைத்தபடி இருந்த சின்னப்பையனான அடிமை யாக்கப்பை ஒருவிதமாய் ஓரக்கண்ணால் பார்த்ததை இப்போது ஸ்டுயர்ட் கடைக்கண்ணால் கவனித்தான். ராபின்சனுக்கு நல்லவர்களின் மனதில் என்ன எண்ணங்கள் வந்து போகும் என்பது தெரியாவிட்டாலும் பொய்யர்கள், கபடதாரிகள், சதிகாரர்கள், பெண்களோடு வெறியுள்ளவர்கள், வீடுகளில் சமையலறையில் உணவுப் பண்டங்களைத் திருடுபவர்களின் மனதில் ஓடும் சிந்தனைகளை அறியும் விசேஷ திறமை இருந்தது.

தன் தந்தையால் விலைக்கு, ஸ்பெயின் கப்பல் காப்டன் ஒருவனிடமிருந்து எண்ணூறு டாலர்கள் கொடுத்து வாங்கிக் கொண்டுவரப்பட்ட ராபின்சனுக்கு அந்தத் திறமை உண்டு என்பதைப் பல ஆண்டுகளாய் அறிந்திருந்தான் ஸ்டுயர்ட். குதிரைக் கொட்டகையில் சாணத்துக்கிடையில் தலையில் வலது கைவைத்து சல்யுட் அடித்தபடி மேலாடையில்லாமல் உடம்பில் சதக்சதக் என்று விழும் பெல்ட் அடிகளைத் தடுத்தபடி ஆங்கிலத்தில் “தாயிடம் சொல்லமாட்டேன் எஜமான்” என்று மீண்டும் மீண்டும் சபதம் செய்ததை நம்பக்கூடாது என்பது ஸ்டுயர்டுக்குத் தெரியும். அந்த அளவு தன் தாய் மீது பற்று அவனுக்கு. அவள் கேட்டால் சொல்லிவிடுவான்.ஆங்காங்கு வெளிப்படும் இரத்தத்தை ராபின்சன் வலது கைபெருவிரலால் துடைத்து துடைத்து, நாவில் ஒற்றியபடி எழும்பும்போது ஸ்டுயர்ட் அகன்றான் அங்கிருந்து.

அப்போது ஸ்டுயர்ட், “பரவாயில்லை உன் ஆங்கிலம் முன்னேற்றம் கண்டுள்ளது, அதனால் இப்போது உன்னை விடுகிறேன்” என்று சொன்னான்.

தூரத்தில் மரத்தில் மேல் ஏறி ஒளிந்து எல்லாவற்றையும் தன் பெரிய கண்களை மரத்தில் சேர்த்து வைத்து உடம்பை மறைத்தபடி பார்த்துக்கொண்டிருந்த இளைய வயது அடிமையான யாக்கப்பை ஸ்டுயர்ட் அப்போது கவனிக்கவில்லை.

தன்மகனை உத்தமனாகக் கிறிஸ்தவ நெறி தவறாமல் வளர்ப்பதற்கு அவனுடைய பத்துவயது வரை உதவிவிட்டுக் காலரா பரவிய தேசம் ஒன்றிலிருந்து உயிரின்றித் திரும்பிய தனது கணவன் மீது மீண்டும் அந்த ஆங்கில மாதுவுக்கு அன்பு  தோன்றியது. அன்பு தோன்றும்போது, தனது பங்களாவின் நடுக்கூடத்தில் கோவாவிலிருந்து கொண்டுவந்த யானைத் தந்தங்களால் ஆன சட்டமிட்டு உயரமாய் மாட்டப்பட்டிருக்கும், சமீபத்தில் பலர் வீடுகளில் காணப்படும், அச்சிட்ட கறுப்பு வெள்ளையாலான ஏசுவின் இருதயம் ஒன்றைப் பார்த்து ஜெபம் செய்ய ஆரம்பித்தாள். தன் தோழர்களுடன் பணம் வைத்துச் சூதாடும் இரகசிய இடத்துக்குப் போகும்போது ஸ்டுயர்ட் தனது ஞானத்தாயிடம் தந்தையான பாதிரி கிறிஸ்டோபரைப் பார்த்து வருவதாய்  பொய்சொல்லிவிட்டுப்  பிளைமவுத்தில் புதிதாய் நடைபாதை போட்டிருந்த ரோட்டில் மிடுக்காக நடந்தான்.

1716-இல் வாழ்ந்த தெரதள் என்ற  இளம் பெண் இங்குக் கதையில் நுழைகிறாள்.

