தமிழவனின் புதிய புனைவு 2

ஆடிப்பாவை போல

(உரையாடல் – 2)

 

கே. சேகர் மற்றும் தமிழவன் ‘ஆடிப்பாவை போல’ நாவல் பற்றி இரண்டாவது உரையாடல் .

கேள்வி:

இது, நாம் இந்த நாவல் பற்றி நடத்தும் இரண்டாவது உரையாடல்.

சமீபத்திய விமரிசனத்தில் பிரதி என்று பயன் படுத்துகிறார்கள்.

பிரதி   (text)யாக ஒரு எழுத்தைப் பார்ப்பதற்கும் அழகியலாகப்

பார்ப்பதற்கும் என்ன வித்தியாசம்?

 

பதில்:    பிரதி என்றால் பல்வேறு செய்திகள் போகும் தந்திக் கம்பி எனலாம். வாழ்த்துச்

செய்தியும் போகும். மரண அறிவிப்பும் போகும். நாவல் பிரதியாகப் பார்க்கப்

படுகையில் அதன் அழகியல் தள்ளிப் போடப்படுகிறது. அழகியலாகப் பார்க்க

படுகையில் அதன் பிரதியியல் (அதாவது மொழி, வடிவம், செய்தி, உத்தி என்று

எந்திரத்தின் பல பாகங்கள் போல) தன்மைத் தள்ளிப் போடப்படுகிறது.

 

கேள்வி: தள்ளிப்போடப்படுகிறது. அதாவது தற்காலிகமாக. நிரந்தரமாக அல்ல.

 

பதில்:    ஆமா. எனவே, நிரந்தரமானதும் தற்காலிகமானதும் மாறிமாறி செயல்படுகிறது

இதுபோன்ற ஒரு நவீன நாவலில்.

 

கேள்வி: இது நவீன நாவலின் தத்துவம். இந்தத் தத்துவம் முன்பு எழுதிய நாவல்

களுக்கும் பொருந்துமா?

 

பதில்:    பொருந்தும். இந்த முறையில் எந்தக் கால நாவலையும் பார்க்கலாம். இப்படி,

அதாவது மரபாக எழுதப்பட்ட எந்த நாவலையும் பார்க்கலாம்.

 

கேள்வி: நீங்கள் முன் எழுதிய நாவல்கள் ஒவ்வொன்றும் ஒரு புதுப்பாதையைச் சுட்டும்.

இதில் ஒரு மரபான நாவலுக்குள் இரண்டு குறுநாவல்கள் அடக்கப்பட்டிருப்பது

போன்ற வடிவம் உள்ளது. ஒரு தாய்க்கு இரண்டு சேய்கள். ஒரு சேய், அகம்

வாசிப்புக்கு அகப்படுகிறது. இரண்டாவது சேய், புறம் வாசிப்புக்கு அகப்படு

கிறது. மொத்த நாவலும் தனக்குள்தாயையும்சேய்களையும் கொண்டு,

ஒருவித family resemblance  என்று சொல்வார்களே

அப்படி அமைகிறது. மொத்தத்தைப் பார்க்கும்போது அழகியல் தெரியும்.

சேய்கள் என்னும் பகுதியைப் பார்த்து மொத்தத்தை மனதில் கற்பனை செய்

கிறோம். இந்த நாவலில் சேயும் தாயும் இரண்டும், பிரிந்தும் சேர்ந்தும்,

பிரிந்தும் சேர்ந்தும்……

 

இது ஒரு சதாஇயக்கம்.சரிதானே?

 

பதில்:    பௌத்தர்கள் உலகமும் வாழ்வும் சதாஇயக்கத்தில் இருக்கிறது என்று சொல்

கிறார்கள். அதை க்ஷணிகவாதம் என்பார்கள்.நம் வாழ்வு என்பது ஒரு க்ஷண

நேர எதார்த்தம். முன்பு இருந்தது சற்றுநேரத்தில் இல்லை. மாறிவிடுகிறது.

 

கேள்வி: இப்போது பேசுவதற்கும் முன்பு உரையாடல் ஒன்றில் பேசியதற்கும்

தொடர்பு உள்ளது.இதைத்தான் நம்முதல் உரையாடலில் the politics of the

part and the whole  என்று பேசினோம் அல்லவா?

 

பதில்:    ஆமா,தமிழில் நிரந்தரப்படுத்தி இலக்கியத்தைப்பேசுவார்கள்.

ஒரு  நாவலையாகட்டும் கவிதையாகட்டும் அதன் சரீரம் நிரந்தரமானது

என்று கருதுகிறார்கள்.அத்தகைய கருத்துக்களுக்கு இந்த

நாவலின் அமைப்பு ஒரு மாற்றை முன்வைக்கிறது என்று கருதலாம்.

 

கேள்வி: இன்றைய திராவிட அரசியலின் தோற்றம் பற்றியது இந்த நாவல். இந்தவித

அணுகல் எப்படி அந்த உள்ளடக்கத்தை அறிய உதவுகிறது?

 

பதில்:    இன்று திராவிட அரசியல் தேவையில்லை என்று சிலர் பேசவந்துள்ளனர்.

அந்தச் சூழலில் திராவிட அரசியலை deconstruct செய்து, அதனை இந்த

நாவல் துண்டு துண்டாக்கிப் பார்க்கவேண்டும் என

வேண்டுகோள் வைக்கிறது.

கெலடஸ்கோப் வழிபார்க்கும்போது துண்டுகள் பல்வேறு சாத்தியப்பாடுகள்

வழி ஒட்டுமே அதுபோல இந்நாவல் வேலை செய்கிறது. மேலும், தமிழ்க்

குடும்பத்தின் வழி – தமிழ் ஆண், பெண் வாழ்முறைவழி, இந்தத் ‘துண்டு

படுத்துதல் – முழுமைப்படுத்துதல்’ பார்வை செயல்படுகிறது.

 

கேள்வி: மரபான முறையில் மட்டும் இந்த நாவலை வாசிக்கலாமே. இந்த வாசகர் வழி

காட்டல் இல்லாமலே வாசிக்கலாமே என்று சிலர் கூறுவது

பற்றி என்னசொல்கிறீர்கள்?

 

பதில்:    இல்லை; இல்லை. வாசகர்கள் பழைய மாதிரியில் வாசிக்கவும் முழுஉரிமை

உண்டு. புதிய மாதிரியிலும் வாசிக்கவும் முழுஉரிமை உண்டு. இந்த choice

(தேர்ந்தெடுக்கும் உரிமை)-க்கான உரிமையை யாரும் தடுக்கக்கூடாது என்பது

தான் இந்த நாவல் விரும்பும் சுதந்திரம்.

 

கேள்வி: இன்று பி.ஜே.பி. வந்தபிறகு சுதந்திரம் பறிக்கப்படும் ஆபத்தைப் பற்றி நாவல்

தன் வடிவம் மூலம் பேசுகிறது எனலாமா?

 

பதில்:    நாவல் தன் வடிவமைப்பின் மூலம் பல செய்திகளைச் சொல்கிறது. பி.ஜே.பி

அரசியலில் உள்ள ஆபத்து மனித இயல்புக்கு எதிரானதாகும்போது இந்த

நாவலின் நிரந்தர ‘கெலடெஸ்கோப்’ விளையாட்டு அதனை எதிர்க்கிறது.

எதிர்காலத்தில் வரும் பிற ஃபாஸிஸ்டு அரசியல் போக்குகளையும் இந்த வடிவ

மாற்ற விளையாட்டு எதிர்க்கும்.

 

கேள்வி: இது பின்நவீனத்துவம் அறிமுகப்படுத்திய போக்கைச் சார்ந்த நாவலா?

 

பதில்:    தன்னைப் பார்த்தவாறு பிறவற்றையும் பார்ப்பது என்று ஒரு தன்மை பின்

நவீனத்துவ நாவல்களில் உண்டு. Self Reflexive என்பார்கள். ஆசிரியன்

இடையில் வந்து பேசுவது அல்லது வாசகரை விளித்துக்கூறுவது. பல

சமீபத்திய ஆங்கில நாவல்களில் இதுபோல வரும். இது கதையை இடையில்

புகுந்து வழிமாற்றும் விதமான சுயப்பார்வை எனலாம். அது இங்கும் செயல்

படுவதால் இது பின்நவீனத்துவ மரபில் வந்தது எனலாம். அப்படி மிகப்பல

மாதிரிகள் உண்டு.

 

கேள்வி: மீண்டும் நாம் பேசி வந்த விஷயத்துக்குப் போவோம். திராவிட அரசியல் பற்றி.

 

பதில்:    திராவிட அரசியலும் தமிழ்க் குடும்பமும் பின்னிப்பிணைந்தவை. நாவலில்

இரண்டு பலவித குடும்பமாதிரிகள் வருகின்றன. ஒவ்வொன்றும்

தமிழ் அரசியல் உடன் எப்படி உறவு  ஏற்படுத்துகின்றன என்பது

முக்கியம். பின்னால் இருந்து இயக்கும் ஒரு force (‘உந்துவேகம்’)மரபு

என அழைக்கப்படுகிறது. இது நவீன

பாராளுமன்ற அரசியலுக்கு ஒத்துப்போவதில்லை. மலையாள பட்டரின்

மகனுக்குக் குடும்பம் இல்லை. அந்தப் பெண் போன்ற முகம் கொண்டவன்

கையில் துப்பாக்கி மறைத்து வைத்திருக்கிறான்.இந்த நாவல் சிறுசிறுகதைகள்,

சம்பவங்கள் வழி சமூகக் கதையாடலைத் தருகின்றது. சமூகக் கதையாடல்

என்பது நம் சமூக வரலாறு.நாவல் வ்ரலாறு இல்லாமல் எழுதப்பட

முடியாது என்பார் மார்க்சியவிமரிசகர் ஜார்ஜ்லூக்காச்.(George Lucaks).

திராவிட வரலாறு கால்டுவெல் எழுதிய ஒரு புத்தகத்தின் தாக்கம்.அவர்

திராவிட மொழிகள் சமஸ்கிருதத்திலிருந்து வேறுபட்டது என்றார். அதன் அடிப்

படையில் ஒரு அடையாளத்தை உருவாக்கி, இந்தி என்னும் ஏக

அடையாள எதிர்ப்பைக்குடும்பம்வழி அணுகுகிறதுநாவல்.தமிழை

மையப்படுத்திய 1965-இல் நடந்த அரசியல், வின்சென்ட் – காந்திமதி என்ற

இருவரின் சேர்தல் – பிரிதல் – சேர்தல் வழி, நாவல் வடிவம் பெறுகிறது. காந்தி

மதியின் தந்தை திராவிட அரசியல் ஏதும் செய்வதில்லை. அவர் – மகள் நுட்ப

மான உறவு ப்ராய்டிய இடிப்பஸ் காம்ப்ளக்ஸா தெரியவில்லை. அதைவிட

சிக்கலானது. அது மையப்பாத்திரங்கள் பிரிய (அகலுதல்) காரணமாகிறது.

பிரிதல் என்பது அவள் (காந்திமதி) திடீரென்று நாவலின் space-இல்

காணாமல் ஆகிறாள். இறுதியில் ஆம்ஸ்டர்டாமின் காட்சி தரும்போது அவள்

வருகை நாவலை முடிக்கத் தேவைப்படுகிறது. அங்கு கதாநாயகன்

(வின்சென்ட்) இரண்டு பிரச்சனைகளைக் கூறி அவற்றின் வழி தான் maturity

(முதிர்ச்சியடைதல்) அடைந்ததை அவளுக்குச் சொல்கிறான்: அவை 1. ஈழத்து

க்கு அவன் போதல் 2. அவன் நேரடியாய் தலித் இளைஞன் சந்தோஷம்

எரிக்கப்படுவதைச் சொல்லுதல். ஈழப்பிரச்சனையின் ராணுவத்தன்மை,

தமிழ்க்குடும்பத்திலிருந்து வந்தது. தமிழ்க்குடும்பம் – ஈழம் – தலித்

பிரச்சனை தமிழ்ச்சமூகம் சுற்றிச் சுழலும் மையஅச்சுகள். அகம் மற்றும்

புறம் என்பவை மாறிமாறி வந்து கொண்டே   தான் வரும். வீட்டுக்

குள்ளே இருந்தால் அகம். வீட்டுக்கு

வெளியே வந்தால் புறம். இது ஒரு பயங்கரமான பாகுபாடற்ற பாகுபாடு. சங்க

இலக்கியத்தின் மையத்துக்குள் இந்த நாவல் மீண்டும் பாய்கிறது. அல்லது

சங்கப்பாடல்களுக்குள்ளிருந்து பாய்கிறது.

 

கேள்வி: பாகுபாடற்ற பாகுபாடு..இன்னும் பல விஷயங்கள் உள்ளன.

 

பதில்:    ஆமா. இன்னொரு முறை அவற்றை அலசலாம்.

தமிழவன் புது புனைவு

        ஆடிப்பாவைபோலநாவல்

              (ஓர் உரையாடல்)

 

(கே. சேகர் மற்றும் தமிழவன்,ஆடிப்பாவை போலநாவல் பற்றி நடத்திய

                                        உரையாடல்)

 

கேள்வி:          உங்கள் ‘ஆடிப்பாவைபோல’ நாவல்  பற்றிய வாசகர்களின் மதிப்பீடுகள்

எப்படி உள்ளன?

பதில்:   பலர் நல்லவிதமாகப் பேசுகிறார்கள். சாதாரண  வாசகர்கள் தொலை

பேசியில்  அதுபற்றிப்பேச அழைக்கிறார்கள்.

அதாவது அகம்சார் இயல்களையும்(ஒன்று,மூன்று என்று) புறம்

சார்  இயல்களையும் தனித்தனியே

வாசித்தவர்கள் இப்படி இருவகையினர். இப்படியே இரண்டு

இயல்களையும்   இணைத்துவாசித்தவர்கள் மூன்றாம் பிரிவினர். மூன்று

வகை எதிர்வினை இந்த நாவலின் வாசகர்களிடம், இருக்கக்கூடும்.

அல்லது பெருவாரியினர்  கூறியதுபோல் அகம்வழியாகவோ, புறம்

வழியாக  வாசித்தாலும் இரண்டும் இணைந்த முழுமை

வாசகர்களுக்கு    மனதுக்குள் எளிதாய் இறங்கியது. சில இளம் வாசகர்களும்              இந்த எண்ணம் தான் கொண்டிருந்தனர்.

கேள்வி: இப்படி நாவலை மூன்று வகையில் வாசிக்கலாம் என்ற எண்ணம் எதற்காக

வாசகர்களுக்கு விதைக்கப்பட்டது?உங்கள் விளக்கம் என்ன?

பதில்:         வாசகர்கள் எப்போதும் அவர்களுக்கான பிரதியை உருவாக்குகிறார்கள். ஒரு

வாசகர்போல் இன்னொருவர் வாசிப்பதில்லை.ஆனால் நாவலிலேயே

‘இப்படி வாசியுங்கள் அல்லது அப்படி வாசியுங்கள்’ என்பதுபோல

ஆலோசனை இதுவரை யாரும் கொடுத்ததில்லை.ஒவ்வொருவருக்கும்

ஒரு  வாசிப்பு உள்ளது என்பதால்………

கேள்வி: அதற்காக இப்படி வாசகர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டதா?

பதில்:         அல்ல. இந்த நாவலின் உள் மூன்றுவகை பிரதிகள் இருந்தாலும் மூன்றையும்

இணைக்கும் இரத்தம் ஒன்றுதான். ஒன்று, ஒன்றாகவும் வேறாகவும்

இருக்கிறது.இன்னொன்று விமரிசகனும் வாசகனும் இந்த மாதிரி

வாசிப்பில் ஒன்றிணைகிறார்கள்.

 கேள்வி: மேலும் ஒரு விசயம் உள்ளது. இன்று காலம் மாறி

விட்டது.   சமூகத்தில்அதிகமதிகம் இயந்திரங்கள் மனிதர்களைத்

தீர்மானிக்கின்றன.இயந்திரத்தன்மை வாசிப்பிலும் தாக்கம் செலுத்துகிறது.

பதில்:         மனிதர்களுக்குப் பதிலாகவும் இயந்திரங்கள் வந்துவிட்டன. மேற்கத்தியர்கள்

மட்டுமல்ல. கணினி மூன்றாமுலக வளர்ச்சியடையா நாடுகளையும் கட்டுப்

படுத்துகிறது. மனிதர்கள் கையை நம்பி ஓட்டுபோட்டது மாறி அதனை

எந்திரம் தீர்மானிக்கும் காலம் வந்துவிட்டது.  மனிதத்தன்மை என்றால்

என்ன? இயந்திரத்துக்கு ஏற்ப வாழ்தல் அல்லது எந்திரமாய்

வாழ்தல்  என்றாகிவிட்டது.முகநூல் வேறு என்ன?

கேள்வி: நீங்கள் மறைமுகமாய் தமிழ்ச்சூழலில் –தமிழ் எழுத்தில்–வாசிப்பில்  இந்தவித

மாற்றத்தை அறிந்தவர்கள் உள்ளனரா என்று கேட்கிறீர்கள். சரிதானா?

பதில்:         உள்ளொளி மூலம் எழுதவேண்டும் என்றார்கள். சரஸ்வதி கடாட்சம் வேண்டும்

என்றார்கள். அவர்கள் நவீன உலகை எழுத்தில் கொண்டுவரவில்லை. பின்பு

சூழல் மாறியது. பெரிய பெரிய உள்ளடக்கச் சோதனைகள் வந்தன. தட்டச்சும்,

ட்ரெடில் அச்சு எந்திரமும் மாறி கணினியும் நவீனமுறை அச்சடிப்பும் வந்து

வாசகன் – படைப்பாளி உறவில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துவிட்டன.

‘ஆசிரியன் இறந்து போனான்’ என்ற முழக்கம் ஒரு பக்கத்திலிருந்து நீர்பாயும்

என்ற கருத்தை மாற்றியது. வாசகன் ஆசிரியனின் இடத்துக்கு இங்கே

வருகிறான். இரண்டு பக்கங்களில் இருந்தும் நீர் பாயமுடியும்.

கேள்வி: எழுத்தாளனைப் போல வாசகனும் வேறுவிதமான பிரதியைப் படைக்கும்

காலம் வந்துவிட்டது என்று சொல்ல இந்த உத்தி வருகிறது

என்று விளக்குவதற்காக இந்த நாவலில் மூன்றுவித வாசிப்பு….

பதில்:         ஆமா… எண்பதுகளில் இருந்த இந்தவித விவாதங்கள் வந்தவண்ணம் உள்ளன.

எனவே, கணினியும் செயற்கை அறிவு (Artificial Intellignece)ம் வந்ததுபோல்

Dismantler text – உடைக்கப்பபட்ட நாவல் பிரதியும் வருகிறது.The politics

of the parts and the whole.

கேள்வி:உள்ளடக்கதிற்குப் போவோம். அகம் என்பது பழைய தமிழில் ஒரு பெரிய

வாசிப்புமுறை. புறம் என்பதும் என்பது அதுதான்.நாவலோ

தமிழகத்தின் அரசியல் பற்றியது. இந்தி

எதிர்ப்பு, அதற்கிடையில் நடைபெறும் இருவித காதல்கள் (வின்சென்ட் –

காந்திமதி, கிருபாநிதி – ஹெலன்). இரண்டும் இருவிதம். ஒன்று உளவியல்

தொடர்புடைய அகக்காதல். இன்னொன்று புறக்காதல். கிருபாநிதி ஒரு

எக்ரோவெர்ட், எதையும் மறைக்காதவன். தமிழக அரசியலை இந்தத் தனி

மனிதர்கள் எப்படித் தீர்மானிக்கிறார்கள்? அப்புறம் ஒரு நடிகை வருகிறாள்.

அவள் அரசியலில் நுழையவில்லை. இந்தக் காதலோடு தொடர்பற்ற தமிழ்த்

தேசியத்தின் பிரதிநிதி – இருவித கம்யுனிஸ்டுகள் இப்படி இப்படி….

பதில்:         நீங்களே ஆழமாகப் பார்க்கிறீர்கள். அகம் ஒரு சுழற்சி என்றும் புறம் வரலாறு

என்று இந்நாவலைப் படித்த நாகார்ச்சுனன் சொன்னார். சுழற்சியின் ஒருமுகம்

இன்னொன்றாய் மாறும். அதன்பின்பு அடுத்தது வரும். இப்படித்தான் தமிழ்ப்

பேசும் மனிதர்கள் முன்னால் ஒரு ஆடியானது பிடிக்கப்பட்டிருக்கிறது. ஆடியில்

பாவையோ நம் முகமோ தெரிந்துகொண்டிருக்கிறது.

கேள்வி:அதுதான் ஆடிப்பாவை போல……

பதில்:         ஆமா. வேறு என்ன?

கேள்வி:நாவலைப் படித்துமுடிக்கையில் இப்படிப் பலவிதமான பொருளும் சூரியஒளி

நிழல்பட்டுத் தெறிப்பதுபோல் பொருள், திவலையாகத் தெறிக்கவேண்டும்..

பதில்:         மிகச்சரி. இப்போது எப்படி வாசிக்கிறார்கள். வாசகனை மாதநாவல்,ஒரு மணி

நேரம் கட்டிப்போடுகிறது. மூழ்குகிறார்கள், வாசிக்கும் வாசகர்கள். கடைசி

பக்கத்துக்கு வந்ததும் மூச்சுவிடுகிறார்கள். தன்னை மறக்கடிக்கும் நாவல்

வாசகனை ஏமாற்றுகிறது. ஒரே மூச்சில் படித்துவிட்டேன் என்பது சரியான

வாசிப்பு அல்ல. எம்.ஜி.ஆர். சினிமாவைப் பார்த்து அவருக்கு வாக்களிக்

கிறோம். அவருக்குள் நாம் நம்மைஇனங்காண்கிறோம். இந்தத் தவறான கலை

இங்கு  விமரிசிக்கப்படுகிறது.

கேள்வி:வாசிக்கிறவன் அகன்று நின்று, சற்று இடைவெளி கொடுத்து இது வெறும்

சினிமா, நாவல், என்று பிரக்ஞாபூர்வமாக இருப்பதை இழக்கக்கூடாது

என்கிறீர்கள்.இன்றைய கலைரசனை பிரக்ஞாபூர்வமானது.

பதில்:         ‘ஆசிரியன் இறந்து போனான்’ என்ற குரல் தமிழிலும் கேட்கப்பட்டு சுமார்

30 ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த முழக்கம்தான் இன்று மூன்று வகையில்

வாசிக்கும்முறை கொண்ட நாவலைப் பிறப்பிப்பதற்கான தாரகமந்திரம் போல்

உள்ளது. அதாவது அந்த வாக்கியத்தை நீட்சிப்படுத்திக் கொண்டே போக

முடியும்.அதுமேற்கிலிருந்து வந்தாலும்…

கேள்வி:இன்னும் தொடர்ந்து பேசவேண்டும், இந்த நாவல் பற்றி.இப்போதைக்கு இது

போதும்!!!!……………..

தமிழவனின் ‘வார்சாவில் ஒரு கடவுள்’கன்னட மொழிபெயர்ப்பு.

(பேயோ, கடவுளோ அல்லது இரண்டும் ஒன்றோ!)

