All posts by tamizhavan

எழுத்தாளர்,பேராசிரியர்,விமரிசகர்,ஆய்வாளர்/writer,Professor,critic and scholar

காந்தியைக் கொன்றது யார்?

பெரியாரை அனைத்துத் தமிழகச் சிந்தனையாளராய் பார்ப்பதோடு அனைத்திந்தியாவுக்கும் பொருத்தமான சிந்தனையாளராய் பார்க்க வேண்டும். ஏன், அவரை அனைத்துலகச் சிந்தனையாளராகவும் பார்க்கமுடியும். அதற்கு வழிவைக்கும் முறையில் அம்பேத்கர், மற்றும் காந்தியின் சிந்தனைகளோடு பெரியாரின் சிந்தனைகளை ஒப்பிடவேண்டும்.

காந்தியின் சிந்தனைகளை ஒரு காலத்தில் பிற்போக்காளரின் சிந்தனைகளாய் தமிழகத்தில் பலர் குறைத்து மதிப்பிட்டார்கள். உண்மை அப்படி அல்ல. ஆஷிஷ் நந்தி (Ashish Nandi)  போன்ற வங்காள மண்ணிலிருந்து தோன்றிய நவீன சிந்தனையாளர்கள் பின்காலனியச் சிந்தனையில் புதியமுறையில் இந்தியாவைக் கொண்டு வந்து சேர்த்தார்கள். வங்காளத்தில் தோன்றிய விவேகானந்தர் சமயத்துறையில் புதிய கருத்துக்களைக் கொண்டு வந்தார். இவரும் ஆங்கிலப் புத்தொளிச்சிந்தனையின்(Enlightenment) பெறுபேறு. பெரியாரும் அதே வழியில் வந்தவர்.

இதுபோல் தமிழ் மண்ணில் இன்று இவ்வழியில் வந்தவர்கள் யார்யார் இருக்கிறார்கள் என்று நாம் இன்னும் கணிக்கவில்லை. இந்தியா முழுவதும் இன்று தெரியக்கூடிய தமிழர் பெயர்கள் உள்ளன. அவை சிந்தனையோடு தொடர்புடையவர்களின் பெயர்கள் அல்ல. அவை சினிமா அல்லது ஊழல் நபர்களின் பெயர்கள். எல்லாரும் முகத்தில் புன்னகையுடன் கேலியாய் பேசும் பெயர்கள். தமிழர்களுக்கு வெட்கமாக இருக்கிறது.

ஆனால், பெருமைக்குரிய பெயர்கள் தமிழர்கள் மத்தியில் உண்டு. பெரியார் இந்த லிஸ்டில் முதன்மை இடத்தைப் பிடிக்கிறார் என்பது என் கருத்து. சமீபத்தில் நடந்த மிகச் சிறந்த இந்தியத் தலைவர்கள் யார்  என்ற தேர்ந்தெடுப்பில் சுப. உதயகுமாருக்குக் கிடைத்த வாக்குகள் கூட பெரியாருக்குக் கிடைக்காதது தமிழர்களுக்கு அவர்களின் சிந்தனையாளர்களை இனம் காணத் தெரியாததைக் காட்டுகிறது.  ஆனால் உதயகுமார் முக்கியம். இந்தியா முதலில் கேலிபேசியவரும்   சிறுவர்களை வேலைக்கமர்த்துவதிலிருந்து காப்பாற்றும் பொதுப்பணியைச்செய்த வருமான கைலாஷ் என்பவருக்கு நோபல் பரிசு கிடைத்த பிறகு எல்லோரும் பாராட்டுகிறார்கள். அதுபோல் உதயகுமாருக்கு நோபல் பரிசு கிடைத்தால் எல்லோரும் பாராட்டுவார்கள்.