தனது மூதாதையர்களைப் பாத்திரமாக வைத்து எழுதபட்ட,  அவ்வளவு சிறப்பில்லாததும், ஆனால் தன் குடும்பத்தின் முக்கியமான நபர்களைப் பாத்திரமாக வைத்து எழுதப்பட்டதால் தனது குடும்பத்தின் மூத்தவர்களால் அடிக்கடி குறிப்பிடப்படுவதும்  “கார்லாண்ட் ஆஃப் பெர்ள்ஸ்” (முத்துக்களால் ஆன மாலை) என்று அழைக்கப்படுவதுமான நீள்கதையைப் படித்தபோது தெரதள் ஸ்டுயர்ட்டுக்கு வயது 30. அவளுக்கு அப்போது இந்தியாவில் காணப்படும் யானைகளை வந்து பார்க்கும் ஆசை ஏற்பட்டது. தெரதள் ஸ்டுயர்ட் தனது மூதாதையான  ஜான் ஸ்டுயர்ட் என்ற நபரின் நாணயமில்லாத   பாத்திரப்படைப்பு பற்றி நினைத்து வருத்தம் அடைந்தாள் என்பதுதான் வாஸ்தவம்.

ஓரம் கிழிந்திருந்த தாள்களால் ஆன தங்க எழுத்துக்களை அதிகாரத் தலைப்புகளுக்குப் பயன்படுத்தியிருந்த அந்த கதை நூலை நாவல் என்று ஆங்கில ஆசிரியர்கள் கருதாததால் அவர்களின் இலக்கிய வரலாற்றில் சேர்க்கவில்லை என்றறிந்தாள் தெரதள் ஸ்டுயர்ட். எனினும், சுவாரஸ்யமிக்க அந்த நூலின் சுருக்கத்தையாவது 1715-லிருந்து 1718 வரை பிளைமவுத்திலிருந்து வந்த ‘பிளைமவுத் லிட்டரரி கெசட்டீர்’ என்ற இலக்கிய இதழின் நாற்பதாம் தொகுப்பிலும் நாற்பத்தொன்றாம் தொகுப்பிலும் பிற்கால ஆங்கில நடையில் எழுதிப் பிரசுரித்தாள் அவள். அந்தச் சுருக்கம் பற்றியச் செய்திகள் கீழ்வருமாறு:

ஜான் ஸ்டுயர்ட்டின் ஆறு கடல் பயணங்களிலில் இரண்டில் மட்டும் பிரஞ்சு கப்பல்களுடன் குண்டுகள் போட்டு யுத்தம் செய்த தகவல் வருகிறது. அதில் ஒரு பயணத்தின்போது ஒரு இஸ்பானியக் கப்பலை அழித்துவிட்டு நாற்பது பீரங்கிகளிலிருந்து குண்டுகள் போடும் சக்தி வாய்ந்த 800 டன் எடையுள்ள பெரிய ஆங்கிலக்கப்பலில் ஸ்டுயர்ட் பயணம் செய்த விபரம் உள்ளது. ஆறு கடல் பயணங்களில் ஒன்றில் புதிய வகை கறுப்பு மீன் ஒன்றைப் பார்த்தது பற்றிய தகவல்கள் இப்படி பதிவுபெற்றுள்ளன:  அதாவது பதிவின் முடிவில் கறுப்பு மீனுக்கு இரண்டு தலைகளும், ஆறு கண்களும் நான்கு வால்களும் (நான்கும் நான்கு வேறு வேறு வர்ணங்கள் – நான்காம் வால் நம்பமுடியாதபடி மயிலிறகால் ஆனது) உள்ளன. ஒரு பயணத்தில் ராபின்சனை ஸ்டுயர்ட் தனக்கான உதவியாளனாய் அழைத்துச் சென்று திரும்பவும் லண்டனுக்கு அழைத்து வந்தபோது அவனுக்கு இரண்டு மாதங்கள் பிளைமவுத்தின் பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியது வந்தது. அதன் காரணம் கேட்ட ஸ்டுயர்டின் தாய்க்கு அரேபியக் காய்ச்சல் என்று கூறப்பட்டாலும் டாக்டர், துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததே காரணம் என்று  நோய் பற்றிய விபரத்தை எழுதும் மருத்துவமனையின் பெரிய குறிப்பேட்டில் எழுதியிருந்தார். அப்படி எழுதப்பட்ட பக்கங்களின் தாள்களை யாரோ மர்மமாய் கிழிந்தெறிந்த பின்பு – ஸ்டுயர்டின் செல்வாக்கு பிளைமவுத்தில் எப்படிப்பட்டது என்பதை அந்த வீட்டின் இரண்டு அடிமைகளும் ( இருவரும் இப்போது நல்ல கிறிஸ்தவர்களாகி பாதிரியிடம் பாப சங்கீர்த்தனம் செய்யப் பழகியிருந்தனர் )அனுபவ பூர்வமாக அறிந்தனர்.