பசவராஜ் கல்குடி
கன்னடத்திலிருந்து:கிரீஷ்;கங்கையா;சகாஸ்.
(இக்கட்டுரை ஏப்.2-(2017) ஆம் தேதி கன்னட நாளிதழான ‘பிரஜாவாணி’ ஞாயிறுமலரில் லட்சக்கணகானவர்கள் வாசிக்கும்படி பிரசுரமானது. இதுபோல் ஒரு தமிழ்நாவல் கன்னட வாசகர்களுக்கு இதுவரை அறிமுகம் ஆனதில்லை.ஏற்கனவே இந்து ஆங்கிலப்பதிப்பில் (8-12-16)இந்நாவல் சிறப்புக்கள் எழுதப்பட்டிருந்தன.பசவராஜ் கல்குடி அவர்கள் மிகவும் உயரிய, இந்திய அளவு புகழ்பெற்ற, கன்னட விமரிசகராவார்.பெங்களூர் பல்கலை.யின் முன்னாள் கன்னடப்பேராசிரியர்.கன்னடர்கள் தமிழ் நாவல் ஒன்றை
இதுபோலக் கொண்டாடியுள்ளது கன்னட இலக்கிய உலகத்தில் இந்த நாவலை மிகவும் முக்கியமானதாக்கியுள்ளது.வேறு இரண்டு தமிழ் நாவல்கள் கன்னடத்தில் சமீபத்தில் வந்தும் இந்த நாவலுக்கு கன்னடர்கள் அதிக கௌரவம் அளித்துள்ளது அனைத்திந்திய இலக்கிய உலகத்தின் போக்கு வேறு என்பதைச்சுட்டிக்காட்டியுள்ளது.கர்நாடக மாநில சாகித்திய அக்காதமியின் சிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான விருதையும் தமிழவன் நாவல் பெற்றுள்ளது.விரைவில் தமிழில் இந்த நாவலின் அடுத்த பதிப்பு வரவுள்ளது.)
தமிழ்ச் சமூகம் தனது கதாநாயகர்களை உருவாக்கும் விதம் விசித்திரமானது. ‘திராவிடக் கழகம் ’ வர்ணமயமான உலகத்தின் பிரமையோடு கூடிய நாயகர்களைக் கண்டுபிடிக்கக் காரணமாயிருந்தது. அப்படித் தமிழ்த்தன்மை ஒன்றைக் கட்டும் கனவு, வெறும்கனவாகவே எஞ்சியதை நாம் கண்டோம். அபரிமிதமான உருவமுடைய அம்மா, மற்றும் சின்னம்மாக்களின் சிருஷ்டியும் அதுபோல வெள்ளைநிற வேட்டியும் ஆடையும் தரித்திருப்போர் ஆளும் அரசியல்வாதிகளாய் தனிகுனிந்து நின்றதையும் கண்டோம். இத்தகைய சித்திரத்துக்கும் கறுப்புநிறமும் பலசாலியானதுமான தேகத்துடன் கூடி இவர்கள் காட்சி தருவதற்கும் பொருத்தம் இல்லை அல்லவா என நினைக்கும் நேரத்தில் எனக்குப் பயம் தோன்றுவது தமிழ்ப் பண்பாடு தனது சுயத்தை உருவாக்கிக் கொள்ளும் முறை எத்தகையது என்று யோசிக்கையில் தான்.
தமிழவனின் ‘வார்ஸாவில் ஒரு கடவுள்’ நாவலை வாசிக்கும்போது எனக்கு தமிழ்ப்பண்பாடு குறித்த மேலே கூறிய சித்திரங்கள், யோசனைகள், வந்துபோயின. மேலோட்டமாய் அப்படி இல்லை என்றாலும் ஆழத்தில் தமிழவனின் இந்த நாவல் மேலே பார்த்த பிரச்சனையை எதிர்கொள்கிறது என்றுதான் பட்டது. தற்கால யுகத்தில் சமுதாயங்களின் அநாதைத் தன்மையையும் மனிதசக்தியின் மையமின்மையையும் தமிழ் மொழியில் உருவகமாகப் பிடித்த சிறப்பான ‘கதைச்சித்திரம்’ இந்த நாவல். நாடுவிட்டுப் போதல் மற்றும் இருத்தலியல் நிலைகொண்ட வாழ்வின், பதற்றம்(anxiety) போன்றன சாவைப் போலவோ அல்லது கடவுளைப் போலவோ எவ்வளவு தூரம் ஸ்தம்பித்தநிலைகொண்டவை என்பது இந்த நாவலைப் படிக்கையில் நமக்கு அனுபவம் ஆகிறது.
தமிழ்ப்பண்பாடு தன் சுயத்தன்மை பற்றி மிகவும் பெருமைப்படுகையில் அது பெறும் உத்வேகம் எத்தகைய மேலோட்டமான ஒரு ஜல்லிக்கட்டு என்பதை ஆதங்கத்துடனும் துக்கத் துடனும் இந்த நாவல் விளக்குகிறது என்பேன். ஏனெனில் எது சக்தியுள்ள தமிழ்தன்மையோடு ஒப்பிடப்படுகிறதோ அத்தகைய ஜல்லிக்கட்டுச் சடங்கு வெறும் சடங்காகவே எஞ்சிப் போன வரலாற்றைத் தன் அகத்தில் பிரதிபலிக்கிறது இன்றைய தமிழ்ப்பண்பாடு. நிலத்தில் உழும் மாடுகளைத் தோற்கடிப்பது என்பது, தன்னைத்தானே தோற்கடிப்பதுபோல் என அறியாத துக்க கரமான சூழல்.
இன்றைய காலனியவாத பாரதம் என்னும் இந்தப் பிரதேசத்தில் தனது என்பதை விட்டுவிட்டுப் பிழைக்க ஊர்விட்டுப்போகும் சமுதாயங்களில் தமிழ்ச்சமூகம் முன்னணியில் இருக்கிறது. 1931-இல் சிலோன், மலேயா, பர்மாவுக்கு, காலனித்துவக் கூலிகளாய் வன்முறைமிக்கதும், மனிதாபிமானமில்லாமலும் பிறந்தநாடு விட்டு தாண்டி நாடோடிகளாய் போகும் கதை – தமிழ்ச்சமூகத்தின் துக்ககரமான கதை. உலகமகா யுத்தத்தின் சந்தர்ப்பத்தில் பர்மாவிலிருந்து ஓடியவர்களில் தமிழர்கள் அதிகமான எண்ணிக்கையுள்ளவர்கள். சில காலத்துக்கு முன்பு ஸ்ரீமாவோ சாஸ்திரி ஒப்பந்தத்தில் பல இலட்சம் தமிழர்கள் தம் வீடுவாசல்விட்டுத் தமிழ்நாட்டுக்கு ஓடிவந்தது எத்தகைய ஒரு துக்ககரமான கதை. இப்படித் தமிழ்ச்சுயத்துவத்தின் பிரச்சனையைப் பரீட்சித்துப் பார்க்க வைக்கும் உள்பார்வைகளின் தேவை இச்சமூகத்துக்கு இருக்கிறது.
தமிழவனின் நாவலின் கதை இந்தத் துன்பியலின் அடையாளத்தை உருவகமாய் சித்தரிக்க முயன்ற முதல் படைப்பு. இது கர்வம் கொண்டவர்களின் கர்வத்தை உடைக்கும் கதையல்ல. தன் அகத்தைத் தானே அடிமட்டத்திலிருந்து பார்க்கும் கதை சொல்லல். இந்த நாவல் மொழி எதார்த்தமுறையை வேண்டுமென்றே விட்டுவிட்ட மொழி. இவரின் முதல் நாவல் ‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’ தமிழில் முதன்முதலில் எதார்த்தமுறையைச் சிதைத்து எழுதப்பட்டது என்று குறிப்பிடப்பட்டது. ‘வார்ஸாவில் ஒரு கடவுள்’ அதிஎதார்த்தத்தின் மிகை பரிமாணங்களை நாவல் மொழியாகப் பயன்படுத்தியுள்ளது. கற்பனை, அதர்க்கம், இவையெல்லாம் காலதேசப்பரிமாணத்தின் வெளியே ஊஞ்சல்போல ஆடவைக்கப்பட்டு மனமானது ஒவ்வொன்றையும் அனுபவிக்கும் முறையில் பக்குவமுள்ள முறையில் நாவல் உருவாக்கப்படும் கட்டத்தை இந்தப்புதுமையான கதைச்சித்திரத்தில் நான் கண்டேன்.
இந்த நாவலை நான் வேண்டுமென்றே கதைச்சித்திரம் அல்லது சித்திரக் கதை என அழைக்க இஷ்டப்படுகிறேன். ஏனெனில் அதிஎதார்த்தத்தினால் இந்த நாவல் கட்டும் நிகழ்ச்சிகள் மற்றும் விபரங்கள் கற்பனையான நிலையில் ஒரு வித்தியாசமான படைப்பை உருவாக்குகின்றன.
நவீன காலத்தின் குரூரமான வாழ்வின், சுயஆசைகள் உலகம் எங்கும், சாமான்ய சமுதாயங்களின் மீது ஏற்படுத்திய காயத்தின் அடையாளங்களைக் காலங்களைத் தாண்டி உருவாக்கிய பரிமாணங்களை இந்த நாவல் சித்தரிக்கிறது. அந்தியந்த தனிப்பட்ட வாழ்வின் காதல் sex, படைப்பு, சம்பந்தங்கள் – இவைகளிலிருந்து தொடங்கிச் சமூக வாழ்வு பலவீனமாவதைத் தமிழவன் சித்திரிக்கிறார்.
பர்மாவில் இரண்டாம் உலகயுத்தத்தில் நடக்கும் நிகழ்வு ஒன்றிலிருந்து கதை ஆரம்பிக்கிறது. நாவலின் முக்கிய பாத்திரம் சந்திரன். இவனை இதன் கதைச் சொல்லி எனலாம் அல்லது இவனே சரித்திர நிகழ்வுகளின் பகுதியாய் ஆகிறான்.
தென்னிந்தியாவின் நபர் ஒருவர் இரண்டாம் மகாயுத்த சந்தர்ப்பத்தில் பர்மாவிலிருந்து ஓடி வரும்போது பல பொருள்களைக் கொண்டுவருகிறார். நாய்க்குட்டி எனக் கருதி 3 வயசு அநாதையான பர்மிய பெண் குழந்தையைக் கொண்டு வந்து காப்பாற்றி, தன் உறவினனுக்குத் திருமணம் செய்விக்கின்றார். அவர்களின் திருமணத்தின் பலன் சந்திரன். தன் தாயைப்போல நெருப்பு பற்றுவதை, அது நடப்பதற்கு முன்பே தன்னுள் காணக்கூடியவன் சந்திரன். கணினி நிபுணரான சந்திரன் போலந்தின் வார்ஸாவுக்கு வந்து அங்குச் சந்திக்கும் ஒருத்தி மலினோவ்ஸ்கா. இன்னொரு பெண்மணி லிடியா. அவள் அண்ணன் லியோன். லிடியாவின் சிறு வயதுக் காதலனும் உள்ளான். சந்திரனை விமானநிலையத்தில் சந்திக்கும் சிவநேசம் –மற்றும் இவர்கள் எல்லோரின் உள்ளே அடங்கியிருக்கும் கதைகள் சந்திரனுடைய பிம்பங்களே.அவை தர்க்கரீதியாகவும் சகஜமாகவும் அமைகின்றன. தற்சமய வாழ்வில் இருந்து பிய்த்துக் கொள்ளும்படி எல்லோரின் பழைய மற்றும் futureless present உருப்பெறுகிறது. இக்கதைகள் ஒன்றினுள் ஒன்று கலந்துகொள்ளும் நாவலின் கதையுத்தி மர்மமாக உருவம் பெறுகிறது. நாஜிகளின் தாக்குதலுக்கு உட்பட்ட போலந்துபோலவே, காலனியத்துக்கு உட்பட்டதுதான் பாரதநாடும். இவ்விரண்டு சமுதாயங்கள் அனுபவித்த கஷ்டங்கள் ஒன்றேதான். மக்கள் பெறும் உன்னதத்தின் பெயரில் நடந்த நாஜிகளின் அட்டூழியங்களை அனுபவித்த போலந்து, பலரீதியான மக்களின் இனக்கலப்புக்குள் பிறந்த சந்திரனை ஆன்மீகமாக அறிந்திருக்கிறது என்பதுபோல் நாவலின் கதைச்சொல்லல் உள்ளது. ஆனால், இந்த இரண்டு வகை வாழ்வுகளின் துக்கங்கள் ஒன்றேதான்.
காமம் வாழ்வின் இச்சையையும் பிறப்பையும், அதுபோல் படைப்பூக்கத்தை உருவாக்கி வாழ்வுக்குப் பிரயோசனம் தருவதாய் இருக்கவேண்டும். ஆனால் இந்த உறவு கள் சாவையையே மீண்டும் கொண்டுவருவது நாவலில் ‘சமுதாயங்களின் ஜீவ அழிவுக்கான’ உருவகம் (metaphor) போல மீண்டும் மீண்டும் காட்சி தருகிறது. லிடியாவின் தன் காதலனுடன் சேரும் சூழலை இப்படிக் கூறுகிறாள்: “என் இரண்டு முலைக்காம்புகளை அவன் பிசைந்தபோது நான் என்கிற என்னுடையது என்னை விட்டுப் போகிறது என்பதை நான் அறிந்தேன். அவனுடைய தலையை என் இரண்டு கைகளினால் இழுத்துப் பலமாகத் தூரத்தில் தள்ளினேன். அப்போது ஏதோ ஒன்றை மீண்டும் யோசித்தபடி என் இளம் மார்பகங்களை மூடியபடி மீண்டும் அழுதேன். அதே சமயத்தில் ஆச்சரியமான சம்பவம் ஒன்று நடந்ததுபோல எனக்குள் தோன்றியது. அவன் என் ஸ்கர்ட்டின் உள்தொடையில் கைவைத்த இடத்தில் ஒரு நிழல் விழுந்தது போல் காணப்பட்டது”.
ஆண் மற்றும் பெண்களின் பாலியலானது தோல்வியில் மட்டுமல்லாமல் சாவிலும் இறுதியாவது எல்லாப் பாத்திரங்களின் உறவின் கதையும் ஆகிறது.
பழைமையின் பரிமாணம் தான் இன்றைய காலம் என நம்புகிற ‘வார்ஸாவில் ஒரு கடவுள்’ நாவலின் கதையாடல் ‘நவீனம்’ என்கிற பேய் வந்து ஆட்டம் போட்டு வியாக்கியானம் எழுதியதுபோல உள்ளது. நாவலில் வார்சா நகரம் குறித்த வர்ணனை வருகிறது. லிடியா கதைசொல்லும் சந்திரனிடம் வார்ஸாவில் ஓரிடத்தில் சந்திக்கக் கூறுகிறாள். அவளைச் சந்திக்கப் புறப்பட்டவனுக்கு லிடியா பற்றி இப்படித் தோன்றுகிறது:
“வெள்ளை மற்றும் பிரவுன் லெதர்பையுடன் காத்திருக்கும் லிடியா ஒரு எதார்த்தமான பெண்ணாக இருப்பதைவிட வாஸ்தவமான பெண் மறைந்துவிட்டால் அந்த எதார்த்தத்தின் பிரதிபிம்பம் தன் ஜீவிதத்தை முன்னே நீட்சிப்படுத்தினால் எப்படியிருக்குமோ, அந்த வடிவத்தில் இருக்கிறார் என யோசித்தேன்”.
பிரமைக்காளான மற்றும் வாஸ்தவ உலகங்களின் வேறுபாடே முற்றாய் மறைந்துபோன சூழல் தான் நாவல் முழுவதும் வியாபகமாகும் இன்னொரு உருவகம்(metaphor)ஆகும். இங்குப் பழைமை சுற்றிச்சுழன்று பேசுகிறதோ, தற்காலம் பழைமையாக இருக்கிறதோ எனக்கூறமுடியவில்லை.
சாவின் வர்ணங்களான நீலம், கருப்பு, சாம்பல், வெள்ளைநிறம் நாவலின் கதைஉடலில் மீண்டும் மீண்டும் பின்னணியில் வருகிறதைக் காணலாம். கால் விரலில் லாத அமலா வருகிறாள். கையின் சில விரல்களை இழந்த சிவநேசம் – எஞ்சிய விரலின் நடுவில் நீலநிறப் பேனா பிடித்தபடி, நிறத்தைச் சந்திரனின் உடலுள் போகும்படி செய்யவல்லவன். வார்ஸாவின் காலத்தை மீறிய கடவுளைப்போல இருக்கிறான் சிவநேசம். இறந்தானோ, இருக்கிறானோ என்னும் மாயம்காட்டி வாசகனுக்குக் குழப்பமாகிற ரீதியில் சிவநேசம் காட்சி தருகிறான். இவன் பேயா அல்லது கடவுளா? அல்லது இரண்டும் ஒன்றேயா? கர்னாடகத்தின் மேற்குக்கடற்கரைகளில் எல்லாப் பேய்களும் தெய்வமே ஆக இருப்பதுபோல மக்களால் வணங்கப்படுவதுண்டு. மனிதர்களைக் கள்ளத்தனமாய் கடத்தும்போது வாழ்கிறானா, சாகிறானா இவன் எனக்கருதுமாறு கும்மாம்குத்து சிவநேசமாக மறுபிறப்புப் பெறுகிறான். சிவநேசம் என்கிற பேய் கடவுளாகையில் சாவின் கையைப்பிடித்து எதிகாலஜோஸ்யத்தைக் கூறுகிறான்.
தமிழவன் நாவல் திக்பிரமை உருவாக்குகிறது. அந்தளவு இருப்பின் ஆதங்கத்தை வாசகன் முன்பு கொண்டுவருகிறது.கோபாலகிருஷ்ண அடிகாவின் கவிதைவரிபோல ‘நொண்டியின் முதுகில் குருடன் அமர்ந்திருக்கிறான்’. பாதையில் அவர்கள் எப்படி நடக்கப் போகிறார்கள் எனப் பார்க்க வேண்டும்; இந்தக் கவிதையில் வரும் உருவகத்தின் மூலம் வெளிப்படும் பொருளை மீறிய ஸ்தம்பித்தல் தொனி இந்த நாவலில் உள்ளது. யூரோப்பின் நவீன எந்திர நாகரிகத்தின் சூழலில் உருவாகும் தீவிர இருப்பின் சிக்கலின் கதையை ஒரு தடவை நினைவுபடுத்தி, அதன் மூலம் வெளிப்படும், நடுங்கும் படியான மனிதர்களின் ஆசையற்ற வாழ்வினுடைய பயம் இந்தக் கதையில் உள்ளது. அனேகர் இந்த நாவலை போஸ்ட்மாடர்ன் என்று அழைத்துள்ளார்களாம். அத்தகைய இக்கட்டான விமர்சனத்தின் ‘ஜார்கன்களை’ விட்டுவிட்டு நாவலை ஒரு கலாச்சார கதையாடலின் தத்துவ உருவகமாக வாசித்தால் நவீனகாலத்தின் எல்லாவித சத்துவமும் கண்ணில் விழும்.
இந்த நாவலை எழுத்தெழுத்தாய் நுட்பமாய் படித்து, படைப்புரீதியாய் மொழிபெயர்த்துள்ளார் ஜெயலலிதா. தமிழவனின் வாக்கியங்களை வாசிப்பது எளிதல்ல. அது கதையோட்டத்தில் ஓடிவந்து விழும் வாக்கியங்களல்ல. கதையின் அர்த்தம் புரிய வேணுமென்றால் நாவலின் மொழியைப் பொருளுக்குள் கொண்டுவரும் திறமை வேண்டும். அத்தகைய படைப்புச் செயலாய் உருமாற்றி மொழிபெயர்ப்பினை நிறைவேற்றியுள்ளார் ஜெயல்லிதா. சமீபத்தில் – எல்லாம் எந்திரத்தனமான மொழியில் மொழிபெயர்ப்பு நடக்கையில், ஜெயலலிதா கன்னட வாக்கிய அமைப்பின் ஒழுங்குக்கேற்ப பொருளைஉருவாக்கித் தந்துள்ளார். தமிழிலிருந்து கன்னடத்திற்கு மிகச் சிறப்பாகக் கொண்டுவந்திருக்கிறார்.

மலெசிய இலக்கியம்

மலேசிய தமிழ்மரபின் ஒற்றை அடையாளம்

தமிழவன்

–  வல்லினத்தில் பிரசுரம்  –

 

நவீன் தொலைபேசியில் கேட்டுக்கொண்டதன் காரணமாக இப்போது இந்தக் கட்டுரையை எழுதுவதற்காக என் நினைவுகளையும் கருத்துக்களையும் ஒருங்கமைக்க முயல்கிறேன். நான் இரண்டுமுறை மலேசியாவுக்கு – ஒருமுறை சிங்கப்பூரில் கருத்தரங்குக்கு அழைக்கப்பட்டதன் பேரிலும் இரண்டாம் முறை நவீனும் நண்பர்களும் அமைப்பியல் பற்றிப் பேசக் கேட்டுக்கொண்டதன் பேரிலும் – சென்று முடிந்த அளவு இலக்கியம் மலேசியாவில் உருவாக்கம்பெறும் முறை, மலேசிய தமிழர்களின் இன்றைய வாழ்முறை போன்றவற்றைக் கிரகித்துக் கொண்டேன். ஓரளவு மலேசியத் தமிழர்கள் பற்றிய அமெரிக்கப் பேராசிரியர் ஆண்ட்ரு வில்போர்டின் நூல்களும் எனக்கு மலேசியா பற்றித் தெரிந்து கொள்ள உதவின. இவற்றில் மலேசியாவின் தமிழர்களின் வாழ்முறையைக் கிரகிப்பதில் ஒரு அனுகூலமான தன்மை, நானும் தமிழ்ச்சமூகத்தில் பிறந்தவன் என்ற உண்மையில் அடங்கியிருக்கிறது. அதாவது அவர்கள் 90விழுக்காடு நம்மைப்போல் தமிழர்கள்.பத்து விழுக்காடு மலேசிய மொழி, மண், வாழ்முறையால், மலேசிய வரலாற்றால், அரசியலால் தீர்மானிக்கப்பட்டவர்கள் என்ற வேறுபாட்டைக் கொண்டவர்கள். எனவே, அங்கு நான் சென்ற பின்னணியில் அவர்களுடன் கொண்ட உறவு, உரையாடல்கள், குறைசொல்லல்களாலும்,மேலும் அவர்கள்பற்றிய என்னுடைய  அறிவு – அறிவின்மைகள், போதும் –போதாமைகளின் பின்னணியில்  அவர்களின் இலக்கியம் பற்றி எழுதுகிறேன். அப்படி அவர்களைப் பிரதிபலிக்கும் அவர்களின் இலக்கியம் பற்றிய என் மதிப்பீடாக இக்கட்டுரையை அமைக்க முயல்கிறேன்.

 

எனக்கு, அங்கிருந்து வந்த “காதல்” இதழ்கள் “வல்லினம்” இதழ்கள் சிலரின் நூல்கள், அதுபோல் தொகுதிகள் படிக்கக் கிடைத்தன. அதில் என்னை ஈர்த்த ஒரேயொரு நூலின் அடிப்படையில் (இது அதிகப்படியானது என யாரேனும் கூறும் வாய்ப்பு இருக்கிறது) சிந்திக்க வேண்டும் என்ற என் இதுவரை காலத்திய தமிழிலக்கிய அறிவிலிருந்து ஏன் ஒரு முடிவுக்கு வந்தேன் என்ற கேள்வியைச் சட்டகமாக்கி முன்னேறுகிறேன். அந்த ஒரு நூல்: மகாத்மனின் சிறுகதைத் தொகுப்புகள். அதற்கு முன்பு மலேசியாவின் இலக்கியத் தொகுப்புகள் (கவிதை – சிறுகதை) சில என் பார்வைக்குக் கிட்டியுள்ளன. பெரும்பாலும் முக்கியமான நூல்கள் / ஆசிரியர்கள் / எதனையும் / யாரையும் விட்டுவிடாத ஒரு மதிப்பீடுதான் இது என்ற எண்ணத்துடன் எழுதுகிறேன்.

 

கட்டுரைக்குள் நுழையுமுன்பு வாசலில் நின்றவாறே என் சிந்தனைக் கட்டமைப்பு ஓரளவு என் கல்விப்புலம் சார்ந்ததாகவும், ஓரளவு என் தனிப்பட்ட வாசிப்பு, என் படைப்பு ‘எழுத்துக்கள் (சிறுகதை – மூன்று தொகுப்புக்கள்) – நாவல்கள் – ஆறு நாவல்கள்) மற்றும் சுமார் 1500 பக்க விமரிசன நூல் தொகுப்புகள் போன்றன என் பின்னணியில் உள்ளன என்ற ஓர்மையுடன் இக்கட்டுரையை வாசிப்பவர்கள் மேற்செல்லும் கடமை உண்டு.

 

சரி, விஷயத்துக்கு வருகிறேன். சில மலேசிய இலக்கியப் போக்குகள் ஏற்கனவே இன்றைய மலேசிய இலக்கியத்தை நிர்ணயிக்கின்றன. தமிழகத்தின் திராவிடப்பாணி, வானம்பாடி பாணி, இடதுசாரி (தாமரை இதழ்) மற்றும் இவைகளைத் தாண்டி இன்று கணினி ஊடகம், முகநூல் பாதிப்புகள் வழி உருவாகும் புதிய தன்மைகள் மலேசிய மனங்களை – எழுத்தை – நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதித்து அதன்பின்பு 21ஆம் நூற்றாண்டின் மலேசிய இலக்கியம் என்ற உண்மை சம்பவித்து வருகிறது. அந்த மலேசிய இலக்கியம் என்ற உண்மையின் பின்னணி வரலாறு, அதன் மீதான தாக்கங்கள் பற்றிய வரலாறு பற்றிய அவதானிப்பாக ஓரளவாவது இக்கட்டுரை அமையவேண்டும் என்பது என் அவா.

 

மகாத்மனின் சிறுகதைகளை அச்சிட்டு வெளிப்படுத்திய சக்திகள் எத்தகையவை என்ற என் கேள்வியை மறக்காமல் அக்கதைகளை அச்சமூகம் விளைவித்தது என்ற விஷயத்துக்கு வருவோம். (மகாத்மன் பற்றிய என் கட்டுரையை, வசதி உள்ளவர்கள் படிக்க வேண்டும். பார்க்க: tamizhavan.com) எதற்காக இந்த நூலை மீண்டும் மீண்டும் நான் குறிப்பிட்டு வருகிறேன்? இந்த நூல் “நாளை மற்றுமொரு நாளே”, அதுபோல் நகுலனின் “நினைவுப்பாதை” இரண்டையும் யாருக்கும் நினைவுக்கு கொண்டுவரும். நான் குறிப்பிடும் இவை தமிழகத்தின் மைய எழுத்தல்ல. ஆனால் அகில உலக அளவில் காஃப்கா மைய எழுத்தாளராக இருக்கும்போது இத்தகைய காஃப்கா போன்ற எழுத்துக்களில் உள்ள எதிர்மறைப் பண்பு –  நாகராஜன், நகுலன், மகாத்மன் ஆகியோரை இணைக்கின்றன என்பேன். இவ்வெதிர் மறைப்பண்பு ஏன் மொத்த உலகஅளவுத் தமிழின், பொதுப்பண்பாகக் கூட இல்லாமல் போகும்? உலகத் தமிழ்ச் சமூகம் (மலேசியா, சிங்கப்பூர், தமிழகம், ஈழம்) தன்னை ஒவ்வொரு நாட்டிலும் அடிமையின் இடத்தில் வைத்திருக்கும்போது அடிமை, நோய்மை உள்ளவனாகவும் (மகாத்மன் கூறுவதுபோல்) சிறையில் அடிபடுபவனாகவும் தானே இருப்பான். மலேசியப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறையில் தமிழ்க் கற்பிக்கப்படுவதால் நோய் மையமற்ற இடத்தில் மலேசியத் தமிழ்ச் சமூகம் இருக்கிறதென்று ஆகிவிடாது. அதாவது இன்றைய அகில உலகமெங்கும் ஈழத்தின் அகதிகள் பரவியுள்ள சூழலில் – தமிழகத்திலேயே  தமிழன் தன்அடையாளத்தை நிலைநாட்டமுடியாத பின்னணியில் – ஏதோ ஒரு எதிர்மறைத் தன்மைதான் இன்றைய 21-ஆம் நூற்றாண்டின் தமிழனின் வாழ்நிலையின் இருத்தலியல் உண்மை. அத்தோடு புதுக்கவிதை, தமிழகத் தமிழில் உருவான பொதுஉலகப் போக்கு சார்ந்த சம்பவம். அதுவரை சாத்தியப்படாத மொழி, படிமம், கற்பனை, வாக்கியம், எண்ணம், சித்தரிப்பு யாப்பற்ற ஒலிநயம் என்பது போன்ற மிகப்பல மொழிசார் சத்தியங்களை அறிமுகப்படுத்தியது. இதனால் தமிழன் அறிந்த உண்மை முற்றிலும் தலைகீழாக்கப்பட்டது. நாடு, வீடு, கனவு, எல்லாம் பற்றிய மனக்கட்டமைப்பு ஒரு பக்கம் சிதறியது. இன்னொரு பக்கம் புதிதாய் மறுவடிவம் உற்றது. ஏதொவொன்றில் நிம்மதி கண்ட தமிழ்மனம் புதிதாய் இரண்டு துருவங்களுக்கு நடுவிலுள்ள அல்லாட்டத்தில் வைக்கப்பட்டது. உறுதிப்பாடு இல்லாமல் ஆனது. தமிழகத்தில் சி.மணி என்ற கவிஞர் இருந்தார். முதன்முதலில் பாரதிதாசனைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த புராணிக கதையாடலை (Narrative) வாழ்வென ஊரெல்லாம் பறைகொட்டித் தமிழனடா என்று பெருமை பேசியது ஒரு தொன்மம் (Myth) என்ற நிர்தாட்சண்யமான செய்தியை சி.மணி கவிதையில் தெரிவித்தார். அப்போது அவர் பாரதிதாசனையும் புதிதாய் அணுகக் கற்பித்தார்.  தமிழக இலக்கியம் பற்றிய தீவிர உரையாடலை முழுசும் மலேசியா அறிந்திருந்தால் வெறும் இணையதளம் மூலம் எழுத்தாளர்களை அறியும் துக்ககரமான செயல் அவர்களுக்கு நடந்திருக்காது. மலேசியத் தமிழ் இலக்கியக் கல்வியும் கூட மேலோட்டமான தமிழக இலக்கியக் கல்வியால் கறைபட்டது என்பதுதான் என் கணிப்பு.