ஆஷிஷ் நந்தி வங்காளி. கொஞ்சகாலத்துக்கு முன்பு ராஜஸ்தானில் நடந்த இலக்கிய மாநாட்டில் தாழ்த்தப்பட்டவர்களைப் பற்றிப் பேசி பிரச்சனையில் மாட்டிக் கொண்டவர். இந்தியக் குணம் என்று ஒன்று அறிவியலிலும் சிந்தனையிலும் உண்டு  என்று விவாதித்துப் புகழ்பெற்றவர் இவர். இவருடைய காந்தி பற்றிய கட்டுரைகள் புதிய வியாக்கியானத்தைக் காந்திக்கு அளித்தன. சிலர் இதன்மூலம் புதியமுறையில் காந்தியைப் பயில வாய்ப்பிருக்கிறது என்று அறிந்தனர். காந்தியின் கிராமம் பற்றிய சிந்தனையைக் குவலயமயமாக்கலுக்கு எதிராய் கண்டனர்; FDI-க்கு எதிராய் கண்டனர். அனைத்துலக சந்தையாய்  இந்தியாவை மாற்றுவதற்கு எதிராய் கண்டனர். இன்னும் சிலர் பன்னாட்டு நிறுவனங்களை எதிர்த்துப் போராடும் இந்திய மாவோயிசத்துக்குக் காந்தி இன்றிருந்தால் ஆதரவாய்  குரலெழுப்பியபடி ஏதாவது ஒரு ஆசிரமத்தில் சர்க்காவில் நூல் நூற்றபடி வாழ்ந்து கொண்டிருப்பார் என்றுகூட  கூறுகின்றனர். இந்தச் சுயதேசியத்தில் பெரியாரின் தமிழ்த் தேசியமும் கூட சேரும். அதேநேரத்தில் பெரியாரின் அறிவுமயவாதம் (Retionalism) எந்திரங்களுக்கும் உலகமய வாதத்துக்கும் ஆதரவானவையோ என்ற கேள்விகளையும் கேட்கத்தான் வேண்டும்.இது விசயத்தில் காந்தி மாறுபட்டவர். தமிழில் இருந்த பக்தி இயக்கத்திலும் காந்தியிலும் ஒரு உள்முகப் பார்வை இருந்தது. பெரியாரிடம் புறமுகப்பார்வை இருந்தது.

இங்குப் பெரியார், காந்தியின் சிந்தனைகளைத் தன் வாழ்நாளில் எப்படிக் கணித்தார் என்று பார்க்க வேண்டும். அது தமிழ்மையப் பார்வையின் பன்முகங்களை நாம் புரிந்துகொள்ள உதவுவதோடு பெரியார்வழி தமிழ்மையப் பார்வை எத்தகைய பாதையில் கிளைத்தெழுகிறதென்பதையும் நாம் அறிய உதவும்.  காந்தி பற்றிய பெரியார் பார்வை இரு கிளை கொண்டது. காந்தியிடமிருந்து தன் சிந்தனையைத் தோற்றுவித்த பெரியார் 1927-இல் அதாவது தன் 48-ஆம் வயதில்  பெங்களூரில் காந்தியைப் பார்த்தபோது காந்தி வருணாசிரமக் கருத்தில் ஆழமான நம்பிக்கை வைத்திருப்பதை அறிகிறார்.  அதுபோல் இந்து அடையாளத்தில் பல வசதிகள் இருக்கின்றன என்றும் அதனால் அதை உடைக்காமலே நல்ல காரியங்களைச் செய்ய வாய்ப்பிருக்கிறது என்றும் காந்தி  வாதிடுகிறார். பெரியாருக்குக் காந்தியை ஏற்க முடியுமென்று தோன்றவில்லை. பெரியார் வேறு ஒரு சிந்தனையில் ஊறியிருப்பது பெரியாருக்கே தெரிகிறது. காந்தியின் பாதை வேறு. தன் பாதை வேறு என்று புரிகிறது.  ஓரிரு ஆண்டுகளில் பெரியார் காங்கிரஸை விட்டு வெளியேறுகிறார். தன் சீர்திருத்தக் கருத்துக்களைக் காங்கிரஸில் யாரும் ஏற்பார்கள் என்று அவருக்குத் தோன்றவில்லை. எனவே, பிராமணர்களின் சமூகத் தலைமையிடத்தை உடைந்தெறிந்தால் போதும் சாதி வேறுபாடு நீங்கி விடும் என்று கருதி, பெரியார் பிரச்சாரமும் போராட்டமும் மேற்கொள்கிறார். சமீபத்தில் ஒரு கன்னடக் கட்டுரையில் நான் படித்ததுபோல் பெரியாரால் உருவாக்கப்பட்ட அந்த நம்பிக்கை 1973-இல் அவர் இறப்பதற்கு முன்பே ஆட்டம் காணத் தொடங்கியது. 1968-இல் நடந்த கீழவெண்மணி தலித் படுகொலை தமிழ்ச் சமூகத்தின் முரண்பாடுகள் வேறானவை என்று காட்டின. தமிழ்ச்சமூகத்தின் இன்னொரு சமூக முரண்பாட்டை உலகத்துக்குக் காட்டின. அதுபோல் சமீபத்தில் தர்மபுரியில் நடந்த வன்னியர் குடும்பமும் தலித் குடும்பமும்  இளைஞர்களின் காதல் நிகழ்வை எதிர்கொண்ட சூழலும் தொடர்ந்து நடந்த இரண்டு மரணங்களும் கட்சிகள் அக்கொலையைத் தூண்டிய அளவு தீர்க்கமுடியாமல் போனதும் கவனிக்கத் தக்கவை. எனவே, பெரியார் தான் வாழ்நாள் முழுதும் பின்பற்றிய அரசியல் – சமூக சீர்திருத்த வடிவம் ஓரளவு பொய்யாகிறது.