பாப சங்கீர்த்தனத்தில்  சொல்லப்பட்ட விஷயத்தைப் பாதிரிகள் யாருக்கும் சொல்லக்கூடாது என்றாலும் சர்ச்சுடனும் சர்ச் காரியங்களுடனும் தன்னைப் பல ஆண்டுகளாய் இணைந்திருந்த ஸ்டுயர்ட்டின் தாய் எப்படியோ தனது மகன் தன்னை ஏமாற்றிக் கொண்டிருப்பதை அறிந்து விடுகிறாள். அவள் உலகம் அத்துடன் தகர்ந்தது என்பதை எந்த முட்டாளும் ஊகிக்க முடியும்.  மகன் கப்பலில் காப்டன் இல்லை என்றும் ஒரு சாதாரண ஊழியன் என்றும் அறிந்தபோது இத்தனை நாள் தன்னை ஏமாற்றிய தன் மகனைத் தெய்வக் குற்றம் சும்மாவிடாது, இப்படி ஒரு பாவியாகத் தன்மகன் வளர்ந்துவிட்டானே என்று விசனம் கொண்டாள். அவன், தான் தோற்பதில்லை என்றும் இத்தனை நாள் தான் நம்பிய கடவுள் தன்னைக் கைவிடமாட்டார் என்றும் கருதினாள்.

அன்று இரவு தன் மகன் வந்தபோது மறுநாள் ஞாயிற்றுக்கிழமையில்லை என்றாலும்  தன்னை சர்ச்சுக்கு அழைத்துப் போகுமாறு கூறினாள். ஏதோ வழக்கத்துக்கு மாறான முறையில் பெரிய உடம்புடன் அசையும் தாய் நடந்து கொள்வதை யூகிக்காமல் இருக்கத்தான் ஒன்றும் முட்டாள் இல்லை என்று ஸ்டுயர்ட் தனக்குள்  சொல்லிக்கொண்டான். என்ன நினைத்து என்ன? மிகுந்த பாரம் கொண்ட கோயில் மணியை சர்ச்சில் தொங்கித் தொங்கி வடத்தைப் பிடித்து இழுத்து அடிக்கும் பிளைமவுத் சர்ச்சின் பாதிரியார் அன்று அப்படி அடித்ததும் புறப்படத் தயாரான தாயுடன் ஏதும் அறியாதவன்போல் ஸ்டுயர்ட் கிளம்பினான்.

தூரத்தில்  தனது பக்கத்து வீட்டில் வாழ்ந்து குதிரைகளுக்கு லாடம் அடித்துப் பெரிய பணக்காரனாகி இப்போது இரண்டு அடிமைகளுடன் மதிப்பாக சர்ச்சுக்குப்போகிற பக்கத்து வீட்டுக்காரனைப் பார்த்தாள் ஸ்டுயர்ட்டின் தாய். அவளுடைய இரண்டு அடிமைகளும் வழக்கம் போல் கைளிலும் கால்களிலும் சங்கிலியால் கட்டப்பட்டு மெதுவாய், நடக்கமுடியாமல், சாலை ஓரமாய் நகர்ந்து சென்றனர். கோயிலுக்கு வெளியில் குதிரைகளைப் பிடித்தபடி நிறைய அடிமைகள் நின்றனர். சில அடிமைகள் கைகளில் பைபிள் வைத்தபடி பிச்சை கேட்டுக் கொண்டிருந்தனர்.

“நாமும் நம் அடிமைகளை அதுபோல் காட்சிப்பொருளாக்கியிருக்கலாம் அல்லவா ஸ்டுயர்ட்” என்றபோது தன் தாய் அங்கதமாய் பேசுகிறாள் என்பதை ஸ்டுயர்ட் அறிந்திருக்கவில்லை. ஸ்டுயர்டின் தாய் அக்காலத்தில் இளம்பாதிரிகளிடம் பரவியிருந்த அடிமை முறை எதிர்ப்பு மனோபாவம் கொண்டவளல்ல என்றாலும் அடிமைகளிடம் கருணையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்ற கருத்தைத் தன்னுடன் தன் ஊரில் படித்து இப்போதெல்லாம் பிரபுக்களாலும் கொண்டாடப்படும் எட்மண்ட் ஸ்பென்சர் என்ற எழுத்தாளரிடம் தெரிவித்தபோது அவரும் அவளுடைய கருத்தோடு உடன்படுவதை அக்கம் பக்கம் பார்த்து ரகசியமாய் தெரிவித்தார். “இந்த எழுத்தாளர்களே இப்படிதான், பயந்தாங்கொள்ளிகள்” என்று முணுமுணுத்தாள் அவள்.