 

இந்தச் சூழலில் மகாத்மனின் சிறுகதைகளிலும் பாலமுருகனின் நாவல், ரேணுகாவின் கவிதைகள், நவீன் கவிதைகள் போன்றன இன்றைய தமிழக இலக்கியத்தோடு ஒரு வகை உறவை ஏற்படுத்துகின்றன. அவை தான் என் கவனத்தைப்பெறுகின்றன. மேலும் இங்கே குறிப்பிட்ட எழுத்தாளர்களுக்கும் தமிழ்க்கல்வி உலகத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மலேசிய பொதுத் தமிழ்க் கல்வி உலகம் பட்டிமன்ற தரத்தில் இலக்கியத்தை அணுகுகிறது. தமிழகமோ ஈழம் போலவேதான். இதில் ஏதோ குறைபாடு உள்ளது. தமிழகத்தில் வானம்பாடி இயக்கம் மரபுக்கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் நடுபட்ட மொழிவயப்பட்டதும் – புதுமையை முழுவதும் ஏற்க முடியாததுமான மனநிலையின் படப்பிடிப்பு. தோன்றி சிறிது காலத்துக்குப்பிறகு தமிழகத்தில் வானம்பாடி இயக்கம் மறைந்தது. இதற்கு மாறானரீதியில்  யாப்பற்ற புதுவித கவிதைகள் உரைநடை அமைப்பின் வழி உற்பத்தியானபோது அது மரபுத் தமிழ்க்கல்விக்கு வெளியில் வாழ்ந்தவர்களின் ஆசை, ஈடுபாடு, வாழ்க்கை முறையோடு இணைந்து வெளிப்பட்டது. இதில் கதைகள், நாவல்கள், எல்லாம் அமைந்தன. அக்காலகட்டத்தின் தர்மங்களைக் கொண்டு வந்தன. இறுகியதான 19-ஆம் நூற்றாண்டின் வாக்கியமுறை வித்தியாசப்பட்ட இக்கட்டத்தில் வந்த புதுவகையான புனைவை மௌனி, நாகராஜன், நகுலன், மா.அரங்கநாதன் போன்றோர் தமிழகத்தில் எழுதினார்கள். இவ்வெழுத்துக்களில் ஒருவகை பாசாங்குத் தனமான புராணீகம் (Quality of Myths) சிதைக்கப்பட்ட, தனிமனிதன் சார்ந்த, உணர்வு வழிப்பயணம் சித்தரிக்கப்பட்டது. எதார்த்த வகை எழுத்து இந்தியாவிலும் மலேசியாவிலும் கடினமான வாழ்க்கையை  மிகைப்படுத்தியோ அல்லது மலினப்படுத்தியோ எதார்த்தவாத சித்தரிப்புடன் முன்வைத்தன. உள்ளடக்கம், வடிவம், என்று சலீசாய் பிரித்துப்பேச வாகாய் இவை அமைந்தன. தமிழகம் – மலேசியாவில் – ஏன் ஈழத்திலும் இந்தவித மரபுரீதியான உரைநடை இலக்கியம் இருந்தது. இதனை சை.பீர்முகம்மது அவர்களின் உதாசீனப்படுத்த முடியாத, வரலாற்றுக்குப் பயன்படக்கூடிய, அதே நேரத்தில் உத்தம மானவை என்றும் கூற முடியாத தொகுப்புக்கள் காட்டின. இதனைச் சிதைக்கும் புதுமரபு இல்லாதிருந்தபோது மேலே கூறிய மலேசிய புதுவித எழுத்துக்காரர்கள் வெளிப்பட்டனர். இவர்களிடம் புராணிகத்தின் நம்பமுடியா தன்மைகள் இருக்காது. புராணிகம் தகும் கனவுத்தன்மைக்கு மாறாக ஒரு வெறுமை, அந்த இடத்தில் முன்வைக்கப்பட்டது.

 

வெகுசனங்களுக்கு இவைகளில் இஷ்டமிருக்காது. வெகுசனத் தமிழ் சன உடம்புச் சுகமும் இருக்காது. (இதனைத் தமிழ் நடிகர்களும், தமிழக சினிமாவும் அவர்களுக்கு வழங்குகிறது). நிம்மதி சார்ந்த நிற்பும் கவலையின்மையும் இருக்காது. இதற்குப் பதிலாக மகாத்மனின் சிறுகதைகளில் வெளிப்படும் பாத்திரங்கள் படும் அவலம் முதலும் முடிவுமாக இருக்கும். ஜி.நாகராஜனின் கந்தன் என்ற பாத்திரம் இத்தகையவன். மா. அரங்கநாதன் படைப்புக்களில் சமய உணர்வும் அற்புதமும் சம்பவிக்கின்றன. கந்தனுக்கு மாற்று இந்த மா. அரங்கநாதன் படைப்புக்கள். வெறுமைக்குச் சமயஉணர்வு மாற்று. மலேசியாவில் இலக்கிய விமரிசனம், விமரிசனக் கோட்பாடு போன்றன ஏன் வளரவில்லை?ஒருவித போலிப்பாராட்டு நிறைந்துள்ளது. தமிழ்க்கல்வித் துறைகளின் உதவி இதற்குத் தேவைப்படும். ஆனால், மலேசியாவின் தமிழ்க்கல்வி உலகம் இத்தகைய காரியங்களுக்குத் தயாராக இல்லை. பெருவாரித் தமிழகக் கல்வி, நிறுவனங்கள் போலத்தான். மலேசியாவின் படைப்பு உந்துதல் ஒரு சமூக இயக்கமாக வளரவில்லை. கருத்துருவமாகத் திராவிடர்கழகப் பாதிப்புடன் செயல்முறைகளை மேற்கொள்வது அங்கு இருந்தது. அது நவீனத் தமிழைப் பாதிக்கும் உள்ளாழம் கொண்டிருக்க வில்லை.நான் ஒருமுறை அமைப்பியல் பற்றி பேசப் போனபோது அமைப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்த செவிமடுப்போரின் ஓரிருவர் பேராசிரியர்கள். மற்றபடி பள்ளி மாணவர்கள். எனக்குப் பெரிய ஏமாற்றமாக இருந்தது. பல்கலைக்கழகத்தில் படிப்பவர்களுக்கும் படிப்பிப்பவர்களுக்கும் ஈடுபாடு இருக்கவில்லை. விதை ஊன்ற முடியாத விவசாயின் மனநிலையில் நான் திரும்பினேன். ஏதோ சில இடைவெளிகள் தமிழகத்துக்கும் மலேசிய அறிவுஜீவிகளுக்கும் உள்ளது. இதனைத் தாண்டி நடைபெறும் காரியங்களில் உள் உரம் ஒன்று எப்படியோ அந்த மண்ணில் இருப்பது மட்டுமே நம்பிக்கை தருகிறது. அந்த உள்உரத்திலிருந்து முளைத்த ஒற்றை மரம்தான் மகாத்மன். மகாத்மனின் வாழ்க்கைமுறை, நாகராஜனைப் போலவே, மரபு பிறழ்ந்தது. எனவே அவரது அடுத்த தொகுப்பு வரவில்லை போலுள்ளது. அந்த உள்உரம் எத்தனை நாட்கள் எடுத்துப் புதிய மரம் ஒன்றோ, ஒரு தோட்டமோ உருவாகக் காரணமாக இருக்கும்? வெறும் உற்சாகமும் நாலைந்து பேரின் இளம்வயதும் மட்டும் அந்தத் தோட்டத்தை நாளை உருவாக்குமா? தமிழ்க்கல்வியோடு இலக்கியம் சேராவிட்டால் எதிர்காலம் மலேசியாவுக்கும் – தமிழகம் போல – நம்பிக்கையில்லாததே.

 

இப்போது சிலருக்குக் கேள்வி ஒன்று வரும்: மகாத்மனின் பாத்திரங்களின் பிறழ்வும், மனநிலை பாதிப்பும், அடிமட்ட வாழ்க்கைத் தளத்தில் உழல்வதும், நம்பிக்கை இன்மையும் ஒரு தமிழனின் வாழ்வா? நான் சொல்கிறேன். அப்படி அல்ல. இன்றைய இலக்கியம் “சித்தரிப்பு” என்ற இலக்கிய இலக்கணத்தை மீறிப் போய்விட்டது. மலேசியாவில் உள்ள முருகன் வழிபாட்டைச் சித்தரிக்கும் கதைகளில் ஒரு தொடக்கம் ஒரு திருப்பம் ஒரு முடிப்பு  உள்ளது. ‘அமுதசுரபி’ என்ற தமிழக இதழ் கதைபோல் மலேசியாவில் எழுதப்பட்ட கதைகள் உள்ளன. எனக்கு மகாத்மனின் இலக்கியம் வாழ்க்கையை “சித்தரிப்பு” செய்யும் இலக்கியமல்ல. சித்தரிப்பு செய்யும் இலக்கியவாதிகள் தமிழகத்திலிருந்து மலேசியாவுக்கு அடிக்கடி வருகிறார்கள். இவர்கள் நவ இலக்கியம் அறிந்தவர்கள் அல்லர். நவீன இலக்கியம் பற்றிய அறிவை மலேசியத் தமிழிலக்கிய மாணவர்கள் முதலில் பெறவேண்டும்.அங்குக் கூட்டம் ஏற்படுத்தும் ஆர்வலர்கள் மலேசியாவில் இருக்கும் ஆங்கில இலக்கியம் கற்ற தமிழர்களை நாடி ஆங்கிலம் மூலம் வெளிப்பட்டுள்ள மேற்கின் இலக்கியத்தை  மலேசிய இளைஞர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும். அப்போது “சித்தரிப்புப் பாணி” இப்போது நவீனமாகிப்போய்விட்ட  வாழ்க்கையின் – சமூகத்தின் – இன்றைய வரலாற்றின் (நகரம் – கோலாலம்பூர் – இன்றைய உலக சரித்திரத்தின் குறியீடு) அர்த்த தீவிரத்தைத் தரமுடியாத பழைய பாணி என்பது விளங்கும். அடுத்து என்ன பாணி? காஃப்கா போன்றோர், ஹொர்கே லூயிஸ் போர்ஹேஸ்,  இட்டாலோ கால்வினோ போன்றோர் உலக இலக்கியத்தில் கொண்டு வந்துள்ள ஒருவகை குறியீட்டுப்பாணி இன்று சமூகப்பிரச்சனையின் அதிமுக்கிய வெளியீட்டுப் பாணி ஆகியிருக்கிறது. மகாத்மனின் எழுத்து இருள்மயமான அழிவின், சாவின், சிதைவின் எழுத்து மட்டுமல்ல. அது “குறியீட்டு” எழுத்து. எதன் குறியீடு? மகாத்மன், தோட்டத் திலிருந்து குரூரமாய் விரட்டப்பட்ட தமிழ்இனத்தின் நினைவிலியை அதே குரூரத்துடன் படைக்கிறார். State என்ற மலேசிய அரசின் கொடுங்கரம் கொண்ட வல்லாண்மையைப் படைக்கிறார். அதன் நீதிமன்றத்தை படைக்கிறார். இன்றைய தமிழ்மனிதன் தன் 2000ஆண்டு சரித்திரத்தை உள்மனக்கேடயமாய்  வைத்துத் தாக்குப் பிடிக்கும் சரித்திரத்தை ஓரிரு தகவல்கள் மூலம் நவீன உரைநடைக்காவியமாய்த் தருகிறார். “குறியீடு” என்பது ஆயிரம் பிரச்சனைகள் நான்கு ஐந்து தகவல்கள் மூலம் முன்வைக்கும் முறைக்குப் பெயர். ஒரு தேசத்துக்கு ஒரு கொடி இருக்கும். கொடி தேசத்தின் குறியீடு. கொடியை அவமானப்படுத்தினால் சிறைதண்டனை கொடுப்பார்கள் அல்லவா! அதுதான் குறியீடு. குறியீடு சாதாரணமானதல்ல. உயிர் உறிஞ்சும் சக்தி கொண்டது. உலகில் வாழும் பத்து இலட்சம் தமிழர்களின் உயிரை உறிஞ்சி வெளிப்பட்டிருப்பது மகாத்மனின் எழுத்துமுறை. அதாவது உண்மை என்பது எழுத்தின் வழி காட்டப்படும் என்ற இலக்கியக் கோட்பாட்டை தன் எழுத்தின் தொடக்கத்திலேயே தூக்கிவீசிவிட்டார் அவர். அவருக்குக் கோட்பாடு, கீட்பாடு எதுவும் தெரியாமல் இருக்கும். ஆனால் வாழ்தலின் சூழல்தீவிரம், அவரது கதைகள் எப்படிப்பட்ட பாத்திரத்தைக் கொண்டு இருக்கும், எந்தெந்த சம்பவங்களை அடிப்படையாக்கும் என்ற அறிவைக் கொடுத்து இருக்கிறது. கோட்பாட்டு அறிவு என்பது வேறு. அது வாசிக்கும் முறை. மகாத்மனை அறிய கோட்பாடு வேண்டும். அவர் படைப்புக்குக் கோட்பாடு வேண்டாம்.

 

அதாவது நான் என்ன சொல்ல வருகிறேன்? மகாத்மன் போன்ற ஓர் எழுத்தாளர் இருக்கும்போது மலேசியாவுக்குக் கதைபற்றி – கவிதைப்பற்றி – நாவல் பற்றி வகுப்பு எடுப்பதற்கு மலேசியர்கள் மகாத்மன் அளவு தரமற்ற எழுத்தாளர்களைத் தமிழகத்திலிருந்து ஏன் அழைக்க வேண்டும்? மகாத்மனைச் செயல்முறையில் கட்டுடைப்புச் செய்யும் (deconstruct) ஆட்களை மலேசியாவில் இருந்தே அழைத்து மகாத்மனைப் பற்றி மீண்டும் மீண்டும் பலவித கோணங்களில் அணுகுவது தவிர வேறு வழியில்லை. ஏனென்று கூறுகிறேன். மகாத்மனும் காஃப்காவும், மகாத்மனும் போர்ஹேஸும், மகாத்மனும் இட்டாலோ கால்வினோவும் மகாத்மனும் நாகராஜனும், மகாத்மனும் நகுலனும் என்றெல்லாம் பல்வேறு கருத்தரங்கு நடத்துங்கள். அதன் வழி மகாத்மனின் நூத்திச்சொச்சம் பக்க புத்தகத்தின் வியாக்கியானம் 1000 பக்கங்களை எட்டும் என்பதை அறிவீர்கள். அந்த 1000 பக்கங்களில் சிங்கப்பூர் லாதாவின் எழுத்தும் மற்றும்  அங்கும் வாழும் இந்திரஜித்தின் எழுத்தின் உள்வெளிகூட மகாத்மனிடம் இருப்பதை அறிவீர்கள். நாடகத்தில் இளங்கோவன். அதுபோல் தமிழகத்தின் உயர்எழுத்து மரபுகளும் அனைத்துலக எழுத்தும் மகாத்மன் என்ற மையப்புள்ளி வழி குறுக்கும்மறுக்குமாய் பல்வேறு திசைகளில் பயணப்படுவது தெரியும்.

 

மலேசியாவில் ஆரோக்கியமான ஒரு காரியத்தைத் தமிழ் எழுத்தாளர்கள் செய்ததைக் கவனித்தேன். அதாவது மலேசிய மொழியில்  எழுதுபவர்களுடன்  நல்ல உறவு வைத்துள்ளனர். மலேசிய மொழி கிழக்காசியாவின் முக்கியமான உள்ளோட்டங் கள் கொண்ட மொழி. அம்மொழியின் பல்வேறுபட்ட காலங்களின் உள் அறைகளில் இருக்கும் கிழக்கத்திய மனிதனின் ஆன்மாவை மகாத்மனின் கதைகளில் காணலாம். மகாத்மனை உடனடியாக மிகச்சிறந்த மலேசிய படைப்பாளி மூலம் மலாயில் மொழி பெயர்க்க ஏற்பாடு செய்யுங்கள். இது மிக எளிது. ஏனெனில் தமிழ்ப் பட்டப்படிப்புக் கான ஆய்வேட்டைக் கூட மலாய் மொழியின் சமர்ப்பிக்கிறார்களாம், தமிழ் மாணவர்கள். எவ்வளவு பெரிய வாய்ப்பு! மகாத்மனை மலேசிய பண்பாட்டிற்கு அறிமுகம் செய்வதற்கு!

 

மகாத்மன் தமிழின் 2000வருட இலக்கிய வரலாற்றின் இரத்தம் ஓடும் கடைசி தமிழ்வம்சத்தின் விருட்சம்.அவர் தமிழகம்,மலேசியா, ஈழம்,சிங்கப்பூர் வழி ஓடும் ஒரு தமிழ் இலக்கிய மரபுக்குச்சொந்தக்காரர். அவரைப் புரிந்துகொள்ள பயிற்சிப்பட்டறை நடத்தாமல் அரைகுறை விருது வாங்கிவிட்டார் இன்னார் என்றும் எனவே, அவரை ஆப்பிரிக்காவிலிருந்து விமானம் பயணச் செலவு கொடுத்து அழைக்கிறோம் என்பதும் எவ்வளவு தவறான காரியம்? முழுவதும் மகாத்மனை மையப்படுத்துவது மலேசிய இலக்கியத்தின் எதிர்கால வளர்ச்சி. மலேசியத்தமிழ் எழுத்தாளர்களில் என் மதிப்புக்குரிய பலர் மகாத்மனின் உள்ளே இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் எனக்கு எந்தெந்த நபரைப் படிக்க வேண்டும் என்றுகூறி மகாத்மனை இனங்காட்டினார். அச்செயல் மலேசியா, தன் அடையாளத்தை மகாத்மன் வழி அறிந்துகொள்ள தயாராக இருக்கிறது என்பதை எனக்குச் சுட்டியது. அந்த நபர் பெயரை, நான் வேண்டுமென்றே, இங்குத் தவிர்க்கிறேன். மகாத்மனைப் போல வாழத்தேவையில்லை. கூடாது. ஆனால் மகாத்மனை ஒரு முன்மாதிரி இலக்கியவாதிபோல வைத்துப் புதிய ஓர் இலக்கிய இயக்கத்தைத் தொடங்குவது முக்கியம். (இது எதிர்வினைக்காக எழுதப்படுகிறது. எதிர்வினை தாருங்கள்.அதாவது நான் உங்கள் சூழலிருந்து கற்கவும் வேண்டும்.)

பாரதிதாசன் ; தமிழவன்

வண்ணத்துப்பூச்சியின் இறகுகள் . 

  1. பாரதிதாசன் உலகக் கவிஞர் தான்

தமிழவன்

1967-இல் திராவிட அரசியல் ஆட்சிக்கு வந்த பின்பு, அதற்கு முன்பிருந்த காங்கிரஸ் அரசியலின் பண்பாட்டு வரையறுப்பு ஓரளவு மாற்றப்படுகிறது. தமிழ்ச்சார்பு, தமிழர் அடையாளம், தமிழ் வரலாறு, பழந்தமிழ்அக்கரை போன்றன முக்கியத்துவம் பெற்றன. சென்னை மாகாணமென்பது தமிழ்நாடு என்று பெயர்மாற்றப்பட்டது.சமீபத்தில் திராவிட அரசியலை அகற்றுவோம் என்ற குரல் கேட்கிறது.அதாவது தமிழ் அடையாளத்தை அகற்றுவோம் என்பதே அந்தக்குரலின் அர்த்தம்.

முன்பு சுதந்திரப் போராட்டம் பாரதியைத் தமிழ்ப் பண்பாட்டில் முக்கியப்படுத்தியது.    1967-இற்குப் பின்பு பாரதிதாசன் முக்கியமானார். பாரதியின் மூலம் அனைத்திந்தியா என்ற தேசியக் கற்பனை(Nation imagination)யும் அது சார்ந்த அரசியல் – நேரு – காந்தி – தாகூர் போன்ற பண்பாட்டுப் பார்வைகளும் முக்கியமாயின. பாரதியும் பாரதிதாசனும் என்ற தலைப்பில் சி. கனகசபாபதி என்ற இன்று மறக்கக்கப்பட்டுள்ள தமிழ்த்துறை விமரிசகர் ஆய்வு செய்தார்.பாரதி இரட்டைத் தேசியம் என்ற கருத்தாக்கத்தை வலிமையாக்கினார். அதாவது இந்தியா மற்றும் தமிழகம் இரண்டும் அவருக்கு முக்கியம். ஆனால் தமிழ்த்தேசியம் வேறு.தமிழ்த்தேசியம்  2000 ஆண்டுகால தமிழ் வரலாற்றின், தமிழ் இலக்கியத்தின் அடிப்படையில் இருந்து வந்தது. இந்தியத் தேசியம் என்பது மிகவும் மேம்போக்கான 50 ஆண்டு சரித்திரத்தை மட்டும் கொண்ட ஒரு கடந்துபோகும் சரித்திரக் கட்டம்.2000 ஆண்டு எங்கே, வெறும் 50 எங்கே? பாரதிக்குள்ளும் அவரின் காவடிச்சிந்தில் தமிழின் உள்சக்தியான பல ஆண்டுகளின் வலிமை உள்ளதுதான். அதனைச் சுதந்திரதேவி என வர்ணம் பூசினார். எனவே ஆழமான சுதந்திரப் போராட்ட உணர்வு தமிழில் கால் கொள்ளவில்லை.வ.ஊ.சியும் திரு.வி.கவும் மேலோட்டமாக சுதந்திரபோராட்ட உணர்வைத்தமிழில் கொண்டுவந்தாலும் அவர்கள் அடிப்படையில் பெருந்தமிழ்ப்பாரம்பரியத்தின் தொடர்ச்சி. அவர்களிடம் காணப்பட்டது வெறும் அனைத்திந்திய மேல் பூச்சுத்தான். கன்னட ஆஸ்தானக்கவிஞர் என்று அறியப்படும் குவெம்பு என்ற கவிஞர் ஒருவர் உள்ளார். இவருடைய அடிப்படைச் சிந்தனைகளைத் தமிழில் மொழிபெயர்த்து ஒரு நூலாகச் சமீபத்தில் கொண்டு வந்தார்கள். அதற்கு என் பங்கும் இருந்தது. அந்த நூலுக்கு ஒரு முன்னுரை எழுதியுள்ளேன். அப்போது பாரதிதாசனுக்கும் குவெம்பு என கன்னட மக்கள் ஒவ்வொருவரும் பெருமதிப்பு அளிக்கும் 20ஆம் நூற்றாண்டுக் கவிஞரையும் ஒப்பிட்டிருந்தேன். இருவர் பெயரிலும் பல்கலைக் கழகங்கள் உள்ளன. இருவரும் அவரவர் தாய்மொழியைப் போற்றுகிறவர்கள். தாய்மொழியின் வலிமையைத் தத்தம் சிந்தனைகளாக வடிவமைத்தவர்கள். சூத்திரர்களின் பண்பாட்டைப்போற்றுகிறவர்கள்.ஆனால் ஒரு மிகப் பெரும் வித்தியாசமிருப்பதைக் கண்டேன். பாரதிதாசன் சங்க இலக்கியத்திலிருந்து தன் மொழிச்சக்தியைப் பெற்றார். மாறாக குவெம்பு அப்படிப் பெறுவதற்கு வாய்ப்பிருக்கவில்லை.கன்னடத்திற்கு 2000 ஆண்டுக்கு முன்பு  சங்க இலக்கியம் போல ஒன்று அவர்களுக்கு இருக்கவில்லை. எனவே, குவெம்பு முழு ஆளுமையை சுயமரபில் மட்டும் இருந்து பெறாமல் அரவிந்தருக்குப் போகிறார். இது பாரதியும் செய்தது. எனவே தான் சமஸ்கிருதக்கலப்பல்லாத தனித்தமிழிலிருந்து பாரதிதாசன் போல்  நவீன உலகைப் பார்க்கும் சக்தி கொண்ட கவித்துவ ஆளுமை இந்திய மொழிகள் எதிலும் இல்லை. இதனை மறைமுகமாய் மறுத்து பாரதியை மட்டும் புகழும் வடநாட்டு  பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வலம் வருகிறார்.அரவிந்தரும் தாகூரும் வேதங்களில் இருந்து தம் அடிப்படை  கவித்துவத்தைப் பெற்றால் நம் பாரதிதாசன் சங்க இலக்கியம் என்ற உலகின் ஒப்புயர்வற்றதும் இயற்கையோடு இயைந்ததும் திணைகளின் அடிப்படையில் அமைந்ததுமான பழைய இலக்கியத்தில்  இருந்து தன் உள்ளாற்றலைப் பெற்றார். ஓரளவு, அமெரிக்கக் கவிஞரான வால்ட்  விட்மனிடம் அமெரிக்கப்பூர்வ குடிகளின் அதிசக்தி உள்ளது. இந்தக்கோணத்தில் அவரையும் பாரதிதாசனையும் ஒப்பிட்டுக் கட்டுரை எழுதியுள்ளேன். அதுபோல் லத்தீன் அமெரிக்காவின் போர்ஹேஸும் அர்ஜன்டினிய ஆதிவாசிக்குரல் ஒன்று தன் கவிதைகளில் கேட்கமுடியும் என்கிறார்.உலக இலக்கிய ஜாம்பவான்கள் எல்லோரும் எல்லையில்லாப்பழமையில் தத்தம் கவிதைகளின் மூலத்தைக் காண்கிறார்கள். இடதுசாரிச் சிந்தனையாளர் தொ.மு.சி. ரகுநாதன், பாரதிக்கு நிவேதிதா மூலம் உள்சக்தி கிடைத்ததைக் கூறியதுபோல்  பாரதிதாசன் பற்றி எழுதவில்லை என்பது தமிழர்களால் மறக்கக்கூடியது அல்ல. இதுதான் நம் இடதுசாரிகள் தமிழ்மரபில் காலூன்றவில்லை என்பதோ? தெரியவில்லை. தாகூரையும் வால்ட் விட்மனையும் குவெம்புவையும்  பாரதிதாசனையும் ஒப்பிட்டு ஓர் உலகக் கவிஞருக்கான பரிமாணம் பாரதிதாசனில் இருப்பதைக் காண்கிறேன். இன்று உலகம் எங்கும் பரவியுள்ள தமிழர்கள் பாரதிதாசனை உலகக் கவித்துவ மரபாக நிறுவ காரியங்கள் செய்யட்டுமே. தாகூருக்கு உலகம் எங்கும் கோடிக்கணக்கான பணத்தைச் செலவிடுகிறது இந்திய அரசு. பாரதிதாசனுக்குச்செலவிடுமா? பாரதிதாசனை உலகக் கவிஞர் என்று கோட்பாடு எழுதத் தமிழ் விமரிசனத்துக்கு  பலமில்லையே. பலவீனம் எங்கே இருக்கிறது? இந்த அடிப்படை பலவீனத்துக்கு மரபுத்தமிழ் படித்தவர்கள் நவீனத் இலக்கியத்தை ஒதுக்கி வைத்ததே முக்கியக் காரணம். மேலும் இலக்கியம் ஒரு ஆழமான பார்வையாய் தமிழ்க்கல்வியில் இல்லை. சங்க இலக்கியத்தின் இலக்கண அமைப்புப் பற்றியதும் வரலாறு பற்றியதும்  மொழியியல் பற்றியதுமான முனைவர்ப்பட்ட ஆய்வு எத்தனை என்று ஒரு பட்டியல் எடுத்துப்பாருங்கள். இலக்கியத்தின் நவீனச் சொல்லாடல் வேண்டாம். குறுந்தொகையில்  உவமை என்றோ, அகநானூற்றில்  திணைப்பாகுபாடு  என்றோ கூட சாதாரணை இலக்கியத் தலைப்புக்கள் கூட குறைவுதான். உரைநடைமீது தமிழ்க் கல்வி யாளர்களுக்கு அப்படி ஒரு கோபம். எத்தனை ஆயிரம் நாவல்கள்,  சிறுகதைகள் வந்துள்ளன! தமிழாய்வு ஏன் இந்த முக்கியமான இலக்கிய வகைமை (Genre)யைக் கவனிப்பதில்லை? இலக்கியம் பற்றிய புறநானூற்றுக் கோட்பாட்டிற்கும்  இலக்கியம் பற்றிய புதுமைப்பித்தன்  கோட்பாட்டுக்கும்  தொடர்பு இருக்கிறது. இதுபோன்ற தலைப்பு தமிழ்த்துறைகளின் முனைவர் பட்ட தலைப்பாக வரவே வராது. அதற்கு என்ன காரணம்? இலக்கியம், அழகியல், விமரிசனம், கோட்பாடு போன்ற சிந்தனைகள் மேற்கிலிருந்து 18ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு வந்தவை. நம்மிடம் பழைய இலக்கியம் இருக்கலாம். ஆனால் அதனை நூலாகவோ, செய்தியாகவோ, இலக்கண மாகவோ பார்த்துப் பழகியவர்கள் நாம். இலக்கியப் பார்வை என்பது ஒரு  புதுவகை. சமீபத்தில் வந்த புதுவகை என்பதனால் பழந்தமிழ் மதிப்பீடான பழமை போற்றும் தமிழ்மனம் ஏற்கவில்லையா?     ஆனால் தாகூரின் முன்பு கொண்டு வந்து நிறுத்த பாரதி போதாது.(இதுபற்றி பிறகு விரிவாக பார்க்கவேண்டும்.) நமக்குப் பாரதிதாசன் தான் வேண்டும்.ஏனெனின் பாரதிதாசனின் வேர் முற்றிலும் மாறுபட்ட மண்ணில் இறங்கியுள்ளது.சங்க இலக்கிய மண்.