பெரியார் காந்தியை ஏற்கவும் செய்கிறார், மறுக்கவும் செய்கிறார். அம்பேத்கர் பூனா ஒப்பந்தம் மூலம் காந்தியின் பிடிவாதமான உண்ணாவிரதத்தை நிறுத்த உதவினார். பெரியார் இந்து சமூகத்தை உடைப்பதில் தொடர்ந்து உறுதியாக இருந்தார். அம்பேத்கர் விட்டுக்கொடுத்தார்.பெரியார் முன்னிலையில் காந்தி, இந்துமத வடிவத்தை உடைக்காமல் எந்தவிதமான புரட்சிக் கருத்தையும் ஈடேற்றலாம்; எல்லாக் கருத்துக்களுக்கும் இந்துமதத்தில் இடம் உள்ளது என்று முன்வைத்த விவாதம் சுவையானது. இந்து மதத்தின் கவர்ச்சியான அம்சம் அது. இப்படிக் காந்தி சொன்ன உடன் பெரியார் சொன்ன பதில் அசலான சிந்தனையாளர் ஒருவரின் பதிலாகும். காந்தியிடம் பெரியார் அப்படியெனில் “நாளைக்கு வரும் மகான் ஒருவன் இந்து மதத்தின் பெயரால் எதையும் செய்யலாமல்லவா” என்ற கேள்வியைக் கேட்கிறார். பெரியார்கேட்டது சரி.காந்தியம் ஏற்காத காரியமான பாப்ரி மஜித் உடைப்பு 1992-இல் நடந்தது இப்படித்தான். காந்தியை விட தர்க்கப் பூர்வமாய் 1927-லேயே விவாதித்தார் பெரியார். 1927-இல் பெங்களூரில் காந்தி மீண்டும் இரண்டு மூன்று தடவை சந்திப்போம் என்று கூறினாரே ஒழிய இந்து மதத்தை யார் வேண்டுமானாலும் அதனை உடைக்காமல் மாற்றலாம் என்று விவாதிக்கும் போது காவிப்படை எதிர்காலத்தில் செய்யப்போகிற காரியங்கள் பற்றிய புரிதல் இல்லை. அவர்கள் புரியப்போகிற காரியங்களை நினைக்கும் அளவு காந்தியிடம் எதிர்காலத் தரிசனக் கூர்மை இல்லை. பெரியார் தான் வெற்றி பெறுகிறார். அதுபோல் தமிழகச் சாதித் தலைவர்களிடம் பெரியார் பரிதாபமாய் தோற்றுப்போகிறார். இனி இத்தலைவர்கள் பூமாலை தாங்கியபடி பெரியார் சிலைகளைத் தேடியபடி நடப்பது பூசாரிகளின் செயலைச் செய்யத் தானே! பூஜையைத் தொலைக்க விரும்பிய அதே தலைவர் அதே பூஜைக்குப் பலி ஆகிவிடுகிறார் தமிழகத்தில். சரி, காந்திக்கே மீண்டும் வருவோம்.