சமீபத்தில் பல சர்ச்சுக்களில் நடத்தப்படும் நாடகங்கள் எல்லாம்  புதிதாய் நாடகங்கள் எழுதி நடத்தும் சேக்ஸ்பியர் என்பவருடைய நாடகங்கள் போல் புகழ்பெறவில்லை என்றாலும் இளைஞர்களும் இளம்பெண்களும் தொடர்ந்து நாடகங்களில் நடித்தவண்ணம் இருந்தார்கள். ஸ்பென்சரும் ஸ்டுயர்டின் தாயும் ஒரு அரங்க நாடக நிகழ்ச்சியில் மீண்டும் சந்தித்தபோது ஸ்பென்சர், ஓரளவு காது மந்தமாகப் போக ஆரம்பித்திருக்கும் தன் ஊர்  தோழியிடம் குனிந்து காதுக்கருகில் சென்று சொன்ன இரண்டு விஷயங்களில் ஒன்று லண்டனில் சமீபத்தில் பரவிய ப்ளேக் நோய் எலிகளால் பரவுவதால் எலிகள் முழுதும் கொல்லப்படும் விஷயம். இரண்டாவது 80 ஆயிரம் பேர் அந்த நோயால் எலிஸபெத் ராணியால் ஆளப்படும் இந்த மகோன்னதமான இங்கிலாந்தில் செத்துபோன விஷயம்.

கோயிலுக்குள் நடந்த சம்பவங்கள் முக்கியமானவைகளாய் இருந்தாலும் யாராலும் எதிர்பார்க்கக்கூடியவை அல்ல.

கோயிலில் கிழக்கத்திய தேக்கினால் செய்த பெஞ்சுகளில் மெத்தை தைக்கப்பட்டு முன்பக்கத்தில் போடப்பட்டிருந்த, பிரபுக் குடும்பத்தவர்களுக்கான ஜந்து வரிசை அமர்வுப் பலகைகளுக்கு அடுத்த படியாக ஜான் ஸ்டுயர்டுக்கும் அவன் தாய்க்கும் ஒரு பெஞ்சில் அமர உரிமை இருந்ததற்குக் காரணம் ஜான் ஸ்டுயர்ட் தான் இந்தியாவிலிருந்து, அந்த எல்லா இருக்கைகளுக்கும் பயன்படுத்தப்பட்டிருந்த தேக்குமரப் பலகைகளைக் கொண்டு வந்திருந்தான். பாதிரி ‘மாஸ்’ நிறைவேற்றுவதற்கான ‘ஆல்டர்’ செய்வதற்கும் மலபார் காடுகளிலிருந்து திருடிக் கொண்டு வந்த சந்தன மரம் பயன்பட்டது. இதற்கும் ஜான் ஸ்டுயர்ட்டின் உதவி பாதிரிக்குப் பயன்பட்டிருந்தது.

பாதிரியார் சர்ச்சின் வலது புறத்தில் நடுப்பகுதியில் சுவருடன் சுமார் 10 அடி உயரத்துக்கு எழுப்பப்பட்ட கைவேலைப்பாடுடன் கூடிய கார்வ் செய்யப்பட்ட, மேடையில் நின்று பிரசங்கித்தார். உலக நிகழ்ச்சிகளை அடிப்படையாய் வைத்துப் பிரசங்கம் செய்யும் வழக்கம் கொண்ட பாதிரி அன்றைய பிரசங்கத்தில் முகலாய ராஜ குடும்பத்தைச் சார்ந்த அக்பர் இந்துக்களுடன் சமீபத்தில் சமரசம் செய்துகொண்டது எவ்வளவு தவறான செயல் என்று கூறினார். அத்துடன் இன்னொரு தகவலும் தந்தார். “கேளுங்கள் இங்கிலாந்து ராணியின் பிரஜைகளே தலைக்கோட்டையில் ஒரு வாரத்துக்கு முன்பு நடந்த யுத்தத்தில் டெக்கானை ஆண்டுக்கொண்டிருந்த சுல்தான் எப்பேர்பட்ட விஜயநகர மன்னனைத் தோற்கடித்திருக்கிறான் தெரியுமா” என்று கேட்டார்.

அந்த நேரத்தில் ஜான் ஸ்டுயர்ட்டின் தாய் எதிர்பாராத விதமாக எழுந்து நின்றபோது ஆடிய தனது உடலை அமர்நதிருந்த பெஞ்சின் வெல்வெட் துணிபோர்த்தப்படாத கைப்பிடியில் பிடித்து சுதாரித்துக்கொண்டாள். பின்பு கத்தினாள்.

“எல்லோரும் கேளுங்கள், ஜான் ஸ்டுயர்ட் என்ற என்மகன் இனிமேல் என் மகன் அல்ல; கப்பலில் காப்டன் அல்ல அவன். காப்டன் என்று பொய் சொல்லி என்னை ஏமாற்றினான். அதுபோல் கிழக்கே இருக்கும் மலபாரை ஆண்டு கொண்டிருந்த சமாரினின் கள்ளக்காதலியோடு நம் மதக்கொள்கைகளுக்கு விரோதமாகக் குடும்ப வாழ்க்கை நடத்தியவன். இவன் பாவி. இவனை உங்கள் சமூகத்தில் நான் என் மகன் இல்லை என்று பிரகடனம் செய்கிறேன். மேலும் ஒன்று சொல்கிறேன். இவன் தெய்வ நம்பிக்கையும் இல்லாதவன்; இவன் சர்ச்சுக்கு வருவது வெறும் நடிப்பு”.