 

ஆக, நம்மிடம் ஒரு அடிப்படை பலவீனம் இருக்கிறது. இந்தப் பலவீனத்தைக் களையாமல் பாரதிதாசனை உலகக் கவிஞராக நிறுவ முடியாது. அப்படி நிறுவுகிறவருக்குப் பாப்லோ நெரூடாவை ஒரு கவிஞராய் வாசிக்கத் தெரியவேண்டும். ரஷ்யக் கவிஞர் மாயக்கோவ்ஸ்கி ஏன் கவிஞராகிறார் என்று கூறத்தெரியவேண்டும். தாகூர், வால்ட்விட்மன் ஏன் கவிஞராகிறார்கள் என்று சரியான இலக்கிய இழையைத் தொட்டுப்பேசத் தெரியவேண்டும்.இருவரும் இன்னதேதியில் பிறந்தார்கள் என்றோ இன்னதேதியில் இறந்தார்கள் என்றோ சொன்னால் போதாது. அவை தகவல்கள்.தகவல் போதாது. இத்தகைய பேச்சுக்கான, விவாதத்துக்கான அடிப்படை நிறுவனங்கள் பல்கலைக்கழக இலக்கியத்துறைகள். தமிழ்த்துறைகள் அல்லது ஆங்கிலத்துறைகள். சமீபத்தில் பெங்களூர் பல்கலைக்கழகத்திற்குரிய துணைவேந்தரோடு பேசிக்கொண்டிருந்தபோது கன்னடம் ஆங்கிலம் என்பவைகள் ஒரே துறையாக நடத்துவது பற்றி யோசித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னார். உடனே, எனக்கு மதுரையில் தெ.பொ.மீ. துணைவேந்தராக  இருந்தபோது தமிழ் மற்றும் ஆங்கில முதுகலை மாணவர்களை ஒரு வகுப்பில் வைத்து  இலக்கியப்பாடம்  எடுப்பார் என்ற செய்தி நினைவுக்கு வந்தது. இலக்கியம் மொழியைக்கடந்த ஒரு மொழி.

 

மீண்டும் பாரதிதாசனுக்கு வருவோம். என் சிற்றிதழ் நண்பர்கள் சிலர் பாரதிதாசன் அவ்வளவு பெரிய கவிஞரா எனக் கேட்பதைக் கவனித்திருக்கிறேன். இன்னொரு குழுவினர் உள்ளனர். பாரதிதாசனைக் கவிஞர் இல்லை என்றால் உயிரை விட்டு விடும் பக்தர்கள். இப்படி இரு குழுக்கள்  தமிழகத்தில் உண்டு. சிற்றிதழ்க்காரர்கள் புதுக்கவிதையின் மேலோட்டமான அளவுகோல்களைப் பாரதிதாசனிடம் கொண்டு வருகிறவர்கள். ஆனால் பக்தர்கள் ஒரு நம்பிக்கையை வைத்திருப்பார்கள். நம்பிக்கையாளர்கள் இலக்கியம் பற்றியல்ல. சினிமா நடிகன், இராமாயணம், பெரியபுராணம் போன்ற எல்லாவற்றையும் ஆய்வு செய்யாமல்  ஒரு முடிவை நம்பும் பக்தகோடிகள். பக்தகோடிகள் மாறுபட்ட  கருத்தை நம்பிக்கையின் அடிப்படையில் பார்ப்பவர்கள். இவர்கள் தங்களுக்கான  இஷ்ட தெய்வங்களுக்குக் கோயில் கட்டுபவர்கள். இவர்களைப் பொருட்படுத்தத் தேவையில்லை. பாரதிதாசனை மறுக்கும் – கவிஞராக ஏற்றுக்கொள்ளாத- சிற்றிதழ் இலக்கியவாதிகளுக்கு வருவோம். இவர்களிலும் சில பக்தர்கள் உண்டு.  அவர்களை விட்டுவிட்டு விமர்சனக் கருத்துக்கள் உருவாக்கத் தெரிந்தவர்களைப் பார்ப்போம். கவனிக்கவும் விமரிசனக்கருத்து உருவாக்கத்தெரிந்தவர்கள். இவர்களோடு விவாதிப்பது பயன் உள்ளது.  பாரதிதாசனை மறுக்கும் இவர்கள்தான் முக்கியமானவர்கள். இவர்கள் ஆங்கிலத்தில் படிப்பவர்கள், தர்க்கிக்கத் தெரிந்தவர்கள். இவர்கள் ஏன் பாரதிதாசனை ஏற்கவில்லை என்ற கேள்வி முக்கியமானது. பாரதிதாசன்  முதல் மூன்று தொகுப்புக்கும் பாண்டியன் பரிசுக்கும், அழகின் சிரிப்புக்கும் இசையமுது முதல் தொகுப்புக்கும்  அப்பால் பாரதிதாசனால் கவித்துவத்தைத் தங்க வைக்க முடியவில்லை என்பவர்கள் இவர்கள்.  குறிஞ்சித்திட்டு, மணிமேகலை வெண்பா,  கண்ணகி காவியம், தமிழச்சியின் கத்தி போன்ற நூல்களில் முதலில் சொன்ன ஐந்து நூல்களின் உள்கவித்துவ ஆற்றல் இல்லை என்பார்கள். ஓரளவு அது உண்மைதான். இந்த இடம்தான் முக்கியம். தாகூர்போல பலவிதமான நாவல்கள் பாரதிதாசனால்  எழுத முடியவில்லை. அப்படியானால்  தாகூர் முன் பாரதிதாசனை  எப்படி நிறுத்த முடியும்? அதுபோல் தாகூர் வரைந்த ஓவியங்களின் அழகியல் உலகு இன்னொரு  பரிமாணம். அது பாரதி, பாரதி தாசனுக்கு இல்லை. மாயக்கோவஸ்கி, நெரூடா, மார்க்கேஷ், போர்ஹேஸ், யாருக்கும் இல்லை. அது ஒரு தனிப் பண்பு. தாகூரின்  சாந்தி நிகேதன், அவரது சிந்தனைக் கட்டுரைகள் இசை,எல்லாம்  கூட உள்ளன. அவருக்கு நிகரான  ஆளுமை உலகிலேயே ஒன்றோ   இரண்டோ தான். ஆனால் ஒரு கவிஞராய் பாரதிதாசன் தனி ஆளுமை. அவரும் ஓர் உலக நிகழ்வு என்கிற கூற்றுக்கு வருவோம். கவித்துவம் என்பது கவிதை, உரைநடைகளின்  அடிப்படை. அந்த முறையில் பாரதிதாசனிடம்  ஒரு பண்பாட்டின் (தமிழின்) அடிப்படை உள்ளது. இந்த அடிப்படை விழுமியம், சங்க இலக்கியம் என்ற மனித – இயற்கை – சார்ந்த அகம் புறம் என்ற குறியீடுகளால்  பிற்காலத்துக்காகச் சேமித்து வைத்த நாகரிகப் பொக்கிஷத்(Civilizational  Treasure)தில் நிலைகொண்டு உள்ளது. பாரதிதாசன் முதல் ஐந்து அல்லது ஆறு நூல்களில்  அது கால்கோள் இடுகிறது. அது 1930களுக்குப் பிறகு  பாரதிதாசன், பெரியார் இயக்கத்துக்கு வந்த பின்பு அவருடைய கவித்துவ மொழி சங்க இலக்கிய – புராதன primitive communism-த்தின் செக்குலாரிசத்தில் கலந்து  ஒரு பேரண்டம்சார் மனித வேறுபாடு கடந்த  அன்பாய் விகசிக்கிறது. அந்த விகசிப்புப் பரப்பு ஒரு மனிதசக்திமையத்தின் நிரந்தர அசைவு. மனிதா்களும், இயற்கையும், கடல், உடுக்கள், என பாரதிதாசன் தமிழ் என்றால் என்ன என(சங்கே முழங்கு…) ஒரு அகண்டாகாரத்தை நவீன தமிழ்மொழியாய் கட்டுகிறாரே அதுதான் எல்லாம். முதல் 6 நூல்கள் வழிவந்த அந்த மொழி என்னும் எழுச்சி தான் பாரதிதாசன் தமிழ்வாசகர்களுக்காகக்கண்டுபிடித்தது. 20ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய தமிழ் நாகரிகச் செயல் அது. இதன் அலை, அவரின் பிற்கால நூல்களில் – மொழிப்பயன்பாட்டில் முழுதாய் இல்லை எனினும் இருக்கத்தான்  செய்கிறது. குடும்பவிளக்கு போன்ற நூல்களை முற்றாய் நிராகரிக்க முடியாது.

 

பாரதிதாசன் செய்த கண்டுபிடிப்பின் உச்சகட்டம் ஒரு நவீன கவித்துவத் தமிழ். அதன் தொடர்ச்சிதான் 20ஆம் நூற்றாண்டில் சி.மணியில் மெதுவாய் தொடங்கி, புதுக்கவிதைக்குள் பருமையான யாப்பை உதறிவிட்டு  ஒரு மென்குரல் யாப்பற்ற தன்மை தொடர்ந்த சங்கதி. இன்று மரபு சார்ந்து, தமிழ், இயற்கை, பூமி, ஆகாசம், நீர், நதி என  புதுக்கவிதை ஒரு பெருமரபாய் 1970களிலிருந்து 2017 வரை ஆயிரக்கணக்கான  புதுக்கவிஞர்களில் உள்குரலாய்  அமைவு பெற்றிருப்பது. அது  பாரதிதாசன் கண்டுபிடித்த  குரல்தான். இதனை நாம் நிரூபிக்கவேண்டும்.(எல்லாத்தமிழ்த்துறைகளிலும் இரண்டு இரண்டு என ஒரு இருபது ஆய்வாளர்களாவது இந்த ஆய்வில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது). இன்று யாரும் பக்திக் கவிதையோ, இராமாயணமோ,  மகாபாரதமோ, மனுநீதியோ,  கீதையோ நவீனப் புதுக்கவிதைக்குள் இன்று வரை பொருட்படுத்தும் விதமாய் எழுதவில்லை என்றால் என்ன பொருள்? பாரதிதாசன் திறந்துவிட்ட தமிழ் மடை கடந்த 50 ஆண்டுகளைக் கபளீகரம்  செய்திருக்கிறது என்று தானே. இதுதான் பாரதிதாசனின் உலக அளவுக்கான பொருத்தப்பாடு.உலகமெங்கும் உள்ள பத்துகோடி மக்களின்  வாழ்வையும் மொழியையும் இணைத்தது பாரதிதாசன் கவித்துவத்தினுடையவும் அதன் மூலம் வந்த தமிழரசியலினுடையவும் அடிப்படையாகும்.இதனை மேலும் நாம் வளர்த்தவேண்டும். அத்தகைய முறையில்  ஒரு விவாதத்தை அறிவுரீதியாகக் கட்டுவதற்குத் தமிழகத்தில் இலக்கியத்துறையில் அறிவு அடிப்படை வளர்ச்சிபெறவேண்டும்.இது ஒரு புது கவிதையியலாகும்.(கவிதையியல் என்பது பலவித தனிக்கவிஞர்களின் கவித்துவத்தின் ஒட்டு மொத்த வரையறுப்பு).இன்று புதுக்கவிதையை விளக்க நாம் பயன் படுத்தும் கவிதையியல் பெரும்பாலும் தனிமனிதர்கள் சார்ந்தது. நான் கூறுவது அது அல்ல.  ஆழ்ந்த 2000 கால தமிழ் மரபிலிருந்து உருவாக்குவதாகும். பாரதிதாசனை அப்படி இனம்காண்பதும் புதுமுறையில் விளங்குவதும் தமிழர்கள் தங்களின் வாழ்வு மீது இன்று படிந்திருக்கும் அடிமைத்தனம் எனும் அழுக்கை அகற்றுவதற்கான முதற்படி ஆகும். அப்படிப்பார்க்கையில் மிகு நவீனமான  கவிதையியல் தமிழின் பழந்தமிழிலிருந்து உருவாகும் கவிதையியலாகும். அதன்வழிதான் பாரதிதாசனை அறியமுடியும்.பாரதிதாசன் உலகக்கவிஞர் என்பதையும் நிலைநாட்டமுடியும்.

தமிழவனின் பு னைவு.

தமிழவனின்சரித்திரத்தில் படிந்த நிழல்கள்” – அர்த்தங்களைத்  தள்ளிப்போடும் பிரதி

க. பஞ்சாங்கம்

*திருஞான சம்பந்தர் (கி.பி.7-ஆம் நூற்றாண்டு) பழைய மாலைமாற்றுத் திருப்பதிகத்தில் உள்ள பத்துப்பாடல்களில் ஒன்று இது.

“ யாமாமாநீ யாமாமா யாழீகாமா

காணாகா

காணாகாமா காழீயா மாமாயாநீ

மாமாயா”

இவ்வாறு மாலைமாற்று, யமகம், திரிபு, மடக்கு என்ற படிப்பு முறையும் கமல பந்தம், மயூர பந்தம், ரத பந்தம், சதுரங்க பந்தம், ஒற்றியாச் சுழிக்குளம், நான்காரைச் சக்கரம், துவித நாக பந்தம் என்று சித்திரக்கவிக்குள்ளே பல சித்திரங்களை அமைத்து விசித்திரக் கவிகளை எழுதும் முறையும் தொன்று தொட்டு தமிழ் எழுத்து முறையில் வரக்கூடிய ஒன்று. மேலே சுட்டிக்காட்டிய திருஞான சம்பந்தர் போலவே திருமங்கையாழ்வாரும் “திருஎழுகூற்றிருக்கை” என்று சித்திரக்கவி இயற்றியுள்ளார். பிற்காலத்தில் அருணகிரிநாதர் (18-ஆம்), பாம்பன் சுவாமிகள் (19-ஆம்) ஆகியோரும் இப்படி மொழிப்புலமை புலப்பட மொழி விளையாட்டை நிகழ்த்திக் காட்டியுள்ளனர். இது அப்படியே நிற்கட்டும். பிறகு வருகிறேன். *

பொதுவாகக் கவிதைப் படைப்பில் கொடுக்கப்பட்ட வார்த்தைகளைக் குறியாக் – குறியீடுகளாகக் – கொண்டு வார்த்தைகளுக்கு வெளியே அர்த்தங்களைத்தேடித் தனக்குத் தகுந்ததாக அமைத்துக் கொள்ளும் வாசகமனம். உரைநடை எழுத்திலும் அப்படிக் கதை சொல்லலாய் சொல்லப்பட்ட வார்த்தைகளுக்கு வெளியே அர்த்தங்களைத் தேடி அமைத்துக் கொள்ளக் கோருகிறது. உருவக நாவல் என்று பின்னட்டையில் சுட்டப்பட்டுள்ள “சரித்திரத்தில் படிந்த நிழல்கள்” என்ற நாமம் தாங்கிய இந்த நாவல். “உருவக நாவல்” என்று சுட்டப்பட்டாலும் சாதாரணமான உருவக எழுத்துக்கள் போலக் கோபுரமாய் ஒன்றின் மேல் ஒன்று அடுக்கி எளிதாகக் காட்சியாக்கிக் கொள்ளக்கூடிய உருவக எழுத்தும் அல்ல. இடம், காலம், வினை – எனக் கதைசொல்லலுக்கு ஆதாரமான அனைத்தும் சிதறிக்கிடக்கும் ஒரு முறையில் அமைந்திருப்பதால், கூட்டிப் பெருக்கி அடுக்கும் ‘பொருள்கோள்’ போற்கொள்வது என்பது வாசகருக்குப் பெரும் சவாலாக அமைகிறது. அதாவது வாசகரும் கதைசொல்லிக்கு நிகரான மொழிவளமும் கற்பனை வளமும் சரித்திரப் புலமையும் கைவரப் பெற்றிருந்தாலொழிய பிரதிக்குள் கைவீசி பிரவேசிக்க முடியாது என்ற முறையில் எடுத்துரைப்பு நிகழ்ந்துள்ளது. ஆனாலும் “ஆதாரங்களின் அடிப்படையில் அறிவதைவிட, யூகங்களின் அடிப்படையில் அறிபவர்களுக்குச் சரித்திரம் மிகத் தெளிவாக விளங்கும்” என்று ஓரிடத்தில் கதைசொல்லி நம்புவதால், வாசகரும் பிரதி முழுவதையும் யூகங்களால் வாசித்தறிவதைத் தவிர வேறு வழியில்லை.

இன்றைக்கு இல்லாமல் போய்விட்ட “தெகிமொலாககன்” வாழ்வும் சரித்திரமும் ஓராயிரம் நூல்களிலிருந்து கிடைக்கும் (ப.9) ஆச்சரியத்தை ஒரே நேரத்தில் அள்ளி வழங்கும் வாய்ப்புள்ளவை என்பதால் “வாழ்க்கை ஆச்சரியமற்றுப் போனது” (ப.182) என்று சொல்லத்தக்க அளவிற்கு ஆகிவிட்ட இன்றைய வாசகர்களுக்கு இந்தப் பிரதி ஆச்சரியங்களைத் திரும்பவும் மீட்டுத்தரும் என்ற நம்பிக்கையில் கதைசொல்லி இப்பிரதி எழுத்து முழுவதும் ஆச்சரியமான நிகழ்வுகளைத் தன் கூடையிலிருந்து அள்ளி வைத்துக் கொண்டே போகிறார்.

நிஜத்திலும், பொய்யிலும் ஒரே நேரத்தில் வாழ்ந்தவள் பாக்கியத்தாய்; இமைகளை மூடியவாறே பார்க்கும் ஆற்றல் பெற்றவள். அவள் பெற்ற அம்மிக்குழவி என்று அழைக்கப்பட்ட மலையின் மீது ஒளி, அவன் தம்பி கவிஞன் ‘சொல்லின் பொருள்’, மூன்றாவதாகப் பெற்ற கணத்திலிருந்து மறதிப்பிடியில் சிக்கித் தாயின் நினைவிலிருந்து இல்லாமல் போய்விட்ட மகன், பச்சை நிறமும் ஒற்றைக் கண்ணும் கொண்டு 16000 ராணிகளுடன் வாழும் ராஜன் படைத்தளபதியான கருணாகரத் தொண்டைமான் முதலிய விசித்திரமான கதைமாந்தர்களைப் புனைந்து கொண்டு எடுத்துரைப்பு செய்யப்பெற்ற முறையில் ஒரு சிதறலாக நிகழ்கிறது. மனித வரலாற்றில் 20-ஆம் நூற்றாண்டுத் தமிழர்களின் வாழ்வும் அரசியலும் தலைமைகளும் இப்படி எல்லாமும் காணாத விசித்திரமான சரிநிகர் கோமாளித்தனங்களாக முடிந்து போய் கொண்டு நின்ற தரிசனத்துடனும் வலியுடனும் கூடிய தாங்க முடியாத துக்கத்திலிருந்து இந்தப் பிரதிக்கான தோற்றம் கருக்கொள்கிறது. இத்தகைய  கதைசொல்லி கண்ட இந்தத் துக்கமும் வலியும் வாசகர்களுக்குள் கடத்தப்பட்டிருக்கிறதா?

இப்படி உணர்ச்சிகளைக் கடத்துவதல்ல இலக்கியப் பிரதியின் வேலை; உணர்ச்சிகளுக்குள் தள்ளப்பட்டு இன்பப் போதைக்குள் வீழ்ந்து கிடப்பவர்களின் பணப்பையைக் குறிவைத்து எழுதப்படுபவை அல்ல உன்னத எழுத்து;  உண்மையான எழுத்து என்பது நாடக ஆசிரியர் பிரெக்ட் பார்வையில், பிரதியில் இருந்து பிரதியின் வலைக்குள் வாசகன் விழுந்து விடாமல், தன்னை அங்கிகளாக நிறுத்திக் கொண்டு, அறிவார்ந்த தளத்தில் பிரதியோடான உரையாடலை நிகழ்த்தத் தூண்டுவதுதான். அப்படியான ஒரு வெற்றியை நோக்கித்தான் “சரித்திரத்தில் படிந்த நிழல்கள்” என்ற இந்தப் பிரதியும் என்று கருதுகிறேன். அப்படியான ஓர் உரையாடலை இந்தப் பிரதியோடு எத்தனை சதவிகிதம் நிகழ்த்த முடியும்? என்பதும் வாசகனின் பன்முகப்பட்ட திறம் சார்ந்தது.

கவிதை புனையும் பொய்களால் வாழும் ஓர் இனம் பழமை மேல் மோகம் கொண்டு பொற்காலக் கனவுகளுக்குள் புதைந்து கிடப்பது மக்க என்று முழங்கிக் கொண்டே, ராஜா, ராணிகளின் பாதங்களில் வீழ்ந்து கிடப்பது, பல்கலைக்கழகங்களின் போதாமை, தமிழ் மொழித் துறைகளின் வீழ்ச்சி, இந்துத்துவா கட்டமைப்பும் அடிப்படை வாதம், அரண்மனைக்குள் பணிப்பெண்களின் அதிகாரம் (10), கன்னித்தாயின் புதுமொழிக்கு வர்ணணை மொழி விளக்கம் எழுதத் தயாராகும் மொழி அறிவாளிகள், இடதுசாரிகள் தங்களுடனான தலைமையை அன்னிய தேசத்தில் இருந்து பெற்றது, அண்ணன் – தம்பி என்ற உறவு மேல் ஆடிய ஆட்டம், தத்துவத்தின் மேல் நடந்த வன்கொடுமைகள் நடிகை, நடிகர்களுக்குப் போய் கூனிக்கும்பிடும் சினிமா மோகம் (ப்-106) மொழியையும், பிரதியையும் முன்னிறுத்திக் கொண்டு நிகழ்த்தப்படும் அதிகார அரசியல், அயோத்தி அரசியல் (127) ஏழை வாழ்நிலத்தின் துப்பாக்கிக் கலாச்சாரம் (162) யாழ்ப்பாண நூலகம் எரிந்தது (11) ஒருவனின் தேசப்பற்று மற்றொருவனுக்குத் தேசமில்லாமல் ஆக்கும் கொடுமை, வெறுப்பு அரசியல் – என இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்வாழ்வின் அனைத்து முகங்களிலும் பிரதிக்குள் வந்து போவதை வாசிக்க முடிகிறது.