காந்தியின் கொலையை இந்து மதம் புரிந்த கொலையாய் பெரியார் பார்க்கிறார். “இந்தப் படுகொலைக்கு எந்த ‘இந்துமத சாம்ராஜ்ய வெறியுணர்ச்சி’ காரணமாக இருந்ததோ அந்த உணர்ச்சியை ஆழக்குழி தோண்டிச் சுட்டுப் பொசுக்கி சமாதி வைப்பதல்லவா நீதியான செயலாக இருக்க முடியும்?”  என்று பெரியார் தெளிவாகக் கேட்கிறார். பெரியாரின் கருத்துப்படி இந்து சாம்ராஜ்ய வெறியுணர்ச்சி டெல்லியில் காந்தியைச் சுட்டுக்கொன்ற பின்பு, அவரைப் பெரியார் ஆதரிக்கத் தொடங்குகிறார். பெரியார் எழுதுவதைப் பாருங்கள். “பார்ப்பனிய மதமான இந்து மதம் என்கிற கொடிய பாம்பிற்குக் காந்தியார் பாலூட்டி வளர்த்து வந்தார். அம்பாம்பின் கொடுமை பற்றி நாம் அவருக்கு அதிகமாகவே எடுத்துக் கூறினோம். சுயராஜ்யம் என்ற மகுடியை ஊதி வந்தால் அதுவும் ஆடிப் பாடிக் குதித்தால் அதை அடக்கித் தன் வழி செலுத்தலாம் என்றே காந்தியார் முழுக்க முழுக்க நம்பினார். சுயராஜ்ய மகுடியை ஊதாத நேரத்தில் – ஊதத் தேவையில்லை என்று அவர் கருதிய வேளையில் அப்பாம்பு தன் விஷப் பற்களுக்கு அவரையே இரையாகக் கொண்டு விட்டது”. இப்படித் தெளிவாக எழுதுகிறார்.காந்தியின் மரணத்துக்குப்பின் காந்திதேசம் என்று இந்தியாவுக்குப் பெயர் சூட்ட வேண்டுமென்று கூறுமளவு பெரியார் காந்தியைப் புகழ ஆரம்பித்துவிடுகிறார்.

இங்கு நாம் காந்திக்கும் பெரியாருக்கும் இருந்த முக்கியமான முரண்பாட்டையும் புரிந்துகொள்ள வேண்டும். வருண  பேதத்தைப் பெரியார் எதிர்த்தார். அதனைக் காந்தி எதிர்க்கவில்லை; ஆதரித்தார். ஒரு சமூகம் ஏதோ ஒன்றை உருவாக்கியிருந்தால் ஏதோ ஒரு நியாயம் அதற்கு இருக்க  வேண்டும் என்று யோசித்தார் காந்தி. அதாவது காந்தி மற்றும் பெரியாரின் உலகப் பார்வைகள் முற்றிலும் வேறு. அம்பேத்கர் அப்படி அல்ல; அவர் பெரியாரின் அடிப்படைகளை ஏற்றவர்.  இருவரும் புத்தொளிச் சிந்தனையிலிருந்து மிகச்சில வேறுபாடுகளுடன் தோன்றியவர்கள். இத்தகைய பார்வைகள் அம்பேத்கர் ஆய்வுக்குக்கூட பலம் சேர்க்கும்.

காந்தியின் நூல்களுக்கிடையில் ஒரு சிறுநூல் காணப்படும். “ஸ்வராஜ்யா” என்று தலைப்பு. அந்நூல் அபூர்வமானது.இன்று காந்தியம் முக்கியம் என்று பேசுகிறவர்கள் மேற்கோள் காட்டும்  நூல். அதுபோல் அபூர்வமான ஒரு பேட்டியைத்தான் காந்தி பெரியாருக்குக் கொடுத்தார். அதுதான் வருணபேதமும் இந்து மதமும் பிராமணனும் முக்கியம் என்ற காந்தியின் கருத்துக்கள் அடங்கிய நேர்காணல். இங்கு காந்தி ஏன் வருணபேதத்தை ஆதரிக்கிறார்? ஏன் இந்துமதத்தை ஆதரிக்கிறார்? ஏன் பிராமணர்களை  ஏற்கிறார் என்ற அடிப்படைகள் பற்றிய தர்க்கம் நடுநிலையாய் தமிழில் விவாதிக்கப்படவில்லை. இதைத் தமிழ்ப் பிராமணீயம் செய்திருக்கவேண்டும்.உ.வே.சா.வைப்போல்தமிழ்ப்பற்றுள்ள தமிழ்ப்ப்பிராமணீயம் இன்றில்லை. அணுஉலை விவாதத்தில் காந்தியம் மீண்டும் நம் விவாதத்துக்குள் வருகிறது.பல தடவை உதய குமார் தானொரு பெரியார்- காந்தியவாதி என்று சொன்னார். காந்தியும் அவரை ஆதரித்திருப்பார்.  அணு உலையைப் பெரியார் இருந்திருந்தால் ஆதரித்திருப்பாரா? அது ஒரு தனி விவாதம்.