அவள் பேசி முடிக்குமுன்பு அவள் வாயைத் தன் கைகளால் அடைக்க முயன்ற ஜான் ஸ்டுயர்டைத் தனது இரு கைகளாலும் இடது பக்கமும் வலது பக்கமும் பெரும் ஆங்காரத்துடன் அறைய ஆரம்பித்தாள் தாய்.

சற்றுநேரம் சர்ச்சில் ஒரே மௌனம். அப்போது கோயிலின் மூன்று பக்கங்களிலும் இருந்த ஆறு கதவுகளுக்கும் வெளியில் சலசல என்று பேசிய படியே பலிப்பூசையைப் பார்த்துக் கொண்டிருந்த அடிமைகள் கூட பேசுவதை நிறுத்தி ஜான் ஸ்டுயர்டின் தாய் திடீரென்று எல்லோருக்கும் சொன்ன செய்தியால் திக்பிரமை பிடித்தவர்களாய் மௌனமானார்கள். ஏது செய்வது என அறியாமல் ஒரு அடிமை இன்னொரு அடிமையை மாறிமாறி பார்த்தபடி இருந்தான்.

ஜான் ஸ்டுயர்ட் மட்டும்தான் என்ன செய்யவேண்டும் என்று தெளிவாய் அறிந்தவன் போல் தன் தாயை இழுத்தபடி ஒரு வாசல் வழி வெளியேற முயன்றான். கால்களால் அங்குக் கூட்டமாய் இருந்த அடிமைகளை உதைத்து வழி உண்டு பண்ணி விட்டு வெளியேறும்போது “ஜான்……. …. ” என்று புல்பட்டிலிருந்து தன் கணீரென்ற குரலில் தன்னைக் கண்டிக்கும் பாதிரியின் குரல் விழுந்தது ஸ்டுயர்ட்டின் காதில். ஞாபகம் வந்தவன் போல் தாயைத் தரையில் தள்ளிவிட்டுப் பாதிரிக்கும் அன்று சர்ச்சுக்கு வந்தவர்களுக்கும் கேட்கும்படி கத்தினான் ஜான் ஸ்டுயர்ட்.

“என் தாய்க்கு நேற்றுக் காலையிலிருந்து பேய் பிடித்துவிட்டது. என்னிடம் நிரூபணம் இருக்கிறது. இதோ பாருங்கள் நம் புனித ஜெபமாலையை வெறுக்கிறாள்” என்று தன் கோட்டிலிருந்த ஜெபமாலையை அவள் முகத்துக்கெதிரில் அவன் சிரித்தபடியே ஆட்ட அவள் அதனை உதறினாள். ஒருவருக்குப் பேய் பிடித்திருப்பது என்பது சாத்தானின் ஏவலால் வரும் நோய் என்ற கருத்துக் கொண்டிருந்த அந்த கிறிஸ்தவ மக்கள் அதனைக்கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தார்கள். எல்லோரும் ஜான் ஸ்டுயர்டு சொன்னதை நம்பகூடிய முறையில் தெளிவாகக் கூறினான் அவன். எனினும், அவர்களில் பலர் அவன் சொன்னதை நம்பவில்லை என்பது சர்ச்சில் எழுந்த கசமுசன்ற சப்தத்தால் தெளிவானது.

ப்ளைமவுத் சர்ச்சில் போனவாரம்தான் சாத்தானின் ஏவலால் திருஇருதயப் படத்தை நெருப்பிட்ட ஒரு இளம்பெண்ணை சர்ச் உறுப்பினர்கள் ‘ஓக்’ மரத்தில் கட்டி நெருப்பிட்டுக் கொன்றார்கள். சாவதற்கு முன்பு அந்த 26-வயது பெண் புனித நீரைத் தன் மீது தெளித்த பாதிரியைப் பார்த்து வெறிவந்தவள்போல் கண்களைப் பயங்கரமாய் சுழற்றி,  விலங்கு பூட்டிய இருகைகளாலும் தன் தலையில்  அடித்துத் தன் ஆடையைக் கிழித்தெறிந்து அட்டகாசம் செய்தாள். சற்று நேரத்தில் நெருப்பு திகுதிகு என்று பற்றி எரிய ஆரம்பித்தபோது பேய்பிடித்தவர்களை எரிக்கும்போது இறுதிவரை யாரும் நிற்கக்கூடாதென்பதால் ப்ளைமவுத்தின் மக்கள் கலைந்து சென்றனர். ஆனால் இருள் மூளும் நேரம் வரை மரம் ஒன்றின் மேலிருந்து அப்பெண் எரிவதை ஒரு கறுப்பு அடிமை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான். அவன் வேறு யாருமல்ல ஆறு விரல் கொண்ட யாக்கப்தான்.