ஒரு கவிதைக்குள், அதன் அழகியலுக்கான சாவியை ஒளித்து வைத்து விளையாடும் விளையாட்டை நாம் சங்ககால இலக்கியத்திலேயே சந்திக்கிறோம். அத்தகையக் கவிதை விளையாட்டை உரைநடையிலேயும் நிகழ்த்திக்காட்ட முயன்றிருக்கிறார் கதைசொல்லி. இப்படி மொழிமூலம் ஒளித்து விளையாடும் விளையாட்டு நமது அன்றாட மொழியிலும் கூட சிலேடை, பொடி வைத்துப் பேசுதல், சுற்றி வளைத்துப் பேசுதல், குறியாகச் சுட்டுதல் என்று நாம் எதிர் கொள்ளுகிற ஒன்றுதான். இப்படியான உரையாடலின் தேவை என்ன என்று பார்த்தால், கேட்டவரை (அ) வாசகரை உடனே கடந்து போக விடாமல், ‘வாசித்தல்’ நிலைநிறுத்தி உரக்கச் சிந்திப்பற்கான ஒரு வெளியைத் திறந்துவிடுகிற முயற்சியாக எனக்குப் படுகிறது. கூடவே தேடுதல், தான் கண்டெடுத்தல் என்ற தனித்தன்மையையும் தன் முனைப்பாற் பிறக்கும் வாசிப்பிற்கும் வாய்ப்பாகப் பிரதி தோன்றுகிறது. திருஞான சம்மந்தரின் அந்தப்பாடலை இப்பொழுது பார்ப்போம். அது ஏதாவது புரிந்ததா என்றால் இல்லைதானே! ஆனால் மொழித்திறம் முட்டறுத்து நின்று, நிதானித்து அறிய முயலும் போது அதன் அர்த்தம் இப்படிப் புலனாகிறது;-

  • யாம் ஆமா – யாம் ஆன்மா எனும் பசு, ஜீவாத்மா
  • நீ ஆம் மாமா – நீ பெரிய ஆன்மா, பரமாத்மா
  • யாழ் ஈ காமா – யாழிசை நல்கிய என் ஆசைப் பொருளே
  • காணாகா – இப்படியெல்லாம் கண்டு, என்னைக் காப்பாற்று
  • காணாகா – இப்படியெல்லாம் பார்த்துக் காணாமல் என்னைக் காப்பாற்று.
  • காழீயா – சீர்காழியானே!
  • மாமாயாநீ – அம்மை அம்மை ஆம் நீ!
  • மாமாயா – இத்தகைய பெரிய மாயமானவனே!

இந்தப்பாடலை முதலிலிருந்து வாசிப்பது போலவே, கடைசியில் இருந்து வாசித்தாலும் மாறாமல் அதே வார்த்தைகள் வரிசையாக வரும்; எனவே இது மொழிமாற்று. இப்படி எழுதுவது மொழிப்புலமை சார்ந்த ஒரு விளையாட்டு. இந்த விளையாட்டு வாசகரை, எளிதில் கடந்து போய் விடாமல் அதிலேயே நிலைநிறுத்துவது என்பது உண்மை. கவிதையை அதன் அறிவார்ந்த நடவடிக்கையாக மாற்ற முடிகிறது. அதே நேரத்தில்,

‘மாசறு வீணையும் மாலை மதியமும்

மூசு வண்டறைப் பொய்கையும் போன்றதே

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

ஈசன் எந்தன் இணையடி நீழலே!’ (அப்பர்)

என்று கவிதையிலும் ஓர் அனுபவத்தைத் தருகிறார்.

அறிவெனும் பயங்கரத்தில் இருந்து தப்பிக்கத்தான் கலை இலக்கியத்திற்குள் வருகிறோம். இப்படி அனுபவிக்க வழிவிடாது மீண்டும் பகுத்தறிவிற்குள் பிடறி பிடித்துத் தள்ள முயலுவது எந்த அளவிற்குச் சரி என்ற வினா எனக்குள் எழுகிறது. சங்க இலக்கிய அகப்பாடல்கள் போல அடையாளம் எனச் சொல்லத் தோன்றுகிறது, வெறும் உணர்ச்சி மயமாகவும் இல்லாமல் அதே நேரத்தில் ஞானசம்பந்தர் பாடல் போலப் புலமை விளையாட்டு மையமாகவும் இல்லாமல் ஒரு ‘நடுநிலைமையில்’ பிரதி அமைவது தான் அழகு எனப்படுகிறது. “சரித்திரத்தில் படிந்த நிழல்கள்” என்ற இந்த உரைநடைப்பிரதி அப்படி அமைந்திருப்பதால் பெருவாரி வாசகர்களுக்கானதாக வளர்ந்திருக்கும். இப்பொழுது அது புலமையாளர்களுக்கான (கைவிட்டு எண்ணக்கூடிய) பிரதியாக நிற்கிறது. இங்கே – தஞ்சாவூரில் – நடப்பது போல ஒவ்வொரு நகரத்திலும் இப்பிரதி குறித்த உரையாடலை உருவாக்கினால் ஒருவேளை அனுபவம் பெறுவதற்கான பிரதியாக மாறவும் கூடும்; வலியிலிருந்து பிறந்தது என்பதால் அதற்கான சாத்தியப்பாடுகளோடுதான் ‘பிரதி’ வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க நல்ல அம்சம்!

*எந்தவொரு உன்னதமான இலக்கியப் பிரதியும் வாழ்வின் வலியையும் துக்கத்தையும் வாசகனுக்குள் எழுப்புவதாகத்தான் இயங்குகிறது. ‘வலி தராத இசை வெறும் சத்தம்; இசை ஆகாது’ என்ற பொருளில் ஒரு கஜல் உண்டு. எள்ளல், நையாண்டி, அங்கதம் என்ற ஒரு வகையான எடுத்துரைப்பு கூடத் துக்கத்தின் துணையோடு தான் வலுப்பெறுகிறது; சார்லி சாப்ளின் எடுத்துரைப்பு இந்தக் கூற்றுக்குச் சரியான சான்று. “சரித்திரத்தில் படிந்த நிழல்கள்” என்ற பிரதியில் அப்படியான நையாண்டி நடை ஊடாடுகிறது. “சிறந்த இலக்கியங்களில் முக்கால் வாசியும் கவிதை இலக்கியம் தான். எனவே அடுப்பு ஊதும் போதும், காலை நேரங்களில் மகிழ்ச்சியுடன் வீதியெங்கும் எதிர் எதிரே அமர்ந்து மலம் கழிக்கும் போது கூட கவிதைகள்சொல்லி ஆனந்தப்பட்ட இன்பமாகத் தெகிமொலாக்களைக் கூறுவார்கள்” (19) என்று எழுதும் போது இந்த நையாண்டியை நேரடியாக பார்க்க முடிகிறது. ஆனால் நையாண்டி நடையைப் பற்றிச் சொல்லும் போது சொல்லுவார்கள்.

ஊசி போலப் பாயும் ஒரு நையாண்டியை உருவாக்க, ஓராயிரம் ஊசிகளால் ஓராயிரம் தடவைக் குறிப்பிட்ட அனுபவம் தேவைப்படும் என்பர். இந்தப் பிரதியின் கதைசொல்லி அப்படியான ஊசிகளால் குத்தப்பட்ட அனுபவத்தை உணர்ந்ததன் விளைவு தான் இந்தப்பிரதி என்பதை யூகிக்க முடிகிறது. ஆனால் அந்த வலியை வாசகர் என்ற முறையில் உணர முடியவில்லை. புலமை சார் மொழி விளைவுதான் தீவிரம் அப்படி இருக்கிறது. முன்பே சுட்டிக்காட்டியது போல வாசகனின் இதயத்தைக் குறி வைக்காமல் மூளையைக் குறிவைத்து  இலக்கியப் பிரதி உருவாக வேண்டும் என்ற பண்பு தான் காரணம். இத்தகைய சோதனை எழுத்துகளுக்கு ‘அடிப்படையாகத் தேவைப்படும், வாசகர்களையும் பார்த்தல் – உருவாக்குதல் – என்ற வேலைப்பாடுகளும் தீவிரமாகச் செயல்படும்போது இந்த முயற்சி வெற்றி பெறலாம். அந்த வேலைப்பாட்டின் ஒரு பகுதி தான் இத்தகைய ‘கலந்துரையாடல்கள்’ என்றே நம்புகிறேன்

உலகத்தரத்தில் லதாவின் கதை த்தொகுப்பு

உலகத் தமிழ் இலக்கியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிங்கப்பூர் எழுத்தாளர் லதாவின் கதைகள்

தமிழவன்(சிற்றேடு இதழில் வெளியான கட்டுரை)

 

லதா அவர்கள் (கனகலதா) சிங்கப்பூரிலிருந்து வருகிற தமிழ்முரசு இதழின் செய்தி ஆசிரியர். இவருடைய “நான் கொலை செய்யும் பெண்கள்” என்ற சிறுகதைத் தொகுப்பில் பத்துக் கதைகள் உள்ளன. பொதுவாக, சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களிலிருந்து வரும் சிறுகதை, நாவல், நாடகம் போன்றன தமிழகத்திலிருந்து வரும் எழுத்துக்களின் நகலாக அமையும். அதனால் சீரிய இலக்கிய முயற்சிகள் இந்நாடுகளிலிருந்து எதிர்பார்க்க முடியாது என்று ஓர் எண்ணம் தமிழகத்திலுள்ள சீரிய வாசகர்கள் மத்தியிலுள்ளது.

அதனைப் பொய்யாக்குவது போல் இத்தொகுப்பு அமைந்துள்ளது.

இந்தப் பத்துக்கதைகளையும் படித்தபோது தமிழடையாளம், தமிழ்ப்பண்பாடு, தமிழர் மதம், பழக்க வழக்கம், உணவுமுறை, பிறரோடு – சீனர்களோடு – அல்லது ஆப்பிரிக்கர்களோடு, முஸ்லீம்களோடு வைத்துக்கொள்ளும் உறவு போன்ற முக்கியமான பண்பாட்டு அடையாளங்கள் அலசலுக்குட்பட்டிருப்பதைப் பார்க்கலாம். தமிழகம் இந்தியாவோடு சேர்ந்த பின்பு, பிற கலாச்சாரங்களுடன் தமிழ்ப்பண்பாடு உடனுறைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தமிழகக் கிராமங்கள் தமிழர்களின் நம்பிக்கை, சாதி, வழிபாடு, உணவு போன்றவற்றைக் காலங்காலமாக மாறாமல் வைத்திருந்தாலும் தமிழகத்தின் எல்லைகளில் பிறமொழியினர் வந்து தமிழுக்குள் மாற்றங்களை உருவாக்குகின்றனர். நவீனத் தமிழகத்தில் எல்லைப் பிரச்சனையை முக்கியப்படுத்திய முன்னோடிப் போராட்டக்காரர்களான ம.பொ.சி.யையும், நேசமணியையும், தமிழ் அடையாள அரசியலின் மையத் தலைவர்களாக்க வேண்டும். எல்லைப் பிரதேசங்களில் தமிழ்ப் படைப்புக்கள் உருவாக்கும்போது மொழி ஒரு பிரச்சனையாக்கப்பட வேண்டும். குமரி மாவட்டத்தின் படைப்பில் தமிழ் மரபில் மலையாள மரபை எந்தளவு அனுமதிக்க முடியும் என்ற விவாதம் தற்சமயம் தோன்றியுள்ளது. இது விரிவுபட வேண்டும். ஏனெனில் குமரி மாவட்டத்தில் உள்ள கலப்பு எழுத்தாளர்களைத் தமிழக, மையப் பண்பாட்டுக்குள் இருப்பவர்கள் புகழவும், தங்கள் முன்மாதிரிகளாக வர்களைச் சித்திரிக்கவும் ஆரம்பித்துள்ளனர். கண்ணகியைப் பகவதியாகக் கற்பனை செய்யும் படைப்பெழுத்தாளர் தமிழ் மரபை உள்வாங்கியவர் அல்லர். எனவே, பிற கலாச்சாரங்களோடு நவீன தமிழ்ப் பண்பாடு கொள்ளும் தொடர்பை மைய விவாதம் ஆக்கும்போது பல பிரச்சினைகள் ஏற்படு கின்றன.

 

லதா அவர்களின் கதைகள் தமிழகத்து மலையாளி எழுத்தாளர்களிடம் நாம் பெறமுடியாத ஆழத்தைக் காட்டி நம்மை அதிசயப்படுத்துகின்றன. இன்றைய இந்தியாவின் பிற பண்பாடுகளைத் தமிழர்கள் மதிக்க வேண்டும்; தன் கலாச்சார வேரை மதித்தபடியே பிறவற்றை, பிற என்று கருதி மதிக்க வேண்டும். லதாவின் கதைகள் கதை சொல்லும் போக்கிலேயே இங்கு நாம் சுட்டிக்காட்டும் பிரச்சினையைப் படைப்பியல் நோக்கில் அணுகுகின்றன – கதைகளை அவற்றின் போக்கில் விட்டுக் கையாள்வதால் அவை முன்கூட்டிய சுய பண்பாட்டு நிலைப்பாட்டை உடைத்துச் செல்கின்றன. தமிழன், அல்லது தமிழ் இந்து இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற முன்தீர்மானம் எந்தக் கதையிலும் உருவாகவில்லை என்பதுதான் கதைகளின் அழகியல் தளத்தின் வழிக்கதைகள் செயல்படுகின்றன என நாம் கூறுவதற்கான காரணம். இதுதான் லதா அவர்களின் கதைகளைப் “புதிய சிங்கப்பூர் கதைகள்” என்று அழைக்க வைக்கின்றன. என் போன்றோருக்கு வேறு கதைகள் இக்கதைகள் போல் படிக்கக் கிடைக்கவில்லை என்பதை வெளிப்படையாகக் கூறமுடியும். கதை ஏற்படுத்தும் வாசக மனச்சலனம், விரைவில் கதைகளின் புனைவினால் வேகம் பெற்று ஒரு அரசியல் தளமாய் விரிகிறது. அது புதிய அர்த்தப் பிராந்தியத்தை ஏற்படுத்திப் பழைய மதிப்பீடுகளை இடைநீக்கம் (suspend) செய்கிறது.

 

சில கதைகளைப் பார்க்கலாம். முதல் கதையான அடையாளம் என்ற கதையில் மலாய் டாக்ஸி ஓட்டுநன் ஒரு சிங்கப்பூர் தமிழ்ப்பெண்ணைப் பார்த்து “யு கம் ஃப்ரம் இண்டியா? கம் டூ ஹவுஸ் வர்க்?”  என்று கேட்கிறான். அதே பெண்தான் கணவனால், அவன் குடும்பத்தால் “மெய்ட்” போல் வேலை வாங்கப்படுவதைச் சித்திரிக்கும் கதை இது. இங்கே ஏன் யாருமே தனக்கு நெருக்கமாயில்லை? ஒருவேளை தன்னால் தான் இந்த ஊர் மக்களை, அவர்கள் வாழ்க்கையை நெருங்க முடியவில்லையோ? என்று நினைப்பவளுக்குச் சிங்கப்பூரில் தனக்குத் திருமணமாகும் முன்பு இந்தியாவில் தெரிந்த நண்பனின் நினைவும் வருகிறது. கடைசியில் கதை, “ஐ ஆம் சிங்கப்பூரியன்”, ‘அவளுக்கு அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை’ என்று முடிகிறது. தமிழர்களுக்குள்ளேயே, தமிழகம், சிங்கப்பூர் என்பதான உள்வேறுபாடு வெளிப்படுகிறது இக்கதையில். ஒரே மூலத்திலிருந்து கிளை பிரிந்த முற்றிலும் முரண் படாத இரு தமிழ்ப் பிரிவுகளை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்று கதை சர்ச்சிக்கிறது. தமிழ்ப்பண்பாடு, குடும்பம், உறவு போன்றன உலகமயமாகும்போது ஏற்படும் பிரச்சனைகள் வருகின்றன. சிங்கப்பூர் தேசியத்தின் வேர்களும் அலசப்படு கின்றன. சிங்கப்பூர் தமிழன் என்ற புதிய தேச எல்லைக்குள் ஏற்படும் குணவிளக்கம் 2000 ஆண்டு தமிழிலக்கியத்தில் இல்லாதது. இங்குத் தன்னைப் புது அம்சமாக அது அறிமுகப்படுத்துகிறது.

 

“தமிழுக்கு அமுதென்று பேர்” என்ற கதை, தமிழ்மொழியானது உலகத்தில் அழிந்தபிறகு 2200 ஆண்டில் நடக்கிற கதை. எதிர்கால நோக்கில் நடக்கும் விஞ்ஞானக் கதை போன்ற உத்திகளுடன் எழுதப்பட்ட அபூர்வமான கதை இது. கம்ப்யூட்டர் மூலமே பாத்திரங்கள் பேசுகிறார்கள். “எனக்கு நீ ஓதுக்குகிற இந்தச் சில விநாடிகளைக் கூட உன்னோட கணினியால பொறுக்க முடியலியா?”  என்று கதை சொல்லியான பெண் பாத்திரம் பேசுகிறது. பேச்சு தொடர்கிறது:

 

“நான் இந்தியா போகணும்” என்கிறாள். எதற்கு என்றால் அவளுடைய மகனுக்குத் தமிழ் கற்றுக்கொடுக்க. கணவன் “இந்தியாவில் தமிழ் கற்றுக் கொடுக் கிறார்களா?” என்று சாதாரணமாகக் கேட்கிறான். அதற்கு அவள் “நான் கண்டுபிடிச்சேன், கணினி மூலம். தமிழ் தெரிஞ்சவங்க இருக்காங்களாம். ஆனா அவங்களுக்கும் எழுத்துத் தெரியாதாம். பேசமட்டுந்தான் தெரியும்” என்கிறாள். ஆனால் குழந்தை, தமிழ்ப்படிப்பு இல்லை என்று சொல்கிற பள்ளியை விரும்புகிறது. கடைசியில் ஒரு ஜப்பானியரை அழைத்து அவருக்குப் பழைய மொழிகளை எழுதத் தெரியும் என்பதால் தமிழ் எழுத்துக்களை அவள் வைத்திருக்கும் வடிவப் பிரதியைப் பார்த்து எழுத வேண்டும் என்று கேட்கிறாள்.

 

இக்கதை தமிழுக்கு என்ன நடக்கப் போகிறதென்று யூகித்து எழுதப்பட்ட கதை. கதையின் இடையில் ஓரிடத்தில் மகன் படிக்கும் பள்ளிக்கூடத்தை நடத்தும் குழு தமிழை நிறுத்திவிடலாம் என்று முடிவு செய்கிறது. ஏனெனில் தமிழ் கட்டாய பாடமில்லை என்று கதையில் ஒரு பகுதி வருகிறது. இன்று தமிழ்நாட்டில் வைகைச்செல்வன் என்ற அமைச்சரும் தமிழக முதல்வரும் எடுத்துள்ள நிலைப்பாட்டை ஒரு சிங்கப்பூர் பெண் எழுத்தாளர் எதிர்காலத்தில், நடக்கப் போகிற தமிழ்மொழி அழிப்புச் செயல்பாடு என்று 2007-இலேயே எழுதி வைத்திருக்கிறார், ஆச்சரியமாக இருக்கிறது.

 

தமிழின் பயன்பாடு அருகி வரும் நாடுகளில் வாழும் எழுத்தாளர்களுக்கு மட்டுமே ஏற்படக்கூடிய இந்தக் கற்பனையைப் பத்துக்கோடி தமிழர்களும் தெரிந்து கொள்ள வேண்டும். இக்கதையை இணையத்தளத்தில் தமிழர்கள் பரப்ப வேண்டும். சிங்கப்பூர் தமிழர் ஒருவரின் கற்பனை இது. தமிழகத் தமிழர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒரு தற்கால நிலமையை 2200-இல் தான் நடக்கப்போகிறதென்று இந்த எழுத்தாளர் எழுதியுள்ளார். ஆனால் இன்றைய அரசு சுமார் இருநூறு ஆண்டு களுக்கு முன்னாலேயே தமிழுக்கு விபத்தை உருவாக்கியிருக்கிறது.

 

இத்தகைய எழுத்துக்களைப் பார்க்கும்போது தமிழகத்துச் சிறுகதைகளைப் போல முதிர்ச்சியும் உத்தி சிறப்பும் பிறநாடுகளின் தமிழ் எழுத்தாளர்களுக்கும் வாய்க்கப்பெற்றிருக்கிறதென்று அறிகிறோம். ஆனால் இந்த எழுத்தாளர்களுக்குக் கொடுக்க வேண்டிய மதிப்பையும் தகுதிச் சான்றையும் தமிழகம் கொடுக்கவில்லை. தமிழக ஊடகங்கள், பல்கலைக்கழகங்கள், பிற நிறுவனங்கள் இத்தகைய அற்புதமான எழுத்தாளர்களையும் அவர்களின் ஜீனியஸையும் கண்டுகொள்ளாத அளவு மூடத் தனமும் உணர்வின்மையும் கொண்டு செத்துப் போயுள்ளன. உலகத் தமிழிலக்கியம் என்ற கருத்தாக்கத்தை வளர்த்தி எடுக்க வேண்டும். தமிழகப் பண்பாட்டைச் சொல்வது போல் பிற பண்பாடுகளைப் பற்றிச் சொல்வதிலும் தமிழ் புதுச்செழிப்புடன் வளரு கின்றது.

 

அடுத்ததாகத் தமிழில் வாசிக்க விரும்பும் உலகத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த நான் விரும்பும் கதை “முகாந்திரம்” என்பது. இதன் கதையாடல் (கதை சொல்முறை) அமைப்பு, ஆழமாகிச் சிக்கல் கொண்டதாக இருந்தாலும் சிங்கப்பூரின் தமிழர்களும் தமிழ் முஸ்லீம்களும் ஒற்றுமையாய், குடும்ப உறுப்பினர்கள் போல் வாழ்ந்த பழங்காலத்திலிருந்து மும்பாய் குண்டுவெடிப்பு வரை நீள்கிறது. உலக முஸ்லீம் மற்றும் பிற மக்கள் மத்தியில் இக்காலகட்டத்தில் ஏற்பட்ட கலாச்சார, ஆச்சார, நடைமுறை மாற்றங்களைக் கூறுகிறது இக்கதை. மனதைத் தொடும் வளர்ச்சிப் பிரவாகமாய் கதை முன்னோக்கி நகர்கிறது. எல்லோரோடும் சகஜமாகப் பழகிய ஒரு பாத்திரத்தின் தற்கொலையைச் சுற்றி, பூடகமாய்க் கடைசி வரை எதற்காகத் தற்கொலை செய்தாள் என்ற கேள்விக்கு விடை வருவிக்கப்படாமலே கதை முடிகிறது. இந்துக்கள் அதிகம் இந்துவாகிறார்கள். முஸ்லீம்கள் அதிகம் ஆசாரவாதி முஸ்லீம்களாகிறார்கள். ஒரே குடும்பத்து உறுப்பினர்களாய், குழந்தையிலிருந்தே பழகியவர்கள் மனஅளவில் தமிழ் இந்து – முஸ்லீம் என்று பிரிக்கிறார்கள். இந்தியாவில் இந்துத்துவக் கட்சி ஒன்று உருவாகும்போது – அது தமிழகத்தைப் பாதிக்காமலிருக்கலாம் – ஆனால், தென்கிழக்காசியாவை முழுதும் பாதிக்கிறது. மலேசியாவில் சிங்கப்பூரில் இந்தியர்கள் என்றால் தமிழர்கள். ஆனால் இந்த இலங்கை, மலேசியத் தமிழர்களுக்கு இந்தியாவில் – டெல்லியில் ஆளுபவர்களுக்கு ஈழம் போன்ற பிரச்சனையில் தமிழர்கள் இந்தியர்கள் இல்லை என்ற மனோபாவம் இருப்பது தெரியாது போலிருக்கிறது. லதா அவர்களின் கதை திடீரென்று தென்கிழக்கு ஆசியப் பிரச்சனைகளைப் பேசும் ஊடகமாகி பெருவிரிவு பெறுகிறது. இந்தப் பரிமாணம் மிகச்சிறந்த தமிழகக் கதைக்கும் கூட இல்லாத ஒரு விஷயமாகும் என்று பதிவு பண்ண விரும்புகிறேன்.

 

இந்தக் கதை பல கதைப்பாத்திரங்களின் குரலில் பேசுகிறது. அதுபோல் உரையாடல் மூலம் கதை நகர்த்தப்படும் உத்தி அதன் தீவிர எல்லைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது லதாவால் இக்கதையில். முஸ்லீம் பெண்தோழியும் இந்துத் தோழியும் குழந்தையிலிருந்தே ஒன்றாய் வளர்க்கப்பட்ட பின்னனி லேசாய்ச் சிதைய ஆரம்பித்துள்ள சூழ்நிலை கீழ்வரும் உரையாடலில் வருகிறது.

 

“ரொம்ப வேல செரீன் (முஸ்லீம் பெயர்). தேவாரங்களைத் தொகுத்தாச்சு. அதை டைப் செய்யணும். அதுக்குக் கூட நேரமில்லை”

 

“நான் செய்து தரலாம் ஆனா நீங்க ஒத்துக்க மாட்டீங்க”

 

“உனக்கு என்ன ஆச்சி செரீன்”

 

“திடீர்னு ரொம்ப பயமாயிருக்கு சென்னா”

 

இப்படி உரையாடல், புரியாமையைக் கூட, பொருட்படுத்தாமல் கதையின் தீவிர மையத்தின் சக்தியால் தொடர்கிறது.