ஒரு கட்டத்தில் காந்தியை மிகவும் வெறுக்கவும் செய்தார் பெரியார். மிகவும் துணிச்சலாக “காந்தி தான் நமது நாட்டை வடநாட்டானுக்கும் பார்ப்பானுக்கும் ஒப்படைத்து நம்மை அடிமையாக்கியதற்குக் காரணம். சாதி ஒழிப்புக்குச் சாத்திரம், புராணம் ஒழிக்கப் படவேண்டும் என்பதுபோல –  நாட்டுப்பிரிவினைக்குக் காந்தி ஒழியவேண்டும்” எனக் கூறுகிறார். இப்படி காந்தி மீது வெறுப்பைக் கொட்டும் பெரியார் காந்தியின் மரணத்தின் போது தன் கருத்துக்களை மாற்றுகிறார். “என்னைப் போலவே காந்தியாரும் நாம் ஒரு சூத்திரன் என்பதை நன்றாய் உணர்ந்துகொண்டார். இந்துமதம் திருத்த முடியாதது என்பதையும் உணர்ந்து கொண்டார். இந்தியா, இந்தியர், இந்துமதம் என்பதாக ஒன்று இல்லை என்றும்………. ஒரே கடவுள்தான் உண்டு. அதுதான் அல்லா, ‘காட்’ (God), ராம் என்றும் குரான் இந்துக்கள் படிப்பதற்குரியதென்றும் இந்துக்கள் முஸ்லீம்களுக்கு மிக்க தீங்கு இழைத்து விட்டார்கள் என்றும்…………. பார்ப்பனர்களின் உண்மையான தன்மையை நன்றாகப்புரிந்துவிட்டார்…” இந்த மேற்கோளில்  பெரியார் காந்தியையும் தன் கொள்கை உள்ளவராகப் பார்க்கிறார்.

‘இந்துக்கள் யாவரும் குரான் படியுங்கள்’ என்றுகூறியதிலிருந்தும் தானும் குரான் படித்துக் கொண்டு ராம் – ரஹீம் (அல்லாஹ்) என பஜனை செய்ததிலிருந்தும்  அவர் பழைய தன் கொள்கையிலிருந்து பெரிதும் மாறிவிட்டார் என்கிறார் பெரியார். இக்கருத்துக்களை 48-இல் காந்தி கொலையுண்ட நேரத்தில் பெரியார் பேசுகிறார். “எனக்கு கடவுள் ஒரு வஸ்துவாக தனிப்பட்ட பண்டமாக இருக்கிறது என்பதில் நம்பிக்கை இல்லை’ (I have no belief in personal God) என்ற காந்தியாரைப் பெரியார் தன்னைப் போலவேயான சிந்தனையாளராய் பார்க்கிறார். இக்கருத்துப் பரவினால் இந்தியாவெங்கும் பரவியிருக்கும் பார்ப்பனீயம் அழிந்து புரட்சி தோன்றிவிடும். அதனால்தான் அவர் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டார் என்பது பெரியார் கருத்து. பெரியார் அடுக்கடுக்காய் இந்தியச் சமூக கட்டமைப்பின் தன்மையைப் பன்முனை வியாக்கியானம் மூலம் புரிந்துகொள்கிறார். சமூகத்தின் பன்முனைப்பட்ட முரண்பாடுகளுக்குள் நுழைந்து பன்முனை வியாக்கியானம் மூலமே  நாம் அவற்றைப் புரிந்துகொள்ள முடியும். அதனைத் தொடர்ந்து நாம் பெரியாரை வளர்த்தெடுக்கும் முகமாகச்செய்ய வேண்டும்.

– தமிழவன்