ஏற்கனவே எழுதப்பட்டிருக்கிற அந்தக் கதையில் அந்தக் கால வாள்சண்டைகளும் குதிரை ஓட்டும் முறையைப் பற்றியும் பல தகவல்கள் வந்தாலும் தெரதள் ஸ்டுயர்ட் தன் குடும்பத்தின்  அந்நிகழ்ச்சிகளைத் தன்காலத்தில் யாரும்  வாசிக்கும் தகுதி படைத்தவைகளாய் கருதாததால்  சுருக்கியும்தொகுத்தும் கற்பனையைச்சேர்த்தும் எழுதிய அந்தக் கதையில் சேர்க்கவில்லை.

எனினும் ஜான் ஸ்டுயர்ட் தன் தாயை உண்மையிலேயே சாத்தானின் ஏவல்களைச் செய்வதற்கு ஆயத்தமான ஒரு பேய்பிடித்தவள் என்று நிரூபிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டபோது அவனைப் போலவே தங்கள் தங்கள் வீடுகளில் தங்களைக் காப்டன் என்று பொய் சொல்லிக் கடல்பயணம் செய்த பல நண்பர்கள் ( அவர்கள் எதைக் கற்காவிட்டாலும் எல்லோரும் நல்ல முறையில், அக்காலத்தில் சாதாரண மக்களிடமும் பரவியதுபோல் வாள்வீசக் கற்றுக் கொண்டவர்கள் )உதவினார்கள்.

பாதிரி விசாரித்தபோது அப்படிப்பட்ட ஒரு நண்பன் ( அவன் இங்கிலாந்து அரசியைப் பற்றி எழுதப்பட்ட கவிதைப் புத்தகம் விற்பவரின் மகன் ) இரவில் ஒருநாள் தான் ஜான் ஸ்டுயர்ட்டின் வீட்டுக்குத் தன் குதிரை ஒன்றில் ஏறி அவனை இரவு நடக்கும் நாடகத்துக்கு அழைக்கப்போனபோது வீட்டில் யாரும் இல்லாததால் பின்புறம் வாசல் திறந்து கிடந்ததைப் பார்த்து  உள்ளே நுழைந்தபோது ஸ்டுயர்டின் தாய் தன் தலையிலிருந்த ஆணியை உருவிக் கொண்டிருந்ததைத் தான் கண்ணால் கண்டதை எல்லோர் முன்னிலையிலும் கூறிய செய்தி தெரதள்ஸ்டுயர்ட்  பாதுகாக்கத்தக்க  ஒரு சம்பவம் என்று கருதி நீண்ட கதை யின் சுருக்கத்தில்  தன்து கால வாசகர்களுக்காகக் கொடுத்திருந்தாள். ஸ்டுயர்டின் தாய் அவளின் விரல்களை நீட்டி கணப்பு அறையில் இருந்த விறகு கரித்துண்டுகளைக் கையில் எடுத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்த செயல் அதிகம் முக்கியத்துவம்  ஏதும்  கொடுக்காமல் மூலநூலில் இருந்தது போலவே மறுஉருவாக்கம் செய்யப்பட்டக் கதையிலும் இருந்தது. ஜேக்கப்பின் ஞானத்தாயும் ஸ்டுயர்ட்டின் தாயின்  தோழியுமான திருமதி டங்கன் பெயர் அச்செய்தி எழுதப்பட்டிருந்த பக்கங்களில் சாட்சிகளின் இரண்டு பெயர்களில் ஒன்றாய் சேர்க்கப்பட்டிருந்ததை தெரதள் யோசனையுடன் கவனித்தாள். நூலில் அக்காலத்தில் ஜான் ஸ்டுயர்ட் மேற்குத் தீவுகளுக்குப் போய் வந்தபோது மிகெல் சர்வான்டிஸ் என்ற இஸ்பானிய வீரன் ஒருவனுடன் நட்பு ஏற்பட்டதால் சர்வாண்டிஸ் எழுத ஆரம்பித்திருந்த சாகஸக் கதைகளின் பாணியில் தானும் சில தகவல்களை எழுதியிருந்ததை ஏற்கனவே அறிந்த   இலக்கிய அறிஞர்கள் சிலர் சொன்னபோது தெரதள் அங்கீகரித்தாள். தன்னுடைய காலத்தில் பல மொழிகளில் – இத்தாலியன், ஆங்கிலம், டானிஷ் போன்றவற்றில் மொழிபெயர்க்கப்பட்ட செர்வான்டிஸின் கதை நூலான ‘டான்குவிக்ஸாட்டே’யை எழுதிய ஆசிரியனோடு தனது குடும்பத்தில் ஒருவருக்குத் தொடர்பிருந்திருந்ததென்ற உண்மை தெரதளுக்குப் பெருமை தந்தது. அதன் மேலோட்டமான தழுவல் தான் தன் குடும்பக் கதை என்றும் அறிந்தாள்.அக்கதையை சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்குப் பிறகு மறு உருவாக்கம் செய்து “பிளைமௌத் லிட்டரரி கெசட்டீரில்” வெளியிடுவது பெருமைக்குரிய செயல் என்றே கருதினாள்.