 

லதா அவர்களின் உரையாடல் அவ்வளவு ஆற்றலுடன் அதே நேரத்தில் பல பண்பாடுகளை இழுத்து வரும் வாகனமாய் அமைகிறது. ஓர் உதாரணம்: பயணம் என்ற கதை. பழைய தமிழில் ஒரு சக்தி வாய்ந்த கவிதைச் சொல்முறை உண்டு. பழைய தமிழ்ப் படித்தவர்கள் அதனை “கூற்று” என்று அழைப்பார்கள். அதுபோல் லதாவின் கதையில் அந்தக் கூற்று (உரையாடல்) ஒரு தத்துவ உயரத்தில் கதையின் உள்பிரதியை (sub-text) உயர்த்தும் முறையில் அமைந்துள்ளது. அது நமக்குத் தெரியாமல் ஒரு தொனி அர்த்தத்தை வாக்கியங்களுக்கிடையில் நுழைக்கிறது.

 

சீன கார் ஓட்டுநன் பேசுவதை லதா முன்வைக்கிறார், பாருங்கள்:

 

“உனக்குத் தமிழ் தெரியுமா?”

 

“தெரியாது”

 

“தமிழ் காசெட் வாங்கி வைத்திருக்கிறாய்”

 

“பயணிகளுக்காகத்தான். பார் நிறைய காசெட் வாங்கி வைத்திருக்கிறேன். வயதானவர்களுக்கு இது. இளைஞர்களுக்கு இது. பெண்கள் என்றால் இந்த காசெட்”.

 

முன்னால் சாய்ந்து அவனோடு பேசத் தொடங்கினேன்.

 

அவன் திடீரென்று “சாரி” என்றான்.

 

“எதுக்கு?”

 

“உள்ளே சாப்பாடு வச்சிருக்கேன்”

 

“அதனாலென்ன? பரவாயில்லை”

 

“இன்று வெள்ளிக்கிழமை. நீங்கள் சாமி கும்பிடுவீர்கள். இது மாடு. வாடை அடிக்கும் நீ பூ வாங்கி இருக்கிறாய் தானே”.

 

”ஆமாம். பரவாயில்லையே நீ இந்தியர்களைப் பற்றி நிறைய தெரிந்து வைத்திருக்கிறாய்”.

 

இப்படி பல்வேறு மொழி, மத, சம்பிரதாயங்களைச் சங்கமிக்க வைக்கிறது லதா அவர்களின் சிறுகதைகளின் ஆற்றல் வாய்ந்த உரையாடல்.

 

இன்னொரு கதையைப் பற்றிச் சொல்லாமல் லதாவின் கதைகளைப் பற்றிய இக்கட்டுரையை முடிவுக்குக் கொண்டுவர முடியவில்லை.

 

“மழை – அப்பா” என்ற தலைப்பில் ஒரு கதை. அப்பா அழுக்காடையுடன் இருக்கிறார். மகள் வேறு ஒரு சுத்தமான உலகில் வாழ்கிறாள். ஒருநாள், “என் அப்பா என்று அறிமுகப்படுத்தவே நான் கூச்சப்படும், கூட நடந்து செல்லவே வெட்கப்படும், இவருக்குப் போய் மகளாய் பிறந்தேனே என்று தினமும் நான் வேதனைப்படும் அப்பாவா….. அப்பா ரேடியோ கேட்பாரா?” என்று மகள் ஆச்சரியப்படும் அப்பா, சந்திரனுக்குப் போகும் நீல் ஆம்ஸ்ட்ராங் பற்றிப் பேசுகிறார். ஒருநாள், எப்போதும் பீர் குடிக்கும், அழுக்கு ஆடையுடன் இருக்கும் அப்பா, சிகரெட் குடிக்கும் அவளை அழைத்துப் பேசுகிறார். அவர், அவளுக்குக் காப்பி கலக்கிக் கொடுத்தபோது, அவர் குவளையைக் கழுவியிருப்பாரா என யோசிக்கிறாள் மகள். தந்தை மலேசிய தோட்டத்திலிருந்து நகரத்துக்கு வந்த மகளுடன் இருக்கிறார். அவர் சொல்கிறார்:

 

“நான் கலக்கினா நீ குடிக்க மாட்டேன்னு தெரியும். ஆனா காலேலேர்ந்து வெறும் வயித்தோட இருக்கிற. அதான் கலக்கினேன். அவ வேலுச்சாமியோட தான் போயிருக்கணும்” என்று அவரது மனைவி ஓடிப் போனதைச் சொல்கிறார்.

 

அவளுக்கு அப்போது மட்டும் கண் கலங்குகிறது. அதன்பிறகு 16 ஆண்டுகள் தந்தை மகளிடம் அம்மா பற்றிப் பேசவே இல்லை, என்று கதையாசிரியர் எழுதுகிறார். ஓவர்டைம் வேலை செய்ததில் ஏற்பட்ட முதுகுவலி சுளீரென்று உறைக்க வருமானத்தை தாண்டிய செலவுகள் பற்றி மகள் நினைக்கிறாள்.

 

தமிழ் மக்கள் வேறுநாட்டில் அவர்களின் அழுக்குப்பிடித்த தந்தைமாரை நினைத்தபடி வாழ்வதையும் தந்தை மகளுக்குள் இருக்கும் வேறுபாடுகளையும் சொல்லும் கதை இப்படி முடிகிறது:

 

“முப்பது வருஷம் முன்னாடி ஒருநாள் இப்படி மழைபெய்தபோதுதான் நிலவுக்கு அப்பொல்லொ போச்சுது”

 

கதைசொல் முறையாலும் உரையாடல் அமைப்பாலும் கவனத்தைக் கோரு கிறது. சிங்கப்பூர் போன்ற இடங்களில் உள்ள ஓரளவு பணம் புழங்கும் குடும்ப வாழ்க்கையில், முந்திய தலைமுறையில் அழுக்கும் தாய் ஓடிப்போனதை நினைவில் கொண்டு வராமலும் வாழும் வாழ்க்கை அச்சடையாளமாகப் பதிவாகிறது. இந்தியா வில் தமிழக மத்தியதர வாழ்க்கையும் சென்னை, பெங்களூர் – நகரங்களில் நடை பெறும் வாழ்க்கையும் லதா சித்தரிப்பதுபோல் – கதைகளாகவில்லை என்பதையும் நாம் மறப்பதற்கில்லை.

 

இதுவரை சில கதைகளை மட்டுமே இங்கு அறிமுகப்படுத்தியுள்ளேன். “நாளை ஒரு விடுதலை” என்ற கதையில் வீட்டுவேலை செய்கிறவள் கஷ்டங்களுக்கிடையில் கடைசியாக வீட்டு எஜமானனின் உடல் பசிக்கு இணங்கும்போது “நமக்கும் தான் வேண்டியிருக்கிறதே” என்கிறாள். “இதுவரை” என்ற கதை விமான ஓட்டியான கதை சொல்லியின் கஷ்டங்கள், நினைவுகள், முடிவு என அமைகிறது. வீடு, அறை என்ற இரண்டு கதைகளும் இடத்தோடு மனித உயிர்கள் கொள்ளும் உறவு பற்றிச் சொல் கின்றன. படுகளம் என்ற கதை சமயம், புராணம் இவற்றில் ஊறிப்போன வாழ்வு வழி பாட்டை தன்னிலிருந்து வேறுபடுத்தாமல் அவையாகவே மாறிவிடும் பாத்திரத்தைக்  காட்டுகிறது.

 

உலகத் தமிழ் இலக்கியம் என்ற எதார்த்தம் உண்மை உருவாகிவிட்டது. இவற்றை ஆய்வு செய்ய, விவாதிக்கப் போதிய பயிற்சி, தமிழ்ச் சமூகத்தில் இல்லை எனினும் லதாவின் கதைகள் உலகத்தரமான தமிழ்க்கதைகள் என்று தயக்கமில்லாமல் கூறலாம்

தமிழவனின் இரு புனைவுகள் பற்றி மிகாத் விமரிசனம்.

தமிழவனின் ” ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் ” மற்றும் ” ஜீ.கே எழுதிய மர்ம நாவல் ” ஆகிய புனைவுகள் குறித்து மிஹாத் முன்வைத்த கருத்துகள்.
________________________________________

தமிழவன் தற்போதைய தமிழ் எழுத்துச் செயல்பாடுகளின் முக்கியமான ஆளுமைதான். தமிழின் அண்மைக்கால மரபார்ந்த அணுகுமுறைகளைத் தகர்த்தெறிந்து அங்கு புதுவிதமான எழுத்து முறைமைகளை அறிமுகம் செய்தவர்களில் முதன்மையானவர். எண்பதுகளின் ஆரம்பத்தில் இலக்கியப் புனிதப் பிரதியாக தன்னை நிலை நிறுத்தும் தோரணையில் தமிழின் பிற எழுத்துக்களை மோசமாக எள்ளலாடியபடி வெளிவந்த “ஜே ஜே : சில குறிப்புகள் ” வாசகர்கள் மத்தியில் ஒரு காய்ச்சலை ஏற்படுத்தியது. அதுவரையிலான புனைவுகளை விட அது எடுத்துரைப்பிலும் வடிவக் குறிப்புகளிலும் சற்று மாறுபட்டிருந்ததை பலரும் வியந்து பார்த்தாலும் அது அக்காலத்தில் தோற்றம் பெற்றிருந்து புதிய இலக்கிய வழிமுறைகளை ஏற்றுக்கொள்ளாமல் ஒருதலைப் பட்சமான எழுத்ததிகாரமொன்றை வலியுறுத்தியது. அதன் புனிதப்படுத்தல் உண்டாக்கிய மூளைச்சலவையில் மயங்கியிருந்தவர்களின் பித்தினை கலைத்து விடும் விதமாக அடுத்த சில வருடங்களில் வெளிவந்த புனைவுதான் தமிழவனின் ” ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் ” என்பதாகும்.

கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் உலக இலக்கியக் களத்திலும் பண்பாட்டின் நடைமுறைகளிலும் தீவிரமாக நிலைகொள்ள முயன்ற புதுவிதக் கோட்பாட்டு மாற்றங்களின் தமிழ் அடையாளமாக தமிழவன் போன்றவர்கள் செயல்பட ஆரம்பித்த நேரமது.

ஏற்கனவே தமிழ் மனதில் பீடித்திருந்த பொதுப்புத்தி சார்பான பார்வைகளை சிதறடிக்கும் எழுத்தாகவே தமிழவனின் ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் எனும் கதையை விபரிக்க வேண்டும்.

மொழியின் மீதான பிந்திய கால புரிதல்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு எழுந்த கதையாக இதனைக் குறிப்பிடலாம். அதேவேளை கடந்த நூற்றாண்டில் பிரபலமடைந்த லத்தீன் அமெரிக்க எழுத்து வடிவ பாதிப்பாகவும் தமிழவனின் கதை அமைந்திருந்தது.

மொழி பற்றிய பிந்திய கால புரிதல் என்பதனை நாம் விளங்கிக் கொள்ளாமல் எழுத்துகளை அணுகுவது குறைபாடு மிக்கது எனக் கருதுகிறேன்.அதுமட்டுமல்லாமல் தமிழவனின் எழுத்துகளைப் புரிந்து கொள்ள அது அவசியமானதும் கூட. அதனால் அவை பற்றிய சிறியதொரு அலசல் அவசியமாகிறது.

மொழியில் அர்த்தம் என்பது நிரந்தரமற்றது.
அது எப்போதும் மாற்றமடையக் கூடியது.

எதார்த்தம் என்பது போலியானது. அதுவும் குறிப்பிட்ட படைப்பொன்றில் தற்செயலாக உருவாகுவது.

புனைவு என்பது பன்மையான சாத்தியங்களை உருவாக்கிக் காண்பிக்கும் செயல்தான் என்பது போன்ற அறிதல்களை முன்கொண்டு செல்லும் பரந்து பட்ட பரிசீலிப்புகளூடான வாசிப்பையும் எழுத்தையும் சகஜமாக அணுகும் ஒரு நிலையிலிருந்தே எனது கருத்துகளைப் பகிர விரும்புகிறேன்.

“ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் ” எனும் புனைவு ஆனது வெளிவந்து முப்பது வருடங்களாகிறது. அதன் கட்டமைப்பு பல்வேறு காரணங்களின் அடிப்படையில் இன்றளவும் ஆச்சரியங்களை நிகழ்த்தும் ஒன்றாகவே இருக்கிறது.

வெகு மக்களின் பொதுவான புரிதல் என்னும் அடிப்படை வழிகளுக்குள் நுழைய முடியாத உருவகங்கள் மற்றும் குறியீடுகள் மூலமாக சராசரியான மதிப்பீடுகளை சீர்குலைத்து விடும் கதைமொழி இந்நாவலின் தனித்துவமாகும்.

இதில் தமிழ் மனதின் நிலவியலும் அதன் பண்பாடுகளுக்குள் ஊறியிருக்கும் அரசியல் தன்மைகளும் ஒரு விதமான hyper events ஆக மாற்றப்படுகின்றன.

இதன் மூலம் ஒரு தளத்தில் அந்நியத்தன்மையாக உணரப்பட்டாலும் வேறு வகைப் பார்வையில் அரசியல் எள்ளலாகவே வடிவமைகிறது.

அத்துடன் காட்டூன் சலனப் படங்களில் மிக நேர்த்தியாகக் கையாளப்படும் அமானுஸ்ய சாகசங்களை எழுத்துகளுக்குள் படிமமாக மாற்றி அதன் மூலம் புதுவகை நகல் உண்மைகளை உண்டாக்கி தமிழ் வாழ்வின் புறக்கணிக்கப்பட்ட பண்பாட்டு அர்த்தங்களாக மீட்டுருவாக்கம் செய்கிறது.

ஒற்றை மத அடையாளமாக இந்தியாவை வடிவமைக்க முயலும் பாசிச சக்திகளுக்கு எதிரான இலக்கிய எடுத்துரைப்பாக மாறுவதற்காக வெவ்வேறு மத அடையாளக் குழுக்களின் வாழ்வியல் நெருக்கடிகளை அதீத தொன்மங்களின் வாயிலாக தகர்க்க முனைகிறது. அந்த நாட்டங்களை செறிவுள்ளதாக நிலைநிறுத்துவதற்கு புராணக் கதைகளைக் கூர்மைப்படுத்தி கதைக்குள் உலவும் மாந்தர்களின் எண்ணங்களை நிரப்பி விடுகிறது. பின்னர் பல்வேறு உரையாடல்களிலும் அதனை வெளிப்படுத்தல் என்னும் காரியச் செயலாக புனைவு பெருக்கமடைகிறது.
(பக்கம் 14,15)

இன்னொரு புறம் பல்வேறு அறிவியல் நம்பிக்கைகளையும் புனைவுக்குள் உரையாடும் நிகழ்வாக மாற்றி அதனை பின்னோக்கிய நிகழ்வில் தேயவைத்தல் அல்லது சராசரியான அறிவியல் நம்பிக்கைகளைத் தகர்த்துக் கலைத்துப் போடுவதன் மூலம் புராண வாய் வழிக் கதைகளையும் அறிவியல் சார்ந்த புரிதல்களையும் சமமான பரிசீலிப்புக்குள்ளான அம்சமாக மாற்றுதல் எனும் நிகழ்வை ஏற்படுத்தி ஓர நிலைச் சமுதாயக் குழுக்களின் வாழ்வியலை மேலெழுப்பி விருத்தியடைந்த சமுதாயத்திற்கு இணையானதாக சம தளத்தில் நிறுத்த முனைகிறது.
(14,15)

கவிதையின் கூறுகளை உடைய படிம முறைச் சொல்லாடல்களை சம்பவ விபரிப்பாக்குவதன் ஊடாகவும் அந்த எடுத்துரைப்புகளை வழமையான மனப்பதிவுகளுக்கு மாற்றான பாசாங்குகளாக கையாளவும் கதைத் திட்டம் பயன்படுத்தப் படுகிறது.
(33, 34 அந்த நாளிலிருந்து, ஒரு மலர் மாலை)

கதை சொல்லி புனைவின் சில சம்பவங்களின் எதிரே தோன்றி வாசகனைக் குறுக்கிடுவதும் நம்புவதற்கான சாத்தியங்களை விளக்குவதும் ஒரு தந்திரோபாயமாக இடம்பெறுகிறது.
(15, 36 )

இந்தக் கதையின் நிலவியலானது நகர வாழ்க்கைக்குத் தூரமான வட்டாரச் சூழலாக கட்டியெழுப்பப் பட்டிருந்தாலும் பொதுவான வாசிப்புக்குச் சௌகரியமான மொழியில் முன்வைக்கப்படுகிறது. ஆனால் பொதுவான வாசிப்பு மனங்களைத் தொடர்ச்சியாகத் தொந்தரவு செய்து வேறொரு வாழ்வியல் வெளியின் கலக வீழ்படிவாக நிறைகிறது.

ஆனால் ” ஜீ.கே. எழுதிய மர்ம நாவல் ” எனும் புனைவுப் பிரதியானது வேறு விதமான அனுபவங்களை பிறப்பிக்கும் சாத்தியங்களை நிரப்பி வைத்திருப்பதாகவே கருதுகிறேன். துப்பறியும் கதை வகையைச் சேர்ந்ததாக இது இருக்கிறது. இரண்டு வகையான கதை சொல்லும் உத்தியை இது கொண்டிருக்கிறது.

ஒரு கதை ஜீ.கே. எழுதிய மர்ம நாவலின் பகுதிகளாகச் செல்கிறது. இன்னொரு கதையானது நாவலின் கதை சொல்லி தருகின்ற குறிப்புகளாக நகர்கிறது. ஜீ.கே.எழுதிய மர்ம நாவலாகத் தொடரும் கதையானது ஒரு பயணத்தில் இணையும் இரண்டு பாத்திரங்களின் பொழுதுகளில் நிகழும் சம்பவங்களாக விரிந்து செல்கிறது. குறிப்புகளானது கதையை எழுதிய ஜீ.கே. சம்பந்தமான தகவல்களின் அடிப்படையில் அவனை அறிந்து கொள்ளும் புலனாய்வாக நகர்கிறது.

கதைக்குள் அரியநாதர் என்னும் விகடமான துப்பறிவாளனும் தேவமித்ரர் என்னும் மர்மங்கள் நிரம்பிய பௌத்த துறவியும் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். இவர்களின் பயணத்தில் இடம்பெறும் பல்வேறு வகையான நிகழ்வுகளை வெவ்வேறு விதமான கருத்தியல் விபரணைகளாக்குகிறது கதை. கொலையாளியும் துப்பறிவாளனும் அருகருகே இருந்தாலும் கதை உத்தியானது அவர்களை இறுதி வரை தூரமாகவே வைத்திருக்கிறது.

இந்தக் கதை நகர்வின் அத்தியாயங்களுக்கிடையில் வரும் குறிப்புகள் ஜீ.கே. யார் என்பதற்கான பல்வேறு யூகப் பின்னணிகளையும் அதை தெளிவாக அறிந்து கொள்வதற்கான காரண காரியங்களையும் உருவாக்க எத்தனிக்கிறது.

மர்ம நாவலின் கதையானது பரபரப்புகளையும் திடீர் திருப்பங்களையும் கொண்டதாக ஆர்முகலடையும் திசையின் குறுக்கே குறிப்புகள் வழி மறித்து இன்னொரு கதையை முன்வைக்கிறது.

கதைக்குள் உலவும் கொலையாளியைத் துப்பறிவதா? அல்லது கதையை எழுதிய ஜீ.கே வை அறிந்து கொள்வதா என்னும் களேபரத்தினுள் வாசகன் அலைக்கழிக்கப்படும் தருணங்கள் பிரதியை இலக்கியத் தரமுள்ளதாக மாற்றி விடுகிறது.

துப்பறிவாளன் மற்றும் கொலையாளி மற்றும் கதையோடு தொடர்பு படும் ஏனையவர்களுக்குள் நிகழும் உரையாடல்களும் விவாதங்களும் வரலாறு, அரசியல் மற்றும் வாழ்வு என்பவற்றின் மீது மாற்றுத் தர்க்கங்களை உருவாக்குவதோடு பிரத்தியேக அரசியல் விருப்புறுதியின் எதிர் விளைவாகவும் கட்டமைக்கப்படுகிறது.

கதையின் போக்கை வாசிப்பின் நிலையிலிருந்து அணுகும் போது ஒரு தட்டையான புனைவு வரைபாகவே தோன்றினாலும் அதன் உள்ளீடுகளுக்குள் எடுத்தாளப்படும் சம்பவ உத்திகள் அரசியல் பிரக்ஞை மிக்க இனக் குழுமம் ஒன்றின் மூலங்களைக் கண்டடைவதற்கு வேறு வகை வரலாறுகளைச் சிதைக்கும் காரியத்தின் புனைவு நுட்பமாக தீவிரமடைகிறது.

வலுவாக நிலைபெற்றிருக்கும் பண்பாடுகள் கூட சில இடங்களில் முன்னணிப் பாத்திரங்களின் எள்ளலுக்குள் சிதைக்கப்படுவதும் சில மதம் சார்ந்த அடிப்படை நெறிகள் மாற்று விமர்சனத்தினுள் நசுக்கப்படுவதும் நிகழ்கிறது. ஏற்கனவே நடைமுறையிலுள்ள சம்பவங்களை மறுதலிப்பதன் மூலம் சிதைவுறச் செய்து வேறு புதிய அர்த்தங்களை உருவாக்குவதன் மூலம் கதையின் போக்கிற்கு பிரத்தியேகமான அரசியல் விழிப்புணர்வொன்றை பெற்றுக் கொள்ள முனைகிறது.

கதைச் சம்பவங்களுக்குள் அடிக்கடி விறுவிறுப்பான தருணங்களை உருவாக்குவதும் அதன் உச்ச நிகழ்வை ஹாஸ்யமாக்கிக் கடந்து போவதும் இந்தப் புனைவின் கிளசிக் விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டியதாகும்.

வரலாறுகளை மூடி மறைக்கவும் அல்லது திரிபு படுத்தவும் எழுத்து இன்றியமையாததென இந்நாவல் பிரசங்கிக்கிறது.

22 அத்தியாயங்களையும், 11 குறிப்புகளையும் கொண்டிருக்கும் புனைவினுள் தமிழக வரலாறு பற்றிய நினைவில் என்றும் அழியாமல் ஞாபகம் வைத்திருக்க வேண்டிய போலியான சரித்திரமொன்றை புனைவுத் துணையுடன் உருவாக்கிச் செல்லுகையில் வாசகர்களின் கவனத்தை வேறொரு திசையில் இரு வகைத் துப்பறிபவர்களாக்கி அலைய விடுவதே இந்தப் பிரதி தரும் கிளர்ச்சியாகும்.

குறிப்புகளின் வழியாக நகரும் கதையானது ஏராளமான தகவல்களூடாக வாசிப்பை திசை திருப்பி இறுதியில் கதைசொல்லியையும் கொலையாளியையும் நாவலை எழுதிய ஜீ.கே வையும் அடையாளம் காட்டி விடுகிறது.

பதினோராவது குறிப்பில் நாவலை எழுதிய ஜீ.கே.என்பவர் 1983 ஜூலைக் கலவரத்தில் பாதிக்கப்பட்டு லண்டனுக்குப் புலம்பெயர்ந்த தமிழர் என்றும் அவர் தமிழகத்தில் தங்கியிருந்த போது எழுதியதே இந்த நாவல் என்றும் முடித்து வைக்கப்படும் போது இயல்பாகவே ஜீ.கே. மேலே சந்தேகம் எழுந்து விடுகிறது. அதனால் இந்தப் புனைவுக்கு அவசியமாகின்ற பனிரெண்டாவது குறிப்பை நான் எழுத விரும்பினேன். இந்தக் குறிப்புத்தான் இப்புனைவுக்கான இறைய கால முடிவாக இருக்க முடியுமென நம்புகிறேன்.

பனிரெண்டாவது குறிப்பு :

இந்த நாவலை எழுதியுள்ள ஜீ.கே.இலங்கையைச் சேர்ந்தவராக இருக்கவே முடியாது. 1983 ஜூலைக் கலவரத்தில் பாதிக்கப்பட்டு முதலில் தமிழகத்திற்கு இடம்பெயர்ந்த அவர் அங்கு வைத்துத்தான் அதை எழுதினார் என்பதும் தவறான தகவலாகவே இருக்க முடியும்.அத்தோடு தேசமற்ற ஒருவன் வேறொரு நாட்டின் ஆவணக் காப்பகங்களில் தனது மண்ணுக்கான வரலாறுகளைத் தேடியதாக நம்ப வைக்கப்படுவதும் ஏற்றுக் கொள்ளப் பொருத்தமற்றதுதான். அது மட்டுமல்லாமல் தமிழக மண் வாசனை கொண்ட பௌத்த நகல் வரலாற்றை தனது தேச அக்கறைகளை வடிவமைப்பதற்கான சிதைப்பாகவும் செய்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இலங்கை மண்ணில் நிலை கொண்ட பௌத்த வரலாறுகளின் மர்மக் கூறுகளுக்குள்தான் தனது மூதாதையரின் அரசியல் அடையாளத்தை அவன் தேட வேண்டிய அவசியம் இருக்கிறது.

ஜூலைக் கலவரம் இடம்பெறும் வரை இலங்கையில் வாழ்ந்து அச்சூழலில் அவதிப்பட்டு வெளியேறிய சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருத்தனுக்கு சரித்திரத்தின் மூலவேர்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லாது போனாலும் அவன் வாழ்ந்த காலத்தை அண்மித்த வரலாற்றுப் பரிச்சயம் இல்லாமல் ஒரு எழுத்தாளனாக இருக்க வாய்ப்பில்லை.

ஜீ.கே.இலங்கையைச் சேர்ந்தவனாக இருந்திருந்தால் அநகாரிக தர்மபால வழியில் உருவான பௌத்த தேசியவாதத்தையும் அது சுதந்திர இலங்கையின் அரசியலில் ஏற்படுத்திய அதீத தாக்கத்தையும் புனைவுக்குள் கொண்டு வராமல் கடந்து செல்ல வாய்ப்பில்லை.