தன் மூதாதையரான ஜான் ஸ்டுயர்ட் ஸ்பானிய நாவலாசிரியன் செர்வான்டிஸின் தாய்மொழியான ஸ்பானிஷ் மொழியை அறிந்திருந்ததையும் தெரதள் பதிவு செய்தாள்.

தெரதள் ஸ்டுயர்ட் மறுபதிவு செய்யாதது என்று கூறத்தக்கவை பிளைமவுத்தில் முதன்முதலாக அந்த ஊரின் பிரபுக் குடும்பத்தவர்கள் விளையாடிய கிரிக்கட்டும் அவளது குடும்பத்தினர் நடத்திய கோழிச்சண்டையும்.

அத்துடன் அவள் வேண்டுமென்றே தவிர்த்த நிகழ்ச்சி என்று கூறவேண்டுமெனில் ப்ளைமவுத் சர்ச்சின் முக்கியமான பாதிரிக்கு துணைவரான இன்னொரு பாதிரி ஒருவர் – அவர் இளைஞர் – ஜான் ஸ்டுயர்ட்டுடன் குதிரைச் சவாரி செய்து சாலையில் போட்டியிட்டு ஜெயித்ததைப் பொறுத்துக் கொள்ளாத ஜான் ஸ்டுயர்ட் அவரை ஒருநாள் கொன்று விடுவதாக மிரட்டி விட்டுப் போன செய்தி. அச்செய்தி எங்கும் பரவியபின்பு  ப்ளைமவுத் சர்ச்சின் முக்கிய பாதிரி ஜான் ஸ்டுயர்ட் அவன் தாயைப் பற்றிப் பரப்பிய, அவள் பேய் பிடித்தவள் என்ற செய்தியைச் சந்தேகப்பட ஆரம்பித்தார்.

அதன் பின்பு தெரதள் எழுதிய நீள் கதையில் தெளிவில்லாத சம்பவங்களும், தொடர்ச்சியில்லாமல் அடிக்கடி வந்த வாள்சண்டைகளும் வாள் சண்டை செய்த நபர்களின் குடும்ப விபரங்களும் குடும்பங்களின் மூதாதையர்களின் விபரங்களும் காணப்பட்டன.

தெரதளுக்குப் பயன் பட்ட மூலநூலின் சில அதிகாரங்களில் புதியதாய் பரவ ஆரம்பித்த புரொஸ்டஸ்டான்ட் மதம் கூறும் 95 கருத்துக்களில் முக்கியமானவை எழுதப்பட்டிருந்தன. அவ்வளவு சிறப்பில்லாதவை என்று சொல்லத்தக்க  சில கதைப்பகுதிகளில் இங்கிலாந்தில் பரவும் அம்மை நோய்க்கு மருந்தாகக் கப்பலில் இந்தியா போகிற வெள்ளைக்காரர்கள் கொண்டு வந்த குழிகைகளும் வேப்பிலை வைத்தியமும் தெளிவாக எழுதப்பட்டிருந்தன. இவை ஏதும் தெரதளைக் கவரவில்லை.

மூலநூலில், மேற்கிந்திய தீவில் பணம் திருடியதற்காக மிகைல் செர்வான்டிஸோடு சேர்த்து ஜான் ஸ்டுயர்டும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட செய்தி காணப்பட்டாலும் உலகப் புகழ்பெற்ற மிகைல் செல்வான்டிஸின் பெயரைப் பொறாமையால், கெடுக்க அயோக்கியன் ஜான் ஸ்டுயர்ட் விழைந்ததால் தான் சிறை சென்ற விஷயத்தை செர்வான்டஸுடன் பொய்யாய் இணைத்துள்ளான் என நூலில் ஓரத்தில் மயிலிறகுப் பேனாவால் யாரோ எழுதியிருந்தார்கள். மேலும், அந்தக் கதை நூலின் பக்கங்கள் பலதும் நினைவில் நிற்காத விபரத் தொகுப்புக்கள் கொண்டிருந்தன. தேவதூதர்களின் ஓவியங்களை எப்படித் தீட்ட வேண்டும் என்று யாரோ ஒரு ஓவியப் பேராசிரியர் இந்தக் கதை நூலில் இடைச்செருகலாய்  எழுதிவிட்டார் என்று கூறுமளவு அத்தகவல்கள் எழுதிக் குவிக்கப்பட்ட பக்கங்களைத் தாண்டி  தெரதள் படித்தபோது பின்வரும் கதை காணப்பட்டது:

பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒருமுறை மேற்கிந்தியத் தீவுகளிலிருந்து ஸ்டூயர்ட் தனது முதிய அடிமையான ராபின்சன் இல்லாமல் தனியாய் வீடு திரும்பியபோது, இளம் அடிமையான யாக்கப் (அப்போது 28 வயது ) தன் ஆறாம் விரலைப் பார்த்தபடி வாசலில் நின்று வரவேற்றான்.

தெரதளின் இரண்டு நாள் தூக்கமின்மைக்கான தகவல் இது:

ஜான் ஸ்டுயர்ட் சர்ச் பாதிரியுடன் வாள்சண்டை செய்ததால் ஏற்பட்ட ஊமைக் காயமே  தன் இறுதியை விரைவில் கொண்டுவரப்போகிறது என்று நினைத்தான். அவனது 69-ஆம் வயதில் வந்த முடிவு பற்றித் தெளிவாய் யாருக்கும் தெரியாவிட்டாலும் யாக்கப் அவ்விஷயம் பற்றித் தெரிந்தவன்போல் நடுக்கூடத்தில் செத்துக் கொண்டிருந்த ஜான் ஸ்டுயர்ட்டைப் பார்த்தான். அடிமையான இளம்  யாக்கப் தன்னைத் தாய்போல் வளர்த்த ஸ்டுயர்டின் தாயின் நினைவால் யாருக்கும் தெரியாமல் இவ்வளவு காலமாய் சித்திரவதைப்பட்டான்.  வெளியில் சீர்திருத்தக் கிறித்தவர்கள் கத்தோலிக்க மதகுருவான போப்பைப் பற்றிக் கீழ்த்தரமாக பிரச்சாரம் செய்து பைபிளை வாசித்து இசைக்கருவிகள் இசைத்த வண்ணம் சென்ற சந்தடி யாக்கோபின் காதில் விழுந்தது.

ஜான் ஸ்டுயர்ட் தன் தொண்டைக்குழியில் சர்ச் பாதிரியின் வாள் பாய்ந்தது என்று எல்லோரையும் நம்பவைத்தான். தன் கெட்ட நண்பர்கள் பலரும் சேர்ந்து தன் தாயைப் பேய்பிடித்தவள் என்று கூறி எரித்துக் கொன்றபின் தன்னுடன் பலர் நட்பு பாராட்டுவதில்லை என்பதை அவன் அறிந்தான். பாப்லர் மரத்தினடியில், தூரத்தில் கிராமத்தவர்கள் குஸ்திபோட்டுக் கொண்டிருக்கும் களேபரத்துக்கிடையில் தான் சர்ச் பாதிரியுடன் வாள்சண்டை செய்த வாள் தொங்கிக் கொண்டிருந்த மூலையையே பார்த்தபடி கிடந்தான் ஜான் ஸ்டுயர்ட். அவன் எதிர்பார்த்த மரணம் விரைவில்  வந்தது. ஒருநாள் 24 தூண்களுள்ள கூரையுடன் சிறிய ஆம்பித்தியேட்டரில் வீட்டிலிருந்து ஒரு பர்லாங் தூரத்தில் பிரபுகள் நாடகம் பார்த்துக் கொண்டிருக்கையில் ஸ்டுயர்ட் தூங்கும் நேரம் பார்த்து அவன் குரல்வளையில் அழுத்திக் கொன்ற கொடூரமான தனது ஆறாம் விரலைப் பார்த்தபடி நின்ற அடிமை யாக்கப், எஜமானன் ஸ்டுயர்ட் நினைவுக்குள் ஏன் தன் ஆறாம் விரல் ஒரு வாள்முனையாய் தெரிகிறதென்பது புரியாமல் ஸ்டுயர்டின் சாவுக்காகக் காத்திருந்தான்.

நேரடியாக எழுதப்படாமல் இருந்த இந்தச் செய்திகளைப் பல பக்கங்களில் படித்துவிட்டு பல நிகழ்ச்சிகளை நிராகரித்தாள் தெரதாள். கதையின் முடிவைச் சரியானது தானா என்ற நிச்சயமில்லாமல் ஒருவாறாகத் தொகுத்துக் கொண்ட தெரதள் ஸ்டுயர்ட், தன் குடும்பத்தின் உறுப்பினர்கள் பற்றிய கொடூரமும் பயங்கரமும் கொண்ட துயர சம்பவங்கள் தன் மனதைப் பாதிக்ககூடாதென்று எண்ணினாள். அதனால் வேறுவழியின்றிப்  பல ஆண்டுகளாய் கதைகள் கேட்டுக் கற்பனை செய்து வைத்திருந்த இந்தியக் காடுகளில் மதர்ப்புடன் அலையும் யானைகளையும் அந்த யானைகளைப் பிடித்து அடக்கித் தம் மாளிகைகளுக்குக் கொண்டுவருவதில் மகிழும் ராஜாக்களையும் நேரில் பார்க்க அடுத்த மாதம் இந்தியா செல்லும் கப்பல் ஒன்றில் பயணம் மேற்கொள்ள எத்தனித்தாள்.அதற்கு முன்பு தான் மூலநூலின் அடிப்படையில் எழுதிய கதையின்  இரண்டு படிகளை மறக்காமல் தான் பயணம் செய்யும் கப்பலில் எடுத்துச் சென்ற அந்த நாள் 1776 ஆம் ஆண்டில் ஜுன் மாதம் முதல்தேதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>