தர்மபாலவின் சிந்தனைகளை உள்ளீர்த்து தீவிரக் கருத்தை கக்கிய துறவிகளின் முன்னோர்களையும் எல்லாவல மேதானந்த போன்று செயற்கையான பௌத்த ஆதாரங்களின் அடிப்படையில் சிறுபான்மை இருப்பை கேள்விக்குள்ளாக்க நினைத்த துறவிகளையோ அல்லது populist கடும் போக்காளரான கங்கொடவில சோம தேரரையோ அல்லது பௌத்த வன்முறைகளுக்குத் தூபமிடும் ஞானசாரவையோ அடையாள நீக்கம் செய்து தேவமித்திரராக புனைவுக்குள் உலவ விட்டிருப்பதனை மட்டும் ஒரு தடயமாகக் கொண்டு ஜீ.கே.வை இலங்கையர் என அனுமானித்து விட முடியாது.

நீண்ட கால பழியுணர்ச்சி கொண்ட இனத்தைச் சேர்ந்த ஒருவன் தன்னை அடக்கி வைத்திருக்கும் அதிகார இனத்தைச் சேர்ந்த துறவியுடன் பவ்யமாக அனுசரித்துக் கிடப்பதாக புனையும் ஜீ.கே. இலங்கை உணர்வுகளுக்குப் பொருந்தாத எழுத்தாளராக அந்நியப்பட்டுத் தெரிவதனால் அவர் இங்கிருந்தவர் அல்ல என்ற முடிவுக்கு வரலாம்.

மேலும் ஜெய்சங்கர் கால ஜேம்ஸ்பாண்ட் துப்பறியும் படங்களுக்கு இணையான சம்பவக் கோர்வைகளை அறிவார்ந்த வரலாற்று எள்ளலாக்கி புனைவுத் தர்க்கமாக இடம்மாற்றும் சாமர்த்தியம் இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு கைவருமா என்பதும் சந்தேகமே.

இலங்கைச் சிறுபான்மையினரின் அரசியல் நெருக்கடிகளை பொழுதுபோக்கும் காரியமாக எடுத்துக் கொண்டு தமது வசதி கருதி செயல்படும் அரசியல்வாதிகளின் பிழையான பிரசங்கம் போல ஜீ.கே.வை இலங்கையராக அறிவித்து விடுவது கதைசொல்லியின் உள்நோக்கமுடைய மூத்தண்ணன் மனநிலையை பறைசாற்றுவதாகும். அத்துடன் வாசகனுக்கு எதிரேயுள்ள புனைவின் புதிர்ப் பாதைகளை மூடி விடும் செயலுமாகும். அதனால் ஜீ.கே.வைத் தேடும் பணி நின்று விடக் கூடாதென்பதே எனது வாசிப்பின் அவா ஆகும்.
* *
ஏனெனில் இந்தக் குறிப்பு நாவலின் அர்த்தங்களை மேலும் பெருக்கிடும் என இப்போதைக்கு நம்பலாம்

தமிழவன் சிறுகதையின் தொகுப்பு -ஜிப்ரி ஹாசன்

தமிழவனின் “நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்“: தமிழ்ச் சிறுகதையின் இன்னுமொரு முகம்

 

ஜிஃப்ரி ஹாஸன்

 

தமிழ்நாட்டின் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களின் நீண்ட பட்டியலை நாம் புதுமைப்பித்தன்கி.ராதி.ஜானகிராமன்ஜெயகாந்தன்அசோகமித்திரன்சுந்தர ராமசாமி, கோணங்கி, நாஞ்சில் நாடன், சாரு நிவேதிதா,  எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன்வண்ணதாசன் என ஒரு சுருக்கமான பட்டியலாகப் போட்டுக் கொண்டால் அதில் தமிழவனையும் ஒருவராகச் சேர்த்துக் கொள்வதாஅல்லது, இந்தப் பட்டியலை விடுத்து ஒரு புதிய பட்டியலைத் தமிழவனிலிலிருந்து தொடங்குவதா என்ற கேள்விதான் தமிழவனின் கதைகளை வாசிக்கும்போது எனக்குள் ஏற்பட்டதுஅவரது கதைகளை வாசிக்கும்போது இதே கேள்வி உங்களுக்கும் எழுவதற்கு அதிக சாத்தியமுள்ளது.

தமிழ்ச் சூழலில் கவிதையை ஒட்டி நடந்த விவாதங்கள் அளவுக்கு சிறுகதை பற்றி பெரிதாக நடந்தேறவில்லை. மரபுக் கவிதை, நவீன கவிதை, பின்-நவீன கவிதை என்ற வகைப்படுத்தல்களும் அது தொடர்பான உரையாடல்களும் நமது இலக்கியவெளியில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. அதன் விளைவாக கவிதை குறித்த புதிய பார்வைகளும், புதிய போக்குகளும் உருவாகின. தமிழ்க் கவிதைச் செயற்பாட்டிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களையும் வளர்ச்சியையும் அவை ஏற்படுத்தின.

தமிழில் கவிதை அளவுக்கு ஒரு நீண்ட வரலாற்றை சிறுகதைகள் கொண்டிருக்கவில்லை. இலக்கிய காலப் பாகுபாட்டில் நவீனயுகம் எனப்படும் காலப்பகுதியிலேயே சிறுகதைகள் தோற்றம் பெற்றன. மரபுச் சிறுகதைகள் என எதுவும் கிடையாது. எனினும் நவீன கால தமிழ்ச் சிறுகதைகள் கடந்த சில ஆண்டுகளில் மேலைக் கோட்பாடுகளின் தாக்கத்துக்குட்பட்டு மாற்றங்களை ஏற்றுக் கொண்டு புதிய தளத்தில் சிறு அளவில் பயணத்தை தொடங்கி இருந்தன.

பின்னர், நவீனத்துவச் சிறுகதைகளில் காணப்பட்ட மையக் கருவொன்றைச் சுற்றியே கதையை நகர்த்துதல், உரையாடல்களில் கிளை மொழிப் பாவனை (ஒரு பிரதேச உரையாடல் மொழி இன்னொரு பிரதேச வாசகனுக்கு புரியாத போதிலும் அதையே கையாளுதல்), ஒரு கதைக்குள் ஒரு கதை மட்டும் காணப்படுதல், விவரணங்கள் குறைவாக இருத்தல் போன்ற பண்புகளிலிருந்து விடுபட்டு பின்-நவீன எழுத்துமுறைக்கு நெருக்கமானதாக தமிழ்ச் சிறுகதைகள் ஒரு புதிய பயணத்தை தொடங்கின.

பொதுவாக பின்-நவீன எழுத்துமுறைக்கு நெருக்கமான சிறுகதைகள் மேலோட்டமானது போன்ற  தோற்றம் அளிக்கும் ஆழமான கதைகளாகும். வாசகர்களை கதையோடு பிணைக்கக்கூடிய மொழியைக் கொண்டவை. கிளைமொழி உரையாடல்களைத் தவிர்த்து ஒரு பொது மொழியில் உரையாடல்கள் கொண்டவை. அது கதையின் சுவாரஸ்யத்தை மேலும் மெருகூட்டுகின்றது. அவை நவீனச் சிறுகதைகளின் பிராந்திய உரையாடல் மொழிகளைத் தவிர்த்து வாசகனை கதைக்குள் உள்வாங்கும் நெகிழ்வுத் தன்மையான கதைகூறல் மொழியை கொண்டுள்ளன. ஒரு மைய சம்பவத்தையோ, மையக் கதாபாத்திரமொன்றையோ சுற்றி கதை இங்கு நகர்த்தப்படுவதில்லை.

மனித வாழ்வை, அதன் எல்லாப் பரிமாணங்களையும் ஒரு வித அங்கதத்துடன் சித்தரிக்கின்றன. இத்தகைய பின்-நவீன எழுத்துமுறைக்கு நெருக்கமான சிறுகதைகள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. ஒரு சில நாவல்களும் உள்ளன. சுந்தர ராமசாமியின் “ஜே.ஜே. சில குறிப்புகள்”, சாருநிவேதிதாவின் ”ஸீரோ டிகிரி” போன்ற நாவல்களில் இந்த எழுத்துமுறை உள்ளது. ஏன் ஷோபா சக்தியின் ‘கொரில்லா’வோ, ‘ம்’ நாவலோ இந்த எழுத்துமுறைக்கு அவ்வளவு அந்நியமானதல்ல.

தமிழில் பின்-நவீன எழுத்துமுறைக்கு நெருக்கமான சிறுகதைகள் என்ற வகையில் தமிழவனின் “நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்” தொகுப்பைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

ஆனால் நவீன சிறுகதை எழுத்தாளர்களோ, விமர்சகர்களோ இத்தகைய சிறுகதைகளை இலகுவில் அங்கீகரிப்பதில்லை. இலக்கியத்தரமுள்ள எந்தவொரு படைப்பும் நிராகரிக்கத்தக்கதல்ல. மாறாக அவை உரையாடப்படக் கூடியவையே. தேவையற்ற அச்சம் காரணமாக சில நவீன சிறுகதை எழுத்தாளர்களும், விமர்சகர்களும் தங்களிடமுள்ள அளவுகோளுக்குட்படும் கதைகளை மட்டுமே அங்கீகரிப்பதும் ஏனைய கதைகளை நிராகரித்தும் வருகின்றனர். இத்தகைய பின்-நவீனச் சிறுகதைகள் வாழ்க்கையை மேலோட்டமாகச் சித்தரிக்கின்ற மொழி விளையாட்டு என நிராகரிக்கின்றனர்.

ஆனால் இந்த நவீனத்துவப் பார்வையிலிருந்து சற்று விலகி இலக்கிய ஜனநாயக சிந்தனையின் அடிப்படையில் தமிழவனின் கதைகளை நாம் வாசிப்புச் செய்யும்போது அவரது கதைகளுக்கான இடத்தை வாசகன் கண்டுகொள்கிறான்படைப்பாளியின் வாழ்வியல் அனுபவங்களே தமிழ்ச் சிறுகதைகளின் மைய அம்சமாக கொண்டாடப்படும் ஒரு இலக்கிய காலத்தில்தான் நாம் இருக்கிறோம்தமிழவனின் “நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்”  கதைத் தொகுதியிலுள்ள அநேக கதைகள் அவரது வாழ்வியல் அனுபவங்களைப் பேசுபவையாகவே இருக்கின்றன.

கதைசொல்லிகள் தங்களது கதைகளில் அவர்களின் சொந்த அனுபவங்களை முதன்மைப்படுத்துவது நமது சிறுகதையின் மரபான பண்பாகவே இருந்து வருகிறதுஇருந்தாலும் தமது சொந்த அனுபவங்களை தமிழவன் வெளிப்படுத்தும் முறையில் ஒரு பின்நவீனத் தன்மை வெளிப்படும் விதத்தை வாசகர்களால் புரிந்து கொள்ள முடிகிறது.

மனித வாழ்வின் மீதான நுண்ணிய அதிகாரங்களையும்அவமதிப்புகளையும் அதனை எதிர்கொள்ளும் மனிதர்களின் மன அதிர்வுகளையும் தமிழவன் தன் கதைகளில் பதிவு செய்கிறார்தமிழவன் கதைகளில் உலவும் மனிதர்கள் வாழ்வின் அநீதியை எதிர்கொண்டு மேலெழும் வேட்கையுடன் வருகின்றனர்.

நமது தமிழ்ச் சிறுகதைகளின் கதைநிகழ்களத்தை வேறொரு தளத்துக்கு கொண்டு சென்று அர்த்தப்படுத்தும் முனைப்பு தமிழவனின் அநேகமான கதைகளுக்குள் கிட்டத்தட்ட ஒரு கோட்பாடாகவே வடிவம் கொண்டுள்ளது.

தமிழவனின் இந்தக் கதைத்தொகுதி தமிழின் நவீனத்துவக் கதைப்போக்கிலிருந்து ஒரு புரட்சிகரமான மீறலைச்செய்துகொண்டு தமிழ் எதார்த்தத்தைதமிழ் வாழ்க்கையை புதியதொரு கோணத்தில் பேசுகின்றனஇத்தொகுப்பிலுள்ள அநேக கதைகள் தமிழ் வாழ்வை அதற்கு முற்றிலும் அந்நியமானதொரு சூழலில் வைத்து ஆனால் அதற்கு மிகவும் நெருக்கமான மனிதர்களைக் கொண்டு பேசுகின்றன.

சிலகதைகள் முதல் வாசிப்பில் தந்த அனுபவத்தை விட இன்னுமொரு வாசிப்பில் பிறிதொரு அனுபவத்தை தருகின்றனஆக, வாசகனுக்குள் ஒரு கதை ஏற்படுத்தும் அனுபவங்களின் ஒற்றைத் தன்மையை ஒரேயடியாக உடைத்தெறிகிறார் தமிழவன்எனினும் வாழ்வின் நுண்மையான அனுபவங்களை விடவும் பேரனுபவங்களையே அவர் பேசுகிறார்இதனால் வாழ்க்கையை கலைத்துவமாக சிருஷ்டித்துக் காட்டுவதற்கு பதிலாக தத்துவார்த்தமாக சிருஷ்டித்துக் காட்டுகின்றன தமிழவனின் கதைகள்.

இத்தொகுப்பிலுள்ள கதைகள் சிறுகதைகளின் வழமையான அளவில் (சைஸ்ஒரு புதிய மீறலைச் செய்கிறதுசிறுகதைகள் என்ற வகைப்பாட்டுக்குள் வரும் கதையின் அளவைவிட சற்று சிறியதாக இந்தக் கதைகள் அமைந்திருக்கின்றனஅண்மைக்காலமாக அவை Short Fiction என்றொரு வகையாகவும் பார்க்கப்படுகின்றன.

இத் தொகுப்பிலுள்ள கதைகள் கதைகூறும் முறையிலும் நவீனத்துவக் கதைப்போக்கிலிருந்து விலகிச் செல்கின்றனதொடக்கம்உச்சம்முடிவு எனும் அரிஸ்டோட்டிலிய நியம முறைக் கதைகூறல் பண்பை தமிழவன் முற்றாகவே புறக்கணித்துள்ளார்இதனால் அவரது கதைகள் “நன்கு கட்டமைக்கப்படாத“ கதைகளாக தமிழில் ஒரு புதிய போக்கை முன்னெடுத்துச் செல்லும் தன்மையுடன் மேற்கிளம்புகின்றன.   இங்கு கதைகள் உரையாடல்களற்று கதைசொல்லியின் விவரணங்களால் மட்டுமே புனைவாக்கம் பெறுகின்றனமேலும் இக்கதைகள் ஒரு விதத்தில் முடிவடையாததாகத் தோன்றுவதோடு முடிவுகளை வாசகனே எடுத்துக்கொள்ளும் வாசக சுதந்திரத்தைக் கிட்டத்தட்ட எல்லாக் கதைகளிலுமே தமிழவன் காப்பாற்றி இருக்கிறார்

இக்கதைகளுக்குள் மையக் கதாபாத்திரம் என்று யாரும்/எதுவும்  இருப்பதில்லைமையமான கதைச்சம்பவம் என்றும் எதுவும் இருப்பதில்லை.  இதனால் நவீனத்துவச் சிறுகதைகளுக்குப் பின்னரான ஒரு புதிய கதைப்போக்கின் ஆரம்பமாக தமிழவனின் கதைகள் தோற்றங் கொள்கின்றனகதைக்குள் ஒரு மையக் கதாபாத்திரத்தை உருவாக்குவது அல்லது கதைசொல்லியே ஒரு மையக் கதாபாத்திரமாக மாறிவிடுவது என்பது கதைக்கு ஒருமுகத்தன்மையை வழங்கிவிடுகிறதுஇங்கு மையக் கதாபாத்திரங்களற்ற பின்நவீன நிலைமையானது ஒரு கதையை ‘கதை’ என ஒருமையில் அழைப்பதை விட ‘கதைகள்’ என பன்மையில் அழைக்கவும் அணுகவும் தூண்டுகிறதுஇப்படித்தான் தமிழவனின் இந்தத் தொகுப்புக்குள்ளிருக்கும் ஒரு கதை ‘கதைகளாக’ வடிவங் கொள்கிறது.

உதாரணமாக, ‘மொழிபெயர்ப்பு நிறுவனம்” எனும் கதையில் மொழிபெயர்ப்புத் துறைப் பொறுப்பாளனா?, 17 வயதுச் சிறுவனாஅல்லது மொழிபெயர்ப்பு பணியகப் பணியாளர்களில் ஒருவரா யார் மையக் கதாபாத்திரம் என்ற கேள்விக்கு வாசகனால் இறுதிவரை விடை காண முடிவதே இல்லை.

“மூவரும் மௌனமானார்கள்” எனும் கதையிலும் இதே அனுபவத்தைத்தான் வாசகன் பெற்றுக் கொள்கிறான்அதனால் இந்த அனுபவம் வாசகனுக்கு தொடர்ச்சியாக தமிழவனின் கதைகளுக்குள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறதுமையக் கதாபாத்திரம் யார் என்ற கேள்விக்கு விடை இல்லாவிட்டாலும் கதை வாசக இரசனைக்கு மிக நெருக்கமானதாகவுள்ளது.

மொழிபெயர்ப்பு நிறுவனம்“ எனும் கதை டெல்லியை தலைமையகமாகக் கொண்டியங்கும் மொழிபெயர்ப்பு நிறுவனமொன்றுக்குள் தொழிற்படும் நுண்ணிய அதிகாரமானது மொழிபெயர்ப்பு எனும் துறையையே எப்படிச் சீரழித்துவிடுகிறது என்பதைப் பேசுகிறது.

தமிழவனின் சில கதைகள் உலக தளத்தை கதை நிகழ்களமாகக் கொண்டுள்ளனநீ புரிந்து கொள்வாய் இறுதியாக எனும் கதை போலந்து இந்திய அனுபவங்களோடு விரியும் ஒரு கதையாகும்இரு வேறுபட்ட கலாசாரங்களுக்கிடையிலான உரையாடலாகவும் இந்தக் கதையை பார்க்கலாம்ஒரு திரைப்படம் போல் நகரும் இக்கதையில் அடிக்கடி காட்சிகளும் மனிதர்களும் மாறியபடி இருக்கின்றனர்கதை ஒரு மைய சம்பவத்தைச் சுற்றி மட்டுமே சுழல்வதில்லைஅதனால் வாசகன் வேறு திசைகளுக்கும் அழைத்துச் செல்லப்படுகிறான்இந்த அலைக்கழிப்பு வாசகனுக்கு ஒரேநேரத்தில் வெவ்வேறு அனுபவங்களை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.

இந்தியத் தமிழ்ச் சிறுகதைகளில் மேலோங்கிக்காணப்பட்ட தமிழ்க் கலாசார மரபென்பது இந்து காலாசார மரபாகத்தானிருந்ததுதமிழவனின் கதைகளில் அந்த மரபு மீறப்பட்டுள்ளதுஅவரது கதைகளில் கிறிஸ்தவ கலாசாரமும் அதன் மொழிக்கூறுகளும் அதிக கவனிப்புக்குள்ளாகின்றனதமிழவன் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவராக இருப்பதாலும் அது நேர்ந்திருக்கலாம்.

தமிழவன் கதைகளில் அழுத்தம் பெறும் கிறிஸ்தவக் கலாசாரப் பதிவுகள் அவரது கதைகளில் கவனிக்கத்தக்க ஒரு புதிய பண்பாக மேலெழுகின்றனஇதுவரை கால நமது அநேகமான தமிழ்ச்சிறுகதைகளில் தமிழர் பண்பாடு இந்து மதம் சார்ந்ததாகவும் மற்றும் இஸ்லாமியப் பண்பாடுமே அதிகமும் விபரிப்புக்குள்ளாகி வந்தனதமிழ் பண்பாட்டின் கட்டடக்கூறான கோயில்கள் மற்றும் இஸ்லாமியப் பண்பாட்டின் கட்டடக்கூறான பள்ளிவாசல்கள்தர்ஹாக்கள் பற்றிய வரலாறுகளையும்அவற்றின் தொன்மங்களையும்விபரணங்களையுமே நமது தமிழ்ச் சிறுகதைகளில் வாசித்து வந்திருக்கிறோம்.

தமிழவனின் இக்கதைத் தொகுப்பிலுள்ள கணேசன் மனைவி பறந்து போனாள் கதையில் கிறிஸ்தவ பண்பாட்டு நம்பிக்கையான பலிப்பூசை பற்றிய குறிப்புகளும்சர்ச் ஒன்றின் வரலாற்றுக் குறிப்புகளும் வருகின்றனஎனினும் அந்த சர்ச்சின் வரலாறு போர்த்துக்கீசர் காலம் வரையே செல்கிறதுஇந்தியாவில் கிறிஸ்தவம் அந்தளவுக்கே பழைமைவாய்ந்ததாக இருக்கலாம்.

“மெழுகுதிரி எரிவதைப் பார்த்தேன்” ஏறத்தாழ 60 ஆண்டுகள் பழைமையான ஒரு கிறிஸ்தவக் குடும்பம் பற்றிய கதைமின்சாரமற்று இருண்டு கிடந்த தெருக்களில்வீடுகளில்கடைகளில் வாழ நேரிட்ட மக்கள் பிரிவொன்றின் இருண்ட வாழ்வை மண்வாசனையற்ற ஒரு நேர்கோட்டு மொழியில் பதிவு செய்கிறார் தமிழவன்இப்படி தமிழில் அதிகம் எழுதப்படாத கிறிஸ்தவ வாழ்வைகிறிஸ்தவப் பெயர்களைச் சூடிய கதாபாத்திரங்களை அதிகமதிகம் சிருஷ்டித்திருக்கிறார் தமிழவன்.

தொகுப்பிலுள்ள எல்லாக் கதைகளுமே சுவாரஸ்யம் குன்றாமல் ஆயினும் வாசகனுக்கு புதிர் போட்டபடி இருக்கின்றனவாசகன் புதிரை அவிழ்க்கும் தருணத்தில்தான் தமிழவனின் கதையுலகத்துக்குள் முழுமையாகப் பிரவேசிக்கும் பாதையை கண்டடைகிறான்பரபரப்பாக ஆரம்பித்துபரபரப்பாக நகர்ந்து சென்று பரபரப்புடனேயே கதை முடியும் போது வாசகனையும் ஒரு பரபரப்பு தொற்றிக் கொள்வது என்னவோ உண்மைதான்ஆனால் அந்த பரபரப்புடன் மட்டும் நின்று விடும் வாசகனால் மேற்கொண்டு தமிழவனின் கதைகள் நிகழ்த்த விரும்பும் உரையாடல்களைப் புரிந்து கொள்ள முடிவதில்லை.

தொகுப்பிலுள்ள ”பூதாகரமான மனிதர்”  போலந்து நாட்டில் நிகழும் ஒரு கதைபல்கலைக்கழக நூலகரான மார்தா மாக்கியோஸ்கியின் வீட்டில் இடம்பெறும் விருந்து நிகழ்வொன்றில் இந்தியாபங்களாதேஷ் போன்ற நாடுகளிலிருந்து கலந்துகொள்ளும் பேராசிரியர்கள் மற்றும் நூலகர் மார்தாவின் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் நிகழும் உரையாடல் மூலம் கதை நகர்த்தப்படுகிறதுகதையின் தொடக்கத்திலேயே அது பல்கலாசாரங்களுக்கிடையிலான உரையாடலாக வடிவங்கொள்கிறதுஇந்தியக் கலாசாரத்தின் தீண்டாமை எனும் சாதியத்துக்கெதிரான குரல் இங்கு பதிவு செய்யப்படுகிறது.

“ஒரு மனிதர் இன்னொரு வகை மனிதரை தொடக்கூடாது என்றொரு விதி உள்ளது என்றனர்“

என கதையில் வரும் ஒரு வரியே இந்தியப் பண்பாட்டின் நேர்மறையான இயல்பொன்றை மேலைத்தேய மனிதர்களோடு அல்லது கலாசாரத்தோடு பகிர்ந்துகொள்கிறது.

போலந்தின் முந்தைய தலைமுறைக்கும்- புதிய தலைமுறைக்குமிடையிலான இடைவெளியின் நீளத்தை அளவிட்டுக்கொள்வதற்கான சந்தர்ப்பங்களை தமிழவன் இந்தக் கதைக்குள் வாசகனுக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறார். கதையில் போலந்தின் பழைய தலைமுறையின் குறியீடாக பூதாகரமான மனிதர் வருகிறார். ஓரிடத்தில் பூதாகரமான மனிதர் மௌனமாவது அந்த தலைமுறையின் சிந்தனைகள் நவீன தலைமுறையால் நிராகரிக்கப்பட்டதன் குறியீடாகும். இதன் மூலம் இந்தியப் பண்பாட்டில் இன்னும் தீண்டாமை ஒழியாமல் தலைமுறை தலைமுறையாய் தொடர்வதை மறைமுகமாக தாக்குகிறார். இதுவே இரண்டு கலாசாரங்களுக்கிடையிலான வேறுபாடாக தமிழவன் கருதுகிறார். ஆயினும் இந்தியப் பண்பாட்டில் தீண்டாமை இன்னும் எவ்வளவு தூரம் செல்லும் என்ற கோணத்தில் ஊகங்களைச் செய்வதற்கு வாசகனை கதை தூண்டுவதில்லை.

தொகுதியிலுள்ள கதைகளில் ஒரு தொடர்பறு எழுத்து முறையே பின்பற்றப்பட்டுள்ளது. ஒரு சம்பவத்தை மையப்படுத்தாமல் சிதறலாக ஒரு கதைக்குள் பல கதைகளை நகர்த்துவதற்கு இந்த முறையே மிகவும் அணுக்கமானது. இதனால் தமிழவனின் எந்தவொரு கதைக்கும் கதைச்சுருக்கம் சொல்வது கடினம். ஆனால் அந்தக் கதைகளுக்கான விரிவாக்கங்களைத் தேடி நிச்சயம் நம்மால் பயணிக்க முடியும்.

 

 

 

தமிழவனின் சரித்திரத்தில் ………….

சரித்திரத்தில் படிந்த நிழல்கள்

(தஞ்சையில் சமீபத்தில்   ஜனிவரியில் 2017,  நடந்த இலக்கியக்கூட்டத்தில் தன் நாவல் பற்றி தமிழவன் பேசியது)

தற்காலத் தமிழ் இலக்கியம் 19ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் தோன்றியபோதே பிரச்சினை தோன்றிவிட்டது. தமிழ்த்தற்கால இலக்கியம், தமிழின் 2000 ஆண்டு பாரம்பரியத்தைத் தொடரவேண்டுமா? ஏதாவது ஓரிருவர் தொடங்கிய மாதிரியைப் பின்பற்ற வேண்டுமா? என்ற கேள்வி வருகிறது. பிரதாப முதலியார் சரித்திரத்தைப் பின்பற்ற வேண்டுமா அல்லது பத்மாவதி சரித்திரத்தைப் பின்பற்ற வேண்டுமா? சிறுகதையில் வ.வே.சு. ஐயரா, பாரதியா, புதுமைப்பித்தனா? சரி விமரிசனத்தில் யாரைப் பின்பற்றுவது? நாடகத்தில் யாரை, இப்படி இப்படி.

அடிப்படைப் பிரச்சினை, மரபை நவீன இலக்கியமாக மாற்றுவது எப்படி? இந்தக் கேள்வி கேட்கப்படவே இல்லை. இதற்கான காரணம் தமிழ்த்துறையினர் படைப்பு இலக்கியக் களத்தில் இல்லை. காரணம் அவர்களுக்கு நவீன இலக்கியம் பற்றிய அக்கரை இல்லை. அதனால் நாவல்கள் பாடமாய் வைத்தால் மாணவர்களிடம் நீங்களே படித்துக்கொள்ளுங்கள், கதைதானே என்கிறார்கள். இந்தப் பலவீனம் எங்கிருந்து வந்தது? நவீனப் பார்வை மரபு இலக்கியத்தைகூட அறிவதற்கு (வாசிக்க அல்ல) வேண்டும் என்ற உண்மையை அவர்கள் காணாததால்.

இந்தப் பலவீனம் போன்ற இன்னொரு பலவீனம் இருக்கிறது. அது நவீன இலக்கியப் படைப்பாசிரியர்களிடம் முதலில் இருந்தே காணப்பட்டது. வேதநாயகம் நாவலை, நாட்டுப்புற கதைப்பாடல் போல எழுதினார். பத்மாவதி சரித்திரம், எதார்த்த கதைமுறையில் பிராமண வாழ்வைச் சித்திரித்தது. இவை இரண்டு முன்மாதிரிகள். இரண்டுமே சங்க இலக்கியத்தில் இருந்து சிலப்பதிகாரம், கம்பராமாயணம், சிற்றிலக்கியம் வழி கதையை வளர்த்தும் முறை ஒன்று உண்டு என்று அறியவில்லை என்று சொல்லலாமா?

இந்தப்பின்னணியில் என் கதைகளின் மாதிரிக்கு வருகிறேன். முதலில், 1985இல், ‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’ எழுதினேன். அதை வாசித்தவர்கள் சிலர் பாராட்டினார்கள். சிலர் விமரிசித்தார்கள். ஆனால் எல்லோரும் அன்று ஆச்சரியப்பட்டார்கள். அதல்ல விஷயம். மேல்பாராவில் சொன்ன வேதநாயகம் பாணியிலும், முழுமையாய், ‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’ இல்லை. மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் பாணியிலும் இல்லை. ஓரளவு- அதாவது மிக  ஓரளவு, முதலாமவர் பாணியில் வந்து அதைக் குறுக்கே புகுந்து மாற்றிய முறையில் ஏ.சொ.ம. எழுதினேன்.

ஞானக்கூத்தன் ஏ.சொ.ம.  நாவலை வேறு ஒரு மரபில் வைக்க உதவினார். அதையும் கொஞ்சம் பேசவேண்டும். சிறுகதை சரித்திரம் பற்றிச் சொல்லும் போது மணிக்கொடி பற்றிச் சொல்லுவார்கள். அக்காலம் நாற்பதுகள். அக்கால கட்டத்தில் அச்சுமூலம் இலக்கியம் பல்கிப்பெருகியது. பல தட்டு, சாதி மக்களுக்கு இலக்கியம் போக, வாசகர்கள் என்ற இலக்கியத்தைத் தீர்மானிக்கும் இன்னொரு சக்தி உருவாகிறது. இங்குத் தமிழ்மொழி துரதிருஷ்டம் செய்த மொழியாயிற்று. கன்னடம் போலவோ, மலையாளம் போலவோ அல்லாமல் வியாபாரிகள் இலக்கியத்தை விற்பனை செய்ய தமிழ்மொழியைச் சந்தைக்கு இழுத்து வந்தனர். பத்திரிகைத்தமிழ் என்று ஒன்று உருவாயிற்று. இதற்கு விலை இருந்தது. வாசிக்கிறவர்களைப் பெருக்கப் போட்டி நடந்தது. அதனால் விற்கிற இலக்கியமா, விற்காத இலக்கியமா என்று கேட்கக்கூடாத கேள்விக்கூட கேட்கப்பட்டது. பத்திரிகைத் தமிழ் உருவான கதை இது தான். உடனே இதனை எதிர்க்க சிறு பத்திரிக்கைகள் 1970களில் உருவாயிற்று. உள்ளாற்றல் உள்ள கலாச்சாரத்தில் எதிர்சக்தி இருக்கும். இந்தக் கட்டத்தில் தமிழ்மொழியின் உள்சக்தி ஒருவிதமாய் அன்றிப் பலவிதமாய் மாறிற்று. சிலர் பத்திரிகைத்தமிழில் இலக்கியம் படைக்கலாம் என்றனர்; நல்ல விதமாய் எதார்த்த நாவலை எழுதினால் போதும் என்றனர்.

இப்போது ஒரு பெரிய பாய்ச்சல், தமிழ் வாழ்க்கையில் உருவாயிற்று. அது தான் புதுக்கவிதை. இந்தக்கட்டத்தில் தான் ஞா.கூ. கேட்ட கேள்வி பொருந்துகிறது. கவிதை, பத்திரிகைத்தமிழை விட்டுவிட்டது. பத்திரிகைத் தமிழில் அல்லாது வேறு வகையாய் (அது எந்த வகை என்று பல வகைகளைக் கூறலாம்) எழுதப்பட்டது என ஞா.கூ. சுட்டிய நாவல் ஏ.சொ.ம. வருகிறது.

அதாவது தமிழ்ப்பாரம்பரியத்தில் மனிதன் என்ற தனிநபர் இல்லை என்கிறது தொல்காப்பியம். 1. முதற்பொருளும் (காலம், இடம்) 2. உரிப்பொருளும் (பொது உணர்வு) அதுபோல், செடி, விலங்கு, மலை, சூழல், ஆகாசம், தெய்வம், அடையாளங்கள் என்று விளக்கப்படும் 3. கருப்பொருள் அதாவது உலகை – பூமிக்கிரகத்தை முழுசாய் கோட்பாடாக்கியது தொல்காப்பியம். இது தான் ஏ.சொ.ம. நாவலில் மனிதன் மரத்தின் தன்மையுடன் படுத்துக்கிடக்கவும், தனிநபர் பண்புடன் இல்லாமல் கூட்டுப்பண்புடன் சித்திரிக்கவும் காரணமாயிற்று எனலாம். ஏ.சொ.ம. நாவலில் பாத்திரவார்ப்பு முறை வேதநாயகம் மற்றும் மாதவையா நாவல்களிலிருந்து மாறுபட்டது. அதிகம் தமிழானது. அதாவது ஏ.சொ.ம. வில் வரும் காதல் ஐந்திணைக்காதல் போன்றது.

இந்த நாவல் பற்றி இன்று நாம் இப்போது பேசத் தேவையில்லை. அதனால் அடுத்து நான் எழுதிய “சரித்திரத்தில் படிந்த நிழல்களு”க்கு வருவோம். பாரம்பரிய அழகியல் கோட்பாடுகள் கொண்ட தமிழ்மொழியில் நாவல் இலக்கியம் பாரம்பரியப் பின்னணியின் ஆற்றலைப் பரிசோதனை செய்து பார்த்திருக்க வேண்டும். இது மிகுந்த முக்கியத்துவம் கொண்ட விஷயம். நவீன தமிழ்ப்பண்பாடு ஏன் பாரம்பரிய ஆற்றலைப்பற்றி தன்னுடைய நவீன இலக்கியத்தில் அதிகம் கவலைப்படவில்லை என்பது தனிக்கேள்வி. ஏன் தொடர்ச்சி அறாமை இருக்கவில்லை? தொடர்ச்சியில்லாத ஞாபகம் எப்படிப்பட்டது? இதன் உளவியல் வெளிப்பாடு என்ன? சி.என். அண்ணாதுரை 1962இல் டெல்லி பாராளுமன்றத்தில் திராவிடநாடு கேட்ட பின்னணி ஓர் இனம் இழந்து போன உரிமைசார் தன் பிளவுபட்ட உள்ளத்தை – அதன் ஊனத்தை – மருந்திட்டு ஆற்ற மேற்கொண்ட முயற்சியா  என்ற கேள்வியும் வருகிறது. எனவே 18, 19 நூற்றாண்டுகளில் மேற்கத்திய பண்பாட்டுப் பாதிப்பால் தமிழ்ப்பண்பாட்டில் ஏற்பட்ட பெரும் சலனம் அடுத்து உருவாகும் இலக்கியத்தினால் ஏதோ ஒரு வகையில் எதிர்கொள்ளப்படவேண்டும். இந்த எதிர்கொள்ளலுக்குப் போதிய விதமான மரபு அறிவு அந்தச் சமூகத்தில் இருக்கவேண்டும். அல்லது பாரம்பரியம் பற்றிய அக்கரை இருக்கக்கூடிய தமிழ்மக்களின் பிரிவுகளில் இருந்து தமிழ் நாவல் அல்லது புனைவு எழுத்து வந்திருக்கவேண்டும். முதல்நாவலை எப்படி எப்படி எழுதக்கூடிய சாத்தியப்பாடுகள் இருந்திருக்கலாம் என்று இன்றுவரை கேட்டோமா?. மிக முக்கியமுள்ள கேள்வி அல்லவா இது?

இது ஒரு அறிதல் பற்றிய பிரச்சினை. அறிதல் குறையுடைய ஒரு குழுவின் – மொழி – பண்பாட்டுக் குறைப்பார்வை அது படைக்கும் இலக்கியத்திலும் வெளிப்படத் தான் செய்யும். ஏன் தொல்காப்பியத்தின் பாரம்பரியம் முதல் நாவலில் இல்லை? நவீன கதையடிப்படையில் பிறந்த இலக்கியத்தில்  மரபை வேர்விட வைக்கவேண்டும் என்ற குரல் ஏன் எழவில்லை? அய்யப்பணிக்கரையும் தாண்டிப் போயிருக்கத் தேவையான வகையில் தமிழில் பாரம்பரிய பலம் இருந்திருக்கிறது. என் இந்த நாவல்கள் தமிழ்ப்பாரம்பரியத்தையும் முதல் தமிழ் நாவல்கள் பற்றிய பல்வேறு சாத்தியப்பாடுகளையும் சுற்றி வந்த மனப்பயணத்தில் ஏற்பட்ட இரண்டு உதரணங்கள் தாம். ஆங்கில அல்லது மலையாள (நீலபத்மநாபன் – தோப்பில்) மாதிரிகள் இல்லாமல் ஏ.சொ.ம. போல எழுதிப்பார்ப்போம் எப்படி நாவல் போகிறது பார்க்கலாம் என்று தொடர்ந்து செய்து பலர் பார்த்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

‘சரித்திரத்தில் படிந்த நிழல்கள்’ நாவலில் இப்படி ஒரு பகுதி வருகிறது:

“தெகிமொலாக்கள் காலத்தைச் சதுரங்கம் போன்றது என்று கருதினார்கள். சதுரங்கத்தைக் கட்டங்களாகப் பிரிப்பது போல் காலத்தைப் பிரித்தார்கள். அதில் மிகவும் கொடுமையான இரண்டு காலங்களை எதிரும்புதிருமாக வைத்து அவர்களது காலச்சக்கரத்தை வரைந்தார்கள்”.

யாருக்கும் இதில் வருவது  பழந்தமிழ் – தொல்காப்பிய முறைப்படியான – காலப்பாகுபாடு என்று தெரியும். அப்படியே இல்லை. கொஞ்சம் மாற்றப்பட்டது.

“இரவுப்புணர்ச்சிகளின் போது புணர்ச்சி இலக்கணமும் காலநிலை நியமங்களும் பின்பற்றப்படாததிலும் தொடர்ந்து பிறந்தவர்கள் விசித்திர நினைவுகளுடனும் காலநிலை அற்ற விதமாகவும் பிறந்தனர்”.

இது நீண்ட சரித்திரம் கொண்ட மக்கள் கூட்டம் ஒன்று சரித்திரத்தின் பிளவுகளை எப்படித் தங்கள் விசித்திரம் மிக்க வாழ்க்கைமுறைகளால் மறுவுருவாக்கம் செய்தார்கள் என விளக்குகிறது.

தமிழ் மனிதன் என்ற உருவாக்கம் மேற்கத்திய மாதிரியில் வடிவமைக்க 19, 20, 21 நூற்றாண்டுகளில் முயற்சி செய்யப்பட்டன. அதற்கு முன்பு பர்ஷிய, மொகல் சரித்திர, மராட்டிய இடையீடுகளும் தமிழ் உள்வாங்கிற்று. அதன் கதைப்புனைவு மாதிரிகள் எப்படிப்பட்டவை? அவற்றின் சில மாதிரிகள் சமீப நாவல் சரித்திரத்தில் தமிழிலும் வருகின்றன.

நாம் தொடர்ந்து கொண்டுவரவேண்டிய விஷயங்களைத் தர்க்கமாக மாற்றப் பார்க்கிறேன். தமிழில் பாரம்பரியம் இருந்தது என்ற ஓர்மையையை முற்றிலும் ஏன் நீக்கினோம்? 2009இல் தமிழ் அடையாளம் பற்றிய கேள்விகள் பழம் ஞாபகத்தின் அழுத்தத்தைத் தந்ததால் சிந்தனை கட்டமைப்புகளாய் வெளிப்போந்தன. கட்சிகளாய், குழுக்களாய், அரசியல் இதுதான் என்ற பெயரில் தமிழகமெங்கும் ‘தமிழன் யார்’ என்ற இளைஞர்களின் கேள்விகளுடன் நிறைய சலனம் ஏற்பட்டுள்ளது. இவற்றை முற்றாய் ஒதுக்க முனையவே மாட்டேன். இவர்களின் மொழியின் – சொல்லின் – அர்த்தம் என்ன? (மீண்டும் தொல்காப்பியம்?) யார் இந்தத் தெகிமொலாக்கள்? இந்த நாவலின் இறைச்சிப்பொருள் எது என்று கேட்கமுடியுமா? உள்ளுறை உவமையாக, நவீன குறியியல் அர்த்தங்களாக எல்லாவற்றையும் பார்ப்பதில் தவறில்லை. தன்னை வரலாற்றில் இழந்த ஒரு மக்கள் கூட்டம் வழிதெரியாது தவிக்கிறது.

நான் ஒரு கட்டுரையில் பெரியார் நம் நாட்டுப்புற மரபுகளை மதிக்கவில்லை என்று எழுதினேன். நாட்டுப்புற கதைப்பாடல்கள் – தேசிங்குராஜன் கதையிலிருந்து முத்துப்பாட்டன் வழி – இன்னும் அண்ணன்மார் சுவாமி என பெரும் பிரவாகம் உண்டு. செவ்வியல் மரபும் சங்கம், சிலப்பதிகாரம் என்று வேறோரு ஞாபகத்தமிழ் மரபாய் இணையாகத் தமிழர்களை நினைவுறுத்தியப்படியே இருக்கிறது.

நாட்டுப்புறக் கதையில் தேவதைக்கதை எப்போதும், உலகம் முழுவதும், திருமணத்தில் தான் முடியும் என்று ஒரு மறுக்கமுடியாத கோட்பாடு உண்டு. அதாவது, திருமணம், மந்திரசக்தி, விடைதெரியாக் கேள்விகள், மோதிரம் இப்படிப்பட்ட ஒவ்வொன்றும் ஓராயிரம் அர்த்தங்கள் கொண்டவை. செவ்வியலும் அப்படித்தான். குறுந்தொகையில் வரும் குறிஞ்சி என்ற புணர்ச்சி பற்றிய ஞாபகம், குறிஞ்சிப்பாட்டில் நீண்ட கதை சொல்லலாகி, சிலப்பதிகாரத்தில் மிகப்பெரும் கதைப்பாரம்பரியமாகிறது. நாவல் பாத்திர வார்ப்பை – மேற்கின் எதார்த்த முறையை மறுக்காமல் உலகப் பொதுகதைகளை நாம் ஏன் உருவாக்க முடியாது?

வேடிக்கை என்னவென்றால் 19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலம் வழி அந்த கிளுகிளுப்பு மரபை முக்கியமாக்கி, நூறு வருடங்களாய் நம் பாரம்பரியக்கதைகளை மீட்டெடுப்பதைக் கேலி பேசும் அளவுக்குப்போன மூடச்செயல் தான். தமிழ் உரைநடையைத் தமிழ்மொழிக்கு ஏற்ப எழுதுவதே பல சிக்கல்களைக் கொண்ட காரியம். பெஸ்கி எழுதியது உரைநடையா? நச்சினார்க்கினியர் எழுதியது தமிழ் உரைநடையா? நாம் கேள்வி கேட்க முடியவே இல்லை. முதலில் தமிழ் உள்ளம் அங்கீகரிக்கும் கருத்தைச் சரியாய் வெளிப்படுத்தும் உரைநடையே வரவில்லை. பின் எப்படி உரைநடைக்கலையான நாவலை எப்படி எழுதுவது என்ற பிரச்சினையைத் தீர்ப்பது?

இன்னும் ஒரு முக்கியமான விஷயம். புரிகிற எழுத்து, புரியாத எழுத்து பற்றிய பிரச்சினை. பாரம்பரியத் தமிழில் எல்லாமே புரியாத எழுத்துத்தான். எந்த உரையாசிரியர் புரியக்கூடிய முறையில் எழுதியிருக்கிறார்? நிகண்டு என்பதும் அகராதியும் புரியாமையை இலக்கணத்தையும் அங்கீகரிக்கும் செயல் தானே. பழக்கமானது பழகாதது என்று தான் உண்டு. எல்லாம் ஏகதேசமானது தான்.

செவ்வியல் கதைகளான நெடுநெல்வாடை போன்றவற்றில் வரும் பாத்திரங்கள் அரசன், அரசி போன்றோரின் இடங்களில் அசைவு இல்லை. அரசி படுக்கையோடு காட்சித் தருவாள். அரசன் பாசறையோடு காட்சித்தருவான். அல்லது முல்லைப்பாட்டில் அரசன் தேரில் வந்து கொண்டிருப்பான். இட அசைவு (Move) கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். சரித்திரத்தில் படிந்த நிழல்களில் பச்சைராஜன், பாக்கியத்தாய், மலைமீது ஒளி (அம்மிக்குழவி, மொழித்துறையினர், சர்க்கஸ் கோமாளி) இவர்களின் இடங்களும் இட அசைவுகளும் (Move) கூட கட்டுப்படுத்தப்பட்ட அசைவுகளுக்கு உட்பட்டவை.

இதுபோல் எதார்த்தபாணி கதைசொல்லலில் அல்லது உளவியல்பாணி கதைசொல்லலின் பாத்திர வார்ப்பைவிட நாட்டுப்புறவியல் கதைசொல்லலில் சமூகக் கதையாடல் நடக்கிறது. ஏனெனில் உளவியல் கதையாடலில் தனிநபர் சமூகம் வருகிறது. நாட்டுப்புறக் கதைகளின் பாத்திரங்களில் நாய்கள் மனிதர்களாவது உண்டு. ஒரு ஊரில் ஒரு நாய்க்கு இரண்டு பெண்கள் பிறந்தனர். இரு அரச குமாரர்கள் மூத்தவளையும் இளையவளையும் திருமணம் செய்தபின்பு தாய் – நாய் மூத்த மகளிடம் வருகிறாள். வெந்நீர் ஊற்றி விரட்டுகிறாள் மூத்தவள். இளையவள் உணவு கொடுத்து பாதுகாக்கிறாள்….. என்பது போன்ற கதை கேட்டிருப்பீர்கள். மனித – விலங்கு இணைவு ஏற்படுவதோடு பாத்திரங்கள் சமூக மாதிரிகளாகின்றன. கதையில் இறந்த நாய் இளையவளுக்குத் தங்கக்கட்டியாகி உதவும். மூத்தவள் வெந்நீர் ஊற்றியதால் வெறும்புழுவாய்த் தன் உடம்பை மாற்றி தண்டனைக் கொடுக்கும். “தண்டனையும் பரிசளிப்பும்” என்ற கருத்தாக்கம் கதையின் அமைப்பாகிறது. இங்குக் கதைமை என்பது  கருத்தமைவு என்று வடிவம் கொள்கிறது. சரித்திரத்தில் படிந்த நிழல்களில், பச்சை ராஜனுக்கும் பாக்கியத்தாய்க்கும் ஏற்படும் பல்வேறு கதை இடஅசைவுகள் கருத்து + அமைவு = புனைவு என்று புதுவித அர்த்த உருவாக்கமாகிறது. தமிழ்ச்சமூகம் சினிமாவைத் தனக்குள்ளே வடிவமைத்த செயல் நம் கதைமுறை வேறுபட்டது என்பதைத் தான் விளக்குகிறது. (இக்கதைபற்றி சண்முக. விமல்குமார் ஒரு நீண்ட கட்டுரை எழுதியுள்ளார்.)

கார்ல்மார்க்ஸ் “British Rule in India” என்று ஒரு கட்டுரை 1853இல் எழுதியது பல வாதவிவாதங்களை உருவாக்கியது. இந்தியா போன்ற சமூகத்தின் தேக்கத்தைப் பிரிட்டிஷ் அரசு உடைத்து ரயில், தனிச்சொத்து, அறிவியல், தொடர்பியல் போன்றவற்றைத் தந்தது என்பார் மார்க்ஸ். உடனே மார்க்ஸும் ஒரு வெள்ளைமனம் கொண்டவர் தான் என்று விமரிசித்தனர். பிரிட்டீசாரை அவர் கண்டிக்கவில்லை என்றனர்.ஆனால் மார்க்ஸ் சொன்னது ஒரு உண்மை. அதாவது நாட்டுப்புறவியல் இட அசைவின் அடிப்படையில் இயங்கும் சமூகம் இந்தியாவில் செயல்படுகிறது என்று அவர் கூறியதாகத்தான் நாம் எடுத்துக் கொள்ளவேண்டும். அதாவது தமிழர்களின் சரித்திரம் ஐரோப்பிய சரித்திரம் போன்றதல்ல என்று தமிழ் அறிதல் வழி மார்க்ஸை அணுகுவதற்கு இங்கு முயலவேண்டும். தமிழ்க்கதையாடல் (Tamil Narration) ஒன்றை மார்க்ஸ் மேற்குறித்த கட்டுரையில் உருவமைக்கும் விதைகளை அறிமுகப்படுத்துகிறார். நம் சரித்திரப் போக்கான பிராந்திய அசைவுக்கும் ஹெகலிய பிரபஞ்ச இயங்கியல் அசைவுக்கும் வேறுபாடு உண்டு. ஹெகலியம் அனைத்துலக ஒற்றைப்பார்வையை முன்வைத்த போது அதன் பெறுபேறாக உருவான நம் இடதுசாரிப்பார்வைகள் மாறவேண்டும் என்பதும் இங்கு உணர்த்தப்படுகிறது. “சரித்திரத்தில் படிந்த நிழல்கள்” இத்தகைய நாட்டுப்புறவியல்/தமிழ் அறிதல் கொள்கை சார் கதையாடல் முறையை விரிவாய் சர்ச்சை செய்யும் சந்தர்ப்பத்தை வழங்குகிறது.

“இன்னொரு விஷயத்திலும் ராணியின் வார்த்தைவழி பிறந்த மைந்தன் தெகிமொலாக்களின் இரண்டுபட்ட மனத்துடன் நடந்துகொண்டான். அவன் பனிக்காலத்தில் ஒரு காலும் கோடைக்காலத்தில் இன்னொரு காலும் வைத்துக் காலத்தின் தடைகளைத் தாண்டினான். அதுபோலவே அவன் அரச சபையில் வளர்வதற்குப் பதிலாக மக்களின் சபைகளிலும் அதுபோல் கவிதைப்பிரியர்களான தெகிமொலாக்களின் மனங்களிலும் ஒரே நேரத்தில் இருந்தான்” (பக்.19)

இவ்விதம் நாவல் கதையாடலில் வரும் இட அசைவு என்பது நாட்டுப்புறக்கதைகளில் இருந்து எடுக்கப்பட்டு இங்கு வேறு முறையில் கற்பனை செய்யப்படுவதை அறியவேண்டும். மையக்கதைப்பாத்திரம் நாட்டுப்புறக்கதையில் தனது குறிக்கோளான யாருக்கும் செய்ய முடியாத செயலைச் (பகைவனைத் தோற்கடிப்பது, மந்திரத்தைக்கற்பது, மாயமோதிரத்தைப் பெறுவது என்பது போல்) செய்யும் வழியில் இன்னொரு உபகதை என்னு வேறு ஒருகதை வழி அவனுடைய எதிர்கால மனைவியைச் சந்திப்பான் அல்லது தன் நண்பனைச் சந்திப்பான். இப்படி உபகதை கிளை பிரியும் இடத்தை “இட அசைவு” என்பார்கள். ச. ப. நி. நாவலில் இது வியாக்கியனம்/மறுவடிவாக்கம் பெற்று ஒரு பாத்திரம் “இரண்டு மனத்துடன்” அல்லது “பனிக்காலத்தில் ஒரு காலும் கோடைகாலத்தில் ஒரு காலும்” அல்லது “மக்களின் சபைகளிலும்” “தெகிமொலாக்களின் மனங்களிலும் ஒரே நேரத்தில்” இருக்கிறான். இதுபோல பல உத்திகள் ச.ப.நி.நாவலில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.இவை என்னுடைய சில கருத்துக்கள்.விவாதிப்போம்.

என்னுடைய எழுத்துக்கள் விமர்சனங்கள் படைப்புக்கள் – Essays, Criticism & Literature